Wednesday, September 07, 2005

ஒரு சிப்பாய் கலகம்
1998ம் ஆண்டு செப்டம்பர்மாதம்...அன்று காலை காதல் வளர்க்கின்ற தொலைபேசி வழியாக கலகம் வளர்ப்பதற்காக ஒலிக்கிறது நசீரிடமிருந்து.

டேய் மாப்ள! நீ செகரெட்டரி ஆகி ஒரு வாரம் ஆகுது இன்னும் ஒரு ஸ்ட்ரைக் கூட அடிக்கல பசங்க எல்லாம் ஒரு மாதிரியா பேசறாங்க டா - ஏதோ உலக பொருளாதாரம் சீரழிந்துவிட்டதை போல சீரியஸாய் பேசினான்

எனக்கும் தெரியுண்டா ஆனா ரீசன் எதுவும் கிடைக்கலையே- ஸ்ட்ரைக்குக்கு எதுக்குப்பா ரீசன்..?

அடிப்படை கல்லூரி மாணவர்களின் அறிவில்லாமல் பேசினேன். கல்லூரி மாணவர்கள் எதுக்குத்தான் ஸ்ட்ரைக் அடிக்கணும்னு ஒரு காரணமேயில்லை.( டேய் டேய் அவ வீட்டுல நாளைக்கு ஃபங்சன்..அவ காலேஜ் வரமாட்டா அதனால ஸ்டிரைக் அடிடா என்று கெஞ்சிய
மாணவர்கள் கூட உண்டு )

இருக்குடா ஒரு ரீசன்- உற்சாகமாய் கூறினான் நசீர்

( அமெரிக்காவை கண்டுபிடித்து கத்திய கொலம்பஸ்ஸின் உற்சாகம் போல)

என்னடா சொல்லித்தொலை
- மிளகாயை கடித்த குழந்தையைப்போல நான் எரிச்சலோடு கேட்டேன்

நேத்து ஒரு அறிவிப்பு வந்துச்சு தெரியுமால..அதாண்டா..இனிம எக்ஸாம் பீஸை கல்லூரியில் கட்டாமல் பேங்கில் கட்டவேண்டும் என்று
- அட காரணத்தை பாருங்களேன் அரியர்ஸ தூக்குடா முதல்ல

அது நல்லதுதானேடா.காலேஜ் ஆபிஸ்ல எல்லோரும் மொத்தமா அடைஞ்சி நிற்கிறத விட அவங்கங்க வீட்டு பக்கம் இருக்கிற பேங்கில கட்டுனா ஈஸிதானடா
- நான் பொறுப்பில்லாமல் பேசினேன்.

மடத்தனமா பேசாதடா..பசங்க பேங்க்ல போய் கட்டலாம்..எல்லாப் பொண்ணுங்களும் பேங்க்ல போய் நிற்க முடியுமா யோசிச்சு பாருடா கொஞ்சம்..
- ஆமா பெண்ணுரிமையை காக்க வந்த ஜீன்ஸ் பாரதி இவன்

யோசிச்சுப்பார்த்தேன்... @@@@ ( ப்ளாஷ்பேக்குபா..கொசுவர்த்தி கிடைக்கல அதான்)

"இந்த நாய் எதுக்கு அடிபோடுதுன்னு தெரியும்...எல்லா பொண்ணுங்களும் பேங்க்ல போய் கட்ட ஆரம்பிச்சுட்டாங்கன்னா..இங்க காலேஜ்ல பசங்களும் பொண்ணுங்களும் கியுல நின்னு
கட்டும்போது ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணலாம்ல அதுக்குதான் ...இல்லைனா அவன் க்ளாஸ்ல நடக்கிற பரிட்சைக்கு படிக்காம வந்திறுக்கணும்"

சரிடா ஸ்டிரைக் அடிக்கலாம்டா
- நானும் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தேன்

எல்லையில் எப்படி போர் முறையை கையாளுவது என்ற திட்டமிடும் இராணுவீரர்களை போல திட்டங்கள் பேசியாயிற்று.


----------

அதிகாலை 7.30 மணிக்கே கல்லூரி வந்தாயிற்று நண்பர்களுடன்.
( ஸ்ட்ரைக் நேரத்துலதான் காந்தியோட நேரம் தவறாமையை பசங்க கடைப்பிடிப்பாங்க )

வாட்ச்மேனிடம் சண்டையிட்டு கல்லூரி கேட்டை பூட்டியாயிற்று. கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் இந்த விசயம் தீயை போல பரவ ஆரம்பிக்க ......

ஹாஸ்டல் மாணவர்களில் சிலர் தான் காதலிக்கும் பெண் அரியர்ஸ் வைத்துவிட்டாள் என்ற செய்தியை கேட்டு பதறும் மாணவர்களைப்போல பதறி அடித்துக்கொண்டு போலியான பதட்டத்தோடு ஓடிவந்துகொண்டிருந்தார்கள்..

ஏல இன்னிக்கு ஸ்ட்ரைக்கால.. - கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வேட்டியை உயர்த்தி கட்டிக்கொண்டு போகும் அந்த சீனியர் எம் காம் மாணவன் அதட்டி கேட்கிறான்

ஆமல சீக்கிரம் எல்லோரையும் கூப்புடுல..ஸ்டென்த் இருந்தாத்தான் சமாளிக்க முடியும் -
நான்

( காலேஜ் செகரட்டரியா இருக்கிறதால சீனியர் ஸ்டூடண்ட மரியாத இல்லாம கூப்புடறியோ இருல ஸ்டிரைக் நேரத்துல உன் தலைக்கு கல் அனுப்புறேன் - ஞானியாரை முறைத்துக்கொண்டே சென்றான் சீனியர்)

அதோ மூச்சிறைக்க ஓடி வருகிறான் கல்லூரி சேர்மன் நவாஸ்கான்..

டேய் டேய் என்னடா மாப்ள ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லல..இன்னிக்கு ஸ்டிரைக்காடா - கல்லூரி சேர்மன் பிரின்ஸ்பாலின் சொந்தக்காரனாக இருப்பதால் எல்லோரும் அதற்கு அடுத்த பதவியில் செகரட்டரியாக இருக்கும் என்னைதான் சேர்மனாக மதித்தார்கள்.

இல்ல நானே இன்னிக்கு காலேலதான் முடிவு பண்ணினேன்
- ஆமா பெரிய அந்திய- அமெரிக்க பிஸினஸ் மீட்டிங்

சரிடா எதுக்குடா ஸ்ட்ரைக்? என்ன பிரச்சனை ..? - சேர்மன் பொறுப்பின்றி கேட்டான்


திடீரென்று மறந்துவிட்டது எனக்கு..திரும்பி பின்னால் நின்ற மஸ்தானிடம் கேட்டேன்...

இல்லைடா பணத்தை பேங்க்ல கட்ட சொன்னாங்கல்ல அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுதான் ஸ்ட்ரைக்
- என்று கூற

அவனும் என்னை சுற்றி ஆதரவாய் கூட ஆரம்பித்த மாணவர்களின் கூட்டத்தை கவனித்துவிட்டு வேறுவழியின்றி சரிடா ஸ்டிரக் அடிச்சிருவோம் என தலையாட்டினான்.

அவன் மறுத்துவிட்டால் அதை எதிர்ப்பதற்கே ஒரு கும்பல் உள்ளது.

கல்லூரிக்கு ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்
புத்தகத்தை இடுப்பில் சொருகி வைத்துக்கொண்டும்..
டிபன்பாக்ஸை பத்திரமாய் கீழே விழுந்திடாதபடி கையில் வைத்துக்கொண்டும் சில மாணவர்கள் -
காதலை இதயத்தில் மட்டும் வைத்துக்கொண்டு சில மாணவிகள் கொஞ்சம் கொஞ்சமாய் வரத்தொடங்க,


டேய் ஞானி மைக்ரோபயாலஜி - கம்ப்யுட்டர் சயின்ஸ்ல உள்ளவங்க மட்டும் எப்போதும் ஸ்ட்ரைக் நடந்தாலும் பிராக்டிகல் செல்ஃப் பைனான்ஸ் அப்படின்னு காரணம் சொல்லி உள்ள போயிடுறாங்கடா..இன்னிக்கு யாரையும் விடக்கூடாது
-அந்த ரவுடி பசூல் பொறுப்பாய் கூறினான்

அந்த பசூல் காலேஜுக்கு வர்றதை விடவும் பக்கத்துல இருக்குற கோர்ட் வாய்தாவுக்குதான் அதிகமா போயிருக்கான். அவன் காலேஜுக்கு வர்றதே அதிகம். இங்க பாருங்களேன் ஸ்ட்ரைக்குன்னு கேள்விப்பட்டவுடன் எப்படி வந்துட்டான்.

சரிடா யாரையும் விடவேண்டாம் நான் பார்த்துக்கறேன்..

அதோ இயற்பியல் துறை பேராசிரியர் ரபீக் தனது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இன்னொரு மாணவனை ஏற்றிக்கொண்டு தடுமாறி வருகிறார் வைக்கோல் ஏற்றி வரும் லாரியைப்போல

பக்கத்தில் வந்ததும் நிலை உணர்ந்து அவரே வண்டியை நிறுத்தினார்.

என்னப்பா ஞானி ஸ்ட்ரைக்கா..? எதுக்காக..? - புன்னகைத்தபடியே கேட்டார்

காரணத்தைக் கூறினேன். மறுபடியும் புன்னகைத்தார்.

சரி நான் உள்ள போகலாமா - பேராசிரியர் ரபீக்

நீங்க போங்க சார் ஆனா பின்னால இருக்கிறவன மட்டும் இறக்கி விட்டுறுங்க..இல்லைனா பசங்க ஒரு மாதிரியா பார்ப்பாங்க

ஆமா ஆமா அது நியாயம்தான் - அந்த பையனை இறக்கி விட்டுவிட்டு அவர் பறந்து விட்டார்

மஸ்தான் அனிச்சை செயலாய் தனது பேண்ட் பாக்கெட்டில் உள்ள சீப்பை எடுத்து தலையை சீவ ஆரம்பித்துவிட்டான். அப்படியென்றால் மாணவிகள் வரத்தொடங்குகிறார்கள் என்று அர்த்தம்.

அட பாருங்களேன் ஜோசியம் பலித்தது..மாணவிகளும் கொஞ்சம் கொஞ்சமாய் தலைகாட்டத் துவங்கினர்.

அவனுக்குண்டான ஆள் வரும்போதும் அவனவன் என்னிடம் வந்து ஞானி இன்னிக்கு விடக்கூடாது ..ஸ்ட்ரைக்கை சக்ஸஸ் பண்ணிறனும்.. என்று என்னிடம் ஏதோ பரபரப்பாய் பேசுவது போல நடிக்க

அதைக்கண்ட மாணவிகள்

அட நம்ம ஆள்தான் பரபரப்பா இருக்கார் போல என்று நினைத்துக்கொள்வதற்காக..

மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோதனத்தை காட்ட ஆரம்பித்தனர்.


டேய் டேய் ஞானி அந்த மைக்ரோபயாலஜி பொண்ண பார் உள்ள போக ட்ரை பண்றா..
- அவள் உயிரே மனிஷா கொய்ராலா போல எல்லையை தாண்ட முயற்சித்தாள்

கல்லூரி கேட்டை ஒட்டி உள்ள சிறிய கேட் வழியாக அந்த பெண் பயந்தபடியே நுழைய ஆரம்பித்தாள்.

ஓ ஓ ஓ... மாணவர்கள் கத்தினர்


போறாள பொன்னுத்தாயி..
அரியர்ஸ் நாலு வச்சுக்கிட்டு!
யாராவது அவள போய்
கூட்டிட்டு வாங்க..


-என பெட்டைக்குளம் காஜா பாட ஆரம்பித்தான் கிழக்குச்சீமையிலே பட பாடலை கிண்டலடித்தபடியே


நான் அந்த மாணவியிடம் சென்று

என்ன நீ மட்டும் உள்ள போற மத்தவங்க நிக்குறது உனக்கு தெரியலயா - கஷ்டப்பட்டு கோபத்தை வரவழைத்துக் கேட்டேன்

டேய் டேய் வழியுறான் பாரு - மாணவர்களிடமிருந்து கமெண்ட்ஸ்

இல்ல..வந்து..க்ளாஸ்க்கு போகமாட்டேன்..அந்த கேர்ள்ஸ் ரூமுக்குத்தான் போறேன்..
இங்க வெளியில நிற்க ஒரு மாதிரியா இருக்கு


பெண்ணென்றால் பேயும் இறங்குமாம். ஆனால் நான் மனுசன்தானே ( யாருசொன்னான்னு நீங்க கேட்குறது காதுல விழுது பா )


சரி சரி க்ளாஸ்க்கு போக கூடாது ..நாங்க ஸ்ட்ரைக் அடிக்கிறதே உங்களுக்காகதான் - ஹீரோத்தனமாய் பேசிவிட்டு மறுபடியும் மாணவர்களைநோக்கி வந்தேன்

என்னடா அவள மட்டும் விட்டுட்ட - பசூல்

இல்லடா அவ க்ளாஸ்க்கு போகமாட்டா அங்க கேர்ள்ஸ் ரூமுக்குதான் போறாளாம்..

ஆமா இப்படியே விட்டா எல்லா பொண்ணுங்களும் ரெஸ்ட் ரூமுக்கு போயிருவாங்க..

அது சரிதாண்டா எல்லா பொண்ணுங்களும் இங்க நின்னாங்கன்னா எவனாவது கிண்டல் பண்ணுவான்..அது வேற பிரச்சனை எதுக்கு..பொண்ணுங்கள அந்த ரெஸ்ட் ரூமுலயே இருக்க வைப்போம்..
- அட நம்புங்க நான்தாங்க இப்படி சொன்னேன்.

நீயெல்லாம் ஏண்டா காலேஜ் வர்ற -
விட்டால் கொலைசெய்திடுவான் போல அந்த அளவிற்கு என்னை முறைத்தான் பசூல்.

ஸ்ட்ரைக் இன்னமும் சூடு பிடிக்கவில்லை..ஒவ்வொரு மாணவர்களாய் வந்து
கூட்டம் ஏறிக்கொண்டேயிருந்;தது.

ஞானி ஞானி இங்க பாரேன் அபுல்ஹசனை - பெட்டைக்குளம் காஜா கிசுகிசுத்தான்

காதலர்தினம் குணால் மாதிரி மரத்து ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் அந்த பிஸிக்ஸ் அபுல்ஹசன்.

அவனுக்கென்னடா..? - நான்

நேத்து ஹாஸ்டல்ல அவங்க க்ளாஸ் பொண்ணு வீணாவை நினைச்சு வீனா வீனான்னு..புலம்பிகிட்டு இருந்தாண்டா ..

(வீணாய் போகிறவர்கள் எல்லாம் இப்படித்தான் புலம்புவார்களோ..?)

டேய் வீனா!.... வீனா!... என்று கத்த - அவன் திடுக்கிட்டு திரும்பினான் என்னடா நம்மாளு பேர சொல்லி இவன் கத்துறானே என்று பின் நாங்கள் கிண்டலடிக்கிறோம் என தெரிந்தவுடன் சிரித்துக்கொண்டான்.

இவன் பக்திக்கு ஒரு எல்லையே இல்லைடா..அங்கே பாரு
- கைகாட்டினான் பெட்டைக்குளம் காஜா

ஷாபி தலையில் தொப்பியோடு ஒரு ஓரத்தில் எந்த ஆசிரியர்களும் அவனை பார்த்துவிடாதபடி நின்று கொண்டிருந்தான்..

டேய் ஷாபி..ஷாபீபீபீபீபீ... கத்தினேன்.

பதறிப்போய் திருபம்பினான்..என்னடா..?

இந்த நேரத்துல கூட தொப்பியா..கழட்டுடா..இல்லைனா தூரத்துல இருந்து பார்த்தாலும் நீ மட்டும் கரெக்டா தெரிவடா..

அவசர அவசரமாய் கழட்டினான்..

இப்படி ஜாலியும் கேலியுமாய் நொடிகள் நகர்ந்து கொண்டிருந்தன..

இந்தக் கூட்டம் போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா..

- கூட்டத்தில் தலையை மறைத்தபடியே இன்னமும் அரியர்ஸ் வைத்திருக்கும் அந்த மியான்பள்ளி கரீம் கத்தினான்

போடுங்கய்யா ஓட்டு..ஞானியாரைப்பார்த்து
போடுங்கய்யா கல்லு...ப்ரின்ஸ்பாலைப் பார்த்து

ப்ரின்ஸ்பால் டவுண் டவுண்.

( குஷியில் என்ன கத்துவது எனத்தெரியாமல் மாணவர்கள் வாய்க்கு வந்தபடி கோஷமிட்டனர்)

அதோ தூரத்தில் என்னுடைய கணித பேராசிரியர் அப்துல்காதரின் அந்த வெள்ளை நிற அம்பாசிடர் வந்து கொண்டிருக்கிறார். அவர் மீது எனக்கு மதிப்பு அதிகம்

டேய் அப்துல்காதர் வண்டி வருது..இந்தா நீ கேட்டை திறந்து விடு..நான் மறைஞ்சி நின்னுக்கறேன்.- பசூலித்தினீடம் சொன்னேன்.

சரியான பயந்திடா நீ...நில்லுடா இங்கேயே..என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...

அவர் என்னை பற்றி தவறாக நினைத்திடுவாரோ என்று கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த ஜுனியர் மாணவர்களிடம் கூறினேன்.

டேய் அப்துல்காதர் வண்டி வருது..அவர் வண்டி உங்கள நெருங்கும் போது..ஞானியார் ஒழிகன்னு கத்துங்க - சொல்லிவிட்டு மீண்டும் கேட் அருகே வந்தேன்.


அவர் வண்டி நெருங்கியது ஜுனியர் மாணவர்கள் கத்தத்தொடங்கினர்

ஞானியார் ஒழிக ஞானியார் ஒழிக

ஞானியார் ஒழிக ஞானியார் ஒழிக
- இன்னொரு புறத்திலிருந்து ராஜா வேறு கத்துகிறான்

( ஏன்னா அவர் நினைத்துக்கொள்வார். பசங்க ஞானியார் பேச்சையும் கேட்க மாட்டேங்கிறாங்க போல..ஞானியாருக்கும் எதிர்ப்பு இருக்கு என்று )


வண்டி என்னை நெருங்கிற்று ..

என்னப்பா ஞானி ஆரம்பிச்சிட்டியா ஸட்ரைக் ..நீ மேத்ஸ் ஸ்டூடண்ட் பா மத்த பசங்களோட ஸ்ட்ரைக் அது இதுன்னு சுத்துனா ஒண்ணுமே புரியாது..அப்புறம் அரியர்ஸோடதான் வெளிய போகணும்..ஒழுங்கா படிக்கிற வேலய பாரு.. - அந்த நேரத்திலும் அட்வைஸ் செய்கிறார் தனக்கே உரித்தான அந்த மலையாளம் கலந்த தமிழில்

இல்ல சார் நான் சொல்லிட்டேன் பசங்கதான் கேட்க மாட்டேன்கிறாங்க சார்.. - அப்பாவியாய் கூறினேன்.

அவரும் நம்பி விட்டார் ( இதுக்குத்தான் அந்த ஞானியார் ஒழிக கோஷம் )


கேட்டை திறந்து விட அவரும் உள்ளே செல்கிறார். சில குரங்குகள் கேட்டின் மீதேறி உட்காரத்தொடங்கின.

டேய் டேய் கேட்ல உட்காராதீங்கடா இறங்குங்கடா - கெஞ்சினேன்.

பசுல் அவங்கள கொஞ்சம் பாருடா என்று அவனிடம் சொல்ல திரும்பினேன்..

அட அவன்தான் முதலில் ஏறி நிற்கிறான்..

பிரின்ஸ்பால் இன்னமும் வரவில்லை..அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

சல்...ஒரு கல் வந்து விழுந்ததில் அந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கு தெறித்தது

டிங்..இன்னொரு கல் கேட்டில் வந்து விழுந்தது

புரிந்து கொண்டேன் பி.காம் மாணவர்கள் வந்துவிட்டார்கள் என்று.

( பயந்தபடி நின்றேன் எவனாவது நம்ம தலையில கல் விட்டுறக்கூடாதென்று ..காலையில ஒரு சீனியர் மாணவனிடம் வேறு முறைச்சிக்கிட்டோம்..பயந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நின்றேன்.)


அதோ அந்த ஒல்லியான கம்ப்யுட்டர் சயின்ஸ் மாணவி சினேகா தனது இருசக்கர சன்னி வாகனத்தில் மாணவர்களின் இதயத்தை டயருக்கு அடியில் வைத்து பஞ்சராக்கிவிட்டு வந்து கொண்டிருக்கிறாள்..

பசூல் கத்தினான்

டேய் அவகிட்ட போய் சொல்லுடா ...அவங்க க்ளாஸ்ல யாருமே ஸ்ட்ரைக்கை மதிக்கமாட்டாங்க..இவதான் யுனிவர்சிடி ஃபர்ஸ்ட் வாங்கணும்னு முயற்சி பண்றா..
இவ மத்த பொண்ணுங்ககிட்ட சொல்லி க்ளாஸ் அட்டண்ட் பண்ணிற போறா...

சினேகா நேராக கேட் அருகே வந்துதான் ப்ரேக்கை அழுத்தினாள்..( திமிருதான் )

ஹலோ உங்க க்ளாஸ்தான் சொன்னா கேட்க மாட்டாங்க ..நேரா போய் லேடிஸ் ரெஸ்ட் ரூம்ல இருக்கணும்..க்ளாஸ் போகக் கூடாது..என்ன..?
- கெஞ்சியபடி கோபப்பட்டேன்

எதுக்கு - திருப்பி கேட்டாள்

காரணம் சொல்வதற்குள் டேய் போதுண்டா போதுண்டா இதான் சாக்குன்னு வழியாத அனுப்புடா சீக்கிரம் - கமெண்ட்ஸ் வர ஆரம்பித்தவுடன் அவள் கிளம்பிவிட்டாள்

டேய் இங்க பாரு இன்னொரு வண்டி வருது... பசூல் பதறினான்

அதோ குஷ்பு வந்து கொண்டிருக்கிறாள்.


இப்ப பாரு நம்ம சையதலி பின்னால ஃபாலோ பண்ணிட்டு வருவான் ராஜ்குமார் வண்டியில - நான்

ஜோசியம் பலித்தது அந்த குஷ்புவின் வண்டியை விரட்டிக்கொண்டு சையதலி வந்து கொண்டிருக்கிறான் ஒளியை விடவும் அதிக வேகத்தில்.

டேய் நில்லுடா நில்லுடா இங்க வந்து ஓரத்துல நில்லு..பொண்ணுங்கள விரட்டிட்டு வந்தா கண்ணு தெரியாதே உனக்கு - பசூல்

அவனும் வெட்கப்பட்டுக்கொண்டே வண்டியை ஓரத்தில் ஒதுக்கினான்.

சத்தம் அதிகமாகியது சீனியர் மாணவர்களிடமிருந்து.
சத்தம் குறைந்தது ஜுனியர் மாணவர்களிடமிருந்து.


அப்படியானால் பிரின்ஸ்பால் வந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆம் அதோ வந்து கொண்டிருக்கிறார் சக்திமான் வேகத்தில்.
( அவருக்கு மாணவிகள் வைத்த செல்ல பட்டம் அது - சக்திமான்)


பக்கத்தில் வந்தவுடன் ஒரு முறை முறைத்தார் அவ்வளவுதான் ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.

பிரின்ஸ்பால் டவுன் டவுன் - சத்தம் அதிகமாகியது

( அட எதுக்குடா காரணமில்லாம கத்துறீங்க )

குரங்கு தூது சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள்..ஆனால் குரங்குகளுக்கு தூது சென்றது கேள்விப்பட்டிருப்பீர்களா..?

இதோ பிரின்ஸ்பாலிடமிருந்து அவரது உதவியாளர் எங்களிடம் தூதுக்கு வருவது அப்படித்தான் இருந்தது.

ஞானி உன்னய பிரின்ஸ் கூப்புடறார்

சரி வருகிறேன்..- நான்

பைக்கை ஸ்டார்ட் செய்தான் பசூல்..மற்ற மாணவர்களும் என்னுடன் வரத் தயாராயினார்கள்.

டேய் எல்லோரும் ஆபிஸ் போகவேண்டாம் நீங்க நில்லுங்க நான் போறேன்
- நான்

இல்லடா நீ மட்டும் உள்ள போ நாங்க வெளியில் சைடுல நின்னு என்ன நடக்குதுன்னு நோட்டம் விடுறோம்.
- பசூல்

என்ன சொல்ல போகிறாரோ? என்ற பயத்தில் நான் மட்டும் உள்ளே போகிறேன்.

-----------------

பிரின்ஸ்பால் ரூமுக்குள் செல்கிறேன். தனது உதவியாளரோடு முக இறுக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.


வாங்க செகரெட்டரி என்ன பிரச்சனை... - நக்கலாக சொல்லுகிறார்

இல்ல சார் வந்து பேங்க்ல போய் பீஸ்..

பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டார்..

அதுக்கு எங்கிட்ட வந்து கேட்க வேண்டியதுதானே..ஒண்ணுமே கேட்காம ஸ்ட்ரைக் அடிக்கிறீங்க..

இல்ல சார் பசங்கதான் கேட்காம ..

முதல்ல நீ போய் கூப்பிட்டுட்டு வா - குறுக்கிட்டார் பிரின்ஸ்பால்

பசங்க எல்லை மீறிட்டானுங்க சார்..ஞானியாரை கூட யாரும் மதிக்கல சார்..
- அப்துல்காதல் சார் சொல்லியடி உள்ளே வந்தார்

(அந்த ஞானியார் ஒழிக கோஷம்தான் வேலை செய்யுது)

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு அஞ்சு பைசா நாணயம் வந்து ஜன்னல் வழியே விழுகிறது

மறுபடியும் ஒரு நாணயம்...இரண்டு..மூன்று.. எல்லாம் அஞ்சு பைசா நாணயங்கள்..

ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினேன். வேற யாரு பசூலித்தின்தான் கையில் சில்லறைகளாக மாற்றி வைத்துக்கொண்டு கூட்டத்தில் மறைந்து நின்று கொண்டு எறிகிறான்..

நீ இன்னமும் பத்திரிக்கைக்கு ஆர்ட்டிக்கிள் எழுதிக்கிட்டு இருக்கியா ஞானியார்..?
- பிரின்ஸ்பால்

என்ன சம்பந்தமில்லாமல் கேட்டகிறார் ஆமா சார்

அப்ப நாளைக்கு பத்திரிக்கையில் எழுது..
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பிரின்ஸ்பாலின் அறையில் பண மழை -ன்னு எழுது

- ஆதங்கத்தில் கூறினார்

எனக்கு சிரிப்பு வேறு வருகிறது..ஆனால் அடக்கவும் முடியவில்லை சிரிக்கவும் முடியவில்லை

ஆமா சிரிச்சுக்கோ போய் பசங்கள சமாதானப்படுத்தி க்ளாஸ் அட்டண்ட் பண்ண சொல்லு
இல்லைனா ரோட்டுல போய் நின்று திருச்செந்தூர் - தூத்துக்குடி பஸ்ஸை மறிச்சுடுவானுங்க பிரச்சனையாயிடும்.போய் பசங்கள உள்ள கூப்பிடு

நானும் வெளியே போனேன்.

ஓ ஓ ஓ..மாணவர்கள் கத்தத் தொடங்கினர் ( இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கத்துறானுங்கபா..என்ன செய்ய? )

பிரின்ஸ்பால் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார். என்ன செய்ய இப்போது? கத்தியின் முனையில் நான்..

மாணவர்களிடம் சென்று பிரின்ஸ்பால் க்ளாஸ் அட்டன்ட் பண்ணச் சொல்றார் ன்னு சொன்னா
மாணவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும்.

எதுவுமே சொல்லவில்லை என்றால் பிரின்ஸ்பாலின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு ஐடியா உதித்தது..

மாணவர்களின் பக்கம் சென்று

டேய் உள்ள போகாதீங்கடா உள்ள போகாதீங்க
உள்ள போகாதீங்கடா உள்ள போகாதீங்க


என்று வார்த்தைகளில் மட்டும் சொல்லிவிட்டு தலையையும் கையையும் கல்லூரி பக்கம்
சைகையில் அசைத்துக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் இருந்து கவனிக்கும் பிரின்ஸ்பால் ஞானியார் பசங்கள உள்ள கூப்பிடுகிறான் போல என்ற நம்ப வைக்கும் அளவிற்கு நடித்தேன்.

இங்கே பசங்களோ என்னடா இவன் வார்த்தையில் போகாதீங்கடா என்கிறான்..சைகையை
உள்ளே போவது போல காட்டுகிறான் என்று என் நிலைமை நினைத்து சிரிக்கவும் கத்தவும் ஆரம்பித்துவிட்டர்கள்..ஓ ஓ ஓ ஓ.

இந்த லட்சணத்தில் பிகாம் மாணவர்கள் அங்குள்ள பழைய பேப்பர் - குச்சி என்று எடுத்து உருவ பொம்மை தயாரித்து பிரின்ஸ்பால் என எழுதி கொடும்பாவி எரிக்க ஆரம்பித்தனர்;


அடப்பாவிகளா ஒண்ணுமே இல்லாத மேட்டருக்கு கொடும்பாவியா..? ஏண்டா அரசியல்வாதிகளை பாலோ பண்றீங்க..?

கட்டுக்கடங்காமல் நிலைமை போகவே மீண்டும் பிரின்ஸ்பாலிடம் வந்து சார் பசங்க கல்லெறியறது பஸ்ஸை வழிமறிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டாங்க..நீங்க ஒரு முடிவு சொல்லுங்க சார்..

சரி சரி நாளையிலிருந்து காலேஜ்லையே பீஸ் கட்டணும்னு சொல்லிரு போ..அவங்கள அப்படியே கலைஞ்சி போகச்சொல்லிரு..கூடி கூடி நின்னாங்கன்னா பிரச்சனைதான்..
- வேண்டா வெறுப்பாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்

மறுபடியும் மாணவர்களிடம் வந்து ஸ்ட்ரைக் சக்ஸஸ் நாளையிலிருந்து பீஸை காலேஜ்லயே கட்டலாம்

ஓ ஓ ஓ..கத்தல் அதிகமாகியது..

சிலர் அப்படியா ச்சே அவர் மறுத்தார்னா இன்னும் இரண்டு நாள் ஸ்;ட்ரைக் அடிக்கலாம்னு பார்த்தோம் என்று மனம் நொந்தபடியே புறப்பட்டனர்.( எங்கே போவானுங்க ..சிலபேர் சூரியன் கருகும் வண்ணம் கடலை வறுப்பானுங்க....சிலபேர் சினிமாவுக்கு ...ஆனா நான் வீட்டுக்கு போய்ட்டேன்பா)

சில சாலை விளக்குகள் உடைக்கப்பட்டும் சில பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டும் ஒருவழியாக முடிந்தது சிப்பாய் கலகம் சாரி சாரி குரங்குகளின் கலகம்.

-ரசிகவ் ஞானியார்

3 comments:

தாணு said...

கலகம் ஆரம்பித்த நொடியிலேயே அது சதக்லேதான்னு புரிஞ்சிட்டுது. ஆண்டுகள் ஓடினாலும் அடாவடித்தனம் அதே மாதிரிதானோ? 80 களில் உங்கள் கல்லூரி கோ-எட் ஆகாதபோது
கத்தி கபாடாக்களுடன்,எங்கள் மகளிர் விடுதியை உங்கள் மாணவர்களிடமிருந்து காக்க மெடிக்கோஸ் இரவு முழுதும் ரோந்து போன நாட்களெல்லாம் ஞாபகம் வருது!

//குரங்கு தூது சென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்
குரங்குகளுக்கு தூது சென்றது கேள்விப்பட்டிருப்பீர்களா//
நல்ல சொல்நயம் உங்களுக்கு!சொந்த ஊர் காயல்பட்டினமா?

உங்கள் நண்பன்(சரா) said...

its very nice my friend
please write more
its remember everyones college life
very nice

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//80 களில் உங்கள் கல்லூரி கோ-எட் ஆகாதபோது
கத்தி கபாடாக்களுடன்,எங்கள் மகளிர் விடுதியை உங்கள் மாணவர்களிடமிருந்து காக்க மெடிக்கோஸ் இரவு முழுதும் ரோந்து போன நாட்களெல்லாம் ஞாபகம் வருது!//


நாங்களெல்லாம் நல்ல பசங்க தாணு ..
அப்படியெல்லாம் பண்ண மாட்டோம்..

//நல்ல சொல்நயம் உங்களுக்கு!சொந்த ஊர் காயல்பட்டினமா?//

எனக்கு காயல் பட்டினமல்ல..திருநெல்வேலிதான்

விமர்சித்த தாணு மற்றும் சரணுக்கு நன்றி

தேன் கூடு