Monday, October 10, 2005

குஜராத் வாலாபாக் படுகொலை-II

(2001 ஜனவரி மாதம் குடியரசுதினம் அன்று குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் பற்றி எழுதியது )





பாரதமே! நீ
பரதமாட ஆசைப்பட்டதேன்?
நீ
கால்களில்..
சலங்கை கட்டி ஆடுகிறாய்!
இவர்களைப்பார்
கால்களுமில்லை...
சலங்கையுமில்லை...

நீ
கட்டிடங்களுக்கு...
நடனப்பயிற்சி கொடுத்ததில்
தவறில்லை தாயே..?
ஆனால்
குருதட்சணையாக எங்கள்
குருதிதான் கிடைத்ததா..?


நடனம் கற்றுக்கொடுத்தாய் - சரி
இவர்களுக்கேன்
நரகம் கற்றுக்கொடுத்தாய்?

எங்கள்
உடைந்துபோன
விரல்களைக்கொண்டா நீ...
வீணை மீட்டுகிறாய்..?


பொறுமையின் எல்லையே!
நீ அதிர்ந்தாய்...
பூஜ் நகரமே
பூஜ்ஜியமாகி விட்டது!

நேற்றோ...
வானளாவிய வீடு!
இன்றோ..
வானம்தான் வீடு!


அரைநொடியில்...
அநாதையாகிவிட்டார்கள்.
அன்னை தெரசாக்கள்
ஆயிரம் தோன்றினாலும் -இவர்கள்
அழுகையை அடக்கமுடியுமா?

ஏ! பூகம்பமே!
இனிமேல் நீ
பூ கம்பத்தைக் கூட...
அசைக்கக்கூடாது!


அங்குள்ள குழந்தைகளுக்கு
பள்ளிக்கூடங்கள்தான்...
கற்றுக் கொடுத்ததாம்!
பூகம்பத்தைப்பற்றி!

இப்பொழுது
பள்ளிக்கூடமும் இல்லை..
குழந்தைகளும் இல்லை..
சிலேட்டுகள் மட்டும்தான்
சிதறிக்கிடக்கின்றன!

இன்னமும்
காதுகளுக்குள்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது...
குடியரசு தினத்தில்
குழந்தைகள் பாடிய...
"ஜணகணமண"

நாளைக்கும் அங்கே
பள்ளிக்கூடம் நடக்கும்...
மணியும் அடிக்கும்...
ஆனால்
படிப்பதற்கு..?

இப்பொழுதும் அங்கே
சத்துணவு கிடைக்கிறதாம்!
கழுகுகளுக்கு மட்டும்...


அரசியல் உரிமைகள் கிடைத்துவிட்ட
ஆனந்தத்தில் இருந்தபொழுது...
அடிப்படை உரிமைகள்
அழிக்கப்ட்டுவிட்டதே?

குடியரசுதினம்
மயரசுதினமாய்
மாறிவிட்ட குஜராத்திற்கு...
மானுட இதயங்கள்..
தயக்கமின்றி உதவட்டும்!
குஜராத் மக்கள்...
கவலையின்றி உறங்கட்டும்!

உன்னுடைய சகோதரனுக்கு
அங்கே
விரல்களே இல்லை...
நமக்கெதுக்கு மோதிரம்?
கழட்டிக்கொடு - அவர்களுக்கு
கஞ்சியாவது கிடைக்கட்டும்!


உன்னுடைய சகோதரனுக்கு
அங்கே
இடுப்பிலுடுக்கவே துணியில்லை...
நமக்கெதுக்கு தலைப்பாகை..?
அவிழ்த்துக்கொடு அவர்கள்
அம்மணமாக மாட்டர்கள்!


உன்னுடைய சகோதரனுக்கு
அங்கே
பிணமெரிக்கவே விறகில்லை...
நமக்கெதுக்கு
பிரியாணிக்கு விறகு..?
நிதி கொடு - குஜராத்தில்
அன்பு நதி பாயட்டும்!

தவித்துக்கொண்டிருக்கும்
இதயங்களுக்காக...
அனுதாபப்படவேண்டாம்
அரிசி கொடுப்போம்!
உருக வேண்டாம்...
உடை கொடுப்போம்!

இதயத்தை
இண்லாண்ட் லட்டரில்...
அனுப்புங்கள்!
மனிதநேயத்தை மட்டும்...
கொரியரில் அனுப்புங்கள்!
சீக்கிரமாய் போய்ச்சேரட்டும்!


ஏ பூகம்பமே
மறுபடியும் சொல்கிறேன்!
இனிமேல் நீ
பூ கம்பத்தைக்கூட
அசைக்கக்கூடாது!




-ரசிகவ் ஞானியார்-

No comments:

தேன் கூடு