Wednesday, October 08, 2008

அழகான பிரிவு





நீ மறைத்தாலும் வெளிபட்டுவிடுகின்ற...
பிரிவின் துயரினை,
நடிக்கத் தெரியாத
கண்ணீரையெல்லாம்...
ஏன் உடன் சுமந்து வருகின்றாய்?

அன்பின் திரவவடிவமான
அந்த
நீர்த் திவலைக்களுக்காகவாவது,

கிளம்புவதற்கான விநாடிகள்
கணக்கிடப்படும் தருவாயில்
பாம்பின் பின்னலையொத்த
விரல்களின் ஸ்பரிசத்திற்காகவாவது...

பேருந்து புறப்பட்டுவிட்ட பொழுதிலும்
வழித்தடங்களில்..
நின்று கொண்டு
எனக்காக நீ காட்டுகின்ற
டாட்டாக்களுக்காகவாவது,

அதுபோன்றதொரு
அழகான பிரிவினை
எதிர்பார்க்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Sunday, September 28, 2008

பெங்களுரு புகைப்படக் கண்காட்சி

பெங்களுரில் பாரதீய வித்யாபவனில் கடந்த 3 நாட்களாக 26-27-28 குழும நண்பர் இலட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்களான பிவி - அருள் ஜெகதீஷ் - சுரேந்தர் ஆகியோர்களின் புகைப்படக் கண்காட்சி திலீப் என்ற நண்பரின் உறுதுணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சாப்ட்வேர் துறைகளில் இருந்தாலும் இந்த இளைஞர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு புகைப்பட ஆர்வம் இருக்கின்றது என்பது ஆச்சர்யமாக இருக்கின்றது. கைதேர்ந்த புகைப்படக் கலைஞரை ஒத்த புகைப்படங்களை இவர்களகது கேமிராக்கள் படம்பிடித்துள்ளன்.

புகைப்படங்களுக்காக ஒவ்வொரு இடமாய் தேடிச் சென்று இவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றது. நம் கண்களுக்கு வெறும் காட்சியாய் தெரிபவைகள் இவர்களுக்கு கலைகளாகத் தெரிகின்றது.

இந்த இளைஞர்களின் முயற்சிகள் வெற்றி பெற பாராட்டுக்கள். அவர்களது புகைப்படங்களுள் சில:

படம் 1



விழித்திரையின் அடியில்
குழுமியிருக்கும் நீர்த்துளிகள்
இந்தப் புன்னகையை
போலியாக்குகின்றது


படம் 2




இந்தப் புன்னகைக்கு
குடிசையும் தெரியாது
கோபுரமும் தெரியாது


படம் 3



பட்டாம்பூச்சிகளின்
பாதுகாவலில்
பாம்புகள் மேய்ந்துகொண்டிருக்கின்றது


படம் 4



மாட மாளிகைகளில்
வசித்தாலும்
இறுதிப் பயணத்தில்
ஒரு செங்கலைக் கூட
கொண்டு செல்ல முடியாது


படம் 5



எதிர்கொள்ளாதவரை
பிரச்சனைகள்
பிரச்சனைகளாகவே இருக்கின்றன


-ரசிகவ் ஞானியார்

Sunday, September 21, 2008

மென்தமிழ் - புரட்டாசி - 2008

வணக்கம் நண்பர்களே,

புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதோ இந்த மாதத்திற்கான இதழ்.உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக

(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா,எழிலன்பு)

Saturday, September 20, 2008

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?




வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?


பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?


அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.


இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.


'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'
- ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா


'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'
- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.


ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 11, 2008

அன்பென்றே பெயர்


என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!

- ரசிகவ் ஞானியார்

Wednesday, August 27, 2008

சாப்ட்வேர் பொறியாளனின் மரணக்குறிப்பு



என்னுடைய மரணத்திற்கு யாருமே காரணமில்லை. என்னால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை.. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்கு தரப்பட்ட வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுக்கலாமென நினைத்தேன். ஆனால் இயலவில்லை.

என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

- சந்தீப்

வேலைப்பளு தாங்காமல் உயிர் மாய்த்துக்கொண்டான் இந்த சாப்ட்வேர் சகோதரன். வேலைப்பளு என்றால் வேலையை விட்டு நின்று விடவேண்டியதுதானே..? வேறு வழியா இல்லை ..? என்ன முட்டாள்தனமான முடிவு பாருங்கள்?

கை நிறைய சம்பளம் கலாச்சாரச் சீர்கேடு என்று சப்தமிடுபவர்களே, இது ஐடி துறையின் இன்னொரு வேதனையான பக்கம். அந்த வேலையின் அழுத்தத்தினால் இந்தச் சகோதரன் எடுத்த முடிவைப் பாருங்கள். ஆனால் இது சரியான முடிவு என்று சொல்லவில்லை. எந்த அளவிற்கு மன அழுத்தம் இருந்திருந்தால் இவன் இப்படி வாழவேண்டிய வயதில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான்.

யாரைக் குறைச் சொல்வது? இவனுக்கு மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவினைக் கொடுத்தவர்களையா? அல்லது கோழைத்தனமான முடிவெடித்த இவனையா?

நன்றாக படித்திருக்கின்றார்கள். கை நிறைய சம்பளம். இருந்தும் இப்படி முடிவெடுக்கும் தைரியம் எப்படி வருகின்றது இந்த இளைஞர்களுக்கு?

மனம் வேதனைப் படுகின்றது


- ரசிகவ் ஞானியார்

Monday, August 25, 2008

ஒலிபரப்பு - " தூக்கம் விற்ற காசுகள்

என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் என்கிற கவிதை www.worldtamilnews.com
என்கிற இணைய தளத்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது

நிறுத்த வேண்டிய இடங்களில் அழகாய் நிறுத்தி தெளிவான உச்சரிப்பில் ஜப்பார் அய்யா அவர்கள் வாசிக்கும்பொழுது ஏதோ இனம் புரியாத உணர்வு ஏற்படுகின்றது. நன்றி ஜப்பார் அய்யா

கவிதை ஒலியாக்கப்படும்பொழுது எத்துணை ஆழமாய் இருக்கின்றது. எனக்கு மறுபடியும் துபாய் நினைவுகள். கவிதை எழுதிய கணத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Friday, August 22, 2008

மழை தேவதை

கோபம் நீங்குகின்ற
நொடியினில்...
பொழிகின்ற அந்த மழைக்காகவேனும்
கோபப்பட்டுக்கொண்டேயிரு
மழை தேவதையே!

- ரசிகவ் ஞானியார்

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு


ரசிகவ் ஞானியார்

Thursday, August 14, 2008

மென் தமிழ் இணைய இதழ் - ஆவணி 2008

நண்பர்களே,

புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக,
ரசிகவ் ஞானியார்

Wednesday, August 13, 2008

ஆனந்தவிகடனும் அவர் ஞாபகங்களும்




டீவியின் மீது, டீப்பாயின் மீது, சோபாவுக்கு கீழே, என்று ஒவ்வொரு முறை அவள் வீட்டிற்குள் நுழையும்பொழுது அவளை விடவும் ஆனந்தவிகடனைத்தான் தேடுவேன்

"அப்பா படிச்சிட்டிருக்கிறார்"

நான் ஆனந்தவிகடன் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு என் மனைவி தருகின்ற பதில் இதுதான். எப்பொழுது அவள் வீட்டுக்குச் சென்றாலும் இது வழக்கமான பதிலாகவே இருந்தது.

எனக்கு முன் அந்தத் தகவலையெல்லாம் யாரோ தெரிந்து கொள்ளப்போகின்றார்கள் என்ற எண்ணமே எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது ஆனந்தவிகடன் மீதும் அவள் அப்பா மீதும்.

எங்கள் வீட்டில் புத்தகம் வாங்கினாலும் அப்படித்தான். யாரும் எனக்கு முன்பு அப்புத்தகத்தின் தகவல்களை தெரிந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு.

எனக்கு எப்பொழுதுமே இந்த பழக்கம் இருக்கின்றது. சில சமயம் 2 அல்லது 3 புத்தகம் வாங்கிக்கொண்டு வந்தாலும் அவற்றையெல்லாம் நான் படித்து முடித்தபிறகே வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பேன்.

ஒரு பத்தகம் படிக்கும்பொழுது மற்ற புத்தகத்தையேனும் கொடுக்கலாம். ஆனால் தலையணைக்கு கீழே ஒளித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் முடித்தபிறகு தான் கொடுப்பேன். சில சமயம் தங்கை வந்து தேடிப்பார்த்து எடுத்துக்கொள்ளுவாள்.

அதுபோலவே எனது மனைவி வீட்டிலும் எதிர்பார்ப்பது அதிகம்தான் எனினும் ஏனோ என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கின்றது இந்தப் பழக்கம்

என் மாமனார் படித்துக்கொண்டிருக்கின்றார் என்று தெரிந்தால் நான் பெரும்பாலும் கேட்பதில்லை. சிலசமயம் அவர் படித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை, நான் அறியாதவனாய் நடித்துக்கொண்டு, மனைவியிடம் கேட்பேன் அவர் காதுகளில் விழும்வண்ணம். ஒருவேளை எனக்காக தரக்கூடும் என நினைத்து. ஆனால் பெரும்பாலும் ஏமாற்றம்தான்.

நான் படித்துக்கொண்டிருக்கும்பொழுது அவர் கேட்டாலும் நான் முடிக்கும்வரை கொடுப்பதில்லை அல்லது அவசர அவசரமாய் எல்லாப் பக்கங்களையும் கண்களால் உறிஞ்சுக்கொண்டு கொடுத்துவிடுவேன்.

சென்றவாரத்தின் ஒரு மாலைநேரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும்பொழுதே சலனமில்லாமல் அவர் கண்மூடிப்போனார்.


வெளிநாட்டில் அகதிகளாய் மாட்டிக்கொண்டு, பெற்றோர்களின் மரணத்திற்கு கூட வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில், தந்தையின் மரணச்செய்தி கேட்டு, இன்னொரு கண்டத்திலிருந்து கூட மறுநாளே வரும் அளவிற்கு தனது பெண்களை வளர்த்திருக்கின்றார்.

தனது நான்கு மகள்களையும் சமுதாயத்தில் பிறர் மதிக்கும்படியாக உயர்ந்த கல்வி கொடுத்திருக்கின்றார்.


ஆஸ்திரேலியாவில் ஒரு மகள்
கனடாவில் ஒரு மகள்
இந்தியாவில் ஒரு மகள் மிக உயர்ந்த கல்லூரியின் லெக்சரர்
இன்னொரு பெண் மத்திய அரசு ஊழியர்
என்று அவர்களுக்கு பெரிய அந்தஸ்து கொடுத்திருக்கின்றார்.


நான்கு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிற குருட்டுத்தனமான பழமொழியை உடைத்த பெருமை அவரைச் சாரும்.

வயதுக்கு வந்துவிட்டால் பெண்களின் படிப்பை பாதியிலையே நிறுத்திவிடும் அன்றைய இஸ்லாமிய சமூக சூழலிருந்து விடுபட்டு, தனது பெண்களை இந்த அளவிற்கு படிக்கவைத்து , சமூகத்தில் பிறர் மதிக்கும்படியாக வாழவிட்டுச் சென்ற அவருடைய மரணத்தை

கடும் பனியிலும் மழையிலும் எல்லையில் நமக்காக காத்திருந்து தாய்நாட்டை காக்கின்ற ஒரு இராணுவவீரனின் மரணத்தோடு சமப்படுத்துகின்றேன்
.


இப்பொழுது டீப்பாயின் மீது ஆனந்தவிகடன் அப்படியே கிடக்கின்றது. அவர் விரும்பிப் படிக்கின்ற சத்குரு ஜக்கி வாசுதேவின் கட்டுரை இன்னமும் ஆனந்தவிகடனில் வந்துகொண்டிதானிருக்கின்றது.

நான் கேட்காமலையே அல்லது போட்டியில்லாமல் எனக்கு கிடைக்கின்ற இந்த ஆனந்தவிகடனைப் பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு இனம்புரியாத வலி தோன்றுகின்றது. அதனைப் படித்துவிடவேண்டுமென்கிற ஆர்வமும் முன்பைபோல் இல்லை.

எப்பொழுதுமே போட்டியில்லாமல் கிடைக்கின்ற எதுவுமே வாழ்க்கையில் சுவாரசியத்தை தருவதில்லை.

-ரசிகவ் ஞானியார்

Friday, August 08, 2008

திருநெல்வேலி - 50 ஆண்டுகளுக்கு முன்பு

திரு இசக்கி அண்ணாச்சியின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலியின் பழைய ஞாபகங்களை அப்படியே பதி செய்து வைத்திருந்தார்.


தினத்தந்தி பத்திரிக்கையின் விலை 25 காசு என்று தொங்கவிடப்பட்டுள்ள பெட்டிக்கடை மற்றும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றால மலையருவி - வீட்டுக்கு வீடு கார்களை பார்த்த நமக்கு அப்பொழுது வீட்டுக்கு வீடு மாட்டுவண்டிகளை பார்க் செய்து வைத்திருக்கும் காட்சி - மாட்டு வண்டி பயணத்தின் போது இடையில் தங்கி இளைப்பாறுதல் - கார்களால் நிரம்பும் திருநெல்வேலி சாலையில் மனிதர்களே இல்லாமல் ஆடுகள் உலா வருகின்ற காட்சி - சகோதரனை சைக்கிளின் பின் அமர்த்தி செல்லும் சகோதரி இப்படி பழைய ஞாபகங்களை கிளறுகின்ற புகைப்படங்கள். இதோ நீங்களும் பாருங்களேன்.


50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருநெல்வேலியை இப்பொழுது பார்ப்பது மிகவும் பரவசமான காட்சிதான்






























- ரசிகவ் ஞானியார்

Tuesday, July 29, 2008

வானிலை அறிக்கை


என் ஞாபகம்
அதிகப்படுவதாய்
நீ அனுப்புகின்ற
குறுந்தகவல்,
அங்கே
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...
வானிலை அறிக்கை

- ரசிகவ் ஞானியார்

Friday, July 25, 2008

எதிர்வினை



"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்

ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"

அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?

பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்

- ரசிகவ் ஞானியார்

பெங்களுரில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு

பெங்களுரில் 6 இடங்களில் , ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா செக்போஸ்ட், மைசூர் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி, கோரமங்களா-ஆடுகோடி பகுதியில் ஒரு இடத்திலும், கண்டோன்மென்ட் லாங்போர்ட் டவுனிலும் இந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இப்போது கிடைத்த தகவல்படி 3 பேர் மரணமடைந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வருகின்றது
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மடிவாளா செக்போஸ்ட் அருகே உள்ள போரம் மால் அருகே முதல் குண்டு வெடித்துள்ளது. இரண்டாவது குண்டு மைசூர் ரோட்டில் வெடித்தது.

மூன்றாவதாக கோரமங்களா-ஆடுகோடி பகுதியிலும், பின்னர் லாங்போர்ட்டவுனிலும் குண்டுகள் வெடித்தன.

வெடித்தவை அனைத்துமே குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நகர எல்லையில், ஓசூர் செல்லும் சாலையில் மடிவாளா உள்ளது. இதையடுத்து கோரமங்களா உள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் இவை.

இவை தவிர மேலும் இரு இடங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உடனடியாக Bomb disposal squads விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. குண்டு வெடித்த பகுதிகள் மிகவும் பரபரப்பானவை. மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகள்.
ஆகவே பெங்களுர் கொஞ்சம் பதட்டமாக உள்ளது.


- ரசிகவ் ஞானியார்

Thursday, July 24, 2008

புத்தனுக்கும் இரவு உண்டு







உன் வீட்டை சூறையாடுபவன்
மன்மதனாக இருக்ககூடும்
உன் அல்குல் தைவரலோ
காந்திக்காக

உனக்கு வயிறு
எனக்குப் பசி

பசியில் உழலும் எனக்கு
உன்
வயிறு பற்றிய வருத்தமில்லை.

பழிபோடுவதற்கு
எதுவோ இருக்கையில்
என்
தவறுகள் வெள்ளமாகிக்கொண்டிருக்கின்றன

ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்

- ரசிகவ் ஞானியார்

(அல்குல் தைவரல் : காதலனோடு களவு கொள்ள விருப்பப்பட்ட பெண் அதனைத் தெரிவிக்க வெட்கப்பட்டு தனது உடல் மெய்ப்பாடுகளால் தெரிவிக்கும் நிலை.)

வெயில் பிடித்தவள்




சாளரம் ஊடே நுழைகின்ற
கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
தோற்றுவிடுகிறது
அவள்
பல் முளைக்கா பருவம்

கற்றைகளை விளக்குமளவுக்கு
கற்கவில்லை நான்

கதிரவனே நீ
கற்றைகளுக்குப் பதிலாய்
கடிபொருளை அனுப்பேன்

எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்


- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 23, 2008

திண்ணையர்கள்


அந்த
வீடுகளில் எல்லாம்
பெரும்பாலும்
நிசப்தங்கள் மட்டுமே
வாழுகின்றன

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
வாழ்ந்தார்களாம்

- ரசிகவ் ஞானியார்

கணிப்பொறிலிசம்

Friday, July 18, 2008

மென்தமிழ் - முதல் இதழ் - ஆடி 2008

அன்பின் தோழமைக்கு,

வாழிய நலம். முதன்முறையாக உங்கள் கணித்திரையில் இனித்தமிழ் மென்தமிழ் , படித்துப்பார்த்து, உங்களின் பின்னூட்டங்களை எங்களின் வலைப்பூவிலோ, அல்லது mentamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைத்தால் மகிழ்வோம்..
வாழ்த்துங்கள் வளர்கின்றோம்,

என்றென்றும் நட்புடன்,
உங்கள் மென்தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

Thursday, July 17, 2008

எப்படி இருந்த தமிழ் மணம் இப்படி ஆகிவிட்டது

எப்படி இருந்த தமிழ் மணம் ....?


இப்படி ஆகிவிட்டது
.....



- ரசிகவ் ஞானியார்

தமிழுக்கு தமிழ் என்றே பெயர்



"நீங்க தமிழா?
நீங்க தமிழா?"

மொழி தெரியாத ஊரின்
பேருந்து நிலையத்தில்,
காற்று தத்தெடுத்து என்
காதுக்குள் அனுப்பியது!
வரிசையாய் விசாரித்து வரும்
அந்தக் குரலை!

சொந்த ஊரில் மிதித்துவிட்டு...
வந்த ஊரின் தமிழ்கேட்டு
மெச்சிப்போய்,
தமிழை வரவேற்க ஆயத்தமானேன்.

"ஊருக்குப் போக காசில்லை
பணம் தாங்க சார்"
- தமிழ் கண்ணீர் சிந்தியது

"க்யா, க்யா
தமிழ் நகி மாலும்"
- ஏதோ என்னால் தமிழுக்கு முடிந்த உதவி

தமிழ் தலைகுனிந்து சென்றது

- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 16, 2008

கிட்டப்பார்வை




என்றேனும்
விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?

நாளைக்கு காலையில்
நாஷ்டாவுக்கு
காசு இருக்கிறதா?

நீ பேசிக்கொண்டேயிரு
அணுசக்தி ஒப்பந்தம் பற்றியும்
..........................
.......................


- ரசிகவ் ஞானியார்

Friday, July 11, 2008

கரையேறும் சலனங்கள்




எறிதலில் தோன்றும்
சலனங்கள்
கரையேறிக் கொண்டிருக்கின்றது

நீச்சல்தெரியாத சொற்கள்
மூழ்கிக்கொண்டிருக்கின்றது

அம்புகளுக்குப் பின்னால்
அம்புலி இருக்கின்றான்

- ரசிகவ் ஞானியார்

Thursday, July 10, 2008

வாழ்த்துகள்


எவருமே
திருப்பித் தரஇயலாத
நான் பிறந்த அந்த நாளை

இன்றைய இலக்கம் மட்டும்
போலியாய் நிர்ணயிக்கின்றது

வாழ்த்துகள் பிரதியெடுத்து
பதிப்படுகின்றது
ம்
நான் கொடுத்தது
எனக்கே திருப்பி

ஒவ்வொரு பிறந்தநாளும்
நான் இறப்பதற்கு
ஒரு வருடத்தை குறைக்கிறது

யாராவது
வாழ்த்துங்களேன்

- ரசிகவ் ஞானியார்

Tuesday, July 08, 2008

சாத்தான்கள் உறங்கும் கல்லறை




கலைந்து விடாத
தேவன் வே ஷத்தோடு
பொருந்திக் கொள்கிறாய்

சாத்தான்கள் உறங்கும்
பெட்டகத்தோடு
எளிதில் கடந்து செல்லும்
உன்னைக் காணும்பொழுதுதெல்லாம்
சாத்தானாகின்றேன்.

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு