Sunday, November 13, 2005

அனுபவத்தில் கிடைத்த அறிவுரிங்ங்ங்ங்ங்... ரிங்ங்ங்ங்ங்...

அடுத்த பீரியடு ஆரம்பிப்பதற்காக மணி அடிக்கிறது. நானும் காஜாவும் வெளியே செல்கிறோம்.

(பெல் அடித்தவுடன் உள்ளே செல்வது
பள்ளி மாணவர்கள்

பெல் அடிக்கும் வரை க்ளாஸில் இருந்து கடலை வறுத்துவிட்டு பெல் அடித்தவுடன்
வெளியே வருவது கல்லூரி மாணவர்கள்

மழை பொழியும்போது நோட்டை சட்டையில் மறைத்துக்கொண்டு
தன்னை நனைப்பது பள்ளி மாணவர்கள்

நோட்டு நனைந்தாலும் பரவாயில்லை தான் நனையக்கூடாது என்று அந்த நோட்டினை
தலையில் வைத்து மழைத்துளியினை மறைப்பது கல்லூரி மாணவர்கள்

விட்டா சொல்லிக்கிட்டேப் போகலாம் )

டேய் இது யாரு பீரியடுடா..- காஜா

நம்ம பிஸிக்ஸ் ரபீக் சார் பீரியடுதான்டா சும்மா வா..சொல்லிக்கலாம் டா - நான்

டீ குடிப்பதற்காக கிளம்பிவிட்டோம்

அதோ வராண்டாவில் எதிரே வந்துகொண்டிருக்கிறார் பிஸிக்ஸ் புரபஸர் ரபீக்

டேய் வர்றாருடா நீ கேளு - காஜா

எங்களை நெருங்கும்போது நான் அவரிடம்

கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்குது கேண்டீனுக்கு போய் ஒரு டீ அடிச்சிட்டு வரேன் சார் - நான்

என்ன சொன்னே..? - ரபீக் சார்

கேண்டீனுக்கு போய் ஒரு டீ அடிச்சிட்டு வரேன் சார் - நான்

இல்ல ஒழுங்கா சொல்லு - ரபீக் சார்

தேநீர் அடிச்சிட்டு வரலாமா..? - நக்கலாய் சொல்ல

இல்ல ஒழுங்கா சொல்லு - ரபீக் சார்

கேண்டீனுக்கு போய் ஒரு டீ அடிச்சிட்டு வரேன் சார் - நான் மறுபடியும் சொல்ல அவர் திருப்பி திருப்பி கேட்கிறார். என்ன ஒழுங்கா சொல்ல சொல்கிறார் எனப் புரியவில்லை..

பின் அவரே சொல்கிறார்..

என்ன அது டீ அடிச்சிட்டு வர்றேன்..டீ குடிச்சிட்டு வர்றேன்னு சொல்லுப்பா - ரபீக் சார்

சாரி சார் டீ குடிச்சிட்டு வர்றேன் - நான்

ஆமா காஜா நீ எங்க போற ரெண்டு பேருக்கு ஒரே நேரத்துல தலைவலியா - ரபீக் சார்

இல்ல சார் ..இவன்தான் - காஜா தயங்குகிறான்

இல்லசார் தலை வலிக்குது வழியில மயங்கி விழுந்துட்டேனா வந்து தகவல் கொடுக்க வேண்டாமா அதுக்குத்தான் சார் - நான் கிண்டலடிக்க

அவர் மெலிதாய் புன்னகைத்தபடியே

சரி போங்க போய்ட்டு சீக்கிரம் வாங்க..இன்னிக்கு ப்ராக்டிகல் பத்தி சொல்லப்போறேன்.

