Thursday, June 28, 2007

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

Photo Sharing and Video Hosting at Photobucket


தோ முட்செடிகளாக அடர்ந்திருக்கும் இந்த ஓடைப்பகுதியானது திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் 1 கி.மீ தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே அறிவியல் மையத்திற்கு எதிர்ப்புறமாக உள்ளது

ன்ன ஆயிற்று இந்த ஓடைக்கு என்கின்றீர்களா..?

நேற்று ஒரு ஏழைப் பெண்மணி தனது கைக்குழந்தையுடன் இந்த ஓடையில் நீர் குடிக்க இறங்கிய பொழுது இந்த ஓடையில் எந்த மரத்திலிருந்தோ ஒரு பலாப்பழம் விழுவதைக் கண்டு கையிலிருந்த குழந்தையை அப்படியே தண்ணீரில் போட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்கச் சென்றுவிட்டாள்.

பாவம் குழந்தை தண்ணீரில் மூழ்கிப்போனது. குழந்தையைப் போட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்கச் சென்றிருக்கிறாள் என்றால் எந்த அளவிற்கு பசியோடிருப்பாள் என்று நினைத்துப் பாருங்கள். குழந்தையை விடவும் அவளுக்கு பாலப்பழம்தான் அந்த நேரத்தில் முக்கியமாய் தெரிந்திருக்கிறது.

தனால்தான் இந்த ஓடைக்கு வித்தியாசமான பெயர். என்ன தெரியுமா?

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

ன்னடா நேற்று நடந்திருக்கிறது எந்தப்பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி செய்திகளிலும் வரவில்லை என்கின்றீர்களா? நான் நேற்று என்று சொன்னது சுமார் 50 வருடங்களுக்கு முந்தைய நேற்றுங்க.. .. இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது கற்பனையா என்றெல்லாம் தெரியாது. ஆனால் வட்டார மக்களால் இந்தக் கதை பரவலாக பேசப்படுகின்றது

தான்ங்க ஒரு பழமொழி சொல்வாங்க பசி வந்தால் பத்தும் பறந்தும் போகும் என்று. ஊரில் நடக்கின்ற திருட்டு கொலை கொள்ளைக்கெல்லாம் முக்கிய காரணம் இந்தப் பசிதாங்க. இறைவன் மட்டும் பசிக்காத வயிறொன்றை படைத்துவிட்டால் இவ்வுலகம் அமைதியாய் இருக்குமோ..?

ந்த ஓடையைக் கடக்கும் பொழுதெல்லாம் எனக்கு பலாப்பழம் ஞாபகம் வருகின்றதோ இல்லையோ மூழ்கிப்போனதாகச் சொல்லப்படும் அந்தக் குழந்தைதான் ஞாபகத்தில் வரும்.

நீங்க திருநெல்வேலிப் பக்கம் வந்தீங்கன்னா இந்த ஓடையை கண்டிப்பா பார்த்துட்டுப் போங்க..? அந்தப் புள்ளை ஞாபகம் வருமோ இல்லையோ என் ஞாபகம் வரும்ல..


- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 26, 2007

எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ


உமாநாத் என்ற விழியன் இந்த எட்டு விளையாட்டில் இழுத்துவிட்டு விட்டார். என்னைப்பற்றி நானே கூறுவதற்கு 8 விசயங்கள் போதுமா.? இருப்பினும் எட்டுக்குள் சுருக்கி வரைகின்றேன்.

அது என்ன எட்டு ஒரு 3 அல்லது 4 ன்னு வச்சிருக்க கூடாதா..? போங்கப்பா


டீ


ருத்துவரிடம் சென்று மருந்து வாங்கினால் சாப்பாட்டுக்கு முன்பா? இல்லை சாப்பாட்டுக்குப் பின்பா? என்று கேட்பது வழக்கம். அது போல என்னிடம் யாராவது "டீ சாப்படுறீங்களா" எனக் கேட்டால் , "டீ க்கு முன்பா அல்லது டீக்குப் பின்பா" என்றுதான் கேட்பேன். அந்த அளவிற்கு டீ பைத்தியம் நான்.

டீ இல்லையென்றால் நான் இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு என் அன்றாட வாழ்க்கை டீயோடு ஆரம்பித்து டீயோடுதான் முடியும்.

சாயா ,டீ, சுலைமானி, தேநீர், லிப்டன்; இப்படிபட்ட வார்த்தைகள் காதில தேனாய் வந்து பாயும் எனக்குள்..

யாருடன் எங்குவேண்டுமானாலும் எந்த நேரத்திலும் டீ குடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விடமாட்டேன். நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் சமையலறையில் சென்று டீ ஊற்றி வைக்கும் பாத்திரம் காலியாகி இருக்கின்றதா? அல்லது கொஞ்சூண்டேனும் டீ இருக்கிறதா? எனப்பார்த்து கொஞ்சூண்டு இருந்தால் அதனை சூடுசெய்து கேட்டு அடம்பிடிப்பேன்.

"இந்த நேரத்தில் டீயா" என்ற வசனத்தை என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கின்றார்கள். நேரம் காலம் எல்லாம் பார்க்கமாட்டேன் டீ குடிப்பதற்கு.

காலையில் டீ குடித்தபிறகு டீ குடிப்பேன். பிறகு டீ குடித்தபிறகும் டீ குடிப்பேன்.

சாலையில் நெருங்கிய நண்பனோ அல்லது நெருக்கமில்லாத நண்பனோ, யாராயினும் "வாடா டீ சாப்பிடலாம்" என்றுதான் வார்த்தைகளே ஆரம்பிக்கும்.

கல்லூரியில் படிக்கும்பொழுதும் அப்படித்தான். பீரியடுகளின் இடைவெளியில் டீ சாப்பிட்டு வருவோம். மாலையில் பேருந்துக்காக காத்திருக்கும்பொழுது ஒன்று. பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஒன்று. அப்புறம் வீட்டுக்குச் சென்று ஒன்று..

பரிட்சை நேரத்தில் என் அம்மா ஒரு ப்ளாஸ்க்கில் டீ போட்டுத் தருவார்கள். அதை முழுவதும் குடிக்கின்றனோ? இல்லையோ? அதனைப் பார்த்துக் கொண்டே படித்து விடுவேன். குருப் ஸ்டடி நேரத்தில் பொழுது இரவில் 1 மணிநேரத்திற்கு ஒரு தடவை பேருந்து நிலையம் வரை சென்று டீ குடித்துவிட்டு வருவோம்.

நான் துபாயில் இருக்கும்பொழுது இங்கிருப்பதை விடவும் அதிகமாக டீ குடிப்பேன் .

திறந்த வெளி ரெஸ்டாரெண்டில் நண்பர்கள் ஒவ்வொருவராக கூடுவோம் ஒவ்வொருவர் கூடும்பொழுதும் அனைவருக்கும் டீ.
இப்படித்தான் ஒரு தடவை 4 அல்லது 5 டீ குடித்திருப்போம் நீண்ட நேரம் இருந்துவிட்டோம். சர்வர் வந்து, " நேரமாச்சு அடுத்த கஸ்டமர் வரவேண்டாமா? எழுந்திருங்க.." என்று சொன்னபொழுது "சரி அப்படின்னா எல்லாருக்கும் இன்னொரு டீ கொண்டு வாங்க" என்று சொல்ல கடுப்பில் சென்றுவிட்டான்..

எதற்காக இப்படி மெனக்கெட்டு டீயைப்பற்றி திரும்ப திரும்ப சொல்கிறேன் என்றால். இதனை வாசிக்கும் நண்பர்கள் என்னைச் சந்திக்க நேரிட்டால் டீ வாங்கிக் கொடுத்துறுங்க..அல்லது என்னுடன் டீ சாப்பிட வாங்க..

அதிகமா டீ குடிக்காதீங்க உடப்புக்கு நல்லது இல்லை என்று நிறைய நல்ல உள்ளங்கள் என்னிடம் அறிவுரை சொல்லியிருக்கின்றார்க்ள. அவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஒரு டீ வாங்கிக் கொடுப்பேன்.

ஒன்னு செய்யலாம் திருமண விழாவில் கூட விருந்துக்குப் பதிலாக டீ விருந்து வைத்தால் ஆரவாரமில்லாமல் ரொம்ப எளிமையாகப் போய்விடும். செலவும் மிச்சம்தானே..?
யாருடைய திருமணத்தில் அப்படி நடக்கப்போகிறதோ?

திருமணம்

திருமணம்னு சொன்னவுடன்தான் ஞாபகத்திற்கு வருகின்றது அடுத்த மாதம் சென்னையில் நண்பர் செய்யதலியின் திருமணம்.

நெருங்கிய நண்பர்களின் திருமணம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. அந்த திருமணக் கொண்டாட்டங்களில் நடைபெறுகின்ற கேலி ,கிண்டலக்ள் எப்பொதும் எனக்குப் பிடித்தமானவ.

நண்பர்களின் திருமணங்களில் போட்டோ எடுக்கும்பொழுது "டேய் கடைசியா ஒருமுறை சிரிச்சிக்கடா" என்று சொல்லி அங்குள்ளவர்களை கலகலப்பாக்குவது போன்ற சின்ன சின்ன சேட்டைகள் செய்வேன். சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற எனது நண்பனின் திருமணத்தில் போட்டோ எடுக்கப்படும்பொழுது நான் என்னுடைய மொபைலில் பதிந்து வைத்திருந்த "மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி" ங்கிற பாட்டை படிக்க வைக்க நண்பனுக்கு சிரிக்கவா, அழவா எனத் தெரியவில்லை.. "டேய் ஆப் பண்ணுடா" என்று அவனுடைய கெஞ்சலான பார்வையில் பரிதாப்பட்டு அணைத்துவிட்டேன்

அதுபோல சென்ற மாதம் கேரளாவில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் போட்டோ எடுக்கும்பொழுது நண்பனின் இடுப்பில் கிள்ளி கிள்ளி விட நண்பன் சிரித்துக்கொண்டே இருந்தான். போட்டோ எடுப்பவர் எரிச்சலாகி கொஞ்சம் சிரிக்காம நில்லுங்க சார் என்க அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

நான் போட்டோ எடுக்கும்பொழுது அமைதியாய் நின்ற திருமணம் என் திருமணமாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் நான் திருமணப்பரிசாக புத்தகங்கள் தான் கொடுப்பேன். குழந்தைப் பராமரிப்பு - வாழ்க்கைத் தத்துவம் - மன அமைதிக்கான புத்தகங்கள் - பொது அறிலுச் சம்பந்தப்பட்டவைகள் - போன்ற மிகவம் தேவையான புத்தகங்களைத்தான் பரிசளிப்பேன்.

புத்தகம்

புத்தகம் சிலரது வாழ்க்கையில் திருப்பு முனையாக கூட அமைந்திருக்கின்றது. எனக்கும் அப்படித்தான் பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் கல்லூரி அருகே உள்ள நூலகம் உள்ள அந்தச் சாலையின் திருப்பம்தான் என்னை புத்தகம் படிப்பதற்குத் தூண்டியது.

தற்பொழுது நான் வெளியிட எண்ணிக்கொண்டிருக்கும் துபாய் விழிப்புணர்வு புத்தகம்.

"26 ,விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய்" என்ற தலைப்பில் துபாய் பற்றிய விழிப்புணர்வு புத்தகம் வெளியிடுகின்ற முயற்சி தாமதமாகிக்கொண்டே இருக்கின்றது.

அதற்கென்று நேரம் ஒதுக்குவதற்கு நேரமே கிடைக்கவில்லை. நான் வெளியிடுவதற்குள் வைத்திருக்கின்ற தகவல்கள் காலாவதியாகிவிடக்கூடாது என்பதால் சீக்கிரம் வெளியிட்டுவிடவேண்டும். புத்தகத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என சில நண்பர்கள் பரிந்துரைத்திருக்கின்றார்கள். தலைப்பையும் மாற்றும் எண்ணத்தில் இருக்கின்றேன்.

அட்டைப்பட உதவிக்கு நண்பர் செய்யதலியை நாடினேன் அவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுகின்றது. அதற்கு எப்படியும் நான் வரக்கூடும். அப்பொழுது அவனை "ஏண்டா லேட்டாக்குறேன்னு ஒரு பிடி பிடிச்சிறலாம்." ஆனா அவனோ "எனக்கு கல்யாணமாகிவிட்டது இனிமே டைம் இல்லைடா பிஸின்னு" சொல்லிருவான்னோன்னு பயமா இருக்கு..பார்ப்போம் ...ஆனா எப்படியும் இன்னும் 2 மாதத்திற்குள் வெளியிடவேண்டும் என்ற உறுதியில் இருக்கின்றேன்

எத்தனை பிரதிகள் அச்சடிக்க யாரை வைத்து வெளியிட? ஏன்பது போன்ற தீர்மானங்கள் எல்லாம் எடுத்தாகிவிட்டது. புத்தகம்தான் இன்னமும் ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை. தகவல்களை ஒன்றாக வரிசைப்படுத்தினால் உடனே வெளியிட்டு விடலாம்.வெளியிட்டு யாரை அழைக்கலாம் என்றும் அவரைப்பற்றிய கவிதையும் கூட தயாராகிவிட்டது.


கவிதை


விதை என் மூச்சோடு கலந்நது. இறக்கும் தருவாயில் கூட நான் கவிதை எழுதிக்கொண்டே இறக்க வெண்டும் என்று கிறுக்குத்தனமாகவெல்லாம் வசனம் பேச மாட்டேன்.

நான் கவிதைகளை அனுபவங்களிலிருந்து எழுதுகின்றேன். முதலில் எனக்குப் பிடித்தால்தான் கவிதையை மற்றவர்கள் பார்வைக்கு வெளியிடுவேன். எனக்குப் பிடிக்காத கவிதைகள் நிறைய எழுதி நோட்டுப்புத்தகத்திலையே தூங்குகின்றது.

எனக்கு கவிதை எழுதக் கற்றுக்கொடுத்தது சதக்கத்துல்லாஅப்பா கல்லூரியின் அனுபவங்கள்தான். என்னுடைய சீனியர் மாணவர் மதார் என்பவர்தான் என்னுடைய நோட்டுப்புத்தகத்தின் கடைசி பக்க கவிதையைக் கண்டு ரசித்து என்னை தமிழ் ஆசிரியர் பேராசியர் இராமையா அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அப்புறம் கல்லூரியில் நடக்கின்ற போட்டிகள் மாநில அளவிலான போட்டிகள் பல்கலைககழகத்தில் நடக்கும் போட்டிகள் என்று கவிதைகளோடு திரிய ஆரம்பித்தேன். வைரமுத்துவின் கவிதைகளை அதிகம் விரும்பி அதுபோலவே எழுத விரும்பினேன்.

காதல் கவிதைகள் எழுதிக் கேட்கின்ற நண்பர்களுக்கு கவிதை எழுதிக்கொடுத்து கொடுத்தே என் கைகளும் என் இதயமும் காயப்பட்டுப் போனது இல்லை இல்லை காதல்பட்டுப் போனது.

அவனவன் எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கின்றான் ஆனால் நான் இன்னமும்

மாநில அளவில் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்று எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கையால் பரிசுப்பெற்றது,

என் கவிதையைக் கல்லூரி இதழில் கண்டு வைரமுத்துவினால் பாராட்டுப் பெற்றது,

நண்பனுடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிட்டது போன்றவைகளைத்தான் நான் இன்னமும் சாதனையாகச் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்.

கல்லூரிக் காலங்களில் அனைத்து பத்திரிக்கைகளிலும் சம்பளம் வாங்காத நிருபராக வேலை பார்த்தேன் எனலாம். நிறைய நிறைய பேட்டிகள் எடுத்து அனுப்பிக்கொண்டே இருப்பேன்

அதன் பிறகு துபாய் சென்ற பிறகு பத்திரிக்கைகளோடு தொடர்பு அறுந்து போனது. இந்நிலையில்தான் அன்புடன் புகாரி மூலம் அன்புடன் என்ற இணையக் குழமம் அறிமுகம் கிடைத்தது. நிலாச்சாரல் இணையதளம்தான் என் கவிதைகளை தொடர்ந்து பிரசுரித்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தது.

அதன் பிறகு நிலவு நண்பன் என்ற வலைப்பூ ஆரம்பித்த பிறகு அதில் எழுதவேண்டும் என்பதற்காகவே நிறைய நிறைய எழுதினேன்.

கவிதைக்கான பாராட்டுக்கள்தான் என்னை எழுத வைத்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று கூட நான் எனது ஊரில் வண்டியில் சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது பாரீன் ரிடர்ன் ஒருவர் "ரசிகவ் ரசிகவ்" என்று ஒருவர் அழைத்து "தூக்கம் விற்ற காசுகள் நீங்கதானே எழுதியது நல்லாயிருக்கு எனக்கு ஒரு பிரதி எடுத்து தருவீங்களா? வீட்டுல ஒட்டணும்" என்று சொன்னபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனா அந்தக் கவிதை ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிவிட்டாலும் நேற்றுதான் அவருக்கு கிடைத்தது போல.

கவிதைக்கு கீழே ரசிகவ்னு போட்டிருக்கே அது யாரு கொடுத்த பட்டம்னு அவரு கேட்டாரு


ரசிகவ்


தே கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டுவிட்டார்கள். நானும் பதில் சொல்லியே களைத்துவிட்டேன். என்னுடைய வலைப்பதிவில் கூட அதனைப்பற்றி எழுதியிருக்கின்றேன்.

நிறையபேர் கவிக்கோ அப்துல் ரகுமான் போல ரசிகவ் என்பதும் கவிதைத்துறைக்கு யாரோ கொடுத்த பட்டம் போல என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை.. ஞானியார் என்ற பெயர் நிறைய பேர் வாய்க்குள் நுழையவே மாட்டேன்கிறது. என்னுடைய கல்லூரிச் சான்றிதழில் கூட ஒரு அறிவு ஜீவி என்னுடைய பெயரை மொழிபெயர்த்து ஞானய்யர் என்று எழுதிவிட்டார்கள்.

அடப்பாவி பிரியாணி சாப்புடறவனை இப்படி அய்யர் ஆக்கிட்டீங்களடா என்று அவர்களிடம் சண்டை போட்டு என்னுடைய பெயர் ஞானியார் என்று மாற்றி இன்னொரு சான்றிதழ் வாங்க படாத பாடுபட்டேன்.

எங்கே யாரிடம்எனது பெயரைச் சொன்னாலும் என்ன ஜானியா.? ஜானியாரா? என்று பலவிதமான குழப்பங்கள்.

இதனால்தான் வேறு ஏதாவது புனைப்பெயரில் எழுதலாமென முடிவெடுத்து என்னுடைய அம்மா பெயரான ரசினா என்பதில் இருந்து ரசி என்ற முதல் இரண்டு எழுத்துக்களையும் அப்பா பெயரான கவ்பத்துல்லா என்பதில் இருந்து முதல் இரண்டு எழுத்துக்களான கவ் என்பதையும் இணைத்து ரசிகவ் ஆனேன்.

முதலில் எல்லாரும் குழம்பிப் போனார்கள். ஆனால் நாளடவைவில் ஞானியார் என்பதை விடவும் ரசிகவ் என்ற பெயரில்தான் இணையத்திலும் சிலரின் இதயத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றேன்.


பானிபட் இதயங்கள்


தயம் என்ற சொல்லை கிட்டத்ட்ட எல்லா கவிஞர்களும் உச்சரித்திருக்கக் கூடும். அல்லது எல்லா காதலர்களும் உச்சரித்திருக்கக் கூடும். இரண்டும் ஒன்றுதான். ஆனா உண்மையில் அதிகமா உச்சரித்திருப்பது யாருன்னு தெரியுமா..? இதய சம்பந்தப்பட்ட மருத்துவர்தான்ஙக.. :)

Photo Sharing and Video Hosting at Photobucket

சரி பானிபட் இதயங்களுக்கு வருகின்றேன். புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆசை விளையாட்டுத்தனமாகத்தான் ஆரம்பித்தது. நானும் நண்பர் ராஜாவும் ஒருநாள் திடீரென்று "டேய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புத்தகம் போட்டா என்ன?" என்று அவனுடைய ஹாஸ்டல் அறையில் வைத்து பேசினோம்.

புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்தப்பிறகு தலைப்பை நிர்ணயிக்க படாத பாடு பட்டோம்.

நிறைய பெயர் தேர்வு செய்து கொண்டு பேராசிரியர் மகாதேவனை அணுகி சார் புத்தகத்தின் தலைப்பை நீங்கதான் தேர்ந்தெடுக்கணும் என்று சொல்லி நிறைய பெயர் கூறினோம். அப்படி ஒவ்வொரு பெயராக சொல்லிக்கொண்டே வரும்பொழுதுதூன் நான் கூறிய பானிபட் இதயங்கள்னு வைப்போம்டா என்று கூறிய சாதாரணமான தலைப்பை "அட வித்தியாசமா இருக்கே" என்று ஆச்சர்யப்பட்டு அதனையே தேர்வு செய்தார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு ரோஜாப்பூ செடியில் இருந்து வெளியே வருகின்றது அதனை ஒரு வாள் வந்து வெட்டி அதிலிருந்து இரத்தம் வடிவது போல அட்டைப்படம். கண்களுக்கு குளிர்ச்சியான அட்டைப்படம். புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்க கலெக்டர் தனவேல் அவர்களை சந்தித்தோம்.

அவர் தலைப்பபையும் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் பார்த்துவிட்டு "இதுக்கு என்னப்பா அரத்தம்?" என்று கேட்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் ராஜாவைப் பார்த்து "நீயே சொல்லுடா" என்று தப்பித்து விட்டேன். அவனும் அதனை எதிர்பார்க்காமல் "இல்லைடா நீதான் தெளிவா சொல்லுவெ நீயே சொல்லுன்னு" என்னை மாட்டிவிட்டான். எங்களுக்கு என்ன சொல்வதென்னு தெரியவில்லை? ஆகவேதான் அப்படி முழித்தோம்.

"சார் ஒவ்வொருத்தர் இதயத்திலும் முளைக்கின்ற காதல்ன்ங்கிற ரோஜாவை சாதி மதம் பொருளாதாரம் போன்ற சமூகத்தின் யதார்த்த வாள்கள் வந்து வெட்டுவதால் காதல் காயப்படுகிறது என்று கூறினேன். ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் ஒரு பானிபட் யுத்தமே நடந்து கொண்டிருக்கின்றது அதனால்தான் அந்தப்பெயர்"என்க ரசித்துவிட்டு சொன்னார் "நான் கண்டிப்பா தலைமை தாங்குறேன்" என்று.. எப்படியோ எஸ்கேப் ஆயாச்சுப்பா..

புத்தக வெளியிடுவதற்காக 2 வருடம் கழித்து நான் படித்த அதே கல்லூரிக்கு சென்றது உற்சாகமாகவும் கல்லூரியின் முதல் புத்தகவெளியிட்டு விழா அதுதான் என்பதும் எங்களுக்கு பெருமையாக இருந்தது. விழாவில் நான் பழைய கல்லூரி ஞாபகங்களைப் பற்றியே கவிதை வாசித்தேன்.


நாங்கள்
கட் அடித்ததை
கண்டுகொள்ளாமல் விட்ட ஆசிரியருக்கும்
பிட் அடித்ததை
பார்த்து கண்டித்த ஆசிரியருக்கும்
நன்றி சொல்லியே ஆரம்பிக்கின்றேன்


என்று கவிதைவெளியிட்டு விழாவில் நான் வாசித்த பேச்சு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அதற்கு வாங்கி தைட்டல்கள் காதில் ஒலிக்க அப்படியே நான் கல்லுரி காலத்திற்குள் நுழைகின்றேன். ஆட்டோகிராப் எழுதிவிட்டு கலைந்து சென்றவர்கள் எல்லாம் ஞாபகம் வருகின்றார்கள்.

ஆட்டோகிராப்

ல்லா கல்லூரி மாணவர்களுக்குமே தாங்கள் படித்த காலம் பொக்கிஷமானது.எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அந்த நினைவகள் பசுமையாக இருக்கும்.
கல்லூரி இறுதிவிழாவில் அதிகமாக ஒலிக்கும் பாடல்

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடத் திரிந்த பறவைகளே


நிறைய பேர் காதலை இழந்திருப்பார்கள். ஆனால் நான் கல்லூரி ஆலமரத்தின் காற்றை இழந்திருக்கின்றேன். அந்த ஆலமரத்தின் விழுதுகளைப் போலவே அந்த ஞாபகங்கள் இதயத்தில் தொங்கிக் கொண்டே இருக்கின்றது.
Photo Sharing and Video Hosting at Photobucket

சமீபத்தில் "ஒரு கல்லுரியின் கதை" என்ற திரைப்படம் பார்க்க நேர்ந்தது. கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை திருமணம் என்று செட்டில் ஆனவர்கள் கோமா நிலையில் இருக்கும் நண்பன் ஒருவனைக் காப்பாற்ற அனைவரும் மறுபடியும் கல்லூரியில் வந்து படிப்பதுதான் கதை.

படம் ஓடுச்சோ இல்லையோ யாருக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ என்னை மிகவம் கவர்ந்தது. அது போல எனக்கும் மீண்டும் அதே மாணவர்களோடு கல்லூரியில் இருக்க ஆசை..ஆனால் காலத்திற்கு தெரியுமா என் கனவு..

ஆட்டோகிராப் எழுதினால் பிரிந்து விடுவோம் என்று சிலர் ஆட்டோகிராப் எழுதுவதில்லை. சிலர் கண்ணீரை மட்டுமே ஆட்டோகிராப்பாக தருவார்கள்.

நிறையபேர் எழுதுவார்கள் : "டேய் மச்சி மணஓலை அனுப்ப மறந்துவிடாதே" என்று ஆனா நான் நிறைய பேரை மறந்துட்டேன் பா..

நான் மிகவும் ரசித்த ஆட்டோகிராப் இது. கல்லூரி 3 வது மாடியில் இருந்து ஆட்டோகிராப் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்த தோழி திடீரென்று தன்னுடைய பேனாவை தவற விட்டுவிட்டாள். பின் என்னுடைய பேனாவை வாங்கி எழுதிவிட்டுச் சென்றாள். என்ன எழுதியிருந்தாள் தெரியுமா?

நழுவிப்போனது பேனா மட்டுமல்ல
நீ கூடத்தான்



பேனா


னக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களுள் ஒன்று பேனாவைத்த தொலைப்பது. பாதுகாக்க வேண்டும் இந்தப் பேனாவையாவது தொலைக்க கூடாது என்று கவனமாய் இருந்து இருந்தே தொலைத்துவிடுவேன். எப்படி தொலைகறது என்பதுதான் ஆச்சர்யமான விசயம். எவ்வளவு விருப்பமானவர்கள் தந்தாலும் சரி அந்தப் பேனாவை தொலைத்துவிடுவேன். அப்புறம் "ஒரு பேனாவை உருப்படியா வச்சிருக்கத் தெரியாதா?" என்று அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வேன


அதனைப்பற்றி ஒரு கவிதை கூட எழுதியிருக்கின்றேன். அதில் ஒரு வரி இப்படி வரும்

சாகும்வரை எந்தப்போனாவும் என்
சட்டைப்பைக்குள் இருந்ததாய்
சரித்திரமே இல்லை



நான்யாரிடமிருந்தாவது பேனாக்கள் சுட்டாலும் சரி, அழகிய பேனாக்களை கடையிலிருந்து வாங்கினாலும் சரி என்னிடம் அவைகள் நிலைக்க மறுக்கின்றது.
சில நேரம் யாரிடமாவது பந்தயம் கட்டிக்கொண்டு பேனாவை பாதுகாக்க நினைப்பேன். பந்தயத்திற்காக பேனா கொஞ்சம் அதிக நாட்கள் என்னுடைய பக்கொட்டில் நிலைத்திருக்கும் அப்புறம் எப்படியாவது தொலைந்துவிடும்..

ஆகவே என்னைச் சந்திப்பவர்களின் என்னிடம் பேனா இல்லையென்றால் உங்க பேனாவை கொடுத்துட்டுப் போங்க

நான் அழைக்க விரும்புபவர்கள் :

ஆசிப் மீரான்
ஜெஸிலா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும். அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 19, 2007

நான் டாக்டராவேன் அண்ணே

Photo Sharing and Video Hosting at Photobucket

பாருங்கள் இந்தப் பையனை..அப்பாவியாய் தோற்றமளிக்கின்றான் அல்லவா?

நேற்று மாலை நானும், எனது நண்பரும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ரெஸ்டாரெண்டின் வெளியே அமர்ந்து தேநீர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது இந்தச் சிறுவன் வந்து நின்றான்

அண்ணே அண்ணே ஒரே ஒரு பாக்கெட் வேர்க்கடலை பாக்கெட் வாங்கிக்கோங்கண்ணே..?

கைகளில் கூடையுடன் வேர்கடலை பாக்கெட்டுகளை கையில் வைத்து கெஞ்சினான்.

என்ன தம்பி நீ படிக்கிறியா? என்று கேட்டேன்

ஆமாண்ணே அண்ணே வாங்கிக்கோங்கண்ணே என்னிடம் விற்றுச் செல்வதிலையே குறியாக இருந்தான்.

சரிப்பா வாங்குறேன் பா.. பக்கத்தில் சில மருத்துவக் கல்லூரி மாணவர்களை பார்த்தபடியே என்னிடம் கேட்டான்

அண்ணே டாக்டர் படிக்கணும்னா எவ்வளவு செலவாகும்னே? அப்பாவியாய் கேட்டான்

நிறைய செலவாகும்பா..மாசம் 10000... ரூ வேணும்பா..

அட அவ்வளவுதானா நான் சம்பாதிச்சு படிக்கிறேன் என்று சொல்ல எனக்கு சிரிப்புதான் வந்தது. அவனது தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன்.

சரிப்பா நீ எங்கே படிக்கிறே..? உங்கப்பா என்ன பண்றாரு..?

எங்கப்பா மெட்ராஸில வேல பார்க்குறாரண்ணே.. பணமே அனுப்ப மாட்டாரு - வேதனையாய் சொன்னான்

நீ வேலை பார்க்குறியா படிக்கிறியா ? படிக்கலைன்னா உன்னை பக்கத்துல உள்ள பள்ளியில சேர்த்துவிடவா..?

இல்லைண்ணே நான் படிக்கிறேண்ணே..எங்கம்மாதான் படிக்க வைக்கிறாங்க..சாயங்காலம் வேர்க்கடலை விக்கிறேண்ணே..

இந்த சிறுவயதிலேயே வேலைக்கு வந்துவிட்டான்...பாவம்.. அவன் தொடர்ந்தான்.

அண்ணே! எனக்குத் தெரிஞ்சடாக்டர் ஒருத்தருக்கு கால் இல்லைண்ணே..இன்னொருத்தருக்கு உடம்பு சரியில்லை..ஏண்ணே டாக்டருக்கு கூட அப்படி ஆகுமா..? மறுபடியும் டாக்டர் பற்றிக் கேட்டான் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் புன்னகை ததும்பும் இதழ்களோடு சிறுவனின் உரையாடலை ரசித்தனர்..


டாக்டர் என்ன தெய்வமாடா..அவரும் மனுசன்தானே..அவருக்கும் சீழே விழுந்தா வலிக்கத்தானே செய்யும்

ம்..ஆமாண்ணே என்று தலையசைத்துக் கேட்டான்..

நானும் டாக்டருக்கு படிப்பேண்ணே.. நல்லா படிப்பேண்ணே என்று சொன்னான்.

அண்ணே! ஒரே ஒரு பாக்கெட் வாங்குங்கண்ணே! மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்தான்..

நான் உடனே ஒரு பாக்கெட் வாங்கினேன். பக்கத்தில் உள்ள நண்பனிடம் கொடுத்து உன்னோட டியுசன் கிளாஸ்ல யாராவர் நல்லா படிச்சாங்கண்ணா அவங்களுக்கு இதை கொடுத்திருடா என்றேன்..

அந்தச் சிறுவன் உடனே என்னிடம் அண்ணே கடலையை யாருக்குண்ணே கொடுக்குறீங்க..

அவங்க க்ளாஸ்ல படிக்க வர்றவங்களுக்கு பா.. என்று பக்கத்தில் உள்ள நண்பனைக் காட்டினேன்..

அப்படின்னா அவங்க கடலை கொடுக்கட்டும்..உங்களோட கேர்ள் ப்ரண்டோட நீங்க கடலை போடுங்க..

என்று திடீரென்று கூறிவிட்டான்..

நான் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்தில் உள்ள அனைவரும் சிரித்துவிட்டனர்.

பக்கத்தில் வேறு யாரோ கடலை கேட்டார்கள் என்று கொடுக்கச் சென்றான்.

டேய் டாக்டருக்கு படிக்கப்போறேன்னு சொல்றே..இப்படியெல்லாமாடா பேசுறது..இங்கே வாடா என்று அவனை அழைத்தேன்..

அவன் வந்தான்..

உன்னைய போட்டோ எடுத்து இந்தப் பையன் அசிங்கமா பேசுறான்னு பேப்பர்ல போடுறேன் பாரு.. என்று கேமிரா மொபைலை எடுத்து புகைப்படம் எடுக்க முயல

ஆமாண்ணே! போடுங்கண்ணே எல்லாருக்கும் தெரியட்டும் என்று அவன் அழகாய் போஸ் கொடுக்க ஆரம்பித்தான்.

அவனுடைய புத்திசாலித்தனமாக பேச்சை ரசிக்க முடிந்தாலும் வயதுக்கு மீறிய இந்தப் பேச்சுக்கு காரணம் யார்? அவனுக்கு இதனைக் கற்றுக் கொடுத்தது யார்? சினிமாவா? சீரியலா?

யாராகவும் இருக்கட்டும் முதலில் அவனது குடும்பத்தையும் அவனையும் வழிநடத்த தவறி இந்த வயதிலையே அவன் வேலைக்கு வரக் காரணமான அவனது பொறுப்பற்ற தந்தைதான் இதற்கு முழுப்பொறுப்பு..

அண்ணே அண்ணே ப்ளீஸ்... ஒரு பாக்கெட் வாங்குங்கண்ணே

அங்கே தூரத்தில் யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருக்கின்றான் பாருங்கள்.. எனக்கு அவங்க அப்பா மீது கோபம் கோபமாக வந்தது...


- ரசிகவ் ஞானியார்

Friday, June 15, 2007

தலைக்கவச போட்டி முடிவு

சென்ற தொடரில் தலைக்கவச போட்டியினை அறிமுகப்படுத்தியிருந்தேன். சிறந்த பதில்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கவிஞர் புகாரி அவர்களிடம் ஒப்படைத்து இருந்தேன். இதோ அவரது முடிவினை வெளியிடுகின்றேன்.

பயனற்ற தலைக்கவசமும் ஒரு சிறந்த யோசனையும்

ரசிகவ் ஞானியார் வித்தியாசமானவர்தான். இவர் கதாநாயகனா அல்லது கலக்கல் மன்னனா என்று தெளிவாகச் சொல்லுவது சிரமம்தான். இவரின் கலக்கல் சேட்டைகளிலெல்லாம் நிச்சயம் ஒரு கதாநாயகன் ஒளிந்திருப்பான். இவரின் சீர்திருத்தக் கவிதைகளிலும்கூட ஒரு கலக்கல் மன்னன் பதுங்கி இருப்பான். இப்படி வித்தியாசமான ரசிகவ் வித்தியாசமான போட்டி வைத்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எதை வேணும்னாலும் சொல்லுங்கப்பா, ஆனால் தெளிவாச் சொல்லுங்க. ஆமாவா? இல்லையா? இந்தப்பக்கமா தலையை ஆட்றீங்களா, இல்லே அந்தப் பக்கமா தலையை ஆட்றீங்களா, இதென்ன ஒண்ணுமே புரியாம ஒரு தலைச்சுற்றாடல்? தலைக்கவச விசயத்தில் இப்படித்தான் ஆட்டி வைத்திருக்கிறது அரசு.

ஆமாம், அரசுகூட நம்ம ரசிகவ் ஞானியார் போலத்தான். உயிர்ப் பாதுகாப்புப்
பணியிலும் ஒரு கலக்கல் நகைச்சுவை. ஆகவே ரசிகவை இது வெகுவாக
ஈர்த்திருக்கும்தான். உடனே போட்டி வைத்துவிட்டார். ஆனால் என்னிடம் வந்து இந்தப் போட்டிக்கு ஒரு முடிவு சொல்லுங்க என்று கேட்டுவிட்டாரே. எனக்கு இப்போது என்ன கவசம் தேவை?

அந்தக் கால மன்னர்களைப் பார்த்திருப்பீர்கள். தலையில் உறுதியான இரும்புக்கவசம் அணிந்து போர் புரிவார்கள். எதிரியின் கூர்மையான வாள்வீச்சுகள் அந்தக் கவசங்களால் தோற்றுப்போகும். இன்றைய போர் வீரர்களும் தலைக்கவசம் அணியாமல் போருக்குச் செல்வதில்லை. நிலக்கரிச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் பணிபுரிவோரைக் கண்டிருப்பீர்கள். அவர்களின் தலைக்கவசம், விபத்துக்களிலிருந்து அவர்களின் உயிர்களைக் காக்கின்றன. இப்படியாய் கட்டிடப் பணியாளர்கள், தீயணைப்புப் படையினர், சில விளையாட்டு வீரர்கள், சில தொழிலாளர்கள் என்று பலருக்குமான தலைக்கவசத்தின் தேவையைச் சொல்லிப் புரியவைக்கத் தேவையில்லை.

இதே போலத்தான் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோருக்கும் தலைக்கவசம் என்பது மிகவும் அவசிமான ஒன்று என்று அறிவியலாளர்களும் பாதுகாப்புத் துறையினரும் சொல்கிறார்கள்.

ஆனாலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிக்களுக்குக் கட்டாயம் தலைக்கவசம்
வேண்டுமா என்று விவாதம் பல காலம் முன்பே தொடங்கிவிட்டது. சர்தார்ஜிகள் ஏற்கனவே தலைக்கவசத்தோடு செல்வதால், எங்களுக்குத் தேவையில்லை என்று லண்டனிலேயே மறுத்துவிட்டார்கள். முதலில் வேண்டும் என்று சொன்ன தமிழக அரசு இப்போது ஏதோ ஆலோசிக்கின்ற ரீதியில் பேசினால், வாங்கிய தலைக்கவசங்களை
என்னதான் செய்வது? இதுதான் கேள்வி!

சுவையான பல பதில்கள் வந்து விழுந்திருக்கின்றன. எனக்குப் பிடித்தவற்றை
எடுத்து முதலில் அலசிப்பார்க்கிறேன். பிறகு எது சிறந்தது என்ற என்
தேர்வுக்குப் போகலாம்.

செல்வேந்திரன் என்பவர் பயன்படாத தலைக்கவசத்துக்கு இரண்டு பயன்பாடுகளைச் சொல்லி இருக்கிறார். ஒன்று வீட்டின் தேவைக்கான சிறந்தபயன்பாடு. இன்னொன்று, கலைநயத்தோடு அழகை ஆராதிக்கும் ஒரு பயன்பாடு. இரண்டுமே மிக நல்ல யோசனைகள்தான். "1. தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம். 2. செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்"

அக்கறையான யோசனைகள் தந்த செல்வேந்திரனைப் பாராட்டுகிறேன்.

மின்னுது மின்னல் என்பவரின் நகைச்சுவையை நான் ரசித்தேன். திருவோடாகப் பயன்படுத்தலாம். திருவோட்டின் தேவை நமக்கு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்துகிறார் போலும். இதே திருவோடு பயன்பாட்டை "ஜி" என்பவரும் சொல்லி இருக்கிறார். இந்த அங்கத நயத்தை ரசித்து இந்த இருவரையும் பாராட்டுகிறேன்.

ஜெஸிலாவின் யோசனைகளுள் சில அசத்துகின்றன. "குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மைக்குத் தூளியாக்கலாம்" என்ற கவிநயம் அப்படியே கற்பனையில் விரிந்து எண்ணத்தில் ஊஞ்சலாடுகிறது. "வழுக்க தலையில் கொசு கடிக்காம இருக்க கவசமா மாட்டிக்கிட்டு தூங்கலாம்". ரொம்ப அவசியங்க! ஆனால் நம்மூர் கொசுக்கள் எந்தக் கவசத்தையும் தாண்டி "சுறுக்"குன்னு ஊசி போட்டுடுமே! நல்ல நகைநயம்.
கவிநயம், நகைநயம் இரண்டையும் தந்த ஜெஸிலாவைப் பாராட்டுகிறேன்.

சிவா ஞானம்ஜி எழுதி இருப்பது சிந்திக்கத் தூண்டுகிறது. "பத்திரமா
வச்சிருங்க, மெருகு கலையாமே! இன்னும் ஆறு மாசத்திலே இதைவிட ஷ்ட்ராங்கா கோர்ட் ஆர்டர் போடும்; அரசு ஆணையும் வரும். அப்போ அதிகவிலைக்கு வித்துடலாம். (ட்ராபிக் ராமசாமி விடமாட்டாரில்லே)".
அரசு, லூட்டி அடிக்கணும்னு முடிவு செய்துவிட்டது. இன்னும் ஆறுமாதத்தில் இன்னொரு சட்டம் வராமலா போயிடும். எனவே அறிந்து செயல்படுங்கப்பா என்ற உபதேசம் அருமை.
அதோடு இவரின் வணிகக் கண்ணோட்டத்தைக் கண்டு இவரைத் தொழிலதிபர் ஆவதற்கான
வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லிப் பாராட்டத் தோன்றுகிறது.

சௌமியா ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதி இருப்பதை வாசிக்க என்
கண்களுக்குக் கவசம் தேவைப்பட்டது. இப்படியான மடல்களை
வாசிக்கும்போதெல்லாம் என் கண்கள் உடையும்தான். அன்பின் சௌமியா விரையில் யுனித்தமிழ் எழுதப் பழகுங்கள். ரசிகவ் உங்களுக்கு உதவுவார்.

தமிழர்களின் சாதுர்யங்களுள் ஒன்று வரம் தந்தவன் தலையிலேயே கைவைப்பது. வைத்திருக்கிறார் இறை நேசன். ஆனாலும் ரசிகவ், ஞானியாராச்சே. அதிகமாகச் சிரித்து இதுதான் சிறந்த நகைச்சுவை என்று ஆக்கிவிடுவார். அதையும் போட்டியில் சேர்த்துக்கொள்வார். பாராட்டுகிறேன் ரசிகவை.

சரி இப்போ பரிசை யாருக்குக் கொடுக்கலாம் சொல்லுங்க! நான் ஒரு
முடிவெடுத்துட்டேங்க. பரிசை "அபி அப்பா" வுக்குக் கொடுத்துடலாம். "உங்க பதிவை ஆழ்ந்து படிக்கும் எனக்கு பரிசாக நீங்க வாங்கின அந்த ஹெல்மெட்டை தரலாம்" என்ற இவரின் பதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

ஏன்?

இவர் மட்டும்தாங்க தலைக்கவசம் வேண்டும்னு சொல்லி இருக்கிறார். ரசிகவின் பதிவை ஆழ்ந்து வாசித்தபின் தீர்மானமே செய்துவிட்டார். தலைக்கவசம் உயிர்காக்க மிகவும் அவசியம். எனவே என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் பயன்படுத்துகிறேன் என்று திடமாகச் சொல்லிவிட்டார். ரசிகவின் கலக்கலுக்குள் ஒரு கதாநாயகத்தனம் இருக்கும் என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் இவர்தான் என்பேன்.

தலைக்கவசம் எத்தனை உயிர்களை எப்படியெல்லாம் காத்திருக்கின்றன என்ற பழைய சம்பவங்களை எல்லாம் தேடிப்பிடித்து வாசித்துப் பாருங்கள்.
ஆச்சரியப்படுவீர்கள். தலைக்கவசம் அவசியம் வேண்டும் என்று தீர்மானத்தை
உடனே எடுப்பீர்கள். அவற்றைப்பட்டியலிட்டு இந்த உரையை நீட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. பின் அது பெரிய நகைச்சுவையாய் ஆகிவிடும் :) ஆனாலும் குறிப்பாக சுருக்கமாக ஒன்றிரண்டு.

கீழே விழுந்த ஒருவனின் தலைக்கவசத்தில் இரண்டு மூன்று வெடிப்புகள் ஆனால் ஒரு காயமும் படாமல் தலைக்கவசம் அணிந்தவன் தப்பித்திருக்கிறான் என்ற ஒரு செய்தி வாசித்தேன். தலைக்கவசம் இல்லாமல் சென்றதால் தலையில் அடிபட்டு மூளை குழம்பிப்போய் பைத்தியமான கதை உண்டு. அப்படியே அந்தத் தளத்திலேயே மாண்டுபோன நிகழ்வுகளும் உண்டு.

ரசிகவ் தன் கட்டுரையில் ஓரிடத்தில் சொல்கிறார் "தலைக்காயங்கள் சம்பந்தமாக மருத்துவருக்கு வருமானம் இனிமேல் குறையக்கூடும்" இதில் உள்ள உட்கருத்து எத்தனை ஆழமானது. இந்த நகைச்சுவைக்குள் உள்ள அக்கறை எத்தனை உயர்வானது?

"ஹெல்மெட் அணிவதால் வியர்வை வழிந்து முடி கெட்டுப்போய்விடும் என்கிறார்கள், அட, விழுந்தால் முளைக்கின்ற முடிக்கு படுகின்ற கவலையை அவர் உயிருக்கு படுவதாய்த் தெரியலை" இப்படி ரசிகவ் எழுதி இருப்பதைத்தான் அபி அப்பா ஆழ்ந்து வாசித்ததாகச் சொல்கிறார் என்று கொள்கிறேன்.

"அணியாதவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று அரசு சொன்னது
கோமாளித்தனம் அல்ல. மக்கள் மீதுள்ள கருணை. காவல்துறையிலுள்ள
சில்லறைத்தனமான சிலரின் அடாவடிகள் குவிந்துவிடக்கூடாது என்ற மக்கள் நலன்.

அரசின் எண்ணம் மிகவும் தெளிவு. பயன்படுத்திப் பழகாத தமிழக மக்களைப்
பயன்படுத்தச் செய்வோம். ஆனால் அதை ஒரு அடக்குமுறையாகச் செய்யாமல் படிப்படியாய் ஒரு கல்வியாய்ச் செய்வோம் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.

சிறப்பான பதில் தந்த "அபி அப்பா" அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அன்புடன் புகாரி

--------------------------------------------------


- ரசிகவ் ஞானியார்

Sunday, June 03, 2007

ஒரு வித்தியாசமான போட்டி

நம்ம வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டி

தலைக்கவசம் வாங்கணும்னு சொன்னாங்க..அவசரம் அவசரமா எல்லாரும் வாங்கிட்டாங்க...இப்ப தலைக்கவசம் மாட்டாதவர்களை வற்புறுத்தவேண்டாம்னு ஒரு குழப்பமான அறிக்கையை கொடுத்து தேவையில்லைன்னு சொல்லாமல் சொல்லியிருக்காங்க..

சரி இப்ப வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டி :

இப்ப வாங்கிய தலைக்கவசத்தை, நாம் உபயோகிக்கும்படி எப்படி மாற்றிக்கொள்ளலாம்?

வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு அளிக்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் சார்பாக புத்தகம் வாங்குபவர்கள் தமிழ்நாட்டிற்குள் இருக்க வேண்டும்.

நகைச்சுவையாக எழுதுங்கள் இறுதி நாள் : 10-06-2007

- ரசிகவ் ஞானியார்

தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்

கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டமஅமுலுக்கு வந்துவிட்டது.நானும் இந்தச் சட்டம் எப்படியாவது தள்ளுபடியாகிவிடும் என்றுதான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.

ஹெல்மெட் வாங்கியபிறகு இந்தச் சட்டத்தை தள்ளுபடி செய்துவிட்டால் அப்புறம் வாங்கி வீணாகிவிடுமே என்று நினைத்தேன். ஆனால் வாங்க வைத்துவிட்டார்கள். நான் மட்டுமல்ல நிறையபேர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்று ரோட்டோர பிளாட்பாரங்களில ஹெல்மெட் வாங்க மொய்த்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன்.

இனிமேல் அனைவருமே மொட்டையாகச் சுற்றப்போகின்றோம். யார் என்ன ஹேர்ஸ்டைல் வைத்திருந்தாலும் சரி மொட்டைதான். இனிமேல் முடி காற்றில் பறக்க ஸ்டைல் காட்ட முடியாதே என்றுதான் பல இளைஞர்கள் கவலைப்படுகின்றார்கள். பெண்களும் அப்படித்தான் கூந்தலுக்கு 1 மணிநேரம் செலவழித்து செய்கின்ற மேக்கப் எல்லாம் பேக்கப் ஆகிவிடும் என்று கவலைப்படுகின்றார்கள்.

முடிபறக்க பைக்கில் பந்தாவாக செல்ல வேண்டுமானால் ஹெல்மெட்டுக்கு மேலே நாம் விரும்பும் விக் வைத்துக் கொள்ளலாம்.

கொள்ளைக்காரர்கள் மற்றும் ஆட்களைத் தாக்கிவிட்டு ஓடுபவர்களுக்கெல்லாம் ஒரே குஷிதான். பின்னே..? இனிமேல் எல்லாரும் ஒரே மாதிரி மொட்டைத்தலையுடன் சுற்றும்பொழுது இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கின்றதே?

இனிமேல் எதிரில் வருபவர்கள் யாருன்னு கண்டுபிடிப்பது சிரமம்தான். வேணுமுன்னா ஒண்ணு பண்ணலாங்க..

ஒவ்வொரை ஊரையும் கடக்கும்பொழுது செல்பொனில் நெட்வொர்க் உள்ள அந்தந்த ஊரின் பெயர் வருமே அதுபோல ஹெல்மெட்டிலும சென்ஸார் பொருத்திவிடவேண்டும். நமக்குத் தெரிந்தவர்கள் எதிரில் வரும்பொழுது நமது ஹெல்மெட்டில் விளக்கு எரியவேண்டும் அல்லது இந்த ஆள் வருகிறார் ( Display Screen) என்று காண்பிக்க வேண்டும். உடனே நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த ஐடியாவை பயன்படுத்தி யாரும் புதிய ஹெல்மெட் கண்டுபிடிச்சாங்கன்னா எனக்கு ராயல்டி வாங்கித் தாங்கப்பா.

Photo Sharing and Video Hosting at Photobucket
நான் இரண்டு நாட்கள் முன்புதான் ஹெல்மேட் வாங்கினேன். கறுப்பு நிற ஹெல்மெட்டில் நீல நிறத்தில் நெருப்பு எரிவதைப்போன்ற படம் இருக்கும். ஆனால் ஹெல்மெட்டைப் பாதுகாக்க பூட்டும் வாங்கணும். பின்னே எங்கே போனாலும் கையில் தூக்கி வைத்துக்கொண்டு போக முடியாது. இப்பொழதே சில இடங்களில் ஹெல்மெட்டை பூட்டியோ பூட்டாமலோ வைத்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல என்று பார்க்கிங் பகுதிகளில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.


ஒரே வடிவத்தில் நிறைய ஹெல்மெட்டுக்கள் வலம் வருவதால் ஒவ்வொருவரும் அவர்களது ஹெல்மெட்டில் தங்களது பெயரை எழுதி வைத்துக்கொள்ளுங்களேன்.


முதல் நாளான நேற்று (01-06-07) ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லும்பொழுது எதிரில் வருகின்றவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்கின்றார்களா என்றே கவனிக்கத் தோன்றுகின்றது. எதிரில் வருகின்றவர்களும் அவ்வாறே கவனிக்கின்றார்கள்.

ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் வந்து எதிரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களை கண்டு கேலியாக சிரித்துக்கொண்டு செல்கின்றான்.

சிலர் 3 பேராக குடும்பத்தோடு பைக்கில் வந்தாலும் 3 பேரும் ஹெல்மெட் அணிந்து சட்டத்தை ஒழுங்காக பின்பற்றுகின்றார்கள்.


நிறைய காதலர்கள் இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பாங்க. இனிமேல் யாருக்கும் தெரியாமல் முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு காதலனின் பின்னால் அமரவேண்டியது இருக்காது ஒரு ஹெல்மெட் அணிந்தால் போதும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.

எப்பவாச்சும் விபத்து ஏற்பட்டது என்றால் தலையில் அடிபடாமல் தப்பிப்பதற்காக ஹெல்மெட் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு இட்டதெல்லாம் சரிதான். நடந்து செல்கின்ற எத்தனையோ பேர் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்ற செய்தி தினமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம். அப்படியென்றால் பாதசாரிகளுக்கும் ஹெல்மெட் அணியவேண்டும் என்று கட்டாயச் சட்டமிட்டால் நிறைய உயிரிழப்புக்களைத் தவிர்ககலாமே?

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்படியென்றால் சைக்கிளில் செல்பவர்களும் அணியவேண்டுமா?


மொட்டைத்தலை அல்லது முழுவதும் வழுக்கையாக உள்ளவர்கள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்க விரும்பினால் கறுப்பு கலரில் வண்ணம் அடித்து நெற்றியில் நீட்டிக்கொண்டிருக்கும்படி தொப்பியணிந்தால் போதும் போலிஸார்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிடலாம்.

தலைக்காயங்கள் சம்பந்தமாக மருத்துவருக்கு வருமானம் இனிமேல் குறையக்கூடும்
ஹெல்மெட் அணிவதால் வெயிலிலிருந்தும் கடன்காரர்களிடமிருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

இனிமேல் பைக்கில் செல்லும்பொழுது செல்போனில் பேசுபவர்களை காண முடியாது. இதனால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

யாரும் லிப்ட் கேட்க மாட்டார்கள். ( லிப்ட் கேட்பவர்கள் கைகளில் ஹெல்மெட் வைத்திருக்கவேண்டுமல்லவா?)


தயவுசெய்து செருப்புக் காலுடன் உள்ளே வரவேண்டாம் என்பது போல
தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்.
ஹெல்மெட்டை வாசலில் கழற்றி விடவும்.
ஹெல்மெட் திருடர்கள் ஜாக்கிரதை
போன்ற பலகைகளை எங்கெங்கும் காணலாம்.


ஹெல்மெட் அணிவதால் வியர்வை வழிந்து முடி கெட்டுப்போய்விடும் என்கிறார்கள்
அட விழுந்தால் முளைக்கின்ற முடிக்கு படுகின்ற கவலையை அவர் உயிருக்கு படுவதாய் தெரியலை

இன்று (03.06.07) பத்திரிக்கையில் ஹெல்மெட் அணியாதவர்களை இடையூறு செய்யவேண்டாம் என்று கருணாநிதி அறிவித்திருப்பதை இனிமேல் ஹெல்மெட் அணியவேண்டாம் என்று மக்கள் எடுத்துக்கொண்டார்கள். குழப்பமான அறிவிப்பு இது. தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

நான் இன்று ஹெல்மெட்டோடு வருவதை பார்த்து ஹெல்மெட் அணியாதவர்கள் இளக்காரத்துடன் பார்த்துச் செல்கின்றார்கள். "பார்த்தியா நீ பயந்து போய் சட்டத்திற்கு கட்டுப்படுகிறாய் நான் சட்டத்திற்கு கட்டுப்படவில்லை" என்கிற ரீதியில் அவர்களின் பார்வை இருக்கின்றது.

"என்னப்பா ஹெல்மெட் அணியவேண்டாம்னு சட்டம் வந்திட்டுதே நீ ஏன் இன்னமும் ஹெல்மெட்டுமன் அலைகின்றாய்?" என்று என்னிடம் எதிர்ப்படும் பெரிசுகள் எல்லாம் கேட்கின்றார்கள்.

என்னவோ போங்க இனிமேல் அனைவரும் தலைக்கணத்தோடு அலையவேண்டியதுதான்.


தலைக்கவசம் உங்கள் உயிர் காக்கும்
எங்கள் வயிறு காக்கும்

இப்படிக்கு

தலைக்கவசம் விற்பனையாளர்கள் சங்கம்

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு