Monday, February 26, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (தொடர் 2)

அந்த சமயத்தில் கல்கத்தாவிலிருந்து ஜுகாந்தர் என்றும் புரட்சி இதழ் ஒன்று வெளி வந்து கொண்டிருந்தது. அந்தநேரத்தில் புரட்சி என்ற சொல்லுக்கு தனி கவர்ச்சியே இருந்தது. எனக்குள்ளும் ஒரு அலை வந்து மோத ஆரம்பித்தது,

பிரான்சின் ரோபோஸ்பியர் முதல் ஆனந்தமடம் நாவலின் ஜீவானந்தன் வரை எனது மனதில் தோன்றி மறைந்தார்கள். நாட்டின் விடுதலைக்காக எதிர்கால சுதந்தி பாரதத்தின் உருவகமான வீரர்கள் எத்தகைய பிராணிகள் என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது.


நான் வீட்டு மூலையில் சும்மா உட்கார்ந்திருக்க வேறு சிலர் சேர்ந்துகொண்டு இரவோடு இரவாக பாரதத்தை சுதந்திரமாக்கிவிடுவார்கள் என்பதை பொறுத்துக்கொள்ள முடியுமா?


கல்கத்தா ஜுகாந்தர அலுவலகம் சென்று பார்த்தேன். அஙகே 3 அல்லது 4 இளைஞர்கள் கிழிந்த பாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். போரிட்டு ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பது அவ்வளவு பெரிய விசயமில்லை என்று அவர்களது விவாதத்தில் ஒருமித்த கருத்தா இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சுக்குப் பின்னால் பெரியதாக ஏதோ ஒன்று இருக்கின்றது என்று எனக்குத் தோன்றியது.


சில நாட்கள் போய்வந்த பின் அப்பத்திரிக்கையின் நிர்வாகிகளுடன் பரிச்சயமேற்பட்டது. அநேகமாக அவர்கள் எல்லாருமே நாடோடிககள்தான் என்று தெரிய வந்தது.


தேவவிரதன் - பிஏ பாஸ் செய்துவிட்டு சட்டம் படித்துக் கொண்டிருந்தான் திடீரென்று இந்தியா விடுதலைப் பெற்று விடும் என்று தோன்றியதும் சட்டத்தை விட்டுவிட்டு ஜுகாந்தரின் ஆசிரியர் குழவில் சேர்ந்துவிட்டான்.


விவேகானந்தரின் தம்பி பூபேனும் ஆசிரியர் குழுவில் ஒருவன்


அவினாஷ் : ஒரு குடும்பத்தில் இல்லத்தலைவிக்கு உள்ள பொறுப்பை இந்த பைத்தியகாரக்குடும்பத்தில் வகித்தவன் இவன். பத்திரிக்கையின் நிர்வாகம் முதல் பல பொறுப்புகள் இவன் தலையில் .

பாரீந்திரன் : இவன் அரவிந்தரின் தம்பி. இவனோடு எனக்கு சற்று தாமதமாகத்தான் பரிச்சயம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் இணைந்த சமயத்தில் மலேரியாவின் கொடுமையால் இவன் தேவ்கருக்கு ஓடிப்போயிருந்தான். பின் எலும்பும் தோலுமாய் வந்திருந்தான்.

சாதிக்க முடியாதவைகளை கற்பனை மற்றும் உணர்ச்சியின் பலத்தாலையே சாதித்து விடுபவன் இந்த பாரீந்திரன். கணக்குப்பாடத்திற்குப் பயந்து கல்லூரியை விட்டு வந்தபின் சாரங்கி இசைப்பது, கவிதை எழுதுவது, பாட்னாவில் டீக்கடை வைப்பது என பல சாதனைகள் நிகழ்;த்திவிட்டான்.


அவன் பெரிய மனிதர்வீட்டு பிள்ளையானாலும் கடவுளின் கிருபையால் அவனுக்கு வறுமை துன்பத்தின் அனுபவம் கிடைத்துவிட்டது. இப்போது அவன் 50 ரூ முதலுடன் ஜுகாந்தர் பத்திரிக்கையை நடத்த முன்வந்திருக்கின்றான்.


நாட்டை விடுவிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை விட்டுவிடக்கூடாதென்று நானும் மூட்டைக்கட்டிக் கொண்டு எனது வீட்டை வெளியேறி ஜுகாந்தர் ஆபிஸில் குடிபுகுந்தேன்

(தொடரும் )

-ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு