Saturday, October 22, 2005

ஒரு சிந்திப்பு நடைநேற்று இரவு சுமார் 9 மணியளவில் அருகிலுள்ள கோழி இறைச்சி கடைக்கு மறுநாள் அதிகாலை உணவிற்காக (நோன்பு ) இறைச்சி வாங்கச் சென்றேன்.

எனக்கு எப்போது அந்தக்கடைக்கு வந்தாலும் அந்தக் கோழிகளின் பதட்டம் மற்றும் இறப்பு தெரிந்து அடைத்து வைக்கபட்டிருக்கும் அதன் கண்களில் உள்ள மிரட்சி எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பேன்.

நேற்றும் அப்படித்தான் இரண்டு கோழி ஆர்டர் செய்துவிட்ட இருக்கையில் காத்திருந்தேன்..

அந்த பங்காளதேச நாட்டை சேர்ந்த வியாபாரி எனக்குண்டான கோழியை எடுப்பதற்காக தனது கைகளை அந்த பெரிய கூண்டுக்குள் விட ஒவ்வொரு கோழியாய் அவனுடைய கைகளுக்கு அகப்படாமல் தப்பித்து தப்பித்து ஓடியது.


அதோ பாருங்களேன் ஒரு கோழி மட்டும் பயந்து போய் சுவற்றோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஆயுள் கெட்டி போல.
அந்த ஓரத்தில் பம்மிப்போய் ஒட்டி நின்ற கோழியினை அவன் எடுப்பது போல பாசாங்கு செய்ய அது வித்தியாசமாய் கத்தியது.

அதன் கத்தலை நான் ஆச்சரியமாக பார்க்க அவன் எனக்கு விளையாட்டு காட்டுவதற்காகவே அதனை தொடுவது போன்ற பாசாங்கு செய்து செய்து கைகளை அசைத்தான்.

இறுதியாய் அவனுடைய கைகள் ஒரு கோழியை பிடித்தது.
இன்று உயிரிழக்கப்போகும் கோழி இதுதான் என்று நான் நினைத்துக்கொண்டிருக்க அந்தக்கோழியும் கடைசி நேரத்தில் அவனுடைய கைகளை விட்டு நழுவி விட அதன் பக்கத்தில் தப்பிக்க நினைத்த மற்றொரு கோழி மாட்டிக்கொண்டது.


இறைவனின் கணக்குகளை
மனிதனால் எப்பொழுதுமே
கணக்கிட முடியாது


என்பதை உணர்த்தியது எனக்கு. கையில் மாட்டிய கோழியினை அவன் வெளியில் எடுக்க மற்ற கோழிகள் எல்லாம் தவித்தன- துடித்தன -கத்தின..அங்குமிங்கும் சிதறிக்கொண்டிருந்தது.

பின்னே கண்களுக்கு முன்னால் சக தோழர்கள் வெட்டுப்படும்போது எப்படியிருக்கும் மற்றவர்களுக்கு? அந்த இடத்தில் மனிதர்களை வைத்து நினைத்துப்பாருங்கள் எவ்வளவு பயங்கரம் அது?

ஒரே நிமிடத்தில் கோழியை பொட்டலமாக்கினான். அதனை பார்க்கும்போது எனக்குத்தோன்றியது, நாம் வாழுகின்ற இந்த பூமியை அந்த கோழிக்கூண்டாக நினைத்துக்கொள்ளுங்கள். சாவை நினைத்து பதறித் துடிக்கின்ற அந்த கோழிகளை மனிதர்களாக நினைத்துக்கொள்ளுங்கள்..அந்தக் கைகள் இறைவனின் கைகளாக நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்குள் ஒரு குழப்பம் கறி வாங்க வந்தவன் யாரோ..?

எவரின் முறை எப்போது வருமென்று எவருக்குமே தெரியாது? நல்லவர்களெல்லாம் முதலில் இறக்கிறார்களா இல்லை கெட்டவர்களெல்லாம் முதலில் இறக்கிறாhர்களா என்று கணிக்க முடியவில்லை..சில நேரம் நல்லவர்கள்..சில நேரம் கெட்டவர்கள்..


ஆனால் ஒருநாள் இல்லாவிடினும் ஒருநாள் நாமும் வெட்டுப்படத்தானே போகிறோம்..?


மரணம் நம்மை நெருங்குகிறதா இல்லை மரணத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோமா..?


அதுபோலத்தான் ஒவ்வொருவரும் வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்..ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் மரணிப்பதற்குண்டான வருடத்தில் ஒன்று குறைகிறது என்று அர்த்தம்.


மரணத்தை நெருங்குவதற்காக கொண்டாடுவது வித்தியாசமாக இல்லை.. ?


அட இறைச்சி வாங்குவதை விட்டுவிட்டு மனம் என்னவெல்லாமோ சிந்திக்கிறது. ஒருவழியாய் இறைச்சியை வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் அந்த சோமாலியா நாட்டுக்காரர்களின் தேநீர் கடை கண்ணில் பட்டது. எத்தனையோ தேநீர்கடைகள் இருக்க அந்த கடை மட்டும் ஏன் என் கண்களில் வித்தியாசமாய் படவேண்டும்..?


அந்தக்கடையில் எல்லோருமே பெண்கள்..சிப்பந்திகள் , தேநீர் செய்பவர்கள், மற்ற வேலையாட்கள் அனைவருமே சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்கள்..ஆனால் அருந்தவரும் வாடிக்கையாளர்கள் மட்டும் ஆண்கள்..

என்ன சிறப்பு என்றால் அந்த வாடிக்கையாளர் அருந்தி முடியும் வரையிலும் யாராவது ஒரு சிப்பந்தி அவருடயை இருக்கையின் பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவேண்டும்..

இளமையின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் கடலை போட்டுக்கொண்;டிருக்கவேண்டும் .. அவள் கடலைபோட்டுக்கொண்டே இருப்பாள்..அந்த வாடிக்கையாளனும் சிகரெட் - மறுபடியும் ஒரு தேநீர் என்று ஏதாவது ஆர்டர் செய்து கொண்டேயிருப்பான்.


இதுவும் ஒருவகை வியாபார யுக்தி..ஆனால் பெண்கள் போதை பொருளாக்கப்படுகிறார்களே..? ( அலைகின்ற ஆண்கள் மீதும் குற்றம்தான் அலையவைத்த பெண்கள் மீதும் குற்றம்தான் )


வீதியினில் ஒரு வண்ணமயமான விழா ஒன்று நடைபெறுகிறது அதனை கண்கள் பார்த்து ரசிக்கிறது.அப்படியானால் பார்த்தது

விழியின் குற்றமா?..இல்லை பார்க்கத்தூண்டிய அந்த விழாவின் குற்றமா..?


அந்தக்கடையையையும் கவனித்துக்கொண்டே இறைச்சியோடு கடந்துசென்றபோது கண்ணில் பட்டது அந்து கஃல்பான் என்ற மருந்துக்கடை. அந்தக் கடையை என்னால் மறக்கவே முடியாது

ஏனென்றால் ஒருதடவை எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தபோது ( எனக்குப் பிடிக்காதது பிடித்திருந்தது ) தொண்டையில் சளி அதிகமாக இருந்தது.

அப்பொழுது நண்பன் ஒருவன் இந்த மருந்தகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.
பொதுவாக சளியாக இருந்தால் பாலில் மிளகு சேர்த்து குடிப்பது இல்லையென்றால் பங்கஜக்கஸ்தூரி வாங்கி வெந்நீருடன் சாப்பிடுவதுதான் வழக்கம். அதுவும் சரியாகவில்லையென்றால் எனக்கு தெரிந்த கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வேன்;.


ஆனால் அன்றைய தினம் எனது நண்பர் அந்த மருந்தகம் அழைத்துச்சென்று சுமார் 70 திர்ஹத்திற்கு மருந்து மாத்திரைகளை வாங்க வைத்துவிட்டார். நொந்து போய்விட்டேன். அதிலிருந்து அந்த மருந்தகம் பக்கமே தலைவைத்துப் படுத்ததில்லை.


அந்த நண்பரிடமே பலமுறை கூறியிருக்கிறேன். நான் இப்பொழுது சளித்தொல்லையால் அவதிப்படும்போதெல்லாம் மருந்து வாங்குவதில்லை . அந்த 70 திர்ஹம் பில்லைப் பார்த்தாலே போதும் ..வந்த சளி விட்டால் போதும் என்று ஓடியே விடும்..என்று .


சீக்கிரம் அறைக்கு திரும்பவேண்டுமென்று ஞாபகத்தை அடித்து விரட்டி அந்த மருந்தகத்தை ஒருவழியாய் கடந்து வந்துகொண்டிருக்கிறேன். எங்கிருந்தோ வருகிறது ஒரு புல்லாங்குழல் இசை..எனக்கு புல்லாங்குழல் இசை என்றால் ரொம்பப் பிடிக்கும்..

எங்கிருந்துடா வருகிறது என்று சுற்றிப் பார்த்தால் அதோ தூரத்தில் சிறு கூட்டம்.. அங்கே ஒரு பாகிஸ்தானிய நாட்டைச் சேர்ந்த வயதான ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார்..

காற்றில் அந்த இசை குற்றாலீசுவரனைப்போல நீச்சலடித்து வந்து என் காதில் மயிலிறகைத் திணித்துக்கொண்டிருந்தது.


எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற அலைபாயுதே பாடல்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பாட்டை இரவினில் கேட்டுக்கொண்டே தூங்குவதும் மிகவும் பிடித்தமான விசயம். சரி அதை விடுங்கள்..

இங்கே அந்த கானம் கேட்டுக்கொண்டிருந்த நான் அந்த பெரியவை பார்த்தேன்..எந்தவொரு உணர்ச்சியுமில்லாமல் வாசித்துக்கொண்டிருந்தார்.

மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மற்றவர்களின் இருள் போக்குவது போல..அவரின் பாடல் கேட்டு கடந்து செல்பவர்களெல்லாம் சற்று கால்கள் தற்செயலாய் நின்று பின் நிலை உணர்ந்து கடந்து செல்கிறார்கள்..ஆனால் அவரோ முகத்தில் ரசிப்புத்தன்மையே இல்லாது வாசித்துக்கொண்டிருந்தார்....

அந்த நபர் இன்றுதான் இப்படி வாசிக்கிறார்.அதுவரை அவரை நான் கண்டதில்லை..அவர் பாகிஸ்தானியர் என்பதால் ஒருவேளை தனது குடும்பத்தை பூகம்பத்தில் இழந்து அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக வாசித்துக்கொண்டிருக்கிறாரோ என தோன்றியது..?


இப்படியாக இறைச்சியையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு அறை வந்து சேர்ந்தேன்.- ரசிகவ் ஞானியார்

3 comments:

hameed abdullah said...

Nalla bayanulla chinthippukal,

Anonymous said...

விழியின் குற்றமா?..இல்லை
பார்க்கத்தூண்டிய அந்த
விழாவின் குற்றமா..?

அழகாக சிந்தித்து இருக்கிறீர்கள்
ரசிகாவ்..!

விழிகாளுக்காக விழாவும்
விழிகள் இருப்பதால்
விழாவும் :-)

நான் விழாவை மட்டுமே
குறிப்பிட்டேன் :-):-)

அப்துல் குத்தூஸ் said...

//* விழியின் குற்றமா?..இல்லை பார்க்கத்தூண்டிய அந்த விழாவின் குற்றமா..? *//

குற்றமற்றதைப் பார்ப்பது குற்றமாகாது தானே?

//* காற்றில் அந்த இசை குற்றாலீசுவரனைப்போல நீச்சலடித்து வந்து என் காதில் மயிலிறகைத் திணித்துக்கொண்டிருந்தது.

எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற அலைபாயுதே பாடல்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பாட்டை இரவினில் கேட்டுக்கொண்டே தூங்குவதும் மிகவும் பிடித்தமான விசயம். *//

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவிமின்றி(மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான் (அல்குர்ஆன் 31:6)

விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஆமிர்(ரழி), அபூமாலிக்(ரழி) மற்றும் அல்அஷ்அரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றனர். நூல்: புகாரி.

மேலும், அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மது பானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப்படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நன்மை, தீமையை பிரித்து விளக்கி விட்டோம் புரிந்து நடப்பதும், நடக்காததும் உங்கள் விருப்பம்.

தேன் கூடு