Friday, June 30, 2006

மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்

Photobucket - Video and Image Hosting

தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..? ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

இது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள்.

மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன். ஏனென்றால் என்னைச் சுற்றி எனக்குத் தெரிந்து மனைவிக்கு துரோகம் செய்யும் கண்ணில் பட்ட தமிழர்களைப்பற்றி மட்டும்தான் எழுதப்போகின்றேன்.

சரி தமிழனை மட்டும் குறிப்பிட்டு கூறியது போல ஆகிவிடுமே..அப்புறம் கருத்துச்சுதந்திரப் பிரச்சனைகள் வந்திடுமோ என்று பயந்துதான் தலைப்பு மட்டுமாவது மாறியிருக்கட்டுமே என்று மாற்றியிருக்கின்றேன்.

அப்படியென்ன துரோகம் என்கிறீர்களா..? வேற என்ன விபச்சாரம்தாங்க..
தமிழன் கடல் தாண்டி வணிகம் செய்தான் என்ற பெருமைகளை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் கடல் தாண்டி விபச்சாரம் செய்கிறார்கள்.


நான் ஒரு ஹைக்கூவில் கூட குறிப்பிட்டிருக்கின்றேன்:

துபாய்

பகலில்
கட்டிடக்கலை அழகு
இரவில்
கட்டிடக் கீழே அழுக்கு



பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் - எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அலுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்றுகின்றவளிடமும் -பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்

எனது நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரு கூலித்தொழிலாளி இராமநாதபுரத்தைச் சார்ந்த பவர்ணன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற நபர் இங்கே நர்சாக பணிபுரியும் ஒரு மலையாளிப் பெண்ணோடு ஊர்சுற்றிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரு நேர்முத்தேர்வே நடத்தியிருக்கின்றேன்.

எப்படி ஆரம்பிச்சது இது..?

ஒரு தடவை என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது இரத்தம் சோதனை செய்கிற பணியில் உள்ள அந்தப்பெண் பழக்கமானாள்.. பின் நான் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பிக்க அப்படியே ஆரம்பிச்சுது.

(அவள் இரத்தம் எடுத்திரக்கின்றாள் இவர் இதயம் கொடுத்துவிட்டார்;)

சரி அந்தப்பெண்ணுக்கு இங்கே ஆதரவுன்னு யாரும் இல்லையா..?

இல்லை..அந்தப்பெண்ணுக்கு கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சு..இங்க தனியாத்தான் இருக்கா..


சரி அந்தப்பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லலையா?

சில சமயம் சொல்லுவா..ஆனா நான் தான் எப்படியாவது சமாளிச்சுருவேன்

உங்களுக்கு கல்யாணம் ஆனதாவது தெரியுமா..?

ம் தெரியும் நான் அவகிட்ட சொல்லிட்டேன்..

( என்னடா இழவாப் போச்சு..தெரிஞ்சும் இவர் மேல ஆசைப்பட்டாளா..அப்படியென்றால் இருவருக்குமே காமம் மட்டுமே அடிப்படை இது காதலல்ல)

ஊர்ல மனைவி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க..அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..?

ஒருதடவை எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் எங்க வீட்டுக்கு போன்செய்து சொல்லிவிட உடனே அவ எனக்கு போன் பண்ணி ஓ ன்னு அழ ஆரம்பிச்சிட்டா..என்ன செய்ய அதெல்லாம் ஒண்ணுமில்லைடி சத்தியம் அடிச்சி நம்ப வச்சிட்டேன்..
( நீ சத்தியம் அடித்ததில் அவளுக்கு அழுகை நின்றது. ஆனால் உன் ஆண்மையல்லா அழ ஆரம்பித்துவிட்டது )
அவர் பெருமையாய் சொல்ல எனக்கு கடுப்பாய் இருந்தது.

எப்படி சமாளிக்கிறீங்க..வீட்டுக்கு பணம் அனுப்பணும்..இங்க வாடகை - அவளுக்கு செலவு..?

ஒரு மாசம் அவ வாடகை கொடுப்பா..இன்னொரு மாசம் நான் வாடகை கொடுப்பேன்

( அட இதுதான் லைப் பார்டனர்ரு சொல்றாங்களோ..)

சரி..ஏன் இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு..?அது மாதிரி உங்க மனைவியைப் பற்றி நீங்க தப்பா கேள்விப்பட்டீங்கன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்..?

என்ன செய்ய இப்ப விட்டுட்டேன்..இப்ப அதெல்லாம் இல்ல..என்று திக்கி திணறி பதில் சொல்லி சமாளித்தார்

அதிகமாக நோண்டினால் பிரச்சனை என்று நானும் அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டேன். பாருங்களேன் இந்த பவர்ணத்தை..

ஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..?

ஊரில் இவருடைய மனைவியைப்பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்..? தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்கவேண்டும் என்ற அவளது ஆசையில் மண்போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?


எனது ப்ளாட்டிற்கு அருகே வசிக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த
ஒரு நபர் இங்கே ஜெபல் அலி என்னுமிடத்தில் பணிபுரிகிறார். அவரது ஊரைச்சேர்ந்தவர்களுக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இங்கேயே ஏதோ வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும்பொழுதும் ஒரு அமைதியான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்வார். இவரா இப்படிச் செய்தார் என்பதை நினைக்கும்பொழுது நம்ப முடியவில்லை.

அவரை ஒருநாள் ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு அதிர்ந்துபோய்விட்டேன். பின் அவரது ப்ளாட்டில் வசிக்கும் எனது நண்பனிடம் கேட்டேன். அவனும் சந்தேகத்தோடு கூறினாhன்.

ஒருநாள் அவர் மொபைல் போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாருடா..அப்போ ஒரு போன் வந்திச்சு..நான் எடுத்தேன் க்யு நகி ஆயா என்று இந்தியில்ஒரு பொண்ணு பேசுறா..நான் உடனே பக்கத்தில் இருந்த அவரது தம்பியிடம் கொடுத்துவிட்டேன்..அவர் துருவி துருவி கேட்க அந்தப்பெண் போனை வைத்துவிட்டாள்..

அதிலிருந்து அவரது தம்பிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தேகம்டா.. என்று என்னிடம் கூற ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். பின்னர்தான் அவரைப்பற்றி விசாரிக்கும்பொழுது பல தகவல்கள் கிடைத்தது

அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுரா என்ற மலையாளி பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று.

பின்னர் மதுரையில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை விசிட் விசாவில் இங்கு அழைத்து வந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுவிட்டு மெல்ல மெல்ல தனது விஷ நாக்குகளை நீட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அந்தப்பெண்ணிற்கு வயது 24 க்குள் இருக்கும். இவருக்கோ 40 வயது. அந்தப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அந்தப்பெண்ணோ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உங்கள் முதல் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று பிடிவாதமாய்க் கூற இவர் முதல் மனைவியின் சம்மதம் பெற முயன்று கடைசியில் தோற்றுப்போனார்.

கடைசியில் அவரது தம்பிக்கு விசயம் எல்லாம் தெரிந்து ஊருக்கும் தெரிந்து விட இறுதியில் வேறு வழியில்லாமல் இப்பொழுது மனைவியை அழைத்து வந்திருக்கிறார்.


அவர் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்..? கடைசிவரை எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கு எடுத்துக்கொள்வேன் என்ற ஒப்பந்தத்தில் திருமணம் முடித்த பிறகு இவன் மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எந்த வகையில் நியாயம்?


ஒருநாள் நண்பர்களுடன் துபாய் டெய்ரா டாக்ஸி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபொழுது ஒரு தமிழர் அவரது மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

அவரது வாகனத்தை வைத்து அவர் சவுதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார் என தெரிந்து கொண்டேன்.

அவர் தன் மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததில் என்ன தவறு என்கிறீர்களா..?

ஒரு கையால் போனை காதில் வைத்திருக்கிறார்
இன்னொரு கையால் பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கிறார்.

அந்தப்பெண் முகத்தை வைத்து அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் என தெரிய வந்தது.

இவன் ஊருக்குப் போகும்போது மட்டும் ஏதோ கற்புக்கரசனாக - இறைபக்தியாளனாக நடிக்க ஆரம்பிக்கின்றான். எப்போதும் சட்டையில் வாசனைத் திரவியம் - கைகளில் கோல்ட் வாட்ச் - விலைஉயர்ந்த சட்டை - என்று சமூகத்தை ஏமாற்றுகிறார்கள்.

ரொம்ப சுத்தம் பார்ப்பார்கள் - டீசண்டான ஆட்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவன் சாக்கடையில் புரண்ட கதை யாருக்குத் தெரியும்..?

விடுமுறையில் ஊரில் தங்கியிருக்கும் இரண்டு மாதமும் மனைவிக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுப்பது- தங்கம் - சேலை என்று போன்ற போலியான கவர்ச்சிகளில் மனைவிகள் எதையும் கேட்பதில்லை.

கணவன் துபாய் போய் வந்திருக்கிறான் என்றால் சமூகத்தில் அந்த மனைவிக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிக்கிறது அந்த தற்காலிக மரியாதையை அவள் எதிர்பார்க்கின்றாள். ஆனால் கடல் கடந்து சென்றவன் கற்பிழந்து நிற்கிறான் என்று தெரியுமா அவளுக்கு..?

ஆகவே அப்பாவி மனைவிமார்களே உங்கள் கணவரின் நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் சுற்றுபுரத்தில் இருந்து துபாய்க்கு செல்லுபவர்களிடமும் துபாயிலிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருங்கள்.

இவர்களைப்பற்றிய எனது கோபங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எதனால் இப்படிச் செய்கிறார்கள்..? அவர்களுக்கு காமம்தான் அடிப்படையா..? அப்படியென்றால் ஏன் திருமணம் செய்து கொள்கின்றார்கள்? வாழ்நாள் முழுவதையும் விலைமாதுக்களுடனையே கழித்துவிடவேண்டியதுதானே..?

சமீபத்தில் நான் கண்ட ஒரு அருமையான திரைப்படம் மெர்க்குரிப்பூக்கள். அதில் காமெடி நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கும். டெலிபோன் பூத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து இறுதியில் அந்தப்பெண் பாதி உடலுக்கு மேல் இயங்காத ஊனமுற்றவள் எனத்தெரிந்தும் அவளையே திருமணம் செய்து கொள்ளுவார். படத்தின் க்ளைமாக்ஸே அந்தக் காட்சிதான். சினிமாவுக்குத்தான் அந்தக்காட்சி சரிவரும் என்றாலும் மிகவும் மனதை உருக்கிய காட்சி. மனைவியை உணர்சிகளை புரிந்து கொள்ளாமல் உடல் உறவுக்கு மட்டும் மனைவியை தேவையாக்கிக் கொள்ளும் கணவன்மார்களுக்கு அந்தக்காட்சி ஒரு சாட்டையடி.

இதில் பெரிய ஆச்சர்யம் என்றால் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் சில வருடங்களாய் பிரிந்து இருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

உடல் உறவுகளையும் தாண்டி மனைவியின் உணர்வுளைச் சரியாகப் புரிந்துகொள்பவன் கண்டிப்பாய் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான்.

சென்ற வருடம் துபாய் நைஃப் என்னுமிடத்தில் எனது பகுதியைச்சார்ந்த ஒரு மதிப்புமிக்க குடும்பத்தை சார்ந்த சகா என்ற இளைஞன் ஒரு ரஷ்யப்பெண்ணிடம் விலைபேசிக்கொண்டிருந்தான்.

மாடுகள் விலைபேசுதலில்
கைகள் மூடப்படுகிறது
இந்த
மனித விலைபேசுதலில்
கற்புகள் மூடப்படுகிறதா..?


அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலைபேசிவிட்டானா தெரியவில்லை?

நான் அந்த இளைஞனை கவனித்து விட அவனும் என்னை கவனித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு பில்டிங்கில் அருகே உள்ள சந்தில் ஒளிந்து கொண்டான் .

நானும் அவனைக் கவனிக்காமல் செல்வதைப்போல சென்று அந்த ஓரத்தில் உள்ள கேஎப்சி அருகே மறைந்து நின்றேன். அவனோ நான் சென்று விட்டேனா என்று உற்றுபார்த்து கவனித்துவிட்டு பின் விலைபேசிக்கொண்டிருந்த அந்த ரஷ்யப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கின்றான்

உடனே அவனுக்கு தெரிந்த இன்னொரு நண்பரிடம் விசயத்தை கூறி அவனுடைய வீட்டிற்கு கண்டிப்பாய் இதனை தெரியப்படுத்துங்கள் அல்லது அறிவுரை செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நண்பர் தெரியப்படுத்தினாரா அல்லது அவனை தனியாக அழைத்து அறிவுரை சொன்னாரா எனத் தெரியவில்லை.

இதுபோன்று மனைவிக்கு துரோகம் செய்யும் பச்சைத் தமிழர்கள் ஏராளம் இங்கு உண்டு.


எவளோ ஒருத்தி விதவையாகட்டும்
பரவாயில்லை
மனைவிக்கு துரோகம் செய்பவனுக்கு
மரணதண்டனை கொடுத்தால்தான் என்ன?


- ரசிகவ் ஞானியார்

Thursday, June 29, 2006

பழைய மனசு

Photobucket - Video and Image Hosting

( 2000 ம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் எனது நண்பனுக்காக எழுதிய கவிதை ஒன்று. )


அன்று
எதேச்சையாய் சந்தித்தோமே..
எக்மோர் நிலையத்தில்?
ஞாபகமிருக்கிறதா
பழைய காதலியே!

என்னுடைய குடும்பம்
என் தங்கை திருமணம்
கல்லூரி வாழ்க்கை
கிண்டல்கள்
நண்பர்கள் நிலை
சுற்றுலா சென்ற ஞாபகம்
ஸ்டிரைக்கில் ஏற்பட்ட கலாட்டா
இருக்கையை உடைத்து அபராதம் கட்டியது
திட்டிய தமிழ் வாத்தியார்
எல்லாம் விசாரித்துவிட்டு
என்னை விசாரிக்காமல் சென்றவளே
அந்த மௌனம்
சேது பட இறுதிக்காட்சியை விடவும்
கொடுமையாய் இருந்ததடி

எங்கே விசாரித்தால் - உனக்கு
அழுகை வந்துவிடுமென்றா
அமைதியாக இருந்தாய்?
நல்லவேளை விசாரிக்கவில்லை
நானும் அந்த நிலைதான்!

நான் மிகவும்
மெலிந்திருப்பதாய் கூறினாயடி..?
உன் உள்மனசை
உசுப்பிக் கேட்டுப்பார்..
நான் மெலிந்த காரணத்தை!
சத்தியமாய் உனக்குத்
தெரியாதா..?

உன் திருமணத்திற்கு
அழைப்பிதழ் அனுப்பிவிட்டு
நான்
வராமல் போனதற்காக
வாழ்த்து அனுப்பினாயே?
ஞாபகமிருக்கிறதா..?

அதோ!
தேநீர் சாப்பிட்டுவிட்டு வந்த
உன் கணவனை
எனக்கு அறிமுகப்படுத்தினாய்!
ஆனால்
என் இதயம் சாப்பிட்டுவிட்டு போன நீ
எனக்கு
அறிமுகமில்லாமலையே போய்விட்டாயடி!

நான் பைக்மோதி
நீ பட்ட காயம்
இன்னமும் ஆறவேயில்லையோ?
என்
இதயம் போலவே!

கல்லூரி நாட்களில்
என்னைப்போலவே

இப்பொழுது
உன் தோள் மீது
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு...
பெயர்வைக்க நீ
அடம்பிடித்ததாய்
உன் கணவன் சொல்கின்றான்!
அவனுக்கெப்படி தெரியும்?
அந்தப்பெயர் என்
செல்லப்பெயரென்று!

அதோ தூரத்தில்
ரெயில் வரும் சப்தம்
காற்றுக்குத் தெரியாமல் என்
காதில் விழுகின்றது!
கணவனுக்குத் தெரியாமல் உன்
கண்கள் அழுகின்றது!

இதோ! இதோ
இரயில் நின்றுவிட்டது..

என் இதயமோ
ஓட ஆரம்பிக்கின்றது!

இங்கே பார்
உனது குழந்தைகூட எனக்கு
டாட்டா காட்டுகிறது
உன்னைப்போலவே..

நீயோ கிளம்பிவிட்டாய்
இப்பொழுதும் நான்
காத்துக்கொண்டிருக்கின்றேன்..

புரியவில்லையா
புகைவண்டிக்காகத்தான்..

உன்னுடைய பயணம்
எந்த நிறுத்தத்திலாவது
நின்றுவிடும்
ஆனால் நானோ
திசையே தெரியாமல்
பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

நீ கடந்து போன ரெயில்
கண்ணை விட்டு மறையும் வரையிலும்
என் இதயம்
மூன்றாம் பிறை கமல்போல
மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருக்கின்றது

பழைய காதலியே! மீண்டுமா
பாதியில் விட்டுப்போகின்றாய்
பரவாயில்லையடி!

ஏற்கனவே கிடைத்த
அனுபவத்தால்
இந்த இரண்டாம்பிரிவில்
இதயம் திடப்பட்டுக்கொண்டது.


எந்தப் பத்திரிக்கையின்
மூலையிலாவது..
பிரசுரமாகியிருக்கும்
எனது கவிதையைக்கண்டு
அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற
அசட்டு நம்பிக்கையில்தான்
இந்தக்கவிதையையும்
எழுதியிருக்கின்றேன்!

இனியொரு ஜென்மமிருந்தால்
நாம் படித்த ...
அதே கல்லூரியில்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ளாமலையே
பிரிந்துவிடுவோம்.


மீண்டும்
எந்தச் சந்திப்பில்
சந்திப்போமோ என்ற
சங்கடத்தோடு பிரிகின்றேன்.
போய்வாடி! டாட்டா..

- ரசிகவ் ஞானியார்

துபாய் சிட்டி ரவுண்ட்

Photobucket - Video and Image Hosting

அதிசய பேருந்து

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பேருந்து இது. சாலையில் வந்து கொண்டே இருப்பீர்கள் திடீரென்று எட்டிப்பார்த்தால் அந்தப் பேருந்து கடலில் செல்லும். என்னடா பேருந்து கவிழ்ந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சாலையில் இருந்து கடலுக்குள் செல்லுகின்றது இந்தப்பேருந்து. 44 இருக்கைகள் அடங்கிய இந்தப் பேருந்து 2002 ம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேருந்து அமெரிக்காவின் கைவண்ணம்.

முழுவதுமாய் குளிரூட்டப்பட்ட பெரிய டிவி மற்றும் குளியல் அறை கொண்ட பேருந்து இது. பயண நேரங்களில் தேவைக்கேற்ப உணவும் குளிர்பானமும் வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இருக்கையின் கீழும் லைப் ஜாக்கெட் வைக்கப்பட்டுள்ளது.

பயணமானது பர்ஜுமான் என்ற பெரிய அங்காடிப்பகுதியிலிருந்து ஷேக் செய்யது சாலை அல் வாசல் பாலம் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் - அல் பூம் உணவகம் வழியாக கடலில் சென்று விழுகின்றது. கிரீக் பார்க் - துபாய் நீதிமன்றம் - அல் மக்தூம் பாலம் - ஷேக் மரியம் அரண்மனை வழியாக கடலில் பயணம் செய்து மீண்டும் பர்ஜுமான் அங்காடியை அடைகின்றது

சுமார் இரண்டு மணி நேர பயணத்தில் துபாயைச் சுற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாக காலை 11 மணியளவிலும் மாலை 4 மணி அளவிலும் இந்த பேருந்து செயல்படுகின்றது.
பேருந்து கிளம்புவதற்கு 20 நிமிசம் முன்பாகவே அந்த அங்காடிப் பகுதிக்கு வந்துவிடவேண்டும்.

3 முதல் 12 வயது உள்ள சிறியவர்களுக்கு 115 திர்ஹம்
பெரியவர்களுக்கு 75 திர்ஹமும் வசூலிக்கின்றார்கள்
.

கட்டணம் வித்தியாசமமே தவிர பெரியவர்களுக்கும் குழந்தை தனத்தைக் கொடுத்து குதூகலமூட்டும் இந்தப்பயணம்.


Photobucket - Video and Image Hosting

பாலைவனப் பயணம்

சாலையிலும் கடலிலும் பணம் செய்வதை விடவும் ஆள் அரவமே இல்லா பாலைவனத்திற்குள் பயணம் செய்வது என்பது மிகவும் மெய் மறக்க வைக்கின்ற செயலாகும்.
தினமும் மாலை 3.30 அல்லது 4.30 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற பயணம் சுமார் 5 அல்லது 6 மணிநேரப்பயணமாக பாலைவனத்திற்குள் சுற்றுகின்றது.

கார் பாலையின் மேடு பள்ளங்களில் பாய்கின்றபொழுது கலைத்து வீசப்படுகின்ற மணலும் தூசி மண்டலங்களும் கார் கவிழ்ந்து விட்டதோ என்று நம்மை அலற வைக்கின்ற தருணங்களும் மிகவும் திரில்லாக இருக்கும்.

இந்த பயணத்தில் ஒட்டகச் சவாரி - உணவக வசதி - பெயிண்டிங் ( கைகளில் கால்களில் பெயிண்ட்டிங் செயது கொள்ளலாம் ) - சீஷா என்று அழைக்கப்படுகின்ற அரபிக்கள் குடிக்கின்ற சிகரெட் போன்று ஆனால் போதையில்லாத உடலுக்கு கேடு தராத வாட்டர் பைப் - பெல்லி நடனம் ( மின்விளக்கில் ஆடுகின்ற நிலவுகள் ) ஆகியவை உள்ளடக்கம்

பயணத்தின் போது சூரிய அஸ்தமனத்தைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். அத்தனை அழகு காட்சி. தண்ணீருக்குள் இருந்து சூரியன் வருவதைக் கன்னியாகுமரியில் கண்டிருப்பீர்கள். ஆனால் பூமியில் முளைக்கின்ற சூரியனைக் கண்டிருக்கின்றீர்களா..?
பயணத்தின் உச்சக்கட்டமே இதுதான்.

175 திர்ஹம் டாலர் பெரியவர்களுக்கு
110 திர்ஹம் சிறியவர்களுக்கு

Photobucket - Video and Image Hosting

ஆடம்பர கார் பயணம் (Luxuries Limo)

இந்த காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு துபாயை சுற்றிப்பார்க்க கிளம்பலாம்.
மிகவும் ஆடம்பரமான மற்றும் நீளமான காரில் ராஜாக்களைப் போல நாம் வலம் வரலாம்.
காரினுள் உணவக வசதி உண்டு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதுபோன்ற காரில் பயணம் செய்த அனுபவம் வேண்டும்.

Photobucket - Video and Image Hosting

இரட்டை அடுக்கு பேருந்து

திறந்த மேல் அடுக்கினைக் கொண்ட இந்த இரட்டை அடுக்கு பேருந்தில் உல்லாசமாக சுற்றி வரலாம். லண்டனுக்கு அடுத்து இந்த பேருந்து கம்பெனி துபாயில்தான் அதன் சர்வீஸை ஆரம்பித்துள்ளது.


பேருந்தின் மேல் அடுக்கில் 41 இருக்கைகளும் கீழ் அடுக்கில் 27 பேர் அமரும்படிhயக இருக்கைகள் உள்ளன. இந்த பயணமானது 1 .30 மணி நேரம் பயணிக்கின்றது. ஆனால் இந்த நேரம் வாகன போக்குவரத்து நெருக்கடியைப் பொறுத்தது.

இந்தப் பயணத்தில் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் துபாய் கடற்கரைப்பகுதி பிரிட்டிஷ் தூதரகம் துபாய் மியுசியம் - பர்துபாய் பழைய மார்க்கெட் வீதி - ஜுமைரா பீச் பகுதி - ஷேக் செய்யது அல் மக்தூம் வீடு மற்றும் கலாச்சாரக் கட்டிடங்கள் - தங்க மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளை கடந்து துபாய் இரட்டைக் கோபுரத்தில் வந்து முடிகின்றது.

காலை 10 மணியிலிருந்து ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு பேருந்து வாபி சிட்டியில் இருந்து ஆரம்பிக்கின்றது. இரவு 10 மணி வரை இந்த பேருந்து சர்வீஸ் உண்டு.

இதன் விலையானது
பெரியவர்களுக்கு 50 திர்ஹமாகவும்
சிறுவர்களுக்கு 30 திர்ஹம் ஆகவும்
இரண்டு பெரியவர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட உள்ள ஒரு குடும்பத்திற்கு 130 திர்ஹமும் மற்றும்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இலவசமாகவும் நிர்ணயித்துள்ளது

ஆனால் சீசன் காலங்களில் இதன் விலை வித்தியாசப்படுவதுண்டு. இந்தப் பேருந்தை தனியாக நாம் மட்டும் வாடகைக்கு அமர்த்தி நமது குடும்பங்கள் - நண்பர்கள் - உறவினர்கள் என்று உல்லாசாய் சுற்றலாம்.

Photobucket - Video and Image Hosting

ஹத்தா சபாரி

ஹத்தா என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பகுதியானது மலைப்பாங்கான பகுதியாகும்.

சமீபத்தில் எங்களுடன் வந்த எனது நண்பர் ஒருவர் பயணத்தின் போது பயத்தில் கண்களை திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டார். அந்த அளவிற்கு மிக ஆழமான பள்ளங்கள் - மேடுகள் என்று பயணம் மிகவும் திரில்லாக இருக்கும். இங்கே மில்லியன் ஆண்டு பழங்கால வித்தியாசமான நிறங்களில் மலைகள் மற்றும் மண்களின் நிறங்கள்..
வாடி என்று அழைக்கப்படுகின்ற நீர் வீழ்ச்சி -இயற்கை நீச்சல் குளங்கள் மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் 16 வது நூற்றாண்டு கோட்டை மற்றும் விவசாய விளை நிலங்கள் என்று பயணம் கொஞ்சம் வித்தியாசமான சூழலைத் தருகின்றது.
Photobucket - Video and Image Hosting

அல் அய்ன் சுற்றுலா

அல்அய்ன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நகரமானது அமீரக கூட்டமைப்பில் உள்ள ஒரு சிறிய நாடாகும். மிகவும் பசுமை நிறைந்தது. இங்குள்ள நிலங்களில் இருந்துதான் அதிகமான காய்கறிகளும் பேரீத்தம் பழங்களும் உற்பத்தியாகின்றன.

இங்கு ஹில் சிட்டி என்று அழைக்கப்படுகின்ற பசுமை நிறைந்த தோட்டங்கள் வழியாக செல்லுகின்ற பயணம் அமீரகத்தின் மிகப்பெரிய ஒட்டக சந்தையில் முடிகின்றது.
இந்தச்சுற்றுலாவில் அல் அய்ன் மியுசியம் - உயரமான மலைப்பகுதி - கண்கவரும் நிலப்பகுதிகள் என்று பயணம் தொடர்கின்றது.

Photobucket - Video and Image Hosting


படகு உணவுப் பயணம்

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நிலாச்சோறு உண்டிருப்பீர்கள். ஆனால் நிலாவுடன் பயணதித்துக்கொண்டே நிலா வெளிச்சத்தில் உணவு உட்கொள்வதற்கான அருமையான தருணம். பிறந்த நாள் விழா - திருமண விழா என்று நண்பர்களுக்கு உறவினர்களுக்கு விருந்து கொடுக்கலாம். படகில் இருந்த படியே சுற்றியுள்ள கலாச்சாரக் கட்டிடங்களையும் மன்னரின் பிறந்து வளர்ந்த இடங்களையும் ரசித்துக்கொண்டே பயணப்படலாம்.

இரவு நேரங்களில் கடல்வெளியினில் உணவு உட்கொண்டு கொண்டே பயணப்படுவது என்பது மனசை மிகவும் மகிச்சியூட்டும் செயலாகும்.




- ரசிகவ் ஞானியார்

Wednesday, June 28, 2006

ஒரு நிலவு நட்சத்திரமாகின்றது

அன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு

வலைப்பதிவு ஆரம்பித்த சென்ற வருடத்திலிருந்து நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன் இந்த நட்சத்திரப்பட்டாளங்களை. ஆனால் நான் எப்பொழுதுதான் நட்சத்திரமாவதாம். ?

தமிழ் மணத்தில் அடிக்கடி எப்படி நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற விதிமுறைகளை கவனித்துக்கொண்டு அதன்படிதான் எழுதுகின்றேன். ஆனாலும்
எனக்குப் பிறகு வந்தவர்கள் எல்லாம் நட்சத்திரமாவதைக்கண்டு பொறாமை கொண்டேன்.

இப்பொழுது என்னையும் தேர்ந்து எடுத்துவிட்டார்கள் என்பதில் மிக்கமகிழ்ச்சி. ஆம் ஒரு நிலவு நட்சத்திரமாகின்றது.

என்ன எழுதலாம் என்று தீர்மானிக்கவில்லை. ஆனால் உபயோகமாக எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது.

இந்த நிலவை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கும் எனக்கு தொடர்ந்து விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் விமர்சனம் எழுத முடியாவிட்டாலும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய திருமணத்திற்கும் நட்சத்திரமானதிற்கும் தொலைபேசியிலும் - வலைப்பதிவில் விமர்சனங்கள் தந்தும் வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, June 26, 2006

நிலவுக்கு திருமணம்

அன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு




புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நிலவுநண்பன் தன்னுடைய திருமண தகவலை தெரிவிக்காமல் இருந்தால் அது துரோகமல்லவா..?


நிலவு துபாயிலிருந்து 21ம் தேதி புறப்பட்டு 22ம் தேதி இந்தியா வந்தடைந்தது.
பயணக்காரன் பைத்தியக்காரன் என்று எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லுவதுண்டு. அதுபோல பயண தேதி முடிவானதிலிருந்து எதுவுமே ஓடவில்லை.

ஷாப்பிங் - லக்கேஜ் - விடைபெறுதல் என்ற பரபரப்பான சூழ்நிலையினில் வலைப்பதிவில் தகவல் தெரிவிக்க முடியவில்லை. ஆகவேதான் நண்பர் முத்துக்குமரன் அவர்கள் என்னுடைய சார்பில் அவரது வலைப்பதிவில் தெரியப்படுத்தினார். அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னடா நிலவு நண்பன் சொல்லாமல் சென்றுவிட்டாரே என்று நண்பர்கள் மத்தியில் உள்ள சலசலப்பை நீக்குவதற்காகத்தான் கடுமையான வேலைப்பளுவிலும் வலை நண்பர்களைத் தேடி ஓடோடி வந்திருக்கின்றேன்.

பேச்சிலராக சுற்றிக்கொண்டிருந்த நிலவு நண்பன் வருகின்ற ஜுலைமாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பேச்சு இலராக மாறப்போகின்றான். அதாங்க திருமணம் நடக்கப்போகுதுப்பா..

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அன்னை திருமண மண்டபத்தில் வைத்து எனக்கும் என்னுடைய கல்லூரி தோழி ஜஹான் என்ற பெண்ணிற்கும் திருமணம் இறைவனின் கண்காணிப்பில் நடக்கவிருக்கின்றது.
Photobucket - Video and Image Hosting

நிலவை ரசித்தவன்
நிலவில் வசிக்கப்போகின்றான்

இடங்களின் தூரங்கள்
அதிகமாய் இருந்தாலும்
இதயங்களின் தூரத்தைக்
குறைத்துக் கொண்டு வாருங்கள்.

வெறுப்புகள் - பொறாமைகள் - வஞ்சகங்களை
திருமண மண்டபத்தின்
வாசலில்
செருப்புகளோடு கழட்டிப்போடுங்கள்.

நட்புகள் - பாசங்கள் - அன்புகள் உடன்
மணமேடையில்
எங்கள் மீது
பொறுப்போடு பூக்கள் போடுங்கள்.

மின்னஞ்சலோ
குறுந்தகவலோ
கடிதங்களோ
தந்தியோ
எந்த ஊடகம் வழியேனும்
பூக்கள் வீச அனுமதியுண்டு

மறந்து போச்சு
வேலை அதிகம்
நேரம் இல்லை
முக்கிய திருமணம் என்ற
எந்த அலட்சியம் வழியேனும்
பொய்கள் வீச அனுமதியில்லை.

வாழ்த்துக்கள் வரட்டும் விரைந்து - ஆனால்
நேரில் வந்தால்தான் விருந்து

---


இதோ
தத்தி நடந்த பறவைகளுக்கு
சிறகுகள் முளைக்கின்றது.

குழந்தையை விரல்பிடித்து
வழிநடத்தும் தாய்போல
எங்களை
இதயம் பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்

விண்நோக்கி
பறப்பதற்காய் புறப்படுகின்றோம்

கழுகுகள்
கண்விட்டுத் தப்பிக்கவும்
குருவிகளோடு
கொஞ்சி விளையாடவும்
கற்றுத்தாருங்கள்

கைகள் இணைந்து
கனவுகள் மெய்யாகட்டும்
அன்புகள் கலந்த
ஆசிர்வாதங்களே மொய்யாகட்டும்

இந்த அழைப்பிதழில் எங்கேனும்
வார்த்தைகளில்
பிழையிருந்தால் விட்டு விடுங்கள்.

நாங்கள் வாழும்காலம் முழுவதும்
வாழ்க்கையில்
பிழையிருக்காதென வாழ்த்துக் கொடுங்கள்.

நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது. நமக்கென்று ஒருத்தி வீட்டில் காத்திருக்கின்றாளே என்ற ஒரு எதிர்பார்ப்புகளில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். கமுவில் இருந்ததைப்போல கபியில் இருக்க முடியாதே. என்ன செய்ய..? சுதந்திரம் பறிபோவது போல இருக்கிறதே என்ற பயம் கலந்த மன ஓட்டத்தில் நாட்களை எண்ணுகின்றேன்.

முன்பெல்லாம் வீட்டில் டிவியைப் போட்டுக்கொண்டே தூங்கிவிடுவேன். மின்சார செலவை பொருட்படுத்தாமல் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு வேடிக்கைப் பார்ப்பேன். ஆனால் இப்போது ஒவ்வொரு விளக்காக தேடி எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க முற்படுகின்றேன். அட நமக்கும் பொறுப்பு வந்துடுச்சுங்க..

எங்கெங்கோ இருந்துகொண்டு முகம் தெரியாமல் நம்முடைய எல்லா உணர்வுகளை பரிமாறிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே என்னுடைய திருமணத்திற்கு தங்களின் வருகை - வாழ்த்து - ஆசிர்வாதங்கள் எல்லாம் மிக அவசியம்.
நாம் வலைகளில் மட்டுமே பழக்கப்பட்டிருந்தாலும் நம்முடைய நட்புகள் விலை கொடுத்து வாங்க முடியாதது.

வாழ்த்து தெரிவிக்க அல்லது நேரில் வர விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். (00919843547888)

திருமணத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு முன்னரே தகவல் தெரிவித்தால் நல்லது என்று எண்ணுகின்றேன்.


என்னை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். இது எனக்கு தமிழ்மணம் தந்த கல்யாணப்பரிசாக ஏற்றுக்கொள்கின்றேன். இதனைப்பற்றிய பதிவினை அடுத்த பதிவாக தருகின்றேன்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Sunday, June 18, 2006

அப்பாவுக்காய் ஒரு கடிதம்

அப்பாக்களின் தினத்தை முன்னிட்டு ஏற்கனவே வெளியிட்ட அப்பாவுக்காய் ஒரு கடிதம் என்ற கவிதையை மீள்பதிவாக வெளியிடுகின்றேன்.

அப்பாக்களை ஞாபகப்படுத்த ஒரே ஒரு தினம் மட்டுமாவது கண்டிப்பாய் தேவைப்படுகின்றது. இந்த சாப்ட்வேர் உலகினில் நண்பர்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு கூட அப்பாவை யாரும் ஞாபகத்தினில் வைத்திருப்பதில்லை. எல்லா நிமிடங்களும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என் அப்பாவின் ஞாபகமாக ஓர் கவிதை இதோ..


அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...
இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -
என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ
தியேட்டர் சுவரை மீறி
செலவழித்தேன் அப்பா!

நான்
கேட்கத் தயங்குவேனெனத் தெரிந்து
எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால்
நான்
அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!

நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...

உன்
வியர்வை விற்ற காசில் - எனக்கு
குளிர்சாதனப்பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு
பைக் வாங்கிக் கொடுத்தது...

நீ மிதித்த சுவடுகள்
சைக்கிள் பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான்
அதிகமாய் பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து
பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ...
வேலைதேடிய எனக்கு
நீ பணம் அனுப்பினாயே ?

இப்படி
இதய தேசத்தில்
உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!

உன் பாக்கெட்டில்
பணம் திருடியது
நான்தான் என தெரிந்தும் ...
இதுவரை
எனைக் காட்டிக்கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய்
நீ செய்த பாசாங்கு!

இதுபோல
கடிதம் சுமக்காத
பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........
என்னுள்ளும் .........

நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும்
நம்மைப் பிரித்துவிடக்கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!



-ரசிகவ் ஞானியார்

Thursday, June 15, 2006

ச்சும்மா தமாசு

என்னடா நாலு சங்கிலி பதிவு - ஆறு பதிவுன்னு போய்கிட்டு இருக்கு நாம சும்மா இருக்கலாமா . அதான் எடுத்து வுட்டுறுக்கேன் ஒரு 5 பதிவு. நீங்களும் எடுத்து விடுங்களேன்.

1.நீங்கள் சின்ன வயதில் விளையாடிய மறக்க முடியாத விளையாட்டு
எது?

