Monday, February 26, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு ( தொடர் 4)

இப்படி ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டு வந்தனர். பல இளைஞர்கள் சிறை சென்றுவிட்டனர் . இந்த நிலையில்தான் பாரீந்திரன் சொன்னான்

இந்த மாதிரி நம்ம சக்தியை வீணடிக்கிறதுல எந்த லாபமும் இல்லை.சொல்லம்புகளாலையே சர்க்காரை வீழ்த்திவிட முடியுமென்று தோணல்லே..ஆகவே நாம் பிரசுரம் பண்ணிக்கிட்டு வந்ததை செய்ல்படுத்தி காட்டணும் என்று முடிவெடுத்ததில் வந்ததுதான் மாணிக்தலா தோட்டத்தின் பிறப்பு.


ஜுகாந்தர் பத்திரிக்கையின் பொறுப்புகளை புதியவர்களிடம் ஒப்படைத்து விட்டு சில இளைஞர்களை பொறுக்கி எடுத்து மாணிக்தலாவில் பாரீந்திரனுக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் குடி புகுந்தோம்.


குடும்ப பிண்ணனி இல்லாதவர்கள் குடும்பத்தை அநாயசமாக உதறுகின்ற இளைஞர்கள்தான் தேவை. ஆனால் மதரீதியான பயிற்சி இல்லாமல் இதுபோன்ற இளைஞர்கள் கிடைப்பது கடினம். ஆகவே பாரீந்திரன் ஒரு நல்ல துறவயை தேடி அலைந்தான். நானும் துறவியாய் இருந்தவன் என்றாலும் என்மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை.


பின் கடுமையாக அலைந்து 1857 ல் சிப்பாய் கலகத்தில் ஜான்சிராணியுடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராய் போரிட்ட ஒரு துறவியை பிடித்தான். அவருக்குள் உள்ள வெறியை மீண்டும் வெளியே கொண்டு வந்தான். அந்த துறவி இவன் மீது மிகுந்த பாசமாய் இருந்தார். ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனதால் இன்னொரு துறவியை பிடித்து மாணிக்தலா தோட்டத்தில் ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.


மாணிக்தலா தோட்டத்தில் ஆசிரமம் தொடங்கப்பெற்ற சமயத்தில் அங்கே நாலைந்து இளைஞர்களுக்கு மேல் இல்லை.கையில் பைசா இல்லை. எல்லா இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடி வந்ததால் அவர்கள் வீட்டில் இருந்தும் பணம் எதிர்பார்க்க முடியாது . எப்படியிருந்தாலும் அவர்களுக்கு 2 வேளை சோறு கொடுப்பதற்காகவாவது பணம் வேண்டும். சிலர் தந்த உதவியினாலும் தோட்டத்தில் பழம் காய்கறி வளர்த்து அதன் மூலம் வருகின்ற வருமானத்திலும் காலங்கள் கழிந்தன.


பின் வருமானத்திற்கு கோழி வளர்த்தான் பாரீன். ஆனால் கோழிகள் நாளுக்குநாள் குறைந்தது கொண்டே இருந்தன. சிலவற்றை நரிகளும் சிலவற்றை மனிதர்களும் திருடிக்கொண்டு செல்ல, கோழி வளர்ப்பை கைவிட்டான்


நாங்கள் செய்த ஒரே வீண் செலவு டீ குடிப்பதுதான். அது மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையே நிலையற்றதாக வெறுமையாகப் போயிருக்கும் எங்களுக்கு. பாரீன் டீ தயாரிப்பதில் சூரன். அவனுடைய டீயைக் குடித்தே பாரத விடுதலைக்கு எஞ்சி உள்ள நாட்களை கழித்துவிடலாம் போல தோன்றும்.


நாமே சமைத்துக்கொள்ள வேண்டும் என்று பாரீன் உத்தரவு பிறப்பித்து விட்டதால் சமைப்பதற்கு பயந்து சில இளைஞர்கள் ஓடிவிட்டார்கள். எஞ்சியுள்ளவர்கள் சமையலைக் கற்றுக்கொண்டு சமைத்து சாப்பிட்டோம்.


கொஞ்சம் கொஞ்சமாக வங்காளத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல இளைஞர்கள் சேர ஆரம்பித்தினர்; . சிலருக்கு கல்விப்பயிற்சி. சிலருக்கு வேலை.


கல்விப்பயிற்சி என்றால் மத அரசியல் வரலாறு இவற்றைப் பயிலுவது

வேலை என்றால் புரட்சிக்கு தயார் செய்வது.


ஆசிரமத்திற்கு தகுந்த இன்னொரு இடத்தை தேர்வு செய்வதற்காக நானும் தேவவிரதனும் பொறுப்புகளை பாரீனிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினோம்.


அலகாபாத்தில் விந்திய மலை, சித்திரக் கூடம், அமர்கண்ட் என்று புணிததலங்களாக சுற்றினோம். அமர்கண்டக்கில் நாற்புறமும் 20 - 25 மைல்கள் வரை காடுகளில் சுற்றியபொழுது தாழ்ந்த இனத்தாரின் குடியிருப்புகளில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் துரத்தியதால் 2 மைல் தொலைவு ஓடினோம் . ஆற்றங்கரை பக்கமாக ஓடி வந்து கொண்டிருந்தபொழுது அங்கு புலியின் காலடித்தடங்களும் இரத்தக்கறைகளும் கண்டோம்.


பிற்காலத்தில் நான் அந்தமான் சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவேன் என்று அப்போதே தெரிந்திருந்தால் அந்த இடத்திலையே புலி வருவதற்காக உட்கார்ந்திருப்பேன். ஆசிரமத்திற்கான இடம் எங்கேயும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பாரீனிடமிருந்து கடிதம் வந்தது. உடனே திரும்புங்கள் என்று.
(தொடரும்)

-ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 3)

சில நாட்களுக்குப் பின் தேவவிரதன் நவசக்தி இதழுக்கு போய்விட்டான்
பூபேனும் வந்காளத்திற்கு சுற்றுப்பயணம் போய்விட்டான்.

இதழை நடத்துகின்ற பெரிய பொறுப்பு என்மீதும் பாரீந்திரன் மீதும் விழுந்தது. நானும் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிப்போனேன்.

வாழ்வும் சாவும் காலில் கிடக்கும் அடிமை. உள்ளத்தில் கவலை இல்லை என்று ரவீந்திரர் தீட்டிய சித்திரம் அந்தக் காலத்து வங்காளி இளைஞர்களின் சித்திரமாகும்.

உண்மையில் ஒரு நம்பிக்கை ஒளி எங்கள் உள்ளங்களின் ஒளிந்திருந்தது. பிரிட்டிஷ் பீரங்கி வெடிகுண்டு பட்டாளம் இயந்திரத்துப்பாக்கி எல்லாமே வெறும் மாயை. இது ஒரு இந்திரஜாலக்காட்சி சீட்டுக்கட்டால் கட்டப்பட்ட வீடு நாங்கள் ஓர் ஊது ஊதினால் பறந்து போய்விடும்.

எங்கள் எழுத்துக்களைப்படித்து நாங்களே திடுக்கிட்டோம். நாட்டின் ஜீவசக்தி எங்கள் கைகள் மூலமாகத்தான் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தோன்றும்


எங்கள் பத்திரிக்கையின் எண்ணிக்கை 1000 த்திலிருந்து ஒரே ஆண்டில் 20000 ஆக மாறியது ஒரே ஆண்டில். ஆவ்வளவு இதழ்கள் அச்சடிப்போம் என்று நாங்கள் நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் அச்சு இயந்திரங்களும் அத்துணை இதழ்கள் அச்சடிப்பதற்கு தகுந்தது இல்லை. எனவே திருட்டுத்தனமாக வேறு அச்சகத்திலும் அச்சிட நேர்ந்தது.


அறையின் மூலையில் உடைந்து போன பெட்டியில் ஜுகாந்தர் விற்ற பணம் இருக்கும். அதைப் பூட்டி யாரும் பார்த்ததில்லை. பணம் எவ்வளவு வந்தது எவ்வளவு செலவாகியது என்று யாருமே கணக்கு பார்ப்பதில்லை. பல இளைஞர்கள் ஜுகாந்தர் அலுவலகம் வந்து இளைப்பாறி சாப்பிடுவதுண்டு. அவர்கள் யார் என்ன என்று கூட விசாரிப்பதில்லை. அவர்கள் சுதேசிகள் ஆகவே எங்களைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும்தான் தெரியும்.


ஆபிசுக்கு வெளிNயு வரும் போது வாசலில் ஓரிருவர் எப்போதும் நின்று கொண்டிருப்பதைப்பார்ப்போம். எங்களைக் கண்டவுடன் ஒருவர் வானத்தை வெறித்துப்பார்ப்பாh. ஒருவர் டீக்கடைக்குள் நுழைந்து விடுவார். வேறொருவர் சீட்டியடித்துக்கொண்டே அங்கிருந்து நழுவுவார். அவர்கள் சிஐடியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் என்று கேள்விப்பட்டேன். சிஐடி "ப்பூ அதைப்பற்றி எங்களுக்கென்ன கவலை",

ஒருநாள் அரசாங்கத்திடமிருந்து கடிதம் வந்தது நாங்கள் ராஜதுரோக கட்டுரைகள் எழுதுவதாகவும் உடனே அதனை நிறுத்தவேண்டும் என்றும் மீறினால் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொள்வீர்கள் என்றும் எழுதியிருந்தது.
எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சட்டம் என்ன ஐயா? நாங்கள் பாரதத்தின் எதிர்கால ஆட்சியாளர்கள். எங்களுக்கு சட்டம் சொல்லித்தர நீ யார்?

ஒரு நாள் உண்மையில் ஆட்டு மந்தையில் புலி நுழைந்துவிட்டது. இன்ஸ்பெக்டர் பூர்ணலாகிரி சில சிப்பாய்களுடன் ஆபிஸை சோதனையிட வந்தார்.

அவரிடம் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் இருந்தது." யார் ஆசிரியர்" என அவர் கேட்க.."நான்தான் நான்தான்" என்று ஆளாளுக்கு சொல்ல கடைசியில் அவரே கொஞ்சம் உடல் பருமனனாகவும் தாடியுடனும் இருந்த பூபேனை ஆசிரியராக முடிவுசெய்து கைது செய்தார்.
பின் பூபேனை 1 ஆண்டு சிறையில் தள்ளிவிட்டனர். பின் கொஞ்ச நாட்களில் ஜுகாந்தர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனை பதிவிட்ட வசந்தகுமார் சிறை சென்றார்.

இப்படி ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டு வந்தனர். பல இளைஞர்கள் சிறை சென்றுவிட்டனர் . இந்த நிலையில்தான் பாரீந்திரன் சொன்னான்


(தொடரும்)
-ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 2)

அந்த சமயத்தில் கல்கத்தாவிலிருந்து ஜுகாந்தர் என்றும் புரட்சி இதழ் ஒன்று வெளி வந்து கொண்டிருந்தது. அந்தநேரத்தில் புரட்சி என்ற சொல்லுக்கு தனி கவர்ச்சியே இருந்தது. எனக்குள்ளும் ஒரு அலை வந்து மோத ஆரம்பித்தது,

பிரான்சின் ரோபோஸ்பியர் முதல் ஆனந்தமடம் நாவலின் ஜீவானந்தன் வரை எனது மனதில் தோன்றி மறைந்தார்கள். நாட்டின் விடுதலைக்காக எதிர்கால சுதந்தி பாரதத்தின் உருவகமான வீரர்கள் எத்தகைய பிராணிகள் என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது.


நான் வீட்டு மூலையில் சும்மா உட்கார்ந்திருக்க வேறு சிலர் சேர்ந்துகொண்டு இரவோடு இரவாக பாரதத்தை சுதந்திரமாக்கிவிடுவார்கள் என்பதை பொறுத்துக்கொள்ள முடியுமா?


கல்கத்தா ஜுகாந்தர அலுவலகம் சென்று பார்த்தேன். அஙகே 3 அல்லது 4 இளைஞர்கள் கிழிந்த பாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். போரிட்டு ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பது அவ்வளவு பெரிய விசயமில்லை என்று அவர்களது விவாதத்தில் ஒருமித்த கருத்தா இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சுக்குப் பின்னால் பெரியதாக ஏதோ ஒன்று இருக்கின்றது என்று எனக்குத் தோன்றியது.


சில நாட்கள் போய்வந்த பின் அப்பத்திரிக்கையின் நிர்வாகிகளுடன் பரிச்சயமேற்பட்டது. அநேகமாக அவர்கள் எல்லாருமே நாடோடிககள்தான் என்று தெரிய வந்தது.


தேவவிரதன் - பிஏ பாஸ் செய்துவிட்டு சட்டம் படித்துக் கொண்டிருந்தான் திடீரென்று இந்தியா விடுதலைப் பெற்று விடும் என்று தோன்றியதும் சட்டத்தை விட்டுவிட்டு ஜுகாந்தரின் ஆசிரியர் குழவில் சேர்ந்துவிட்டான்.


விவேகானந்தரின் தம்பி பூபேனும் ஆசிரியர் குழுவில் ஒருவன்


அவினாஷ் : ஒரு குடும்பத்தில் இல்லத்தலைவிக்கு உள்ள பொறுப்பை இந்த பைத்தியகாரக்குடும்பத்தில் வகித்தவன் இவன். பத்திரிக்கையின் நிர்வாகம் முதல் பல பொறுப்புகள் இவன் தலையில் .

பாரீந்திரன் : இவன் அரவிந்தரின் தம்பி. இவனோடு எனக்கு சற்று தாமதமாகத்தான் பரிச்சயம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் இணைந்த சமயத்தில் மலேரியாவின் கொடுமையால் இவன் தேவ்கருக்கு ஓடிப்போயிருந்தான். பின் எலும்பும் தோலுமாய் வந்திருந்தான்.

சாதிக்க முடியாதவைகளை கற்பனை மற்றும் உணர்ச்சியின் பலத்தாலையே சாதித்து விடுபவன் இந்த பாரீந்திரன். கணக்குப்பாடத்திற்குப் பயந்து கல்லூரியை விட்டு வந்தபின் சாரங்கி இசைப்பது, கவிதை எழுதுவது, பாட்னாவில் டீக்கடை வைப்பது என பல சாதனைகள் நிகழ்;த்திவிட்டான்.


அவன் பெரிய மனிதர்வீட்டு பிள்ளையானாலும் கடவுளின் கிருபையால் அவனுக்கு வறுமை துன்பத்தின் அனுபவம் கிடைத்துவிட்டது. இப்போது அவன் 50 ரூ முதலுடன் ஜுகாந்தர் பத்திரிக்கையை நடத்த முன்வந்திருக்கின்றான்.


நாட்டை விடுவிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை விட்டுவிடக்கூடாதென்று நானும் மூட்டைக்கட்டிக் கொண்டு எனது வீட்டை வெளியேறி ஜுகாந்தர் ஆபிஸில் குடிபுகுந்தேன்

(தொடரும் )

-ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 1)

வங்காளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர்கள் அரசு ஆவணங்களிலும் ஆங்கிலேயப் பத்திரிக்கைகளிலும் அராஜகவாதிகள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.

இப்படி ஒரு குழு இந்தியாவில் இருந்ததா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. அடிமைநாடுகளில் சுதந்திர வேட்கை மிகுந்தால் அங்கு இரகசிய சங்கங்கள் தோன்றுவது சகஜம்தான்.

வங்காளிகளின் தன்மானங்கள் ஆட்சியாளர்களின் நடத்தையால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால் ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் மனிதர்களாக வாழுகின்ற வாய்ப்பு இல்லாததாலும் அவர்கள் தங்கள் சக்தி முழுவதையும் திரட்டி எதிர்க்கத் தயாராகினர்.

இந்த நாட்டு புரட்சிவாதிகள் அராஜவாதிகள் அல்ல என்று சொல்வதே என் நோக்கம்.

1906 ம் ஆண்டின் குளிர்காலம் அது. ஆங்காங்கே கச்சேரிகள் சூடுபிடித்துக்கொண்டிருந்தது
நாட்டில் எதிர்ப்பு அலைகள் உருவாகிக்கொண்டிருந்தது. நாடு முழவதும் புதிதாய் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

நான் அப்பொழுதுதான் என்னுடைய துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு வாத்தியார் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஒருநாள் "வந்தேமாதரம்" இதழ் என் கைக்கு கிடைத்தது. அதில் இந்தியாவின் அரசியல் இலட்சியத்தைப் பற்றி ஒருவர் எழுதியிருந்தார். நாம் வேண்டுவது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுபட்ட சுயாட்சி.

இந்தக் காலத்தில் இந்தச் சொற்றொடர் தெருவுக்கு தெரு பேசப்படும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது

அந்த நேரத்தில் அரசியல்வாதிகள் சுய ஆட்சியைப் பற்றி உரையாற்றும் பொழுது அந்த சொல்லுக்கு முன்னால் காலனி என்ற சொல்லையும் சேர்த்து உச்சரிப்பாhர்கள். அப்படிப்பேசினால்தான் சட்டப்படி ஆபத்து வராது. கைதட்டலும் கிடைத்துவிடும்
ஆனால் நான் ரொம்ப துரதிருஷ்டசாலி. அந்த வார்த்தைகள் என்னுடைய காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. அடிக்கடி எனக்குள் ஏதோ ஒன்று தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. எழுந்திரு எழுந்திரு நேரம் வந்துவிட்டது.

இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளா அல்லது இதன் ஆழத்தில் வேறு ஏதேனும் இருக்கின்றதா என்று எண்ணிக்கொண்டிருந்தவேளையில் நான் கேட்ட வதந்திகள் என்னை திடுக்கிட வைத்தது.

ஏதோ ஒரு மலை இடுக்கில் இரண்டு லட்சம் நாகர் வீரர்கள் கத்திகளைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். ஆயுதங்கள் எல்லாம் தயாராம். நாட்டின் மற்ற பகுதிகளும் தயாராம் ஆனால் வங்காளம் மட்டும் பின்தங்கியிருப்பதால் போர் தொடங்க தாமதமாம். இருக்கலாம்.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு

Photobucket - Video and Image Hosting

இந்திய விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாகிகள் சத்தமில்லாமல் எங்கோ புதைக்கப்பட்டு சரித்திரத்தின் சுவடுகளில் எட்டிப்பார்க்காமலையே இருந்துவிட்டனர். நாம் இன்று சுதந்திரமாய் வாழுகிறோம் என்றால் நமக்காக போராடியவர்களின் உயிர்களின் மீதுதான் நாம் உலவிக்கொண்டிருக்கின்றோம்.

விடுதலைக்காக போராடிய ஒரு புரட்சிவீரன் தான் உபேந்திரநாத். இவர் வங்காளதேசத்தைச் ஹ{க்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

துறவறத்தின் மீது ஆர்வம் கொண்டு பின் விடுதலைக்காகப் போராடி புரட்சி இயக்கத்தில் இணைந்து 12 ஆண்டுகளாய் நாடு கடத்தப்பட்டு அந்த வீரனின் சோகம் நிறைந்த கதையை அவரே தன் வரலாறாக ஆங்காங்கே கிண்டல்களுடன் எழுதியிருக்கின்றார். அவரது நூலை நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி.

விடுதலைப்போராட்டத்தின் போது பல ஆண்டு காலங்கள் வீட்டைப் பிரிந்து நட்டைப்பிரிந்து திரும்பி வரமுடியுமா உயிர்பிழைப்போமா என்ற அச்சத்தில் வாழ்க்கையை இழந்த எத்தனை இளைஞர்கள் வரலாற்றில் இருந்து காணாமல் போயிருக்கின்றார்கள்.


அப்படிக் காணாமல் போன ஒரு நாடு கடத்தப்பட்டவனின் சோகத்தை விளக்கப்போகின்றேன்.


மொழிபெயர்க்கப்பட்டாலும் அப்படியே வங்காளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வார்த்தைகளை கொஞ்சம் கடினமாக கையாண்டிருக்கின்றார்.


ஆகவே எனக்கு புரிந்த மாதிரி படித்து நான் படிப்பது போன்ற நடையில் உங்களுக்கும் அந்த சோகத்தை உபேந்திரநாத் சொல்வது போலவே தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

-ரசிகவ் ஞானியார்

Thursday, February 15, 2007

இன்று செய்திகளே இல்லைபத்திரிக்கை துறை என்பது மிகவும் இன்னியமையாத ஒரு துறையாகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஊடகத்திற்கு உண்டு.

விடியற்காலை எழுந்தவுடன் பத்திரிக்கை படிக்காவிட்டால் சிலருக்கு அந்த நாள் முழுவதும் ஓடாது.


ஒருநாள் எந்தச் செய்தியுமே இல்லாவிட்டால் என்ன செய்தி போடுவார்கள் ?

இன்று செய்திகளே இல்லை என்று அதையும் செய்தியாகப் போடுவார்கள் என்று யாரோ சொன்னதாய் ஞாபகம்.


தமிழகத்தில் வருகின்ற பத்திரிக்கைகளில் தினத்தந்தி மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் இடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கு காரணம் அதனுடைய எழுத்து வடிவம் மற்றும் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள செய்திகள்தான்.

அதனை நிறுவிய தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் பற்றி கொஞ்சம் அலசுவோமோ..?

இவர் 1905 ம் ஆண்டு செப்படம்பர் 17 ம் நாள் திருநெல்வேலியில் காயாமொழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பானது

அப்பா பெயர் சிவந்தி ஆதித்தன். அம்மா பெயர் கனகம் அம்மையார். அப்பா ஒரு வழக்கறிஞர்.

அவருடைய முழுப்பெயர் சிவந்தி பாலசுப்ரமண்ய ஆதித்தன். சுருக்கமாக சி.பா ஆதித்தன் என அழைக்கப்பட்டார்.

அவங்க அப்பா ஸ்ரீவைகுண்டத்தில் வக்கீலா பணிபுரிந்ததால ஆதித்தனார் படிச்சதெல்லாம் அங்கதான்ங்க. நாலாப்பு வரை அங்கதான் படிச்சாரு.

11ம் வகுப்பு வரும்போது அவருக்கு போதிய வயது வரம்பு இல்லைன்னு சொல்லி தேர்வு எழுத அனுமதிக்கலைங்க. 11 வது வகுப்பு வரைக்கும் அவர் வளரவேயில்லiயாக்கும். திடீர்னா அவருக்கு வயது வரம்பு குறைஞ்சிருச்சி.. என்னங்க நியாயம் இது? ஆரம்பத்துலையே வயது வரம்பு சோதனையிட்டு சேர்க்கவேண்டாமா?.

ஆதித்தனாரை நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்காததால ஒரு வருடம் சும்மா இருந்துட்டு அடுத்த ஆண்டு பரிட்சை எழுதினார். கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் வாங்கினார்

ஸ்ரீவைகுண்டத்திலேயே பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்து பாஸாக்கிவிட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி ஏ வில் சேர்ந்தார்

அங்கு படிப்பை முடிச்சுட்டு 1927 ல் லண்டனுக்கு சென்றார்.அங்கே பாரிஸ்டர் படிப்பைத் தொடங்கினார். அவர் லண்டன்ல படிக்கும்போதே வீட்டிலயிருந்து பணத்தை எதிர்பார்க்காம கதை - கட்டுரைன்னு எழுதி சம்பாதிக்க ஆரம்பித்து தன் செலவுகளைக் கவனித்துக் கொண்டார்.

லண்டன்ல படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர்ல பெரும் தனவந்தரா ராமசாமி நாட்டாரின் மூத்த மகள் கோவிந்தம்மாளை 01.09.1933ல் திருமணம் செய்து கொண்டார்.

சிங்கப்பூர்ல பாரிஸ்டர் பணி நன்றாகச் சென்றது. பணமும் புகழும் சேர்க்க ஆரம்பித்தார். எட்டு ஆண்டுகள் சிங்கப்பூர்ல வக்கீல் வேலை பார்த்திருக்கார. ஆனா ஒரு வழக்கில்கூட தோற்றது கிடையாது.

இந்த நேரத்துலதாங்க உலகப்போர் ஆரம்பிச்சுடுச்சு. ஜப்பான்காரன் சிங்கப்பூர்ல குண்டு வீச ஆரம்பிச்சுட்டான். ஆதித்தனார் மனைவி குழந்தைகளை தமிழகத்திற்கு அனப்பிவிட்டார். தான் இந்தியா திரும்புவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

பின் சீட்டு போட்டு முடிவு செய்வது என்று தீர்மானிதத்து. "போ", "போகாதே" என்று எழுதிப்போட்டார். எடுத்துப் பார்த்தால் "போ" என்று வந்தது. உடனே விமானம் பிடித்து இந்தியா வரத் தொடங்கினார். ஆனால் ஜப்பான்காரன் விமானத்தை வழிமறித்ததால் எங்கெங்குமோ சுற்றி இறுதியில் இந்தியா வந்தடைந்தார்.

தமிழகம் வந்து என்ன செய்வது என முடிவெடுத்து பத்திரிக்கைத் தொழிலில் கால் பதிக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு கோரும் நாம் தமிழர் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார்

இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார்
சென்னை வந்த இராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார். இதனால் 1960 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திரபிரசாத் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும் இவரை சிறையிலையே அடைத்திருந்தார்கள்.

அரசு பனை மரங்களுக்கு வரி விதித்திருந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான பனை மரத் தொழிலாளர்கள் பாதிக்கப்டுவார்கள் என உணர்ந்து அதனை எதிர்த்து போராடியதோடு மட்டுமன்றி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்துவிட்டார்.

செங்கல் பட்டில் உள்ள உழவர்கள் அங்குள்ள மிராசுதாரர்களால் குறைவான கூலி கொடுக்கப்பட்டு நசுக்கப்படுவதை உணர்ந்து அவர்களுக்குப் போராடி பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சிறை சென்று மிராசுதாhர்களிடம் கூலி ஒப்பந்தம் போட்டார்.

பின் 1942 ல் தமிழன் என்ற வாரப் பத்திரிக்கையைத் தொடங்கினார்.

05-10-1942 ல் தினத்தந்தி நாளிதழ் மதுரையில் பதிவு செய்து ஆரம்பித்தார். அவர் பத்திரிக்கை ஆரம்பித்த சூழ்நிலையில் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது.

பத்திரிக்கைக்கு உண்டான காகிதம் கிடைக்காமல் திண்டாடினார். உடனே தானே காகிதம் தயாரிக்க முடிவு செய்து வைக்கோலை ஊறவைத்து கூழாக்கி பின்பு அதனைப் பக்குவப்படுத்தி காகிதமாக்கினார். காலையில் பத்திரிக்கைகளை சுமந்து கொண்டு லாரிகள் வெளிக்கிளம்புகின்ற நேரத்தில் தினத்தந்தி அலுவலகத்திற்கு தினமும் காலையில் வைக்கோல் வண்டி வந்து கொண்டிருந்தது.

இப்படியாக காகிதம் தயாரிக்கும் முறைக்கு தமிழன் கைக் காகிதம் என்று பெயரிட்டார்.

மழை நேரம் என்றால் காகிதத்திற்கு திண்டாட்டமாகிவிடும். மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்தக் காகிதப் பண்ணை இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தருவதில் தினத்தந்தியை முதன்மையாக்கினார். எளிய தமிழில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதியதால் இவரது பத்திரிக்கை 1000 பிரதியிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. 1948 ல் சென்னையில் லாஸ் என்னுமிடத்தில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம் 1960 ல் தான் சென்னையில் எழும்பூரில் நான்கு மாடிக் கட்டிடம் கட்டும் அளவிற்கு உயர்ந்தது.

பின் எல்லா முக்கிய ஊர்களிலும் பதிப்புகள் வருவதற்கு கடுமையாக உழைத்தார். இதன் பிறகு மாலை முரசு நாளிதழைத் தொடங்கினார். அதிலும் இமாலய வளர்ச்சிப் பெற்றார்.

1947 முதல் 1953 வரை தமிழக மேலவை உறுப்பினராகவும்
1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும்
1964 ல் மீண்டும் மேலவை உறுப்பினராகவும் பணி ஆற்றினார்.
1967ல் பேரவைத் தலைவரானார். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்ஃ

ஒவ்வொரு பட்ஜெட் கூட்டம் தொடங்கும் முன் "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற திருக்குறயை பாடி கூட்டத்தை ஆரம்பித்த பழக்கம் ஆதித்தனாரையே சாரும்

"தமிழ்நாடு" என்று மாநிலத்திற்கு பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றத் தலைமை தாங்கியவர் சி.பா ஆதித்தனார்.

சட்டசபையின் பெருன்பான்மையான ஆங்கில நடவடிக்கைகளை தமிழுக்கு மாற்றிய பெருமை இவரைச் சாரும்.

அப்பொழுது எல்லாம் மந்திரிகளை எப்படி அழைப்பது எனத் தெரியாமல் கனம் மந்திரிகள் என்று அழைத்துக்கொண்டிருந்தனர். ஆதித்தனார்தான் "மாண்புமிகு அமைச்சர்" என்று அழைக்கப் படுவதற்கு ஆதித்தனார் பெரும் பாடுபட்டார்.

இவரது மகன் சிவந்தி ஆதித்தனை இவரது தொழிலில் கொண்டு வர விரும்பியபொழுது கூட ஆரம்பத்திலையே தலைமைப் பொறுப்பை அவருக்கு கொடுத்துவிடவில்லை. கம்போஸிங்கில் இருந்து புருப் ரீடிங் வரை படிப்படியாக கற்றுக் கொடுத்துதான் இந்தத் பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபடுத்தினார்.

உனது தொழிலை நீ முழுமையாக கற்றுக்கொண்டால்தான் அதில் சிறப்பாகத் திகழ முடியும். என்பார்.

சிறந்த பாரிஸ்டர் பத்திரிக்கையாளர் தமிழ் மீது தணியா தாகம் உடையவர் எளிமையாக வாழ்ந்தவர் திருக்குறளை வாழ்வின் வழிகாட்டியாக நினைத்தவர் சி.கா ஆதித்தனார் 24.05.1981 அன்று மரணமடைந்தார்.

இன்றும் ஒவ்வொரு நாள் காலையிலும் பேப்பர் காரன் மூலம் நம்முடைய வீட்டை வந்தடைகின்றார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி தினமும் வருகின்ற அவருடைய பத்திரிக்கை செய்திகள் மூலம் மறைந்து விட்டது. இன்னமும் எழுத்துக்களாக வலம் வருகின்றார்.

- ரசிகவ் ஞானியார்

ஆங்கிலேயருக்கு செக் வைத்த செம்மல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கிறது வ உ சி மைதானம்.வருடா வருடம் சுதந்திர தினம் குடியரசு தினத்தில் கலெக்டர் வந்து கொடியேற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இனிதே நடந்து முடியும். அத்தோடு கூட்டங்கள் கலைந்துவிடும்.

ஆனால் அந்த மைதானத்தின் பெயர் கொண்ட வ.உ.சி யை எத்துணை பேர் நினைத்துப்பார்த்திருக்க கூடும் என்றுத் தெரியவில்லை.


பாரதியின் இறுதிச் சடங்கில் ஆட்களின் எண்ணிக்கையை விடவும்
ஈக்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று வைரமுத்துவின் கவிதை ஒன்றில் வாசித்திருக்கின்றேன். கேட்கும்பொழுதே பதறுகின்றது நெஞ்சம்.

அதுபோலவே வஉசி 6 ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவித்துவிட்டு கண்ணணூர் சிறையிலிருந்து வெளியே வந்தபொழுது அவரை வரவேற்க ஒரு காங்கிரஸார் கூட இல்லை என்று அவரது மகன் வாலேஸ்வரன் வருத்தப்பட்டிருக்கின்றார்.


முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற கூற்றுப்படி வியாபார வர்க்கமாக வந்து நம்மை ஆண்ட வெள்ளையர்களை வியாபாரம் வழியாகவே விரட்டியடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்ட வஉசி சுதேசி கப்பல் இயக்கத்தை ஆரம்பித்தார். இதன்மூலம் வெள்ளையனின் வியாபார வளத்தை முறியடிக்கலாம் என்று முயற்சி மேற்கொண்டு தோல்வியுற்றார்.

1872 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரன் என்ற ஊரில் பிறந்தார் வஉசி.

இவங்க அப்பா பெயர் உலகநாதம் பிள்ளை. அம்மா பெயர் பரமாயியம்மாள்.
தூத்துக்குடி செயிண்ட் பிரான்சிஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேறினார்.

வக்கீலாக வேண்டும் என்று விரும்பி வக்கீலுக்குப் படித்து வெற்றிகண்டார். தனது ஊரிலையே வக்கீல் தொழிலை ஆரம்பித்தவர் 1900 ம் ஆண்டு தூத்துக்குடிக்கு தனது வக்கீல் தொழிலை மாற்றிக்கொண்டார்

1906 ம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவினார். கம்பெனியின் தலைவர் பாண்டித்துரை சாமி காரியதரிசியாக வஉசி

ஆரம்பத்தில் கப்பலை குத்தகைக்கு எடுக்கத் திட்டமிட்டவர் பின்பு சொந்தமாகவே கப்பலை வாங்கிவிட்டார். இதற்குண்டான பணத்திற்காக ஊர் ஊராக சென்று ஷேரை விற்க ஆரம்பித்தார். ஆங்கிலேயர்கள் இதனைக் கண்டு சும்மாவா இருப்பார்கள். அவருக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இருந்தாலும் அந்தத் தொந்தரவுகளையெல்லாம் முறியடித்து சுதேசி கப்பல் வியாபாரம் சிறப்பாக நடத்தினார்

1908 ம் ஆண்டு திருநெல்வேலியில் தேசாபிமானி சங்கத்தை ஏற்படுத்தி விடுதலை வேட்கையைத் தூண்டினார்.

சுப்பிரமணியம், சிவாவும் வஉசியும் பேசுகிறார்கள் என்றாலே ஆங்கிலேயர்கள் கிடுகிடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அலைமோதும் மக்கள் கூட்டத்தை திரட்டுவார்கள்.

மார்ச் மாதம் 9 ம் தேதி தூத்துக்குடியில் பெரிய ஊர்வலம் நடத்தியதை ஆங்கிலேயர்கள் கண்டித்து அவரை திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேசிய இயக்கத்தில் சேரக்கூடாது என்று வாக்குறுதி தருமாறு உத்தரவிட்டது.


ஆனால் வஉசி அதனை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் வஉசியையும் சுப்ரமணிய சிவாவையும் கைது செய்தார்கள்.

இதனால் நாடே கொந்தளித்தது. துப்பாக்கிச்சூடு கலவரங்கள் நீடித்தன. வஉசி மீதும் சுப்ரமணிய சிவா மீதும் அரசு வழக்கு தொடர்ந்து வஉசிக்கு அந்தமானில் 20 ஆண்டு காலச் சிறையும் சிவாவுக்கு 10 ஆண்டு சிறையும் கொடுத்தது

ஆனால் வஉசி மேல் முறையீடு செய்து தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்தார். கோவை சிறையில் அடைக்கப்பட்டார்

சிறையில் அவரை ஆங்கிலேயர்கள் செக்கிழுக்க வைத்து துன்புறுத்தியதால் அவர் மிகவும் உடல் நலம் குன்றிப்போனார். இவர் சிறை சென்றவுடன் இவரது கப்பல் கம்பெனி சரியான தலைமையின்றி சீரழிந்து நஷ்டத்திற்குள்ளாகியது. பங்குதாரர்கள் எல்லாம் இவரால்தான் நஷடமாகியது என்று குறை சொல்ல ஆரம்பிக்க மனம் உடைந்து போனார் வஉசி.

1921 ல் விடுதலையானார். அப்பாழுது சென்னையில் நீதிபதியாக இருந்த வாலஸ் அவருக்கு வக்கீல் பட்டத்தை திரும்ப வாங்கிக்கொடுத்தார்.

1920 ல் காந்தியின் சாத்வீகப் போராட்டங்களை காங்கிரஸ் பரிசீலிக்க ஆரம்பிக்க சாத்வீக போக்கு பிடிக்காமல் காங்கிரஸை விட்டு விலகினார். பின்பு பலரின் வற்புறுதலுக்கு இணங்க 1927 ல் மீண்டும் இணைந்தார்.

சிறையில் செக்கிழுத்ததால் அவர் உடல் நலம் ஏற்கனவே குன்றிக் காணப்பட்டது. இந்நிலையில் வறுமையும் அவரை வாட்ட மிகவும் இளைத்துப் போய்விட்டார்.

சுதந்திரத்திற்காகப் போராடியவர் சுதந்திரத்திற்கு இன்னும் 11 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில் இந்திய சுதந்திக் காற்றைச் சுவாசிக்கமலையே 1936 ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வஉசி மறைந்து போனார்.

பின்னர் 1949 ல் இராஜாஜி கவர்னராக இருக்கும்பொழுது வஉசி பெயரில் கப்பல் ஒன்றை மிதக்க விட்டார்;.

பின்பு அவரைப் பற்றிய புத்தகமான கப்பலோட்டிய தமிழன் வெளியிடப்பட்டு அதுவே திரைப்படமாகவும் பின்னாளில் எடுக்கப்பட்டது.

இப்பொழுதும் அந்த வஉசி மைதானத்தைக் கடக்கும்பொழுதெல்லாம் எனது வாகனத்தின் சப்தம் செக்கிழுப்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கின்றது

யாரேனும் பாளையங்கோட்டை வஉசி மைதானம் வர நேரிட்டால் செக்கிழுத்துவிட்டுச் செல்லுங்கள் இல்லை இல்லை செக்கிழுத்தவரின் நினைவை இழுத்து விட்டுச் செல்லுங்கள்.

- ரசிகவ் ஞானியார்

Friday, February 09, 2007

வாஞ்சி மணியாச்சி வரவேற்கிறது

அதிகாலை 7.30 மணி அளவில் சென்னையில் இருந்து திருநெல்வேலி வருகின்ற நெல்லை விரைவு வண்டியானது மணியாச்சி என்ற இரயில் நிலையத்தில் வந்து ஓய்வெடுக்கின்றது.

ஒவ்வொரு முறை சென்னை சென்றுவிட்டு திரும்பும்பொழுதும் திருநெல்வேலி நெருங்கும்பொழுது இந்த ஸ்டேஷன் கண்ணில் படும்பொழுதெல்லாம் எனக்கு வாஞ்சிநாதன் ஞாபகம்தான் வரும

காபி டீ காபி டீ.. சத்தங்கள் ஒலி குறைந்தும் அதிகபட்டும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருக்கின்றது

டீ குடிக்கும் ஆவலில் கதவுக்குப் பக்கத்தில் உள்ள ஒருவரை விலக்கிவிட்டு கீழே இறங்கினேன்.

வாஞ்சி மணியாச்சி என்ற பலகை கொட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. அந்தப் பெயரைசாதாரணமாய் நம் கண்கள் வாசித்து விட்டு விலகி விட முடியாது.
அப்பொழுது முதல் வகுப்பு பெட்டி அருகே பரபரப்பாய் இருந்தது. மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். யாரோ ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றார். அப்பொழுது பரபரப்பாய் வந்த ஒருவரிடம் கேட்டேன்..

ஹலோ என்ன ஆச்சு? என் இந்தப் பரபரப்பு?

முதல் வகுப்பில் வந்த கலெக்டரை ஒருவன் சுட்டுவிட்டான் என்று கூறிக்கொண்டே அவர் விரைந்து சென்றார்

யார் என்ன என்று விசாரித்தபொழுதுதான் தெரிந்தது..?

சுட்டவன் பெயர் வாஞ்சிநாதன்

சுடப்பட்டவர் ஆஷ் துரை

தூரத்தில் அதோ வாஞ்சிநாதன் ஓடிக்கொண்டிருக்கின்றான். அப்படியே மறைந்து போகின்றான். அந்த இடத்தில் இரயில்வே தடங்கள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றது. மறுபடியும் நினைவு மீண்டு பார்த்தால் எந்த பரபரப்பும் இல்லை. நான் வந்த இரயில் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றது.

அட 1911ம் ஆண்டு ஜுன் மாதம் நான் இதே இரயில் வந்திருந்தால் சுட்டுவிட்டு ஓடுகின்ற வாஞ்சிநாதனை கண்டிருக்கக் கூடும். யாருக்கும் தெரியும். வாஞ்சிநாதனுடன் நானும் கூட ஓடியிருக்கலாம்.

அந்த நினைவுகளோடு இரயில் மணியாச்சியை விட்டு சென்று கொண்டிருக்க என் மனதில்
படுவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு இரயிலானது போராட்ட காலத்திற்குச் சென்றது.


தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுள் மறக்கமுடியாத இன்னமும் மக்களால் பேசப்படுகின்ற வீரராக இருப்பவர்களுள் ஒருவன்தான் வாஞ்சிநாதன்.


1911 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்த இடம் எவ்வளவு பரபரப்பாய் இருந்திருக்கும் என்று தற்பொழுது என்னுடன் இரயில் பயணிப்பவர்களுக்கோ அல்லது அந்த நேரத்தில் இரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவாவது புரிந்திருக்குமா? இனி நீங்கள் திருநெல்வேலி பயணத்தில் மணியாச்சியை நெருங்கும் பொழுது நினைத்துப்பார்ப்பதற்காகவாவது கொஞ்சம் வாஞ்சிநாதன் வாழ்ந்த நாட்களுக்கு சென்று வருவோமா..?
தேசபக்திக் குரல்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த ஒலிச்சப்தத்தின் அதிர்வு திருநெல்வேலி மாவட்டத்திலும் அதிகமாக அலைவரிசைகளை வீசியது.

1880 ம் ஆண்டு எனது அல்வாப்பூமி என்றழைக்கப்படும் திருநெல்வேலியில் செங்கோட்டையில் அம்பிகாபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் தெருவில் இரகுபதி அய்யருக்கும் குப்பச்சி அம்மாளுக்கும் பிறந்தவன்தான் வாஞ்சிநாதன்.


அவனது தந்தை பெரிதாய்ச் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகம் எதுவுமில்லை. கோவிலில் கிடைக்கின்ற மானியம் மற்றும் சுவாமிக்கு ஆராதனை செய்யும்பொழது விழுகின்ற காசுகளை வைத்துதான் குடும்பத்தை கரையேற்றிக்கொண்டிருந்தார்.

அதிலேயும் பாருங்க அவருக்கு நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள். பாவம் வருமானமும் இல்லாம எவ்வளவு சிரமப்பட்டிருப்பாரு ? வாஞ்சிநாதன்தாங்க மூத்தவன். அவங்கப்பா இட்ட பெயர் சங்கரன்தான். எப்படி வாஞ்சிநாதன்னு பெயர் மாறிச்சுன்னு தெரியலை.

அவ்வளவு கஷ்டத்திலேயும் அவங்கப்பா வாஞ்சிநாதனை செங்கோட்டை ஆங்கில மீடியாவில்தான் படிக்க வச்சார். அங்க பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு திருவனந்தபுரத்துல உள்ள திருநாள் மகாராஜா கல்லூரியில பிஏ வகுப்புப் படித்து அரியர்ஸ் வைக்காம பாஸ் செய்தான் வாஞ்சிநாதன்.

அப்புறம் மரவேலை சம்பந்தமாக படிப்புக்காக பரோடா சென்றான். அங்கேயும் அரியர்ஸ் வைக்காம படிச்சி முடிச்சுட்டு ஊர் திரும்பினான். அப்பெல்லாம் சீக்கிரமே; கல்யாணம் முடிச்சு வச்சிருவாங்கல்ல. அதான் பையன் படிச்சு முடிச்சுட்டான் அடுத்து என்ன ஒரு கல்யாணத்தையும் நடத்தி வச்சுறுவோம்னு முன்னீர்பள்ளத்தைச் சார்ந்த சீதாராமய்யர் பொண்ணு பொன்னம்மாளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பாவம். 23 வயசுலேயே அவருக்கு கஷ்டப்படணும்னு விதி.

முன்ன எல்லாம் 10 படிச்சாலே அரசாங்க வேலைதானே. அவனுக்கும் புனலூர் காட்டில கார்டாக வேலை கிடைச்சுது.

பரோடா திருவனந்தபுரம்னு சுத்துனதால தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் இந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் நம்ம வாஞ்சிநாதன் செம கில்லாடிங்க..

தானுண் தன் வேலை உண்டுன்னு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான். அந்த நேரத்துலதான் வ.ஊசி - சுப்ரமணிய சிவா ஆகியோர்களை செக்கிழுக்க வைத்து ஆங்கிலேய அரசு கொடுமைப்படுத்தியது. அந்தக்கொடுமையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் மரணமடைய இதனைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதனால் பொறுக்க முடியவில்லை.

உடனே வேலையின் ஈடு பாட்டைக் குறைத்துவிட்டு திருநெல்வேலியில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பாரத மாதா சங்கத்தில் இணைந்தான.

வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தென்காசி எட்டயபுரம் திருநெல்வேலின்னு ஊரெல்லாம் சுத்தி இயக்கத்திற்கு ஆள் சேர்த்தான்.

அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் பாரதமாதாவைத்தான் வணங்குவார்கள். குங்குமத்தைக் கரைத்து குடித்து சத்தியம் செய்வார்கள் கட்டை விரலில் கத்தியால் கீறி அதன் இரத்தத்தில் திலகமிட்டுக்கொள்வார்கள்ஃ அனைவரும் சங்கேதப் பெயர்களையே வைத்திருப்பார்க்ள.

அந்த இயக்கத்தோட தலைவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவர் வேதாந்த கூட்டம் நடத்துவதுபோல தேசபக்திக் கூட்டம் நடத்துவார்.

சிறைக்கொடுமைகளுக்கும் கலவரத்திற்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுதலுக்கும் காரணம் ஆஷ்துரைதான் ஆகவே ஆஷ்துரையைக் கொல்ல வாஞ்சிநாதன் சபதமெடுத்தான்.


அந்த நேரத்தில் அவனது குடும்பத்தில் ஒரு சோகம்.. ஆம் அவனது மனைவி பொன்னாம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனையே இறந்துவிட்டது.
திருனந்தபுரம் போய் தற்குண்டான ஜாதிச் சடங்குகள் செய்யதுட்டு வாடான்னு அவங்க அப்பா சொல்லிப்பார்த்தாரு ஆனால் வாஞ்சி நாதன் கேட்பதாக இல்லை. அரசியல் பக்கம் போகாதடா என்று மகனின் மீது உள்ள பாசத்தில் அவங்கப்பா கெஞ்சிக் கேட்க வாஞ்சிநாதனோ நாட்டின் மீது வைத்த பாசத்தினால் அவங்க அப்பா சொல்றதை அலட்சியப்படுத்தினான்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்து குறி தவறாமல் சுடப் பழகிக் கொண்டான். அந்த நேரத்தில்தான் ஆஷ்துரை தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்று உல்லாசமாய் இருக்கத் திட்டமிட்டான்.

நம்ம மக்களையெல்லாம் கொன்னுட்டு இவன் மட்டும் உல்லாசமாய் இருக்கிறதா? விடக்கூடாது அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற வெறியுடன் திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷன் சென்று ஆஷ் துரை புறப்படுகிற அன்று தனக்கும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கி வைத்துக்கொண்டான். பாரதமாதா இயக்கத்தைச் சார்ந்த மாடசாமி என்பவனும் அப்பொழுது வாஞ்சிநாதனின் உடனிருந்தான்

ஆஷ்துரை முதலாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வாஞ்சிநாதன் இரண்டாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். வண்டி மெல்ல மெல்ல திருநெல்வேலியில் இருந்து மணியாச்சிக்கு சென்று நின்றது.

கையில் துப்பாக்கியுடனும் மனதில் வீரத்துடனும் கொஞ்சம் படபடப்போடு வாஞ்சிநாதன் அமர்ந்திருந்தான். மணியாச்சி இரயில் நிலையத்தில் வண்டி நின்றவுடன் மெல்ல வாஞ்சிநாதன் வெளியே வருகின்றான். ஒருமுறை பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை உறுதிபடுத்திக்கொள்கின்றான்.


இரண்டாம் வகுப்பிலிருந்து தண்ணீர் குடிப்பது போலவும் காற்று வாங்குவது போலவும் இறங்கி ஆஷ்துரை இருக்கின்ற முதல் வகுப்பை நோக்கி நடக்கின்றான்.

இதோ ஆஷ்துரை இருக்கின்ற பெட்டி வந்துவிட்டது. எட்டிப்பார்க்கின்றான் தனது மனைவியோடு ஆஷ்துரை அமர்ந்திருக்கின்றான். எடுத்தான் துப்பாக்கியை ஆஷ்துரையின் மார்பை நோக்கி குறிவைத்தான். டமால்..டமால் என இரண்டு முறை சுட்டுவிட்டு தப்பியோடினான்.

திடீரென்று யாரோ ஒருவன் தனது கணவனை கண்முன்னால் சுட்டதால் அவன் மனைவி அதிரந்து போய் கத்த ஆரம்பித்தாள். வாஞ்சி நாதன் ஓட ஆரம்பித்தான். அவனைப்பிடிக்க ஒரு கூட்டம் அவைனைப்பின்தொடர்ந்து ஓடியது.

எங்கு ஓடுவது எனத்தெரியாமல் ப்ளாட்பாரத்தில் உள்ள கக்கூஸில் நுழைந்துவிட்டான். அந்த கக்கூஸை சுற்றி வளைத்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயரிடம் மாற்றி சிறைத்தண்டனை பெறுவதா? கூடாது எனத் தீர்மானித்து தன் வாயில் அந்த துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டான் வாஞ்சிநாதன்.


பரபரப்பான பொது இடத்தில் ஒரு கலெக்டரைக் சுட்டுக் கொன்ற செய்தி கேட்டு நாடே ஸ்தம்பித்தது. இங்கிலாந்து நாட்டில பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது இந்தக் கொலை. அங்குள்ளவர்களால் சுதந்திர நாட்டின் முதல் வெடிச்சப்தம் என்றும் இது அழைக்கப்பட்டது

கூட இருந்த மாடசாமி என்ன ஆனான் என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.

ஆனால் இந்த வாஞ்சிநாதன் சரித்திரத்தில் பல முரண்பாடுகள் இருப்பபதையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.

தினமும் நடைபயணத்தை மேற்கொள்ளுபவர் ஆஷ்துரை. ஓருநாள் தனது சாரட்டை பின்னால் நடத்தி கூட்டிவரும்படி குதிரையோட்டிக்கு ஆணையிட்டுவிட்டு நடந்து செல்லும்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட பெண் பிரசவவேதனையில்; கத்திக்கொண்டிருக்க அவளை தனது சாரட்டில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு குதிரையோட்டியிடம் ஆணையிடுகிறான் ஆஷ்

ஆனால் அந்த வழியில் உள்ள அக்கிரஹார மக்கள் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை இந்த வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஆஷின் சாரட்டை வழிமறிக்கின்றார்கள். உடனே ஆஷ் குதிரைச் சவுக்கால் அங்குள்ளவர்களை பலமாக அடித்துவிட்டு வண்டியை முன்னேற விடுகிறார். அந்தக்கும்பலில் அடிவாங்கிய ஒரு 16 வயது இளைஞன் ஆஷ் துரையை பழிவாங்கப் புறப்படுகின்றான். அவன் பெயர் என்ன தெரியுமா? வாஞ்சிநாதன்

என்று ழான் வோனிஸ் எழுதிய யுளா ழுககஉயைட ழேவநள எனும் குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது என்று நமது வலைப்பதிவர் வரவனையான் குறிப்பிட்டிருக்கின்றார்.

அது மட்டுமல்ல கொலை செய்ய வந்த இடத்தில் திருநெல்வேலியில் முந்தைய இரவில் ஒரு வேசியின் வீட்டில் அவர் தங்கியிருந்ததாகவும் அதனை அந்த வேசியே வந்து சாட்சி சொன்னதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விசயத்தில் ஒன்று மட்டும் புலப்படுகின்றது. பல சாதிகளாக பிரிந்திருக்கின்ற மக்கள் தனது சாதியை உயர்த்திக் காட்டுவதற்காக சரித்திரத்தின் சுவடுகளை ஆங்காங்கே மாற்றியிருக்கின்றனர் என்பது மட்டும் லேசாய்த் தெரிகின்றது.

இனிமேல் திருநெல்வேலி மணியாச்சியை நெருங்குகின்ற மணி ஆச்சு என்றால் நமது வாஞ்சிநாதனை நினைத்துக்கொள்ளுங்கள்.

- ரசிகவ் ஞானியார்

Monday, February 05, 2007

மண்நேசர்கள்

Photobucket - Video and Image Hostingகொல்லைப்புறத்தில்
காய்கின்ற துணிகள்,

சேகரித்து வைத்த
பழைய கடிதங்கள்,

கல்லூரி ஞாபகக்குறிப்பேடு,

அத்தாட்சிகளே இல்லாமல்போன
நண்பர்களின் ..
முகவரி கிழிசல்கள்,

நேற்று இரவு
அம்மா இட்ட
மருதாணிப் பிசிறுகள்,

தந்தையின் ஞாபகமாய்
இரத்தம் சிதறிய
தோள் துண்டுகள்,

தாயின் ஞாபகமாய்
குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட..
சேலை முந்தானைகள்,

இவற்றோடு
அதிகமான கவலைகள்,

எல்லாம் சேகரித்து
அகதி வந்திருக்கின்றேன்...
அகதி வந்திருக்கின்றோம்!

சீதையை மீட்க..
கடல் தாண்டி வந்தான் அனுமன்!
நாங்களும் அனுமர்கள்தான்
எங்கள்
உயிரையும் கற்பையும் மீட்க...
பல உடல்தாண்டி வந்திருக்கின்றோம்!

கடலோரம் பொறுக்கி வந்த ..
சங்குகளில் எல்லாம்
கடல் ஓசையல்ல,
எங்கள்
தலைமுறைகளின் ..
வெற்றிச்சப்தம் மட்டுமே
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது!

கால் கடித்துவிட்டு
மண்ணுக்குள் மறைந்துபோகும்..
நண்டுகள் எல்லாம்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றது!

உதிக்கும் சூரியன்
எங்கள்
கண்களின் வெறிக்கு முன்னால்
கற்பிழந்து போகின்றது!

வானத்துப்பறவைகள்தான்
எங்கள்
எதிர்கால எடுத்துக்காட்டு!


நம்பிக்கையிருக்கிறது
ஒரு விடியலில் சேதி வரும்!
விட்டுச்சென்ற படகுகள் எல்லாம்..
ஒருநாள் திரும்பகூடும்
சுதந்திரக்காற்றை ரொப்பிக்கொண்டு..

அகதிகளாய் அல்ல..
சொந்தங்களாய் திரும்புவோம்!

காத்திருக்கின்றோம்
இராமேஸ்வரம்
மற்றும்
நம்பிக்கைகளின் கரையோரங்களில்..- ரசிகவ் ஞானியார்

Saturday, February 03, 2007

முந்தைய இரவு

Photobucket - Video and Image Hosting

ஓட்டை வீடான..
ஓட்டு வீடு,
மாடி வீடாக..
மாறிப்போனது!

நகைக்கடை விளம்பர
நகைகள்..
வீட்டுப்பெண்களின்
கைகளிலும், கழுத்திலும்..
ஏறத்துவங்கின!

கடன்காரர்களின் வருகை..
குறைய ஆரம்பித்தது!

கனவாகப்போய்விடுமோ? என்ற
தங்கையின் திருமணம்
நான் இல்லாவிடினும்
லட்சம் இருந்ததால்..
லட்சணமாய் முடிந்தது!

அயல்நாட்டிலிருந்து
காசோலை மூலமாய்
வாழ்க்கை நடத்தியவன்..
இப்பொழுது
காசோடு வந்திருக்கின்றேன்!
இழந்துபோன காலத்திற்கும்
சேர்த்து வாழ..


தந்தையின் நினைவைச்சுமந்து
தனியாய் ஆடிக்கொண்டிருந்த..
சாய்வு நாற்காலிச்சப்தம் வந்து
காதுகளில் ..
கிறீச்சிடுகிறது!

தந்தையின் இறுதிநாட்களுக்கு கூட
வரமுடியாமல்..
விசாவினால் விலங்கிடப்பட்ட
எனக்கு,

யாரேனும் திருப்பித்தரக்கூடுமா?
தந்தையின் இறுதிச்சடங்குக்கு
முந்தைய நாளை?

நிம்மதி இல்லாமல் போகின்ற
இந்த பகலின்..
முந்தைய இரவுக்காக
காத்திருக்கின்றேன்!

யாரேனும் திருப்பித்தாங்களேன்?- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு