Monday, October 31, 2005

புகைப்படம்


நண்பர்கள் கூடி
சிரித்துக்கொண்டு இருக்கும்
புகைப்படங்களில் எல்லாம்

பங்கு கொள்ளாமல்
பிரித்து வைக்கப்பட்ட...
அந்த
புகைப்படம் எடுக்கும் நண்பனின்
சோகம் மட்டுமே எனக்கு
தெளிவாய்த் தெரிகிறது!-ரசிகவ் ஞானியார்

Sunday, October 30, 2005

சானியா குறவஞ்சிசெல்வி சானியா மிர்சா பந்தாடும் போது எப்படியிருக்கும் என்ற எனது குறவஞ்சிஅங்கிங் கெனாதபடி எங்கும் சுழன்று
அச்சம் தவிர்த்து - வெற்றி
தங்கும் பொருட்டு தனித்து ஆடி
தன்னிலை மறந்து - சீறிப்
பொங்கும் ஊழிபோல பாய்ந்து ஓடி
பெண்மை அடிமைபேசும் - பழைமைவாதிகள்
மங்கும் பொருட்டு மங்கை நீயவர்
முகத்தில் உமிழ்ந்திடு


அட்டைப் பூச்சியின் இரத்தம் குடித்தலாய்
அழகாய் இதயம் ஒட்டினாய் - சாராயப்
பட்டை அடித்தவன் போதை போல
பருவம் நுழைந்து கொட்டினாய் - தேர்வில்
பிட்டை எடுத்த மாணவன் போல..
புருவம் இரண்டை புரட்டினாய் - கோழி
முட்டை விழியினில் கவனம் சிதைத்து
மூச்சை நிறுத்தி மிரட்டினாய்!


மூக்கோடு மூக்குத்தி ஒட்டி நிற்க
முகத்திலே அழகாட - மரத்
தேக்கோடு சந்தனம் கலந்து செய்த
தேவதையின் காலாட - நேற்று
பூக்காடு வாசமாய் நெஞ்சம் நிறைந்து
புன்னகைத்து போனியா..? - இனி
சாக்காடு வந்தாலும் சிதறி ஓடும்
சின்னவளே சானியா!


குட்டை ஆடை அணிந்த ஒய்யாரி
குமரர் மனம்புடுங்கி - மைதான
வெட்டை வெளிதனில் நடனம் ஆடி
வெகுண்டு எழந்து - மர
மட்டை கொண்டு பந்தை அடித்து
மனசைப் புடுங்கியவளை - சிலர்
நாட்டுக்கட்டை என்று அழைக்கிறார்களே
நாசமாய் போகட்டுமவர்!- ரசிகவ் ஞானியார்-

Thursday, October 27, 2005

மாப்பிள்ளை பெஞ்சுமாப்பிள்ளை பெஞ்சு - இந்த வார்த்தையைக் கேட்டவுடனையே உங்கள் மனசு நிகழ்காலத்தை ஏமாற்றி காலச்சுவற்றை தாண்டி குதித்து உங்கள் கல்லூரி அல்லது பள்ளியின் வகுப்பறைக்குள் வேகமாய் ஓடிச்சென்று அந்த கடைசிப்பெஞ்சுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறதா..?

எனக்கும் அப்படித்தான்...மாப்பிள்ளை பெஞ்சு என்று செல்லமாய் அழைக்கப்படுகின்ற அந்த கடைசிப் பெஞ்சு என் கல்லூரியை ஞாபகத்திற்குள் கொண்டு வருகின்றது.

நான் படித்த திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கடைசிப்பெஞ்சில் மாப்பிள்ளையாய் ஆக்ரமித்த பெருமை எனக்குச் சேரும்..

அதற்கு மாப்பிள்ளை பெஞ்சு என்று எதற்கு வந்தது என்று தெரியவில்லை..ஒருவேளை புதிதாய் கல்யாணம் ஆன மாப்பிள்ளைகள் எங்கேயும் போகாமல் சோம்பேறித்தனமாக வீட்டில் அடைந்து கிடப்பார்களே அதுபோல கடைசி பெஞ்சுக்காரர்கள் இருக்கிறார்கள் என்று மனதில் வைத்து அவ்வாறு கூறப்பட்டதா..தெரியவில்லை..?

ஆனால் அந்த மாப்பிள்ளை பெஞ்சில் கீழ்கண்ட வசதிகள் இருக்கத்தான் செய்கிறது..


1. கடைசியில் இருப்பதால் யாரும் நம்ம முதுகுக்குப் பின்னால் கிண்டலடிக்க முடியாது.

2. நல்ல பிகர்களை கழுத்து சுளுக்கும்படி திரும்பி பார்க்காமல் நேரடியாக கவனித்துக்கொள்ளும்
வசதி

3. யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று எப்போதுமே கவனித்துக்கொண்டே இருக்கலாம்.

4. கிண்டல்கள் கேலிகள் எல்லாம் முன் பெஞ்சில் இருந்து செய்யும்போது ஆசிரியர்
கவனித்துவிடக்கூடும் என்ற பயமிருக்கும்.. ஆனால் அந்த பயமெல்லாம் இல்லாமல்
தைரியமாக கிண்டலடிக்கலாம்.

5. அந்தப்புரத்தில் உள்ள பெண்களிடம் கடலை போடும் வசதி

6. பசியெடுத்தால் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடும் 24 மணி நேர உணவக வசதி.

7. ஆசிரியர் கொஞ்சம் அறுக்கிறார் என்று தெரிந்தால் உடனே பெஞ்சில் நைசாக தலை
வைத்தோ அல்லது முன் பெஞ்சுக்காரன் தலை மறைக்கும் படியாக ஒரு குட்டித் தூக்கம்
போடலாம்.

இப்படி பல பல வசதிகள். இதற்காகவே நான் அந்த மாப்பிள்ளைப் பெஞ்சில் இடம்பிடிக்க அடம்பிடிப்பேன்.

எங்களின்
நோட்டுப்புத்தகம்
டிபன் பாக்ஸ்
பிட்
காதல் கடிதம்
குசும்புகள் என்று
எல்லாவற்றையும் ஒளித்துவைத்தது
அத்தோடு இதயத்தையும்.அந்தப் பெஞ்சில் அமர்ந்து செய்த சேட்டைகள் இருக்கிறதே...அது ஒரு நிலாக்காலம்தான்

நான் பிஎஸ்ஸி படிக்கும்போது என்னுடைய கடைசிப்பெஞ்சு தோழர்களாக மஸ்தான் - ராஜ்குமார் - அசன் - காஜா ஆகியோர் கூட்டுச் சேர்ந்தார்கள். செம ஜாலியா இருக்கும்

முன்னால் இருப்பவனின் தலையில் தட்டிவிட்டு யார் தட்டியது என்ற அடையாளம் தெரியாதமாதரி பாசாங்கு செய்வது

நான் க்ளாஸ் நடந்து கொண்டிருக்கும் போது முன் சீட்டில் இருப்பவனை அழைத்து அவனுக்கு முன் உள்ளவனை அழைக்கச்சொல்வது, பின் அவன் திரும்பி பார்க்க , அவனுக்கு முன்னால் உள்ளவனை அழைக்கச் சொல்வது இப்படியாக முதல் பெஞ்சில் உள்ளவன் வரை இந்த அழைப்புச் சங்கிலி தொடர கடைசியாய் திரும்பிப்பார்த்தவனிடம் "டைம் "என்ன என்று கேட்டு எரிச்சல் படுத்துவது

பின்னால் இருந்து கொண்டு எந்த ஆசிரியரைப்பற்றியாவது ஓட்டெடுப்பு கிண்டல் , கவிதைகள் என்று எழுதி ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் எதிர்பார்த்து அப்படியே ஒவ்வொரு கையாக பாஸ் செய்யுவோம்.


கடைசிபெஞ்சில் ஒருவருக்கொருவர் ஒருபக்கமாய் நெருக்கியடித்துக்கொண்டு கடைசியில் இருப்பவனை கீழே தள்ளிவிடுவது

நெல்லிக்காயை சாப்பிட்டு விட்டு அந்த கொட்டைகளை ஒவ்வொருவர் மீதும் வீசுவது

அந்தப்புரத்தில் ( அந்தப் புறம் ) உள்ள ஒரு அப்பாவி மாணவியிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கி ( புடுங்கி ) எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவது
( அதற்குப்பிறகு மதியம் எங்க டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு நாங்க கேன்டீனுக்குப் போயிருவோம் )

சம்பந்தமே இல்லாமல் இருமுவது

வெளியில் சென்றுவிட்டு உள்ளே நுழையும் மாணவர்களையோ அல்லது மாணவிகளையோ வரவேற்கும் பொருட்டு அவர்கள் அவர்களது இருக்கையில் வந்து அமரும்வரை ச்சே ச்சே ச்சே என்று ஒட்டுமொத்தமாய் அவர்கள் முகத்தைப்பார்த்து மெலிதாய் சப்தமிட்டு கூறி அவர்களை வெட்கப்பட வைப்பது

தேர்வு சமயங்களில் அந்த கடைசிபெஞ்சுகள் எல்லாம் எங்கெங்கோ கலைக்கப்பட்டுவிடும் என்று தெரிந்து அந்த பெஞ்சில் பிளேடால் ஏதாவது கிறுக்கி எங்களது பெயர்களையும் படிக்கின்ற வகுப்பையும் எழுதி அடையாளமிடுவோம்... ( ஏதாவது பிகர் பார்க்க கூடுமோ என்ற ஆர்வத்தில் )

நாங்கள் மட்டுமல்ல எல்லா கடைசி பெஞ்சுக்காரர்களும் கல்லூரியை விட்டு விடைபெறும் சமயத்தில் அந்த கடைசி பெஞ்சில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.

இப்படி
என்னுடய ஞாபகத்தில்
எப்போதுமே
முதலாவதாக நிற்கிறது - அந்த
கடைசிப்பெஞ்சு!


அவைகள்
உடைக்கப்படும்பொழுது...
மரத்துகள்களை விடவும் எங்கள்
மனத்துகள்கள்தான் சிதறியடிக்கப்பட்டிருக்கும்!


நாங்கள் அதன்
கால்களை ஒடித்ததாலோ என்னவோ..

விடைபெறும் நாளில் ,
அது எங்கள்
இதயம் ஒடித்துவிட்டது!இந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்த பொழுது நாங்கள் விளையாடிய அந்த கடைசிப் பெஞ்சில் யார் யாரோ புதிது புதிதாய் நெருக்கியடித்துக் கொண்டும்.. கிண்டலடித்துக்கொண்டும் விளையாடுவதைக் கண்டபோது

ஐஸ்கிரீம் வாங்க காசில்லாத குழந்தை ஐஸ்கிரிம் சாப்பிடும் குழந்தையை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல...

பூங்காவில் முத்தம் பறிமாறிக்கொண்டிருக்கும் காதலர்களை ,
காதலியைப் பிரிந்து போன காதலன் பார்ப்பதைப்போல..
எனக்குள் ஒரு வித ஏக்கமாகவே இருந்தது

செய்த தச்சனை வேண்டுமானாலும் அந்த இருக்கைகள் மற்ந்திருக்கலாம்;..ஆனால்

மணிக்கணக்காய் அந்த
மரத்துகள்களுக்குள்..
மனம்விட்டு பேசிய
மாணவர்களை - அது
மறந்திடுமோ..?தச்சனால் செய்யப்பட்டது பெஞ்சு
- அதன் நினைவுவினில் விழுந்து
தடுமாறுகிறது எங்கள் நெஞ்சு


-ரசிகவ் ஞானியார்

Wednesday, October 26, 2005

இடைவெளிகள்உறவுகள் உணர்த்தும்
இடைவெளிகள்


காதலிக்கான இடைவெளிகள்
குறைவதில்
காதலுக்கு ஆபத்து


தோழிகளுக்கான இடைவெளிகள்
அதிகப்படுதலில்
நட்புக்கு வாழ்த்து


காதலிக்கான
இடைவெளிகள்
எல்லைக்கோட்டை தாண்டுவதுதான்
காதலின் சேவை

தோழிகளுக்கான
இடைவெளியினில்
இடையில் வேலிகள்
கண்டிப்பாய் தேவை

உலககெங்கிலும்
காதலிக்கான இடைவெளிகள்
எப்பொழுதுமே
சரிசமயமாய் இருக்கின்றது..

ஆனால்
தோழிகளுக்கான இடைவெளிகள்தான்
குறைக்கப்பட்டும் அதிகப்பட்டும்
ஒரு தடுமாற்றமாய் இருக்கின்றது


ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!

ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்


- ரசிகவ் ஞானியார்

Monday, October 24, 2005

காதலிசம்
காதலும்
கம்ப்யூட்டரும் ஒன்றுதான்!
இரண்டுக்குமே
சுயமாய் சிந்திக்கும்
அறிவு கிடையாது.

-ரசிகவ் ஞானியார்

அந்தர் சே லடுக்கி லேக் ஆவ்

நண்பர்கள் அக்பரும் மற்றும் தற்பொழுதர்ன விசிட் விசாவில் வந்த அவரது நண்பர் அஹ்மதும் மற்றும் சில நண்பர்களும் துபாய் டெய்ரா வில் உள்ள ஒரு மரக்கடைக்குச் சென்று அவர்களது அறைக்குத் தேவையான ஒரு சிறு குச்சியை வாங்கி விட்டு வரும் வழியில் தேநீர் கடைக்குள் நுழைகின்றனர்..

நண்பர் அஹ்மதுக்கு இந்தி அவ்வளவாய் தெரியாது. ஆனாலும் தனக்கும் இந்தி தெரியும் என்று தனக்கு தெரிந்த இந்தியை பேசி மற்றவர்களிடம் சால்ஜாப்பு செய்து கொண்டிருப்பார். கிதரே..ஆப் கா நாம் கியா..? என்று தெரிந்த வார்த்தைகளை உபயோகித்து தன்னை இந்தி தெரிந்தவராக மற்ற நண்பர்கள் முன்பு காட்டிக்கொள்வார்

அன்றும் அப்படித்தான் அவர்கள் அந்த குச்சியை அந்த தேநீர் கடைக்குள் வைத்துவிட்டு வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..

தேநீர் குடித்து முடிந்தவுடன் அஹ்மது அந்த தேநீர் கடை சிப்பந்தியிடம்
உள்ளே இருக்கும் அந்த குச்சியை எடுத்து வாருங்கள் என்று இந்தியில் கூறுவதற்காக,


அந்தர் சே லடுக்கி லேக் ஆவ் என்று கூற அந்த சிப்பந்திக்கு வந்ததே கோவம்..

அவரும் இந்தியில் திட்ட ஆரம்பிக்க..பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த சிப்பந்தியிடம் அந்த நண்பருக்கு இந்தி அவ்வளவாய் வராது என்று கூறி சமாதானப்படுத்தினார்கள்..

அந்த சிப்பந்திக்கு ஏன் கோவம் வந்தது என்றால்..

இந்தியில் லக்கடி என்றால் குச்சி
லடுக்கி என்றால் பெண்..

அந்தர் சே லக்கடி லேக் ஆவ்
- உள்ளேயிருக்கும் அந்த குச்சியை கொண்டு வா


அந்தர் சே லடுக்கி லேக் ஆவ்
- உள்ளேயிருக்கும் அந்த பெண்ணை கொண்டு வா-ரசிகவ் ஞானியார்

Sunday, October 23, 2005

திருடன்மீசை வளரும் நாட்களில் எல்லாம்
பத்திரிக்கையிலிருந்து
கவிதை திருடினேன்.
அவள் மீது
ஆசை வளர்ந்த பிறகெல்லாம்
அவள் இதயத்திடமிருந்து திருடுகிறேன்.

சொல்லுங்களேன் நான்
கவிதை திருடனா..?
காதல் திருடனா..?


-ரசிகவ் ஞானியார்

Saturday, October 22, 2005

ஒரு சிந்திப்பு நடைநேற்று இரவு சுமார் 9 மணியளவில் அருகிலுள்ள கோழி இறைச்சி கடைக்கு மறுநாள் அதிகாலை உணவிற்காக (நோன்பு ) இறைச்சி வாங்கச் சென்றேன்.

எனக்கு எப்போது அந்தக்கடைக்கு வந்தாலும் அந்தக் கோழிகளின் பதட்டம் மற்றும் இறப்பு தெரிந்து அடைத்து வைக்கபட்டிருக்கும் அதன் கண்களில் உள்ள மிரட்சி எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பேன்.

நேற்றும் அப்படித்தான் இரண்டு கோழி ஆர்டர் செய்துவிட்ட இருக்கையில் காத்திருந்தேன்..

அந்த பங்காளதேச நாட்டை சேர்ந்த வியாபாரி எனக்குண்டான கோழியை எடுப்பதற்காக தனது கைகளை அந்த பெரிய கூண்டுக்குள் விட ஒவ்வொரு கோழியாய் அவனுடைய கைகளுக்கு அகப்படாமல் தப்பித்து தப்பித்து ஓடியது.


அதோ பாருங்களேன் ஒரு கோழி மட்டும் பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஆயுள் கெட்டி போல.
அந்த ஓரத்தில் பம்மிப்போய் ஒட்டி நின்ற கோழியினை அவன் எடுப்பது போல பாசாங்கு செய்ய அது வித்தியாசமாய் கத்தியது.

அதன் கத்தலை நான் ஆச்சரியமாக பார்க்க அவன் எனக்கு விளையாட்டு காட்டுவதற்காகவே அதனை தொடுவது போன்ற பாசாங்கு செய்து செய்து கைகளை அசைத்தான்.

இறுதியாய் அவனுடைய கைகள் ஒரு கோழியை பிடித்தது.
இன்று உயிரிழக்கப்போகும் கோழி இதுதான் என்று நான் நினைத்துக்கொண்டிருக்க அந்தக்கோழியும் கடைசி நேரத்தில் அவனுடைய கைகளை விட்டு நழுவி விட அதன் பக்கத்தில் தப்பிக்க நினைத்த மற்றொரு கோழி மாட்டிக்கொண்டது.


இறைவனின் கணக்குகளை
மனிதனால் எப்பொழுதுமே
கணக்கிட முடியாது


என்பதை உணர்த்தியது எனக்கு. கையில் மாட்டிய கோழியினை அவன் வெளியில் எடுக்க மற்ற கோழிகள் எல்லாம் தவித்தன- துடித்தன -கத்தின..அங்குமிங்கும் சிதறிக்கொண்டிருந்தது.

பின்னே கண்களுக்கு முன்னால் சக தோழர்கள் வெட்டுப்படும்போது எப்படியிருக்கும் மற்றவர்களுக்கு? அந்த இடத்தில் மனிதர்களை வைத்து நினைத்துப்பாருங்கள் எவ்வளவு பயங்கரம் அது?

ஒரே நிமிடத்தில் கோழியை பொட்டலமாக்கினான். அதனை பார்க்கும்போது எனக்குத்தோன்றியது, நாம் வாழுகின்ற இந்த பூமியை அந்த கோழிக்கூண்டாக நினைத்துக்கொள்ளுங்கள். சாவை நினைத்து பதறித் துடிக்கின்ற அந்த கோழிகளை மனிதர்களாக நினைத்துக்கொள்ளுங்கள்..அந்தக் கைகள் இறைவனின் கைகளாக நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்குள் ஒரு குழப்பம் கறி வாங்க வந்தவன் யாரோ..?

எவரின் முறை எப்போது வருமென்று எவருக்குமே தெரியாது? நல்லவர்களெல்லாம் முதலில் இறக்கிறார்களா இல்லை கெட்டவர்களெல்லாம் முதலில் இறக்கிறாhர்களா என்று கணிக்க முடியவில்லை..சில நேரம் நல்லவர்கள்..சில நேரம் கெட்டவர்கள்..


ஆனால் ஒருநாள் இல்லாவிடினும் ஒருநாள் நாமும் வெட்டுப்படத்தானே போகிறோம்..?


மரணம் நம்மை நெருங்குகிறதா இல்லை மரணத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோமா..?


அதுபோலத்தான் ஒவ்வொருவரும் வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்..ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் மரணிப்பதற்குண்டான வருடத்தில் ஒன்று குறைகிறது என்று அர்த்தம்.


மரணத்தை நெருங்குவதற்காக கொண்டாடுவது வித்தியாசமாக இல்லை.. ?


அட இறைச்சி வாங்குவதை விட்டுவிட்டு மனம் என்னவெல்லாமோ சிந்திக்கிறது. ஒருவழியாய் இறைச்சியை வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் அந்த சோமாலியா நாட்டுக்காரர்களின் தேநீர் கடை கண்ணில் பட்டது. எத்தனையோ தேநீர்கடைகள் இருக்க அந்த கடை மட்டும் ஏன் என் கண்களில் வித்தியாசமாய் படவேண்டும்..?


அந்தக்கடையில் எல்லோருமே பெண்கள்..சிப்பந்திகள் , தேநீர் செய்பவர்கள், மற்ற வேலையாட்கள் அனைவருமே சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்கள்..ஆனால் அருந்தவரும் வாடிக்கையாளர்கள் மட்டும் ஆண்கள்..

என்ன சிறப்பு என்றால் அந்த வாடிக்கையாளர் அருந்தி முடியும் வரையிலும் யாராவது ஒரு சிப்பந்தி அவருடயை இருக்கையின் பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவேண்டும்..

இளமையின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் கடலை போட்டுக்கொண்;டிருக்கவேண்டும் .. அவள் கடலைபோட்டுக்கொண்டே இருப்பாள்..அந்த வாடிக்கையாளனும் சிகரெட் - மறுபடியும் ஒரு தேநீர் என்று ஏதாவது ஆர்டர் செய்து கொண்டேயிருப்பான்.


இதுவும் ஒருவகை வியாபார யுக்தி..ஆனால் பெண்கள் போதை பொருளாக்கப்படுகிறார்களே..? ( அலைகின்ற ஆண்கள் மீதும் குற்றம்தான் அலையவைத்த பெண்கள் மீதும் குற்றம்தான் )


வீதியினில் ஒரு வண்ணமயமான விழா ஒன்று நடைபெறுகிறது அதனை கண்கள் பார்த்து ரசிக்கிறது.அப்படியானால் பார்த்தது

விழியின் குற்றமா?..இல்லை பார்க்கத்தூண்டிய அந்த விழாவின் குற்றமா..?


அந்தக்கடையையையும் கவனித்துக்கொண்டே இறைச்சியோடு கடந்துசென்றபோது கண்ணில் பட்டது அந்து கஃல்பான் என்ற மருந்துக்கடை. அந்தக் கடையை என்னால் மறக்கவே முடியாது

ஏனென்றால் ஒருதடவை எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தபோது ( எனக்குப் பிடிக்காதது பிடித்திருந்தது ) தொண்டையில் சளி அதிகமாக இருந்தது.

அப்பொழுது நண்பன் ஒருவன் இந்த மருந்தகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.
பொதுவாக சளியாக இருந்தால் பாலில் மிளகு சேர்த்து குடிப்பது இல்லையென்றால் பங்கஜக்கஸ்தூரி வாங்கி வெந்நீருடன் சாப்பிடுவதுதான் வழக்கம். அதுவும் சரியாகவில்லையென்றால் எனக்கு தெரிந்த கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வேன்;.


ஆனால் அன்றைய தினம் எனது நண்பர் அந்த மருந்தகம் அழைத்துச்சென்று சுமார் 70 திர்ஹத்திற்கு மருந்து மாத்திரைகளை வாங்க வைத்துவிட்டார். நொந்து போய்விட்டேன். அதிலிருந்து அந்த மருந்தகம் பக்கமே தலைவைத்துப் படுத்ததில்லை.


அந்த நண்பரிடமே பலமுறை கூறியிருக்கிறேன். நான் இப்பொழுது சளித்தொல்லையால் அவதிப்படும்போதெல்லாம் மருந்து வாங்குவதில்லை . அந்த 70 திர்ஹம் பில்லைப் பார்த்தாலே போதும் ..வந்த சளி விட்டால் போதும் என்று ஓடியே விடும்..என்று .


சீக்கிரம் அறைக்கு திரும்பவேண்டுமென்று ஞாபகத்தை அடித்து விரட்டி அந்த மருந்தகத்தை ஒருவழியாய் கடந்து வந்துகொண்டிருக்கிறேன். எங்கிருந்தோ வருகிறது ஒரு புல்லாங்குழல் இசை..எனக்கு புல்லாங்குழல் இசை என்றால் ரொம்பப் பிடிக்கும்..

எங்கிருந்துடா வருகிறது என்று சுற்றிப் பார்த்தால் அதோ தூரத்தில் சிறு கூட்டம்.. அங்கே ஒரு பாகிஸ்தானிய நாட்டைச் சேர்ந்த வயதான ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார்..

காற்றில் அந்த இசை குற்றாலீசுவரனைப்போல நீச்சலடித்து வந்து என் காதில் மயிலிறகைத் திணித்துக்கொண்டிருந்தது.


எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற அலைபாயுதே பாடல்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பாட்டை இரவினில் கேட்டுக்கொண்டே தூங்குவதும் மிகவும் பிடித்தமான விசயம். சரி அதை விடுங்கள்..

இங்கே அந்த கானம் கேட்டுக்கொண்டிருந்த நான் அந்த பெரியவை பார்த்தேன்..எந்தவொரு உணர்ச்சியுமில்லாமல் வாசித்துக்கொண்டிருந்தார்.

மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மற்றவர்களின் இருள் போக்குவது போல..அவரின் பாடல் கேட்டு கடந்து செல்பவர்களெல்லாம் சற்று கால்கள் தற்செயலாய் நின்று பின் நிலை உணர்ந்து கடந்து செல்கிறார்கள்..ஆனால் அவரோ முகத்தில் ரசிப்புத்தன்மையே இல்லாது வாசித்துக்கொண்டிருந்தார்....

அந்த நபர் இன்றுதான் இப்படி வாசிக்கிறார்.அதுவரை அவரை நான் கண்டதில்லை..அவர் பாகிஸ்தானியர் என்பதால் ஒருவேளை தனது குடும்பத்தை பூகம்பத்தில் இழந்து அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக வாசித்துக்கொண்டிருக்கிறாரோ என தோன்றியது..?


இப்படியாக இறைச்சியையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு அறை வந்து சேர்ந்தேன்.- ரசிகவ் ஞானியார்

Thursday, October 20, 2005

காதல் மட்டும் போதுமடி!உன் கைகளை என்னிடம்
ஒப்படைத்துவிட்டாய்
என்ன செய்வதடி?

விரல்களில்
சொடக்கு எடுக்கவா..?
சொல்லிக்கொடுக்கவா..?

ஜோதிடம் பார்க்கவா..?
மோதிரம் மாற்றவா..?

இடைவெளி நிரப்பவா..?
தலைவலி நீக்கவா..?

அழுக்கை எடுத்து
அன்பை ஒட்டவா..?
நகத்தை நீக்கி
நாணம் வைக்கவா..?

அய்யோ!
என்ன செய்வேனடி தெரியவில்லையே..?
புதுப்பட சிடி கிடைத்த
குருடனைப்போல முழிக்கிறேன்!

பாட வாய்ப்பு கிடைத்த
திக்குவாய்க்காரன் போல
சந்தோஷத்தில் துடிக்கிறது
என் ம..ன..சு..!

எனக்கு உன்
காதல் மட்டும் போதுமடி!
கையெல்லாம் வேண்டாம்..
நீயே வைத்துக்கொள்..

- ரசிகவ் ஞானியார்

Wednesday, October 19, 2005

திருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம்திருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம் என்று ஒரு பழமொழி இருக்கிறது என்று சுஜாதாவின் கட்டுரை ஒன்றில் படித்த ஞாபகம்

அது உண்மைதான் தென்காசி ஆச்சாரம் என்பது பற்றி தெரியாது ஆனால் திருநெல்வேலி உபச்சாரம் பற்றி நன்றாகவே தெரியும்..

திருநெல்வேலியில் யார் வந்தாலும் வாங்க உட்காருங்க சாப்பிடுங்க என்று ஒரு அனிச்சை செயலாக சொல்வது வழக்கம். ஆனா காலப்போக்கில் இன்றைய தலைமுறைகள் அதனை மாற்றி வருகிறார்கள் என்பது ஒரு வேதனைக்குரிய உண்மை

திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம். ஊரில் உள்ள ஒரு இளைஞரை ஏதோ ஒரு வழக்குக்காக கைது பண்ண வந்த காவலர்கள் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்றபொழுது அந்த இளைஞரின் தந்தை அந்த கைது செய்ய வந்த காவலர்களை வீட்டினில் பாயைவிரித்து அமர வைத்து பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநிர் வாங்கி வந்து உபசரித்திருக்கிறார்.

அந்த காவலர் சொல்லிய வார்த்தைகளை எனது நண்பர் கூறுகிறார்:

உங்க ஊர்ல இதுதான்யா எனக்;கு ரொம்ப பிடிச்ச விசயம்..யார் வந்தாலும் நல்லா உபசரிக்கிறீங்க..நான் கைது பண்ணத்தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சும் அவர் அந்த அளவிற்கு உபசரிச்சிருக்காருன்னா பாருங்களேன்..

திருநெல்வேலியில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் உள்ள எனது நண்பரின் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது என்னை அவர்கள் உபசரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

அவர்கள் நான் வந்தவுடன் ஒரு கிழிந்த பாயை விரித்தார்கள். அந்த கிழிந்த பகுதி என் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று என் நண்பரின் தந்தை அந்த பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார்..எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது..பின் அவர்களால் தர முடிந்த கறந்த பசும்பால் மற்றும் மோரினை கொடுத்தார்கள்..

பின் மதிய உணவிற்காக எங்களுக்காக கறிவகைகளை சமைத்துக் கொடுத்த அவர்கள் மட்டும் கஞ்சி குடித்தது எனன்னை மிகவும் பாதித்து விட்டது

அதனை சமாளிக்க எனது நண்பர்,..இல்லைடா அவர்களுக்கு கறி சாப்பிட்டு பழக்கமில்லை..எப்போதும் கஞ்சி சாப்பிட்டுதான் பழக்கம்..அப்பத்தான் வயல்ல நல்லா சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்.. என்று கூறி சமாதானப்படுத்தினான்

எனக்கு அந்த ஏழைகளின் உபசரிப்பில் பணக்காரத்தனம் இருந்தது. என்னை மிகவும் பாதித்த உபசரிப்பு அது. திருநெல்வேலி- அல்வாவுக்கு மட்டுமல்ல அன்புக்கு பெயர்போன ஊர்தான். ஆகவே திருநெல்வேலி உபச்சாரம் என்று கூறுவது சரிதான்.

ஆனால் தென்காசி ஆச்சாரம்னு ஏன் சொன்னாங்கன்னு தெரியல..யாராவது தென்காசிகாரங்க இருந்தா சொல்லுங்களேன்..

- ரசிகவ் ஞானியார்

Tuesday, October 18, 2005

சந்திரகிரணம்செய்தி :

சென்னை:சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை நேற்று பார்க்க முடியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.


தொலைநோக்கி கூட..
தோற்றுப்போய்விட்டதாம்!
நேற்று
சந்திரகிரணம்
சரியாய்த் தெரியவில்லையாமே..?

அவர்களுக்கு எப்படியடி தெரியும்..?

பூமியையும் சூரியனையும்
நேர்கோட்டில் சந்திக்காமல் - என்னை நீ
மவுண்ட்ரோட்டில் சந்திக்க வந்தாயென்று,


- ரசிகவ் ஞானியார்

Thursday, October 13, 2005

காந்'தீ' பிறந்த மண்(?)
இறைவா – நாங்கள்
இருட்டில் இருப்பினும்...
பரவாயில்லை!
நெருப்பை ஞாபகப்படுத்தும்...
அந்த சூரியனை
நிறுத்திவிடு!

வாக்களித்து விளையாடும்
அரசியல்வாதியைப்போல...
தீக்குளித்து விளையாடும்
தீண்டத்தகாதவர்களே!

நீங்கள்
போகிப்பண்டிகை கொண்டாட
மனிதர்கள்தான் கிடைத்தார்களா,,,?

காந்தியின்
சத்தியாகிரகப்பூமியில் என்ன
சாம்பலின் வாசனை...?
வேறு ஒன்றுமில்லை
மனிதர்களை எரிக்கிறார்களாம்...
அவ்வளவுதான் !

சிகரெட் சூட்டிற்கே
கையை உதறும்...
எம் இந்தியன்
சரீரச்சூட்டை எப்படிப்
பொறுத்தானோ?

இறந்தால் எரிக்கவையுங்கள்
இப்படி
எரித்தே இறக்கவைப்பதில்
என்னடா நியாயம்?"இந்தியா ஒரு
மதச்சார்பற்ற நாடு"
அட
பாடபுத்தகத்தில் எப்படி
பொய்யான தகவல்?
தயவுசெய்து
அந்தப்பக்கத்தை...
கிழித்துவிடுங்கள் !

சுதந்திரத்தின் கால்கள்
சூம்பிப் போய்விட்டதால்...
நியாயங்கள் இங்கே
நொண்டி நடக்கிறது!

சட்டம் இங்கே
ஆண்மையை இழந்து...
அவதிப்படுகிறது!

தர்மம் எவருடனோ
தகாத உறவு கொண்டுவிட்டதால்...
எய்ட்ஸ் நோயால்
தத்தளிக்கிறது!

குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானா...?
ஆராய்ச்சியை நிறுத்துங்கள்....
இதோ நிருபித்துவிட்டான்!

குடும்பம் குடும்பமாய்
கொளுத்துகின்ற அவசரத்தில்...
எவனோ ஒருவன்
மாற்று மதக்காரியோ என நினைத்து
பாரதமாதாவையும்
கொளுத்திவிட்டான்!

இந்தியாவின்
கைகளை நெருப்பிலே
கருக்கிவிட்டு...
மனிதநேயத்திற்கு
டாட்டா காட்டுகிறார்கள்...
மிருகங்கள்!

இதென்ன
கல்வியாளர்களின் தேசமா?
இல்லை
காட்டுமிராண்டிகளின் தேசமா?

திசைகாட்டிகள் கூட...
குஜராத்தின்
திசைகாட்ட மறுக்கிறதாம் ?

அகமதாபாத்தின்
அலறல் சத்தத்தில்...
கன்னியாகுமரிக் குடிமகனின்
காதுகள் செவிடாகிப்போனதாமே?

அட ராமா
நீ
கால்பட்டதால்...
கல்கூட பெண்ணாணதாமே
உன்னை
உம் பக்தர்கள் மிஞ்சிவிட்டார்கள்!
ஆம் அவர்கள்
கை பட்டவுடன்...
மனிதர்கள் சாம்பலாகிறார்கள்!


சீதையைக் காப்பாற்ற
அனுமன் நெருப்புவைத்தான்

இங்கே அனுமர்கள்
சீதைக்கே நெருப்புவைக்கிறார்கள்


பல வரங்கள் கொடுப்பவன்தான்...
பகவான்!
கலவரங்கள் கொடுப்பவனெல்லாம்...
கடவுளல்ல!


ஆம்!
இன்னொரு ஆலயத்தை
இடித்துவிட்டு..
தனக்கொரு ஆலயம் கட்ட
எந்தக்கடவுளும் விரும்பமாட்டான் !
மீறி விரும்பினால்...
தவறேயில்லை
கடவுளை இடியுங்கள்!


இது
காந்தி பிறந்த மண்ணாமே?
மடையர்களே!
மார்தட்டிக்கொள்ளாதீர்கள்.

இதோ
காந்தியின் வாரிசுகள்
இந்தியாவிடம்...
இரத்தக்கடன் கேட்கிறார்கள்


-குஜராத்
இங்கே
நெருப்புகளுக்கு கூட...
நடுக்கம் வந்துவிட்டதாம்!
ஆம்
இதுவரை
இத்தனை மனிதர்களை எரித்து...
அதற்குப்
பழக்கமில்லையாம்!

அதிகமாய் செத்தது
முஸ்லிமா?
இந்துவா?
பட்டிமன்றம் வைக்கும் முன்...
புரிந்து கொள்ளுங்கள்!
அதிகமாய் செத்தது
மனிதர்கள்தாம்!

இனியும் எரியுங்கள்
மனிதர்களை அல்ல...
மதவெறிகளை!

இறைவா இனிமேல்
நெருப்பின் சக்தியை
கொஞ்சம் மாற்று!
ஆம்
கொளுத்தப்படுபவனையன்றி ...
கொளுத்துபவனுக்கு வேதனைகொடு!

இறைவா நான்
துக்கம் தாங்காமல்
தூங்கப்போகிறேன்...
தூங்கி விழிக்கும்பொழுது...
இப்படியொரு சம்பவம்
இந்தியாவில் நடைபெறவேயில்லை...
இதுவெறும் கனவுதான்
என்று
என்னைச் சமாதானப்படுத்து!

இதயம் அழுகையுடன்

ரசிகவ் ஞானியார்

Wednesday, October 12, 2005

www.பசி.comஇண்டர்நெட்டில் முன்னேறும்
இந்தியப்பிரஜைகளே
இண்டர்நெட்டில் பதில் கிடைக்குமா..? - எங்களின்
இன்றைய சோத்துக்கு
என்ன வழி?

யாராவது
இமெயில் மூலம்
இட்லி அனுப்புவீர்களா..?

கடைவீதியில் காத்திருக்கின்றோம்
கண்ணீரோடு..-ரசிகவ் ஞானியார்

Monday, October 10, 2005

குஜராத் வாலாபாக் படுகொலை-II

(2001 ஜனவரி மாதம் குடியரசுதினம் அன்று குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் பற்றி எழுதியது )

பாரதமே! நீ
பரதமாட ஆசைப்பட்டதேன்?
நீ
கால்களில்..
சலங்கை கட்டி ஆடுகிறாய்!
இவர்களைப்பார்
கால்களுமில்லை...
சலங்கையுமில்லை...

நீ
கட்டிடங்களுக்கு...
நடனப்பயிற்சி கொடுத்ததில்
தவறில்லை தாயே..?
ஆனால்
குருதட்சணையாக எங்கள்
குருதிதான் கிடைத்ததா..?


நடனம் கற்றுக்கொடுத்தாய் - சரி
இவர்களுக்கேன்
நரகம் கற்றுக்கொடுத்தாய்?

எங்கள்
உடைந்துபோன
விரல்களைக்கொண்டா நீ...
வீணை மீட்டுகிறாய்..?


பொறுமையின் எல்லையே!
நீ அதிர்ந்தாய்...
பூஜ் நகரமே
பூஜ்ஜியமாகி விட்டது!

நேற்றோ...
வானளாவிய வீடு!
இன்றோ..
வானம்தான் வீடு!


அரைநொடியில்...
அநாதையாகிவிட்டார்கள்.
அன்னை தெரசாக்கள்
ஆயிரம் தோன்றினாலும் -இவர்கள்
அழுகையை அடக்கமுடியுமா?

ஏ! பூகம்பமே!
இனிமேல் நீ
பூ கம்பத்தைக் கூட...
அசைக்கக்கூடாது!


அங்குள்ள குழந்தைகளுக்கு
பள்ளிக்கூடங்கள்தான்...
கற்றுக் கொடுத்ததாம்!
பூகம்பத்தைப்பற்றி!

இப்பொழுது
பள்ளிக்கூடமும் இல்லை..
குழந்தைகளும் இல்லை..
சிலேட்டுகள் மட்டும்தான்
சிதறிக்கிடக்கின்றன!

இன்னமும்
காதுகளுக்குள்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது...
குடியரசு தினத்தில்
குழந்தைகள் பாடிய...
"ஜணகணமண"

நாளைக்கும் அங்கே
பள்ளிக்கூடம் நடக்கும்...
மணியும் அடிக்கும்...
ஆனால்
படிப்பதற்கு..?

இப்பொழுதும் அங்கே
சத்துணவு கிடைக்கிறதாம்!
கழுகுகளுக்கு மட்டும்...


அரசியல் உரிமைகள் கிடைத்துவிட்ட
ஆனந்தத்தில் இருந்தபொழுது...
அடிப்படை உரிமைகள்
அழிக்கப்ட்டுவிட்டதே?

குடியரசுதினம்
மயரசுதினமாய்
மாறிவிட்ட குஜராத்திற்கு...
மானுட இதயங்கள்..
தயக்கமின்றி உதவட்டும்!
குஜராத் மக்கள்...
கவலையின்றி உறங்கட்டும்!

உன்னுடைய சகோதரனுக்கு
அங்கே
விரல்களே இல்லை...
நமக்கெதுக்கு மோதிரம்?
கழட்டிக்கொடு - அவர்களுக்கு
கஞ்சியாவது கிடைக்கட்டும்!


உன்னுடைய சகோதரனுக்கு
அங்கே
இடுப்பிலுடுக்கவே துணியில்லை...
நமக்கெதுக்கு தலைப்பாகை..?
அவிழ்த்துக்கொடு அவர்கள்
அம்மணமாக மாட்டர்கள்!


உன்னுடைய சகோதரனுக்கு
அங்கே
பிணமெரிக்கவே விறகில்லை...
நமக்கெதுக்கு
பிரியாணிக்கு விறகு..?
நிதி கொடு - குஜராத்தில்
அன்பு நதி பாயட்டும்!

தவித்துக்கொண்டிருக்கும்
இதயங்களுக்காக...
அனுதாபப்படவேண்டாம்
அரிசி கொடுப்போம்!
உருக வேண்டாம்...
உடை கொடுப்போம்!

இதயத்தை
இண்லாண்ட் லட்டரில்...
அனுப்புங்கள்!
மனிதநேயத்தை மட்டும்...
கொரியரில் அனுப்புங்கள்!
சீக்கிரமாய் போய்ச்சேரட்டும்!


ஏ பூகம்பமே
மறுபடியும் சொல்கிறேன்!
இனிமேல் நீ
பூ கம்பத்தைக்கூட
அசைக்கக்கூடாது!
-ரசிகவ் ஞானியார்-

Saturday, October 08, 2005

காதலிசம்காதலும் சிகரெட்டும்
ஒன்றுதான்!
இரண்டுமே
சந்தோஷம் தந்துவிட்டு
சாம்பலாகிறது!


- ரசிகவ் ஞானியார்

Wednesday, October 05, 2005

கணவனே கண்கண்ட தெய்வம்

நேற்று துபாய் டெய்ராவில் உள்ள சப்கா பஸ் நிலையம் அருகே நண்பரோடு வந்துகொண்டிருந்தபோது கண்ட காட்சி ஒன்று மனதை மிகவும் வருத்தியது.

ஒரு பெண்ணும் அவரது கணவரும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..துபாயில் பிச்சைக்காரர்களா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும். இங்கே ஆப்கான் ஈராக் மற்றும் மற்ற அரபுநாடுகளிலிருந்து அகதிகளாய் வந்திருக்கின்றவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள்..

எனக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் மீது வருகின்ற பரிதாபத்தை விடவும் உலக அரக்கன் புஷ்ஷின் மீது ஆத்திரம்தான் உருவாகும்.அவன்தான் இவர்களின் நிலைக்கு முழு முதல் காரணம்.

சரி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் அந்த தம்பதியருக்கு வருவோம். அவர்கள் இருவரில் அந்த கணவன் கொஞ்சம் திடகாத்திரமாக ஆனால் கால் ஊனமாக ஒரு தள்ளு வண்டியில் உட்கார்ந்திருந்தான்..ஆனால் அவன் மனைவியோ..பார்த்து அதிர்ந்து போய்விட்டேன்..

சுமார் இரண்டரை அடிதான் இருக்கும் இல்லை இல்லை
அதை விடவும் குறைவான உயரம்தான் ..
மன அல்லது முக வளரச்சி 40 வயதை ஒத்தது ஆனால் உயரம் குழந்தையைப் போல..

ஒரு குழந்தையைப்போல கணவனின் தள்ளுவண்டியில் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள்..

தள்ளுவண்டியின் ஓரத்தில் அமரவைக்கிற அளவுதான் அவர்களின் உடல்வளர்ச்சி என்றால் எப்படியிருக்கும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்...?

எனக்கு பார்த்துவிட்டு அன்று இரவு முழுவதும் அதைப்பற்றிய நினைப்புதான்..ஒரு நிமிசம் என்னை கடந்து சென்றதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே..ஆனால் அந்தபெண்ணோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த கணவன் உண்மையில் மிகப்பெரிய தியாகிதான்...

கணவனே கண்கண்ட தெய்வம் என்று குடித்துவிட்டு வந்து அடிக்கிற கணவனுக்கெல்லாம் தமிழ்ப்பெண்கள் மரியாதை வைத்திருக்கிறார்கள்.ஆனால் இவன்தான்யா உண்மையிலேயே அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன்..
பார்த்தவுடன் என் நண்பரிடம் கூறினேன்..

"அங்க பாரேன் அந்தபெண்ணை கட்டிக்கிட்ட அந்த கணவனை பாராட்டியே தீரவேண்டும்.."

"டேய் போடா எங்க ஊர்ல இப்படித்தான் என் நண்பனோட தங்கைகக்கு இதுபோலத்தான் ஊனம் . ஆனால் அவள கட்டிகிறத்துக்கு ஒன்றரை லட்சம் கேட்டாங்க தெரியுமா.." - நண்பர்

இப்ப கை கால் எல்லாம் நல்லா இருக்கிற பொண்ணுக்கே அப்படி கேட்கிறாங்க..அதுவும் ஊனமுள்ள பொண்ணுண்ணா கேட்கவாடா வேணும்..?

கணவனாகப்போகிறவன் என்னதான் பணம் வாங்கியிருந்தாலும் அந்தபொண்ணுடன் காலமெல்லாம் வாழ்க்கை நடத்தப்போகிறவன் செய்தது தியாகம்தானே என்று தோன்றியது எனக்கு.

எல்லோரையும் போல மனைவியை சினிமாஇ பார்க்இ பீச் இ ஷாப்பிங் என்று வெளியே அழைத்துச் செல்ல முடியாத நிலைதானே அந்தக் கணவனுக்கும்..அப்படியே மீறி அழைத்துப்போனாலும் ஒரு காட்சிப்பொருளாகத்தானே எல்லோரும் வேடிக்கைப்பார்ப்பார்கள்.

ச்சே என்ன ஒரு கொடுமை பாருங்கள்..சரி அந்த கணவனின் மனநிலையை விடுங்கள்..அந்த பெண்ணின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்.. ? நம்மை இறைவன் இப்படிப்படைத்துவிட்டானே என்ற வேதனையை விடவும் நம்மை முன்வந்து கட்டிக்கொண்ட இந்த கணவனுக்கு ஒரு முழுமையான மனதிருப்தியை கொடுக்க முடியவில்லையே என்ற கவலைதான் அவளுக்கு அதிகமாய் இருக்கும்..


மனிதநேயம் பற்றிய நான் கவிதையெல்லாம் எழுதினால் கூட என்னிடமெல்லாம் யாராவது அளவுக்கு அதிகமாய் பணம்கொடுத்து அதுபோன்ற ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளச்சொன்னால் கண்டிப்பாய் மறுத்திடுவேன்.. இது தவறா இல்லை சரியா என தெரியவில்லை..எனக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகள் என்று இருக்கிறது அல்லவா..?


ம்ம்..ம். அந்தகாட்சியை விட்டு கண்கள் அகல மறுத்தது எனக்கு..அந்த தம்பதிகள் ஒரு சுழற்சியை என் மனதுக்குள் ஏற்படுத்தி சென்றுவிட்டனர்; ..புயலில் தத்தளிக்கும் மயிலிறகு போல..

இதயம் நெருடலுடன்

ரசிகவ் ஞானியார்

Monday, October 03, 2005

கண்ணீர் தாலாட்டு
மகனே!
நீ பசிக்காக அழும்போது.....
நிலாச்சோறு ஊட்டுவேன்!
இப்போது
நிலா மட்டும்தான் இருக்கிறது...
சோறு இல்லை!

காத்திருடா.....
விமானம் வரட்டும!;
அதுவரை
குண்டு சத்தம்.......
கேட்டபடி கண்ணுறங்கு!

- ரசிகவ் ஞானியார்

Sunday, October 02, 2005

பைனான்ஸ்காரி

இரட்டிப்பாய் கிடைக்குமென்ற
நம்பிக்கையில்தான்
என்
இதயப்பணத்தை உன்னிடம்
ஒப்படைத்தேன்
இறுதியில் ஓடிவிட்டாயடி!
எங்களுர்
பைனான்ஸ்காரன்போல..-ரசிகவ் ஞானியார்

Saturday, October 01, 2005

வேடிக்கை
ஏட்டை பிடித்து
எழுதவேண்டிய கைகளிலே ...
மாட்டைக்கொடுத்து
மேய்க்கச் சொல்லிவிட்டார்களே..?
காட்டைச் சுற்றியே வருகின்றேன்
கல்வி பயில வாய்ப்பில்லையே.. ?

வேடிக்கையாயிருக்கிறது! - பாரதி
பாட்டொன்று காதில் விழுகிறது
"காலை எழுந்ததும் படிப்பு "

-ரசிகவ் ஞானியார்-

தேன் கூடு