Monday, September 26, 2005

எது சுதந்திரம் ?





சத்தியமாய் நிதம் வாழ்ந்து - சுதந்திரம்
பத்திரமாய் கொண்டுச் சேர்த்தவராம்
காந்தி பெற்றுத்தந்தே யவர் பட்டுவிட்டார் - விஞ்ஞானக்
கால மென் தேசத்தை விற்கின்றதே?

அடிமைத்தனத்தை ஒதுக்கி வைத்தோம் - ரேஷன்
அரிசியைமட்டும் பதுக்கி வைத்தோம்!
சுதந்திரக்கதவை உரசிப் பார்த்தோம் - அது
சுயநல வாதியுடன் சரசமாடும்!

விஞ்ஞானக் கனவுகள் வீதியிலே - சுதந்திரம்
விழிபிதுங்கி வெறும் சாதியிலே!
தேசத்தைக் காப்பாற்ற நாதியில்லை - நான்
தேடிப்பார்த்தாலும் எங்கும் நீதியில்லை!

இடுப்பி லுடுக்க ஒரு ஆடையில்லை
இங்குகட்சிக் கொடிகளுக்கும் சோடையில்லை!
அழுக்கு மனதிலே வெள்ளைச்சாயங்கள் - இன்று
அரசியல் சாக்கடைக்கும் வாடையில்லை!

கல்விகள் எல்லாம் கசாப்பு கடைதனில்
கறிகளுக்குப் பதிலாய் ஊசலாடும்!
பக்கத்திலேயே ஓர் அறிவிப்பு பலகை - பணம்
ரொக்கமாய்; கொடுத்தால் டிகிரி வாங்கலாம்.!

தினம் பல கொலைகள் தேசம் அலரும் - ஜாதித்
தீயும் பெண்ணின் கருவில் வளரும்!
மனிதநேய மயானத்திலே மதப்பேய்கள் - பாரதப்
புனித மென்று பூத்திடுமோ? புறப்படுங்கள்

சுடுகாட்டு ஊழலிலே சுதந்திரம் உண்டு - விண்ணில்
சூரியனுக்கே வெட்கம் இந்நிலை கண்டு!
பஞசத்தின் பிடியில் பாரதமே கிடக்கும் - ஆனால்
லஞ்சஊழல் மட்டும் லாவகமாய் நடக்கும்!

என் கனவினிலே இந்தியா என்றேன் - இளைஞன்
தன் கனவினிலே சந்தியா என்கிறான்!
மனிதனை மதிக்கின்ற தேசம் வேண்டும் - சமூகத்தில்
இனி தேசத்தை மதிக்காத மனிதன் வேண்டாம்.

- ரசிகவ் ஞானியார் -

No comments:

தேன் கூடு