Saturday, April 29, 2006

ஒரு உழைப்பாளி பேசுகிறேன்.




முதலாளிகளெல்லாம்...
மூணாவது காட்சிக்கு!
உழைப்பாளிகளோ...
வீட்டுக் காவலுக்கு!
இன்று
உழைப்பாளர் தினவிடுமுறையாம்!


வருத்தங்களோடு ஒரு
உழைப்பாளி பேசுகின்றேன்!

நீங்கள்
பரிதாபப்பட்டு வீசுகின்ற
பிரியாணியை விட - எங்கள்
வியர்வையில் தோன்றிய
சோத்துக்கஞ்சிக்கு...
சுவை அதிகம்தான்!

ஆகவே
தயவுசெய்து எதையும்
தானமாய் தராதீர்கள்!
தன்மானத்தோடு வாழுகிறோம்!


இன்று எந்த
முதலாளிகளும்
அட்சயப்பாத்திரத்தை..
அனுப்பவேண்டாம்!

எங்கள்
வியர்வைக்கு யாரும்..
விழா எடுக்க வேண்டாம்!

மூட்டை சுமந்து சுமந்து
இந்திய ஜனநாயகத்தைவிட
கூனிப்போய்விட்ட எங்கள்...
முதுகுக்கு யாரும்
முத்தம் கொடுக்க வேண்டாம்!

வெயிலில் கறுத்து
புண்பட்ட தோலுக்கு...
பொன்னாடை வீச வேண்டாம்!

நீங்கள்
உடுத்து கிழித்த வேட்டியை...
போனஸ் எனச்சொல்லி
பிச்சையிடவும் வேண்டாம்!

எதுவுமே வேண்டாம்
ஒரே ஒரு
வேண்டுகோள்!

தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!"



-ரசிகவ் ஞானியார்

Thursday, April 27, 2006

முதலாண்டு நிறைவு




சென்ற ஆண்டு ஏப்பிரல் மாதம் இந்த வலைப்பூவினை ஆரம்பித்தேன். அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. அதனைப்பற்றிய பதிவு ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன் நண்பர் பிரசன்னா அவர்கள் ஞாபகப்படுத்திவிட்டார்கள். ஆகவே இந்த முதலாம் ஆண்டில் இதுவரை கடந்து வந்த நிகழ்வுகளை பற்றிய ஒரு ஞாபகத்தை பதிவாக போடுவதுதான் சிறப்பு என்று கொஞ்சம் பழசை கிண்டுகிறேன்.

2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மாலை வேளையில் தற்செயலாக இணையத்தை நோண்டிக்கொண்டு இருந்தபொழுதுதான் இந்த தமிழ்மணத்தை கண்டறிந்தேன். அதில் சுவாரஸ்மாக வரும் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

பின் நாமும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால்தான் என்ன எனத் தோன்றிற்று. பின்னர் ப்ளாக் ஸ்பாட்டில் தேட ஆரம்பித்தேன்.

நிலவு நண்பன் - பெயர்க்காரணம்

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபொழுதுதான் நண்பர் நிலா ரசிகனின் கவிதை ஒன்று இணைத்தில் உலா வந்து கொண்டிருந்தது. எனக்கு நண்பர்களுடன் மொட்டை மாடியில் நிலாவை ரசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். சின்ன வயதில் இருந்து நண்பர்களுடன் நண்பனின் வீட்டு மொட்டைமாடியில் சுற்றி இருந்துகொண்டு நிலாவை ரசித்துக்கொண்டே எதாவாது கொறித்துக்கொண்டிருப்போம். ஆகவே நிலா சம்பந்தமாக ஏதாவது பெயரிடுவோம் எனத்தோன்றிற்று

நிலா ரசிகன் என வைத்தால் நண்பர் கோபித்துக்கொள்ளக்கூடும் என நினைத்து அது சம்பந்தமாக வேறு பெயர் தேடிக்கொண்டிருந்தேன். நிலா காதலன் என வைக்கலாமா என்று முடிவெடுத்தேன்.

யார் வேண்டுமானாலும்
காதலிக்கலாம்
ஆனால்
ஒருதலைக்காதல்தான்


அந்தப்பெயரில் உடன்பாடில்லாமல் இருந்தபொழுதுதான் எனது ஊரில் நான் நண்பருடன் இணைந்து உங்கள் நண்பன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்துகொண்டிருந்தேன்.. அந்தப்புத்தகம் அப்பொழுது என்னிடம் இருந்தது. அதனால் நிலவையும் நண்பனையும் இணைத்துவிடலாம் என முடிவெடுத்து நிலவுநண்பன் என்று பெயரிட்டேன்.

பதிவுகள்

ஆரம்பித்த உடன் முதல் பதிவாக என்ன வெளியிடலாம் என நினைத்தபொழுது கனடாவில் இருக்கும் நண்பர் புகாரி அவர்கள் என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் என்ற கவிதையை அன்புடன் என்ற குழுமத்தில் வெளியிட்டு என்னை அறிமுகப்படுத்தினார் ஆகவே அந்தக்கவிதையை முதலில் வெளியிட்டேன். என்னுடைய கவிதை நானே எனது வலைப்பூவில் வெளியிட்டாலும் இணையத்தில் அது வெளி வந்ததைக் கண்டும் அதற்குரிய விமர்சனங்களைக் கண்டும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அன்புடன் உறுப்பினர்களின் விமர்சனமும் மற்றும் வலைப்பூவில் முதல் விமர்சனம் தந்த முத்து மற்றும் நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோர்களின் விமர்சனம்தான் என்னை அதிகமாய் எழுதுவதற்குத் தூண்டியது.

முதன்முதலாய் தன் கவிதை பத்திரிக்கையில் வெளிவந்ததைக் கண்டு மகிழ்ச்சியடையும் கவிஞனின் சந்தோஷம் எனக்கும் வந்தது. ஏதோ நாமே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தது போன்ற உணர்வு. இது என்னுடைய பத்திரிக்கை எது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற ஒரு கர்வம் வர ஆரம்பித்தது.

பின்னர் எழுதுகின்ற எல்லா படைப்புகைளயும் அன்புடன் குழுமத்திலும் - நிலவு நண்பனிலும் இட ஆரம்பித்தேன். இப்படியாக பிறை நிலவு முழநிலவாய் வளர்ச்சிப் பெற்றது

வளர்ச்சிகள்

என்னுடைய புகைப்படத்தை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. தேடி கண்டுபிடிக்கும் அவகாசமும் எனக்கு இல்லை. யாரிடமாவது உதவி கேட்கலாமென நினைத்தேன். அப்பொழுது தமிழ்மணத்தில் சந்திரவதனா அவர்களின் வலைப்பதிவு ஒன்று திரட்டப்பட்டது. அவர்கள் வலைப்பூவைக் கண்டபொழுது அசந்து போய்விட்டேன்.
"ஒரு வலைப்பூவுக்கே இப்படித் திணறுகிறோம், இவர்கள் என்னடா! இத்தனை வலைப்பூ வைத்திருக்கிறார்கள்" என்று. சரி இவர்களிடம் உதவி கேட்பதுதான் சரியான வழி என்று தீர்மானித்து அவர்களுக்கு புகைப்படத்தை இணைக்கும் முறையைப்பற்றி விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன்.

உடனே எனக்கு விளக்கமாக பதில் அனுப்பினார்கள். அதிலிருந்து அறிமுகப்பகுதியில் என்னுடைய புகைப்படத்தையும் ஒவ்வொரு படைப்புகளுக்கும் கூகுளிலிருந்து படம் தேர்வு செய்தும் பதிய ஆரம்பித்தேன்.

பின்னர் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அதன்படி செய்தேன்.

நிலவு நண்பனுக்கு ஏற்றவாறு ஏதாவது புகைப்படம் இட்டால் நன்றாக இருக்குமே என யோசித்து சென்னையில் வெப்டிசைனராக பணிபுரியும் நண்பர் செய்யதலியிடம் நிலவை பார்த்துக்கொண்டு ஒரு சின்னப் பையன் நின்று கொண்டிருப்பது போலவும் அந்தநேரத்தில் சிறு சிறு மழைத்துளிகள் விழுவதைப்போலவும் ஒரு படம் வேண்டும் என்றேன். நண்பரும் அழகாய் அருமையான புகைப்படத்தை வடிவமைத்து தந்தார்.

பின் வருகின்றவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காக வெப் கவுன்டர் வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகரிக்க ஆகஸ்ட் 15 ல் மிட்டாய் வாங்கிவிட்டு திரும்புகின்ற குழந்தைகளைப்போல ஆனந்தப்படுவேன்.

பின்னர் எந்தெந்த நாடுகளிலிருந்து வாசகர்கள் வருகிறார்கள் என அறிந்துகொள்ள வழிசெய்தேன்.

யுஏஇ 3
அமெரிக்கா 2
கனடா 1
தாய்லாந்து 1
சிங்கப்பூர் 2
சுவிட்சர்லாந்து 1

என்று வரிசையாக நாடுகளின் பெயர்களைக் காணும்பொழுது அட நம்ம படைப்புகளை இத்தனை நாடுகளிலிருந்து வாசிக்கிறார்களே என்று நினைத்து பெருமையாக இருக்கும் .


சிலநேரம் பெயர் வாயில் நுழையாத சில நாடுகள் கூட பட்டியலில் வரும். என்னுடைய பதிவை இவர்கள் வாசிக்கிறார்களே என்ற ஆனந்தத்தை விடவும், இத்தனை நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்களே என்பதைக் கண்டுதான் பெருமையாக இருக்கும்.

நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வேன். "டேய் நமக்கு இப்போ எல்லா நாட்டிலும் நண்பர்கள் இருக்காங்கடா" என்று

எனது வலைப்பூவினைப்பற்றி தினமலரில் குறிப்பிட்டு எழுத, "அட நாம் பத்திரிக்கை உலகத்தின் மூலமும் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்" என்ற ஆச்சர்யத்தையும் நல்ல பதிவுகள் தரவேண்டும் என ஊக்கத்தையும் கொடுத்தது.



பின்னர் கவிதை - கல்லூரி ஞாபகங்கள் - சேட்டைகள் - நண்பர்களின் திருமணம் - பசியோடு பார்க்கின்ற பூனை - விபத்து - காதல் என்று அனைத்து விசயங்களைப்பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

"டேய் நம்ம காலேஜ் மேட்டரைப்பத்தி ஞானியார் அவனுடைய சைட்ல போட்டிருக்கான்டா" என்று நண்பர்கள் மத்தியில் பேச ஆரம்பிக்க எனக்கு இன்னமும் உற்சாகம் கூடிற்று.

நண்பர்கள் எங்கெங்கோ பிரிந்து இருந்தாலும் மீண்டும் சந்திக்கும்பொழுது தங்களுடைய பழைய கல்லூரி நாட்களை பகிர்ந்து கொள்வார்களே அதுபோல மகிழ்ச்சி இணையத்தில் அந்த கல்லூரி நாட்களைபற்றி எழுதும்பொழுது தோன்றிற்று.

வேலைவாய்ப்பு சம்பந்தமாக இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன். காலம் சம்மதித்தால் தங்களின் ஆதரவோடு இறைவனின் அருளோடு வெகு விரைவில் ஆரம்பிக்க கூடும்.


விமர்சனங்கள்

ஆரம்பத்தில் என்னுடைய பதிவுகளுக்கு வருகின்ற விமர்சனங்களை கண்டு கொள்ளவே மாட்டேன். பின்னர் நான் சரியாக விமர்சனத்திற்கு பதில் தருவதில்லை என்று சிங்கப்பூரிலிருந்து நண்பர் சிங் செயக்குமார் வருத்தப்பட்டு கூறினார்.

விமர்சிப்பவர்கள் பதில் தந்துவிட்டு அதற்குண்டான பதிலை எதிர்பார்த்து நம்முடைய வலைப்பூபக்கம் வருவார்கள். நாம் பதில் ஏதும் தரவில்லை என்றால் நாம் கவனிக்கவில்லையோ என்று நினைத்து நம் வலைப்பக்கம் வருவதைக் குறைத்துக்கொள்வார்கள் அது மட்டுமல்ல விமர்சனங்களும் தரமாட்டார்கள் என்று உணர்ந்தேன்.

அதிலிருந்து என்னால் முடிந்தவரை அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அனுப்ப ஆரம்பித்தேன்.


மறக்கமுடியாத நிகழ்வுகள்


நான் என்னுடைய கல்லூரி நேரத்தில் கல்லூரித்தோழியின் டிபன் பாக்ஸிலிருந்து உணவினைத்திருடி சாப்பிட்டகதையை எழுதியபொழுது அந்தப்பெண்ணின் சகோதரி கனடாவிலிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி அந்தக் கதையை கேட்க வசமாக மாட்டிக்கொண்டேன். திருநெல்வேலியில் நடந்ததைப்பற்றி துபாயில் இருந்து எழுதுகிறேன் ஆனால் கனடாவில் இருந்து பதில் வருகிறதே என்று உலகம் இவ்வளவு சுருங்கி விட்டதே என எண்ணி ஆச்சர்யப்பட்டேன்

என்னைச்சுற்றி நிகழ்ந்த காதல் நிகழ்வுகளைப்பற்றி நான் படித்த சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த சின்னசின்ன சம்பவங்கள்பற்றி எழுதியதை படித்த சில நண்பர்கள் திருநெல்வேலியில் அந்தக்கல்லூரியை கடந்து சென்றபொழுது என்னுடைய ஞாபகம் வந்ததாக கூறியபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

யாருக்கேனும் உபயோகமாக இருக்குமே என்று நான் ஆரம்பித்த விதைகள் என்னும் இன்னொரு வலைப்பூவானது ஆரம்பித்த 1 மாதத்திற்குள்ளாகவே நான் உதவி கேட்டு குறிப்பிட்ட அந்த நபர்களுக்கு உதவிகள் கிடைத்துக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

தனது அம்மாவை யாரோ கொலை பண்ணிட்டாங்க என்று என்னிடம் அந்த நபர் வந்து சொல்லி ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் எழுதி கேட்ட நிகழ்வுகளைப்பற்றியும், எனது நண்பரின் மனைவி முதல் பிரசவத்தில் இறந்ததைப்பற்றி "சொர்க்கத்தில் பாலூட்டும் தாய்" பதிவாக எழுதியதும்தான் நான் அழுதுகொண்டே எழுதிய பதிவாக இருக்ககூடும். அந்த அளவிற்கு மனதை பாதித்த சம்பவங்கள் அவைகள்.


வலைப்பதிவில் நண்பர் ஒருவர் இறந்து போனதைக் கேள்விப்பட்டபொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அந்த நண்பரை நான் இதுவரை கண்டதுமில்லை ஆனாலும் அவர் இறந்த செய்தி என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது பதிவுகள் புதிப்பிக்கப்படாமல் அனாதையாய் இருக்கும்பொழுது எனக்குள் மிகுந்த மனக்கவலையை கொடுத்தது. நமக்கும் ஒருநாள் இந்தநிலை வரக்கூடும் என்ற அச்சப்பட்டுக்கொண்டே இருப்பேன். யாரிடமாவது நமது பாஸ்வேர்டை கொடுத்து நாம் இறந்து போனால் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கலாமே என்று கூட நினைத்திருந்தேன். "நான் இறந்து போனால்" என்ற பதிவு கூட ஆரம்பிக்கலாமென இருந்தேன். ஆனால் நெருங்கியவர்களின் மனம் புண்படக்கூடும் என்று அந்த முயற்சியை விட்டுவிட்டேன்.

சொந்தப் பத்திரிக்கை நடத்துவது போன்ற உணர்வுடன் என் மனம் போக்கில் எழுதிகொண்டிருக்கின்றேன்.


இந்த பாலை வாழ்க்கையில் உறவினர்கள் நண்பர்களை விட்டு பிரிந்து இருந்தாலும், நான் சோகப்பட்டால் - ஆறுதல் தந்து, மகிழ்ச்சியடைந்தால் - என்னோடு மகிழச்சியடைந்து, எனது பால்ய வயது மொட்டை மாடி நண்பர்களுடன் சுற்றியிருந்து அரட்டை அடிப்பது போல உணர்வுகளை தந்து எனக்கு எப்போதும் ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கும் குழும நண்பர்களுக்கும், வலைப்பதிவு வாசகர்களுக்கும் முதலாண்டில் அடியெடுத்துவைக்கும் இந்த நாளில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இந்த கீழுள்ள கேக்கை சண்டைபோடாமல் எல்லாரும் பிரித்து சாப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.. :)





நன்றி..நன்றி ..நன்றி


அன்புடன்


ரசிகவ் ஞானியார்

மீண்டும் வாளமீனு..




( மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் ராம் சுப்பிரமணியனுக்கு நன்றி )


கானா காந்திநாதனின் அரசியல்பாடல்

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதய்யா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்




கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்கோ
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ மட்டும் தானுங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ மட்டும் தானுங்கோ
அந்த ராமதாசம் , திருமாவும் வர வழைப்பை தருகுது
வர வழைப்பை தருகுது

மாப்பிள்ளை கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணு ஜெயலலிதா போயஸ்கார்டன் தானுங்கோ
மாப்பிள்ளை கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ

அந்த மணப்பொண்ணு ஜெயலலிதா போயஸ்கார்டன் தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு....














கேப்டன் விஜயகாந்து தானுங்கோ..

(டனுக்கு..டனுக்கு..டனுக்கு..டனுக்கு.. )

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்


- ரசிகவ் ஞானியார்

Wednesday, April 26, 2006

நீ எனக்கு வேண்டாமடி





[என்னுடைய பெயர் குறிப்பிடாமல் என்னுடைய கவிதை ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏற்கனவே பதியப்பட்டிருந்தாலும் மறுபடியும் பதியவேண்டிய சூழ்நிலை. என்னுடைய "பானிபட் இதயங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து அந்தக் கவிதையை மறுபடியும் பதிகின்றேன்...ரிபீட்டு.. ]



சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

Tuesday, April 25, 2006

தயவுசெய்து அரசியல் பேசாதீர்கள்





இன்று எழுதுவதற்கு எந்த விசயமும் இல்லை. எதைப்பற்றி எழுதலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தேன். நேற்று படித்த பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி எழுதிய மனித உரிமைகள் என்ற புத்தகத்தில் கைது நடவடிக்கைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று முடிவெடுத்தேன்.

நம்நாட்டில் அதிகாரத்துஷ்பிரயோகம் என்பது காவல்துறையில் அதிகமாக இருக்கின்றது.

தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக குற்றவாளியையும் - பொதுமக்களையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். அதனைப்பற்றி ஒரு நீண்ட பதிவே போடலாம்.

நான் அதனைப்பற்றி விவாதிக்கவில்லை. கைது செய்யப்படுதலின் நடைமுறைகள் - விளக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் இல்லை .

அதனால கொஞ்சம் அதனைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன். ஏனென்றால் நீங்களும் ஒரு நாள் கைது செய்யப்படலாம். அதற்காக உங்களைக் குற்றவாளியாக்கவில்லைங்க..நம்ம நாட்டுல குற்றவாளிகள் மட்டுமா கைது செய்யப்படுகிறார்கள்..?


கைது..?

காவல்துறை அல்லது அதிகாரம் பெற்ற உரிய அலுவலர் குற்றம்சாட்டப்பட்டவரின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கையே கைது ஆகும்


கைது செய்பவரை காவலர்கள் தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்.(கைது செய்யப்படும் இடத்திலிருந்து நீதி மன்றத்திற்கு பயணப்படும் தூரத்தைக் கழித்து ஆஜர் செய்யப்படும்நேரம் கணக்கிடப்படும்)

வாரண்ட் ( பிடி ஆணை )

குற்றம் செய்துள்ளதாக கருதப்படும் நபரைப் பிடித்து ( நீதிமன்றம் முன் ) ஆஜர் செய்ய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றத்தால் இடப்படும் எழுத்து வடிவிலான ஆணையே வாரண்ட் ( பிடி ஆணை ) எனப்படும்

செல்லுபடியாகும் வாரண்ட்

1. எழுத்து வடிவில் இருக்க வேண்டும்
2. நீதிபதியின் கையெழுத்து இருக்க வேண்டும்
3. நீதிமன்ற முத்திரை இருக்க வேண்டும்
4. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் - முகவரி - குற்றங்களின் விவரங்கள் - தன்மை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இவைகளில் ஏதேனும் தவறியிருந்தால் அந்த வாரண்ட் செல்லுபடியாகாது. ( Illegal Arrest )

ஆனால் வாரண்ட் இல்லாமலும் கைது செய்யலாம். காவல்துறையின் நேரடி பார்வைக்குட்பட்ட அல்லது அவர்களால் அறியப்படும் குற்றம் செய்பவரை வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம்.

நேரடியாக அறியப்படாத குற்றங்களான ( கொலை - கொள்ளை - கற்பழிப்பு - திருட்டு - நாட்டுக்கெதிரான சதி -) ஆகியவற்றிற்கு வாரண்ட் இல்லாமல் கைது செய்யமுடியாது.

ஜாமீனில் விடத்தக்க வாரண்ட் ( Bailable Warrant )
ஜாமீனில் விடமுடியாத வாரண்ட் ( Non-Bailable Warrant )



ஜாமீனில் விடத்தக்க வாரண்ட்

கைது செய்யப்படுபவர் தக்க பிணையம் ( Sureties) மூலம் நீதிமன்றம் அழைக்கும்போது ஆஜராக உறுதியளித்தால் நீதிமன்றம் அவர்களை வெளியில் இருக்க விட்டுவிடலாம்.

ஜாமீனில் விடமுடியாத வாரண்ட்

குற்றவாளி எனக் கருதப்படும் நபர் பயங்கரமான குற்றங்கள் செய்தவராக இருப்பின் அவரால் சமுதாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என நீதிமன்றம் கருதும்பொழுது அவர்களுக்கு ஜாமீனில் விடமுடியாத வாரண்ட் பிறப்பிக்கின்றது

கைது செய்யப்படும்பொழுது

1. கைது செய்யப்படும் நபருக்கு காரணங்கள் அளிக்கப்பட வேண்டும் ( அடிப்படை உரிமைகள் பிரிவு 20 )
2. வாரண்ட்டை கைது செய்யப்படுபவர் படிப்பதற்றும் பார்ப்பதற்கும் உரிமை உண்டு ( அடிப்படை உரிமைகள் பிரிவு 75 )
3. தான் விரும்பும் வழக்கறிஞரை கைது செய்யப்படுபவர் சந்தித்து கலந்தாலோசிக்க உரிமை உண்டு ( அடிப்படை உரிமை பிரிவு 22 )
4. கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியாக வேண்டும்.

கைது செய்யப்படுபவர் பலாத்காரம் செய்யப்பட்டாலொழிய கை விலங்கிடுவது தவிர்க்கப்படவேண்டும் . தப்பி விடுதல் - பயங்கர குற்றவாளி - நம்பத்தகாதவர் - குற்றவாளி தற்கொலை செய்து விடுவாரோ என்ற பயமிருந்தாலும் கைவிலங்கிடலாம்.

சோதனை

கைது செய்யப்பட்டபிறகே அந்நபரை சோதனை செய்யவேண்டும். கைப்பற்றப்படும் பொருளுக்கு உரிய ரசீது அளித்துப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது போலிஸாரின் கடமை.

( போக்குவரத்து காவலர்கள் சாலையில் பைக்கில் லைசென்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துவிட்டு இல்லை என்றவுடன் பணத்தை கேட்கிறார்கள்; . அப்படி நம்மிடம் கைப்பற்றியதை அவர்கள் நிரந்தரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ஆனர்ல ரசீதுதான் தரமாட்டேங்கிறாங்கப்பா.. )


பெண்கள் சோதனையிடப்படும்பொழுது அவர்களின் கற்பு - தன்மானம் - கௌரவத்திற்கு கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். பெண் சோதனையாளர்களுக்கு கண்டிப்பாக பெண்களே சோதனையிடவேண்டும்.

( சமீபத்தில் ஒரு பார்க்கில் ஒரு பெண்ணை இன்னொரு பெண் காவலரே அவளை அவமானப்படுத்தி அடித்து இழுத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறதா..? )

ஆண்களின் மரியாதை மற்றும் கௌரவமும் கண்டிப்பாக காப்பாற்றப்படவேண்டும்
( இந்தப்புகைப்படத்திற்கும் இந்த வரிகளுக்கும் சம்பந்தமில்லை :) )

பிணை (பெயில்)

கைது செய்யப்பட்டவரை விடுவித்து விசாரணை முடியும்வரை வெளியில் இருக்க அனுமதி வழங்குவதே பிணை (பெயில்) எனப்படும்.

பெயில் விண்ணப்பத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். பெயில் மறுக்கப்பட்டால் மறுக்கப்பட்ட காரணத்தை கண்டிப்பாக நீதிமன்றம் வழங்க வேண்டும். அதனை எதிர்த்து மேல் முறையீடும் செய்யலாம்.

கைது நடவடிக்கைகளைப்பற்றி மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வருகின்ற அரசியல் வாதிகளை அணுகலாம்..




- ரசிகவ் ஞானியார்

Monday, April 24, 2006

கும்பிடுங்கோ கும்பிடுங்கோ

கிட்ட வாப்பா பன்னீரு..மக்கள் பார்க்கறாங்கல..






அட இன்னும் கொஞ்சம்பா..எனக்கு அவமானமா இருக்குதுல..







ம்..இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..





அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Sunday, April 23, 2006

உனக்கு கண்ணீர் வரும்பொழுது

சோகங்கள் உன்னைச்
சூழ்ந்திருக்கும்பொழுது

பாரங்களில் உன்னிதயம்
பளுவாகும்பொழுது

உன் கண்திரைகளை உடைத்து
நீ
கண்ணீர் விடுகின்ற தருணங்களில்




என்னை மௌனமாக அழைத்துவிடு
எங்கிருந்தாலும் ..
உன் கண்ணீர் துடைக்க
ஓடோடி வருவேனடி..

ஏனென்றால்

என் நண்பன்
திசுத்தாள் (Tissue Paper) வியாபாரி
ஒண்ணு வாங்கினா.. ஒண்ணு இலவசமாம்
தயவுசெய்து வாங்கிக்கோடி..


அன்புடன்



ரசிகவ் ஞானியார்

Thursday, April 20, 2006

விஷப் பார்வை



பக்கத்து வீட்டுக்காரன்
பசிக்கு உதவியிருக்கலாம்!

வயதானவரின் கைபிடித்து
வீதி கடக்க வைத்திருக்கலாம்!

குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில்
காசு போட்டுவிட்டு
கடந்து சென்றிருக்கலாம்!

பேருந்தில் இருக்கையை
கர்பிணிப்பெண்ணிற்காக ..
காலி செய்து கொடுத்திருக்கலாம்!

எவருக்கேனும்
இரத்தம் கொடுத்து
உயிர்காக்க..
உதவியிருக்கலாம்!

எவரும் மிதித்துவிடக்கூடாதென
பாதையின் முட்களை..
பக்குவமாய் ஒதுக்கியிருக்கலாம்!

பனியில் நடுங்கும்
பூனையைக் கண்டு
பச்சாதாபப்பட்டிருக்கலாம்!

காகத்தின் பசிக்காக
சோற்றுப்பருக்கைகளை
வீட்டு மாடியில்..
வீசியிருக்கலாம்!

பூகம்பம் - சுனாமி - புயல் - வெள்ளம்
நிவாரண நிதி கூட
நீ அனுப்பியிருக்கலாம்!


இப்படி
எத்தனையோ இருக்கலாம்
இருக்கலாம்தான்...

இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே!


- ரசிகவ் ஞானியார்

Wednesday, April 19, 2006

அய்யோ..எம்புள்ளைய காணலைங்க....

சவுதி ரியாத்தில் ஒரு 3 வயது குழந்தை கிடைத்துள்ளது. பெற்றோர்கள் யாரென்று தெரியவில்லை..

தயவுசெய்து இந்தக் கீழுள்ள சுட்டியை அழுத்தி அந்தக் குழந்தையை தாங்கள் எங்கேனும் கண்டிருந்தால் அதற்குரிய முகவரியில் தகவல் தெரிவிக்கவும்.



http://vithaigal.blogspot.com/2006/04/blog-post_19.html


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Tuesday, April 18, 2006

கொடுத்து விடு




கொடுத்து விடு
தோழியே!

திருப்பிக் கொடுத்துவிடு!

கேட்பவன் இறைஞ்சுவதுதான்
உலக நியதி
இங்கோ
கொடுத்தவன் இறைஞ்சுகிறேன்

திருப்பிக்கொடுத்துவிடு தோழியே!

நான் கொடுத்ததை
மறப்பது
நல்லமரபல்ல!
வேண்டாமென விட்டுவிட - நானொன்றும்
நிலப்பிரபு அல்ல.

நேரிடையாய் கேட்கும்
நாகரீகம் எனக்கில்லை

தரவேண்டும் என்ற
கடமையும் உனக்கில்லை

உன்
தோழியிடம் சொல்லி தூதனுப்பவா..?
இல்லை
துண்டுச் சீட்டில் ஞாபகப்படுத்தவா?
என்ன செய்வதோ?

தவித்துக்கொண்டிருக்கின்றேனடி
என் திருமணத்திற்கு முன்னாவது
தந்துவிடுவாயா தோழியே?

நீ என்னிடம் வாங்கிய
கடனை

- ரசிகவ் ஞானியார்

வந்தார்கள்-பெற்றார்கள்- அனாதையானார்கள்



80 வயதான ஒரு தந்தை அதிகம் படித்த தனது 40 வயதான மகனுடன் வீட்டில் அமர்ந்திருக்கின்றார். அப்பொழுது ஜன்னலின் அருகே ஒரு காகம் பறந்து வந்து உட்காருகிறது.

அந்த தந்தை மகனிடம் கேட்கின்றார் "என்ன இது"

"அது காகம் -ப்பா" - மகன் பதிலளித்தான்

கொஞ்ச நேரம் கழித்து அந்த தந்தை மறுபடியும் மகனிடம் கேட்கின்றார் "என்ன இது?"

"அப்பா! நான் இப்பத்தான் சொன்னேன்..அது காகம் என்று" - மகன் மறுபடியும் பதிலளித்தான்

பின் சிறிது நேரம் கழித்து 3வது தடவையாக அவர் மறுபடியும் மகனிடம் கேட்கின்றார்
"என்ன இது"

இந்த முறை மகன் எரிச்சலுற்று கடுமையான உச்சரிப்பில் சொல்லுகின்றான்
"இது காகம்பா..இது காகம்.."

கொஞ்ச நேரம் கழித்து 4 வது முறையாக தந்தை மகனிடம் கேட்கின்றார். "என்ன இது"

மகன் இப்போது கோபமடைகின்றான்

"ஏம்பா இப்படி திரும்ப திரும்ப கேட்டு உயிரை எடுக்குறீங்க..எத்தனை தடவைதான் சொல்றது..அது காகம் என்று.. ஏன் உங்களுக்கு காது கேட்கலையா.." என்று தந்தையை நோக்கி கத்த ஆரம்பித்து விடுகின்றான்.

அதன்பிறகு அந்த தந்தை அமைதியாகி தனது அறைக்குள் மெதுவாகச் சென்றார். தனது பழைய கிழிந்து போன டைரி ஒன்றை எடுத்து வந்தார் .
அதில் ஒரு பக்கத்தை திருப்பி தனது மகனிடம் வாசிக்கச் சொன்னார்.
மகன் அந்த டைரியை வாசித்தான் :


இன்று என்னுடைய 3 வயது குழந்தை என்னுடன் சோபாவில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு காகம் வந்து ஜன்னல் அருகே உட்கார என்னுடைய மகன் ஆச்சர்யமாய்க் கேட்டான்

"அப்பா அப்பா இது என்னப்பா.. "

"அது வந்து மே..லே பறக்கிற பறவை..அது பேர் காகம்" என்று கூறினேன்

அவனுக்குப் புரியவில்லை மறுபடியும் கேட்டான். நானும் அதேமாதிரி விளக்கமளித்தேன்.


அவன் மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டே இருந்தான். கிட்டத்தட்ட 23 தடவையாவது கேட்டிருப்பான். நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

எனக்கு அவன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவனுடைய ஆர்வத்தை எண்ணி சந்தோஷப்பட்டும் அவன் அப்பாவியாய் கேட்பதை கண்டு மிகுந்த பாசத்துடனம் அவனைக் கட்டித் தழுவியபடி பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இந்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை..


பாருங்களேன் இந்த மகன் தனது தந்தை 4 தடவை கேட்டவுடனையே கோபப்பட்டு எரிச்சலுற்று கத்துகின்றான்.

இது வெறும் கதையல்ல அன்றாடம் நமது அல்லது பக்கத்து வீடுகளில் நடைபெறுகின்ற சம்பவம்தான். இப்படிப்பட்ட நிலைமைதான் இன்று எல்லா இடங்களிலும். வயதானவர்களின் உணர்வுகளை மதிப்பதற்கு தவறி விடுகின்றனர். முதியோர் இல்லங்களின் வளர்ச்சிகள் மனிதர்கள் மனிதத் தன்மையை இழந்து வருவதற்கான அத்தாட்சிகள்.

முதியோர் இல்லங்களின்
முகவரிப் பட்டியலில்
உனது பெயரும்
ஒருநாள் வரக்கூடும்..

எனது ஊரில் வீடுகள் வரிசை வரிசையாக ஒன்றைச் சார்ந்து மற்றொன்று என்று கடைசி வரைக்கும் நீளும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் திண்ணைகள் கடைசி நாட்களில் வீட்டுத்தலைவனின் வருகைக்காகவே காத்திருப்பது போல காத்திருக்கும்.

அந்தத் திண்ணையின் மூலையில் அமர்ந்து கொண்டு வெத்தலை சாப்பிட்டுக்கொண்டும் ஒரு படுக்கையை விரித்துக் கொண்டும் தங்களுடைய வாழ்நாளைக் கழித்து வருவார்கள். தினமும் அவர்களுக்கு சாப்பாடு நேரத்திற்கு வந்து விடும். அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றுவார்கள். ஆனால் அவர்களின் உணர்வுகளைக் காப்பாற்ற தவறி விடுகிறார்கள்.அவர்களுக்கு உரிய மரியாதைகள் கிடைக்காது.


அதே முதியோர் இல்லம்.
அன்று என் அப்பா!
இன்று நான் அப்பா!!

- பிரதீப் குமார்

பொருளீட்டும் பொறுப்பு தனக்கு வந்து விட்டது என்பதற்காக அதிகாரத் தோரணையில் அவர்களிடம் கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்பதையே விட்டு விடுகிறார்கள். ஒரு உணர்வுகளற்ற ஜடமாக்கி விடுகிறார்கள்.

வயதானவுடனையே பெற்றோர்களின் கருத்துக்களை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடும் பழக்கம் நகரச் சூழ்நிலைகளில் கூட நிறைய குடும்பங்களில் வழக்கமான நடைமுறைகளாகி விட்டது.


எப்படி குழந்தைப் பருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வயதான பருவத்திற்கு நம்முடைய வளர்ச்சி இருக்கிறதோ அதுபோல வயதாக வயதாக குழந்தைத்தனமாக உணர்வுகள் அவர்களுக்கு வரத் தொடங்கி விடுகின்றது

தனக்கென்று எதுவுமே சேர்த்து வைக்காமல் குழந்தைகளுக்காக உழைத்து படிக்க வைத்து பின் தாங்கள் ஓய்வு நிலைக்கு வந்தவுடன் குழந்தைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில் இருக்கும் பெற்றோர்கள் நிறைய வீடுகளில் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இதில் படித்த இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கின்றது என்பதற்கு கிராமங்களை விடவும் நகரங்களில் இருக்கின்ற அதிகமான முதியோர் இல்லங்கள்தான் சான்று.

குழந்தைகள் ஒரு நிலைக்கு வரும்வரையிலும் எப்படி தனது பெற்றோர்களைச் சார்ந்து இருக்கிறார்களோ அதுபோல நாம் பெற்றோர்களுடைய உணர்வுகளை அவர்களுடைய மரியாதைகளை அவர்கள் சம்பாதிக்கும் காலத்தில் கொடுத்த மதிப்பைப் போல கடைசிக் காலம் வரையிலும் கொடுக்க வேண்டும். அதுதான் ஒவ்வொருவரும் தம் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய அவசியமான கடமையாகும்.


வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்


- தமிழ்மாங்கனி

சார்புகள் என்பது காலத்தின் கட்டாயம். வாழ்க்கையே ஒரு சீரான சுழற்சிகளில் தான் பணயப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆகவே சார்ந்திருப்பது ஒன்றும் கேவலமான செயல்கள் அல்ல. பெற்றோர்களின் சார்புதான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலமாக இருக்கின்றது.

நீ நாளைய பெற்றோர் - உன் பெற்றோர் நேற்றைய குழந்தைகள் என்ற சார்புகளின் சுழற்சியைப் புரிந்து கொண்டு கருவிலும், தோளிலும் சுமந்தவர்களை தெருவிலும் ,திண்ணையிலும் விட்டுவிடாதீர்கள் இளைஞர்களே!

தயவுசெய்து தங்களுடைய பெற்றோர்கள் வயதாகும் பொழுது அவர்களை சுமை என்று தனியே ஒதுக்கி வைத்துவிடாதீர்கள். அவர்களிடம் அன்பாக அமைதியாக வார்த்தைகளை கடினமாக உபயோகிக்காமல் பேசுங்கள்.


இன்று முதல் ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள் :

"என்னுடைய பெற்றோர்களை எப்போதும் நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்.

நான் குழந்தையாக இருக்கும்போது என்னை அக்கறையோடு கவனித்துக் கொண்டதுபோல , சுயநலமில்லாத அன்பை என்மீது காட்டியது போல , நானும் மிகுந்த அக்கறையோடும் அவர்கள் மீது அதிகமான அன்பையும் காட்டுவேன்

அவர்கள் தங்களுடைய சோகங்களையும் துன்பங்களையும் நமக்குத் தெரியாமல் தங்களுக்குள்ளையே மறைத்துக்கொண்டு, நம்மை கஷ்டம் தெரியாமல், வறுமைதெரியாமல் , வளர்த்து படிக்க வைத்து எப்படி சமுதாயத்தில் நமக்கு ஒரு அந்தஸ்து கொடுத்தார்களோ அதுபோல அவர்களுக்கும் எந்த விதமான துன்பத்தையும் கொடுக்காமல் அவர்களை குழந்தையைப் போல பாதுகாப்பேன். "


"இறைவா! என்னுடைய பெற்றோர்கள் நான் குழந்தையாக இருக்கும்பொழுது எப்படி என்மீது பாசம் காட்டினார்களோ அதுபோல நீயும் அவர்களிடம் பாசம் காட்டு
நான் என்னுடைய பெற்றோர்களுக்கு என்றும் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மனம் கோணாதபடி நடந்து கொள்ளும் பக்குவத்தைக் கொடுப்பாயாக "

நிச்சயமாய் சொல்கிறேனப்பா
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள் எவையும்
நம்மைப் பிரித்துவிடக்கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Saturday, April 15, 2006

தப்பித்துவிடு தமிழே!




தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு

ஒளவை, அகத்தியன்
புராணங்களுக்கிடையே
பிறந்து வந்தவளே!

இன்றைய
ஒளவைகளோ உன்னை
தமிழகம்விட்டு துரத்துவதற்கு
தீப்பந்தம் எடுக்கிறார்கள!

அகத்தியர்கள்
கைகளிலோ
ஆங்கில அகராதி!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு !


"கல்தோன்றா மண்தோன்றா "
காலத்து
முன்தோன்றிய மூத்தகுடியே!
இஙகே உனது
இளையகுடிகள்
"கல்தோண்டி மன்தோண்டி" உன்னை
புதைக்க வருகிறார்கள்

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!

"நெற்றிக்கண்ணைத்
திறப்பினும்
குற்றம் குற்றமே "
எனச் சொன்ன
நக்கீரர்கள் எல்லாம்
ஆங்கிலப்பத்திரிக்கையின்
ஆசிரியர்களாகிவிட்டார்கள்!


பாண்டியமன்னர்களோ
ஆல்பம் கேட்டு
ஆடிககொண்டிருக்கிறார்கள்!

கண்ணகி வடிவத்திலாவது உன்னை
காணலாமென்றால்
அதையும் தகர்த்துவிட்டார்கள்!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!


மோனை என்றொரு
பானையை வைத்து...
எதுகையை உடைத்து
விறகாக்கி...
தமிழே உன்னை
தூக்கிபபோட்டார்கள் தமிழர்கள்!

இதோ
தயாராகிறது
ஆங்கிலப்பிரியாணி!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!

வள்ளுவனோ
கடல்மீது நிற்கின்றான்
வள்ளுவத்தமிழோ
கடலுக்கடியில்!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!

காதலிகளுக்கு முன்னால் நீ
பேசப்பட்டால்...
காதலி கோபப்படுகிறாளாம் !

ஆம்! தமிழே நீ
மாணவர்களுக்கெல்லாம் ஓர்
மானப்பிரச்சனையாகிவிட்டாய்!

தலைவன் தலைவியோடு
ஓடிப்போனதைப்போல நீயும்
ஓடிப்போய்விடு தமிழே !


என்னவோ உன்னை
ஞாபகத்தில் வைத்திருப்பது
தமிழாசிரியர்கள் மட்டும்தான்!
சீக்கிரம் போ!

அவர்களும்
ஷேகஸ்பியரோடு
சிநேகம் வைப்பதற்குள்
சீக்கிரம் போய் தஞ்சமடைந்துவிடு தமிழே!

-ரசிகவ் ஞானியார்

Wednesday, April 12, 2006

ஓர் கணிணி எச்சரிக்கை

நாம் தினமும் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்துகொண்டு லொட்டு லொட்டு என்று தட்டிக்கொண்டும் சும்மாயிருக்கின் மவுஸை பிடித்து விளையாடிக்கொண்டும் அங்கும் இங்கும் நகர்த்திக்கொண்டும் இருக்கின்றோம்.

நம்முடைய விரல்களின் அசைவுகளை கொஞ்சம் கவனியுங்கள். நாள் முழுவதும் ஒரே மாதிரியான அசைவுகள்தான். கைகளை தட்டச்சுப்பலகையின் அருகே வைத்துக்கொண்டு விரல்கள் மட்டும் தேடி தேடி எழுத்துக்களை தட்டச்சு செய்யும். சிலர் கைகள் முழுவதையும் ஒவ்வொரு எழுத்துக்கும் கொண்டு சென்று தட்டச்சு செய்வார்கள்.

இந்த தொடர் அசைவுகள் மணிக்கட்டின் தசைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்மானத்தைக் கொடுக்கின்றது.

இந்த அசைவுகள் நமக்கு சாதாரணமாய்த் தெரிந்தாலும் ஆனால் அதன் பிண்ணனியில் உள்ள பயங்கரத்தைக் கவனியுங்களேன்











இந்த அறுவைச்சிகிச்சையினைக் கவனிங்கள்.. இது ஏதோ பெரிய விபத்துக்களின் மூலம் நடந்ததல்ல..தினமும் தொடர்ந்து தட்டச்சு செய்ததனால் வந்த வினை இது.

இந்த அறுவைச்சிகிச்சைகக்கு உங்களுடைய மணிக்கட்டும் மாட்டவேண்டுமா?

இந்த அறிகுறியிலிருந்து விடுபட கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் இந்த கீழ்கண்ட பயிற்சியை தினமும் 10 அல்லது 15 வினாடிகள் ஒவ்வொரு பயிற்சிக்கும் செலவழித்து கையை காப்பாற்றுங்கள். உங்கள் குடும்பம் தங்களின் மீது வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றுங்கள்.




















இந்தப்பயிற்சியை தினமும் 3 தடவைகள் செய்தால் போதும். இதற்காக தனியாகவெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

சாப்பாடு நேரம் அல்லது நண்பர்களோடு அரட்டை அடிக்கின்ற நேரம் அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது அல்லது காரில் டிராபிக்கில் மாட்டியிருக்கும் பொழுது என்று கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தப்பயிற்சியை செய்யலாம்.

மணிக்கணக்கில் வேலை பார்த்து ...
மணிக்கட்டை இழக்காதீர்கள்!
மணி நேர பயிற்சிக்கு...
மனம் ஒதுக்குங்களேன் நண்பர்களே!


- ரசிகவ் ஞானியார்

Monday, April 10, 2006

சொர்க்கத்தில் பாலூட்டும் தாய்




நண்பனிடமிருந்த தொலைபேசி வந்தது "டேய்! அவனுக்கு குழந்தை பிறந்துட்டுடா" என்று

நானும் "அப்படியா மகிழ்ச்சியான செய்தி..நான் வாழ்த்தினதா சொல்லுடா.."

"இல்லைடா அந்த குழந்தை இறந்திடுச்சு" என்று அதிர்ச்சியான செய்தியை சொன்னான்

எனக்கு மனசு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் சுதாரித்துக் கொண்டு
"சரிடா ஆறுதல் சொல்லுங்கடா வேற என்ன செய்ய "என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு வேதனையான செய்தியைச் சொன்னான்

"தாயும் இறந்து போயிட்டாங்கடா" என்று சொல்லியபோது பதறிப்போய்விட்டேன்.

அய்யோ பாவம் எனது நண்பன் திருமணமாகி 8 மாதங்கள்தான் இருக்கும். இப்பொழுது அவன் குவைத்தில் இருக்கின்றான்.அவனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டான்.

"வேண்டுமென்றால் குழந்தை இறந்து போன செய்தியை மட்டுமாவது தெரிவிச்சிருடா" என்று கூறி தொலைபேசியை வைத்துவிட்டான்

எனக்கு மன தைரியம் இல்லாததால் நானும் இன்னொரு நண்பன் மூலமாக அவனுக்கு போன் செய்யச் சொல்ல அவனிடம் குழந்தை இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டபொழுது முதலில் அதிர்ச்சியடைந்து பின்னர் சுதாரித்துக்கொண்டு

"சரிடா என்ன செய்ய இறைவனின் நாட்டம் அப்படி இருக்கிறது..இன்ஷா அல்லாஹ் அடுத்த தடவையாவது சரியா அமையட்டும்..அவ ரொம்ப கவலைப்படுவா டா ...நான் உடனே கிளம்பி வருகிறேன்"
என்று சொல்லிவிட்டு இப்பொழுது பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றான் இந்தியாவுக்கு தன்னுடைய மனைவி இறந்து போன விசயம் தெரியாமலையே..

என்னால் நிலையாக இருக்க முடியவில்லை. இதயம் சோகத்தில் அப்பிக்கொண்டது
பாவம் அந்தப்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டான்.

"டேய் பாவண்டா..அவன் லவ் பண்ணி மேரேஜ் பண்ணினான்டா.." நண்பன் சொல்ல

"விசயத்தைக் கேள்விப்பட்டா தாங்க மாட்டான்டா..துடிச்சிப் போயிருவான்.."- நான்

பிரசவ வேதனை என்றாலே எனக்கு நடுக்கமாக இருக்கும். சின்ன வயசில் என்னுடைய அம்மாவின் பிரசவ வேதனையைப்பற்றி பக்கத்து வீட்டு அம்மா சொல்லியபொழுது வாய்பிளந்து ஆச்சர்யமாய் கேட்க முடிந்ததே தவிர எந்த பாதிப்புகளும் மனதில் எழவில்லை.

உன்
பிரசவ கதறலை
பக்கத்து வீட்டு அம்மா
கதையாய் சொன்னபோது..

குடும்பக்கட்டுபாடு செய்தவனின்
தலைப்பிள்ளை
தற்கொலை செய்ததைபோல

எத்துணை வருத்தப்பட்டேன் தெரியுமா?

உனக்கு
வலிக்குமென தெரிந்திருந்தால்
நான்
விழித்திருக்கவேமாட்டேனம்மா...?



ஆனால் விவரம் தெரிந்த நாட்களின் போது என்னுடைய நெருங்கிய நண்பனின் தங்கை பிரசவ நேரத்தில் குழந்தையைப் பெற்று எடுத்துவிட்டு மரணித்தபொழுதுதான் அதன் வலியை தீவிரமாய் உணர ஆரம்பித்தேன்.

நான் ஓடி விளையாடிய வீட்டில் , நடந்த அந்தப் பிரசவ மரணம் என்னை மிகவும் பாதித்து விட்டது. அந்த மரண நேரத்தில் என்னுடைய நண்பன் எங்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்

அப்பொழுது அவனது உறவினன் ஒருவன் மூச்சிறைக்க ஓடிவந்து கத்தினான்

"டேய்! டேய்! அவனோட அக்கா குழந்தையைப் பெத்துட்டு இறந்து போய்ட்டாங்கடா"என்று சொல்ல அந்த நண்பனோ உறவினன் தன்னை கிரிக்கெட் விளையாடாமல் தடுக்க வைப்பதற்காக பொய் சொல்லுகிறான் என்று நினைத்து அலட்சிமாய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க எங்களுக்கு அந்த உறவினனின் முகவேதனையை வைத்து புரிந்து கொண்டோம் அந்தச் சம்பவம் உண்மையென்று

உடனே கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு தலைதெறிக்க ஓடினோம் . என் நண்பனின் சகோதரியைக் கொண்டு வந்திருந்தார்கள்.

பிரசவத்திற்கு சென்றவள்
பிற சவமாய் வந்திறங்கினாள்


அதனைக் கண்டு துடித்துப்போய்விட்டேன். அந்தப்பச்சிளங்குழந்தையை ஒரு பாட்டி கைகளில் பொத்தி வைத்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்..

கிளியை பெத்துவிட்டு
பார்க்காம போயிட்டியே!

என் இராசாத்தி நீ..


என்று ஆரம்பிக்கும் அந்தப்பாட்டியின் ஒப்பாரி அரசல் புரசலாய் ஞாபகம் இருக்கின்றது.

பிரசவம் என்பது ஒரு மறுபிழைப்பு. மரணத்தின் எல்லை வரை தொட்டுவிட்டு திரும்புகின்ற சம்பவம் என்று அன்றுதான் உணர ஆரம்பித்தேன்.

உலகத்தில் மனிதர்களை
வாழவிட்டு ...
அவர்களின்
நன்மை தீமைக்கேற்ப
கூலி கொடுக்கும் இறைவா!

தவறாயிருந்தால் மன்னித்துக்கொள்!
உன்னிடம் ஒரு கேள்வி

எந்த வாழ்க்கையுமே வாழாமல்
குழந்தைகள் இறப்பதன் காரணம் என்ன?


என்னால அந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த நண்பனின் சகோதரியைச் சுற்றி கிண்டலடித்து விளையாடியிருக்கின்றோம். அந்த ஞாபகங்கள் வேறு எங்களை மிகவும் பாதித்துவிட்டது.


"அக்கா! உங்களுக்கு ஆம்பிளப்புள்ளதான்க்கா பிறக்கும் "

"போங்கடா.. பொய் சொல்லியிளா..எனக்கு பொம்பள புள்ளதான் "

"இல்லைக்கா நாங்க எல்லாரும் சொல்றோம் ஆம்புள புள்ளதான்..அவனை எங்க செட்டுல சேர்த்துக்க மாட்டோம்..பாருங்க.. "

"அவன் ராஜா மாதிரி வருவான்டா..உங்கள மாதிரியா
ம்மா இவனங்கள பாருங்கம்மா " என்று அம்மாவை அவர்கள் அழைக்க

"எல போங்கல..பிள்ளதாச்சிய கிண்டல் பண்ணாதீங்கள.."

என்று கடுமையாய் கூற

அந்தச் சகோதரியோ, "போம்மா உன் ஜோலியை பாத்துட்டு..அய்யோ பாவம் சும்மா தானே அவனுங்க கிண்டல் பண்ணுறாங்க.. "

என்று எங்களுக்கு வக்காலத்து வாங்க..

ஆசையோடும் எதிர்பார்ப்போடும் இருந்த அந்தச் சகோதரியின் இறந்து போன முகத்தை பார்க்கவே எனக்கு தெம்பு இல்லை

எல்லாரும் இறந்து போனவளைப்பற்றி கவலைப்பற்றிக்கொண்டிருக்க எனக்கு அதனைவிடவும் அழுதுகொண்டிருக்கும் அந்தக் குழந்தையின் அழுகைதான் பரிதாபமாக இருந்தது.

அந்தச்சம்பவம்தான் எனக்கு பிரசவத்தைப் பற்றி மிகுந்த பயத்தைக் கொடுத்தது. நெருங்கிய யார் பிரசவச் சம்பவம் என்றாலும் பிராத்திக்க ஆரம்பித்து விடுவேன்.



உயிர் இருக்கும்
உணர்வு இருக்கும்
அப்பப்போ வயிறு
இறுகி இறுகி
உடல் பின்பக்கமாக வளையும்.
கண் சொருகும்.

அப்பப்போ விழித்துப்
பார்க்க தோன்றும்.
ஆனாலும் முடிவதில்லை.
கத்த முடிவதில்லை
அசைய முடிவதில்லை.
உடலோ சோர்ந்து துவண்டு
அதை எடுத்துரைக்க வார்த்தைகள்
என்னிடம் இல்லை.

குழந்தை வருவதை கருவிகள் காட்ட
அவசரம் அவசரம்
எல்லோரிலும் அவசரம்
இறுதியாக
சேர்த்து வைத்திருந்த
மிச்ச தைரியத்தையும்
பிய்ந்த உயிரையும்
ஒன்றாய்த்திரட்டி
வில்லாய் வளைய
குழந்தை மெதுமெதுவாக
தாதி கை தாவும்.

குழந்தை அழும் சத்தம் மட்டும்
எம் செவி வழி பாயும்.

- நளாயினி தாமரைச்செல்வன்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த எனது அண்ணியின் பிரசவம் மற்றும் எனது தங்கையின் பிரசவத்திற்கெல்லாம் நான் மிகவும் பதறிப்போய்விட்டேன்.

என் அண்ணியின் பிரசவ சமயத்தில் நான் ஊரில்தான் இருந்தேன்..

நேரம் நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்கள் தள்ளிப்போயிற்று - சுகப்பிரசவம் கிடையாது - சிசேரியன்தான் என்று யார்யாரோ என்ன என்னவோ சொன்னார்கள். பெண்களுக்குள்ளேயே விசயங்களை பகிர்ந்து கொண்டார்கள். எனக்கு அதுவேறு மிகுந்த பயம் காட்டிற்று.. கடைசியில் ஆண்குழந்தை பிறந்தது ஆனால் சிசேரியன்தான்.

அதன் பிறகு எனது தங்கையின் பிரசவம் நான் அப்பொழுது துபாயில்தான் இருந்தேன். எனக்கு இங்கு வேலையே ஓடவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்களும் செல்போனில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொரு முறை பேசும்போதும் கண்ணீர் விடாமல் பேசுவது எப்படி என்ற கலையை கற்றுக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. எனக்கு என்ன பயம் என்னவென்றால் எனது தங்கையின் ஆரோக்கியம் குழந்தை பெறுகின்ற அளவிற்கு வலியை தாங்குமா என்ற பயத்தில்தான் துடித்துக் கொண்டிருந்தேன்

"ஹலோ! என்னம்மா எப்படியிருக்க "

"நல்லாயிருக்கண்ணா..நீ எப்படி இருக்கே.. "

"டாக்டர் என்ன சொன்னாங்க..வலி எப்படி இருக்கு..என்னிக்கு தேதி கொடுத்திருக்காங்க..

கவலைப்படாதே என்ன..எல்லாம் நல்ல படியா நடக்கும்.. "

என்று அதிகம் பேசமுடியாமல் ஒரே மூச்சில் பேசி வைத்துவிட்டேன்

"இறைவா எனது சகோரிக்கு சுகப்பிரசவம் தந்துவிடு நான் 6 நாட்கள் பசித்து இருந்து நோன்பு இருக்கின்றேன்" என்று இறைவனிடம் நோன்பை பணயம் வைத்து எனது தங்கையின் பிரசவத்தை சுகப்பிரசவமாக்க வேண்டினேன்..

"குழந்தை பிறந்துடுச்சு..சுகப்பிரசவம்தாண்டா.."என்று அம்மா சொன்னபொழுது எனக்கு உலகமெ இருண்டுப்போய் மீண்டும் வெளிச்சம் வந்தது போன்ற உணர்வு. இறைவனுக்கு நன்றியினை தெரிவத்துக்கொண்டேன்..



