Tuesday, November 22, 2005

காதல் மரிக்குமோ?



கடந்து செல்லும் குமரியின் நடையில்
கவிதைகள் வந்து வெடிக்குமடி! - கொடியாய்
படர்ந்து சுற்றும் பார்வை என்தன்
பருவத்தில் வந்து கடிக்குமடி! - உன்னைத்
தொடர்ந்து பின்னால் வருகின்ற என்னை
தொடரும் நிழலும் இடிக்குமடி! - பெரும்
இடர் வந்தாலும் நின்று காப்பேன்
இதயம் வீரத்தில் துடிக்குமடி!

முறைத்துச் சென்றால் பெண்ணே நான்
முட்டாள் ஆகிப் போனேனடி! - மண்ணில்
இரைத்து வீணாய் சிந்திய தண்ணீர்
இலைக்கோ கிளைக்கோ லாபமோடி? - அன்பை
கரைத்து செய்த காதல் இருக்கு
கண்கள் கண்டால் ஏங்குமடி!- தினமும்
சிரைத்து மகிழ்ந்த தாடி உன்தன்
சிந்தனை கொண்டே தேங்குதடி!


வெட்கம் கண்டு வெறுந்தரை படுத்து
விட்டம் பார்த்து உளருகிறேன்! - தீ
பக்கம் வந்து குசலம் கேட்கும்
பிரிந்து சென்றால் பதறுகிறேன் - என்
தூக்கம் எல்லாம் துரத்தி சென்றாய்!
திசுக்கள் ஒன்றாய் மோதுதடி! - உனக்கு
துக்கம் வந்தால் எனக்குள் ஏந்தி
துயரை துடைக்குமென் காதலடி!


சிரித்து மகிழும் அழகு சிரிப்பில்
சிறைபட்டது என் இதயம்! - கண்கள்
எரித்து வீசும் அவளின் பார்வை
எனக்குள் விடிந்தது உதயம்! - மணல்
அரித்து செல்லும் வெள்ளம் போல
அவளின் ஞாபகம் பதியும்! - காதல்
மரித்து போனால் என் செய்வேனோ?
மானிட வாழ்வே புதையும்!


-ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு