Tuesday, August 30, 2005

ஏதோ ஒரு சோகம்இன்று அலுவலகத்தில் மதிய உணவிற்குப்பிறகு சிறிது தூக்ககலக்கத்தில் கணிப்பொறியை நோண்டிக்கொண்டு இருக்கிறேன்.
திடீரென்று அந்த சத்தம் ...

பக்கத்தில் உள்ள மருத்துவமனை சாலையிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த சத்தம்

கீ.......ங் கீ.......ங் கீ.......ங் ஆம்புலன்ஸின் அபாய மணி ஓசை

கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சத்தம் சாலையில் இருந்து என் இதயம் வந்து முட்டி சோகத்தை பீச்சி அடித்தது.

பதறிப்போய் தூக்கம் கலைத்தேன்.. விபத்து நேரத்தில்தானே இப்படி ஒலி எழுப்புவார்கள்..யாரோ..விபத்துக்குள்ளானது யாரோ..?

நாம் இங்கு எந்த வித கவலையுமில்லாமல் நாம் பணிகளை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் யாருக்கோ விபத்து அங்கே..எந்த குடும்பமோ இன்று தன் அமைதியை இழக்கப்போகிறது?

அந்தக்குடும்பம் இப்போது எப்படி பதறிக்கொண்டிருக்கும்.. ..? யாராக இருக்கக்கூடும்..?

ஒரு குடும்பத்தலைவனாக இருந்தால்...

வீட்டில் குடும்பத்தலைவன் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டால் மனைவி மற்நும் குழந்தைகள் நிலை ஆதரவற்றதாகிவிடும்..பொருறாதார வசதி குறைந்தவர்கள் என்றால் அவ்வளவுதான்..
சுனாமியில் தள்ளாடுகின்ற பனை ஓலையின் நிலைதான் அவர்களுக்கும்..அய்யோ அவர்களுக்கு என்ன மாற்று வழி கிடைக்கப்போகிறது..?

அய்யோ ..பொருளாதார ரீதியாக இந்த குடும்பம் பாதிக்கப்பட போகிறது என தெரிந்தும் எந்த தைரியத்தில் இறைவன் அந்த குடும்பத் தலைவனின் உயிர் எடுக்கச் சம்மதிக்கின்றான்..?
புயலில் தத்தளிக்கின்ற பட்டாம்பூச்சியாய் தத்தளிக்கிறது மனசு..

இறைவன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டானே..? ஒருவேளை அந்தக் குடும்பத்தலைவனின் பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமையை கற்றுக்கொடுப்பதற்காய் இருக்குமோ..? அப்படியென்றால் அந்த தாயை சமாதானப்படுத்துவது எங்ஙனம்..?

மனிதர்களே பதறுகிறோம்..இறைவன் சும்மாவா இருப்பானா?..இறைவா எனக்கு மட்டும் அந்த இரகசியத்தை சொல்லேன்..? அந்தக்குடும்பத்தின் எதிர்காலத்திற்கு என்ன மாற்று வழி செய்து வைத்திருக்கிறாய்..?


ஒரு வயதான பெண்மணியாக இருந்தால்...


வயதான பெண்மணி என்றால் அவளது மகன் - மகள் - கணவர் எல்லாம் அவள் மூலம் தனக்க கிடைத்த பணிவிடைகளை எல்லாம் அசைபோட்டபடியே இறந்துபோனவளின் இறந்தகால நிகழ்வுகளை அசைபோட்டபடியே கண்ணீரோடு அமர்ந்திருப்பார்களே..?

மனம் தாளமல் தண்ணீரை சேமித்து வைத்து தாகம் தீர்க்கும் ஒட்டகம் போல அந்த விபத்து நிகழ்வினை நினைத்து நினைத்து அசை போடுகிறது..

யாராயிருக்கக்கூடும்...?

ஒருவேளை எவருடைய இளவயது மகனாக இருக்க கூடுமோ..?

இளமையில் வறுமை மிகவும் கொடிது எனச் சொன்ன ஒளைவை இளமையில் மரணமும் கொடிதுதான் என சொல்ல மறந்துவிட்டாளோ..?

செய்தியை கேட்பவருக்கே இதயம் தீக்குளித்தவனைப்போல துடிக்கிறதே அந்த இளவயது வாலிபனின் மரணத்தில் எப்படி துடித்துப்போகும் அந்தக் குடும்பம்..?

தங்கையின் புத்தகத்தை ஒளித்துவைத்துவிட்டு அவள் அழும்போது திருப்பிகொடுப்பது

தம்பி சிகரெட் குடிப்பதை கண்டு கண்டித்துவிட்டு தம்பிக்கு தெரியாமல்
தான் சிகரெட் குடிப்பது

இத்தனை வயதாகியும் தாயின் மடியில் படுப்பது தாய் ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவேன் என அடம் பிடிப்பது

செமஸ்டர் பீஸ் என அப்பாவிடம் சொல்லி பணம் வாங்கிக்கொண்டு சினிமாவுக்குச் செல்ல

பக்கத்து வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுப்பதை பார்த்துவிட்ட அந்தப்பெண்ணின் அண்ணன் இவனை தனியே அழைத்து கண்டிக்க

இப்படி கலகலவென்று பட்டாம் பூச்சியாய் பறந்து சுற்றிக்கெண்டிருக்கும் அந்தப்பையனின்
குறும்புத்தனமான அவனது இளவயது சேட்டைகளை - துடுக்குத்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் அவனது குடும்பம் மரணச்செய்தி கேட்டால் தாங்குவார்களா..? தூங்குவார்களா..?

இப்படி ஏதேதோ சொல்கிறது மனசு. அந்த விபத்துக்குள்ளான நபரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்திருப்பார்களா..? இல்லை தெரிவிக்கத் தயங்கி கொண்டு இருப்பர்களா..?

எப்படி அவ்வளவு எளிதாய் தெரிவிக்க முடியும்..?

கொஞ்சம் சீரியஸா இருக்கார்..ஒண்ணும் பிரச்சனையில்லை..நீங்க உடனே மருத்துவமனைக்கு வாங்க என்று உளறி உளறி தானே தகவல் தெரிவிப்பார்கள்..?

தெரிவிக்கின்ற அந்த நேரத்தில் தொலைபேசியில் செய்தியை கேள்விப்படுகின்ற அந்த முதல் நபர் எந்த அளவிற்கு நொடிந்து போயிருக்கக்கூடும்..?

உலகத்தில் இதுவரை இடித்த இடிகள் மொத்தமாய் இதயம் தாக்கியது போலல்லவா இருக்கும்..? கண்ணீர் பெருக்கெடுத்து ..

அம்மா! அம்மா! அப்பாவுக்கு...


அம்மா! அம்மா! அண்ணணுக்கு..

என்று கண்ணீரோடு முழுங்கி முழங்கி பச்சை குழந்தை பேச ஆரம்பிப்பது போல தடுமாறி
விட்டத்தை வெறித்தபடி அமர்ந்து விடுவார்களா..?

இல்லை கொஞ்சம் இதயம் பலவீனம் உள்ளவர்களாக இருந்தால் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்துவிடக்கூடுமே..?

செய்தியை கேள்விப்பட்ட அந்தக் குடும்பம்..செய்து கொண்டிருந்த சமையலை அப்படியே போட்டுவிட்டும்..படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை திறந்தபடியே வைத்துவிட்டு..வீட்டை பூட்ட மறந்தபடி இறைவனை கண்ணீரோடு வேண்டிக்கொண்டே

அய்யோ ஒண்ணும் ஆகியிருக்கக்கூடாது..இறைவா ஒண்ணும் ஆகியிருக்கக்கூடாது..

என்று பதறியடித்துக்கொண்டு தட்டுதடுமாறி புலியைக்கண்டு ஓடும் ஒற்றைகால் முடவனைப்போல தடுமாறி விழுந்து ஓடிவருவார்களே..?

மனசுக்குள் என்னவெல்லாமோ தோன்றுகிறது..? தூக்க நிலையில் இருந்து துக்க நிலைக்கு மாறிவிட்டேன்..


கீ......ங் கீ......ங் கீ......ங்
சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆம்புலன்சுக்கு வழிகொடுத்து ஒதுங்கும் வாகனங்களைப்போலவே என் இதயம் சோகத்தின் நிழலில் ஒதுங்கி நிற்கிறது அலுவலகம் முடியப்போகிறது என்ற சிறு மகிழ்ச்சியின் பாதையிலிருந்து.

அலுவல் பணியில் மனம் ஒட்டாமல் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன். கண்டிப்பாய் பணி முடிந்ததும் அந்த விபத்துப்பகுதிக்குச் சென்று யார் ? என்ன? என்று விசாரித்துவிட்டுதான் செல்லவேண்டும்.

இல்லையென்றால் இன்று இரவு நிம்மதியாய் சாப்பிட - தூங்க முடியாது.


இதயம் சோகமுடன்

ரசிகவ் ஞானியார்

ஒரு பட்ஜெட் மரணம்அரிசி விலை உயர்வு!
மண்ணெண்ணெய் விலை உயர்வு!
அடுப்பை பூனைகளுக்கு...
வாடகைக்கு கொடுத்து விட்டோம்!

பால் விலை உயர்வு!
சர்க்கரை விலை உயர்வு!
வேறு வழியில்லை...
இடுப்பிலே ஈரத்துணிதான்!

ஏழைகள் நாங்கள்
எங்கையாவது...
பயணப்பட நினைத்தாலோ
பஸ் கட்டண உயர்வு!

அரசாங்கமே!
தயவுசெய்து
விஷத்தின் விலையை ஏற்றி விடாதே..
நாங்கள் செத்துப்போகிறோம்!


-ரசிகவ் ஞானியார்-

Monday, August 29, 2005

மலர்கள் பேசினால் ...

மாடிவீட்டுப் பாடையிலும்..
மரித்திருக்கின்றோம்!

ஏழை வீட்டுத் திருமணத்திலும்..
சிரித்திருக்கின்றோம்!

மலர்கள் சாதி என்றாலும்..
மனிதநேயம் உண்டு!

நல்லவேளை!
மனிதசாதியாய்
பிறக்கவில்லை!

------
வந்தர்க்கெல்லாம் ..
மணம் வீசுவோம்!
வண்டுகளுக்கு மட்டும்..
முந்தானை விரிப்போம்!

------
தாசிகளின் கூந்தலிலும்
தவமிருக்கும் எங்களுக்கு
விதவைக்கு மட்டும்..
விதிவிலக்கு ஏனோ..?

------
அரசியல் மாலைகளில்
ஆணவப்படுவதை விட..
ஆண்டவச் சன்னிதானத்தில்
அடிமைப்படவே விரும்புகிறோம்!


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Saturday, August 27, 2005

ரோஜாஎந்தக்
காதலியின் கைகளைத்
தழுவப்போகின்றதோ..?

இல்லை
அவள் பிரிவால் வாடும்
எந்தக்காதலனின்
கல்லைறையைக் கழுவப்போகின்றதோ..?
-ரசிகவ் ஞானியார் -

Thursday, August 25, 2005

காதலிசம்எத்தனை பாடத்தில் ...
அரியர்ஸ் விழுந்தாலும் சரி!
அவள்
நெற்றியில் விழும் முடிகளை
பார்க்காமல்...
போகமாட்டேன் தோழா!

---

அவள் படமான நெஞ்சில்...
எதுவுமே பாடமாகவில்லை!
ஆகவே
அரியர்ஸ் வைத்தேன்

-ரசிகவ் ஞானியார்-

Monday, August 22, 2005

சுதந்திரம் என்றால் என்ன?

நிலாச்சாரல் இணையதளத்தில் என்னுடைய சுதந்திரம் என்றால் என்ன? என்ற கவிதையை இதோ இந்த கீழ்கண்ட இணைப்பை சுட்டி படிக்கவும்.


http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_222a.html


- ரசிகவ் ஞானியார் -

Sunday, August 21, 2005

பல்லி விட்ட குரங்குஅந்தப்பையன் இன்று அவமானப்படப்போகிறான் எனத் தெரியாமல் இன்று வழக்கம் போலவே கல்லூரி ஆரம்பித்தது.

1998 ம் வருடம் ஒரு மதிய வேளை வகுப்பறை...வருகிறார் வழக்கமான தனக்கே உரிய தாடியும் ஜிப்பாவுமாக கம்பீரமாக வருகிறாhர் ஜாபர் சார்.. பராக் பராக்

ஸ்டேடிஸ்டிக்ஸ் - ல் ஒரு தலைப்பை கரும்பலகையில் எழுதிவிட்டு ஒரு கணக்கை எழுதிக்கொண்டிருக்கிறார்..

"ஷ்ஷ்..அசன்...ஷ்ஷ்..அசன்...ஷ்ஷ்.. டேய்! டேய்! நாயே! எவ்வளவு நேரண்டா கத்துறது? "- கடைசி பெஞ்சிலிருந்து முன் பெஞ்சிலிருந்த அசனை அழைத்தேன்

லேசாக பயந்த படியே ஜாபர் சார் கவனித்துவிடுவாரோ என்ற பயத்தில் திரும்பினான்.

"சத்தம் போடாதடா பார்த்தா கத்துவார் என்னடா வேணும்-" கூட்டுக்குடும்பத்தில் புதிதாய் திருமணம் ஆன தம்பதிகள் கிசுகிசுப்பதைப்போல கிசுகிசுத்தான்

கையிலிருந்த இரப்பர் பல்லியை அசனிடம்; கொடுத்தேன். அது அப்படியே அசல் பல்லியை போலவே இருந்தது.

"எதுக்குடா எங்கிட்ட கொடுக்கிற?" - மறுபடியும் கிசுகிசுத்தான்

"என்னப்பா சத்தம் ...போசாதீங்கபா ஒழுங்கா எழுதுங்க" - ஜாபர் சார் எழுதியபடியே அதட்டுகிறார்


"டேய் அந்தப் பல்லிய முதல் பெஞ்சில இருக்கிற முரளி பக்கத்தில் வச்சிருடா வேற ஒண்ணும் பண்ண வேண்டாம் - " கொள்ளைக்கூட்டக்காரனாய் திட்டமிட்டேன்.

"சரி சரி "- வேண்டா வெறுப்பாய் கூறினாhன்

மெதுவாய் அதை அதோ அப்பாவியாய் எழுதிக்கொண்டிருக்கும் முரளியின் நோட்டு அருகே அவனுக்கு தெரியாமல் வைத்துவிட்டு அவனும் எழுதத் தொடங்கி விட்டான்.நானும் எழுதத்தொடங்கி விட்டேன்

அமைதியாய் போகிறது சில நொடிகள்.

தட் தட் தட் சத்தம் வேகமாய் கேட்கிறது

என்னடா என்று திரும்பி பார்த்தால் ஜாபர் சாரேதான் அந்த பல்லியை நிஜப்பல்லி என நினைத்து வேகமாக அடித்துக்கொண்டிருக்கிறார் ( எதிர்பார்த்ததுதானே..? )

தலைதூக்கி பார்த்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் எல்லோரும் நிலை உணர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்..

மாணவிகளும் சிரிக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

தான் ஏமாளியாக்கப்பட்டுவிட்டோமே என்ற கோபத்தில் யார் பக்கத்தில்; அந்த பல்லி இருந்ததோ அந்த பையனை பார்த்து திரும்பினாhர்

"டேய் எழுந்திருடா.." - அவனோ நிலைமை தெரியாமல் அவனும் அந்த காட்சியைகண்டு சிரித்துக்கொண்டிருந்தவன் திடுக்கிட்டான்

"வெளிய போடா க்ளாஸை விட்டு வெளிய போடா முதல்ல" - கத்தினார்

"சார் சார்.." - கெஞ்சாத குறையாக அவன்


"க்ளாஸை விட்டு வெளிய போடா..அப்புறமா வந்து என்னை டிபார்ட்மெண்ட்ல வந்து பாரு" -அவரின் அந்த கோபத்தை இதுவரை பார்க்கவில்லை

அந்தகோபத்தில் அவர் கத்தும் போது அவனால் எதிர்த்து எதுவுமே பேச முடியவில்லை.

முரளி அவமானப்பட்டு கறுத்த முகத்தோடு என்னை காட்டிக் கொடுக்காமல் வெளியேறினான்.

நண்பா!
நீ
கறுத்த முகத்தோடு சென்றாயே..?
அதில்தானடா
நம் நட்பு ...
வெளிச்சமானது!


அவரிடம் சென்று அவன்தான் மன்னிப்பு கேட்டானே தவிர என்னை காட்டி கொடுக்கவேயில்லை.

ஏனோ தெரியவில்லை அந்த சூழ்நிலையில் கிண்டலாக தெரிந்ததெல்லாம் இப்பொழுது ஞாபகப்படுத்தி பார்க்கும் போது வலிக்கத்தான் செய்கிறது. காலம் கடந்த வலி.
- ரசிகவ் ஞானியார் -

Saturday, August 20, 2005

காதலிசம்

காதலும் , சுனாமியும்
ஒன்றுதான் !

சுனாமி
வெள்ளம் நுழைத்து ...
உயிர்வாங்கும் !

காதல்
உள்ளம் நுழைந்து ...
உயிர்வாங்கும் !

- ரசிகவ் ஞானியார் -

நிலாக்கால ஞாபகங்கள்

பம்பரம்

கத்தரிக்கா தோட்டம் என்ற ஒரு இடத்தில் பம்பரம் விளையாடி தோற்றவனின் பம்பரம் மீது ஆக்கர் அடித்து அவனது பம்பரத்தை சேதப்படுத்துவது எங்களின் வழக்கம். ஓருநாள் மன்சூரின் பம்பரத்தை சேதப்படுத்த அவன் என்னை அடித்துவிட உடனே கோவத்தில் என்ன செய்வது என தெரியாமல் அவனது வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவனது வீட்டில் மண்ணை அள்ளி வீசிவிட்டு ஓடிச்சென்று என் அம்மாவின் முந்தானையில் ஒளிpந்து கொள்வது ஞாபகம் வருகிறது.

