Thursday, December 27, 2007

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் அடிஇடம் : லால்பாக் வெஸ்ட் அருகே உள்ள ஆர்.வி ரோடு.

இந்தச் சாலையில் நான் வழக்கமாக உணவருந்தும் அந்த ரெஸ்டாரெண்ட் அருகே தினமும் காலையில் மீட்டிங் ஆரம்பித்துவிடும். மேனேஜர் ஒருவருக்காக மற்ற எக்ஸிகியுட்டிகள் காத்திருப்பர். மேனேஜர் வந்தவுடன் பரபரப்பாக இயங்கும் அந்தப்பகுதி. வாடகை இல்லை, மின்சாரம் இல்லை . சுற்றி நின்று மீட்டிங் நடைபெறும்.

தினமும் அவர்களது ரிப்போர்ட்கள் அங்கையே பரிமாறப்படும். கிட்டத்தட்ட ஒரு அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அந்த இடத்தில் நடைபெறும். நடமாடும் அலுவலகம் இது.

ன்றும் வழக்கம்போல அந்த நடமாடும் அலுவலகத்தை கவனிக்கின்றபொழுது அவர்களில் மேனேஜர் ஒருவர் ஒரு எக்ஸிகியுட்டியை கன்னத்தில் அடிக்க ஆரம்பிக்கின்றார். அந்த நபரும் தலையை குனிந்தபடியே மௌனமாக இருக்கின்றார்.

ந்த எதிர்தாக்குதலும் இல்லாமல் அவர் அடிக்க அடிக்க மௌனமாக இருக்கின்றார் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டவேண்டியதூன் ஆனால் மறுகன்னத்திலும் அடித்தால்..? திருப்பி கொடுக்க வேண்டியதுதான்..? அவர் திருப்பிக் கொடுத்திருந்தால் அடித்த நபர் கொஞ்சம் நிலை குலைந்திருக்ககூடும். ஆனால் அடிவாங்கிய அவருடைய நிலை என்னவோ தெரியவில்லை..?

ட என்னதான் தவறு செய்தாலும் இப்படியா நடுரோட்டில் வைத்து அடிப்பது.? அடிவாங்கிய அந்த நபருக்கு அவரது வீட்டில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கும். இங்கு வந்து அடிவாங்கிய விசயம் அவரது வீட்டாருக்குத் தெரிந்தால் எந்த அளவுக்கு வருத்தப்படுவார்கள். வீட்டில் உள்ளவர்களை விடுங்கள் அந்த தனிமனிதனின் உள்ளம் எந்த அளவுக்கு சங்கடப்படும்.

பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய வைக்கின்றது பாருங்களேன். அந்த நிகழ்வு மனதை ரொம்பவும் சங்கடப்படுத்திவிட்டது.

-- ரசிகவ் ஞானியார்

Sunday, December 16, 2007

இட்லி வாங்கினால் பைனாகுலர் இலவசம்ங்க ஊர்ல நான் இட்லி சாப்பிட்டுறுக்கேன். ஒரு தட்டில் நாலைந்து இட்லியை வைத்து பின் சாம்பார்க்கென்று ஒரு கிண்ணம் சட்னிக்கென்று ஒரு கிண்ணம். தேவைக்கேற்ப ஊற்றி மெல்ல பிசைந்து ருசித்துச் சாப்பிடுவேன்.

ங்க பெங்களுர்ல வந்து இட்லியை தேட வேண்டியதாப் போச்சுங்க. "இட்லி வாங்கினால் ஒரு பைனாகுலர் இலவசம்னு" ஹோட்டலில் அறிவிப்பு கொடுக்கணும்.

மாங்க இட்லியை சாம்பாருக்குள் தேடித்தான் கண்டுபிடிக்கணும். பின்ன நீங்களே பாருங்களேன்.


"இருக்கிறது ஆனா இல்லை..இல்லை ஆனால்
இருக்கிறது
"


ப்படி இட்லியை சாம்பாருக்குள் மூழ்க வச்சி கொடுத்தாங்கன்னா என்ன பண்றது? இதப் பார்க்கும்பொழுது ஆத்து தண்ணீர்ல யாரோ உயிருக்குப் போராடுகிற மாதிரி இருக்கு. இட்லியை விடவும் சாம்பாரைக் குடித்தே பசியைப் போக்கிடலாம் போல இருக்கு.கீழுள்ள இந்தப் படம் இட்லி சாப்பிட்ட பிறகு உள்ள நிலை. பாருங்க இரண்டும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது.அதனால பெங்களுரு வந்து இட்லி சாப்பிட விரும்பும் தமிழர்கள் இட்லியை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் கொடுக்க வேண்டாம். தேடுங்கள் கிடைக்கும்

- ரசிகவ் ஞானியார்

Monday, December 10, 2007

கல்லூரி 1996-1999

இன்று எனது கல்லூரியில் படித்த நண்பர் காஜாவுடன் கல்லூரிக்குச் சென்று வந்தேன். பழைய ஞாபகங்கள் எல்லாம் அப்படியே எங்களை விழுங்கிக் கொண்டது. ம் கல்லூரி திரைப்படத்தைதான் சொல்கின்றேன்.

படம் பார்த்த 3 மணி நேரமும் எங்கள் வகுப்பறைக்குள் நாங்கள் அமர்ந்திருந்ததையே ஞாபகப்படுத்தியது. தியேட்டர் சீட் எங்கள் வகுப்பறைப் பெஞ்சுகளைப்போலவே காட்சியளித்தது.

இந்தத் திரைப்படம் நான் படித்த கல்லூரியையே ஞாபகப்படுத்தியதற்கு முக்கிய காரணம் என்னுடன் படம் பார்க்க வந்திருந்த நண்பர் காஜாவும் என்னுடன் கல்லூரியில் படித்தவரே. அது மட்டுமல்ல என்னுடைய கல்லூரியில் படித்த எனது நெருங்கி நண்பர் ஒருவரும் இந்தத் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றுவதும் எனது கல்லூரிக் காலத்தை அப்படியே எனது நெஞ்சுக்குள் கிரகித்துக் கொண்டது.

எனது கல்லூரி நாட்களில் பேச்சுப் போட்டி கவிதைப் போட்டிகளில் என்னுடன் கலந்து கொண்ட நண்பர் சுப்பையா என்பவர் இந்தப் படத்தி;ல் நட்பா? காதலா ? என்று விசுவின் அரட்டை அரங்கத்தில் கல்லூரிமாணவியிடம் நட்பாகவே பழக முடியாது அது கண்டிப்பாக காதலில் சென்றுதான் முடியும் என்று சவால் விடுகின்ற ஒரு காட்சியில் தோன்றியிருப்பார்.

இந்த ஒத்தச் சம்பவங்கள்தான் என்னை எனது கல்லூரிக்கு அழைத்துச் சென்றது. படம் பார்த்து வந்ததில் இருந்து நெஞ்சம் பாரத்தில் அழுத்தப்பட்டிருந்தது. அதனை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் எனக்கு ஆறுதல் கிடைக்காது என்பதால் பதிவில் பதிகின்றேன்.

இந்தப் படத்திற்கு நான் வைத்த பெயர் 1996 – 1999. எனது கல்லூரிக் காலக்கட்டம் இது.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் நான் நண்பர் காஜாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். டேய் இங்க பாரு இது மாதிரி நாமளும் பண்ணியிருக்கோம்ல..இது மாதிரி பேருந்தில் தொங்கிக்கொண்டே சென்றோம்..இதுபோன்று டிக்கெட் எடுக்காமல் பயணித்தோம். .என்று இதுமாதிரி சொல்லிக்கொண்டேயிருந்தோம்

நான் எந்தப் படத்திலும் பக்கத்துச் சீட்டுக்காரர் திரும்பி வித்தியாசமாய் பார்க்குமளவிற்கு சிரித்ததில்லை. ஆனால் இந்தப் படத்தில் வரும் சின்னச் சின்ன நகைச்சுவைக்கெல்லாம் சிரித்ததற்கு காரணம் நான் இந்தப் படத்தில் எனது கல்லூரியையும் எனது கல்லூரியில் இந்தப் படத்தையும் அனுபவித்திருக்கின்றேன்.

முதல் நாள் கல்லூரி சென்று எனது பிஎஸ்ஸி மேத்ஸ் வகுப்பறையை தேடித் தேடி நான் அலைந்ததைப்போலவே இந்தப்படத்திலும் காட்சிகள் அமைந்திருந்தது. எவ்வளவு உன்னிப்பாய் கவனித்திருக்கின்றார்கள் என்று எனக்கு ஆச்சர்யத்தையே தந்தது.

ஆங்கில வகுப்பிற்குப் பயந்து ஒரு மாணவன்; மற்றவர்களை சினிமாவிற்கு அழைப்பதும் பின் யாரும் வரவில்லையென்றதும் அவன் மட்டும் செல்லுகின்ற தருணத்தில் ஆசிரியர் உள்ளே வர அப்படியே அமுங்கிப்போய் பெஞ்சில் அமர்வதும் எனக்கு எனது கல்லூரி ரமேஷை ஞாபகப்படுத்தியது.

என் கல்லூரியில் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆசிரியர் திரும்பி நின்று ஏதோ எழுதிக்கொண்டிருக்கும்பொழுது ரமேஷ்; தைரியமாக வகுப்பறையை விட்டு ஓடிச்செல்ல யாரோ ஓடுகின்ற சப்தம் கேட்டு அந்த தமிழ் ஆசிரியர் திரும்பி பார்த்து வகுப்பறை விட்டு வெளியே வந்து பார்த்த தருணம் இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.

கல்லூரி நண்பர்கள் பேருந்தில் வரும்பொழுது டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது பேருந்தினில் இடம் இருந்தும் படிக்கட்டுகளில் தொங்குவது எல்லாம் மற்ற படங்களிலும் பார்த்த காட்சிகள்தான் எனினும் இந்தப் படத்தில் அந்தக்காட்சிகள் மிக யதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றது. எந்தக் காட்சியும் யதார்த்தத்தை மீறி எடுக்கப்படவில்லை.

எனது கல்லூரிப் பேருந்திலும் அப்படித்தான். முதல் ஆண்டு மாணவர்கள் கண்டிப்பாய் டிக்கெட் எடுத்திடுவார்கள். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் மனசாட்சிக்குப் பயந்தவர்கள் மட்டும் எடுப்பார்கள். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நிச்சயமாய் எடுக்கவே மாட்டார்கள்.

ஒருநாள் பேருந்தில் கண்டக்டர் வந்து மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரிடம் வந்து டிக்கெட் கேட்க அந்த மாணவரோ ஏதோ கண்டக்டர் தன்னிடம் கடன் கேட்டது போல இல்லை இல்லை எடுக்க முடியாது என்று அலட்சியமாக சொல்வதைக் கண்டு அடக்கமுடியாமல் சிரித்திருக்கின்றேன்.

அது மட்டுமல்ல முதல் ஆண்டு மாணவர்கள் பேருந்தில் தொங்கிக்கொண்டு வரமுடியாது. ஆனால் சீனியர் மாணவர்களுடன் பழகிவிட்டால் போதும் பேருந்தின் கூரைகளில் கூட பயணித்து வரலாம்.

பேருந்து கிளம்பிய திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சதக்கத்துல்லா கல்லூரி வரையிலும் பேருந்தின் இரண்டு பக்கமும் டம் டம் டம் என்று நோட்டுப்புத்தகத்தினாலம் டிபன் பாக்ஸினாலும் கிடைத்த சிறிய குச்சிகளினாலும் கைகளினாலும் தாளம் போட்டுக்கொண்டே செல்வோம். பேருந்தில் பயணிப்பதுபோலவே தெரியாது ஏதோ மாப்பிள்ளை ஊர்வலத்தில் மேள தாளங்களுடன் செல்வது போல தித்திப்பாய் இருக்கும்.

அதே காட்சிகள் இந்தப் படத்திலும் எந்த வித சினிமாத்தனங்களும் இல்லாமல் காட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் பேருந்துக்குள் பாட்டு பாடிக்கொண்டே வருவது பேருந்தில் வருகின்ற மற்ற பயணிகளை கிண்டலடிப்பது என்று படு யதார்த்தங்கள்.

ஒவ்வொருவராய் வகுப்பறையின் முன்னால் சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர் கூற ஒரு மாணவன் தயங்கி தயங்கி பேசுவதற்கு பயந்து வெட்கப்பட்டு கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு பேசியதைப் பார்க்கும்பொழுது எனக்கு என்னுடைய முதல் மேடை அனுபவத்தை ஞாபகப்படுத்தியது.

எனது கல்லூரியில் இருந்து திருநெல்வேலி சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு முதன் முதலாய் கவிதை பாட மேடை ஏறியபொழுது எனக்கு அவ்வளவு கூட்டத்தை பார்த்து திணறியது. கைக்குட்டையால் நெற்றியில் வைத்துக்கொண்டே கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன். இந்தக் காட்சி எனக்கு அந்தச் சம்பவத்தையே ஞாபகப்படுத்தியது.

நண்பர்களுக்குள் வருகின்ற சின்னச் சின்ன கோபங்கள் - கலை விழாக்களில் அவர்கள் அடிக்கின்ற கூத்துக்கள் - வகுப்பறையில் கேலி கிண்டல்கள் - கல்விச் சுற்றுலா எல்லாம் மிகவம் ரசிக்கும்படியாக இருந்தது.

கதாநாயகனுக்குண்டான எந்த விதமான மசாலா அறிமுகமில்லாமல் சாதாரணமாக கதாநாயகன் பேருந்தில் வந்து ஏறுவது போல அறிமுகப்படுத்தியது- அதுபோல கதாநாயகி சிரித்துக் கொண்டே ஊட்டி பனியில் ஓடி வருவது இல்லையெனில் அரைகுறை ஆடையில் காரில் இருந்து இறங்குவது போன்றவை இல்லாமல் சாதாரணமாக வகுப்பறைக்குள் அமர்ந்திருப்பது என்று ஆரம்பமே யதார்த்தம்.

இந்தப் படத்தில் காட்டியிருக்கும் காதல் காட்சிகள் வேறு எந்தப் படத்திலும் இருந்திருக்காது. ஏனெனில் இந்தப்படத்தில் காதல் இல்லை ஆனால் காதல் இருக்கும்.

இவர்கள் கூட்டத்தில் உள்ள ஒரு தோழி கதாநாயகி ஷோபனாவிடம் சென்று முத்துவிடம் நீ அதிகமாக பழகுவது மற்றவர்களுக்கு தவறாக படுவது போல தெரிகின்றது ஆகவே அவ்வாறு நடந்து கொள்ளவேண்டாம் என்று நாசூக்காக நிஜ சம்பவத்தில் எப்படி சொல்லியிருக்கவேண்டுமோ அவ்வாறு சொல்ல என்ன வேடிக்கை என்றால் அந்தத் தோழி கண்டிக்கும் வரை அவர்களுக்குள் காதல் இருந்திருக்காது அதன்பிறகுதான் இருவருக்குள்ளும் காதல் பூக்க ஆரம்பிக்கும்.

இருவருக்கும் கண்களில் தெரிகின்ற ஏக்கங்கள் உதடுகளில் காட்டுகின்ற சின்னச் சின்ன புன்னகைகள் நமக்குள்ளும் காதலை ஊற்றெடுக்க வைக்கின்றது. இருவருமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதாக சொல்லியிருக்கவே மாட்டார்கள். ஆனால் இருவருக்குள்ளும் மெல்லிய காதல். இவர்களுக்குள் காதல் தோன்றும் காட்சிகள் எனக்கு எதைஎதையோ ஞாபகப்படுத்தியது.

காதல் வந்தவுடன் முத்துவின் கால்களின் தடுமாற்றங்கள் - நேரம் தவறும் அலட்சியம் - ஷோபனாவின் கண்களைப் பாரக்க முடியாமல் தயங்குதல் - ஒலிப்பெருக்கியில் ஒலித்த பாடல் வரிகளில்; தங்களது காதலையும் ஒப்பிடுதல் என்று எல்லாமே கவித்துவம்.

படத்தில் வருகின்ற முத்துவும் ஷோபனாவும் எனது கல்லூரியிலும் உண்டு. ஆனால் எனது கல்லூரி முத்துவும் ஷோபனாவும் இப்பொழுது திருமணம் செய்து கொண்டார்கள்.

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ காட்சிகள் ஒவ்வொரு காட்சிகளுக்கும் எனது கல்லூரி சம்பவத்தையே நான் உதாரணமாக கூறலாம். அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தால் பதிவுக்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியாது. ஆகவே தொடரும் கல்லூரி ஞாபகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றேன் முற்றுப்பெறாத நினைவுகளுடனையே..

பின் குறிப்பு

காதல் என்ற வெற்றிப்படம் தந்துவிட்டதால் பாலாஜி சக்திவேலு படத்தினை பார்க்க மக்கள் பெரிய எதிர்பார்ப்புடனையே வந்திருந்தார்கள். அதனை அவர் மிகச்சிறப்பாகச் செய்திருக்கின்றார். யாரும் எதிர்பாரக்காத க்ளைமேக்ஸ் காதல் படம் போலவே.

நீங்கள் இந்தப் படம் பார்த்தால் உங்களுக்கும் உங்கள் கல்லூரி சம்பவத்தை காட்சிகள் தோற்றுவித்தால் பரிமாறிக் கொள்ளுங்கள்.


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு