Thursday, January 10, 2008

கண்ணீர் தின்னும் மனிதர்கள்.

இடம் : மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே பெங்களுர்

டண்டணக்கா டண்டணக்கா.. டும் டும்

மேளதாளங்களோடு ஆட்டம் பாட்டங்களோடு அந்த ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது. நான் கவனிக்க ஆரம்பித்தேன் மிக மிக சந்தோஷத்தோடு கொட்டடித்தபடி இளைஞர்களும் நடுத்தர வயதினருமாய் உற்சாகமாய் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.



திடீர் திடீரென்று ஒரு பந்து ஒன்று மேலம் கீழும் பறக்கின்றது. நன்றாக உற்றுப்பார்த்தேன். அட பந்து இல்லைப்பா..உற்சாக மிகுதியில் ஒருவனை தாளத்திற்குத் தகுந்தவாறு நான்கைந்து பேர் தூக்கி போட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

செம குஷியில் இருக்கின்றார்களே? திருமணம் அல்லது அரசியல் கூட்டமா என்ற ஆர்வத்தில் கூட்டத்தின் அசைவுகளை கவனித்தக்கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல கூட்டம் கடந்து செல்ல இறுதியில் வந்த அந்த வாகனத்தைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அது மண ஊர்வலம் அல்ல மரண ஊர்வலம்.



இறந்து போனவன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லி அந்தச் சோகத்தில் நாம் பங்கு எடுத்துக்கொள்ளுதல்தானே மனிதநேயம்? இங்கு என்ன வித்தியாசமாய் இருக்கின்றது?

அட என்னடா ஒருத்தன் செத்துப்போய்ட்டான் அந்த வருத்தம் இல்லாமல் இப்படி மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக்கின்றார்களே?

இதுபோன்ற ஊர்வலத்தை தமிழ்நாட்டிலும் நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அந்தக் கூட்டத்தில் இந்த அளவுக்கு உற்சாகம் இருக்காது. ஒருவர் மட்டும் கொடுத்த காசுக்கு தண்ணியடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பார்.

ஆனால் இங்கு அளவுக்கு மீறிய உற்சாகம் அளவுக்கு மீறிய ஆட்டம்…ஒருவேளை செத்துப்போனவன் நரகாசுரைனப் போல கெட்டவனோ..? ஒரு கெட்டவன் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில் ஆடுகின்றார்களோ என்ற சந்தேகத்தில் கவனித்துக்கொண்டு இருந்தபொழுதுஅந்த கறுப்பு நிற வாகனம் மெல்ல என்னைக் கடந்து சென்றது.

வாகனத்தின் முன்னால் மாலைகளும் இறந்து போன ஒரு இளைஞனின் புகைப்படமும் வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வாகனத்திற்குப் பின்னால் ஒரு ஆட்டோவில் அந்த இளைஞனின் உறவினர்கள் கதறல்களோடும் - கண்ணீர்களோடும் - தாங்க இயலா துயரத்தில் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

டண்டணக்கா டண்டணக்கா..டும் டும்
ஊர்வலம் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றது கண்ணீர்களை பாட்டில்களாக மாற்றி.

ஊர்வலத்தின் முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் எவனாவது அறிந்திருப்பானா காருக்குப் பின்னால் அழுதுகொண்டு வருபவர்களின் கண்ணீர்?

-ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

very nice and sensitive article rasikav. congrats and keep it up.

- kumar

தேன் கூடு