ஐஸ்வண்டிக்காரன்
ஒவ்வொரு பெருநாளைக்கும் முக்கிய பொழுதுபோக்கே ஐஸ் சாப்பிடுவதுதான். வழக்கமாய் வருகின்ற அந்த ஐஸ்காரரிடம் சென்றவருடம் வாங்கியதற்காக இப்பொழுது காசு கொடுத்து வரச்சொன்ன அம்மாவை நினைத்து பெருமையடைவதா? இல்லை மகிழ்ச்சியில் வேண்டாம் என மறுத்து இலவசமாய் ஒன்று கொடுத்த அந்த ஐஸ் தாத்தாவை நினைத்து பெருமையடைவதா? இல்லை தங்கைக்கு வாங்கி கொடுடா என்று காசு கொடுத்த அப்பாவையும் தங்கையும் ஏமாற்றி ஐஸ்கிரீமை நான் முழவதுமாய் சாப்பிட்டுவிட்டு கடைசி துண்டை தங்கையிடம் கொடுத்த என்னை நினைத்து சிறுமையடைவதா?


தட்டான்பூச்சி வேட்டை

டவுசர் போட்டுத்திரந்த அந்த நிலாக்காலத்தில் முடசெடிகள் உடலைக்காயப்படுத்தினாலும் பொருட்படுத்தாது கலர் கலராய் தட்டாம்பூச்சிகளை போட்டிபோட்டு கொண்டு பிடித்து அதன் சிறகுகளைபறித்து ஒரு பாட்டிலில் அடைத்து அதன் தவிப்பை ரசிப்போம். இப்பொழுது நான் தனிமையிலும் உறவுகளின் ஏக்கத்திலும் தவிக்கும் தவிப்பு அந்த தட்டாம்பூச்சிகளை ஞாபகப்படுத்துகிறது.மூன்றுசக்கர சைக்கிள் சிநேகிதன்

வாடகைக்கு சைக்கிள் எடுத்து டபுள்ஸ் வைத்து ஆத்துக்கு சென்று குளித்துவிட்டு வருவோம். பண்டிகை சமயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவில் முறுக்கை கட்டி அதை சைக்கிளில் வந்தபடியே கடிக்க வேண்டும் என்ற போட்டியிட்டு கொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கி முட்டி மோதி முறுக்கை கடிக்கும் போட்டி ஆள் கடிக்கும் போட்டியாக கூட சில சமயம் மாறிவிடும்.தோழர்படை

சின்னவயசில் தோழர்படைகளை சேர்த்துக்கொண்டு இரயில்வே பாலங்களில் காதுவைத்து கேட்பது - தடங்களில் நடந்து செல்வது - முட்புதர்களுக்குள் நாய்குட்டிகள் வளர்த்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருநாள் பால் திருடிக்கொண்டு வந்து ஊற்றுவது - இலந்தை பழம் பறிப்பதற்கு சுடுகாட்டுக்குச் செல்வது - மாங்காய் பறித்துதோட்டக்காரனிடம் ஓட்டப்பயிற்சி எடுத்தது - ஆற்றில் யார் சோப்பையோ உபயோகித்துவிட்டு பொசுக்கென்று விறால் அடித்துக்கொண்டு பாய்ந்து சென்று தண்ணீரிலையே மூழ்கிக்கிடப்பது - கிரிக்கெட் விiளாயாடும்போது எதரி அணியோடு தோற்றுவிடப்போகிறோம் என தெரிந்தவுடன் ஆட்டததை ஏமாற்றுவது இப்படி பல பலபடிக்கட்டில் பயணம்

இது கல்லூரி காலத்தை ஞாபகப்படுத்தும். படிக்கட்டில் தொங்கியபடியே பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போது பாளைங்கோட்டை பேருந்து நிலையத்தை நெருங்கும்போது மட்டும் தலையை உள்ளிளுத்துக்கொண்டு சீப்பு கொண்டு தலைவாரி அழகுபடுத்திக்கொண்டு மறுபடியும் படிக்கட்டுக்கு வந்து அந்த கல்லூரிப்பெண்களை கண்டுகொள்ளாதது போல ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி பின் பஸ் கிளம்பி செல்லும்போது அவர்களை பார்த்து வளப்பம் காட்டிவிட்டு செல்வது.படிக்கட்டில் தொங்கி புத்தகம் கொடுத்து கொடுத்தே சில பெண்களின் இதயத்தில் இடம் பிடித்ததுபடிக்கட்டில் தொங்கியபடியே வந்து உச்சத்தில் பஸ்ஸின் கூரை மீது ஏறி ஆட்டம்போட அதைக்கண்டு ஆத்திரத்தில் டிரைவர் வண்டியை போலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் கொடுத்தது.
இப்படி ஒவ்வொரு கல்லூரி மாணவர்களுக்கும் படிக்கட்டுப்பயணம் மறக்க முடியாதது.
கடைக்கண் தவம்

பேருந்து திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.வண்ணாரப்பேடடையை நெருங்கும்போது அந்த பள்ளி மாணவி ஏறுகிறாள்.
டேய் மஸ்தான் அந்த பொண்ணையே முறைத்து பார்த்துகிட்டு இருப்போம் சரியா - நான்

எதுக்குடா - மஸ்தான்

பாருடா என்ன நடக்குதுன்னு பார்ப்போம் - நான்

விடாமல் பார்க்க ஆரம்பித்தோம் கண் இழந்தவன் இருட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது போல.
அந்தப்பெண்ணோ பார்வையை எங்கெல்லாமே திருப்பிவிட்டு எங்களை காணும்போது நாங்கள் அவளையே கவனித்துக்கொண்டிருப்போம். அவளின் முகமெல்லாம் சிவந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவளால் எங்களின் பார்வையை சமாளிக்க முடியவில்லை. அழுகின்ற நிலைக்கு வந்துவிட்டாள். அட இதோ கண்ணீரே வந்துவிட்டது.கைக்குட்டையால் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைக்க ஆரம்பித்துவிட்டாள்

டேய் நிலைமை ரொம்ப மோசமாவுதுடா..நாம அடுத்த ஸ்டாப்புல இறங்கி டீ குடிச்சிட்டு அடுத்த வண்டியபுடிப்போம்டபா..அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சுடா...

அவசர அவசரமாய் இறங்க ஆரம்பித்தோம்.மெல்லிய மீசையின் சிநேகிதன்

மீசை வளர ஆரம்பித்த கல்லூரி பருவத்தில் நண்பன் ஒருவன் என்னிடம் டேய் நீ மீசையை எடுடா உனக்கு நல்லாயிருக்கும் என கூறியதை கேட்டு மீசையை அவசரத்தில் எடுத்துவிட அதுவரை மீசையோடு பார்த்த என் கல்லூரி தோழர்கள் - தோழிகள் மீசையில்லா முகத்தை கண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். வுகுப்பளையில் நான் நுழையம்போது கூட கைக்குட்டையால் முகத்தை துடைப்பது போன்ற பாவனையிலையே உள்ளே நுழைந்தேன்.அந்த செய்கைவேறு அவர்களின் சிரிப்பை மேலும் தூண்டிற்று.
வழக்கமாய் பார்க்கும் அந்த சிநேகிதி என் மீசையில்லா முகத்தை பார்த்துவிடக்கூடாதே என்ற பயத்தில் அவளுடைய கண்களில் இருந்து தப்பித்துக்கொண்டேயிருக்க மதியவேளையில் வராண்டாவில் எதிரில் தோன்றினாள். அவள் சிரித்துவிடக்கூடாதே என்ற பயத்தில் மணி எத்தனை என்று கேட்டு வழிந்தேன். என் மீசையில்லா முகத்தைவிடவும் நான் அசடு வழிந்ததை பார்த்து பார்த்து அவள் சிரித்துக்கொண்டே சென்றாள்.

ரசிகவ் ஞானியார்

Thursday, August 18, 2005

ஒரு கல்லூரியின் கலைவிழா

பல்கலைகழகத்தில் நடைபெற்றது கல்லூரியின் கலைவிழா-

கலர்கலராய் உடையணிந்து ...
ஆங்காங்கே அழகாக மிக அழகாக திரைச்சீலைகள்
( ஹைய்யா மாணவிகள்னு சொல்வேன்னு பார்த்தீங்களா)..

மேக்கப் எல்லாம் முடிந்தது ( நிலவுக்கு எதுக்குப்பா மேக்கப்?)

"இப்பொழுது சதக்கத்துல்லா அப்பா கல்லூரி" - மைக்கில் அறிவிப்பு வருகிறது..

கைதட்டல் பலமாய் கேட்கிறது ( அதாங்க எங்க சார்பா மத்த காலேஜ் பசங்களையும் கூட்டிவந்தோம்ல)


கலைநிகழ்ச்சி ஆரம்பிக்கிறது


அரியணையில் யாருப்பா அது அட கிறுக்கன் பிஏ லிட் மாணவன் ராஜா

ராஜா சப்தமிடுகிறான்.

"அழைத்து வாருங்கள் அந்த திருடனை"

கைகள் கட்டியபடி பராசக்தி சிவாஜியின் தோரணையில் காதரும் சுடலையும் ஒரு மாணவனை இழுத்து வருகிறார்கள். யாருப்பா அது அட நான்

"அழைத்து வரவில்லை மன்னா திருத்திக்கொள்ளுங்கள் இழுத்து வந்துள்ளார்கள் "- நான்

"நீ இந்த தடவை அரியர்ஸ் வைக்கவில்லை என உம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
ஒத்துக்கொள்கிறாயா.."
- ராஜா

"என்மீது குற்றமில்லை..என் பிட்டின் குற்றம் அது".. - நான்

"மடையா திமிராக பேசாதே பிட்டை தூக்கிலிட முடியுமா?..
உனக்குதான் தூக்கு தண்டனை ..சொல் உன் கடைசி ஆசை என்ன? - "
ராஜா


"என் கடைசி ஆசை எனக்கு திருமணம் நடக்க வேண்டும்; மன்னா "- நான்

"சாகற நேரத்தில கூட திமிரா உனக்கு சரி சரி ஏற்றுக்கொள்கிறோம் ..இதோ இந்தக்கூட்டத்திலிருந்து யாரையாவது தேர்ந்தெடுத்துக்கொள் "- என்று கூட்டமாய் அமர்ந்திருந்த மாணவிகளை பார்த்து கைகாட்டுகிறான்

(மாணவிகள் மத்தியில் சலசலப்பு )

நான் மேடையின் நுனிக்குச் சென்று மாணவிகளின் கூட்டத்தை அங்கும் இங்கும் தேடும் சாக்கில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

("அய்யோ நம்மள கைகாட்டிருவானோ "என்ற பயத்தில் ஒவ்வொரு மாணவிகளும் பயத்தில்
முகம் வெளிறிக்கொண்டிருந்தார்கள்)

( "இதான் சாக்குன்னு பார்த்துக்கிட்டே இருக்கான் பாரேன் "- கூட்டத்திலிருந்து கமெண்ட்ஸ்)


நான் மீண்டும் மன்னர் அரியணையில் மூக்கை நோண்டிக்கொண்டிருந்த ராஜாவை நோக்கி செல்கிறேன்.

"என்ன யாரையாவது தேரந்தெடுத்துவிட்டாயா ? "- ராஜா

"இல்லை மன்னா என்னை சீக்கிரம் தூக்கில் இட்டு விடுங்கள்"

( அவ்வளவுதான் மாணவர்கள் பக்கத்தில் இருந்து விசில் - கைதட்டல்கள் பறந்தன.. மாணவிகள் முகம்தான் பாவம் வெளிறிப்போய்விட்டது )


-ரசிகவ் ஞானியார்-

Wednesday, August 17, 2005

காதலிசம்காதலும் வெங்காயமும்
ஒன்றுதான்!
இரண்டுமே
கண்ணீரை தருகிறது!காதலும் கபடியும்
ஒன்றுதான்!
இரண்டுமே
காலைவாரிவிடுகிறது.

ரசிகவ் ஞானியார்

Tuesday, August 16, 2005

காதலிசம்

என்னவளும் எய்ட்சும்
ஒன்றுதான்

எய்ட்ஸ்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும்

என்னவள்
கொஞ்சி கொஞ்சியே
கொல்வாள்!


-ரசிகவ் ஞானியார் -

காதலிசம்என் எதிரியை
அழவைக்க..
ஆசையாயிருக்கிறது!

யாராவது அவனை
காதலியுங்களேன் !

-ரசிகவ் ஞானியார்-

Monday, August 15, 2005

ஜனநாயகம்தூங்குகின்ற
இந்த குழந்தைக்கு
என்ன பெயர் ...
வைக்கலாம்?

முடிவெடுத்துவிட்டேன்!

"ஜனநாயகம்"

- ரசிகவ் ஞானியார் -

என் கல்லூரி ஆலமரமே!
உன்னைப்பற்றி
கவிதை எழுத நினைத்தால்
இதயத்தில் இருந்து
வார்த்தைகள்
பூமிக்குள் வந்து விழுகிறது ..
உன் விழுதுகளாட்டம்!

நாங்கள் அடித்த கிண்டலுக்கு
எங்களோடு சேர்ந்து
தலையசைத்துக்கொண்டே...
ரசித்திருக்கிறாய்?

மழைநின்ற பொழுதும் உன்
இலைகளில் சேமித்த
சொட்டுகளினால் எங்களுக்கு...
சொர்க்கம் தந்திருக்கிறாய்!

கல்லூரி தேர்தல் ரகசியங்களையும்...
சில வதந்திகளின் ரகசியங்களையும்...
பிட்டின் ரகசியங்களையும்...
நாங்கள் உன்
விழுதுகளோடுதானே
விவாதித்திருக்கிறோம்?

உன்
விழுது வலிக்கும் அளவுக்கு
தொங்கி விளையாடினாலும்...

சிலநேரம்
சிறுநீரை பரிசாக தந்திருந்தாலும்..

கோபப்படாமல்
நீ எங்களுக்கு
காற்றை மட்டுமே தந்திருக்கிறாய்!

எங்களின்
ஒவ்வொரு...
காதல் காத்திருப்புகளையும் நீ
சகித்துக்கொண்டு இருந்திருக்கிறாய்!

பரிட்சை நேரத்து
பரபரப்பான சூழலில்...
ஒரு தாயின் சேவையாய்
தாலாட்டி தாலாட்டி
படிக்க வைத்தாய்!


காதல் தோல்லி
பரிட்சை தோல்வி
காதலியின் தாமாதம்
இப்படி எல்லாவற்றிற்கும்
எங்கள்
மனசோடு நீயுமல்லவா...
மௌனம் அனுஷ்டித்திருக்கிறாய்!


நேரம்போக்குக்கு காதலிப்பவர்களுக்கு கூட
நீ
நிழல் கொடுத்திருக்கிறாய்!

உன் மடியில் உட்கார்ந்து
கும்மாளமிட்டவர்கள்
தனித்தனியே
அழுதுவிட்டு போகிறோம்!

உன்
தோள்களைத் தோண்டி...
எங்கள்
பெயர்கள் எழுதினாலும்..
பொறுத்துக்கொண்டாயே?

பிரிந்து சென்ற
கடைசிநாளில்
கண்ணீர் தரமுடியாமல்...
நீ
இலைகளை உதிர்த்துக்கொண்டே வழியனுப்பியது...
இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது!

கல்லூரிக்கு
மீண்டும் ஒருநாள் வருகின்றபோது
கண்டிப்பாய் காட்டுவேன் என்
காதலியிடம்..

அவளைவிடவும் ஆழமாய்
நீ
உன் இதயத்தில்
என்னை எழுதிவைத்திருக்கிறாய் என்று!


உன் நிழலில் காதல் வளர்த்த
என் நண்பனின்
கலைந்து போன காதல்
இன்னமும் என்
இதயம் விட்டு அகலவில்லை

ஆகவே
கடைசியாய்
ஒரே ஒரு வேண்டுகோள் தாயே!

யாரையும்
காதலிக்க விட்டுவிடாதே!
காற்றடித்து..
கலைத்து விட்டுவிடு!

-ரசிகவ்ஞானியார்-

கானல்விளம்பரப்படுத்தினாலும்
கண்டுபிடிக்க முடியாத...
வீதிகளைக்கொண்ட கிராமத்தில்
எந்த டீக்கடையிலிருந்தோ
ஒலித்துக்கொண்டிருக்கிறது...
தேசியகீதம்!

குப்பன் முதல்
வேலுச்சாமி வரை
வேட்டி அசையாமல் நின்றனர்!

அட!
இந்திய வரைபடத்தில்
தேடியும் கிடைக்காத
கிராமத்தில்கூட
தேசபக்தியா?
பாரதம் பரவாயில்லை!

தேசியகீதம் முடிகிறது
கூட்டம் கலைகிறது
சல்யூட் அடித்துவிட்டு திருமிபினேன்.

வேலுச்சாமிக்கு
வெள்ளிதட்டு!

குப்பனுக்கு
தனி டம்ளரில்
தண்ணீர்!

யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்
ஒரு நகைச்சுவை:

இந்தியாவுக்கு
ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைத்ததாம்-ரசிகவ் ஞானியார் -

Saturday, August 13, 2005

கணிப்பொறி திருவிளையாடல்( சில தினங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் அனுப்பிய மெயிலை கொஞ்சம்
மாற்றியிருக்கிறேன் )காட்சி 1

மதுரை மக்களே எழுந்திருங்கள்.
நாட்டு மக்களுக்கோர் ஓர் நற்செய்தி நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள
சந்தேகத்தை தீர்த்து வைக்கக்கூடிய சி புரோகிராமை எழுதிக்கொண்டு வரும்
புரோகிராமருக்கு ஆயிரம் அமெரிக்கன் டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும் டும் டும் டும் டும்

தருமி கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து தெளிவாய் கேட்கிறான்.

எவ்வளவு? ஆயிரம் அமெரிக்க டாலரா?

யானை மீதிருக்கும் அந்த அரசாங்க ஊழியன் கூறுகிறான்

ஆமாம் ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

தருமி சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியாமல் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு போகிறான்.
-------------------------

காட்சி 2தருமிக்கும் சிவனுக்கு இடையே உரையாடல் ஆரம்பிக்கிறது

தருமி : யாரு என்கிட்டேயேவா என்கிட்டேயேவா என்கிட்டேயே
மோதப்பார்க்கிறியா..நான் ஆளு பார்க்கிறதுக்கு சுமாராகத்தான்
இருப்பேன்..ஆனா என் புரோகிராமிங் பத்தி உனக்கு
தெரியாது..தயாரா இரு

சிவன் : அப்படியா கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது
நான் கேட்கட்டுமா?

தருமி : ஆங்.. நானே கேட்கிறேன்..எனக்கு கேட்கத்தான் தெரியும்.ம் ம் ம்

தருமி தொடர்கிறான் : பிரிக்க முடியாதது என்னவோ?
சிவன் : பில்கேட்ஸ{ம் விண்டோஸ{ம்

தருமி : சேர்ந்தே இருப்பது?
சிவன் : விண்டோஸ{ம் பக்கும்

தருமி : சொல்லக்கூடாதது?
சிவன் : கிளைண்டிடம் உண்மை

தருமி : சொல்லக்கூடியது?
சிவன் : செமினாரில் பொய்கள்

தருமி : கோடுக்கு அழகு?
சிவன் : கமெண்டுடன் இருப்பது

தருமி : ரோடுக்கு அழகு?
சிவன் : குண்டும் குழியுமாய் இருப்பது

தருமி : கமெண்டெனப்படுவது?
சிவன் : புரியாமலிருப்பது

தருமி : ஓ எஸ்ஸ{க்கு
சிவன் : யுனிக்ஸ்

தருமி : லாங்குவேஜ்க்கு?
சிவன் : சி

தருமி : டே;டாபேஸ{க்கு
சிவன் : ஆரக்கிள்

தருமி : வெப் சைட்டுக்கு
சிவன் : கூகிள்

தருமி : ஆப் சைட்டுக்கு
சிவன் : நீ

தருமி : ஆன் சைட்டுக்கு
சிவன் : நான்


தருமி : யப்பா ஆளை விடு

தருமி சிவனின் காலில் விழுகின்றான்.

தருமி : அய்யா நீர் புரொகிராமர்
சிவன் : நீ

தருமி : இல்லை நான் புரொகிராமர் இல்லை..டேட்டா என்ரி ஆபரேட்டர்.
எங்கே அந்த புரொகிராமைக்கொடுங்கள். மன்னர் என்ன கொடுக்கிறாரோ அதை
அப்படியே தங்களிடம் கொடுக்கிறேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்


சிவன் தன் கையிலிருக்கும் சிடியை தருமியிடம் கொடுக்கின்றான்.

-------------------------


காட்சி 3


தருமி சிவன் கொடுத்த சிடியை பாண்டிய மன்னனிடம் கொடுக்கிறான். பாண்டிய
மன்னனோ அரசவை டே;டா என்ரி ஆபரேட்டரிடம் அதனை கொடுக்க அவன் அதனை
கணிப்பொறியில் இட்டு சி புரோகிராமை ஓபன் செய்கிறான்.


#include
void main()
{
a = 13*3;
printf("%d\n",a);
}பாண்டிய மன்னன் உணர்ச்சிவசப்படுகிறான்

பாண்டிய மன்னன் : ஆ என்ன அருமையான லாஜிக் ஆழ்ந்த சின்டக்ஸ் தீர்ந்தது சந்தேகம்

தருமி : மன்னா பரிசு

பாண்டிய மன்னன் : யார் அங்கே ஆயிரம் அமெரிக்க டாலர்கள் எடுத்து வாருங்கள்

தருமி ( மனதுக்குள்) : முதல்ல இந்த சிடிகாரன் கடனை தீர்க்கணும்

பாண்டிய மன்னன் : ஆ என்ன அருமையான லாஜிக் ஆழ்ந்த சின்டக்ஸ் தீர்ந்தது சந்தேகம்

தருமி : மன்னா பரிசு

பரிசு வருகிறது. தருமி பரிசை பெறுவதற்கு தயாரகி விடுகிறான்.திடீரென்று
நக்கீரர் எழுந்திருக்கிறார்

நக்கீரன் : மன்னா சற்றுப்பொறுங்கள் புரொகிராமரே சற்று இப்படி வருகிறீர்களா..?

தருமி : முடியாது பரிசை வாங்கிகொண்டுதான் வருவேன்..மன்னா போடு

நக்கீரன் : அதில்தான் பிரச்சனை இருக்கிறது

தருமி நக்கீரன் அருகே செல்கிறான்.

தருமி : வேந்தே என்னய்யா பிரச்சனை?

நக்கீரன் : இந்த புரோகிராமை எழுதியது நீர்தானோ?

தருமி : நான் நான் நானேதான் எழுதினேன் பின்ன இண்டர்நெட்டுல இருந்து டவுண்லோட்
பண்ணிகிட்டா வந்தேன்? என்னுடையதுதான் என்னுடையதுதான்
என்னுடையதுதான் அய்யா!

நக்கீரன் : அப்படியானால் அதை கம்பைல் செய்துவிட்டு பிறகு பரிசை பெற்று செல்லலாமே

தருமி : மன்னருக்கே விளங்கி விட்டது இடையில் நீர் என்ன?
மன்னா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் இவர் வேறு கம்பைல்
செய்ய சொல்லுகிறார்

இதற்கிடையில் நக்கீரன் புரொகிராமை கம்பைல் செய்கிறார். அது பிழை என வருகிறது.

எ நாட் டிபைண்ட்


நக்கீரன் : சரியான ஒரு புரொகிராமுக்கு என் மன்னவன் பரிசளிக்கிறான்
என்றால் அதைக்கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான். அதே சமயம் கென்
தாம்ஸ்ஸனும் டென்னிஸ் ரிச்சும் கட்டிக்காத்த இந்த சாப்;ட்வேர்
திருச்சபையிலே தவறான ஒரு புரொகிராமுக்கு பாண்டியன் பரிசளிக்கிறான்
என்றால் அதைக்கண்டு வருத்தப்படுபவனும் நான்தான்

-------------------------

காட்சி 4


சிவன் : ( நக்கீரனிடம்) எங்கு குற்றம் கண்டீர்? சின்டக்ஸ்லயா இல்ரைல லாஜிக்லயா?

நக்கீரன் : லாஜிக்கில் இல்லை சின்டக்ஸில்தான் குற்றம் இருக்கிறது

சிவன் : என்ன குற்றம்?

நக்கீரன் : எங்கே உமது புரோகிராமை காட்டும்?

சிவன் :#include
void main()
{
a = 13*3;
printf("%d\n",a);
}

நக்கீரன் : இதன் பொருள்?

சிவன் : பதிமூன்றையும் மூன்றையுமு; பெருக்கி எ என்ற வேறியபலில்
வைக்கிறேன். புpறகு எவை பரிண்ட
செய்கிறேன்

நக்கீரன் : இதன்மூலம் தாங்கள் மன்னருக்கு சொல்ல விரும்புவது?


சிவன் : ஹா ஹா புரியவில்லை? "int a;" வென்கிற டிக்லரேசன்
தேவையில்லை என்பது என்னோட
முடிவு

நக்கீரன் : ஒருக்காலும் இருக்க முடியாது. முதலிலையே டிக்லர் செய்வதனால்
மட்டுமே ஒரு வேரியபிலை உபயோகிக்க முடியுமே தவிர டிக்லர் பண்ணாமல்
உபயோகிக்க முடியாது

சிவன் : சி ப்ளஸ் ப்ளஸ் - யிலும் அப்படித்தானோ?

நக்கீரன் : ஆம்

சிவன் : ஜாவாவில்

நக்கீரன் : ஜாவா என்ன..எல்லா ஹை லெவல் லாங்குவேஜிலும் அப்படித்தான்.

சிவன் : உனது ப்ராஜக்ட் மேனேஜருக்கும் அப்படித்தானோ?

நக்கீரன் : ப்ராஜக்ட் மேனேஜர் என்ன..நான் அன்றாடம் வழிபடும்
கெர்னிக்குக்கு இடப்பக்ம் அமர்ந்திருக்கிறானே ரிட்சி அதே விதிப்படித்தான்
(Kernigh Ritchie )

சிவன் : நிச்சயமாக?

நக்கீரன் : நிச்சயமாக

சிவன் : உமது சாப்ட்வேர் புலமை மீது ஆணையாக?

நக்கீரன் : எனது சாப்ட்வேர் கன்ஸல்டன்ஸிமீது ஆணையாக

சிவன் : நக்கீரா என்னை நன்றாக பார்..
( மின்னல் தெறித்து சிவன் ஒளிப்பிழப்பாகிறார்;)
நான் எழுதிய சி புரோகிராம் குற்றமா?


நக்கீரன் : நீர் என் மவுஸை புடுங்கினாலும் ஹார்ட்டிஸ்கை எரித்தாலும்
குற்றம் குற்றமே

( சிவன் நக்கீரனின் கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்க்கை எரிக்கிறார்)

பாண்டியன் : இறைiவா பிழை பொறுத்தருள வேண்டும். சுPனியர் சிஸ்டம்
அனைலைஸ்ட் நக்கீரனின் ஹார்ட்டிஸ்க்கை திரும்ப தந்துவிடு

( சிவனின் உருவம் பெரிதாகிறது)

சிவனின் : பாண்டியா.. நக்கீரனின் ஹார்ட்டிஸ்க் இப்போது சரியாகிவிடும்

( ஹார்ட்டிஸ்க் சரியாகிவிடுகிறது)

நக்கீரன் : யுனிக்ஸ{ம் நீயே..விண்டோஸ{ம் நீயே
சியும் நீயே..ஜாவாவும் நீயே
வேரியபிலும் நீயே..கான்ஸ்டன்டும் நீயே
க்ளைண்டும் நீயே புரோகிராமரும் நீயே
வாழ்க தமிழகம் வளர்க புரோகிராமிங்
இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்


Thursday, August 11, 2005

என்று வரப்போகிறாய் நீ?1999 ம் வருடம் சதக்கத்துல்லா கல்லூரியில் நான் கல்லூரியின் மாணவர் அணி செயலாளராக இருந்த சமயம்.

ஒரு மாலை நேரம்... தேவதைகள் முன்னால் சென்றுகொண்டிருக்க..அவர்களின் நிழலை அடித்து விரட்டி விட்டுவிட்டு நாங்கள் பின்தொடர்ந்துகொண்டிருக்க...

டேய் ஞானி எப்படிடா இருக்க - குமார்

நல்லாயிருக்கேன்..ஆமா உனக்கு ஹாஸ்டல்தானே..இங்க எங்கடா வர்ற ? - நான்

கேண்டீன் வரைக்கும் போகனும்டா- குமார்

கையிலிருந்து ஒரு கருவியை எடுத்தான்.

டேய் இத ப்ரஸ் பண்ணுடா

என்னடா இது


ப்ரஸ் பண்ணேண்டா

நான் ப்ரஸ் பண்ண அது கத்தியது...

ஐ லவ் யு - ஐ லவ் யு

- தேவதைகள் எல்லாம் திரும்பி சிரித்தார்கள்.

என்னடா இது

ஆமாடா அப்படித்தான் கத்தும்...சரிடா நான் வர்றேன்.
ஒரு பெண்ணை நோக்கி செல்கிறான் சைக்கிளில் விரட்டிக்கொண்டு.

-------------

அண்ணே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் - ஜுனியர் மாணவன்

என்னடா சொல்லு

அண்ண அந்த பி.ஏ லிட் படிக்கிறான்ல குமார் அவன் எங்கக்ளாஸ் பொண்ணு பெனா..கிட்ட லவ் லட்டர் கொடுத்திருக்கான்..நேற்று அவ வீட்டுக்கு போகும்போது பின்னாலயே போயிருக்கான். ஐ லவ் யு - ஐ லவ் யு கத்தியிருக்கான்
கொஞ்சம் கண்டிச்சு வைங்கன்ன ( அவன் கொடுத்த லவ் லட்டரையும் கொடுக்கிறான் அது இன்னமும் பிரிக்கப்படவேயில்லை)
-

( அடப்பாவி என்கிட்ட போய் சொல்றியாடா..அந்த நாய் குமார் இதுக்குத்தான் என் பின்னால வந்து அந்த கருவிய ப்ரஸ் பண்ணச் சொன்னானா? மாட்டிவிட்டுட்டான்டா பரதேசி )

சரிடா நான் கண்டிச்சு வைக்கிறேன்.நீ யாருகிட்டயும் சொல்லாதே - மாணவர் செயலாளர் என்ற கடமையில் பொறுப்பாய் பதில் அளித்தேன்.

---------------- -------------
மறுநாள் குமாரிடம்

டேய் நீ ஒரு பொண்ணுகிட்ட லவ் லட்டர் கொடுத்ததா அவங்க க்ளாஸ் பையன் வந்து என்கிட்ட சொன்னான்.. அந்த பொண்ணு பிரின்ஸ்பால்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றதா சொல்லுறா..அதனால விட்டுடுடா..சரியா..

டேய் அவள நான் லவ் பண்றேன்டா - குமார் வருத்தத்துடன்

அதுசரிடா நீ ஏண்டா அவளுக்கு உன்னை பற்றி அறிமுகம் கிடைக்கிறதுக்கு முன்னால அவ பின்னால போய் கத்துறது- லவ் லட்டர் கொடுக்கிறது.. இப்படி பண்ணினா உன்னைய பத்தி தப்பான அபிப்ராயம்தான் தோணும். நீ அவசரப்பட்டுட்டடா..சரி பார்த்து நடந்துக்கடா


அவனும் கண்ணீரோடு தலையாட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.


----------------------- -------------

பழைய கடிதங்களை புரட்டியபோது அவள் படித்திருப்பாள் என்று இன்னமும் அந்த குமார் நம்பிக்கொண்டிருக்கும் அந்தக் கடிதத்தை என் கைகளில் எடுத்தேன்..கைகள் நடுங்கியது..

ஒருவேளை இந்தக் கடிதத்தை படித்திருந்தால் அவள் அவனை காதலித்திருப்பாளோ..?
ஒருவேளை அந்தபெண்ணிடம் நான் சென்று ஏதாவது சொல்லியிருந்தால் அவனது காதல் நிறைவேறியிருக்குமோ?

கண்ணீர் வந்தது...

இதோ அவன் எழுதிய கடிதம்..


ஹலோ பெனா.....


உங்ககிட்ட பேசணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பட் பேசறதுக்கு முடியல. நான் 2 வாரத்துக்கு முன்னாடி ஒரு தடவை சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது நம்ம காலேஜ் கேட் பக்கத்துல நான் ஏ கொஞ்சம் நில்லு என்று சொன்னேன். மறுநாள் உங்களோட பீலிங்ஸ் எல்லாம் என்னை திட்டினதாவே இருந்தது. நான் அப்படி சொன்னதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் வெரி சாரி..

நியு இயர்க்காக கிரீட்டிங்ஸ் உங்களோட ப்ரண்ட்ஸ் பேக்ல வைச்சிருந்தேன். அதுல கெஸ் மி ன்னு எழுதியிருந்தேன். நீங்க கெஸ் பண்ணுணீங்களா? பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கடைசியா நான் கேட்பது உங்களிடம் ஒருமுறையாவது பேசணும் என்பதுதான். எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா? நீங்க என்னிக்கு டிசைட் பண்றீங்களோ அன்னிக்கே பேசிக்கலாம். உங்ககிட்ட பேசறதுக்காக பலதடவை டிரை பண்ணிப்பார்த்தேன். பட் உங்களோட பீலிங்ஸ் என்னைப் பேசவிடாமல் பண்ணிவிட்டது. எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்களோட கண்கள் மற்றும் அந்த கிரீன் கலர் சுடிதார்தான். அந்த டிரஸ்ல நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க. என் நேம் என்னன்னு உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்ப என்னோட நேம் எழுதியிருக்கிறேன். ப்ளீஸ் நான் அன்னிக்கு சொன்னதுக்கு மறுபடியும் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன்.

எனக்காக ஒரு சான்ஸ் உங்ககிட்ட பேசறதுக்கு தருவீங்கன்னு நினைக்கிறேன். எங்கிட்ட சொல்ல உங்களுக்கு ஏதாவது ப்ராபளம் இருந்தா உங்களோட போன் நம்பர் தாங்க இல்ல என்னோட போன் நம்பர் 540405 நாளைக்கு 6 மணிக்கு மேல் உங்களோட போனுக்காக காத்துக்கொண்டிருப்பேன். நீங்க பேசினால் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு நினைத்து கொள்ளுவேன். ப்ளீஸ் எனக்காக என்கிட்ட ஒருமுறை பேசுங்க இல்ல பேசுறததுக்கு ஒரு சான்ஸ் தாங்க.

கே. குமார்இப்போது அந்தப்பெண்ணிற்கும் திருமணம் முடிந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.அந்த குமாரைப் பற்றிய தகவல்தான் இன்னமும் எனக்கு கிட்டவில்லை..

இலக்கியம் படிக்க வந்து எவளது
இதயத்தையோ பறிக்கச் சென்றவனே?
எங்கிருக்கிறாய் நண்பா..?

உன் இதயத்திற்குள்ளும்
அறை நண்பர்களுக்குள்ளும்
ஒளித்தே வைத்துவிட்டாயோ உன் காதலை..?

உன்
கடிதம் பிரிக்கவே ஆசைப்படாதவளின்
இதயம் பிரிக்க ஆசைப்பட்டுவிட்டாயோ..?அவளிடம் பேசுவதற்கு நீ
தேதி கேட்டாய்..?

தேவதைகள் எப்போதும்
தேதி கொடுப்பதில்லை நண்பா!
நீதான்
தேடிச்சென்றிருக்கவேண்டும்!

அவளுக்குத்தெரியாமல்
அவள் கைப்பையில்
கடிதம் வைக்கத் தெரிந்தவனே!
அவள் இதயத்தில்
காதல் வைக்க தெரியவில்லையடா?

நீ
சுற்றிக்கொண்டேயிருந்திருக்கிறாய்
அவள் பின்னாலும்
அவள்
தொலைபேசியில் அழைப்பாள்
என்ற நம்பிக்கையில்
விடுதியின் தொலைபேசி அறை வாசலிலும்

உனக்கு
எவ்வளவு வலித்திருக்கும்
காலும் காதலும்?

அவள் இதயம்வாங்கும் முயற்சியை
நீ
படிப்பில் காட்டியிருந்தால்
பட்டமாவது வாங்கியிருக்கலாமடா..?

இப்பொழுது
அரியர்ஸ் எல்லாம்
எடுத்துவிட்டாயா நண்பா..?
காதலில் கேட்கவில்லை
படிப்பை கேட்கிறேன்?


நான் எத்தனை முறை கவனித்திருக்கிறேன் தெரியுமா?
அவள் சாலை கடந்து செல்லும்போதெல்லாம் அவளைவிடவும் உன் கண்கள்தான் சாலையின் இருபக்கமும் பார்க்கும் ஏதாவது வாகனம் வருகிறதா இல்லையா என்று?

அவள் அந்த
மண்சாலையில்
மறைந்து செல்லும் வரையிலும்...
உன்
கண்கள் அந்த சேலையில்தானடா
ஒட்டிக்கொண்டேயிருக்கும்!


என்னால் மறக்கவே முடியாதடா! விடுதியில் கடைசி நாளில் நீ தனியாய் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாய் நண்பா..

அதை உனக்குத்தெரியாமல் ஜன்னல் வழியே பார்த்து கண்ணீர்விட்டவர்களுள் நானும் ஒருவன்... நீ எங்கிருக்கிறாய்..?

காதல் கிடைக்கவில்லை என அழுதாயா?
நண்பர்களை பிரிகிறோமே என அழுதாயா?


உனக்கு அவள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தால் உன் வாழ்க்கை வீணாகிவிடும் நண்பா! நீ காதலித்த அந்த பெண் மீது நீ வைக்கப்போகும் பாசத்தை விடவும் அதிகமாய் பாசம் வைக்க உலகில் எவனையோ இறைவன் தேர்ந்தெடுத்துவிட்டான் என்ற சந்தோஷத்தில் சமாதானப்படுத்திக்கொள் உன் இதயத்தை!உன்னிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்குத்தான் உன் விடுதிக்கு வந்தேன்.. நீ ஆட்டோகிராப் எழுதியிருந்தால் கூட அந்த காகிதங்கள் தொலைந்து போயிருக்கலாம்..ஆனால் உன் கண்ணீரை என் இதயத்தில் ஆட்டோகிராப்பாக்கிவிட்டாய்!நீ அவளுக்கு எழுதிய காதல் கடிதம் என்னிடம் இருப்பது நியாயமல்ல
இந்தக் கடிதம் உன்னிடம் இருப்பதுதான் மரியாதை.ஆகவே உனக்காக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ... ஆட்டுமந்தைகளை மீண்டும் கூட்டிற்கு அழைத்துவந்து பாதுகாப்பாய் அடைத்துவைக்கும் மேய்ப்பானைப்போல..


உன்னை வாழ்க்கையின் எந்தப்பகுதியிலாவது சந்தித்தால் கண்டிப்பாய் ஒப்படைத்துவிடுவேன். உன்னை என்று காண்பேனோ..?

நம்புகிறேன்.நீ கண்டிப்பாய் மறக்கமாட்டாய்...அந்த கடிதத்தையும் அவளையும்.

நீ துரத்தி சென்ற அந்த சைக்கிள் தடத்தில் எத்தனை பாதங்கள் பதிந்தாலும் இன்னமும்
உன் இதயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமண்ணில் பதிந்து போன லாரியின் தடம்போல.

காத்திருக்கிறேன் நண்பா பண்டிகைநாளில் உண்டியல் உடைக்க காத்திருக்கும் குழந்தைகளைப்போல.. என்று வரப்போகிறாய் நீ?


இதயம் அழுகையோடு

ரசிகவ் ஞானியார்


(சில வருடங்களுக்கு முன்பு தமிழ்மணி என்ற சிறுவன் சென்னை மண்ணடியில் உள்ள ஒரு குழியில் தடுமாறி விழுந்துவிட்டான். பின் தீயணைப்பு துறையினர் வந்து குழிக்குள் ஆக்ஸிஜன் கொடுத்து அந்த குழியினை அகலப்படுத்தி ஒரு வழியாக அச்சிறுவனை மீட்டனர் )


குழி வெட்டிகள்


குழிக்குள் விழுந்துவிட்ட அவனைப்பற்றி
குமுறிப்போய் எழுதுகிறேன்

மண்ணடியில் மாட்டிக்கொண்ட தமிழை
கென்னடி வந்தா மீட்டுப்போவது?

தள்ளி விட்டார்களா?
தடுமாறி விழுந்தானா?


எது கை அது
எங்கே எனத்தெரியவில்லை
ஆனால்
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
கதறிக்கொண்டிருக்கிறான்

தோண்டியவன் குற்றவாளியா? - சரியாகத்
தோண்டாதவன் குற்றவளியா?


தடுக்கி விழுந்தவன் மீதும்...
தவறில்லை!
குழிவெட்டியவனிடமும்..
குற்றமில்லை!
ஆனால்
மீட்கமுடியாதவனை மட்டும்..
மன்னிக்க மாட்டேன்!

அக்கறையோடு சில பாரதிகள்
ஆக்ஸிஜன் கொடுப்பதாலே
உயர்தமிழ் இன்னமும்...
உயிர் வாழ்கிறான்!

அரசாங்கமும் ஆங்கிலத்தில்
ஆணையிட்டுக்கொண்டுதானிருக்கிறது
தமிழைக்காப்போம்
தமிழைக்காப்போம் என்று!

புதமைக்குழிக்குள்
புதையுண்டுப்போகின்ற
துமிழை
தயவுசெய்து காப்பாற்றுங்கள்

நான்
கல்தோண்டி மண்தோண்டி மீட்ட
தமிழ்மணியைப்பற்றி பேசவில்லை!
கல்தோன்றா மண்தோன்றா காலத்து...
தமிழைப்பற்றி பேசுகின்றேன்!

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Wednesday, August 10, 2005

காதலிசம்


"காதலில்
தோல்வியடைந்தவர்களுக்கு
இலவசம் "
என்று
ரெயிலில் எழுதிவைத்தால்
இந்திய ரெயில்கள் எல்லாம்
ஹவுஸ்புல்லாகத்தான் ஓடும்


- ரசிகவ் ஞானியார் -

Tuesday, August 09, 2005

மரண அஞ்சலி(குஜராத் கலவர செய்தியை நாளிதழில் படித்துவிட்டு எழுதியது )


பெயர் : மனிதநேயம்

தோற்றம் : புத்தன் இயேசு நபிகள் பிறந்த நாட்கள்

மறைவு : குஜராத் கலவர நாளில்

நபிகள் புத்தன் இயேசுவின்
நம்பிக்கைகுரிய மகனான
மனிதநேயம்..
குஜராத்தில்
அகால மரணமடைந்துவிட்டதால்
அன்னாரின் இறுதிசடங்கில்
அனைவரும்
தீக்காயத்தோடு
கலந்துகொள்ளுமாறு...
இதயக் காயத்தோடு அழைக்கிறோம்!


- ரசிகவ் ஞானியார்-

கண்ணகிகளை இடிக்காதீர்கள்( மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் கண்ணகி சிலை தகர்க்கப்பட்டது ஞாபகமிருக்கிறதா..? ஆனால் இக்கவிதைக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை )


பம்பரம்(?); விடுகின்ற
பாண்டிய மன்னன்களின் வீதியிலே...
ஹேர்பின் மாட்டிய
கண்ணகிகள் வந்து...
நீதி கேட்கிறாhர்கள்!
கையில் ஈவ்டீசிங் புகார்...


நாங்கள்
மண்ணில் பார்வை ஊன்றி
மௌனமாய் சென்றால்
திமிர்பிடித்தவள் என்று
தூற்றுகிறீர்கள்!

சரி பரவாயில்லை!
உங்களைப் பார்த்து
சிரித்துவிட்டுப்போனாலோ
அயிட்டம் என்று
அழைக்கிறீர்கள்!

படிக்கட்டில் தொங்குவதால்
பரிதாபப்பட்டு
புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டால்...
காதலிப்பதாக நினைத்து
கடிதம் கொடுக்கிறீர்கள்!

சரி!
புத்தகம் வாங்க மறுத்து..
தலைதிருப்பிக்கொண்டாலோ
ஆசிட் ஊற்றி
ஆசி கொடுக்கிறீர்கள்!

பஸ்ஸ்டாண்டு பார்வையாளர்பகளே!
எங்களுக்கு
இட ஒதுக்கீடு
தேவையில்லை
தயவுசெய்து
இடைஒதுக்கீடு செய்யாதீர்கள்!


எங்களின்
எதேச்சை பார்வைகண்டு
ஏதேதோ நினைத்துவிட்டு
கடைசியில்
ஏமாற்றிவிட்டாள் என்று
எகத்தாளம் பேசாதீர்கள்!


உங்களை
காதலிப்பவளெல்லாம்
கண்ணகிகள்!
மறுத்தவர்கள் எல்லாம்
மாதவிகளா..?


உங்களுக்கு
நேரமில்லையென்றால் எங்களை
நேசித்துவிட்டுப்போங்களேன்!
ஆனால் எங்களையும்
காதலிக்கச் சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்!


சவரம் செய்ய
சில்லறையில்லை என்றால்
சொல்லியிருக்கலாமே?
அதைவிட்டுவிட்டு
அவள்
துரோகத்தில் வளர்ந்த தாடி என
திரித்து கூறாதீர்கள்!

காற்று வீசுவதற்காய்
காத்திருங்கள்!
விருப்பமில்லையா?
விசிறி வைத்துக்கொள்ளுங்களேன்!
மீறினால்
புயலோடு ...
போராடவேண்டியதிருக்கும்!


நீங்கள்
கண்ணகிகளை எதிர்பார்க்கிறீர்கள்..
கிடைத்துவிடுகிறார்கள்!
ஆனால்
ராமனை எதிர்பார்த்த
எங்களுக்கோ
கோவலன்களே கிடைக்கிறார்கள்!

அதற்காக உங்களை
ராமனாகச் சொல்லவில்லை!
ஆனால்
கண்ணகிகளை குறைகூறாதீர்கள்!

ஏற்கனவே நாங்கள்
இடிந்து போயிருக்கிறோம்! (?)

-ரசிகவ் ஞானியார்-

Monday, August 08, 2005

அந்த திகில் அனுபவம்

பாதி இருட்டியும் கொஞ்சம் வெளிச்சமுமாக அந்த மாலை நேரம் .சுமார் ஏழு மணி இருக்கும்.

"டேய் ஞானி இதுதான்டா சரியான நேரம்னு நினைக்கிறேன்..சத்தம் வர ஆரம்பிச்சுறுச்சுடா ...கிளம்புவோமா"

கையில் ஆயுதங்களோடு அழைக்கிறார்கள் நண்பர்கள்.

நானும் என்னால் முடியுமளவிற்கு ஆயதங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.இருந்தாலும் மனதில்; ஒரு வித பயம் அப்பிக்கொண்டது. செய்வது தவறு எனத் தெரிந்தும் நண்பர்களின் தூண்டுகோல் அவ்வாறு செய்யத் தூண்டியது.

அந்த ஓடையை கடந்து செருப்பில்லாத காலில் முட்கள் குத்த புதர்கள் அருகே நெருங்கி கொண்டிருக்கும் சமயம்; காதில் கிசுகிசுத்தான் நிசார்.

"டேய் காலை ரொம்ப தேய்ச்சிட்டு வராதீங்கடா...நம்ம காலடிச்சத்தம் கேட்டால் அவ்வளவுதான்..நம்ம திட்டம் பாழாபோயிடும்..மெதுவா நகருவோம்டா.."

மெது மெதுவாய் நகர ஆரம்பித்தோம் எதிரிகளை குறி வைத்துக்கொண்டே.

நிசார் திட்டமிட்டு வழிநடத்தினான்.

டேய் ஞானி நீ வலதுபுறமா போய் நில்லுடா!... செய்யதுவை முன்பகுதிக்கு போகச்சொல்லுவோம். குலாமை அந்த புதரை சுற்றி வளைக்கச்சொல்லிடுவோம்.

எல்லாப் பக்கமும் ஆட்கள் சூழ்ந்து கொண்டு தயாராக நின்றோம்.

டேய் சத்தம் கேட்டவுடன் நான் ரெடி என்று கத்துவேன்...உடனே ஆயுதங்களை வீசுவதற்கு ஆயத்தமாகி விடுங்கள் - நிசார் இன்னமும் சீரியஸானான்

நாங்கள் குறிபார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்தில் அந்த உருவங்கள் அங்குமிங்கும் நடமாடத்தெடாடங்கின. முனகல் சத்தங்கள் கேட்கத் தொடங்கிற்று..


ரெடி என்று எப்போது நிசார் கத்துவானோ என எதிர்பார்க்கத் தொடங்கினோம்.

கொஞ்சநேரம் மௌனமாய் நகர்ந்தது...காற்று வேறு பலமாய் வீசியது.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிசார் தென்படுகிறானா என புதரை தாண்டி நோட்டமிட்டேன்..அதோ கையில் ஆயதங்களோடு குனிந்து குனிந்து அந்த உருவங்களின் பக்கம் நெருங்கி கொண்டிருக்கிறான் நிசாhர்

திடீரென்று அந்த சத்தம்..ஆ ஆ ஆ - எங்கிருந்தோ செய்யது கத்தினான்.

எனக்குள் பயம் மேலும் பரவிற்று..

என்னடா ஆச்சு - நான்

முள் குத்தி ரத்தம் வருதுடா..- செய்யது

அட நாயே கொஞ்சம் அடக்கிக்கோடா..நாம இப்ப கிட்ட நெருங்கிட்டோம்..- நான்

திடீரென்று நிசார் கத்தினான் ரெடிடிடிடிடிடிடி

நான் உஷாராகி கையில் வைத்திருந்த ஆயதங்களை சராமாரியாக வீசியெறிந்தேன்...

ஆங்காங்கே இருந்து ஆயதங்கள் பறந்து வந்தன..ஆயதங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த உருவங்கள் எந்த பக்கம் ஓடுவது என தெரியாமல் அங்கும் இங்கும் தவித்துக்கொண்டிருந்தன...

கடைசியில் என் பக்கம் அவைகள் ஓடி வரத்தொடங்க நான் பதறியபடி செய்யது இருக்கும் பக்கம் ஓடத்தொடங்கினேன்..

டேய் டேய் அந்த உருவங்கள்; என்னை நோக்கி ஓடி வருதுடா..என்கிட்ட இருந்த ஆயதங்கள் வேறு தீர்ந்துவிட்டது - நான்

ச்சே தப்பிக்க விட்டுட்டடேயடா.. - செய்யது

நான் பக்கத்தில நெருங்கிட்டேன்டா ..ச்சே திட்டமெல்லாம் பாழாயிடுச்சுடா
- நிசார் ஆதங்கத்தில் கூறியபடி புதரிலிருந்து வெளி வந்தான்

நான் என்னடா பண்ணுவேன்..உம் பக்கம் ஓடி வந்தா நீயும் அப்படித்தான்; பண்ணியிருப்ப
- நான்

அப்படி பயந்தா நான் அவ்வளவு தூரம் நெருங்கி போயிருப்பேனாடா..போடா பயந்தாங்கொள்ளி - நிசார் திட்டினான்

நீதான் பயந்தாங்கொள்ளி..போனவாரம் நான்தான் அவ்வளவு தூரம் போனே; தெரியுமா..

சண்டை போடாதடா...சரிடா அடுத்ததடவை முயற்சி பண்ணுவோம்..அந்த பன்றி குட்டிகள் எங்கே போய்விடப்போகிறது..இங்கேதானே சுற்றிக்கொண்டிருக்கும்..ஆனா அடுத்ததடவை செய்யதுவிடம் நிறைய கல் கொடுக்கணும் ..சரியா..? - செய்யது சமாதானப்படுத்தினான்

ஒருவழியாக எங்களின் பதிமூன்றாம் வயதில் ஈடுபட்ட பன்றிப்போர் தோல்வியில் முடிந்துவிட்டாலும் மகிழ்ச்சியில் 1990 ம் ஆண்டு இரவு அந்த கிராமத்து டீக்கடையில் கடன் வைத்து டீ குடித்து வெற்றியை / தோல்வியை கொண்டாடினோம்.


- ரசிகவ் ஞானியார் -

Sunday, August 07, 2005

திருவிளையாடல்பெண்ணே! உன்
கூந்தல் மணம்
இயற்கையா? செயற்கையா?

ஒரு
திருவிளையாடலே..
முடிந்துவிட்டதடி!

பேசாமல் நீ
குளிச்சிட்டு வந்திருக்கலாம்!- ரசிகவ் ஞானியார் -

காதலிசம்காதலும் யானையும்
ஒன்றுதான்!
இரண்டுமே
தன் தலையில் தானே...
மண் அள்ளிப்போடுகிறது.!- ரசிகவ் ஞானியார் -

Tuesday, August 02, 2005

பசிவயல்கள் எல்லாம்
வீடுகளாகிவிட்ட…
பகுதிகளை
கடந்து செல்லும்போது
ஏனோ தெரியவில்லை?
வயிறு பசிக்கிறது….

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு