Saturday, April 08, 2006

சித்திரம் பேசுதடி


"டேய் படம் வித்தியாசமாக இருக்குடா.."

"கானா உலகநாதன் பாட்டு கலக்கல்டா.."

"பார்க்க வேண்டிய படம்டா.."

"வித்தியாசமான க்ளைமாக்ஸ்டா.."

என்று எல்லாப் பக்கமிருந்தும் வருகின்ற விமர்சனங்களின் தூண்டுதலில் படம் பார்க்க வேண்டிய ஆர்வம் அதிகரித்தது.

அப்படியென்ன வித்தியாசமான படம். விமர்சனங்களிலும் நண்பர்களின் மூலமாகவும் இந்தப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டு இரண்டு வாரமாக குறுந்தகடுக்காக அலைந்தேன்

கடைசியில் ஒருவழியாய் நேற்றுதான் நண்பனிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி வரச்சொல்லிப் பார்த்தேன்.

தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு என்னைப் பாதித்த அருமையான கதை. சில படங்களை பார்க்கும் போது இந்தப் படத்தை நான் எடுத்திருக்க வேண்டுமோ என்ற நினைப்பு வரும் எனக்கு. அதுபோன்ற உணர்வுகளைத் தந்த படம் இது.

படம் முடிந்த பிறகும் அதன் பாதிப்பில் 1 மணிநேரமாவது என்னை விழித்திருக்க வைத்ததுதான் இந்தப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

வேலை கிடைக்காமல் அடியாளாக வேலை பார்க்கும் கதாநாயகன் நரேனின் மனதில் காதல் வந்துவிட அதனால் அவனடைகின்ற மாற்றங்களை அழகாய் ஒரு மொட்டு பூவாவதைப்போல காட்டியிருக்கின்றார்கள். ரவுடியின் மனதில் காதல் வந்து விடுகின்ற கதை என்றவுடனே எனக்கு அமர்க்களம் கதைதான் ஞாபகம் வந்தது.

ஆனால் இப்படித்தான் அடுத்த காட்சி இருக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திராத சினிமாத்தனம் இல்லாத படம்.

புதுமுக கதாநாயகன் நரேன் அடிக்கடி முதுகைக்காட்டிக்கொண்டு நடிக்கிறார். ( குலுங்கி குலுங்கி அழும்போது முதுகைக் காட்டும் சேரனைப்போல)

ஒருவேளை அவர் முகத்தில் உணர்ச்சிகள் சரியாக காட்டத் தவறுவதால் இயக்குநர் அப்படிச் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

அடிக்கடி அவர் சாவடிச்சிருவேன்டி சாவடிச்சிருவேன் என்று கோவத்தில் கத்துவது வித்தியாசமாக இருக்கிறது.

சாலையில் செல்லும் போது கதாநாயகி பாவனா அவரது காருக்கு முன்னால் தற்செயலாய் செல்ல பாவனாவோ தன்னைத்தான் பின்தொடர்கின்றானோ என்று வீட்டில் வந்த தந்தையிடம் ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் சுவையானவை.

பாவனாவின் தந்தையாக பாய்ஸ் புகழ் அலைபாயுதே புகழ் அப்பாதான் இதிலும் அப்பாவாக தலைகாட்டியிருக்கின்றார். மனைவியைப் பிரிந்து தாயில்லாத பாவனாவுக்கு டீ போட்டுக் கொடுப்பது - மகளின் துணிகளை துவைத்து அயர்ன் செய்து கொடுப்பது என்று மகளின் மீது அதிக பிரியமுள்ள அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறார்


யாரையோ அடிப்பதற்காக துரத்திக் கொண்டு சென்று கொண்டிருக்கும்பொழுது வழியில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை கைப்பிடித்து அழைத்துச் சென்று சாலையைக் கடக்க வைப்பதை வைத்து ரவுடிக்கு காதல் வந்த பிறகு அவன் மனம் மென்மையானதை அழகாய் காட்டிருக்கின்றார் இயக்குனர்.

அதுபோல காதலி அவனை வெறுத்து ஒதுக்கும்பொழுது குழந்தைகளை கைப்பிடித்து சாலையை கடக்க வைக்க கைகளை நீட்டி பின் யாரையோ அடிப்பதற்காக ஓடவது போல காட்டி அவனது மனம் மாறுபட்டதை காட்டிருக்கும் இயக்குநரை கண்டிப்பாய் பாராட்டாமல் இருக்க முடியாது.

ரவுடிகளான கதாநாயகனின் நண்பர்களை பாவனா "அண்ணா அண்ணா" என்று அழைப்பது மிக அருமை.

இப்படிச் சின்ன சின்ன கவித்துவமான காட்சிகள் ஏராளம்.

ஒரு கட்டத்தில் பாவனாவைப் பெண்பார்க்க வந்திருக்கும் பெண்வீட்டார்கள் பாவனா தாமதமாக வருவதைப் பார்த்து, "எங்கேம்மா போய்ட்டு வர்ற..? பாய்ப்ரண்டோட ஊர் சுத்திட்டு வர்றியா..? "என்று கேட்க, அதற்கு பாவனாவின் தந்தை "என் மகளைப்பார்த்து என்ன கேள்வி கேட்குறீங்க ..என் குழந்தை அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.." என்று அவர்களுக்காக வாதாட ஆனால் தன் காதலனோடு ஊர்சுற்றி விட்டு வரும் பாவனாவோ தன் மீது தனது தந்தை இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் . அவர் நம்பிக்கையை வீணடித்துவிட்டோமே என்று அழுது புலம்பி தன் காதலைச் அப்பாவிடம் சொல்லி அவனைத்திருமணம் செய்ய அப்பாவிடம் சம்மதம் வாங்குவது நல்ல காட்சி.

பாவனா - பாதி ஜோதிகா , பாதி திரிஷாவின் கலவையில் இருக்கிறார் . நடிப்பில் நல்ல குறும்புத்தனம் தெரிகின்றது.

பறந்து பறந்து அடிக்கும் கதாநாயகர்களுக்கு மத்தியில் ஒரு சுவற்றின் அருகே தலைகுனிந்து நின்று கொண்டு ஒவ்வொருவராய் அடித்துவிட்டு மீண்டும் அந்த சுவற்றின் பக்கம் போய் ஒதுங்கிக் கொள்கின்றான்.

அப்பொழுதுதான் பின்னால் இருந்து வந்து யாரும் தன்னை தாக்க முடியாது என்று அவ்வாறு சுவற்றின் பக்கம் சென்று ஒதுங்கி நின்று சண்டையிடுகின்றான். அட இது கூட நல்ல சிந்தனைதான்

விபச்சாரம் நடக்கும் பகுதியில் தனது நண்பனைக் காண கதாநாயகன் செல்லும் போது அந்த சூழ்நிலையை இயக்குநர் அழகாய் படம்பிடித்திருக்கின்றார்

அந்த விபச்சாரம் நடக்கும் வீட்டிலிருந்து காசு கொடுக்க முடியாத ஒருவன் சட்டையில்லாமல் ஓடிவந்துகொண்டிருக்க அவனை துரத்திக்கொண்டே அரைகுறைத்துணியோடு ஒரு விபச்சாரியும் கத்திக்கொண்டே ஓடிவர அந்தக் காட்சி லேசான நகைச்சுவைக்காக இயக்குநர் எடுத்திருக்கிறாரோ என்னவோ எனக்கு அந்த அந்தக்காட்சியின் மூலம் லேசான சோகம் அப்பிக் கொள்கின்றது.

இதற்கிடையில் கானா உலகநாதனை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. எல்லா பத்திரிக்கைகலும் அவரை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. நல்ல குரல் வளம் வித்தியாசமான சிந்தனை இருப்பதால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார்.


காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவாக வருபவர்தான் இதில் ரவுடி. ரவுடி என்றால் மற்ற படத்தில் காட்டுவதுபோல சின்னவயதில் பெற்றோர்களின் ஆதரவின்றி சமுதாயத்தில் அநாதையாய் விடப்பட்டு சமுதாயத்தின் மீது கோபப்பட்டு ரவுடியாக மாறுகின்ற ரவுடி அல்ல. சாதாரணமாக ஒரு வாழை மண்டி வைத்து நடத்திக்கொண்டு பணத்திற்காக கட்டப்பஞ்சாயத்து அடிதடி என்று செய்கின்ற நம் தெருவிலோ பக்கத்து தெருவிலோ நாம் சாதாரணமாக பார்க்கின்ற ஒருவர்தான்.

விபச்சாரம் நடக்கும் பகுதியில் தனது காதலனை அரைகுறை ஆடையோடு காவலர்கள் அடித்து இழுத்து வருவதைக் கண்ட பாவனா உடனே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி விட்டு தந்தையிடம் வந்து புலம்பிக்காண்டே "இப்ப என்ன ஆச்சு என்ன ஆச்சு ஒண்ணும் ஆகலை ஒண்ணும் ஆகலையே..? அப்பா டீ போட்டுக் கொடுங்கப்பா" என்று அலட்சியமாக கூற அப்பாவோ அமைதியாய் சமையலைறைக்குச் சென்று தூக்கு மாட்டிக் கொள்வது கதையின் அதிர்ச்சியான திருப்புமுனை.

கதாநாயகனை விபச்சார விடுதியில் இருந்து போலிஸார்கள் ஏன் அடித்து இழுத்து வந்தார்கள்? அவன் விபச்சாரம் செய்தானா?

கதாநாயகியின் தந்தை சமையறையில் தூக்கு போட்டு இறந்த போனதற்கான காரணம் என்ன?

இதையெல்லாம் சொல்லிவிட்டால் படம் பார்க்காதாவர்கள் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.


பாடல்களும் பிண்ணனி இசைகளும் இந்தப் படத்திற்கு அருமையாய் கைகொடுக்கின்றன.

பாவனாவின் நடிப்பு
அண்ணாச்சி ரவுடியின் யதார்த்தம்
கதாநாயகனின் நண்பர்கள்
கானா உலகநாதன்
கதாநாயகனின் யதார்த்தம்

இவையெல்லாம் படத்தின் பலம்.


மொத்தத்தில்

சித்திரம் பேசுதடி.
மக்கள் அலை மோதுதடி.

- ரசிகவ் ஞானியார்

19 comments:

பரஞ்சோதி said...

ரசிகவ்,

மிக அருமையாக விமர்சனம் செய்திருக்கீங்க, பாராட்டுகள்.

நிலவு நண்பன் said...

// பரஞ்சோதி said...
ரசிகவ்,

மிக அருமையாக விமர்சனம் செய்திருக்கீங்க, பாராட்டுகள். //விமர்சனத்தை விமர்சித்ததற்கு நன்றி

நாகை சிவா said...

நல்ல மற்றும் தரமான விமர்ச்சனம்.

நிலவு நண்பன் said...

//siva said...
நல்ல மற்றும் தரமான விமர்ச்சனம். //வார்த்தைச் சிக்கனமான மற்றும் அழகான வாழ்த்து
நன்றி சிவா

Anonymous said...

ம்..
அந்தப்படம் என் கை வரைக்கும் வந்தது..
காதல்திருடன் என்ற படமும் கையில் இருந்தது
இரண்டையும் வைத்துக் கொண்டு என்னுடன்
வந்த என் நண்பியின் முகத்தைப் பார்த்தேன்..

"சித்திரம் பேசுதடி அழகான பெயர் இல்லையா? " என்று
கேட்டேன்

"சித்திரம் பேசுறமாதிரி இந்தப்படம் பேசலை நித்தியா"
என்று என்னிடம் இருந்த படத்தை பிடிங்கி வைத்திட்டு
காதல் திருடன் எடுத்துட்டு வந்துட்டாங்க

:-(
அடுத்த தடவை நான் தான் முடிவுபண்ணுவேன் என்ன படம் பார்க்கிறது
என்று .-)

நேசமுடன்..
-நித்தியா

பொன்ஸ்~~Poorna said...

எல்லாம் தான் சொல்லிட்டீங்களே.. உங்க கேள்விகளைப் படித்தாலே பதில் தெரிந்து விடுகிறதே.. ;) ஆனால், அடுத்த காட்சியை ஊகிக்க முடியாத படம் என்பது உண்மை.

ஜோ / Joe said...

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு பார்த்ததால் என்னவோ ,இந்த படம் மற்றவர்கள் சொல்வது போல் சூப்பர் என்று எனக்கு தோணவில்லை .கிளைமாஸில் சொல்லப்படும் அந்த அதிர்ச்சியான திருப்பம் ஒன்று தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது ..'சாவடிச்சுருவேன்'-னு ஹீரோ சொல்லும்போது ஒரு சுரத்து இல்லை,செயற்கையாக இருக்கிறது .

கண்டிப்பாக ஆதி ,பரமசிவன் வகையறாக்களுக்கு 100 மடங்கு தேவலை என்றாலும் ,அப்படி ஒன்றும் ஆகா ஓகோ படமல்ல.

நிலவு நண்பன் said...

//பொன்ஸ் said...
எல்லாம் தான் சொல்லிட்டீங்களே.. உங்க கேள்விகளைப் படித்தாலே பதில் தெரிந்து விடுகிறதே.. ;) ஆனால், அடுத்த காட்சியை ஊகிக்க முடியாத படம் என்பது உண்மை. //

அவங்க அப்பா தூக்கு போட காரணம் என்ன என்தை யாராலும் ஊகிக்கவே முடியாது..

நிலவு நண்பன் said...

// ஜோ / Joe said...
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு பார்த்ததால் என்னவோ ,இந்த படம் மற்றவர்கள் சொல்வது போல் சூப்பர் என்று எனக்கு தோணவில்லை .//

புதுமுகங்களை வைத்தே கதையை இந்த அளவிற்கு கொண்டு வந்திருப்பது கண்டிப்பாய் பாராட்டத்தக்கதே..


ஒவ்வொருத்தரின் பார்வையும் அப்படி நண்பா. ஒருவேளை உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கலாம்..

நிலவு நண்பன் said...

//:-(
அடுத்த தடவை நான் தான் முடிவுபண்ணுவேன் என்ன படம் பார்க்கிறது
என்று .-)

நேசமுடன்..
-நித்தியா//


சில சமயம் தனியாக எடுக்கின்ற முடிவுகள்தான் வெற்றியைக் கொடுக்கும்

ஆனால் இது எல்லா விசயங்களுக்கும் பொருந்தாது

Dharan said...

சித்திரம் சரியாக பேசவில்லை பேசவைக்கிறார்கள் ...

நிலவு நண்பன் said...

// Dharan said...
சித்திரம் சரியாக பேசவில்லை பேசவைக்கிறார்கள் ... //


சரி பேச வைத்தவர்களை பாராட்டுவோமே..

U.P.Tharsan said...

சித்திரம் பேசுகிறதோ பேசவில்லையோ ... ஆனால் இத்திரைப்படத்தில் வெற்றிக்கு காரணமாக நான் கருதுவது. அதிர்ச்சியான முடிவு.. மிக நேர்த்தியான காட்சியமைப்பு.. இயக்குனரின் வித்தியாசமான சிந்தனை... யதார்த்தம்... அழகான பவானா.. :-))

நிலவு நண்பன் said...

//அழகான பவானா.. :-)) //

கைக்குட்டை தருகிறேன்..துடைத்துக்கொள்ளுங்கள்..

பிரசன்னா said...

டைரக்டர் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக செதுக்கி இருக்கிறார். முக்கியமாக பொய் புகார் குடுத்து விட்டு வீடு வந்த மகளை பார்த்து " நாம எங்க போறோம், எதுக்காக போறோம்னு யாருக்கும் தெரியக்கூடாது" என்று கூறுவதும், நாயகியின் தந்தை செய்தது சரியா என்று நம்மை பேச வைத்ததும் இயக்குனரின் வெற்றி.
பட்டாம்பூச்சி பாடலில் முதலில் நாயகன் இலக்கியமாக பாடி பின் நண்பர்களுக்காக லோக்கல் ஆவது, அருமை. கொண்டை போட்ட சுண்டக் கஞ்சி பாவனா, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

பிரசன்னா said...

டைரக்டர் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக செதுக்கி இருக்கிறார். முக்கியமாக பொய் புகார் குடுத்து விட்டு வீடு வந்த மகளை பார்த்து " நாம எங்க போறோம், எதுக்காக போறோம்னு யாருக்கும் தெரியக்கூடாது" என்று கூறுவதும், நாயகியின் தந்தை செய்தது சரியா என்று நம்மை பேச வைத்ததும் இயக்குனரின் வெற்றி.
பட்டாம்பூச்சி பாடலில் முதலில் நாயகன் இலக்கியமாக பாடி பின் நண்பர்களுக்காக லோக்கல் ஆவது, அருமை. கொண்டை போட்ட சுண்டக் கஞ்சி பாவனா, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

நிலவு நண்பன் said...

//Prasanna said...
டைரக்டர் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக செதுக்கி இருக்கிறார். முக்கியமாக பொய் புகார் குடுத்து விட்டு வீடு வந்த மகளை பார்த்து " நாம எங்க போறோம், எதுக்காக போறோம்னு யாருக்கும் தெரியக்கூடாது" என்று கூறுவதும், நாயகியின் தந்தை செய்தது சரியா என்று நம்மை பேச வைத்ததும் இயக்குனரின் வெற்றி. //ம் அந்த காட்சியை நானும் ரசித்தேன் பிரசன்னா..

Anonymous said...

//ஒரு கட்டத்தில் பாவனாவைப் பெண்பார்க்க வந்திருக்கும் பெண்வீட்டார்கள்//

something wrong i guess...probably typo error!!!

நிலவு நண்பன் said...

//Anonymous said...
//ஒரு கட்டத்தில் பாவனாவைப் பெண்பார்க்க வந்திருக்கும் பெண்வீட்டார்கள்//

something wrong i guess...probably typo error!!!//


அட யாருமே கண்டுபிடிக்கலை நீங்க சரியா கண்டுபிடிச்சிட்டீங்க..

இத எப்படி சமாளிச்சு புத்திசாலித்தனமா பதில் சொல்லலாம்னு யோசிச்சி ஒண்ணுமே தோணல..சரி ஒத்துக்கறேன்பா..தட்டச்சு பிழைதான்..

தேன் கூடு