Monday, January 30, 2006

என் வழி....வயித்துவலி


ஹாய் ,

என்னுடைய பெயர் 'இளையதளபதி' விஜய். என்னுடைய தந்தையின் பேனரில் நான் தற்போது 'ஆதி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். ஆனால் படம் பயங்கர பிளாப் ஆகி நான் மிகுந்த நஷ்டத்தில் இருக்கின்றேன்.

மைக்ரோசாப்ட் நிறுவணம் இந்த துயரத்திற்கு உதவுவதாக வாக்கு கொடுத்துள்ளது. நீங்கள் இந்த மின்னஞ்சலை உங்களது உறவினர்களுக்கு நண்பர்களுக்க அனுப்பினால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மெயிலுக்கு 10 பைசா வீதம் எனக்கு தந்துகொண்டிருக்கும்.

தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நிச்சயமாக நான் இனிமேல் என்னுடைய தந்தையின் பேனரில் நடிக்கவே மாட்டேன்.

அதுமட்டுமல்ல நான் இனிமேல் பஞ்ச் டயலாக்கும் பேசமாட்டேன். தயவுசெய்து தயங்காதீர்கள்.

இது உங்களுக்கு சாதாரண மின்னஞ்சல்தான் ஆனால் எனக்கும் இந்த தமிழ் சினிமாவுக்கும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய உதவி இது.

அன்புடன்,
சொல்லி அடிப்பதில் கில்லி
சொல்லாம அடிப்பதில் திருப்பாச்சி
சும்மா சுழன்று சுழன்று அடிப்பதில்
சிவகாசி ...............
சிவகாசி .................
சிவகாசி ...............
உங்கள் விஜய்

(விஜய் ரசிகர்கள் கோவப்படுறது எனக்குத் தெரியுது ஆனா இது என்னோட கைவண்ணம் இல்லைங்கோ..எனக்கு வந்த மின்னஞ்சலை தமிழ்படுத்தினேன் அவ்வளவுதான் )

இப்படிக்கு

என் வழி ... வயித்து வலி..

ச்சே எனக்கும் பஞ்ச் டயலாக் பத்திகிச்சுங்க..

-ரசிகவ் ஞானியார்

Sunday, January 29, 2006

எங்களை சாக விட்டுடாதீங்க அங்கிள்
இதோ இந்தப் படத்தில் காணும் இரண்டு குழந்தைகளையும் பாருங்களேன். என்ன பள்ளிக்கு டாட்டா காட்டிச் சென்ற உங்கள் வீட்டுக் குழந்தைகள் ஞாபகம் வருகின்றதா?

மேலிருக்கும் சிறுவனின் பெயர் செய்யது தனிஷ் வயது 13 அவனது சகோதரியின் பெயர் மரியம் செய்யது வயது 10 அவர்கள் இருவரும் IISR ( International Indian School in Riyadh ) ல் சிறந்த மாணவர்களாக விளங்குகிறார்கள்.

தனிஷ் அந்தப்பள்ளியில் படிப்பில் 7வது இடத்திலும் அவனது தங்கை மரியம் 6 வது இடத்தில் இருக்கின்றாள்.அதுமட்டுமல்ல மரியம் பள்ளியின் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கோல்டு மெடலிஸ்ட் வேறு.

அதுவல்ல இங்கு பிரச்சனை. அந்தப் பெருமை அவர்களுக்கு எப்போதுமே கிடைக்குமா என்பதுதான் பிரச்சனை

தினமும் காலையில் இந்த இரண்டு குழந்தைகளும் பதறிப்போய்தான் படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறார்கள். இவர்கள் காலையில் உணவு இல்லாமல் பள்ளிக்குச் செல்லக்கூடும். ஆனால் ஒரு ஊசி போடாமல் செல்வதில்லை. அந்த ஊசியை மறந்து பள்ளிக்குச் சென்றால் அவர்களுக்கு மரணம்தான் நேரிடும்.

அதுபோல மாலையில் பள்ளி முடிந்ததும் சிட்டுகளாய் பறவைகளாய் மகிழ்ச்சியாய் ஓடிவரும் மற்ற குழந்தைகளை போல இல்லை. ஊசி பயத்தில்தான் வருகிறார்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் அவர்களின் வயிற்றில் ஒரு ஊசி ஏற்றப்படுகிறது.

காலை எழுந்ததும் ஊசி
கனிவு இழக்கும் உடல்வலி
மாலை வந்ததும் ஊசி
மகிழ்ச்சி மறந்த தூக்கம்


என்று பாரதி இருந்திருந்தால் இவர்களுக்காய் மாற்றி பாடியிருப்பான்

உடலுக்குள் தினமிரண்டு
ஊசி - இவர்களின்
பருவத்தில் பிடித்ததப்பா
பாசி?


வலிகளுடைய அந்த இரண்டு ஊசிகள்தான் அவர்கள் உயிர்வாழ தினமும் தேவையான காரணிகள். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களின் வயிற்றில் அந்த ஊசி செலுத்தப்படாவிடில் அவர்களுக்கு மரணம் நேரிடும். என்ன இதயத்தை யாரோ புடுங்கி எரிமலையில் எறிவது போன்ற உணர்வு தோன்றுகிறதா..? ஆமாம் அவர்கள் மரணத்தோடு தொட்டு பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாய் குழந்தைகளை முத்தமிடலாம். மரணம் முத்தமிட விடலாமா..?

தனிஷ் மற்றும் மரியம் இருவரும் தலசீமியா ( Thalassemia) என்ற நோயினால் பிறவியிலிருந்தே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஹீமோகுளோபினைப் பாதிக்கும் இந்த பிறவி நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை முழுங்கிவிடும்.

ஒவ்வொரு நாளும் அந்தக்குழந்தைகள் மற்ற குழந்தைகளைப்போல பள்ளியில் விளையாடுவதற்குதான் ஆசைப்படுகின்றன. ஆனால் தலசீமியா நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள செலுத்தப்படுகின்ற டெஸ்பிரல் என்ற உயிர்காக்கும் அந்த ஊசி யினால் அவர்களால் மற்ற குழந்தைகள் போல இருக்க முடியாது என்று கவலையோடு சவுதி பத்திரிக்கைக்கு ( Saudi Gazette) பேட்டி அளித்துள்ளார் அந்தக்குழந்தைகளின் தாயார் ஜெய்ரின் ஹாபிஷ் .

8 மணி நேரம் தாக்குபிடிக்கும் அந்த ஊசி செலுத்தப்படும் முறையினைப்பற்றி தெரிந்துகொள்ள மாதக்கணக்காய் பயிற்சி எடுத்து இருக்கிறார் அந்தத் தாய் ஜெய்ரீன்.

நம் குழந்தைகள் வருடத்திற்கு ஒருமுறை தடுப்பு ஊசி போடுவதற்கே அவர்கள் செய்கின்ற சேட்டைகள் - அடம்பிடித்தல், இத்தனையும் மீறி அவர்களை தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று கை ,கால்களை உதைத்து திமிரும் குழந்தைகளுக்கு ஊசி செலுத்த எத்துணை போராட்டங்கள்? நாம் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.

ஆனால் அந்தத் தாயின் நிலைமையை நினைத்துப்பாருங்கள் தினமும் இரவு அவர்கள் போராட வேண்டியதிருக்கிறது. தினமும் அந்த குழந்தைகள் இரவு நெருங்க நெருங்க தனக்கு ஊசி செலுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து கடிகாரத்தை பீதியோடு பார்ப்பதை கண்டு வேதனையடைந்து கொண்டிருக்கிறாள் அந்தத்தாய்.

ம்மா ம்மா வேண்டாம்மா ப்ளீஸ்மா ..இன்னைக்கு மட்டும் போட வேண்டாம்மா ..வலிக்குதும்மா என்று கதறும் குழந்தைகளின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் அவர்களின் வயிறு அல்லது கை அல்லது கால்களின் வழியாக அந்த ஊசியைச் செலுத்துகிறாள் அந்தத்தாய்.

அவளுக்குத் தெரியும் குழந்தைகளின் கெஞ்சலுக்காக மனமிரங்கி அந்த ஒருநாள் செலுத்தாவிடில் என்றைக்குமே செலுத்த முடியாது என்று.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்தக் குழந்தைகளுக்கு அந்த ஊசி செலுத்தினால்தான் அவர்களின் உயிரக்கு உத்திரவாதம். இது அவர்களின் தற்காலிக தீர்வுதான். ஆனால் நிரந்தர தீர்வுக்கு ஒரே வழி bone-marrow transplant அறுவைச்சிகிச்சைதான் .

ஆனால் இந்த அறுவைச்சிகிச்சைக்குண்டான செலவு மிகவும் அதிகம் . அந்தக்குழந்தைகளின் தந்தை செய்யது ஹாபிஷ் ஜன்னல் திரைகள் தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். மாதம் சவுதி ரியால் 2000 சம்பாதிக்கின்ற ஒரு சிறு வியாபாரி. அவரால் அந்தச் செலவுகளை ஈடுகட்ட முடியாது

அந்த அறுவைச்சிகிச்சைக்கு சவுதி ரியால் மதிப்பு 170000 (இந்திய மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூ ) தேவைப்படும். அந்தத் தந்தையினால் இந்த ஊசிக்குண்டான செலவுகளையே ஈடுகட்ட முடியவில்லை

ரியாத்தில் உள்ள ஆர்எம்சி மருத்துவமனையில் ஒருதடவை இலவசமாக அந்த ஊசியும் மற்றும் blood Transfusion ம் நடந்தது. அதன்பிறகு மற்ற நாட்டுக்காரர்களுக்கு இலவசமாக அந்தச்சிகிச்சையை அவர்கள் அளிக்க மறுத்துவிட்டனர்.

மகாராஷ்டிராவைச் சோர்ந்த ஹாபிஷ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் மூலமாகத்தான் தன் குழந்தைகளுக்கு அந்த உயிர் காக்கும் ஊசியை செலுத்திக்கொண்டிருக்கிறார். உதவிசெய்த நண்பர்கள் எவ்வளவு காலம்தான் உதவிசெய்யக்கூடும். ?

ஆகவே அவர்கள் இப்போது கேரளாவில் உள்ள சில பொது நல அமைப்புகளையும் அவர்களது குழந்தைகள் படித்த IISR பள்ளியையும் அனுகி நாடியுள்ளார்கள். 10000 மாணவர்கள் படிக்கின்ற அந்தப் பள்ளியில் ஒவ்வொரு குழந்தையும் சவுதி ரியால் 20 கொடுத்தால் கூட தங்களது குழந்தைகளின் அறுவைச்சிகிச்சைக்கு பணம் சேர்த்துவிடலாம் என்று பள்ளி நிர்வாகத்திடமும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் சில சமூக அமைப்புகள் மூலமாக கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக அமைப்புகள் அந்தக் குழந்தைகளை மருத்துவச் செலவு மிகவும் குறைவாக உள்ள வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நீங்களும் யாராவது இந்தக்குழந்தைகளின் துயரத்தில் பங்கு கொள்ள விரும்புகிறீர்களா. இதோ இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

செல்பேசி - 0507910906 ( ஹாபிஷ்)
வீட்டு எண் : 01-2135062.
தங்களது பண உதவியை இதோ இந்த கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்

Syed Hafiz,
The Saudi British Bank
A/C No. 009017195150,
Sanayah branch, Riyadh.

Or

Syed Hafiz,
ICICI Bank,
A/C No. 00040144156,
Mumbai branch, India.

மேலே குறிப்பிட்டுள்ள நபர் எனக்கு சொந்தமோ நண்பரோ இல்லைப்பா..அவரின் முகம் கூட எனக்குத் தெரியாது. அவருக்கும் எனக்கும் உள்ள ஒரே உறவு முறை அவரும் நானும் மனித வர்க்கம் என்ற நெருங்கிய பந்தம்தான்.

இவருக்கு செய்கின்ற உதவியினால் எனக்கு கிடைக்கின்ற லாபம் என்ன..? எனது இறைவன் சொர்க்கம் கொடுப்பானோ இல்லையோ அந்தக்குழந்தைகளுக்கு இதன் மூலம் கிடைக்கின்ற உதவிகளில் என்னுடைய மனதிருப்தி இருக்கின்றது.

நீங்கள் விழி வைத்தால் அந்த குழந்தைகளின் வலி போகும்.
விழி வைத்து வழி கொடுப்பீர்களா? இல்லை
அழ வைத்து வலி கொடுப்பீர்களா?

வாடகை வீடாம் பூமியிலே
மனிதநேயம் ஒரு கதவு
பாடையிலே நீ போகுமுன்னே
பத்துபேருக்கு உதவு


- ரசிகவ் ஞானியார்

Saturday, January 28, 2006

பேராசிரியர் அப்துல்காதர்
என்னுடைய கணித துறை பேராசிரியர் . மலையாளம் கலந்த தமிழில் பேசுபவர். யாருடைய வகுப்பை தவறவிட்டாலும் இவருடைய வகுப்பை நான் தவறாமல் கலந்துகொள்வேன். அந்த அளவிற்கு தன்னுடைய பாடம் நடத்தும் திறமையால் எங்களை சுண்டியிழுப்பார்

அவர் உடை அணிந்து வரும் அழகே தனி அழகுதான். மலையாள நடிகர் முரளி தெரியுமா..அதான்பா ஜெமினி படத்துல விக்ரமுக்கு உதவுற போலிஸ்காரராக வருவாரே..அவர மாதிரி இருப்பார்

யாராவது தவறு செய்தால் போதும் மலையாளம் கலந்த தமிழில் கண்டிப்பார். நான் கல்லூரி மாணவர்ப்பேரவையின் சார்பாக ஒருமுறை கல்லூரி போராட்டத்தில் கலந்துவிட்டு தாமதமாய் வந்தபொழுது ,

எந்தப்பா நீ கோலேஜ்க்குதான் ( அப்படித்தான் உச்சரிப்பார் College- ஐ) செகரெட்டரி எனக்கு இல்ல..புரியுதா. என்று மலையாளம் கலந்த தமிழில் கடிந்து கொண்டார்.

அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருப்பதால் அவர் பேசினால் நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன்.

மதியம் ஒருமுறை கட் அடித்துவிட்டு கல்லூரியிலிருந்து நண்பர்கள் மொத்தமாக கல்லூரியை விட்டு வெளியே போகும்போது எதிரில் அவர் தன்னுடைய வெள்ளை அம்பாசிடரில் வந்து கொண்டிருக்க நாங்கள் கல்லூரியை கட் அடித்துச் செல்வது தெரிந்தால் சத்தம் போடுவாரோ எனப்பயந்து மீண்டும் அவர் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது மீண்டும் கல்லூரி நோக்கியே செல்லுவதுபோல சென்றோம்.

அவர் வாகனம் கடந்து சென்றவுடன் மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி கால்களை திருப்பினோம்.

மறுநாள் அவர் கட் அடித்த எல்லா மாணவர்களையும் கொஞ்ச நேரம் வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பின் அனுமதியளித்துவிட்டார்.

படிங்கப்பா படிங்க..கோலோஜ் முடிஞ்சு வெளியே போனாதான் தெரியும் கஷ்டம்..இப்பவே படிங்கப்பா..

அவரை மிகவும் விரும்பியதற்கு காரணம் அவரின் உடையழகு - பாடம் எடுக்கின்ற முறை - நாகரீகமான அணுகுமுறையைக் காட்டிலும் மிக முக்கிய காரணம் என்னவென்றால் நான் விரும்பும் பெண்ணுக்கு அவர்தான் மறக்கு முடியாத ஆசான் அதுதான் முக்கிய காரணம். என்ன நியுட்டனின் 3 வது விதி ஞாபகம் வருதா?

- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 24, 2006

சுப்பிரமணிக்கு கல்யாணம் டோய்யார் இந்த சுப்பிரமணி? இளங்கலை கணிதம் பயிலும்போது என்னுடைய கல்லூரியில் சீனியர். பிறகு நான் எம்.சி.ஏ படிக்கும்போது வகுப்புதோழராக மாறினார்.

இன்று வந்த மெயிலில் இன்விடேஷன் ப்ரம் சுப்பிரமணி என்று வந்ததுமே பரபரப்பாய் திறந்து பார்த்தேன். அவருடைய திருமண அழைப்பிதழ். வருகின்ற ஞாயிறன்று திருநெல்வேலியில் உள்ள ராஜ்மஹால் மண்டபத்தில் வைத்து காலை 9 மணிக்கு நடைபெறுகின்றது.

மணமகளின் பெயர் : ஆர் சுபாஸ்ரீ
மணமகன் பெயர் : வி. சுப்பிரமணியன்

நாங்கள் வகுப்பறை தோழர்கள் என்பதை விடவும் டீக்கடை தோழர்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வகுப்பறையை விடவும் டீக்கடைகளில்தான் எங்களின் சந்திப்புகள் அடிக்கடி நிகழும்.

டீக்கடை சம்பாஷணைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். க்ளாஸ் கட் அடித்து விட்டு அல்லது இரண்டு க்ளாஸ்க்கு இடைப்பட்ட நேரத்தில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டில் உள்ள விஎம்எஸ் கல்யாண மண்டபத்திற்கு எதிரே டீக்கடைதான் எங்களின் குட்டி வகுப்பறை. வருகைப்பதிவேட்டை வகுப்பறையில் எடுப்பதை விடவும் டீக்கடையில் எடுத்தால் வருகை எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கிண்டல்

"அண்ணே ரெண்டு டீ - க்ளாஸை கழுவி போடுங்கண்ணே "என்று ஆரம்பிப்பேன்.

சுப்பிரமணி கொஞ்சம் பயந்த சுபாவம். "ஞானி அடி வாங்கப்போறோம் ஒருநாள். அவர் காதுல கேட்டுற போதுடா" என்று பயந்துபோவார்.
அந்த டீக்கடை மாஸ்டரின் காதினில் கேட்டாலும் சிரித்துக்கொண்டே இருப்பார் ஒன்றும் சொல்ல மாட்டார்

"அண்ணே இந்த ஏரியாவுல நல்ல டீக்கடை எங்கண்ணே இருக்கு" என்று கேட்டுவிட்டு டீ மாஸ்டருடன் சேர்ந்தே சிரிப்போம்.

மதிய வேளையில் மொத்தமாக சென்று அந்த டீக்கடையின் பக்கத்தில் உள்ள கடையில் புரோட்டா சாப்பிடுவோம். சாப்பிடும்போது ஹலோ அந்த பாட்டை மாத்துங்க இந்த பாட்டை மாத்துங்க .ஹிந்தி பாட்டு போடுங்க..தமிழ் பாட்டு போடுங்க..என்று ஒரே நமச்சல்தான்.

தர்மசங்கடம்

பின்னர் அங்குள்ள விஎம்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் யார் வீட்டு திருமண விழாவுக்கோ நாங்கள் சென்று விருந்தினர்கள் போல சாப்பிட்டுவிட்டு வருவோம்.

ஒருநாள் அப்படித்தான் எல்லோரும் ஒரு திருமண விழாவிற்கு நாங்கள் அழைக்காத விருந்தினர்களாய் சாப்பிடச் சென்றபொழுது எங்கள் குழுவில் உள்ள ஒருவனின் அண்ணனும் வந்துவிட்டான்.

டேய் அது என்னோட கஸ்டமர் ஒருவரோட திருமணம்டா உனக்கு யாரைடா தெரியும் இங்கே ..என்று அந்த அண்ணன்காரன் கேட்க

நாங்கள் குறுக்கே புகுந்து இல்லைண்ணே பொண்ணோட மாமாப்பையன் எங்ககூடதான் படிக்கிறான் அவன்தான் இன்வைட் செய்தான் என்று ஏதோதோகூறி சமாளிக்க வேண்டியதாகிப் போய்விட்டது

பந்தயம்

பின்னர் எம்சிஏ வகுப்பறையின் வாசலில் அமர்ந்துகொண்டு தேவதைகளை ரசிப்பது. ஒரு நாள் முதலாண்டு பெண்ணிடம் பேச முடியுமா என்று என்னிடம் பந்தயம் கட்டினார்.

நான் என்ன பேசுவது எனத்தெரியாமல் ஒரு துண்டுச் சீட்டில்

gnaniyar2k@rediffmail.com
www.rediffmail.com
India


என்று எழுதி அந்தப்பெண்ணிடம் சென்று ஹலோ உங்களுக்கு பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பக்கம்தானே.

ஆமா என்று பயந்தபடி சொல்ல

இந்த அட்ரஸ் எங்கேன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ் என்று கூறி அவளிடம் அந்த துண்டு சீட்டைக் கொடுக்க அவளோ சீரியஸாய் பார்த்துவிட்டு படித்ததும் என்னை நிமிர்ந்து பார்த்து ,

இந்த அட்ரஸ் எங்க வீட்டு பக்கம்தான்.
எங்க வீட்டுப்பக்கத்துல ஒரு பர்வுசிங் செண்டர் இருக்கு அங்கதான் இருக்கு
என்று போட்டாலே ஒரு போடு. எனக்கு அவமானமாய் போய்விட்டது

அவரிடம் வந்து காலரை தூக்கிக்கொண்டேன்.பார்த்தீங்களா பேசிட்டேன் என்று. ஆனால் அங்க அந்தப்பொண்ணு என்ன பேசினான்னு அவர் கேட்கவேயில்லை.


குரூப் ஸ்டெடி

நாங்கள் குரூப் ஸ்டெடி வைக்கும் நாட்கள் ஜாலியாக இருக்கும். சுப்பிரமணி திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள சிந்துபூந்துறை என்ற பகுதியில் தனது நண்பனின் அறையில் தங்கியிருந்து படித்து வந்தார் அவரது பூர்வீகம் தென்காசி.

நானும் சில நண்பர்களும் தேர்வு சமயங்களில் அங்கு வந்துதான் ஒன்றாக படிப்போம்.

பிட் எழுதுவது
எந்த கேள்விகள் எல்லாம் வரும் என்று அலசுவது
இடையிடையே போரடிக்காமல் இருக்த திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து டீ அடிப்பது
வகுப்பறையின் எதாவது பிகர்களைப்பற்றி பேசுவது என்று மிகவும் ஜாலியாக இருக்கும். படிப்பது 40சதவிகிதம் தான். மற்ற 60 சதவிகிமும் நாட்டு நடப்புகள்தான்.

திடீரென்று யாருக்காவது போன் செய்து டேய்! நீ படிச்சிட்டியா! நீ படிச்சிட்டியா! என்று தொலைபேசி செய்து தொல்லை கொடுப்போம்.

இரவு முழுவதும் படித்து விட்டு பரிட்சைக்கு சென்று திரும்பி அந்த அறையில் வைத்து ச்சே இது எனக்கு தெரிஞ்ச கொஸ்டின்தான் எழுதாம போயிட்டேனே
ச்சே இது நான் எழுதுன கொஸ்டின்தான் பிட் எடுக்காம போயிட்டேனே
என்று ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்துவிடுவோம்.

அந்த சுப்பிரமணி மட்டும் எதுவுமே புலம்பமாட்டார். பிட் அடித்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து பிட் அடிக்கமாட்டார். பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதியிருக்கலாம் . ஆனால் அவர் பிட் அடித்து நான் கேள்விப்பட்டதில்லை.


பரிட்சை நேரங்களில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் வைத்து மாலை நேரங்களில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். அங்கு வீசுகின்ற காற்றைப்போலவே பாடங்களும் மிக மென்மையாக மனதில் பதியும். எனக்குண்டான சந்தேகங்களை அழகாக தீர்த்து வைப்பார்.

நான் படிக்க சோம்பல் படும்பொழுதெல்லாம் இன்னும் ஒரே ஒரு கொஸ்டின்தான் ஞானி படிச்சுருவோம் என்று ஊக்கம் கொடுத்து என்னை படிக்க வைப்பார். பின்னர் படித்ததை அவர் என்னிடமும் நான் அவரிடமும் ஒப்பித்துக்கொள்வோம். மறக்கமுடியாத நாட்கள் அவை.

கோபம்

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரும் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டிருக்க நான் அவருடைய ஆட்டோகிராப் டைரியை எடுத்து அதில் வகுப்பு தோழி ஒருத்தி அவருக்கு எழுதியதை வகுப்பின் முன்சென்று வாசித்தேன்

சுப்பிரமணி உங்களை முதன்முதலாக பாளையங்கோட்டை பெல் பின்ஸ் நிறுவனம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதுதான் பார்த்தேன் என்று ஆரம்பிக்கும் அந்தப் பெண் எழுதிய ஆட்டோகிராப்.

நான் வாசிப்பதை தெரிந்து எழுதிய அந்தப்பெண்ணும் வெட்கப்பட மாணவர்கள் கத்த ஆரம்பிக்க சுப்பிரமணிக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. பின்னர் அந்த டைரியை என்னிடமிருந்து கோவமாய் பிடுங்கினார்.அதன்பிறகு யாரிடமுமே ஆட்டோகிராப் வாங்கவில்லை

அவர் என்மீது கோவப்பட்டாலும் எதுவுமே திட்டாமல் என்னிடம் பேசபாமல்அமைதியாக இருந்தார். ஆனால் கோவத்தில் திட்டுவதை விடவும் அவரின் அமைதி என்னை மிகவும் பாதித்தது. பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

திருமணவாழ்த்து

அவருடைய திருமணத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று டேய் நம்ம சுப்பிரமணிக்கு கல்யாணம் டோய் என்று மற்ற நண்பர்கள் மத்தியில் கத்தி அவரை கிண்டலடிக்க ஆசையாக இருக்கிறது.

கல்யாண மேடையில் அவரது மனைவியிடம் ஹலோ உங்க ஆளு காலேஜ்ல என்ன சேட்டை செய்வார் தெரியுமா என்று கூறி அவரது மனைவியையும் அவரையும் வெட்கப்படவைப்பது என்று ஏதோதோ கனவுகள்

ம் எல்லாம் வெறும் கனவுதான்.

அவருடைய திருமணத்திற்கு
நிறைய நண்பர்கள் வரக்கூடும். ஆனால் இந்த
நிலவு நண்பனால் மட்டுமே வரமுடியாது. ஆகவேதான் அந்த ஞாபகத்தில் இந்த பதிவு.

இந்த பதிவுக்கு விமர்சனம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை எனக்காக ஒரு வாழ்த்தை எனது நண்பனுக்கு தெரிவித்துவிட்டுப்போங்களேன்பா.

"அட முகம் தெரியாத நண்பர்கள் கூட நம்முடைய திருமணத்திற்காக வாழ்த்து அனுப்பியிருக்கிறார்களே ரொம்ப நன்றிடா ஞானி.."என்று அந்த நண்பர் மகிழ்ச்சியடையக்கூடும்.

ஏனென்றால் அவருடய திருமண பரிசாக இந்த பதிவைத்தான் அனுப்பபோகிறேன். அவர் இன்றோ நாளையோ இதனை படிக்ககூடும்.

நண்பா!
மாணவனாய் இருந்து
மணமகனாய் மாறுகிறாய்.

எப்பொழுதும் மாறாமல்
என்னுடைய நண்பனாய்
நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் ..
வாழ்த்துகிறேன்

உன் திருமணத்தில்
தெளிக்கப்படுகின்ற
பன்னீரில் எனது - ஆனந்தக்
கண்ணீரும் கலந்திருக்கும்


கடல்தாண்டி வருவதற்கு...
இயலவில்லை நண்பா!
நான்
வரவில்லையென்று நீ
வருத்தப் படாதே!
வாசலில் கையேந்தி நிற்கின்ற
ஏதாவது ஒரு பிச்சைகாரனின்
வயிற்றுப்பசியை நிரப்பு!
இங்கே
உன் திருமணவிருந்தின் சுவையறிவேன் நான்.


