Sunday, November 06, 2005
ஒரு நிலாக்கால கல்லூரி பேருந்துப் பயணம்
1998 ம் வருடம் காலையில் அந்த திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் காலை 8.30 மணி அளவில் வண்ண வண்ண உடைகளில் எல்லா கல்லூரி தேவதைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வானத்திலிருந்து இறங்கிவரத்தொடங்குகிறார்கள்..அவர்களுக்குப் பாதுகாப்பாய் கறுப்பு பூனைப்படைகளாட்டம் மாணவர்கள்.
படிந்த தலையோடும்..
பரட்டை தலையோடும்..
சீவி சிங்காரித்தும்..
விதவிதமான கறுப்புப் பூனைப்படைகள் வரத்தொடங்குகிறார்கள்.
இன்னொரு கல்லூரி மாணவர்கள் அவர்களுக்குண்டான பேருந்து வரும் இடத்தை அனிச்சை செயலாய் மறந்து எங்கள் கல்லூரி பேருந்து வருகின்ற இடத்திற்கு வருகிறார்கள்.
சிலநேரம் எங்கள் இருகல்லூரிகளுக்குள்ளும் சின்ன சின்ன மோதல்கள் வருவதுண்டு.
"எல இங்க பாரேன் தங்கபாண்டிய..நம்ம காலேஜ் பொண்ணுங்கள நோட்டம் விடுறான் பாரேன்..இந்தப்பக்கமே சுத்திக்கிட்டு இருக்கான்டா..ஒரு நாளைக்கு ஆப்பு வைக்கணும்"
- அகில திருநெல்வேலி பெண்கள் பாதுகாப்பு தலைவர் சீறுகிறார்
"விடுல..சும்மாதான வந்துட்டுப்போறான்..அவன் என்ன கிண்டலா பண்றான்..கிண்டல் பண்ணினானா பார்த்துக்கலாம்"
- திருநெல்வேலி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பொருளாளர்
"எல இவனுங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்டா..அவனுங்க கோஷ்டியே அங்க நிற்குது..கூட்டிட்டு வந்தாங்கன்னா சங்குதான் நமக்கு..நம்ம பசங்கள நம்ப முடியாது.."
இப்படியான சம்பாஷணைகள் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
அதோ வருகிறான் பாருங்களேன் நவீன். இவன் ரொம்ப வித்தியாசமானவன்..கையில் ஒரு நோட்டுப்புத்தகம் , அரைகால் டவுசர் என்று படு வித்தியாசமாய் வருபவன். எப்போதும் எங்கள் கல்லூரிப்பேருந்தில் தொங்கிக்கொண்டுதான் வருவான்.
எங்கள் கல்லூரிப்பேருந்தில் ஏறி மூன்றாவது நிறுத்தத்தில் இறங்குவான். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் . பின்னர்தான் தெரிந்தது அவன் ஒரு மெக்கானிக்ஷாப்பில் வேலைபார்க்கிறான் என்று.
சும்மா பிகர்களை நோட்டம் விடுவதற்காக நோட்டோடு திரிந்திரிக்கிறான். பின்னர் எங்களோடு நன்றாக பழகி விட்டான். இவன் இப்போது உயிரோடு இல்லை..ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டான்..
நேரம் ஆக ஆக சூரியன் ஒளி பட்டால் தப்பித்து ஓடும் இரத்தக் காட்டேறிகளைப்போல ஒவ்வொரு பேருந்தைக் கண்டவுடனும் கொத்து கொத்தாக தேவதைகள் மறைந்து போகிறார்கள்.
இதோ வருகிறது எங்கள் கல்லூரி பேருந்து.
அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் முதலாண்டு மாணவர்கள்
எல்லோரையும் ஏறவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இரண்டாமாண்டு மாணவர்கள்
பேருந்தை வந்ததையே கவனிக்காதது மாதிரி அலட்சியமாக நிற்கிறர்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.
இவர்கள் தொங்கு வாதிகள்..பேருந்தில் கூட்டமே இல்லாவிட்டாலும் தொங்கிக்கொண்டு வருவார்கள். அந்த தொங்குவாதிகளின் கூட்டத்தில் நானும் உண்டு.
சிலர் நோட்டுபுத்தகத்தை கைளில் பொத்திவைத்துக்கொள்வார்கள்
சிலர் முதுகில் பேண்டில் சொருகி வைத்திருப்பார்கள் ( முதுகுல் வச்சா படிப்பு எப்படி நெஞ்சுல ஏறும்? அட தத்துவம் போல இருக்கு )
பலர் தனக்கு தெரிந்த ஜன்னலோர தேவதைகளிடம் கொடுப்பார்கள். ( நோட்டை கொடுத்து இதயம் பெற்றவர்கள் எத்தனையோ பேர்)
நான் நண்பர்களுடன் பேருந்தில் ஏறுவதற்காக விறுவிறுவென்று செல்கின்றோம்.
ஆ... ஆ சத்தம் கடந்து சென்ற பயணியிடமிருந்து வருகிறது. அவசரத்தில் அவன் காலை மிதித்து விட்டேன்.
"சாரி சார் "என்று நான் கூற
"என்னடா சாரி..மயிரு மாதிரி மிதிச்சிட்டு போற.. - " நாகரீகம் தவறிப்பேசினான் அந்த தடியன்
அவன் தலை முடி லேசாக சுருண்டு ஒரு கட்டம் போட்ட கைலியை உடுத்தியிருந்தான். அவனைப்பார்க்கவே ரவுடி மாதிரிதான் இருந்தது.
"ஹலோ..மரியாதையா பேசுங்க..தெரியாமத்தான மிதிச்சேன்:"
"எல என்னல எதிர்த்துப் பேசற..நான் யாரு தெரியுமால..-------------------னோட ஆளுடா.."என்று
-திருநெல்வேலியைச் சார்ந்த ஒரு ரவுடியின் பெயரைக் கூறினான்.
அவன் சொன்ன ஆள் அரசியல் வட்டாரங்களிலும் சரி..ரவுடிகள் வட்டாரத்திலும் சரி சரியான பிரபலம்..
எனக்கோ பயம் பிடித்துவிட்டது ஒருவேளை உண்மையாய் இருக்குமோ..? இருந்தாலும் ஹீரோத்தனத்திலிருந்து கொஞ்சமும் இறங்கி வர முடியாத மாணவப்பருவத்தில் இருந்தததால்..பதில் கூறினேன்
"சரி அதுக்கு இப்ப என்ன பண்ணணும்னுங்கிறீங்க.. "
பயத்தில் மரியாதையாக கூறிக்கொண்டே மெல்ல மெல்ல கல்லூரிப் பேருந்தை நோக்கி நகர்ந்தேன்..
"எல என்னல திமிரால உனக்கு..நில்லுல எங்கல போற"
"மரியாதையா பேசுங்க..எங்க காலேஜ் பசங்கல்லாம் இருக்காங்க..சொல்லிக்கொடுத்துறுவேன்..- "
- சும்மா காலேஜ் மாணவர்களின் பலத்தைக் காட்டினேன்.
அவனோ சிறிதும் பயப்படாமல்..
"வால வந்து சொல்லிக்கொடுல..அவனுங்க என்ன செய்வாங்கன்னு பாக்குறேன்.."
அவன் என் கையை பிடித்துக்கொண்டு பேருந்தை நோக்கி முன்னேறுகிறான்..
அப்பொழுது வாசற்படியில் இருந்து கவனித்த திருநெல்வேலி பேட்டையில் இருந்து வருகின்ற தக்கரை பீர்முகம்மது என்னை கவனித்து விடுகிறான்..
"டேய் என்னடா மாப்பிள வால வந்து ஏறுல.." என்று வழக்கமாய் அழைத்துவிட்டு என் பக்கத்தில் வருபவரை கண்டவுடன் பேச்சை நிறுத்தினாhன்
"யாருல இது.. "அவர் என் கையை பிடித்திருந்த தொனியில் சந்தேகப்பட்டு கேட்டான்
"டேய்! தக்கரை இவன பாருல ..வம்புக்கு வராம்ல..தெரியாம கால மிதிச்சதுக்கு திட்டுறான்.."
"அவன தெரியும் இவன தெரியும்னு மிரட்டுறான்"
பேருந்து வேறு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது..
உடனே தக்கரை அவனைப்பார்த்து
"எல! விடுல கைய "
என்று சொல்லிவிட்டு உடனே என் கையை அவன் பிடியிலிருந்து விடுவித்துவிட்டு அவன் முகத்தில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ளுகிறான்..அவனோ தடுமாறி கோபத்தில் கத்துகிறான்..
"எல இருல இந்த பஸ்ஸ{ எப்படி போகுதுன்னு பாக்குறேன்..எப்படியும் எங்க இடத்தை தாண்டித்தான போகணும் இருங்கல " என்று உறுமினாhன்.
எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது..ஒருவேளை அவன் சொன்னது உண்மையாகிவிடுமோ..? பின்னர் புரிந்து கொண்டேன் குரைக்கிற நாய் கடிக்காது என்று.
காதல் கடிதம் எழுதிவிட்டு அதனை கொடுக்கவா வேண்டாமா என்று தயங்கி தயங்கி நிற்கும் மாணவனைப்போல பேருந்து கிளம்பிக் கொண்டிருந்தது.
எங்கள் பேருந்து கிளம்பும் அதே சமயம்தான் பேட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி பேருந்தும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி பேருந்தும் கிளம்பும்.
நாங்கள் அந்தக் கல்லூரியின் தேவதைகளை பார்த்துக்கொண்டே படிக்கட்டிலும் அவர்கள் இதயத்தின் ஓரத்திலும் தொங்கியபடி கிண்டலடித்துக்கொண்டும் கடைக்கண்களால் காவியம் நடத்திக்கொண்டும் செல்லுவோம்.
ஆகவே அந்த மகளிர் கல்லூரி பேருந்துகளை பின்தொடர்ந்துதான் செல்லவேண்டும் என்று டிரைவரிடம் அன்பாக மிரட்டியிருந்தோம்.
அதோ அந்த பாளயங்கோட்டை மகளிர் கல்லூரி பேருந்து கிளம்ப
அதற்கு பின்னால் எங்கள் கல்லூரி கிளம்ப..
எங்கள் பேருந்துக்குப்பின்னால் பேட்டை மகளிர் கல்லூரிப்பேருந்து அதற்குப்பின்னால் பேட்டையைச் சார்ந்த ஒரு ஆண்கள் கல்லூரிப் பேருந்து
என்று அந்தப் பேருந்து நிலையமே பிகர்களின் திருவிழாக்கூட்டம் போல களைகட்டியது
அந்த பாளைங்கோட்டை மகளிர் கல்லூரிப்பேருந்து நகர்கிறது..
எந்த பிகரைப் பார்ப்பது.. ...? இந்தப்பிகர்...... அந்தப்பிகர்;...........
"டேய் இங்க பாரு அந்த கறுப்பு சுடிதாரை...."
"இங்க பாருடா உன் ஆளு இன்னிக்கு ஹீல்ஸ் போட்டிருக்காடா.."
கமெண்டஸ்கள் ஆங்காங்கே
வருடாவருடம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் தேர் இழுப்பது வழக்கம். பொதுமக்களுக்கு அந்த தேரிழுப்பு மட்டும்தான் தெரியும்.
ஆனால் இப்படி தினமும் தேவதைகளின் விழிகளினால் மாணவர்களின் இதயத்தேர்கள் இழுக்கப்படுகிற்து என்ற செய்தி பிகர் முன்னேற்ற வாலிபர் சங்கங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அந்த தேவதைகளையெல்லாம் ஒரு பாழாய்போன திருப்புமுனையில் டாட்டா காட்டியபடி பாசத்தோடு வழியனுப்பிவிட்டு எங்கள் பேருந்து முருகன் குறிச்சியைத் தாண்டி , மார்க்கட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதோ எல்லா மாணவர்களின் எதிரி கண்டக்டர் வந்துவிட்டார். அவரோடு சரியான ஜாலியாக இருக்கும். எங்களிடம் டிக்கெட் திணிப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.
முதலாண்டு மாணவர்கள் கண்டிப்பாய் டிக்கெட் எடுத்தாக வேண்டும்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எடுப்பது அவரவர் விருப்பம்
மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எடுக்கவே கூடாது
( சிலர் பயந்து போய் எடுத்துவிடுவார்கள் )
அவர் ஒவ்வொருவரிடமாய் டிக்கெட் கேட்க கேட்க வித்தியாசமான கமெண்ட்ஸ்கள் எழுந்து கொண்டேயிருக்கும்.
"டேய் ஞானி! மாப்ள! டேய்.. இங்க பாருடா கிண்டல! இவர் யாருன்னே எனக்குத் தெரியாது..டிக்கெட் கேட்கிறாருடா"
பேருந்து முழுவதும் சிரிப்பொலி
"டேய் பாதிக்கு பாதியாவது டிக்கெட் எடுங்கடா.. - "கண்டக்டர் கெஞ்சுகிறார்
"இல்ல சார் எங்க அம்மா வெளியில எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க- "
-இன்னொரு பக்கமிருந்து கமெண்டஸ்
"டிக்கெட் வாங்கலைன்னா வண்டிய நிறுத்திறுவேன் பார்த்துக்கோங்க.."
- கத்துகிறார்
"கண்டக்டர் அங்கிளுக்கு ஒரு ஓ போடுங்கப்பா...ஓ..ஓ..ஓ..ஓ"
அவ்வளவுதான் புன்னைகைக்க ஆரம்பித்து விட்டார்..
"அட ஒங்களோட ரோதனையா போச்சுப்பா.."
"நீ டிக்கெட் எடுப்பா.." - கண்டக்டர்
"எடுக்க முடியாது -" ஏதோ அவர் கடன் கேட்பதை போல மறுக்கிறான் அந்த மாணவன்
திடீரென்று ஒரு விசிலடித்து பேருந்தை நிறுத்துகிறார் பின் கட்டாயமாக சிலரிடம் டிக்கெட்டை திணித்து காசு வாங்கிவிட்டு மீண்டும் விசிலடிக்கிறார்.
சொத்தையெல்லாம் எழுதிவைக்கின்ற அழகில்...
கத்தையாக பிகர்களெல்லாம் சாலையில்!
வித்தைகள் செய்கின்ற மாணவர்களைச் சுமந்தபடி...
நத்தையைப்போல நகர்ந்துகொண்டேயிருக்கும் பேருந்து!
பித்தனாக பிதற்றிக்கொண்டிருக்கும் மாணவர்களை...
அத்தையைப்போல திட்டிக்கொண்டேயிருக்கும் கண்டக்டர்!
பஸ்ஸின் ஜன்னலோரத்தில் இருக்கும் மாணவர்கள் கைகளாலும் சிலர் குச்சிகளாலும் சிலர் நோட்டுப்புத்தகத்தினாலும் பேருந்தின் தகரத்தை தட்டிக்கொண்டே இருக்க கடைசி சீட்டில் கோழி காதர் பாட்டுப்பாடுகிறான்..
எங்களுக்கு குஷியாக இருந்தாலும் எல்லா தேவதைகளின் கவனமும் கடந்து செல்லும் பேருந்துகளில் உள்ள தேவதைகளின் கவனமும் அவன் மீது விழ ஆரம்பிக்கிறதே, என்ற பொறாமை தீ வேறு தகதகவென எரிந்தது எங்கள் வயிற்றுக்குள் அனுமன் இலங்கையில் வைத்த தீயைப்போல....
எல்லாரும் அவனை ரசித்துக்கொண்டே அந்தப்பாட்டுக்கு ஏற்றவாறு இசையமைத்துக்கொண்டே பேருந்தின் இருபறமும் உள்ள தகரப்பபகுதியை தட்டிக்கொண்டே வர, நாங்களும் ஒரு கைகாளால் படிக்கட்டின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு மறுகைகளால் தட்டிக்கொண்டே வருகிறோம்.
திடீரென்று ஒரு குசும்பு பிடித்த மாணவன் வாயினால் விசிலடித்து விட டிரைவரோ கண்டக்டர்தான் அடிக்கிறார் என நினைத்து பேருந்தை நிறுத்தி
"டேய் எவண்டா அது விசில் அடிச்சது "என்று கண்டக்டர் கத்தி மறுபடியும் அவர் விசிலடித்து பேருந்தை கிளப்புகிறார்
மு.னி.ய.ம்.மா... ஓ ஓ..ஓ..ஓ
மூ.க்.க.ம்.மா... ஓ ஓ..ஓ..ஓ
சிலர் அவர்களுக்கு தெரிந்த பிகர்களின் பெயர்களை கூறி ஒரு ஓ போடுகிறார்கள்.
ஒரு கைகளால் பேருந்தின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு பின் கைவலித்தால் கையைமாற்றி தொங்கிக்கொண்டே வருவது கல்லூரி மாணவர்களுக்கு கைவந்த கலை..
யார் சொல்லிக்கொடுத்தார்களோ தெரியாது..? ( ஒருவேளை குற்றாலத்தில் எடுத்த பயிற்சி யாக இருக்குமோ ..? )
பேருந்து மார்கட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது வால்களின் தலைவன் பசுலுத்தீன் திடீரென்று பேருந்தின் கூரைப்பகுதிக்கு ஏற ஆரம்பித்துவிட்டான். ஏனென்றால்
அடுத்த பேருந்து நிலையம் தேவதைகளின் தேவாலயம். ஆம் அந்த மார்க்கட் பேருந்து நிலையம் அழகு தேவதைகளின் சங்கமிப்பாகவே விளங்கியது.
"டேய் டேய் என்னடா பண்ற..இறங்குடா"
"நான் டாப்புக்கு போகப்போறேன்..வர்றியா"
"டேய் மாப்ள வேண்டாண்டா பந்தா காட்டாதே கீழே விழுந்தா சங்குதான் அப்புறம் பிகருங்க முன்னாடி பந்தா காட்டமுடியாது"
சொல்பேச்சு கேட்காமல் தாவிகுதித்து மனிதன் இதிலிருந்து பிறந்திருப்பானோ என்ற சந்தேககத்தை முழுமையாக தீர்த்து வைத்தான்.
அவனோடு சில நண்பர்களும் ஏறினார்கள்..முதலாண்டு மாணவர்கள் டாப்பில் ஏறிய மாணவர்களை ஹீரோவாகப்பார்த்தார்கள்
அதோ வந்து கொண்டே யிருக்கிறது மார்க்கெட்.. ஆம் தேவதைகளின் மார்க்கெட்
மார்க்கட்டை பேருந்து அடைந்தது. யாருடைய கவனமும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த எங்கள் மீது விழவில்லை..பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்டுக்கொண்எருந்த அவர்களை ஒரு ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்..
அங்கே பாருங்களேன் வழக்கமாய் லுக் விட்டுக்கொண்டிருக்கும் அந்த தயிர்சாதம் கூட மேற்கூரையை பார்க்கிறாள்.
அந்த பேருந்து அந்த மார்க்கட் பேருந்து நிலையத்தில் இரண்டே நிமிடங்கள் தான் நிற்கும் . ஆனால் அந்த கால இடைவெளிக்குள் பரிமாறப்படும் விழிப்பார்வைகளினிடையே இரும்பை வைத்தால் கூட வெட்டுபட்டுவிடும்
இரண்டு நிமிட நிறுத்தலில் - எத்தனை
இதயங்களோ ஓட ஆரம்பிக்கும்
பேருந்து ஓட ஆரம்பிக்கும்போதோ
அத்தனை இதயங்களும் நின்றுவிடும்
பேருந்து மார்க்கெட்டை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
"டேய் டேய்..எலக்டிரிக் வொயர்டா..தலையை குனிங்கடா.." திடீரென்று ராஜா கத்தினான் மேலிருந்தவர்களை பார்த்து
ஆம் மேலிருந்து ஆடுபவர்கள் அந்த எலக்டிரிக் வொயரை கவனிக்காமல் ஆட, மாணவர்கள் பதறிப்போய் கத்துகிறார்கள்.
உடனே பசூலும் நண்பர்களும் தலையை குனிந்து கொண்டு பதறிப்போய் இறங்குகிறார்கள்..
பேருந்து கல்லுரியை நோக்கி மேள தாளங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிறது..வழியில் மாணவிகளின் கூட்டங்களை கண்டால் போதும்
"டேய் அந்த இரட்டை ஜடைக்கு ஒரு ஓ போடுங்க..."
"டேய் அந்த மிஸ் காலேஜுக்கு ஒரு ஓ போடுங்க.."
என்று களைகட்டிக்கொண்டு கல்லூரியை நெருங்கிற்று. எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு முன்னர் சாமிகடை என்று ஒரு கடை இருக்கிறது.
அந்தக்கடையினில் பேருந்தை நிறுத்தச்சொல்வார்கள். அங்கே ஸ்டாப்பிங்கே கிடையாது..ஆனால் அந்தக் கடைதான் களைத்துப்போய் வந்த மாணவர்களுக்கு நிழல் தருகின்ற போதிமரம்
ஆம் பஸ்ஸில் வந்த மாணவர்கள் இரயில் விடுகின்ற கடை அது.
எல்லா ஆட்டங்களும் முடிந்து பேருந்து கல்லூரிக்கு சரியாக 10.00 மணிக்கு சிலசமயம் 10.30 - 10.40 என்று தாமதமாகப் போய்ச்சேரும்..
தாமதமாகிவிட்டாலே போதும் பிரின்ஸ்பால் உட்பட சில துணை ஆசிரியர்கள் வாசலுக்கு வந்து கவலை தொனித்த முகத்தோடு காத்துநிற்பார்கள்..இவனுங்க இன்னிக்கு ஏதாவது பிரச்சனையில்லாமல் வந்து சேரவேண்டுமே என்று.
பேருந்தில் வரும் மாணவர்கள் வாசற்படியில் முதல்வர் நிற்கிறார் என்று தெரிந்ததுமே போதும்..அப்படியே ஓடுகின்ற பேருந்தில் இருந்து குதித்து
சிலர் கேண்டீன் வழியாக..
சிலர் டாய்லெட் வழியாக..
சிதறிப்போய் பின்னர் அவரவர்கள் வகுப்பறைக்குப் போய் சேருவார்கள்..
வாசல் வழியாக நேர்மையாக வரும் மாணவர்களை பிரின்ஸ்பால் பிடித்து வைத்துக்கொண்டு "எந்த க்ளாஸ்..? என்ன பெயர்;.? என்ன நம்பர்? "என்று கேட்டு துளைத்து எடுத்துவிடுவார்
அவரவர் வகுப்பறைக்கு பக்கம் செல்லும் வரையிலும் அந்த வராண்டாவில் மெதுவாக நடந்து சென்று வகுப்பறை பக்கத்தில் சென்றதும் டப் டப் டப் என்று கால்களை வேகமாய் அடித்துக்கொண்டு மூச்சிறைப்பதாய் நடிப்பது போல க்ளாஸீக்கு ஆர்வத்தோடு ஓடி வருவதாய் காட்டிக்கொள்வோம்..
"தெரியுண்டா தெரியும்..நடிக்காதீங்கடா..வாங்க வாங்க உள்ள போங்க " என்ற ஆசியரியரின் அன்பான உபசரிப்போடு உள்ளே நுழைவோம்...
----------------------------------- ************** __________________-
இப்பொழுது அந்த பேருந்தின் கூரை மீது நடனமாடிய பசூல் டவுணில் இரும்புக்கடை வைத்திருக்கிறான்
என் கையை பிடித்தவனை தள்ளி விட்டானே அந்த தக்கரை பீர்முகம்மது அவன் எண்டர்பிரைஸஸ் கடை வைத்திருக்கிறான்
ராஜா - சினிமாவில் உதவி இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறான்
கோழி காதர் சென்னையில் ஜவுளிக்கடையில் இருக்கின்றான்
சிலர் வெளிநாட்டுப்பயணம் - சிலர் கணிப்பொறி புரொகிராமராக சென்னை - பெங்களுரில்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் இருக்கிறாhர்கள். இப்பொழுது மீண்டும் அவர்களை காண நேர்ந்தால் கூட அந்த பழைய சந்தோஷங்கள் - பேச்சுக்கள் - கிண்டல்கள் - இருக்காது
"டேய் என்னடா நல்லாயிருக்கியா.."
"நல்லாயிருக்கேன்"
"இப்ப எங்கடா இருக்கே "
"துபாயில இருக்கேன்டா"
"கல்யாணமாயிருச்சாடா"
"இல்லைடா"
"சரிடா பார்ப்போம்டா கடையில ஆள் இல்லை சீக்கரம் போகணும்"
அவ்வளவுதான் முடிந்துவிடுகிறது உரையாடல்கள். மேலும் பேசுவதற்கு எதுவுமே கிடைப்பதில்லை..கல்லூரி நேரத்தில் மணிக்கணக்காய் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டேயிருப்போம்..
இப்பொழுது 5 நிமிடங்களுக்கு மேல் மௌனமாகிவிடுகிற பேச்சுக்களில்தான் நட்பு இருக்கிறது. கவலைகள், குடுப்ப பிரச்சனைகள் ஆகியவற்றில் சிக்கி தவிக்கும் சில நேரங்களில் மனம் நினைத்துப்பார்ப்பதுண்டு
ச்சே கடைசி வரை கல்லூரி மாணவர்களாகவே கிண்டல்கள் கேலிகளோடு இருந்திருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்..?
-ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இழந்து போன சொர்க்கம்
இன்னொரு முறை வருமா?
எதிர்கால கவலை
இல்லாத
புதிரான வாழ்க்கை!
சதிராட்டம் கொஞ்சம்
சமத்து புள்ளையா
சில நேரம்
செஞ்சோற்று கடனாய்
செக்கியுரிட்டி வாழ்க்கை
வெட்டியாய் வெகு நேரம்
வேடிக்கையாய் பல நேரம்
இன்றோ.........
ஒரு நிமிழத்துக்குள்
ஓராயிரம் சிந்தனைகள்
எங்கோ பாத்த மாதிரி இருக்கே?
வாங்க ஒரு கப் காபி சாப்டலாம்.
இல்லேங்க இன்னொரு நாள் பாத்துக்கலாம்!
ஹெய் நீ இவன் தானே?
ஆமா பஸ் வந்துடுச்சு இன்னொரு நாள் பாத்துக்கலாம்.............
நன்றாக இருந்தது பதிவு.
அருமையான வரிகள். பழசை எல்லாம் அசை போட வைத்த வரிகள்
ஒருபடி இன்னும் கீழே போய் பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா இது தான் நினைவுக்கு வருகிறது.
கல்லூரி வாழ்க்கையை அசை போடச் செய்த பதிவு. நன்று.
சிங் , ராம்கி, சேது , கைப்புள்ள மற்றும் பெயர் சொல்லாத புண்ணியவான் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
ஒரு முறைதான் ஒருமுறைதான்
வாழ்க்கையில் கல்லூரி காலங்கள் ஒருமுறைதான்...
அதோ வருகிறான் பாருங்களேன் நவீன். இவன் ரொம்ப வித்தியாசமானவன்..கையில் ஒரு நோட்டுப்புத்தகம் , அரைகால் டவுசர் என்று படு வித்தியாசமாய் வருபவன். எப்போதும் எங்கள் கல்லூரிப்பேருந்தில் தொங்கிக்கொண்டுதான் வருவான்.
எங்கள் கல்லூரிப்பேருந்தில் ஏறி மூன்றாவது நிறுத்தத்தில் இறங்குவான். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் . பின்னர்தான் தெரிந்தது அவன் ஒரு மெக்கானிக்ஷாப்பில் வேலைபார்க்கிறான் என்று.
நிறைய சிரித்தேன்.
சும்மா பிகர்களை நோட்டம் விடுவதற்காக நோட்டோடு திரிந்திரிக்கிறான். பின்னர் எங்களோடு நன்றாக பழகி விட்டான். இவன் இப்போது உயிரோடு இல்லை..ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டான்..
இதன் பின் உண்மையில் என்னால் வாசிக்க மனம் தூண்டவில்லை. நிறுத்திவிட்டேன்.
சிரிக்கலாம் என வந்தால் இப்படியா கொல்வது. எனது ஈழத்து துயர் நிறைய. அதையே சிலர் ஒலிப்பதிவுகளில் நகைச்சுவையாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள்ஈழத்து பதிவாளர்கள். எங்கோ காட்ட வேண்டிய கோவத்தை உங்களிடம் காட்டகிறேன் என கோவம் வேண்டாம். என்ன செய்வது . நமது விதி.இந்த துயரையே சகிக்க முடியவில்லை. ஈழத்து மக்கள் பட்ட துன்ப துயரங்களை நகைச்சுவையாக்கி ஈழத்து மகன்களே ஒலிப்பதிவு போடுகிறார்கள். என்ன கொடுமை.ஆ ஒட்டுக்கேக்கலாம் வாங்க. என்ற தலைப்பில் என நினைக்கிறன்.
//சிரிக்கலாம் என வந்தால் இப்படியா கொல்வது. எனது ஈழத்து துயர் நிறைய. அதையே சிலர் ஒலிப்பதிவுகளில் நகைச்சுவையாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள்ஈழத்து பதிவாளர்கள். எங்கோ காட்ட வேண்டிய கோவத்தை உங்களிடம் காட்டகிறேன் என கோவம் வேண்டாம்//
நண்பனின் மரணத்தை நான் நகைச்சுவைப்படுத்தவில்லை. அவனுடைய சோகம் இன்றளவும் எங்களை பாதிக்கின்றது.
ஆனால் அவன் எங்களுடன் இருந்த அந்தத பசுமையான நாட்களை அசைபோட்டிருக்கின்றேன். அவ்வளவுதான்.
Post a Comment