Tuesday, July 29, 2008

வானிலை அறிக்கை


என் ஞாபகம்
அதிகப்படுவதாய்
நீ அனுப்புகின்ற
குறுந்தகவல்,
அங்கே
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...
வானிலை அறிக்கை

- ரசிகவ் ஞானியார்

Friday, July 25, 2008

எதிர்வினை"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்

ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"

அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?

பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்

- ரசிகவ் ஞானியார்

பெங்களுரில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு

பெங்களுரில் 6 இடங்களில் , ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா செக்போஸ்ட், மைசூர் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி, கோரமங்களா-ஆடுகோடி பகுதியில் ஒரு இடத்திலும், கண்டோன்மென்ட் லாங்போர்ட் டவுனிலும் இந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இப்போது கிடைத்த தகவல்படி 3 பேர் மரணமடைந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வருகின்றது
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மடிவாளா செக்போஸ்ட் அருகே உள்ள போரம் மால் அருகே முதல் குண்டு வெடித்துள்ளது. இரண்டாவது குண்டு மைசூர் ரோட்டில் வெடித்தது.

மூன்றாவதாக கோரமங்களா-ஆடுகோடி பகுதியிலும், பின்னர் லாங்போர்ட்டவுனிலும் குண்டுகள் வெடித்தன.

வெடித்தவை அனைத்துமே குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நகர எல்லையில், ஓசூர் செல்லும் சாலையில் மடிவாளா உள்ளது. இதையடுத்து கோரமங்களா உள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் இவை.

இவை தவிர மேலும் இரு இடங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உடனடியாக Bomb disposal squads விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. குண்டு வெடித்த பகுதிகள் மிகவும் பரபரப்பானவை. மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகள்.
ஆகவே பெங்களுர் கொஞ்சம் பதட்டமாக உள்ளது.


- ரசிகவ் ஞானியார்

Thursday, July 24, 2008

புத்தனுக்கும் இரவு உண்டுஉன் வீட்டை சூறையாடுபவன்
மன்மதனாக இருக்ககூடும்
உன் அல்குல் தைவரலோ
காந்திக்காக

உனக்கு வயிறு
எனக்குப் பசி

பசியில் உழலும் எனக்கு
உன்
வயிறு பற்றிய வருத்தமில்லை.

பழிபோடுவதற்கு
எதுவோ இருக்கையில்
என்
தவறுகள் வெள்ளமாகிக்கொண்டிருக்கின்றன

ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்

- ரசிகவ் ஞானியார்

(அல்குல் தைவரல் : காதலனோடு களவு கொள்ள விருப்பப்பட்ட பெண் அதனைத் தெரிவிக்க வெட்கப்பட்டு தனது உடல் மெய்ப்பாடுகளால் தெரிவிக்கும் நிலை.)

வெயில் பிடித்தவள்
சாளரம் ஊடே நுழைகின்ற
கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
தோற்றுவிடுகிறது
அவள்
பல் முளைக்கா பருவம்

கற்றைகளை விளக்குமளவுக்கு
கற்கவில்லை நான்

கதிரவனே நீ
கற்றைகளுக்குப் பதிலாய்
கடிபொருளை அனுப்பேன்

எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்


- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 23, 2008

திண்ணையர்கள்


அந்த
வீடுகளில் எல்லாம்
பெரும்பாலும்
நிசப்தங்கள் மட்டுமே
வாழுகின்றன

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
வாழ்ந்தார்களாம்

- ரசிகவ் ஞானியார்

கணிப்பொறிலிசம்

Friday, July 18, 2008

மென்தமிழ் - முதல் இதழ் - ஆடி 2008

அன்பின் தோழமைக்கு,

வாழிய நலம். முதன்முறையாக உங்கள் கணித்திரையில் இனித்தமிழ் மென்தமிழ் , படித்துப்பார்த்து, உங்களின் பின்னூட்டங்களை எங்களின் வலைப்பூவிலோ, அல்லது mentamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைத்தால் மகிழ்வோம்..
வாழ்த்துங்கள் வளர்கின்றோம்,

என்றென்றும் நட்புடன்,
உங்கள் மென்தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

Thursday, July 17, 2008

எப்படி இருந்த தமிழ் மணம் இப்படி ஆகிவிட்டது

எப்படி இருந்த தமிழ் மணம் ....?


இப்படி ஆகிவிட்டது
.....- ரசிகவ் ஞானியார்

தமிழுக்கு தமிழ் என்றே பெயர்"நீங்க தமிழா?
நீங்க தமிழா?"

மொழி தெரியாத ஊரின்
பேருந்து நிலையத்தில்,
காற்று தத்தெடுத்து என்
காதுக்குள் அனுப்பியது!
வரிசையாய் விசாரித்து வரும்
அந்தக் குரலை!

சொந்த ஊரில் மிதித்துவிட்டு...
வந்த ஊரின் தமிழ்கேட்டு
மெச்சிப்போய்,
தமிழை வரவேற்க ஆயத்தமானேன்.

"ஊருக்குப் போக காசில்லை
பணம் தாங்க சார்"
- தமிழ் கண்ணீர் சிந்தியது

"க்யா, க்யா
தமிழ் நகி மாலும்"
- ஏதோ என்னால் தமிழுக்கு முடிந்த உதவி

தமிழ் தலைகுனிந்து சென்றது

- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 16, 2008

கிட்டப்பார்வை
என்றேனும்
விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?

நாளைக்கு காலையில்
நாஷ்டாவுக்கு
காசு இருக்கிறதா?

நீ பேசிக்கொண்டேயிரு
அணுசக்தி ஒப்பந்தம் பற்றியும்
..........................
.......................


- ரசிகவ் ஞானியார்

Friday, July 11, 2008

கரையேறும் சலனங்கள்
எறிதலில் தோன்றும்
சலனங்கள்
கரையேறிக் கொண்டிருக்கின்றது

நீச்சல்தெரியாத சொற்கள்
மூழ்கிக்கொண்டிருக்கின்றது

அம்புகளுக்குப் பின்னால்
அம்புலி இருக்கின்றான்

- ரசிகவ் ஞானியார்

Thursday, July 10, 2008

வாழ்த்துகள்


எவருமே
திருப்பித் தரஇயலாத
நான் பிறந்த அந்த நாளை

இன்றைய இலக்கம் மட்டும்
போலியாய் நிர்ணயிக்கின்றது

வாழ்த்துகள் பிரதியெடுத்து
பதிப்படுகின்றது
ம்
நான் கொடுத்தது
எனக்கே திருப்பி

ஒவ்வொரு பிறந்தநாளும்
நான் இறப்பதற்கு
ஒரு வருடத்தை குறைக்கிறது

யாராவது
வாழ்த்துங்களேன்

- ரசிகவ் ஞானியார்

Tuesday, July 08, 2008

சாத்தான்கள் உறங்கும் கல்லறை
கலைந்து விடாத
தேவன் வே ஷத்தோடு
பொருந்திக் கொள்கிறாய்

சாத்தான்கள் உறங்கும்
பெட்டகத்தோடு
எளிதில் கடந்து செல்லும்
உன்னைக் காணும்பொழுதுதெல்லாம்
சாத்தானாகின்றேன்.

- ரசிகவ் ஞானியார்

Monday, July 07, 2008

பொறாமை சுமந்த பூக்கள்
உனக்கு ப்ரியமானவர்கள்
உன்னை சந்திக்க வரும்பொழுதெல்லாம்
எனது பூக்களில்
பொறாமை முளைத்து விடுகின்றது

விடைபெற்று செல்லும்பொழுது
மீண்டும்
பொறாமை பூக்களாகிறது

உன்னிடம் தேங்கிக்கிடக்கும்
அவர்களுக்குண்டான பூக்களையும்
எனக்கே தந்துவிடேன்

நீ
பொறாமையை வைத்துக்கொள்

- ரசிகவ் ஞானியார்

Saturday, July 05, 2008

சுப்பிரமணி வாத்தியார் நினைவுகள்

"வீட்டுல உக்காந்து பீடி சுத்த வேண்டியதுதானே..ஆளையும் மூஞ்சியையும் பாரேன்..வந்துட்டா ஸ்கூலுக்கு"

சுப்பிரமணி வாத்தியாரின் வகுப்பு தினமும் இப்படித்தான் ஆரம்பிக்கும்

"அய்யா வேண்டாய்யா வேண்டாய்யா வேண்டாய்யா" மாணவர்கள் கதற கதற, டவுசர் கிழிய அடித்து நொறுக்குவார். சில சமயம் டவுசரில் இருந்து தூசிகள் பறக்க அடிப்பார்.

அடிவாங்குபவனைத் தவிர, மற்ற மாணவர்களுக்கு அவர் அடிக்கின்ற ஸ்டைலை பார்க்க ஆனந்தமாக இருக்கும். அப்பொழுது எங்களுக்கு வேடிக்கை பார்க்கின்ற வயதுதான்.

அவரிடம் திட்டுவாங்காத மாணவிகளும், அடி வாங்காத மாணவர்களும் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. மாணவர்களை விடவும் மாணவிகளை சகட்டு மேனிக்கு திட்டுவார்.

அவரிடம் அடி வாங்காமல் தப்பிபதற்காகவே அவரைச் சுற்றி ஜால்ரா போடும் மாணவர்களின் வட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

அவர் வரலாற்று பாடம் எடுக்கும் காட்சியினை இப்பொழுது அசைபோட்டுப் பார்த்தாலும் சிரிப்பாக வரும்

"அசோகர் இருக்காரே அவருக்கு வேற வேலை இல்லைப்பா.. சும்மா இருக்க வேண்டியதுதானே சாலையோரத்தில மரம் நட்டுக்கிட்டே இருப்பார்"

"சமாதானமா போயிருந்தாஇப்படி நடந்திருக்குமா..? தெனாவட்டுல திரிஞ்சானுவ..இப்ப பாருங்க பானிபட் போர்ல வந்து நிற்குது.."

"ஒளரங்கசீப் இருக்கானே ஒளரங்கசீப்....அவன் அவங்க அப்பனை ஜெயில்ல போட்டு தண்ணி கொடுக்காம கொடுமை படுத்தினாப்பா.."


இடையில் எவனாவது சந்தேகம் கேட்டால் தொலைஞ்சான் அவன்.

"முதல்ல பாடத்தை கவனில்ல..அங்க எங்கல அண்ணாந்து பாத்துகிட்டு இருக்கே..அப்படி பார்த்தா மண்ணயா புரியும்...எழுந்திருல முட்டிக்கால் போடுல" என்று அதட்டிவிடுவார்

அதனால நாங்க யாருமே சந்தேகம் கேட்க மாட்டோம்.

தனக்கு புரியாத பாடங்களையோ அல்லது தயார்படுத்தாமல் வருகின்ற நாட்களிலோ சக மாணவர்கள் யாரையாவது எழுந்திருக்கச் சொல்லி வாசிக்கச் சொல்லி விடுவார்.


கொடி நாள் - பள்ளி நிதி – நோட்டுப்புத்தகம் பணம் என்று மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய பணத்திற்கு இவரையே நிர்வாகம் பொறுப்பாளராக நியமிக்கும்

அப்பத்தான் பயத்தில பசங்க கொடுத்திடுவாங்கன்னு

கொடுக்காத மாணவர்களை பக்கத்தில் அழைத்து, "உங்கப்பா யாருகிட்டயாவது பேசிகிட்டுருக்கும்போது அவரை தொந்தரவு பண்ணு..
அவர் அர்ணகயிறை பிடிச்சு தொங்குல அப்பத்தான் தருவாரு..."


என்று எரிச்சலில் கூறுவார். சுக மாணவனை தப்பிக்க வைப்பதற்கும் அவரை குஷிப்படுத்த வைப்பதற்கும் நாங்கள் பக்கத்தில் போய்

"அய்யா அவங்க அய்யா தண்ணி வண்டி...தினமும் தண்ணிய போட்டுட்டு வந்து அவங்க அம்மாவை அடி அடின்னு அடிப்பாரு..."
ன்னு சொல்லுவோம்

அதைக்கேட்டு உற்சாகமடைந்து விழியை ஒருக்களித்து நக்கலாக,

" அப்படியா! தண்ணி வண்டியா..அடிப்பாரோ ?"

என்று திரும்ப திரும்ப கேட்பார். கணவன் மனைவியைப் போட்டு அடிக்கும் நிகழ்வுகள் பற்றி யார் பேசினாலும் அவருக்கு உற்சாகத்தையே கொடுத்தது.

மாணவர்களை விடவும் மாணவிகள் பணம் தர தாமதமானால் அவ்வளவுதான்...

"உன்னலாம் எவன் கூப்பிட்டான் ஸ்கூலுக்கு.. வீட்டுல இருந்துக்கிட்டு சட்டி நிறைய சாயா போட்டு, ஊத்தி ஊத்தி குடும்பத்தோட குடிக்க வேண்டியதுதானேன்னு" உபசரிப்புகளை ஆரம்பித்து விடுவார்...

அவருக்கு ஏன் பெண்கள் மீது வெறுப்பு என்று எங்களால் புரிந்து கொள்ள முடியாமலையே இருந்தது.

அவர் மதிப்பெண்கள் போடுகின்ற விதம் இன்னமும் சிரிப்பாக இருக்கும். வரலாற்று தேர்வு என்றாலே மாணவர்கள் உற்சாகமடைந்து நிறைய நிறைய எழுத ஆரம்பித்துவிடுவாகள்.

15 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு எல்லாம் மாணவர்கள் எழுதிய அளவினை, அளவுகோலால் அளந்துதான் மதிப்பெண் வழங்குவார்

கூர்ந்து வாசித்துப் பார்த்தால் அதில் வரலாறுகளின் இடை இடையே பக்கங்களை நிரப்புவதற்காக அந்த நேரத்தில் ஓடிய படத்தின் கதைகளை அளந்துவிட்டிருப்பர்கள்.

ஒரு தடவை அப்படித்தான் ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் மீது உள்ள வெறுப்பில் மாட்டிவிட்டுவிட, அய்யா வாசித்துப் பார்த்தார்;

"விஜயகாந்த ஓடிடிடி வந்து அவனை கும் கும் கும்னு சாத்தி இந்தால படுக்க போட்டு அடிச்சி தூக்கி வீசி விடுவார். அப்பொழுது அசோகருக்கு மன வேதனை ஏற்பட்டது. போரில் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி பெரிதும் வருந்தினர்."

"கொள்ளக்கூட்டுக்காரங்களோட திட்டம் தெரிஞ்சி நம்ம தலைவர் குதிரைல பறப்பாரு. அப்ப ஒருத்தன் இடையில கயித்தக் கட்டி தலைவரை கவுத்திடுவான்.
காலாட்படைகளும் குதிரைப்படைகளும் யானைப் படைகளும் அந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன."


என்று சினிமா படக்கதையும் வரலாறும் கலந்து புதிய கதைகளை எழுதிய அந்த மாணவனை பின்னு பின்னுன்னு பின்னிட்டாரு...அத இப்பொழுது நினைச்சாலும் சிரிப்பாக இருக்கும்


ஒரு முறை என் எஸ் எஸ் கேம்ப்பிற்காக பக்கத்து கிராமமான தருவை என்கிற ஊருக்கு சுப்ரமணி வாத்தியார் தலைமையில் சென்றோம்.

சாலைகளோரம் முட்செடிகளையெல்லாம் வெட்டிவிட்டு, களைப்போடு இருந்த முதல் நாள் இரவு மறுநாள் திட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்க, எங்களுக்கோ தூக்கம்.

நான் கொம்பையா என்கிற மாணவனைப் பார்த்து, கண்ணசைத்து, ட்யுப்லைட்டை அணைத்து விடுமாறு பந்தயம் கட்ட, அவனோ மெதுவாக எழுந்து அவர் பார்க்காத வண்ணம் விளக்கை அணைத்துவிட்டான்.

எல்லாரும் ஓஓஓஓஓ ன்று கத்திக்கொண்டே சிதறினோம் அவர் பதட்டமாய் சென்று விளக்கை போட்டார். முகம் வியர்த்து வழிந்திருந்து. ஏனென்றால் முந்தைய என் எஸ் எஸ் கேம்பில் சீனியர் மாணவன் ஒருவன் இரவில் அவர் தூங்கும்பொழுது தலையணையில் அடித்துவிட்டு ஓடியிருக்கின்றான்.

அந்த சம்பவம் ஞாபகம் வந்துவிட்டதால் அவர் பயந்து போய், " எவும்ல அது எவும்ல லைட்டை அணைச்சான்.." என்று அனைவருக்கும் ஒவ்வொரு அடி வைத்தார்

பின் கோபம் தணியாமல் மறுநாள் காலையில் 4 மணிக்கே அனைவரையும் எழுப்பிவிட்டுவிட்டு கொட்டும் பனியில் உடற்பயிற்சி செய்யச் சொன்னார்.

ஓவ்வொருத்தனின் பின்னாலும் வந்து முதுகை வளைத்து, கையைத் திருகி தன்னுடைய கோபத்தை தீர்த்துக்கொண்டார்.


பிடிக்காத அல்லது தவறு செய்கின்ற அல்லது தாமதமாய் வருகின்ற மாணவர்கள் கையில் ஒரு வாளியை கொடுத்து பக்கத்தில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் மோந்து வந்து அங்குள்ள செடிகளுக்கெல்லாம் வரிசையாக விடச் சொல்வார்.


சுப்பிரமணி வாத்தியாரின் குடும்பத்தை பற்றி பள்ளி முடியும் தருவாயில்தான் தெரிய ஆரம்பித்தது. அவருக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தைகளே இல்லை. அதனால் தனது மனைவியுடன் தினமும் சண்டை போடுவாராம்.

தனக்கு குழந்தை பெற்றுத்தர முடியாத மனைவியின் மீது உள்ள கோபத்தால், எந்த கணவன் மனைவியை அடித்த கதையை அவர் கேட்டாலும் உற்சாகமடைந்துவிடுவார். ஆனால் அந்த உற்சாகத்தினுள் இப்படி ஒரு சோகம் இருந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.

அந்தக்கோபத்தில்தான் மனம் தளர்ந்துபோய் இருக்கிறார். அந்த தளர்ச்சியே மாணவர்கள் மீது இந்த அளவுக்கு அடக்குமுறையைக் கையாண்டதற்கும் மாணவிகளைத் திட்டி தீர்த்ததற்கும் காரணம் என்று உணர்ந்த பொழுது அவர் மீது பரிதாபம் தான் தோன்றியது.


இப்பொழுது அந்தப் பள்ளிக்கு மறுபடியும் செல்லும்பாழுது வரிசையாக நிற்கின்ற மரங்களிலிருந்து, உதிரும் இலைகள் எங்கள் மீது விழும்பொழுது நாங்கள் ஊற்றிய தண்ணீருக்கு நன்றிக்கடன் செலுத்துவது போலவே தோன்றும்

சுப்பிரமணி வாத்தியார் முன்புபோல் இல்லை அவர் மாணவர்களை அடிப்பதில்லை என்று நாங்கள் தற்பொழுது கேள்விப்பட்டோம். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

- ரசிகவ் ஞானியார்
ரசிகவ் ஞானியார்

Friday, July 04, 2008

காதலிசம்நான் அழைக்கும்பொழுது
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
உனது அலைபேசி,

உன்மீதான அன்பை
அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது

தயவுசெய்து
ஒலிப்புகளை நீளச்செய்

- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 02, 2008

அவனுக்கு பெயரே இல்லை
சில நேரம் சுரண்டுவாள்
சில நேரம் கால்சட்டை பிடித்திழுப்பாள்
சில நேரம் காலில் விழுவாள்
சில நேரம் கைவலிக்க கும்பிட்டுக்கொண்டிருப்பாள்

பொம்மைகள் பிடிக்கும் விரல்களில்
சில்லறைகள்

அறைந்துவிடலாம் போலத்தோன்றும்
அந்தச் சிறுமியின் தந்தையை!

ஆனால்
அவனை நான் பார்த்ததேயில்லை

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு