Saturday, May 31, 2008

கல்லூரியில் பறந்த பறக்கும் தட்டு

சென்ற வருடம் கல்லூரிக் கால நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு செல்ல நேர்ந்தது. நானும் நண்பர் காஜாவும் சென்றிருந்தோம். கடைசி இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டு கல்யாணச் சடங்குகளை ரசிக்க ஆரம்பித்தோம்.

அப்பொழுது தூரத்திலிருந்து ஒருவன் எங்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். நானும் அவனை கவனித்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து எங்களை நோக்கி வந்தான்.

பக்கத்தில் வந்து "டேய் என்னைத் தெரியலையடா நான் ஆவுடையப்பன்டா..பிஎஸ்ஸி க்ளாஸ்மேட்" என்க அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. படிக்கின்ற காலத்தில் உள்ளதை விட, இப்பொழுது நன்கு முதிர்ச்சியடைந்து குண்டாகி இருந்ததால் அடையாளமே தெரியவில்லை.

"டேய் நான் ரொம்ப நேரமா கவனிச்சிக்கிட்டு இருக்கேன்..உங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று. அந்த அளவுக்கு ஆள் மாறிப் போய்டீங்கடா" என்றான்.

"ஆமாடா அப்ப அப்பாவியாக இருந்தோம் இப்ப அப்பாக்களாக இருக்கின்றோம் நீயும்தாண்டா ,ஆள் ரொம்பவே மாறிப்போய்ட்ட..இங்க உட்காருடா" என்று அவனுக்கு ஒரு இருக்கைளை ஒதுக்கி கொடுத்தோம்.

வழக்கமாய் பழைய கல்லூரி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது என்னவெல்லாம் பேசிக்கொள்வோமோ அதுவெல்லாம் பேசிக்கொண்டோம்.

அவன் இப்ப என்ன பண்றான்..?

இவன் அமெரிக்கா போய்ட்டான்.

ஒருத்தன் கத்தாரில் இருக்கான்..

இவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..

படிக்காம சுத்திக்கிட்டு இருந்த ஒருத்தன் நம்ம காலேஜ்லயே வாத்தியாராகிவிட்டான்..

அரியர்ஸ் போட்ட அவன் இப்ப தலைமையாசிரியரா இருக்கான்.

"நம்ம கூட படிச்ச பொண்ணு இப்ப பி எச் டி முடிச்சிட்டு புத்தகம் எழுதுறா" என்று ஒவ்வொருத்தரையும் அலசிக்கொண்டிருக்க இன்னொரு நண்பன் டேனி மண்டபத்திற்குள் நுழைந்தான்.

"டேய் ஆயுசு நூறுடா உனக்கு" என்று அவனையும் அழைத்து கும்மியடிக்க ஆரம்பித்தோம்.

"இப்ப அப்பா காலேஜ் அம்மா காலேஜா மாறிட்டுடா" என்று வருத்தத்தோடு கூறினான் டேனி.

"ஆமாண்டா நம்ம படிக்கும்பொழுது பி எஸ் ஸி 40 பசங்களுக்கு 8 பொண்ணுங்க இருந்தாங்க.. இப்ப 40 பொண்ணுங்களுக்கு 3 பசங்கடா.. பாவம் பசங்ச அமைதியா வந்துட்டு போகவேண்டியதுதான்..சத்தம் காட்ட முடியாது" என்றேன்..

"ஆமாடா இப்ப எலக்ஷன்ல கூட சேர்மன் பதவி பையன்களுக்கும் செகரெட்டரி பதவி பொண்ணுங்களுக்கும் கொடுத்திருக்குடா" என்றான் டேனி

அப்படியே பேசிக்கொண்டிருந்தோம். இந்த பேச்சின் சுவாரசியத்தில் திருமண விழாவே மறந்து விட்டது. எல்லாரும் மணமக்களை ஆசிர்வதிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

நாங்களும் மெல்ல வரிசையில் நுழைந்து பரிசுப் பொருளினை கொடுத்துவிட்டு நானும் காஜாவும் மாப்பிள்ளையின் கையில் 1 ரூ நாணயத்தையும் கொடுத்தோம். மேடை என்று பார்க்காமல் சிரித்துவிட்டான் மாப்பிள்ளை பய.

"டேய் என்னடா 1 ரூ?" என்று மாப்பிள்ளை பவ்யமாய் காதினுள் கிசுகிசுக்க, நானோ, "சிவாஜி படத்துல ரஜினி 1 ரூபாய்லதான் பெரிய ஆளா வருவாராம்டா..அதனால நீயும் பெரிய கோடிசுவரனாவேடா" என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினோம்.

மறுபடியும் கும்மியடிக்க ஆரம்பித்தோம். நினைவுகள் கல்லூரியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. "கல்லூரியின் ஆரம்பத்தில் பெஞ்சை உடைச்சிட்டு பைன் கட்டினோமோ ஞாபகம் இருக்கிறதா?" என்று ஆவுடையப்பன் ஆரம்பிக்க ,

"அடப்பாவிகளா அதுல என்னய மாட்டிவிடப்பார்த்தீங்களே ? " டேனி சிரிக்க ஆரம்பித்தான்., மறுபடியும் நினைவுகள் பெஞ்சை உடைத்த நாட்களுக்கு சென்றது

நினைவுச் சக்கரம் மெல்ல சுழல்கின்றது டொய்ங்..டொய்ங்..டொய்ங்... ( ஃப்ளாஷ் பேக் போகப் போறேன்பா.. )கல்லூரி ஆரம்பநாட்கள் அது. ஒரு மதிய இடைவேளியில் எல்லாரும் சத்தம் போட்டுக்கொண்டு கிண்டலடித்துக்கொண்டு இருந்தோம். அப்பொழுது குஷியில் முன் வரிசையில் உள்ள பெஞ்சை வேகமாக ஆட்ட, டேனியோ பெஞ்சின் மீது ஏறி ஒரு குதி குதித்தான். அவ்வளவுதான் க்றீச்.. பெஞ்சு உடைந்து போய்விட்டது.

உடனே அப்பொழுது வந்த ராஜ்குமார் உடைந்த பகுதியினை எடுத்து மாடியிலிருந்து கீழே வீசினான்.

இப்பொழுது கேமிரா கீழ் தளத்திற்கு செல்கின்றது. பிகாம் ஆசிரியர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருக்க உடைந்த பெஞ்சின் துண்டு ஒன்று கீழ் வருவதைப் பார்த்தார். ஒருவேளை பறக்கும் தட்டோ? என்ற ஆச்சர்யத்தில் அவர் கவனமாய் உற்றுப் பார்க்க அந்தத் துண்டு எங்கள் வகுப்பறை பகுதியிலிருந்து வருகிறதை கவனித்தார். உடனே கோபப்பட்டு பிரின்ஸ்பாலிடம் சென்று புகார் கொடுக்க எங்கள் வகுப்பு மாணவர்கள் ,மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

உடைத்தவன் யாரென்று பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்தாலும் யாருமே யாரையுமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை. அதாங்க நட்பு....

உடனே அனைத்து பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. எங்கள் வீட்டிற்கும் அந்தக் கடிதம் வந்தது. இதோ அந்தக் கடிதம்..


Photo Sharing and Video Hosting at Photobucket

நான் எனது தந்தையின் நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றிருந்தேன். ஒரு சிலர் வாடகைக்கு அப்பாக்களையும் மாமாக்களையும் பிடித்துக் கொண்டு வந்தனர்.

ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு சுற்றி நின்று ஆளாளுக்கு பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதில் ஒரு மாணவன் மயங்கியே விழுந்து விட்டான்.

ஒரு மாணவன் மயங்கி விழுந்து விட்டான் என்ற செய்தி உள்ளே செல்வதற்காக காத்துக்கொண்டிருந்த எங்கள் காதுகளுக்கு தெரிய வர, எல்லாருக்கும் தொடை நடுக்க ஆரம்பித்தது. வந்திருந்த வாடகை அப்பாக்களும் ,மாமாக்களும் சிலர் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். அவர்களை கெஞ்சிக்கொண்டு நமது சில மாணவர்கள். ஒரே ஜாலியா இருந்தது போங்க..

நான் உள்ளே அழைக்கப்பட்டேன். முதல்வர் - துணை முதல்வர் - செயலாளர் - பொருளாளர் - என்று முக்கால்வாசி ஆசிரியர்கள் கொலைவெறியோடு அமர்ந்திருந்தனர். "அடப்பாவிகளா தனியா வர்ற பசுவை குதற இத்தனை சிங்கங்களா..?"

நான் உள்ளே சென்றவுடனையே, எனது கணித ஆசிரியர் ஒருவர் அன்பாய் அழைத்தார்.

"தம்பி ஞானியார் இங்கே வாங்க.."

"நல்ல பையன் சார்...இவன் பொய் சொல்ல மாட்டான்" என்று என்மேல் பெரிய ஐஸ்கட்டியை வைத்துவிட்டு பக்கத்தில் அழைத்தார்.

நானும் மெதுவாய் சென்றேன். எனது காதினுள் மெதுவாக "நீயாவது சொல்லுப்பா யார் பெஞ்சை உடைச்சா..?"

நானும் மெதுவாக அவரது பாணியில் காதுக்குள், "எனக்குத் தெரியாது சார்..நான் அந்த நேரத்துல அங்க இல்லை..சாப்பிட வெளியே போய்ட்டேன்.."

உடனே சத்தத்தை அதிகப்படுத்தினார். "எல்லாருமே இப்படியே சொன்னா அப்ப யார்தான்பா அந்த நேரத்துல இருந்தா..பெஞ்சு தானா பறந்துச்சா.."

அவர் சத்தம் அதிகப்படுத்தியவுடன் ஆளாளுக்கு குதறினார்கள். இந்தக் கல்லூரியின் அருமை பெருமை தெரியுமா..? என்று ஆரம்ப கால அசோகர் வரலாறு, அசோகரோடு சேர்ந்து இவர்கள் மரம் நட்டது, என்றுபாடம் எடுக்க ஆரம்பித்து இடை இடையே எனக்கும் என்னுடன் வந்த அப்பாவின் நண்பருக்கும் அறிவுரைகள்.

நான் முகத்தை சோகமாக மாற்றிக்கொண்டு வெளியே வந்ததைப் பார்த்து எனக்கு பின்னால் உள்ளே போக வந்திருப்பவர்கள் கதிகலங்கினர். "என்னடா அப்படி என்னதான் நடக்குதோ உள்ளே?" என்று.

அனைவருக்கும் காதுகளில் ரத்தம்தான்..

இறுதியில் எங்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் ஜெயித்தது. யாருமே உடைத்தவனை காட்டிக்கொடுக்கவில்லை. இறுதியில் அனைவருக்கும் ஆளுக்கு 300 ரூ அபராதம் விதித்தார்கள்.

நான் இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன் என்று மன்னிப்பு கடிதம் எழதி கொடுத்து எப்படியோ உள்ளே நுழைந்தாயிற்று.

மறுபடியும் நினைவுகளிலிருந்து மீண்டு திருமண மண்டபத்திற்கு வந்தாயிற்று. பெஞ்சை உடைத்த டேனி இப்பொழது சொல்லிக்கொண்டிருந்தான்.

"டேய் யாருமே என்னய காட்டிக்கொடுக்கல, அது சந்தோஷம்தான் ஆனால் ஒருநாள் முந்தியே என்னுடைய வீட்டிற்கு வந்து டேய் எப்படியாவது நீ ஒத்துக்கடா என்று எத்தனை பேர் கெஞ்சுனாங்க தெரியுமா?" என்ற உண்மையை இப்பொழு உடைத்தான்.


அவ்வளவு வீரமா யாருமே உடைக்கலைன்னு சொன்னவங்க டேனி வீட்டுல வந்து கெஞ்சியதை நினைத்து இப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தோம்.


அந்த நினைவுகளை நினைத்து மகிழ முடியுமே தவிர அந்தக் காலத்திற்குள் சென்று மீண்டும் வாழவா முடியும்..? மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களை அசைபோடுவது மனதுக்கு ஒரு வித அமைதியைத் தருகின்றது.-ரசிகவ் ஞானியார்

Tuesday, May 27, 2008

அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்


அன்புள்ள சிம்புதேவனுக்கு ,


தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி. உங்களின் தனித்திறமையை முழுமையாக பாராட்ட முடியாத நிலையில் இருக்க காரணம் எல்லாரும் விழுகின்ற குட்டையில் நீங்களும் விழுந்து சகதிகளை அப்பிக்கொண்டதுதான்.

பொருளாதார ஏற்ற இறக்கமா , இல்லை கலாச்சார சீரழிவா, இல்லை பக்கத்து தெரு குழாயில் தண்ணீர் வரவில்லையா? உடனே சாப்ட்வேர் இஞ்சினியர்கள்தான் காரணம் என்று கொடிபிடிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள்.

அது என்னப்பா ? உங்கள் வீட்டு கழிவறை சுத்தமில்லையென்றால் கூட சாப்ட்வேர் இஞ்சினியர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகின்றீர்கள்?

அந்தப்படத்தில் ஒரு காட்சி சாப்ட்வேர் இஞ்சினியர்களை பெரிதும் வேதனைப்படுத்தியிருக்கின்றது. இரண்டு படம் எடுத்துள்ளீர்கள் என்கிற பெருமை அந்த ஒரு காட்சியில் தரைமட்டமாக்கிவிட்டீர்கள்.

"ஜாவா என்கிற கணிப்பொறி மொழி அறிந்த ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், குறைந்த காலகட்டத்திற்குள் பைக், கார், ஹெலிகாப்டர் வாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதான காட்டியுள்ளீர்கள்.

இப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளின் தாக்கங்களை அதிகபட்டசமாக காட்டியுள்ளீர்கள்தான் எனினும் அப்படிபட்டவர்களை பழிவாங்குவதற்காக, கடவுளாக இருப்பவர்கள் அவர்களின் கைகளை சூம்பிப்போவ வைப்பதாக காட்டியுள்ள உங்களின் மட்டமான ரசனையை என்னவென்று சொல்வது? "


ஆடைகள் குறைய குறைய கொட்டிக் கொடுக்கும், பெண்களின் மறைக்கப்படவேண்டிய உறுப்புகளின் மீது, பம்பரமும், ஆம்லெட்டும், போட்டு சாப்பிடுகின்ற சினிமாத்துறையினரை விடவா சாப்ட்வேர் இஞ்சினியர்கள் அதிகமாக சம்பாதிக்கின்றார்கள்?

சரி அப்படிப்பட்ட சம்பாத்தியத்தின் பிண்ணணியை ஆராய்ந்து பார்த்ததுண்டா?

அவர்களை வெட்டியாக உட்கார வைத்தா சம்பளம் கொடுக்கின்றார்கள். அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை,விபச்சாரம் செய்து பிழைக்கவில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவில்லை, லஞ்சம் வாங்கவில்லை. திறமைக்கு கிடைக்கின்ற ஊதியத்தில் ஒழுங்காக வருமானவரி கட்டுகிறவர்கள். அவர்களைப் பற்றியா இப்படி மட்டகரமான கற்பனையில் காட்சி எடுத்துள்ளீர்கள். அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மற்ற துறைகளைப் போல அல்ல இது. இந்தப் பணியில் இருந்து எப்பொழுது தூக்கிவீசப்படுவார்கள் என்கிற உத்திரவாதம் இல்லை.

ஒரு ப்ராஜக்ட் ஆரம்பித்துவிட்டால் அதற்கு டெட் லைன்(Dead Line), உயிரோடு இருக்கும் லைன் என்று குறிப்பிட்ட காலகட்டத்தை நிர்ணயித்து அதற்குள் முடித்துவிடவேண்டிய கட்டாயத்திற்குள் பரபரப்பான சூழ்நிலையில் பணிபுரிபவர்கள்.

சிலநேரங்களில் இரவு பகல் பார்க்காமல் விழித்திருந்து அரைத்தூக்கம் தூங்கி, இப்படி உடல் வருத்தி பார்க்கின்ற வேலைக்காகத்தான் அவர்களுக்கு சம்பளமேயன்றி, உங்கள் துறையினர் பலரைப் போல பெண்களை அறைகுறையாக காட்டியோ, பாலுணர்வுகளைத்தூண்டியோ சம்பாதிக்கவில்லை

உங்கள் துறையில் சம்பாதிப்பவர்களை மிஞ்சிவிடக்கூடாதே என்கிற வயிற்றெரிச்சலிலா ?அப்படிப்பட்ட காட்சியை நீங்கள் எடுத்துள்ளீர்கள்? யதார்த்தங்களை படமாக்குவதற்கு முன் அவர்கள் வாழுகின்ற சூழலுக்குள் சென்று அவர்களின் உண்மையான நிலையினை உணர்ந்து கொள்ளுங்கள்.

சாப்ட்வேர் இஞ்சினியர்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள் என்கிற கூப்பாடுகள் வெளிப்படுகின்றதே தவிர அவர்கள் அந்தச் சூழலில் படுகின்ற அவதிகளையும் படம் எடுத்தீர்கள் என்றால் பாராட்டலாம்.

அவர்களின் கைகள் சூம்பிப் போகுமாறு நீங்கள் காட்டியுள்ள காட்சியில் உங்கள் கற்பனை ரொம்பவே சூம்பிப்போயிருப்பது தெரிகின்றது சிம்புதேவா!

ஒரே ஒரு வேண்டுகோள், அறை எண் 305ல் கடவுள் படத்தின் தலைப்பை அறை எண் 305ல் வயிற்றெரிச்சல் என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். வருத்தங்களோடு ஒரு வாழ்த்துக்கள்


இப்படிக்கு வேதனையுடன்,

ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர்


- ரசிகவ் ஞானியார்

Saturday, May 24, 2008

Friday, May 16, 2008

காதலிசம்


உன் அழகை ...
வர்ணிக்கச் சொல்கிறாய் !
போடி !
எனக்கு
தற்பெருமை பிடிக்காது!

- ரசிகவ் ஞானியார்

Wednesday, May 07, 2008

குருவி - மனதை பாதித்தது


விஜய்யும் த்ரிஷாவும் சின்ன வயசுல ஒரு குருவியை வளர்ப்பாங்களாம்;. அந்தக்குருவியின் முதுகில் ஒரு மச்சம் இருக்குமாம். இரண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்து வீடு. அந்தக் குருவி இரண்டு பேரின் அன்பையும் பெற்றிருக்கும். அந்தக் குருவியைப் பார்த்து இரண்டுபேரும் ஒரு பாட்டு கூட பாடுவாங்களாம்.

பின் விஜய் குடும்பமும் த்ரிஷா குடும்பமும் தனித்தனியே பிரிந்து போய்விட. அந்தக் குருவி மட்டும் அநாதையாய் அந்த இடத்தில் இருக்குமாம்.

16 வருடங்களுக்குப் பிறகு பட்டணத்தில் விஜய் மீது ஒரு காகம் எச்சில் போட முயன்றபொழுது, எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று காகத்தின் அந்த எச்சத்தை தன் மீது தாங்கிக் கொள்ள,
விஜய்க்கு அதனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்திடுமாம். அந்தக்குருவியை கையில் எடுத்து எச்சிலை துடைக்கும்பொழுது கவனிப்பாராம். அது சின்ன வயதில் தான் வளர்த்த குருவியேதான்

பின் ஒரு பாடல் பாடுவாராம்.

இன்னிசைப் பாடிவரும் இந்தக்
குருவிக்கு குஷ்டமில்லை
குருவிகள் இல்லையென்றால் எந்த
அருவிக்கும் நஷ்டமில்லை


என்று சுவிட்சர்லாந்து மலை உச்சியில் நின்று பாடல் பாட அந்தப்பாடல் தான் சின்ன வயதில் கேட்ட பாடல் அல்லவா என்று சென்னை அண்ணாசாலையில் சந்து முனையிலிருந்து , த்ரிஷா சுவிட்சர்லாந்துக்கு ஓடி வந்து விஜய்யுடன் சேர்ந்து பாட்டு பாடி இறுதியாக பாபநாசம் அணையில் வந்து தங்களது நட்பை காதலாக புதுப்பித்துக் கொள்வார்களாம்.


இதன் பிறகு தான் கதையில் திருப்புமுனையே. ஆம் தான் விஜய் மீது எச்சம் போடுவதை தடுத்த குருவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த காகம் குருவியை பழிவாங்க அலையுமாம். தங்களை சேர்த்து வைத்த குருவியை காகத்திடமிருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று விஜய்யும் த்ரிஷாவும் துப்பாக்கியோடு திரிவது கதையில் சிறப்பம்சம்.

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு