Thursday, June 29, 2006

துபாய் சிட்டி ரவுண்ட்

Photobucket - Video and Image Hosting

அதிசய பேருந்து

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பேருந்து இது. சாலையில் வந்து கொண்டே இருப்பீர்கள் திடீரென்று எட்டிப்பார்த்தால் அந்தப் பேருந்து கடலில் செல்லும். என்னடா பேருந்து கவிழ்ந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சாலையில் இருந்து கடலுக்குள் செல்லுகின்றது இந்தப்பேருந்து. 44 இருக்கைகள் அடங்கிய இந்தப் பேருந்து 2002 ம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேருந்து அமெரிக்காவின் கைவண்ணம்.

முழுவதுமாய் குளிரூட்டப்பட்ட பெரிய டிவி மற்றும் குளியல் அறை கொண்ட பேருந்து இது. பயண நேரங்களில் தேவைக்கேற்ப உணவும் குளிர்பானமும் வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இருக்கையின் கீழும் லைப் ஜாக்கெட் வைக்கப்பட்டுள்ளது.

பயணமானது பர்ஜுமான் என்ற பெரிய அங்காடிப்பகுதியிலிருந்து ஷேக் செய்யது சாலை அல் வாசல் பாலம் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் - அல் பூம் உணவகம் வழியாக கடலில் சென்று விழுகின்றது. கிரீக் பார்க் - துபாய் நீதிமன்றம் - அல் மக்தூம் பாலம் - ஷேக் மரியம் அரண்மனை வழியாக கடலில் பயணம் செய்து மீண்டும் பர்ஜுமான் அங்காடியை அடைகின்றது

சுமார் இரண்டு மணி நேர பயணத்தில் துபாயைச் சுற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாக காலை 11 மணியளவிலும் மாலை 4 மணி அளவிலும் இந்த பேருந்து செயல்படுகின்றது.
பேருந்து கிளம்புவதற்கு 20 நிமிசம் முன்பாகவே அந்த அங்காடிப் பகுதிக்கு வந்துவிடவேண்டும்.

3 முதல் 12 வயது உள்ள சிறியவர்களுக்கு 115 திர்ஹம்
பெரியவர்களுக்கு 75 திர்ஹமும் வசூலிக்கின்றார்கள்
.

கட்டணம் வித்தியாசமமே தவிர பெரியவர்களுக்கும் குழந்தை தனத்தைக் கொடுத்து குதூகலமூட்டும் இந்தப்பயணம்.


Photobucket - Video and Image Hosting

பாலைவனப் பயணம்

சாலையிலும் கடலிலும் பணம் செய்வதை விடவும் ஆள் அரவமே இல்லா பாலைவனத்திற்குள் பயணம் செய்வது என்பது மிகவும் மெய் மறக்க வைக்கின்ற செயலாகும்.
தினமும் மாலை 3.30 அல்லது 4.30 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற பயணம் சுமார் 5 அல்லது 6 மணிநேரப்பயணமாக பாலைவனத்திற்குள் சுற்றுகின்றது.

கார் பாலையின் மேடு பள்ளங்களில் பாய்கின்றபொழுது கலைத்து வீசப்படுகின்ற மணலும் தூசி மண்டலங்களும் கார் கவிழ்ந்து விட்டதோ என்று நம்மை அலற வைக்கின்ற தருணங்களும் மிகவும் திரில்லாக இருக்கும்.

இந்த பயணத்தில் ஒட்டகச் சவாரி - உணவக வசதி - பெயிண்டிங் ( கைகளில் கால்களில் பெயிண்ட்டிங் செயது கொள்ளலாம் ) - சீஷா என்று அழைக்கப்படுகின்ற அரபிக்கள் குடிக்கின்ற சிகரெட் போன்று ஆனால் போதையில்லாத உடலுக்கு கேடு தராத வாட்டர் பைப் - பெல்லி நடனம் ( மின்விளக்கில் ஆடுகின்ற நிலவுகள் ) ஆகியவை உள்ளடக்கம்

பயணத்தின் போது சூரிய அஸ்தமனத்தைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். அத்தனை அழகு காட்சி. தண்ணீருக்குள் இருந்து சூரியன் வருவதைக் கன்னியாகுமரியில் கண்டிருப்பீர்கள். ஆனால் பூமியில் முளைக்கின்ற சூரியனைக் கண்டிருக்கின்றீர்களா..?
பயணத்தின் உச்சக்கட்டமே இதுதான்.

175 திர்ஹம் டாலர் பெரியவர்களுக்கு
110 திர்ஹம் சிறியவர்களுக்கு

Photobucket - Video and Image Hosting

ஆடம்பர கார் பயணம் (Luxuries Limo)

இந்த காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு துபாயை சுற்றிப்பார்க்க கிளம்பலாம்.
மிகவும் ஆடம்பரமான மற்றும் நீளமான காரில் ராஜாக்களைப் போல நாம் வலம் வரலாம்.
காரினுள் உணவக வசதி உண்டு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதுபோன்ற காரில் பயணம் செய்த அனுபவம் வேண்டும்.

Photobucket - Video and Image Hosting

இரட்டை அடுக்கு பேருந்து

திறந்த மேல் அடுக்கினைக் கொண்ட இந்த இரட்டை அடுக்கு பேருந்தில் உல்லாசமாக சுற்றி வரலாம். லண்டனுக்கு அடுத்து இந்த பேருந்து கம்பெனி துபாயில்தான் அதன் சர்வீஸை ஆரம்பித்துள்ளது.


பேருந்தின் மேல் அடுக்கில் 41 இருக்கைகளும் கீழ் அடுக்கில் 27 பேர் அமரும்படிhயக இருக்கைகள் உள்ளன. இந்த பயணமானது 1 .30 மணி நேரம் பயணிக்கின்றது. ஆனால் இந்த நேரம் வாகன போக்குவரத்து நெருக்கடியைப் பொறுத்தது.

இந்தப் பயணத்தில் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் துபாய் கடற்கரைப்பகுதி பிரிட்டிஷ் தூதரகம் துபாய் மியுசியம் - பர்துபாய் பழைய மார்க்கெட் வீதி - ஜுமைரா பீச் பகுதி - ஷேக் செய்யது அல் மக்தூம் வீடு மற்றும் கலாச்சாரக் கட்டிடங்கள் - தங்க மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளை கடந்து துபாய் இரட்டைக் கோபுரத்தில் வந்து முடிகின்றது.

காலை 10 மணியிலிருந்து ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு பேருந்து வாபி சிட்டியில் இருந்து ஆரம்பிக்கின்றது. இரவு 10 மணி வரை இந்த பேருந்து சர்வீஸ் உண்டு.

இதன் விலையானது
பெரியவர்களுக்கு 50 திர்ஹமாகவும்
சிறுவர்களுக்கு 30 திர்ஹம் ஆகவும்
இரண்டு பெரியவர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட உள்ள ஒரு குடும்பத்திற்கு 130 திர்ஹமும் மற்றும்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இலவசமாகவும் நிர்ணயித்துள்ளது

ஆனால் சீசன் காலங்களில் இதன் விலை வித்தியாசப்படுவதுண்டு. இந்தப் பேருந்தை தனியாக நாம் மட்டும் வாடகைக்கு அமர்த்தி நமது குடும்பங்கள் - நண்பர்கள் - உறவினர்கள் என்று உல்லாசாய் சுற்றலாம்.

Photobucket - Video and Image Hosting

ஹத்தா சபாரி

ஹத்தா என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பகுதியானது மலைப்பாங்கான பகுதியாகும்.

சமீபத்தில் எங்களுடன் வந்த எனது நண்பர் ஒருவர் பயணத்தின் போது பயத்தில் கண்களை திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டார். அந்த அளவிற்கு மிக ஆழமான பள்ளங்கள் - மேடுகள் என்று பயணம் மிகவும் திரில்லாக இருக்கும். இங்கே மில்லியன் ஆண்டு பழங்கால வித்தியாசமான நிறங்களில் மலைகள் மற்றும் மண்களின் நிறங்கள்..
வாடி என்று அழைக்கப்படுகின்ற நீர் வீழ்ச்சி -இயற்கை நீச்சல் குளங்கள் மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் 16 வது நூற்றாண்டு கோட்டை மற்றும் விவசாய விளை நிலங்கள் என்று பயணம் கொஞ்சம் வித்தியாசமான சூழலைத் தருகின்றது.
Photobucket - Video and Image Hosting

அல் அய்ன் சுற்றுலா

அல்அய்ன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நகரமானது அமீரக கூட்டமைப்பில் உள்ள ஒரு சிறிய நாடாகும். மிகவும் பசுமை நிறைந்தது. இங்குள்ள நிலங்களில் இருந்துதான் அதிகமான காய்கறிகளும் பேரீத்தம் பழங்களும் உற்பத்தியாகின்றன.

இங்கு ஹில் சிட்டி என்று அழைக்கப்படுகின்ற பசுமை நிறைந்த தோட்டங்கள் வழியாக செல்லுகின்ற பயணம் அமீரகத்தின் மிகப்பெரிய ஒட்டக சந்தையில் முடிகின்றது.
இந்தச்சுற்றுலாவில் அல் அய்ன் மியுசியம் - உயரமான மலைப்பகுதி - கண்கவரும் நிலப்பகுதிகள் என்று பயணம் தொடர்கின்றது.

Photobucket - Video and Image Hosting


படகு உணவுப் பயணம்

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நிலாச்சோறு உண்டிருப்பீர்கள். ஆனால் நிலாவுடன் பயணதித்துக்கொண்டே நிலா வெளிச்சத்தில் உணவு உட்கொள்வதற்கான அருமையான தருணம். பிறந்த நாள் விழா - திருமண விழா என்று நண்பர்களுக்கு உறவினர்களுக்கு விருந்து கொடுக்கலாம். படகில் இருந்த படியே சுற்றியுள்ள கலாச்சாரக் கட்டிடங்களையும் மன்னரின் பிறந்து வளர்ந்த இடங்களையும் ரசித்துக்கொண்டே பயணப்படலாம்.

இரவு நேரங்களில் கடல்வெளியினில் உணவு உட்கொண்டு கொண்டே பயணப்படுவது என்பது மனசை மிகவும் மகிச்சியூட்டும் செயலாகும்.
- ரசிகவ் ஞானியார்

7 comments:

நாகை சிவா said...

சூப்பர் அப்பு. அருமையான ஒரு பயண குறிப்பை கொடுத்து உள்ளீர்க்கள். துபாய் வந்தால் எங்கு எங்கு போக வேண்டும் என்ற லிஸ்ட்ல இதையும் சேர்த்தாச்சு. புழுதி பறக்கும் கார் பயணம் அனுபவம் உண்டு.(4 வீல் டரைவ்). நல்ல திரிலான அனுபவம் தான்.
நன்றி ஞாணியாரே!

Vajra said...

//
தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பேருந்து இது.
//


Hovercraft ஐ சொல்கிறீர்களா...?

அடப்பாவிகளா...அது மில்லிடரி சமாச்சரம் என்று நினைத்திருந்தேன்...அதை tourist attraction ஆக்கிவிட்டார்களா...!! சந்தோஷம்!!

நல்ல பதிவு.

வடுவூர் குமார் said...

"தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பேருந்து." இது சிங்கப்பூரிலும் ஓடுகிறது.
பாலைவன Trip தவிர மத்ததெல்லாம் இங்குள்ள மாதிரி தான் இருக்கு.
பரவாயில்லை.துபாய் பார்த்தாகிவிட்டது.
நன்றி.

ஜயராமன் said...

அழகாக இருக்கிறது

துபாயை கண்முன் வரவழைத்து விட்டீர்கள்.

அதுசரி, அந்த விவேகானந்தர் தெரு, துபாய் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்தவும்.

நன்றி

சேதுக்கரசி said...

பாஸ்டன்லயும் இது மாதிரி ஒண்ணு இருக்குதுங்கோ... தண்ணியிலயும் போறதால அதுக்குப் பேர் பாஸ்டன் Duck Tour :-)

மணியன் said...

துபாய்க்கு வர ஆசை ஏற்படுத்தும் பதிவு.

Sivabalan said...

அருமை.

நல்ல சொல்லியிருக்கிரீங்க..

நன்றி!!

தேன் கூடு