Tuesday, June 26, 2007

எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ


உமாநாத் என்ற விழியன் இந்த எட்டு விளையாட்டில் இழுத்துவிட்டு விட்டார். என்னைப்பற்றி நானே கூறுவதற்கு 8 விசயங்கள் போதுமா.? இருப்பினும் எட்டுக்குள் சுருக்கி வரைகின்றேன்.

அது என்ன எட்டு ஒரு 3 அல்லது 4 ன்னு வச்சிருக்க கூடாதா..? போங்கப்பா


டீ


ருத்துவரிடம் சென்று மருந்து வாங்கினால் சாப்பாட்டுக்கு முன்பா? இல்லை சாப்பாட்டுக்குப் பின்பா? என்று கேட்பது வழக்கம். அது போல என்னிடம் யாராவது "டீ சாப்படுறீங்களா" எனக் கேட்டால் , "டீ க்கு முன்பா அல்லது டீக்குப் பின்பா" என்றுதான் கேட்பேன். அந்த அளவிற்கு டீ பைத்தியம் நான்.

டீ இல்லையென்றால் நான் இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு என் அன்றாட வாழ்க்கை டீயோடு ஆரம்பித்து டீயோடுதான் முடியும்.

சாயா ,டீ, சுலைமானி, தேநீர், லிப்டன்; இப்படிபட்ட வார்த்தைகள் காதில தேனாய் வந்து பாயும் எனக்குள்..

யாருடன் எங்குவேண்டுமானாலும் எந்த நேரத்திலும் டீ குடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விடமாட்டேன். நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் சமையலறையில் சென்று டீ ஊற்றி வைக்கும் பாத்திரம் காலியாகி இருக்கின்றதா? அல்லது கொஞ்சூண்டேனும் டீ இருக்கிறதா? எனப்பார்த்து கொஞ்சூண்டு இருந்தால் அதனை சூடுசெய்து கேட்டு அடம்பிடிப்பேன்.

"இந்த நேரத்தில் டீயா" என்ற வசனத்தை என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கின்றார்கள். நேரம் காலம் எல்லாம் பார்க்கமாட்டேன் டீ குடிப்பதற்கு.

காலையில் டீ குடித்தபிறகு டீ குடிப்பேன். பிறகு டீ குடித்தபிறகும் டீ குடிப்பேன்.

சாலையில் நெருங்கிய நண்பனோ அல்லது நெருக்கமில்லாத நண்பனோ, யாராயினும் "வாடா டீ சாப்பிடலாம்" என்றுதான் வார்த்தைகளே ஆரம்பிக்கும்.

கல்லூரியில் படிக்கும்பொழுதும் அப்படித்தான். பீரியடுகளின் இடைவெளியில் டீ சாப்பிட்டு வருவோம். மாலையில் பேருந்துக்காக காத்திருக்கும்பொழுது ஒன்று. பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஒன்று. அப்புறம் வீட்டுக்குச் சென்று ஒன்று..

பரிட்சை நேரத்தில் என் அம்மா ஒரு ப்ளாஸ்க்கில் டீ போட்டுத் தருவார்கள். அதை முழுவதும் குடிக்கின்றனோ? இல்லையோ? அதனைப் பார்த்துக் கொண்டே படித்து விடுவேன். குருப் ஸ்டடி நேரத்தில் பொழுது இரவில் 1 மணிநேரத்திற்கு ஒரு தடவை பேருந்து நிலையம் வரை சென்று டீ குடித்துவிட்டு வருவோம்.

நான் துபாயில் இருக்கும்பொழுது இங்கிருப்பதை விடவும் அதிகமாக டீ குடிப்பேன் .

திறந்த வெளி ரெஸ்டாரெண்டில் நண்பர்கள் ஒவ்வொருவராக கூடுவோம் ஒவ்வொருவர் கூடும்பொழுதும் அனைவருக்கும் டீ.
இப்படித்தான் ஒரு தடவை 4 அல்லது 5 டீ குடித்திருப்போம் நீண்ட நேரம் இருந்துவிட்டோம். சர்வர் வந்து, " நேரமாச்சு அடுத்த கஸ்டமர் வரவேண்டாமா? எழுந்திருங்க.." என்று சொன்னபொழுது "சரி அப்படின்னா எல்லாருக்கும் இன்னொரு டீ கொண்டு வாங்க" என்று சொல்ல கடுப்பில் சென்றுவிட்டான்..

எதற்காக இப்படி மெனக்கெட்டு டீயைப்பற்றி திரும்ப திரும்ப சொல்கிறேன் என்றால். இதனை வாசிக்கும் நண்பர்கள் என்னைச் சந்திக்க நேரிட்டால் டீ வாங்கிக் கொடுத்துறுங்க..அல்லது என்னுடன் டீ சாப்பிட வாங்க..

அதிகமா டீ குடிக்காதீங்க உடப்புக்கு நல்லது இல்லை என்று நிறைய நல்ல உள்ளங்கள் என்னிடம் அறிவுரை சொல்லியிருக்கின்றார்க்ள. அவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஒரு டீ வாங்கிக் கொடுப்பேன்.

ஒன்னு செய்யலாம் திருமண விழாவில் கூட விருந்துக்குப் பதிலாக டீ விருந்து வைத்தால் ஆரவாரமில்லாமல் ரொம்ப எளிமையாகப் போய்விடும். செலவும் மிச்சம்தானே..?
யாருடைய திருமணத்தில் அப்படி நடக்கப்போகிறதோ?

திருமணம்

திருமணம்னு சொன்னவுடன்தான் ஞாபகத்திற்கு வருகின்றது அடுத்த மாதம் சென்னையில் நண்பர் செய்யதலியின் திருமணம்.

நெருங்கிய நண்பர்களின் திருமணம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. அந்த திருமணக் கொண்டாட்டங்களில் நடைபெறுகின்ற கேலி ,கிண்டலக்ள் எப்பொதும் எனக்குப் பிடித்தமானவ.

நண்பர்களின் திருமணங்களில் போட்டோ எடுக்கும்பொழுது "டேய் கடைசியா ஒருமுறை சிரிச்சிக்கடா" என்று சொல்லி அங்குள்ளவர்களை கலகலப்பாக்குவது போன்ற சின்ன சின்ன சேட்டைகள் செய்வேன். சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற எனது நண்பனின் திருமணத்தில் போட்டோ எடுக்கப்படும்பொழுது நான் என்னுடைய மொபைலில் பதிந்து வைத்திருந்த "மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி" ங்கிற பாட்டை படிக்க வைக்க நண்பனுக்கு சிரிக்கவா, அழவா எனத் தெரியவில்லை.. "டேய் ஆப் பண்ணுடா" என்று அவனுடைய கெஞ்சலான பார்வையில் பரிதாப்பட்டு அணைத்துவிட்டேன்

அதுபோல சென்ற மாதம் கேரளாவில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் போட்டோ எடுக்கும்பொழுது நண்பனின் இடுப்பில் கிள்ளி கிள்ளி விட நண்பன் சிரித்துக்கொண்டே இருந்தான். போட்டோ எடுப்பவர் எரிச்சலாகி கொஞ்சம் சிரிக்காம நில்லுங்க சார் என்க அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

நான் போட்டோ எடுக்கும்பொழுது அமைதியாய் நின்ற திருமணம் என் திருமணமாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் நான் திருமணப்பரிசாக புத்தகங்கள் தான் கொடுப்பேன். குழந்தைப் பராமரிப்பு - வாழ்க்கைத் தத்துவம் - மன அமைதிக்கான புத்தகங்கள் - பொது அறிலுச் சம்பந்தப்பட்டவைகள் - போன்ற மிகவம் தேவையான புத்தகங்களைத்தான் பரிசளிப்பேன்.

புத்தகம்

புத்தகம் சிலரது வாழ்க்கையில் திருப்பு முனையாக கூட அமைந்திருக்கின்றது. எனக்கும் அப்படித்தான் பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் கல்லூரி அருகே உள்ள நூலகம் உள்ள அந்தச் சாலையின் திருப்பம்தான் என்னை புத்தகம் படிப்பதற்குத் தூண்டியது.

தற்பொழுது நான் வெளியிட எண்ணிக்கொண்டிருக்கும் துபாய் விழிப்புணர்வு புத்தகம்.

"26 ,விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய்" என்ற தலைப்பில் துபாய் பற்றிய விழிப்புணர்வு புத்தகம் வெளியிடுகின்ற முயற்சி தாமதமாகிக்கொண்டே இருக்கின்றது.

அதற்கென்று நேரம் ஒதுக்குவதற்கு நேரமே கிடைக்கவில்லை. நான் வெளியிடுவதற்குள் வைத்திருக்கின்ற தகவல்கள் காலாவதியாகிவிடக்கூடாது என்பதால் சீக்கிரம் வெளியிட்டுவிடவேண்டும். புத்தகத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என சில நண்பர்கள் பரிந்துரைத்திருக்கின்றார்கள். தலைப்பையும் மாற்றும் எண்ணத்தில் இருக்கின்றேன்.

அட்டைப்பட உதவிக்கு நண்பர் செய்யதலியை நாடினேன் அவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுகின்றது. அதற்கு எப்படியும் நான் வரக்கூடும். அப்பொழுது அவனை "ஏண்டா லேட்டாக்குறேன்னு ஒரு பிடி பிடிச்சிறலாம்." ஆனா அவனோ "எனக்கு கல்யாணமாகிவிட்டது இனிமே டைம் இல்லைடா பிஸின்னு" சொல்லிருவான்னோன்னு பயமா இருக்கு..பார்ப்போம் ...ஆனா எப்படியும் இன்னும் 2 மாதத்திற்குள் வெளியிடவேண்டும் என்ற உறுதியில் இருக்கின்றேன்

எத்தனை பிரதிகள் அச்சடிக்க யாரை வைத்து வெளியிட? ஏன்பது போன்ற தீர்மானங்கள் எல்லாம் எடுத்தாகிவிட்டது. புத்தகம்தான் இன்னமும் ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை. தகவல்களை ஒன்றாக வரிசைப்படுத்தினால் உடனே வெளியிட்டு விடலாம்.வெளியிட்டு யாரை அழைக்கலாம் என்றும் அவரைப்பற்றிய கவிதையும் கூட தயாராகிவிட்டது.


கவிதை


விதை என் மூச்சோடு கலந்நது. இறக்கும் தருவாயில் கூட நான் கவிதை எழுதிக்கொண்டே இறக்க வெண்டும் என்று கிறுக்குத்தனமாகவெல்லாம் வசனம் பேச மாட்டேன்.

நான் கவிதைகளை அனுபவங்களிலிருந்து எழுதுகின்றேன். முதலில் எனக்குப் பிடித்தால்தான் கவிதையை மற்றவர்கள் பார்வைக்கு வெளியிடுவேன். எனக்குப் பிடிக்காத கவிதைகள் நிறைய எழுதி நோட்டுப்புத்தகத்திலையே தூங்குகின்றது.

எனக்கு கவிதை எழுதக் கற்றுக்கொடுத்தது சதக்கத்துல்லாஅப்பா கல்லூரியின் அனுபவங்கள்தான். என்னுடைய சீனியர் மாணவர் மதார் என்பவர்தான் என்னுடைய நோட்டுப்புத்தகத்தின் கடைசி பக்க கவிதையைக் கண்டு ரசித்து என்னை தமிழ் ஆசிரியர் பேராசியர் இராமையா அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அப்புறம் கல்லூரியில் நடக்கின்ற போட்டிகள் மாநில அளவிலான போட்டிகள் பல்கலைககழகத்தில் நடக்கும் போட்டிகள் என்று கவிதைகளோடு திரிய ஆரம்பித்தேன். வைரமுத்துவின் கவிதைகளை அதிகம் விரும்பி அதுபோலவே எழுத விரும்பினேன்.

காதல் கவிதைகள் எழுதிக் கேட்கின்ற நண்பர்களுக்கு கவிதை எழுதிக்கொடுத்து கொடுத்தே என் கைகளும் என் இதயமும் காயப்பட்டுப் போனது இல்லை இல்லை காதல்பட்டுப் போனது.

அவனவன் எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கின்றான் ஆனால் நான் இன்னமும்

மாநில அளவில் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்று எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கையால் பரிசுப்பெற்றது,

என் கவிதையைக் கல்லூரி இதழில் கண்டு வைரமுத்துவினால் பாராட்டுப் பெற்றது,

நண்பனுடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிட்டது போன்றவைகளைத்தான் நான் இன்னமும் சாதனையாகச் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்.

கல்லூரிக் காலங்களில் அனைத்து பத்திரிக்கைகளிலும் சம்பளம் வாங்காத நிருபராக வேலை பார்த்தேன் எனலாம். நிறைய நிறைய பேட்டிகள் எடுத்து அனுப்பிக்கொண்டே இருப்பேன்

அதன் பிறகு துபாய் சென்ற பிறகு பத்திரிக்கைகளோடு தொடர்பு அறுந்து போனது. இந்நிலையில்தான் அன்புடன் புகாரி மூலம் அன்புடன் என்ற இணையக் குழமம் அறிமுகம் கிடைத்தது. நிலாச்சாரல் இணையதளம்தான் என் கவிதைகளை தொடர்ந்து பிரசுரித்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தது.

அதன் பிறகு நிலவு நண்பன் என்ற வலைப்பூ ஆரம்பித்த பிறகு அதில் எழுதவேண்டும் என்பதற்காகவே நிறைய நிறைய எழுதினேன்.

கவிதைக்கான பாராட்டுக்கள்தான் என்னை எழுத வைத்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று கூட நான் எனது ஊரில் வண்டியில் சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது பாரீன் ரிடர்ன் ஒருவர் "ரசிகவ் ரசிகவ்" என்று ஒருவர் அழைத்து "தூக்கம் விற்ற காசுகள் நீங்கதானே எழுதியது நல்லாயிருக்கு எனக்கு ஒரு பிரதி எடுத்து தருவீங்களா? வீட்டுல ஒட்டணும்" என்று சொன்னபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனா அந்தக் கவிதை ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிவிட்டாலும் நேற்றுதான் அவருக்கு கிடைத்தது போல.

கவிதைக்கு கீழே ரசிகவ்னு போட்டிருக்கே அது யாரு கொடுத்த பட்டம்னு அவரு கேட்டாரு


ரசிகவ்


தே கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டுவிட்டார்கள். நானும் பதில் சொல்லியே களைத்துவிட்டேன். என்னுடைய வலைப்பதிவில் கூட அதனைப்பற்றி எழுதியிருக்கின்றேன்.

நிறையபேர் கவிக்கோ அப்துல் ரகுமான் போல ரசிகவ் என்பதும் கவிதைத்துறைக்கு யாரோ கொடுத்த பட்டம் போல என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை.. ஞானியார் என்ற பெயர் நிறைய பேர் வாய்க்குள் நுழையவே மாட்டேன்கிறது. என்னுடைய கல்லூரிச் சான்றிதழில் கூட ஒரு அறிவு ஜீவி என்னுடைய பெயரை மொழிபெயர்த்து ஞானய்யர் என்று எழுதிவிட்டார்கள்.

அடப்பாவி பிரியாணி சாப்புடறவனை இப்படி அய்யர் ஆக்கிட்டீங்களடா என்று அவர்களிடம் சண்டை போட்டு என்னுடைய பெயர் ஞானியார் என்று மாற்றி இன்னொரு சான்றிதழ் வாங்க படாத பாடுபட்டேன்.

எங்கே யாரிடம்எனது பெயரைச் சொன்னாலும் என்ன ஜானியா.? ஜானியாரா? என்று பலவிதமான குழப்பங்கள்.

இதனால்தான் வேறு ஏதாவது புனைப்பெயரில் எழுதலாமென முடிவெடுத்து என்னுடைய அம்மா பெயரான ரசினா என்பதில் இருந்து ரசி என்ற முதல் இரண்டு எழுத்துக்களையும் அப்பா பெயரான கவ்பத்துல்லா என்பதில் இருந்து முதல் இரண்டு எழுத்துக்களான கவ் என்பதையும் இணைத்து ரசிகவ் ஆனேன்.

முதலில் எல்லாரும் குழம்பிப் போனார்கள். ஆனால் நாளடவைவில் ஞானியார் என்பதை விடவும் ரசிகவ் என்ற பெயரில்தான் இணையத்திலும் சிலரின் இதயத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றேன்.


பானிபட் இதயங்கள்


தயம் என்ற சொல்லை கிட்டத்ட்ட எல்லா கவிஞர்களும் உச்சரித்திருக்கக் கூடும். அல்லது எல்லா காதலர்களும் உச்சரித்திருக்கக் கூடும். இரண்டும் ஒன்றுதான். ஆனா உண்மையில் அதிகமா உச்சரித்திருப்பது யாருன்னு தெரியுமா..? இதய சம்பந்தப்பட்ட மருத்துவர்தான்ஙக.. :)

Photo Sharing and Video Hosting at Photobucket

சரி பானிபட் இதயங்களுக்கு வருகின்றேன். புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆசை விளையாட்டுத்தனமாகத்தான் ஆரம்பித்தது. நானும் நண்பர் ராஜாவும் ஒருநாள் திடீரென்று "டேய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புத்தகம் போட்டா என்ன?" என்று அவனுடைய ஹாஸ்டல் அறையில் வைத்து பேசினோம்.

புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்தப்பிறகு தலைப்பை நிர்ணயிக்க படாத பாடு பட்டோம்.

நிறைய பெயர் தேர்வு செய்து கொண்டு பேராசிரியர் மகாதேவனை அணுகி சார் புத்தகத்தின் தலைப்பை நீங்கதான் தேர்ந்தெடுக்கணும் என்று சொல்லி நிறைய பெயர் கூறினோம். அப்படி ஒவ்வொரு பெயராக சொல்லிக்கொண்டே வரும்பொழுதுதூன் நான் கூறிய பானிபட் இதயங்கள்னு வைப்போம்டா என்று கூறிய சாதாரணமான தலைப்பை "அட வித்தியாசமா இருக்கே" என்று ஆச்சர்யப்பட்டு அதனையே தேர்வு செய்தார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு ரோஜாப்பூ செடியில் இருந்து வெளியே வருகின்றது அதனை ஒரு வாள் வந்து வெட்டி அதிலிருந்து இரத்தம் வடிவது போல அட்டைப்படம். கண்களுக்கு குளிர்ச்சியான அட்டைப்படம். புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்க கலெக்டர் தனவேல் அவர்களை சந்தித்தோம்.

அவர் தலைப்பபையும் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் பார்த்துவிட்டு "இதுக்கு என்னப்பா அரத்தம்?" என்று கேட்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் ராஜாவைப் பார்த்து "நீயே சொல்லுடா" என்று தப்பித்து விட்டேன். அவனும் அதனை எதிர்பார்க்காமல் "இல்லைடா நீதான் தெளிவா சொல்லுவெ நீயே சொல்லுன்னு" என்னை மாட்டிவிட்டான். எங்களுக்கு என்ன சொல்வதென்னு தெரியவில்லை? ஆகவேதான் அப்படி முழித்தோம்.

"சார் ஒவ்வொருத்தர் இதயத்திலும் முளைக்கின்ற காதல்ன்ங்கிற ரோஜாவை சாதி மதம் பொருளாதாரம் போன்ற சமூகத்தின் யதார்த்த வாள்கள் வந்து வெட்டுவதால் காதல் காயப்படுகிறது என்று கூறினேன். ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் ஒரு பானிபட் யுத்தமே நடந்து கொண்டிருக்கின்றது அதனால்தான் அந்தப்பெயர்"என்க ரசித்துவிட்டு சொன்னார் "நான் கண்டிப்பா தலைமை தாங்குறேன்" என்று.. எப்படியோ எஸ்கேப் ஆயாச்சுப்பா..

புத்தக வெளியிடுவதற்காக 2 வருடம் கழித்து நான் படித்த அதே கல்லூரிக்கு சென்றது உற்சாகமாகவும் கல்லூரியின் முதல் புத்தகவெளியிட்டு விழா அதுதான் என்பதும் எங்களுக்கு பெருமையாக இருந்தது. விழாவில் நான் பழைய கல்லூரி ஞாபகங்களைப் பற்றியே கவிதை வாசித்தேன்.


நாங்கள்
கட் அடித்ததை
கண்டுகொள்ளாமல் விட்ட ஆசிரியருக்கும்
பிட் அடித்ததை
பார்த்து கண்டித்த ஆசிரியருக்கும்
நன்றி சொல்லியே ஆரம்பிக்கின்றேன்


என்று கவிதைவெளியிட்டு விழாவில் நான் வாசித்த பேச்சு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அதற்கு வாங்கி தைட்டல்கள் காதில் ஒலிக்க அப்படியே நான் கல்லுரி காலத்திற்குள் நுழைகின்றேன். ஆட்டோகிராப் எழுதிவிட்டு கலைந்து சென்றவர்கள் எல்லாம் ஞாபகம் வருகின்றார்கள்.

ஆட்டோகிராப்

ல்லா கல்லூரி மாணவர்களுக்குமே தாங்கள் படித்த காலம் பொக்கிஷமானது.எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அந்த நினைவகள் பசுமையாக இருக்கும்.
கல்லூரி இறுதிவிழாவில் அதிகமாக ஒலிக்கும் பாடல்

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடத் திரிந்த பறவைகளே


நிறைய பேர் காதலை இழந்திருப்பார்கள். ஆனால் நான் கல்லூரி ஆலமரத்தின் காற்றை இழந்திருக்கின்றேன். அந்த ஆலமரத்தின் விழுதுகளைப் போலவே அந்த ஞாபகங்கள் இதயத்தில் தொங்கிக் கொண்டே இருக்கின்றது.
Photo Sharing and Video Hosting at Photobucket

சமீபத்தில் "ஒரு கல்லுரியின் கதை" என்ற திரைப்படம் பார்க்க நேர்ந்தது. கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை திருமணம் என்று செட்டில் ஆனவர்கள் கோமா நிலையில் இருக்கும் நண்பன் ஒருவனைக் காப்பாற்ற அனைவரும் மறுபடியும் கல்லூரியில் வந்து படிப்பதுதான் கதை.

படம் ஓடுச்சோ இல்லையோ யாருக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ என்னை மிகவம் கவர்ந்தது. அது போல எனக்கும் மீண்டும் அதே மாணவர்களோடு கல்லூரியில் இருக்க ஆசை..ஆனால் காலத்திற்கு தெரியுமா என் கனவு..

ஆட்டோகிராப் எழுதினால் பிரிந்து விடுவோம் என்று சிலர் ஆட்டோகிராப் எழுதுவதில்லை. சிலர் கண்ணீரை மட்டுமே ஆட்டோகிராப்பாக தருவார்கள்.

நிறையபேர் எழுதுவார்கள் : "டேய் மச்சி மணஓலை அனுப்ப மறந்துவிடாதே" என்று ஆனா நான் நிறைய பேரை மறந்துட்டேன் பா..

நான் மிகவும் ரசித்த ஆட்டோகிராப் இது. கல்லூரி 3 வது மாடியில் இருந்து ஆட்டோகிராப் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்த தோழி திடீரென்று தன்னுடைய பேனாவை தவற விட்டுவிட்டாள். பின் என்னுடைய பேனாவை வாங்கி எழுதிவிட்டுச் சென்றாள். என்ன எழுதியிருந்தாள் தெரியுமா?

நழுவிப்போனது பேனா மட்டுமல்ல
நீ கூடத்தான்பேனா


னக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களுள் ஒன்று பேனாவைத்த தொலைப்பது. பாதுகாக்க வேண்டும் இந்தப் பேனாவையாவது தொலைக்க கூடாது என்று கவனமாய் இருந்து இருந்தே தொலைத்துவிடுவேன். எப்படி தொலைகறது என்பதுதான் ஆச்சர்யமான விசயம். எவ்வளவு விருப்பமானவர்கள் தந்தாலும் சரி அந்தப் பேனாவை தொலைத்துவிடுவேன். அப்புறம் "ஒரு பேனாவை உருப்படியா வச்சிருக்கத் தெரியாதா?" என்று அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வேன


அதனைப்பற்றி ஒரு கவிதை கூட எழுதியிருக்கின்றேன். அதில் ஒரு வரி இப்படி வரும்

சாகும்வரை எந்தப்போனாவும் என்
சட்டைப்பைக்குள் இருந்ததாய்
சரித்திரமே இல்லைநான்யாரிடமிருந்தாவது பேனாக்கள் சுட்டாலும் சரி, அழகிய பேனாக்களை கடையிலிருந்து வாங்கினாலும் சரி என்னிடம் அவைகள் நிலைக்க மறுக்கின்றது.
சில நேரம் யாரிடமாவது பந்தயம் கட்டிக்கொண்டு பேனாவை பாதுகாக்க நினைப்பேன். பந்தயத்திற்காக பேனா கொஞ்சம் அதிக நாட்கள் என்னுடைய பக்கொட்டில் நிலைத்திருக்கும் அப்புறம் எப்படியாவது தொலைந்துவிடும்..

ஆகவே என்னைச் சந்திப்பவர்களின் என்னிடம் பேனா இல்லையென்றால் உங்க பேனாவை கொடுத்துட்டுப் போங்க

நான் அழைக்க விரும்புபவர்கள் :

ஆசிப் மீரான்
ஜெஸிலா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும். அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
- ரசிகவ் ஞானியார்

11 comments:

துளசி கோபால் said...

3 இல்லே 4 ன்னு இருக்கக்கூடாதுன்னு கேட்டுட்டு, இப்படி அட்டகாசமான எட்டைச்
சொல்லி இருக்கீங்க!!!!!!

அழைப்புக்கு நன்றிங்க.

உங்களோட அழைப்புதான் எட்டாவதா வந்துருக்கு. ச்சீக்கிரம் எழுதிறணும். இல்லாட்டி........

மாயக்கண்ணாடி said...

சும்மா சொல்லக்கூடாது
ரசிகவ் நீங்கள் போட்டது வித்தியாசமான எட்டு,கண்டிப்பா உங்களுக்கு லைசென்சு கிடைக்கும். மிகவும் அருமை

ஜெஸிலா said...

இப்ப எந்த எட்டில் இருக்கீங்க ரசிகவ்?
ரசிகவ் பெயர் காரணம் எழுதிட்டீங்க, ஞானியார் பெயர் காரணம்? ஞானியார் யார் வாயிலும் நுழையவில்லை என்பதற்காக மற்றவர்கள் சவுகரியத்திற்காக பெயரை மாற்றுவதை விட நம்ம பேரை பதிய வைக்கிறா மாதிரி ஏதேனும் செய்யணும். ;-)

நீங்களுமா என்னை எட்டில் மாட்டிவிடுவது? லஞ்சமா ஒரு டீ வாங்கித் தரேன் விட்டுறீங்களா?

அப்புறம் மறக்காம உங்க நண்பர் செய்யதலிக்கு என் வாழ்த்துகளை தெரிவிச்சிடுங்க. கண்டிப்பா அவருக்கு என்னை மறந்திருக்காது ;-)

pria said...

Congrats on your book publication and way to go Nila:)

Beautiful post right from your heart.

மணியன் said...

அந்தாதியாக எழுதி அசத்தி விட்டீர்களே ! வாழ்த்துக்கள் !!

நிலவு நண்பன் said...

//துளசி கோபால் said...
3 இல்லே 4 ன்னு இருக்கக்கூடாதுன்னு கேட்டுட்டு, இப்படி அட்டகாசமான எட்டைச்
சொல்லி இருக்கீங்க!!!!!!//

நன்றி...எட்டை ரொம்ப பெரிசாப் போட்டுட்டேன்னுதானே இப்படிச் சொல்றீங்க :)

நிலவு நண்பன் said...

//மாயக்கண்ணாடி said...
சும்மா சொல்லக்கூடாது
ரசிகவ் நீங்கள் போட்டது வித்தியாசமான எட்டு,கண்டிப்பா உங்களுக்கு லைசென்சு கிடைக்கும். மிகவும் அருமை //

எனக்கு லைசென்ஸ் தந்த போக்குவரத்து துறைக்கு நன்றி... :)

நிலவு நண்பன் said...

// ஜெஸிலா said...
இப்ப எந்த எட்டில் இருக்கீங்க ரசிகவ்?//

முதல் எட்டில்.. :)

//ரசிகவ் பெயர் காரணம் எழுதிட்டீங்க, ஞானியார் பெயர் காரணம்?//

அது அப்பா அம்மாக்கிட்டதான் கேட்கணும்

//பெயரை மாற்றுவதை விட நம்ம பேரை பதிய வைக்கிறா மாதிரி ஏதேனும் செய்யணும். ;-)//

நன்றி..ரசிகவ்வை மறுபடியம் ஞானியார்னு மாத்திடவா? :)

//நீங்களுமா என்னை எட்டில் மாட்டிவிடுவது? லஞ்சமா ஒரு டீ வாங்கித் தரேன் விட்டுறீங்களா? //

டீயா..? அப்படின்னா டீ குடிச்சிட்டு எட்டுக்கு வாங்க..

//அப்புறம் மறக்காம உங்க நண்பர் செய்யதலிக்கு என் வாழ்த்துகளை தெரிவிச்சிடுங்க. கண்டிப்பா அவருக்கு என்னை மறந்திருக்காது ;-) //

கண்டிப்பா..யாரும் மறக்க மாட்டாங்க... :)

நிலவு நண்பன் said...

//pria said...
Congrats on your book publication and way to go Nila:)

Beautiful post right from your heart. //

நன்றி ப்ரியா..

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Ezhilanbu said...

VEry nice post...
Panipat Idhayangal - Very nice title...
ithu varaikkum evlo pena tholachiruppeenga ?

தேன் கூடு