Tuesday, August 29, 2006

இவர்கள் காதலித்தால் II

காவலரின் காதல் கவிதைமாமூல் தராமலையே என்
மனசுக்குள் வந்தவளே!

எந்த
இன்ஸ்பெக்டரிடம் சொல்வேனடி நீ
இதயத்தை திருடியதை?

நான் உனைக்கண்டு
இளித்ததை
ஈவ்டீசிங் என்கிறாயே?

உன் கண்களில்
இதயம் அலைக்கழிக்கப்படுவதை
ஆடம்டீசிங் என்று
அறிவிக்கட்டுமா?


கைதியின் காதல் கவிதைமத்திய அரசே! என்
மனசை நோகடித்த அவளுக்கும்
மரண தண்டனை கொடு

- ரசிகவ் ஞானியார்

Friday, August 25, 2006

இவர்கள் காதலித்தால்...

நான் ஏற்கனவே ஒவ்வொருவரின் கல்லறைகளிலும் ஒரு வாசம் எழுதினால் என்ன எழுதியிருப்பார்கள் என்று எழுதியிருந்தேன். அதுபோல ஒவ்வொருவரும் காதலித்தால் அவர்களின் துறைக்கு தகுந்தவாறு எவ்வாறு காதல் கவிதைகள் எழுதுவார்கள் என்ற ஒரு கற்பனை. முதன் முதலாக ஒரு மெடிக்கல் ரெப் பற்றிய காதல் கவிதை.

மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை

எக்ஸ்ப்ரஸில் சென்றுவிட்ட
பருந்தே!
எக்ஸ்ப்யரி[Expiry] டேட்
முடிந்து போன மருந்தே!

கடைசிவரைக்கும்
புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே..


அடுத்து விவசாயியின் காதல் கவிதை. அவ்வப்போது நேரம் கிடைக்கும்பொழுது "இவர்கள் காதலித்தால்..." தொடர்ந்து கொண்டிருக்கும்.


விவசாயியின் காதல் கவிதை
என்னைப்
பேசவிடாமல் செய்த
அவள் கண்கள் ஒரு
பூச்சி கொல்லி மருந்து!
இல்லை இல்லை
பேச்சி கொல்லி மருந்து!

காத்திருடி!
அறுவடைக்காசிலே
அமெரிக்கா போவோம்..
இல்லை..இல்லை
உல்லாசமாய் போவோம்
உழவர்சந்தைக்கு!

பயிர் வாழ
நீர் தேவை - என்
உயிர் வாழ
நீ தேவை


உன்னுடைய
தற்காலிகப்பிரிவில்...
என் வயல்வெளிகள்
போக்ரானாய் மாறும்

ஆனால்
நிரந்தரமாய் பிரிந்துவிட்டால் என்
டெய்லி வாழ்க்கை
டெமக்ரானோடுதான்!

அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே..


- ரசிகவ் ஞானியார்

Saturday, August 19, 2006

சிக்னலில் பெண் தேவதைகள்


திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வாகனங்கள் நின்றாலும் அங்கு ஒரு பெண் போலிஸார்களை பணியில் பார்க்கலாம்.. எல்லா வாகனங்களும் இவர்களின் கை அசைவுக்கு கட்டுப்படுகின்றன.


இன்று காலை 9மணிக்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டை இரயில்வேகேட் அருகே பெண் போக்குவரத்து போலிஸார்கள் இரண்டு பேர் ரெட் சிக்னல் கொடுக்க , நான் சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன் . அப்பொழுது பெண் போலிஸார்களை அலட்சியப்படுத்தி ஒரு நபர் கடந்து செல்ல அந்த பெண் போலிஸார்கள்: :ஹலோ சார் சார்;: என்று கத்த அந்த நபர் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடந்து சென்றார்.

நான் உடனே "ஹலோ வண்டி நம்பரை நோட் பண்ணுங்க.. "

"பார்த்துகிட்ட நிற்காதீங்க நம்பரை நோட் பண்ணுங்கம்மா" என்று அவர்களிடம் கூற

அந்த பெண் போலிஸில் ஒரு பெண், " ஹலோ எங்களுக்கு தெரியும்..நீங்க சொல்ல வேண்டாம்.. நாங்க நோட் பண்ணிக்கறோம்.. "என்க

அட நல்லதுக்கு சொன்னா புரிஞ்சுக்கமாட்டேங்கிறாங்களே என்று மனம் வருந்தியபடி அவர்களை நோக்கி திரும்பி ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு நான் வண்டியை சீறிக்கொண்டு வந்துவிட்டேன்.

அந்த பெண் போலிஸார்களின் இடத்தில் ஒரு ஆண் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

"டேய் டேய் நில்லுடா..சொல்லுறேன் போய்கிட்டே இருக்க..வண்டிய ஒதுக்குடா..வண்டிய ஒதுக்குடா" என்று தனக்குரிய வழக்கமான தினச்சம்பளத்தை வாங்கியிருப்பார்.

இப்பொழுது இந்தப்பணியில் அதிகமான பெண்போலிஸார்களை நியமனம் செய்திருக்கின்றார்கள். திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வந்து நின்றாலும் இந்தப் பெண் போலிஸார்கள்தான் பணியில் இருக்கின்றார்கள்.

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்சிக்னலில் நிற்பதற்கு
சிகப்பு விளக்கு தேவையில்லையடி
உன்
விழியின் வெளிச்சம் போதும்

ஒவ்வொரு சிகனலிலும்
யார் போட்டது
மனித வேகத்தடைகள்
இப்பொழுது திருநெல்வேலியின் ஒவ்வொரு சிக்னலிலும்; வாகனங்கள் அதிக நேரம் நின்று செல்வதாக தகவல். ஓருவேளை இவர்களை ரசித்து மெய்மறந்து நின்று விடுகின்றார்களோ? சரி அத விடுங்க..

இந்தப்பணியில் பெண்களை நியமிப்பதில் சாதகங்கள் மற்றும் பாதகங்களும் இருக்கின்றன


பெண் போலிஸார்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுகின்றார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவ்வாறு இருக்க இயலாது. (சில சமயம் ஆண் போலிஸார்களின் அறிவுரைகளின் பேரில் இவர்களும் கண்ணியம் தவறி நடக்க ஆரம்பிக்கின்றார்கள்)

லாரியை மடக்கி லஞ்சம் வாங்குதல் - அப்பாவி பைக்வாதிகளிடம் தினக்கூலி பெறுதல் -தேவையில்லாமல் வண்டியை ஒதுக்குதல் - போன்றவை தவிர்க்கப்படுகிறது

ஆனால் அவர்களின் கண்ணியமான கட்டளைகளையே தங்களுக்கு சாதகமான எடுத்துக்கொண்டு பெண் போலிஸார்கள்தானே என்று அலட்சியமாய் பொதுமக்கள் எல்லை மீறுகின்றார்கள்

அது மட்டுமல்ல இரவில் இவர்களால் வெகு நேரம் நின்று கொண்டிருக்க முடியாது. அது இவர்களின் கற்புக்கும் கடமைக்கும் ஆபத்து

பெண் போலிஸாருடன் கள்ளக்காதல் - பெண் போலிஸாருடன் தகாத முறையில் நடந்த தலைமைக் காவலர் கைது. என்றெல்லாம் செய்திகள் பத்திரிக்கையில் வரும்பொழுதுதான் அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கவலையாக இருக்கின்றது.
- ரசிகவ் ஞானியார்Friday, August 18, 2006

என் இனிய கல்லூரி நண்பர்களே

கல்லூரியைப்பற்றி எழுதி நாளாகி விட்டதால் இன்று ஞாபகத்தை கல்லூரி வளாகத்திற்குள் கொண்டுபோகின்றேன்

எல்லா கல்லூரிகளிலும் கலை விழாக்களுக்கென்றே ஒரு கோஷ்டிகள் இருக்கும்.
அவர்களில் நடனம் ஆடுபவர்கள் - மிமிக்ரி செய்பவர்கள் - நாடகம் இயற்றி நடிக்க வைக்கும் மினி இயக்குனர்கள் - பாடல் பாடுபவர்கள் - பேச்சாளர்கள் -கவிதை எழுதுபவர்கள் என்று தனிப்பட்ட குழு இருக்கும்

எங்கள் கல்லூரியிலும் அப்படிப்பட்ட குழு இருந்தது. எனக்கு கவிதை மேடைகளில் அல்லது இலக்கிய சம்பந்தமான சபைகளில் மட்டும்தான் கவிதை பாடுவேன்.

கவிதை - பேச்சுகள் எல்லாம் எனக்கு போரடித்துப்போக நான் நாடகங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பக்கத்து கல்லூரிகளில் நடைக்கும் கலைவிழாக்களில் பங்கு பெறுவோம். அந்த நாட்கள் எல்லாம் மிகவும் ஜாலியாக இருக்கும். ஏனென்றால் கல்லூரிக்கும் போகத் தேவையில்லை வருகைப்பதிவும் கிடைத்துவிடும்.

மெடிக்கல் கல்லூரியில் ஒரு அனைத்துக் கல்லூரி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் கல்லூரியில் இருந்தும் சென்றிருந்தோம்.

அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிக்காக வருவார்கள்.

ஹாய் எப்படி இருக்கீங்க..

இன்னிக்கு என்ன புராகிராம் பண்றீங்க நீங்க..

உங்க பர்ண்ட் போன விழாவுக்கு வந்தாங்களே அவங்க வரலையா

ஐஸ்வர்யா ராய் வரைலயா..

ஹலோ என்ன கிண்டலா? இருங்க.. அவகிட்ட சொல்லி கொடுக்கிறேன்..

அவளுக்கு ப்ராக்டிகல் இருக்கு வரமுடியலையாம்..

இன்னிக்கு என்ன பாட்டு பாடுறீங்க நீங்க..

கிழக்குச்சீமையில படத்துல ஒயிலா பாடும் பாட்டு - பாடப்போறேன்..

என்று எங்கு பார்த்தாலும் வழியல்கள் - கொஞ்சல்கள் - ஜொள்ளுகள் கலந்து புகை மூட்டமாகவே இருக்கும். புகை மூட்டத்தில் எதிரில் வருகின்ற நண்பர்கள் கூட அடையாளம் தெரியாது. கடந்து சென்ற பிறகு திட்டிக்கொண்டு போவார்கள்

டேய் பிரபா..அவனைப்பாரேன் கடலை போட்டுகிட்டு இருந்தா கண்தெரியாதுன்னு நினைக்கிறேன்..கண்டுக்காம இருக்குறான் டா..

இருடா நமக்கு ஒரு நேரம் வராமையா போகும்..

பொருமிக்கொண்டே சென்றனர். நண்பர்களுக்குள் சிறு சிறு பகைமைகளும் வளர்க்கும் இந்தக் கடலை சாகுபடிகள்.

வௌ;வேறு கல்லூரிகளில் இருந்து வருகின்ற தேவதைகளை பின்தொடர்ந்தபடி சகாக்களின் கூட்டங்கள்.

நாய் துரத்தி வருவதைப்போல காதர் ஓடி வந்தான்

ஞானி ஞானி..உனக்கு மேட்டரு தெரியுமா..பிஏ தங்கத்துரை இருக்கான்ல ..அவன் அந்த ராணி அண்ணா காலேஜ் பொண்ணு இருக்குதுல..கவிதை நல்லா எழுதுமேடா..அந்த வெள்ளைக்காரி.. அவகிட்ட குட்மார்னிங்னு சொல்லியிருக்கான்..அவ மதிக்காம போய்ட்டா..இவன் மூஞ்சி போன போக்கை பார்க்கணுமே..

என்று அவன் அவமானப்பட்டதை சிரித்தபடி கூறினான்..

நானும் அவனுடன் சேர்ந்து சிரிக்க அதோ தங்கத்துரை போரில் கவசக்குண்டலம் பிடுங்கப்பட்டு நிராயுதபாணியாகி திரும்ப அனுப்பப்பட்ட மன்னனைப்போல வெறியோடு வந்து கொண்டிருந்தான்..

காதர்.. சிரிக்காதடா.. அவன் வர்றான்..

நாங்கள் சிரிப்பை அடக்கிக்கொள்ள அதனையும் மீறி வந்த புன்னகை நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம் என்பதை காட்டிக்கொடுத்தன.

நாயே..எல்லார்கிட்டேயும் பரப்பிட்டியா விசயத்தை..என்று காதரிடம் கேட்டான்

அவனோ இல்லைடா நான் சும்மா இவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்..

எனக்கும் தெரியும்ல உன்னய பத்தி..என்று அவனைத் திட்டிவிட்டு சொல்லுகின்றான்
அவளுக்கு இன்னிக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்..அதான் மூடு மாதிரியா போறாடா.. வேற ஒண்ணும் இல்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டு சென்றான்.

படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிட்டுப்பா என்று புலம்பும் ஜனகராஜ் போல அவன் மனசு புலம்பிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்..

என்ன தலைப்பு கவிதைப் போட்டிக்கு இதோ ஒரு எஸ்டிசி தேவதை வந்து என்னிடம் கேட்க

நானோ காதரிடம் டேய் என்ன தலைப்புடா..உனக்குத் தெரியுமா..

ஏதோ அக்கினின்னு ன்னு ஆரம்பிக்குடா..- காதர்

அக்கினியில் வெந்த அன்னங்கள் ன்னு நினைக்கிறேன்..ஏன் உங்களுக்கும் அதே தலைப்பா.. -

ம் உங்களுக்கும் அதே தலைப்பா..என்று நான்; கேட்க

அப்படித்தான் நினைக்கிறேன்..நீங்க எப்படி எழுதப்போறீங்க..

நான் பெண்களின் துயரங்கள் பற்றி எழுதலாமென இருக்கின்றேன்...

நீங்க..

அங்கு ஒரு கடலை சாகுபடி விதைக்கப்படுவதை உணர்ந்த காதரின் வயிற்றிலிருந்து வந்த எரிச்சல் என் கையை கிள்ளியது. எங்கள் நிகழச்சிக்கான ஒத்திகைக்காக நேரம் ஆகியதால் விடைபெற்று கிளம்பி விட்டோம்

நாங்கள் விளம்பரக் கிண்டல் என்ற ஒரு நிகழ்ச்சி செய்வதாக இருந்ததால் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டோம்.

எங்களுக்கான நிகழ்ச்சி ஆரம்பமானது.. முதல் விளம்பரம் ஹமாம் சோப்புக்கான விளம்பரம்.. அந்த விளம்பரத்தைக் கிண்டலடித்தோம்

ஹமாம் சோப்பு விளம்பரம் ஒன்றை கவனித்திருப்பீர்கள்.

ஒரு ஆமை மெல்ல மெல்ல நகரும். அப்பொழுது ஒரு சிறுவன் அம்மாவிடம் அம்மா அம்மா கல் நகருது என்க அம்மாவோ அது கல்லு இல்லைப்பா அது இயற்கையோட படைப்பு..என்று விளக்குவார்கள். அப்படின்னா இயற்கை நமக்கு என்ன பண்ணிருக்கு என்று சிறுவன் கேட்க..அம்மாவோ இதோ ஹமாம் சோப்பு என்று சோப்பைக் காட்டுவார்கள்..பின் நேர்மைன்னா என்னம்மா என சிறுவன் கேட்க நேர்மைன்னா ஹமாம்..

அந்த விளம்பரத்தை கிண்டலடித்தோம். காதர் மைக்கைப்பிடித்தான் ..
"என் இனிய கல்லூரி நண்பர்களே" என ஆரம்பித்தான்.

ஓ ஓ ஓ பெரிய பாரதிராஜாஜாஜாஜா என்று கத்தினார்கள்.

எங்களுக்கும் அவன்தான் எப்போதும் பிண்ணணிககுரல் கொடுப்பான். நாங்கள் வாய் மட்டும்தான் அசைப்போம்..

சுடலை துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தான்..

அம்மா அம்மா அங்க பாரு கல்லு நகருது என்று ராஜாவைக் கை காட்டினான்.

அப்பொழுது ராஜா முதுகைக் குனிந்து முழங்காலை தரையில் ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து சென்றான்

அப்பொழுது சேலை அணிந்து கொண்டு அம்மா வேடத்தில் ஜோதி நின்று கொண்டிருந்தான்.

அது கல்லு இல்லைடா..உங்கப்பன்டா..சட்டையைக் கழட்டிப்போட்டு படுத்துக் கிடக்காருடா..

நேர்மைன்னா என்னம்மா?

அது உங்கப்பா பரம்பரையிலே இல்லைடா..

ஹமாம் சோப்பு.. என்று பிண்ணனியில் பலமாய் ஒலிக்கும்

பின் அஜால் குஜால் அல்வா..


ஒவ்வொரு ஆசிரியர்களும் நாங்கள் தயாரித்த அஜால் குஜால் அல்வாவை சோதனையிட வருகிறார்கள் என்ற காதர் சத்தம் போட்டு கூற

நான் மற்றும் ராஜா மற்றும் சுடலை ஆகியோர் ஆசிரியர்கள் போல் வேடமணிந்து அல்வாவை எடுத்து சாப்பிடுவது போல நடிக்கின்றோம்..

இப்பொழுது அல்வா எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமா..?

அல்வாவைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க..எப்படியிருக்கு அல்வா.. என்று ஒவ்வொருவரிடமும் காதர் கேட்க நாங்கள் வாயைத்திறந்து சொல்ல முடியதது போலவும் வாய் திறக்கமுடியாமல் கஷ்டப்படுவதைப்போலவும் நடிக்க ஆரம்பித்தோம்.

உடனே காதர் ஆம் இதன் பெருமையை வாய் திறந்து சொல்ல முடியாது
பிகர்களுக்கு முன்னால் எக்ஸாம் மார்க்கை சொல்லுகின்ற ஆசிரியர்களை பழிவாங்க சரியாண தருணம் ..வாங்கிக்கோங்க மாணவர்களே அஜால் குஜால் அல்வா..என்று சொல்ல சரியான கைதட்டல்

கைதட்டல் சப்தத்திற்கிடையே

டேய் ஞானி அங்க பாருடா.அந்த ரைட் சைடுல..இங்கேடா.. மூணாவது வரிசை டா..
- காதர் பக்கத்தில் வந்து கிசுகிசுத்தான்

ம் ராணி அண்ணா காலேஜ் பொண்ணு..அதுக்கு என்ன இப்போ
- நான்

இல்லைடா.. எழுந்து நின்னு கைதட்டுது பாரு..
- காதர் சரியாக கவனித்துச் சொல்கின்றான்

அட நாயே இதெல்லாம் சரியா கவனிச்சு சொல்லு.. மைக்கை பிடிடா.. மைக்கை பிடிடா..

விளம்பரம் தொடர்கின்றது

காதலர்கள் பீச்சில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருப்பது போல் ராஜாவும் சுடலையும் அமர- இந்த முறை ராஜாவுக்கு பெண் வேடம் ( கேட்டு வாங்கிக் கொண்டான் ) நான் அவர்கள் அருகே சென்று என்ன பண்றீங்க ரெண்டு பேரும் என்று கேட்க நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலையே லவ் பண்றோம் என்று ராஜா குழைந்து பெண் போல சொல்ல

அப்படியா இந்தாங்க அஜால் குஜால் அல்வா சாப்பிடுங்க என்று நான் பெண் வேடத்தில் இருக்கும் ராஜாவிடம் கொடுக்க அவன் சாப்பிட்டு விட்டு என்னுடன் வந்து விடுகின்றான்.

ஆம் அஜால் குஜால் அல்வா காதலர்களையும் மாற்றிவிடும் உடனே வாங்கிக்கோங்க.. - காதர் பிண்ணனியில் எடுத்துவிட நான் வாய் அசைக்க..

கடைசி இருக்கையில் இருந்து விசில் பறக்கிறது .

அடுத்து பராசக்தி வசனம் போல நடித்துக் காட்டினோம். அந்தப்பதிவைக் கூட ஏற்கனவே பதிந்திருக்கின்றேன்.. எங்களுக்கு அடுத்தடுத்து ஜான்ஸ் மற்றும் பராசக்தி - எஸ்டிசி போன்று கல்லூரிகளிலிருந்தும் பல நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஆயத்தமாயினர்
நானும் இடையில் கவிதைப்போட்டிக்குச் சென்று அக்கினியில் வெந்த அன்னங்கள் என்ற கவிதையை எழுதிவிட்டு வந்தேன்.

அந்தக் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
இராமன் தீக்குளிக்கட்டும்

நாங்கள் காதர் சுடலை ராஜா மற்றும் எங்கள் கல்லூரி நண்பர்களோடு பார்வையாளர்கள் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டோம்.

ஆங்காங்கே கடலைகள் விசில் சப்தங்கள் என்று தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ராணி அண்ணா கல்லூரிப் பெண் ஒருத்தி ஏதோ ஒரு பாட்டு என்ற பாடலைப் பாட ஆரம்பிக்க தங்கத்துரை - நான் - ராஜா - சுடலை நான்கு பேரும் எழுந்து அமைதியாக முன்னால் சென்று தோப்புக்கரணம் போட எல்லாரும் ஓ வென கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னர் தமிழ் ஆசிரியர் தனியாக எங்களை அழைத்து கண்டிக்க ஆரம்பித்து விட்டார்

அந்தப்பொண்ணு பாடும்போது நீங்க போய் தோப்புக்கரணம் போட்டீங்களா..

இல்லை சார் சம்மா கேலிக்குத்தான்..

நம்ம காலேஜ் பற்றி தப்பா நினைக்க மாட்டாங்க.. ஏன் பேரைக்கெடுக்குறீங்க..ஜாலி பண்ண வேண்டியதுதான்..ஆனா மத்தவங்க மனச நோகடிக்க கூடாது..

சாரி சார்..

நான் ஒரு ப்ரண்டாத்தான் சொல்றேன்..புரிஞ்ச்சுக்கோங்க.. ன்னு சொல்லிவிட்டு போய்விட்டார்.

அறிவுரை வாங்கிவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன்..இங்க பாருங்கப்பா ராஜா பெஞ்சு மேல் ஏறி நின்று ஆடிக் கொண்டிருக்கின்றான்.. அட கிளம்பிட்டாங்களா மறுபடியும்..


இந்தப் பருவத்தில் என்ன சொன்னாலும் விளையாட்டாகத்தான் தோன்றும். மாணவப்பருவத்தில் கேட்ட அறிவுரைகளை நாங்கள் மற்றவர்களுக்கு சொல்லுகின்ற நிலைகள் வரும்பொழுதுதான் அந்த அறிவுரைகள் புரிய ஆரம்பிக்கும்.
-ரசிகவ் ஞானியார்

Saturday, August 12, 2006

சின்னச் சின்னச் சுவாரசியங்கள் - II

மனைவியுடன் கிண்டலாக விளையாடப்போய் உயிரை விட்ட ஒரு கணவனின் உண்மைக் கதை இது. 1985 ம் ஆண்டு மார்ச் 15 ம் நாள் யூகோஸ்லேவியாவைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும்பொழுது வழியில் ஒரு முகமூடி கடையைப் பார்த்தபொழுது அவனுக்குள் ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஆந்த முகமூடியை மாட்டிக்கொண்டு தனது மனைவியை பயமுறுத்திப் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டான்.

பயங்கரமான தோற்றமுடைய ஒரு முகமூடியை வாங்கிக்கொண்டு வீட்டை நெருங்கினாhன். அடிக்கடி வீட்டின் காலிங்பெல்லை அழுத்திவிட்டு வீட்டைச்சுற்றி அங்குமிங்கும் நடந்து கொண்டும் வீட்டைச் சுற்றி சுற்றியும் வந்தான்.

இதனைக்கண்ட அவனது மனைவி மிகவும் பயந்து விட்டாள் யாரோ ஒரு திருடன்தான் வீட்டை கொள்ளையடிக்க நோட்டமிடுகின்றான் என நினைத்துவிட்டாள். உடனே கைத்துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிக்காரனை நோக்கி சுட்டாள்.. குண்டு தலையில் பாய்ந்து அவன் அதே இடத்தில் இறந்து போனான். பின் அந்த முகமுடிக்காரன்தான் தன் கணவன் என்று அவளுக்கு தெரிந்து கதறி அழ ஆரம்பித்தாள். ஆனால் அழுது என்ன பயன்..? அவன் போய் சேர்ந்திட்டானே..?

இது யார்மீது தவறு விளையாட நினைத்த கணவன் மீதா இல்லை விளையாட்டு எனத் தெரியாமல் சுட்டுக்கொன்ற மனைவி மீதா..? அதனால சொல்றேன்பா மனைவியை பயம் காட்டுறேன்னு சொல்லிகிட்டு கோமாளித்தனமா ஏதும் செய்திடாதீங்க..

___________________

செப்டம்பர் 11 - அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். ஆதேபோல 1911 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நடைபெற்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா..?


அமெரிக்காவில் நியுயார்க் மாநகரில் உள்ள மான் ஹாட்டனி;ல் ஒரு பத்து மாடிக்கட்டிடம் ஒன்றில் 8 மற்றும் 9 வது மாடியில் சட்டைகள் தைக்கும் நிறுவனம் ஒன்று இருந்தது.

1911 ல் மார்ச் 11 ம் தேதி திடீரென்று அங்கு தீப்பற்றிக்கொண்டது. அங்கு 145 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வந்தனர் இதில் பெருன்பான்மையானோர் 13 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள். தீப்பிடித்ததும் அவர்களுக்கு என்ன செய்வதென்று எங்கு ஓடுவதென்று தெரியவில்லை.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஸன்னல் வழியாக 85 அடி உயரத்திலிருந்து குதிக்க ஆரம்பித்தனர். குதித்தவர்கள் அனைவருமே படுகாயமடைந்து இறந்து போயினர். பலர் புகை மூட்டத்தில் தட்டு தடுமாறி தீயில் அகப்பட்டுக் கொண்டு உடல் கருகி இறந்து போயினர்.

தீ விபத்து ஏற்பட்ட உடனையே தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களிடம் 10 வது மாடி வரை செல்ல ஏணிப்படிகளோ - நீர்ப்பீச்சுக்குழாயோ இல்லை. 18 நிமிடங்களில் 133 பேர் உயிரிழந்தனர். 12 பெண்கள் மட்டுமே உயிர்ப்பிழைத்தனர்.

___________________

இமெயில் இன்டர்நெட் வளர்ச்சிகளால் இப்பொழுதெல்லாம் கடிதப்போக்குவரத்துக்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன். வுருங்கால தலைமுறையினர்கள் தபால் என்றால் என்ன,? என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரங்கள் அது போய்ச்சேரும் வரை கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது சில எதிர்பாராத காரணங்களால் கடிதம் போய்ச்சேர தாமதமாகலாம்.

ஆனால் 219 ஆண்டுகள் கழித்து தாமதமாய் போய்ச்சேர்ந்த கடிதம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 1761 ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் 1980 ம் ஆண்டு போய்ச்சேர்ந்திருக்கின்றது. ஸ்வீடன் மன்னர் 12ம் சார்லஸின் படையைச் சார்ந்த ஒரு வீரர் டாமின். 1711 ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மெயர்ஸட்டா எனும் ஊரில் வசித்து வந்த தன் சகோதரி திருமதி நில்ஸ்டாட்டருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டாhர்.

அந்தக் கடிதம் டென்மார்க்கிலுள்ள கோபன்ஹேகன் வந்து சேர்ந்தது. அப்போது டென்மார்க்- ஸ்வீடன் போர் நடந்து கொண்டிருந்தமையால் அந்தக் கடிதத்தை அவர்கள் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

1980 ம் ஆண்டு பழைய பைல்களை நோண்டும்பொழுது இக்கடிதம் டென்மார்க் ஆவணக் காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடனே அக்கடிதம் உரிய முகவரிக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தபால்காரர் அந்தக்கடிதத்தை சேர்க்க அந்தப்பெண்ணின் வாரிசுகளைத் தேடி அலையோ அலையோ என அலைந்திருக்கின்றார். அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பின்னர் அந்நகர நிர்வாகியிடம் அக்கடிதத்தை அந்த தபால் காரர் கொண்டு சேர்த்து விட்டார்.

ஆனால் நமது ஊரில் எல்லாம் இப்பொழுது கடிதங்களை உரிய நேரத்தில் சேர்த்துவிடுகிறார்கள் என்று கேள்வி.(?) தபால்துறை ஊழியர்கள் அந்த அளவிற்கு பொறுப்பாக வேலைபார்க்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

___________________

Thursday, August 10, 2006

முதன் முதலாக அரசியல்வாதிகளுக்கு மத்தியில்

தமிழ்நாடு மருத்துவ சேவை சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக மாண்புமிகு அமைச்சர் டி. பி. ஏம் மைதீன்கான் அவர்களை அழைத்திருந்தார்கள். என்னையும் வாழ்த்துரை வழங்குவதற்காக அழைத்திருந்தார்கள்.

வாழ்த்துரைக்காக அமைச்சரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவேண்டும் என்ற ஆவலோடு தகவல்களை சேகரித்து கிண்டலும் கேலியுமாக கவிதை நடையில் எழுதி வைத்திருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்திக்கின்ற மேடை இது.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் பற்றிய தகவல்களை அவரது உறவினரும் எனது கல்லூரி நண்பருமான சித்திக் என்பவரிடம் தொலைபேசி செய்து சேகரித்து வைத்திருந்தேன்.

அரசியல் வேஷ்டிகளில் மட்டுமே
கறை உடையவர்
கட்சியிலும் வாழ்க்கைளில்
என்றும்
கறை படியும் என்ற கவலை இனி இல்லை

---
இவர் அடிப்படையில்
வேளாண்மைக் குடும்பத்திலிருந்து
வந்திருப்பவர்

---

சூரியன்
இவரது
வாழ்க்கையையும் உயர்த்தியிருக்கின்றது
விவசாயத்தையும் உயர்த்தியிருக்கின்றது

---

இறுதியாய் ஒரு செய்தி
அதிர்ச்சி அடைய வேண்டாம்
இவருக்கும் ஒரு பொடா சட்டம் …காத்துக்கொண்டிருக்கின்றது
ஆம்
மேலப்பாளைய மக்களின்
இதயங்களில் மாட்டிக்கொண்டு
எப்பொழுதுமே வெளிவரவே முடியாத
அன்பெனும் பொடா சட்டத்தில்
சிறைபட்டுக் கொண்டிருப்பார்

---

என்று வழக்கமான வஞ்சப்புகழ்ச்சி அணியில் சுமார் 4 பக்கத்திற்கு நகைச்சுவையாகவும் மக்கள் ரசிக்கும்படியாகவும் எழுதிய வைத்து விட்டு பேசுவதற்கான தருணத்திற்காக காத்திருந்தேன்..

பயமாக இருந்தது. ஏனென்றால் நான் கல்லூரி மேடைகளில்தான் அனைவரையும் கவருவதற்காகவும் - வெட்டி ஹீரொத்தனத்திலும் கிண்டலாக பேசியிருக்கின்றேன். ஆனால் இது அரசியல் மேடை இங்கு எனது பேச்சுக்கள் எடுபடுமா என்று தெரியவில்லை.

விழா அன்று காலை 11 மணிக்கு சென்று வந்திருந்த சில பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு முதல் வரிசையில் சென்று அமர்ந்தேன்.

பக்கத்தில் உள்ள ஓர் வக்கீல் அவருக்கு சம்பந்தா சம்பந்தா இல்லாமல் ஏதேதோ கேட்டார். நானும் சில மேடைகளில் பார்த்திருக்கின்றேன். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக பக்கத்தில் இருப்பவர்களின் காதினில் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மேடைகளிலும் இந்தச் செயல் வழக்கமாக நடைபெறுவதுண்டு.

அதுபோல சில தொழிலதிபர்கள் - சில அரசியல்வாதிகள் -உள்ளுர் பிரபலங்கள் என்று அறிமுகங்கள் கிடைத்தன.

குறிப்பிட்ட நேரத்திற்கு அமைச்சர் வந்துவிட எல்லாருக்கும் அவர் வணக்கம் சொல்லி கைகுலுக்கி விட்டு ; என்னடா அரசியல் மேடையில் டிசர்ட்டும் ஜுன்ஸ் பேண்ட்டோடு ஒரு இளைஞன் என்று என்னை ஆச்சர்pயமாக பார்த்தாhர். பின்னர் என்னிடமும் கைகுலுக்கி விட்டு போது பக்கத்தில் இருப்பவரிடம் என்னைப்பற்றி கேட்க - அவரோ நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எனது பெயரை சுட்டிக்காட்டி இவர் பெயர் ரசிகவ் ஞானியார் என்று அறிமுகப்படுத்தினார்.

அமைச்சரின் பின் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். வழக்கமான அரசியல் முலாம் பூசுதல்கள் ஆரம்பித்தது. இங்கிருந்து வந்திருக்கும் இவர்களே - அங்கிருந்து வந்திருக்கும் அவர்களே என்று அனைவரும் இதே பல்லவியைப்பாட எனக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது. அமைச்சருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

அவர் மேடையில் பேசுபவரைப் பார்த்து சரி சரி வரவேற்றது எல்லாம் போதும் விசயத்திற்கு வாங்கப்பா என்று கிண்டலோடு கூற கூட்டத்தில் சிறிய சிரிப்பலை. ஆனாலும் அந்த பேசிக்கொண்டிருந்து அந்த உள்ளுர் அரசியல்வாதி விடவில்லை. அமைச்சர் எரிச்சலாகி பின்னால் திரும்பி எங்களைப்பார்க்க நான் ஒரு புன்முறுவல் தந்தேன்.

பின் என்னிடம் ஏதோ கேட்க எனக்கு சரியாய் காதில் விழவில்லை. என்ன சார்..? என்ன சார்..? என்று எனது சீட்டில் இருந்தபடியே கேட்க - நான் இருந்த இடத்தில் இருந்தபடியே பதில்சொல்வதைக்கண்டு எரிச்சல் அடைந்த அமைச்சரின் பக்கத்தில் உள்ள ஒரு நபர் என்னைச் சைகையில் முன்னால் வரும்படி அன்பாய் எச்சரிக்க நான் முன்னால் சென்று அமைச்சர் அருகே குனிந்து என்ன சார் என்க..?

உங்களை புதுசாப் பார்க்குறேன் இங்க..? நோட்டீஸில் இளம்கவிஞர் ரசிகவ் ஞானியார்னு போட்டிருக்கே..? நீங்க கவிஞரா..?

ஆமா சார் அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..என்று நக்கலாய் பதில் அளிக்க அவர் புன்முறுவல் செய்தார்.

சரி ஞானியார்தான் உன்னுடைய உண்மையான பெயரா..? என்ன அர்த்தம்?

ஞானின்னா எல்லாம் அறிந்தவன்னு அர்த்தம் சார் - ஆனா என்னுடைய பெயர் மட்டும்தான் ஞானி..என்று நான் கூற

மறுபடியும் ஒரு சிறிய புன்னகையை வீசினார். சரி நீ ஏதோ புத்தகம் வெளியிட்டிருக்கிறதா சொன்னாங்க அந்தப்புத்தகம் இப்ப இருக்கா..

அய்யோ நான் கொண்டு வரலைங்க..நான் உங்களுக்கு அப்புறமா தரேன்..

சரி கண்டிப்பா தரணும் என்று அவர் கூற நான் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்

அமைச்சரிடம் பேசிவிட்டு வந்ததால் ஏதோ தமிழ்நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டைபற்றி முழுமையாக நான் அமைச்சரிடம் விவாதித்ததைப்போன்ற எண்ணத்தில்
கூட்டத்தில் உள்ள எல்லாரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வில் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

இதற்கிடையில் எனக்கு வரவேண்டிய தேநீர் என்னுடைய இருக்கையைத்தாண்டி சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் முழுவதும் வேண்டுமானாலும் தேநீர் குடித்துக்கொண்டே இருப்பேன் நான். அந்த அளவிற்கு தேநீர் பைத்தியம் நான். இப்படி இருக்கையில் என்னைக் கடந்து சென்றுவிட்டதே தேநீர் என்று கடுப்பில் இருந்தேன்.

மறுபடியும் கேட்பது நாகரீகமல்ல. அப்பொழுது திடீரென்று ஒரு பையன் வந்து என்னிடம் தேநீர் கோப்பையை நீட்ட - எனக்கு மகிழ்ச்சி கார்ப்பரேஷன் குழாய் காற்றைப்போல பீறிக்கொண்டு வந்தது.

ச்சே நம்ம ஊருப்பசங்க பாசக்காரனா இருக்காங்களாப்பா

அமைச்சர் மைதீன்கான் பேச ஆரம்பித்தார். ஆனைவரையும் வழக்கமான அரசியல் பாணியில் அவரும் வரவேற்று பேசும்பொழுது தம்பி ரசிகவ் ஞானியார் என்று கூற

அட அவர் வயசு என்ன?..என்னுடைய வயசு என்ன? தம்பின்னு சொல்லி அவருடைய வயசைக் குறைச்சிக்கிட்டாரே..

என்று எனக்குள் சின்ன பொறாமை.மக்களுக்கு செய்த பணிகள் - குறை நிறைகள் - எதிர்காலத்திட்டங்கள் என்று நிறைய உபயோகமாகப் பேசினார்.

அப்பொழுது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து தம்பி பேசுவதற்குண்டான நேரம் குறைவாகத்தான் இருக்கின்றது. இன்னொரு அரசியல் பிரமுகர் ஒருவரும் பேசவேண்டியதிருக்கின்றது. நீங்களும் பேச வேண்டியதிருக்கிறது. ஆனால் நேரமில்லை. யாராவது ஒரு ஆள்தான் பேசமுடியும்.

அவரைப் பேச வைக்கலாமா..? மன்னிச்சுக்கோங்க..

சரி அந்த உள்ளுர் அரசியல் பிரமுகர் ஏதாவது முக்கியமாக பேசுவார் என்று நினைத்து சரிங்க பரவாயில்லை..அவர் பேசட்டும்.. என்று நான் பேச வைத்திருந்த காகிதத்தை மடித்து ஏமாற்றத்துடன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அடுத்து பேசுவதற்று அழைக்கப்பட்ட அந்த அரசியல்வாதியின் பேச்சை உற்று நோக்க ஆரம்பித்தேன்.


கடுமையான வேலைப்பணியிலும் வந்திருக்கும் அமைச்சர் மைதீன் கான் அவர்களே..

வக்கீல் திரு அபுபக்கர அவர்களே

நெல்லை பில்டர் அசோசியேசன் தலைவர் அமானுல்லா அவர்களே...

...
...

தம்பி; ரசிகவ் ஞானியார் அவர்களே ( நோட்டிஸில் உள்ளதை அப்படியே வாசித்தார் )

அனைவரையும் வரவேற்கின்றேன் என்று தனது நீண்ட கருத்துள்ள உரையை முடித்துவிட்டு அமர்ந்தார். ச்சே இப்படி இவர் பேசுவார்னு தெரிஞ்சா நாம பேசியிருக்கலாமே என்று நான் பட்ட வயிற்றெரிச்சலில் மைக்கில் புகை வந்ததை நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும்தான் கவனித்தோம்.


பின் விழாவிற்கு வந்தவர்களை கவுரவிக்கும் வண்ணம் போர்வை போடும் படலம் ஆரம்பித்தது.

இந்த பொன்னாடையை இவர் அவருக்குப் போடுவார்
அவர் இவருக்குப் போடுவார்
என்று சொல்லிக்கொண்டே மருத்துவச்சேவை சங்க உறுப்பினர் திரு..... அவர்கள் ரசிகவ் ஞானியார்க்கு போடுவார் என்று கூற ஆச்சர்யப்பட்டேன். அட நம்மையும் மதிச்சு போடுறாங்களேப்பா என்று எனக்குள் ஒரு கர்வம்.

இந்த பொன்னாடைன்னு சொல்லும்பொழுதுதான் ஞாபகம் வருது. காலேஜ்ல ஒருமுறை அப்படித்தான் மாணவர்ப்பேரவை செயலராக இருக்கும்பொழுது பொன்னாடையை எனக்கு போர்த்தினார்கள். நான் உடனே

பொன்னாடை என்று சொல்லிவிட்டு தள்ளுபடித்துண்டை போர்த்தியதற்கு நன்றி..நன்றி..நன்றி..என்று நான் மைக்கில் சொல்ல மாணவர்கள் உற்சாகத்தில் கைதட்ட பிரின்ஸ்பால் ஒரு முறை முறைச்சாரே பார்ப்போம்..அப்புறம் தனியா கூப்பிட்டு ரெய்டு விட்டதெல்லாம சொல்லமுடியாத கதைங்கோ..

சரி அத விடுங்க..இங்க இந்த விழாவுல அதே பொன்னாடைன்னு சொன்னதால எனக்கு அந்த காலேஜ் ஞாபகம் வந்திடுச்சு..


விழா முடிந்து அனைவரும் கிளம்புகின்ற சமயத்தில் அமைச்சரிடம் அனைவரும் கைகுலுக்கி விடைபெற நானும் அமைச்சரிடம் கைகுலுக்கி விடைபெறும் தருவாயில் அவரிடம் ஹேப்பி பர்த்டே சார் என்க..அவரோ ஆச்சர்யப்பட்டு எனக்கா பிறந்த நாளா என்க..

ஆமா சார் 19.07.1947 உங்க பிறந்த நாள்..இன்னும் 3 நாள் இருக்கு சார் என்க

எப்படித் தெரிஞ்சுது உங்களுக்கு என ஆச்சர்யமாய் கேட்க

இண்டர்நெட்ல இருந்து தகவல் சேகரித்து எடுத்தேன் சார்..பார்லிமெண்ட் புரொபைல்ல இப்படித்தான் இருக்கு..என்று நான் சீரியஸாய் கூற

ச்சோ அது சும்மா கொடுத்ததுப்பா என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.

அட நடிகைகள் தான் வயச மறைப்பாங்கன்னு பார்த்தா..அரசியல்வாதிகளும் அப்படித்தானா..என்ற ஆச்சர்யத்தோடு நானும் விடைபெற்று கிளம்பிவிட்டேன்.

சும்மா சொல்லக்கூடாதுங்க மற்ற பந்தா காட்டுகின்ற அமைச்சர்களுக்கு மத்தியில் இவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டது என்னை மட்டுமல்ல அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இவர் தனது பேச்சில் கூட குறிப்பிட்டார்

கடுமையான பணிகளுக்கு மத்தியில் நான் வந்திருப்பதாக யாரோ கூறினார்கள்..ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க..சும்மா தான் இருந்தேன்..எந்த கடுமையான பணியும் இல்லை..யாருக்காக வரப்போகிறேன்.? மக்களுக்காகத்தானே..? நீங்க கொடுக்கிற கார் - நீங்க கொடுக்கிற பெட்ரோல் - நீங்க கொடுக்கிற பாதுகாப்பு-- நீங்க ஆணையிட்டா வந்து நிற்கப்போகிறேன்...

என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் எந்த அமைச்சருக்கு வரும் சொல்லுங்க..


தொகுதியில் எந்தப்பிரச்சனை என்றாலும் தயக்கம் காட்டாமல் என்னை அணுகலாம் என்று வாக்களித்தார்.

அனைவரிடமுமு; பொறுமையாய் மனுக்களை வாங்கி எளிமையாக பழகிச்சென்ற அமைச்சர் மைதீன் கான் அவர்கள் எனக்கு மிகவும் வித்தியாசமான அமைச்சராகவே தெரிந்தார்.

அது மட்டுமல்ல திடீரென்று உள்ளுர் மருத்துவமனைக்கு சென்று விசிட் அடித்து அன்று சரியான காரணமில்லாமல் பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டுவிட்டு சென்றிருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த அளவிற்கு தொகுதி மக்கள் மீது அக்கறை செலுத்தியிருக்கின்றார் என்று.

இவரைப்பின்பற்றி மற்ற அரசியல்வாதிகளும் இருந்தால்; தொகுதிகள் மட்டுமல்ல தமிழ்நாடே முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 08, 2006

சின்னச்சின்னச் சுவாரசியங்கள் - I

குற்றால சீசன் களைக்கட்டி வருகின்றது. மக்கள் கோடையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக குற்றால அருவிக்கு வந்து தங்களை நனைத்துக்கொள்கின்றனர். குற்றால அருவியானது ஏழைகளின் நயாகராவாகத் திகழ்கின்றது.

நான் சென்ற வருடத்தில் மட்டும் மூன்று முறை சென்று விட்டேன். எப்பொழுதும் ரசிக்க வைக்கும் யானை - கடல் - ரயில்களின் வரிசையில் இந்த அருவியையும் சேர்த்துக்கொள்ளலாம்..

இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாய் குளித்துக்கொண்டிருக்கும் குற்றால அருவியில் பிரிட்டிஷ் காலத்தில் நம் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விசயம் யாருக்கேனும் தெரியுமா?

ஆங்கிலேயர்களைத் தவிர யாரும் அங்கே குளிக்கக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் அங்கு ஆணையிட்டனர். அதனால் அதனைச் சுற்றி உள்ள மக்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாயினர். நம்முடைய நாட்டில் உள்ள அருவியில் குளிப்பதற்கு மண்ணின் மைந்தர்களான நமக்கே தடையா..? இது என்ன கொடுமை என்று சுற்று வட்டார மக்கள் கொதித்துப்போய் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆந்த நீதிமன்றமோ ஆங்கிலேயர்க்ள குளிக்கும்பொழுது தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அருவிக்கு அருகே உள்ள ஆலயத்தில் வேண்டுமானால் ஆங்கிலேயர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வழிபாடுகள் செய்து கொள்ளலாம் என்று ஆணையிட்டது.

இந்தப்பதிலில் திருப்தியடையாத தென்காசி மற்றும் திருநெல்வேலி மக்கள் 1915 ம் ஆண்டு பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர்.. அங்குள்ள ஸர் அனல்ட் என்ற நீதிபதி அருவி என்பது பொதுவானது.

ஆகவே ஆங்கிலேயர்கள் அங்கு இரண்டு மணி நேரமே நீராடலாம் அது மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் திருவிழாக்காலங்களில் அங்கு குளிக்க கூடாது என்று தீர்ப்பளித்ததோடு இல்லாமல் ஹரிஜனமக்கள் தவிர யார் வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று ஆணையிட்டது.

பின்னர் 1938 ம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக இருந்த காலத்தில் ஹரிஜனங்களும் இங்கே குளிக்கலாம் என்று தடையை நீக்கினார்.

நாம் உல்லாசமாய் குளித்து வருகின்ற இந்த அருவிக்குப்பின்னால் எத்தனை ரணங்கள் இருக்கிறது பார்த்தீர்களா?. ஆகவே இனிமேல் குற்றாலத்திற்கு சென்றால் உடலில் நீரை நனைத்துவிட்டு மனசில் ராஜாஜியையும் நினைத்துப் பாருங்களேன்

- ரசிகவ் ஞானியார்

குங்குமத்தில் எனது படைப்பு

இந்த வார குங்குமம் ( 13.08.06) பக்கம் 88 ல் என்னுடைய படைப்பு ஒன்று வந்திருக்கின்றது. நவரச சிறப்பிதழுக்காக நண்பர் பாலபாரதியும், விக்கி என்ற ப்ரியனும் குங்குமத்தில் உள்ள நண்பர் கேட்டதற்கிணங்க என்னிடம் ஏதாவது ஒரு நவரசத்தைப்பற்றி எழுதச்சொல்ல, நான் "காதலை பற்றி எழுதலாமா?" என்று அவரிடம் கேட்க

"யாரைக்கேட்டாலும் இதத்தான் சொல்றாங்க..வேற ஏதாவது தலைப்பை எடுங்கப்பா" என்று கூற

"தெரிஞ்சதைத்தானே எடுக்க முடியும்..சரி சோகம் பற்றி எழுதவா" என்க

"ம் எழுதுங்க எனக்கு நாளைக்கே வேணும்" என்று கண்டிப்பாய் கூறினார்.

குங்குமம் இதழில் நமது படைப்புகள் வருகிறது என்பது சாதாரண விசயமா..? எப்படியாவது எழுதிக் கொடுத்துவிடவேண்டும் என்ற ஆவலில் இன்றுவரை என்னைச்சுற்றி நடந்த சின்னச் சின்னச் சோகம் பற்றி எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

நான் துபாயில் இருக்கும்பொழுது என்னுடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவர், தனது தாயாரின் மரணத்திற்கு கூட செல்லமுடியாமல் தவித்ததைப்பற்றி எழுதினேன்.

சரி எதற்கும் மகிழ்ச்சியைப்பற்றியும் எழுதலாம் என்று தீர்மானித்து கல்லூரி நாட்களில் நடைபெற்ற ஏற்கனவே வலைப்பூவில் எழுதிய சில சுவாரசியமான கல்லூரிக் கிண்டல்களைப்பற்றி எழுதினேன்.

3 படைப்புகள் தயார் செய்து நண்பர் விக்கியின் மூலமாக பாலபாரதிக்கு அனுப்பி குங்குமம் நாளிதழுக்கு அனுப்பச்செய்தேன். அவர்கள் சோகத்தை விட்டுவிட்டு கல்லூரி நாட்களில் நடைபெற்ற கிண்டலான சம்பவத்தை தேர்ந்தெடுள்ளார்கள்.

எனது படைப்புகள் மட்டுமல்ல அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களின் ( ரசிகவ் - விழியன்- ஜெஸிலா - ஜொள்ளுப்பாண்டி - நிலா )படைப்புகள் பெருன்பான்மையாக இடம் பெற்றுள்ளன.

தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்த நண்பர், குங்குமம்பொறுப்பாசிரியர் கௌதம் மற்றும் நண்பர் பாலபாரதி மற்றும் விக்கி அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதுபோன்று வலைப்பதிவாளர்களுக்கு குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் தருகின்ற ஆதரவுகளால் அவர்கள் மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமையும்.

இப்பொழுது வலைப்பதிவர்கள் மீதும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களின் பார்வை விழுந்துவிட்டது என்பதே வலைப்பதிவர்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பத்திரிக்கைக்கு படைப்புகளை அனுப்பி திருப்பி அனுப்பப்பட்டு தங்களது திறமைகளை எந்த வகையிலாவது வெளிகொணர்ந்து விடமாட்டோமா என்று ஏங்கியவர்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக விளங்குகின்றது.

இப்பொழுது பத்திரிக்கைகளே வலைப்பதிவினரின் பதிவுகளை தேர்ந்தெடுத்து தங்களுடைய பத்திரிக்கையில் பிரசுரிக்கும் அளவிற்கு வலைப்பதிவினர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனி மனித துவேசம் - மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற ஈனச்செயல்களை மட்டும் தவிர்த்துக்கொண்டால் வலைப்பதிவுகளின் வளர்ச்சிகள் பிரமிக்கவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.-ரசிகவ் ஞானியார்

தேன் கூடு