
வரவேக்கூடாது என
வரம் கேட்ட நாட்கள்
இதோ வந்துவிட்டது
இந்தியாவிட்ட
ராக்கெட்டைவிடவும்
வேகமாய் வந்துவிட்டது
கல்லூரியின் கடைசிநாட்கள்
கல்லூரிப்பேருந்தில்
டிக்கெட் எடுத்ததை
அதிசயமாய் பார்த்த நண்பர்கள்!
பிகர்கள் முன்னால்
பந்தா காட்டுவதற்காக
படுவேகமாய் பைக்கில் வந்தபோது என்னை
கவிழ்த்துவிட்டுச்சென்ற இந்த
கல்லூரிச்சாலை...
கேண்டீனில் டீ குடித்துவிட்டு
காசு கொடுக்காமல் நழுவிய
கலகலப்பான நாட்கள்
காதலைச்சொல்வதற்கு
தைரியமில்லாமல்
கேண்டீன் சுவர்களில் எழுதிய
கவிதைகள்
எவள் வருகைக்காகவோ
எவன் வருகைக்காகவோ
காத்திருக்க வைத்த
அந்த ஆலமரம்
எல்லோருடைய காதலையும்
எல்லோருடைய அரியர்ஸையும்
எல்லோருக்கும் தெரியவைக்கும்
நாம்
கரன்டிவி என
கிண்டலாய் அழைக்கும் - அந்த
குண்டுப்பையன்
பஸ்ஸில் தொங்கிச்சென்று
பாதசாரிகளை கிண்டலடித்த
பாளையங்கோட்டை வீதிகள்
பஸ்ஸின் மேற்கூரையில் நின்று
ப்ரேக்டான்ஸ் ஆடியபோது
தவறிவிழுந்து
தனியார் ஆஸ்பத்திரியில்
நண்பர்களோடு தூங்கிய நாட்கள்
கடைசி பெஞ்சிலிருந்து
கடலை வறுத்துக்கொண்டிருக்கும் அந்த
நளபாகர்கள்
அரசியல்வாதிகளைப்போலவே
ஆட்களை மாற்றிக்கொண்டிருக்கும்
சில மாணவிகள்
பல மாணவர்கள்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாட்டைக்கேட்டவுடன்
அழுதுவிடுகின்ற அந்த
அப்பாவி மாணவன்
அந்த மாணவியிடம்
ஏதோ ஒன்றைச் சொல்லி
கன்னத்தில் அறைவாங்கிவிட்டு
நாம்
பார்த்துவிட்டதால்
பல்லிளித்துச் சென்ற
கல்லூரிச் சேர்மன்
கல்லூரி விழாக்களில்
கலாட்டா செய்பவர்களை
கண்டுபிடிப்பதற்காகவே
பிரின்ஸ்பாலால் நியமிக்கப்பட்ட
பறக்கும் படைகள்
காதலை சொல்லிவிட்டு
அழுதுகொண்டிருக்கும் மாணவர்கள்
காதலைச்சொல்லாமலேயே
அழுதுகொண்டிருக்கும் மாணவர்கள்
அவளைக்காதலிப்பதாய் இவளும்
இவளைக்காதலிப்பாய் அவளும்
இப்படி
எத்தனை எத்தனை
பானிபட் இதயங்கள்..
இந்த
சின்ன சின்ன ஞாபகங்கள்
சின்ன சின்ன சேட்டைகள்
மடியப்போகிறதே?
வாழ்க்கையின்
மையப்பகுதி முடியப்போகிறதே?
காதல் பிரிவு
நட்பு பிரிவு
கல்லூரி பிரிவு
இப்படி
எத்தனையோ பிரிவுகளுக்குள்
எங்களை வீழ்த்தப்போகும் அந்த
கடைசிநாள் வரத்தான் வேண்டுமா..?
அரசியல்வாதிகளே!
கல்லூரியின் கடைசிநாட்களை
வரச்செய்யமாட்டோம் என்ற
ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுங்கள்
ஓட்டு உங்களுக்குத்தான்..
நாளை
கல்லூரின் கடைசிநாள் விழா
தயவுசெய்து நண்பர்களே
இன்றிரவே
அழுதுவிட்டு வாருங்கள்!
கூட்டம் கூட்டமாய் வந்துவிட்டு
தனித்தனியாய் பிரியப்போகிறோம்!
பரவாயில்லை
ஏதாவது ஒரு நாட்டில்..
ஏதாவது ஒரு பஸ்ஸ்டாண்டில்
ஏதாவது ஒரு இரயில்வேஸ்டேஷனில்..
ஏதாவது ஒரு தெருவீதிகளில்
ஏதாவது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில்
மீண்டும் சந்தித்தால்
கல்லூரிப்பருவத்தைப்
புதுப்பித்துக்கொள்வோம்
இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்..
இதயம் நட்புடன்
ரசிகவ் ஞானியார்
1 comment:
good one.but konjam athikamaaka soRkaLai upayookappaduthukiRiirkaL enRu thonRukiRathu kavi!
Post a Comment