Thursday, October 27, 2005

மாப்பிள்ளை பெஞ்சுமாப்பிள்ளை பெஞ்சு - இந்த வார்த்தையைக் கேட்டவுடனையே உங்கள் மனசு நிகழ்காலத்தை ஏமாற்றி காலச்சுவற்றை தாண்டி குதித்து உங்கள் கல்லூரி அல்லது பள்ளியின் வகுப்பறைக்குள் வேகமாய் ஓடிச்சென்று அந்த கடைசிப்பெஞ்சுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறதா..?

எனக்கும் அப்படித்தான்...மாப்பிள்ளை பெஞ்சு என்று செல்லமாய் அழைக்கப்படுகின்ற அந்த கடைசிப் பெஞ்சு என் கல்லூரியை ஞாபகத்திற்குள் கொண்டு வருகின்றது.

நான் படித்த திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கடைசிப்பெஞ்சில் மாப்பிள்ளையாய் ஆக்ரமித்த பெருமை எனக்குச் சேரும்..

அதற்கு மாப்பிள்ளை பெஞ்சு என்று எதற்கு வந்தது என்று தெரியவில்லை..ஒருவேளை புதிதாய் கல்யாணம் ஆன மாப்பிள்ளைகள் எங்கேயும் போகாமல் சோம்பேறித்தனமாக வீட்டில் அடைந்து கிடப்பார்களே அதுபோல கடைசி பெஞ்சுக்காரர்கள் இருக்கிறார்கள் என்று மனதில் வைத்து அவ்வாறு கூறப்பட்டதா..தெரியவில்லை..?

ஆனால் அந்த மாப்பிள்ளை பெஞ்சில் கீழ்கண்ட வசதிகள் இருக்கத்தான் செய்கிறது..


1. கடைசியில் இருப்பதால் யாரும் நம்ம முதுகுக்குப் பின்னால் கிண்டலடிக்க முடியாது.

2. நல்ல பிகர்களை கழுத்து சுளுக்கும்படி திரும்பி பார்க்காமல் நேரடியாக கவனித்துக்கொள்ளும்
வசதி

3. யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று எப்போதுமே கவனித்துக்கொண்டே இருக்கலாம்.

4. கிண்டல்கள் கேலிகள் எல்லாம் முன் பெஞ்சில் இருந்து செய்யும்போது ஆசிரியர்
கவனித்துவிடக்கூடும் என்ற பயமிருக்கும்.. ஆனால் அந்த பயமெல்லாம் இல்லாமல்
தைரியமாக கிண்டலடிக்கலாம்.

5. அந்தப்புரத்தில் உள்ள பெண்களிடம் கடலை போடும் வசதி

6. பசியெடுத்தால் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடும் 24 மணி நேர உணவக வசதி.

7. ஆசிரியர் கொஞ்சம் அறுக்கிறார் என்று தெரிந்தால் உடனே பெஞ்சில் நைசாக தலை
வைத்தோ அல்லது முன் பெஞ்சுக்காரன் தலை மறைக்கும் படியாக ஒரு குட்டித் தூக்கம்
போடலாம்.

இப்படி பல பல வசதிகள். இதற்காகவே நான் அந்த மாப்பிள்ளைப் பெஞ்சில் இடம்பிடிக்க அடம்பிடிப்பேன்.

எங்களின்
நோட்டுப்புத்தகம்
டிபன் பாக்ஸ்
பிட்
காதல் கடிதம்
குசும்புகள் என்று
எல்லாவற்றையும் ஒளித்துவைத்தது
அத்தோடு இதயத்தையும்.அந்தப் பெஞ்சில் அமர்ந்து செய்த சேட்டைகள் இருக்கிறதே...அது ஒரு நிலாக்காலம்தான்

நான் பிஎஸ்ஸி படிக்கும்போது என்னுடைய கடைசிப்பெஞ்சு தோழர்களாக மஸ்தான் - ராஜ்குமார் - அசன் - காஜா ஆகியோர் கூட்டுச் சேர்ந்தார்கள். செம ஜாலியா இருக்கும்

முன்னால் இருப்பவனின் தலையில் தட்டிவிட்டு யார் தட்டியது என்ற அடையாளம் தெரியாதமாதரி பாசாங்கு செய்வது

நான் க்ளாஸ் நடந்து கொண்டிருக்கும் போது முன் சீட்டில் இருப்பவனை அழைத்து அவனுக்கு முன் உள்ளவனை அழைக்கச்சொல்வது, பின் அவன் திரும்பி பார்க்க , அவனுக்கு முன்னால் உள்ளவனை அழைக்கச் சொல்வது இப்படியாக முதல் பெஞ்சில் உள்ளவன் வரை இந்த அழைப்புச் சங்கிலி தொடர கடைசியாய் திரும்பிப்பார்த்தவனிடம் "டைம் "என்ன என்று கேட்டு எரிச்சல் படுத்துவது

பின்னால் இருந்து கொண்டு எந்த ஆசிரியரைப்பற்றியாவது ஓட்டெடுப்பு கிண்டல் , கவிதைகள் என்று எழுதி ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் எதிர்பார்த்து அப்படியே ஒவ்வொரு கையாக பாஸ் செய்யுவோம்.


