Tuesday, November 22, 2005

ஒரு நண்பனின் திருமணம்

இன்று என்னோடு வீதியில் விளையாடிய பால்ய சிநேகிதன் ஒருவனுக்கு திருமண நாள். நேற்று தொலைபேசி செய்திருந்தான்.

தொலைபேசியில் பேசும் போதே தெரிந்தது அவனுடைய வருத்தம். அவன் என்மீது மிகவும் பிரியமாக இருப்பான் நான் எப்போதும் கிண்டலடித்துக்கொண்டே இருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும்

டேய் ஞானி நாளைக்கு எனக்கு கல்யாணம்டா..நீ இல்லாதது எல்லாம் ஒரு பெரிய குறைடா..

அதான் நம் குலாம் இருக்கான்ல..அவன் பார்த்துக்குவான்டா..என்று இன்னொரு நண்பனை சொல்லி சமாதானப்படுத்தினேன்

நல்லபடியா நடக்கனும்னு துவா செய்யுடா..நம்ம இப்ப என் கல்யாணத்துல நம்ம ஃபிரண்ட்ஸ் யாருமே இல்லடா..ஆளாளுக்கு பறந்து போயிட்டாங்க

என்னடா செய்ய? கண்டிப்பா நான் துவா செய்யுறேன்.சரியா..


தொலைபேசியில் அவனோடு பேசிவிட்டு காலத்தில் நினைவுகளோடு தொலைந்து போனேன்.


அந்த நண்பன் பெயர் அலி உசேன். நாங்கள் எல்லாம் டவுசர் போட்ட காலத்திலிருந்து பழகிக்கொண்டிருக்கும் வீதி நண்பர்கள்


நோன்பு சமயத்து மாலை நேரத்தில் அலி உசேனின் பண்ணை வீட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றை நோக்கி ஒரு மாட்டு வண்டி சென்று கொhண்டிருக்கிறது வீதிச் சிறுவர்களை ரொப்பிக்கொண்டு.

தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை என்ற ஒரு இடத்தில் மிகவும் ஆழமான நீரோட்டம் உள்ள பகுதியை யானைககிடங்கு என்று நாங்கள் செல்லமாக அழைப்போம்

எப்படி அந்தப் பெயர் வந்தது என்றால் அந்த ஆழமான பகுதியில் இரண்டு யானைகள் சிறிதான இடைவெளியில் அருகருகே நிற்க வைத்து அவற்றிற்கிடையே நீரோட்டத்தை பாய்ச்சினால் எப்படியிருக்கும் அதுபோல இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையே நீர் ஓடிப்கொண்டிருக்கும். மிகவும் ஆழமான நீர் சுழலும் பகுதி அது.

அதில் இந்தக்கரையிலிருந்து அந்தக்கரைக்கு பாய்ந்து சென்று மீண்டும் மூச்சிறைக்காமல் திரும்பிவருபவன்தான் வீரன். எனக்கு ஞாபகம் இருந்தவரையிலும் அலி உசேன்தான் முதன் முதலில் அந்த இடங்களுக்குள் நீச்சல் பழகி காண்பித்தவன்

பின் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பி வரும்வழியில் கோழி நாய் என்று விரட்டி விரட்டி அடித்துக்கொண்டே வருவோம் எப்போதும் அவன் குறி தப்பவே செய்யாது.

எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அவன் திறமையாக விளையாடுவான்.

எங்களின் பதின்ம வயதில் அவன் வீட்டு மொட்டை மாடியில் வைத்து உலகத்தையே விவாதிப்போம். ஏதோ காங்கிரஸ் மாநாடு நடப்பது போன்று சுற்றி அமரந்துகொண்டு எங்களை விட வயது குறைந்த சிறுவர்களிடம் காசு கொடுத்து முறுக்கு, அப்பளம், சுண்டல் , சீடை என்று நொறுக்குத்தீனிகளை வாங்கி வரச்சொல்லுவோம். பண்டிகை சமயங்களில் அவ்வாறு விவாதிக்கும்போது காசு கையில் அதிகமாக புரளுவதால் ரொட்டி சிக்கன் என்று களைகட்டும்.

ஓர்நாள் ராணி பத்திரிக்கையில் ரஸகுல்லா போன்று ஒரு இனிப்பு வகை செய்வது எப்படி என்று சமையல் குறிப்பு கொடுத்திருந்தார்கள். நாங்களும் ஆசைப்பட்டு

டேய் ஞானி நீ போய் உங்க வீட்டுல ஒரு பாத்திரம் கொண்டு வா - நானும் செய்யதுவும் ரவை வாங்கிட்டு வர்றோம்..பாலுக்கு பிரச்சனையில்லை எங்க பண்ணையிலிருந்து எங்க வீட்டுக்கு வர்ற ஒரு சொம்பு பாலை நான் எடுத்துட்டு வர்றேன்

சமையல் பக்கத்தில் உள்ள ஒரு முட்புதருக்குள் ஆரம்பித்தது. அங்குள்ள சுள்ளிகளை பொறுக்கி அடுப்பு மாதிரியான ஒரு அமைப்பினுள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு மூட்டினோம்.

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கைiயை போட்டு பின் கொதி வரும்;போது ரவையை கொஞ்சம் கொஞ்சமாக தட்டி கிளறிக்கொண்டிருந்தோம்

அரைமணி நேரமாவது கிண்டியிருப்போம் . நெருப்பு அணைந்துவிட்டது. சரி இதற்கு மேலும் கிண்ட முடியாது தாமதமாகிவிடும் என்று நினைத்து அதனை உடனே சாப்பிடும் ஆவலில் பாத்திரத்தில் இருந்து அந்த திடப்பொருளை எடுக்க முற்பட்டால் அந்தோ பரிதாபம்..பாத்திரத்தின் அந்த திடப்பொருளுக்குள் கரண்டி மாட்டிக்கொண்டது.

கரண்டியை ஒருவழியாக எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

டேய் கரண்டி வளைஞ்சிருச்சிடா..எப்படியாடா வீட்டுக்கு கொண்டு போக..?

தெரியாமத்தானே எடுத்திட்ட வந்த விடுடா..தூரப்போட்டிறலாம்

கடைசியில் அதனை செய்துவிட்டோம் என்பதற்காக அந்த திடப்பொருளை உண்டு எல்லோருக்கும் வயிற்றுவலி வந்து கஷ்டப்பட்டோம்.

ஒருநாள் வாய்காலுக்கு குளிக்கச்செல்லும்போது தன்னுடைய சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு ஒரு வரப்பில் தலையை மட்டும் நீட்டி சைக்கிளை கவனித்துக்கொண்டே இயற்கை கடனை கழித்துக்கொண்டிருந்தார் ஒருவர்

நாங்கள் அவரின் சைக்கிளை தள்ளிவிட அவரால் அந்த சூழ்நிலையில் எழுந்தும் வரமுடியாது. அங்கிருந்தபடியே கத்திக்கொண்டிருப்பார். நாங்கள் ரசித்துக்கொண்டே சிரித்துக்கொண்டே சென்று கொண்டிருப்போம்

பெருநாளுக்கு முந்தைய நாளில் இரவு ஒரு மணிக்கு திடீரென்று ரோந்து செல்கின்ற போலிஸ் வாகனத்தை நிறுத்தி பெருநாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு கொடுத்து திகைப்பூட்டுவோம்

இப்படி அவனோடு என் ஞாபகங்களை எல்லாம் அசை போட்டுப் பார்க்கின்றேன்.

மொட்டைமாடிகளில் காற்று வாங்கிக்கொண்டும்
வாய்க்காலில் தண்ணீரில் கால் நனைத்துக்கொண்டும்
வீடு கட்டுவதற்காக பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலில் உட்கார்ந்து மணிக்கணக்காய் பேசிக்கொண்டும் இருப்போம். அப்படியான சூழ்நிலைகளில் பலமுறை எங்களுக்குள் இந்த பேச்சு வந்ததுண்டு


டேய் நம்ம எல்லோருடைய கல்யாணத்திற்கும் எல்லோரும் கண்டிப்பா இருக்கணும்டா

கண்டிப்பாடா..வாழ்க்கையில் ஒரே ஒருநாள் வரப்போற அந்த திருமண நாள்ல நாம எல்லோரும் எந்த ஊர்ல இருந்தாலும் வந்திறனும் என்ன

சரிடா கண்டிப்பாடா..ஆளாளுக்கு வாக்கு கொடுத்தார்கள்


காலத்தின் சுழற்சி எங்களை எப்படியெல்லாம் மாற்றப்போகிறது என்று தெரியாமல் விளையாட்டுத்தனமாய் விவாதித்துக்கொண்டிருப்போம்

இப்பொழுது பாருங்கள் நான் துபாயில் இப்பொழுதான் விடுமுறை முடிந்து வந்திருக்கிறேன்.
மற்றும் சில நண்பர்கள் பணிநிமித்தமாக ஆளாளுக்கு ஒவ்வொரு ஊர்களில் இருக்கிறார்கள்.

எனக்கு என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் கவிதைதான் ஞாபகம் வருகிறது. இந்த வரிகள் நான் அனுபவித்து எழுதியது.

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !


சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!


இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு இ
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!


எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!


புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இதுவெல்லாம் ஒரு மிகப்பெரிய இழப்பு. வாழக்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு முறை மட்டும் வருகின்ற திருமணம் - மரணம் போன்ற நல்லது கெட்டதுக்கு கூட கலந்து கொள்ள முடியவில்லை யென்றால் என்ன வாழ்க்கையடா இது. ?


சராசரி இந்திய வாழ்க்கை அறுபது ஆண்டுகள்தான். இந்த குறுகிய நாட்களுக்குள்ளாகவாவது இந்த உலகத்தில் நமக்குப் பரிச்சயப்பட்ட உறவுகளோடு கூட நம் ஆயுளைக் கடத்த முடியவில்லையே.

காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம் ,
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!


எனக்கு உலகெல்லாம் சுற்றி விதவிதமான மனிதர்களை விதவிதமான இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை. இருக்கின்ற நாட்களுக்குள்ளாகவாவது
நம்மை சுற்றியுள்ள உறவுகளின் நண்பரகளின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்றுதான்.

எவ்வளவுதான் வீரமாய்ப் பேசினாலும் சவால் விட்டாலும் முதன்முதலாய் திருமண வாழ்க்கைக்குள் நுழையப்போகும் அந்த நண்பர்களின் முதல் பயம் கண்டு ரசிப்பது
அவனைக் கிண்டலடிப்பது என்று மாப்பிள்ளை அலங்காரம் படு ஜோராக இருக்கும்

மாப்பிள்ளையை அலங்காரம் செய்யும் பொழுது கிண்டல் கேலிகள் எல்லாம் ரசிப்புத்தன்மையுடதையதாக இருக்கும். சிலவற்றை சொல்ல முடியும் சில சென்சாரில் மாட்டிக் கொண்டது

டேய் யாருடா மாப்பிள்ளை தோழன்..

தெரியலைடா ஒருவேளை குலாம் வருவான்னு நினைக்கிறேன் அவனுக்குத்தான் நம்ப செட்டுல முதல்ல கல்யாணம் ஆச்சுது

( இந்த மாப்பிள்ளைத் தோழனுக்கு மாப்பிள்ளை வீட்டில் மிகுந்த மிதிப்பு இருக்கும். அவன் கேட்கின்ற பணத்தை மாப்பிளை வீட்டில் கொடுப்பார்கள். அவன்தான் ஏழுநாட்கள் மாப்பிள்ளைக்கு தேவையான சத்து மிகுந்த இரவு உணவுகளை தேர்ந்தெடுத்து வாங்கி வருபவன். )

நான் மாப்பிள்ளை தோழனாகவாடா.. - நான்

உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல..நீ மாப்பிள்ளை தோழனா..மவனே உன் கல்யாணத்துக்கு நான்தான்டா மாப்பிளை தோழன் நீ செத்தே - குலாம்

போடா என் கல்யாத்துக்கு மாப்பிள்ளை தோழனே தேவையில்லை..எல்லாம் எனக்குத் தெரியும் போடா..

அதையும் பார்க்கத்தானே போறோம்

இப்படி ஜாலியான சம்பாஷைணைகள் தொடரும். அதையெல்லாம் அனுபவிப்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும்பா.

பரிச்சயமற்ற மனிதர்களோடு, பரிச்சயமற்ற பாஷைகளோடு, பரிச்சயமற்ற இடங்களில் வாழ்கின்ற இந்த போராட்டமான வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது.


மனதின் ஓரத்தில் இருந்து என்னுடைய வேலையை சிதைத்து ஒரு பட்சி சொல்லிக்கொண்டேயிருக்கிறது

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நீ
அயல்தேசத்து ஏழைதான்டா!ம்ம் நண்பர்களே..கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் உங்களின் அறுபதாம் திருமணத்திலாவது..

இதயம் ஏக்கத்தோடு

- ரசிகவ் ஞானியார்

2 comments:

முத்துகுமரன் said...

புலம் பெயர் வாழ்க்கையில் நாமெல்லாம் சில சுகங்கள் அனுபவிக்கும் எந்திரங்களே.. ஒரு சமன்பட்ட மனநிலையை இந்த வாழ்க்கை தந்து விடுகிறது. முறை வைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொள்ள வேண்டிய நெருகடிகள் என சொர்க்கத்திற்குள் தள்ளிவிடப்பட்ட குருடனது வாழ்வுதான் இந்த புலம் பெயர் வாழ்வு.....

உங்கள் நண்பருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று இன்புற்றிருக்க இறைவனிடம் எனது பிராத்தனைகள்

அன்புடன்
முத்துகுமரன்

நிலவு நண்பன் said...

//மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று இன்புற்றிருக்க இறைவனிடம் எனது பிராத்தனைகள்//

நன்றி முத்துக்குமரன் அவர்களே

//சொர்க்கத்திற்குள் தள்ளிவிடப்பட்ட குருடனது வாழ்வுதான் இந்த புலம் பெயர் வாழ்வு.....//


மிக மிக உண்மை..
அழகான ஆனால் வேதனையான கற்பனை


இங்கே
நாவை அறுத்துவிட்டு
பதார்த்தங்கள்
பரிமாறப்படுகிறது


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

தேன் கூடு