Tuesday, August 30, 2005

ஏதோ ஒரு சோகம்இன்று அலுவலகத்தில் மதிய உணவிற்குப்பிறகு சிறிது தூக்ககலக்கத்தில் கணிப்பொறியை நோண்டிக்கொண்டு இருக்கிறேன்.
திடீரென்று அந்த சத்தம் ...

பக்கத்தில் உள்ள மருத்துவமனை சாலையிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த சத்தம்

கீ.......ங் கீ.......ங் கீ.......ங் ஆம்புலன்ஸின் அபாய மணி ஓசை

கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சத்தம் சாலையில் இருந்து என் இதயம் வந்து முட்டி சோகத்தை பீச்சி அடித்தது.

பதறிப்போய் தூக்கம் கலைத்தேன்.. விபத்து நேரத்தில்தானே இப்படி ஒலி எழுப்புவார்கள்..யாரோ..விபத்துக்குள்ளானது யாரோ..?

நாம் இங்கு எந்த வித கவலையுமில்லாமல் நாம் பணிகளை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் யாருக்கோ விபத்து அங்கே..எந்த குடும்பமோ இன்று தன் அமைதியை இழக்கப்போகிறது?

அந்தக்குடும்பம் இப்போது எப்படி பதறிக்கொண்டிருக்கும்.. ..? யாராக இருக்கக்கூடும்..?

ஒரு குடும்பத்தலைவனாக இருந்தால்...

வீட்டில் குடும்பத்தலைவன் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டால் மனைவி மற்நும் குழந்தைகள் நிலை ஆதரவற்றதாகிவிடும்..பொருறாதார வசதி குறைந்தவர்கள் என்றால் அவ்வளவுதான்..
சுனாமியில் தள்ளாடுகின்ற பனை ஓலையின் நிலைதான் அவர்களுக்கும்..அய்யோ அவர்களுக்கு என்ன மாற்று வழி கிடைக்கப்போகிறது..?

அய்யோ ..பொருளாதார ரீதியாக இந்த குடும்பம் பாதிக்கப்பட போகிறது என தெரிந்தும் எந்த தைரியத்தில் இறைவன் அந்த குடும்பத் தலைவனின் உயிர் எடுக்கச் சம்மதிக்கின்றான்..?
புயலில் தத்தளிக்கின்ற பட்டாம்பூச்சியாய் தத்தளிக்கிறது மனசு..

இறைவன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டானே..? ஒருவேளை அந்தக் குடும்பத்தலைவனின் பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமையை கற்றுக்கொடுப்பதற்காய் இருக்குமோ..? அப்படியென்றால் அந்த தாயை சமாதானப்படுத்துவது எங்ஙனம்..?

மனிதர்களே பதறுகிறோம்..இறைவன் சும்மாவா இருப்பானா?..இறைவா எனக்கு மட்டும் அந்த இரகசியத்தை சொல்லேன்..? அந்தக்குடும்பத்தின் எதிர்காலத்திற்கு என்ன மாற்று வழி செய்து வைத்திருக்கிறாய்..?


ஒரு வயதான பெண்மணியாக இருந்தால்...


வயதான பெண்மணி என்றால் அவளது மகன் - மகள் - கணவர் எல்லாம் அவள் மூலம் தனக்க கிடைத்த பணிவிடைகளை எல்லாம் அசைபோட்டபடியே இறந்துபோனவளின் இறந்தகால நிகழ்வுகளை அசைபோட்டபடியே கண்ணீரோடு அமர்ந்திருப்பார்களே..?

மனம் தாளமல் தண்ணீரை சேமித்து வைத்து தாகம் தீர்க்கும் ஒட்டகம் போல அந்த விபத்து நிகழ்வினை நினைத்து நினைத்து அசை போடுகிறது..

யாராயிருக்கக்கூடும்...?

ஒருவேளை எவருடைய இளவயது மகனாக இருக்க கூடுமோ..?

இளமையில் வறுமை மிகவும் கொடிது எனச் சொன்ன ஒளைவை இளமையில் மரணமும் கொடிதுதான் என சொல்ல மறந்துவிட்டாளோ..?

செய்தியை கேட்பவருக்கே இதயம் தீக்குளித்தவனைப்போல துடிக்கிறதே அந்த இளவயது வாலிபனின் மரணத்தில் எப்படி துடித்துப்போகும் அந்தக் குடும்பம்..?

தங்கையின் புத்தகத்தை ஒளித்துவைத்துவிட்டு அவள் அழும்போது திருப்பிகொடுப்பது

தம்பி சிகரெட் குடிப்பதை கண்டு கண்டித்துவிட்டு தம்பிக்கு தெரியாமல்
தான் சிகரெட் குடிப்பது

இத்தனை வயதாகியும் தாயின் மடியில் படுப்பது தாய் ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவேன் என அடம் பிடிப்பது

செமஸ்டர் பீஸ் என அப்பாவிடம் சொல்லி பணம் வாங்கிக்கொண்டு சினிமாவுக்குச் செல்ல

பக்கத்து வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுப்பதை பார்த்துவிட்ட அந்தப்பெண்ணின் அண்ணன் இவனை தனியே அழைத்து கண்டிக்க

இப்படி கலகலவென்று பட்டாம் பூச்சியாய் பறந்து சுற்றிக்கெண்டிருக்கும் அந்தப்பையனின்
குறும்புத்தனமான அவனது இளவயது சேட்டைகளை - துடுக்குத்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் அவனது குடும்பம் மரணச்செய்தி கேட்டால் தாங்குவார்களா..? தூங்குவார்களா..?

இப்படி ஏதேதோ சொல்கிறது மனசு. அந்த விபத்துக்குள்ளான நபரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்திருப்பார்களா..? இல்லை தெரிவிக்கத் தயங்கி கொண்டு இருப்பர்களா..?

எப்படி அவ்வளவு எளிதாய் தெரிவிக்க முடியும்..?

கொஞ்சம் சீரியஸா இருக்கார்..ஒண்ணும் பிரச்சனையில்லை..நீங்க உடனே மருத்துவமனைக்கு வாங்க என்று உளறி உளறி தானே தகவல் தெரிவிப்பார்கள்..?

தெரிவிக்கின்ற அந்த நேரத்தில் தொலைபேசியில் செய்தியை கேள்விப்படுகின்ற அந்த முதல் நபர் எந்த அளவிற்கு நொடிந்து போயிருக்கக்கூடும்..?

உலகத்தில் இதுவரை இடித்த இடிகள் மொத்தமாய் இதயம் தாக்கியது போலல்லவா இருக்கும்..? கண்ணீர் பெருக்கெடுத்து ..

அம்மா! அம்மா! அப்பாவுக்கு...


அம்மா! அம்மா! அண்ணணுக்கு..

என்று கண்ணீரோடு முழுங்கி முழங்கி பச்சை குழந்தை பேச ஆரம்பிப்பது போல தடுமாறி
விட்டத்தை வெறித்தபடி அமர்ந்து விடுவார்களா..?

இல்லை கொஞ்சம் இதயம் பலவீனம் உள்ளவர்களாக இருந்தால் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்துவிடக்கூடுமே..?

செய்தியை கேள்விப்பட்ட அந்தக் குடும்பம்..செய்து கொண்டிருந்த சமையலை அப்படியே போட்டுவிட்டும்..படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை திறந்தபடியே வைத்துவிட்டு..வீட்டை பூட்ட மறந்தபடி இறைவனை கண்ணீரோடு வேண்டிக்கொண்டே

அய்யோ ஒண்ணும் ஆகியிருக்கக்கூடாது..இறைவா ஒண்ணும் ஆகியிருக்கக்கூடாது..

என்று பதறியடித்துக்கொண்டு தட்டுதடுமாறி புலியைக்கண்டு ஓடும் ஒற்றைகால் முடவனைப்போல தடுமாறி விழுந்து ஓடிவருவார்களே..?

மனசுக்குள் என்னவெல்லாமோ தோன்றுகிறது..? தூக்க நிலையில் இருந்து துக்க நிலைக்கு மாறிவிட்டேன்..


கீ......ங் கீ......ங் கீ......ங்
சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆம்புலன்சுக்கு வழிகொடுத்து ஒதுங்கும் வாகனங்களைப்போலவே என் இதயம் சோகத்தின் நிழலில் ஒதுங்கி நிற்கிறது அலுவலகம் முடியப்போகிறது என்ற சிறு மகிழ்ச்சியின் பாதையிலிருந்து.

அலுவல் பணியில் மனம் ஒட்டாமல் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன். கண்டிப்பாய் பணி முடிந்ததும் அந்த விபத்துப்பகுதிக்குச் சென்று யார் ? என்ன? என்று விசாரித்துவிட்டுதான் செல்லவேண்டும்.

இல்லையென்றால் இன்று இரவு நிம்மதியாய் சாப்பிட - தூங்க முடியாது.


இதயம் சோகமுடன்

ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

ஆம்புலன்ஸின் அபாய மணி கேட்டு ஒவ்வொருவரை பற்றியும் நினைத்து, அந்த குடும்பம் படும் இன்னலை ஒருகணம் நினைந்து எண்ணிப்பார்க்கும் உங்கள் உயர்ந்த மனதினை எண்ணி... வியந்து பார்க்கிறேன்.

அலுவலக நிர்வாகி என்ன நினைத்துக்கொண்டிருப்பார் தெரியுமா..? வேலை நேரத்தில் நித்திரை மயக்கத்தில் கடமையாற்றும் உங்களைப்பற்றியதாக இருக்குமா..? ?

Anonymous said...

ஹூம்ம்...காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா...

****
அண்ணாச்சி நீங்க நம்மூரா...எ..நம்ம திருநெல்வேலியா...அப்பிடி போடு அருவாள...நமக்கும் அங்கதான் அணணாச்சி..அம்பாசமுத்திரம். ரொம்ப சந்தோசம் அணணாச்சி...எ நம்மூர்காரன் செட்டு சேர்ந்துபோச்சுல்ல...

Anonymous said...

'சோகமுடன்' அல்ல - சோகத்துடன். தமிழ் அறியாமைதான் வலைப்பதிவு தொடங்குவதற்குத் தேவையான அதிமுக்கியத் தகுதியா?

தேன் கூடு