Saturday, November 26, 2005
என்னைக்கவர்ந்தவர்கள்
1. பேராசிரியர் ராமய்யா
என்னை கவிதை உலகத்திற்குள் கைபிடித்து அழைத்து வந்தவர் இவர்தான்.
ரசிக்க முடியாமல் போயிருக்க வேண்டியவனை ரசிகவ் ஆக்கிய பெருமை இவருக்குச் சாரும்.
கல்லூரியில் முதல் ஆறு மாதங்கள் எனக்கு கவிதை எழுதத்தெரியும் என்று யாருக்குமே தெரியாது. விளையாட்டுத்தனமாக நோட்டுப்புத்தகத்தின் கடைசி பக்கத்தில் கவிதை எழுதி வைத்திருப்பேன்.
இரட்டிப்பாய் கிடைக்குமென்ற
நம்பிக்கையில்தான்
என்
இதயப்பணத்தை
உன்னிடம் ஒப்படைத்தேன்
இறுதியில் ஓடிவிட்டாயடி
எங்களுர் பைனான்ஸ்காரனைப்போல
காத்திருக்கச் சொன்னால் போதும்
மண்ணில் மட்டுமல்ல
மக்கிப்போனாலும்..
மண்ணிற்குள்ளேயும் காத்திருப்பேன்!
ஆனால்
காத்திருக்கவே சொல்லாமல்
கண்ணசைவினிலே
காவியம் நடத்துகிறாயடி
என்று சில உளறல்களை கவிதை என்ற பெயரில் எழுதிவைத்திருப்பேன். ஒருநாள் மதார் என்ற என்னுடைய சீனியர் மாணவர் ஒருவர் நான் வருகின்ற பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அவர்தான் கல்லூரியின் பிரபலமான கவிஞர் அப்பொழுது.
நான் முதலாண்டு என்பதால் அப்பாவியாக கடைசியில் அமர்ந்திருப்பேன். பேருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்குள் வரும்போது லேசாக மழை தூறல் விட்டது. அந்த உற்சாகத்தில் மாணவர்கள் எல்லோரும் ஓ என்று கத்த ஆரம்பிக்க
எனக்குள்ளும் குஷி கிளம்பி பேருந்தின் கண்ணாடி ஒன்றினை ஓங்கி ஒரு குத்து விட அது உடைந்து விட்டது.
மறுநாள் பேருந்தில் அவர் பக்கத்தில் அமர்ந்தபொழுது என்னைப்பார்த்து பன்னகைத்து விட்டு என்னுடைய நோட்டை வாங்கி கடைசி பக்கத்தை பார்த்துவிட்டு
நீ கவிதையெல்லாம் எழுதுவியா .. கவிதை சூப்பரா இருக்குப்பா..ஆமா நேத்து ஏன் அந்த கண்ணாடிய உடைச்சே..நான் நம்பவேயில்லை ..
கவிதையெல்லாம் எழுதுற நீ ..இந்த திறமையை வளர்த்துக்கப்பா.. என்று சொல்லிவிட்டு
லஞ்ச் டைம்ல என் க்ளாஸ் ரூமில் வந்து என்னை பாரு என்று சொன்னார்.
மதியம் அந்த சீனியர் மாணவர் என்னை தமிழ் ஆசிரியர் இராமய்யாவிடம் அழைத்துச்சென்றார்.
இராமய்யா சாரும் அந்த உப்பு சப்பில்லாத கவிதைக்கு என்னை அதிகமாய் பாராட்டினார். எனக்கு தெரிந்தது என்னை கவிதை எழுத உற்சாகப்படுத்தவேண்டும் என்றுதான் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று.
சரிப்பா அடுத்த வாரம் கவிதைப்போட்டி நீயும் எழுதணும் என்று சொன்னார்
கவிதைத்தலைப்பு ஞாபகத்தில் இல்லை. ஏழ்மையை மையமாக வைத்த கவிதை. சேவியர் கல்லூரியில் வைத்து போட்டி நடைபெறுகிறது.
முதன் முறையாய் மேடை ஏறுகின்றேன்
ஆள் பாதி
ஆடை பாதி
இது பழமொழி
நாய் பாதி
நாங்கள் மீதி
இது ஏழை விதி
என்றெல்லாம் வரிகள் வரும் ஆனால் கவிதை ஞாபகத்திலில்லை. ஆனால் ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. நொந்து போனேன்.
அவர்தான் அழைத்து அந்தக் கவிதையைப் பாராட்டிப் பேசினார். ஏதோதோ கூறினார் பாரதியார் கவிதை கூட ஒரு போட்டியில் தோற்றுப் போயிருக்கிறது என்று எங்கிருந்தோ உதாரணம் எடுத்துக் கொடுத்தார். (உண்மையா ? பொய்யா ? எனத் தெரியவில்லை)
கல்லூரியின் ஆண்டுவிழாமலருக்கான போட்டி கவிதை ஒன்று நடைபெற்றது. நானும் எழுதினேன். என்ன ஆச்சர்யம் ..? என் கவிதை முதற்பரிசு பெற்றது.
அந்த சீனியர் மாணவரின் கவிதை கூட இரண்டாம் பரிசுதான் . ஆனால் எனக்குத் தெரியும் என் கவிதையை முதற்பரிசுக்கு தகுதி பெறச் செய்தது இராமய்யா சார்தான் என்று
பார்த்தியா நீதான் முதற் பரிசு என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். இப்படியாக என்னுடைய கவிதைத் திறமையை வளர்த்தார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இதழில் என்னை கவிதை எழுதத் தூண்டினார். எதிர்பாராத விதமாக வைரமுத்துவிடம் இருந்து பாராட்டுக் கிடைத்தது அந்தக் கவிதைக்கு. இதுதான் அந்தக் கவிதை
நெருங்கிப் பழகிய நண்பர்களெல்லாம்..
நேற்றைய கலவரத்தில்
பொட்டு வைத்ததால்
வெட்டப்பட்டும்...
குல்லா அணிந்ததால்
கொல்லப்பட்டும்...
சிலுவை அணிந்ததால்
கொளுத்தப்பட்டும்...
மதப்பேய்களால்
மரித்துப்போனார்கள்!
பொட்டிலும்...
குல்லாவிலும்...
சிலுவையிலும்தான்
மனிதஉள்ளம் ஊமையாகி...
மனிதநேயம் ஊனமாகி...
வைரமுத்து பாராட்டி எழுதிய அந்தகவிதை பிரசுரமாகியுள்ள இதழை எடுத்துக்கொண்ட அவரிடம்தான் காண்பித்தேன். அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் எனக்கு முன்னால் அவர் உற்சாகப்பட்டதாக காட்டிக்கொள்ளவேண்டும் என்று மிகுந்த சந்தோசத்தில் என்னை பாராட்டி பின்னர் என்னை ஊக்கப்படுத்த வேண்டும் என்று என்னை எல்லா வகுப்புகளுக்கும் அழைத்துச்சென்று ஞானியாரின் கவிதையை வைரமுத்து பராட்டியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். இன்னொருத்தரின் திறமையை பாராட்டுவதே பெரிய விசயம் அதிலும் மிகுந்த அக்கறை எடுத்து என்னை எல்லா வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்திய அவரின் சுயநலமற்ற தன்மையையின் மீது மிகுந்த மதிப்பு வந்தது.
இப்படியாக கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் மற்ற கல்லூரிக்களுக்கிடையே நடந்த போட்டிகளிலும் என்னை கவிதை எழுதத்தூண்டி என் கவித்திறமையை வளர்த்தார்
நன் எனது நண்பருடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிடுவதற்கு கூட அவர்தான் முழுமுயற்சி எடுத்தார் கவிதைப்புத்தகம் வெளியிடுவதற்காக எனது வீட்டிலிருந்து முழுமையான பணம் பெற முடியவில்லை.
25 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பணத்தை புரட்டுவது என்பது எங்களால் முடியாத விசயம். வீட்டிலிருந்தும் உதவிக்கரம் நீளவில்லை
அவர்தான் அவரிடம் படித்த நல்ல பொருளாதார வசதியுள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் என்று எல்லோரிடமும் நிதியுதவி பெற்று எங்களுக்கு புத்தகம் வெளியிட உதவி புரிந்தார்.
புத்தகம் வெளியிடு விழாவிற்கு பார்க்க வேண்டுமே அவரை..ஏதோ அவரே புத்தகம் வெளியிடுவது போன்ற உற்சாகத்தில் மிதந்தார். அவரை என்னால் மறக்கவே முடியாது. நான் துபாய் வரும்வரையிலும் நான் எங்கிருந்தாலும் சரி ஒவ்வொரு வருடம் ரம்ஜான் பண்டிகை நாளிலும் அவர் வீட்டுக்கு பிரியாணி எடுத்துச் செல்வேன்.
மீண்டும் சொல்கிறேன் ரசிக்க முடியாமல் போயிருக்க வேண்டியவனை ரசிகவ் ஆக்கிய பெருமை இவருக்குச் சாரும்.
-ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
"பாரதியார் கவிதை கூட ஒரு போட்டியில் தோற்றுப் போயிருக்கிறது" (உண்மையா ? பொய்யா ? எனத் தெரியவில்லை)
உண்மை என்றுதான் நினைக்கிறேன். பாரதியாரின் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே..' என்ற கவிதைக்குதான் இது நிகழ்ந்ததென்று எங்கோ படித்திருக்கிறேன்.
(பேராசியருக்கு என் வணக்கங்கள். அவர் உண்மையான ஆசிரியர்.)
அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்து தங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். சுவாரசியமாய் இருந்த்து.
அந்த போட்டியில ஜெயிச்சவங்களோட கவிதை கிடைத்தால் நன்றாக இருக்கும் :) பாரதியை விட நன்றாக கவிதை எழுதத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள் என்பது கண்கூடு!
நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com
Post a Comment