Thursday, September 29, 2005

கல்லறைக்கவிதைகள் - III

விவசாயியின் கல்லறை

அறுவடைக்கு
ஆளில்லையே..?


கிரிக்கெட் வீரனின் கல்லறை

இவன் இறந்துவிட்டதை
ரீபிளே (Replay) செய்தெல்லாம்
பார்க்க முடியாது

தமிழனின் கல்லறை

எமனிடம்
ஆங்கிலம் பேசி
அகப்பட்டுக்கொண்டான்

காந்தியின் கல்லறை

ஆறடிக்குள்
ஒரு தேசம்


பாரதியின் கல்லறை

கத்திப்பேசாதீரகள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறான்.


நேருவின் கல்லறை

எப்படி வந்தது
இந்தக்கல்லறையிலிலிருந்து மட்டும்
ரோஜா வாசம்..?

அன்னை தெரசாவின் கல்லறை

ஒரு
மனிதநேயம் இங்கே
மௌனம் அனுஷ்டிக்கிறது.
யாரும் அழுதுவிடாதீரகள்
அரவணைக்க வந்திடுவாள்

டயானாவின் கல்லறை

டோடுயோடு சென்று
வாடிப்போய்விட்டாள்


ராணுவவீரனின் கல்லறை

எதிரிநாட்டுப்பெயரை யாரும்
உச்சரித்துவிடாதீர்கள்
எழுந்துவிடப்போகிறான்

குடிகாரனின் கல்லறை

பட்டை அடித்தவன்
பாடையில் போகிறான்

பால் வியாபாரியின் கல்லறை

இவன் வாயில் ஊற்றிய
கடைசி நேர பாலில்
கலப்படம் இல்லை


செய்தி வாசிப்பாளரின் கல்லறை

வாழ்க்கை இத்துடன்
முடிவடைகிறது
வணக்கம்

-ரசிகவ் ஞானியார்

கல்லறைக்கவிதைகள் - II

கவர்மெண்ட் அதிகாரியின் கல்லறை

எமனுக்கு
லஞ்சம் கொடுக்க முடியாமல்
செத்துப்போனான்

என்னவளின் கல்லறை

வேறு எவனையோ
நினைத்தாள்
கொலைசெய்துவிட்டேன்.

இந்தியனின் கல்லறை

இங்குதான் இவன்
மதவெறியில்லாமல்
உறங்குகின்றான்

நிருபரின் கல்லறை

இறைவனிடம்
பேட்டி எடுக்கச்
சென்றுள்ளான்

வீரப்பனின் கல்லறை

தேவாரம் வந்தாலும்
தேட முடியாத காடு


கணிப்பொறி மென்பொருளாளரின் கல்லறை

If Condition முடிக்காமலையே
இறந்து விட்டான்.


கவிஞனின் கல்லறை

கவலைப்படாதீர்கள்
இனி
பொய்சொல்ல மாட்டான்


நகைச்சுவை நடிகரின் கல்லறை

இவனைச்சுற்றி
அழுதுகொண்டே
அத்தனைபேரும்


பெண்சிசுவின் கல்லறை

மனிதர்களே! இனிமேல்
கொசுவைக் கூட
கொல்லாதீர்கள்


எழுத்தாளனின் கல்லறை

முற்றும்


- ரசிகவ் ஞானியார்

கல்லறைக்கவிதைகள் - I





அரசியல்வாதியின் கல்லறை


ஆட்சி கவிழுமோ என்ற
அச்சமில்லாமல் உறங்குவது
இதுதான் முதல்முறை


வக்கீலின் கல்லறை

பாவம்
ஜாமீனில் எடுக்க
யாருமில்லை

கண்டக்டரின் கல்லறை

எல்லோருக்கும்
டிக்கெட் வழங்கியவருக்கு
இறைவன் கொடுத்த
நிரந்தர டிக்கெட்.



டிரைவரின் கல்லறை

பஸ் இல்லாமலையே
பரலோகம் வரை
சென்றுவிட்டார்



மாணவனின் கல்லறை

இதயக் கல்லூரிக்கு
ஸ்டிரைக் அடித்துவிட்டான்

காதலனின் கல்லறை

இங்கும் இவன்
மௌனமாகத்தான்
உறங்குகின்றான்.


நீதிபதியின் கல்லறை

ஆண்டவன் அளித்த
ஆப்பீல் இல்லாத
ஆயுள் தண்டனை

நடிகனின் கல்லறை

மேக்கப் இல்லாமல்
இங்குதான் முதன்முறையாக
நடிக்கின்றான்



விபச்சாரியின் கல்லறை

தயவுசெய்து இவளை
துணியோடு புதையுங்கள்- கலையை
கட்டெறும்புக்குக் கூட
கற்றுக்கொடுத்துவிடுவாள்

டிவி ஊழியரின் கல்லறை

தடங்கலுக்கு
வருந்துகிறோம்




- ரசிகவ் ஞானியார்-

Wednesday, September 28, 2005

இரண்டாவது மகாத்மா






பிறக்கும்போதே சாதிப்பெயரால்
பிரித்து வைப்பதவ மானம்
பிறந்தவனின் சாதி பார்த்தா
பொழிகின்றது வானம்?


மதமும் சாதியும் மனிதனைச்
சாகடித்தது போதாதா?
நிதமும் சாரலாய் வடிகின்ற
கண்ணீர்கள் தீராதா?

இந்து முஸ்லிம் கிறிஸ்த்து என்றால்
இந்தியன் என்றுத் திருத்துங்கள்
உந்து விசைபோல் விண்ணிலெழும்பி
மனிதநேயத்தைப் பொருத்துங்கள்

தாழ்மையென்றுத் தரம்பிரித்தால்
தயங்காமல் தூற்றுங்கள்
ஏழ்மைகண்டுச் சிரிப்பவனை
தூக்கிலே ஏற்றுங்கள்

சதி கொண்ட சாதி களைய
நெருப்பாற்றினை ஊற்றுங்கள்.
மதிவிட்டு மதவெறி கொண்டவனை
ஒறுத்தாவது மாற்றுங்கள்


இனம்கண்டு பிரிப்பவனை
இடுகாட்டில் போடுங்கள்
இரண்டாவது மகாத்மாவை
இந்தியாவில் தேடுங்கள்

கூற்றில் எல்லாம் சாதி
இரண்டென்று கூறுங்கள்
காற்றில் கலந்த சாதியைக்
கரைத்து விட வாருங்கள்

மாற்றுவோம் மாற்றுவோம் - மனம்
மனிதனாய் மாற்றுவோம்
போற்றுவோம் போற்றுவோம் - பூமி
புனிதமென்று போற்றுவோம்

-ரசிகவ் ஞானியார்

காஷ்மீர்



இணைந்திருந்தால் இருவருக்குமே
இடைஞ்சல் ...

பிரித்தாலும் தோன்றிவிடக்கூடும்
பிரச்சனை ...

இந்த குழந்தைககு
என்னபெயர் வைக்கலாம்?

"காஷ்மீர்"



-ரசிகவ் ஞானியார்

Tuesday, September 27, 2005

ஒரு கல்லூரி மாணவன் பேசுகிறேன்





வரவேக்கூடாது என
வரம் கேட்ட நாட்கள்
இதோ வந்துவிட்டது

இந்தியாவிட்ட
ராக்கெட்டைவிடவும்
வேகமாய் வந்துவிட்டது
கல்லூரியின் கடைசிநாட்கள்

கல்லூரிப்பேருந்தில்
டிக்கெட் எடுத்ததை
அதிசயமாய் பார்த்த நண்பர்கள்!

பிகர்கள் முன்னால்
பந்தா காட்டுவதற்காக
படுவேகமாய் பைக்கில் வந்தபோது என்னை
கவிழ்த்துவிட்டுச்சென்ற இந்த
கல்லூரிச்சாலை...

கேண்டீனில் டீ குடித்துவிட்டு
காசு கொடுக்காமல் நழுவிய
கலகலப்பான நாட்கள்

காதலைச்சொல்வதற்கு
தைரியமில்லாமல்
கேண்டீன் சுவர்களில் எழுதிய
கவிதைகள்

எவள் வருகைக்காகவோ
எவன் வருகைக்காகவோ
காத்திருக்க வைத்த
அந்த ஆலமரம்

எல்லோருடைய காதலையும்
எல்லோருடைய அரியர்ஸையும்
எல்லோருக்கும் தெரியவைக்கும்
நாம்
கரன்டிவி என
கிண்டலாய் அழைக்கும் - அந்த
குண்டுப்பையன்

பஸ்ஸில் தொங்கிச்சென்று
பாதசாரிகளை கிண்டலடித்த
பாளையங்கோட்டை வீதிகள்

பஸ்ஸின் மேற்கூரையில் நின்று
ப்ரேக்டான்ஸ் ஆடியபோது
தவறிவிழுந்து
தனியார் ஆஸ்பத்திரியில்
நண்பர்களோடு தூங்கிய நாட்கள்

கடைசி பெஞ்சிலிருந்து
கடலை வறுத்துக்கொண்டிருக்கும் அந்த
நளபாகர்கள்

அரசியல்வாதிகளைப்போலவே
ஆட்களை மாற்றிக்கொண்டிருக்கும்
சில மாணவிகள்
பல மாணவர்கள்


பசுமை நிறைந்த நினைவுகளே
பாட்டைக்கேட்டவுடன்
அழுதுவிடுகின்ற அந்த
அப்பாவி மாணவன்

அந்த மாணவியிடம்
ஏதோ ஒன்றைச் சொல்லி
கன்னத்தில் அறைவாங்கிவிட்டு
நாம்
பார்த்துவிட்டதால்
பல்லிளித்துச் சென்ற
கல்லூரிச் சேர்மன்

கல்லூரி விழாக்களில்
கலாட்டா செய்பவர்களை
கண்டுபிடிப்பதற்காகவே
பிரின்ஸ்பாலால் நியமிக்கப்பட்ட
பறக்கும் படைகள்

காதலை சொல்லிவிட்டு
அழுதுகொண்டிருக்கும் மாணவர்கள்

காதலைச்சொல்லாமலேயே
அழுதுகொண்டிருக்கும் மாணவர்கள்

அவளைக்காதலிப்பதாய் இவளும்
இவளைக்காதலிப்பாய் அவளும்

இப்படி
எத்தனை எத்தனை
பானிபட் இதயங்கள்..

இந்த
சின்ன சின்ன ஞாபகங்கள்
சின்ன சின்ன சேட்டைகள்
மடியப்போகிறதே?
வாழ்க்கையின்
மையப்பகுதி முடியப்போகிறதே?

காதல் பிரிவு
நட்பு பிரிவு
கல்லூரி பிரிவு
இப்படி
எத்தனையோ பிரிவுகளுக்குள்
எங்களை வீழ்த்தப்போகும் அந்த
கடைசிநாள் வரத்தான் வேண்டுமா..?

அரசியல்வாதிகளே!
கல்லூரியின் கடைசிநாட்களை
வரச்செய்யமாட்டோம் என்ற
ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுங்கள்
ஓட்டு உங்களுக்குத்தான்..

நாளை
கல்லூரின் கடைசிநாள் விழா
தயவுசெய்து நண்பர்களே
இன்றிரவே
அழுதுவிட்டு வாருங்கள்!


கூட்டம் கூட்டமாய் வந்துவிட்டு
தனித்தனியாய் பிரியப்போகிறோம்!
பரவாயில்லை
ஏதாவது ஒரு நாட்டில்..
ஏதாவது ஒரு பஸ்ஸ்டாண்டில்
ஏதாவது ஒரு இரயில்வேஸ்டேஷனில்..
ஏதாவது ஒரு தெருவீதிகளில்
ஏதாவது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில்
மீண்டும் சந்தித்தால்
கல்லூரிப்பருவத்தைப்
புதுப்பித்துக்கொள்வோம்

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்..


இதயம் நட்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, September 26, 2005

மின்னல்





ஆகாய கட்சியிலே
ஆண்டவன் கூட்டணியிலுமா
பிளவு ஏற்பட்டது?

----------

தென் மாவட்டக் கலவரங்களில்
ஆகாயத்தையும்
கீறிவிட்டார்களோ..?




-ரசிகவ் ஞானியார்

எது சுதந்திரம் ?





சத்தியமாய் நிதம் வாழ்ந்து - சுதந்திரம்
பத்திரமாய் கொண்டுச் சேர்த்தவராம்
காந்தி பெற்றுத்தந்தே யவர் பட்டுவிட்டார் - விஞ்ஞானக்
கால மென் தேசத்தை விற்கின்றதே?

அடிமைத்தனத்தை ஒதுக்கி வைத்தோம் - ரேஷன்
அரிசியைமட்டும் பதுக்கி வைத்தோம்!
சுதந்திரக்கதவை உரசிப் பார்த்தோம் - அது
சுயநல வாதியுடன் சரசமாடும்!

விஞ்ஞானக் கனவுகள் வீதியிலே - சுதந்திரம்
விழிபிதுங்கி வெறும் சாதியிலே!
தேசத்தைக் காப்பாற்ற நாதியில்லை - நான்
தேடிப்பார்த்தாலும் எங்கும் நீதியில்லை!

இடுப்பி லுடுக்க ஒரு ஆடையில்லை
இங்குகட்சிக் கொடிகளுக்கும் சோடையில்லை!
அழுக்கு மனதிலே வெள்ளைச்சாயங்கள் - இன்று
அரசியல் சாக்கடைக்கும் வாடையில்லை!

கல்விகள் எல்லாம் கசாப்பு கடைதனில்
கறிகளுக்குப் பதிலாய் ஊசலாடும்!
பக்கத்திலேயே ஓர் அறிவிப்பு பலகை - பணம்
ரொக்கமாய்; கொடுத்தால் டிகிரி வாங்கலாம்.!

தினம் பல கொலைகள் தேசம் அலரும் - ஜாதித்
தீயும் பெண்ணின் கருவில் வளரும்!
மனிதநேய மயானத்திலே மதப்பேய்கள் - பாரதப்
புனித மென்று பூத்திடுமோ? புறப்படுங்கள்

சுடுகாட்டு ஊழலிலே சுதந்திரம் உண்டு - விண்ணில்
சூரியனுக்கே வெட்கம் இந்நிலை கண்டு!
பஞசத்தின் பிடியில் பாரதமே கிடக்கும் - ஆனால்
லஞ்சஊழல் மட்டும் லாவகமாய் நடக்கும்!

என் கனவினிலே இந்தியா என்றேன் - இளைஞன்
தன் கனவினிலே சந்தியா என்கிறான்!
மனிதனை மதிக்கின்ற தேசம் வேண்டும் - சமூகத்தில்
இனி தேசத்தை மதிக்காத மனிதன் வேண்டாம்.

- ரசிகவ் ஞானியார் -

Thursday, September 22, 2005

தலைப்பை தேடும் கவிதைகள்




இப்பொழுதும் எங்கோ ஓர் மூலையில்
இடிந்துகொண்டுதானிருக்கிறது!
இடிந்துபோனவர்களின்
இதயத்திலே
காதுவைத்துக்கேட்டேன்..
காதுகளிலும் கண்ணீர் வருகிறது!


பூமியே!
நீ எங்களை..
கைப்பிடித்து அழைத்துவந்தாய்!
இங்கே பார்
இது எஙகளை
இதயமொடித்து அழித்துச்செல்கிறதே!


எத்தனைமுறையும் வரும்
வந்தபிறகு
வீதிகள் வெறிச்சோடும்..
சாதிகள் செத்து ஓடும்..