2.நீங்கள் கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கேலி -
கிண்டல்- சோகம் என தங்களை மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள்?

3.கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட
மறக்கமுடியாத சண்டைகள்?

4.எதையாவது தொலைத்துவிட்டு பதறிய நாட்கள்?

5.இதுவரை வாழ்க்கையில் யார்மீது அதிக கோபப்பட்டிருக்கின்றீர்கள்?

*************************

1.நீங்கள் சின்ன வயதில் விளையாடிய மறக்க முடியாத விளையாட்டு
எது?

கோலி - சீட்டு - பம்பரம் - நாய் வளர்த்தல் - தெல்கா - கிரிக்கெட் என்று பலவிதமான சீசன் விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை.

கோலி

கோலிக்குண்டுகள் போட்டியில் இரண்டு கோடுகள் கிழித்து ஒரு கோட்டிலிருந்து இன்னொரு கோட்டின் எல்லைக்கு அப்பால் கோலிக்குண்டுகளை வீசி தூரம் அதிகமாய் இருக்கின்ற கோலியினை இன்னொரு கோலியினால் அடித்து வெற்றிபெறுவோம் .

கோலிக்குண்டுகள் போட்டியில் வெற்றிபெற்றாலும் கோட்டையை வெற்றி பெற்றதுமாதிரியான கர்வத்தில் கோலிக்குண்டுகளின் ஓசையில் சல் சல் என நடந்து வருகின்ற பெருமையே தனிதான்பா..

சீட்டு -

அப்பொழுதே பனாமா - பில்டர் - சிஸர் என்று சிகரெட் அட்டைகளை பொறுக்கி ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பு கொடுத்து அவற்றை அழகாய் மடித்து அடுக்கி வைத்து தூரத்தில் இருந்து ஒரு முண்டு என அழைக்கப்படுகின்ற கல்லினால் ஆன துண்டை எடுத்து அவற்றை நோக்கி வீசுவோம். சரியாக அடித்து சிதறுகின்ற சீட்டுகளை பொறுக்கி கொள்வோம்.

சிலநேரம் அந்த முண்டு நடந்து செல்பவர்களின் கால்களில் பட்டு தெருவில் உள்ளவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவார்கள்.

பம்பரம்

பம்பர விளையாட்டில் மிகவும் ஜாலியாகவும் இருக்கும். சண்டைகள் ஆரம்பிக்கும் விளையாட்டும் இதுதான். தோற்றவனின் பம்பரத்தை பறித்து அதனை தரையில் போட்டு எங்களுடைய பம்பரங்களின் முனைகளால் அந்தப் பம்பரத்தில் ஓட்டைகள் இட்டு சேதப்படுத்துவது.

இந்த முறையை ஆக்கர் என்று அழைப்போம். ஆக்கருக்கு மாட்டிய பம்பரத்தின் சொந்தக்காரன் நமக்கு பிடிக்காதவனாக இருந்தால் ஒழிந்தான் அவன்

பம்பரத்தை சின்னாபின்னமாக்கிவிடுவோம். அவன் பம்பரத்தை மட்டும் லேசா ஓட்டை போட்ட..என்னுடைய பம்பரத்தை ஏன்டா அதிகமாக ஓட்டை போடுறீங்க..ன்னு சண்டை ஆரம்பிச்சு கட்டிப்புரண்டு சண்டை நடக்கும். இதில் என்ன வேடிக்கை என்றால் சண்டையை தடுப்பதை விடவும் வேடிக்கை பார்க்க இன்னமும் ஜாலியாக இருக்கும்.


2.நீங்கள் கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கேலி - கிண்டல்- சோகம் என தங்களை மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள்?

அதை ஏன் கேட்குறீங்க..பி எஸ் சி படிக்கும்பொழுது ஊட்டி கொடைக்கானல் ஒகேனக்கல் ன்னு திட்டம் போட்டு கிளம்பியாச்சு. போகிற வழியில் கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு இடத்துல போய்கிட்டு இருக்கும்பெழுது நண்பர்களில் சிலர் சுற்றுலாவின் ப்ளானை கொஞ்சம் மாற்ற

அதில் கருத்து வேறுபாடு வர ஒருத்தனை இன்னொருவன் அடித்துவிட இது பெரும் பிரச்சனையாகி நாங்கள் சென்று கொண்டிருந்த வேனை பாதியில் நிறுத்தி சண்டை நடந்தது.

நாங்கள் நடுநிலைவாதிகளாக மாறி சண்டையை தடுக்க அதனையும் மீறி ஒருவனை ஒருவன் துரத்திக்கொண்டு சாலையில் ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்களில் சிலர் மட்டுமே மிச்சம். எங்களுக்கு சிரிப்பதா அழவதா எனத் தெரியவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொருத்தனாக தேடிப்பிடித்து அழைத்து வந்து வேனில் ஏற்றி பயணத்தை தொடர்ந்தோம். இப்பொழுது நினைத்தாலும் அதனை மறக்க முடியாது.

பின் எம் சி ஏ நண்பர்களோடு கன்னியாகுமரிக்கு சென்றபொழுது கோயிலின் அருகே நான் ஒரு குச்சியை எடுத்து ஒரு முனையை நான் பற்றிக்கொண்டு இன்னொரு முனையை எனக்கு முன்னால் சென்ற அந்த ரகி என்ற மாணவியிடம் கொடுத்து பிடிக்கச்சொல்ல அந்தப்பெண்ணும் அந்தக்குச்சியைப் பிடித்து என்னை வழிநடத்தி செல்ல

அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
அன்புடன் ஆதரிக்கும்
தெய்வமும் நீயே
என்று ஒரு பாடல். சின்ன வயசு கமல்ஹாசன் நடித்த படம் .

அந்தப்பாட்டை படித்துக்கொண்டே கண்தெரியாதவன் மாதிரி செல்ல சரியான ஜாலியாக இருந்தது. கடந்து செல்பவர்கள் எல்லாம் இது உண்மையா பொய்யா எனத் தெரியாதவாறு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டு சென்றார்கள்.

ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு துண்டையும் விரித்துவிடலாம் என்று நண்பர்கள் திட்டம் போட

எங்களுடன் வந்த ஆசிரியர் சாதிக் என்பவர்..ஞானி காலேஜ் மானத்தை வாங்காதடா..பேசாம வா என்று கண்டித்ததால் அந்த திட்டத்தை விட்டுவிட்டோம்.

மறக்க முடியாத சுற்றுலா நிகழ்வுகள் அவைகள்.

3. கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மறக்கமுடியாத சண்டைகள்?

இதற்கென்று தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

ஒன்றா இரண்டா ஏகப்பட்ட சண்டைகள். ஆனால் பின்னர் சமாதானமாகி விடுவோம்.


நான் யாரிடமும் சண்டை போடமாட்டேன். ஆனால் என்னால் மனவருத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கின்றேன்.

நெருங்கிய நண்பர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டால் அந்த இருவரும் அவர்களுக்குள் பேசாவிட்டாலும் நான் மட்டும் இருவரிடமும் பேசிக்கொள்வேன்.

அது இப்பொழுது வரை தொடர்கின்றது.

4. எதையாவது தொலைத்துவிட்டு பதறிய நாட்கள்?

மொபைல் போன்

இங்கே ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற இடத்தில் மொபைலைத்தொலைத்து விட்டு கிட்டத்தட்ட அழுகின்ற நிலைக்கு வந்துவிட்டேன். மொபைல் போனால் போகின்றது.

ஆனால் அவற்றில் பதிந்து வைத்துள்ள எண்கள் - அடிக்கடி வருகின்ற மிஸ்கால்கள் இவைகளக்காத்தான் அதிகம் கவலைப்பட்டேன். பின் நான் பள்ளிவாசல் வாயிலில் அமர்ந்து நண்பர் ஒருவரின் மொபைலிலிருந்து என்னுடைய மொபைலுக்கு மிஸ்கால் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து உள்ளிருந்து ஒருநபர் வந்து இது உங்க மொபைலா என்று தந்த பொழுதுதான் நிம்மதியே வந்தது.


அடிக்கடி தொலைப்பது பேனாவை. ஆனால் பதற மாட்டேன். பேனாவைத் தொலைப்பது என்பது எனக்கு சுவாசிப்பது - சாப்பிடுவது போல சாதாரண நிகழ்வுகள்.

எந்தப் பேனாவும்
சாகும்வரை என்
சட்டைப்பையில் இருக்க
சம்மதித்ததே இல்லை


இன்னொருமுறை ஒரு பொருளை தொலைத்தேன். ஆனால் தொலைத்துவிட்டு பதறவில்லை. சந்தோஷப்பட்டேன். தொலைத்தது இதயம்.


5. இதுவரை வாழ்க்கையில் யார்மீது அதிக கோபப்பட்டிருக்கின்றீர்கள்?

என் மீது

இதனை சங்கிலிப்பதிவா இல்லை உங்கள் சங்கை நெறிக்கும் பதிவான்னு சொல்லமாட்டேன். இதனை வாசிக்கிறவங்க வலைப்பதிலு வச்சிறுந்தீங்கன்னா நீங்களும் இந்த 5 கேள்விக்கு பதிலை சுவாரசியமாக எழுதுங்க. நான் வந்து ரசிக்கின்றேன்.

Wednesday, June 14, 2006

ஒரு சிறிய காதல் சோக கதை

( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். )

தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரியாத பெண் எல்லாவற்றையம் வெறுக்க ஆரம்பித்தாள் தன்னை நேசிக்கின்ற தனது காதலனைத்தவிர.

"எனக்கு பார்வை கிடைத்தால்தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன்" என்று தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தன் காதலனிடம் அவள் கூறுகிறாள்

ஒருநாள் அவளுக்கு பார்வை கிடைக்கின்ற நாள் நெருங்கியது. யாரோ அவளுக்கு கண்களை தானம் செய்து அவள் பார்வை கிடைக்க வழிசெய்தார்கள்.

அவள் கண்களைத்திறந்தாள். உலகத்தைப் பார்த்தாள். தனக்கு உலகமான தன்னை நேசித்த காதலைனைப்பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். ஆம் அவளுடைய காதலனுக்கும் இரு கண்களும் இல்லை.

காதலன் கேட்டான். "இப்பொழுது நீ உலகத்தைப் பார்க்கின்றாய் ..சொல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று

"கண்தெரியாத உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது" என்று அவள் அவனை மறுத்துவிட்டாள்.

அந்த காதலனும் கண்ணீரோடு ,

"என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்" என்று சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தான்.




அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, June 12, 2006

என் இனிய தபால்காரிக்கு .....

உன்
கடமையுணர்வுக்கு ஒரு
எல்லையில்லையா?
நீ
தபால்துறையில்
வேலை பார்க்கலாம்...
அதற்காக
தபால்துறைப் போராட்டம் என்றால்
காதல் கடிதத்தையுமா ...
வாங்க மறுப்பது?

Photobucket - Video and Image Hosting
---
உன் நினைவுகளை எனக்கு..
தந்தி அனுப்பினாய்!
ஆனால்
காதலை மட்டும்தானடி
கடிதத்தில் அனுப்பிவிட்டாய்!
பாரேன்
எவ்வளவு
தாமதமாய் கிடைத்திருக்கின்றது?

---

கடிதத்துடன்
பணம் அனுப்பினால்...
நாங்கள் பொறுப்பல்ல!
- தபால்துறை
ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை

---
உன் நினைவுகளை எல்லாம்
அழகாய் மடித்து...
காதல் உறையில்
வைத்துள்ளேன்!
சீக்கிரமாய் ஒட்டு
உன்
இதய அஞ்சல்தலையை!

சொர்க்கத்திற்கு அனுப்புவோம்.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, June 07, 2006

கோலம்

Photobucket - Video and Image Hosting


நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது?

---
நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?

---

உன் விருப்பத்திற்கேற்ப
நாய் வாங்கி தந்த ...
தந்தையின் பெருமைசொல்லி
மகிழ்ந்தாய்!

உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்
உன்னை ரசிப்பவர்களை
குரைப்புகள் மூலம் கணக்கிட உன்
தந்தை செய்த
தந்திரமடி அது!




- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 06, 2006

எனக்கு என்ன ஆச்சு..?


Photobucket - Video and Image Hosting


இதனை எழுதலாமா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை..? எழுதுவதற்குண்டான விசயங்கள் இதில் இருக்கிறதா என்பதைப் பற்றியும் கவலையில்லை.

ஆனாலும் மனதில் குழப்பமாக இருக்கின்றது. இங்கே சுற்றியிருக்கும் நண்பர்கள் யாரிடமும் கூறினால் அவர்கள் உடனே சிரிக்க ஆரம்பிக்கின்றார்கள். அதனால் யாரிடமாவது இதனைச் சொல்லியே தீர வேண்டும் என்று தோன்றிதால் நெருங்கிய நண்பர்களான உங்களுடன் பகிர்கின்றேன்.

இன்று 6-6-6 என்ற தேதியாக இருப்பதனால் என் மனஓட்டத்தை இன்று எழுதுவதற்கு சரியாண தருணமாக இருக்க கூடும் என்று எழுதுகின்றேன்.

நீங்கள் எப்பொழுதாவது நேரம் பார்க்கும்பொழுது 11:11 , 10:10 , 2 :22 என்று யதேச்சையாக பார்க்க நேரிட்டால் மனதில் ஒரு சின்ன சந்தோஷம் .
உடனே பக்கத்தில் உள்ள நண்பர்களிடத் காட்ட முயல்வோம்.

"ஏய் இங்கே பாரு டைம் 4:44 ன்னு காட்டுது.."என்று

எனக்கும் அதே சந்தோசம்தான். பார்க்கும்பொழுதெல்லாம் 11 :11 , 10:10 , 3 :33 என்று வருகின்றது. ஆச்சர்யமாக இருந்தது. "என்னடா பார்க்கும்பொழுதெல்லாம் இப்படி ஒரே எண்ணாக தோன்றுகின்றது" என்று.

ஆனால் கடந்த 3 வாரங்களாக இது அடிக்கடி நிகழகின்றது. ஒரு நாளைக்கு சுமார் 5 முறையாவது இவ்வாறு பார்க்க நேரிடுகின்றது. எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கமில்லை. வேலை நேரத்தில் எப்பொழுதாவது மொபைலில்தான் டைம் பார்ப்பேன். அப்படி பார்க்கும்பொழுதெல்லாம் அதுபோன்ற ஒத்த எண்களாகவே வருகின்றது.

இது 1 நாள் அல்லது 2நாள் என்று இருந்தால் கூட யதேச்சையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் கடந்த 3 வாரங்களாக இப்படி வருவதால் மனதில் இந்தச் சஞ்சலம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இப்படித்தான் இந்தியாவுக்கு போன் செய்து விட்டு எவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யம் 04:44 நிமிஷங்கள் பேசியிருந்தேன்.

பின் அடுத்த அரைமணிநேரத்தில் மறுபடியும் போன்செய்து விட்டு நேர அளவு பார்த்தால் 06:06. எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகி விட்டது. டைம்தான் இப்படி என்றால் பேசிய நேரங்கள் கூட இப்படியா..?

பின் மொபைலைச் சார்ஜரில் வைத்து விட்டு எடுப்பதற்காக முயன்றபொழுது 11:11

ஷாப்பிங் செல்லும்பொழுது திடீரென ஞாபகம் வந்தவனாய் நேரம் பார்ப்பதற்காக மொபைலை எடுத்தபொழுது 08:08..

நண்பர்களுடன் தேநீர் அருந்திகொண்டு பேசிக்கொண்டிருக்கும்பொழுது "டேய் டைம் என்னடா ..நேரமாச்சு போவோமா" என்று கேட்கும் சமயம் டைம் பார்க்கும்பொழுது 12:12

அலுவலகம் விட்டு அறைக்குத்திரும்பும்பொழுது 06:06 என்று இந்த நிகழ்வுகள் என்னைத் பின் தொடர்ந்து வருகின்றது.

இன்று கூட இதனை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்பொழுது ஆபிஸ்பாயிடம் தேநீர் கொண்டு வரச்சொல்ல,
அவனும் "என்ன சாப்பாடு நேரமாச்சு இப்ப தேநீர் சாப்பிடுறீங்க? " என்று கேட்க,

நானும் "என்ன சாப்பாடு நேரமாச்சா?" என்று நேரம் பார்க்க 11:11 என்று காட்டுகிறது. இன்னமும் குழப்பம் அதிகரிக்கின்றது.

ஏன் 11:12 , 3:15 என்று காட்டக் கூடாது. இதனை தற்செயல் என்று என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கெட்ட நேரம் நல்ல நேரம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. காலங்கள் இறைவன் சம்பந்தப்பட்டவை. ஆகவே அவற்றில் குறை கூறுதல் இயலாது.

இது எதனால் இப்படி ஏற்படுகின்றது என யாரிடமாவது விளக்கம் கேட்க அவர்கள் ஏதாவது அவர்கள் இஷ்டத்திற்கு கூறிவிட்டால் பின் அதற்கும் சஞ்சலமடைந்து கொண்டு இருக்க நேரிடும். ஆகவே யாரிடமும் விளக்கம் கேட்கவில்லை..

நேற்று கூட என் நண்பன் ஹைதர் அறைக்கு சென்று அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது 10:10 மணி காட்டவே.."அட இங்க பாரு " என்று அவனிடம் சொல்ல ,

"என்ன ஞானி.. நேரமாச்சா" - ஹைதர்

அவனிடம் வேறு வழியின்றி உண்மையைச் சொல்லவேண்டியதாயக் போயிற்று..

அவர் "இது ரொம்பச் சாதாரணம்டா நீ டைம் பார்க்காம இருந்து பாரு..அது மாதிரி தெரியாது..
இதுக்கு போய் யாரும் வருத்தப்படுவாங்களா..? " என்று ஆறுதல் படுத்தினான்.


ஆனால் திரும்ப திரும்ப இப்படி நடந்து கொண்டே இருக்கின்றது. அவன் கூறியபடி நான் நேரமே பார்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து பின்பு அலட்சியமாக எப்பொழுதேனும் பார்க்கும்பொழுது கூட அது மாதிரி நிகழ்கின்றது.

இன்றைக்கு மட்டும் இரண்டு முறைப் பார்த்துவிட்டேன்.

முதல் முறை பார்க்கும்பொழுது 09:09

அதன்பிறகு 11 : 11

மனக்குழப்பத்தில் தொடர்கின்ற இந்த நிகழ்வுகள் எனக்கு சஞ்சலத்தை தந்தாலும் இது தற்செயல்தான் ..தற்செயல்தான்..தற்செயல்தான்..என்று எனக்குள்ளேயே ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கின்றேன்..



- ரசிகவ் ஞானியார்

Sunday, June 04, 2006

ஒரு அழகிய பெண்ணின் புகைப்படம்

( எனக்குத் தெரியும் இப்படி ஒரு தலைப்பு கொடுத்தாத்தான் வருவீங்கன்னு )

இதோ ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளேன் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

Photobucket - Video and Image Hosting

யாருன்னு தெரியுதா..?

இவர் மும்பையைச் சார்ந்தவர். இவருக்கு விளையாட்டில் ஆர்வம்.

யாரு இவருங்கோ?

கொஞ்சம் கீழே வாங்க..
......
......
.....
......
......
......
........
........
.........

...............
கொஞ்சம் கீழே வாங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இன்னும் கொஞ்சம் கீழே வாங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.


சரி இப்போ இந்த கீழுள்ள லிங்கை அழுத்துங்க.. யாருன்னு கண்டுபிடிச்சிடலாம். ஆச்சர்யத்தில கீழே விழுந்தீங்கன்னா நான் பொறுப்பு அல்ல என்பதை முன்னரே சொல்லிட்டேன். எதற்கும் பக்கத்துல மருத்துவமனை இருந்தால் நல்லது



http://geocities.com/seen143/index.html






- ரசிகவ் ஞானியார்

Saturday, June 03, 2006

பயம்..பயமறிய ஆவல்

நேற்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபொழுது பேய் பற்றிய ஒரு விவாதம் ஓடிற்று. ஆளாளுக்கு தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

பேயைப்பற்றி திடீரென விவாதம் எப்படி ஆரம்பித்தது என்று நினைத்துப்பார்த்தேன்..? ஷாபிதான் முதன்முதலில் ஆரம்பித்தான். "அண்ணே ..அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் பேய் இருக்கா..?" என்று ரசூலிடம் கேட்க கட்டிலில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன்.என்னடா இரவு நேரத்துல் பேயை பற்றி ஆரம்பிக்கிறான் என்று.

சரி என்னதான் பேசுகிறார்கள் என்று கவனிப்போம் என்று ஒரு பயமான ஆர்வத்துடன் காதைத் தீட்டினேன்.

பேயா அது இருக்கா இல்லையான்னு தெரியலைப்பா...? நானும் ரொம்ப கேள்விப்பட்டிருக்கின்றேன்.. சரி நீ எதனால் இப்படி கேட்ட..?

"ஒரு நாள் நானும் என்னுடைய தந்தையும் தூங்கிக்கொண்டிருக்கின்றோம். என்னுடைய பெரியப்பாவிற்கு பக்கத்து வீடு. அவரும் அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார்."

நடுநிசி நேரம்..என்று அவன் இழுக்கும்பொழுதே நான் பேப்பரையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டேன் எழதுவதற்கு. உடனே ரசூல் கவனித்து விட்டார்..

"செத்தாண்டா!..ஞானியார் பேப்பரை கையில் எடுத்துட்டான்..நாளைக்கு அவன் வலைப்பதிவுல ஏதோ கூத்து நடக்கப்போகுது.. "என்று சொல்ல

நானோ நான் எழுதவதைக் கவனித்தால் ஒருவேளை மிகைப்படுத்தி சொல்லக்கூடும் அல்லது சொல்வதை குறைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து "ச்சே ச்சே நான் ஊருக்கு லட்டர் எழுதுறேன் பா..நாளைக்கு ஒருத்தன் ஊருக்குப் போறான்..." என்று சமாளித்து யோசித்து யோசித்து எழுதுவது போல நடித்துக்கொண்டே அவர்கள் பேசுவதையும் கவனிக்க ஆரம்பித்து விட்டேன்..

ஷாபி தொடர்ந்தான்

.."நடுநிசி நேரம் ஒரு குரல் கனிவா! கனிவா..என்று அழைக்கிறது. எனக்கு அந்தக்குரல் கேட்க நான் திடுக்கிட்டு விழித்தேன்..

அதே நேரம் என்னுடைய தந்தையும் விழிக்கின்றார்.. எனது பக்கத்துவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த எனது பெரியப்பாவும் விழித்து வீட்டிற்கு வெளியே வருகின்றார்..

நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் விழித்தது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது எனக்கு..
எங்கப்பா பேரு ஹனியா..அவரை எல்லாரும் கனிவா.. கனிவான்னு தான் கூப்பிடுவாங்க..

எங்கப்பா சொன்னாரு.. அவரோட அப்பா அழைத்தது போல இருந்துச்சுன்னு.. எங்கப்பாவோட அப்பா இறந்து ரொம்ப நாளாச்சு .."


நான் கேட்டேன் "சரி அது உங்கப்பாவோட அப்பா குரல்தான் உனக்கு எப்படி தெரியும்..?"


"எனக்கு அது தெரியாதுண்ணே.. அவர் சின்ன வயசுலேயே இறந்துட்டாரு..ஆனா எனக்கும் அந்தச்சப்தம் கேட்டுச்சு.. எங்கப்பாதான் சொன்னாரு அது அவங்க அப்பாவோட குரல்னு.."


"சும்மா அது வெறும் பிரம்மையா இருக்கும்பா.." நான் பயம் கலந்த சமாதானத்தில் கூறினேன்.

"அட! நான் பொய் சொல்லைனே.. பிரம்மைனா எங்க 3 பேருக்கும் ஒரே நேரத்துல அந்தச் சப்தம் கேட்கணுமா..எனக்கும் எங்கப்பாவுக்கும் கேட்டிருந்தா பரவாயில்லை..

எங்க பக்கத்து வீட்டுல இருக்குற எங்க பெரியப்பாவுக்கும் அது கேட்டு அவர் வெளியே வந்தாருன்னா..அதை எப்படிண்ணே பிரம்மைன்னு சொல்ல முடியும்.."


"அதுமட்டுமல்ல எங்க வீட்டை நோக்கி ஒரு நாய் வேற குரைச்சிக்கிட்டு இருந்துச்சு...

அந்த நடுநிசி நேரத்து எங்க வீட்டு முன்னால ஒரு நாய் குரைச்சது..நாங்க 3 பேரும் ஒரே நேரத்துல சப்தம் கேட்டு விழிச்சுது எல்லாம் சேர்ந்து என்னை ரொம்பவம் பயமுறுத்திச்சுனன்னே.. என்று சொல்ல"


எனக்கு மட்டுமல்ல நிஜாம் மற்றும் ரசூலும் ஆர்வமாய் ( பயமாய் ) கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

"அப்படியாடா..அது நிஜமா..?"

"ம் சத்தியமா சொல்றேண்ணே.. "என்று சொல்லிவிட நம்ம ரசூலும் ஆரம்பித்தார்.
"எனக்கும் இதே மாதிரி அனுபவம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு தெரியுமா.?"

"ஒருநாள் இரவு நம்ம தெருவுக்கு பின்னால ஒரு தெரு இருக்குதல டா.."

"அதான் அந்த அய்யர்மனைக்கு பக்கத்து தெரு..அங்க ஒரு வீட்டுல ஒரு கிழவி மட்டும் உக்காந்திருந்தா..நானும் என்னடா இந்த நேரத்துல இங்க வந்து ஒரு கிழவி உக்காந்திருக்கான்னு ஆச்சர்யம்..நண்பர்களோட போனதால தைரியமா போய்க் கேட்டேன்.. "

"என்ன பாட்டி இங்க உக்காந்திருக்கீங்க.. எங்க போவணும்..?"

"இல்லைப்பா கண்ணு சரியா தெரியல..நான் அய்யர்மனைக்குப்போவணும்.."

"சரி நான் அந்த ரோடு முனை வரைக்கும் வந்து விடவா.. "ன்னு கேட்க அந்தப்பாட்டி என் கையைப்பிடித்து நடக்க ஆரம்பித்தாள்..

உடன் வந்த நண்பர்களோ எரிச்சலோடு பார்க்க.. திடீரென்று அந்தப்பாட்டியின் அழுத்தம் அதிகமாகியது.. நான் அழைத்துச் செல்ல வேண்டியவள் என்னை அழைத்துச் செல்லுமளவிற்கு வேகமாய் நடக்க ஆரம்பிக்க..என் நண்பனோ கவனித்து

"பாட்டி கையை விடுங்க..கையை விடுங்கன்னு சொல்றேன்ல" என்று அவளிடம் சொல்ல..

அந்தப்பாட்டியோ என்னிடம் "வாப்பா..வா..அந்த அய்யர்மனைக்கு வந்து விட்டுட்டு போ" என்று சொல்ல..

என் நண்பன் கத்திவிட்டான்.."பாட்டி விடுறீங்களா? இல்லையா.."என்க அந்தப்பாட்டியும் கையை விட்டுவிட்டு என் நண்பனை முறைத்துப் பார்த்துவிட்டு வேகவேகமாய் சென்று கொண்டிருக்கின்றாள்..

அந்தப்பாட்டியின் அழுத்தம் வேறு கையில் வலியை ஏற்படுத்த நான் அதிர்ச்சியோடு கவனித்தேன்.

"அந்தப்பாட்டி பேய்தான்னு சொல்லமுடியாது..ஏதாவது கடுப்பிலே அப்படி நடந்திருக்கலாம்" நான் நம்பாதவனாய் அவனிடம் கூறினேன்..

அப்பொழுது நிஜாமும் தொடர்ந்தான்..எங்க எதிர்வீட்டு ஒருபையன் விபத்துல இறந்து போய்ட்டான்..

"ரசூல் உங்களுக்கு தெரியுமா..? பேப்பர்ல கூட வந்திச்சே..ஒரு பீடி கம்பெனி பையன் அடிபட்டு இறந்துட்டான்னு.."

"ஆமா ஆமா..ஞாபகம் இருக்கு.. - " ரசூல் தலையாட்ட

நிஜாம் தொடர்ந்தான். "அவன் விபத்துல இறந்த 2 நாள் கழிச்சி ஒரு நாள் வீட்டுல நான் எங்கப்பா - அம்மா - தங்கச்சி எல்லாரும் உறங்கி கொண்டிருந்தோம்.."

"திடீர்னு ஒரு சத்தம்..என்னன்னு முழிச்சுப் பார்த்தா தூரத்துல இருந்து ஒரு பெரிய உருவம்..எங்க வீட்டை நோக்கி வர்றது மாதிரி தெரிஞ்சது..கண்டிப்பா ஒரு உருவம்தான்டா..நான் எங்கம்மா என்னோட தங்கச்சி 3 பரும் பார்த்தோம்.. எங்கப்பா ஓதிட்டு படுத்ததனால் அவருக்கு முழிப்பு வரல.."

"கிட்ட நெருங்கி நெருங்கி வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு.. எனக்கு பயம் அதிகரிச்சு ஓன்னு அலறிட்டேன்.."

எங்கம்மா உடனே என்கிட்ட "நிஜாம் ஓதிட்டு படுடான்னு சொல்லி அப்புறம் ஓதிட்டு படுத்தோம்.. இது நிஜமா நடந்தது டா..அல்லாவுக்கு பயந்து சொல்றேன்டா.. "

என்னால அந்த சம்பவத்தை இன்னமும் மறக்க முடியாது..

அப்புறம் இன்னொரு சம்பவம்..

"ஒருநாள் என்னாச்சு தெரியுமா.. "

"அந்த வாய்க்காபாலம் பக்கத்துல வச்சி நாங்க பேசிக்கிட்டு இருந்தபொழுது..அங்க ஒரு சோப் கம்பெனி இருக்குல.அதுல நைட் டூட்டி பார்க்குற என்னோட ப்ரண்டு ஒருத்தன் அந்த நைட்ல ஒரு பெண் நெற்றியில பட்டையோட..தலையை விரிச்சிப்போட்டுட்டு அந்த தெருவை நோக்கி போய்கிட்டு இருந்திருக்கா.. "

"என்னடா இந்த நேரத்துல ஒரு பொண்ணு இந்தப்பக்கம் போகிறான்னு அவன் சைக்கிளை எடுத்துட்டு பின்னால போயிருக்கான்..அந்த சந்து வரைக்கும் போயிருக்கான்..அவள ஆளைக் காணலையாம்..பதறிப்போய் சொன்னான் எங்ககிட்ட.. "

"பேய் இருக்கா இல்லையான்னு தெரியல..ஆனா இத மாதிரி சம்பவங்களை பார்க்கும்பொழுது என்னன்னு நம்ப முடியலைடா.. "

உடனே ஷாபி , "இது மாதிரி என்னோட ப்ரண்டு ஒருத்தனுக்கும் நடந்திருக்கு.. அவனுக்கு கால் ஊனம்..3 சக்கர வண்டி வச்சிருப்பான்..நாங்க ஒருநாள் ஸ்கூல் பக்கம் பேசிக்கொண்டிந்தபொழுது படு வேகமா வந்திட்டு இருந்தான் .. என்ன ஆச்சர்யம்னா அவன் சட்டை போடலை.. "

என்னடா சட்டையில்லாம வந்திட்டிருக்கான்னு பிடிச்சு விசாரிச்சப்போ அழுதுகிட்டே சொல்றான்..

ஆத்துப்பக்கம் ஒரு பொண்ணு தலையை விரிச்சிப் போட்டுட்டுகடந்து போகும் போது இவனைப் பார்த்து வெறிச்சி பார்த்துட்டு கடந்து போயிருக்கா..இவனும் பின்னாலயே போயிருக்கான்..இவனுக்கு ஏன் போறேன்னு உணர்வே இல்லையாம்...?

அவ நேரா போய்..ஒரு ஆலமரம் இருக்குதுல அதுபக்கம் போயி யாருக்கும் குளிக்காத பகுதியில ஆத்துல இறங்கியிருக்கா..

நம்மாளும் ஆசையில சட்டையை கழட்டிட்டு வண்டியை விட்டு இறங்கி தவழ்ந்து தவழ்ந்து போயிருக்கான்.. ஆத்துக்கிட்ட போகும்போதுதான் அவனுக்கு உணர்வு வருது..நாம ஏன் இப்படிப் போறோமுன்னு பார்த்திருக்கான்..அங்க ஆத்துக்கு அந்தப்பக்கம் தீ எரிஞ்சிகிட்டு இருக்கு.. இவன் பயந்து போய் வண்டியை எடுத்துட்டு வந்துட்டான்..


நானும் என்னுடைய சின்ன வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கூறினேன்.

"என்னோட ப்ரண்டு ஒருத்தன்டா.

நிஜாம் உனக்குத் தெரியும்ல.. முஜாகிதீனோட அண்ணன் ரஹ்மான்..இப்ப வக்கீலா இருக்கான்ல.. "

"ம். ஆமா.. "

"அவன் தூங்கிக்கிட்டு இருந்திருக்கின்றான் அப்போ காலைத்தொழுகை அதிகாலை சுமார் 4.30 மணி இருக்கும். "

அப்போ அவன வந்து அலி வந்து எழுப்பி , "டேய் எழுந்திரு தொழுகைக்கு நேரமாச்சுடான்னு சொல்ல.." அவன் அரைகுறைத்தூக்கத்தோடு வந்து தொழுகைக்கு போயிருக்கின்றான்.. அவன் வீட்டுத் திண்ணையை ஒட்டிதான் பள்ளிவாசல் இருக்கு..

அவன் நேராக போய் தொழுதிட்டு வந்து படுத்திட்டான்.. காலையில அலி கிட்ட கேட்டிருக்கான்.."என்னடா நீ வந்து எழுப்பினே..அப்புறம் தொழுகையில உன்னைய ஆளைக்காணோம்...எங்கேடா போன..?"

அலி ஆச்சர்யமாய் கேட்டான்.."நானா காலையிலேயா..நான் இன்னிக்கை தொழ வர முடியலைடா..தூங்கிட்டேன்..நீ என்ன உளர்ற என்று..?"

இவனோ அடித்து கூறுகின்றான்.."இல்லைடா நீதான்டா வந்து எழுப்பினே.. "

"இவன் மறுக்க ஆரம்பித்துவிட்டான்.. இந்த நிகழ்ச்சி அந்த நேரத்துல ரொம்ப ஆச்சர்யமாகவும் ..பரபரப்பா இருந்துச்சு எங்க நண்பர்கள் வட்டத்துல.. "

"பேய்க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைதான்..ஆனா அந்தச் சம்பவம் எங்களை அந்த நேரத்துல ரொம்பவும் பயப்படுத்திச்சு..அதான் சொன்னேன்.. "

ரசூல் கூறினார்.. "எனக்கும் திடீர்னு தோணும்..யாரோ நெஞ்சுல உக்காந்து அழுத்துற மாதிரி..மூச்சு விடவே கஷ்டமா இருக்கும்..ஆனா என்னன்னு தெரியாது.."

"சிலர் இதமாதிரி சொல்லக் கேட்டுறுக்கேண்டா..ஆனா எந்த அளவு உண்மைன்னு தெரியாது.. ஆனா நம்ம கெட்ட ஜின்களிடமிருந்து ( சைத்தான் ) உங்களைப்பாதுகாத்துக் கொள்ளுங்கள் ன்னு குர்ஆன்ல சொல்லியிருக்குடா..

அதமாதிரி இருட்டுல ஒரு ஆளாக தனியா படுக்க கூடாதுன்னு சொல்வாங்க தெரியுமா..?" என்று நிஜாம் சொல்ல

"அப்படியா அப்படின்னா ரெண்டு பேரா சேர்ந்து படுத்தா தப்பு நடக்காதா.." என்று அந்த சீரியஸான விவாதத்திலும் கிண்டலடித்தான் ஷாபி..

"ஆமா பொண்ணுகளோட தனியா படுத்தா தப்பு நடக்கத்தான் செய்யும்..நான் அதைச் சொல்லலைடா..ஒரே வீட்டுல தனி ஆளா படுக்கறது பற்றி சொல்றேன்.. "என்று தொடர்ந்தான் நிஜாம்

"இருட்டின் தீமைகளிலிருந்து என்னை பாதுகாப்பாயாக" ன்னு குர்ஆன்ல ஒரு வசனம் வரும் தெரியுமா..? அப்படின்னா இருட்டுல நமக்கு ஒரு தீமை இருக்குன்னு தானே அர்த்தம்..


இப்படியாக பயத்துடன் கலந்த அந்தப்பேய்ப்பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.


விவாதத்திற்குப் பிறகு மனதில் மரணம் - பயம் - சுடுகாடு- தலைவிரிப்பெண் என்று மாறி மாறி வந்து கொண்டேயிருந்தது. நாளைக்கு வேலைக்கு போகவேண்டும் என்ற கவலையில் அதெல்லாம் மறந்து தூங்கிவிட்டேன்.


சைத்தான் - பேய் - ஜின் - தீய சக்திகள் என்று ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாய்ச் சொல்லுகின்றார்கள். ஆனால் ஏதோ ஒரு தீய சக்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. உங்களுக்கும் இதுபோல ஏதும் திகில் சம்பவம் ஏற்பட்டிருங்காங்க..?


வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க



அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Thursday, June 01, 2006

இவனைக் கொன்றால்தான் என்ன?






அழகிய மனைவியை
அருகில் வைத்துக்கொண்டு
பேருந்தில் தூங்குபவன்.

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு