Saturday, May 27, 2006

துபாய் மாப்பிள்ளை
(மக்கள் உரிமை என்ற இஸ்லாமிய வார இதழில் வந்த மனதை மிகவும் பாதித்த சிறுகதை ஒன்றை இங்கு பதிவிடுகின்றேன்.)


துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..


என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.


மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.


உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குரானின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.


- நன்றி - மக்கள் உரிமை


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Thursday, May 25, 2006

எங்களை வச்சு காமெடி - கீமெடி பண்ணலையே..?

( வலைப்பதிவுகளை புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கவிஞர் மதுமிதாவிற்கு ஒரு வேண்டுகோள். தங்களின் விளம்பரப்பதிவினை அந்த நேரத்தில் விழித்துக்கொண்டிருந்தவர்கள் மட்டும்தான் வாசித்திருக்க கூடும். ஆகவே தூங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இந்த தகவல்கள் போய்ச்சேரவேண்டுமென்றால் தமிழ்மண நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு அனைத்து வலைப்பதிவினருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பலாமே )


வலைப்பதிவர் பெயர்: ரசிகவ் ஞானியார்

வலைப்பூ பெயர் : நிலவு நண்பன்

உர்ல் : www.nilavunanban.blogspot.com
www.vithaigal.blogspot.com


ஊர்: தற்பொழுது - துபாய் , பிறந்தது - தமிழ்நாடு

நாடு: தற்பொழுது - வளைகுடா ( அமீரகம் ) , நிரந்தரமாய் - இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

இணையத்தில் ஊர்சுற்றிக்கொண்டிருந்தபொழுது தற்செயலாக தமிழ்மணம் என்ற பேருந்து நிலையத்தில் வலைப்பதிவர்களின் கூட்டத்தைக் கண்டேன். "என்னடா இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே" என்று வேடிக்கைப் பார்க்கச் சென்றவன் விதவிதமான பேருந்துகளில், விதவிதமான பயணிகள் , விதவிதமான அனுபவங்கள் கண்டு வியந்து நானும் பயணத்தை ஆரம்பித்தேன். பணயம் இன்னமும் முடியவில்லை.

அந்த பேருந்து நிலையத்தில் யார் யாரெல்லாமோ உதவினார்கள். ஆனால் முதலில் உதவியவர்கள் சந்திரவதனா என்பவர்கள் தான்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள் - வருடம் : 19 ஏப்பிரல் மாதம் 2005

இது எத்தனையாவது பதிவு: 262

இப்பதிவின் உர்ல் (URL):
http://nilavunanban.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

என்னுடைய கல்லூரி நினைவுகளை - என்னைச்சுற்றி நடப்பவற்றை - மனம் கொதித்துப் போகின்ற நிகழ்வுகளை - கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளை காது கொடுத்து கேட்பதற்கு பாலையில் எவருமே இல்லையே என்ற ஆதங்கத்தில் சூட்டியதுதான் இந்த வலைப்பூ மாலை.


உலக நண்பர்களிடமிருந்தும் வருகின்ற விமர்சனங்களிலிருந்து நம்முடைய தனிப்பட்ட எண்ணங்கள் மற்றவர்களின் பார்வையில் எப்படி தோற்றமளிக்கின்றது என்பதை அறிந்து நம்மைத் திருத்திக்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக அதிகமாக எழுத ஆரம்பித்தேன்.

சொந்தப் பத்திரிக்கை நடத்துவது போன்ற உணர்வுடன் என் மனம் போக்கில் எழுதிகொண்டிருக்கின்றேன்.


சந்தித்த அனுபவங்கள்:
நான் படித்த சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் பற்றி எழுதியதை படித்த சில வலை நண்பர்கள் திருநெல்வேலியில் அந்தக்கல்லூரியை கடந்து சென்றபொழுது என்னுடைய ஞாபகம் வந்ததாக கூறியபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


வலைப்பதிவில் நண்பர் ஒருவர் இறந்து போனதைக் கேள்விப்பட்டபொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அந்த நண்பரை நான் இதுவரை கண்டதுமில்லை ஆனாலும் அவர் இறந்த செய்தி என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது பதிவுகள் புதிப்பிக்கப்படாமல் அனாதையாய் இருக்கும்பொழுது எனக்குள் மிகுந்த மனக்கவலையை கொடுத்தது.

என்னுடைய விதைகள் என்றும் வலைப்பதிவில் ஒரு சிறுவனின் ஆபரேஷனுக்காக உதவிகள் கேட்டு எழுதியயோது சிங்கப்பூரிலிருந்து ஒரு அன்பர் என்மீது உள்ள நம்பிக்கையில் ஆபரேஷனுக்குண்டான பணத்தை உடனே அனுப்பி அந்தச் சிறுவனின் உயிரைக்காப்பாற்றினார்.

ஒரு கல்லூரி மாணவனின் அறுவைச்சிகிச்சைக்காக உதவிகள் கேட்டு எழுதியபொழுது அந்தப்பதிவு எழுதிய 24 மணி நேரத்திற்குள் அது சம்பந்தமாக நிதி திரட்டியவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டதாக கூறி எனக்கு அனுப்பின மின்னஞ்சல்.

இணைத்தில் உல்லாசமாய் பொழுதுகள் மட்டுமல்ல உயிரையும் காப்பாற்றலாம் என எண்ண வைத்த தருணங்கள் அவை..

ஊரையே உலகமாய் நினைத்தவனை உலகத்தையே ஊரென்று மாற்றித்தந்தது இந்த அனுபவங்கள்.

அனுபவங்கள் வாழ்க்கையை பக்குவப்படுத்துகின்றது. இன்னமும் தொடரும்.

பெற்ற நண்பர்கள்:

தமிழ்நாட்டுக்குள் சுருங்கி இருந்த நண்பர்கள் வட்டம் தற்பொழுது இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவைத்தாண்டியும் பரவிக்கொண்டிருக்கின்றது.
சில நேரம் பெயர் சொல்லமுடியாத நாடுகளிலிருந்து கூட தமிழ் நண்பர்கள் .

இப்பொழுது நான் தனி மனிதன் இல்லை... உலகம்.


கற்றவை:

கடலில் கால்கள் மட்டுமே நனைத்துக்கொண்டிருந்தவன் உட்புகுந்து முத்தெடுக்கவும் கற்றுக்கொண்டேன். மிதமான அலைகளிலே நீந்திச்செல்லவும் சுனாமி அலைகள் வந்தால் தப்பிக்கவும் கற்றுக்கொண்டேன்.


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

தணிக்கைகள் உள்ள கருத்துக்களை எழுதுபவனும் நானே அதனை தணிக்கை செய்பவனும் நானே

கட்டுப்பாடுகள் இல்லாமல் நாம் எதுவேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அது தனி மனிதனைத்தாக்குவது போலவும் மற்ற மத உணர்வுகளை கிண்டலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.இனி செய்ய நினைப்பவை:

வரலாற்று ஆராய்ச்சி சம்பந்தமான பதிவுகள் போடுவது

நான் தங்கியிருக்கும் இடத்தின் - சூழலின் வித்தியாசமான பதிவுகள்

டெஹல்கா டாட் காம் போன்று இரகசியங்களை வெளிக்கொணரும் பதிவுகள்
நான் வாங்கி எல்லா ஆட்டோகிராப்களையும் இ-ஆட்டோகிராப்பாக மாற்றுவது

துண்டுக்காகிதம் கூட விடாமல் தேடிப்பிடித்து என்னிடம் இருக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் எழுதுவது.உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

கட்டபொம்மன் வாழ்ந்த மண்ணில் பிறந்தவன் இந்த கெட்ட பொம்மன்..

என்னுடைய பெயர் : ரசிகவ் ஞானியார் .

ரசிகவ் என்பது யாரும் தந்தப் பெயர் அல்ல. யாருமே தராததால் நானாகவே வைத்துக்கொண்ட பெயர் .

தாயார் பெயர் : ரசினா

தந்தையின் பெயர் : கவ்பத்துல்லா


இவற்றின் முதல் எழுத்துக்களை ஒன்றிணைத்து ரசிகவ் ஆக்கிக் கொண்டேன்.. நிறைய ரசிகர்களையும் ஆக்கிக்கொண்டேன்.

படித்தது - வளர்ந்து - விளையாடியது - சண்டையிட்டது -உருண்டது எல்லாம் திருநெல்வேலி மண்ணில்தான்.

கல்லூரி படிப்பு - சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம்
மணோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ

கல்லூரி நேரத்தில் நண்பன் ராஜாவுடன் இணைந்து "பானிபட் இதயங்கள் " என்ற கவிதைப் புத்தகம் வெளியிட்டேன். இன்னமும் தரமாக ஒரு புத்தகம் வெளியிடும் முயற்சியில் தற்பொழுது.

விரும்புபவர்கள் விரும்பும்வரைக்கும் துபாயில் பணி.
விரும்புபவர்கள் விரும்பவில்லையெனில் இந்தியாவில் இனி.

நான் கதாநாயகனா இல்லை காமெடியனா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாகச் சொல்லமுடியும் நான் வில்லனல்ல.

பாதிக்கப்பட்டு கவிதை எழுதுவேன். கவிதைகள் எழுதியும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்.

என்னையும் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதே என் தலையாய பணி.


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:


இந்த பாலை வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்களை விட்டு பிரிந்து இருந்தாலும் நான் சோகப்பட்டால் ஆறுதல் தந்து, மகிழ்ச்சியடைந்தால் என்னோடு மகிழச்சியடைந்து, எனது பால்ய வயது மொட்டை மாடி நண்பர்களுடன் சுற்றியிருந்து அரட்டை அடிப்பது போன்ற உணர்வுகளை தந்து எனக்கு எப்போதும் ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கும் குழும நண்பர்களுக்கும் வலைப்பதிவு வாசகர்களுக்கும் - வலைப்பதிவு வட்டத்தினை புத்தமாக்கும் முயற்சியில் இருக்கும் கவிஞர் மதுமிதாவுக்கும் நன்றி நன்றி நன்றி.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Wednesday, May 24, 2006

சில தூரத்து வேண்டுதல்கள்
ஒரு பயணத்தின்போது
ஏதோ ஒரு பிளாட்பாரத்தில்
இருக்கைகளில்
குத்தவைத்துக்கொண்டு
அமர்ந்திருந்த பெண்ணின்
சோகங்கள் தீர வேண்டும் !

முதல் விமான பயணத்தின் போது
அழகாய் பேசி ...
அன்பாய் உபசரித்த ..
விமானப் பணிப்பெண்
பயணிக்கின்ற ..
எல்லா விமானங்களும்
கோளாறில்லாமல் பறக்கவேண்டும் !


உடன் பயணத்தில்
பேசிக்கொண்டு வந்து
அடுத்த நிலையத்தில்
இறங்க ஆயத்தமாகும்
அழகிய பெண் ..
பத்திரமாய் வீடுபோய் சேரவேண்டும்!

ஆட்டோ கிராப்பில்
மீண்டும் சந்திப்போமென
எழுதிவிட்டு
கணவனோடு செல்கையில்
தலைகுனிந்தபடி கடந்துபோன
கல்லூரித் தோழியின் வாழ்க்கை ...
கஷ்டமில்லாமல் இருக்கவேண்டும் !


அவனை காதலித்து
அவமானப்பட்டு
காதல் தோல்வி கண்ட
அவளுக்கு ...
நல்ல கணவன் அமையவேண்டும் !

அன்று
விபத்தில் அடிபட்டு இறந்த
பெரியவரின் குடும்பம்
அவர் இருப்பின் நிலைபோல...
ஆறுதல் அடைய வேண்டும்!


நேற்று இரவில்
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த
பூனைக்கு
புகலிடம் கிடத்திருக்கவேண்டும் !

கேள்வித்தாளை வெறித்தபடியே
பயத்தோடு
பரிட்சை எழுதிய என்
பின்புற இருக்கைக்காரன் ...
வெற்றி பெற்றிருக்கவேண்டும்..!


இவள்தான்
மனைவியாகப்போகிறாள் எனத்தெரியாமல்
நண்பர்களோடு கிண்டலடித்த
அந்த
கணிப்பொறி மாணவியை
கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் !- ரசிகவ் ஞானியார்

Tuesday, May 23, 2006

என் இனிய கவிதைகளே..- விமர்சனம்
"என் இனிய கவிதைகளே" என்று தலைப்பை தேடி அலுத்துப் போகாமல் கவிதையையே தலைப்பாக வைத்திருக்கின்றார் கவிஞர் சுரேஷ்.

கவிதைப் புத்தகத்தை சமர்ப்பிக்கின்றோம் என்று பெற்றோர்கள் பெயரையோ அல்லது தமிழ் ஆசிரியர்கள் பெயரையோ அல்லது தனக்கு உதவி செய்தோர்கள் பெயரையோ அல்லது இறைவனின் பெயரையோ குறிப்பிடுவார்கள்.

பாசமுள்ள எனது தாய்மாமன் திரு பாலகிருஷ்ணன் அவர்களே
தாயின் வயிற்றில் நான் ஆறு மாதம்
அப்பொழுது உன் மரணம்


ஆனால் இவரோ சமர்பணத்தில் தான் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே மறைந்து போன தனது மாமா திரு. பாலகிருஷ்ணனை குறிப்பிட்டிருப்பது வித்தியாசமாகவும் இவர் தனது மாமாவின் மீது வைத்த அளவுக்கதிகமான பாசத்தையும் காட்டுகின்றது.

தாயையே மதிக்காத இந்தக் காலத்தில் தாய்மாமாவை மதிக்கின்ற சுரேஷ் எனக்கு வித்தியாசமாய் தோன்றுகின்றார். இவர் தாய்மாமாவின் மீது வைத்த பற்றில் அவர் தாயின் மதிப்பு உயர்ந்தே நிற்கின்றது.

இலக்கண விதிமுறைகள் கடைப்பிடிக்காத தற்போதைய பெருன்பான்மையான கவிஞர்களைப் போலவே தானும் இலக்கணக்கட்டுப்பாடு என்னும் கடிவாளத்தை என்னாலும் பயன்படுத்தமுடியவில்லை எனவும் தமிழ் வாசிக்கத் தெரிந்த எவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக இருக்கும் எனவும் அவரே கூறிவிடுவதால் கவிதைகளில் இலக்கணத்தை ஆராயத் தேவையில்லை. சாதாரண நடையில் யாவரும் வாசிக்கும்படி இருக்கின்றது.

ஆரம்பக்கவிதையே தமிழ்ப்பற்றில்தான் ஆரம்பிக்கின்றது. "அதிசயம் ஆனால் உண்மை" என்ற கவிதையில் ஓர் தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்துப் பார்த்தால்

எல்லாப் போர்களும் நின்றுவிட
ஆயதங்களோ கண்காட்சி மாளிகைகளில்

சிறைச்சாலைகளெல்லாம்
மனநல மருத்துவமனைகளாய் பரிணாமங்கள்

கவிதைக்கு ஓர் பல்கலைக்கழகம்


அட ஒரு தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்தால் கூட உலகச்சமாதானம் கொண்டு வந்துவிடுவானோ? இது அதிகப்படியான சிந்தனையே என்றாலும் இதில் அவருடைய அதீத தமிழ்ப்பற்று தெரிகின்றது.

தனது தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளை வெவ்வேறு கவிதைகளில் விவரிக்கின்றார் "ஏழைச்சிறுமியும் ரோஜாச்செடியும்" என்ற கவிதையில் ரோஜாச்செடி ஒன்றினை வளர்த்து

செடியே
உனது முதல் ரோஜாச்செடி
நம் இருவருக்குமல்ல
பிறகு?
என் தமிழ்தெய்வம்
எனதன்பு
தமிழ் ஆசிரியருக்கு.


அது தருகின்ற முதற்பூவை தமிழ் ஆசிரியருக்குக்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கின்றார்

குழந்தைக்கு தாய் பாடுகின்ற சாதாரண தாலாட்டுக்களை கண்டிருப்போம். ஆனால்


உந்தன்
தந்தை பாவம் செய்ததாலே
இந்த
எய்ட்ஸ்தாயின் தாலாட்டு


என்று "தாலாட்டு" என்ற கவிதையில் எய்ட்ஸ் தாய் தாலாட்டு பாடுவதாக சோகத்தையும் வித்தியாசமான பார்வையில் சொல்லியிருக்கின்றார்.

"பிரிவின் உணர்ச்சிகள்" என்ற கவிதையில் மனைவியைப் பிரிந்த பிரிவின் உணர்ச்சியை சொல்லி புலம்பி இறுதியில்

உனை நான் கண்டதும்
கேட்பது முத்தமல்ல
உனது
காலில் விழுந்து மன்னிப்பு


என்று மனைவி உயிருடன் இருக்கும்பொழுது அவளை மதிக்கத்தவறிய அல்லது ஏதோ தவறு செய்துவிட்டு அவள் இறந்த பிறகு அவளிடம் மன்னிப்பு கேட்கத் துடிக்கும் ஓர் கணவனின் யதார்த்தம் தெரிகிறது

வாழுகின்ற காலங்களில் பெற்றோரின் நிழலில் அவர்களைச் சார்ந்து இருந்துவிட்டு அவர்களின் வயதான காலங்களில் அவர்களை மதிக்கத் தவறும் இன்றைய சமுகத்திற்காக ஒரு தாயின் பார்வையில் "அம்மா" என்ற கவிதை பெற்றோர்களை நேசிக்கும் மகன்களின் மனதில் ஈரத்தை வரவழைக்கின்றது.

நிழல் கிடைக்க
நான் உன்னை வளர்க்க
நீ எனைத்தள்ளிவைத்து
அழகு காணும்
கொடுமையிது காண
நான் எத்தனை காலம்தான்
வாழ்வேனோ?


என்று மகனால் ஒதுக்கப்பட்ட தாய் கண்கலங்கி கூறி இறுதியாக

தலையணை கீழ் கொஞ்சம்
பணம் வைத்துள்ளேன்
எனது சவப்பெட்டி வாங்க
அது உதவும் கலங்காதே!

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது பிறந்தநாளைப்போல
என் மரணநாளையும்
தயவாக மறந்து விடு


என்று புலம்புவது வீட்டுத்திண்ணையில் அல்லது முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை ஒதுக்கி வைக்கின்ற மகன்களுக்கெல்லாம் ஒரு சாட்டையடி. தாயைப்பற்றி சமாதானம் என்ற கவிதையிலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தாய் மட்டும்தான் மகன் குற்றம் செய்தாலும் அவனை மன்னிக்கும் குணம் படைத்தவள் என்பதை

உலகில் எல்லாம்
மன்னித்து மறக்கும்
ஒரே ஒரு
மனித நீதிமன்றம்
தாய் மனது என்ற இடத்தில்
மட்டும்தான்
அதில் எத்தனை புனிதம்

தாயின் மறுபெயர் சமாதானம்


என்று குறிப்பிட்டிருக்கின்றார். கவிதைகளின் நீளம் கவிதைத்தன்மையை கொஞ்சம் குறைத்தாலும் கவிதை நயம் இல்லாத யதார்த்தமான வரிகள் அவர் சொல்ல வந்த கருத்துக்கள் அனைவரையும் போய்ச் சேரவேண்டும் என்பதைக் காட்டுகின்றது

அதுபோல தந்தைக்கு எழுதுகின்ற ஒரு கவிதையில் மரணித்திற்கு வருகின்ற
மனிதர்களின் எண்ணிக்கைதான் ஒரு மனிதனின் நடத்தையை தீர்மானிக்கும் என்பதை

வீட்டைப் பூச்சந்தையாக்கி
வீதியெல்லாம்
பூமழை பொழிய உன்
இறுதி பயணத்தின்
அளவில்லாக் கூட்டம் சொன்னது
உந்தன் மனிதநேயம்


என்று சொல்லி தந்தையின் மீது அளவில்லா பாசத்தை தெளிவு படுத்தியிருக்கின்றார்.


மனைவியின் கனவாக வந்த "செய்தி" என்ற கவிதையில்

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது ஆத்மா
சாந்தி அடைய
தயவாக ஒரு
நல்லவரை மறுமணம் செய்


என்று கணவன் மனைவிக்கு எழுதி வைத்ததாக சொல்லும் அவரது மன ஓட்டத்தில் ஓர் மனிதநேயமுள்ள கணவனாக தெரிகின்றார்

மனைவியின் பிரிவில் கணவனும் கணவனை நினைத்து மனைவியும் என்று சில கவிதைகளில் அவரது எண்ணங்களின் தூய்மை பளிச்சிடுகின்றது

மீன்கள் என்றவுடன் சிலருக்கு எச்சில் ஊறும். இவருக்கோ கற்பனை ஊறியிருக்கின்றது.

சுனாமி உங்களைத்தாக்க அதை
எதிர்த்து கரைக்கு வந்து
தற்கொலை தவறென்று தெரிந்தும்
உங்கள் மீது பாசம் காட்டின
எங்கள் மீது
ஆதங்கமும் இல்லையா?


என்று கேட்டிருப்பது வித்தியாசமான சிந்தனை. இத்தனை கோடி மக்களுக்காக நாங்கள் உணவாக மாறுவதில் பெருமைப்படுகிறோம் என்று மீன்களின் மனிதநேயத்தைக் கூறி

அதோ அங்கே வலையிடும்
சத்தம் கேட்கிறது
முத்தம் தேடி ஓடுகிறேன் - வணக்கம்

கவலை வேண்டாம்
நாளை உங்கள் வீட்டு குழம்பில்
நானும் இருப்பேன்


என்று அழகாய் முடித்திருக்கின்றார் . இப்படிச் சொல்லியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்


நாளை உங்கள் வீட்டு
குழம்பில் கூட
கொதித்துக்கொண்டிருக்கலாம்..இவருடய கவிதையின் ஒவ்வொரு முடிவுகளும் ரஜினி படத்தின் பஞ்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகனைப்போல எதிர்பார்க்க வைத்திருக்கின்றார்.

வானத்தோடு பேசுகின்ற கவிஞர் . அதில் கூட

வானமே நீ
கனவு காண்பாயா?
உலக சமாதானம் வரட்டும்
பிறகு
அதாவது நிஜமாகட்டும்


என்று உலக சமாதானத்திற்காக ஆசைப்படுகின்றார்.. வானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் என்ன சம்பந்தம்?. வானத்தின் கீழ் நாம் இருக்கின்றதால் வானத்திடம் முறையிடுகின்றாரோ..? தனது வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்துகின்றார்

இப்பொழுதுள்ள அரசியல் வாழ்க்கையின் கசப்புணர்வில் எல்லாருமே அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல்வாதிகளின் மீது வெறுப்புணர்வுமே கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் "அவர்களும் மனிதர்களே" என்ற கவிதையில் அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கின்றார்

பாவம் அரசியல் வாதிகள் என்று அவர்கள் மீது இரக்கப்பட்டு மக்கள் மட்டும் என்ன நியாயமாகவா நடக்கின்றார்கள் என்று ஆதங்கப்பட்டு நம்மை முதலில் திருத்திக் கொள்வோம்.

அதுவரையிலாவது
அரசியல்வாதிகளைத் திட்டாதீர்கள்
அவர்களும் மனிதர்களே


என்று முடித்திருக்கின்றார். எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஒருவேளை இவருக்கு சொந்தக்காரர்கள் எவரேனும் அரசியலில் இருப்பார்களோ என்று..?

சமுதாயத்தில் தான் காணுகின்ற நிகழ்வுகளைக் கண்டு மனம் வருந்துகின்றார். சாலையில் காணுகின்ற ஆட்டோக்காரனை நினைத்துக் கூட மனம் வருந்தி கவிதை ஒன்றை எழுதுகின்றார். தனது "ஆட்டோக்காரன்" என்ற கவிதையில்

ஆறுமணி நேரம்
ஆட்டோ ஓட்டினாலே
நீங்களும் பெண்களின்
பிரசவ வலியை அறிவீர்கள்


என்று ஆட்டோ ஓட்டுதலில் உள்ள சோகங்களையும் ஒரு ஆட்டோக்காரனின் பார்வையில் இலேசான நகைச்சுவைத் தொனியில் சொல்லியிருக்கின்றார்.

நமக்கெல்லாம் சவாரியின் போது மீட்டருக்கு மேல் கேட்கின்ற ஆட்டோக்காரன் இவரின் இதயத்தின் மீது அதிவேகமாய் சவாரி செய்திருக்கின்றான். பாருங்களேன்..இறுதியாய் முடிக்கும்பொழுது

இன்று பிறந்தவன்
என்றும் ஒரு ஆட்டோக்காரன்
ஆக வேண்டாமென்று
இரகசியமாய் பிரார்த்திப்பேன்
இது சத்தியம்

என்று ஒரு ஆட்டோக்காரனாய் நிலைமாறி அவர்களுடைய உச்சக்கட்ட வேதனைகளை வடித்திருக்கின்றார்.


எதற்குத்தான் கவிதை எழுத வேண்டும் என்ற விதிமுறைகளில்லாமல் எல்லாவற்றின் மீதும் தனது பார்வையின் எழுதுகோலை பதித்திருக்கின்றார்

தலைவலி வந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்..? அனாசின் எடுத்துக்கொள்ளுவோம் ஆனால் இவரோ கவிதையை கையில் எடுத்திருக்கின்றார் .

தலைவலி வருகின்ற காரணங்களை பட்டியலிட்டு பிறகு அதனை வராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்

தலைவலி என்றால் என்ன
என்று
வரும் காலம்
கேள்விக் கேட்கப்
புரட்சி செய்வோம்

என்று முடித்திருக்கின்றார். தலைவலியை ஒழிப்பதற்கு புரட்சி செய்யும் முதல் கவிஞர் இவர்தான். கொஞ்சம் விட்டால் "தலைவலி ஒழிக! தலைவலி ஒழிக" என்று மக்களை தூண்டி விட்டு போராட வைத்துவிடுவார் போல இருக்கின்றது.

தலைவலி வருவதற்கான காரணங்களை அறிய ஏதேனும் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டிருப்பாரா? இல்லை இவருக்குள்ளேயே ஒரு மருத்துவனும் இருக்கின்றானா? என்று நம்மை சிந்திக்க வைக்கின்றது.


"ஒரு பெண்ணின் கதை" என்ற கவிதையில் கணவனை விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி தன் கண்களுக்கு முன்னால் குடும்பம் சகிதமாய் செல்லுகின்ற தோழிகள் மற்றும் கணவனோடு கைகோர்த்துக் கொண்டு செல்லுபவர்கள் எல்லாவற்றையும் கண்டு ஏங்கும் உணர்ச்சியினை வடித்திருக்கின்றார். தனது சோகம் என்றுதான் தீருமோ என்பதை

அன்றும் எனது கண்ணீர்
நான் உறங்கியதும் உறங்கியது.
மறுநாள்
நான் விழித்ததும் விழிக்க


என்று முடித்து தனக்கு என்றுமே சோகம்தான் மிச்சம் என்று அப்பெண்ணின் ஏக்கத்தை வடித்திருக்கின்றார்..


கண்களுக்கு கூட மனிதநேயக் கண்கள் கொண்டு கவிதை வடித்திருக்கின்றார்

எங்கள் பக்கத்து வீட்டக்காரர்
திரு. மூக்கின் வீட்டிலிருந்து
உதவியாளர் என்ற பெயரில்
வேலை செய்யும்
திரு. கண்ணாடிக்குக் கொடுக்கும்
மரியாதை கூட
எங்களுக்கு இல்லையா?


என்று கண்ணாடி - மூக்கிற்குக் கூட திரு. சுரேஷ் அவர்கள் திரு போட்டு அழைத்திருப்பது கவிதைக்கு புதியதாய் இருக்கின்றது. கண்களை பாதுகாக்கச் சொல்லிவிட்டு

மனிதா! நீ மரணப்பட்டாலும்
நாங்கள் உடனே இறப்பதில்லை
நாங்கள் இறப்பதற்குள்
உனது மரணத்தை
நாலுபேர் எடுப்பதற்குள்
கண்ணிழந்த ஒருவருக்கு
நாங்கள் வாழ உயில் எழுது


என்று கண் தானம் செய்வதை வலியுறுத்துகின்றார். தான் இறந்த பிறகு கூட தனது கண்கள் இந்த உலகத்தை யார் மூலமாவது பார்த்துக்கொண்டிருக்கட்டும் என்று இரக்கப்படும் கவிஞர் இவர்.

மனைவிக்கு பிறந்த நாளில் விருப்பத்தோடு சேலை வாங்கிக் கொடுத்து அவள் அதனை பிடிக்கவில்லை என்று ஒதுக்கும்பொழுது மனம் வேதனைப்பட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளன் என்று சொல்லி கிண்டலடிக்கப்பட்டதால் கமல் மனம் நொந்து ஒரு சோகப்பாட்டு படிப்பதைப் போல இவரும் நொந்து வானத்தை நோக்கி தனது குறைகளை சொல்லி புலம்புகின்றார்.

அதனைக் கேட்ட வானம் இரவு முழுவதும் மழை பொழிந்ததது தன் சோகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத்தான் என்பதை

தனக்காக இரவு முழுவதும் அழுத
வானமும் பூமியும்
அவனது நல்ல ஸ்நேகிதர்கள்
என்று மனம் குளிர்ந்தான்


என்று சொல்லியிருக்கின்றார். அட இது போன்ற சூழ்நிலைகளை எல்லாம் கவிதைக்கென்று எப்படி தேர்ந்தெடுக்கின்றாரோ தெரியவில்லை. இவருக்குள் சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு கதா ஆசிரியரே ஒளிந்திருக்கின்றார்

பெரிய மனுஷத்தனமாய் பல சிந்திக்க வைக்கும் கேள்விகளை "சிறுவனின் கேள்விகள்" என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். அதில் என்னைக் கவர்ந்தவை

மரணித்தபிறகும்
வாழ்க்கை உண்டு என்ற
நம்பிக்கை பொய் என்றால்
பக்தர்களில் எத்தனைபேர்
அட்டகாசத்திற்கு அடிமையாவார்கள்

பாதிக்கப்பட்டவன் எதிர்த்தால்
அவன் பெயர்
தீவிரவாதியா எப்படி?


என்று நடுநிலைவாதிகளுக்கு எழும்புகின்ற கேள்விகளை கவிதைப்படுத்தியிருக்கின்றார்.

"காலம் நமது தோழன்" என்ற கவிதையில் காலம் நல்ல மருந்து என்பதை வித்தியாசமாய் சொல்லியிருக்கின்றார். "காலப்போக்கில் காயங்கள். மறைந்து விடும் மாயங்கள் "என்று ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலை ஞாபகப்படுத்துகின்றார்.

அவரவர்களுக்கு வருகின்ற மனவலிக்கெல்லாம் காலம்தான் தீர்வு என்பதை

இத்தனை மனவலிகளிலிருந்து
வேண்டுமா விடுதலை?
இந்தக்கவிதையை அடுத்தமாதம்
இதே நாளில் படித்துப் பாருங்கள்

காலம் நல்ல மருந்து


என்று காயங்களுக்கு காலத்தின் ஆறுதலை கவிதையில் தந்திருக்கின்றார். பார்ப்போம் அடுத்த மாதம் இதே கவிதையை இதே சூழ்நிலையினில் படிக்க முடிகின்றதா என்று?

அரசியலால் நாட்டைக் வளர்க்கின்றார்களோ இல்லையோ தனது வீட்டை வளர்க்கின்ற அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சுயநலமின்றி மக்களுக்காய் உழைத்து மறைந்த தனக்குப் பிடித்த தலைவரான காமராசர் பற்றிய கவிதையில் குறிப்பிடுகின்றார்

நீ முதலமைச்சர் ஆனபோது
உனது ஊர் கிராமத்தில்
முதல் ஏழை
உன் ஆத்தாதான்


இந்த கவிதை வரிகளில் நான் உட்கார்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனதில் ஒரு சோகம் அப்பிக்கொள்ள வைக்கும் வரிகள் இது.

மறைந்த பிறகுதான் கவிஞர்களும் அவர்களது கவிதைகளும் மதிக்கப்படுகின்றன என்பதை "எழுத்துக்கள்" என்ற கவிதையில்

இறுதிப்படுக்கை மூடியதும்
மண்களால் எனக்கு பூ மழை
அன்று முதல்
கவிஞன் எந்தன் எழுத்துக்கள்
கண்டிப்பாய் பிரபலமாகும்


என்று கூறி கவிதையை முடிக்கின்றார். அவருடைய எழுத்துக்கள் அவர் மண்களால் மூடப்படுவதற்கு முன்பே அவரை மாலைகளால் மூடட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

சமாதானம் - தாய்பாசம் - உலக அமைதி - பிறருக்காய் இரங்கும் மனம்- தொழிலாளிகளின் வேதனை - மனைவியின் மீது பிரியம் - ஆறுதல் - அறிவுரை என்று எல்லாவற்றைப் பற்றியும் அலசுகின்றார்

கவிதைகளின் நீளமும் சொல்ல வந்த கருத்துக்கள் அதிகமான வார்த்தைத் திணிப்புகளாக இருப்பது போல தோன்றுவதால் படிக்கும்பொழுது அலுப்பு வருகிறது என்றாலும் தன் உணர்வுகளை வார்த்தைகளில் முற்றிலுமாய் தெரிவித்து விடவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியிருக்கின்றார்.

பெருன்பான்மையான கவிதைகள் உரைநடை வடிவில் வந்து கவிதைகளாக உருமாறுகின்றது. ஆகவே இதுபோன்ற குறைகளை நண்பர் சுரேஷ் அவர்கள் தவிர்த்தால் கருத்துக்கள் சிதைபடாமல் நீளத்தை குறைத்திருந்தால் அவரது சிந்தனைகளில் தோன்றிய உணர்ச்சிகள் மக்களை இன்னமும் எளிதாய் சென்றடையும் .

சமூகத்தை தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் பாதிப்புகள் கண்டு ஒவ்வொரு மனிதநேயமுள்ள மனிதனும் உணர்ச்சிவசப்படுகின்றான். அந்த மனிதனின் உணர்ச்சிகள் ஒவ்வொரு விதங்களில் வெளிப்படுகின்றது.

பாடல்கள் மூலமாக - நடனங்கள் மூலமாக - ஓவியம் மூலமாக - எழுத்துக்கள் மூலமாக இப்படி வெவ்வேறு பரிணாமங்களில மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அதுபோல் நண்பர் சுரேஷ் கவிதைகள் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.

நிறைய எழுத வேண்டும் என்றும் காணுகின்ற எல்லா நிகழ்வுகளையும் கவிதையாக்கவேண்டும் - தனது சோகங்களையும் - மகிழ்ச்சிகளையும் கவிதைகள் மூலமாகவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக நண்பர் சுரேஷ்க்கு இருக்கின்றது. அவரது ஆர்வத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.


கவிதைப்புத்தகத்தை மூடிய பிறகும் ஆட்டோக்காரன் - மனைவியின் பிரிவு - தாயின் தனிமை - தந்தையின் மரணம் -போன்ற சோகங்களை தடவுகின்ற சில கவிதைகள் இதயத்தைச் சுற்றி பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றன. என் கவிதைகளே என்று தலைப்பு வைத்திருந்தாலும் படித்தபிறகு அவைகள் நம் கவிதைகளாகி விடுகின்றன.கவிதைப்புத்தகம் கிடைக்குமிடம்


திருமகள் நிலையம்
55 - ( புதிய எண் 16) வெங்கட் நாராயணா சாலை
தி.நகர் - சென்னை - 600 017

தொலைபேசி : 91 - 44 - 24342899 24327696
தொலைநகல் : 91 - 44 - 24341559

கவிஞரின் முகவரி :

என். சுரேஷ்
9840344175
nsureshchennai@hotmail.com


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, May 22, 2006

காதல் அரசாங்கம்
காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்


சாதி மதம் பார்க்காததால்
காதல் ஒரு
சமத்துவபுரம்

தன்னைத்தானே
உருக்கிக் கொள்வதால்
காதல் ஒரு
நமக்கு நாமே திட்டம்

இன்ப துன்பங்களை
இணைந்தே கடப்பதால்
காதல் ஒரு
மேம்பாலத்திட்டம்

இருவருக்குமே
லாபம் கிடைப்பதால்
காதல் ஒரு
உழவர் சந்தை

ஆகவே
காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்

- ரசிகவ் ஞானியார்

குழந்தையைக் கடத்திவிட்டார்கள்

அன்புள்ள லங்காசிரி நிர்வாகத்திற்கு

எனது தூக்கம் விற்ற காசுகள் என்ற கவிதைக் குழந்தையை இன்னொரு நண்பர் தனது மனதில் கடத்தி தங்கள் மின்னிதழில் பாதுகாத்து வைத்திருக்கின்றார்.

எனது தூக்கம் விற்ற காசுகள் கவிதையை சவுதியிலிருந்து ஜெஸ்மின் என்ற நண்பர் தான் எழுதியதாக தங்களது விடுப்பு என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக கவிதையை வெளியிடுவதில் இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கின்றது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அனுபவத்தை நான் ஏற்கனவே நிறைய சந்தித்துவிட்டேன்.

தனக்கு மிகவும் பிடித்த கவிதையை தண்னுடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதைகளை தான் எழுதியதாக இருக்ககூடாதா? என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுவது இயல்புதான். அதுபோன்ற ஒரு ஆர்வத்தில்தான் நண்பர் ஜெஸ்மின் அக்கவிதையை தான் எழுதியதாக குறிப்பிட்டுளார் என்று நினைக்கின்றேன்.

எனது கவிதைகளை ஒன்றுசேர்த்து புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருப்பதனால் இதுபோன்ற நிகழ்வுகள் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடுமோ என்ற குழப்பத்தில் இதனை தெளிவுபடுத்துகின்றேன்.

என்னுடைய கவிதை வேறு ஒருவர் பெயரில் வந்திருப்பதைக் கண்டு மனம் வருந்தி இதனை சிஙகப்பூரிலிருந்து தகவல் கொடுத்த நண்பர் நாச்சியப்பன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாசகர்கள் அனுப்புகின்ற கவிதைகளை உறுதி செய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்களில் இந்த விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அனுப்புகின்ற கவிஞர்களிடமிருந்து படைப்புகள் எந்த மின்னிதழிலும் வெளியிடப்படவில்லை என்றும் சொந்தப்படைப்புதான் என்றும் ஒரு உறுதிமொழியில் அவர்கள் பிரசுரம் செய்கின்றார்கள்.

இதுபோன்று அனைத்து மின்னிதழ்களும் கடைபிடித்தால் அதன் வளர்ச்சியும் மதிப்பும் மற்றும் நம்பகத்தன்மையும் இன்னமும் அதிகரிக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Sunday, May 21, 2006

கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை

எனது பெயர் Nick Vujicic . என்னை படைத்த இறைவனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக படைத்ததற்காக நான் பெருமைப்படுகின்றேன்.

இப்படி யாராவது சொல்லக்கூடுமா..? சொல்லக்கூடும் இறைவன் தனக்கு வளமான வாழ்வு கொடுத்து - நல்ல உடலமைப்பு கொடுத்திருந்தால்.ஆனால் பாருங்களேன் இந்த மனிதரை.


கைகள் மற்றும் கால்களின் பகுதிகள் எதுவும் இல்லாமல் பிறந்தாலும் இந்தக்குறை இறைவன் என் மீது அன்பு வைத்திருப்பதால்தான் என்று கூறுகின்றார்.
நாம் ஏதாவது சின்ன பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் கூட "அய்யோ எனக்கு மட்டும் இறைவன் இப்படி பண்ணிவிட்டானே" .."அப்படி பண்ணிவிட்டானே" என்று இறைவனை திட்டி தீர்த்துவிடுவோம்.

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் மனம் தளர்ந்து ஒடிந்து போய் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த மனிதர் தன்னம்பிக்கை தருகின்ற பாடமாக இருக்கின்றார்.

தனது பிறப்பினை இத்தனை பேருக்கு சாட்சியாக - மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படி வைத்த இறைவன் தன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றான் என்று சொல்லும் அளவிற்கு பக்குவப்பட்டிருக்கும் மனிதர் இவர்

சமீபத்தில் கூட நான் பார்த்த டிஷ்யும் என்ற படத்தின் வசனத்தில்; உயரம் குறைவாக உள்ள மலையாள நடிகர் பற்றிய ஒரு காட்சி :

அந்த உயரம் குறைவான நடிகரின் கதாபாத்திரம் காணுகின்றவர்களிடமெல்லாம் கடன் வாங்குவார் ஒரு தடவை சிறுவர்களிடம் கடன் வாங்கி விட அந்தச்சிறுவனின் தந்தை வந்து அவரைத்திட்ட இதனைக்கண்ட கதாநாயகன்

"ஏண்டா இப்படி அவமானப்படுத்துற..சின்னப்பையன்களையெல்லாம் ஏண்டா ஏமாத்துற..ச்சே எனக்கு வெட்கமா இருக்குடா" என்று கடிந்து கொள்வதைப் பார்த்து அவர் ஒரு வசனம் சொல்லுவார்

"டேய் ..நான் செய்வது தப்புதாண்டா..ஆனா நான் வெளியில் சென்றால் என் உருவத்தைக் கண்டு கிண்டல் செய்கின்றார்கள். அவர்கள் என்னை கிண்டல் செய்வதைத்தடுக்கத்தான் இந்த கடன் வாங்கும் முயற்சி.."

"என்னைக் கண்டு கிண்டலடிப்பவர்கள் எல்லாம் அய்யோ இவன் வந்தால் கடன் கேட்பான் என்று ஓடி ஒளிவதைக்கண்டு எனக்குள் ஒரு சந்தோஷம்..என்னை யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள் அல்லவா..

தப்பு செய்யாத மனுசனே இல்லைடா..ஏன் கடவுளே தப்பு செய்திருக்கான்..பின்னே என்னை இப்படி படைச்சது அவனோட தப்புதானே..?"


என்று சொல்லிவிட்டும் செல்லும் காட்சி மனசை உருக்குகின்ற காட்சி. இப்படி எல்லா மனிதர்களுமே தவறை கடவுள் மீது போட்டுவிடுவார்கள்.

தன்னை மட்டும் கடவுள் குறைகளோடு படைத்துவிட்டானே என்று இவரைப்போன்று குள்ளமாகப் பிறந்ததற்கு அல்லது உடல் ஊனமாய் பிறந்ததற்கு வருத்தப்படுபவர்களுக்கு மத்தியில் பாதி உடலே இல்லாமல் பிறந்தாலும் இதயம் முழுமையடைந்துப் பேசும் இவரை கண்டால் அதிசயமாகத்தான் இருக்கின்றது.


உங்களுக்கு எத்தனை துன்பங்கள் அல்லது போராட்டங்கள் வந்தாலும் அதனை மறந்து விட்டு மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்
என்பதுதான் இவரின் பிரச்சாரம்.

1982 ம் மாதம் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தார் அவர். இவருடைய தந்தை ஒரு சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிபவர் .

கை - கால்கள் இல்லாமல் பிறந்த தங்களுடைய முதல் குழந்தையைக் கண்டு அதிரிச்சியுறற பெற்றோர்கள் பின்பு நிதானமாய் சொல்லியிருக்கின்றார்கள்; "கடவுளை வேண்டிக்கொள்வோம்" என்று .

மருத்துவர்கள் கூட இதற்கு மாற்று வழிதெரியாமல் திகைத்துப்போய் நின்று விட்டனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.


ஆனால் தற்பொழுது நிக்கிற்கு ஒரு தங்கையும் தம்பியும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் மற்ற குழந்தைகள் போல பிறந்திருக்கின்றார்கள்.

நிக்கின் குறைபாடுகளைக் கண்டு இவர் பிறந்தவுடன் இவருடைய தந்தைக்கு அனைவரும் துக்கம் சொல்ல வந்துவிட்டார்கள். அனைவருமே ஆதங்கப்பட ஆரம்பித்து விட்டார்கள் " அன்பின் உருவமாக - அன்பின் கடவுளாக இருக்கும் இறைவன் - இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தையை ஏன் இந்த அளவிற்கு மதப்பற்றுள்ள அவனையே நாள்முழுவதும் துதிக்கின்ற ஒரு பாதிரியாருக்கு கொடுக்க வேண்டும் என்று.

இப்படி கை - கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து விடும் என்றுதான் அவருடைய தந்தை நினைத்திருக்கின்றார்.ஆனால் நிக் உடல் குறைபாடே தவிர ஆரோக்கியமான குழந்தையாகதான் இருந்தார்.

"என்னுடைய பெற்றோர்கள் முதலில் அதிர்ச்சியுற்று எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமையுமோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு மன - உடல் வலிமையைக் கொடுத்து தைரியத்தையும் கொடுத்திருக்கின்றான். "என்று கூறுகின்றார்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் கை- கால்கள் இல்லாமல் அவரும் அவரின் சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவருடைய பெற்றோர்களும் அவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.

குழந்தைகள் என்றால் நாம் அதன் கையைப்பிடித்து அதன் மிருதுவான விரல்களை பிடித்து தடவுவோம். அதன் பிஞ்சு விரல்களை எடுத்து நம் கன்னத்தில் வைப்போம்.

அந்தக் குழந்தையும் நம்முடைய பெரிய கண்களை - மூக்கினை - வாயினை கண்டு ஆச்சர்யப்பட்டு தனது பிஞ்சு விரல்களால் நோண்டி நமக்கு இன்ப வேதனையைக் கொடுக்கும்.

குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் அந்த தத்தல்களின் முதன்நடைக்காக எத்தனை பெற்றோர்கள் ஏங்கியிருப்பார்கள். அதனைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

அட எம்பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான் பாரு..

வா..வா..வாடா..என்று தூரத்தில் அவனை நிற்கவைத்து அவனை தன் பக்கம் வரச்சொல்லி

அவன் தத்தி..த..த்..தி நடந்து நெருங்கும்பொழுது கீழே விழுந்து விடுவானோ என்ற ஆர்வ மிகுதியில் தாய் அவனைப் பாதி தூரத்திலையே பிடித்து அணைத்துக்கொண்டு
எம் பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான்..ஆரம்பிட்டான் என்று செல்லமாய் குதூகலிப்பார்களே..?

அதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் கொடுத்து வைக்காத பெற்றோர்களாக அவர்கள் போய்விட்டாலும் மனம் தளர்ந்து போகாமல் நிக்கை படிக்க வைத்திருக்கின்றனர்..

அதற்கும் அவர்கள் போராட வேண்டியதிருக்கின்றது. நிக் பள்ளிக்கு செல்லுகின்ற பருவம் வந்ததும் Main Stream பள்ளியில் சேர்ப்பதற்காக முயன்றபொழுது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி உடல் ஊனமுற்ற குழந்தையினை சேர்க்க அந்தப்பள்ளி மறுத்துவிட அவனது தாய் அந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக போராடி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நாட்டின் சட்டத்தை மாற்ற வைத்து நிக்கை பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அந்தப்பள்ளியில் படிக்கின்ற முதல் ஊனமுற்ற மாணவன் நிக் மட்டுமே..

பாருங்களேன் நிக்கின் தெளிவான பக்குவப்பட்ட உரையினை :

"இப்படி போராடுவதற்கான முயற்சிகளை இறைவன் எனது தாய்க்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானேன். என்னால் மற்ற மாணவர்கள் போல இருக்க முடியவில்லை. நான் மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, ஒரு விநோத பிராணியைப்போல பார்க்கப்பட்டு, மூன்றாம் தரமாய் நடத்தப்பட்டு உடன் படிக்கின்ற மாணவர்களால் கேலி , கிண்டலுக்கு உள்ளானேன். அப்பொழுதெல்லாம் எனது பெற்றோர்கள் தந்த ஊக்கமும் ஆதரவும்தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது

சில சமயங்களில் சக மாணவர்களின் அதிகமான கேலி , கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் இருந்தபொழுது எனது பெற்றோர்கள்தான் என்னைச் சமாதானப்படுத்தி மற்ற மாணவர்களோடு நண்பர்களாக உன்னை மாற்ற முயற்சி செய்யச் சொன்னார்கள்.
நானும் அவர்களுடன் கிண்டலாக பேசிக்கொண்டும் சில வேடிக்கையான செயல்களை அவர்களுக்கு முன்னால் செய்து காட்டி அவர்களை சிரிக்க வைத்து கலகலப்பு ஊட்ட ஆரம்பிக்க. நானும் அவர்களைப்போன்ற உணர்வுகள் உள்ளவன்தான் என்று அவர்களும் நாளடைவில் உணர ஆரம்பித்தார்கள்.இறைவனின் அருளால் என்னைச் சுற்றி புதிய புதிய நண்பர்கள் நல்ல நட்போடு பழக ஆரம்பித்தார்கள்.

எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரையும் இதற்கு குற்றம் சொல்ல முடியவில்லையே என்ற வேதனையில் நாட்கள் செல்ல ஆரம்பிக்க எனக்கே என்மீது வெறுப்பு ஆரம்பித்தது கோபம் வர ஆரம்பித்தது . சண்டே பள்ளியில் சேர்ந்த பிறகு நான் கற்றுக்கொண்ட விசயம் கடவுள் எல்லாரையும் விரும்புகின்றான் ஆனால் என்மீது மிகுந்த அக்கறையாக உள்ளான் என்று.ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இறைவன் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்றால் ஏன் என்னை இப்படி படைக்க வேண்டும் ?. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்று கேட்டுக்கொண்டே சில சமயம் என்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு வாழவேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.சுற்றியுள்ளவர்களின் வார்த்தை பிரயோகங்களிலிருந்தும் முகச்சுளிப்புகளிலிருந்தும் வித்தியாசமான பார்வைகளின் கொடுரங்களிலிருந்தும் தனிமையில் கழித்த பொழுதுகளிலிருந்தும் வாழ்க்கையில் போராடுவதறகான அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.

இறைவன் எனக்குண்டான இந்த குறைபாடுகளிலிருந்து மற்றவர்கள் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கவலையில் மூழ்கி விழுந்து விடக்கூடாது . ஏதாவது ஒரு வகையில் சோகங்களை கொடுத்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுப்பான் இறைவன்.

உங்களுக்கு இதனை உணர்த்தவே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளான் இறைவன்.

எனக்கு தற்பொழுது 21 வயதாகிறது . நான் Bachelor of Commerce majoring in Financial Planning and Accounting முடித்துள்ளேன். எனக்கு இறைவன் பேச்சுக்கலையை கொடுத்திருக்கின்றான்.அதன் மூலம் எல்லா இடங்களுக்கும் சென்று என்னுடைய கதையை மற்றவர்களுக்கு சொல்லி சின்னச் சின்ன சோகங்களில் மூழ்கிக்கிடப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்போகின்றேன்.


எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற கணவுகளும் லட்சியங்களும் இருக்கின்றது. நான் கடவுளின் அன்பைப்பெற்றவன் என்று மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கின்றேன் என்பதில் பெருமை.

என்னுடைய கதையை நான் புத்தகமாக வெளியிடப்போகின்றேன். அதன் தலைப்பு
கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை..

"No Arms, No Legs, No Worries!"

கை - கால்கள் இல்லாமலையே தான் சாதிக்க வேண்டும் என்ற வெறியோட இருக்கும் நிக் பேன்றோர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.

உணவு உண்பதற்கும் எழுதுவதற்கும் - நடப்பதற்கும் - தண்ணீர் குடிப்பதற்கும் - ஏன் தன் இயற்கைக்கடன்களை நிறைவேற்றுவதற்கு கூட இன்னொருவரின் உதவி வாழ்நாள் முழுவதும் இவருக்கு தேவைப்படுகின்றது.

இன்னொருவரின் சார்பு இல்லாமல் இவரால் வாழ்நாளைக் கழிக்க முடியாத போதிலும் இவர் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் என்றால் இவர் நம்பியிருக்கும் அந்த இன்னொருவர் இறைவன் தான். அவர் சாதிப்பதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

ஆகவே பரிட்சை தோல்வி - காதல் தோல்வி - கடன் பிரச்சனை - சொந்தங்களோடு பகை - மனைவியுடன் சண்டை - வேலையின்மை - அவமானங்கள் இதுபோன்ற சின்னச் சின்னத் துன்பங்களுக்கெல்லாம் மனம் வருந்தி முடங்கிப்போய்விடாமல் தன்னம்பிக்கையோடு போராடுவோம்.

மனித வாழ்க்கையில் தோல்வி வெற்றிகள் - இன்ப துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்ற ஒரு சுழற்சிதான்.

தோல்வி வருகின்ற நேரத்தில் அதிக அளவு சோகப்படாமலும்
வெற்றி வருகின்ற நேரத்தில் அதிக அளவு மகிழ்ச்சிபடாமலும் வாழ்க்கையை அனுபவிப்போம்.


வாழுகின்ற இவ்வுலக வாழ்க்கை என்பது கொஞ்சகாலம்தான். யாரும் இறைவன் விதித்துவிட்ட நாட்களுக்கு ஒரு நாள் அதிகமாகவே அல்லது குறைவாகவோ வாழப்போவதில்லை.- ரசிகவ் ஞானியார்

Tuesday, May 16, 2006

பயம்

முதியோர் இல்லங்களின்
வாசல்தாண்டி
பயணப்படும்பொழுதெல்லாம் ...

அனிச்சை செயலாய்
மகனின் கைகளை ...
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!

- ரசிகவ் ஞானியார்

Sunday, May 14, 2006

இப்படிக்கு... மு.க.
அம்மாக்கள் தினமாம் இன்று!
சொந்த அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பும்...
வயது மீறிவிட்டது!
ஆகவே
உனக்கு அனுப்புகின்றேன்
ஒரு வாழ்த்து!

நீ வாழிய ..வாழிய


நீ இல்லையென்றால்
எனக்கு
இத்தனை புகழ் ஏது?

நீ வித்தியாசமான அம்மா..
எல்லா அம்மாக்களும்
உள்ளிருந்து
வெளியே அனுப்புவார்கள்!
என்னை நீ
வெளியேயிருந்து
உள் அனுப்பினாய்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய


என் மீது
ஆட்சி புரிந்தாய்..
எனக்காக
விட்டுக்கொடுத்திருக்கின்றாய்..
சிலநேரம்
பெட்டியும் கொடுத்திருக்கின்றாய்..
ஆகவே
நீ வாழிய ..வாழிய


ஆயிரத்தில் ஒருத்தியாக வந்து
கோடியில் ஒருத்தி ஆனாய்
கொடிகளின் சலசலப்பில்
கோடியை நகர்த்திப் போனாய்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய

நான் எழுதிய வசனத்தில்
கிடைத்த பெருமையை விட

நான் எழுதாத வசனமான
"அய்யோ கொலை பண்றாங்க
அய்யோ கொலை பண்றாங்க "


இதில் கிடைத்த
இரக்கத்தில்தான்
ஆட்சியைப் பிடித்தேன்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய

நீ இருக்குமிடத்திற்கு
நான் வரத் தெம்பில்லை
நான் இருக்குமிடத்திற்கு
நீ வரத் தைரியமில்லை

சட்டசபையில் நீயும் நானும்
சந்திப்போமா..?
சந்தித்தாலும், முடியாவிடினும்
நீ வாழிய ..வாழிய


என்னை
தாத்தா என்றழைப்பவர்களும்
தாங்கிப்பிடிக்கின்றார்கள்!
அப்பா என்றழைப்பவர்களும்
அருகில் உண்டு!
தலைவா என்றழைக்கும்
தொண்டர்களுமுண்டு!
ஆனால்
உன்னை மட்டும் எப்படி
ஒட்டுமொத்தமாய்
அம்மா என்று
அழைக்கிறார்கள்?
அம்மா..
நீ வாழிய ..வாழிய


சுவரொட்டிகளில்
செல்வியாகின்றாய்
சுற்றியுள்ளவர்களுக்கு
அம்மாவாகின்றாய்..?


செல்வி அம்மாவாகலாம்
அம்மா செல்வியாகமுடியுமா?

அம்மா கொஞ்சம் சொல்லம்மா?


என்னை எப்போதும்
எதிர்த்துக்கொண்டே இரு..

நான் புகழ்பெறவேண்டும்..
ஆகவே
நீ வாழிய ..வாழிய

இப்படிக்கு

மு.க.
-ரசிகவ் ஞானியார்

Saturday, May 13, 2006

நினைவுகளின் பாரம்
"இந்தக் கால்சட்டை
உனக்கு பொருத்தமாக இருக்கின்றது"


சுற்றுப்புரத்தின்
ஓ... ஓ...
சப்தங்களுக்கிடையே
சிரித்துக்கொண்டே சொன்ன...
சீனியர் அக்காவும்,


"நீ அணிகின்ற
எல்லா ஆடையிலும்
இது மட்டும்
ரொம்ப அழகாய் இருக்குதுடா"
சொல்லிவிட்டு
நன்றியும் நட்பும் ...
வாங்கிவிட்டுச் சென்ற
வகுப்பறைத் தோழியும்,

"அந்த சட்டைக்கு
இந்த கால்சட்டைதான்
அழகாய் இருக்கும்"
என்று
தனது தோழிகளுடன் அவள்
சாதாரணமாய் பேசியதை
நான் நிஜமாக்கி வந்தபொழுது
சிரித்து வெட்கப்பட்டு என்னிடம்
காதல் வாங்க முயற்சித்த
அவளும்,

ஏதோ ஒரு பெண்ணின்
புகைப்படம்
பாக்கெட்டில் இருப்பதாக
அம்மாவுக்குத் தெரியாமல்
என்னிடம் தந்துவிட்டு
எதையும் வாங்க முயற்சிக்காமல் சென்ற
வண்ணாணும்,


பேருந்தில் தொங்கிக்கொண்டே
வரும்பொழுது
காதல் கோட்டைகளை உருவாக்குகின்ற ...
பாளையங்கோட்டை அருகே
"ஏறுடா..உள்ள ஏறுடா"
என்று பலமாய் அடித்து
தூசி துடைத்த காவலரும்

ஞாபகத்தில் வருவதை ...
தவிர்க்க முடியவில்லை!
அளவு குறைந்துவிட்டதென்று
பழைய பாத்திரக்காரனிடம்
அந்தக் கால்சட்டையை
அம்மா கொடுக்கும்பொழுது..

அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..


பழைய பாத்திரக்காரன்
புறப்பட்டுவிட்டான்
கனமான பாரங்களோடு..

- ரசிகவ் ஞானியார்

Thursday, May 11, 2006

இப்படியும் சில மனிதர்கள்
நீங்கள் சம்பாதித்த பணத்தை ஒரு பைசா கூட எடுக்காமல் அப்படியே பொதுச்சேவைக்கு கொடுத்துவிட்டு விட முடியுமா உங்களால்?

நமக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது? யாராவது அப்படி செய்வார்களா என்று நீங்கள் கேள்விகளை எழுப்பினால் அப்படி செய்யக்கூடிய ஒருவரும் இவ்வுலகில் இருக்கிறார் என்று யாருக்கேனும் தெரியுமா?

அவர் பெயர் பா.கல்யாணசுந்தரம். திருநெல்வேலியைச்சார்ந்த இவர் திருச்செந்தூர் கல்லூரி ஒன்றில் நூலகராக வேலை பார்த்து வந்தவர் அதில் கிடைக்கின்ற வருமானத்தை எல்லாம் பொதுசேவைக்காக கொடுத்துவிட்டு தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டலில் இரவில் பரிமாறுபவராக வேலை பார்த்து வந்தார்.

என்ன உங்களால் நம்பமுடியவில்லையா..? ம் இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இந்த விசயத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. எல்லா மனிதர்களும் உழைப்பது தனது மற்றும் குடும்பத்தின் தேவைகளுக்காகத்தான் ஆனால் யாருடைய தேவைகளுக்காகவோ உழைக்கின்ற ஒரு மனிதர்தான் திரு பா. கல்யாண சுந்தரம்.

பாலம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி பொதுச் சேவைகள் புரிந்து வருகின்றார். அது மட்டுமல்ல அவருக்கு அமெரிக்காவின் "மேன் ஆஃப் த மில்லியன்" என்ற விருதும் சுமார் 30 கோடி ரூபாய் பணமும் - கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் Most Notable Intellectual of the World என்ற பட்டமும்- ஐ.நா.சபையின் Outstanding People of the 20th Century என்ற கௌரவத்தையும் பெற்றவர்.

அமெரிக்கா கொடுத்த 30 கோடி ரூபாய் பணத்தையும் இவர் சர்வதேச குழந்தைகள் பல்கலைக் கழக அமைப்பிற்கு கொடுத்துவிட்டார் என்பதுதான் சாதாரண மனிதர்களுக்கெல்லாம் வயிற்றெரிச்சல் கிளப்புகிற விசயம்.

அப்துல்கலாம் - பில் கிளிண்டன் - நெல்சன் மண்டேலா - மன் மோகன் சிங் - கருணாநிதி - சரத் பவார் மற்றும் ஆளுனர் பாத்திமா பீவி - நீதிபதிகள் மற்றும் கல்வியாளர்கள் - சினிமா இயக்குநர்கள் - நடிகர்கள் என்று பலரது பாராட்டையும் பெற்றவர்.

நடிகர் ரஜினிகாந்த் இவரை தத்தெடுத்த கதையை சன்டிவியில் வணக்கம் தமிழகத்தில் பேட்டியின் போது கூட இவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்

என்ன நடிகர் ரஜினிகாந்த் தத்தெடுத்தாரா..? என்ன குழப்பமாக இருக்கின்றதா..? உண்மைதான் நடிகர் ரஜினிகாந்த் இவரது பணிகளைக் கண்டு தனது தந்தையாக அவரை தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் சர்வசாதராரணமாக சென்று வருபவர். அவரது மனைவி லதாவால் செல்லமாக "அப்பா அப்பா" என்று அழைக்கப்படுபவர்.


இப்படி உயர்ந்த விருதுகள் மற்றும் புகழ்பெற்றவர்களால் கௌரவிக்கப்பட்ட பா. கலியாணசுந்தரத்தை சாதாரணமாக அடையாறு - பட்டினப்பாக்கம் சாலைகளில் மக்களோடு மக்களாக தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் இல்லாம் நடந்து செல்வதைப் பார்க்ககூடும். மனிதர்களோடு மனிதர்களாக இவர் சென்றாலும் இவர் மனித உணர்வுகள் - எண்ணங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்

நான் இவரை 2001 ம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நண்பனுடன் இணைந்து வெளியிட்ட கவிதை புத்தகத்திற்கு அவர் மூலமாக பார்த்திபன் - வைரமுத்து போன்றோர்களிடம் விமர்சனம் வாங்குவதற்காக அவரைச் சந்திக்க சென்றோம்.

சென்னையில் அவரைச் சந்தித்து கவிதைப்புத்தகத்திற்கு விமர்சனம் வாங்குவதற்காக வைரமுத்து மற்றும் பார்த்திபனை காண வேண்டும் என்று கேட்டபொழுது,
" முதலில் நீங்கள் பாலம் அமைப்பில் உறுப்பினராகுங்கள்" என்று கேட்க நாங்கள் உறுப்பினராகி மாதச் சந்தாவாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்தோம்.

பின்னர் அவர் விமர்சனம் வாங்கித்தருவதாகவும் "நீங்கள் என்னுடனேயே தங்குங்கள்" எனவும் கூறினார். நாங்களும் அவருடன் தங்குவதற்கு சம்மதித்துவிட்டு அவருடைய சமூக சேவை அலுவலகத்தில் காத்திருந்து இரவில் அவருடன் பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றோம். வழியில் நீதிக்கதைகள், போதனைகள் என்று கூறிக்கொண்டே வருவார்.

காலில் ஒரு பிய்ந்து போன செருப்பு - ஒரு ஜோல்னாப்பை சகிதமாக தனது வேட்டியை மடித்துக் கொண்டு எங்களோடு நடக்க ஆரம்பித்தார் .


எங்களுக்கு பெருமையாக வந்தது. பின்னே ரஜினி அப்பாவாக தத்தெடுத்த ஒருவர் எங்களோட சகஜமாக பேசிக்கொண்டு வருகின்றார் என்றால் சும்மாவா..? ரஜினியே எங்களோடு நடந்து வருவது போன்ற உணர்வு. அங்கேயும் இங்கேயும் திரும்பி பார்த்துக்கொண்டேன் யாராவது நம்மை கவனிக்கிறார்களா என்று.

நான் நண்பன் ராஜாவிடம்

"என்னடா இவ்வளவு பணம் வைத்திருக்கின்றார் - விருதுகள் வாங்கியிருக்கின்றார் ஆனால் நம்மோடு சாதாரணமாக நடந்து வருகிறாரே..அவருக்கு கார் இல்லையா"

என்று கேட்க அவன் மெல்ல அவரிடம் கேட்டுவிட்டான்

"ஐயா உங்களுக்கு கார் ஏதும் இல்லையா ?"

"எதுக்குப்பா கார்..என்னால நடக்க கூடிய சக்தி இருக்கு நடக்குறேன்.. அது மட்டுமல்ல பொதுப் பணத்தை எதுக்கு வீண்விரயம் பண்ணணும்" என்று சாந்தமாக பதிலளித்து விட்டு ஒரு ஓட்டலுக்குள் நுழைகின்றார்.

எங்களுக்கும் பசியெடுத்தது. நாங்களும் அவருடன் சென்று சாப்பிடுகின்றோம்
அவர் இரண்டு இட்லி மட்டும் சாப்பிடுகின்றார். நாங்கள் தோசை - ஆம்லெட் சாப்பிடுகின்றோம்.

சாப்பிட்டு முடிந்தவுடன் நான் பில் கொடுப்பதற்காக பணத்தை நீட்டுகின்றேன். ஆனால் நானும் நண்பர் ராஜாவும் சாப்பிட்டதற்கு மட்டும் பணம் வாங்குகிறார்கள். பா. கலியாணசுந்தரம் அவர்கள் சாப்பிட்டதற்கு பணம் வாங்கவில்லை.

ஒருவேளை அவரைப்பற்றி தெரிந்து அவர் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுக்கிறார்களோ என நினைத்தேன். ஆனால் அவரோ சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் சாப்பிட்டதற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு வெளியே அமைதியாய் வெளியேறிக்கொண்டிருக்கின்றார்.

எங்களுக்கோ அதிர்ச்சி.."என்னடா ஒன்றாக இருந்துதானே சாப்பிட்டோம்". நாம் நண்பர்களுடன் ஒன்றாக சாப்பிடும்பொழுது என்ன செய்யக்கூடும்? ஒன்று நாம் அனைவருக்கும் சேர்த்து பில் கொடுப்போம். இல்லையென்றால் நண்பர்களில் எவரேனும் நமக்கும் சேர்த்து பில் கொடுப்பார்கள். இப்படித்தான் பழகியிருக்கின்றேன்..

ஆனால் முதன் முறையாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அவர் மட்டும் தனியே கொடுத்து விட்டு வெளியேறுவதை காண எனக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது அவர் மீது இன்னமும் மதிப்பு அதிகமாகவும் வந்தது.

நானும் ராஜாவும் ஒருவருக்கொருவர் லேசான சிரிப்புடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.

நாய்களின் குரைப்புச் சப்தத்திற்கிடையே பட்டினப்பாக்கத்தின் இருட்டுப்பகுதியில் ஒரு சந்து வழியாகச் சென்றுகொண்டிருக்கின்றோம். அப்பொழுது நான் ராஜாவிடம்

"டேய்! சுத்தி நாய் குரைக்குதுடா..பயமா இருக்குது..இப்போது நாய் துரத்தினா அவரால ஓடமுடியாதுடா நாமதான்டா அவரைக் காப்பாத்தணும்.. "

"அவருக்கு என்ன பயம்..அவர் தினமும் இந்த வழியாகத்தான் போவாரு அதனால் நாய்கள் எல்லாம் பழகியிருக்கும்..நாமதான்டா ஓடணும்.. "


நாங்கள் பயந்தபடியே அவரைப் பின்தொடர அவருக்கும் எங்கள் உரையாடல் கேட்டதோ என்னவோ லேசாக புன்னகைப்புரிந்தபடியே,

"சீக்கிரம் வாங்கப்பா..நாய் ஒண்னும் செய்யாது " என்று கூறியபடியே மெல்ல பேச்சு எடுத்தார் . "இந்த பாலம் அமைப்புக்காக நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு நிதி சேர்க்கிறோம் தெரியுமா..?" என்று கூறி அவர் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்தபடியே வந்தார்.

அவர் அப்படி கூறுவது எதற்காகவென்றால் அவர் சாப்பாட்டுக்குண்டான பில்லை அவர் மட்டும் கொடுத்து விட்டு வந்ததை நாங்கள் தவறாக எடுத்துக்கொள்வோமோ என்று எங்களின் மன நிலையை அறிந்து விளக்கம் கொடுப்பதற்காக இருந்திருக்கலாம்.

தினமும் யாருக்காவது ஏதாவது சின்ன சின்ன உதவிகளாவது செய்ய வேண்டும் என்று இறுதியாக அறிவுரை வழங்கிவிட்டு அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.

அவரைப்பற்றி நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. எப்படி ஒரு மனிதரால் இப்படியெல்லாம் மனித இயல்புகளை மீறி இருக்க முடியும்.
தனது தேவைகளுக்காக உழைப்பவர்களுக்கு மத்தியில் பொதுநலத்திற்காக உழைத்துக்கொண்டும் மிகப்பெரிய தொகை கிடைத்தும் அதனை எளிதாக சமூகசேவைக்காக எடுத்துக்கொடுத்தும் இவரால் இவ்வளவு எளிமையாக இருக்க முடிகின்றது.


இரவில் அவருடைய அறையில் ஹாலில் படுத்துக்கொண்டோம் . எங்களைப்போல ஏதோ உதவி கேட்டு வந்த சிலரும் அந்த ஹாலில் படுத்துக்கிடந்தார்கள். இரவில் அவருடைய மனிதநேயம் - குழந்தைகளுக்கு அவர் உதவும் தன்மை - பொதுநலச்சேவை தன்னுடைய சம்பளப் பணத்தை முழுவதும் பொதுச்சேவைக்கு தந்துவிட்டு தன்னுடைய வருமானத்திற்கு சர்வராக வேலை பார்த்தது என்ற எல்லா விசயங்களையும் நாங்கள் அலசினோம்.

மறுநாள் காலையில் அவர் சந்திக்கச்சொன்ன சில நபர்களைச் சந்தித்துவிட்டு அவரது அலுவலகம் வந்தபொழுது அவர் கேட்ட கேள்வி இதுதான்:
"இன்று என்ன என்ன உதவிகள் எல்லாம் செய்தீர்கள்? "

எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதும் உதவிகள் செய்யவில்லை என்று கூறினால் வருத்தப்பட்டுவிடுவாரோ என்று எண்ணி யோசித்தோம் என்ன உதவி செய்தோம்

உடனே எனக்கு ஞாபகம் வந்து அவரிடம் இன்னைக்கு பஸ்ல ஒரு ஆளுக்கு எழுந்து இடம் கொடுத்தேன் என்று சொல்ல அவர் சிரித்துக்கொண்டே "ம் அதுவும் ஒருவகையில் உதவிதான். நீ என்ன உதவி செய்தாய் " என்று எனது நண்பர் ராஜாவிடம் கேட்க அவன் எதுவுமே சொல்லவில்லை .

உடனே அவர் "பரவாயில்லை! இதுபோல சின்ன சின்ன உதவிகள் கூட நீ செய்யலாம் சரியா" என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்

எனக்கு அவரை ஒரு சாதாரண மனிதப் பார்வையில் பார்க்கவே முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்கின்ற மனிதர்கள் கூட இருப்பார்களா என்ன? மனிதர்கள் இல்லாத பகுதியைத்தாண்டி ஒரு வித்தியாசமான உலகத்திற்குள் இருப்பதாகவே எனக்குள் தோன்றியது.

அதுவும் திருமணம் செய்தால் சொந்தம் - பந்தம் - பணம் பிரச்சனை என்று சாதாரண மனித வட்டத்திற்குள் நாமும் வந்துவிடுவோமோ யாருக்கும் உதவிகள் செய்யமுடியாமல் போய்விடுமோ என்று பயந்து திருமணம் செய்து கொள்ளாமலையே வாழ்பவர்.

நானும் நண்பரும் சுமார் ஒருவார காலங்கள் அவர் அலுவலகத்திற்கும் அவரைச்சுற்றியும் அலைந்து கொண்டிருந்தோம். அவருடைய நடவடிக்கை - மற்றவர்களுக்கு உதவும் பண்பு- சுயநலமில்லாத நடவடிக்கை - தேடி வருபவர்களிடம் அவர் காட்டுகின்ற கண்ணியம் இப்படி எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே இருந்தோம்.

யானை
கடல் அலை
இரயில்
இவற்றை
ரசித்துக்கொண்டே இருக்கும்
குழந்தைகள் போல
அவரை ரசித்துக்கொண்டிருப்பதில்
எங்களுக்குள் ஓர் ஆனந்தம்


கண்டிப்பாக இதுபோன்ற மனிதர்கள் அடையாளம் காணப்பட்டு அரசாங்கத்தால் வருங்கால தலைமுறையினர்களுக்காக பாடப்புத்தகமாக்கப்படவேண்டும். பணம் மட்டுமே உலகமாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தக் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கைதான் ஒரு முழுமைப் பெற்ற பாடம்.

இவருடைய குரல் லேசான கீச்சுக்குரலில் பெண் குரல் போல இருக்கும். ஒருவேளை இவரை மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துவதற்காக இறைவன் அவ்வாறு கொடுத்து விட்டானோ எனத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் சதக் கல்லூரி பேரா. மகாதேவன் அவர்கள் எழுதிய இந்த வரிகள் ஞாபகம் வருகின்றது

ஊதுபத்தியாய் ஊருக்கு உழைத்தால்
மரணித்த பிறகும் மணத்தோடு வாழலாம்.
- ரசிகவ் ஞானியார்

Wednesday, May 10, 2006

ஆறுதல்

"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி


- ரசிகவ் ஞானியார்

Monday, May 08, 2006

இது என் குழந்தை

வலைப்பதிவர் விவசாயி இன்று நீ எனக்கு வேண்டாமடி என்ற ஒரு கவிதையை தன்னுடைய நண்பர் மயிலு என்பவர் எழுதியதாக தன்னடைய வலையில் பதிந்துள்ளார்.

http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_08.html

இந்தக்கவிதையை எழுதியது நான்தான் என்ற விளக்கத்தை நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் எழுதிவிட்டேன்.

http://nilavunanban.blogspot.com/2006/04/blog-post_26.html

இந்தக்கவிதை வாரமலரிலும் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அது மட்டுமல்ல யாரோ எழுதியதாக எனக்கே இக்கவிதை அனுப்பப் பட்டது . ஆகவே நண்பர் விவசாயி அவர்கள் ஒருவேளை தவறுதலாக வெளியிட்டிருக்கலாம்

நாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் விளக்கம் தர நேரிட்டது. மற்றபடி இது என் கவிதை என்று பெருமையடிக்கும் நோக்கமில்லை.

என்னுடைய இக்கவிதை இன்னொருவரின் பெயரில் வந்ததை தாங்க முடியாமல் அக்கறையோடு சுட்டி காட்டிய நண்பர் துபாய் ராசா என்ற ராமுவிற்கு மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Saturday, May 06, 2006

சொல்லியிருந்தால் செத்திருப்பேனே..


( என்னுடைய நண்பன் கலீல் என்ற கலீல் ஷானின் கவிதை இது. அவன் மனதில் உள்ள ஏதோ ஒரு காதலின் கசப்புணர்வில் அடிக்கடி டைரியின் வெற்றுப் பக்கங்களில் எல்லாம் காதல் கவிதைகளாக எழுதுவான். அப்படி என்னிடம் எழுதிக் கொடுத்து "டேய் என் கவிதையையும் இன்டர்நெட்டுல போடேன்" என்று கேட்டதற்கிணங்க..

தன் காதலை உயிரோடு இருக்கும்போது ஏற்க மறுத்த காதலி இவன் இறந்த செய்தி சேதி ஓடிவந்த கதறுவதைக் கண்டு பிணம் பாடுவது போன்ற ஒரு சூழலில் எழுதியிருக்கின்றான்)கண்ணீர் சிந்தாதே...
என் கண்மணியே !
இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது!

உன்னையே தேடி ...
வந்தபொழுதெல்லாம்
அலையென ஓடி
உள் வாங்கினாய் !

தமிழிலே கோடி ...
வார்த்தைகள் இருந்தும்
காதலை மூடி - என்
உயிர் வாங்கினாய்!

இன்று நாடி
ஒடுங்கிய வேளையிலே
என்னைத் தேடி
வந்தாயோ தேவதையே?

என் காதலை
உன் இதயம் வைக்க
தவறிய நீ..
என் கைகள் எடுத்து
உன் கன்னங்களில் வைக்கின்றாய்!
என் தலையை எடுத்து
உன் மடிமீது வைக்கின்றாய்!


காலம் கடந்து வந்து நீ
காதல் எய்தாய்!
கண்ணீரால் என் முகத்தில் நீ
கோலம் செய்தாய்!


என் கைகளைக் கூட
அசைக்க முடியவில்லையே?
உன் கண்ணீரைக் கூட
துடைக்க முடியவில்லையே ?


கண்ணீர் சிந்தாதே ...
என் கண்மணியே !
இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது !

பெண்களில் உன்னைப்
பிடிக்கும் என்றேன்! - நீ
பேசாமல் மௌனமாய் ...
இருந்து கொண்டாய்!

கண்களில் மின்னிய
காதலைக் கூட நீ
இமைகளைக் கொண்டு
மறைத்துக்கொண்டாய்!

கவிதைகள் எழுதிக்
காட்டியபோதும் நீ
காதல் தெரியாதவள் போல ...
ரசித்துக் கொன்றாய்!

இத்தனை காலமாய்
இதழ் பிரிக்காதவள்...
இதயம் பிரிந்தபிறகு
இதயம் தருகின்றாய்!

இறந்தபிறகுதான் நீ
காதல் சொல்வாயென
இப்பொழுதுதானே நான்
தெரிந்து கொண்டேன் !

இதயம் வலித்திட
இருவிழி அழுபவளே! நீ
எப்போதாவது இதை
என்னிடம் சொல்லியிருந்தால் ...

அப்போதே நான்
இறந்திருப்பேனே..!
உனக்காக உயிர்
துறந்திருப்பேனே!

- கலீல் ஷான்

Wednesday, May 03, 2006

என் கல்லூரி தோழியே

(சென்ற வருடம் எழுதிய ஒரு பதிவினை மறுபடியும் புது வாசகர்களுக்காக பதிவிடுகின்றேன். ரிப்பீட்டு..)நேற்று நானும் கல்லூரி நண்பன் காஜாவும் ஒரு புத்தகம் வாங்குவது சம்பந்தமாக நாங்கள் படித்த கல்லூரி சென்று பைக்கில் திரும்பிகொண்டிருந்தோம்.

தன் மனைவியை பின் சீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான் அந்த கணவன். எங்களை கடந்து செல்ல முற்பட்டது அந்த பைக்..தற்செயலாய் கவனித்தேன் .

அட நம்ம சீமா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எங்கள் கல்லூரி தோழி நன்றாக முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன்..அவளேதான்..புன்சிரிப்பு செய்யலாமா என்று நினைக்கையில்- அவளோ பார்த்துவிட்டு சட்டென்று பயந்தபடியே முகத்தை திருப்பிக்கொண்டாள்..

எனக்கு சூழ்நிலை புரிந்து கொண்டது.

நான் காஜாவிடம் "டேய் வண்டியை ஸ்லோ பண்ணுடா"

"எதுக்குடா"

"பண்ணுடா சொல்றேன்"

அவன் பைக்கை மெதுவாக்கி "எதுக்குடா " என கேட்டான்

"இல்லடா நம்ம கூட படிச்சாள சீமா ஞாபகமிருக்கா"

"ஆமாடா ஞாபகமிருக்கு..அதுக்கு என்ன?"

"அவதான் அதோபோய்க்கிட்டு இருக்கா அவ புருஷனோட"

"டேய் சொல்லவேண்டியதுதானேடா " என்று கூறி பைக்கை விரட்டினான்

"டேய் டேய் ஸ்லே பண்ணுடா வேண்டாம்டா..பாவம் அவ புருஷனோட போறா..அவ புருஷன் எதையும் சாதாரணமா எடுத்துக்கிற ஆளா இருந்தா நம்மை பார்த்து விஷ் பண்ணியிருப்பா
ஆனா பயந்து பயந்து போறாடா நாம் விஷ் பண்ண அதை அவ புருஷன் பார்க்க..தப்பா நினைச்சுட்டான்னா பாவம்டா அவ லைஃப் வம்பா போயிரும்" - நான்

"ஓ அதான் ஸ்லோ பண்ண சொன்னியாசரி சரி எனக்கு தெரியாதுடா.. சரி பார்த்து சுமார் 6 வருஷம் ஆயிருக்குமே இப்ப எப்படியிருப்பான்னு பார்க்கலாம்னு பார்த்தேன் " - என்று வண்டியின் வேகத்தை குறைத்தான்

"கல்லூரியில் எவ்வளவு கலகல வென்று சிரித்து மாடர்னா இருப்பாள்.இப்பொழுது கிராமத்து பொண்ணு மாதிரி இருக்காடா"

அதோ .. எங்களை விட்டு தூரத்தில் சென்று திரும்பிபார்த்தாள் லேசாக...
திரும்பி பார்த்தது அவள் மட்டுமல்ல என் நினைவுகளும்தான்

யாரோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்து போனது..

நாம் காதலர்களல்ல

ஆனால்

நட்பை காதலித்தோம்

- யாரோ
..நினைவுகள் பின்னோக்கி ஓடியது

அவளது கைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை மஸ்தான் எடுத்தான்;.

"டேய் வேண்டான்டா பர்ஸனலா இருக்கம் வச்சுருடா..அவ வந்துற போறாடா " நான்

"டேய் பயப்படாத இந்த இந்த லட்டரை படி..நான் வேற ஏதாவது இருக்கான்னு தேடுறேன்.."
- மஸ்தான்

அது அவளுடைய காதலனால் அவளுக்கு எழுதப்பட்ட கடிதம். காதல் உருக்கத்தில் வழிந்து எழுதப்பட்ட கடிதம் அது..
( அந்த காதலனைத்தான் இப்போது கைப்பிடித்திருக்காளான்னு தெரியாது )

படித்துவிட்டு அப்படியே பிரித்தது தெரியாமல் வைத்தோம்..அவள் வகுப்பறைக்கு வந்து தன் கைப்பையை பார்த்து உடனே எங்கள் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்தாள்..வேறு எதுவும் கேட்கவில்லை பின் எனது ஆட்டோகிராப் நோட்டில் எழுதினாள்..

"நீ என்னுடைய பர்ஸனல் விஷயத்தில் தலையிட்டாய்..நான் எதை சொல்ல வருகிறேன் என்று நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன். அந்த விஷயம் மட்டும்தான் உன்மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழது எனக்கு உன்னுடைய நட்பு கடைசிவரை வேண்டும். "

என்று எழுதியிருந்தாள் .இப்படி கடைசிவரை நட்பு வேண்டும் என எழுதியவளா? இப்படி
பாதிவழியில் பைக்கில் செல்லும்போதே கழட்டிவிட்டுவிட்டாள்?

நானும் நண்பன் செய்யதலியும் கடைசி நாளில் அவளது வீட்டிற்கு போனபோது கூட அவள் வருத்தத்தோடு கூறினாள்

"எவ்வளவு ஜாலியா போச்சுது காலேஜ் லைஃப்...? நேத்துதான் தயங்கிதயங்கி காலேஜ் வந்தது மாதிரி இருந்துச்சு..இப்ப பார் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்..ம் என்ன செய்ய ? எப்படியும் இந்த ஊருக்குள்ளதானே இருக்கபோறோம். எப்பவாது சந்தித்துக்கொள்ளலாம்.. "

என்று கூறியவள் இப்பொழுது பாருங்கள்.அவள் என்ன செய்வாள் பாவம்?

"என்னடா இப்படி கண்டுக்காம போறா " காஜா

"அவ சூழ்நிலை அப்படி இருக்கலாம்.அவ என்னடா செய்வா " நான்

"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? " நான்

"நாம காலேஜ்ல படிக்கும்போது நமக்கும் எத்தனை கேர்ள்ப்ரண்ட்ஸ் இருந்திருக்கும் அது மாதிரிதான அவளுக்கும் இத ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க ம்ம்"

-ஒரு பெருமூச்சோடு கூறினான் காஜா..

நீ
புன்னகைக்காமல் சென்றாய்
நட்பு அழுதுகொண்டிருக்கிறது

சீமா தூரத்தில் சென்று ஏக்கத்தோடு திரும்பிபார்த்தது என் மனசை ஏதோ செய்தது.

"ஞானி என்னை மன்னிச்சுருடாநாம காலேஜ்ல நட்போட இருந்திருக்கலாம்..ஆனா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிருச்சு..இப்ப நான் உன்னய விஷ் பண்ணினா எம் புருஷன் யதேச்சயா பார்த்து..அது யாருடி ரோட்டுல போறவன பார்த்து கை காட்டுற.. அப்படின்னு கேட்டான்னா நான் என்ன சொல்ல முடியும்? "

என்று அவளின் அந்த தூரத்து பார்வை என் இதயத்தில் வந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பதுபோல இருந்தது.

இப்படி இந்தியாவில் எத்தனை சீமாக்களோ..? தோழமையை தவறாக நினைக்கும் எத்துணை கணவன்களோ?


என் இனிய தோழியே!
உன்
பிறந்த நாளுக்கு
வாழ்த்து அட்டை அனுப்புவதை
இரண்டு விஷயங்கள் தடுக்கலாம்

ஒன்று உன் திருமணம்
மற்றொன்று என் மரணம்
- ரசிகவ் ஞானியார்

Tuesday, May 02, 2006

எய்ட்ஸ் வேணுமா எய்ட்ஸ்

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொம்பவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நாம் போய் மோதினால் தான் விபத்து வருமா..நம் மீது யாரும் மோதினாலும் விபத்துதான். இந்தச் சம்பவமும் அதுபோலத்தான்.

விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக ப்ளாட்பாரத்தில் - சாலையோரங்களில் - சந்து பொந்துகளில் சுத்தமில்லாத உணவினை வாங்கி உண்பவர்களுக்கு ஓர் சிறிய எச்சரிக்கை.
அப்படி உண்பதால் உங்களுக்கு எய்ட்ஸ் கூட வரக்கூடுமோ..?

"என்னடா! எய்ட்ஸ் நோயாளியை முத்தம் கொடுக்கலாம்
அவர்களோடு ஒரே தட்டில் சாப்பிடலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆனால் இவன் என்ன உணவில் கூட எய்ட்ஸ் வரும் என்று சொல்லுகிறானே" என்று அதிர்ச்சியடைய வேண்டாம்.. இங்கே பாருங்கள்..

பெங்களுரில் பத்து வயது சிறுவன் ஒருவன் சுமார் 15 நாட்களுக்கு முன்பாக சாலையோரக்கடையில் பானிபூரி சாப்பிட்டிருக்கின்றான். சாப்பிட்ட நாளிலிருந்து அவன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தான். பின்னர் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அதிர்ச்சியாக கூறினார்கள்..

அந்த சிறுவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று.. அந்தச் சிறுவனின் பெற்றோர்களால் இதனை சிறிதும் நம்ப முடியவில்லை..

உதிரிப்பூவாய் உயிரைக் குடிக்கும்
எதிரிக்கு கூட எய்ட்ஸ் வேண்டாம்.


அதன்பிறகு அந்தப்பெற்றோர்கள் தங்களது உடலை சோதனையிட்டார்கள். ஆனால் அவர்களது பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் அறிகுறிகளே கிடையாது.

உடனே மருத்துவர்கள் துருவி துருவி விசாரித்ததில் நோய்வாய்ப்பட்ட நாளில் அந்தச்சிறுவன் தான் இறுதியாக சாப்பிட்ட பானிபூரியைப் பற்றி கூற உடனே பெங்களுர் மல்லையா மருத்துவமனையில் இருந்து ஒரு குழு இந்தச் சிறுவன் பானிபூரி சாப்பிட்ட சாலையாரக்கடையில் விசாரிக்க சென்றனர்.

அந்த பானிபூரி விற்பனை செய்பவன்; வெங்காயம் வெட்டும்போது தவறுதலாய் கைகளில் பட்டு ஒரு சிறு வெட்டுக்காயம் இருந்திருக்கிறது. அவன் பானிபூரி தயார் செய்யும்பொழுது அந்தக் காயத்திலிருந்து இரத்தம் கசிந்து அந்த உணவில் கலந்திருக்கின்றது.

அவனை அந்தக்குழு சோதனையிட்டபொழுது உறுதி செய்தனர்..ஆம் அவனுக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருந்திருக்கிறது.. இதில் கொடுமை என்ன வென்றால் இந்த விசயம் அவர்கள் கூறித்தான் அந்த விற்பனை செய்வனுக்கே தெரியவந்திருக்கின்றது.

சாலை வியாபாரியிடம்
பூரி சாப்பிட்டுவிட்டு
காசு கொடுத்தவனுக்கு
சில்லறைக்குப் பதிலாக..
எய்ட்ஸ்தான் கிடைத்திருக்கின்றது


இப்பொழுது அந்தச் சிறுவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. அந்த சிறுவனை குணப்படுத்துவதற்காக உங்களிடம் பண உதவிகள் எல்லாம் கேட்கவில்லை.

இந்த தகவலை சாலையோரத்தில் சாப்பிடும் தங்களது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு தங்களின் பிரியமானவர்களுக்கு எல்லாம் பரப்புங்கள். இதனைப்பற்றிய ஒரு விழிப்புணர்வினை அவர்களுக்கு கொடுங்களேன். அவர்கள் கொஞ்சம் கவனமாய் இருப்பார்கள் அல்லவா..


எய்டஸ் நோயின் பாதிப்பினை பற்றி தெரியாதவர்களுக்காக கென்யாவைச்சேர்ந்த இந்தப்பெண் தவறான தொடர்பு கொண்டு எய்டஸ் நோயால் பாதிக்கப்பட்டாள்.எய்ட்ஸ் நோய் வந்த பிறகு இவள் எப்படி உயிரோடு செத்துக்கொண்டிருக்கின்றாள் என்பதைப் பாருங்கள் நண்பர்களே..மண்ணிலே மாதர் பல நாடி வந்தாலும்
கண்ணிலே கண்டவளும் குடி புகுந்தாலும்
விண்ணிலே வெண்ணிலவின் சரசம் போல
என்னிலே நீயிருந்தால் எப்படியடி எய்ட்ஸ் வரும்?


கவனமாய் இருங்கள். உணவும் உணர்வும் சுத்தமாக இருக்கட்டும்.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

தேன் கூடு