இதனுடைய
ஒற்றை நடுக்கத்தில்..
வாசமாகிப்போனவர்களை விட
நாசமாகிப்போனவர்கள்தான் அதிகம்!

ஒருவகையில் இதனை பாராட்டலாம்
இது பிரிவனையெல்லாம் பார்க்காது
ஆம்
குஜராத்தை மட்டும்தான்..
குறி வைத்து தாக்கும்!
தமிழ்நாட்டை மட்டும்தான்..
தடுமாறச்செய்யும்!

இப்படி
பிரிவினைப் பார்த்தெல்லாம்..
பயணப்படாது!
இந்தியா முழுவதும்
எங்கு வேண்டுமானாலும் வரலாம்!
இமயத்து மக்களையும்
இரண்டே நிமிடத்தில்
குமரிக்ககடலில்
குப்புற வீழச்செய்யும்!

வீடில்லாமல்..
சட்டை கிழிசலோடு..
பிளாட்பாரத்திலே
அகதிகளாக..
அனாதைகளாக..
மற்றும்
இதயமில்லாமலும்
எத்தனை எத்தனை பேர்?
இப்படி மயக்கி விட்டதே!

மீளவும்முடியவில்லை
மீண்டலர்கள்..
வாழவும் முடியவில்லை!


இதுவும் ஒருவகையில் போர்தான்
எதிர்த்து வந்தவர்கள்
எல்லோரையும்
நிராயுதபாணிகளாக..
நிற்கவைத்துவிடும்!

இதை நிறுத்தவே முடியாதா..?
ஒருவேளை
கதவுகள் அடைத்துவைத்திருந்தால்
காப்பாற்றப்படுவோமோ?
இல்லை இல்லை
அரண் கட்டி வாழ்ந்தாலும்
அடிச்சுவட்டை பெயர்த்துவிடும்!

பள்ளி மாணவர்களின்
பாடப்புத்தகங்கள் கூட
இப்பொழுது
இதனடியில் சிக்கிக்கொண்டது!

பொறுமையாயிருக்கிறாய் - வாழ்க்கையை
கருமையாக்கிவிடுகிறாய்!
உன்னை..
இருட்டு என அழைக்கட்டுமா?

வாழவும் வைக்கிறாய் - இதயத்தை
வீழவும் வைக்கிறாய்!
உன்னை..
வீழ்ச்சி என அழைக்கட்டுமா?

அழகையும் தருகிறாய் - எங்களுக்கு
அழுகையும் தருகிறாய்!
உன்னை..
சோகம் எனச் சொல்லட்டுமா..?


அடுக்குமாடியிலும் குடியேற்றுகிறாய் - சிலநேரம்
அஸதிவாரத்தையும் ஆட்டுகிறாய்1
உன்னை..
அஸ்தி என அழைக்கட்டுமா?

நீ
உயிர்களுக்கு
உத்திரவாதம் அளிக்க மறுக்கிறாய்!

நீ
மனசை சிலநேரம்
மரணமாக்குகிறாய்!

நீ
சோகங்களை மட்டும்
சொந்தக்காரனாக்குகிறாய்!

இங்கே
மனிதர்கள்
மனிதர்களை தேடுகிறார்கள்!

இங்கே
முனகல் சப்தம் கூட
முக்கியத்தவம் பெறுகிறது!

இதை
நினைத்துப்பார்த்தால்
கனவுகளுக்குக் கூட..
காய்ச்சல் வருகிறது!


இந்தச் சீற்றத்தால்
அழிந்துபோயிருக்கும்..
அழிந்துகொண்டிருக்கும்..
அழியப்போகும்..
அத்தனைப்பேருக்கும்..
நிவாரணநிதியாக அந்த
கவிதையை..
கண்ணீரஞ்சலி செய்கிறேன்!

இதயங்களையெல்லாம் இப்படி..
இடித்துக்கொண்டிருக்கும் இந்தப்
பாழாய்ப்போன காதலுக்கும்..
பூகம்பம் என பெயரிட்டுவிட்டு
கவிதையை முடிக்கிறேன்!

வித்தியாசமாய் இருக்கட்டுமென
முடித்தபிறகு ஒரு..
முன்னுரை:
குஜராத் பூகம்பத்திற்கும்
இந்தக் கவிதைக்கும்..
எந்தச் சம்பந்தமும் இல்லை!

-ரசிகவ் ஞானியார்

Wednesday, September 21, 2005

ஒரு பட்டாம்பூச்சி பேசுகிறேன்

கடைவீதியில்
கலாச்சாரத்தை விற்கின்ற
ரோமியோக்களே!

உங்களை நோக்கி
ஒரு பட்டாம்பூச்சி பேசுகிறேன்

நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்யலாம்

பேருந்தில்
கணக்கு நோட்டை
கொடுக்கும் சாக்கில்
கையைப் பிடித்தும் கிள்ளலாம்

நாங்கள்
நடந்துவரும் வீதியிலே
நக்கலடித்தும் செல்லலாம்

இந்தியா வீசிய
இராக்கெட்டை விடவும் வேகமாக
காகித அம்பும் வீசலாம்

தனியே வரும் பெண்களிடம்
தரக்குறைவாய் பேசலாம்

நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்யலாம்

ஐ லவ் யு சொல்லாதவள் மீது
ஆசிட்டும் ஊற்றலாம்

எங்கள் கூட்டத்தினுள்
பைக்கில் நுழைந்து
பதறவும் வைக்கலாம்

பின்னால் வந்து
ஹாரன் அடித்து அலற வைக்கலாம்.

சிட்டி பெண்ணின் உடையைகண்டு
சீட்டி அடித்து விளையாடலாம்

எது வேண்டுமானாலும் செய்யலாம்

கல்லூரிக்குச் சென்ற உன்
தங்கையின் ஞாபகம்
தலைதூக்காதவரை

நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

-------

-ரசிகவ் ஞானியார்-

Tuesday, September 20, 2005

எரிச்சல்





இப்படி
எல்லாமுமே என்னை
எரிச்சல்படுத்துகிறது!

இணைப்பு கிடைக்காமல்...
இழுத்துக்கொண்டிருக்கும் வெப்சைட்

முன்னால் நின்றுகொண்டு - அவள்
முகத்தை மறைக்கின்ற மடையன்!

காதலியோடு பைக்கில்...
கட்டிப்பிடித்தபடி எவனோ?

புதிதாய் வாங்கிய ஜீன்ஸ்...
பார்க்காமல் செல்கின்ற பிகர்கள்!

பரிட்சை நெருங்குகிறது..
டிவியில் புதுப்படம்!

நாளைக்கு காதலர்தினம் - இன்னும்
வாழ்த்து அட்டை வரவில்லை!

ஜன்னலோரசீட்டில் அவள்...
கையில் நோட்டில்லை!

இண்டர்வியுவுக்கு
ஆளுங்கட்சி சிபாரிசு!
ஆட்சி மாறியது..

கவிழ்த்துவிட்ட பைக்..
கண்ணெதிரே காதலி!

ஒயின்ஸ் கடைக்காரர்...
அப்பாவுக்கு நண்பர்!

ஐஸ்கிரீம் சாப்பிடும் நேரம்..
தூரத்தில் தோழி,
பாக்கெட்டில் பணமில்லை!

கையில் சிகரெட்..
எதிரில் அப்பா!


அவளை காதலிக்க ஆசைதான்..
காதலியிடம் கேட்கவேண்டுமே?

"சாரி ராங்கால்"
அவள் அண்ணன்!

புதிதாக வேஷ்டி கட்டியுள்ளேன்
புயல்காற்று அடிக்கிறது!

போகும் வழியில்..
பெண்கள் கல்லலூரி!
பாதையை மாற்றும் அப்பா!

கொஸ்டின் புரியவில்லை..
எதிரில்
நன்றாய் எழுதும் மாணவன்!

ஆட்டோகிராபில் அவள்..
"அண்ணே மறந்துடாதீங்க"

பரிட்சையில் தோல்வி ..
பார்த்து எழுதியவன் பாஸ்!

காதலியோடு இருக்கையில்...
கொடுத்த கடனைக் கேட்பவன்!

கடலை போடும் வேளை...
கூப்பிடுகிறான் உயிர்நண்பன்

இப்படி
எல்லாமுமே என்னை
எரிச்சல்படுத்துகிறது!

எரிச்சல் பற்றி யாராவது
எழுதச்சொல்லும் கவிதைகள்
உட்பட...

--ரசிகவ் ஞானியார்

Monday, September 19, 2005

விசிலில் கலைந்த காதல்


நிலாச்சாரலில் வெளியாகியுள்ள என்னுடைய விசிலில் கலைந்த காதல் என்ற கவிதையை இதோ இந்த சுட்டியை சொடுக்கி படியுங்கள்.


http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_226a.html

-ரசிகவ் ஞானியார் -

Thursday, September 15, 2005

மாணவர் பேரவை தொடக்க விழாவுக்கு



மாணவர் பேரவை தொடக்க விழாவுக்கு யாரை அழைப்பது என்பது தொடர்பான கூட்டம் ஒன்றினை பிரின்ஸ்பால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் அதில் சேர்மன் நவாஸ்கான் துணை சேர்மன் முத்து பின் செயலாளராக நான் மற்றும் அனைத்து வகுப்பு லீடர்களும் அழைக்கப்பட வட்ட மேசை மாநாடு போல அமர்ந்திருந்தோம்.

என்னப்பா சேர்மன் யாரை அழைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க..?- சக்திமான் என்று மாணவிகளால் செல்லமாய் அழைக்கப்படும் பிரின்ஸ்பால் பீர் முகம்மது அவர்கள் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்

சேர்மன் நவாஸ்கான் உடனே பக்கத்தில் உள்ள என்னிடம் கேட்டான். என்ன ஞானி யாரை கூப்பிடலாம் நீ சொல்லேன்..?

வைரமுத்துவை கூப்பிடலாமா.? சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டேன்..

வைரமுத்துவா..நீயே பிரின்ஸ்பால்கிட்ட சொல்லுப்பா.. - பயந்தான் நவாஸ்கான்

சார் வை..ர..முத்து..வை கூப்பிடலாமா..? - நானும் தயங்கிபடியே கேட்டேன்

துப்பாக்கியில் பட்டனை அழுத்தியவுடன் புறப்படும் குண்டுகளின் வேகத்தைப்போல உடனே பதில் வந்தது.

ச்சே ச்சே அதெல்லாம் செலவாகும் பா..நமக்கு இப்ப டைம் இல்ல..

- மறுத்துவிட்டார்

வேற யாரையாவது சொல்லுங்கப்பா..

நான் திமு அப்துல்காதர் - வலம்புரிஜான் மற்றும் சில அரசியல் புள்ளிகள் என்று சில பரிந்துரைகளை எடுத்துரைத்தேன்.

எல்லாவற்றிற்கும் ஒரே பதிலைத்தான் வைத்திருந்தார்.

ச்சே எதுக்கு நவாஸ் இந்த மீட்டிங்..? எதை சொன்னாலும் மறுக்கிறார்..

வந்திருந்து அனைத்து மாணவர்களும் அவர்களுக்கென்று வந்த தேநீர் - லட்டுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர்களுக்கென்ன நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அலட்சியமாக இருந்தார்கள்.

மறுபடியும் பழுதாகிப்போன டேப்ரிக்கார்டர் திருப்பி திருப்பி படிப்பது போல மீண்டும் ஆரம்பிக்கிறார்..

என்னப்பா சீக்கிரம் சொல்லுங்க..

எல்லா விழா மேடைகளிலும் வழக்கமாய் நடை பெறுகின்ற ஒரு காட்சி : ஒருவர் மற்றவர்கள் காதில் ஏதோ ஒன்றைப் பேசி இருவரும் சிரிக்க முற்பட்டு பின் சபை நாகரீகம் கருதி சிரிப்பை அடக்கிகொள்வது போல நடிக்கும் பெரிய பெரிய தலைவர்கள் போல

நான் உடனே பக்கத்தில் உள்ள பிகாம் லீடரின் காதில்
பேசாம டேய் ஷகிலாவை கூப்பிட்டா கூட்டமாவது கூடும்..கேட்டுப்பார்ப்போமா?..என்று நக்கலடிக்க

அவன் சேர்மன் காதில் இதைப்போட..அதைக்கேட்ட பக்கத்தில் உள்ள மைக்ரோபயாலஜி மாணவன் சிரித்துக்கொண்டே இன்னொரு மாணவனிடம் கூற அப்படியே அது பரவிற்று அடுக்கி வைக்கப்பட் சீட்டுக்கட்டு ஒவ்வொன்றாய் விழுவதைப்போல..

பிரின்ஸ்பால் இதைப்பார்த்து மாணவர்கள் சீரியஸாக ஏதேதா விவாதம் செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டார்.

இந்தச்சலசலப்பில் பிஸிக்ஸ் வகுப்பு லீடர் அதோ பிரின்ஸ்பால் அருகே அமர்ந்திருக்கும் இராமய்யா சாரிடம் காதில் ,

சார் சார் ஞானியார் ஷகிலாவை கூப்பிடலாமான்னு கேட்கிறான்.

அவருக்கு உடனே சிரிப்பை அடக்க முடியவில்லை..அவருக்கு எப்போதுமே என் மீது பிரியம்..என்னை கண்களால் பார்த்தார்..உதட்டுக்குள்ளேயே சிரித்துக்கொண்டு கண்களால் மிரட்டியபடி இதெல்லாம் கூடாது என்ற அர்த்தத்தில் தலையாட்டினார்..

அப்போது மஸ்தான் காதில் கிசுகிசுக்கிறான். டேய் எஸ்டிசியில் படிக்கிறாள நம்ம பாளைகோட்டையில தினமும் லுக் விடுவோமே டா அதான் அந்த ரெண்டு பொண்ணுங்க..
அவங்கள பார்த்த மாதிரி இருக்கும்டா..நாம எஸ்டிசி காலேஜ் போகலாம்டா..அதுக்கு ஏதாவது வழிபண்ணு..

எந்த பொணணை சொல்றான்? நினைவலைகள் சுழல்கிறது.

காலை நேரத்தில் இளைஞர்களின் சொர்க்கமாக இருக்கும் பாளைங்கோட்டை பஸ்நிலையத்தை மேலப்பாளையம் நீதிமன்றம் 22சி என்ற பேருந்து நெருங்கி கொண்டு இருக்கிறது. நானும் மஸ்தானும் பேருந்தில் இடமிருந்தும் கல்லூரி மாணவர்களின் ஒழுக்க விதியைப் பின்பற்றி தொங்கிக்கொண்டே வருகிறோம்.

இறைவன் சொர்க்த்தில் இருந்து ஒட்டு மொத்த தேவதைகளையும் காலையில் பாளை பஸ்ஸ்டாண்டில் இறக்கி விட்டு விடடானோ என்று தோன்றியது.

எப்பொழுதோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது..?


ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?


பேருந்து உள்ளே நுழைந்ததும் கையில் ஒற்றை நோட்டினை வைத்துக்கொண்டு நாங்கள் ஓடும் பேருந்தில் இருந்து குதித்துக் ஹீரோதனத்தை வெளிக்காட்டினோம்

( ஒரு நாள் அப்படித்தான் குதித்து இறங்கும்போது வழுக்கி விழுந்து ..காலில் அடிபட்டு..அந்த கதையெல்லாம் சொல்ல மாட்டேன் )


அதோ அந்த இரண்டு பெண்களும் நிற்கிறார்கள். நாங்கள் கண்டு கொள்ளவேயில்லை..பேருந்து மறுபடியும் கிளம்புகிறது..உடனே நாங்கள் ஓடிச்சென்று ஏறி திரும்பிபார்த்து அந்த இரண்டு பெண்களை பார்த்தும் குட்மார்னிங் என்று ஒரு சல்யூட் அடிப்பது வழக்கம். அப்படியே நட்பாகிப்போனோம்.


நினைவை மறுபடியும் மீட்டிங் ரூமிற்கு கொண்டு வந்தேன். என்னடா யோசிக்கிற என்ன செய்யலாம்..? யாரை அழைக்க..? - மஸ்தான் மீண்டும் கேட்கிறான்.

நான் உடனே பிரின்ஸ்பாலிடம் சார் எஸ்டிசி கல்லூரி பிரின்ஸியை கூப்பிடலாம் சார்..எப்போதும் மத்த காலேஜ் உடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவங்களோட படிப்பு - தேர்வுக்கு தயாராகிற வழிமுறை எல்லாம் நாமும் தெரிஞ்சிக்கலாம்.ஏன்னா அவங்க காலேஜ் எப்போதுமே பர்ஸ்ட் வர்றாங்க..என்று பொறுப்பாய் பதிலளிக்க..

பிரின்ஸ்பாலுக்கும் புரிந்துவிட்டது. அவரும் எங்கள் வயதை கடந்து வந்தவர்தானே..? பசங்களோட பிளான் எப்படியிருக்கும்னு..?
அதுமட்டுமல்ல அவர்களை அழைத்தால் செலவும் அந்த அளவுக்கு ஆகாது என்ற கணிப்பில் சரிப்பா கூப்பிடலாம் என்று சம்மதித்தார்..?

மாணவர்களுக்குள் ஒரே கிகிசுப்பு..டேய் அவங்க வேண்டாண்டா..அவங்களுக்கு பேசவே தெரியாது..போரடிச்சிடும்; யாராவது நல்லா பேசறவங்களா கூப்பிடலாம்..

என்று ஆளாளுக்கு கூற..எல்லோரிடமும் செலவு ஆகிவிடும் - டைம் இல்லை- என்று சில காரணங்களை கூறி சம்மதிக்க வைத்துவிட்டோம்.

முடிந்து விட்டது வட்ட மேசை மாநாடு சாரி வெட்டி மேசை மாநாடு..

மீட்டிங் ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம்..கடந்து போகும்போது இராமய்யா சார்..ஞானி ... யாரை கூப்பிடனும்.. ஷகிலாவையை..? என்று நக்கலடித்துச் சிரித்துக்கொண்டே சென்றார்..

சேர்மன் நவாஸ்கான் அழைத்துக்கொண்டே வருகிறான்..

ஞானி வேற யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்பா..ச்சே..- அலுத்துக்கொண்டான்

சரி விடு..வேற என்ன செய்ய..என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பிஎஸ்ஸி கணிதப் பெண் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டே செல்கிறாள்.

நவாஸ் இங்க பாரேன் ..லுக்க பார்..ச்சே சரியான லுக்கு..

அங்க பார்க்காத பிரின்ஸ்பால் பார்த்தாருன்னா தொலைஞ்சோம்..

ஏன் இப்ப பயப்படுறே...?

அவன் சரி இவ்வளவு பேசறியே..ஒரு பெட்.. இப்ப எல்லா பொண்ணுங்களும் உட்கார்ந்திருப்பாங்க அதோ கேர்ள்ஸ் ஒன்லின்னு எழுதியிருக்கிற அந்த வராண்டாவுல..நீ போய் தண்டால எடுத்திட்டு வா பார்ப்போம்.. 100 ரூ பெட்.. –

- சும்மா கிண்டலடித்துச் சிரித்தான்

நான் பண்ணிருவேன் ஆனா இப்ப எல்லா பொண்ணுங்களும் வர்ற டைம்டா..மதியானத்திற்குப்பிறகு பண்றேன்..

இந்த பயம் இருக்குல உனக்கு..என்று கூறி அவங்க க்ளாஸ் மாணவர்களுடன் சேர்ந்து என்னை நக்கலடித்து சிரித்தான்.

அய்யோ ஹீரோதன்மையை இழந்துவிடக்கூடுமோ எனப்பயந்து சரி டா பண்றேன்.எனக் கூறி நேராக கேர்ள்ஸ் ஒன்லி பகுதிக்கு செல்கிறேன்..இங்கே சில தேவதைகள் வராண்டாவில் படித்துக்கொண்டு சில தேவதைகள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு..சில பெண்கள் என்னடா செகரட்டரி வர்றான் ஏதாவது இன்பார்ம் பண்ண வர்றானோ எனற் ஆர்வத்தில் என்னை பார்க்க..

நான் நேராக போய் தரையில் விழுந்து 3 முறை தண்டால் எடுக்க ஆரம்பிக்க எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னதான் வீரமாக சவால் விட்டாலும் அத்தனை பெண்கள் ஒட்டுமொத்தமாய் திரும்பிபார்த்து சிரித்த போது எனக்கு அவமானமாகி விட்டது. திரும்பி கூட பார்க்காமல் விறுவிறுவென்று வந்துவிட்டேன்.

ம் கொடு 100 ரூ - சேர்மனிடம் கேட்டேன்

சொன்ன மாதிரியே போய் செய்திட்டு வந்திட்ட..ஆனா வேகமா பண்ணிட்ட நான் தரமாட்டேன் - தப்பிக்க நினைத்தான்

நான் அடம்பிடித்து நச்சரிக்க் 50 ரூதான் இருக்கு நாளைக்கு 50 ரூ தர்றேன்.. என்று
அழுதுகொண்டே தந்தான்

---

மறுநாள் நானும் மஸ்தானும் ஒரு பைக்கில் நவாஸ்கான் மற்றொரு பைக்கில் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக டவுணில் ஒரு பிரமுகரைச் சந்தித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

பைக் ரத்னா தியேட்டரை தாண்டி சீறி வந்துகொண்டிருந்தது. மஸ்தான் ட்ரைவ் பண்ண நான் பின்னால் அமர்ந்து கொண்டேன்.

பைக்கை விரட்டாதடா மெதுவா போடா - நான்

அவனோ இல்லடா வயிறு பசிக்குது அவங்களுக்கு முன்னால நாம அரசன் போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வந்திருவோம்..அவங்கள பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில தினகரன் அலுவலகம் முன்னால வெயிட் பண்ண சொல்லுவோம். சரியா..

ச்சே ஒம் புத்தி ஏன்டா இப்படி போகுது..தப்பா நினைச்சுக்குடுவாங்க..நீ அவங்க பின்னாலயே போ.. நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு சத்தம் ..

ஹா..ய்... ஹா..ய் அட சித்தா கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் எங்கேயோ சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில்தான் கடைசி சீட்டிலிருந்து சில தேவைதைகள் சப்தமிடுகிறார்கள்.. ஹா..ய்...

டேய் வண்டிய விரட்டுடா..மெதுவா போகாதடா.. - நான்

நாயே இவ்வளவு நேரம் மெதுவா போன்னு சொன்னே..இப்ப பிகரைப்பார்த்தவுடனே விரட்ட சொல்றியோ.. - தத்துவம் பேசியது நாய்

டேய் டேய் விரட்டுடா..அந்த பொண்ணுங்க கைகாட்டிட்டுப் போறாங்கடா..- என்று நான் திருக்குறள் சொல்ல விரட்ட ஆரம்பித்தான் வண்டியை.

ஹா..ய்..ஹா..ய் - மறுபடியும் அவர்கள் தான் நாங்கள் விரட்டி பின் தொடர்வதை கண்டதும் குஷி அவர்களுக்கு..

நான் கைகாட்டினேன். இவன் மட்டும் ஹீரோதனத்தை தட்டிக்கிட்டு போயிடுவானோ என்கிற பயத்தில் மஸ்தானும் கைகாட்ட முயற்சிக்க வண்டி தடுமாறியது. ( பாருங்களேன் பெண்களை கண்டவுடன் பைக் கூட தடுமாறுகிறது)..

தடுமாறிய வேகத்தில் ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட இதயத்திலும் இடப்பக்கம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த முதியவர் மீதும். அவர் தடுமாறி விழுந்து..

அறிவிருக்கால ஏல... ஏல... நில்லுல..கண்ணு தெரிலையால.. - கத்த ஆரம்பிக்க

காதில் வாங்கிக்கொள்ளாமல் வண்டியை விரட்டினோம்.

பக்கத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சேர்மன் பயந்து போய் நாங்கள் ஏதும் பிரச்சனையை உருவாக்கி விடுவோமோ என் பயந்து.. வண்டியை விரட்டி செல்ல ஆரம்பித்தான்

அந்த தேவதைகள் எந்த காலேஜ் என்று எங்களிடம் கண்ணாடி வழியாக கைகளை அசைத்து சைகையில் காட்ட

காற்றை காகிதமாக்கி கைகளை பேனாவாக்கி எழுதினேன் ..ச..த..க் என்று

அவர்கள் எந்த குரூப் என்று கேட்க..மறுபடியும் மேத்ஸ் என்று மறுபடியும் காற்றில் எழுத ஆரம்பித்தேன்.

அவர்களோ கழுத்தில் கைவைத்து அறுப்பது போல காட்டினார்கள்..அறுவை என்று..

திடீரென்று புகையாக வந்தது ..என்னவென்று பார்த்தால் இதையெல்லாம் முன்னால் அமர்ந்து கவனித்து வந்த மஸ்தானின் வயிற்றெரிச்சலில் வந்த புகை அது.

பின் கைளில் வைத்திருந்த அழைப்பிதழை கொடுக்கலாம் என்று அழைப்பிதழை எடுத்து அவர்களi நோக்கி கைகளை காட்ட அந்த வெல்வெட் சுடிதார் மாணவி..தன் கைகளை வெளியில் நீட்டினாள்..நான் உடனே மஸ்தானை வண்டியை அந்த பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் விரட்ட சொல்லி அழைப்பிதழை கை நீட்டிக்கொண்டிருக்கும் தேவதையிடம் கொடுக்க முயற்சித்து தோல்வியடைய..ஓ ஓ ஓ என் கத்தத் தொடங்கினார்கள் தேவதையின் தோழிகள்

மறுபடியும் கொடுக்க முயற்சித்தேன்..வெற்றி வெற்றி கொடுத்துவிட்டேன்..அழைப்பிதழையும் மனசையும்.

அதை வாங்கிய அவள் படிக்க நான் சைகையில் காட்டினேன்.

நவாஸ்கான் ஞானியார் முத்து
சேர்மன் செயலாளர் துணை சேர்மன்


அந்த நடுவில் இருப்பதுதான் என் பெயர் என்று சைகையில் காட்டினேன். கண்டிப்பாய் விழாவுக்கு வரவேண்டும் என்று சைகையில் ஒரு சம்பிராயத்திற்காக கூற அவர்களும் சரி என்று தலையசைக்க.....சைகையும் கத்தலுமாக ஜாலியாக பயணப்பட்டுக்கொண்டிருந்தது பைக்கும் இதயமும்.


இப்படி அந்த பாளைங்கோட்டை போகும் பாதைகள் சொர்க்கம் செல்லும் பாதைகள் போல அப்பொழுது எங்களுக்குத் தெரிந்தது. அந்த பேருந்தை தவிர வேறு எந்த வாகனமும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.


மேம்பாலத்தில் இறங்கி அந்தப்பேருந்து ஜங்ஷன் செல்லும் பாதையை நோக்கி திரும்ப எங்களுக்கோ நேராக பாளையங்கோட்டை போகவேண்டியது இருந்ததால் கையசைத்துக்கொண்டே வருத்தத்தோடு விடைபெற்றோம்.

வண்டியை விரட்டிக்கொண்டே சென்றோம்..அட நம்ம சேர்மன் நடக்கின்ற கூத்தினை கவனித்துக்கொண்டே முன்னால் சென்றவனை பிடித்துவிட்டோம்..

டேய் இப்ப நேரா எஸ்டிசி காலேஜ் போய் இன்வைட் பண்ண போறோம் என்ன..அதுக்குள்ள எங்கையாவது போயிறாதீங்க.. - கடுப்பில் கூறினான்

( அவன் இப்படி கூற நினைத்தான்.. டேய் நேமாச்சுடா..வேற எந்த பொண்ணாவது டாட்டா காட்டினா ன்னு சொல்லி பல்ல இளிச்சிகிட்டு போயிடாதீங்கடா..)


எஸ்டிசி கல்லூரியின் வாசலில் அதோ நெல்லை இளைஞர்களின் எதிரி வாட்ச்மேன் நின்று கொண்டு எங்கப்பா எங்க தம்பி போறீங்க..பர்மிசன் இருக்கா..

நாங்கள் இன்விடேசனை கையில் எடுத்து காட்ட இடம் கிடைத்துவிட்டடு சொர்க்கத்தில் நுழைய..

அந்த பெண்கள் கல்லூரியில் நாங்கள் மூவரும் நுழைகிறோம்..எங்கெங்கு நோக்கினும் பெண்களடா..மிடியில் சுடிதாரில் சேலையில் என்று கலர்கலராய்..

சிலர் ஏதோ அவர்கள் கண்களுக்கு நாங்கள் தென்படவேயில்லை என்கிற மாதிரி அலட்சியமாக செல்வது போல நடித்து செல்கின்றனர்;.

( கடந்து சென்றபோது திரும்பி பார்த்தாங்களோ இல்லையோ..? )

மஸ்தான் தன் வேலையில் கரெக்டாக இருந்தான். ஞானி அங்க பாரு..நம்ம பஸஸடாண்டுல பார்ப்போம்லடா அந்த பொண்ணுங்க அதோ வர்றாங்க பாரு..

நாங்கள் உடனே சேர்மனிடம் கொஞ்சம் வெயிட் பண்ணச்சொல்லிவிட்டு அவர்களிடம் சென்று கடலை வறுக்க ஆரம்பித்தோம்..

ஹலோ எங்க இந்தப்பக்கம்

எங்க காலேஸ் பங்ஷனுக்கு உங்க பிரின்ஸியை இன்வைட் பண்ண வந்தோம்..நீங்களும் கண்டிப்பா வரணும்..என்ன.? என்று ஒரு இன்விடேசனை அவர்கள் கையில் கொடுத்து அசடு வழிந்து
என்ன சாப்பிட்டாச்சா

எங்க அவள காணோம்.. ( என்று இன்னொரு பொண்ணை பற்றி கேட்டு)

எங்க சொந்தக்கார பொண்ணு இங்கதான் படிக்கிறா ( என்று இல்லாத சொந்தக்கார பொண்ணை பற்றி விசாரித்து)

பீரியடு முடிஞ்சிடுச்சா..

ரெஸ்ட் டைம் எப்போ..

எங்களுக்கு மேத்ஸ் கால்குலஸ் நோட்ஸ் வேணும் உங்க காலேஜ் நோட்ஸ் நல்லாயிருக்கும்னு சொன்னாங்க

என்று சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கடலை கடலை கடலை வறுத்து அந்த கல்லூரி வளாகமே புகை மண்டலமாய் காட்சியளிக்கும் வண்ணம் வறுத்துத் தள்ள

கடலையின் நெடி தாங்காமல் மூச்சு முட்டி அய்யோ நேரமாச்சு வர்றோம் என்று அவர்கள் விடைபெற்றனர்..

இங்கே நவாஸ்கான் மட்டும் தனியாக அந்த மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க..

டேய் ஏண்டா எங்கே போனாலும் லேட்டாக்குறீங்க..டைம் ஆச்சுடா..

பிரின்ஸியை பார்த்து அழைப்பிதழ் கொடுத்து தேநீர் பருகி விடைபெற்றோம். ( தனியா வந்தோம்னா இந்த மரியாதையெல்லாம் கிடைக்காது..அப்படியே வாசல் வழியே அனுப்பிறுவாங்க )

விடைபெற்று மறுபடியும் அந்த சொர்க்கத்தை கடந்து வந்துகொண்டிருக்கும் போது எதிரில்
சில பெண்கள் தலை குனிந்தபடி வந்து கொண்டிருக்க டேய் மஸ்தான் அநத பொண்ண பாரேன் சூப்பரா இருக்கால..

யாருடா..

அந்த குதிரை வால்டா..ரெட் கலர் சுடிதார்..


அவர்கள் பக்கம் நெருங்க..நவாஸ்கான் கிசுகிசுத்தான் டேய் எதுவும் வம்பு இழுத்திறாதீங்கடா..மரியாதையா வந்திருக்கோம்..


எக்ஸ்கியுஸ் மி டைம் என்ன..? - என்னுடைய ஹார்மோன்கள் உசுப்பிவிட கேட்டேவிட்டேன்.

தலை நிமிர்ந்து பார்த்து முறைத்தபடி கடந்து செல்ல..அய்யோ ஞானி அவமானப்பட்டுட்டாயடா.. என்று ஒரு ஹார்மோன் வந்து காதில் சொல்லி விட்டுப் போனது.

எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது ஹலோ என்ன சொல்ல மாட்டீங்களா..ரொம்ப அலட்டிக்கிடாதீங்க..இப்ப உங்க பாட்டியைத்தான் இன்வைட் பண்ணிட்டு வர்றோம்..

வந்ததே கோவம் அவர்களுக்கு..(தேவதைக்கு எவண்டா ஆங்கிலம் சொல்லி கொடுத்தது?)

ஹவ் டேர் யு... ஐ வில் கம்ளைண்ட் டு மேடம்..என்று கூறி விறுவிறுவென்று பிரின்ஸி ரூமை நோக்கி படையெடுக்க


சொன்னேன்ல சரி சரி சீக்கிரம் வாங்க போயிறலாம் சேர்மன் நடையை அதிகப்படுத்தினான்.

வெளியே வந்து பைக்கை எடுத்து சீறிப்பறந்தோம்..


-----


அந்த நாள் வந்தது..மேடையில் எஸ்டிசி கல்லூரியின் பிரின்ஸி மெ... வில் ஆரம்பிக்கும் றி யில் முடியும் அவர்கள் மற்றும் பிரின்ஸ்பால் சில பேராசிரியர்கள் விஐபிக்கள் உட்கார்ந்திருக்க

எங்கள் மூவருக்கும் மேடையில் விஐபிக்களுக்குப்பின்னால் சீட் ஒதுக்கியிருந்தார்கள்.

சேர்மன் காதில் கிசுகிசுத்தான். டேய் பசங்க எல்லாம் திட்டுறாங்கடா ..விழாவுக்கு அவங்கள அழைத்ததற்கு..ஏன்னா அவங்களுக்கு மேடைப்பேச்சு சரியா வராது ..போரடிக்கும்..

சரி என்ன செய்ய கூப்பிட்டாச்சு..விடு - நான்


நான் வரவேற்புரையில் பேசுகிறேன்.


பெண்கள் கல்லூரியின் முதல்வர்
திருமதி ..........

இவர்கள்
பெண்கள் கல்லூரிக்கே
முதல்வர் என்றால்
மிகப்பெரிய தைரியசாலிதான்..

( கை தட்டல்..பிரின்ஸியோ முறைக்கிறார் )

இவர்களுக்கு
பேசவே தெரியாது

( கைதட்டல் பலமாய் ஒலிக்கிறது..விசில் சப்தம் வேறு எங்கள் கல்லூரி பிரின்ஸ்பால் பீர்முகம்மதுவோ ஒரு மாதிரியாய் பார்க்கிறார்..என்னடா இன்னொரு கல்லூரி முதல்வரை இப்படி அவமானப்படுத்தும்படி பேசுகிறான் என்று )

நான் தொடர்கிறேன்.

இவர்களுக்கு பேசவே
தெரியாது
ஆம்
உண்மையைத் தவிர வேறெதுவும்
பேசவே தெரியாது.

என்று கூற மறுபடியும் பலமான கைதட்டல் பிரின்ஸ்பாலுக்கு நிம்மதி..

பிரின்ஸி மட்டும் சிரித்துக்கொண்டே முறைக்கிறார்கள் முறைத்துக்கொண்டே சிரிக்கிறார்கள்.

பின் பிரின்ஸ்பாலை பற்றி கூறும்போது

காதலிப்பவர்களுக்கெல்லாம்
தலை மொட்டையாகட்டும் என
கடவுள் கட்டளையிட்டுவிட்டால்
நமது பிரின்ஸ்பால் தலைதான்
முதலில் மொட்டையாகும்.

( பிரின்ஸ்பால் பார்க்கிறார்..என்னடா இவன் நம்மள வம்புக்கு இழுக்கிறான் என்று )

ஆம்
குழந்தைகளை காதலிக்கும்
பெற்றோர்களை போல
மாணவர்களை காதலித்துக்கொண்டிருக்கிறார்

என்று கூறினேன். அவர் முறைக்கிறார் - வேறு வழியின்றி யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்று சிரிக்கிறார்.

பின் எல்லோரையும் வாழ்த்தி வரவேற்றுவிட்டு அமருகிறேன்.

பிரின்ஸி அவர்கள் பேச வருகிறார்கள்..எங்களுக்கோ பயம் காலேஜ்ல அந்தப் பொண்ணுங்கள கிண்டல் பண்ணினதை சொல்லி கொடுத்திருவாங்களோ என்று?


ஒரு கல்லூரியிலிருந்து இன்னொரு கல்லூரிக்கு மாணவர்கள் வந்தால்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதலில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் புத்தகத்தை படிப்பதற்கு முன்னாலட முதலில் ஒழுக்கத்தை படிக்கவேண்டும்

என்று பொதுவாக ஆரம்பிக்கிறார். சேர்மன் நவாஸ்கான் என்னைப்பார்த்து சிரித்து காதில் கிசுகிசுக்கிறான். ஞானி இது உனக்குத்தான்னு நினைக்கிறேன்.

நானோ என்ன எனக்கா..நமக்குன்னு சொல்லு - கூட்டணி சேர்த்தேன்.

எனக்கும் புரிந்துவிட்டது இது எங்களைப்பற்றிதான் என்று. மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் ஏதோ அறிவுரை சொல்லுகிறார்கள் என நினைத்து ஆர்வமாய் கவனிக்கிறார்கள்.

இன்னமும் அந்த நாட்களை நினைக்கும் போது குஷியாகத்தான் இருக்கிறது.

(நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு என் உறவுக்கார பெண்ணின் சீட் வாங்கும் விசயமாக அவர்களை சந்தித்தேன். ( இப்பவும் அவர்கள்தான் பிரின்ஸி ) அவர்களிடம் கேட்டேன்

என்ன மேடம் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா..?

ஒரு மாதிரியாய் உற்று பார்த்துவிட்டு..எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு

இல்ல மேடம் நான் சதக் காலேஜ்ல என்று சொல்ல வந்து பின் நினைத்துக்கொண்டேன் சீட் விசயமாக வந்திருக்கிறோம் பழைய கடுப்பில் சீட் தரவில்லை என்று கூறிவிடுவார்களோ எனப்பயந்து பாதியிலையே முழுங்கி நீங்க சதக் காலேஜ் பங்ஷனுக்கு வந்தீங்க நான் பார்த்திருக்கிறேன் என்று முடித்தேன்.நல்லவேளை அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை.. )




-ரசிகவ் ஞானியார் -

Wednesday, September 14, 2005

இதுவரை எவளும்...



இதுவரை
எவளுடைய
விழிகளையும் கண்டும் – நான்
விமர்சனம் எழுதியது கிடையாது
ஆனால்
உன் விழிக்காக...


இதுவரை
எவள்
பார்த்ததற்காகவும் நண்பர்களுக்கு
பார்ட்டி வைத்ததில்லை!
ஆனால்
நீ பார்த்ததற்காக..

இதுவரை
எவள்
கடந்து சென்றதை பார்த்தும் என்
கழுத்து சுளுக்கியதில்லை?
ஆனால்
நீ கடந்ததற்காய்...


இதுவரை
இந்த இதயம்
எவள்
அழகை கண்டும்
ஆக்ஸிடெண்ட் ஆனதில்லை
ஆனால்
உன் அழகை கண்டு...


இதுவரை
இந்த இதயம்
எவள்
சிரித்ததற்காகவும்
செத்துப்பிழைத்தது கிடையாது?
ஆனால்
நீ சிரித்தற்காக..


இதுவரை
இந்த இதயத்தை
எவள்
வசிப்பதற்கும்..
வாடகைக்கு விட்டதில்லை?
நீ வசிப்பதற்காக...

இதுவரை எவள்
முகத்தை கண்டும் நான்
மகாபாரதம் எழுதியதில்லை
ஆனால்
உன் முகத்தை கண்டு…


இதுவரை
எவள் சென்ற
பாதச்சுவட்டிலும் - நான்
படுத்து புலம்பியதில்லை!
ஆனால்
நீ சென்ற திசையிலே…

இதுவரை
எவளை கண்டும்
நான்
ஆகாரமில்லாமல்
அலைந்ததில்லை!
ஆனால்
உன்னைக்கண்டு!


இதுவரை
எவளுக்காகவும்
………………
………………
………………
இப்படி
வரிகள் தெரியாமல்
விழித்தது கிடையாது!
ஆனால்
உனக்காக..


இதுவரை
எந்த வீரப்பியும்
என்
இதயத்தை
கடத்தி சென்று
காதல் காட்டில் விட்டதில்லை?
ஆனால் நீ..

இதுவரை
எவளும் என்
இதயத்தை
ஆசையாய் எட்டிப்பார்த்துவிட்டு
ஆசிட் ஊற்றியதில்லை!

ஆனால்
நீ மட்டும்தானடி..




-ரசிகவ் ஞானியார் -

Tuesday, September 13, 2005

நீ எனக்கு வேண்டாமடி!

சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

நான் செலவுக்கு
பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

அழிக்கப்பிறந்தவன்



இவன் கைபட்டவுடன்
கதறுகிறது குழந்தை..
ஒருவேளை
இவன்
அழிக்கப்பிறந்தவன் என்று
குழந்தைக்கும்தெரிந்துவிட்டதோ..?
---
அடப்பாவி..
இந்தக் குழந்தையின்
உடலில் ஓடுவது
பெட்ரோல் இல்லப்பா...
இரத்தம்தான்!
ப்ளீஸ் விட்டுவிடேன்..
--
- ரசிகவ் ஞானியார் -

Monday, September 12, 2005

தயவுசெய்து தந்துவிடு!



என் வாழ்வின்
எல்லா நிமிடங்களிலும்...
அரவணைக்க
இந்த கைகளும்...
அடமானம் வைக்க
இந்த நகைகளும் ...
தயவுசெய்து தந்துவிடு!

- ரசிகவ் ஞானியார்

Sunday, September 11, 2005

நீ செத்தே பிறந்திருக்கலாமடா..




அவன் செத்துப்போயிட்டான்பா உனக்குத் தெரியாதா..? ஒரு ஆக்ஸிடெண்ட்ல உடம்பு நசுங்கி செத்துப்போயிட்டான்பா

- அவர் சொல்லியபோது நொறுங்கிப்போய்விட்டேன் எனக்குள்.
-
எனது நண்பனின் தந்தை அவருக்கு வயது 55 இருக்கும். இங்கே துபாயில்தான் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்.. ஊரில் இருக்கும் அவர் மகன் பற்றி தற்செயலாய் விசாரிக்கும் போது இப்படி கூறினார்.


என்னடா இவர் இப்படி சொல்றார்.. உடன் வந்திருந்த நண்பர்களைப்பார்த்தேன்.அவர்களும் புரியாமல் பார்த்தனர்.


ஒரு தந்தை உயிரோடு இருக்கும் தன் மகனைப்பற்றி இவ்வளவு காட்டமாக சொல்கிறாரென்றால் அந்த தந்தைக்கு அவன் எந்த அளவிற்கு பாதிப்பை கொடுத்திருக்கக்கூடும்?

என்ன ஆச்சு? ஏன் இப்படி சொல்றீங்க.. - நான் புரியாமல் கேட்டேன்

பின்ன என்னப்பா..? இங்க நான் நாயா உழைச்சி கண்டவனிடம் எல்லாம் திட்டு வாங்கி சம்பாதிச்ச பணத்துல ஒரு சுமோ வாங்கி கொடுத்து அத வச்சி சம்பாதிக்கச் சொன்னால்.....
அந்த சுமோ எடுத்து உல்லாசமா ஊர்சுத்துறது..கண்டவன் கைளில் கொடுத்து அத பாதிக்கு பாதி விலைல வித்துட்டு..தண்ணி - கெட்ட சகவாசம்னு மோசமா போயிட்டான்பா ..? இப்;ப பெங்களுர்ல எங்கேயோ சம்பாதிக்கிறான்..

இதுவரைக்கும் எந்த தகவலும் வரல..பெங்களுர்ல இருக்கிற அவங்க அக்கா வீட்டுக்கு கூட போகல இதுவரைக்கும்...

அந்த நாய் உருப்படவே மாட்டான்பா..நாசமா போகப்போறான் பாரு..எனக்கு அவன் எப்பவோ செத்துபோயிட்டான்..நான் வாங்கி கொடுத்த சுமோவுல அடிபட்டே செத்துட்டான்.

- வயிறு எரிந்து சொல்கிறார்

ஒரு பைத்தியம் மாதிரி அவர் புலம்புவதை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.

இந்த சின்னப்பையன்களுக்கு முன்னால் அழுதுவிடுவதா என்ற நாகரீகம் கருதி கண்களில் வரத்துடித்த கண்ணீரை பட்டென்று துடைத்து கண்களை கசக்குவதுபோல நடித்த அவரின் நிலை கண்டு வருத்தப்படத்தான் முடிந்தது.

நாங்களும் அவர்மீது பரிதாபப்படுவதாய் காட்டிக்கொண்டால் அவர் இன்னமும் உடைந்துவிடக்கூடுமோ இந்த சின்னப்பையன்களுக்கு முன்னால் அவரின் என நினைத்து ஒரு வெற்று புன்னகையை உதிர்த்து

சரிப்பா என்ன செய்ய..அவன் நேரம்..எப்படியும் அவன் திருந்தி வந்துறுவான்;..

ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்;.


பாவம் அவர் இந்த ஓய்வெடுக்கக்கூடிய வயதிலும் இன்னமும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்.வாழ்க்கையின் முக்கால் பகுதியை அயல்தேசத்திலேயே கழித்துவிட்டார்..

உடலுக்கு நோன்பு..
உண்ணாமல் இருப்பது!

இதயத்திற்கு நோன்பு..
சொந்தங்களை - உறவுகளை விட்டு பிரிந்திருப்பது!

ஆம் அவர்
நோன்பு இருந்திருக்கிறார்..
அவர்
பட்டினி போட்டது
வயிற்றை அல்ல..
இதயத்தை!


அவர் எவ்வளவு காலம்தான் சம்பாதிப்பது..? மனித உடம்புக்கு ஒரு குறிப்பிட்ட நாள்வரைதான் இறைவன் கியாரண்டி கொடுத்திருக்கிறான். மனித உடல் இயந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் உழைக்க வைத்துவிட்டு - குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு அந்த இயந்திரத்தின் ஓட்டத்திற்கு ஓய்வு கொடுக்கின்றான். அந்த ஓய்விற்கு மகனை நம்பிய காலம் போய் இப்பொழுது இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப ஆரம்பித்துவிடார்கள்.

அந்த தந்தையின் மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா..? எனக்கு என் நண்பரின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.

நான் இறந்தபிறகு
கொள்ளியை
தலையில் வைக்காதே மகனே
வயிற்றில் வை...
- சேஷாத்திரி

முதியோர் விடுதிகள் அதிகமாய் இருப்பதற்கு காரணம் இது போன்ற மகன்களால்தான்.

ஒவ்வொரு தந்தையும் மகன்களாக இருந்தவர்கள்தான்...
ஒவ்வொரு மகன்களும் தந்தையாக போகிறவர்கள்தான்...

அதை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே..?

எல்லா நோய்க்கும் மருந்து கண்டுபிடித்துவிடலாம்..ஆனால் மருந்து கண்டுபிடிக்கவே முடியாத ஒரே நோய் முதுமைதான்.

மனிதன் கண்டுபிடித்த காகிதப்பணம் மனிதனுக்கே எதிரியாகி விட்டது.

அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த பணத்தை அந்த ஊதாரி மகன் அழித்துவிட்டான்.
இப்போது பணத் தட்டுப்பாடு வந்தவுடன் தான் மட்டும் தப்பித்து விட்டான் குடும்பத்தின் சுமைகளைத்தாங்காமல்.


தந்தை உரிய நேரம்வரை சம்பாதிக்கவேண்டும் ஒரு குறிப்பிட்ட வயது என்று வரும்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தான் சம்பாதித்து தனக்கு பாதுகாவலாய் இருந்த பெற்றோர்களுக்கு அவன் பாதுகாவலாய் இருக்க வேண்டாமா அந்த மகன்..?

தாயை கருவறையிலும்
தந்தையை தெருவறையிலும்
மிதித்த வித்தியாசமான மகன் இவன்

இப்படி சுயநலமாய் தப்பித்து ஓடிய மகனை செத்துவிட்டான் என்று கூறிய அந்த தந்தையின் மீது தவறேயில்லை. அந்த சுயநலக்கார மகன்..

உழைத்து வளைந்த
தந்தையின்
முதுகெலும்பில் அல்லவா
ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறான்!

படுபாவி. அப்படிப்பட்ட மகன்களுக்கெல்லாம் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் என்ன..?

என்னிடம்
பணம் வாங்குவதற்கான
உன்
ஒவ்வொரு கைநீட்டலும்...
என்
கண்ணீரை கானலாக்க என
நினைத்தேன்!
ஆனால்
கண்ணீரின் காரணமாகிவிட்டாயடா..?

நான்
தடுமாறி விழும்போது - நீ
தாங்குவாய் என நினைத்தேன்!
ஆனால்
தள்ளிவிட்டுவிட்டல்லவா நீ
தூங்குகிறாய்?

என்னைச்
சாகடிக்கப் பிறந்தவனே!
நீ
செத்தே பிறந்திருக்கலாமடா..?


இதயம் சோகமுடன்

ரசிகவ் ஞானியார்

Saturday, September 10, 2005

பசி




தூரத்தில்
குப்பைப் பொறுக்கும் சிறுமி!

ஏதாவது கவிதை வருமா ..?
யோசித்து பார்த்தேன்..

கவிதை
இலக்கியப்பசியை தீர்க்கலாம்..
இவள் பசியை தீர்க்குமா?

கவிதை எழுத வைத்திருந்த..
காகிதங்களை கசக்கி எறிந்தேன்!
நம்பிக்கையிருக்கிறது..
அவள் வயிற்று பசி தீர்க்கும்.!


-ரசிகவ் ஞானியார்

விக் வைக்கப்பட்ட இதயம்




நேற்று 09-09-2005 மதியம் நான் எனது ப்ளாட்டிலிருந்து இறங்கி வந்துகொண்டிருக்கிறேன்.. கீழ் ப்ளாட்டிலிருக்கும் நண்பர்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்..

யாருக்கும் தெரியாதுடா...

- அந்த 30 வயது மதிக்கத்தக்க வழுக்கை தலை இளைஞன் நண்பனிடம் கூறிக்கொண்டே முதல் மாடியிலிருந்து இறங்குகிறான்.

அதுவும் என் காதுகளுக்கா கேட்க வேண்டும்..? உற்றுக்கேட்டேன்..

(இப்பொழுதெல்லாம் யார் பேசினாலும் உற்று கவனிக்க ஆரம்பித்து விடுகிறேன்..தயவுசெய்து என் பக்கம் வரும்போது பேச்ச குறைங்கப்பா.. பேச்ச குறைங்கப்பா..இல்லையென்றால் என் பேனா பிரசவமடைந்துவிடுகிறது.)

அந்த இளைஞன் தொடர்கிறான் பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் தனது நண்பனிடம்..

இல்லைடா பொண்ணுவீட்டுல போட்டோ கேட்டாங்க நான் தலையில விக் வச்ச போட்டோவை கொடுத்தேன்...அவங்களுக்கு அது விக்குன்னே தெரியல..

( நீ வைத்த
விக்கில்..
வீக்காகிப்போனதடா
அந்தப் பொண்ணின் இதயம்! )


டேய் என்னடா சொல்ற..அந்தப்பொண்ணுக்காவது தெரியுமாடா..
- அந்த நண்பன் ஆர்வமாய் கேட்கிறான்

( கல்யாணத்துக்கு முந்தைய நாளே தெரிஞ்சா ஓடியிருப்பாளே?..)

கேளுடா முதல்ல..நான் பொண்ணுகிட்ட கல்யாணம் முடிஞ்ச முதல்நாள் வழுக்கைதலையோட உள்ள போட்டோவை காட்டுனேன்டா..அவ உடனே யாருங்க இதுன்னு என்கிட்டேயே கேட்டா

(நல்லவேளை இந்த அங்கிள் யாருன்னு கேட்காம விட்டாளே..)

அந்த நண்பன் சிரிக்கிறான்....அப்புறம்..சொன்னியா இல்லையாடா..?

எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை..அடப்பாவி ஏமாத்தியாடா கல்யாணம் கட்டியிருக்க? மனசுக்குள் புலம்பினேன்..

( மனசுக்குள்தான்பா புலம்ப முடியும்..அதை அவன்கிட்ட கேட்டா அடிதான் விழும் )

அப்புறம் என்ன கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா இருந்தா..அப்புறம் சமாதானமாயிட்டா..ஆனா அவங்க வீட்டுல யாருக்கும் தெரியாதுடா..என்று கூறிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறார்..

( நீ
விக் வைத்தது
உன்
மண்டையில் அல்லடா
மணப்பெண்ணின் நம்பிக்கையில்.. )

இதுக்குமேலும் அவர்களை ஒட்டி செல்வது பின்தொடர்;வதும் நாகரீகமில்லை..-என்று நினைத்து அவசர அவசரமாய் அவர்களை முந்திக்கொண்டு சென்றுவிட்டேன்.

( முந்திச் சென்றாலும் என் நினைவுகள் பின்னோகிச் சென்று அவன் வழுக்கைத் தலையில் அமர்ந்து விவாதிக்கத் தொடங்கிற்று )

கல்யாணம்ங்கிறது எவ்வளவு பெரிய விசயம். கடைசிவரை ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு வாழவேண்டிய வாழ்க்கையல்லவா? ஆரம்பமே வழுக்கலா..? இப்படி ஈசியா ஏமாத்துறாங்களப்பா..? ச்சே அந்தப்பொண்ணோட மனசுல எந்த அளவிற்கு கற்பனை இருக்கும்..

அந்த இளைஞன் கல்யாணத்திற்கு முந்தியே சொல்லியிருக்கவேண்டும். கல்யாணத்திற்கு பிறகு சொன்னால் அந்த பெண்ணால் ஏதும் செய்யமுடியாது - அவள் நம்மை விட்டு போகமுடியாது என்ற திமிரில் இருந்துவிட்டானோ..?

இல்லை அந்த வழுக்கைதலையால் அவமானப்பட்டு சொல்லமுடியாமல் தன்னம்பிக்கை இழந்து துடித்துப்போய்; கல்யாணம் முடிந்தபிறகு மனசாட்சிக்குப்பயந்து சொல்லியிருக்கிறான்.. அவன் மீதும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய..?

ஆனால் அந்தப்பெண்ணின் நிலையை நினைத்துப்பாருங்கள்..தன் கணவனாக வரப்போகிறவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கற்பனையில் இருந்தவளின் மனம் எந்த அளவிற்கு துடித்துப்போயிருக்கும்..?

சரி வேறு என்ன செய்ய..? கல்யாணம் முடிந்துவிட்டது நம் தலைவிதி அவ்வளவுதான் என நினைத்து சமாதானப்பட்டிருப்பாளோ..?

வயது ஆக ஆக முடி குறைந்து கொண்டே வருவது இயற்கைதானே. அது ஒவ்வொருவரின் பாரம்பரிய முடிகளின் தன்மையைப்பொறுத்தது சிலருக்கு இளமையிலையே வந்துவிடுகிறது. இளவயதில் தலை வழுக்கை அடையும்பொழுதுதான் சமூகத்தின் - நண்பர்களின் ஏளனப் பேச்சுக்களின் காரம் தாங்க முடியாமல் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறான்..

( ஒவ்வொருநாள் குளியலின் போதும் உதிர்ந்து துண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் முடிகளை நினைத்தால் பயமாக இருக்குப்பா..முடி எல்லாம் உதிர்ந்து போறதுக்குள்ளே கல்யாணத்தை முடிச்சிறனும்)

நம்மை போன்ற இளைஞர்கள் விஜய் ஸ்டைல் , அஜீத் ஸ்டைல் என்று ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டு வரும்போது நமக்கு மட்டும் முடி இப்படி மொட்டையாகிப்போய்விட்டதே என்று வருத்தப்பட ஆரம்பிக்கிறான்..

( என்னுடைய ஹேர்ஸ்டைல் ரஜினி மாதிரி , சத்யராஜ் மாதிரி இருக்குன்னு பாஸிடிவ்வா நினைச்சு அவன் சமாதானப்பட்டுக்கொள்ள வேண்டியதுதானே? )
( கிளம்பிட்டாங்கப்பா ரஜினி ரசிகர்கள்)

ஆனால் அதற்காக இப்படி ஏமாற்றிதான் திருமணம் செய்யவேண்டுமா..? உண்மையை சொல்லி திருமணம் முடித்திருக்கலாமே..? ஏனென்றால் அந்த கணவன் - மனைவிக்கிடையே சச்சரவுகள் வரக்கூடிய நேரத்தில் அந்த மனைவி நீங்க என்னய ஏமாத்திதானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க..என்று சொல்லிகாட்ட ஆரம்பித்தால் அவமானம் யாருக்கு..?

அதுசரி அந்த பெண்வீட்டாருக்கு தெரியாமலா போகப்போகிறது?..ஒருநாள் தெரிந்துதானே ஆகவேண்டும். அப்போது அவன் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பதாம்..?

( கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னே முடி இருந்துச்சுங்க..உங்க பொண்ண கல்யாணம் பண்ணியதற்கு பிறகுதான் இப்படி ஆயிட்டேன்னு கதை விடவேண்டியதுதான்)

தன்னம்பிக்கை இழந்துபோன அந்த இளைஞனை நினைத்து பரிதாப்படுவதா..? ஏமாந்து போன வந்த அந்தப் பெண்ணை நினைத்து வருத்தப்படுவதா..? எனக்குத்தெரியவில்லை..

எப்படியோ அந்த இளைஞன் அந்தப்பெண்ணிடம் மட்டுமாவது உண்மையைச்சொன்னானே..?

( பின்னே கண்டிப்பா சொல்லியாவணுமே..சண்டையில் அவன் மனைவி முடிவு சொல்லுங்க முடிவு சொல்லுங்க முடிய பிடிச்சி ஆட்டும்போது முடி மட்டும் தனியா வந்துச்சுன்னா கஷ்டம்ல..அவமானமா போயிரும்ல அவனுக்கு )

முடி பற்றிய முடிவை அடி வாங்கும்முன் சொல்லிவிட்டான் அந்த இளைஞன். அதற்காகவாவது பாராட்டலாம் அவனை.

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஐஸ்வர்யா ராயிடம் ஒரு பேட்டியின் போது கேட்டார்கள்.

தாங்கள் அழகாய் இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

அழகு என்பது என்னுடைய திறமை அல்ல..அது என் இறைவன் படைத்த முக அமைப்பு. அதற்காக நான் பெருமைப்படமுடியாது..யாரேனும் என்னிடம் வந்து நீங்கள் அழகா இருக்கிறீர்கள் என்று கூறினால் என்னால் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..தேங்க்ஸ் என்று கூறி நகர்ந்து விடுகிறேன்...என் திறமையைக் கண்டு பாராட்டினால் சந்தோசப்படுவேன்..தயவுசெய்து அழகை கண்டு பாராட்டாதீர்கள்.


(நானும் அப்படித்தான் ஜொள்ளுவேன்..சாரி சொல்லுவேன்..ஹி ஹி ஹி )

பாருங்கள் எவ்வளவு அழகான பதில் இது. அதுபோலத்தான் அந்த இளைஞனும் அவனுக்கு வழுக்கைதலையாக இருப்பது அவனின் குற்றமல்ல..அவனுடைய குறையைச் சொல்லி ஏளனம் செய்வதை விட அவனுடைய திறமையைச் சொல்லி பாரட்டலாமே?

மனிதத்தை இழந்த
மாப்பிள்ளைகளுக்கு மத்தியில்
முடியைத்தானே இழந்தான் அவன்!

- - - - - - - - - - - - - - - - - -



இந்த நேரத்தில் எனக்கு ஞாபகத்தில் வருகின்ற சம்பவம் ஒன்று.

1995 ம் வருடம் என நினைக்கிறேன். நண்பர்களோடு திருநெல்வேலி டவுணில் படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். குசும்புகளும் குறும்புகளுமாய் திரிந்து கொண்டிருந்த பருவம் அது. எதிர் இருக்கையில் ஒரு வழுக்கை தலை பெரியவர் அமர்ந்திருக்கிறார் நாங்கள் சுமார் 6 அல்லது 7 பேர். சும்மாயிருக்குமா குசும்பு மனசு

டேய் என்னடா கண் ரொம்ப கூசுது - நான்

இல்லடா எவனோ கண்ணாடியை கொண்டு வர்றான்னு நினைக்கிறேன் - மற்றொருவன்

பின் லேசாக அவர் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்து கொண்டிருந்தோம்.

அவர் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு திரும்பிவிட்டார்

என்னடா சொட்டைக்கு சொரணையே இல்ல

ஹா ஹா ஹா
அவர் இறங்குவதற்குண்டான நிறுத்தம் வந்துவிட அவர் இறங்கும் சமயத்தில்

தம்பி நானும் உங்கள மாதிரிதான் முடியெல்லாம் அதிகமா எப்போதும்
சீப்பும் கையுமா அலைவேன்...ம் ம்
இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க

என முணுமுணுத்துக்கொண்டே இறங்கிவிட

எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது

இந்த தருணத்தில் என்னுடைய கல்லூரி ஆசிரியர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல
- ஆசிரியர் ரபீக்
இயற்பியல் துறை

நானோ அல்லது நீங்களோ தனியாக சென்றுபாருங்கள் மிகவும் அமைதியாய் சென்று வருவோம்.. அந்த நேரத்தில் கிண்டல் கேலி எதுவுமே இருக்காது

அதுவே கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் இரத்தம் முறுக்கேறி நண்பர்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோயிசத்தை காட்டுவதற்காக குசும்பு - கிண்டல்கள் செய்ய ஆரம்பிப்போம்.

ஆம் உண்மைதான்

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல

ஒரு
கள் சேரந்தவுடன்
போதை வந்துவிடுகிறதோ?


இப்பொழுது குளித்துவிட்டு தலைதுவட்டுகின்ற ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கையில் உதிர்ந்து வருகின்ற முடிகளை பார்க்கும்பொழுதெல்லாம் அந்தப் பெரியவரின் குரல் வந்து ஒலிக்கிறது.

ம் ம்

இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க

இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க



-ரசிகவ் ஞானியார்-

Thursday, September 08, 2005

பெட்ரோல்...பெற்றோர் திருடா..?



ஏவுகணைச்சப்தத்தில்
தாயின் கருப்பையிலிருந்து
வெடித்து விழுந்தேன்
விழித்துப்பார்க்கையில்;...
நான்விளையாடி மகிழ..
என்னைச்சுற்றி...
ஏவுகணைகள்!

தாலாட்டுக்குப்பதிலாக ...
ஒப்பாரிச்சப்தம்!

பாக்தாத் வீதியில் -உணவு
பொட்டலம் வாங்கச்சென்றதால்
பாட்டிமட்டும் உயிரோடு!

பெட்ரோலுக்காக வந்து- என்
தாய்ப்பாலை ஏன் ...
தட்டிப்பறித்தீர்கள்?

பெட்ரோலையும் என்...
பெற்றோரையும் திருடியது போதும்.!

இதோ
வீசுகிறோம்.....
வெள்ளைக்கொடி!
போரையும் எங்கள்...
பசியையும் நிறுத்துங்களேன்.........?


-ரசிகவ் ஞானியார்

Wednesday, September 07, 2005

ஒரு சிப்பாய் கலகம்




1998ம் ஆண்டு செப்டம்பர்மாதம்...அன்று காலை காதல் வளர்க்கின்ற தொலைபேசி வழியாக கலகம் வளர்ப்பதற்காக ஒலிக்கிறது நசீரிடமிருந்து.

டேய் மாப்ள! நீ செகரெட்டரி ஆகி ஒரு வாரம் ஆகுது இன்னும் ஒரு ஸ்ட்ரைக் கூட அடிக்கல பசங்க எல்லாம் ஒரு மாதிரியா பேசறாங்க டா - ஏதோ உலக பொருளாதாரம் சீரழிந்துவிட்டதை போல சீரியஸாய் பேசினான்

எனக்கும் தெரியுண்டா ஆனா ரீசன் எதுவும் கிடைக்கலையே- ஸ்ட்ரைக்குக்கு எதுக்குப்பா ரீசன்..?

அடிப்படை கல்லூரி மாணவர்களின் அறிவில்லாமல் பேசினேன். கல்லூரி மாணவர்கள் எதுக்குத்தான் ஸ்ட்ரைக் அடிக்கணும்னு ஒரு காரணமேயில்லை.( டேய் டேய் அவ வீட்டுல நாளைக்கு ஃபங்சன்..அவ காலேஜ் வரமாட்டா அதனால ஸ்டிரைக் அடிடா என்று கெஞ்சிய
மாணவர்கள் கூட உண்டு )

இருக்குடா ஒரு ரீசன்- உற்சாகமாய் கூறினான் நசீர்

( அமெரிக்காவை கண்டுபிடித்து கத்திய கொலம்பஸ்ஸின் உற்சாகம் போல)

என்னடா சொல்லித்தொலை
- மிளகாயை கடித்த குழந்தையைப்போல நான் எரிச்சலோடு கேட்டேன்

நேத்து ஒரு அறிவிப்பு வந்துச்சு தெரியுமால..அதாண்டா..இனிம எக்ஸாம் பீஸை கல்லூரியில் கட்டாமல் பேங்கில் கட்டவேண்டும் என்று
- அட காரணத்தை பாருங்களேன் அரியர்ஸ தூக்குடா முதல்ல

அது நல்லதுதானேடா.காலேஜ் ஆபிஸ்ல எல்லோரும் மொத்தமா அடைஞ்சி நிற்கிறத விட அவங்கங்க வீட்டு பக்கம் இருக்கிற பேங்கில கட்டுனா ஈஸிதானடா
- நான் பொறுப்பில்லாமல் பேசினேன்.

மடத்தனமா பேசாதடா..பசங்க பேங்க்ல போய் கட்டலாம்..எல்லாப் பொண்ணுங்களும் பேங்க்ல போய் நிற்க முடியுமா யோசிச்சு பாருடா கொஞ்சம்..
- ஆமா பெண்ணுரிமையை காக்க வந்த ஜீன்ஸ் பாரதி இவன்

யோசிச்சுப்பார்த்தேன்... @@@@ ( ப்ளாஷ்பேக்குபா..கொசுவர்த்தி கிடைக்கல அதான்)

"இந்த நாய் எதுக்கு அடிபோடுதுன்னு தெரியும்...எல்லா பொண்ணுங்களும் பேங்க்ல போய் கட்ட ஆரம்பிச்சுட்டாங்கன்னா..இங்க காலேஜ்ல பசங்களும் பொண்ணுங்களும் கியுல நின்னு
கட்டும்போது ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணலாம்ல அதுக்குதான் ...இல்லைனா அவன் க்ளாஸ்ல நடக்கிற பரிட்சைக்கு படிக்காம வந்திறுக்கணும்"

சரிடா ஸ்டிரைக் அடிக்கலாம்டா
- நானும் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தேன்

எல்லையில் எப்படி போர் முறையை கையாளுவது என்ற திட்டமிடும் இராணுவீரர்களை போல திட்டங்கள் பேசியாயிற்று.


----------

அதிகாலை 7.30 மணிக்கே கல்லூரி வந்தாயிற்று நண்பர்களுடன்.
( ஸ்ட்ரைக் நேரத்துலதான் காந்தியோட நேரம் தவறாமையை பசங்க கடைப்பிடிப்பாங்க )

வாட்ச்மேனிடம் சண்டையிட்டு கல்லூரி கேட்டை பூட்டியாயிற்று. கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் இந்த விசயம் தீயை போல பரவ ஆரம்பிக்க ......

ஹாஸ்டல் மாணவர்களில் சிலர் தான் காதலிக்கும் பெண் அரியர்ஸ் வைத்துவிட்டாள் என்ற செய்தியை கேட்டு பதறும் மாணவர்களைப்போல பதறி அடித்துக்கொண்டு போலியான பதட்டத்தோடு ஓடிவந்துகொண்டிருந்தார்கள்..

ஏல இன்னிக்கு ஸ்ட்ரைக்கால.. - கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வேட்டியை உயர்த்தி கட்டிக்கொண்டு போகும் அந்த சீனியர் எம் காம் மாணவன் அதட்டி கேட்கிறான்

ஆமல சீக்கிரம் எல்லோரையும் கூப்புடுல..ஸ்டென்த் இருந்தாத்தான் சமாளிக்க முடியும் -
நான்

( காலேஜ் செகரட்டரியா இருக்கிறதால சீனியர் ஸ்டூடண்ட மரியாத இல்லாம கூப்புடறியோ இருல ஸ்டிரைக் நேரத்துல உன் தலைக்கு கல் அனுப்புறேன் - ஞானியாரை முறைத்துக்கொண்டே சென்றான் சீனியர்)

அதோ மூச்சிறைக்க ஓடி வருகிறான் கல்லூரி சேர்மன் நவாஸ்கான்..

டேய் டேய் என்னடா மாப்ள ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லல..இன்னிக்கு ஸ்டிரைக்காடா - கல்லூரி சேர்மன் பிரின்ஸ்பாலின் சொந்தக்காரனாக இருப்பதால் எல்லோரும் அதற்கு அடுத்த பதவியில் செகரட்டரியாக இருக்கும் என்னைதான் சேர்மனாக மதித்தார்கள்.

இல்ல நானே இன்னிக்கு காலேலதான் முடிவு பண்ணினேன்
- ஆமா பெரிய அந்திய- அமெரிக்க பிஸினஸ் மீட்டிங்

சரிடா எதுக்குடா ஸ்ட்ரைக்? என்ன பிரச்சனை ..? - சேர்மன் பொறுப்பின்றி கேட்டான்


திடீரென்று மறந்துவிட்டது எனக்கு..திரும்பி பின்னால் நின்ற மஸ்தானிடம் கேட்டேன்...

இல்லைடா பணத்தை பேங்க்ல கட்ட சொன்னாங்கல்ல அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுதான் ஸ்ட்ரைக்
- என்று கூற

அவனும் என்னை சுற்றி ஆதரவாய் கூட ஆரம்பித்த மாணவர்களின் கூட்டத்தை கவனித்துவிட்டு வேறுவழியின்றி சரிடா ஸ்டிரக் அடிச்சிருவோம் என தலையாட்டினான்.

அவன் மறுத்துவிட்டால் அதை எதிர்ப்பதற்கே ஒரு கும்பல் உள்ளது.

கல்லூரிக்கு ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்
புத்தகத்தை இடுப்பில் சொருகி வைத்துக்கொண்டும்..
டிபன்பாக்ஸை பத்திரமாய் கீழே விழுந்திடாதபடி கையில் வைத்துக்கொண்டும் சில மாணவர்கள் -
காதலை இதயத்தில் மட்டும் வைத்துக்கொண்டு சில மாணவிகள் கொஞ்சம் கொஞ்சமாய் வரத்தொடங்க,


டேய் ஞானி மைக்ரோபயாலஜி - கம்ப்யுட்டர் சயின்ஸ்ல உள்ளவங்க மட்டும் எப்போதும் ஸ்ட்ரைக் நடந்தாலும் பிராக்டிகல் செல்ஃப் பைனான்ஸ் அப்படின்னு காரணம் சொல்லி உள்ள போயிடுறாங்கடா..இன்னிக்கு யாரையும் விடக்கூடாது
-அந்த ரவுடி பசூல் பொறுப்பாய் கூறினான்

அந்த பசூல் காலேஜுக்கு வர்றதை விடவும் பக்கத்துல இருக்குற கோர்ட் வாய்தாவுக்குதான் அதிகமா போயிருக்கான். அவன் காலேஜுக்கு வர்றதே அதிகம். இங்க பாருங்களேன் ஸ்ட்ரைக்குன்னு கேள்விப்பட்டவுடன் எப்படி வந்துட்டான்.

சரிடா யாரையும் விடவேண்டாம் நான் பார்த்துக்கறேன்..

அதோ இயற்பியல் துறை பேராசிரியர் ரபீக் தனது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இன்னொரு மாணவனை ஏற்றிக்கொண்டு தடுமாறி வருகிறார் வைக்கோல் ஏற்றி வரும் லாரியைப்போல

பக்கத்தில் வந்ததும் நிலை உணர்ந்து அவரே வண்டியை நிறுத்தினார்.

என்னப்பா ஞானி ஸ்ட்ரைக்கா..? எதுக்காக..? - புன்னகைத்தபடியே கேட்டார்

காரணத்தைக் கூறினேன். மறுபடியும் புன்னகைத்தார்.

சரி நான் உள்ள போகலாமா - பேராசிரியர் ரபீக்

நீங்க போங்க சார் ஆனா பின்னால இருக்கிறவன மட்டும் இறக்கி விட்டுறுங்க..இல்லைனா பசங்க ஒரு மாதிரியா பார்ப்பாங்க

ஆமா ஆமா அது நியாயம்தான் - அந்த பையனை இறக்கி விட்டுவிட்டு அவர் பறந்து விட்டார்

மஸ்தான் அனிச்சை செயலாய் தனது பேண்ட் பாக்கெட்டில் உள்ள சீப்பை எடுத்து தலையை சீவ ஆரம்பித்துவிட்டான். அப்படியென்றால் மாணவிகள் வரத்தொடங்குகிறார்கள் என்று அர்த்தம்.

அட பாருங்களேன் ஜோசியம் பலித்தது..மாணவிகளும் கொஞ்சம் கொஞ்சமாய் தலைகாட்டத் துவங்கினர்.

அவனுக்குண்டான ஆள் வரும்போதும் அவனவன் என்னிடம் வந்து ஞானி இன்னிக்கு விடக்கூடாது ..ஸ்ட்ரைக்கை சக்ஸஸ் பண்ணிறனும்.. என்று என்னிடம் ஏதோ பரபரப்பாய் பேசுவது போல நடிக்க

அதைக்கண்ட மாணவிகள்

அட நம்ம ஆள்தான் பரபரப்பா இருக்கார் போல என்று நினைத்துக்கொள்வதற்காக..

மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோதனத்தை காட்ட ஆரம்பித்தனர்.


டேய் டேய் ஞானி அந்த மைக்ரோபயாலஜி பொண்ண பார் உள்ள போக ட்ரை பண்றா..
- அவள் உயிரே மனிஷா கொய்ராலா போல எல்லையை தாண்ட முயற்சித்தாள்

கல்லூரி கேட்டை ஒட்டி உள்ள சிறிய கேட் வழியாக அந்த பெண் பயந்தபடியே நுழைய ஆரம்பித்தாள்.

ஓ ஓ ஓ... மாணவர்கள் கத்தினர்


போறாள பொன்னுத்தாயி..
அரியர்ஸ் நாலு வச்சுக்கிட்டு!
யாராவது அவள போய்
கூட்டிட்டு வாங்க..


-என பெட்டைக்குளம் காஜா பாட ஆரம்பித்தான் கிழக்குச்சீமையிலே பட பாடலை கிண்டலடித்தபடியே


நான் அந்த மாணவியிடம் சென்று

என்ன நீ மட்டும் உள்ள போற மத்தவங்க நிக்குறது உனக்கு தெரியலயா - கஷ்டப்பட்டு கோபத்தை வரவழைத்துக் கேட்டேன்

டேய் டேய் வழியுறான் பாரு - மாணவர்களிடமிருந்து கமெண்ட்ஸ்

இல்ல..வந்து..க்ளாஸ்க்கு போகமாட்டேன்..அந்த கேர்ள்ஸ் ரூமுக்குத்தான் போறேன்..
இங்க வெளியில நிற்க ஒரு மாதிரியா இருக்கு


பெண்ணென்றால் பேயும் இறங்குமாம். ஆனால் நான் மனுசன்தானே ( யாருசொன்னான்னு நீங்க கேட்குறது காதுல விழுது பா )


சரி சரி க்ளாஸ்க்கு போக கூடாது ..நாங்க ஸ்ட்ரைக் அடிக்கிறதே உங்களுக்காகதான் - ஹீரோத்தனமாய் பேசிவிட்டு மறுபடியும் மாணவர்களைநோக்கி வந்தேன்

என்னடா அவள மட்டும் விட்டுட்ட - பசூல்

இல்லடா அவ க்ளாஸ்க்கு போகமாட்டா அங்க கேர்ள்ஸ் ரூமுக்குதான் போறாளாம்..

ஆமா இப்படியே விட்டா எல்லா பொண்ணுங்களும் ரெஸ்ட் ரூமுக்கு போயிருவாங்க..

அது சரிதாண்டா எல்லா பொண்ணுங்களும் இங்க நின்னாங்கன்னா எவனாவது கிண்டல் பண்ணுவான்..அது வேற பிரச்சனை எதுக்கு..பொண்ணுங்கள அந்த ரெஸ்ட் ரூமுலயே இருக்க வைப்போம்..
- அட நம்புங்க நான்தாங்க இப்படி சொன்னேன்.

நீயெல்லாம் ஏண்டா காலேஜ் வர்ற -
விட்டால் கொலைசெய்திடுவான் போல அந்த அளவிற்கு என்னை முறைத்தான் பசூல்.

ஸ்ட்ரைக் இன்னமும் சூடு பிடிக்கவில்லை..ஒவ்வொரு மாணவர்களாய் வந்து
கூட்டம் ஏறிக்கொண்டேயிருந்;தது.

ஞானி ஞானி இங்க பாரேன் அபுல்ஹசனை - பெட்டைக்குளம் காஜா கிசுகிசுத்தான்

காதலர்தினம் குணால் மாதிரி மரத்து ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் அந்த பிஸிக்ஸ் அபுல்ஹசன்.

அவனுக்கென்னடா..? - நான்

நேத்து ஹாஸ்டல்ல அவங்க க்ளாஸ் பொண்ணு வீணாவை நினைச்சு வீனா வீனான்னு..புலம்பிகிட்டு இருந்தாண்டா ..

(வீணாய் போகிறவர்கள் எல்லாம் இப்படித்தான் புலம்புவார்களோ..?)

டேய் வீனா!.... வீனா!... என்று கத்த - அவன் திடுக்கிட்டு திரும்பினான் என்னடா நம்மாளு பேர சொல்லி இவன் கத்துறானே என்று பின் நாங்கள் கிண்டலடிக்கிறோம் என தெரிந்தவுடன் சிரித்துக்கொண்டான்.

இவன் பக்திக்கு ஒரு எல்லையே இல்லைடா..அங்கே பாரு
- கைகாட்டினான் பெட்டைக்குளம் காஜா

ஷாபி தலையில் தொப்பியோடு ஒரு ஓரத்தில் எந்த ஆசிரியர்களும் அவனை பார்த்துவிடாதபடி நின்று கொண்டிருந்தான்..

டேய் ஷாபி..ஷாபீபீபீபீபீ... கத்தினேன்.

பதறிப்போய் திருபம்பினான்..என்னடா..?

இந்த நேரத்துல கூட தொப்பியா..கழட்டுடா..இல்லைனா தூரத்துல இருந்து பார்த்தாலும் நீ மட்டும் கரெக்டா தெரிவடா..

அவசர அவசரமாய் கழட்டினான்..

இப்படி ஜாலியும் கேலியுமாய் நொடிகள் நகர்ந்து கொண்டிருந்தன..

இந்தக் கூட்டம் போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா..

- கூட்டத்தில் தலையை மறைத்தபடியே இன்னமும் அரியர்ஸ் வைத்திருக்கும் அந்த மியான்பள்ளி கரீம் கத்தினான்

போடுங்கய்யா ஓட்டு..ஞானியாரைப்பார்த்து
போடுங்கய்யா கல்லு...ப்ரின்ஸ்பாலைப் பார்த்து

ப்ரின்ஸ்பால் டவுண் டவுண்.

( குஷியில் என்ன கத்துவது எனத்தெரியாமல் மாணவர்கள் வாய்க்கு வந்தபடி கோஷமிட்டனர்)

அதோ தூரத்தில் என்னுடைய கணித பேராசிரியர் அப்துல்காதரின் அந்த வெள்ளை நிற அம்பாசிடர் வந்து கொண்டிருக்கிறார். அவர் மீது எனக்கு மதிப்பு அதிகம்

டேய் அப்துல்காதர் வண்டி வருது..இந்தா நீ கேட்டை திறந்து விடு..நான் மறைஞ்சி நின்னுக்கறேன்.- பசூலித்தினீடம் சொன்னேன்.

சரியான பயந்திடா நீ...நில்லுடா இங்கேயே..என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...

அவர் என்னை பற்றி தவறாக நினைத்திடுவாரோ என்று கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த ஜுனியர் மாணவர்களிடம் கூறினேன்.

டேய் அப்துல்காதர் வண்டி வருது..அவர் வண்டி உங்கள நெருங்கும் போது..ஞானியார் ஒழிகன்னு கத்துங்க - சொல்லிவிட்டு மீண்டும் கேட் அருகே வந்தேன்.


அவர் வண்டி நெருங்கியது ஜுனியர் மாணவர்கள் கத்தத்தொடங்கினர்

ஞானியார் ஒழிக ஞானியார் ஒழிக

ஞானியார் ஒழிக ஞானியார் ஒழிக
- இன்னொரு புறத்திலிருந்து ராஜா வேறு கத்துகிறான்

( ஏன்னா அவர் நினைத்துக்கொள்வார். பசங்க ஞானியார் பேச்சையும் கேட்க மாட்டேங்கிறாங்க போல..ஞானியாருக்கும் எதிர்ப்பு இருக்கு என்று )


வண்டி என்னை நெருங்கிற்று ..

என்னப்பா ஞானி ஆரம்பிச்சிட்டியா ஸட்ரைக் ..நீ மேத்ஸ் ஸ்டூடண்ட் பா மத்த பசங்களோட ஸ்ட்ரைக் அது இதுன்னு சுத்துனா ஒண்ணுமே புரியாது..அப்புறம் அரியர்ஸோடதான் வெளிய போகணும்..ஒழுங்கா படிக்கிற வேலய பாரு.. - அந்த நேரத்திலும் அட்வைஸ் செய்கிறார் தனக்கே உரித்தான அந்த மலையாளம் கலந்த தமிழில்

இல்ல சார் நான் சொல்லிட்டேன் பசங்கதான் கேட்க மாட்டேன்கிறாங்க சார்.. - அப்பாவியாய் கூறினேன்.

அவரும் நம்பி விட்டார் ( இதுக்குத்தான் அந்த ஞானியார் ஒழிக கோஷம் )


கேட்டை திறந்து விட அவரும் உள்ளே செல்கிறார். சில குரங்குகள் கேட்டின் மீதேறி உட்காரத்தொடங்கின.

டேய் டேய் கேட்ல உட்காராதீங்கடா இறங்குங்கடா - கெஞ்சினேன்.

பசுல் அவங்கள கொஞ்சம் பாருடா என்று அவனிடம் சொல்ல திரும்பினேன்..

அட அவன்தான் முதலில் ஏறி நிற்கிறான்..

பிரின்ஸ்பால் இன்னமும் வரவில்லை..அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

சல்...ஒரு கல் வந்து விழுந்ததில் அந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கு தெறித்தது

டிங்..இன்னொரு கல் கேட்டில் வந்து விழுந்தது

புரிந்து கொண்டேன் பி.காம் மாணவர்கள் வந்துவிட்டார்கள் என்று.

( பயந்தபடி நின்றேன் எவனாவது நம்ம தலையில கல் விட்டுறக்கூடாதென்று ..காலையில ஒரு சீனியர் மாணவனிடம் வேறு முறைச்சிக்கிட்டோம்..பயந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நின்றேன்.)


அதோ அந்த ஒல்லியான கம்ப்யுட்டர் சயின்ஸ் மாணவி சினேகா தனது இருசக்கர சன்னி வாகனத்தில் மாணவர்களின் இதயத்தை டயருக்கு அடியில் வைத்து பஞ்சராக்கிவிட்டு வந்து கொண்டிருக்கிறாள்..

பசூல் கத்தினான்

டேய் அவகிட்ட போய் சொல்லுடா ...அவங்க க்ளாஸ்ல யாருமே ஸ்ட்ரைக்கை மதிக்கமாட்டாங்க..இவதான் யுனிவர்சிடி ஃபர்ஸ்ட் வாங்கணும்னு முயற்சி பண்றா..
இவ மத்த பொண்ணுங்ககிட்ட சொல்லி க்ளாஸ் அட்டண்ட் பண்ணிற போறா...

சினேகா நேராக கேட் அருகே வந்துதான் ப்ரேக்கை அழுத்தினாள்..( திமிருதான் )

ஹலோ உங்க க்ளாஸ்தான் சொன்னா கேட்க மாட்டாங்க ..நேரா போய் லேடிஸ் ரெஸ்ட் ரூம்ல இருக்கணும்..க்ளாஸ் போகக் கூடாது..என்ன..?
- கெஞ்சியபடி கோபப்பட்டேன்

எதுக்கு - திருப்பி கேட்டாள்

காரணம் சொல்வதற்குள் டேய் போதுண்டா போதுண்டா இதான் சாக்குன்னு வழியாத அனுப்புடா சீக்கிரம் - கமெண்ட்ஸ் வர ஆரம்பித்தவுடன் அவள் கிளம்பிவிட்டாள்

டேய் இங்க பாரு இன்னொரு வண்டி வருது... பசூல் பதறினான்

அதோ குஷ்பு வந்து கொண்டிருக்கிறாள்.


இப்ப பாரு நம்ம சையதலி பின்னால ஃபாலோ பண்ணிட்டு வருவான் ராஜ்குமார் வண்டியில - நான்

ஜோசியம் பலித்தது அந்த குஷ்புவின் வண்டியை விரட்டிக்கொண்டு சையதலி வந்து கொண்டிருக்கிறான் ஒளியை விடவும் அதிக வேகத்தில்.

டேய் நில்லுடா நில்லுடா இங்க வந்து ஓரத்துல நில்லு..பொண்ணுங்கள விரட்டிட்டு வந்தா கண்ணு தெரியாதே உனக்கு - பசூல்

அவனும் வெட்கப்பட்டுக்கொண்டே வண்டியை ஓரத்தில் ஒதுக்கினான்.

சத்தம் அதிகமாகியது சீனியர் மாணவர்களிடமிருந்து.
சத்தம் குறைந்தது ஜுனியர் மாணவர்களிடமிருந்து.


அப்படியானால் பிரின்ஸ்பால் வந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆம் அதோ வந்து கொண்டிருக்கிறார் சக்திமான் வேகத்தில்.
( அவருக்கு மாணவிகள் வைத்த செல்ல பட்டம் அது - சக்திமான்)


பக்கத்தில் வந்தவுடன் ஒரு முறை முறைத்தார் அவ்வளவுதான் ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.

பிரின்ஸ்பால் டவுன் டவுன் - சத்தம் அதிகமாகியது

( அட எதுக்குடா காரணமில்லாம கத்துறீங்க )

குரங்கு தூது சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள்..ஆனால் குரங்குகளுக்கு தூது சென்றது கேள்விப்பட்டிருப்பீர்களா..?

இதோ பிரின்ஸ்பாலிடமிருந்து அவரது உதவியாளர் எங்களிடம் தூதுக்கு வருவது அப்படித்தான் இருந்தது.

ஞானி உன்னய பிரின்ஸ் கூப்புடறார்

சரி வருகிறேன்..- நான்

பைக்கை ஸ்டார்ட் செய்தான் பசூல்..மற்ற மாணவர்களும் என்னுடன் வரத் தயாராயினார்கள்.

டேய் எல்லோரும் ஆபிஸ் போகவேண்டாம் நீங்க நில்லுங்க நான் போறேன்
- நான்

இல்லடா நீ மட்டும் உள்ள போ நாங்க வெளியில் சைடுல நின்னு என்ன நடக்குதுன்னு நோட்டம் விடுறோம்.
- பசூல்

என்ன சொல்ல போகிறாரோ? என்ற பயத்தில் நான் மட்டும் உள்ளே போகிறேன்.

-----------------

பிரின்ஸ்பால் ரூமுக்குள் செல்கிறேன். தனது உதவியாளரோடு முக இறுக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.


வாங்க செகரெட்டரி என்ன பிரச்சனை... - நக்கலாக சொல்லுகிறார்

இல்ல சார் வந்து பேங்க்ல போய் பீஸ்..

பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டார்..

அதுக்கு எங்கிட்ட வந்து கேட்க வேண்டியதுதானே..ஒண்ணுமே கேட்காம ஸ்ட்ரைக் அடிக்கிறீங்க..

இல்ல சார் பசங்கதான் கேட்காம ..

முதல்ல நீ போய் கூப்பிட்டுட்டு வா - குறுக்கிட்டார் பிரின்ஸ்பால்

பசங்க எல்லை மீறிட்டானுங்க சார்..ஞானியாரை கூட யாரும் மதிக்கல சார்..
- அப்துல்காதல் சார் சொல்லியடி உள்ளே வந்தார்

(அந்த ஞானியார் ஒழிக கோஷம்தான் வேலை செய்யுது)

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு அஞ்சு பைசா நாணயம் வந்து ஜன்னல் வழியே விழுகிறது

மறுபடியும் ஒரு நாணயம்...இரண்டு..மூன்று.. எல்லாம் அஞ்சு பைசா நாணயங்கள்..

ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினேன். வேற யாரு பசூலித்தின்தான் கையில் சில்லறைகளாக மாற்றி வைத்துக்கொண்டு கூட்டத்தில் மறைந்து நின்று கொண்டு எறிகிறான்..

நீ இன்னமும் பத்திரிக்கைக்கு ஆர்ட்டிக்கிள் எழுதிக்கிட்டு இருக்கியா ஞானியார்..?
- பிரின்ஸ்பால்

என்ன சம்பந்தமில்லாமல் கேட்டகிறார் ஆமா சார்

அப்ப நாளைக்கு பத்திரிக்கையில் எழுது..
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பிரின்ஸ்பாலின் அறையில் பண மழை -ன்னு எழுது

- ஆதங்கத்தில் கூறினார்

எனக்கு சிரிப்பு வேறு வருகிறது..ஆனால் அடக்கவும் முடியவில்லை சிரிக்கவும் முடியவில்லை

ஆமா சிரிச்சுக்கோ போய் பசங்கள சமாதானப்படுத்தி க்ளாஸ் அட்டண்ட் பண்ண சொல்லு
இல்லைனா ரோட்டுல போய் நின்று திருச்செந்தூர் - தூத்துக்குடி பஸ்ஸை மறிச்சுடுவானுங்க பிரச்சனையாயிடும்.போய் பசங்கள உள்ள கூப்பிடு

நானும் வெளியே போனேன்.

ஓ ஓ ஓ..மாணவர்கள் கத்தத் தொடங்கினர் ( இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கத்துறானுங்கபா..என்ன செய்ய? )

பிரின்ஸ்பால் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார். என்ன செய்ய இப்போது? கத்தியின் முனையில் நான்..

மாணவர்களிடம் சென்று பிரின்ஸ்பால் க்ளாஸ் அட்டன்ட் பண்ணச் சொல்றார் ன்னு சொன்னா
மாணவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும்.

எதுவுமே சொல்லவில்லை என்றால் பிரின்ஸ்பாலின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு ஐடியா உதித்தது..

மாணவர்களின் பக்கம் சென்று

டேய் உள்ள போகாதீங்கடா உள்ள போகாதீங்க
உள்ள போகாதீங்கடா உள்ள போகாதீங்க


என்று வார்த்தைகளில் மட்டும் சொல்லிவிட்டு தலையையும் கையையும் கல்லூரி பக்கம்
சைகையில் அசைத்துக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் இருந்து கவனிக்கும் பிரின்ஸ்பால் ஞானியார் பசங்கள உள்ள கூப்பிடுகிறான் போல என்ற நம்ப வைக்கும் அளவிற்கு நடித்தேன்.

இங்கே பசங்களோ என்னடா இவன் வார்த்தையில் போகாதீங்கடா என்கிறான்..சைகையை
உள்ளே போவது போல காட்டுகிறான் என்று என் நிலைமை நினைத்து சிரிக்கவும் கத்தவும் ஆரம்பித்துவிட்டர்கள்..ஓ ஓ ஓ ஓ.

இந்த லட்சணத்தில் பிகாம் மாணவர்கள் அங்குள்ள பழைய பேப்பர் - குச்சி என்று எடுத்து உருவ பொம்மை தயாரித்து பிரின்ஸ்பால் என எழுதி கொடும்பாவி எரிக்க ஆரம்பித்தனர்;


அடப்பாவிகளா ஒண்ணுமே இல்லாத மேட்டருக்கு கொடும்பாவியா..? ஏண்டா அரசியல்வாதிகளை பாலோ பண்றீங்க..?

கட்டுக்கடங்காமல் நிலைமை போகவே மீண்டும் பிரின்ஸ்பாலிடம் வந்து சார் பசங்க கல்லெறியறது பஸ்ஸை வழிமறிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டாங்க..நீங்க ஒரு முடிவு சொல்லுங்க சார்..

சரி சரி நாளையிலிருந்து காலேஜ்லையே பீஸ் கட்டணும்னு சொல்லிரு போ..அவங்கள அப்படியே கலைஞ்சி போகச்சொல்லிரு..கூடி கூடி நின்னாங்கன்னா பிரச்சனைதான்..
- வேண்டா வெறுப்பாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்

மறுபடியும் மாணவர்களிடம் வந்து ஸ்ட்ரைக் சக்ஸஸ் நாளையிலிருந்து பீஸை காலேஜ்லயே கட்டலாம்

ஓ ஓ ஓ..கத்தல் அதிகமாகியது..

சிலர் அப்படியா ச்சே அவர் மறுத்தார்னா இன்னும் இரண்டு நாள் ஸ்;ட்ரைக் அடிக்கலாம்னு பார்த்தோம் என்று மனம் நொந்தபடியே புறப்பட்டனர்.( எங்கே போவானுங்க ..சிலபேர் சூரியன் கருகும் வண்ணம் கடலை வறுப்பானுங்க....சிலபேர் சினிமாவுக்கு ...ஆனா நான் வீட்டுக்கு போய்ட்டேன்பா)

சில சாலை விளக்குகள் உடைக்கப்பட்டும் சில பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டும் ஒருவழியாக முடிந்தது சிப்பாய் கலகம் சாரி சாரி குரங்குகளின் கலகம்.

-ரசிகவ் ஞானியார்

Tuesday, September 06, 2005

லஞ்சம்



அரசாங்கமே!
ஏதாவது ஒரு
சாதிக்கலவரத்தில்...
என்னைச்
சுட்டுக் கொன்றுவிடுங்களேன்!
ஆம் என்
அண்ணனுக்கு...
அரசாங்க வேலை வேண்டும்!


-ரசிகவ் ஞானியார்-

Monday, September 05, 2005

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்


[அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.]




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

*****
ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

*****
எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதிகா மிஸ்!


*****

கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

*****
"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

*****
கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

*****
நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

*****
தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கிநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

*****
"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்,
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!
*****
இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...

*****
-ரசிகவ் ஞானியார்-

காதல் வேண்டும்



காவியமாய் எழுதப்படும் காதல் வேண்டும் - உனக்காக
காத்திருந்து காத்திருந்தே சாதல் வேண்டும்!
செவியெல்லாம் உன்பெயரை ஓதல் வேண்டும் - நீ
செல்லமாய் சிணுங்கிவிடும் மோதல் வேண்டும்!

உறங்காமல் நினைக்கின்ற முத்தம் வேண்டும் - உன்
உயிர்ஜீவன் அவையனைத்தும் மொத்தம் வேண்டும்!
கடைவிழியில் கரைகின்ற பித்தம் வேண்டும் - உண்மை
காதலுக்கு நிச்சயமாய் யுத்தம் வேண்டும்!

தெரியாமல் பார்க்கின்ற கள்ளம் வேண்டும் - காதல்
தெரிவிக்கத் திடப்படும் உள்ளம் வேண்டும்!
அறியாமல் பூக்கின்ற பூக்கள் வேண்டும் - உனை
அறிந்தறிந்து கவியெழுதும் பாக்கள் வேண்டும்!

வெகுநேரம் உன்னழகை ரசிக்க வேண்டும் - நாம்
வெண்ணிலவில் தனியாக வசிக்க வேண்டும்!
உணவிருந்தும் தினம்வயிறு பசிக்க வேண்டும் - நீ
ஊட்டிவிட்டால் விஷம் கூட ருசிக்க வேண்டும்!

உன்னோடு மட்டுமென் உறவு வேண்டும் - இனி
உனக்காகவே நான் உருக வேண்டும்!
விடியாமல் போகின்ற இரவு வேண்டும் - மடி
வீற்றிருக்கும்போதே நான் இறக்க வேண்டும்!


- ரசிகவ் ஞானியார் -

Saturday, September 03, 2005

அம்மாவை யாரோ கொலை பண்ணிட்டாங்கப்பா



தம்பி இந்த லட்டரை கொஞ்சம் தமிழ்ல டைப் பண்ணி கொடுப்பீங்களா..? என்று அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் சோகத்தோடு என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினார்.

நான் ஏதோ அவரின் ஊதிய உயர்வுக்காக இருக்கும் என நினைத்து என்னங்க வழக்கம்போலவே ஊதிய உயர்வுக்காகவா......? என கிண்டலடித்தபடியே கடிதத்தை வாங்கி வாசித்து அதிர்ந்து போனேன்.

அவரது தாயார் கொல்லப்பட்ட செய்தியை அந்த கடிதம் மூலமாக அறிந்தேன்.

பதறிப்போய் என்னங்க உங்க அம்மா கொல்லப்பட்டுட்டாங்களா..?

ஆமா தம்பி எவனோ ஆயிரம் ரூபாய் கடன் தொகைக்காக கொன்னுட்டான் தம்பி. எங்கம்மா ஒரு கடை வச்சிருந்தாங்க அதுல ஒருத்தன் கடன் வச்சிட்டு கொடுக்காம அடம்பிடிச்சான். கடனை கேட்டவுடன கோபத்துல இராத்திரி வந்து கத்தியால குத்திட்டான்ம்பா
- அலட்சியமாய் கூறினார்

என்னங்க இவ்வளவு அமைதியா சொல்றீங்க ..ஊருக்கு கிளம்பி போகவேண்டியதுதானே..?

போகலாம்ங்க..ஆனா போய் பயனில்ல..அம்மாவின் இறுதியஞ்சலி முடிஞ்சாச்சு..இப்ப நான் போனா செலவுதான்..

அதிர்ந்து போனேன். ச்சே என்ன எழவு வாழ்ககைடா இது ...?
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு உயிரை எடுத்திருக்கிறார்களே..படுபாவிகள்..அவர்கள் உயிரின் உறவின் அருமை தெரியாமல் வளர்ந்து ஆதிவாசிகளா..? அல்லது வலி உணராத காட்டெருமைகளா..?

சின்ன வயதிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்த பெற்ற தாய் இறந்ததற்கு கூட போக முடியவில்லை என்றால் இவர் வாழும் இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன..? எதற்காக வாழ்கிறார்..?

அவர் சட்டையை பிடித்துக்கொண்டு அறையவேண்டும்போல தோன்றுகிறது.

முகவரி படத்தில் எனக்கு அஜீத் சொன்னது ஞாபகம் வருகிறது.

லட்சியம் லட்சியம்னு நான் போரடுகிறேன். அந்த லட்சியம் கிடைத்தபிறகு நான் திரும்பி பார்க்கும்போது அந்த மகிழ்ச்சியை கொண்டாட என் வீட்டில் யாருமே இல்லையென்றால்
அந்த லட்சியம் அடைந்ததன் அர்த்தம்தான் என்ன...?

அதுபோலத்தான் அவரும். கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரையும் இழந்துவிட்டு யாருக்காக அவர் சம்பாதிக்கிறார். காலத்தின் ஓட்டத்தில் அவர் கைநிறைய சம்பாதித்துவிட்டு திரும்பிபார்க்கும்பொழுது யாருமே இருக்கமாட்டார்களே..?

அவரை பார்க்கும் போது எனக்கு ஆத்திரமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

மெல்ல கேட்டேன்.. ஊருக்கு போக விமான டிக்கெட் ஏற்பாடு பண்ணினா போவீங்களா..?

இல்லைப்பா வேண்டாம்...ஊருக்குப்போனாலும் செலவு பிச்சுகிட்டு போயிடும்..

அந்த கடிதத்தை மட்டும் டைப் பண்ணி கொடுங்க போதும். நான் அப்புறம் வர்றேன்.

அவர் சென்றுவிட்டார். அந்த துப்புரவு தொழிலாளி என் மனதில் சோகத்தை துப்பி விட்டு சென்றுவிட்டார்.

இப்படிபட்ட வெளிநாடு வாழ்க்கை தேவைதானா அவருக்கு..? கஞ்சி குடித்தாலும் சரி அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை ஆகிய சுற்றங்களுடன் அமர்ந்து சாப்பிடவேண்டும். அதுவும் ஒரு வகையில் சுகம்தான். ஆனால் அவருக்கு பொருளாதார ரீதியாக என்ன கஷ்டமோ..? மனம் ஏதேதோ நினைத்தது..?

கண்ணீருடனே அந்த கடிதத்தை கைகள் நடுங்கிக்கொண்டே டைப் செய்கிறது.


உயர்திரு மாங்காடு கிராம தலைவர் அவர்கட்கு


உங்கள் கிராம சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுள்ள மறைந்த கே.கந்தசாமி மற்றும் கே.காமாட்சி என்ற சௌந்திரம் ஆகியோரின் மகனாகிய கே.சுரேஷ்குமார் என்ற நான் தற்சமயம் துபாயில் வசித்துவருகிறேன். நான் கிராமத்தார்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் என் தாயார் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டுள்ளார். அதற்கு முழு காரணமும் எனக்கு சரியாக தெரியாது. எனது தாயார் இறந்தது போலிஸ் கேசாக இருப்பதால் அதன் காரணமாக எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கும் என் குடும்பத்தில் சரியான நபர் யாருமில்லை என்பது கிராமத்திற்கு தெரியும். அதன் விபரமாக கிராமத்தார்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதும் எனக்கு சரியாக தெரியாது. நான் கிராமத்திற்கு கட்டுப்பட்டுள்ளதால் கிராமத்தை மீறி நான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. ஆகையால் நான் துபாயில் இருந்து ஏதாவது நடவடிக்கை எடுக்கமுடிந்தால் அதற்கு கிராமத்தார்கள் எனக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து இதில் கையெழுத்து இட்டு தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் கிராமத்தை சார்ந்த

கே.சுரேஷ்குமார்

ஒப்புதல் கையெழுத்து:


தலைவர் :

உபதலைவர் :

செயலாளர் :

உபசெயலாளர் :

பொருளாளர் :

தண்டல் :


----------
அன்புள்ள தங்கச்சிக்கு



உன் அண்ணன் எழுதுவது என்னவென்றால் ஊரில் நடந்த பிரச்சனைகள் அனைத்தும் உனக்கு நன்றாக தெரியும். அதன் விபரம் காரணமாக இந்த லட்டரை எழுதுகிறேன். அம்மா இறந்த விசயம் காரணமாக நான் துபாயில் இருந்து என்னால முடிந்த நடவடிக்கைகள் எடுக்க விரும்புகிறேன். அதற்கு உன்னுடைய முழு ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும். உன் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நான் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின்; மூலமாக தண்டிக்க விரும்புகிறேன். அதற்கு நீ எல்லா விசயத்திலும் ஒத்துழைப்பு தருவாய் என்று நம்புகிறேன். அதற்கு நீ மறுப்பு தெரிவித்தால் துபாயில் ஒரு அண்ணன் இருக்கிறான் என்பதை மறந்துவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். நான் எது செய்தாலும் உன் நன்மைக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளவும். நீ இந்த கடிதத்தின் கீழ் ஒப்புதல் அளித்து கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.





இப்படிக்கு உன் அண்ணன்




கே. சுரேஷ்குமார்

ஒப்புதல் கையெழுத்து:



இப்படியாக அந்த கடிதம் முடிக்கப்பட்டிருக்கிறது.

பாசக்கார மகன்தான்..அம்மாவை கொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என தோன்றியிருக்கிறது. ஆனால்
அம்மாவின் முகத்தை பார்க்க அவருக்கு கொடுப்பினை இல்லையே..?

மனிதர்கள் வெறும் காகித பணத்திற்குதான் என்னமாய் அலைகிறார்கள். கொலை கொள்ளை ஏமாற்றுதல் சூது வஞ்சகம் எல்லாம் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெற்று காகிதத்திற்குதானே..?

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது அங்குள்ள வங்கிகளில் இருந்து பணத்தை மூட்டை மூட்டையாக மக்கள் தூக்கிக்கொண்டு ஓடினார்களே..? என்னவாயிற்று இப்போது..? அந்த பணங்கள் மதிப்பிழந்து தெருவில் கிடக்கின்றன. எத்துணை கஷ்டப்பட்டு சம்பாதித்து இருப்பார்கள்.

சொத்துக்களை எல்லாம் சுனாமியில் இழந்துவிட்டு தவித்தவர்களுக்கு பணமா பசியை ஆற்றியது..? சொந்தங்கள் , சில மனிதநேய உள்ளங்களின் ஆறுதல்கள், பாதுகாப்புகள் , முதலுதலிகள்தான் அவர்களுக்கு பக்கபலமாய் இருந்தது.

ஈரத்தில் நனைந்த பணம் உதவ மறுத்தது.
ஈரத்தில் நனைந்த மனம்தான் அங்கே ஓடி வந்தது.

குஜராத் பூகம்பத்தில் மக்களோடு மக்களாக தரைமட்டமாய் போனது அந்த காகித பணமும்தானே..? கட்டிடங்களின் இடிபாடுகளிலிருந்து பணம் மட்டும் தனியாய் பறந்து வர முடிந்ததா..?

எத்தணை பெரிய வல்லரசாக அமெரிக்கா இருந்தும் இப்போது வீசிக்கொண்டிருக்கும் புயலை கட்டுபடுத்த அதனால் எந்த கருவியும் கண்டுபிடிக்க முடியவில்லை பார்த்தீர்களா..? ஒரே நிமிடத்தின் வீடுகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டுவிட்டன..எங்கே போயின டாலர்கள்.? அந்த டாலர்களால் இயற்கையின் சீற்றத்தை சமாளிக்க முடிந்ததா.? சென்ற நிமிடத்தில் கோடீசுவரன்..மறுநிமிடத்தில் ஒருவேளை உணவுக்காக அரசாங்கத்தை எதிர்பார்க்கும் அகதிகளாய் மாறிவிட்டனர்.. இதுதான் வாழ்க்கை..

ஆகவே டாலர்களைத்தாண்டிய ஒரு மதிப்பு இருக்கிறது. அதுதான் சொந்தம். மனதிற்குள் சிந்தனைகள் மோட்டார் ரேஸ் நடப்பதுபோல வேகமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

அந்த கடிதத்தை டைப் செய்து முடித்துவிட்டேன். அவரிடம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாய் கேட்கவேண்டும் போலத் தோன்றிது எனக்கு.


நடக்க கற்று கொடுத்த ...
பேச கற்றுக்கொடுத்த ...
எழுத கற்றுக்கொடுத்த தாய்
மூச்சுவிடாமல் இருந்தால்
இப்படித்தான் இருக்கும் மகனே என்று
மகனுக்கு ...
மரணம் கற்றுக்கொடுத்திருக்கிறாள்.!

நீயேன் அதனை
கற்றுக்கொள்ள விரும்பவில்லை..?


இதயம் சோகமுடன்

ரசிகவ் ஞானியார்

தேன் கூடு