Saturday, December 31, 2005

பாடம் பார்க்க வாரீயளாபழைய படங்களில் பார்த்தோமென்றால் கதாநாயகனுக்கும் வில்லன் ஆட்களுக்கும் பெரும் சண்டை நடந்து கொண்டிருக்கும். சண்டை முடிகின்ற கடைசித்தருவாயில் டவுசரோடு காவலர்கள் சில கூட்டங்களோடு ஓடிவருவார்கள். (அது மலை உச்சியிலோ இல்லை அடர்ந்த காட்டுக்குள்ளே நடந்தாலும் சரி சரியாக கண்டுபிடித்து வந்துவிடுவார்கள். )

தலைமைக்காவலர் மட்டும் பேண்ட் அணிந்திருப்பார். அவர் வானத்தை நோக்கி டமீல் என்று சுட அனைவரும் அப்படியே கையை தூக்கி கொண்டு நின்றுவிடுவார்கள். ( சுட்டா கையை தூக்கணும்னு யாருங்க சொல்லிக்கொடுத்தா)

காவலர்கள் சரியாக வில்லன் ஆட்களை மட்டும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.
(ஜோசியம் தெரிஞ்ச காவலர்கள்)

காவலர்களை அழைத்து வரும் பொறுப்பு பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாகத்தான் இருக்கும். (அவ்வளவு பெரிய சண்டை நடக்கும் போது அவன் மட்டும் ஓடிப்போய் போலிஸை கூப்பிடப்போறானாம்.)

ரவுடிகளின் முகத்தில் பெரும்பாலும் ஒரு கறுப்பு நிற மச்சம் இருக்கும். கழுத்தில் ஒரு கைக்குட்டை. நெற்றியில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும் ( ஆனால் இப்பொழுது ரவுடிகள் எல்லாம் டை கட்டித்தான் திரியுறாங்க )

படம் முடியும்போது எங்கெங்கோ இருக்கின்ற கதாபாத்திரங்கள் எல்லாம் சொல்லிவைத்தாற் போன்று சண்டை நடக்கின்ற இடத்திற்கு வந்து விடுவார்கள். (கடைசியில் சிரித்துக்கொண்டே போட்டோ பிடிப்பதற்காக. )

கதாநாயகியையோ இல்லை கதாநாயகனின் அம்மா அல்லது தங்கை கதாபாத்திரத்தையோ யாரவது காரில் கடத்திச் செல்லும் பொது தூரத்தில் ஏதாவது சிறுவனோ ( அந்த சிறுவனின் தாய் மிகுந்த ஏழை அந்த குடும்பத்திற்கு இவர் முன்பு உதவியிருப்பார் ) இல்லை கதாநாயகனுக்கு தெரிந்தவர்களோ மறைந்து இருந்து பார்த்து விட்டு அவரிடம் ஓடி ஓடி ஓடி வந்து சொல்வார்கள் ( கன்னியாகுமரியில் வைத்து கடத்தினாலும் சரி காஷ்மீரில் இருக்கும் கதாநாயகனுக்கு வந்து சொல்லிவிடுவார்கள் )

எம்ஜி ஆரை வில்லன் முதல் தடவை அடிக்கும் போது அவர் தரையில் போய் விழுவார். மறுபடியும் வில்லன் அடிக்க மறுபடியும் அங்கு தயாராக வைக்கப்பட்டுள்ள காலிடப்பாவில் சென்று விழுவார் மூன்றாவது முறையும் அடிக்க அவர் வாயில் இருந்து இரத்தம் வர கீழே விழுவார். உடனே ஒரு கையால் வாயைத் துடைத்துப்பார்ப்பார் அது ஜொள்ளா இல்லை இரத்தமா என்று கண்டுபிடிக்க, அது இரத்தம் எனத் தெரிந்தவுடன் கோபத்தில் முகம் சிவக்க ஆ என்று கத்திக்கொண்டே வில்லனை நோக்கிப் பாய்வார். (அது எப்படிங்க 3 வது முறை அடிக்கும்போது மட்டும் இரத்தம் வருகிறது. )

கதாநாயகியை அவளது வீட்டில் வந்து வில்லன் கும்பல் கடத்தும் போது குறுக்கே வரும் அவளது அம்மாவை வில்லன் ஆட்கள் ஒரு தள்ளு தள்ளி விட உடனே ஆ என்று கத்திக்கொண்டே விழுந்து மயக்கமடைந்து விடுவாள். (ஒரே தள்ளுல மயக்கமடைகிற காட்சி மிகவும் வித்தியாசமான சிந்தனைங்க. கடைசிவரை யாருக்குமே தெரியாது அவளை யார் வந்து எழுப்புவார்கள் என்று. )

பிரசவ நேரத்தில் கதாநாயகிக்கு பிரசவம் இல்லையென்றால் ஏதாவது ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நர்சுகள் பதட்டத்துடன் அங்கும் இங்கும் ஓடுவார்கள். (ஆபரேஷன் தியேட்டர்லதான் ஆபரேஷன் பண்றதுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்துவிடுவார்களே. அப்புறம் ஏன் அவங்க அங்கேயும் இங்கேயும் பதட்டத்தோட ஓடணும்? )
பின் டாக்டர் வெளியே வந்து இது ஒரு மெடிக்கல் மிராக்கில் என்று தவறாமல் சொல்லிவிடுவார்.

கதாநாயகி அல்லது கதாநாயகனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் உடனே முடும்ப டாக்டருக்கு தொலைபேசி செய்வார்கள். விறுவிறு வென்று டாக்டர் உள்ளே நுழைவார் ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் அணிந்துகொண்டு.( ஏதோ ஸ்டெதஸ்கோப்போடு பிறந்தமாதிரி )
அது மட்டுமல்ல எப்போதுமே வெள்ளைச்சட்டை அணிந்து கொண்டும் கையில் ஒரு பெட்டியோடும் வருவார்.

வில்லன் ஆட்களை துரத்திக்கொண்டு கதாநாயகன் காரில் செல்லும்போது வழியில் யாராவது இரண்டு பேர் கண்ணாடியைச் சுமந்துகொண்டு சாலையின் குறுக்கேச் செல்வது, ரோட்டுக்கு நடுவில் முட்டைக்கடை, பூக்கடை என்று வைத்திருப்பார்கள் அது பைபாஸ் ரோடு என்றாலும் கூட.
அந்தக்கார் கண்டிப்பாக டிராபிக் விதிமுறைகளை பின்பற்றாமல் தடுமாறிச் சென்று கண்ணாடியை உடைத்து- முட்டையை நொறுககி - பூக்கடைக்குள் நுழைந்து பூக்களை சிதறடித்துதான் செல்லும். (ஏன் வழியில தங்கக்கடை வைக்க வேண்டியதுதானே.. பட்ஜெட் எகிறிப்போயிருமோ? )

வில்லன் கும்பல் ஏதாவது வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அவர்களை துரத்திச் செல்லும் கதாநாயகன் வழியில் ஒண்ணுக்கு அடித்துக்கொண்டிருக்கும் அப்பாவிகளின் கார் அல்லது ஸ்கூட்டரை திருடிக்கொண்டு செல்வார். (அவன்கிட்ட கேட்டு வாங்கிட்டு போக வேண்டியதுதானே :) )

இப்படி பல வழக்கமான பாணிகளை பார்த்து அலுக்க வைத்த தமிழ் இயக்குநர்களின் உங்களுக்கு தெரிஞ்ச மசாலாக்களையும் எழுதுங்களேன்..?

- ரசிகவ் ஞானியார்

ஒரு புத்தாண்டுப் புலம்பல்


பிறந்து விட்டது புத்தாண்டு
இறந்துவிட்டது மனிதநேயம்
இருந்தாலும்
வழக்கம்போலவே உன்னை
வரவேற்கிறேன் புத்தாண்டே!

நீ வரும்போது
குழந்தையாகத்தானே வருகிறாய்..?
திரும்பிச்செல்லும்போது ஏன்..
தீவிரவாதியாகிறாய்;.?
கையில் தடியோடு..

சென்ற ஆண்டில் கிழிக்கப்பட்டது
காலண்டர் மட்டுமல்ல ...
மனிதநேயமும்தான்!

கணிப்பொறிக்கு கூட
மனிதநேயம் இருக்கிறது
ஆம்
ஏழை - பணக்காரன்
எவர் தொட்டாலும்..
ஒரே பதிலைத்தான் தருகிறது!
ஆகவே புத்தாண்டே!
இனி பிறக்கும்
குழந்தைகளை ...
கணிப்பொறிகளாகவே பிறக்கவை!

சாதிகளோடு ...
சம்பந்தம் பேசிக்கொண்டிருக்கும்
குடிமக்களின் தலையில்
குட்டி குட்டி ...
விரலின் ரேகை
வீணாணதுதான் மிச்சம்!

ஆகவே புத்தாண்டே
நீ
நீதியையெல்லாம்..
நிலைநிறுத்த வேண்டாம்!
முதலில்
சாதியை நிறுத்து போதும்!


இப்பொழுது
பாபரும் ராமரும்
இருந்திருந்தால் கூட
பரஸ்பரம் நண்பர்களாகியிருப்பார்கள்!
ஆனால் இவர்கள்
பாபருக்கும் இராமருக்கும்
போரிட்டு போரிட்டு ...
பொருளாதாரத்தை இழக்கிறார்கள்!
கூடவே
மனிதத்தன்மையையும்!

பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம்
பாலூற்ற மறுத்துவிட்டு..
பாபர்- ராமர் புராணம்தான்
பக்குவமாய் ஊட்டப்படுகிறது!
ஆகவே புத்தாண்டே!
பாபர்பாடும் ராமர்பாடும் போதும்
கொஞ்சம்
பண்பாடும் கற்றுக்கொடுப்போம்!

சிலரின் இரத்தம் குடிப்பவர்கள்
நிரபராதியாம்!
சிகரெட் குடிப்பவர்கள்
குற்றவாளியாம்!
ஆகவே புத்தாண்டே
மனிதர்களோடு
புகை பிடிப்பவர்களை...
தண்டித்து விட்டு பின்
புகை பிடிப்பவர்களை தண்டி!

தண்டச்சோறுக்கு மத்தியிலும்
தன்மானத்தோடு வாழும்
இந்திய முதுகெலும்பாம் எம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு...
கனவிலாவது ஒரு
கவர்மெண்ட் வேலை கொடு புத்தாண்டே!

ஏழைகள் திருடினால்
குற்றமல்ல என்று
புதுச் சட்டமியற்று
புத்தாண்டே!
இல்லையென்றால்
ஏழைகளுக்கு ...
பசிக்காத வயிறொன்றைப்
படைத்துக்கொடு!


வரதட்சணை வாங்கி
பெண் வீட்டாரின்
தன்மானத்தோடு..
வாலிபால் விளையாடும்
வாலிபர்களுக்கெல்லாம்..
மரணதண்டனை கொடு புத்தாண்டே!

சினிமா கதாநாயகர்களையெல்லாம் - தன்
வீட்டுக்காரனாக நினைத்துக்கொண்டிருக்கும்
விட்டில் பூச்சிகளாம் எம்
முதிர் கன்னிகளுக்கு..
கதாநாயகன் வேண்டாம்!
வில்லனையாவது..
வீட்டுப்பக்கம் அனுப்பு புத்தாண்டே!

எல்லோருக்கும்
காதல் உணர்ச்சியை
அதிகமாய் தூண்டு புத்தாண்டே!
ஆம்
தீவிரவாதிகளே
உருவாக மாட்டார்கள்!

ஒவ்வொரு புத்தாண்டிலும்
ஏதாவது ஒரு
கெட்டப்பழக்கத்தை
நிறுத்த வேண்டுமாம்!
ஒன்று செய்வோம்..
இந்தப்புத்தாண்டிலிருந்து
அரசியலை நிறுத்திவிடுவோமா..?

- ரசிகவ் ஞானியார்

Wednesday, December 28, 2005

கங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்தலைமுறைகளாய் ஜீவன்களின் தாகம் தீர்க்கின்ற தாமிரபரணி ஆறு ஓடுகின்ற திருநெல்வேலியில் கங்கை ஆற்றின் பெயர்தாங்கிய அந்தப்பகுதி கங்கைகொண்டான்.

ஒவ்வொரு வருடமும் பொழிகின்ற மழையைப் பொறுத்துதான் அந்த மண் மக்களின் உணவு தீர்மானிக்கப்படுகிறது. ஆம் கடவுளுக்கு அடுத்தபடியாய் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்ற உழவர்களின் பூமி அது.

ஒரு சில வசதியான விவசாயிகள் கிணறு வைத்திருந்தாலும் திருநெல்வேலி உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் நம்பியிருப்பது தாமிபரணித் தண்ணீரை மட்டுமே. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தாமிரபரணித்தண்ணீர்தான் தாய்ப்பாலைவிடவும் அந்த மக்களுக்கு முக்கியத்துவமாய் இருக்கின்றது.

தாகம் தீர்வதற்கு தாமிரபரணித் தண்ணீரை குடிக்கத் தேவையில்லை அந்த ஆற்றை நினைத்தாலே போதும். தாகம் பறந்து விடும்.

ஒன்று தெரியுமா..? திருநெல்வேலி அல்வாவின் புகழுக்கு காரணமே தாமிரபரணித் தண்ணீர்தான். அதே அல்வா செய்யும் பக்குவத்துடன் அதே ஆட்களை வைத்து மற்ற பகுதிகளில் அவர்கள் அல்வாவை தயாரித்தாலும் அந்த தண்ணீரின் தரத்தில் கிடைக்கும் சுவை வேறு எந்தத் தண்ணீரிலும் கிடைக்காது என்று நம்பப்படும் அளவிற்கு காரம் மணம் குணம் நிறைந்தது தாமிரபரணித் தண்ணீர்.

எனக்கு ஞாபகம் தெரிந்த வரையிலும் அந்த ஆறு வற்றியதை நான் கண்டதேயில்லை.

எனது ஊரில் தண்ணீர்ப்பஞ்சம் வந்தபொழுதெல்லாம் சைக்கிளின் பின்புறம் நான்கு குடங்களை கேரியரில் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் தாமிரபரணிக்குச் சென்று குளித்தும் குடத்தில் தண்ணீரப் பிடித்தும் வந்திருக்கிறேன்.

அந்த ஆற்றில் தண்ணீர் வற்றப்போகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு பசுவின் தாய்ப்பாலை விற்பதற்காய் வியாபாரிகள் கறந்து விட்ட பிறகு எஞ்சியுள்ள காம்பில் பால் சுரக்குமா என்று ஏங்கும் கன்றின் நிலைதான் எங்களுக்கு.

அப்படி அச்சப்படும் அளவிற்கு என்னதான் நடக்கப்போகிறது..?

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு 2017 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது சிப்காட் என்னும் தொழிற்சாலைப்பகுதி.


அங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்துதான் தண்ணீர் குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது.

அந்த சிமெண்ட் தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் லஷ்மி மில் நிறுவனத்தால் நடைபெறுகின்ற மாவு மில் ஒன்று இருக்கிறது.


மூன்றாவதாக அடியெடுத்து வைத்திருக்கிறது சிப்கால் தொழிற்சாலை.சவுத் இண்டியன் பாட்டிலிங் கம்பெனி ( South Indian Bottling Company - SIBCL) என்னும் பெயரில் வரப்போகும் அந்த தொழிற்சாலையினால் தங்களின் விவசாயம் பறிபோய் விடும் குடிதண்ணீர்த் தட்டுப்பாடு தோன்றும் மற்றும் அந்த ஆலையத்தில் கழிவு நீர்களினால் புற்றுநோய் வரக்கூடும் என்று அச்சத்தில் தூக்கமிழந்து தவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.


இது திருநெல்வேலி யிலிருந்து மதுரை செல்லுகின்ற குறுக்குவழிச்சாலையிலிருந்து 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த சிப்கால் தொழிற்சாலை எழுப்பும் பொறுப்பு சென்னையில் உள்ள சிசி லிமிடெட் (South Indian Bottling Company - SIBCL) என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 5 லட்சம் தண்ணீர் உறிஞ்சப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 5 லட்சம் 50 லட்சமாக மாறி தங்களின் கண்ணீர்களை தண்ணீராக்கிவிடுவார்களோ என்றும் குளிர்பானத்திற்காக வந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையையும் ஆரம்பித்து தங்களின் சந்ததியினருக்கு சாவு மணி அடித்திடுவார்களோ என்ற பயமும் மக்களை மிகவும் வாட்டுகிறது.

பின்னர் என்ன..? நம் வீட்டு தோட்டத்தில் பூப்பறித்து நம் காதில் சூடிவிடுவார்கள்.

வீ லஷ்மிபதி - சிப்கால் சூபர்வைசர் கூறியதாவது:

சென்னையில் இருக்கும் என்னுடைய சீனியர் அலுவலகர் எங்களிடம் கூறினார். எந்தப் பத்திரிக்கைகளும் இந்த விசயத்தை பெரிதுபடுத்தவே இல்லை..ஒரு சில பத்திரிக்கைகள்தான் திரும்ப திரும்ப எங்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வருகின்றது

அந்த நிறுவனம் அங்கே ஆரம்பிக்கப்பட்டால் நாங்கள் தாமிரபரணி தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்துக் கொள்வோம் என்று. அதுமட்டுமல்ல நாங்கள் ஆழ் கிணறுகள் தோண்டி கூட தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் மட்டும்தான் சிப்காட் மூலமாக எங்களுக்கு தருவதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது


கங்கைகொண்டானின் ஊராட்சி மன்ற உறுப்பினர் வி. கம்சன் கூறியிருப்பதாவது:

தண்ணீர் [PWD] Public Water Department லிருந்துதான் அவர்களுக்கு வழங்கப்படப்போகிறதே தவிர அவர்களுக்கு இங்கு கிணறு தோண்டுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல இந்த கோகோ கோலா நிறுவனத்தால் உள்@ர் மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்

( இவர் தற்போது உயிரோடு இல்லை. சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டார். )

இவரின் கூற்றுப்படி பல மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கும் என்றாலும் இரத்தம் உறிஞ்சுவதற்கு கூலி கொடுக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

மாவட்ட ரெவின்யு அலுவலர் திரு ஜி லோகநாதன் அவர்கள் கோக் ஆலை எதிர்ப்பாளர்களிடமிருந்தும் அதற்கு ஆதரவாளர்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அதுல் ஆனந்த் மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதற்காக முயற்சி மேற்கொண்டார்

கோக் எதிர்ப்பு குழுவும் அவர்களின் நியாயங்களும்

இந்த கோக் ஆலை எதிர்ப்பு அமைப்பானது தாமிரபரணி கூட்டு நடவடிக்கை குழு ( Joint Action Group for Thamiraparani – JAGT )ற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பும் ( Ground Water Conservation ) இணைந்து உள்ள அமைப்பாகும்.


 • இந்த எதிர்ப்பு குழுவோடு முன்னால் எம் எல் ஏ ஆர் கிருஷ்ணன் - மானூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் சி.எஸ் மணி - தமிழ்நாடு அறிவியல் குழுமத்தின் மாவட்ட செயலாளர் முத்துகமாரசாமி ( District Secretary of Tamilnadu Science Forum ) - திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி அருணா பாக்யராஜ் ஆகியோர் இணைந்து டி ஆர் ஓ திரு ஜி லோகநாதன் அவர்களை சந்தித்து கோகோ கோலா நிறுவனத்தினால் நேரப்போகும் தீமைகளை விளக்கினர்

  திரு மணி அவர்கள் இதுபோல கேரளாவில் உள்ள பிலாச்சிமடா என்னுமிடத்தில் உள்ள கோகோ கோலா நிறுவனத்தை பார்வையிட்டு வந்து கூறியதாவது:

  அந்தத் தொழிற்சாலை அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் பெரும் பாதிப்புள்ளாகின்றார்கள். இங்கு வெளியேற்றப்படும் கழிவு நீர்களினால் மனரீதியான மற்றும் உடற்ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பிறக்கின்ற குழந்தை - பெண்கள் மற்றும் சிறுவர்- சிறுமிகள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

  கோக் ஆதரவு குழுவும் அவர்களின் நியாயங்களும்

  இதற்கிடையில் அந்த தொழிற்சாலை வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பில் முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏ கருப்பையா மற்றும் சிப்கால் நிறுவன துணை மேலாளர் எஸ் கண்ணன் மற்றும் சிலர் டி ஆர் ஓ லோகநாதனிடம் சாதகமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

  கங்கை கொண்டான் பகுதி சரியான நீர்வரத்து இன்றி வறட்சி பூமியாக மாறிவிட்டதால் அவை தற்பொழுது விவசாயத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அங்கு விவசாய பூமிகள் அழிந்து கொண்டு வருகின்றது.

  பல நவீன புதிய கருவிகளை பயன்படுத்தப்போவதால் அதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது

  தமிழ்நாடு சுற்றுப்புற மாசுக்கட்டுப்பாடு மூலம் முறையான சோதனைகளும் அடிக்கடி மேற்கொள்ளப்படும்.

  பல வேலையில்லா உள்@ர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுதல்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்வதற்கு முன் திரு மணி அவர்கள் கூறிய பிலாச்சிமடா பகுதி..? அது என்ன..? அங்கு என்னதான் நேர்ந்தது..? அங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ள கோகோ கோலா கம்பெனியை மூடவேண்டும் என மக்களும் சில சமூக அமைப்புகளும் போராடுவதற்கான காரணம் என்ன..?
பிலாச்சிமடா :


கேரள மாநிலம் கொச்சினில் இருந்து 150 கிலோமீட்டர் வடக்குப்பகுதியில் உள்ளது இந்த பிலாச்சிமடா என்ற பகுதி.பெருமாச்சி என்னும் கிராமத்தின் ஆளுமைக்கு உட்பட்ட இந்தப் பாலக்காட்டுக்கு அருகே உள்ள இந்த பிலாச்சிமடாப் பகுதியில் மார்ச் 2000 ம் வருடம் மெல்ல மெல்ல கோகோ கோலா நிறுவனம் உள்ளே நுழைந்தது.

ஆந்த ஆலை ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலையே அப்பகுதி மக்கள் குடிதண்ணீரின் நிறம் சிறிது மாற்றமடைவதைக் கண்டுள்ளார்கள்.

தண்ணீருக்காக அப்பகுதி மக்கள் சுமார் 5 கி.மீ தொலைவு பயணப்படவேண்டியதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தச் தொழிற்சாலை வேறு தண்ணீரை உறிஞ்சுவதால் தேவையான அளவு தண்ணீர் தங்களுக்கு மறுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சுமார் 2000த்துக்கும் மேற்பட்ட மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.நிர்வாகம் அங்குள்ள கிராமமக்களுக்கு தினமும் தண்ணீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தது. ஆனாலும் அப்பகுதி மக்களுக்கு அது திருப்தியளிக்கவில்லை.
அந்த தொழிற்சாலை முன்பு 130 ஆண்கள் மற்றும் பெண்கள் கைது.
1000 பேர் தொழிற்சாலையை முற்றுகை
என்று போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

பிலாச்சிமடா பகுதி ஊராட்சி ஒன்றியம் கோகோ கோலா உரிமையை மறுபடியும் புதுப்பிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்று போராடியது.


இந்திய ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைப்படி அந்த நிறுவனத்தின் 8 நீர் உறிஞ்சி இயந்திரங்களால் சுமார் 1 மில்லியன் தண்ணீர் உறிஞ்சப்படுகின்றது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள தண்ணீர் அங்குள்ள சுமார் 20000 மக்களுக்கு தேவையான அளவு இல்லை என்று அறிக்கை அளித்து.


ஆனால் அந்த நிறுவனமோ 6 நீர் உறிஞ்சி இயந்திரங்களால் 0.3 முதல் 0.6 மில்லியன் நீர் மட்டும்தான் உறிஞ்சப்படுவதாகவும் மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தேவையான அளவு மழை பொழிவு இல்லாததே காரணம் என்றும் பதில் அளித்தது.

பிலாச்சிமடா பகுதி 'பெருமாட்டி' ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த நிறுவனம் சுமார் 30 கோடி வரை கொடுப்பதற்கு முன் வந்திருக்கிறது.

அது மட்டுல்ல அந்தப் பகுதியில் சாலை மின் விளக்கு கழிப்பறை வசதிகளும் கட்டித்தர ஒப்புதல் அளித்தும் அவர் மக்களின் எதிர்ப்பை கண்டு பயந்து ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். மக்களின் போராட்டமோ தொடர்ந்த வண்ணம் இருந்தது.

2004 ம் ஆண்டு ஏப்பிரல் 3 ம்நாள் கிளர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் கோகோகோலா ஆலைக்கு தண்ணீர் சுமந்து செல்லும் லாரியை வழிமறித்து
அங்கு ஏற்கனவே தயாராக சாலையில் காத்துநின்ற தங்களது கிராமத்து பெண்களின் குடத்தில் அந்த தண்ணீரை நிரப்பிச் செய்தனர்.


பின்னர் காவல்துறையினர் அந்தக் கிராமத்தை முற்றுகையிட்டு 7 சிறுவர்கள் உட்பட சுமார் 42 ஆண்கள்; மற்றும் பெண்களை கைது செய்தனர்
மாவட்ட கலெக்டர் சஞ்சிவ் கௌசிக் கூறியதாவது

எங்களது பகுதியில் உள்ள நல்ல தண்ணீரை பாழ்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்தப்பகுதியை விட்டுவிட்டு வேறு எந்த இடத்திலிருந்தாவது தண்ணீர் கொண்டு வர நிர்வாகம் ஏற்பாடு செய்தால் நாங்கள் அவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
நாங்கள் உற்பத்தியை நிறுத்துவதற்காகப் போரடவில்லை..தண்ணீரை இந்த இடத்திலிருந்து எடுக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்


இந்த தண்ணீர்ப் பிரச்சனைக்காகப் போராடும் மயிலம்மா என்ற குடும்பப் பெண்மணி கூறுகிறார்

எங்களது பூமியிலிருந்து குடிதண்ணீரை இவர்கள் இரண்டு வருடமாக திருடிக்கொண்டு வருகிறார்கள். அதனால்; இங்குள்ள கிணறுகள் எல்லாம் வற்றிக்கொண்டு வருகின்றது.

பிலாச்சிமடா பகுதி அமைந்துள்ள சித்தூர் என்ற ஏரியாவில் ஒரு விவசாயி தண்ணீர் பாசனம் இன்றி தவிக்கும் நிலையை தாங்க முடியாமல் விவசாய நிலங்கள் வறண்டு போனதாலும் கடன் தொல்லை காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டார்.


டிசம்பர் 16 - 2003 அன்று கேரள உயர்நீதி மன்ற நீதிபதி பாலகிருஷ்ணா நாயர்
தலைமையில் தீர்ப்பு கூறியதாவது

நிலத்தடி நீரை கண்டிப்பாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உறிஞ்சுவதற்கு அனுமதி இல்லை. இயற்கை வளத்தை இவ்வாறு சீரழிப்பது சட்டப்படி குற்றம்

இப்படியாக மக்கள் சக்தி மற்றும் பஞ்சாயத்து யூனியன் மற்றும் நீதிமன்றம் மூலமாக அந்த கோகோ கோலா ஆலை மார்ச் 2004 ம் நாள் மூடப்பட்டது.

பின்னர் 07.04.2005 அன்று நீதிபதி ராமச்சந்திரன் மற்றும் பாலச்சந்திரன் தலைமையிலான குழு அந்த தடையை மறுபரிசீலித்து கூறியதாவது

பொதுச்சொத்துக்களின் சில பகுதிகளை யாரேனும் உரிமை எடுத்துக் கொண்டால் அவர்கள் அதற்கு உரிமையாளராக இருந்தால் அதனை அவர்கள் உபயோகித்துக் கொள்வது சட்டப்படி குற்றமல்ல. அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து நீரை உறிஞ்சுவது எப்படி குற்றமாகும் ஆகவே அவர்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து நீரை உறிஞ்சுவதற்கு பஞ்சாயத்து யூனியனின் அனுமதி வாங்கத் தேவையில்லை.


மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் அந்த மண் பிரச்சனையையை மையமாக வைத்து
பாபுராஜ் மற்றும் சரத் சந்திரன் இயக்கத்தில் 2003 ம்ஆண்டு கைப்பு நீரு ( The Bitter Drink ) என்ற 28 நிமிடம் ஓடக்கூடிய டாகுமெண்டரி படம் வெளியானது.


பிலாச்சிமடாவிலிருந்து திருநெல்வேலி

இப்படி பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் அந்த நிறுவனத்தின் பார்வை தண்ணீர் பிரச்சனையின்றி இருக்கின்ற திருநெல்வேலி பக்கம் திரும்பியிருக்கின்றது.

South Indian Bottling Company யின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி, மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அனைத்து மாணவரணி அமைப்பும் இணைந்து செப்டம்பர் 23 -2005 அன்று பாளையங்கோட்டையில் ஊர்வலமும், கங்கை கொண்டானில் மறியலும் நடத்தியது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கங்கை கொண்டானில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னரே ஏன் இந்த மறியல் என்ற விளக்கக் கூட்டங்கள் வேறு ஆங்காங்கே நடத்தப்பட்டன.இதற்கு இவ்வளவு எதிர்ப்பு வருமென்று மத்திய அரசு கண்டிப்பாய் உணர்ந்திருக்காது.
விவசாய பாதிப்பு
கழிவுநீர் கலப்பினால் சுகாதாரக் கேடு
மண்ணின் வளம் குறைதல்
தண்ணீர்ப் பற்றாக்குறை
போன்ற காரணிகள்தான் அந்த நிறுவனம் அமைய எதிர்ப்பு அலைகள் வருவதற்கு காரணமாகும்.
இவற்றிற்கு உரிய பதிலளிக்குமா நிர்வாகம்.?
கோகோ கோலா நிறுவனத்தால் திருநெல்வேலியில் தண்ணீர் தட்டுப்பாடு வருகிறதோ இல்லையோ அந்த குளிர்பானத்திற்கு ஏன் உலகெங்கிலும் இத்தனை போராட்டங்கள் நடைபெறுகிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


அமெரிக்காவின கனெக்டிக் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கோகோ கோலா உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கு சோடா ரகங்களை பள்ளிகளில் விற்பனை செய்வதை தடைசெய்யவேண்டும் எனப் தீர்மானம் கொண்டு வர அதனை ஆளுநர் மறுத்துவிட்டார். சுமார் 25000 டாலர்கள் அந்த நிறுவனம் செலழித்துள்ளது அந்தத்தீர்மானம் தனக்கு சாதகமாக கிடைப்பதற்காக.


நமது நாடாளுமன்ற வளாகத்தினுள் கோக் விற்க அனுமதி மறுப்பு
கனடா கலிபோர்னிய பல்கலைக்கழகங்கள் மற்றும் க்வீன்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கை புறக்கணித்துப் போராட்டம்


என்ன செய்யப் போகிறோம் நாம்..? வறண்ட பூமியில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போகிறதே என்று அதற்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறோமா?


சமீபத்தில் கூட தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு போனதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் கண்ணீர்கதைகள் நடந்துகொண்டிருக்கின்றன.


அன்று
நஞ்சையுண்டு வாழ்ந்தார்கள்
இன்று
நஞ்சுண்டு வாழ்கிறாhர்கள்
- யாரோ

சில பத்திரிக்கைகள் (ஒரு சிலப் பத்திரிக்கைகள் தவிர ) புத்தாண்டுக்கும்; சுதந்திரதினத்திற்கும் நடிகையின் தொப்புளைக்காட்டும் படத்தை பிரசுரிப்பதில் முக்கியத்துவம் காட்டுகிறார்களே தவிர இதுபோன்ற சமூக பொறுப்புள்ள பிரச்சனைகளை ஒதுக்கிவிடுகிறார்கள்.


ஏன் அரசியல் மற்றும் அமெரிக்கச் சக்திகளுக்கு அடிபணிந்துவிட்டனவா..?

இன்றும் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரைக் கூறாமல் ஒரு தனியார் குளிர்பான கம்பெனியை எதிர்த்து மக்கள் போராட்டம் என்று மறைமுகமாக அதற்கு ஆதரவு அளிப்பதை பார்க்கும் போது ரூபாய் நோட்டின் மீது டாலர்கள் அமர்ந்து கொண்டு கை கொட்டிச் சிரிக்கின்றதோ எனத் தோன்றுகிறது..?

"டேய் அங்க வேலை கொடுக்க அப்ளிகேஷன் வாங்குறாங்களாம் ..நீ வர்றியா "
என்று பயோடேட்டா சுமந்துகொண்டு கங்கை கொண்டான் நோக்கி எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும் போது மனம் கனத்துப் போகிறது.


இளைஞர்களே! நம்
வயிற்றுக்கு அரிசி தருபவர்களின்
நன்றிக்கடனாகவா அவர்கள்
வாயில் அரிசி இடப்போகிறீர்கள்.?


தண்ணீர் அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டவர்களையும் கண்டிருக்கின்றோம் தண்ணீர் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களையும் கண்டிருக்கின்றோம்

சில அரசியல் சக்திகள் இதனால் விளையப்போகும் நன்மை தீமைகள் என்ன என்பதைப்பற்றி சிறிதும் ஆராயாமல் அரசியல் லாபத்திற்காகவும் மற்றவர்கள் எதிர்க்க ஆரம்பிக்கிறார்களே நாமும் எதிர்ப்போம் என்ற சுய விளம்பரத்திற்காகவும் சமூகப் பொறுப்புக்காக போராடுவதாக நடிக்கின்றன.


சில இயக்கங்கள் மட்டும்தான் இதனால் என்னென்ன தீமைகள் நேரக்கூடும் என்று மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஊட்டிக் கொண்டிருக்கின்றது.


நமக்குப் பின் வரும் நமது சந்ததியினர்களுக்கு இந்தத்திட்டம் பயனுள்ளதாக இருக்குமா..? இதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கின்றதா..? இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்க வேண்டும். இதனால் நேரப்போகும் நன்மை தீமைகளை மக்கள் குழுவின் முன் வைத்து விவாதிக்க வேண்டும்.

கங்கை கொண்டான்
கண்ணீர் கொண்டானாக மாறிவிடுமோ..?

உறிஞ்சப்படப் போவது
தண்ணீரா..? இரத்தமா..?
புதைக்கப்படப்போவது
விதைகளா..? மனிதர்களா..?

எப்போதும் எழுதி முடித்தப் பிறகு தூக்கம் வரும் இப்பொழுது ஏனோ தெரியவில்லை இதனை எழுதி முடித்தப்பிறகு எனக்கு தாகம் வருகின்றது.


- ரசிகவ் ஞானியார்

மீண்டும் வா சுனாமியே..

முத்தெடுத்ததற்காகவா நீ
மூச்சையெடுத்தாய் கடலே..!
தத்தெடுப்பதற்கு யாருமின்றியே
தவிக்கின்றோமே..?

காற்று வாங்க வந்தோம் - மூச்சுக்
காற்றை புடுங்கிவிட்டாய்!
கால் நனைக்கத்தானே வந்தோம் - ஏன்
இதயம் பிழிந்து விட்டாய்..?

பொங்கு கடலே! - மீண்டும்
பொங்கு..

எடுத்துச் சென்ற சொந்தங்களை ..
திருப்பி அழைத்துவர
மீண்டுமொருமுறை பொங்கு!

இனிமேல்
உப்பெடுக்கக் கூட..
உன் பக்கம் வரமாட்டோம்!

மீண்டும் வா சுனாமியே! - சொந்தங்களை
மீட்டு வா!

- ரசிகவ் ஞானியார்

Sunday, December 25, 2005

மரணம் நிகழப்போகிறதுநீங்கள் இதனைப் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு குழந்தை இறந்திருக்கக்கூடும்.

இந்த நிலநடுக்கம் பல லட்சம் மக்களின் வாழ்க்கையை நிரந்தரமாக பாதித்துவிட்டது. அவர்களின் வாழ்க்கைப்போக்கை அடியோடு மாற்றிவிட்டது
- இப்படி எழுதுகிறார் இஸ்லாமாபாத்திலிருந்து எழுத்தாளர் முரளிதர் ரெட்டி
பாதிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் அக்டோபர் 8 - 2005 நிலநடுக்கம் டிசம்பர் 6 சுனாமியை விடவும் மிகவும் மோசமானது. அதுபோன்ற அழிவுகள் தலைமுறைக்கு ஒருமுறைதான் நடைபெறுகின்றது
- என்கிறார் ஐக்கிநாட்டுச்சபையின் நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் ஈக்லேண்ட்.

இது மிகப்பெரிய தேசியத்துயரம் - பிரதமர் மன்மோகன் சிங்.

அக்டோபரில் நடைபெற்ற பூகம்பத்தில் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மக்களும் பாகிஸ்தானில் 75000 பேர்களும் இறந்துள்ளனர் 10000 த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் யாருமில்லாத அனாநையாக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படி ஒரு நிலநடுக்கும் மக்களை சின்னாபின்னாமாக்கி சீரழித்தப்போதும் உலகம் அதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை சரியான முறையில் தரவில்லை.

இது மிகவும் மோசமான பாதிப்பு என்று கூறிய ஜக்கியசபை நாடுகள் கூட இதற்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை.

இந்துப்பத்திரிக்கையின் முன்னால் தலைமை ஆசிரியரும் இப்போதுள்ள கட்டுரையாளருமான கல்பனா சர்மா இப்படிக் கூறியுள்ளார் :

The story of the continuing tragedy in the mountains of Kashmir on both sides of the line of control( LoC) dividing India and Pakistan has slipped off the main news columns. While Pakistan has seen a response by non-governmental groups and from Pakistanis from around the world, in India the response of civil society remains muted. Although there was some mention of corporate offering help, none has been evident on the ground on our sid eof Kashmir

- Kalpana Sharma in ( The Hindu ) 13.11.05
- Email : Sharma@thehindu.co.in-

"காஷ்மீர் மலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் நமது பத்திரிக்கைகளில் பிரதான இடத்தைப் பிடிக்கத்தவறி விட்டன.

நாகரீகமடைந்த சமுதாயங்களிலிருந்து வரவேண்டிய கருணையும் உதவியும் எதிர்பார்த்த அளவு வரவில்லை. சில நிறுவனங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக உதவிகளை அறிவித்தாலும் காஷ்மீர் பகுதியிலிருந்து எதுவும் தென்படவில்லை.

பத்திரிக்கைகள் அந்த சம்பத்திற்கு தரவேண்டிய சாதாரண அளவு முக்கியத்துவத்தைக் கூட தரவில்லை "என்றுதான் ஆதங்கப்படுகிறார்
கல்பனா சர்மா.

யோகேந்தர் சிக்கந் என்னும் பத்திரிக்கையாளர் காஷ்மீரின் இருபகுதிகளுக்கும் சென்று வந்து சொல்லும் செய்தியோ இன்னும் சோகமானது.

காஷ்மீரின் பெரும் பகுதிகளுக்கு உணவு - குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உடைகள் ஆகியவைகள் சென்று சேர்ந்திடவில்லை. இதனால் இந்த டிசம்பர் இறுதிக்குள் அல்லது ஜனவரியில் பல குழந்தைகள் இறந்துவிடக்கூடும்.

இதில் கொடுமையும் வேதனையும் என்னவென்றால் , இந்தியாவில் சில நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பாகிஸ்தான் மக்களிடமிருந்து வந்த பழைய துணிகள் காஷ்மீர் மக்களின் குளிரைப் போக்குவதற்குண்டான துணிகள் அல்ல..அவர்களின் கலாச்சாரத்திற்குப் பொருந்தாதவை.

கலாச்சாரத்திற்கு பொருந்தாதவை என்பதை விட அவர்களின் குளிரைப் போக்கும் சக்தி உடையதான இல்லை.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களின் சோகமோ இன்னமும் கோரமானது. ஹெலிகாப்டரில் வந்து நிவாரணம் வழங்குபவர்களாhல் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.

ஆகவே அவர்கள் மலைமீது உணவு பொருட்களை இட்டுச் செல்வதால் வயதானவர்கள் எல்லாம் அந்த மலை உச்சிக்கு நடந்து சென்று அந்த நிவாரணப் பொருட்களை பொறுக்க வேண்டியதாக இருக்கிறது.

யோகேந்தர் சிக்கந் என்னும் பத்திரிக்கையாளர் சொல்கிறார் "
"75 வயதான கண்பார்வை மங்கியவர் தன் மனைவியின் கையைப்பிடித்துக்கொண்டு 5300 அடி உயரமுள்ள அந்த மலை உச்சிக்குச் சென்று,

1 கிலோ சர்க்கரை
5 பிஸ்கட் பாக்கெட்
2 தண்ணீர் பாட்டில்கள்

ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கரடுமுரடான அந்த மலைப்பகுதியிலிருந்து மீண்டும் 5300 அடி இறங்கி வருகிறார். அதுவும் அவர் அதனை தனக்காகச் செய்யவில்லை. தனது குடும்பத்தில் எஞ்சியுள்ள ஒரு 5 வயது குழந்தைக்காகத்தான்.

அவர் மலைக்குச் செல்லும் சமயத்தில் அந்தக்குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் செல்கிறார். அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவர் இவ்வாறு 5300 அடி ஏறி இறங்க வேண்டியதாக இருக்கிறது. அந்தப்பயணமும் இனி மேல் தொடரப்போவதில்லை. எதிர்வருகின்ற குளிர்காலத்தில் அந்தப்பாதைகள் பனிகளால் மூடி மேலும் கரடு முரடாக மாறிவிடும்..அதன் பிறகு அவர்கள் என்ன செய்திடக்கூடும்?"
என்ற ஏக்கத்தில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார் :

“After that All they can do is wait to die “

"அதன்பிறகு அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவர்கள் காத்திருந்து மரணிக்கலாம் "

இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் கதை. மற்ற குடும்பத்தின் கதை..?

5300 அடி ஏறி இறங்குவது என்பது சாதாரண விசயமல்ல..கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் அந்தச் சூழலை..?

இந்த டிசம்பர் இறுதிக்குள் இல்லையென்றால் ஜனவரி மாதத்திற்குள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுங்குளிரால் இறந்துப் போகக் கூடும் என்ற செய்தி மனதை மிகவும் வாட்டுகின்றது.

மரணத்தை அறிந்தவன் இறைவன் மட்டுமே. ஆனால் நமக்கு இப்போது கண்கூடாகத் தெரிகின்றது அந்த உயிர்கள் இன்னும் சில மாத்திற்குள் இறந்துவிடக்கூடும் என்று.

இதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டாமா..? இந்தியப் பகுதிகளிலும் பாகிஸ்தான் பகுதிகளிலும் சுமார் 3 லட்சம் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சுமார் 1 லட்சம் மக்கள் இன்னும் சில வாரங்களுக்குள் இறந்துவிடக்கூடும்.

இப்போது உயிரோடு இருக்கும் பலர் அடுத்த வாரம் உயிரோடு இருப்பார்களா என்பது சந்தேகமே..?

பாருங்கள் இந்த வேடிக்கையை நம் கண்களுக்கு முன்னால் சில மரணங்கள் நடக்கப்போகிறது எனத் தெரிந்தும் நாம் அலட்சியமாக இருக்ப்போகிறோமா..?

யோகேந்தர் சிங் அவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி மக்களிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்திருக்கிறார். அவரை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

www.kashmirquakerelief.org

( நன்றி : விடியல் வெள்ளி )

ஆகவே அன்பர்களே! உயிரைக்காப்பாற்றும் உன்னதப் பொறுப்பு உங்கள் கைகளில் இப்பொழுது.

சமீபத்தில் நடிகர் கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது ஞாபகம் வருகின்றது:
"நான் வாழுகின்ற இந்தப் பூமியில்தான் பட்டினிச்சாவுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று நினைக்கும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது "

அதுபோல சகோதர சகோதரிகளே! அவர்களை மரணிக்கவிட்டுவிட்டு நாம் அலட்சியமாக இருந்தால் அந்த மரணத்திற்கு நாமும் ஒரு காரணமாகி விடுவோம்.

தூக்குதண்டனை கைதி மரணம் நிச்சயிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதையே நம்மில் சிலர் இங்கே எதிர்த்து வருகின்ற நிலையில் எந்தத் தவறுமே செய்யாமல் இன்னும் சில நொடிகளிலோ, நிமிடங்களிலோ , நாட்களிலோ ,வாரங்களிலோ, மாதங்களிலோ மரணத்தை எதிர்நோக்கப் போகும் அவர்களுக்காய் கருiணைப்பாவையை வீசுங்களேன்...தாங்கள் ஒரு பெப்சி அல்லது டீ குடிக்கின்ற காசை மட்டுமாவது அனுபப்புங்களேன். தாங்கள் ஜீரணிப்பதற்காய் குடிக்கின்றீர்கள் நான் ஜீவன் வாழவேண்டுமே எனத் துடிக்கின்றேன்.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும் காசில் ஒரு உயிருள்ள ஜீவனை காப்பாற்றுங்கள்.

இதைப்படித்து முடிந்தவுடன் , "ச்சே கிளம்பிட்டாங்கப்பா வசூலிக்க".."நாம எவ்வளவுதான் கொடுக்கிறது" என்று அலட்சியமாக நினைத்து "அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று இருந்து விடாதீர்கள். நீங்கள் ஒத்திவைக்கின்ற நேரங்கள் அங்கே உயிர்களின் மூச்சுக்கள் நிறுத்திவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


"இப்படி நடக்கவா போகின்றது? "

"இதெல்லாம் கட்டுக்கதை "

"நாம ஒருத்தன் கொடுக்கலைன்னா என்ன ஆகப்போகிறது .. "

"எந்த இளிச்சவாயனாவது கொடுப்பான் "


என்று சோம்பல் பட்டுவிடாதீர்கள் நண்பர்களே. உங்கள் சோம்பலில் எத்தனை உயிர்கள் சாம்பல் ஆகிவிடும் தெரியுமா..? ஒன்றல்ல இரண்டல்ல சுமார் பத்தாயிரம் குழந்தைகள். ஒரு குழந்தை பெறவே கொஞ்சம் கால தாமதமாகிவிட்டால் , மருத்துவரிடம் பணம் இறைத்து சோதனைகள் செய்கின்றோம் - ஆலமரம் சுற்றுகிறோம் - இறைவனிடம் வேண்டுகிறோம். ஆனால் பத்தாயிரம் குழந்தைகள் என்றால் நினைத்துப்பாருங்கள்..எத்தனை தாய்களின் வலி அது..?


வீட்டில் கொஞ்சம் ஏசியை அதிகமான வைத்தாலே நம் குழந்தைகள் குளிரில் நடுங்கி போர்வையை இழுத்துக்கொண்டிருக்கும் காட்சி தங்கள் ஞாபகத்திற்கு வரக்கூடும். ஆனால் அதிகமான மைனஸ் டிகிரியில் ஒதுங்க இடம் - உடுக்க ஆடை கூட சரிவர இல்லாமல் நடுங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பச்சிளங்குழந்தைகளை நினைத்துப்பாருங்கள் அன்பர்களே!

வாடகை வீடாம் பூமியிலே..
மனிதநேயம் ஒரு கதவு!
பாடையிலே நீ போகுமுன்னே..
பத்துப் பேருக்கு உதவு!


மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன்.


நீங்கள் இதனைப் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு குழந்தை இறந்திருக்கக்கூடும்.இதயம் பிரார்த்தனையுடன்

ரசிகவ் ஞானியார்Saturday, December 24, 2005

என்கூட கராத்தே வர்றியா..
1999 ம் ஆண்டு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் விடுதியின் நான் , சேர்மன் நவாஸ்கான் மற்றும் பேய் ராஜா எல்லாரும் கூடியிருக்கிறோம்.

நான் விடுதியில் தங்கிப் படிப்பவன் அல்ல என்றாலும் மாணவர் பேரவை செயலாளராக இருந்ததால் அன்று நடைபெற்ற விளையாட்டு தினத்தைப்பற்றிய கலந்தாலோசிப்பதற்காக அன்று விடுதியில் தங்க நேர்ந்தது.

மூன்றாமாண்டு மாணவர்களுக்கு 3 வது மாடி ஒதுக்கப்பட்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் இரவு 1 மணியை நெருங்கியது.

நான் ராஜாவிடம் கேட்டேன்

டேய் நம்ம சக்திவேல் அறை எங்கடா இருக்கு?

யாருடா.. கவிதையெல்லாம் எழுதுவானே..? அந்த சக்திவேலா..இதோ ரெண்டு அறை தள்ளிதாண்டா இருக்கு..ஏன்..? - ராஜா

இல்லடா! அவன் கராத்தே க்ளாஸ் படிக்கிறான்ல..அந்த திமிர்ல தினமும் நான் எதிரில் வரும்பொழுதெல்லாம் "டேய் ஞானி என்கூட கராத்தே வர்றியா..ஆ..ஊ" அப்படின்னு ஆக்சன் காட்டுறான்டா...சும்மா கையை பிடிச்சு முறுக்குறான்..அதான் அவன இன்னிக்கு தூங்க விடக்கூடாது - நான்

டேய் வேண்டாம் அப்புறம் நாளைக்கு சேர்மன் செகரெட்டரி எல்லோரையும் ஒட்டு மொத்தமா கம்ப்ளைன்ட் பண்ணிருவாங்க.. -
-சேர்மன் நவாஸ்கான் பதறினான்

அதெல்லாம் ஒண்ணும் நடக்காதுப்பா..கவலைப்படாத..
- நான் லேசான பயத்தை மறைத்துக் கூறினேன்

சரிடா என்ன பண்ணப்போற - பதறியபடி கேட்டான் ராஜா

நீ எங்கூட வாடா..அவன் அறைய காட்டு
- அவனை இழுத்துக்கொண்டு சென்றேன்

அவன் அறை வாசலில் போய் நின்று..
சக்திவேல்..யப்பா..சக்தி..டப்..டப்..டப்..டப்.. - பலமாகத் தட்டினோம்

படித்துக்கொண்டிருந்திருக்கிறான் போல உடனே கதவைத்திறந்து விட்டான்
எங்களைப்பார்த்தவுடன் அவனுக்கு ஆச்சர்யம்!.."என்னடா இவன் இந்த நேரத்துல இங்க வந்திருக்கான்" என்று..

டேய் சக்திவேலு! என் கூட கராத்தே வாடா..ஆ..ஊ என்று அவனைப்போலவே கத்தி குடித்தவன் போல உளறினேன்.

அவன் நிஜமாகவே நம்பிவிட்டான்..
டேய் ஞானி போடா..நாளைக்குப் பேசிக்கலாம்டா..போடா
என்று கெஞ்சினான்

அதற்குள் பக்கத்து அறை மாணவர்கள் சத்தம் கேட்டு கதவை திறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் எனக்கும் சக்திவேலுக்கும் ஏதோ சண்டை என நினைத்துவிட்டார்கள்.சக்திவேலுக்கு தர்மசங்கடமாகிப் போய்விட்டது..

டேய் வாடா எங்கூட கராத்தே பண்ண வாடா..காலையில் நீ கூப்பிட்டல்ல..இப்ப நான் கூப்புடுறேன் ..வர்றியா கராத்தே..
விடமாட்டேன் டா உன்னய..
என்று நான் கத்தி ஆக்சன் காட்ட,

ராஜாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. என் காதில் முணுமுணுக்கிறான்..

டேய் ஓவரா ஆக்சன் காட்டாத கண்டுபிடிச்சுடுவான்..நாளைக்கு எல்லா ஸ்டூடண்டும் போய் கம்ப்ளைண்ட் பண்ணிருவாங்கடா..பார்த்துக்கோ..என்க

சக்திவேலோ மிரண்டு போய் ராஜாவிடம் ,
டேய் ராஜா இவன கூட்டிட்டு போடா..எல்லாரும் பார்க்குறாங்கடா..நாளைக்கு பிரச்சனையாயிடும்..என்று கெஞ்சினான்

இல்லடா ஓவரா ஏத்திக்கிட்டான் இவன்..என்று அவனிடம் சமாதானம் சொல்லி

பின்னர் தடுமாறும் என்னை கைத்தாங்கலாக அழைத்துச் செல்வது போல ராஜாவும் நடிக்க நேராக நாங்கள் அறைக்குத் திரும்பினோம்..

அறையில் சென்றதும் ராஜா நடந்த விஷயத்தை சேர்மன் நவாஸ்கானிடம் சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கின்றான். அப்படியே தூங்கிப்போனோம்..

மறுநாள் காலையில் சக்திவேலை கல்லூரி வராண்டாவில் பார்த்தேன். எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தான்.

டேய் குட்மார்னிங்டா என்று நான் கூற அவன் ஒரு விதமாய் என்னைப் முறைத்துக்கொண்டே, "இவன் நேத்து நடந்தது தெரியாத மாதிரி நடிக்கிறானா..இல்லை உண்மையிலேயே தெரியலையா.."என்று நினைத்துக்கொண்டே ,

ம் ம் குட்மார்னிங் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அதிலிருந்து நானும் ராஜாவும் அவனை கல்லூரியில் காணும் போதெல்லாம்..டேய் கராத்தே போடலாம் வர்றியா ....என்று கத்தி கிண்டல் செய்யுவோம் .

கராத்தே செய்பவர்களைக் தொலைக்காட்சியில் காணும்போதெல்லாம் எனக்கு அந்த சக்திவேல் ஞாபகம்தான் வரும்.

- ரசிகவ் ஞானியார்

Thursday, December 22, 2005

கண்களை நனைத்துவிடாதே கடலே!

தூங்கியவன் தூங்கியபடியே
உண்டவன் உண்டபடியே - கனவு
கண்டவன் கண்டபடியே...

கரையில் தூங்கியவர்களை...
கடலில் விழிக்கவைத்துவிட்டாயே ?

விதைக்க நீர் கேட்டால்...
புதைக்க வந்து விட்டாயே..?
கடலே! நீ அடங்கு! - உன்னால்
காணுமிடமெல்லாம் சவகிடங்கு!

மீன்களோடு விளையாடி...
மரத்துபோய்விட்டதால்
மனிதனோடு விளையாட...
மண்ணுக்கு வந்துவிட்டாயோ ?

ஜமீன்தாரர்கள் எவருடனாவது
சகவாசம் வைத்துக்கொண்டாயா?
பின் எப்படி வந்தது ...
மொத்தமாய் நிலம்பறிக்கும்
ஜமீன்தாரர்களின் புத்தி?

ஒரு
சுனாமி அலையிலே
எங்களை
பிணங்களுக்கு
பினாமி ஆக்கிவிட்டாயே ?

தாகத்தை நிறுத்தச் சொன்னால்
மூச்சை நிறுத்திவிட்டாயே ?

உன்னைப்பார்ப்பதற்குத்தான்...
தேடி வருகிறோமே!
கட்டாயப்படுத்தி ஏன்...
களவாடிச்செல்கிறாய்?

இனிமேல் நீ
கல்லெறிந்தால் கூட...
அலையெழுப்ப கூடாது!

சுண்டுவிரல் நனைக்கவந்து...
சிணுங்கி திரும்பும் பெண்கள்

திருப்பி தந்துவிடுவாய் என்று...
செருப்பு வீசும் சிறுவர்கள்

சிப்பியென நினைத்து
நண்டு எடுக்கும் குழந்தைகள் - என

எல்லோருக்கும்...
களிப்பூட்டிய கடலே!

நெடுநேரம் காத்துக்கொண்டிருந்த காதலி..
அடம்பிடித்து அழும் சிறுவன்..
லாபமில்லாத சுண்டல் வியாபாரி..
சோகம் சொல்லும் நண்பன்..
இப்படி
எல்லோருக்கும்...
ஆறுதல் சொல்லிய அலையே!

இப்பொழுது
கொலை செய்யும் வெறியோடு
கொந்தளித்ததேனோ?

நீ
கால்பிடித்து இழுத்துச்சென்றவர்களின்
கதறல் சப்தத்தில்...
விவேகானந்தர் அங்கே
விழித்துக் கொண்டாராம்...

கடல்காண ஆசைப்பட்டது போதும்
கடலே!
கரைகாண ஆசைப்படுகிறோம்
திருப்பி அனுப்பிவிடு!

மீன்பிடிக்க கடல்வந்தது
போதுமென்றா நீ
மனிதனை பிடிக்க...
நகர் வந்தாய்!

இப்பொழுது
மீன் கிடைத்துவிட்டது
மனிதர்கள்தான் கிடைக்கவில்லை...

கடல்மாமா! கடல்மாமா!
அம்மாவை அப்பாவை
முதலில் அழைத்தாய்!

அண்ணனை தங்கையை...
மீண்டும் அழைத்தாய்!

உன்னோடு விளையாட ...
எல்லோரும் வந்துவிட
வீதியிலே நான்மட்டும்
தனியாக நிற்கின்றேன்!

அடுத்தமுறை வரும்போது
என்னையும் கூட்டிப்போ கடல் மாமா!

இப்போதைக்கு திருப்பிஅனுப்பேன்
அந்த கஞ்சி சட்டியை...?


- கரையில் புலம்பும் சிறுவனின்
கால்களைமட்டும் நனைக்க வா !
தயவுசெய்து
கண்களை நனைத்துவிடாதே கடலே!


- ரசிகவ் கே. ஞானியார்

நில்! கவனிக்காதே! செல்!
பேருந்தில் நான்
நோட்டுப்புத்தகத்தை,,,,
தரும்போதே நீ
திருப்பித்தந்திருந்தால்,,,
இந்தக்காதல் ஏற்பட்டிருக்காதடி!

பத்திரிக்கையில் பிரசுரமாகும்...
என்
காதல் கவிதைகளையெல்லாம்...
நான் உனக்காக எழுதியதென்று
நீயேன்டி நினைத்துக்கொண்டாய்?

என் நண்பனை காண
வகுப்புக்கு வந்தபொழது...
உன்னைப்பார்க்க வந்ததாய்
உன் தோழியிடம் கூறி...
வெட்கப்பட்டாயாமே?என் வீட்டுக்குப்போன்செய்து...
நானென நினைத்து
என் அண்ணனிடம்...
ஏதேதோ உளறினாயாமே?

என்
மம்மியும் அடிக்கடி
முணணுமுணணுக்கிறார்கள்
“தொலைபேசியில்...
யாரோ ஒருத்தி
மாமி என்று அழைக்கிறாளே?
யாருப்பா அது?”

என்
கவிதை ஒலிக்கின்ற
மேடையிலெல்லாம்
முதல் கைதட்டலும் நீதான்...
கடைசி கைதட்டலும் நீதான்...

நான்
பேருந்து வருகிறதா என...
திரும்பிப்பார்க்க,
நீயோ
உன்னைப்பார்ப்பதாய்...
நினைத்துக்கொண்டால்
நான் என்னடி செய்வேன்?

மேகங்கள் இருட்டிவிட்டதாய்
மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டு...
மழைபொழியவில்லையென ஏனடி
மன்றாடுகிறாய்?

நீ
தூக்கமாத்திரைகளை வைத்துக்கொண்டு- எனை
தூங்கவிடாமல் செய்ததால்
சகாராவில்...
சாரலடிக்கச் சம்மதித்துவிட்டேன் !

வெயில்படாமல் வைத்திருந்த என்
விளையாட்டு மனசை...
குயிலே நீ வந்து
கூட்டிட்டுப்போனாய்!

காற்றுக்குத் தெரியாமலிருந்த என்...
காதல் உணர்வுகளை
புயலுக்கிழுத்துவிட்டு...
புன்னகைப்பவளே!

அமெரிக்கா ஏவுகணைபோல - என்
ஆப்கான் இதயத்தை...
அழித்துவிட்டு,
நேற்றைய மெரினாவில்...
நெஞ்சில் சாய்ந்து அழுகிறாயடி !
“மறந்துவிடுங்கள்” என்று

எத்தனைமுறை
சொல்லியிருக்கிறேன் ...?
"உனக்கு
பார்த்துக்கொண்டிருக்கும் வயசில்...
நானோ
படித்துக்கொண்டிருப்பேன்!
என்னைக் காதலிக்காதே!" என்று


”மறந்துவிடுங்கள்”
இதென்ன
இந்தியகுமரிகளின்...
தேசியகீதமா?


அப்பாவியை அழவைக்கும்...
ஐந்தாண்டுத்திட்டமா?

பரவாயில்லை,
ஒரே ஒரு உதவி செய்!
உன்
துணைக்கு வரும்...
தோழிகளிடமெல்லாம் சொல்லிவிடு !

இனிமேல்
பேருந்தில் யாராவது
நோட்டுப்புத்தகம் கொடுத்தால்...
தயவுசெய்து
திருப்பிக்கொடுக்கச் சொல்லிவிடு !

எங்களுக்கு
உயிரும் இதயமும்...
ஒன்றுதான்
ஒருமுறைதான் போகும் !

- ரசிகவ் கே.ஞானியார்

Wednesday, December 21, 2005

முன்னெச்சரிக்கை

1. சீனாவின் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபொழுது,

2. அமெரிக்காவின் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தபொழுது ,
-ரசிகவ் ஞானியார்

Monday, December 19, 2005

துவக்கு கவிதைப் போட்டி: கடைசித் தேதி நீட்டிப்பு

துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டிக்கு கவிதைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் டிசம்பர் 15ம் தேதியிலிருந்து ஜனவரி 15 தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசு: உருபா. 10இ000
இரண்டாம் பரிசு: உருபா. 7500
மூன்றாம் பரிசு: உருபா. 5000
பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு

கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.

இ. இசாக்
post Box: 88256
Deira
Dubai, U.A.E

சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு

மின்னஞ்சலில் அனுப்ப

thuvakku@yahoo.com
thuvakku@gmail.com


கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15-01-2006

விதிமுறைகள்:

1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.

2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.

3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.

4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதைஇ அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.

5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.

6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.

மேலும் விரிவான விபரங்கள் அறிய: www.thuvakku.com
மாற்று கவிதையிதழ் www.koodal.com ஆகியவற்றை பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 503418943.
கவிமதி- 00971 505823764
நண்பன்- 00971 50 8497285.
சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653இ
சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.நன்றி கீற்று
-ரசிகவ் ஞானியார்

Sunday, December 18, 2005

பெட்ரோல்......பெற்றோர் திருடா?


ஏவுகணைச்சப்தத்தில்
தாயின் கருப்பையிலிருந்து
வெடித்து விழுந்தேன்

விழித்துப்பார்க்கையில்...
நான்விளையாடி மகிழ..
என்னைச்சுற்றி...
ஏவுகணைகள்!

தாலாட்டுக்குப்பதிலாக ...
ஒப்பாரிச்சப்தம்!

பாக்தாத் வீதியில் -உணவு
பொட்டலம் வாங்கச்சென்றதால்
பாட்டிமட்டும் உயிரோடு!

பெட்ரோலுக்காக வந்து- என்
தாய்ப்பாலை ஏன் ...
தட்டிப்பறித்தீர்கள்?

பெட்ரோலையும் என்...
பெற்றோரையும் திருடியது போதும்.!

இதோ
வீசுகிறோம்.....
வெள்ளைக்கொடி!
போரையும் எங்கள்...
பசியையும் நிறுத்துங்களேன்.........?

- ரசிகவ் ஞானியார்

Saturday, December 17, 2005

மின்னஞ்சலில் வந்த பொட்டுவெடி
பாராளுமன்றத்தில் வெடிகுண்டுப்புரளி - அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உலாவரும் செய்திதான் என்றாலும் சென்ற முறை பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் நடந்த தினங்களை ஒட்டி இந்த வெடிகுண்டுப் புரளி வந்ததால் எல்லோருக்கும் பயம். மறுபடியும் அதுபோல ஏதேனும் அசம்பாவிதம் நடந்திடுமோ என்று..?

என்ன நடந்திருக்கிறது..?

16.12.05 காலை பதினொரு மணிக்கு சபாநாயகரிடம் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பேசிக்கொண்டிருந்த - பேச முற்பட்ட தூங்கிக்கொண்டிருந்த..தூக்க கலக்கத்தில் உள்ள உறுப்பினர்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள்.

பாதுகாப்பு படைகளுக்கு அவசர அவசரமாய் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. வழக்கமான நாய்களின் துணையோடு பாராளுமன்றம் சோதனையிட்டபிறகு வெடிகுண்டு இல்லை என உறுதி செய்யப்பட்டப்பிறகுதான் அனைவருக்கும் நிம்மதியாயிற்று

அனைத்து உறுப்பினர்களும் கோபத்தில் துடிக்கிறார்கள் . கண்டிப்பாய் புரளிக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று ஆணைகள் பறக்கின்றன.

புரளி மின்னஞ்சலில் வந்திருக்கின்றது. எவனோ ஒரு புத்திசாலி முட்டாள் அனுப்பியிருக்கிறான். கணிப்பொறியில் அரைகுறை ஞானம் உடையவன் செய்த செயல் இது.


கணிப்பொறியின் ஐபி முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை வைத்து அந்த மின்னஞ்சல் தமிழ்நாட்டிலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிந்தவுடன் முதலில் சென்னைக்கு தகவல் பறக்கின்றது. சென்னை சைபர் க்ரைமுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் ஆணைகள் பறக்கின்றது.

நமது புத்திசாலி சென்னை சைபர் கிரைம் கண்டுபிடித்துவிட்டது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று.? அது திருநெல்வேலி யில் உள்ள பாளையங்கோட்டைப்பகுதியில் இருந்து வந்திருக்கிறது
பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி என்ற பகுதியில் உள்ள செல்வின் ப்ராட்பேண்ட் என்ற ப்ரவுசிங் சென்டரிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.


எவ்வளவு வேகமாய் இருக்கிறார்கள் நமது சைபர் கிரைம்.? சமீபத்தில் மொபைல் தொலைபேசி தொலைந்து போனதை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்தார்களாம். ம் பரவாயில்லை..இப்படியே சென்றால் மக்களுக்கு தேச பாதுகாப்பின் மீது நம்பிக்கை வலுக்கும்.

அந்த மின்னஞ்சல் சிபி என்ற இணைத்தளத்திற்கு சொந்தமானது. அந்த இணையதளத்தில் உள்ள டேட்டாபேஸை ஆராய்ந்தால் எப்பொழுது - எங்கிருந்து - எந்த முகவரியில் அந்த மின்னஞ்சல் ஆரம்பிக்கப்பட்டது என்று அந்த மின்னஞ்சல் பற்றி புட்டு புட்டு வைத்துவிடும். ஆனால் அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரன் தவறான தகவல் கொடுத்திருக்கக் கூடும்.

அவ்வாறே தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டாலும் அவன் அனுப்பிய கணிப்பொறியின் சில இரகசிய தகவல்களைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்து அனுப்பப்ட்டது என எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

சரி ப்ரவுசிங் சென்டர் என்பது பப்ளிக் பூத் மாதிரி யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வரலாம். யார் எனக் கண்டுபிடிப்பது கடினமல்லவா..? அதற்கும் ஒரு வழி இருக்கிறது

ப்ரவுசிங் சென்டர் உரிமையாளரை ( அவரை அடித்து துன்புறுத்தாமல் ) முறையாக விசாரித்து-

 • அவரிடம் ஞாபகப்படுத்தச் சொல்லி - அந்த குறிப்பிட்ட நாளில் - அந்த மின்னஞ்சல் வந்த பத்து மணியிலிருந்து பதினொரு மணிக்குள் யார் யாரெல்லாம் வந்தார்கள் என்று விசாரிக்கலாம் .
  அவ்வாறு அவருக்கு முகங்கள் மறந்து போனாலும் வந்தவர் எப்பொழுதும் வருபவரா இல்லை புதிதாக வருhவரா என்று தெரிந்து கொள்ளலாம்..( இரண்டு நாள் தானே ஆகியிருக்கிறது ..அதெல்லாம் மறக்குமா என்ன..?


  அந்த ப்ரவுசிங் சென்டருக்கு வழக்கமாக யார் யாரெல்லாம் வருவார்கள் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் படுத்த வேண்டும்?


  அந்தப்பட்டியலில் இருப்பவர்களில் பள்ளி கல்லூரிக்குச் செல்பவர்கள் யார் யார் ? சும்மா இருப்பவர்கள் யார் யார் என்று பகுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் அந்த மின்னஞ்சல் பத்து மணியிலிருந்து பதினொரு மணிக்குள் வந்திருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்களாய் இருக்காது.


  அப்படியே பள்ளி கல்லூரி மாணவர்களாய் இருந்தால் என்ன காரணங்களுக்காய் பள்ளி கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் திரட்ட வேண்டும்.


  இப்படி வடிகட்டி எடுத்த பட்டியலைக் கையிலெடுத்துக்கொண்டு அவர்களின் புகைப்படத்தோடு அவர்களை அந்த ப்ரவுசிங் சென்டர் உரிமையாளர் முன் நிறுத்தினால்போதும் அவர் எளிதாக கண்டறிந்துவிடக்கூடும்.


இன்னமும் சில நாட்களில் கண்டிப்பாய் அந்த நபரை எப்படியும் கண்டறிந்துவிடக்கூடும். ஆனால் அப்பாவிகள் யாரும் மாட்டிவிடக்கூடாது.

சில வருடங்களுக்கு முன்பு கூட முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கொலைமிரட்டல் மின்னஞ்சலில் வந்திருக்கின்றது. அனுப்பியது யாரென்று விசாரித்ததில் அதுவும் திருநெல்வேலிப் பக்கம்தான்.நாகர்கோவில் பகுதியைச்சார்ந்த ஒரு கல்லூரி மாணவி அனுப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறாள்

அதிலிருந்து சைபர் க்ரைம் உஷராகி ஒவ்வொரு ப்ரவுசிங் சென்டருக்கு வருபவர்களிடமும் பெயர் முகவரி வாங்கி வைத்துக்கொண்டுதான் ப்ரவுசிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஆனால் அந்த விதிமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் சரியான கட்டுப்பாடுகள் இன்றி தளர்த்தப்பட்டுவிட்டன.

சைபர் க்ரைம் காவலர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ப்ரவுசிங் சென்டரில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை விசிட் செய்து அந்த மாதம் முழுவதும் வந்த நபர்களின் தகவல்களை திரட்டி வைத்திருக்க வேண்டும். இப்படி அவர்களது கண்காணிப்பில் வைத்திருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு.


முன்பெல்லாம் ரவுடிகள் - கொள்ளைக்கூட்டக்காரர்கள் என்று பழைய படங்களில் ஒரு கதாபாத்திரத்தைக் காட்டுவார்கள்.

எப்படியென்றால் அந்த கதாபாத்திரத்தின் கைகளில் ஒரு கத்தியை கொடுத்து விடுவார்கள். முகத்தில் அல்லது நெற்றியில் ஒரு வெட்டுக்காயம் - முறுக்கி வைத்த மீசை - கழுத்தில் கசக்கி கட்டப்பட்ட கைக்குட்டை என்று தோற்றமளிக்குமாறு இருக்கும்.

இப்பொழுதெல்லாம் கைக்குட்டைக்குப் பதிலாக டை...கைகளில் கத்திக்குப் பதிலாக லேப்டாப் என்று ரவுடிகளும் விஞ்ஞான யுகத்தில் வளர்ந்து விட்டார்கள்

பாருங்களேன். அறிவியல் முன்னேறற்றம் ஆக்கத்தை விடவும் அழிவுக்கும் அதிகமாகவே பயன்படுகின்றது

- ரசிகவ் ஞானியார்

Thursday, December 15, 2005

காதலித்துப்பார்
காதலித்துப்பார்!
பாக்கெட்டில் புதிதாய்ச்
சீப்பு முளைக்கும்.

காதலித்துப்பார்!
கழுத்துக் கைக்குட்டை
பாக்கெட்டில் நுழையும்

காதலித்துப்பார்!
பேருந்து நிலையமும்
தாஜ்மஹாலாகும்

காதலித்துப்பார்!
திலோத்தமையைக் கூட - வீட்டுத்
திண்ணையில் வைப்பாய்

காதலித்துப்பார்!
அவள் வந்தால்
உடைந்த பேருந்தும்
உயர்வாய்த் தெரியும்

காதலித்துப்பார்!
ஜன்னலோர சீட்டிற்கு
ஜனாதிபதி அந்தஸ்து கொடுப்பாய்

காதலித்துப்பார்!
கிழிந்து போனாலும்
ஜீன்ஸ்தான் போடுவாய்

காதலித்துப்பார்!
மல்லிச் செடியில்
ரோஜா முளைக்கும்

காதலித்துப்பார்!
சொட்டைத் தலையில்
முடிவளரும்

காதலித்துப்பார்!
பாதசாரியைக் கண்டுகூடப்
பயந்து போவாய்

காதலித்துப்பார்!
பூங்கா இல்லாத ஊரில்
பூகம்பம் வரட்டுமென்பாய்

காதலித்துப்பார்!
கடன் வாங்கியாவது
பைக்கில் சுற்றுவாய்

காதலித்துப்பார்!
வாழ்த்து அட்டை
வாங்கியே பிச்சைக்காரனாவாய்

காதலித்துப்பார்!
நோட்டுப் புத்தகங்கள்
கவிதைத் தொகுப்பாகும்

காதலித்துப்பார்!
யாரைக் கூப்பிட்டாலும்
நீதான் திரும்புவாய்

உன்னைக் கூப்பிட்டால்
திரும்பவே மாட்டாய்
வேறு ஞாபகத்திலிருப்பாய்

காதலித்துப்பார்!
எவனைப் பார்த்தாலும்
அவள் அண்ணணாய்த் தெரியும்

காதலித்துப்பார்!
நீயும் தாடி வைப்பாய்
எனத் தெரியாமல்
தாடி வைத்தவனையெல்லாம்
கருணையோடு பார்ப்பாய்

காதலித்துப்பார்!
மனசுக்கு அப்புறம்தான்
மதம் தெரியும்

காதலித்துப்பார்!
நகங்களின் அழுக்கோடு-சாதியையும்
நறுக்கி விடுவாய்

காதலித்துப்பார்!
தொலைபேசி அழைத்தால்
ஓடிப்போய் எடுப்பாய்

காதலித்துப்பார்!
தொலைபேசி கட்டணம் உன்
தந்தையை நஷ்டப்படுத்தும்

காதலித்துப்பார்!
வைரமுத்துவை விடப்
பெரியகவிஞனாவாய்

காதலித்துப்பார்!
காற்றுப்பட்டால் கூடச்
சட்டையை உதறுவாய்


காதலித்துப்பார்!
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்

பார்க்கும் படத்திலெல்லாம்
அவளே கதாநாயகி

பார்க்கும் படத்திலெல்லாம்
அவள் தந்தையே வில்லன்

காதலித்துப்பார்!
ஆன்மீகப்பக்தி
அதிகமாகும்

காதலித்துப்பார்!
அவளுக்கு
மெட்ராஸ் ஐ என்றால் கூட
மெண்டல் ஆகிவிடுவாய்

காதலித்துப்பார்!
அவள்
தலைகுனிந்து சென்றால் கூடத்
தற்கொலை செய்து கொள்வாய்

காதலித்துப்பார்!
அவள்
படிக்கும் பத்திரிக்கைக்கு
நீயே முதல் வாசகன்

காதலித்துப்பார்!
நெப்போலியன் ( ? )
இல்லாமலேயே
தடுமாற ஆரம்பிப்பாய்

காதலித்துப்பார்!
அவள்
காலிலணியும் செருப்புக்
கம்பெனி கூடஉனக்குத் தெரியும்

காதலித்துப்பார்!
காதலியின் பெயர்
பாஸ்வேர்ட் ஆகும்.

காதலித்துப்பார்!
அவளை
ஈ கடித்தால் கூட
ஈட்டியை எடுப்பாய்


காதலித்துப்பார்!
ஒரே வருடத்தில்
இரண்டு டைரி தேவைப்படும்
உன்னைப்பற்றி எழுத
ஒரு டைரியில் கூட
இடமிருக்காது

காதலித்துப்பார்!
காற்றில் அவள்
துப்பட்டா கலைந்தால் கூடத்
துக்கப்படுவாய்


காதலித்துப்பார்!
அவள்
தொட்டுப்பார்ப்பாளென்றே
எனக்குக் காய்ச்சல் என்பாய்

காதலித்துப்பார்!
மாதமொருமுறை
மாறிக் கொண்டேயிருக்கும்
ஹேர்ஸ்டைல்
ஆனால்
கடைசியில் மொட்டைதான்

காதலித்துப்பார்!
தலா ஒரு செமஸ்டர்
ஒரு அரியர்

காதலித்துப்பார்!
அவளுக்குடிக்கெட் கொடுத்த
கண்டக்டரைக் கூட முறைப்பாய்

காதலித்துப்பார்!
நண்பர்களையெல்லாம்
அனுமாராக்குவாய்

காதலித்துப்பார்!
ரிஜிஸ்டர் ஆபிஸை
விசாரித்து வைப்பாய்

காதலித்துப்பார்!
உன் தாடியின் காரணம்
ஊருக்குப் புரியும்

- ரசிகவ் ஞானியார்

Wednesday, December 14, 2005

அனிச்சை

இறப்பு செய்தி கேட்டு
அயல்தேசத்திலிருந்து ...
அலறியடித்துக்கொண்டு
ஓடிவரும்பொழுது கூட ...
அந்த
கடன்அட்டை மட்டும்
கைக்குள் பத்திரமாய்!
இது
அனிச்சை செயலாமே
அப்படியா..?

-ரசிகவ் ஞானியார்

Tuesday, December 13, 2005

தவமாய் தவமிருந்துதவமாய் தவமிருந்து படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று பார்த்து முடிந்தாகிவிட்டது.
ஒரு படம் பார்த்து முடிந்தவுடன் அதன் பாதிப்புகள் ஒரு நாளாவது நம்மை தாக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு மணி நேரமாவது அந்த படத்தைப்பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வைக்க வேண்டும்.

எனக்கு இரண்டு அனுபவமே கிடைத்தது. நண்பர்களோடு அந்தப்படத்தின் பாதிப்பை பற்றி நீண்ட நேரம் பகிர்ந்து கொண்டேன்.

மிகுந்த கஷ்டங்களுக்கிடையேயும் தனது பிள்ளைகளை தவமாய் தவமிருந்து வளர்த்து படிக்க வைத்த ஒரு தந்தையின் கதை இது.

நமது குடும்பத்தில் அல்லது பக்கத்து வீட்டில் அல்லது நமது வீதியில் எங்கேயோ அந்தச்சம்பவம் நடந்திருக்கக் கூடும். அந்த அளவிற்கு காட்சி அமைப்புகள் யதார்த்தமாய் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு திiரைப்படம் பார்த்த உணர்வே இல்லை.

தனது பிள்ளைகளை சைக்கிளில் பக்கத்தது டவுண் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியில் அழகான கால மாற்றத்தைக் காட்டியுள்ளார். பள்ளிப்போகும்போது டவுசர் அணிந்த சிறுவர்கள் பின் பள்ளி படிப்பு முடிந்து பாலிடெக்னிக் - கல்லூரி என்று போகும்போது பேண்ட் அணிந்துகொண்டு அப்பாவின் சைக்கிளில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டே செல்லும் காட்சியில் நம்மையும் அந்த சைக்கிளை துரத்திக்கொண்டே செல்ல வைத்திருக்கிறார்

கல்லூரியில் படிக்கும் சேரன் அப்பாவை பின்னால் வைத்துக்கொண்டு மூச்சிறைக்க அழுத்திக்கொண்டு வரும்காட்சியில் சேரனை விடவும் நமக்கு அதிகமாய் மூச்சு வாங்க வைப்பது இயக்குனர் சேரனின் திறமை.

சேரனின் அண்ணனின் மகள் குழந்தைக்கு பெயர் வைக்கும் உப்பு சப்பில்லாத பிரச்சனையில்தான் குடும்பம் சிதறுண்டு போகிறது

குழந்தைக்கு குஷ்பு என்று மருமகள் பெயரிட

"அது என்ன குஷ்பு - கூரைப்பூன்னு சொல்லிகிட்டு என்ன கண்றாவி பெயர்டா" இது என்று அவனது அம்மா சொல்லும் காட்சி நம் வீட்டில் நடைபெற்ற பெயர் சூட்டும் நிகழ்ச்சி கண்ணில் நிற்கிறது.

தனது அண்ணன் அவனது மனைவியின் பேச்சைக் கேட்டு தனிக்குடித்தனம் போவதாக அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு போகும் காட்சி மிக இயல்பானது.
"என்னடா உன் தம்பிக்கு இன்னமும் படிப்பு முடியல..அவனுக்கு படிப்பு முடியும் வரையிலாவது நீ ஒரு ஒத்தாசையா இருக்கவேண்டாமடா"

- ராஜ்கிரண்

"ஆமா எல்லாத்தையும் உங்களுக்கே தந்துட்டா.என் புள்ளையோட எதிர்காலம் என்னாவது?" என்று மருமகள் முந்திக்கொண்டு சொல்ல,

இந்தக்காட்சி யில் நமக்கு அந்த மருமகள் மீது ஒருவித எரிச்சல் வருகிறது. அது மருமகளாய் நடித்த அந்த புதுமுகத்தின் நடிப்பு திறமை.

பின்னர் வாய்த்தகறாறில் அண்ணன், தந்தையை திட்டிவிட அடிக்க வந்த அம்மாவை தள்ளி விடும் காட்சியாகட்டும் இடிந்து உட்காரும் தந்தைக்கு ஆறுதல் காட்சிகளிலும் இயக்குனர் சேரனின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நாம் கண்கூடாக காணும் காட்சி.கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் குருப் ஸ்டெடி பண்ணும்பொழுது இளைமை மோகத்தில் தவறு செய்து விட, அந்தப்பெண்ணின் கர்ப்பம் வெளியே தெரிந்து அவமானப்பட்டுவிடக்கூடாது என்று ஊரைவிட்டு ஓடிவிடத்துணியும் காட்சி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

அண்ணன் தனிக்குடித்தனம் செய்து சில நாட்கள்தான் ஆகியிருக்கும் அந்த நேரத்தில் சேரன் தான் காதலித்த பெண்ணோடு ஓடிப்போவதற்காக அப்பாவிடம் வந்து,அப்பா அவசரமா ஒரு நேர்முகத்தேர்வுக்கு கோயம்புத்தூர் வரை போகணும் என்று பொய் சொல்லும்போது கூட

"அப்படியா..செலவுக்கு பணம் இருக்கா..என்று கேட்டுவிட்டு 500 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு இது போதுமாப்பா.."என்று கேட்கும்போது எந்த மகனுக்குத்தான் அழுகை வராமல் இருக்கும்.?ஆனால் சேரன் அதிகமாய் குலுங்கியிருக்கிறார்.

ஓடிப்போய் சென்னைக்கு சென்று ( எல்லாரும் ஓடிப்போனா சென்னைக்குதானப்பா போறாங்க..வேற இடமே இல்லையா..? ) நண்பன் ஒருவன் உதவியோடு வாடகை வீட்டில் தங்குகிறர்.

தனது பி இ படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தனது அப்பாவின் தொழிலான அச்சகத்துறையில் தனக்குரிய அனுபவத்தை கூறி வேலை கேட்கிறார்

சரி நேர்முகத்தேர்விலுமா..அழுது கொண்டிருப்பது..? வேலை செய்யும் போது அந்த இயந்திரத்தில் கைகள் பட்டு கிழித்துவிட அப்பொழுது முதலாளி, "என்ன" என்று கேட்க "ஒன்றுமில்லை" என்று சொல்லும் போது கூட அழுகிறார்.

( சேரன் நீங்க அழுகுறது நல்லாயில்லை ..உங்க கதையில் எங்களுக்கு அழுகை வருகிறது.. ஆனால் உங்க கண்களின் அழுகையை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது..தயவுசெய்து மாத்துங்களேன்..

இந்தப்படத்திற்கு தவமாய் தவமிருந்து என்று பெயர் வைப்பதை விட.. அழுதுகொண்டே உச்சரிக்கும் தொனியில்..அ..ப்..பா என்று வைக்கலாம்.. )

ஒருநாள் அவனது அப்பாவே மகனைத்தேடி வந்து "ஏம்பா இப்படி பண்ணினே..? " என்று கண்களில் மகனை நினைத்து ஏங்கிய கண்களுடன் கேட்கும்போது தந்தை மீது மதிப்பு வைத்திருக்கும் எல்லா மகன்களுக்கும் அழுகை வந்துவிடும்.
அவரிடம் நடந்த உண்மையைக் கூறி அழுகிறார்..அழுகிறார்.. அழுகிறார்..அழுகிறார்..அழுகிறார்.. அழுகிறார்..


அந்த இடத்தில் ராஜ்கிரணின் நடிப்பு மிக அருமை..

"உங்க அம்மா உன்னைய பெத்த சமயத்தில நானும் செலவுக்காக எவ்வளவு கஷடப்பட்டிருப்பேன் தெரியுமா..? என் கஷ்டத்தை நீயும் படக்கூடாதுடா.."

என்று கூறிக்கொண்டே குழந்தையின் கைகளில் பணத்தை திணிக்கும் காட்சி

கிளம்பும்போது ,

"எம் பசங்களுக்கு நான் ஏதோ குறை வச்சுட்டேன் போல இருக்கு அதுதான் இரண்டு பேருமே சொல்பேச்சை மீறிப்போய்டாங்க ..நீயாவது உம் பிள்ளைய நல்லா வளர்த்துக்கோப்பா "

என்று சொல்லும் காட்சியும் மனதைப் பிசைந்துவிடுகிறது.

மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி விடலாம் என்று நினைத்து சொந்த ஊருக்கு திரும்பும்போது அவனது வீட்டு வாசலில் கைக்குழந்தையோடு நிற்க அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் காட்சியிலும் சரி..

"சரி..பையன் தப்பு பண்ணினது பண்ணிட்டான்..அதான் உன்னண தேடி வந்துட்டான்ல..சேர்த்துக்க தெய்வானை..என்ன இருந்தாலும் அவன் நீ பெத்த புள்ளதானே.."


என்று அவனது அம்மாவிடம் சில பாட்டிகள் சமாதானம் சொல்வதும் அனுபவித்து படம்பிடித்திருக்கிறார்

பின்னர் மதுரையில் வேலை கிடைத்து ஒரு ப்ளாட் பிடித்து அம்மா அப்பாவோடு தங்கும் காட்சிகளில் நடுத்தர குடும்பத்தின் நிகழ்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்சேரனும் அவனது மனைவியும் வேலைக்கு கிளம்பும்போது அவர்களது மகள் "ம்மா தள்ளும்மா ..ம்மா தள்ளும்மா" என்று குட்டி சைக்கிளில் அமர்ந்துகொண்டு சொல்வது எல்லா வீட்டிலும் நடக்கின்ற நிகழ்வு. அந்த சின்ன விசயத்தை கூட பதிந்திருக்கிறார்

பின்னர் சேரன் மகளின் காது குத்துக்கு அண்ணனை அழைப்போம் என்று கூறி அண்ணனை பார்க்க அவனது வீட்டிற்குச் செல்லும் போது அவனது மனைவி பெயருக்கு "வாங்க" என்று வரவேற்பது, நமக்கு பிடிக்காத வீட்டிற்கு போகும்போது அவர்கள் எப்படி நம்மை வரவேற்பார்களோ அதேபோல இருந்தது

பின்னர் தாய் இறந்து விட அந்த பழைய கிராமத்து வீட்டிலையே தங்குவதுதான் அவளுக்கு நான் செய்கின்ற மரியாதை என்று தந்தை அடம்பிடிக்க வாரத்துக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறை வந்து போகிறார்.

45 வருடமாக தன்னுடய சுக துக்கங்களில் பங்கு எடுத்துக்கொண்ட தன்னுடனையே பயணித்த ஒரு ஜீவனின் இழப்பு அவரை மிகவும் பாதித்துவிட்டது என்று சேரன் சொல்லும்போது நம் மனதுக்குள்ளும் ஒரு சோகம் பபடருகிறது.

அண்ணன் வந்து தனக்கு வீடுகட்ட 1 லட்சம் தேவைப்படுகிறது என்று அந்த அவர்கள் வாழ்ந்த வீட்டைவிற்று விட்டு பணம் கேட்க,

"இதில் உன் தம்பிக்கும் பங்கு இருக்கேப்பா" என்று ராஜ்கிரண் சொல்ல

"அவன்தான் வசதியா இருக்கானே..அவன மட்டும் இஞ்சினியரிங் படிக்க வச்சீங்க..என்னய பாலிடெக்னிக்தானே படிக்க வச்சீங்க.. எனக்கு மட்டும் குறை வச்சிட்டீங்கள்ப்பா? .."என்று அவன் கேட்பது எந்த தந்தையையும் நிலைகுழையச்செய்துவிடும்

இவ்வளவு வருடமாக மகனை கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியதற்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விட்டதே..நமது இவ்வளவு வருட வாழ்க்கையே வீணாகிப்போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் அந்த ஒரு சொல்லின் சூடு தாங்காமல் இறந்து விடுகிறார் அவர்..

சாகும் தருவாயில் சேரனை அழைத்து "உனக்கும் நான் ஏதாவது குறை வச்சிட்டேனோ?" என்று கேட்பது ரொம்பவும் மனதைப் பாதிக்கிறது

இப்படியான ஒரு சோகத்தில் படம் முடிந்து போகிறது..இல்லை இல்லை அந்த தனிமனிதனின் வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது..

கடைசிக் காட்சிதான் பஞ்ச்.. சேரனின் குழந்தைகள் ,

எனது தாத்தாவின் பெயர்........

அவர் ------------------ ஆண்டு பிறந்தார்.

அவரது மனைவியின் பெயர்... ....

அவர் சிவகங்கையில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு அச்சத்தில் வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு இரண்டு மகன்கள்..

என்று சரித்திரக் கதை படிப்பது போலஅவனது குடும்பத்தின் வரலாற்றை படித்துக்கொண்டிருப்பது போல படம் முடிகிறது.

அதுவும் சரிதான் எத்தனை பேருக்கு தனது முப்பாட்டனார் வரலாறு தெரிந்திருக்கிறது? யாருடயை வரலாறையெல்லாம் மனப்பாடம் ஆக்குகிறோம்..நமது சொந்த வரலாற்றை அநேகம் பேருக்கு தெரிந்து வைக்கும் ஆவல் இல்லை.. கூடிய மட்டும் ஒரு தலைமுறையையாவது ஞாபகம் வைக்க வேண்டும்...

-ரசிகவ் ஞானியார்

Saturday, December 10, 2005

எலா சௌக்கியமா..?


( காதலியின் வாக்குக்காக காசு சம்பாதிக்க சென்ற காதலன் பழைய நினைவுகளோடு காதலியைத் தேடி வருகின்றான்)
நேசமணி பேருந்துக்குள்ளே
நெருக்கியடிச்சி உக்காந்தேன்!
நெருக்கத்தோடு நெஞ்சில
நேசம்கொண்ட பொட்டப்புள்ள!


காடு கழனி எல்லாமே
கண்முன்னே ஓடிவருது!
கண்ணுக்குள்ளே சின்னப்பொண்ணு
காவிரியப்போல தேடிவருது !

ஆசைவச்சேன் அன்புவச்சேன்
அவமேல என் உசிரவச்சேன்.!
கண்ணே மணியே என்று ...
கவிதையில் உருகவச்சேன் !

என்னருமை காதலியே..
எனக்காக காத்திருடி!
ஊருக்குப் போயிநான்
உருப்படியா திரும்பிவரேன்!

காத்திருடி காத்திருடி...
காலமொன்று வருமென்று
கைப்பிடிச்சி சொல்லிவிட்டு
கையசைச்சி சென்றுவிட்டேன் !

உசுருக்குள்ளே அவளவச்சு
உருகி உருகி உழைச்சேன்!
கண்ணீர ரத்தமாக்கி ...
காதலியத்தான் நினைச்சேன் !

கொஞ்சகொஞ்சம் பணம்சேர்த்து
கோபுரமாய் ஆனேன்!
கோபுரத்தில் நிலவில்லை
கூட்டிவரப்போனேன்!

பஸ்ஸ விட்டிறங்கி ..
பாதையிலே சென்றேன்!
பாதையில அவளோட...
பழைய நினைவால நின்றேன்!

செல்லுகின்ற வழியிலே ...
செவ்வந்திப்பூ பார்த்தேன் !
செவத்த புள்ள கேப்பாளென்று ...
சேகரித்து நான் வச்சேன் !

எனக்காக பூத்திருப்பா ...
ஏக்கத்தோட காத்திருப்பா...
பார்த்தவுடன் நெஞ்சில ...
பாசத்தோட அழுதிடுவா!

சின்னப்பையன் உள்ளம்போல ...
சிறகடிச்சி ஓடினேன்!
இதோ அவள் வீடு ...
இதயத்தால தேடினான்.!

தாவணித்தேர் அவள்
சேலையோடு வந்தாள் ...
சேலைக்குள்ள மறைச்சி வச்ச
தாலியோடும் வந்தாள்!

ஒண்ணுமே தெரியாத..
குருடனின் காட்சி!
எவனுக்கோ வாக்கப்பட்டாள்..
தாலிதான் சாட்சி!

செல்லம் என்றழைத்தவனை ...
செல்லாம ஆக்கிப்புட்டா!
பாக்கெட்டுல காசு இருக்கு
பாழுங்கிணத்துல காதல் கிடக்கு!


நேசமணி பேருந்துக்குள்ளே ...
நெருக்கியடிச்சி உக்காந்தேன்!
நெருக்கத்தோடு நெருக்கமா...
நெஞ்சுக்குள்ள நெறிஞ்சிமுள்!

இஷ்டப்பட்ட அவளால ...
நெஞ்சுக்குள்ள கஷ்டப்பட்டேன் !
இலவுகாத்த கிளி நான் ...
நஞ்சு குடிச்சி நஷ்டப்பட்டேன்.

- ரசிகவ் ஞானியார் -

காதல் கடிதம்உன் கடிதத்தை
எங்கு வைக்க?
எங்கு வைத்தாலும் ...
இனிப்பென்று நினைத்து
எறும்புகள் கடித்திடுமோ?
என்று
சட்டைப்பையில் வைக்கிறேன்
இதோ கடிக்கிறது இதயத்தை
உன் நினைவுகளின் எறும்புகள்..

***

உன் கடிதத்தை
படிப்பதில் உள்ள ஆர்வத்தைவிடவும்
பார்த்துக் கொண்டிருப்பதில்தானடி
சுகம் இருக்கிறது.
ஆகவே
வெற்றுத்தாளாயினும் பரவாயில்லை..
கடிதம் அனுப்பிக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

***

உனக்கு
கடிதம் எழுதும்பொழுது மட்டும்
கைகள்
அட்சயப்பாத்திரமாகிவிடுகிறதடி!
பாரேன்
எழுத எழுத..
வந்துகொண்டே இருக்கிறது
வார்த்தைகள்!

***


- ரசிகவ் ஞானியார்

Thursday, December 08, 2005

நண்பனின் தோல்வி- தோழியின் கேள்வி


மாலைநேரம் நானும், மஸ்தானும் கல்லூரி முடிந்து கடலையின் ஜீவிதத்தை உயிர்ப்பிக்க சுலோச்சனாவிடம் பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறோம்

கடலலை எழுந்தாலும்
கடலை அழியாது


அந்த நெல்லை தூத்துக்குடி சாலை கல்லூரி முடிந்து தங்களுடைய பிகர்களை கோட்டை விட்டு விடக்கூடாதே என்று வருகின்ற மாணவர்களின் துடிப்ப்போடு மிகவும் பரபரப்பாய் இருக்கின்றது.


நாங்கள் சதக் கல்லூரியை தாண்டி உள்ள சட்டக்கல்லூரியை நெருங்கும்போது எங்களின் முன்னால் பிகாம் பிரபாகர் வந்து நிற்கின்றான். அவனுக்கு பின்னால் அவன் க்ளாஸ் மாணவர்கள் சிலர் நிற்கிறாhர்கள்

என்னடா எல்லோரும் இங்க நிற்கிறீங்க - நான்

வழக்கமாக அவர்கள் அங்கே நிற்க மாட்டார்கள். கல்லூரி முடிந்ததும் அந்த சாமிக்கடை என்ற டீக்கடையில்தான் நிற்பார்கள்.
(இரயில் விடுவதற்காகவும் (?) எல்லா பிகர்களையும் ஒரே புள்ளியில் இருந்து ரசிப்பதற்காகவும் )

(வாத்தியார் வந்தா கூட அணைக்க மாட்டாங்க. ஆனா தெரிஞ்ச பிகர் வந்தா மட்டும் சிகரெட்டை அப்படியே அணைத்துவிடுகிறார்கள். எதற்கு இந்த போலித்தனமான மரியாதையை எதிர்பார்க்கிறார்கள்? )

இல்லைடா சும்மாதான்..நீங்க கொஞ்சம் நில்லுங்க என்று என்னையும் நண்பன் மஸ்தானையும் நிறுத்தினான்

சுலோச்சனா கொஞ்ச நேரம் நின்றுவிட்டு நாங்கள் அவனிடம் ஏதோ பர்ஸனலாக பேசுகிறோம் எனத் தெரிந்ததும் அவள் கண்களால் விடைபெற்றுவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள்.

என்னடா ஏதாவது பிரச்சனையா?- மஸ்தான்

உங்க அண்ணன் எப்படி இருக்கார்..இன்னிக்கு சாயங்காலம் வந்தா வீட்டுல இருப்பாரா - அந்த பிகாம் பிரபாகருக்கு என் அண்ணனை தெரியும் ஆகவே பேச்சை மாற்றும் விதமாக கேட்டான்

கொஞ்சநேரம் எங்களிடம் ஏதேதோ உளறி பேச்சை மாற்றிமாற்றிப் பேசினாhன்.

எனக்கு உடனே பொறி தட்டியது. சட்டென்று தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் சுலோச்சனாவை பார்த்தேன். அவளிடம் பிகாம்மை சேர்ந்த இன்னொரு மாணவன் குமார் பேசிக்கொண்டிருக்கிறான்.

எனக்கு உடனே விசயம் புரிந்துவிட்டது. அட லவ்வு மேட்டர்தான்

(வாகனத்தில் செல்பவளை விரட்டிபடி ஒரு காதல் கடிதம் கொடுத்தவன்..

நடந்து செல்பவளிடம் காதல் கடிதம் கொடுத்துவிட்டு பைக்கில் பறந்தவன்..

பேருந்தில் செல்பவளிடம் காதல் கடிதம் கொடுத்துவிட்டு நிறுத்தம் வரும் முன்னரே இறங்கி ஓடியவன்..

காதலைச் சொல்லாமலையே கடைசிவரை ஒருதலையாய்க் காதலித்தவன்..(?)

காதலைச் சொல்லிவிட்டு காதலியை கை நழுவ விட்டவன்...

நேரப்போக்குக்கு காதலித்தவன்..

என்று கல்லூரியில் ஏகப்பட்ட காதலப்பா..இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்தும். இவன் எத்தனை தடவை வேண்டுமானாலும் அவளைப் பார்ப்பான் சிரிப்பான்..ஆனால் மீண்டும் அவள் பார்த்துவிட்டால் போதும்..டேய் மச்சி அவ உன்னய லவ் பண்றாடா என்று ஆரம்பித்துவிடுவார்கள். )


நான் மஸ்தான் காதினில் சொன்னேன்.

டேய் குமார் சுலோச்சனா கூட பேசிக்கிட்டு இருக்கான் பாரேன்

( தன்னுடைய தோழி மற்ற வகுப்பு நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்து வயிற்றெரிச்சல் படும் மற்ற மாணவர்களைபோலவே எங்களுக்கும் வயிற்றெரிச்சலாக இருந்தது )

எனக்கு ஏற்கனவே தெரியுன்டா அவன் சுலோச்சனாவை லைன் விட்டுகிட்டு இருக்கான்.. - மஸ்தான் வயிறிறிலிருந்து புகை கிளம்பியது

அதான பார்த்தேன்..என்னடா அவன் பிகாம் நம்ம கூட வந்து ஒட்டி பழகுறானேன்னு பார்த்தேன்..

நான் பிரபாகரை பார்த்து சிரித்துக்கொண்டே

டேய் விடுடா நாங்க போறோம் ..நீங்க எதுக்காக வழிமறிச்சீங்கன்னு எனக்குத் தெரியும்..சும்மா நடிக்காத என்ன..அந்த குமார் தூரத்தில் அவளிடம் பேசிவிட்டு கிளம்பிவிட்டான்.

நாங்கள் பேருந்து நிலையம் வந்து சேருகிறோம். சுலோச்சனா தனியாக கண்களில் கண்ணீர்த்துளிகள் திரள முகம் சிவந்து போய் நின்று கொண்டிருக்கிறாள்.

நானும் மஸ்தானும் அங்கு பேருந்துக்காக காத்திருக்கின்ற நண்பர்கள் கூட்டத்தோடு இணைந்து கொண்டோம்.

டேய் அவகிட்ட போய் என்னன்னு கேளுடா - நான்

இல்ல வேண்டாம் இப்ப எல்லாரும் நிற்கிறாங்க இப்ப கேட்டா நல்லாயிருக்காது. நான் போன் பண்ணி கேட்டுக்கறேன்.நீயும் இந்த விசயத்தை யாரிடமும் சொல்லிவிடாதே

என்ன நடந்தது என்றால் அந்த குமார் எங்க க்ளாஸ்மேட் சுலோச்சனாவை ரொம்ப நாளாகவே லைன் விட்டுக்கொண்டு இருந்திருக்கிறான்.

அவள் லைப்ரேரி பக்கம் வரும்போது அவனும் வந்து புத்தகம் எடுப்பதுபோல் அவளை ரசிப்பது

காலையில் அவள் கடந்து செல்கின்ற வராண்டாவில் வந்து நிற்பது..

என்று அவள் கண்படும்படியாகவும் மறைந்து இருந்தும் ரசித்துக்கொண்டிருப்பான்.

இன்று அவளிடம் காதல் கடிதத்தை கொடுத்துவிடுவது என்று தீர்மானித்து உடன் படிக்கும் மாணவர்களை துணைக்கு அழைத்து அவள் கடந்து போகும் பாதையில் நின்றிருக்கின்றான்

தினமும் கல்லூரி முடிந்தவுடன் சுலோச்சனாவும் அவள் தோழிகளும் முன்னால் செல்ல நான் மஸ்தான் மற்றும் நண்பர்கள் இணைந்து பேருந்து நிலையம் வரை கிண்டல் பேலி செய்து கொண்டு பேசிக்கொண்டேச் செல்வோம்.


இது அவர்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருந்தது ஏனென்றால் இன்று குமார் அவளிடம் காதல் கடிதத்தை கொடுக்கப்போவதாக கூறியிருப்பதால் எங்களை வழியில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.


(கடலையை சிதைத்து
காதலை வாழவைக்க வந்தவர்கள்
)

மறுநாள் சுலோச்சனா கல்லூரிக்கு வருகிறாள். அவள் பார்வை வித்தியாசமாய் எங்களை பார்த்தது.

உங்க கூட தானேடா வந்தேன்..அவன் வந்து லவ் லட்டர் கொடுக்கும்போது நீங்க ஒண்ணும் செய்யாம வேடிக்கைதானேடா பார்த்தீங்க என்று அவள் பார்வையில் எங்களை சுட்டெரித்து எங்களை பார்ப்பது போல தெரிந்தது எங்களுக்கு

(நண்பனின் தோல்வி
தோழியின் கேள்வி என்ன செய்வதோ..?
)

நான் உடனே மஸ்தானிடம் டேய் என்னடா நீ கேட்டியா சுலோச்சனாகிட்ட அவன் வந்து லவ் லட்டர்தானே கொடுத்தான் என கேட்க

அவனோ ஆமாடா ஆனா இவ வாங்கிட்டு அழுதுகிட்டே போயிருக்கா..அவன்கிட்ட நான் அதுமாதிரியான ஆள் இல்ல..எனக்கு படிப்புதான் முக்கியமுன்னு சொல்லியிருக்கா அவன் வந்து லவ் லட்டர் கொடுக்கும்போது இவ பயந்துபோயி அழுதுட்டாளாம் ..
அவ சொல்லல ஆனா அவளுக்கு நம்ம மேலயும் ஒரு வருத்தம்தான்..


டேய் அவன் வந்து முறைதவறியா நடந்துகிட்டான் இல்லையே..தனக்கு புடிக்குதுன்னு சொல்லி லவ் லட்டர் கொடுத்திருக்கான் அவ்வளவுதானே..நம்ம மட்டும் நம்ம க்ளாஸ்மேட் அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பொண்ணை லவ் பண்றான்னு சொல்லி ஹெல்ப் பண்ணலயா..

இல்லடா சுலோச்சனாவுக்கு விருப்பமில்லை அவனோட காதல்ல ..அந்த குமார் இவ பின்னால சுத்துறது இவளுக்கு புடிக்கல..

சரி அப்படின்னா நம்ம குமார்கிட்ட சொல்லுவோம் சரியா..இதுல நம்ம மேல வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லைடா..

( அந்தக் குமாரும் எங்களுக்கு நண்பன்தான் . சுலோச்சனாவும் எங்களுக்கு தோழிதான்..அவன் அவளிடம் காதல் கடிதம் கொடுக்க வந்ததை நாங்கள் எப்படி தடுக்க முடியும். அதனை தடுக்க எங்களுக்கு உரிமை இல்லையே..

தடுத்தால் அவன் என்ன சொல்லியிருப்பான்

உனக்கு என்னடா..உன் வேலையைப்பார்த்துட்டு போ..நான் அவள லவ் பண்றேன்..அவகிட்ட லட்டர் கொடுக்கிறேன்..அவளுக்கு பிடிக்கலைன்னா அவ சொல்லட்டும்..நீயென்ன வக்காலத்தா? என்று கேட்பான்

நானே அந்த குமாரின் நிலையில் இருந்தாலும் அப்படித்தான் கேட்பேன். ஆனா எனக்கு குமாரின் நிலை இதுவரை கிட்டியதில்லை....:) )

அந்தகுமாரை மதிய இடைவேளையில் சந்தித்து டேய் குமார் நேத்து நீங்க எங்களை வழிமறிச்சதுன்னு எதுக்குன்னு எங்களுக்கு தெரியும்..நீ அவகிட்ட லவ் லட்டர் கொடுத்திருக்க..அது ஒண்ணும் தப்பில்ல..ஆனா அவளுக்கு புடிக்கலையாம்..அதனால் உன்னைய பின் தொடர வேண்டாம்னு சொல்லச்சொன்னா.. என்று கூறிவிட்டு

டேய் எங்க மேல தப்பா நினைச்சுக்காதடா..அவ சொன்னதைதான் சொன்னோம்..

( காதலித்துப்பார்
நண்பர்களையெல்லாம்
அனுமனாக்குவாய்
)

அவனோ மிகவும் நாகரீகமாக..சாரிடா..எனக்கு பிடிச்சதுன்னு நான் லவ் லட்டர் கொடுத்தேன்..அவளுக்கு புடிக்கலைன்னா விட்டர்றேன்டா..அவகிட்ட சாரி சொன்னேன்னு சொல்லு என்று கூறி விட்டான்.

எனக்கு அவன் பேசியது மிகவும் நாகரீகமாக தெரிந்தது. காதலித்தவள் காதலை மறுத்து விட்டால் அவள் மீது ஆசிட் ஊற்றுதல் அவளை அவமானப்படுத்துதல் என்ற செய்கைகளை செய்யும் மிருகங்களுக்கு மத்தியில் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?


குமாரின் காதலை மறுத்ததால் சுலோச்சனா கொடுத்துவைக்காதவளா..? இல்லை
குமார் கொடுத்துவைக்காதவனா..? தெரியவில்லை..இப்பொழுது சுலோச்சனாவிற்கும் கல்யாணம் முடிஞ்சு போச்சு.. சந்தோசமாக இருக்கிறாள் அவள்.

இவனுக்கும் கல்யாணம் முடிந்து திருநெல்வேலியில் சந்தோசமாய் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

கடவுள் அமைத்துவைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னாருக்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று


ரசிகவ் ஞானியார்

Wednesday, December 07, 2005

என் இனிய முட்டாள்களே!

என் இனிய முட்டாள்களே!
சாதிகளுக்கு...
சாம்பிராணி போடாதீர்கள்!
மனிதத்தை மறந்து...
மதத்தில் மூழ்காதீர்கள்!

கோயில் -மசூதி- தேவாலயம் சுற்றும்
மாடப்புறாக்கள் எல்லாம்
மதம் பார்ப்பதில்லை!
அதற்குத் தெரியும் ..

இருப்பது...
ஒரு கடவுள்!

பிரித்தது..
பல மனிதன் என்று!


லெப்பைக்கு காய்ச்சல் என்றால்...
பாதிரியாரும்,
பூசாரியும் ,
ஓடிவரட்டும்!
பேதம் பார்க்காத ...
புறாக்களைப்போல!

ஜானின் ...
சாவுச்செய்தி கேட்டு
கண்ணன்கள் ...
கதறி அழட்டும்!
ஜாகீர் உசேன்கள்...
சவப்பெட்டித் தூக்கட்டும்

இறைவா!
சாதி மத வெறியர்களை
சுத்தப்படுத்துவதற்காய் ஒரு
சுனாமியை அனுப்புவாயா..?

இனிமேல்
யானைக்கு கூட
மதம் பிடிக்கக்கூடாது!


- ரசிகவ் ஞானியார்

Tuesday, December 06, 2005

எழுகிறது ஒரு புரட்சியின் குரல்என்னுடய சிநேகிதன் ராஜாவின் கவிதை இது :


மசூதியை இடிப்பவர்களே!
சிலையை தகர்ப்பவர்களே!
தேவாலயத்தை எரிப்பவர்களே!
உங்களின் முன்னே
எழுகிறது ஓர்
புரட்சியின் குரல்!

***
மினராவை எழுப்பியதில்...
ஓர்
இந்துப்பொறியாளன் பங்கு இல்லையா?

கோயில் கட்டியதில் ஒரு...
கிறித்துவக் கொத்தன்
இருந்ததில்லையா?

தேவாலயத்திற்கு காணிக்கை...
ஓரு
இஸ்லாமியன்
கொடுக்காமல் இருந்திருப்பானா..?

ஒரு
மாற்று மதச்சகோதரனின்
பங்களிப்பில்லாமல் ஒரு
மணற்மேட்டைக் கூட...
இந்தியத்தேசத்தில்

நீ
உருவாக்கியிருக்க முடியாது!


நீ கட்டிய கட்டிடத்தைத்தானே..
நீயே இடித்துக் கொள்கிறாய்!
நீ சேர்த்த
கல்லையும் மண்ணையும்
நீயே பிரித்தெடுக்கிறாய்
கடவுளையல்லவே..!
***
துண்டு நிலத்தில்
தொழுகை நடத்தும்
இஸ்லாமியனும் இருக்கின்றான்!

பரமபதத்தை மனதால்
பூஜிக்கும் இந்துமிருக்கிறான்!

கர்த்தரின் வழியில்
கண்ணியத்தைக் காக்கும்
கிறித்தவனுமிருக்கிறான்!

உங்களின் இரத்தப்வெறிக்குப்
பலியானது
இந்த அப்பாவிகள்தானே...
?

***
அஸ்ஸலாமு அலைக்கும்
- சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக

சம்பவாமி யுகே யுகே
- தருமமே வெல்லும்

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டு"


எந்த மதம் உனக்கு
இடிக்கவும்...
எரிக்கவும்...
கற்றுத்தந்தது?

***
அஸ்திவாரமே இல்லாமல்
எந்தக் கட்டிடத்தை
நீ கட்டப்போகிறாய்..?

அடிப்படையே தெரியாத நீ
எந்த மதத்திலிருக்கிறாய்?

***

தொப்பி அணிந்து கொண்டதால்...
நீ
இஸ்லாமியனாகிவிடமுடியாது!

பட்டையும் நாமமும்...
போட்டுக்கொள்வதால் நீ
இந்துவாகிவிடமுடியாது!

குருசு போட்டுக்கொண்டதால்...
நீ
கிறித்துவனாகி விட முடியாது!

மனிதத்தை நேசிக்கின்ற
பொழுதுதான்
இதுவெல்லாமாக நீ மாறமுடியும்!


***
பிறைக்கொடியை பறக்கவிட்டு
இஸ்லாமியன் என
காட்டிக்கொள்ளாமல்...

காவிக்கொடியைகட்டி
இந்துவென
காட்டிக்கொள்ளாமல்...

வெறுங்கடமையாய்
பைபிளைத் தூக்கும்
கிறித்துவனாய் இல்லாமல்...

அடிப்படையிலிருந்து ...
உன் மதத்தைத் துவங்கு!

***
உன் மதத்தைக்
கற்றுத்தீரக்கவே
ஓராயுள் வேண்டும்!

இதில் எந்த மதத்தை
இடித்து தகர்க்க
உனக்க நேரமிருக்கும்.?

- ராஜா

Sunday, December 04, 2005

மதிப்பிற்குரிய மதப்பிரியர்களே!

டிசம்பர் 6
சாதாரணமாய் இருந்த இந்தத்தேதி
ரணமாய் மாறிப்போனதற்கு யார் காரணம்..?
இந்தத் தேதியைப்பார்க்கும் போது
காலண்டரையே
கிழித்துவிடத் தோணுகிறதே ஏன்..?


பின்னோக்கி நகருங்கள்
1992 டிசம்பர் 6ம் நாள்..கூட்டம் கூட்டமாய் மனித போர்வையில் அதுக்கள்.. அதுக்களின் கைகளில் ஆயுதங்கள்..

அத்தனை சாட்டிலைட்டுகளும் விழித்துக்கொண்டிருக்கிறது. ஆனால்

மனிதநேயம் மட்டும் மூடப்பட்டுவிட்டது

ஜனநாயக நாடு என்று பெருமையாய் பறை சாற்றிக் கொள்ளும் இந்தியாவிற்கு கறை படியும் விதமாய் ஒரு அசிங்கமாக அத்து மீறல் வெற்றிகரமாய் நடந்து முடிந்தது.

வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம்..கண் முன்னால் தாய் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்ப்பவனின் நிலையைப் போல்..

இடித்தவன் குற்றவாளியா..?
தூண்டியவன் குற்றவாளியா..?
என்னைக் கேட்டால்
வேடிக்கைப் பார்த்தவனைத்தான் குற்றம் சொல்லுவேன்.

அதனை தடுக்கும் பலம் நமது இராணுவத்திற்கு இல்லையா..? இராணுவத்தை தடுக்க முடியாமல் கட்டிப்போட்ட சக்தி எது?

இடித்ததன் காரணம் கேட்டால் தாத்தாவின் வீடு, பாட்டியின் வீடு என்று கதையளக்கிறார்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பெரும்பான்மையை வைத்துதான் எல்லாம் எடைபோடவேண்டும், பெருன்பான்மை மக்களின் விருப்பம் அது என்று புலம்புகிறார்கள்.

ஆனால் பெருன்பான்மை என்று எதனை வைத்து சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை?

எத்தனையோ இந்து மதத்தைத் சார்ந்த சகோதரர்களுக்கு இந்தச் செய்கையின் மீது ஒரு துளி அளவும் விருப்பமில்லை.
அய்யோ நம் மதத்தை சார்ந்தவர்கள் இன்னொரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை இடித்துவிட்டர்களே! அவர்களின் செய்கையால் எங்கள் மீதும் அந்தப் பாவப்பழி விழுந்துவிட்டதே என்று புலம்புகிறார்கள்.

இன்னொரு ஆலயத்தை இடித்துவிடவேண்டும் என்று கடவுள் வந்தா காதினில் ஊதினார்.?

ஒரு மனிதனே இன்னொரு மனிதனுக்கு உதவவேண்டும் என்று நினைக்கும்போது எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கும் அந்த மாபெரும் சக்தியா இன்னொரு ஆலயத்தை இடித்துவிடச்சொல்லும்?

கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் மதங்கள் - கடவுள்கள் எல்லாம் எதற்காக..?
தனிமனிதனை திருத்துவதற்காகவே.. அந்த தனிமனிதக் கொள்கைகளே சிதையுண்டுப்போகிறதே..

இராமயணத்தில் இராமரின் பொறுமை எந்த அளவிற்கு சிறப்பித்து கூறப்பட்டிருக்கிறது. இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா..? தனக்கு வரவேண்டிய பெரிய ராஜ்யத்தையே விட்டுவிட்டு அடர்ந்த காட்டுக்குள் சென்று வனவாசம் செய்வதற்கு யாருக்கு தைரியம் வரும்?

அப்படிப்பட்ட பொறுமையின் ஒரு சிறு பக்தியாவது அவரது கொள்கைகளை கடைப்பிடித்து வாழும் இராம பக்தர்களுக்கு வேண்டாமா..? ஏன் யாரோ ஒரு தவறான வழிநடத்தலின் தூண்டுதலுக்கு உட்பட்டுச் செல்கிறார்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் மதங்களைப்பாருங்கள். மதங்களின் கொள்கைகளைப் பாருங்கள் அதன் படி நடங்களேன். ஆனால் தயவுசெய்து மதத்தலைவனின் பேச்சை மட்டும் வெறித்தனமாய் பின்பற்ற வேண்டாம். இப்பொழுது மதக்கடவுள்களை விடவும் மதத்தலைவனுக்கு அதிகமாய் மதிப்பு கொடுக்கிறார்கள் மக்கள். புரிந்து கொள்ளுங்கள் மதத்தலைவனும் மனிதன்தான்..

நாங்களும்
பாபர் மசூதிதான்!
இடிப்பதற்கு முன்வருகிறார்களே தவிர
யாரும்
கட்டுவதற்கு தயாராக இல்லை
- யாரோ


ஒரு பெண்ணின் மன வடிகாலாக பாபர் மசூதியை தகர்ப்பை வைத்து எழுதப்பட்ட கவிதை இது. இப்படிப்பட்ட மனக்குமுறல்கள் வந்திறுப்பது இந்தியனாகிய நமக்கெல்லாம் அவமானமில்லையா..?

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கென்று நாடு இருக்கிறது
ஒரு குறிப்பிட்ட மொழிக்கென்று நாடு இருக்கிறது
ஒரு குறிப்பிட்ட இனத்திற்கென்று நாடு இருக்கிறது

ஆனால் எந்தவித எல்கைகளுக்கும் உட்படாமல் மதம் மொழி இனம் சாராமல் இருக்கின்ற ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆகவே உலகத்தின் முதல் நாடு என்ற பெருமையை தக்க வைத்திருந்தது அந்தச்சம்பவம் நடைபெறும் வரை..இப்பொழுது அவமானப்பட்டுப் போய் நிற்கின்றதே..இதற்கு யார் காரணம்..?

மனிதர்களை கொல்லும் அளவிற்கு, ஆலயங்களை இடிக்கும் அளவிற்கு அப்படி என்ன வெறி கடவுளின் மீது. எல்லா மனிதனையும் ஒரே கடவுள்தான் படைத்திருக்கின்றான். தான் படைத்த பொருளை மற்றவன் சேதப்படுத்த அவன் விரும்புவானா..?

இன்னொரு ஆலயத்தை
இடித்துவிட்டு
தனக்கொரு ஆலயம் கட்ட
எந்தக் கடவுளும் விரும்பமாட்டான்!
மீறி விரும்பினால்,
தவறேயில்லை ...
கடவுளை இடியுங்கள்
!


மனிதர்கள் நாமெல்லாம் பூமிக்கு வாழவந்தவர்களப்பா. அவரவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டு, பிறப்பின் அடிப்படையிலும், சிந்திப்பின் அடிப்படையிலும் ஒவ்வொரு கடவுள்களையும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிறோம்.

உயிர் வாழும் காலம் வரை அவரவர் கொள்கைகளை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் பின்பற்றி கடவுள் நமக்கு தந்த இயற்கையை மனிதர்கள் பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்துக்கொள்வோமே..?


மாற்று மதக்காரனின்
பங்களிப்பில்லாமல்
இந்தியதேசத்தில்
உன்னால்..
ஒரு மணற்மேட்டைக் கூட
உருவாக்க முடியாது.
- ராஜா


இந்தக்கவிதையில் சொல்லப்பட்டிருப்பது எத்துணை உண்மை. எல்லாமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் பகிர்ந்தளிப்பதிலுமே இருக்கின்றது.

இடிக்கப்பட்ட அந்த நாளை மறந்துவிடலாம் ..இதனை ஞாபகப்படுத்துவது மீண்டும் மதக்கலவரத்திற்குத்தான் வித்திடும் ஆகவே அதனை கறுப்புதினமாக கடைபிடிப்பதை விட்டுவிடலாமே என்று சிலர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு மருத்துவமனையோ இல்லை அநாதை விடுதிகளோ கட்டி பொதுவாக்குதல் என்பது சிறந்த வழி. ஆனால் அதனை இடித்ததையே நியாயப்படுத்துவது மட்டுமன்றி மதுரா, காசி என்று விரிந்து கொண்டிருக்கிறதே சில மதவாத சக்திகளின் குருட்டு ஆசைகள்.

ஒன்றை விட்டுக்கொடுத்தால் அப்படியே எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டியது வருமோ என்று பயந்துதான் வருடாவருடம் கறுப்புதினமாக இஸலாமியர்களால் அந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கவேண்டுமா..? இதற்குத் தீர்வுதான் என்ன..?

 1. பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவது என்பது இஸ்லாமியர்களின் மனதில் மேலும் கோபம் கொப்பளிக்க வைக்கும் செயல்.

 2. தர்மப்படி மீண்டும் பாபர் மசூதியை புதுப்பித்துக் கட்டினால் பொறுக்க முடியாத தர்மம் தலைக்க விரும்பாத சில மதவாத சக்திகள் மீண்டும் வன்முறையை கையிலெடுக்கும்

 3. ஒரே இடத்தில் இரண்டு வழிபாட்டுத்தலங்களை கட்டுவது என்பதும் ஒரு நீண்ட பிரச்சனைக்குரிய விசயம்தான்.

 4. பெருந்தன்மையாக இந்து மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டித்தருவது ஒரு நீண்ட இஸ்லாமிய - இந்து உறவுகளுக்கு வழிவகுக்கும்.
 5. இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து முறையான ஒப்புதல் பெற்று அந்த இடத்தில் பொது மருத்துவமனைகள்; அநாதை விடுதிகள் அல்லது பள்ளிக்கூடங்கள் கட்டுவது சிறந்த வழி

ஆனால் வாலு போய் கத்தி வந்தது கதையாக அயோத்தி பிரச்சனை முடிந்துவிட்டது என்று ,

காசியில் லட்சுமணன் பிறந்தார், மதுராவில் பரதன் பிறந்தார் என்று மீண்டும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் பட்டியலை இந்து சகோதரர்கள் பட்டி போட்டு அடைப்பார்களா..?

மதவாதச்சக்திகளின் பிடியிலிருந்து இந்தியா என்று விடுபடுகிறதோ அன்றுதான் ஒரு பெரும் வல்லரசாக உருவாகும். அதற்கு இன்றைய தலைமுறைகளாவது உதவ முன் வரவேண்டும்.

இளைஞர்களே!
இந்து முஸ்லிம் கிறித்து என்றால்
இந்தியன் என்று திருத்துங்கள்!
உந்து விசைபோல் விண்ணிலெழுப்பி
மனித நேயத்தைப் பொருத்துங்கள்!


எதற்கு இந்த பிரிவினைவாதம்..? மனிதன்தான் மற்ற படைப்பினத்தைவிடவும் சிறந்ததாக பகுத்தறியும் உணர்வோடு படைக்கப்பட்டிருக்கின்றான். ஆனால் தற்பொழுதுள்ள நிலையைப்பார்த்தால் மனிதனை விடவும் மிருகங்கள் பரவாயில்லை போலத் தெரிகிறது.

மாடம் மாடமாய் பறந்து திரியும் புறாக்களைப் பாருங்களேன். மசூதியா இல்லை கோயிலா இல்லை தேவாலயமா என்று எந்த மாடம் என்று அதற்கு தெரியாது. நாமும் அதுபோல மனிதனின் மத சாதியை வைத்து அவனை தரம் பிரிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட மனிதனின் திறமையை வைத்து எடைபோடவேண்டும்.

எந்த மதத்திற்கும் எந்த சாதிக்கும் தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்படக்கூடாது. சிறும்பான்மை பெரும்பான்மை எல்லாம் மனிதனின் திறமைகள் வைத்து பிரிக்கப்படவேண்டும்.

வளருகின்ற தலைமுறைகளுக்கு பாபர் வாழ்ந்தார், இராமர் வாழ்ந்தார் என்ற பழைய சரித்திரங்களை பாடப்புத்தகத்திலிருந்து கிழித்து விட்டு மனிதனாய் வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொடுப்போம்.

பாபர்பாடும்
ராமர் பாடும் போதும் - கொஞ்சம்
பண்பாடும் கற்றுக்கொடுப்போம்!


எனக்கு தேவர் மகன் படத்தில் கமல் பேசுகின்ற ஒரு வசனம்தான் ஞாபகம் வருகின்து.

போங்கடா! போங்கடா!
போய் படிக்க வைங்கடா... புள்ள குட்டிங்கள !

- ரசிகவ் ஞானியார்

Saturday, December 03, 2005

நான் ஆட்டோக்காரன்டா...என்னோட நண்பன் அனுப்பிய மெயில் இது . இதை தமிழ் படுத்தினால் இடியாப்பமாகிவிடும் ஆகவே அப்படியே பதித்துள்ளேன்.

I AM AUTOFELLOW

I am autofellow autofellow
Four knowing route fellow
Justice having rate fellow
Good people mix fellow
Nice singing song fellow
Gandhi borning country fellow
Stick take means hunter fellow
Big people's relation fellow
Mercy having mind fellow da
I am all poor's relative fellow da
I am always poor people's relative fellow da
Achak means achak only; Gumuk means gumuk only
Achak means achak only; Gumuk means gumuk only

Town become big, population become big
Bus expecting, half age over
Life become hectic in time, exist in corner of street
Ada eye beat means love coming they telling
You hand clap means auto coming I telling
Front coming look, this three-wheel chariot
Good come and arrive, you trust and climb up
Mercy having mind fellow da
I am always poor people's relative fellow da
Achak means achak only; Gumuk means gumuk only
Achak means achak only; Gumuk means gumuk only

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only ; Gumuk means gumuk only
Achak means achak only ; Gumuk means gumuk only


-ரசிகவ் ஞானியார்

தேன் கூடு