Saturday, September 03, 2005

அம்மாவை யாரோ கொலை பண்ணிட்டாங்கப்பாதம்பி இந்த லட்டரை கொஞ்சம் தமிழ்ல டைப் பண்ணி கொடுப்பீங்களா..? என்று அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் சோகத்தோடு என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினார்.

நான் ஏதோ அவரின் ஊதிய உயர்வுக்காக இருக்கும் என நினைத்து என்னங்க வழக்கம்போலவே ஊதிய உயர்வுக்காகவா......? என கிண்டலடித்தபடியே கடிதத்தை வாங்கி வாசித்து அதிர்ந்து போனேன்.

அவரது தாயார் கொல்லப்பட்ட செய்தியை அந்த கடிதம் மூலமாக அறிந்தேன்.

பதறிப்போய் என்னங்க உங்க அம்மா கொல்லப்பட்டுட்டாங்களா..?

ஆமா தம்பி எவனோ ஆயிரம் ரூபாய் கடன் தொகைக்காக கொன்னுட்டான் தம்பி. எங்கம்மா ஒரு கடை வச்சிருந்தாங்க அதுல ஒருத்தன் கடன் வச்சிட்டு கொடுக்காம அடம்பிடிச்சான். கடனை கேட்டவுடன கோபத்துல இராத்திரி வந்து கத்தியால குத்திட்டான்ம்பா
- அலட்சியமாய் கூறினார்

என்னங்க இவ்வளவு அமைதியா சொல்றீங்க ..ஊருக்கு கிளம்பி போகவேண்டியதுதானே..?

போகலாம்ங்க..ஆனா போய் பயனில்ல..அம்மாவின் இறுதியஞ்சலி முடிஞ்சாச்சு..இப்ப நான் போனா செலவுதான்..

அதிர்ந்து போனேன். ச்சே என்ன எழவு வாழ்ககைடா இது ...?
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு உயிரை எடுத்திருக்கிறார்களே..படுபாவிகள்..அவர்கள் உயிரின் உறவின் அருமை தெரியாமல் வளர்ந்து ஆதிவாசிகளா..? அல்லது வலி உணராத காட்டெருமைகளா..?

சின்ன வயதிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்த பெற்ற தாய் இறந்ததற்கு கூட போக முடியவில்லை என்றால் இவர் வாழும் இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன..? எதற்காக வாழ்கிறார்..?

அவர் சட்டையை பிடித்துக்கொண்டு அறையவேண்டும்போல தோன்றுகிறது.

முகவரி படத்தில் எனக்கு அஜீத் சொன்னது ஞாபகம் வருகிறது.

லட்சியம் லட்சியம்னு நான் போரடுகிறேன். அந்த லட்சியம் கிடைத்தபிறகு நான் திரும்பி பார்க்கும்போது அந்த மகிழ்ச்சியை கொண்டாட என் வீட்டில் யாருமே இல்லையென்றால்
அந்த லட்சியம் அடைந்ததன் அர்த்தம்தான் என்ன...?

அதுபோலத்தான் அவரும். கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரையும் இழந்துவிட்டு யாருக்காக அவர் சம்பாதிக்கிறார். காலத்தின் ஓட்டத்தில் அவர் கைநிறைய சம்பாதித்துவிட்டு திரும்பிபார்க்கும்பொழுது யாருமே இருக்கமாட்டார்களே..?

அவரை பார்க்கும் போது எனக்கு ஆத்திரமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

மெல்ல கேட்டேன்.. ஊருக்கு போக விமான டிக்கெட் ஏற்பாடு பண்ணினா போவீங்களா..?

இல்லைப்பா வேண்டாம்...ஊருக்குப்போனாலும் செலவு பிச்சுகிட்டு போயிடும்..

அந்த கடிதத்தை மட்டும் டைப் பண்ணி கொடுங்க போதும். நான் அப்புறம் வர்றேன்.

அவர் சென்றுவிட்டார். அந்த துப்புரவு தொழிலாளி என் மனதில் சோகத்தை துப்பி விட்டு சென்றுவிட்டார்.

இப்படிபட்ட வெளிநாடு வாழ்க்கை தேவைதானா அவருக்கு..? கஞ்சி குடித்தாலும் சரி அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை ஆகிய சுற்றங்களுடன் அமர்ந்து சாப்பிடவேண்டும். அதுவும் ஒரு வகையில் சுகம்தான். ஆனால் அவருக்கு பொருளாதார ரீதியாக என்ன கஷ்டமோ..? மனம் ஏதேதோ நினைத்தது..?

கண்ணீருடனே அந்த கடிதத்தை கைகள் நடுங்கிக்கொண்டே டைப் செய்கிறது.


உயர்திரு மாங்காடு கிராம தலைவர் அவர்கட்கு


உங்கள் கிராம சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுள்ள மறைந்த கே.கந்தசாமி மற்றும் கே.காமாட்சி என்ற சௌந்திரம் ஆகியோரின் மகனாகிய கே.சுரேஷ்குமார் என்ற நான் தற்சமயம் துபாயில் வசித்துவருகிறேன். நான் கிராமத்தார்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் என் தாயார் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டுள்ளார். அதற்கு முழு காரணமும் எனக்கு சரியாக தெரியாது. எனது தாயார் இறந்தது போலிஸ் கேசாக இருப்பதால் அதன் காரணமாக எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கும் என் குடும்பத்தில் சரியான நபர் யாருமில்லை என்பது கிராமத்திற்கு தெரியும். அதன் விபரமாக கிராமத்தார்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதும் எனக்கு சரியாக தெரியாது. நான் கிராமத்திற்கு கட்டுப்பட்டுள்ளதால் கிராமத்தை மீறி நான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. ஆகையால் நான் துபாயில் இருந்து ஏதாவது நடவடிக்கை எடுக்கமுடிந்தால் அதற்கு கிராமத்தார்கள் எனக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து இதில் கையெழுத்து இட்டு தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் கிராமத்தை சார்ந்த

கே.சுரேஷ்குமார்

ஒப்புதல் கையெழுத்து:


தலைவர் :

உபதலைவர் :

செயலாளர் :

உபசெயலாளர் :

பொருளாளர் :

தண்டல் :


----------
அன்புள்ள தங்கச்சிக்குஉன் அண்ணன் எழுதுவது என்னவென்றால் ஊரில் நடந்த பிரச்சனைகள் அனைத்தும் உனக்கு நன்றாக தெரியும். அதன் விபரம் காரணமாக இந்த லட்டரை எழுதுகிறேன். அம்மா இறந்த விசயம் காரணமாக நான் துபாயில் இருந்து என்னால முடிந்த நடவடிக்கைகள் எடுக்க விரும்புகிறேன். அதற்கு உன்னுடைய முழு ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும். உன் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நான் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின்; மூலமாக தண்டிக்க விரும்புகிறேன். அதற்கு நீ எல்லா விசயத்திலும் ஒத்துழைப்பு தருவாய் என்று நம்புகிறேன். அதற்கு நீ மறுப்பு தெரிவித்தால் துபாயில் ஒரு அண்ணன் இருக்கிறான் என்பதை மறந்துவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். நான் எது செய்தாலும் உன் நன்மைக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளவும். நீ இந்த கடிதத்தின் கீழ் ஒப்புதல் அளித்து கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு உன் அண்ணன்
கே. சுரேஷ்குமார்

ஒப்புதல் கையெழுத்து:இப்படியாக அந்த கடிதம் முடிக்கப்பட்டிருக்கிறது.

பாசக்கார மகன்தான்..அம்மாவை கொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என தோன்றியிருக்கிறது. ஆனால்
அம்மாவின் முகத்தை பார்க்க அவருக்கு கொடுப்பினை இல்லையே..?

மனிதர்கள் வெறும் காகித பணத்திற்குதான் என்னமாய் அலைகிறார்கள். கொலை கொள்ளை ஏமாற்றுதல் சூது வஞ்சகம் எல்லாம் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெற்று காகிதத்திற்குதானே..?

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது அங்குள்ள வங்கிகளில் இருந்து பணத்தை மூட்டை மூட்டையாக மக்கள் தூக்கிக்கொண்டு ஓடினார்களே..? என்னவாயிற்று இப்போது..? அந்த பணங்கள் மதிப்பிழந்து தெருவில் கிடக்கின்றன. எத்துணை கஷ்டப்பட்டு சம்பாதித்து இருப்பார்கள்.

சொத்துக்களை எல்லாம் சுனாமியில் இழந்துவிட்டு தவித்தவர்களுக்கு பணமா பசியை ஆற்றியது..? சொந்தங்கள் , சில மனிதநேய உள்ளங்களின் ஆறுதல்கள், பாதுகாப்புகள் , முதலுதலிகள்தான் அவர்களுக்கு பக்கபலமாய் இருந்தது.

ஈரத்தில் நனைந்த பணம் உதவ மறுத்தது.
ஈரத்தில் நனைந்த மனம்தான் அங்கே ஓடி வந்தது.

குஜராத் பூகம்பத்தில் மக்களோடு மக்களாக தரைமட்டமாய் போனது அந்த காகித பணமும்தானே..? கட்டிடங்களின் இடிபாடுகளிலிருந்து பணம் மட்டும் தனியாய் பறந்து வர முடிந்ததா..?

எத்தணை பெரிய வல்லரசாக அமெரிக்கா இருந்தும் இப்போது வீசிக்கொண்டிருக்கும் புயலை கட்டுபடுத்த அதனால் எந்த கருவியும் கண்டுபிடிக்க முடியவில்லை பார்த்தீர்களா..? ஒரே நிமிடத்தின் வீடுகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டுவிட்டன..எங்கே போயின டாலர்கள்.? அந்த டாலர்களால் இயற்கையின் சீற்றத்தை சமாளிக்க முடிந்ததா.? சென்ற நிமிடத்தில் கோடீசுவரன்..மறுநிமிடத்தில் ஒருவேளை உணவுக்காக அரசாங்கத்தை எதிர்பார்க்கும் அகதிகளாய் மாறிவிட்டனர்.. இதுதான் வாழ்க்கை..

ஆகவே டாலர்களைத்தாண்டிய ஒரு மதிப்பு இருக்கிறது. அதுதான் சொந்தம். மனதிற்குள் சிந்தனைகள் மோட்டார் ரேஸ் நடப்பதுபோல வேகமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

அந்த கடிதத்தை டைப் செய்து முடித்துவிட்டேன். அவரிடம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாய் கேட்கவேண்டும் போலத் தோன்றிது எனக்கு.


நடக்க கற்று கொடுத்த ...
பேச கற்றுக்கொடுத்த ...
எழுத கற்றுக்கொடுத்த தாய்
மூச்சுவிடாமல் இருந்தால்
இப்படித்தான் இருக்கும் மகனே என்று
மகனுக்கு ...
மரணம் கற்றுக்கொடுத்திருக்கிறாள்.!

நீயேன் அதனை
கற்றுக்கொள்ள விரும்பவில்லை..?


இதயம் சோகமுடன்

ரசிகவ் ஞானியார்

17 comments:

பினாத்தல் சுரேஷ் said...

very touching Rasikov..

your narration was moving..

amam ennathaan pannapporom intha paazhap pona panatha vachikittu!

siragugal said...

கே. சுரேஷ் குமார் எவ்வளவோ உயர்ந்தவர் ..எழ்மை அவரை அந்த முடிவுக்கு தள்ளி இருக்கலாம்... நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வு..

கொள்ளி போட பிறந்த மகன் என பெருமிதத்துடன்.. மகளை ஓரவஞ்சனை செய்து.. மகன் என்னும் கண்ணில் வெண்ணெயும்.. மகள் என்னும் கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து வளர்த்தவர் அந்தத் தாய்..

அவருக்கு இரைப்பை புற்று நோய் முற்றி.. அனைத்து புலன்களும் ஒவ்வொன்றாக அடங்கி.. நூலிழையாய் நாடி மட்டும் மெல்லிய துடிப்போடு.. மூன்று நாட்களாய் இழுத்துக் கொண்டு இருந்தது..

மூன்று நாட்களும் தொடர்ந்து அடை மழை, நடுங்கும் குளிர்

இன்னும் இரண்டு மனி நேரம் தான் .. அதற்கு மேல் தாங்காது என மருத்துவர் இரவு 9 மணிக்கு சொல்லி சென்றுவிட்டார். வீட்டின் உள் அறையில் அந்தப் பெண்மனி கிடத்தப் பட்டிருந்தார்.. வந்திருந்த உறவு பெண்கள் தூண், கதவு, சுவரில் சாய்ந்தபடி அமைதியாய் உட்கார்ந்திருந்தனர், ஆண்கள் வெளி வராந்தாவில் குளிரில் நடுங்கியபடி நிற்பதும் உள்ளே வந்து பார்த்து செல்வதுமாயிருந்தனர்..

இந்த நிலைமையில் அந்த அம்மையார் பெற்ற ஒரே செல்ல மகன் வீட்டு முன் அறையில் பாய் விரித்து அதன் மேல், தரை குளிர் தெரியாமலிருக்க கம்பளி விரிப்பு விரித்து, தலையணை போட்டு, மேலே இன்னொரு கம்பளி போர்த்தி தூங்க ஆரம்பித்தான்.. அவனுக்கு அப்போது வயது 17.

எந்த மகளை, சுய நினைவு இருந்த கடைசி நொடி வரை..பெட் பேன் கூட சரியாக வைக்கத் தெரியாத மூதேவி என திட்டினாரோ.. அந்த மகள்தான் துளசி தண்ணீர், கங்கை தண்ணீர், தங்கம், மண் கரைத்த தண்ணீர், பால் என வாயில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.. அவற்றோடு தனது கண்ணீரையும் கலந்துதான் ஊற்றினாள்.. அவளுக்கு வயது 20.

இறுதியாக திடீரென நினைவுக்கு வந்தவளாய் உயிர் போகும்போது கேக்கனும்னு சொன்னாங்க என தாயின் காதருகில் டேப் ரெகார்டரை வைத்து கந்த சஷ்டி கவசத்தை இசைக்க விட்டாள்.

உயிர் போனதும் தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பினார்கள்.. வந்து பார்த்துவிட்டு திரும்ப போய் தூங்கினான். மறு நாளும் அழுததாக தெரியவில்லை.
இன்று அந்த மகன் அமெரிக்காவில் பல லட்சங்கள் சம்பாதிக்கிறான்..மனைவி மகளோடு.. தாயின் நினைவு நாளன்று தர்ப்பணமும் செய்வதாக கேள்வி.

( மன்னிக்கவும் எனது கருத்திடலே ஒரு பதிவுக்கு இணையாக ஆகி விட்டது.. மன்னியுங்கள் ரசிகவ்)

பாலாஜி-பாரி said...

நெகிழ்வான,உண்மையை உரைக்கும் பதிவு.

enRenRum-anbudan.BALA said...

ரசிகவ்,

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், உண்மையிலேயே மனதை நெகிழ்த்திய வகையில் !!!

நற்கீரன் said...

உண்மை.

ஜீவா said...

ரொம்ப கவலையான ஒரு விஷயம்.. மனதை காயப்படுத்தியது..

kulakaddan said...

:(

துளசி கோபால் said...

ரசிகவ்,

இப்பத்தான் பார்த்தேன். மனசு ரொம்ப நெகிழ்ந்து போச்சுங்க. இப்படி சொந்தங்களையெல்லாம் விட்டுட்டு எத்தனை பேர் தூரதேசங்களிலே....... என்னையும் சேர்த்துத்தான்.

தாணு said...

சற்று லேட்டாகப் பார்க்கிறேன். அந்த தனயனின் உள்ளம் எனக்கு ஓரளவு புரிகிறது, ஏனெனில் என்னாலும் என் தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. சாகும் கடைசி நிமிடம் வரை அவர்களுடனேயே இருந்து கவனிக்க முடிந்தது. ஆனால் இருதி சடங்கு திருநெல்வேலி அருகிலிருந்த சிற்றூரில். ஏகப்பட்ட மெடிசல் பிரச்னைகளுடன் தாய்மை அடைந்திருந்த என்னால் அம்மாவைக் கொண்டு சென்ற வேனில் போகமுடியாததால், மறுநாள் புகைவண்டியில்தான் செல்ல முடிந்தது. ஆனாலும் இறுதிநேர பணிவிடைகளை என் தாயின் மனம் கசியும் வரை செய்தேன் என்ற நெகிழ்ச்சி இன்னும் இருக்கிறது. என் போல் அந்த நண்பருக்கும் ஏதேனும் ஒரு தவிர்க்கமுடியாத சோகம் கலந்த தடை இருந்திருக்கும். முடிந்தால் அவருக்கு என் ஆறுதலைக் கூறுங்கள்

Anonymous said...

is it fact Rasikow...

uraiya vaikum unmaikal
எங்கே போயின டாலர்கள்.? அந்த டாலர்களால் இயற்கையின் சீற்றத்தை சமாளிக்க முடிந்ததா.? சென்ற நிமிடத்தில் கோடீசுவரன்..மறுநிமிடத்தில் ஒருவேளை உணவுக்காக அரசாங்கத்தை எதிர்பார்க்கும் அகதிகளாய் மாறிவிட்டனர்.. இதுதான் வாழ்க்கை..

ஆகவே டாலர்களைத்தாண்டிய ஒரு மதிப்பு இருக்கிறது
vijai

நிலவு நண்பன் said...

// பினாத்தல் சுரேஷ் said...
very touching Rasikov..


amam ennathaan pannapporom intha paazhap pona panatha vachikittu! //


உங்கள் ஆதங்கத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி சுரேஷ்..

நிலவு நண்பன் said...

//( மன்னிக்கவும் எனது கருத்திடலே ஒரு பதிவுக்கு இணையாக ஆகி விட்டது.. மன்னியுங்கள் ரசிகவ்) //

பரவாயில்லை சிறகுகள்..

மனதைப் பிசையும் சம்பவம்...

நிலவு நண்பன் said...

//ஆகவே டாலர்களைத்தாண்டிய ஒரு மதிப்பு இருக்கிறது
vijai //

உண்மைதான் விஜய்..

நன்றி

நிலவு நண்பன் said...

//பாலாஜி-பாரி said...
நெகிழ்வான,உண்மையை உரைக்கும் பதிவு.
//

//enRenRum-anbudan.BALA said...
ரசிகவ்,

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், உண்மையிலேயே மனதை நெகிழ்த்திய வகையில் !!! //

//நற்கீரன் said...
உண்மை. //

//ஜீவா said...
ரொம்ப கவலையான ஒரு விஷயம்.. மனதை காயப்படுத்தியது.. //

தங்களின் வருத்தத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி நண்பர்களே

நிலவு நண்பன் said...

//துளசி கோபால் said...
ரசிகவ்,

இப்பத்தான் பார்த்தேன். மனசு ரொம்ப நெகிழ்ந்து போச்சுங்க. இப்படி சொந்தங்களையெல்லாம் விட்டுட்டு எத்தனை பேர் தூரதேசங்களிலே....... என்னையும் சேர்த்துத்தான். //

அப்படின்னா திரும்பி வந்துடுங்க துளசி அம்மா

நிலவு நண்பன் said...

//என் போல் அந்த நண்பருக்கும் ஏதேனும் ஒரு தவிர்க்கமுடியாத சோகம் கலந்த தடை இருந்திருக்கும். முடிந்தால் அவருக்கு என் ஆறுதலைக் கூறுங்கள் //

கண்டிப்பாக தாணு...

பாலராஜன்கீதா said...

இது ஒரு சிறுகதைதான் என்று எழுதுவீர்கள் என்று கடைசிவரை நம்பினேன். ஆனால் ஏமாற்றம் அடைந்தேன்.
கே சுரேஷ் குமார் அவர்களுக்கு எம் ஆறுதல்களைத் தெரிவியுங்கள்.

தேன் கூடு