Saturday, August 22, 2009

மறக்க முடியாத ஆகஸ்ட் மாதங்கள்




2005 - ஆகஸ்ட் மாதம்
துபாயில் இருந்து இந்தியா வந்திருந்த நாட்களில் என் கல்லூரி நண்பர்களைச் சந்திக்கலாமென சென்னைக்குச் சென்றேன்.

நான் கல்லூரி முடித்தவுடன் அப்பொழுதுள்ள ஐடி துறையின் வீழ்ச்சியால் எனது
உறவினர் அனுப்பிய விசாவில் துபாயில் ஏதாவது வேலைக்குப் போகலாமென்று சென்றுவிட்டேன். ஆனால் இங்கு என்னுடைய் சமகாலத் தோழர்களுக்கு பல போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றது.

எப்பொழுதுமே கேலியான பேச்சுக்கள், ஜாலியான நாட்களாகவே கடந்து
வந்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழையும்பொழுது ஒவ்வொருவரும் நிகழ்த்திய ஆரம்பகாலப் போராட்டங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் சில சமயம் வலியைக் கொடுக்கும்.

கல்லூரியின் ஒவ்வொரு பீரியடின் இடைவெளியும் கேண்டீன், கிண்டல், வெட்டிப்பேச்சு என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்குள்.
அப்படி உள்ள நண்பர்கள் இப்பொழுது எப்படியிருக்கின்றார்கள் என்று அறியவும்
அவர்களையெல்லாம் சந்தித்து மனம் விட்டுப் பேசலாம் என்று ஆவலுடன் சென்றுகொண்டிருந்தேன்.
எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் முகவரி கிடைத்தது. என்னுடைய எம்சிஏ நண்பன் அவன். அவன் அயனாவரம் பக்கம் ஒருஅறையில் தங்கியிருந்தான். ஏற்கனவே சென்னை பரிச்சயம் என்பதால் தேடிப் பிடிப்பதில் சிரமமில்லை.

நான் சென்றபொழுதே கவனித்துவிட்டேன் அவன் இருந்த சூழல் அவனுக்கு
இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்த்தியது. அவன் அறை நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். தனியாக இருக்கின்ற அந்த சூழல் வேறு அவனை மிகவும் பரிதாபமாக காட்டியது எனக்கு.

எனக்கு அவனுடைய நிலைமை மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மிகவும்
வலுக்கட்டாயமாக தனக்குள் சந்தோஷத்தை வரவைழைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். "வேலை இன்னும் கிடைக்கலைடா பரவாயில்லை சீக்கிரம் கிடைச்சிறும்" என்று அவன் அலட்சியமாக சொன்னாலும் அவனுடைய நிலைமையை என்னால் யூகிக்க முடிந்தது.

நிறைய பேசினோம். கல்லூரி நாட்களில் பேசிய பேச்சுக்களை விடவும்
இப்பொழுது அவனுடை பேச்சில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தது.

பழைய நண்பர்கள் யார் யார் எங்கு எங்கு வேலை பார்க்கின்றார்கள் எத்தனை பேர்
செட்டில் ஆகியிருக்கின்றார்கள் என்று எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

நமக்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் கல்லூயில் படித்த பழைய நண்பர்களை
எவரேனும் சந்தித்து பேசினால் அந்த சோகம் கொஞ்சம் குறைந்தாற்போன்று தோன்றும்.

அவனுக்கும் அப்படித்தான் அவனுடைய சூழலில் இருந்து அவனை மீட்டுக்
கொண்டு போய் கல்லூரி நாட்களில் சென்று விட்டேன்.

பின் நான் விடைபெறுகின்ற நேரம் வந்தது.
"சாப்பிட்டுவிட்டு போடா" என்று அவன் அழைத்த விதத்தில் புரிந்துகொண்டேன் அவனின் காசில்லாதநிலையை.

பின்
பக்கத்தில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு என்னுடன் பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்தான். எனக்குண்டான பேருந்து வந்து கொண்டிருக்கின்றது.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இறுதியான கைகுலுக்கலில் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்.
பேருந்தின் இடப்பெயர்ச்சியிலும் எனக்குத் தெளிவாய்த் தெரிந்தது நான் கையில் திணித்த பணத்தை பார்த்துக்கொண்டே விழுந்த அவனது கண்ணீர்த்துளி.


2009 - ஆகஸ்ட் மாதம்


இப்பொழுது இங்கு பெங்களுரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்
கொண்டிருக்கின்றேன். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

இங்குள்ள இந்த றிறுவனத்தில் உள்ள வெப் டிசைனராக பணிபுரியும் ராஜ் என்ற
எனது நண்பர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். 3 வருடங்களாக இந்த கம்பெனியில் இருக்கின்றார். அவர் மட்டுமே தமிழ்நாட்டுக்காரர்.

வழக்கமாக மதிய உணவுக்கு பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரென்டுக்கு
செல்வோம். தினமும் நான் ஒருநாள், அவர் ஒருநாள் என்று சாப்பிட்டதிற்கு பணம் கொடுத்துகொண்டிருப்போம்.

அந்த உணவு இடைவேளையில் அவருடைய காதல் குடும்ப பிரச்சனைகள்
எல்லாவற்றையும் உரிமையாக பகிர்ந்து கொள்வார். நானும் அவரிடம் எனது விசயங்களை பகிர்ந்து கொள்வேன்.

கடந்த இரண்டு மாதங்களாக கம்பெனியில் salary கொடுக்காமல் இழுத்தடித்துக்
கொண்டிருக்கின்றார்கள். வாடகை , இன்டர்நெட் பில், போக்குவரத்துச் செலவு, உணவு, என்று இரண்டு மாதங்களாக சமாளித்துக்கொண்டிருந்தேன். நிறுவனம் மிகவும் அலட்சியமாக இப்பொழுது எங்களால் தரமுடியாது என்று தன்னுடைய இயலாமையை சொல்லி கைவிரிக்கின்றது
கம்பெனியின் நிலை சரியில்லாததால் நானும் வேறு இடத்தில் வேலை தேட
ஆரம்பித்தேன். சென்ற வாரம் புதிய வேலையை உறுதி செய்தபின் இங்கு ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் நேற்றுதான் அந்த ராஜ் என்ற நண்பரையும் அழைத்து அவரை
வேலையில் இருந்து தூக்கிவிட்டதாக சொன்னார்கள்
3 வருடம் வேலை பார்த்த அவரை 5 நிமிடத்தில் வேலையை விட்டு தூக்கி
விட்டதாக சொன்னதால் அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து விட்டார். தனது நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து வேறு வேலை தேடலில் ஆரம்பித்துவிட்டார்.

நேற்றும் பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரென்டுக்கு சென்றோம். புலம்பிக்
கொண்டே இருந்தார்.
"இப்படி பண்ணி விட்டார்களே இந்த கம்பெனிக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருப்பேன்..இப்படி 5 நிமிடத்தில் போகச்சொல்லிவிட்டார்களே...1 மாதம் அவகாசமாவது கொடுத்திருக்கலாம் " என்று

நானும் அவரிடம்,
" சம்பளம் தராமல் இன்னமும் இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றார்களே - செலவுக்கு கையில் காசில்லை ஏன் நிலைமையை புரிந்து கொள்ளமாட்டேன்கிறார்கள் ? " என்று புலம்பிக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டபிறகு எப்பொழுதும் பணம் கொடுக்கும் பொழுது ஒருவருக்கொருவர்
கொடுப்பதில் முந்திக்கொள்வோம். இன்று இருவருமே பணம் கொடுப்பதில் கொஞ்சம் தயங்கி தயங்கி இருந்தோம். நிலைமையை நானும் அவரும் புரிந்து கொண்டு செலவினை பகிர்ந்து கொண்டோம்.

நேற்றுதான் எனக்கும் கம்பெனியின் கடைசி நாள். எல்லாரிடமும் விடைபெற்று
விட்டு வெளியே வந்தேன். பேருந்து நிறுத்தம் வரை ராஜ் வந்து விட வந்தார்.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இறுதியான கைகுலுக்கலில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்.
பேருந்தின் இடப்பெயர்ச்சியிலும் எனக்குத் தெளிவாய்த் தெரிந்தது என் கையில் அவர் திணித்த பணத்தின் மீது தெரிந்த எனது சென்னை நண்பணின் முகம்.
- ரசிகவ் ஞானியார்


தேன் கூடு