கேண்டீன் வெற்றுச்சுவற்றில் ஆங்காங்கே பெயர்கள் - கவிதைகள் - காதலிக்கும் பெண்ணின் பெயரை இணைத்து என்று ஏதேதோ எழுதப்பட்டிருந்தது

கேண்டீன் மற்றும் டாய்லெட் சுவர்கள் எல்லாம் சுவர்களாகத்தான் மற்றவர்களுக்குத் தெரியும்

அது வெற்றுச்சுவரல்ல
கல்லூரி மாணவர்களின்
இன்னொரு இதயம்

காதலைச் சொல்ல முடியாத
வடிகால்


எல்லா கல்லூரி கேண்டீனும் அந்தந்த கால கட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும். அது பீரியடைக் கட் அடித்த மாணவர்கள் சங்கமிக்கும் இடம்

மற்ற மாணவிகள் முன்பு பாக்கியை கேட்ட கேண்டீன் ஊழியரோடு சண்டை - பின்னர் தவறு உணர்ந்து வந்த கல்லூரி முடிந்த மாலை வேளையில் , அவரிடம் வந்து மன்னிப்பு .. , காதல் வெற்றி பெற்ற மாணவர்களின் பார்ட்டி , பிறந்தநாள் பார்ட்டி , எந்த மாணவர்களை இல்லை மாணவிகளை பற்றியாவதுபுறம் பேசுதல் என்று களைகட்டும்.

(எங்கே நீங்கள் கொஞ்சம் உங்கள் கல்லூரிக் கேண்டீனை நினைத்துப்பாருங்கள். ஏதாவது சுவாரசியமாக தட்டுப்படுகிறதா? )

எங்கள் கேண்டீன் ஊழியரை நாங்கள் செல்லமாக வாப்பா வாப்பா என்தான் அழைப்போம். அவர் வித்தியாசமானவர் ஒரு பஜ்ஜி என்று சொன்னால் 4 பஜ்ஜி கொண்டு வருவார்.
நாங்கள் அதற்காகவே 4 பஜ்ஜி தேவைப்பட்டால் கூட

வாப்பா 1 பஜ்ஜி கொடுங்க என்றுதான் கேட்போம்.

அவர் 4 பஜ்ஜி கொண்டுவருவார்.

வாப்பா என்ன இது நாங்க என்ன கடையா வைக்கப்போறோம் இத்தனை பஜ்ஜி எதுக்கு - நான்

சாப்பிடுங்கப்பா வளர்ற பசங்க..வரும்போது என்ன கொண்டு வரப்போறீங்க போகும்போது என்ன கொண்டுப்போகப்போறீங்க? - வாப்பா

வரும்போது காசு கொண்டுவருவோம் போகும்போது வயிற்றெரிச்சல் கொண்டுபோவோம்

- காஜா கிண்டலடித்தான்

டேய் டீ சொல்லுடா
- காஜா

டீ - என்று சும்மா வாயால் சொன்னேன்

டேய் டீ ஆர்டர் பண்ணுடான்னு சொன்னா முனகுற - காஜா

வாப்பா க்ளாஸை கழுவி 2 டீ தாங்க - நான்

எப்போதுமே இப்படித்தான் ஆர்டர் செய்வோம். வாப்பா கோவப்படவே மாட்டார். சிரித்துக்கொண்டே கொடுப்பார்

ஏய் யாருப்பா அது ..அப்படின்னா எங்களுக்கெல்லாம் க்ளாஸை கழுவாமயா கொடுக்கிறார்.. - கேண்டீனில் உள்ள ஸ்டாஃப் ரூமிலிருந்து ஆசிரியர் ராமய்யா கிண்டலடிக்கிறார்


வாப்பா சீக்கிரம் கொடுங்கப்பா - நான் அவசரப்படுத்தினேன்

ஏண்டா மெதுவா வரட்டுமே பர்மிசன்தான் வாங்கியாச்சுல்ல - காஜா

இல்லைடா அங்க பாரு பிகாம் பிரபாகர் வர்றான்..வந்தான்னு வச்சுக்க அப்படியே மேய்ந்திடுவான் - நான்

வாப்பா டீ கொண்டு வர்றதுக்கும் அவன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கிறது

வாடா பிரபாகர் டீ சாப்பிடுறியா..? - ஒப்புக்கு கேட்டேன்

நீ வாங்கி கொடுத்தா வேண்டாம்னா சொல்லப்போறேன் - சொல்லுடா - பிரபாகர்

அடப்பாவி சும்மா ஒப்புக்கு கேட்டா உடனே ஒத்துக்கிட்டானே..இதற்குத்தான் கல்லூரி மாணவர்களிடம் ஒப்புக்கு கேட்கவே கூடாது.

வாப்பா பஜ்ஜி போடுறீங்களா - பிரபாகர்

அவர் இதுதான் சமயம் என்று 2 பஜ்ஜி கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்தார். அவன் எங்களை கேட்கிறான்

நீங்க பஜ்ஜி சாப்பிடுறீங்களாடா - பிரபாகர்

இல்லைடா இப்பத்தான் சாப்பிட்டோம்.. - தீ வயிற்றின் அடிப்பாகத்திலிருந்து எழுந்து தொண்டை வரை வந்துவிட்டுச் சென்றது.

டேய் அங்க பாரேன் மைக்ரோபயாலஜி பொண்ணுங்கலாம் வர்றாங்க பாரு..அந்த இங்கிலிஸ் தேவதையைப்பாரேன் சும்மா உல்ட்டாப்பா பேசிகிட்டு வர்றா - காஜா

கொஞ்சம் வெய்ட் பண்ணுவோமாடா..கடலை போட்டுட்டு போலாம் - நான்

இல்லடா இப்பவே லேட்டாயிடுச்சுடா அப்புறம் கத்தப்போறார் - காஜா

வகுப்பறைக்கு மீண்டும் சென்று அமருகிறோம்.

ஆசிரியர் ரபீக் பியுரெட் - பிப்பெட் என்று ப்ராக்டிகல் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்
அருக்கு ஒரு பழக்கம் உண்டு பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போது தனது பேண்டை கொஞ்சம் இழுத்துவிட்டு அட்ஜஸ்ட் செய்வார்.

நான் மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து திடீரென்று எழுந்து நிற்க, அவர் என்னடா இவன் திடீரென்று எழுந்து நிற்கிறான் என்று என்னை பார்க்க சுற்றியுள்ள மாணவ மாணவிகளின்
கவனமும் என் பக்கம் திரும்ப ( அதுக்குத்தானே எழுந்து நிற்கிறது )

என்ன டவுட்டா? - ரபீக் சார்


இல்ல ஒண்ணுமில்ல சார்
என்று கூறிவிட்டு அவரைமாதிரியே பேண்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.

மாணவ மாணவிகளுக்கு எல்லாம் விசயம் புரிந்து சிரிக்க ஆரம்பிக்க, அவருக்கு புரிந்து விட்டது. ஆனால் அத்தனை பேருக்கு முன்னால் சமாளித்துவிடவேண்டும் என்று என்னிடம் சரி ஏதாவது திருக்குறள் சொல்லிட்டு உட்காரு என்றார்.


புறத்தினை காட்டும் கண்ணாடி போல் -
அகத்தினை காட்டிடும் உள்ளம்


என்று ஒரு திருக்குறள் உண்டு சரியான வடிவம் தெரியவில்லை. அதைச்சொல்லிவிட்டு விளக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

பீரியடு முடிந்துவிட்டது அவர் புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்கு முன் ஞானியார் நீ என்ன டிபார்ட்மெண்டல வந்து பாரு என்று சொல்லிவிட்டு கிளம்பினார்

எனக்கு புரிந்துவிட்டது அவர் நான் கிண்டல் செய்ததற்காக என்னை கண்டிப்பதற்காக கூப்பிடுகிறார். தனியாக திட்டினால் கூட பரவாயில்லை. ஆனால் டிபார்ட்மெண்டில்
அழைத்து பிஸிக்ஸ் டிபார்ட்மெண்டில் உள்ள எல்லா ஆசிரியர்களின் திட்டையும் வாங்கவேண்டுமே என நினைத்துக்கொண்டே சென்றேன்

டேய் நீயும் கூட வாயேன்

ச்சே நான் வரலப்பா நீ போ

தனியாக சென்றேன் . மற்ற நேரங்களில் சொர்க்கமாக தெரியும் அந்த வராண்டா அப்பொழுது மட்டும் நரகமாக மாறியது.

எக்ஸ்கியுஸ் மி சார்

ம் ம் உள்ளே வா..- ரபீக் சாரேதான் மற்ற ஆசிரியர்களிடம் க்ளாஸில் நடந்ததைப்பற்றி கோபத்தோடு விவரித்துக்கொண்டிருந்தவர் நான் வருவதைக் கண்டவுடன் நிறுத்திக் கொண்டார்

தன்னுடைய பேச்சிற்காக காத்திருக்கும் ஒரு பெரிய கூட்டங்களுக்கு முன்னால் முதன் முதலாய் பேசுவதற்காக மேடை ஏறுபவனின் தயக்கமான பார்வைபோல

மாணவர்கள் கூட்டங்களே இல்லாத மதிய நேரத்தில் - வருபவர்களை எல்லாம் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் குறும்புப் பெண்கள் குழுமியிருக்கும் கூட்டத்திற்குள் தன்னந்தனியே செல்லும் ஒரு அப்பாவி மாணவனின் பயத்தைப்போல


மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தேன்.

சாரி சார் என்று உள்ளே நுழையும்போதே கூறினேன்.

அவர் உடனே என்னை மடக்கி விட்டதாக நினைத்து ஏன் நீ சாரி கூறுகிறாய்..அப்படியானால் நீ ஏதோ தவறு செய்திருக்கிறாய். இல்லையா..? சொல்லு ஏன் சாரி சொன்னாய்?

இல்ல சார் நேத்து ஸ்டிரைக் பண்ணினேன் நேத்து உங்க ப்ராக்டிகல் க்ளாஸ் பாதிச்சிருச்சு அதனாலதான் சாரி சொன்னேன் - நானும் விட்டுக்கொடுக்காமல் சமாளித்துவிட்டேன்

அப்படியென்றால் உன்மீது தவறு இல்லைனா சொல்ற..? அவர் வகுப்பில் நடந்த சம்பவத்தை மனதில் வைத்து கேட்கிறார்

சாரிசார் மாணவர்கள் தூண்டுதல்தான் காரணம் என் மீது குற்றமல்ல..என்று நான் நேற்று நடந்த ஸ்ட்ரைக்கை மனதில் வைத்து கூறினேன்.

வேற எந்த தப்பும் பண்ணல நீ....? - பிஸிக்ஸ் ஜலாலும் கேட்கிறார்

என்ன தப்பு பண்ணினேன் நான்...? என்பது போல விழியை அப்பாவி போல மாற்றி யோசிப்பது போல நடித்தேன்.

திடீரென்று நாகூர் மீரான் சார் குறுக்கே புகுந்து சார் அவனுக்கு எல்லாம் தெரியும் சார் அவன் நடிக்கிறான் நீங்க டைரக்டா கேளுங்க அவன்கிட்ட

நீ க்ளாஸ்ல என்ன பண்ணின..? - நேரடியாக கேட்டார் ரபீக்

நான் உடனே தவறை உணர்ந்து சாரி சார் என்று கூற அங்கே கனத்த மௌனம். தலைமுடி விழுந்தால் கூட காதில் கேட்கும் அந்த அளவிற்கு நிசப்தம்

ரபீக் சார் என்னை கிண்டலாக பார்க்க எனக்கு உதட்டில் லேசாக புன்னகை சிந்தியது

இதைக்கவனித்த ஜலால் சார் இங்க பாருங்க சார் செய்றதையும் செஞ்சிட்டு சிரிக்கிறான்..இத்தனை வருசமா சைன்ஸ் ஸ்டூடண்ட் யாருமே இப்படி பண்ணினது கிடையாது..

ப்ராக்டிகல் இருக்குங்கிற பயமே இல்லாம கிண்டல் பண்ணியிருக்கிறான் பாருங்களேன்

நீ காலேஜ்க்கு செகரெட்டரியா இருக்கறதால திமிரா நடக்கிறியோ..எப்படியும் ப்ராக்கடிகல்லுக்கு இங்கதான் வந்தாகணும்- சீறுகிறார் அமீன் சார்

சரி சார் அவன்தான் சாரி கேட்டுட்டான்ல விட்டுறுங்க சார் - நாகூர்மீரான் சார் எனக்கு வக்காலத்து வாங்குகிறார் ( அவர் எனது ஊர்க்காரர் )

சரி போ - ரபீக் சார்

சாரி சார் மறுபடியும் வழிந்து விட்டு கிளம்பினேன்.

ச்சே சுத்தி இருந்து குதறிப்புட்டாங்களே..நல்லவேளை எந்த பிகராவது அந்த நேரம் பார்த்து பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட் வந்தாங்கன்னா மானம் போயிருக்கும்

வராண்டாவில் உள்ள வாட்டர் குழாயில் அசடு வழிந்து போன முகத்தை கழுவிவிட்டு நண்பர்களுக்கு முன்னால் சிரித்துக்கொண்டே சென்றேன்

அங்கே பாருங்களேன் எனக்காகவே காத்திருந்த மாதிரி காத்திருக்கிறார்கள்.

என்னடா எதுக்குடா கூப்பிட்டாரு? - காஜா

இல்லைடா அடுத்தவாரம் மாடல் ப்ராக்டிகல் இருக்கு ஸ்டிரைக் ஏதும் அடிச்சிறாத அப்புறம் உனக்கும் மெயின் எக்ஸாம் வரும்போது பிரச்சனையாயிடும் என்று ரபீக் சார் சொன்னதாக கூறினேன்

அதுக்கு ஏண்டா கை நீட்டி நீட்டி அமீன் சாரும் ஜலீல் சாரும் பேசினாங்க - ராஜ்குமார் கேட்கிறான்

அடப்பாவிகளா ஜன்னல் வழியா பார்த்திருக்கானுங்க போல..

சரிடா அதுக்கு என்ன இப்ப ? நான் எரிச்சலோடு சொல்ல

உண்மையை சொல்ல வேண்டியதுதானே..ஸ்டிரைக் ப்ராக்டிகல்லுன்னு கதை விடுற..தாளம் தட்டி நான் அவமானப்பட்டதை கொண்டாடுகிறார்கள்


மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடனையே ரபீக்சார் கரும்பலகையின் உச்சத்தில் எழுதினார்

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல


காட்டிக்கொடுக்கிறதுக்கே இருக்கானுங்களே உயிர்நண்பர்கள், அவர்கள் எல்லோரும் அந்த கரும்பலகையின் எழுத்தையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்கள்.

ஒரு மாணவன் தனியாக செல்கிறான் என்று வைத்துக்கொள்ணுங்கள் அமைதியாக செல்லுவான். அதே நேரம் அவன் ஒரு கூட்டத்தோடு செல்லுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள் கிண்டல் கேலி என்று ஆரம்பித்துவிடுவான். அது அவன் மீது தவறில்லை அவன் வயது அவனைச்சுற்றி உள்ள கூட்டங்களின் ஹீரோத்தனமான கைதட்டல்கள் , உற்சாகங்கள் அவனை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது

இது எனக்கு அனுபவத்தில் கிடைத்த அறிவு.-ரசிகவ் ஞானியார்

1 comment:

srishiv said...

அருமை ஞானி :)
அசத்தல், வாழ்த்துக்கள்
ஸ்ரீஷிவ்...

தேன் கூடு