Monday, August 08, 2005

அந்த திகில் அனுபவம்





பாதி இருட்டியும் கொஞ்சம் வெளிச்சமுமாக அந்த மாலை நேரம் .சுமார் ஏழு மணி இருக்கும்.

"டேய் ஞானி இதுதான்டா சரியான நேரம்னு நினைக்கிறேன்..சத்தம் வர ஆரம்பிச்சுறுச்சுடா ...கிளம்புவோமா"

கையில் ஆயுதங்களோடு அழைக்கிறார்கள் நண்பர்கள்.

நானும் என்னால் முடியுமளவிற்கு ஆயதங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.இருந்தாலும் மனதில்; ஒரு வித பயம் அப்பிக்கொண்டது. செய்வது தவறு எனத் தெரிந்தும் நண்பர்களின் தூண்டுகோல் அவ்வாறு செய்யத் தூண்டியது.

அந்த ஓடையை கடந்து செருப்பில்லாத காலில் முட்கள் குத்த புதர்கள் அருகே நெருங்கி கொண்டிருக்கும் சமயம்; காதில் கிசுகிசுத்தான் நிசார்.

"டேய் காலை ரொம்ப தேய்ச்சிட்டு வராதீங்கடா...நம்ம காலடிச்சத்தம் கேட்டால் அவ்வளவுதான்..நம்ம திட்டம் பாழாபோயிடும்..மெதுவா நகருவோம்டா.."

மெது மெதுவாய் நகர ஆரம்பித்தோம் எதிரிகளை குறி வைத்துக்கொண்டே.

நிசார் திட்டமிட்டு வழிநடத்தினான்.

டேய் ஞானி நீ வலதுபுறமா போய் நில்லுடா!... செய்யதுவை முன்பகுதிக்கு போகச்சொல்லுவோம். குலாமை அந்த புதரை சுற்றி வளைக்கச்சொல்லிடுவோம்.

எல்லாப் பக்கமும் ஆட்கள் சூழ்ந்து கொண்டு தயாராக நின்றோம்.

டேய் சத்தம் கேட்டவுடன் நான் ரெடி என்று கத்துவேன்...உடனே ஆயுதங்களை வீசுவதற்கு ஆயத்தமாகி விடுங்கள் - நிசார் இன்னமும் சீரியஸானான்

நாங்கள் குறிபார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்தில் அந்த உருவங்கள் அங்குமிங்கும் நடமாடத்தெடாடங்கின. முனகல் சத்தங்கள் கேட்கத் தொடங்கிற்று..


ரெடி என்று எப்போது நிசார் கத்துவானோ என எதிர்பார்க்கத் தொடங்கினோம்.

கொஞ்சநேரம் மௌனமாய் நகர்ந்தது...காற்று வேறு பலமாய் வீசியது.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிசார் தென்படுகிறானா என புதரை தாண்டி நோட்டமிட்டேன்..அதோ கையில் ஆயதங்களோடு குனிந்து குனிந்து அந்த உருவங்களின் பக்கம் நெருங்கி கொண்டிருக்கிறான் நிசாhர்

திடீரென்று அந்த சத்தம்..ஆ ஆ ஆ - எங்கிருந்தோ செய்யது கத்தினான்.

எனக்குள் பயம் மேலும் பரவிற்று..

என்னடா ஆச்சு - நான்

முள் குத்தி ரத்தம் வருதுடா..- செய்யது

அட நாயே கொஞ்சம் அடக்கிக்கோடா..நாம இப்ப கிட்ட நெருங்கிட்டோம்..- நான்

திடீரென்று நிசார் கத்தினான் ரெடிடிடிடிடிடிடி

நான் உஷாராகி கையில் வைத்திருந்த ஆயதங்களை சராமாரியாக வீசியெறிந்தேன்...

ஆங்காங்கே இருந்து ஆயதங்கள் பறந்து வந்தன..ஆயதங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த உருவங்கள் எந்த பக்கம் ஓடுவது என தெரியாமல் அங்கும் இங்கும் தவித்துக்கொண்டிருந்தன...

கடைசியில் என் பக்கம் அவைகள் ஓடி வரத்தொடங்க நான் பதறியபடி செய்யது இருக்கும் பக்கம் ஓடத்தொடங்கினேன்..

டேய் டேய் அந்த உருவங்கள்; என்னை நோக்கி ஓடி வருதுடா..என்கிட்ட இருந்த ஆயதங்கள் வேறு தீர்ந்துவிட்டது - நான்

ச்சே தப்பிக்க விட்டுட்டடேயடா.. - செய்யது

நான் பக்கத்தில நெருங்கிட்டேன்டா ..ச்சே திட்டமெல்லாம் பாழாயிடுச்சுடா
- நிசார் ஆதங்கத்தில் கூறியபடி புதரிலிருந்து வெளி வந்தான்

நான் என்னடா பண்ணுவேன்..உம் பக்கம் ஓடி வந்தா நீயும் அப்படித்தான்; பண்ணியிருப்ப
- நான்

அப்படி பயந்தா நான் அவ்வளவு தூரம் நெருங்கி போயிருப்பேனாடா..போடா பயந்தாங்கொள்ளி - நிசார் திட்டினான்

நீதான் பயந்தாங்கொள்ளி..போனவாரம் நான்தான் அவ்வளவு தூரம் போனே; தெரியுமா..

சண்டை போடாதடா...சரிடா அடுத்ததடவை முயற்சி பண்ணுவோம்..அந்த பன்றி குட்டிகள் எங்கே போய்விடப்போகிறது..இங்கேதானே சுற்றிக்கொண்டிருக்கும்..ஆனா அடுத்ததடவை செய்யதுவிடம் நிறைய கல் கொடுக்கணும் ..சரியா..? - செய்யது சமாதானப்படுத்தினான்

ஒருவழியாக எங்களின் பதிமூன்றாம் வயதில் ஈடுபட்ட பன்றிப்போர் தோல்வியில் முடிந்துவிட்டாலும் மகிழ்ச்சியில் 1990 ம் ஆண்டு இரவு அந்த கிராமத்து டீக்கடையில் கடன் வைத்து டீ குடித்து வெற்றியை / தோல்வியை கொண்டாடினோம்.


- ரசிகவ் ஞானியார் -

No comments:

தேன் கூடு