Monday, January 28, 2008

தயவுசெய்து லால்பாக் போகாதீங்க

நான் 1998 ம் வருடம் பெங்களுர் லால்பாக்கிற்கு உறவினர்களுடன் வந்திருக்கின்றேன். அப்பொழுது உள்ள கற்பனையிலையே இருந்திருக்கலாம். நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக சமீபத்தில் அங்கு செல்ல நேரிட்டது. ஏண்டா போனோம்னு வருந்துகின்றேன்.

பெங்களுர் லால்பாக்கிற்கு நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் எவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கின்றதோ அவ்வளவு கெட்டவார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

யாருடைய படுக்கை அறைக்குள்ளோ நுழைந்துவிட்டதைப்போன்ற உணர்வினைத் தருகின்றது. மிக மிக மிக மிக மோசமான செய்கைகளில் காதலர்கள் இல்லை இல்லை வெளி உலகத்திற்கு அப்படி அடையாளப்படுத்திக் கொண்ட விபச்சாரர்கள் அவர்கள்.

உள்ளே நுழையும்பொழுதே ஒரு ஜோடி முத்தங்கள் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். அதனைக் கண்டே ஆத்திரமாய் வந்தது. என்னடா பொது இடம் கூட பார்க்காமல் இப்படி நடக்கின்றார்களே என்று?

ஆனால் உள்ளே சிறிது தூரம் சென்று விட்டு திரும்பிய பொழுது அந்த ஜோடிதான் இருப்பதிலையே மிகவும் நாகரிகமான ஜோடி என்று உணர வைக்கும் அளவுக்கு உள்ளே மோசமான நிகழ்வுகள்.

ஒரு மரத்தின் உச்சியில் இருந்து ஒரு காதல் ஜோடி கதைத்து கொண்டிருக்கின்றார்கள் ஒருவேளை மிக உயர்ந்த காதல் என்று சொல்கின்றார்களே அது இதுதானோ?


நாங்கள் ஒரு ஜோடியை கடந்து சென்றோம். அந்தப்பையனுக்கு 16 வயது கூட இருக்காது. தன் வயதை ஒத்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பேசிக்கொண்டிருந்தான் என்பதை விடவும் உரசிக்கொண்டிருந்தான் என்று சொல்லலாம்.

ஆனால் நெருங்க நெருங்க மனம் துடித்துப்போனது. எந்த செய்கைகள் பொது இடங்களில் வைத்து செய்யக்கூடாதோ- அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

அந்த இடத்தை கடந்து செல்ல எங்களுக்கு கூச்சமாக இருந்தது. நாங்கள் பார்த்துவிட்டால் அவர்களுக்குத்தான் அவமானம், ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நாங்கள் கடந்து சென்றால் எங்களுத்தான் அவமானம் என்ற நினைப்பில் அலட்சியமாய் தங்களது பணியை தொடர்ந்தார்கள்.

நான் அவர்கள் கேட்கும் தூரத்தில் சென்று "ஹலோ போலிஸ்" என்று எனது செல்போனில் உரக்க கூறி இங்கு விபச்சாரம் நடப்பதாகவும் உடனே வரும்படியாகவும் சத்தம் போட்டு பேச அவர்கள் மட்டுமல்ல பக்கத்தில் மறைந்து இருந்த இன்னொரு ஜோடியும் அவசர அவசரமாய் இடத்தை காலி செய்தார்கள்.

சாதாரணமாய் கடந்து செல்பவர்களே இந்தக் காட்சிகளெல்லாம் காணும்பொழுது கர்நாடகா அரசின் காதுகளுக்கு இது எட்டாமலா இருக்கும்? ஏன் இதனை அலட்சியப்படுத்துகின்றார்கள்?

பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் இதுபோன்றவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்களுக்கு இது சரிதானோ என்ற தோற்றத்தைதான் ஏற்படுத்தும். அது மட்டுமல்ல அந்தத் தலைமுறையினரை பார்த்து வளருகின்ற மற்றவர்களும் அதனையே பின்பற்ற தொடங்கிவிடுவர். இவங்கள எல்லாம் கண்டிப்பதற்கு ஒரு வழியும் இல்லையா..?

தயவுசெய்து பெங்களுர் வந்தால் லால்பாக்கிற்கு போகவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் கைவிட்டு விடுங்கள்.

லால்பாக்கில் மட்டுமல்ல பொது இடங்களில் கூட இந்த அத்து மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பேருந்து நிறுத்தங்களின் ஓரங்களில் உடல் உரசல்கள் விடைபெறும் பொழுது தழுவல்கள் முத்தங்கள் மேலைநாட்டுக்குள் நுழைந்து விட்டோமோ என்ற பிரமிப்பைத் தருகின்றது.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கின்றார்களோ இல்லையோ வீதிக்கு ஒரு காதலர்கள் தோன்றுகின்றார்கள். உண்மையான காதலர்களாகவே இருக்கட்டுமே அதற்காக இப்படியா பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது..?

ஓவ்வொரு பேருந்து நிறுத்தங்களின் மறைவிலும் தவறுகள் நடக்கின்றது. அவர்கள் ஆண் பெண் நட்பின் பெருமையை வெளிப்படுத்துவதாக இருந்தால் தைரியமாக மறைவுக்கு வெளியே நின்று பேசலாமே?

நான் தங்கியிருந்த பிடிஎம் பகுதியில் ஒரு பெண்கள் விடுதியின் வாசலில் சரியானக் கூட்டம். இளம் வயது வாலிபர்கள் நாயைப் போல காவல் நிற்கின்றார்கள். முத்தங்கள் எல்லாம் சுவாசிப்பதைப்போல அனிச்சை செயலாக பரிமாறப்பட்டு வருகின்றது.

திருநெல்வேலியைச் சார்ந்த எனக்குத் தெரிந்த நண்பி ஒருவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கின்றார். ஒருநாள் அவர்கள் கம்பெனியில் பார்ட்டி என்று தனது தாயாரையும் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் கலாச்சார பெருமை வாய்ந்த ஒரு ஊரில் இருந்து வந்து அங்கு வேலை பார்க்கும் சில தமிழ்பெண்டிர்கள் தனது சக தோழர்களுடன் தோளில் கை போட்டுக்கொண்டு பேசுவதும், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஜோக் அடிக்கின்ற சாக்கில் தொடைகளைத் தட்டுவதுமாக, மிக சாதாரணமாக மிக மிக சாதாரணமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் கொதிப்படைந்து அந்தப் பெண்களைக் கண்டித்திருக்கின்றார்கள்.

ஏம்மா நீ எந்த ஊர்ல இருந்து வந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?..இங்கு வந்தா என்ன இப்படித்தான் இருக்கனும்னு சட்டமா என்ன..? இனிமே நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் நான் உங்க வீட்டுக்குத் தகவல் அனுப்பிருவேன் என்று சத்தமிட்டிருக்கின்றார்கள்.

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன கலாச்சார சீர்கேட்டினையும் கிரகித்துக் கொள்ளவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டமேதும் இருக்கின்றதா என்ன? அவர்கள் வேலை பார்ப்பது வேண்டுமானால் அமெரிக்க கம்பெனிக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் வசிப்பது இந்தியாவில்தான் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள்.

இங்குள்ள கலாச்சார மோகம் நம்மவர்களை மிகவும் மாற்றி விடுகின்றது. எத்தனையோ பெண்கள் குடும்பத்தை காப்பாற்றும் கட்டாயத்தில் இங்கு வந்து வாழ்க்கையோடும் கலாச்சாரத்தோடும் நாகரீகமாய் போராடிக்கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால் இந்தக் கடலுக்கு மத்தியில் அந்த நீரத்துளிகள் காணாமல் போய்விடுகின்றன.

- ரசிகவ் ஞானியார்

Friday, January 25, 2008

உன்னை விட்டு விட என்ன செய்வது?

ஒரு அதிகாலை குளிரின்
பனித்துளிகள் சேகரிக்கும்..
பாதையொன்றினில் - ஏதோ ஒரு
மணித்துளியினில் என்னில் வந்து..
மாட்டிக்கொண்டாய்!

சுற்றிக்கொண்டு..
சுவாசம் தர மறுக்கின்றாய்!

விலகி விட நினைத்தால்..
நெருக்கம் இறுக்குகிறாய்!

உன்னை விட்டு விலக..
அறிவுரைகளும் , ஆறுதல்களும்
வந்துகொண்டே யிருக்கின்றன!

எதை விடுவது எதை தொடுவது?

என் மீதான் காதல்
அதிகப்பட்டுப்போனதால்...
அறிவுரைகளை அலட்சியப்படுதியவன்
பின்பற்றுகின்றேன்..

நீ இன்னும் இன்னும் இன்னும் நெருங்குகின்றாய்..
உன்னை விட்டு விட ...
நான் என்ன செய்வது ஜலதோஷமே?

- ரசிகவ் ஞானியார்

Thursday, January 10, 2008

கண்ணீர் தின்னும் மனிதர்கள்.

இடம் : மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே பெங்களுர்

டண்டணக்கா டண்டணக்கா.. டும் டும்

மேளதாளங்களோடு ஆட்டம் பாட்டங்களோடு அந்த ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது. நான் கவனிக்க ஆரம்பித்தேன் மிக மிக சந்தோஷத்தோடு கொட்டடித்தபடி இளைஞர்களும் நடுத்தர வயதினருமாய் உற்சாகமாய் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.திடீர் திடீரென்று ஒரு பந்து ஒன்று மேலம் கீழும் பறக்கின்றது. நன்றாக உற்றுப்பார்த்தேன். அட பந்து இல்லைப்பா..உற்சாக மிகுதியில் ஒருவனை தாளத்திற்குத் தகுந்தவாறு நான்கைந்து பேர் தூக்கி போட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

செம குஷியில் இருக்கின்றார்களே? திருமணம் அல்லது அரசியல் கூட்டமா என்ற ஆர்வத்தில் கூட்டத்தின் அசைவுகளை கவனித்தக்கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல கூட்டம் கடந்து செல்ல இறுதியில் வந்த அந்த வாகனத்தைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அது மண ஊர்வலம் அல்ல மரண ஊர்வலம்.இறந்து போனவன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லி அந்தச் சோகத்தில் நாம் பங்கு எடுத்துக்கொள்ளுதல்தானே மனிதநேயம்? இங்கு என்ன வித்தியாசமாய் இருக்கின்றது?

அட என்னடா ஒருத்தன் செத்துப்போய்ட்டான் அந்த வருத்தம் இல்லாமல் இப்படி மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக்கின்றார்களே?

இதுபோன்ற ஊர்வலத்தை தமிழ்நாட்டிலும் நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அந்தக் கூட்டத்தில் இந்த அளவுக்கு உற்சாகம் இருக்காது. ஒருவர் மட்டும் கொடுத்த காசுக்கு தண்ணியடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பார்.

ஆனால் இங்கு அளவுக்கு மீறிய உற்சாகம் அளவுக்கு மீறிய ஆட்டம்…ஒருவேளை செத்துப்போனவன் நரகாசுரைனப் போல கெட்டவனோ..? ஒரு கெட்டவன் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில் ஆடுகின்றார்களோ என்ற சந்தேகத்தில் கவனித்துக்கொண்டு இருந்தபொழுதுஅந்த கறுப்பு நிற வாகனம் மெல்ல என்னைக் கடந்து சென்றது.

வாகனத்தின் முன்னால் மாலைகளும் இறந்து போன ஒரு இளைஞனின் புகைப்படமும் வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வாகனத்திற்குப் பின்னால் ஒரு ஆட்டோவில் அந்த இளைஞனின் உறவினர்கள் கதறல்களோடும் - கண்ணீர்களோடும் - தாங்க இயலா துயரத்தில் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

டண்டணக்கா டண்டணக்கா..டும் டும்
ஊர்வலம் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றது கண்ணீர்களை பாட்டில்களாக மாற்றி.

ஊர்வலத்தின் முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் எவனாவது அறிந்திருப்பானா காருக்குப் பின்னால் அழுதுகொண்டு வருபவர்களின் கண்ணீர்?

-ரசிகவ் ஞானியார்

எங்க ஊரு மாதவப்படையாச்சிதிருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை பேருந்து நிலையம் அருகே நான் கல்லூரி செல்கின்ற நாள் முதலாய் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றேன் இந்த முதியவரை. ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் திடீரென்று வெகுண்டு மிரண்டு வெறித்தனமாய் கத்திக்கொண்டிருப்பார். ஆனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யமாட்டார். ஒரு பெரும் கூட்டத்தையே மிரட்டுவது போல அவருடைய கத்தல் இருக்கும்.

ஏய்..ட்டுர்…ஏ…ய்.. ஏ…….ய்.. என்று கைகளை மேலும் கீழும் அசைத்துக் கத்துவார். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் கத்திக்கொண்டே ஓடுவார்.

இவர் அப்படி கத்தும்பொழுது கடந்து செல்லும் நபர்கள் பேருந்தில் பயணிப்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பேருந்துக்கு காத்து நிற்பவர்கள் என்று அனைவரின் கவனமும் இவர் பக்கம்தான் திரும்பி பார்த்து பின் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால் இவருடைய கத்தல் தொடரந்து நீடிக்காது சுமார் ½ மணி நெரத்திற்குப் பிறகு இவரும் சகஜ நிலைக்குத் திரும்பி தனது வேலைக்குத் திரும்பி அந்த ஹோட்டலில் விட்டுப்போன தனது பணியை அமைதியாய் தொடர்ந்து செய்வார்.

அவரா கத்தினார் என்று நினைக்கத் தூண்டும் அளவுக்கு தனிது பணியை தொடர்ந்து செய்து மற்றவர்களை ஆச்சர்யப்படவைப்பார். அவருக்கே தெரியாது அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர் கத்தியது.

ஹோட்டல் நிர்வாகமும் அவருடைய கத்தலுக்குப் பழகிப்போய் அவருக்குண்டான கத்தல் நேரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். சாப்பாடு நேரம் போல அவருக்கு கத்தல் நேரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது சோகமான நிலை.

பழகிப்போனவர்களுக்கு இவருடைய கத்தல் ஒரு பைத்தியக்காரனின் கத்தலாகத்தோன்றும். ஆனால் புதிதாய் பார்ப்பவர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போவார்கள்.

ஆனால் இந்தக் கத்தலுக்குப் பின்னால் ஏதாவது ஒரு காரணம் இருக்குமோ என்று என் மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். ஒருவேளை மகன்கள் கைவிட்டிருப்பார்களா? அல்லது யாராவது மிரட்டிருப்பார்களா? இல்லை? ? ? ? ?…என்று நிறைய கேள்விக்குறிகளோடுதான் அவர் கத்துதலைப் கவனித்துக்கொண்டிருப்பேன். ஆனால் அவரிடம் கேட்கின்ற தைரியமில்லை.

சென்ற வாரம் ஊருக்குச் சென்றபொழுதும் அதுபோல அந்த மனிதர் கத்திக்கொண்டிருந்தார்.

ஏய்..ட்டுர்…ஏ…ய்.. ஏ…….ய்..

நான் அவரை நிறுத்தி கேட்டுவிடலாம் என்ற தைரியத்தில் மெல்ல பக்கத்தில் சென்றேன். என்னைப்பார்த்து அதே கத்துதலைத் தொடர்ந்து பின் வேறு பக்கமாய் திரும்பி கத்திக்கொண்டே சென்று விட்டார்.

விசாரித்த வரையில் அவர் ஏதோ ஒரு பயங்கரமான சம்பவத்தை அவர் கண்ணெதிரே கண்டிருக்கின்றார் அதிலிருந்து அவர் இப்படித்தான் திடீர் திடீரென்று கத்திக்கொண்டு ஓடுவார் என்று சிலர் கூறுகின்றனர்.
எனக்கு உறுத்திக்கொண்டே இருக்கின்றது.

ஒரு நாள் அவர் சகஜநிலைக்குத் திரும்பி பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது அவரிடமே கேட்டுவிடலாமோ என்று தோன்றுகின்றது.

இதுபோல பேருந்து நிலையம் அருகே இல்லை சாலையோரங்களில்; அழுக்கு ஆடைகளோடு சுற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் மாதவப்படையாச்சி போல ஏதாவது ஒரு கதை இருக்க கூடும்.

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு