வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதாவது ஒரு படியாக அல்லது எல்லாப் படிகளிலும் ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர்.
கல்லூரிக் காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் பேராசிரியர் இராமய்யா. அவரைப்பற்றிய பதிவு இதோ..
என்னைக்கவர்ந்தவர்கள்
சென்ற வருடம் நான் எழுதிய ஆசிரியர் தினக் கவிதை ஒன்றையும் இங்கே மறுபதிவிடுகின்றேன்.
ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்

எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..
ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!
எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!
எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதி மிஸ்!
கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!
"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி
"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "
"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!
கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!
நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!
தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கியநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!
"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"
என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!
இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!
ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!
என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!
அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!
அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!
இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....
நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...
"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"
என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்
"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்
சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...
மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...
நீங்களும் சட்டென்று கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யாராவது ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள்.
- ரசிகவ் ஞானியார
4 comments:
Best Article at Right Time. Congrats Rasikav.
//kettabaiyan said...
Best Article at Right Time. Congrats Rasikav. //
நன்றி நண்பா.. ( நீங்க நல்லவரா? கெட்டவரா? ) :)
Really superb... kannamoodina oru aasiriyar mattum nenavukku varala.. enakku solli kodutha ellarume nenavula varanga... great work...
nice poem.. realy touched.. im a teacher too.. hope i cn be the inspiration for my students,,
Jyothy
Post a Comment