Thursday, April 24, 2008

வீடு வாடகைக்கு




அங்குமிங்கும் அலைந்து திரிந்து,
பொருட்களின் இடங்கள் மாற்றி,
அடுத்தடுத்து அழுகை சிரிப்பு,
எதுவும் தனக்குரியதென அடம்பிடித்தல்!

குழந்தைகள் ...
இல்லாத வீடும்,
காதல் ...
இல்லாத இதயமும்,
மிகவும் பரிதாபத்திற்குரியது!

- ரசிகவ் ஞானியார்

Monday, April 07, 2008

நடிப்பு




குடித்துக்கொள்ள...
குளிர்பானம் வைத்திருப்பவர்கள்
தவித்துகொள்பவனோடு...
தர்மயுத்தம் செய்கின்றார்கள்!

திரையில் இருந்து
தரைக்கு வந்த …
கர்நாடக நட்சத்திரங்களே!

உண்மையைச் சொல்லுங்கள்
நீங்கள் நடிக்கவில்லைதானே?


- ரசிகவ் ஞானியார்

Saturday, April 05, 2008

வலி உணரும் தோல்கள்





தவித்த வாய்க்கு ...
தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்!
தாகம் தீருமுன்...
தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ?

நாங்கள்
தண்ணீர் கேட்டால்
இரத்தம் தருகின்ற...
உங்கள் பெருந்தன்மைதான் என்னே!


நாற்காலிகள்
நகர்ந்துவிடக்கூடாதென்றா
அருவியின் வெள்ளத்தில்...
அணை கட்ட முயல்கின்றீர்கள்?


நீங்கள் தண்ணீர் சேமிக்க…
நாங்கள் அணை கட்டிக்கொடுத்தோம்!
நாங்கள் கண்ணீர் சேமிக்க…
நீங்கள் அணை கட்டுகின்றீர்கள்!


தலைமுடியை வெட்டுவதற்கெல்லாம்
உங்களிடம்…
அனுமதி கேட்டால்,
எங்கள்
தலைமுறைகள்...
பட்டுப்போய்விடும்!


கடந்து சென்ற காலத்தையும்…
கடந்து வந்த நீரையும்…
திருப்பி எடுக்க
எவனும் பிறக்கவில்லை!


யாருடைய மொழி சிறந்தது
என்பது
இன்னொரு பக்கம் இருக்கட்டும்!
ஆனால்
வலி உணரும் தோல்கள்தான்
இருவருக்கும்!


- ரசிகவ் ஞானியார்

ஒட்டகச்சவாரி







அவ்வப்போது
என்
கனவுகளுக்குள் வந்து ...
கள்ளிச்செடியை மேய்கிறது!

உனது பிரவேசம்
இல்லையெனில்,
எனது பிரதேசத்தில் ...
ஒட்டகங்கள் உலவியிருக்கும் !

புலிச்சவாரிக்கு...
ஓட்டகச்சவாரி ...
எவ்வளவோ தேவலதான் !

புலியை விரும்பும்
கிளிக்காக ...
ஒட்டகத்தை நான்
ஒதுக்கி விட்டேன் !

அவ்வப்போது
என்
கனவுகளுக்குள் வந்து
கள்ளிச்செடியை மேய்கிறது

- ரசிகவ் ஞானியார்

Thursday, April 03, 2008

உலக தராசு



உன் எதிர்கால லட்சியம்?

மருத்துவராகி...
பொறியாளராகி..
விமானியாகி...
பட்டியல் நீளுகின்றது.....



உன் எதிர்கால லட்சியம்?

ஒருநாளுக்கு
ஒருவேளையாவது உணவு சாப்பிடுவது...
கொஞ்சூண்டேனும் நீர் அருந்துவது...
கழுகுகளின் கண்படாமல் தப்பிப்பது...

பட்டியல் முடிந்துவிட்டது!

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு