Friday, June 15, 2007

தலைக்கவச போட்டி முடிவு

சென்ற தொடரில் தலைக்கவச போட்டியினை அறிமுகப்படுத்தியிருந்தேன். சிறந்த பதில்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கவிஞர் புகாரி அவர்களிடம் ஒப்படைத்து இருந்தேன். இதோ அவரது முடிவினை வெளியிடுகின்றேன்.

பயனற்ற தலைக்கவசமும் ஒரு சிறந்த யோசனையும்

ரசிகவ் ஞானியார் வித்தியாசமானவர்தான். இவர் கதாநாயகனா அல்லது கலக்கல் மன்னனா என்று தெளிவாகச் சொல்லுவது சிரமம்தான். இவரின் கலக்கல் சேட்டைகளிலெல்லாம் நிச்சயம் ஒரு கதாநாயகன் ஒளிந்திருப்பான். இவரின் சீர்திருத்தக் கவிதைகளிலும்கூட ஒரு கலக்கல் மன்னன் பதுங்கி இருப்பான். இப்படி வித்தியாசமான ரசிகவ் வித்தியாசமான போட்டி வைத்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எதை வேணும்னாலும் சொல்லுங்கப்பா, ஆனால் தெளிவாச் சொல்லுங்க. ஆமாவா? இல்லையா? இந்தப்பக்கமா தலையை ஆட்றீங்களா, இல்லே அந்தப் பக்கமா தலையை ஆட்றீங்களா, இதென்ன ஒண்ணுமே புரியாம ஒரு தலைச்சுற்றாடல்? தலைக்கவச விசயத்தில் இப்படித்தான் ஆட்டி வைத்திருக்கிறது அரசு.

ஆமாம், அரசுகூட நம்ம ரசிகவ் ஞானியார் போலத்தான். உயிர்ப் பாதுகாப்புப்
பணியிலும் ஒரு கலக்கல் நகைச்சுவை. ஆகவே ரசிகவை இது வெகுவாக
ஈர்த்திருக்கும்தான். உடனே போட்டி வைத்துவிட்டார். ஆனால் என்னிடம் வந்து இந்தப் போட்டிக்கு ஒரு முடிவு சொல்லுங்க என்று கேட்டுவிட்டாரே. எனக்கு இப்போது என்ன கவசம் தேவை?

அந்தக் கால மன்னர்களைப் பார்த்திருப்பீர்கள். தலையில் உறுதியான இரும்புக்கவசம் அணிந்து போர் புரிவார்கள். எதிரியின் கூர்மையான வாள்வீச்சுகள் அந்தக் கவசங்களால் தோற்றுப்போகும். இன்றைய போர் வீரர்களும் தலைக்கவசம் அணியாமல் போருக்குச் செல்வதில்லை. நிலக்கரிச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் பணிபுரிவோரைக் கண்டிருப்பீர்கள். அவர்களின் தலைக்கவசம், விபத்துக்களிலிருந்து அவர்களின் உயிர்களைக் காக்கின்றன. இப்படியாய் கட்டிடப் பணியாளர்கள், தீயணைப்புப் படையினர், சில விளையாட்டு வீரர்கள், சில தொழிலாளர்கள் என்று பலருக்குமான தலைக்கவசத்தின் தேவையைச் சொல்லிப் புரியவைக்கத் தேவையில்லை.

இதே போலத்தான் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோருக்கும் தலைக்கவசம் என்பது மிகவும் அவசிமான ஒன்று என்று அறிவியலாளர்களும் பாதுகாப்புத் துறையினரும் சொல்கிறார்கள்.

ஆனாலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிக்களுக்குக் கட்டாயம் தலைக்கவசம்
வேண்டுமா என்று விவாதம் பல காலம் முன்பே தொடங்கிவிட்டது. சர்தார்ஜிகள் ஏற்கனவே தலைக்கவசத்தோடு செல்வதால், எங்களுக்குத் தேவையில்லை என்று லண்டனிலேயே மறுத்துவிட்டார்கள். முதலில் வேண்டும் என்று சொன்ன தமிழக அரசு இப்போது ஏதோ ஆலோசிக்கின்ற ரீதியில் பேசினால், வாங்கிய தலைக்கவசங்களை
என்னதான் செய்வது? இதுதான் கேள்வி!

சுவையான பல பதில்கள் வந்து விழுந்திருக்கின்றன. எனக்குப் பிடித்தவற்றை
எடுத்து முதலில் அலசிப்பார்க்கிறேன். பிறகு எது சிறந்தது என்ற என்
தேர்வுக்குப் போகலாம்.

செல்வேந்திரன் என்பவர் பயன்படாத தலைக்கவசத்துக்கு இரண்டு பயன்பாடுகளைச் சொல்லி இருக்கிறார். ஒன்று வீட்டின் தேவைக்கான சிறந்தபயன்பாடு. இன்னொன்று, கலைநயத்தோடு அழகை ஆராதிக்கும் ஒரு பயன்பாடு. இரண்டுமே மிக நல்ல யோசனைகள்தான். "1. தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம். 2. செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்"

அக்கறையான யோசனைகள் தந்த செல்வேந்திரனைப் பாராட்டுகிறேன்.

மின்னுது மின்னல் என்பவரின் நகைச்சுவையை நான் ரசித்தேன். திருவோடாகப் பயன்படுத்தலாம். திருவோட்டின் தேவை நமக்கு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்துகிறார் போலும். இதே திருவோடு பயன்பாட்டை "ஜி" என்பவரும் சொல்லி இருக்கிறார். இந்த அங்கத நயத்தை ரசித்து இந்த இருவரையும் பாராட்டுகிறேன்.

ஜெஸிலாவின் யோசனைகளுள் சில அசத்துகின்றன. "குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மைக்குத் தூளியாக்கலாம்" என்ற கவிநயம் அப்படியே கற்பனையில் விரிந்து எண்ணத்தில் ஊஞ்சலாடுகிறது. "வழுக்க தலையில் கொசு கடிக்காம இருக்க கவசமா மாட்டிக்கிட்டு தூங்கலாம்". ரொம்ப அவசியங்க! ஆனால் நம்மூர் கொசுக்கள் எந்தக் கவசத்தையும் தாண்டி "சுறுக்"குன்னு ஊசி போட்டுடுமே! நல்ல நகைநயம்.
கவிநயம், நகைநயம் இரண்டையும் தந்த ஜெஸிலாவைப் பாராட்டுகிறேன்.

சிவா ஞானம்ஜி எழுதி இருப்பது சிந்திக்கத் தூண்டுகிறது. "பத்திரமா
வச்சிருங்க, மெருகு கலையாமே! இன்னும் ஆறு மாசத்திலே இதைவிட ஷ்ட்ராங்கா கோர்ட் ஆர்டர் போடும்; அரசு ஆணையும் வரும். அப்போ அதிகவிலைக்கு வித்துடலாம். (ட்ராபிக் ராமசாமி விடமாட்டாரில்லே)".
அரசு, லூட்டி அடிக்கணும்னு முடிவு செய்துவிட்டது. இன்னும் ஆறுமாதத்தில் இன்னொரு சட்டம் வராமலா போயிடும். எனவே அறிந்து செயல்படுங்கப்பா என்ற உபதேசம் அருமை.
அதோடு இவரின் வணிகக் கண்ணோட்டத்தைக் கண்டு இவரைத் தொழிலதிபர் ஆவதற்கான
வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லிப் பாராட்டத் தோன்றுகிறது.

சௌமியா ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதி இருப்பதை வாசிக்க என்
கண்களுக்குக் கவசம் தேவைப்பட்டது. இப்படியான மடல்களை
வாசிக்கும்போதெல்லாம் என் கண்கள் உடையும்தான். அன்பின் சௌமியா விரையில் யுனித்தமிழ் எழுதப் பழகுங்கள். ரசிகவ் உங்களுக்கு உதவுவார்.

தமிழர்களின் சாதுர்யங்களுள் ஒன்று வரம் தந்தவன் தலையிலேயே கைவைப்பது. வைத்திருக்கிறார் இறை நேசன். ஆனாலும் ரசிகவ், ஞானியாராச்சே. அதிகமாகச் சிரித்து இதுதான் சிறந்த நகைச்சுவை என்று ஆக்கிவிடுவார். அதையும் போட்டியில் சேர்த்துக்கொள்வார். பாராட்டுகிறேன் ரசிகவை.

சரி இப்போ பரிசை யாருக்குக் கொடுக்கலாம் சொல்லுங்க! நான் ஒரு
முடிவெடுத்துட்டேங்க. பரிசை "அபி அப்பா" வுக்குக் கொடுத்துடலாம். "உங்க பதிவை ஆழ்ந்து படிக்கும் எனக்கு பரிசாக நீங்க வாங்கின அந்த ஹெல்மெட்டை தரலாம்" என்ற இவரின் பதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

ஏன்?

இவர் மட்டும்தாங்க தலைக்கவசம் வேண்டும்னு சொல்லி இருக்கிறார். ரசிகவின் பதிவை ஆழ்ந்து வாசித்தபின் தீர்மானமே செய்துவிட்டார். தலைக்கவசம் உயிர்காக்க மிகவும் அவசியம். எனவே என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் பயன்படுத்துகிறேன் என்று திடமாகச் சொல்லிவிட்டார். ரசிகவின் கலக்கலுக்குள் ஒரு கதாநாயகத்தனம் இருக்கும் என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் இவர்தான் என்பேன்.

தலைக்கவசம் எத்தனை உயிர்களை எப்படியெல்லாம் காத்திருக்கின்றன என்ற பழைய சம்பவங்களை எல்லாம் தேடிப்பிடித்து வாசித்துப் பாருங்கள்.
ஆச்சரியப்படுவீர்கள். தலைக்கவசம் அவசியம் வேண்டும் என்று தீர்மானத்தை
உடனே எடுப்பீர்கள். அவற்றைப்பட்டியலிட்டு இந்த உரையை நீட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. பின் அது பெரிய நகைச்சுவையாய் ஆகிவிடும் :) ஆனாலும் குறிப்பாக சுருக்கமாக ஒன்றிரண்டு.

கீழே விழுந்த ஒருவனின் தலைக்கவசத்தில் இரண்டு மூன்று வெடிப்புகள் ஆனால் ஒரு காயமும் படாமல் தலைக்கவசம் அணிந்தவன் தப்பித்திருக்கிறான் என்ற ஒரு செய்தி வாசித்தேன். தலைக்கவசம் இல்லாமல் சென்றதால் தலையில் அடிபட்டு மூளை குழம்பிப்போய் பைத்தியமான கதை உண்டு. அப்படியே அந்தத் தளத்திலேயே மாண்டுபோன நிகழ்வுகளும் உண்டு.

ரசிகவ் தன் கட்டுரையில் ஓரிடத்தில் சொல்கிறார் "தலைக்காயங்கள் சம்பந்தமாக மருத்துவருக்கு வருமானம் இனிமேல் குறையக்கூடும்" இதில் உள்ள உட்கருத்து எத்தனை ஆழமானது. இந்த நகைச்சுவைக்குள் உள்ள அக்கறை எத்தனை உயர்வானது?

"ஹெல்மெட் அணிவதால் வியர்வை வழிந்து முடி கெட்டுப்போய்விடும் என்கிறார்கள், அட, விழுந்தால் முளைக்கின்ற முடிக்கு படுகின்ற கவலையை அவர் உயிருக்கு படுவதாய்த் தெரியலை" இப்படி ரசிகவ் எழுதி இருப்பதைத்தான் அபி அப்பா ஆழ்ந்து வாசித்ததாகச் சொல்கிறார் என்று கொள்கிறேன்.

"அணியாதவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று அரசு சொன்னது
கோமாளித்தனம் அல்ல. மக்கள் மீதுள்ள கருணை. காவல்துறையிலுள்ள
சில்லறைத்தனமான சிலரின் அடாவடிகள் குவிந்துவிடக்கூடாது என்ற மக்கள் நலன்.

அரசின் எண்ணம் மிகவும் தெளிவு. பயன்படுத்திப் பழகாத தமிழக மக்களைப்
பயன்படுத்தச் செய்வோம். ஆனால் அதை ஒரு அடக்குமுறையாகச் செய்யாமல் படிப்படியாய் ஒரு கல்வியாய்ச் செய்வோம் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.

சிறப்பான பதில் தந்த "அபி அப்பா" அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அன்புடன் புகாரி

--------------------------------------------------


- ரசிகவ் ஞானியார்

6 comments:

Sowmya said...

\\"நகைச்சுவையாக எழுதுங்கள் இறுதி நாள் : 10-06-2007"//

இதை குறிப்பிடாமலேயே இருந்திருக்கலாமே..!!

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றிங்க! நன்றிங்க!

நிலவு நண்பன் said...

//இதை குறிப்பிடாமலேயே இருந்திருக்கலாமே..!! //

பரிசு பெற்றவரின் பதிலில் நகைச்சுவை இல்லை என்கின்றீர்களா சௌமியா..? இருந்தாலும் தாங்கள் மன வருத்தப்பட்டிருந்தால் மன்னிக்க

Anonymous said...

Best wishes to Abi appa :) === ammu

நளாயினி said...

சுவிற்சலாந்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கே தலைக்கவசம் போட வேண்டும். 5 வயதுக் குழந்தைக்கு பாடசாலையில் தலைக்கவசத்தின் அதி முக்கியத்தவத்தை புரியவைப்பதற்கு காவல் துறையினரே பயிற்சி கொடுக்கிறார்கள். தலைக்கவசத்துள் வத்தகப்பழத்தை வைத்து கீழே எறிந்து காட்டுவர். தனிய ஒரு வத்தப்பழத்தை எடுத்த தரையில் போட்டுக்காட்டுவர். தலைக்கவசத்துள் வைத்த வத்தகப் பழம் உடையாது. தலைக்கவசத்துள் வைக்காமல் தரையில் போட்ட வத்தகப்பழம் உடைச்சு சுக்காகும். இது குழந்தைகள் மனதில் ஆழமாக வேர் ஊன்றுவதால் துவிச்சக்கர வண்டிக்கு தலைக்கவசமில்லாமல் யாருமே ஓடுவதில்லை.

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

தேன் கூடு