Friday, April 27, 2007

அப்பா என் குழந்தை

( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக "ஒரு கவிதை எழுதி தரமுடியுமா?" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக )

Photo Sharing and Video Hosting at Photobucket

கந்தசார்..

கந்தன் அய்யா..

கந்தகுமார்..

ஒவ்வொரு இடத்திலும்
உனக்கு பெயர்கள் வித்தியாசப்பட்டாலும்

எனக்கு பிடித்த பெயர்
அப்பா மட்டும்தான்!


அப்பா…
அப்பா…
அப்பா…
இப்படி
காற்றில்தான் சப்தமிடமுடிகிறதே - தவிர
கண்ணெதிரே நீ இல்லையேயப்பா?

என்னுடைய
உச்சரிப்பு அகராதியிலிருந்து
உதிர்ந்துவிட்டது
அப்பா என்ற சொல்!


நீ
இருக்கிறாயா இல்லையா?
இல்லையா இருக்கிறாயா?
அடிக்கடி
கிள்ளிபார்த்துதான் உணர்ந்துகொள்கிறேன்
நீ இல்லையென்பதை!


நான் செய்கின்ற
ஒவ்வொரு நிகழ்வுகளிலும்
நீ வந்து போகின்றாய்

நீ இருந்து
நிகழக்கூடிய நிகழ்வுகள் எல்லாம்
நீ இல்லாமலும்
நிகழ்கின்றது எனினும்
நீ இருப்பது போல இல்லையப்பா!

நீ தொட்டுப்படித்தப் புத்தகம்..
எட்டிப்பிடித்த குழந்தைகள்..
கத்தி நடத்திய பாடங்கள்..
தட்டிக்கொடுத்த முதுகுகள்..
பொட்டிக்கடை சிகரெட்கள்..
பூட்டிவைத்த சீக்ரெட்கள்..

எல்லாம் அப்படி அப்படியே கிடக்க..
உன் பயணம் தீர்மானிக்கப்பட்டது!

வணக்கம் சொல்வதற்கு
வாத்தியார் இல்லாமல்..
காற்றில்
கையசைத்துக்கொண்டிருக்கின்றது
நம் தெருக்குழந்தைகள்!

நீ எதிரில் வந்தால்
புன்சிரிப்போடு கடந்த மனிதர்கள்..
யதேச்சையாய்
நம் வீட்டைக் கடக்கும்பொழுது
புன்முறுவல் செய்கின்றார்கள்!

நீ இருப்பதாய் நினைத்து..
உன் பெயரை அழைத்தபடியே
பள்ளிக்கூடத்திற்கு வருகிறவர்களுக்கு..
எப்படி புரியவைப்பது?
உன் இல்லாமையை!

நீ அமர்ந்த இருக்கை..
நடந்து வந்த பாதை..
நீ ஓட்டிய வாகனம்..
இவைகள்
நீ பூமியில் உலவியதை..
எனக்குள்
மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது!

மரணம் இயற்கைதான் எனினும்
நீ மரணிப்பாய் என்று
நான் எதிர்பார்க்கவேயில்லை அப்பா
உனக்கு மட்டும்
விதிவிலக்காகியிருக்க கூடாதா?

எல்லாருக்கும்
நீ
பாடம் எடுத்தாய்
உன் மரணத்தில்
எங்களுக்கு ஓர் பாடம் ...

ஆம்!
உன் மரணத்தில்…
தொப்பி – விபூதி – சிலுவைகள் எல்லாம்
சுற்றி நின்று அழுத கண்ணீரிலே…
இந்திய வேற்றுமையே
இருண்டு போனதப்பா!

நம்பிக்கையிருக்கிறது
தண்ணீரில் கலந்த உன் அஸ்தி..
எந்த விளைநிலத்தில்
நீந்திக்கொண்டிருக்கின்றதோ?
அங்கே அமோக விளைச்சல்!

ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்க்கின்றேன்..

நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

நினைத்துப்பார்க்கின்ற எல்லாமே
துக்கத்தை தருவதால்…
உன் நினைவுகளுக்குப் பிறகு
எனக்கு
தூக்கத்தை தரட்டும் இறைவன்!


நீ
இறந்துவிட்டதாக
இவ்வுலகமே பிதற்றினாலும்..
எனக்கு மட்டும்
நீ
வாழ்ந்து கொண்டிருக்கின்றாயப்பா!



கறுப்புக் கண்ணாடிக்கு
பின்புறம் அமர்ந்து பார்ப்பவர்கள் போல
எனக்குத் தெரியாமலையே
எங்கிருந்தோ என்னை
நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்!


உன்
இருக்கையை கடக்கும்பொழுதெல்லாம்
என் இரு கைகளிலும்..
வித்தியாசமான ஸ்பரிசம்
நீ தொடுகிறாயோ அப்பா?

முயற்சிகள் சிலநேரம்
முடக்கிவைக்கப்படும்பொழுது
தன்னம்பிக்கையாய் இதயத்தில்…
துளிர்த்து வருகிறாய் நீ!

கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
உணரமுடிகின்ற காற்றைப்போல
நீ வந்துகொண்டே இரு!

தென்றல் வீசி
வீட்டுக் கதவு லேசாய் அசைந்தால்கூட
நீ வாசல் வந்துவிட்டதாய் உணர்கிறேன்!


நீ இருந்தால்..
இப்படி இருந்திருக்குமோ?
அப்படி இருந்திருக்குமோ?
என்று நினைத்து நினைத்தே
உன் நினைவுகள்
என்னுடன் இருக்கின்றன!

உன்
குழந்தையாகிய என்னிடம் நீ
கோவப்பட்டதில்லை!
ஆனால்
உன் குழந்தைச் சேட்டைகளைக் கண்டு
நான் கோவப்பட்டிருக்கின்றேன்!

நான் வீட்டுக்கு வர
தாமதமாகும்
தற்காலிக பிரிவிக்கே…
தவித்துக்கொண்டிருப்பாயே அப்பா?
இந்த
நிரந்தரப் பிரிவின் நிஜத்தை ..
இன்னமும் நம்பவில்லை நான்!

உன்னைப்பிரிந்து..
இத்தனை நாட்கள் ஆகிவிட்டதே
என்னை தேடவில்லையா உனக்கு?

நடக்கப்போவதில்லை என்றாலும்..
நப்பாசையில் கேட்கின்றேன்!

எல்லாமே கனவாகிவிட..
நாளைய அதிகாலையில்
”கண்ணா எழுந்திரு”
”கண்ணா எழுந்திரு” என்று
என்னை எழுப்பிவிட வருவாயா?

நீ குழந்தைகளுக்கு…
பாடம் சொல்லிக்கொடுக்கும் சப்தம்
என்
காதுகளில் வந்து கேட்காதா?


மறுநாள் காலை
நான் வேலைக்குப் போகும்பொழுது
உன் அறையில்...
நீ ஏதாவது
எழுதிக்கொண்டிருக்கமாட்டாயா?

மறுபடியும் இறைவன்
காலத்தை சுழற்றி
நீ இறந்த நாளின்
முந்தின நாளிலிருந்து..
எல்லாவற்றையும் அழித்திடமாட்டானா?

நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்


அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..
மனிதர்களே இல்லாத காடாய்..
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..
காட்சியளிக்கின்றது!

ஒருவனுக்கு
யாருமே இல்லையென்றால்..
அநாதை என்போம!;
ஆனால்
எங்கள் எல்லோருக்கும்
நீ ஒருவன் இல்லையெனினும்..
நாங்கள் அநாதைதான்!


நீ இப்பொழுது
இறந்திருக்க கூடாதோ என்று தோன்றுகிறது!
காலம்சென்று நீ இறந்தாலும்
அப்போதும்
இப்படித்தான் நினைத்திருப்பேன்!

இன்னமும் நான் நம்பிக்கொண்டிருக்கின்றேன்
நீ இறக்கவில்லை
எங்கோ ஓர் இடத்தில்
நீண்ட தூக்கம்…
தூங்கிகொண்டிருக்கின்றாய்
மறுபடியும் நீ விழித்துப்பார்க்கும்பொழுது
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்..


உன் குழந்தையாய் நானானதுபோல்
என் குழந்தையாய் நீயாவாயா?


நீ
உலகப்பயணம் முடித்துச் சென்ற
அந்த அதிகாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய இரவில்
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்


- ரசிகவ் ஞானியார்

26 comments:

Anonymous said...

கண்ணீர் விட்டேன். என் அப்பாவின் கடைசி நிமிடங்கள் கண்களில் வழிந்தன.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
சேவியர் said...
கண்ணீர் விட்டேன். என் அப்பாவின் கடைசி நிமிடங்கள் கண்களில் வழிந்தன.//


நன்றி சேவியர் என் கவிதைக்கு பாராட்டு தேவையில்லை இந்தக் கண்ணீர் போதும். தந்தையை இழந்த நண்பர்களுக்கெல்லாம் இந்தக்கவிதையின் மூலமாக ஆறுதல் அனுப்புகின்றேன்.

annaiyinarul said...

மிக அருமை என் அப்பவின் ஞாபகம் வந்தது ,,,,,,,அன்புடன் விசாலம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//annaiyinarul said...
மிக அருமை என் அப்பவின் ஞாபகம் வந்தது ,,,,,,,அன்புடன் விசாலம் //

நன்றி விசாலம்... தங்கள் அப்பாவுக்கும் இந்தக் கவிதை காணிக்கை

Ratnam said...

அன்பு நண்ப,
உங்கள் கவிதை 100% எனக்குப்போருந்தும் என்மணம் பட்ட அனைத்தையும் கவிதையாய் வடித்துள்ளீர்கள்,கசிந்தது என் மணம்,எனது தந்தையும் ஆசிரியரே.

சேவியர், நான் உட்பட பலரையும் கசிந்திட வைத்த உங்கள் படைப்புக்கு பாரட்டுக்கள்,நண்றி.

Anonymous said...

Dear Gnaniyar,
Simply superb.
Unknowingly tears rolled over my cheeks and completely got moved by your recent post.
Father is always our first Hero.
Go ahead
Congrats Father to be!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Sinnathamby said...
அன்பு நண்ப,
உங்கள் கவிதை 100% எனக்குப்போருந்தும் என்மணம் பட்ட அனைத்தையும் கவிதையாய் வடித்துள்ளீர்கள்,கசிந்தது என் மணம்,எனது தந்தையும் ஆசிரியரே.//



நன்றி சின்னத்தம்பி...தங்களுக்கு இந்தக் கவிதை மூலமாக என் ஆறுதல்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Dear Gnaniyar,
Simply superb.//


தங்கள் கண்களில் வழிந்த கண்ணீர் என் கவிதைக்கு ஓர் திரவ பாராட்டு நன்றி...

Anonymous said...

நிஐமான கவிதை..
அன்பான வரிகள்
முறையான சிந்தனை..
எனக்கும் என் தந்தை
பிரிவுதான் கண்ணில்
நின்றது..
நன்றி ஞானி..

நேசமுடன்..
-நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நிஐமான கவிதை..
அன்பான வரிகள்
முறையான சிந்தனை..
எனக்கும் என் தந்தை
பிரிவுதான் கண்ணில்
நின்றது..
நன்றி ஞானி..

நேசமுடன்..
-நித்தியா //


நன்றி நித்தியா

கண்மணி/kanmani said...

//யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்//

கடவுள் உனக்கு என்ன வேண்டும் என்றால் அந்த நிமிடங்களைத்தான் கேட்பேன்.போன் செய்ய நினைத்து வேலை காரணமாக ஒத்திப் போட்டு வந்த மணித்துளிகளில் காலன் முந்திவிட்டான். இறப்பைக்கூட என்னிடம் மறைத்து சீரியஸ் என்ற நினைப்போடு சென்று பேச முடியாது போன சோகம் இன்னமும் உறுத்துகிறது அப்பா உன்னோடு கொஞ்சமே கொஞ்சமாச்சும் பேச வேண்டும் முடியுமா?
நண்பரே அழவைத்த அருமையான கவிதை.

Anonymous said...

wow, Excellent..bro..
this is the best கவிதை I read n my life..
I felt my father's last Day..
Thanx..
Bye Bro..

From,
John

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கண்மணி said...

இறப்பைக்கூட என்னிடம் மறைத்து சீரியஸ் என்ற நினைப்போடு சென்று பேச முடியாது போன சோகம் இன்னமும் உறுத்துகிறது அப்பா உன்னோடு கொஞ்சமே கொஞ்சமாச்சும் பேச வேண்டும் முடியுமா?
நண்பரே அழவைத்த அருமையான கவிதை. //

நன்றி கண்மணி...அனைவருக்கும் இந்தக் கவிதை ஆறுதலாக இருந்தால் அதுவே இந்தக்கவிதைக்கு நீங்கள் தருகின்ற பரிசு..நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//wow, Excellent..bro..
this is the best கவிதை I read n my life..
I felt my father's last Day..
Thanx..
Bye Bro..

From,
John //

நன்றி ஜான் உங்கள் தந்தையின் கடைசி நாட்களின் சோகத்தை இந்தக் கவிதை வரிகள் சமாதானப்படுத்தட்டும்

Anonymous said...

தொண்டை அடைத்து கண்கள் குளமாகும் தருணம் யாரும் பாராமல் துடைத்து கொள்கிறேன்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனியவள் புனிதா said...
தொண்டை அடைத்து கண்கள் குளமாகும் தருணம் யாரும் பாராமல் துடைத்து கொள்கிறேன்... //


என் கவிதையின் மீது விழுந்த பூக்களாக உங்கள் கண்ணீரைக் கருதுகின்றேன். நன்றி புனிதா

Anonymous said...

கறுப்புக் கண்ணாடிக்கு
பின்புறம் அமர்ந்து பார்ப்பவர்கள் போல
எனக்குத் தெரியாமலையே
எங்கிருந்தோ என்னை
நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்--- Naan kooda en thanthaiyai patri appadi thaan nenithu kondu irukkiren----- ammu

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
கறுப்புக் கண்ணாடிக்கு
பின்புறம் அமர்ந்து பார்ப்பவர்கள் போல
எனக்குத் தெரியாமலையே
எங்கிருந்தோ என்னை
நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்--- Naan kooda en thanthaiyai patri appadi thaan nenithu kondu irukkiren----- ammu //



உங்க அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டுமாக..நன்றி அம்மு

Anonymous said...

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்

- Kangal kalangiyathu...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்

- Kangal kalangiyathu...//

நான் கவிதை எழுதிக் கொடுத்த நண்பனும் இந்த வரியினில் மிகவும் கலங்கிப்போனான்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஞானியார், கவிதை ரொம்ப நல்லாருக்கு.. அப்பாவை நினைக்க வைக்கும் உருக்கமான கவிதை.

Anonymous said...

appa Thirumba varuvirgala

Unknown said...

Great Friend.could not controlley the emotion.tears rolled down..

Every day I also asked the God give me the previous night let me speak to DAD.

I also feel that he sits behind the Glass and watches us

Really awesome

It's for everyone who lost dad and longing for.......

Thanks friend we never spoke after we left the college in 1999

But,

I don't miss your posts on DAD

அருள்மொழிவர்மன் said...

நெகிழ்ந்து விட்டேன்...வலி மிகுந்த வரிகள்.
வாசகனின் விழிநீர் சொல்லும் இக்கவிதையின் சிறப்பை,...அருமை.

Unknown said...

எட்டு வருடங்கள் கடந்து விட்டது என் அப்பா என்னை விட்டு பிரிந்து......
யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்
இதைப் படிக்கும் போது என் கண்கள் குளமாகி விட்டது

anbuthamizhan said...

என் தந்தையின் ஞாபகத்தில் இருவரி கவிதை எழுதினேன்

உன் முகம் பார்த்து நாள் பல
ஆனது வா என் முன்னே வா
அருகில் இருக்கிறாய் தொடமுயன்றால் மறைகிறாய் என்மீது என்ன கோவம் ஒருமுறை
உன்னை கட்டி அணைக்கா ஆசை வா அப்பா வா 😭😭😭😭😭😭😭😭

தேன் கூடு