கடைசிபெஞ்சில் ஒருவருக்கொருவர் ஒருபக்கமாய் நெருக்கியடித்துக்கொண்டு கடைசியில் இருப்பவனை கீழே தள்ளிவிடுவது

நெல்லிக்காயை சாப்பிட்டு விட்டு அந்த கொட்டைகளை ஒவ்வொருவர் மீதும் வீசுவது

அந்தப்புரத்தில் ( அந்தப் புறம் ) உள்ள ஒரு அப்பாவி மாணவியிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கி ( புடுங்கி ) எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவது
( அதற்குப்பிறகு மதியம் எங்க டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு நாங்க கேன்டீனுக்குப் போயிருவோம் )

சம்பந்தமே இல்லாமல் இருமுவது

வெளியில் சென்றுவிட்டு உள்ளே நுழையும் மாணவர்களையோ அல்லது மாணவிகளையோ வரவேற்கும் பொருட்டு அவர்கள் அவர்களது இருக்கையில் வந்து அமரும்வரை ச்சே ச்சே ச்சே என்று ஒட்டுமொத்தமாய் அவர்கள் முகத்தைப்பார்த்து மெலிதாய் சப்தமிட்டு கூறி அவர்களை வெட்கப்பட வைப்பது

தேர்வு சமயங்களில் அந்த கடைசிபெஞ்சுகள் எல்லாம் எங்கெங்கோ கலைக்கப்பட்டுவிடும் என்று தெரிந்து அந்த பெஞ்சில் பிளேடால் ஏதாவது கிறுக்கி எங்களது பெயர்களையும் படிக்கின்ற வகுப்பையும் எழுதி அடையாளமிடுவோம்... ( ஏதாவது பிகர் பார்க்க கூடுமோ என்ற ஆர்வத்தில் )

நாங்கள் மட்டுமல்ல எல்லா கடைசி பெஞ்சுக்காரர்களும் கல்லூரியை விட்டு விடைபெறும் சமயத்தில் அந்த கடைசி பெஞ்சில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.

இப்படி
என்னுடய ஞாபகத்தில்
எப்போதுமே
முதலாவதாக நிற்கிறது - அந்த
கடைசிப்பெஞ்சு!


அவைகள்
உடைக்கப்படும்பொழுது...
மரத்துகள்களை விடவும் எங்கள்
மனத்துகள்கள்தான் சிதறியடிக்கப்பட்டிருக்கும்!


நாங்கள் அதன்
கால்களை ஒடித்ததாலோ என்னவோ..

விடைபெறும் நாளில் ,
அது எங்கள்
இதயம் ஒடித்துவிட்டது!இந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்த பொழுது நாங்கள் விளையாடிய அந்த கடைசிப் பெஞ்சில் யார் யாரோ புதிது புதிதாய் நெருக்கியடித்துக் கொண்டும்.. கிண்டலடித்துக்கொண்டும் விளையாடுவதைக் கண்டபோது

ஐஸ்கிரீம் வாங்க காசில்லாத குழந்தை ஐஸ்கிரிம் சாப்பிடும் குழந்தையை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல...

பூங்காவில் முத்தம் பறிமாறிக்கொண்டிருக்கும் காதலர்களை ,
காதலியைப் பிரிந்து போன காதலன் பார்ப்பதைப்போல..
எனக்குள் ஒரு வித ஏக்கமாகவே இருந்தது

செய்த தச்சனை வேண்டுமானாலும் அந்த இருக்கைகள் மற்ந்திருக்கலாம்;..ஆனால்

மணிக்கணக்காய் அந்த
மரத்துகள்களுக்குள்..
மனம்விட்டு பேசிய
மாணவர்களை - அது
மறந்திடுமோ..?தச்சனால் செய்யப்பட்டது பெஞ்சு
- அதன் நினைவுவினில் விழுந்து
தடுமாறுகிறது எங்கள் நெஞ்சு


-ரசிகவ் ஞானியார்

13 comments:

Anonymous said...

நானும் மாப்பிள்ளைப் பெஞ்சுக்காரன் தான். ஆனால் நாங்கள் பின்வாங்கார் என்று அழைக்கப்படுவோம். நான் அடிக்கடி செய்வது # 7.

தாணு said...

எப்பிடி நீங்க சொன்ன எல்லா விஷயமுமே எங்க வகுப்பிலும் நடந்ததாகவே இருக்குது? ஒரே வித்தியாசம் எங்க க்ளாஸில் எல்லாமே பெண்கள்தான் இப்படி செய்தது, எங்க வகுப்பு பசங்க கொஞ்சம் `எண்ணெய்'(இந்த வார்த்தை உங்க கல்லூரியில் உண்டா??)

சிவா said...

மாப்பிளை பெஞ்சில இருக்கற வசதி எல்லாத்தையும் அழகா சொல்லி பழைய நினைவுகளை கிளரி விட்டுட்டீங்க. நன்றி

நிழல்மனிதன் said...

பெரும்பாலும் வகுப்பறைகளில் குட்டையான மாணவர்கள் முதல் பெஞ்சிலிருந்து ஆரம்பித்து பின்னே செல்லச் செல்ல உயரமான வயது கூடிய (சென்ற ஆண்டு கோட்டடித்த) மாணவர்களை அமர வைப்பார்கள். அதில் கடைசி பெஞ்ச்சில் இருப்பவர்கள் திருமணத்திற்கு தயாரான கட்டிளம் காளைகளாக (அடா..அடா) காணப்படுவதால் அவர்கள் மாப்பிள்ளைகள் என்றும் அந்த பெஞ்ச் மாப்பிள்ளை பெஞ்ச் என்றும் வழங்கப்படுகிறது.

எட்டாம் வகுப்பிற்கு கீழுள்ள வகுப்புகளில் மாப்பிளை பெஞ்ச் இருந்ததாக நினைவில்லை.

எங்கள் பெஞ்சின் சிறப்பம்சம் ஆசிரியர் வரும்வரை நூறு பாடல்கள் கொண்ட எஸ்.பி.பி பாட்டுபுத்தகத்திலிருந்து ஆளுக்கொரு பாடலை பாடிக்கொண்டிருப்போம். ஆசிரியர் வந்த பின்?? ஹி..ஹி அடுத்த பாடலை மனப்பாடம் செய்வோம்.

madhu said...

அனுபவங்களை பிழிந்து வார்த்தைகளா அடுக்கி இருக்கும் விதம் அருமை ...

என் கல்லூரி தினங்களில் நாங்கள் முதல் பெஞ்சு மாணவிகள் ;)

Anonymous said...

ஞானியாரே நன்றாக இருக்கிறது ............... உங்கள் எழுத்து நடை:-))

அன்பு said...

மாப்பிள்ளை பெஞ்சில் உக்காந்து தினமலரில் இடம்பெற்றதுக்கு பாராட்டுக்கள்!

பரஞ்சோதி said...

நண்பரே அருமையாக சொல்லியிருக்கீங்க, நானும் மாப்பிள்ளை பெஞ்சு தான்.

வகுப்பில் முதல் மாணவனாக இருந்தால், மிக உயரமாக இருப்பதால் மாப்பிள்ளை பெஞ்ச், என் புண்ணியத்தால் மாப்பிள்ளைகள் அடியில் இருந்தும், திட்டுகளிலிருந்தும் தப்பி விடுவார்கள்.

மாப்பிள்ளை பெஞ்சில் இருப்பதால் இருக்கும் வசதிகள் அனைத்தும் நண்பர்கள் சொல்லிவிட்டீங்க.

நிலவு நண்பன் said...

இப்படி மாப்பிள்ளை பெஞ்சில் அமர்ந்து அனைவரின் இதயப்பெஞ்சில் இடம்பிடிப்பேன் என்று தெரியாது..

அனைத்து மாப்பிள்ளை பெஞ்சுக்காரர்களுக்கும் என் நன்றி


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Anonymous said...

Nanbareh,

Appadiyeh Autograph panniyila "Niyabagam Varudhey, Niyabagam Varudhey, Niyabagam Varudhey", idhuthaaan thonudhu...
Naanum Mapillai Bechkaaran thaan.
Nalla ezhudhuringa... Vazhthukal
Vp

Anonymous said...

I AM TOO A STUDENT OF SADAK COLLEGE.UNGAL KAVIDAI NADAI ARPUDAM.VETRIGAL THODARA VALTHUGAL.

Anonymous said...

I AM TOO A STUDENT OF SADAK COLLEGE.UNGAL KAVIDAI NADAI ARPUDAM.VETRIGAL THODARA VALTHUGAL.

G.Ragavan said...

மாப்பிள்ளை பெஞ்ச் அனுபவங்களை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

மாப்பிள்ளை பெஞ்சிற்கும் எனக்கும் ரொம்ப தூரம். ஆமாம். நான் எப்பொழுதும் உட்கார்ந்திருந்தது முதல் பெஞ்ச். அதிலும் இரண்டு பேருக்கு நடுவில் உட்காரவும் மாட்டேன். ஒருபக்கம் யாருமில்லாமல் ஃபிரீயாக இருந்தால்தான் பிடிக்கும்.

ஆனால் என்னுடைய நெருங்கிய இரண்டு நண்பர்கள் மாப்பிள்ளைகள்தான். வகுப்பிற்குள்ளே ஆசிரியர்களுக்கு நான் நல்ல பையன். என் நண்பர்கள்கள் கெட்ட பையன்கள். ஆனால் வெளியில் நாங்கள் ரொம்ப்ப்ப்ப்ப திக் நண்பர்கள்.

இன்னொன்னு தெரியுமா? முதல் வரிசையிலும் வம்பு செய்வோம். ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாது. மேடையில் நிற்கின்ற ஆசிரியருக்கு நடு பெஞ்சும் கடைசி பெஞ்சும் நன்றாகத் தெரியும். ஆகையால் முதல் பெஞ்சிலும் நிறைய வம்புகள் செய்திருக்கிறோம்.

தேன் கூடு