சுகப் பிரசவம்!


"வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்
-கேட்ட மருத்துவரிடம்
வேண்டாமென மறுத்துவிட்டேன்!


பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு
விழிகளைப் பிதுக்கி
பல்லைக் கடித்து
அடிவயிறு உப்பி
கால்களை உதறி
முக்கி முக்கி
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து
உடல் தளர்ந்து
உள்ளமும் சோர்ந்து

உள்ளே செத்துப்
பிழைத்தேன் நான்!

வெளியே சொன்னார்கள்:
"சுக"ப் பிரசவம் என்று

- அருட்பெருங்கோ - ஐதராபாத்



சமீபத்தில் கூட எனது நெருங்கி தோழியின் சகோதரிக்கு குழந்தை பிறக்கும் சமயத்தில் கூட அவர்களிடம் சொல்லியிருந்தேன் "உங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறக்க நான் 2 நாட்கள் நோன்பு இருக்கின்றேன்" என்று.

எனக்குள் ஓர் கர்வம் அல்லது ஆத்ம திருப்தி என்னவென்றால் நான் இறைவனுக்காக நோன்பு இருப்பதை பசித்து இருப்பதை பொறுக்கமுடியாமல் இறைவன் சுகப்பிரசவத்தை தந்து விடுகின்றான் என்று.

இப்படிப் பிரசவத்தைப்பற்றி நான் அதிகமாய் பயப்படுவதற்கு காரணம். இந்தியாவில் பிறக்கின்ற 10 குழந்தைகளில் 3 குழந்தைகள் இறந்து பிறக்கின்ற என்ற அதிர்ச்சியான செய்தியை வேறு என்னிடம் சிலர் சொல்லியிருந்ததால் எனக்கு நெருங்கியவர்களின் பிரசவம் என்றாலே அந்த மூன்றில் இவர்கள் இருந்துவிடக்கூடாதே என்று ஒரு பயம் என்னை அறியாமல் வந்து விடுகின்றது.


இன்று காலையில் ( 10.04.06 - காலை 9.45 மணி) தனது மனைவியைக் காண குவைத்திலிருந்து இந்தியா திரும்பிய அந்த நண்பனைப்பற்றி அதிர்ச்சியான தகவல்களை சுமந்தபடி ஒரு தொலைபேசி வந்தது

"குவைத்திலிருந்து அவன் வந்து சேர்ந்துட்டாண்டா..வீட்டுக்கு வந்தவுடன் விசயத்தை கேள்விப்பட்டவுடனே மயங்கிப்போய்ட்டான்..அவசர சிகிச்சைப்பிரிவில் வச்சிருக்குடா..துவா பண்ணிக்கோடா.. "

வீட்டிற்கு வந்து குழந்தை இறந்து போன சோகத்தில் இருக்கும் தனது காதல் மனைவிக்கு "பரவாயில்லைம்மா..இறைவனுக்கு இந்த குழந்தை நம்ம கூட இருக்குறதுல விருப்பம் இல்லைம்மா..அடுத்த குழந்தை தருவான்.. " என்று ஆறுதல் படுத்த வந்தவன் தனது மனைவியை வெள்ளைத்துணி கொண்டு மூடி வைத்திருப்பதைக் கண்டு துடித்து மயங்கி விழுந்துவிட்டான்

தன்னைக் காதலித்து தன்னை நம்பி வந்த பெண்ணை பிரசவ நேரத்தில் தனியாக விட்டுவிட்டு நாம் சென்றுவிட்டோமா - அவளை நானே கொன்று விட்டேனோ என்று மனசாட்சியின் உறுத்துதலை தாங்க முடியாமல் மயங்கிவிட்டானோ..?

"எட்டு மாசம்தான்டா ஆகுது..தனியா விட்டுட்டு வந்துட்டேன்டா..நான் குவைத் வரும்போது கூட போகாதிங்கன்னு அவ ரொம்ப கெஞ்சினாடா.."என்று அவன் புலம்பிக்கொண்டே இருந்தான் என்று குவைத்தில் இருக்கும் அந்த நண்பன் கூறினான்.


பிரசவநேரத்தினில் கண்களுக்கு முன்னால் தனது மனைவியின் வலியினை வேதனையினை காணுகின்ற கணவன்கள் அதற்குப்பிறகு அவளைப்புரிந்து கொண்டு மனைவியின் மீது கூடுதல் நேசம் கொள்வதற்கும் அவளை முழுமையாக புரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கும்.

இந்த வேதனைக்கெல்லாம் தான்தான் காரணம் என்ற ஒருவிதமான குற்ற உணர்ச்சியில் அவள் மீது தன் நேசத்தை அவன் மென்மேலும் அதிகப்படுத்திக் கொள்வான்.

இல்லறத்திற்கு பாலியல் சாயம் மட்டுமே பூசிக்கொள்ளாமல் உணர்வுகளோடும் அவளின் வேதனைகளோடும் பங்கு போட்டுக்கொள்ளுவதே கணவன்களுக்கு அழகு.


பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருப்பது கூட அவளுக்கு மனரீதியாக ஒரு தைரியத்தைக் கொடுக்கும். அவளுடைய கைகளை இறுகப்பற்றிக்கொண்டு "நான் இருக்கிறேன், கவலைப்படாதேம்மா " என்று அவன் ஒற்றை வார்த்தை கூறியிருந்தால் அந்த நம்பிக்கையில் அவள் உயிர்துளிர்த்து பிழைத்திருக்ககூடுமோ..?

இதுபோன்ற விசயங்களுக்குத்தான் புலம் பெயர் வாழ்க்கையையே வெறுக்க வேண்டிதாக இருக்கிறது. எனது நண்பனுக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்..


மனதில் பயமா அல்லது வலியா எனத்தெரியவில்லை ஆனா ரொம்ப கஷ்டமா இருக்குதுப்பா..

நம்பிக்கை இருக்கிறது இறந்து போன குழந்தைக்கு அந்தத்தாய் சொர்க்கத்தில் பாலூட்டிக்கொண்டிருப்பாள் என்று


வேதனையுடன்

ரசிகவ் ஞானியார்


Saturday, April 08, 2006

சித்திரம் பேசுதடி






"டேய் படம் வித்தியாசமாக இருக்குடா.."

"கானா உலகநாதன் பாட்டு கலக்கல்டா.."

"பார்க்க வேண்டிய படம்டா.."

"வித்தியாசமான க்ளைமாக்ஸ்டா.."

என்று எல்லாப் பக்கமிருந்தும் வருகின்ற விமர்சனங்களின் தூண்டுதலில் படம் பார்க்க வேண்டிய ஆர்வம் அதிகரித்தது.

அப்படியென்ன வித்தியாசமான படம். விமர்சனங்களிலும் நண்பர்களின் மூலமாகவும் இந்தப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டு இரண்டு வாரமாக குறுந்தகடுக்காக அலைந்தேன்

கடைசியில் ஒருவழியாய் நேற்றுதான் நண்பனிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி வரச்சொல்லிப் பார்த்தேன்.

தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு என்னைப் பாதித்த அருமையான கதை. சில படங்களை பார்க்கும் போது இந்தப் படத்தை நான் எடுத்திருக்க வேண்டுமோ என்ற நினைப்பு வரும் எனக்கு. அதுபோன்ற உணர்வுகளைத் தந்த படம் இது.

படம் முடிந்த பிறகும் அதன் பாதிப்பில் 1 மணிநேரமாவது என்னை விழித்திருக்க வைத்ததுதான் இந்தப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

வேலை கிடைக்காமல் அடியாளாக வேலை பார்க்கும் கதாநாயகன் நரேனின் மனதில் காதல் வந்துவிட அதனால் அவனடைகின்ற மாற்றங்களை அழகாய் ஒரு மொட்டு பூவாவதைப்போல காட்டியிருக்கின்றார்கள். ரவுடியின் மனதில் காதல் வந்து விடுகின்ற கதை என்றவுடனே எனக்கு அமர்க்களம் கதைதான் ஞாபகம் வந்தது.

ஆனால் இப்படித்தான் அடுத்த காட்சி இருக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திராத சினிமாத்தனம் இல்லாத படம்.

புதுமுக கதாநாயகன் நரேன் அடிக்கடி முதுகைக்காட்டிக்கொண்டு நடிக்கிறார். ( குலுங்கி குலுங்கி அழும்போது முதுகைக் காட்டும் சேரனைப்போல)

ஒருவேளை அவர் முகத்தில் உணர்ச்சிகள் சரியாக காட்டத் தவறுவதால் இயக்குநர் அப்படிச் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

அடிக்கடி அவர் சாவடிச்சிருவேன்டி சாவடிச்சிருவேன் என்று கோவத்தில் கத்துவது வித்தியாசமாக இருக்கிறது.

சாலையில் செல்லும் போது கதாநாயகி பாவனா அவரது காருக்கு முன்னால் தற்செயலாய் செல்ல பாவனாவோ தன்னைத்தான் பின்தொடர்கின்றானோ என்று வீட்டில் வந்த தந்தையிடம் ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் சுவையானவை.

பாவனாவின் தந்தையாக பாய்ஸ் புகழ் அலைபாயுதே புகழ் அப்பாதான் இதிலும் அப்பாவாக தலைகாட்டியிருக்கின்றார். மனைவியைப் பிரிந்து தாயில்லாத பாவனாவுக்கு டீ போட்டுக் கொடுப்பது - மகளின் துணிகளை துவைத்து அயர்ன் செய்து கொடுப்பது என்று மகளின் மீது அதிக பிரியமுள்ள அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறார்


யாரையோ அடிப்பதற்காக துரத்திக் கொண்டு சென்று கொண்டிருக்கும்பொழுது வழியில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை கைப்பிடித்து அழைத்துச் சென்று சாலையைக் கடக்க வைப்பதை வைத்து ரவுடிக்கு காதல் வந்த பிறகு அவன் மனம் மென்மையானதை அழகாய் காட்டிருக்கின்றார் இயக்குனர்.

அதுபோல காதலி அவனை வெறுத்து ஒதுக்கும்பொழுது குழந்தைகளை கைப்பிடித்து சாலையை கடக்க வைக்க கைகளை நீட்டி பின் யாரையோ அடிப்பதற்காக ஓடவது போல காட்டி அவனது மனம் மாறுபட்டதை காட்டிருக்கும் இயக்குநரை கண்டிப்பாய் பாராட்டாமல் இருக்க முடியாது.

ரவுடிகளான கதாநாயகனின் நண்பர்களை பாவனா "அண்ணா அண்ணா" என்று அழைப்பது மிக அருமை.

இப்படிச் சின்ன சின்ன கவித்துவமான காட்சிகள் ஏராளம்.

ஒரு கட்டத்தில் பாவனாவைப் பெண்பார்க்க வந்திருக்கும் பெண்வீட்டார்கள் பாவனா தாமதமாக வருவதைப் பார்த்து, "எங்கேம்மா போய்ட்டு வர்ற..? பாய்ப்ரண்டோட ஊர் சுத்திட்டு வர்றியா..? "என்று கேட்க, அதற்கு பாவனாவின் தந்தை "என் மகளைப்பார்த்து என்ன கேள்வி கேட்குறீங்க ..என் குழந்தை அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.." என்று அவர்களுக்காக வாதாட ஆனால் தன் காதலனோடு ஊர்சுற்றி விட்டு வரும் பாவனாவோ தன் மீது தனது தந்தை இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் . அவர் நம்பிக்கையை வீணடித்துவிட்டோமே என்று அழுது புலம்பி தன் காதலைச் அப்பாவிடம் சொல்லி அவனைத்திருமணம் செய்ய அப்பாவிடம் சம்மதம் வாங்குவது நல்ல காட்சி.

பாவனா - பாதி ஜோதிகா , பாதி திரிஷாவின் கலவையில் இருக்கிறார் . நடிப்பில் நல்ல குறும்புத்தனம் தெரிகின்றது.

பறந்து பறந்து அடிக்கும் கதாநாயகர்களுக்கு மத்தியில் ஒரு சுவற்றின் அருகே தலைகுனிந்து நின்று கொண்டு ஒவ்வொருவராய் அடித்துவிட்டு மீண்டும் அந்த சுவற்றின் பக்கம் போய் ஒதுங்கிக் கொள்கின்றான்.

அப்பொழுதுதான் பின்னால் இருந்து வந்து யாரும் தன்னை தாக்க முடியாது என்று அவ்வாறு சுவற்றின் பக்கம் சென்று ஒதுங்கி நின்று சண்டையிடுகின்றான். அட இது கூட நல்ல சிந்தனைதான்

விபச்சாரம் நடக்கும் பகுதியில் தனது நண்பனைக் காண கதாநாயகன் செல்லும் போது அந்த சூழ்நிலையை இயக்குநர் அழகாய் படம்பிடித்திருக்கின்றார்

அந்த விபச்சாரம் நடக்கும் வீட்டிலிருந்து காசு கொடுக்க முடியாத ஒருவன் சட்டையில்லாமல் ஓடிவந்துகொண்டிருக்க அவனை துரத்திக்கொண்டே அரைகுறைத்துணியோடு ஒரு விபச்சாரியும் கத்திக்கொண்டே ஓடிவர அந்தக் காட்சி லேசான நகைச்சுவைக்காக இயக்குநர் எடுத்திருக்கிறாரோ என்னவோ எனக்கு அந்த அந்தக்காட்சியின் மூலம் லேசான சோகம் அப்பிக் கொள்கின்றது.

இதற்கிடையில் கானா உலகநாதனை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. எல்லா பத்திரிக்கைகலும் அவரை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. நல்ல குரல் வளம் வித்தியாசமான சிந்தனை இருப்பதால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார்.


காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவாக வருபவர்தான் இதில் ரவுடி. ரவுடி என்றால் மற்ற படத்தில் காட்டுவதுபோல சின்னவயதில் பெற்றோர்களின் ஆதரவின்றி சமுதாயத்தில் அநாதையாய் விடப்பட்டு சமுதாயத்தின் மீது கோபப்பட்டு ரவுடியாக மாறுகின்ற ரவுடி அல்ல. சாதாரணமாக ஒரு வாழை மண்டி வைத்து நடத்திக்கொண்டு பணத்திற்காக கட்டப்பஞ்சாயத்து அடிதடி என்று செய்கின்ற நம் தெருவிலோ பக்கத்து தெருவிலோ நாம் சாதாரணமாக பார்க்கின்ற ஒருவர்தான்.

விபச்சாரம் நடக்கும் பகுதியில் தனது காதலனை அரைகுறை ஆடையோடு காவலர்கள் அடித்து இழுத்து வருவதைக் கண்ட பாவனா உடனே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி விட்டு தந்தையிடம் வந்து புலம்பிக்காண்டே "இப்ப என்ன ஆச்சு என்ன ஆச்சு ஒண்ணும் ஆகலை ஒண்ணும் ஆகலையே..? அப்பா டீ போட்டுக் கொடுங்கப்பா" என்று அலட்சியமாக கூற அப்பாவோ அமைதியாய் சமையலைறைக்குச் சென்று தூக்கு மாட்டிக் கொள்வது கதையின் அதிர்ச்சியான திருப்புமுனை.

கதாநாயகனை விபச்சார விடுதியில் இருந்து போலிஸார்கள் ஏன் அடித்து இழுத்து வந்தார்கள்? அவன் விபச்சாரம் செய்தானா?

கதாநாயகியின் தந்தை சமையறையில் தூக்கு போட்டு இறந்த போனதற்கான காரணம் என்ன?

இதையெல்லாம் சொல்லிவிட்டால் படம் பார்க்காதாவர்கள் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.


பாடல்களும் பிண்ணனி இசைகளும் இந்தப் படத்திற்கு அருமையாய் கைகொடுக்கின்றன.

பாவனாவின் நடிப்பு
அண்ணாச்சி ரவுடியின் யதார்த்தம்
கதாநாயகனின் நண்பர்கள்
கானா உலகநாதன்
கதாநாயகனின் யதார்த்தம்

இவையெல்லாம் படத்தின் பலம்.


மொத்தத்தில்

சித்திரம் பேசுதடி.
மக்கள் அலை மோதுதடி.

- ரசிகவ் ஞானியார்

Monday, April 03, 2006

உறுத்தல்




மணநாளின் ..
மாப்பிள்ளை ஊர்வலத்தில்
தற்செயலாய் கவனித்தேன்.!

கடைசி வரிசையில்
கண்ணீருடன்
சபித்துக்கொண்டே.. ..
என்னைக் காதலித்தவள்!



-ரசிகவ் ஞானியார்

Saturday, April 01, 2006

பிணக்கடன்





சமூக பிதற்றலுக்குப் பயந்து
சாவு வீட்டுக்கு ..
சம்பிரதாயத்திற்காய் சென்றேன்.

பூமியில் வாழுகின்ற
ஒப்பந்தத்தை முடித்துவிட்டு
சொர்க்கமோ? நரகமோ?
புலம் பெயர்கிறது அது

எத்துணை மதிப்புகள்
இருந்தாலுமென்ன..?
இருக்கும்வரை அவர்
இறந்துவிட்டால் அது


தெளிக்கப்படும்..
வாசனைத்திரவியங்களில்
நாற்றத்தை உணர்கின்றேன்.


திருமணத்தில் தெளிக்கப்படுகின்ற
பன்னீர்தான் என்றாலும்
தெளிக்கப்படும் இடம்தான்
வாசனையை தீர்மானிக்கிறது!


தெருவில் தள்ளிவிட்டு
அவமானப்படுத்திய..
கடைசிமகன்
காலைப்பிடித்து அழுதுகொண்டிருக்க

தனிக்குடித்தனம் சென்றுவிட்ட
தலைப்பிள்ளையோ..
பாடைகட்டும்
பரபரப்பில் சுற்றிக்கொண்டிருக்க..

அதிகம்
துக்கப்படுவதாய் காட்டிக்கொள்ள..
மார்பில் அடித்துக்கொண்டு
அலரும் சொந்தங்கள்..

என்னைப்போல்
சம்பிரதாயத்திற்காய்
வந்தவர்கள் யார்யாரோ
திணறி திணறி
முகத்தை சோகமாய்
மாற்றிக்கொள்ள முயல...


சடங்குகள் முடிந்து
பாடை தூக்கப்படும்நேரத்தில்
மனச்சுமையை குறைக்க மறந்த
மகன்கள்..
பிணச்சுமையை முதல்வரிசையில்
தாங்கிக்கொண்டிருக்க

வேடிக்கைகளையெல்லாம்
வெறித்துப்பார்த்துவிட்டு
கண்ணீரோடு நானும்
கலைந்து சென்றேன்.

என்னிடம்
பிணம் வாங்கிய கடனை
பிறர் தருவாருண்டோ..? என்ற
அதிகப்படியான வேதனையோடு..

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு