Thursday, September 15, 2005

மாணவர் பேரவை தொடக்க விழாவுக்கு



மாணவர் பேரவை தொடக்க விழாவுக்கு யாரை அழைப்பது என்பது தொடர்பான கூட்டம் ஒன்றினை பிரின்ஸ்பால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் அதில் சேர்மன் நவாஸ்கான் துணை சேர்மன் முத்து பின் செயலாளராக நான் மற்றும் அனைத்து வகுப்பு லீடர்களும் அழைக்கப்பட வட்ட மேசை மாநாடு போல அமர்ந்திருந்தோம்.

என்னப்பா சேர்மன் யாரை அழைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க..?- சக்திமான் என்று மாணவிகளால் செல்லமாய் அழைக்கப்படும் பிரின்ஸ்பால் பீர் முகம்மது அவர்கள் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்

சேர்மன் நவாஸ்கான் உடனே பக்கத்தில் உள்ள என்னிடம் கேட்டான். என்ன ஞானி யாரை கூப்பிடலாம் நீ சொல்லேன்..?

வைரமுத்துவை கூப்பிடலாமா.? சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டேன்..

வைரமுத்துவா..நீயே பிரின்ஸ்பால்கிட்ட சொல்லுப்பா.. - பயந்தான் நவாஸ்கான்

சார் வை..ர..முத்து..வை கூப்பிடலாமா..? - நானும் தயங்கிபடியே கேட்டேன்

துப்பாக்கியில் பட்டனை அழுத்தியவுடன் புறப்படும் குண்டுகளின் வேகத்தைப்போல உடனே பதில் வந்தது.

ச்சே ச்சே அதெல்லாம் செலவாகும் பா..நமக்கு இப்ப டைம் இல்ல..

- மறுத்துவிட்டார்

வேற யாரையாவது சொல்லுங்கப்பா..

நான் திமு அப்துல்காதர் - வலம்புரிஜான் மற்றும் சில அரசியல் புள்ளிகள் என்று சில பரிந்துரைகளை எடுத்துரைத்தேன்.

எல்லாவற்றிற்கும் ஒரே பதிலைத்தான் வைத்திருந்தார்.

ச்சே எதுக்கு நவாஸ் இந்த மீட்டிங்..? எதை சொன்னாலும் மறுக்கிறார்..

வந்திருந்து அனைத்து மாணவர்களும் அவர்களுக்கென்று வந்த தேநீர் - லட்டுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர்களுக்கென்ன நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அலட்சியமாக இருந்தார்கள்.

மறுபடியும் பழுதாகிப்போன டேப்ரிக்கார்டர் திருப்பி திருப்பி படிப்பது போல மீண்டும் ஆரம்பிக்கிறார்..

என்னப்பா சீக்கிரம் சொல்லுங்க..

எல்லா விழா மேடைகளிலும் வழக்கமாய் நடை பெறுகின்ற ஒரு காட்சி : ஒருவர் மற்றவர்கள் காதில் ஏதோ ஒன்றைப் பேசி இருவரும் சிரிக்க முற்பட்டு பின் சபை நாகரீகம் கருதி சிரிப்பை அடக்கிகொள்வது போல நடிக்கும் பெரிய பெரிய தலைவர்கள் போல

நான் உடனே பக்கத்தில் உள்ள பிகாம் லீடரின் காதில்
பேசாம டேய் ஷகிலாவை கூப்பிட்டா கூட்டமாவது கூடும்..கேட்டுப்பார்ப்போமா?..என்று நக்கலடிக்க

அவன் சேர்மன் காதில் இதைப்போட..அதைக்கேட்ட பக்கத்தில் உள்ள மைக்ரோபயாலஜி மாணவன் சிரித்துக்கொண்டே இன்னொரு மாணவனிடம் கூற அப்படியே அது பரவிற்று அடுக்கி வைக்கப்பட் சீட்டுக்கட்டு ஒவ்வொன்றாய் விழுவதைப்போல..

பிரின்ஸ்பால் இதைப்பார்த்து மாணவர்கள் சீரியஸாக ஏதேதா விவாதம் செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டார்.

இந்தச்சலசலப்பில் பிஸிக்ஸ் வகுப்பு லீடர் அதோ பிரின்ஸ்பால் அருகே அமர்ந்திருக்கும் இராமய்யா சாரிடம் காதில் ,

சார் சார் ஞானியார் ஷகிலாவை கூப்பிடலாமான்னு கேட்கிறான்.

அவருக்கு உடனே சிரிப்பை அடக்க முடியவில்லை..அவருக்கு எப்போதுமே என் மீது பிரியம்..என்னை கண்களால் பார்த்தார்..உதட்டுக்குள்ளேயே சிரித்துக்கொண்டு கண்களால் மிரட்டியபடி இதெல்லாம் கூடாது என்ற அர்த்தத்தில் தலையாட்டினார்..

அப்போது மஸ்தான் காதில் கிசுகிசுக்கிறான். டேய் எஸ்டிசியில் படிக்கிறாள நம்ம பாளைகோட்டையில தினமும் லுக் விடுவோமே டா அதான் அந்த ரெண்டு பொண்ணுங்க..
அவங்கள பார்த்த மாதிரி இருக்கும்டா..நாம எஸ்டிசி காலேஜ் போகலாம்டா..அதுக்கு ஏதாவது வழிபண்ணு..

எந்த பொணணை சொல்றான்? நினைவலைகள் சுழல்கிறது.

காலை நேரத்தில் இளைஞர்களின் சொர்க்கமாக இருக்கும் பாளைங்கோட்டை பஸ்நிலையத்தை மேலப்பாளையம் நீதிமன்றம் 22சி என்ற பேருந்து நெருங்கி கொண்டு இருக்கிறது. நானும் மஸ்தானும் பேருந்தில் இடமிருந்தும் கல்லூரி மாணவர்களின் ஒழுக்க விதியைப் பின்பற்றி தொங்கிக்கொண்டே வருகிறோம்.

இறைவன் சொர்க்த்தில் இருந்து ஒட்டு மொத்த தேவதைகளையும் காலையில் பாளை பஸ்ஸ்டாண்டில் இறக்கி விட்டு விடடானோ என்று தோன்றியது.

எப்பொழுதோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது..?


ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?


பேருந்து உள்ளே நுழைந்ததும் கையில் ஒற்றை நோட்டினை வைத்துக்கொண்டு நாங்கள் ஓடும் பேருந்தில் இருந்து குதித்துக் ஹீரோதனத்தை வெளிக்காட்டினோம்

( ஒரு நாள் அப்படித்தான் குதித்து இறங்கும்போது வழுக்கி விழுந்து ..காலில் அடிபட்டு..அந்த கதையெல்லாம் சொல்ல மாட்டேன் )


அதோ அந்த இரண்டு பெண்களும் நிற்கிறார்கள். நாங்கள் கண்டு கொள்ளவேயில்லை..பேருந்து மறுபடியும் கிளம்புகிறது..உடனே நாங்கள் ஓடிச்சென்று ஏறி திரும்பிபார்த்து அந்த இரண்டு பெண்களை பார்த்தும் குட்மார்னிங் என்று ஒரு சல்யூட் அடிப்பது வழக்கம். அப்படியே நட்பாகிப்போனோம்.


நினைவை மறுபடியும் மீட்டிங் ரூமிற்கு கொண்டு வந்தேன். என்னடா யோசிக்கிற என்ன செய்யலாம்..? யாரை அழைக்க..? - மஸ்தான் மீண்டும் கேட்கிறான்.

நான் உடனே பிரின்ஸ்பாலிடம் சார் எஸ்டிசி கல்லூரி பிரின்ஸியை கூப்பிடலாம் சார்..எப்போதும் மத்த காலேஜ் உடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவங்களோட படிப்பு - தேர்வுக்கு தயாராகிற வழிமுறை எல்லாம் நாமும் தெரிஞ்சிக்கலாம்.ஏன்னா அவங்க காலேஜ் எப்போதுமே பர்ஸ்ட் வர்றாங்க..என்று பொறுப்பாய் பதிலளிக்க..

பிரின்ஸ்பாலுக்கும் புரிந்துவிட்டது. அவரும் எங்கள் வயதை கடந்து வந்தவர்தானே..? பசங்களோட பிளான் எப்படியிருக்கும்னு..?
அதுமட்டுமல்ல அவர்களை அழைத்தால் செலவும் அந்த அளவுக்கு ஆகாது என்ற கணிப்பில் சரிப்பா கூப்பிடலாம் என்று சம்மதித்தார்..?

மாணவர்களுக்குள் ஒரே கிகிசுப்பு..டேய் அவங்க வேண்டாண்டா..அவங்களுக்கு பேசவே தெரியாது..போரடிச்சிடும்; யாராவது நல்லா பேசறவங்களா கூப்பிடலாம்..

என்று ஆளாளுக்கு கூற..எல்லோரிடமும் செலவு ஆகிவிடும் - டைம் இல்லை- என்று சில காரணங்களை கூறி சம்மதிக்க வைத்துவிட்டோம்.

முடிந்து விட்டது வட்ட மேசை மாநாடு சாரி வெட்டி மேசை மாநாடு..

மீட்டிங் ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம்..கடந்து போகும்போது இராமய்யா சார்..ஞானி ... யாரை கூப்பிடனும்.. ஷகிலாவையை..? என்று நக்கலடித்துச் சிரித்துக்கொண்டே சென்றார்..

சேர்மன் நவாஸ்கான் அழைத்துக்கொண்டே வருகிறான்..

ஞானி வேற யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்பா..ச்சே..- அலுத்துக்கொண்டான்

சரி விடு..வேற என்ன செய்ய..என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பிஎஸ்ஸி கணிதப் பெண் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டே செல்கிறாள்.

நவாஸ் இங்க பாரேன் ..லுக்க பார்..ச்சே சரியான லுக்கு..

அங்க பார்க்காத பிரின்ஸ்பால் பார்த்தாருன்னா தொலைஞ்சோம்..

ஏன் இப்ப பயப்படுறே...?

அவன் சரி இவ்வளவு பேசறியே..ஒரு பெட்.. இப்ப எல்லா பொண்ணுங்களும் உட்கார்ந்திருப்பாங்க அதோ கேர்ள்ஸ் ஒன்லின்னு எழுதியிருக்கிற அந்த வராண்டாவுல..நீ போய் தண்டால எடுத்திட்டு வா பார்ப்போம்.. 100 ரூ பெட்.. –

- சும்மா கிண்டலடித்துச் சிரித்தான்

நான் பண்ணிருவேன் ஆனா இப்ப எல்லா பொண்ணுங்களும் வர்ற டைம்டா..மதியானத்திற்குப்பிறகு பண்றேன்..

இந்த பயம் இருக்குல உனக்கு..என்று கூறி அவங்க க்ளாஸ் மாணவர்களுடன் சேர்ந்து என்னை நக்கலடித்து சிரித்தான்.

அய்யோ ஹீரோதன்மையை இழந்துவிடக்கூடுமோ எனப்பயந்து சரி டா பண்றேன்.எனக் கூறி நேராக கேர்ள்ஸ் ஒன்லி பகுதிக்கு செல்கிறேன்..இங்கே சில தேவதைகள் வராண்டாவில் படித்துக்கொண்டு சில தேவதைகள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு..சில பெண்கள் என்னடா செகரட்டரி வர்றான் ஏதாவது இன்பார்ம் பண்ண வர்றானோ எனற் ஆர்வத்தில் என்னை பார்க்க..

நான் நேராக போய் தரையில் விழுந்து 3 முறை தண்டால் எடுக்க ஆரம்பிக்க எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னதான் வீரமாக சவால் விட்டாலும் அத்தனை பெண்கள் ஒட்டுமொத்தமாய் திரும்பிபார்த்து சிரித்த போது எனக்கு அவமானமாகி விட்டது. திரும்பி கூட பார்க்காமல் விறுவிறுவென்று வந்துவிட்டேன்.

ம் கொடு 100 ரூ - சேர்மனிடம் கேட்டேன்

சொன்ன மாதிரியே போய் செய்திட்டு வந்திட்ட..ஆனா வேகமா பண்ணிட்ட நான் தரமாட்டேன் - தப்பிக்க நினைத்தான்

நான் அடம்பிடித்து நச்சரிக்க் 50 ரூதான் இருக்கு நாளைக்கு 50 ரூ தர்றேன்.. என்று
அழுதுகொண்டே தந்தான்

---

மறுநாள் நானும் மஸ்தானும் ஒரு பைக்கில் நவாஸ்கான் மற்றொரு பைக்கில் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக டவுணில் ஒரு பிரமுகரைச் சந்தித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

பைக் ரத்னா தியேட்டரை தாண்டி சீறி வந்துகொண்டிருந்தது. மஸ்தான் ட்ரைவ் பண்ண நான் பின்னால் அமர்ந்து கொண்டேன்.

பைக்கை விரட்டாதடா மெதுவா போடா - நான்

அவனோ இல்லடா வயிறு பசிக்குது அவங்களுக்கு முன்னால நாம அரசன் போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வந்திருவோம்..அவங்கள பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில தினகரன் அலுவலகம் முன்னால வெயிட் பண்ண சொல்லுவோம். சரியா..

ச்சே ஒம் புத்தி ஏன்டா இப்படி போகுது..தப்பா நினைச்சுக்குடுவாங்க..நீ அவங்க பின்னாலயே போ.. நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு சத்தம் ..

ஹா..ய்... ஹா..ய் அட சித்தா கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் எங்கேயோ சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில்தான் கடைசி சீட்டிலிருந்து சில தேவைதைகள் சப்தமிடுகிறார்கள்.. ஹா..ய்...

டேய் வண்டிய விரட்டுடா..மெதுவா போகாதடா.. - நான்

நாயே இவ்வளவு நேரம் மெதுவா போன்னு சொன்னே..இப்ப பிகரைப்பார்த்தவுடனே விரட்ட சொல்றியோ.. - தத்துவம் பேசியது நாய்

டேய் டேய் விரட்டுடா..அந்த பொண்ணுங்க கைகாட்டிட்டுப் போறாங்கடா..- என்று நான் திருக்குறள் சொல்ல விரட்ட ஆரம்பித்தான் வண்டியை.

ஹா..ய்..ஹா..ய் - மறுபடியும் அவர்கள் தான் நாங்கள் விரட்டி பின் தொடர்வதை கண்டதும் குஷி அவர்களுக்கு..

நான் கைகாட்டினேன். இவன் மட்டும் ஹீரோதனத்தை தட்டிக்கிட்டு போயிடுவானோ என்கிற பயத்தில் மஸ்தானும் கைகாட்ட முயற்சிக்க வண்டி தடுமாறியது. ( பாருங்களேன் பெண்களை கண்டவுடன் பைக் கூட தடுமாறுகிறது)..

தடுமாறிய வேகத்தில் ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட இதயத்திலும் இடப்பக்கம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த முதியவர் மீதும். அவர் தடுமாறி விழுந்து..

அறிவிருக்கால ஏல... ஏல... நில்லுல..கண்ணு தெரிலையால.. - கத்த ஆரம்பிக்க

காதில் வாங்கிக்கொள்ளாமல் வண்டியை விரட்டினோம்.

பக்கத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சேர்மன் பயந்து போய் நாங்கள் ஏதும் பிரச்சனையை உருவாக்கி விடுவோமோ என் பயந்து.. வண்டியை விரட்டி செல்ல ஆரம்பித்தான்

அந்த தேவதைகள் எந்த காலேஜ் என்று எங்களிடம் கண்ணாடி வழியாக கைகளை அசைத்து சைகையில் காட்ட

காற்றை காகிதமாக்கி கைகளை பேனாவாக்கி எழுதினேன் ..ச..த..க் என்று

அவர்கள் எந்த குரூப் என்று கேட்க..மறுபடியும் மேத்ஸ் என்று மறுபடியும் காற்றில் எழுத ஆரம்பித்தேன்.

அவர்களோ கழுத்தில் கைவைத்து அறுப்பது போல காட்டினார்கள்..அறுவை என்று..

திடீரென்று புகையாக வந்தது ..என்னவென்று பார்த்தால் இதையெல்லாம் முன்னால் அமர்ந்து கவனித்து வந்த மஸ்தானின் வயிற்றெரிச்சலில் வந்த புகை அது.

பின் கைளில் வைத்திருந்த அழைப்பிதழை கொடுக்கலாம் என்று அழைப்பிதழை எடுத்து அவர்களi நோக்கி கைகளை காட்ட அந்த வெல்வெட் சுடிதார் மாணவி..தன் கைகளை வெளியில் நீட்டினாள்..நான் உடனே மஸ்தானை வண்டியை அந்த பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் விரட்ட சொல்லி அழைப்பிதழை கை நீட்டிக்கொண்டிருக்கும் தேவதையிடம் கொடுக்க முயற்சித்து தோல்வியடைய..ஓ ஓ ஓ என் கத்தத் தொடங்கினார்கள் தேவதையின் தோழிகள்

மறுபடியும் கொடுக்க முயற்சித்தேன்..வெற்றி வெற்றி கொடுத்துவிட்டேன்..அழைப்பிதழையும் மனசையும்.

அதை வாங்கிய அவள் படிக்க நான் சைகையில் காட்டினேன்.

நவாஸ்கான் ஞானியார் முத்து
சேர்மன் செயலாளர் துணை சேர்மன்


அந்த நடுவில் இருப்பதுதான் என் பெயர் என்று சைகையில் காட்டினேன். கண்டிப்பாய் விழாவுக்கு வரவேண்டும் என்று சைகையில் ஒரு சம்பிராயத்திற்காக கூற அவர்களும் சரி என்று தலையசைக்க.....சைகையும் கத்தலுமாக ஜாலியாக பயணப்பட்டுக்கொண்டிருந்தது பைக்கும் இதயமும்.


இப்படி அந்த பாளைங்கோட்டை போகும் பாதைகள் சொர்க்கம் செல்லும் பாதைகள் போல அப்பொழுது எங்களுக்குத் தெரிந்தது. அந்த பேருந்தை தவிர வேறு எந்த வாகனமும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.


மேம்பாலத்தில் இறங்கி அந்தப்பேருந்து ஜங்ஷன் செல்லும் பாதையை நோக்கி திரும்ப எங்களுக்கோ நேராக பாளையங்கோட்டை போகவேண்டியது இருந்ததால் கையசைத்துக்கொண்டே வருத்தத்தோடு விடைபெற்றோம்.

வண்டியை விரட்டிக்கொண்டே சென்றோம்..அட நம்ம சேர்மன் நடக்கின்ற கூத்தினை கவனித்துக்கொண்டே முன்னால் சென்றவனை பிடித்துவிட்டோம்..

டேய் இப்ப நேரா எஸ்டிசி காலேஜ் போய் இன்வைட் பண்ண போறோம் என்ன..அதுக்குள்ள எங்கையாவது போயிறாதீங்க.. - கடுப்பில் கூறினான்

( அவன் இப்படி கூற நினைத்தான்.. டேய் நேமாச்சுடா..வேற எந்த பொண்ணாவது டாட்டா காட்டினா ன்னு சொல்லி பல்ல இளிச்சிகிட்டு போயிடாதீங்கடா..)


எஸ்டிசி கல்லூரியின் வாசலில் அதோ நெல்லை இளைஞர்களின் எதிரி வாட்ச்மேன் நின்று கொண்டு எங்கப்பா எங்க தம்பி போறீங்க..பர்மிசன் இருக்கா..

நாங்கள் இன்விடேசனை கையில் எடுத்து காட்ட இடம் கிடைத்துவிட்டடு சொர்க்கத்தில் நுழைய..

அந்த பெண்கள் கல்லூரியில் நாங்கள் மூவரும் நுழைகிறோம்..எங்கெங்கு நோக்கினும் பெண்களடா..மிடியில் சுடிதாரில் சேலையில் என்று கலர்கலராய்..

சிலர் ஏதோ அவர்கள் கண்களுக்கு நாங்கள் தென்படவேயில்லை என்கிற மாதிரி அலட்சியமாக செல்வது போல நடித்து செல்கின்றனர்;.

( கடந்து சென்றபோது திரும்பி பார்த்தாங்களோ இல்லையோ..? )

மஸ்தான் தன் வேலையில் கரெக்டாக இருந்தான். ஞானி அங்க பாரு..நம்ம பஸஸடாண்டுல பார்ப்போம்லடா அந்த பொண்ணுங்க அதோ வர்றாங்க பாரு..

நாங்கள் உடனே சேர்மனிடம் கொஞ்சம் வெயிட் பண்ணச்சொல்லிவிட்டு அவர்களிடம் சென்று கடலை வறுக்க ஆரம்பித்தோம்..

ஹலோ எங்க இந்தப்பக்கம்

எங்க காலேஸ் பங்ஷனுக்கு உங்க பிரின்ஸியை இன்வைட் பண்ண வந்தோம்..நீங்களும் கண்டிப்பா வரணும்..என்ன.? என்று ஒரு இன்விடேசனை அவர்கள் கையில் கொடுத்து அசடு வழிந்து
என்ன சாப்பிட்டாச்சா

எங்க அவள காணோம்.. ( என்று இன்னொரு பொண்ணை பற்றி கேட்டு)

எங்க சொந்தக்கார பொண்ணு இங்கதான் படிக்கிறா ( என்று இல்லாத சொந்தக்கார பொண்ணை பற்றி விசாரித்து)

பீரியடு முடிஞ்சிடுச்சா..

ரெஸ்ட் டைம் எப்போ..

எங்களுக்கு மேத்ஸ் கால்குலஸ் நோட்ஸ் வேணும் உங்க காலேஜ் நோட்ஸ் நல்லாயிருக்கும்னு சொன்னாங்க

என்று சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கடலை கடலை கடலை வறுத்து அந்த கல்லூரி வளாகமே புகை மண்டலமாய் காட்சியளிக்கும் வண்ணம் வறுத்துத் தள்ள

கடலையின் நெடி தாங்காமல் மூச்சு முட்டி அய்யோ நேரமாச்சு வர்றோம் என்று அவர்கள் விடைபெற்றனர்..

இங்கே நவாஸ்கான் மட்டும் தனியாக அந்த மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க..

டேய் ஏண்டா எங்கே போனாலும் லேட்டாக்குறீங்க..டைம் ஆச்சுடா..

பிரின்ஸியை பார்த்து அழைப்பிதழ் கொடுத்து தேநீர் பருகி விடைபெற்றோம். ( தனியா வந்தோம்னா இந்த மரியாதையெல்லாம் கிடைக்காது..அப்படியே வாசல் வழியே அனுப்பிறுவாங்க )

விடைபெற்று மறுபடியும் அந்த சொர்க்கத்தை கடந்து வந்துகொண்டிருக்கும் போது எதிரில்
சில பெண்கள் தலை குனிந்தபடி வந்து கொண்டிருக்க டேய் மஸ்தான் அநத பொண்ண பாரேன் சூப்பரா இருக்கால..

யாருடா..

அந்த குதிரை வால்டா..ரெட் கலர் சுடிதார்..


அவர்கள் பக்கம் நெருங்க..நவாஸ்கான் கிசுகிசுத்தான் டேய் எதுவும் வம்பு இழுத்திறாதீங்கடா..மரியாதையா வந்திருக்கோம்..


எக்ஸ்கியுஸ் மி டைம் என்ன..? - என்னுடைய ஹார்மோன்கள் உசுப்பிவிட கேட்டேவிட்டேன்.

தலை நிமிர்ந்து பார்த்து முறைத்தபடி கடந்து செல்ல..அய்யோ ஞானி அவமானப்பட்டுட்டாயடா.. என்று ஒரு ஹார்மோன் வந்து காதில் சொல்லி விட்டுப் போனது.

எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது ஹலோ என்ன சொல்ல மாட்டீங்களா..ரொம்ப அலட்டிக்கிடாதீங்க..இப்ப உங்க பாட்டியைத்தான் இன்வைட் பண்ணிட்டு வர்றோம்..

வந்ததே கோவம் அவர்களுக்கு..(தேவதைக்கு எவண்டா ஆங்கிலம் சொல்லி கொடுத்தது?)

ஹவ் டேர் யு... ஐ வில் கம்ளைண்ட் டு மேடம்..என்று கூறி விறுவிறுவென்று பிரின்ஸி ரூமை நோக்கி படையெடுக்க


சொன்னேன்ல சரி சரி சீக்கிரம் வாங்க போயிறலாம் சேர்மன் நடையை அதிகப்படுத்தினான்.

வெளியே வந்து பைக்கை எடுத்து சீறிப்பறந்தோம்..


-----


அந்த நாள் வந்தது..மேடையில் எஸ்டிசி கல்லூரியின் பிரின்ஸி மெ... வில் ஆரம்பிக்கும் றி யில் முடியும் அவர்கள் மற்றும் பிரின்ஸ்பால் சில பேராசிரியர்கள் விஐபிக்கள் உட்கார்ந்திருக்க

எங்கள் மூவருக்கும் மேடையில் விஐபிக்களுக்குப்பின்னால் சீட் ஒதுக்கியிருந்தார்கள்.

சேர்மன் காதில் கிசுகிசுத்தான். டேய் பசங்க எல்லாம் திட்டுறாங்கடா ..விழாவுக்கு அவங்கள அழைத்ததற்கு..ஏன்னா அவங்களுக்கு மேடைப்பேச்சு சரியா வராது ..போரடிக்கும்..

சரி என்ன செய்ய கூப்பிட்டாச்சு..விடு - நான்


நான் வரவேற்புரையில் பேசுகிறேன்.


பெண்கள் கல்லூரியின் முதல்வர்
திருமதி ..........

இவர்கள்
பெண்கள் கல்லூரிக்கே
முதல்வர் என்றால்
மிகப்பெரிய தைரியசாலிதான்..

( கை தட்டல்..பிரின்ஸியோ முறைக்கிறார் )

இவர்களுக்கு
பேசவே தெரியாது

( கைதட்டல் பலமாய் ஒலிக்கிறது..விசில் சப்தம் வேறு எங்கள் கல்லூரி பிரின்ஸ்பால் பீர்முகம்மதுவோ ஒரு மாதிரியாய் பார்க்கிறார்..என்னடா இன்னொரு கல்லூரி முதல்வரை இப்படி அவமானப்படுத்தும்படி பேசுகிறான் என்று )

நான் தொடர்கிறேன்.

இவர்களுக்கு பேசவே
தெரியாது
ஆம்
உண்மையைத் தவிர வேறெதுவும்
பேசவே தெரியாது.

என்று கூற மறுபடியும் பலமான கைதட்டல் பிரின்ஸ்பாலுக்கு நிம்மதி..

பிரின்ஸி மட்டும் சிரித்துக்கொண்டே முறைக்கிறார்கள் முறைத்துக்கொண்டே சிரிக்கிறார்கள்.

பின் பிரின்ஸ்பாலை பற்றி கூறும்போது

காதலிப்பவர்களுக்கெல்லாம்
தலை மொட்டையாகட்டும் என
கடவுள் கட்டளையிட்டுவிட்டால்
நமது பிரின்ஸ்பால் தலைதான்
முதலில் மொட்டையாகும்.

( பிரின்ஸ்பால் பார்க்கிறார்..என்னடா இவன் நம்மள வம்புக்கு இழுக்கிறான் என்று )

ஆம்
குழந்தைகளை காதலிக்கும்
பெற்றோர்களை போல
மாணவர்களை காதலித்துக்கொண்டிருக்கிறார்

என்று கூறினேன். அவர் முறைக்கிறார் - வேறு வழியின்றி யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்று சிரிக்கிறார்.

பின் எல்லோரையும் வாழ்த்தி வரவேற்றுவிட்டு அமருகிறேன்.

பிரின்ஸி அவர்கள் பேச வருகிறார்கள்..எங்களுக்கோ பயம் காலேஜ்ல அந்தப் பொண்ணுங்கள கிண்டல் பண்ணினதை சொல்லி கொடுத்திருவாங்களோ என்று?


ஒரு கல்லூரியிலிருந்து இன்னொரு கல்லூரிக்கு மாணவர்கள் வந்தால்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதலில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் புத்தகத்தை படிப்பதற்கு முன்னாலட முதலில் ஒழுக்கத்தை படிக்கவேண்டும்

என்று பொதுவாக ஆரம்பிக்கிறார். சேர்மன் நவாஸ்கான் என்னைப்பார்த்து சிரித்து காதில் கிசுகிசுக்கிறான். ஞானி இது உனக்குத்தான்னு நினைக்கிறேன்.

நானோ என்ன எனக்கா..நமக்குன்னு சொல்லு - கூட்டணி சேர்த்தேன்.

எனக்கும் புரிந்துவிட்டது இது எங்களைப்பற்றிதான் என்று. மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் ஏதோ அறிவுரை சொல்லுகிறார்கள் என நினைத்து ஆர்வமாய் கவனிக்கிறார்கள்.

இன்னமும் அந்த நாட்களை நினைக்கும் போது குஷியாகத்தான் இருக்கிறது.

(நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு என் உறவுக்கார பெண்ணின் சீட் வாங்கும் விசயமாக அவர்களை சந்தித்தேன். ( இப்பவும் அவர்கள்தான் பிரின்ஸி ) அவர்களிடம் கேட்டேன்

என்ன மேடம் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா..?

ஒரு மாதிரியாய் உற்று பார்த்துவிட்டு..எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு

இல்ல மேடம் நான் சதக் காலேஜ்ல என்று சொல்ல வந்து பின் நினைத்துக்கொண்டேன் சீட் விசயமாக வந்திருக்கிறோம் பழைய கடுப்பில் சீட் தரவில்லை என்று கூறிவிடுவார்களோ எனப்பயந்து பாதியிலையே முழுங்கி நீங்க சதக் காலேஜ் பங்ஷனுக்கு வந்தீங்க நான் பார்த்திருக்கிறேன் என்று முடித்தேன்.நல்லவேளை அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை.. )




-ரசிகவ் ஞானியார் -

3 comments:

ஜெகதீஸ்வரன் said...

padithu siriththen. Palaya niyabagankal vanthathu... Nalla pathivu :-))

முத்துகுமரன் said...

ஆனா கடைசி வரை அந்த தேவதைகளைப் பத்தி ஒன்னும் சொல்லலியே... கல்லூரிக் குறும்புகள் காதலைப் போலவே பசுமையானது. இனிமையானது. உங்கள் எழுத்துகளால் நானும் சில நிமிடங்கள் என் கல்லூரி வாழ்க்கையை புரட்டிப் பார்த்தேன். நன்றி ரசிகவ் ( நிலா நண்பன் 0

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//padithu siriththen. Palaya niyabagankal vanthathu... Nalla pathivu :-)) //

//கல்லூரிக் குறும்புகள் காதலைப் போலவே பசுமையானது.//


யார் தங்களுடைய கல்லூரியைப்பற்றி எழுதினாலும் நமக்கு நம் கல்லூரி ஞாபகம்தான் வரும் இந்த அளவிற்கு கல்லூரி வாழ்க்கையில் அனுபவமும் இனிமையும் அதிகம்

நன்றி நண்பர்களே..

தேன் கூடு