- ரசிகவ் ஞானியார்

Monday, January 23, 2006

ரவுடிகள் ஜாக்கிரதை
சண்டைக்கோழி

கல்லூரி வாழ்க்கை முடிந்து எல்லோரும் விடைபெற்றுச்செல்ல கதாநாயகன் தன் கல்லூரி நண்பனுடன் அவனது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க நேரிடும்போது சந்தர்ப்ப வசத்தால் ஊரில் உள்ள ஒரு ரவுடியின் பகைமைக்கு உள்ளாகின்றான். அந்த ரவுடியால் அந்த நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட நண்பனின் குடும்பத்தையும் தனது உயிரையும் எப்படி காப்பாற்றிக்கொள்கிறான் என்பதுதான் கதை

கதாநாயகன் : விஷால்
கதாநாயகி : மீரா ஜாஸ்மின்

சண்டைக்கோழி - ரவுடிகள் காலிசரவணா

கல்லூரி வாழ்க்கை முடிந்து எல்லோரும் விடைபெற்றுச்செல்ல கதாநாயகன் முடிந்து தன் கல்லூரி நண்பனுடன் அவனது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க நேரிடும்போது ஊரில் உள்ள ஒரு ரவுடியை பகைக்க நேரிடுகிறது. அந்த ரவுடி நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட அந்த ரவுடிகளிடமிருந்து கதாநாயகியை அதாவது நண்பனின் தங்கையை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்

கதாநாயகன் : சிம்பு
கதாநாயகி : ஜோதிகா

சரவணா - இனி பார்ப்பேனா?


ஆதி


தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் ரவுடிகள் கொன்றுவிட ரவுடியை பழிவாங்கக் கிளம்புகிறார் கதாநாயகன். அதேபோல பழிவாங்க கிளம்பும் கதாநாயகியோடு பழகி காதல்கொள்ளுகிறார். கடைசியில்தான் தெரிகிறது இருவரும் ஒரே குடும்பம் என்று
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்
கதாநாயகன் : விஜய்
கதாநாயகி : த்ரிஷா


ஆதி - ரவுடிகளுக்கும் ரசிகர்களுக்கும் பீதி


பரமசிவன்

தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சட்டத்தைக்காக்கும் போலிஸார்களே கொன்றுவிட அவர்களை கொன்றுவிட்டு சிறைச்சாலையில் மரணதண்டனை அனுபவிக்கும் கதாநாயகனை தப்பிக்கவைத்து நாட்டை அழிக்க வந்துள்ள தீவிரவாதிகளை அழிக்கும் கதை.
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்பரமசிவன் - பார்ப்பவன் எவன்?


எல்லாவற்றிற்கும் ரவுடிகள் ஜாக்கிரதை என்று ஒரே பெயராக வைத்தால் நன்றாக இருக்கும்.


- ரசிகவ் ஞானியார்

Sunday, January 22, 2006

மாமாப்பயலுவ


நேற்று துபாய் - டெய்ரா என்னும் பகுதியில் உள்ள சப்கா பேருந்து நிலையம் அருகே உள்ள படகுத்துறைப் பகுதியிலிருந்து அறை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

எதிரே பங்காளி நாட்டைச் சேர்ந்த ஒருவன் என்னை நோக்கி கண்களை மேலும் கீழும் அசைத்தான் அந்த சைத்தான். எனக்கு புரிந்துவிட்டது அவன் மாமாப்பய என்று.

அவனுடைய அந்த கண்ணசைப்புக்கு என்ன அர்த்தம் என்றால் என்னிடம் எல்லா நாட்டு பெண்களும் இருக்கின்றது நீ வர்றியா என்று பொருள். தொலைக்காட்சியில் ஊமைச் செய்திப் பார்த்திருப்பீர்களே அதுபோல இமைகளை மேலும் கீழும் சுருக்கி மெதுவாக பக்கம் வந்து காதில் ஓதுவான் மன்ந்த என்று.
( இந்தியில் மன்ந்த என்றால் வேணுமா என்று பொருள்)

ஒருமுறை என்னிடம் அவன் அப்படி கேட்டபொழுது எனக்கு என்னையே எரித்துக்கொள்வது போன்று எனக்கு அவமானமாய் தோன்றும்.ச்சே நம்மகிட்ட வந்து கேட்டுட்டானே என்று

இது ஒன்றும் புதிதல்ல. எனக்கு மட்டும் கிடைக்கின்ற அனுபவம் இல்லை. அந்தப்பகுதியை கடப்பவர்கள் வழக்கமாக பார்த்து புளித்துப் போன விசயம். அந்தப்பகுதியை யார் கடந்து சென்றாலும் அவன் கண்களிடம் இருந்து தப்பிக்க முடியாது.

நாம் அவனுடைய கண்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்ன வென்றால் அவன் நம்மை பார்க்குமுன் நாம் தலைகுனிந்து கொள்ளுவதுதான். அப்படியே அவன் பார்த்தாலும் அவனுடைய பார்வையை அலட்சியப்படுத்தி சென்று விடவேண்டும்.

என்னை அவன் பார்க்கும்பொழுதெல்லாம் அப்படித்தான் தலைகுனிந்துகொண்டோ அல்லது அலட்சியப்படுத்தியோ சென்றுவிடுவேன். எனக்கு அவன் அப்படி சைகை காட்டும்பொழுதெல்லாம் அப்படியே அவனைப் பிடித்து
மாமாப்பயல உனக்கு அறிவில்லையாடா.. பொம்பளய கூட்டிக்கொடுக்கிறாயே இப்படி ஒரு கேவலமான தொழிலைச் செய்கிறாயே..வெட்கமா இல்ல உனக்கு என்று கேட்கவேண்டும்போல இருக்கும்

ஆனா கேட்டால் அவ்வளவுதான் அவனுடைய சாதியைச் சார்ந்த பலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். பாய்ந்து வந்து தாக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.

டேய் அவங்களுக்கெல்லாம் வேறு வழியில்லைடா பாவம்டா..
என்று என்னுடைய நண்பர் அவர்கள் மீது பரிதாபப்பட்டிருக்கிறார்.

அவங்களெல்லாம் என்ன சுதந்திர போராட்ட தியாகிகளா..? அவர்கள் என்ன வலுக்கட்டாயமாகவா இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார்கள்.. என்று நான் பலமுறை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றேன்.

மாமாப்பயலுகள் பெரும்பாலும் பங்காளிகள்தான். பெரும்பாலும் பங்காளிகள் லாண்டரிக்கடைகள் தான் வைத்திருப்பார்கள். இங்கே குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி இதுபோன்ற முதலீடில்லாத பார்ட் டைம் பார்க்கிறார்கள். சிலர் கல்லிவல்லி விசாவில் ( முறையற்ற விசா) இருந்து கூட இந்த தொழிலில் ஈடுபடுவார்கள்.


அவர்கள் இந்தத் தொழிலில் காட்டும் அக்கறையையும் தொழில் நுணுக்கத்தையும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் எக்ஸிகியுட்டியாக வேலைபார்த்தால் அந்த நிறுவனத்தை எங்கேயோ கொண்டு சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு திறமையாக வாடிக்கையாளர்களை கவருவார்கள்.இந்த மாமாக்களின் புகைப்படத்தை எடுப்பதற்குள் மூச்சே போய்விட்டது. நான் எடுப்பதை அறிந்து அவன் தனது முகத்தை திருப்பிக்கொண்டான்பெரும்பாலும் ஏதாவது சந்தின் முனையில் - அவர்களது வாழ்க்கையைப்போலவே பாதி இருட்டு, பாதி வெளிச்சம் உள்ள பகுதிகளில் - போலிஸார் வந்தாலும் தப்பித்து செல்லக்கூடிய வசதியோடுதான் நிற்பார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று தெரியாது. பத்திரிக்கையாளன் போல யாரையாவது அழைத்து பேட்டி எடுக்கலாம் என்று கூட நினைத்தேன் . அப்புறம் நான் பேட்டி எடுப்பதைப்பார்த்துவிட்டு ஊர்க்காரர்கள் எவராவது ரேட் பேசுவதாக தவறாக நினைத்துகொள்வார்களோ எனப் பயந்து சூழ்நிலைகளின் இறுக்கம் கருதி அந்த முயற்சியை விட்டுவிட்டேன் .

எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்து இந்திய மதிப்புக்கு 1000 ரூ வரை சம்பாதிக்க கூடும். வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் வியாழக்கிழமை இரவுகளிலும், குளிர் காலங்களிலும் அதிகமாக பொருள் ஈட்டுவார்கள்.
இருட்டுக்குள் அந்த மாமாப்பசங்களுடன் பேரம் பேசுகின்ற நிறைய பாகிஸ்தானியர்களைப் பார்த்திருக்கின்றேன். கொஞ்சமாய் அதிகமாய் அதிகமாய் கொஞ்சமாய் என்று தமிழ் முகங்களையும் கண்டிருக்கின்றேன்.

அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். அவர்களின் பெற்றோர்களோ அல்லது மனைவியோ அவர்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருப்பார்கள். அவர்களின் நம்பிக்கையை திர்ஹத்தால் முலாம் பூசுகிறார்கள் இந்தத் தமிழர்கள்.

"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்"


ஒரு ஊரில் ஒரு பெண் கற்பிழந்து விட்டால் என்றால் எங்கேயோ ஒரு ஆணும் கற்பிழந்து விட்டான் என்றுதானே அர்த்தம் என்று அன்றே சொன்ன பாரதியின் புரட்சிதான் ஞாபகம் வருகிறது.

மனைவியை அங்கே தவிக்க விட்டுவிட்டு இங்கே கண்டவளுடன் உறவு கொள்ளுவது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்..? அடப்பாவி உனக்குள்ள உணர்ச்சிதானடா அவளுக்கும் இருக்கிறது. உன் கற்பைமட்டும் ஏன் நீ கடலில் கரைத்துவிட்டாய்..?

எப்படி வரப்போகிற பொண்டாட்டி பத்தினியா இருக்கணும்னு நீ விரும்புறியோ அதுபோல நீயும் பத்தனனா இருக்க வேண்டாமாடா..?

ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியாமல் விலை மட்டும் பார்த்து ஏங்குபவர்களைப்போல ஒரு சிலர் சாலையோரம் நிற்கின்ற மாமாப்பயலுகளிடம் விலைப்பட்டியலை மட்டும் கேட்டு அதில் குளிர் காய்கின்றனர்.

என்னுடைய நண்பர் ஒருவர் மிகவும் பக்தியாளர். அவர் ஒரு முறை கடைவீதியில் வந்துகொண்டிருக்கும்பொழுது ஒரு மாமாப்பய கையைப்பிடித்து அழைத்திருக்கின்றான். அவர் மிகவும் அமைதியானவர். நண்பர் அவனிடம் கோபப்படாமல் கேட்டிருக்கிறார்
"உன்னுடைய மதம் உனக்கு இந்த வேலை செய்யத்தான் கத்துக்கொடுத்திருக்கிறதா..? இது பாவமில்லையா.? "

அவனோ அலட்சியமாக "வர்றதா இருந்தா வா..இல்லைனா -------------- போயா "என்று திட்டி அனுப்பியிருக்கிறான்

எங்களிடம் வந்து அவர் வருத்தப்பட்டு சொல்ல எங்களுக்கோ சிரிப்புதான் வந்தது. "அவன்கிட்ட போய் ஏன் நீங்க அட்வைஸ் பண்ணிணீங்க.."என்று அவரைக் கடிந்து கொண்டோம்..

மாமாக்கள் தொல்லை ஒருபுறமிருக்க முதலாளிகளே சிலநேரம் களத்தில் இறங்கி விடுவார்கள். அதான்பா அந்த விலை மாதுக்களைச் சொல்றேன்.

பெரும்பாலும் கறுப்பின மற்றும் ரஷ்யா மற்றும் சைனாவைச்சார்ந்த அழகிகள்தான் இந்தத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். ச்சே அவர்களைப் போய் ஏன் அழகிகள் என்று சொன்னேன். ?

விபச்சாரம் செய்த அழகிகள் கைது.
குற்றாலத்தில் பிடிபட்ட விபச்சார அழகிகள்
செல்போன் மூலம் விபச்சாரத்திற்கு அழைத்த அழகிகள் 3 கைது


என்று பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகளைப் படித்த பழக்கத்தினால் அப்படிச் சொல்லி விட்டேன். அவர்களை ஏன் அழகிகள் என்று எழுத வேண்டும். அழகிகள் அல்ல அழுக்கிகள்.

அந்த அழுக்கிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பாதையின் ஓரமுள்ள இருட்டுச் சந்துக்குள் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு சிரிப்பது - கண்ணடிப்பது , அத்து மீறிய செயலாக கையைப்பிடித்து இழுப்பது என்று தொழில் நுணுக்கத்தை காட்டிக்கொண்டிருப்பார்கள்.

கொஞ்சம் மனம் தளர்ந்தவனாக இருந்தால் அவ்வளவுதான் பணம் இழந்துவிடுவான். பணம் மட்டுமல்ல அடிக்கடி கற்பையும் , ஊரில் உள்ளவர்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையையும்.

எப்போவாவது வருகின்ற பாலை மழையைப்போல போலிஸார்களின் உஷார் நடவடிக்கைகளை கண்டிருக்கின்றேன். திடீரென்று அவர்கள் நிற்கின்ற அல்லது பகுதியைச் சூழ்ந்து கொண்டு ஒவ்வொருவராய் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மாமாப்பயலுக மட்டும் எப்பவுமே மாட்டுவதில்லை.

மாட்டிக்கொண்ட அழுக்கிகளும் அந்த மாமாப்பயலுகளை காட்டிக்கொடுக்காமல் தொழில் தர்மத்தை காப்பார்கள். செய்யும் தொழிலே தெய்வமல்லவா..?

தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சார்ந்த ஒரு இளைஞன் இங்கே உள்ள அரசாங்கப் பணியில் இருக்கின்றான். தனது சக நண்பர்கள் இரவு நேர நடன விடுதிக்கு வற்புறுத்தி அழைத்ததால் அங்கே செல்ல ஆரம்பிக்க இறுதியில் அங்குள்ள நடனப்பெண்களில் ஒருத்தியின் மீது ஆர்வம் கொண்டு அவள் மீது பைத்தியமாகி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் லோன் எடுத்து அந்தப்பெண்ணோடு சுற்றி செலவழித்துவிட்டான். இப்போது எடுத்த லோனை அடைபப்பதற்காக ஊருக்கும் பணம் அனுப்ப முடியாமல் கடனில் தவித்து சீரழிந்து கொண்டிருக்கிறான்.

எனது பகுதியைச் சார்ந்த ஒருவர் இந்த நபருடன் கூட்டுசேர்ந்து நடன விடுதிக்குச் சென்று தகாத பழக்கம் ஏற்பட்டு சம்பாதித்த காசுக்களை எல்லாம் இங்கேயே இழந்து
கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

இதுபோன்ற எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் மாமாக்களின் இலக்கு. நடனவிடுதியின் வாசலில் உள்ளே இருந்து வருபவர்களையும் துரத்திச் சென்று பேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை நான் நண்பர்களோடு பக்கத்தில் உள்ள கோல்ட்சூக் என்னும் பேருந்து நிலையத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றபொழுது வழியில் விலைமாதுக்கள் கற்பை சிதைத்த துண்டை எடுத்து பல்லில் ஒட்ட வைத்த தங்கத்துண்டைக் காட்டி சிரித்துக்கொண்டே பக்கத்தில் வந்த எனது நண்பனை அந்த கறுப்பின அழுக்கி ( அழுக்கி என்று அவர்கள் செய்யும் காரியத்தைதான் குறிப்பிட்டேன் தவிர அவர்களின் நிறத்தை வைத்து அல்ல ) வந்து இடித்து சைகை காட்டியிருக்கிறாள்.

அவன் பயந்து போய் கையில் கொண்டு வந்த கிரிக்கெட் மட்டையை அப்படியே போட்டுவிட்டான். அந்த பெண்ணின் தொடுதலில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவன் மிகவும் நடுக்கத்துடனே இருந்தான். ச்சே இப்படி பண்ணிட்டாளே என்று புலம்பல் வேறு. அவனைப்பார்க்க பாவமாய் இருந்தது.

கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்பி வரும்பொழுது அந்த விலைமாதுக்களை பயமுறுத்துவதற்காக அவர்களை நோக்கி நாங்கள் வேகமாய் ஓடிச்செல்ல அவர்களோ நாங்கள் கையில் கிரிக்கெட் மட்டை ஸ்டெம்ப் வைத்துக்கொண்டு ஓடிவருவதைக்கண்டு அடிக்க வருகிறார்களோ எனப்பயந்து தலைதெறிக்க ஓடி தூரத்தில் சென்று திரும்பி பார்த்தார்கள். எங்களுக்கோ சிரிப்பாக இருந்தது அவர்கள் தலைதெறிக்க ஓடியதைப்பார்க்க.

பின்னே என்னங்க..? கையைப்பிடித்து இழுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே..? அது எவ்வளவு பெரிய அவமானச்செயல். அவர்களுக்கு எங்கே அவமானம் இருக்கப்போகிறது. ஆனால் இழுக்கப்பட்டவனுக்கு இருக்குமல்லவா?
----------------------------------------


நான் இருக்கின்ற பில்டிங் அருகேயே ஒரு ஹோட்டலில் விபச்சார வியாபாரம் அமோகமாய் நடக்கின்றது. இரவும் பகலும் காற்றை விடவும் அதிகமான மாமாக்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் நான் பக்கத்தில் உள்ள பூத்திலிருந்து போலிஸார்க்கு போன் செய்து இங்கே விபச்சாரம் நடக்கிறது என்று தெரிவிக்க நினைப்பேன்.

போலிஸாரும் தகவல் கிடைத்தால் இங்கே வந்து சோதனையிட்டு அனைவரையும் கைது செய்து அழைத்துச்சென்று விடுவார்கள். பின்னர் ஒரு வார துக்க அனுஷ்டித்தப்பிறகு மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். போன் செய்த விசயம் மட்டும் ஹோட்டல் நிர்வாகத்திற்கோ அல்லது மாமாப்பயலுக்கோ தெரிய வந்தால் அப்புறம் உயிருக்கே ஆபத்து என்பதால் அமைதியாய் போகவேண்டியதிருக்கிறது.

நேற்று இரவு அந்த ஹோட்டலின் புகைப்படப்படத்தைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஹோட்டல் நிர்வாகமோ அல்லது மாமாப்பயலுகள் யாரும் கவனிக்க கூடாதே என்ற பயத்தில் அந்த ஹோட்டலுக்கு அருகே நண்பனை நிற்க வைத்து அவனை புகைப்படம் எடுப்பது போல் எடுக்க நேர்ந்தது.

---------------------------------------------

ஒரு முறை எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு மலையாளி மிகவும் குஷியோடு இன்னொரு மலையாளி நண்பனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். என்னவென்று விசாரித்தால் நடிகை ஷகிலா விசிட் விசாவில் துபாய் வந்திருக்கிறாளாம். அவளின் தொலைபேசி எண் கிடைத்துவிட்டதென்று குதிக்கிறார்கள்.

ஒருவன் ஷகிலாவிடம் தொலைபேசியில் பேச ஆரம்பித்துவிட்டான். கால்மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டே இருக்கின்றான். நான் அப்பொழுது இன்னொரு நண்பனிடம் கூறினேன்.

என்னைக்காவது பெத்த தாய்ட்ட இவன் இவ்வளவு நேரம் பேசியிருப்பானாடா?

நான் சொல்வதைக்கேட்டு அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அது காமெடியாய் தெரிந்திருக்கிறது. எனக்கோ அது கழிசடையாய்; தெரிந்தது.

-----------------------------------------------
இங்கே பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்காளிகள்தான் வீட்டை விட்டு பிரிந்து அதிகமான காலங்கள் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். வீட்டைப் பிரிந்து என்பதை விடவும் வீட்டை மறந்து என்றுதான் சொல்லவேண்டும்.

சில இந்தியர்களும் அவ்வாறு வீட்டை விட்டு பிரிந்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் 8 வருடங்களாக இங்கேயே தங்கியிருக்கிறார். நல்லவேளை அவருக்கு திருமணமாகவில்லை.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு கூட சிலர் மனைவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் இங்கே தங்குகிறார்கள். காலப்போக்கில் தங்களது உடல்தேவைகளை பூர்த்தி செய்ய இப்படி உலகளாவிய அளவில் உடலுறவு கொள்ள ஆரம்பித்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளுகிறார்கள்.

ஆனால் இவர்களின் வருகைக்காக அங்கே கனவோடும் கற்போடும் காத்துக்கொண்டிருக்கும் மனைவிமார்களுக்கு இவர்களின் அதே உணர்ச்சிதானே இருக்கும் என்பதை மறந்து போய்விட்டனரா முட்டாள்கள்.?

இதுபோன்ற ஆட்களை குறிவைத்துதான் மாமாக்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை உருவாக்கப்படுகிறார்கள்.
மாமாக்கள் இவர்கள் மனிதக்குறைகள்.

இதனை அரசாங்கம் தடைசெய்யாததற்கும் கண்டு கொள்ளாததற்கும் முக்கிய காரணம் தங்களின் நாட்டுப் பெண்களின் கற்பை பாதுகாப்பதற்காத்தான்.

இதற்கெல்லாம் தீர்வு என்னவென்றால் மற்ற நாட்டுக்காரர்களுக்கு கண்டிப்பாக 2 அல்லது 3 வருடங்களுக்குப் பிறகு இத்தனை மாதங்கள் என்று கட்டாய விடுமுறை அளித்து அனுப்பி விட வேண்டும். இங்கேயே விடுமுறையே இல்லாமல் நீண்ட நாட்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது.

இதனால் குற்றங்கள் கொஞ்சம் குறைய வாய்ப்பு உண்டு. ம் என்னதான் சட்டதிட்டங்கள் இயற்றினாலும் தனி மனித ஒழுக்கம் ஏற்படாதவரை ஏதும் புண்ணிமில்லைப்பா..

டேய் டான்ஸ் கிளப்புக்கு வர்றியா என்று யாராவது என்னிடம் கேட்டால் அவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் வைத்திருக்கிறேன்.

படைத்தவன் பார்க்காத இடம் ஒன்றில் தவறுசெய்ய ஆசைப்படுகிறேன்.? எங்கேயிருக்கிறது அந்த இடம்?

- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 17, 2006

இதுதான் தமிழ்நாடு
அன்வர் ராஜா


தமிழ்நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம் தரையில் விழுந்தே பல சாதனைகள் புரிவோம்
தனபால்

தோளில் விழுந்தால் துண்டு மரியாதைப்படும்! காலில் விழுந்தால் மரியாதை துண்டிக்கப்படும்!

ஜீவானந்தம்

பிறப்பொக்கும் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

ஜெயக்குமார்

வளைந்து விட்டு
மூங்கிலாய் மீண்டுவிடு
வளைந்தே இருந்தால்
மனிதா நீ மாண்டுவிடு
பாண்டு ரங்கன்

வளைக்க வை
வளையாதே
மரித்துப் போகும்
மரியாதை

பன்னீர் செல்வம்


அருவியாய் விழு
சுனாமியாய் எழு
பொன்னையன்

சிந்திய கௌரவத்தை
பொறுக்கவோ
கோர்க்கவோ?
செம்மலை


யாரங்கே
தன்மானத்தை
தரையில் போட்டது?
சண்முகநாதன்

அம்மா இங்கே வா வா
ஆசிர்வாதம் தா தா
காலில் விழும் எனக்கு
கட்சியில் இருக்கு கணக்குதளவாய் சுந்தரம்

கல்தோன்றா மண்தோன்றா காலத்தே
முன் விழுந்த மூத்த குடி


தம்பி துரை


"துறை"க்காக
துரை இங்கே
கறையானதேனோ?
வைத்தியலிங்கம்

விழுந்தால் கட்சி
விழுந்தது கட்சி
வளர்மதி

எழுந்திரு அஞ்சலி
எழுந்திருவேலுச்சாமி

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
எதனைக் கண்டான்...மனிதனைப் படைத்தான்?


- ரசிகவ் ஞானியார்

Monday, January 16, 2006

யதார்த்தம் - திரைப்பட விமர்சனம்
மிக அழகான மனதின் உள்ளுணர்வுகளை படம்பிடிக்கின்ற கதை இது. முதல்பாதி முழுவதும் கல்லூரி குறும்புகள் கலாட்டாக்கள் என்று கலகலப்பாய் நகர்கின்றது. பின் பாதி முழுவதும் வாழ்க்கையின் யதார்த்தங்களோடு நடைபெறுகின்ற போராட்டங்களைப்பற்றி சொல்லுகிறது.

உண்மையில் இப்படிப்பட்ட கதையை தைரியமாய் மக்கள் முன் வைத்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது.

கதையின் ஆரம்பமே ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற போராட்டத்தோடு கேமிரா நகர்வதைக் காட்டியிருக்கின்றார். போராட்டத்தின்போது சாலை விளக்குகளை கல்லெறிந்து உடைப்பது, பேருந்தை வழிமறிப்பது ,என்று பொதுச்சொத்தை சேதப்படுத்தும் மாணவர்கள் உப்புச் சப்பில்லாத விசயத்துக்கெல்லாம் போராடுகின்ற ஒரு யதார்த்தமான போராட்டத்தை அழகாய் படம்பிடித்துள்ளார் இயக்குநர்.

கேமிரா சுழன்று எல்லா மாணவர்களின் யதார்த்தத்தையும் முக உணர்சிகளையும் காட்டிக்கொண்டே இருப்பது சென்னையிலோ, மதுரையிலோ எங்கோ ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற நிஜமான போராட்டத்தைக் காட்டுகின்றது.

இதற்காக இயக்குனர் செய்த தந்திரம் என்ன தெரியுமா? நிஜமாகவே திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர்பேரவை தலைவரிடம் கலந்தாலோசித்து சில மாணவர்களின் உதவியோடு உண்மையான கல்லூரிப்போராட்டத்தையே காட்டியிருக்கிறார். அங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது கல்லூரி மாணவர்பேரவை தலைவருக்கும் , ஒரு சில மாணவர்களையும் தவிர.

கதை இரண்டு மாணவர்களுக்குள் நடைபெறுகின்ற கைகலப்புகள் , அவர்கள் வகுப்பறையில் செய்கின்ற குறும்புகள் என்று மிகவும் ஜாலியாய் போகிறது கதை.

இவர்களின் அத்துமீறிய குறும்பில் அவமானம் தாங்காமல் அழுதுவிடுகின்ற அந்த தமிழ் ஆசிரியர் ஒரு கட்டத்தில் "என்னுடைய பதவிக்கு நீங்க மதிப்பு கொடுக்க வேண்டாம்பா..எனக்கு உங்க அப்பா வயசு இருக்கும். அந்த வயசுக்காவது மதிப்பு கொடுங்கப்பா "என்று கூறி கண்கலங்கும்போது மாணவர்கள் மொத்தமாய் எழுந்து நின்று மன்னிப்பு கோருகின்ற காட்சி மிகவும் உணர்ச்சிமயமான காட்சி.

மாணவர்கள் இளமையின் துடிப்பில் சேட்டைகள் செய்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு நல்ல உணர்வுகள் உறங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அழகாய் விளக்கும் காட்சி அது.


அந்த சூரஜ் மற்றும் கோபி என்ற இரண்டு மாணவர்களுக்குள்ளும் கல்லூரியில் இடம் கிடைப்பது முதல் - படிப்பு விளையாட்டு காதல் என்று எல்லா விசயத்திலும் மோதல் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்

சூரஜ் எப்போதுமே தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருப்பான். தான் நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என கடுமையாக போராடுபவன்.
ஆகவே அவன் எல்லா விசயத்திலும் வெற்றிப்பெற்றுக்கொண்டே இருப்பான். இன்னொரு மாணவன் கோபிக்கு அதனால் அவன் மீது பொறாமை

கல்லூரியில் படிக்கும் நிஷா வின் மீது இருவருக்குமே காதல் வர அந்தப்பெண்ணோ சூரஜ்ஜை விரும்புகிறாள்.

தன்னுடையை காதல் விசயத்திலும் சூரஜ் நம்மை ஜெயித்துவிட்டானே என்று கோபிக்கு அவன் மீதான கோபம் - வெறுப்பு மேலும் அதிகமாகியது.

சூரஜ் - நிஷாவின் காதல் காட்சிகளும் மிகவும் யதார்த்தமாய் படம் பிடிக்கப்பட்டிருக்கும் தயங்கி தயங்கி நிஷாவிடம் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவது,

அவளுக்கு குட்மார்னிங் சொல்வதற்காகவே அவள் வருவதற்கு முன்பே கல்லூரிக்கு வந்து அவள் வரும் பாதையில் யதேச்சையாய் நிற்பதுபோல் நின்று குட்மார்னிங் சொல்வது,

நிஷா தன் குடும்பத்தோடு சினிமா தியேட்டருக்கு வருகிறாள் என்று தெரிந்து அந்த தியேட்டருக்கு வந்து இடைவேளையில் அவள் குடும்பத்துடன் அறிமுகமாவது,

கல்லூரி விடுதியில் குடித்துவிட்டு அவள் பெயரை சொல்லி உளருவது என்று படு யதார்த்தமான காட்சிகள். இந்தப்படத்திற்கு வசனகர்த்தாவே யதார்த்தம்தான்.

அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள். சூரஜ் பெரிய தொழில் அதிபராகின்றான். கோபியோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான்.

சூரஜின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என நினைத்து அவனுடைய அலுவலகத்தின் முக்கிய தகவல்கள் உள்ளடக்கிய கணிப்பொறியில் வைரஸைப் புகுத்தி விடுகின்றான்.

இப்படியான சின்ன சின்ன முயற்சிகளில் சூரஜ் ஜெயித்துவிட, பின்னர் அவனுடைய தொழில் முறை எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு அவனுடைய வெற்றிக்கு காரணம் அவனுடய தன்னம்பிக்கையை காயப்படுத்துவது என்று திட்டமிட்டு அவனுடைய தன்னம்பிக்கையை - முயற்சியை எப்படி மனரீதியாக அவனை சிதைக்கின்றான் என்பதுதான் கதை.


தன்னம்பிக்கை இழந்து மனரீதியாக ஒடிக்கப்பட்ட அவனுக்கு அவனுடைய காதலி நிஷா கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு தைரியம் கொடுத்து அவனுக்கு வெற்றிகள் தேடிக்கொடுப்பாள். இதிலிருந்து இயக்குனர் காதல் தன்னம்பிக்கையைத் தரும் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்

காதலி - சூரஜ்க்கு ஒரு கதை சொல்லுவாள் அந்த கதை மிகவும் சுவாரசியமானது.

ஜெயிலில் இருந்து தப்பி வந்த கைதி ஒரு போலிஸைக்கண்டதும் வழியில் கிடக்கும் சைக்கிளை எடுத்துக் வேகமாய் ஓட்டிச்செல்ல செல்லும் வழியில் ஒரு கணம் அந்தக் கைதி தனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதே எப்படி நாம் சைக்கிள் ஓட்டுகிறோம் என்று உணரும்போது சைக்கிள் ஓட்டமுடியாமல் தடுமாறி கீழே விழுந்து போலிஸாரிடம் மாட்டிக்கொள்வான்.

அவனுடைய லட்சியமும், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற வெறியும் அவனை சைக்கிள் ஓட்டவைத்தது என்ற கதையின் மூலம் மறுபடியும் சூரஜ்க்கு புத்துணர்ச்சி கொடுத்து அவனை கொஞ்சம் கொஞ்சமாய் எப்படி வெற்றியடையச்செய்கிறாள் என்பதை திரையில் காணுங்கள்.


திருப்பிக் கொடுப்போம்
திருப்பிக்கொடுப்போம்
இறைவன் தருகின்ற சொர்க்கம் கூட
திருப்பிக் கொடுப்போம்

திரும்பி வருவோம்
திரும்பி வருவோம்
இன்னொரு ஜென்மமும் இங்கேயே
திரும்பி வருவோம்.

என்று வகுப்பறையில் வைத்து கல்லூரி மாணவர்கள் பாடும் பாடல் அனைவர்களுக்கும் தங்களது கல்லூரியை ஞாபகபடுத்தும்.

கதையில் பாடல்கள் கதையின் சூழலோடு அமைந்துள்ளது. கல்லூரி கலை விழாக்களில் பாடுகின்ற பாட்டு, கல்லூரிப்போரட்டத்தின் போது மாணவர்கள் பாடுகின்ற கானா பாட்டு, மற்றும் வகுப்பறையில் பாடுகின்ற பாட்டு என்று 3 பாட்டுக்கள்தான்.

அரிவாள் துப்பாக்கி களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை முறியடித்து தோல்வியுற வைப்பது என்பது ஒரு வித்தியாசமான சிந்தனை. கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்


யதார்த்தம் ஒரு பதார்த்தம்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, January 14, 2006

நொண்டி - பழசு
நொண்டி


"ஏலே நொண்டி"
மூன்று சக்கர வாகனத்திலிருந்து
முகம் திருப்பினேன்!
அங்கே ஓர்
இதய நொண்டி!

- ரசிகவ் ஞானியார்


பழசு

இன்று
போகிப்பண்டிகையாம்
பழசாகிப் போனதெல்லாம்
அக்னியிலே!
ஆம்
அவனுடைய தாய்
அநாதை விடுதியிலே!


- ரசிகவ் ஞானியார்

Monday, January 09, 2006

ஒண்ணுக்கு அடித்தவனும் தீவிரவாதியா..?
"விஞ்ஞானி பூரி கொல்லப்பட்ட சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த தீவிரவாதி பஷீர் பிடிபட்டான். "

இப்படித்தான் வெற்றிகரமாய் முழங்கிக்கொண்டும் தனக்கு கிடைத்த தகவல்களை திரட்டி தயிராக்கி செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தது ஊடகங்கள்.

கடந்த 28.12.05 அன்று பெங்களுரில் இந்திய அறிவியல் மைய துப்பாக்கி தாக்குதல் சம்பவத்தில் விஞ்ஞானி பூரி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது சம்பந்தமாக நடந்த விசாரணையில் ஆந்திராவைச்சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்படி மங்களுர் அருகில் உள்ள பட்கலை சேர்ந்த பஷீரை சென்னையில் பெங்களுர் தனிப்படை போலீசார் கைது பெங்களுர் அழைத்து வந்தனர்.

பஷீரைப்பற்றிய முழுமையான விசாரணைகள் நடந்து முடியாத நிலையில் சென்னையில் தீவிரவாதி பஷீர் பிடிபட்டான் என்று வானத்திலிருக்கும் தொலைக்காட்சியும் சில கட்சித் தொலைக்காட்சியும் மற்றும் சில புகழ்பெற்ற பத்திரிக்கைகளும் படு நாகரீகமாக எடுத்துரைத்தார்கள். இவர்கள் பார்வையில் ஒண்ணுக்கு அடித்துக் கொண்டிருந்தவைனெல்லாம் தீவிரவாதியாம்.

விசாரணையே நடைபெறாத நிலையில் அவர்களுக்கு எப்படி பஷீர் தீவிரவாதி என்று தெரிந்தது? ஒருவேளை அவர்களுக்கும் விஞ்ஞானி பூரி சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவத்தில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?

ஒருவேளை பிடித்துச் சென்றவர்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் இரகசிய தகவல்கள் அனுப்பியிருக்க கூடுமோ..? அப்படியென்றால் நமது தேசப் பாதுகாப்பின் மீது எப்படி முழு நம்பிக்கை வரும்?

நேற்று 08.01.06 பஷீரைப் பிடித்துச் சென்ற போலிஸார்கள் பஷீர் ஒரு அப்பாவி என்று விடுதலை செய்துவிட்டார்கள். அதனைச் சொல்லும்போது அந்தத் தொலைக்காட்சிகள்

"பஷீர் விடுதலை செய்யப்பட்டார் "என்று கூறியது. இப்பொழுது தீவிரவாதி என்றப் பட்டத்தை எங்கே தொலைத்தார்களாம்? அவர்கள் தனது மூன்றாவது கண்களால் கண்டுபிடித்த தீவிரவாதிப் பட்டம் இப்போது எங்கே சென்றது? பட்டம் கொடுப்பதற்குத்தான் பல்கலைக்கழகங்கள் இருக்கிறதே இவர்களுக்கேன் வேண்டாத வேலை..?

மக்களுக்கு செய்தி தருகின்ற ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்று.

காலையில் தேநீரோடு பத்திரிக்கைகள் படிக்கைவில்லையென்றால் சிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.

ஓய்வுபெற்ற அப்பாக்களின் இரண்டாவது மனைவியே இந்தப் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள்தான்.

அலுவலகம் செல்கின்ற அவசரத்தில் கூட அவர்கள் நீங்கள் தருகின்ற செய்திகளை உள்வாங்கிக்கொண்டு செல்லும் எத்தனை எத்தனைப் பேரைக் கண்டிருக்கின்றோம்.

இப்படி மக்களின் உச்சகட்ட நம்பிக்கைகளை ஏன் சீரழிக்கின்றீர்கள். ஊடகங்கள் முதலில் மக்களின் நம்பிக்கைத்தன்மையை பெறவேண்டும். ஆனால் இதுபோன்ற பொய்யான தகவல்களை தந்து கொண்டிருந்தால் ஊடகங்களின் போலியான முகத்தை மக்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள்.

அந்த தனிமனிதன் பஷீரின் மனநிலைக்கு வாருங்கள். தீவிரவாதி என்ற அந்த வார்த்தை அவர்மீது சமுதாயத்தின் தனி மனித மதிப்பை இழக்கச்செய்து விடாதா.?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரின் குழந்தைகள் வெளியில் யாருடன் விiளாயாடினால் கூட பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் குழந்தைகளை அந்தக்குழந்தைகளோடு விளையாட விடாமல் தடுக்க நேரிடும். அதில் அந்த பிஞ்சு உள்ளங்கள் பாதிக்கப்படாதா..?

இனிமேல் அவரை எப்படி சுற்றியுள்ள சமூகம் மதிக்கும். ஒருவேளை இவன் தீவரவாதியாக இருப்பானோ என்ற மூன்றாம் தர கண்ணோட்டத்தில் பார்க்காதா..? அந்த பஷீரின் மன உளைச்சலுக்கு என்ன மருந்து தரப்போகிறது இந்த ஊடகங்கள்.

விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே தீவிரவாதி பஷீர் என்று அறிவித்த அவர்கள் இப்பொழுது விசாரண முடிந்து அவரை விடுதலை செய்த பிறகு தாங்கள் தீவரவாதி என்று சொல்லியதற்காய் மன்னிப்பு கேட்குமா..?

வித்தியாசமாய் இருக்கட்டுமே இப்படி செய்தி சொன்னால்தான் என்ன?

"விஞ்ஞானி பூரி சுட்டுக்கொன்ற வழக்கில் பிடிப்பட்ட பஷீர் என்பவரை நாங்கள் அறிவீனத்தனமாய் தீவிரவாதி என்று குறிப்பிட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காய் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் "

என்று செய்தி சொன்னால் மக்களுக்கு அந்த ஊடகங்கள் மீது பலமான நம்பிக்கை வராதா..?

- ரசிகவ் ஞானியார்

Sunday, January 08, 2006

சேது சமுத்திரத்திட்டம் சரித்திரமா இல்லை தரித்திரமா?சேது சமுத்திரத்திட்டம் இது தமிழர்களின் 150 வருட கனவாகும்.

1860 ம் ஆண்டு பிரிட்டிஷ் கமாண்டர் ஏ டி டெய்லர் என்பவரால் சுமார் 50 லட்சம் பண முதலீட்டில் ( அன்றைய மதிப்பு ) இந்த SSCP [Sethusamudram Ship Canal Project ] திட்டத்திற்கு விதையிடப்பட்டது. 1952 ல் சர் ராமசாமி முதலியார் என்பவர் இத்திட்டத்திற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

ஆனால் எல்லாவற்றிற்கும் அடிகோலாக சிந்து நதி மிசை நிலவினிலே என தொடங்கும் பாரதியின் கவிதையில் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்ற வரிகள் சேது சமுத்திரத்திட்டம் அமைவதற்கு ஒரு பாலமாகியது. ஒரு நூற்றாண்டுச் சிந்தனையை உருவாக்கி சென்றுள்ளான் பாரதி.

சேது சமுத்திரத்திட்டத்தின் முன்னோடி கம்பர்தான். தனது இராமாயணக்காவியத்தில் கடத்திச்செல்லப்பட்ட சீதையை மீட்பதற்காக இராமனும் தோழர்களும் கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றதாக கூறி இத்திட்டத்திற்கு வித்திட்டார்.


அந்த நேரத்திலையே இலங்கைக்கு பாலம் அமைக்கலாம் என்ற அவரது கற்பனையை பாராட்டாமல் இருக்க முடியாது.

சரி இந்த நவீன கம்பர்கள் அறிமுகப்படுத்திய சேது சமுத்திரத்திரத் திட்டம் என்றால் என்ன? அதற்குண்டான அவசியம்தான் என்ன..?

அநேகப் பேருக்கு இத்திட்டம் பற்றி முழுமையாக தெரியாது. சேது சமுத்திரத் திட்டம் என்றால் கடலுக்கு நடுவே பாம்பன் பாலத்தைப் போல ஒரு பாலம் வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எதற்கென்றேத் தெரியாமல் எதிர்க்கிறார்கள்.
2005 ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி சேதுத்திட்டத்தின் ஆரம்ப விழா பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலப்பகுதியில் ஒரு கால்வாய் தோண்டும் திட்டமே சேது சமுத்திரத் திட்டம்இந்தியாவின் ஒரு துறை முகத்திலிருந்து இன்னொரு துறைமுகத்திற்குப் போக நாம் இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகும் நிலை. தலையைச்சுற்றி மூக்கைத் தொடுகின்ற கதைதான்.

உதாரணமாக சென்னைத் துறைமுகத்திலிருந்து ஒரு சரக்கு கப்பல் தூத்துக்குடித் துறைமுகத்திற்கு வரவேண்டுமானால் இலங்கையைச்சுற்றி சுமார் 700 கிமீ ( 435 மைலகள்) பயணப்பட்டுத்தான் போகவேண்டியது இருக்கிறது. 3 நாட்கள் பயணப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தை அடைய வேண்டியதிருக்கிறது. இது எவ்வளவு பெரிய கால தாமதம். இந்த கால அவகாசத்தை குறைத்தோமானால் எவ்வளவோ பரிமாற்றங்கள் நடைபெற்றுப்போகும்.

சரி இந்தக் கால அவகாசத்தைக் குறைப்பதற்கு என்னதான் செய்யவேண்டும்.? கப்பல்கள் இலங்கையைச்சுற்றாமல் நேரடியாக தூத்துக்குடித் துறைமுகம் செல்ல என்னதான் வழி? கப்பல்கள் ஏன் நேரடியாக தூத்துக்குடித் துறைமுகத்திற்கு செல்லக் கூடாது.?

கப்பல்கள் இலங்கையைச்சுற்றி செல்வதற்கான காரணம் தூத்துக்குடி துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் பாக்ஜலசந்திப் பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதே ஆகும். ஆழம் குறைவானப் பகுதியில் பெரிய கப்பல்களால் பயணப்பட முடியாது.

ஆகவே சேதுசமுத்திரக் கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலப்பகுதியில் ஒரு கால்வாய் தோண்டி அதனை ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் கப்பல்களை நேரடியாக வரச்செய்யலாம்.

சேதுசமுத்திரக் கால்வாய்

நீளம் - 167 கிமீ

(இதில், 89 கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே அகழ்வுப் பணி நடைபொறவிருக்கின்றது. ஆதம் பாலம் அருகே 35 கிமீ மற்றும் பாக் ஜலசந்திப்பகுதியில் 54 கிமீ மீதமுள்ள தூரத்திற்கு கடலில் போதுமான ஆழம் இருப்பதால் அப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. )
ஆழம் - 12 மீட்டர்
அகலம் - 300 மீட்டர்

இக்கால்வாயின் இரு வழி கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

திட்டச்செலவு : 2233 கோடி ரூபாய்

இந்தப் பொறுப்பு இந்திய அகழ்வுப்பணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடலை ஆழப்படுத்தி கால்வாய் அமைக்கும் மூலம் ஆயிரக்கணக்கில் செலவாகும் கப்பல்களின் எரிபொருள் செலவும் மற்றும் கோடிக்கணக்காய் இழப்பாகும் சரக்குக் கட்டணச் செலவும் மிகவும் குறைந்து போகும்.

இதனால் வணிகர்கள் அதிகமான வாணிகப்பரிமாற்றத்தை மேற்கொள்வார்கள். வெளிநாட்டுக்கப்பல்கள் வந்து இளைப்பாறும். அந்திய முதலீடுகள் வரத்துவங்கி தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப்பகுதியில் சுமார் 138 கிராமங்களும் சிறுநகரங்களும் இருக்கின்றன. அவர்களின் கதி என்ன..?

தோண்டப்படப்போவது கால்வாய் மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையும்தான். அங்கிருந்து அள்ளப்படப்போகும் ஒருகோடியே இருபது லட்சம் கன மீ மண்கள் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் தரையில் கொட்டப்படப்போகிறதா இல்லை அவர்களின் தலையில் கொட்டப்படப்போகிறதா..?

மீன்பிடி தொழில் இல்லாமல் அவர்களது வருமானம் பாதிக்கப்படும். அந்த அவமானத்தில் தற்கொலைகள் அதிகரிக்கும்.அந்த ஒட்டுமொத்தக் குடும்பங்களும் எங்கே இடம்பெயரக்கூடும்.?

துறைமுகம் சேருவதற்கு தூரங்கள் குறைந்துவிடும் ஆனால் அவர்களின் வளமையான வாழ்க்கைக்கு தூரங்கள் அதிகரித்து விடுமே? தூரங்களைக் குறைத்து அவர்களின் பாரங்களை அதிகரிக்கப்போகிறோமா..?

சேதுக் கால்வாயின் மூலம் மண்கள் மட்டுமல்ல மன்னார் வளைகுடாப் பகுதியின் வளமையும் தோண்டப்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் பரவலான குறையாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது..? அப்படி என்ன வளமை மன்னார் வளைகுடாப்பகுதியில்..?


மன்னார் வளைகுடாப்பகுதி வளமை

மன்னார் வளைகுடாப்புதியில் இந்தியாவிலேயே மிகவும் செழுமை வாய்ந்த கடற்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகத்திலையே மிகவும் வளமை வாய்ந்த கடற்பகுதிகளுள் இதுவும் ஒன்று.

அந்தப்பகுதிக்கே உரித்தான 3268 தாவர வகைகளும் 327 வகை தாவரங்களும் உள்ளன். அதுமட்டுமல்ல 3300 க்கும் மேற்பட்ட உயிரினங்களான கடற்பசு - கடற்குதிரை - டால்பின் - கடல் ஆமைகள் - - கடல் விசிறி - கடல் பஞ்சு - சிப்பி - சங்குகள் இந்தப்பகுதியில் காணப்படுகிறது. உலகத்தின் வேறு எந்தப்பகுதிகளிலும் இல்லாத குட்டிப்போட்டு பால் கொடுக்கும் கடற்பசு போன்ற அரிய உயிரினங்களும் இங்கே கிடைப்பதால்தான் செழுமைவாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல இந்தப்பகுதியில்தான் பவளப்பாறைகளும் அதிகமாய் காணப்படுகின்றது.
பவளப்பாறைகள் என்றால் முத்துக்கள் பவளங்களால் ஆன பாறைகள் அல்ல. அவைகள் ஒருவிதமான நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பு.

பவளப்பாறைகள் ( Corel Reef )

பவளப்பாறைகள் என்றால் என்ன? பவளப்பாறைகள் என்பது தெளிவான நீரில் வசிக்கக் கூடிய லட்சக்கணக்காண நுண்ணுயிரிகளைக்கொண்ட ஒரு அமைப்பாகும்.சூரிய ஒளிகள் இவற்றின் மீது விழுகின்ற பொழுது அந்த நுண்ணுயிரிகள் பிராண வாயுகளை உற்பத்திச் செய்கின்றது. இந்தப் பிராணவாயுக்கள் அங்குள்ள மீன்களின் சுவாசத்திற்குப் பயன்படுகிறது


இதனைப்பற்றி ஆராய்ந்து வருகின்ற அரசு அமைப்புகள் சில பொதுநல அமைப்புகள் அறிஞர்கள் மற்றும் கட்சி சாராத ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள்..?

மத்திய அரசு இந்த திட்ட விளைவுகள் பற்றி முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இதுபோன்ற சுற்றுபுறச் சூழ்நிலை ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற நாக்பூரில் உள்ள நீரி (NEERI - National Enviroinment Engineering Research Institute ) என்ற அமைப்பினைக் கேட்டுக்கொண்டது. அந்த நீரி அமைப்பு முழுமையாக ஆராய்ந்து EIA அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளார்கள்.

இந்திய அரசாங்கத்தின் அறிக்கை ( EIA Report )

இத்திட்டத்தினால் மன்னர் வளைகுடாப்பகுதியில் கடற்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் வராது
ஆதம் பாலம் பகுதிகளில் பவளப்பாறைகளே காணப்படவில்லை.

பவளப்பாறைகள் இருக்குமிடத்தை விட்டு 20 கிமீ தூரத்தில்தான் இந்த அகழ்வுப்பணி நடைபெறப்போவதால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு இல்லை.

தோண்டப்படும் மண்கள் பாம்பன் - மண்டபம் மற்றும் இராமேஸ்வரக் கடலோரப்பகுதிகளில் கொட்டப்படும்.

இந்த அறிக்கையின் முழு விவரங்களையும் இந்த கீழ்கண்ட இணையத்தில் படித்துக்கொள்ளலாம்.
Courtesy : http://sethusamudram.gov.in/EIA.asp

பல சாதகமான அறிக்கைகளை உள்ளடைக்கி உள்ளது இந்த அறிக்கை. ஆனால் கடல் உயிரனங்களையும் சுற்றுப்புறத்தையும் ஆராய்ந்ததில் கொடுத்த முக்கியத்துவத்தை பாதிக்கப்படப்போகும் கடலோர மக்களின் பாதிப்பைப் பற்றி எதுவுமே கூறவில்லை.

மனிதம் அமைப்பின் அறிக்கை

"மனிதம் என்ற அமைப்பு தமிழ்நாட்டு கடற்கரைப்பகுதிகளான நாகப்படடினம் ( நாகூர் - 18.07.04) ராமேஸ்வரம் ( தூத்துக்குடி- 19.07.04 ) ) திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ( 20.07.04) திருவனந்தபுரம் ( 21.07.04 ) பகுதிகளுக்குச் சென்று மீனவர்கள் கல்வியாளர்கள் அரசியல்வாதிகள் கடல் மற்றும் சுற்றுபுறச்சூழல் ஆய்வாளர்களைச் சந்தித்து ஆய்வுகளைத் திரட்டினர். அவர்களின் அறிக்கை இதோ:

நாங்கள் சந்தித்த பெரும்பான்மையான மக்களுக்கு சேது சமுத்திரத்திட்டம் என்ற பெயரைத்தவிர வேறு எந்த தகவலுமே தெரியவில்லை. தெரிந்த சிலரும் எதற்கென்றே தெரியாமல் எதிர்க்கிறார்கள்.

ராமேஸ்வரத்தில் உள்ள சுவாமி பிரானவந்தா 2000 ம் ஆண்டு இத்திட்டத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கிழக்கு கோதண்டராம் கோயில் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி அதனை அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் பாதுகாப்புத் துறை மந்திரி ஜார்ஜ் பெர்னான்டெஸ் க்கும் அனுப்பினார்.
நாங்கள் சந்தித்த ஓய்வுபெற்ற சில கப்பல்துறைப் பொறியார்களை சந்தித்தப்பொழுது அவர்கள் இத்திட்டத்தினால் எந்தவிதமான லாபமும் இருக்கப்போவதில்லை என்று உறுதியாக கூறினர்.
மத்திய அரசின் கூற்றுப்படி சேது சமுத்திரத் திட்டத்தால் 36 மணி நேரம் மிச்சப்படுத்தலாம் . ஆனால்
அ ) இந்த திட்டம்படி கால்வாய் அகலப்படுத்தப்பட்டால் 15 டுமதல் 30 அடி மிதவை ஆழத்தில் பயணிக்கக்கூடிய கப்பல்கள் மட்டுமே பயணப்பட முடியும்
ஆ) அகலப்படுத்தப்படப்போகிற சேது சமுத்திரக் கால்வாய் வழியாக கப்பல்கள் அதிவேகமாக பயணிக்க முடியாது. மிக வேகமாக வருகின்ற கப்பல்கள். இந்தக் கால்வாயை கடப்பதற்கு அதன் வேகத்தைப் பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும்

கப்பல்கள் இந்த கால்வாயை கடப்பதற்கு சுமார் 20 முதல் 24 மணி நேரம் தேவைப்படும்.
(திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு 3 நாட்கள் சுற்றவேண்டும்.திட்டம் ஆரம்பித்தால் 2 நாட்கள். ஒரு நாளை மிச்சப்படுத்த 2000 கோடியா? )
அது மட்டுமல்ல அந்தப்பகுதியை கடப்பதற்கு கண்டிப்பாக வரி வசூலிக்கப்படும மற்றும் சென்னை மற்றும் விசாகப்பட்டினம் வருகின்ற கப்பல்கள் மட்டும்தான் இந்த வழியைப் பயன்படுத்தப்போகிறது. தினமும் எத்தனை கப்பல்கள் இந்த வழியாக பயணிக்கப் படபோகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற கப்பல் துறைப் பொறியாளர்களின் கூற்றுப்படி தினமும் 2 அல்லது 3 கப்பல்கள் கூட இந்த வழியாக பயணப்படாது. ஆகவே இந்தச் சேது சமுத்திரத் திட்டம் அரசாங்கத்திற்கு எந்த விதமான முன்னேற்த்தையும் கொண்டுவரப்போவதில்லை.
இந்த திட்டத்தின் சேர்மன் திரு ரகுபதி ஐஎஎஸ் அவர்களிடம் இந்தத்திட்டத்தைப் பற்றி கேட்டபொழுது சரியான தகவல்கள் தர மறுத்துவிட்டார். அந்த திட்டத்தைப்பற்றி எந்த தகவலுமே தெரியாத அவருடைய பி ஆர் ஓ விடம் இதுபற்றி விசாரிக்கச் சொல்லிவிட்டார். மேலும் அவர் இது சம்பந்தமான விளக்கங்களுக்கு; மக்கள் மத்தியில் ஏதேனும் அவர்கள் பொது விளக்க கூட்டம் நடத்தினால் அதன் மூலம் தகவல்கள் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்
மேலும் நாங்கள் சுற்றுப்புற ஆலோசகர்களைச் சந்தித்தபொழுது அவர்கள் ஒரு விசயத்தை ஒட்டுமொத்தமாய் ஏற்றுக்கொண்டனர். அதாவது இந்தச் சேது சமுத்தித் திட்டம் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். பவளப்பாறைகள் மற்றும் கடற்கரைப்பகுதி மக்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிக அதிகமான பாதிப்பை இந்தத் திட்டம் ஏற்படுத்தும்
என்று."


பசுமை இயக்கம் - இந்த கால்வாய் தோண்டும் நடவடிக்கை மிகப்பெரும் பாதிப்பைத் தரும் என்று இலங்கையைச் சேர்ந்த பசுமை இயக்கம் ஆணித்தரமாய் கூறுகின்றது.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூற்று என்ன?

டி வைத்தீஸ்வரன் ( Senior Research fellow ICAR research program )

200 முதல் 600 வகையான அலங்கார மற்றும் உணவுக்குண்டான மீன வகைகள் அந்தப்பகுதியில் உள்ளன. 1992 - 1996 ல் 55325 டன் மீன்கள் கிடைத்தது. 2001 ம் ஆண்டில் 205700 டன் பதிவாகியுள்ளது. அந்த வளரச்சிகளுக்கு காரணம் அங்குள்ள பவளப்பாறைகள்.

உலகத்தில் மொத்தம் 35 வகையான ஹிப்போகேம்பஸ் (Hippocampus ) என்ற கடற் குதிரைகள் வகை மீன்கள் இருப்பதாக கடற்வாழ் உயிரின ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு வகை இந்த மன்னார் வளைகுடாப் பகுதியில் 15 மீ ஆழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

பேராசிரியர் வீ கே வெங்கடரமணி

மீன்வளக் கல்லூரியின் முதன்மை ஆராய்ச்சியாளர்

அந்த வகையான மீன்கள் மருத்துவத் துறையில் பெரும் பங்கு வகிக்கின்றது. பல மூளைச் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்குண்டான மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. சீனா மற்றும் தாய்லாந்துப் பகுதியில் இந்த மீனை 300 ஆண்டுகளாக சில நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
நன்றி : தி இந்து நாளிதழ் ( 04.08.2004)

சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் துறை சுதர்சன்

கடற்பகுதியும் கடல் பன்முகத்தன்மையும் தொடர்ச்சியான மாசடைதலுக்கு உள்ளாகலாம்
கப்பல்களில் கசியும் எண்ணெய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்
பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வருமானமிழப்பு ஏற்படும்

ஆர் பாலு - மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்

மீனவர்களுக்கோ சுற்றுப்புறச் சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாதபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கிடையே பயணச்செலவு பயணநேரம் குறைகிறது

இந்தியக் கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்தலாம்.

கடலோர மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

தமிழ்நாடடின் வணிக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்படுவதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.


இந்து முண்ணணிதலைவர் ராமகோபாலன் :

இராமர் கட்டிய அந்தப்பாலம் இன்னமும் சிதைந்து போய் கடலுக்கடியில் இருப்பதாகவும் அந்தப்பாலத்திற்கு சேதமில்லாமல் சேதுக்கால்வாய் அமைய வேண்டும் என்று இந்து முண்ணணிதலைவர் ராமகோபாலன் சென்னை திருவெல்லிக்கேணியில் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்.
"17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராவணனை அழித்து சீதாப்பிராட்டியை மீட்பதற்காக தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமபிரான் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையே மகத்தானதொரு பாலத்தைக் கட்டினார். இயற்கைச் சீற்றங்களால் எத்தனையோ அழிவு நடந்தாலும் அழிக்க முடியாத வரலாற்று பொக்கிஷமாக கடலுக்கு அடியில் அந்த பாலம் இன்றும் இருக்கிறது.

இந்த உண்மையை கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் விண்வெளி ஆய்வின் மூலம் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளது. இப்போது தொடங்கியுள்ள திட்டத்தின்படி ஸ்ரீராமபிரான் கட்டிய பாலம் இடிபடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
"


பவளப்பாறைகள் அழிப்பு

பல நுண்ணுயிர்களைக் கொண்ட இந்த பவளப்பாறைகளானது மணல் துகள்கள் விழுந்தாலே மண்டையைப்போட்டுவிடும்.

இந்தப் பகுதியில் கால்வாய் தோண்டப்படும்பொழுது அதிலுள்ள படிமங்கள் இவற்றை அழிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும்.

நாம் சுவாசிக்கின்ற ஆக்சிஜனை உற்பத்திச் செய்வதால் அவைகள் அழிக்கப்படும்பொழுது காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்படுகின்றது இதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களால் பருவமாற்றங்கள் சீர்குலைந்து மழையின் அளவு குறைந்துவிடும்.

இந்த பவளப்பாறைகளின் ஆக்சிஜன் உற்பத்தியால்தான் வருடத்திற்கு 900 மமீ மழை கிடைக்கிறது.

பவளப்பாறைகளின் அழிப்பால் கடற்அரிப்பு ஏற்பட்டு சுற்றியுள்ள கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயங்கள் நேரிடலாம். கடற் அரிப்பினையும் புயல் அபாயத்தையும் தடுப்பது இந்தப் பவளப்பாறைகள்தான்

நாம் என்ன செய்யப்போகிறோம்.? பவளப்பாறையை அழித்து அவல நிலையை அடையப்போகிறோமா..?

இயற்கையோடு தொட்டு பிடித்து விளையாடப்போகிறோமா..?

மீனவர்களுக்கு கட்டுப்பாடு

கப்பல் போக்குவரத்துகளால் அந்தப்பகுதியில் மீன்களின் வரத்தும் குறைந்து போகும் அதுமட்டுமல்ல கடல் போக்குவரத்தினால் மீனவர்கள் கப்பல் பயணிக்காத இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னர் நாளடைவில் மீனவர்களால் கப்பல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நொண்டிச்சாக்குகள் கூறப்பட்டு இந்தப்பகுதிக்கு அவர்கள் செல்லவேக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படலாம்.

மீன்கள் அதிகமாக கிடைக்கும் அந்தப்பகுதியைவிட்டு மீனவர்கள் எங்கு செல்லக்கூடும். சுமார் 138 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொழில் இல்லாமல் முடங்கிவிடுவார்களே..? அவர்களுக்கு அரசாங்கம் தரவேண்டிய நிவாரணங்களதான் என்ன?

மீனவர்களுக்கு மட்டுமல்ல கடல் உணவு உற்பத்தியில் நமது நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலவாணியும் முடக்கப்படும். கடலுணவு 1992 ம் ஆண்டில் 55325 டனனிலிருந்து 2001 ம் ஆண்டு 205700 டன்னாக உயர்ந்துள்ளது. 10500 சகிமீ பரப்பளவுள்ள கடற்பரப்பில் 20 கிமீ பகுதி நடைபெறப்போகும் கட்டுமானப்பணிகளால் மீன் உற்பத்தி மற்றும் கடல் உணவுகள் முற்றிலுமாக குறைந்துவிடும்.

கடல் உயிரினங்களையும் கரை உயிரினங்களையும் காப்பது அவசியமல்லவா..?
கடலில் மீன் அழுதால்
கரை அறியாது
என்று வைரமுத்து எழுதினார்.
கடலில் மீனவர்கள் அழுதாலும் அப்படித்தானோ..?

உயிரின இடப்பெயர்ச்சி

இந்த கால்வாய் தோண்டப்படும்பொழுது பல கணிக்க முடியாத மாற்றங்கள் நிகழப்போகின்றது. அவற்றுள் ஒன்று உயிரின இடப்பெயர்ச்சி. பல உயிரினங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படலாம் பல புதிய உயிரினங்கள் நுழையக்கூடும். ஒரு சூழ்நிலையில் புதிய உயிரினங்கள் நுழைவதால் அவற்றுள் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

மனிதனையே எடுத்துக்கொள்ளுங்களேன் ஒரு புதிய சூழ்நிலைக்கு மாறும்போது அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயிற்சி எடுத்து தன்னை மாற்றிக்கொள்ள நேரிடுகின்றான்
ஆனால் அங்குள்ள தாவரங்களுக்கு யார் பயிற்சி கொடுத்து புதிய சூழ்நிலைகளை உட்கொள்ள வைப்பது. அங்கு இடம்பெயரப்போகின்ற புதிய உயிரினங்களால் அங்குள்ள தாவரங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

மீனவர்களின் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுதல்

கட்டுமானப்பணிக்காக மீனவர்களின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படலாம் என்ற அச்சம்தான் மீனவர்களிடையே மிகுந்த பதட்டத்திற்கு முழு காரணம்.

முன்மாதிரிக் கால்வாய்கள்

பனாமா - சூயஸ் கால்வாயை வெட்டினார்களே அதற்கு ஏதேனும் பாதிப்பு வந்ததா இல்லையே. அங்குள்ள சூழ்நிலைகளில் எந்த மாற்றமும் இல்லையே..? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள்

நல்ல தொலைநோக்கான கேள்விதான். ஆனால் பனாமா - சூயஸ் கால்வாய்களோடு நம் சேதுக் கால்வாயை இணைக்க முடியாது. ஏனென்றால் அவைகள் நிலங்களை வெட்டி கடல்கள் இணைக்கப்பட்டன. ஆனால் நாமோ கடலை வெட்டி கடலை இணைக்கப்போகிறோம்.

கடல் ஒரு அதிசயம். அது அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. ஆகவே அதன் சரியான மாற்றத்தை யாராலும் கணிக்க முடியாது. கடல் கைக்குழந்தை அல்ல நம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதற்கு..

அலைபோல தாலாட்டுவதாய் வந்து திடீரென்று சுனாமியைப் பீய்ச்சி அடித்ததே..? அதனால் எத்துணை அழிவுகள் ஞாபகமில்லையா..?

பாக்ஜலசந்திப் பகுதியில் உள்ள அதிகமான நீரோட்டத்தினால் மண் அள்ளும் பணி பாதிக்கப்பட்டு இத்திட்டம் தோல்வியுறக்கூடும் என்று ஓய்வுபெற்ற சில கப்பல்துறைப் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படியென்றால் 2000 கோடிப்பணம் தண்ணீரிலும் கண்ணீரிலும் நனைக்கப்படப்போகிறதா?

சேதுக் கால்வாயில் கப்பல்கள் பயணம் செல்வதற்கு தனியாக வழிகாட்டிக்கப்பல்கள் அமைக்கப்படும் என்று நீரி அமைப்புச் சொல்கிறது. இந்த செலவினத்தை கப்பல் கம்பெனிகள்தான் செலுத்த வேண்டும். அவற்றை வைத்துக் கணக்கிடும்பொழுது சுற்றிச் செல்லுகின்ற செலவும் இந்த வரிவிதிப்புச் செலவுகளும் சமமாவது மட்டுமல்ல அவர்கள் சுற்றிச் செல்லும் தூரமும் அந்த அளவிற்கு குறைக்கப்படப்போவதில்லை.

வேலைவாய்;ப்பு அதிகரிக்குமா இல்லை கடற்பகுதியை நம்பியுள்ள மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகுமா..?

நன்மைகள்

தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி

ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புறக் கடலோரபகுதிகளின் மீன்பிடித்தொழில் வளரச்சி

ராமநாதபுரம் நாகப்பட்டினம் தூத்துக்குடி கட்டமைப்பு வளர்ச்சி

கடற்படைகள் கிழக்குப்பகுதியிலிருந்து மேற்குப்பகுதிக்கு அதிவேகமாக பயணிக்கமுடியும் என்பதால் கடற் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்

அந்தப்பகுதியில் நெடுஞ்சாலைகள் - மின்சார வசதி - குடிநீர் வசதி மற்றும் ரயில் பாதை மேம்படுத்தப்படும்

வாணிகத்தொடர்பான தொழிற்சாலைகள் அதிகரிக்கும்

வேலைவாய்ப்பு அதிகரித்து சுற்றுப்புற கிராம மக்களுக்கு பொருளாதாரம் உயரும்

அன்னிய முதலீடு அதிகரிப்பதால் தமிழக பொருளாதாரம் உயரும்

பாதிப்புகள்

பவளப்பாறைகள் - கடற் வாழ் உயிரினங்கள் - தாவரங்கள் அழிப்பு

மீன் உற்பத்தி குறைந்து மீனவர்களின் வாழ்க்கை வறுமைக்கு தள்ளப்படும்இவற்றையெல்லாம் மறுத்து கூறப்படுகின்ற காரணங்களையும் கொஞ்சம் அலசுவோம்


மண் தோண்டுதல்

கடலில் மண்தோண்டுவது என்பது இந்தத் தென்பகுதி மக்களுக்கு ஒரு விநோதமான புதிய செயலாகவேப் படுகின்றது. ஆனால் கடலில் மண்தோண்டுவது - ஒரு இடத்திலிருந்து மணலை தோண்டி இன்னொரு இடத்தில் கொட்டுவது எல்லாம் சகஜமப்பா..

உதாரணமாக கொச்சியில் ஆண்டுக்கு 1 கோடி கனமீட்டர் தோண்டி அரபிக்கடலில் கொட்டப்படுகின்றது. அரபிக்கடல் மீன்கள் அழுததாக செய்தி வரவில்லையே..?

நெதர்லாந்தில் ஆண்டுக்கு 4 கோடி க.மீட்டர் அத்திலாந்துக் கடலுக்குள் கொட்டப்படுகின்றது. மீன்கள் என்ன மூச்சு முட்டியா செத்துவிட்டது..?

சென்னை மற்றும் கல்கத்தா துறைமுகங்களில் அடிக்கடி மணல் தோண்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் கடல் கொந்தளித்துவிட்டதா என்ன?மண்தோண்டும் பணியில் இந்திய தூர்வாரும் கழகத்தின் DR- XII Dredging corporation of India என்ற கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது.

இந்திய தூர்வாரும் கழகம் கரையோரத்தில் படியும் மணலை ஆழ்கடலுக்குள் கொட்டி துறைமுகத்தை அழகுபடுத்தும் பணி நீண்ட காலமாகவே செய்து வருகிறது. அதற்கு தெரியாதா என்ன? கடல்சூழல் பாதிக்கப்படுமா இல்லையா என்று..? ஆகவே அவைகள் இப்பணியில் ஈடுபடும்பொழுது சுற்றுச்சூழலும் கடற்சூழலும் கெடாமல் பாதுகாத்துக்கொள்ளும்.

பெட்ரோலியக்கசிவுகள்

உலகத்தில் உள்ள அனைத்து கடல்களிலும் கப்பல்கள் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றது. எல்லா கப்பல்களிலும் எண்ணெய்கசிவுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. அந்த கசிவுகளை உணவாக்கும் நுண்ணுயிரிகள் கூட கடலில் இருப்பதால் அந்தக் கசிவுகள் காலப்போக்கில் மறைந்து விடும்.

பல ஆறுகளின் சந்திப்பில் வருகின்ற சேருகள் வங்கக் கடலிலிருந்து பாக் ஜலசந்திப்பகுதியில் புகுகின்றது. அப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கு இதுபோன்ற கலங்களில் வருகின்ற சேறுகள் உரமாகின்றது. கடலின் கலங்கல் நிலை முதனிலை உற்பத்திக்கு உரமாகின்றது மீன் பெருக்கத்திற்கும் உதவுகின்றது.

ஆகவே எண்ணெய்க்கசிவு உலகளாவிய நடைமுறைதான்.

சுனாமியினால் இந்த கால்வாய்த்திட்டம் பாதிக்கப்படுமா?

1881 - 1883 - 2004 சுனாமிகளால் கடலின் குறிப்பிடத்தக்க உள் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை.

சுனாமி அடிக்கடி மையங்கொள்ளும் பனாமா கால்வாயும் தெடர்ந்து செயல்பட்ட வண்ணம்தான் இருக்கின்றது.

ஆகவே சுனாமியால் இந்த சேதுக் கால்வாயுக்கு பாதிப்பு வராது.

ஒட்டுமொத்த எதிர்ப்புகளிலிருமிருந்தும் பொதுவானதொரு கருத்தை எடுத்தோமென்றால் பவளப்பாறைகள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை என்ற இரண்டு நிலைகள்தான் மேலோங்கி நிற்கின்றன.

பவளப்பாறைகளுக்கான தீர்வு :

சரி அவற்றுற்குண்டான தீர்வுகள்தான் என்ன?

பவளப்பாறைகளை நாம் வளர்க்க முடியும் என்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் ( ஐ.நா மன்னாள் ஆலோசகர் ) கூறுகிறார் :

"செயற்கையாக ஒதுக்கிடங்களை அமைத்துக் கொடுத்தால் பவளப் பாறைகள் காலப்போக்கில் வளர்ந்து வருமல்லவா?
துறைமுகத்தில் நீண்டகாலம் பழுதடைந்து கவனிப்பாரற்றுக் கிடக்கும் கப்பல்களின் அடிப்பாகங்களில் பவளக் குடலிகள் ஒட்டுகின்றன, வளர்கின்றன் சுண்ணப் பாறைகளாகவும் பெருகுகின்றன. இவற்றுடன் மட்டியும் சிப்பியும் சேர்ந்து ஒட்டிக் கொள்கின்றன. இத்தகையன செயற்கைச் சூழல்கள்.
பாக்கு நீரிணையில் பவளப் பாறை வளரும் ஒதுக்கிடங்களின் நீரோட்ட வேகத்தையும் ஒட்டுத் தரையின் சூழல் தன்மைகளையும் அளந்தும் தெரிந்தும் ஆய்ந்தால், அதையொட்டிய சூழலை வேறிடத்தில் அமைத்தால் அங்கும் சுண்ணப் பாறைகளைப் பவளக் குடலிகள் கட்டியெழுப்ப முயலுமல்லவா?"
ஆதாரம் : http://thamizharkaalvaai.blogspot.com/2005/10/blog-post.html

மீனவர்களின் பிரச்சனை:

மீனவர்களின் வாழ்க்கையை நாம் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். சேது சமுத்திரத்திட்டத்திற்கு சாதகமான நீரி அறிக்கையே அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆகவே அவர்களை மொத்தமாக இடப்பெயர்ச்சி செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. சொந்த மண்ணை விட்டு வருவதற்கு யாருக்குத்தான் விருப்பமிருக்கும். எந்த நாட்டிலோ சென்று உழைத்து கைநிறையை பணம் சம்பாதித்தாலும் சொந்த நாட்டினை நினைத்து ஏங்குவோர் எத்தனை எத்தனை பேர் ..?

ஆகவே அவர்களை இடப்பெயர்ச்சி செய்ய வைப்பது என்பது புத்திசாலித்தனமல்ல. வேண்டுமானால் அந்தப்பகுதியை அரசாங்கம் தத்து எடுத்து சுற்றுலாத்தளமாக மாற்றி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்யலாம்.


06.01.06 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி அவர்கள்
தமிழக மக்களின் பல ஆண்டு கனவான சேது சமுத்திர திட்டம் நடந்து வருகிறது. பனாமா, சூயஸ் கால்வாய்களைப் போல பாக் ஜலசந்தியில் சேது சமுத்திர திட்டம் பெரும் பயன்தரும். இந்த விஷயத்தில் சிலர் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து குரல் எழுப்பி வருகின்றனர். சுற்றுச்சூழல் குறித்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்படுகிறது.

அதற்கிடையில் அவற்றுக்கெதிராக கண்டனங்களும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் மீனவர்களின் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனமன்னார் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக 19.07.2005 அன்று காலை 11.30 மணி அளவில் மன்னார் மாவட்ட தலைமை அலுவவலகத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர்.


மற்றும் சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிரான தேசிய இயக்கமும் மக்கள் - சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுப்புற ஆய்வாரள்களை வைத்து போராட்டம் நடத்தியது.

கல்தோன்றா மண்தோன்றா காலத்து மொழியாம் தமிழ்பேசும் இந்த மக்கள்
கடலில் கல்தோண்டி மண்தோண்டி கனவுகளும் தோண்டப்பட்டு புதைவார்களோ..? இல்லை சேது திட்டத்தின் பொருளாதார எழுச்சியில் எழுவார்களா..?

தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுகளுக்கு இங்கே வெளிச்சம் கொடுக்க நினைப்பது தவறில்லை. ஆனால் கடலுக்குள் இருந்து கதறிக்கொண்டிருக்கும் அவர்களின்
சப்தங்களை கப்பல்களின் இரைச்சல்கள் தொலைத்துவிடக்கூடாது.

சேது சமுத்திரத்திட்டத்தில் தோண்டப்படுவது மண்ணா இல்லை மீனவர்களின் வாழ்க்கையா..? இது சரித்திரப்புகழ் வாய்ப்பதும் தரித்திரப்புகழ் வாய்ப்பதும் அரசாங்கத்தின் சுயநலம் பாராத நடவடிக்கைகளில்தான் இருக்கின்றது.
நன்றி : மறவன்புலவு க. சச்சிதானந்தன் ( ஐ.நா மன்னாள் ஆலோசகர் )
நன்றி : பரஞ்சோதி
நன்றி : மதிவாணன்
நன்றி : ஏ.ரஜீவன்
நன்றி : தினமலர்
நன்றி : குருஜி
http://sethusamudram.tamilar.org/
http://www.sanctuaryasia.com/takeaction/writeltr_mannar.php


- ரசிகவ் ஞானியார்

Wednesday, January 04, 2006

துபாய் ஆட்சியாளர் மரணம்

துபாய் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் ( வயது 62) அவர்கள் இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவில் வைத்து மரணம் அடைந்தார். ( Vice Precident and Prime Minister of UAE and Ruler of Dubai )

இந்த மரணம் ஆட்சியாளர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அவரது சகோதரர் ஷேக் மஹ்மூது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஷேக் மக்தூமுக்குப் பதிலாக துபாய் ஆட்சியாளராக வரலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

அமீரக அரசின் செய்தி :

"அமீரகத்தினை மிகப்பெரிய வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று அமீரக மக்களின் வளமான வாழ்க்கைக்கு ஒரு தூணாக விளங்கிய அமீரக வரலாற்றுப்புகழ் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.

மேலும் கூறியதாவது ஷேக் மக்தூம் அவர்கள் மக்கள் மீது மிகவும் அன்பானவர். ஆவரின் நினைவுகள் மக்களின் உள்ளத்தில் எப்போதும் பதிக்கப்பட்டிருக்கும். அமீரகத்தின் தேசியக்கொடி அவரது மரணம் அனுஷ்டிக்ப்படும் 40 நாட்களும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் "

அமீரகத்தின் ஆட்சியாளர் ( President of UAE ) ஷேக் கலீபா பின் செய்யது அல் நாயன் அவர்கள் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

அவரது நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை பர்துபாயில் உள்ள உம் குரைர் மயானத்தில் வைத்து நடைபெறும் என்றும் காலை பத்து மணி அளவில் ஜபீல் பள்ளிவாசலில் வைத்து பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது


அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை வருவதால் 14.01.2006 வரை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை. தனியார் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படலாம்.


டேய் அப்படின்னா 4 நாளைக்கு லீவுதான்டா செம ஜாலி என்று அந்த மரணத்தில் கூட ஆதாயம் தேடுபவர்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது


இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 03, 2006

படம் பார்க்க வாரீயளா - தொடர்ச்சி

கணவன் வேலைக்குச்சென்று வரும்பொழுது கண்டிப்பாக கையில் ஒரு பெட்டி இருக்கும். அவன் வீட்டினுள் நுழைந்தவுடன் அவன் மனைவி அவன் அணிந்துள்ள கோட்டை கழற்றுவாள்.

சினிமாவில் இஸ்லாமிய கதாபாத்திரத்தை காட்டுபோது கைலி உடுத்திக்கொண்டு தலையில் ஒரு தொப்பி அணிந்து கொண்டு கழுத்தில் புலிப்பல் வடிவில் ஒரு தாயத்து அணிந்துகொண்டு அச்சாக்கே பச்சா என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து கொண்டு இருப்பார்.

கதாநாயகன் செண்டிமென்டாக கழுத்திலோ அல்லது கையிலோ
786 என்ற எண் அணிந்த பட்டையை அணிந்திருப்பான். இந்தியாவில் எந்த முஸ்லிமும் அப்படி அணிந்திருப்பதாக நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதுமில்லை.

கோர்ட் சீனில் கதாநாயகனோ அல்லது கதாநாயகனின் வக்கீலோ நகைச்சுவையாக பேச உடனே பார்வையாளர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை கிளம்பும். உடனே நீதிபதி அந்த இத்துப்போன கட்டையால் ஆர்டர் ஆர்டர் என்று மேஜையைத் தட்டுவார்.

கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதநாயகன் கண்டிப்பாக ஒரு மஞ்சள் பையை கையில் வைத்துக்கொண்டு எல்ஐசி பில்டிங்கையோ அல்லது சென்டிரல் இரயில் நிலையத்தையோ கடந்து செல்வான்.

பெண்ணின் கழுத்திலிருந்து தாலியை வில்லன் புடுங்கும்போது கடலலைகள் எல்லாம் அப்படியே பாறைகளில் தெறித்து நிற்கும்,பறவைகள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் பறந்த நிலையிலேயே நின்றுவிடும், பலமான சூறைக்காற்றில் தென்னை மரங்கள் ஆடும்.

ஏதாவது பெண் கெடுக்கப்படுகின்ற காட்சியில் அதனை நேரடியாக காட்டினால் ஆபாசமாக இருக்கும் என நினைத்து ஒரு புலி மானை துரத்துவது போன்று அல்லது கிளி ஒன்று கூண்டக்குள் அங்குமிங்கும் சிதறி ஓடி படபடப்பதுபோலவும் காட்டுவார்கள். பாருங்கனே; வித்தியாசமான சிந்தனையை ..உண்மையில் இந்தக்காட்சிதான் மிகவும் ஆபாசமாக இருப்பது போல தோன்றும்.

பின்னர் அந்தப் பெண் தலைமுடி கலைந்து ஆடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு குங்குமங்கள் கலைந்து மூலையில் குத்த வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள்.

கிராமத்து முரட்டு பண்ணையாரின் எல்லா பையன்களும் பம்புசெட்டில் ஏழைப் பெண்ணை தூக்கிச்சென்று கெடுத்துவிடுவார்கள்.

மற்றும் சில நண்பர்களிடமிருந்து:

கைப்புள்ளை : 1960 - 70 களில் வரும் பழைய படங்களில் வரும் ஒரு பிரபலமான வசனம் குறிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம். ஏன் குளிக்காம வந்தா விரட்டி விடுவாங்களா என்ன..?

கதாநாயகி கிறிஸ்த்துவ மதமாக இருந்தாலோ அல்லது கிறிஸ்த்துவ கதாநாயகனை மணக்கிறாள் என்றாலோ ஒரு பெரிய வெள்ளை நிற கவுன் அணிந்து கையில் குளோஸ் அணிந்து கொண்டு இருப்பாள். நான் இதுவரை பார்த்த தமிழ்நாட்டு கிறித்துவ முறை திருமணங்களில் மணப்பெண் புடவைதான் அணிந்திருப்பாள்.

கோர்ட் சீனில் வரும் நீதிபதி கறுப்பு நிற கோட் அணிந்துகொண்டு அந்த கோட்டில் ஒரு சிவப்பு நிற ரிப்பன் சுற்றப்பட்டடிருக்கும். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு நீதிபதியும் இப்படி சிவப்பு ரிப்பன் சுற்றியிருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இந்த விசயத்தில் தெளிவாக இருக்கிற நம்ம ஊர் விருமாண்டி நீதிபதி கூட சிவப்பு ரிப்பன்தான் அணிந்திருந்தார்.

கதாநாயகனோ கதாநாயகிளோ அல்லது அவர்களது நண்பர்களோ உறவினர்களோ கத்தி குத்திப்பட்டோ குண்டடிப்பட்டோ கிடக்கும்போது 5 நிமிடம் வசனம் பேசிவிட்டுத்தான் மண்டையைப் போடுவார்கள். அதுவே வில்லனோ அல்லது வில்லன் ஆட்களாகவோ இருந்தால் உடனே மண்டையைப்போட்டுவிடுவார்கள்.

தமிழ்படத்தில் வரும் அரபு நாட்டு சேக் கூட இந்தியில் பேசுவான்


நிலா : மாறு வேடத்தை மறந்திட்டீங்களே? கன்னத்தில ஒரு மச்சம் மட்டும் வச்சிக்கிட்டு எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில வருவாராம்! நம்ம டெண்டு கொட்டாயில படம் பாக்கற வாண்டுக்குக் கூடத் தெரியும் அது வாத்தியாருன்னு. ஆனா வில்லனுக்கு மட்டும் தெரியாமப் போயிரும்!


பூங்குழலி : முதலிரவுக் கதாநாயகியோ அல்லது சோரம்போன பெண்ணோ அறையில் இருந்து வெளியே வரும்போது அவர்கள் என்னதான் புதுமைப் பெண்ணாக இருந்தாலும், அவர்களின் முகத்தில் குங்குமம் ஈஷிக்கொண்டு இருக்கும்- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு