Thursday, November 17, 2005

ஒரு மலைப்பயணம்

காலை 10 மணிக்கு நண்பர்கள் நாங்கள் 5 பேர் சேரந்து ஒரு காரிலும் உறவினர்கள் இரண்டு காரிலும் ஏற வண்டி கிளம்பிற்று. துபாயிலிருந்து மலைப்பகுதிகள் நிறைந்த அல்அய்ன் என்ற பகுதிக்கு செல்வதாக ஏற்பாடு.எங்களுக்கோ பாதை அவ்வளவாய் புலப்படாது. ஆகவே முன்னால் சென்ற உறவினர்களின் வண்டியை பின்தொடர்ந்துதான் செல்ல வேண்டும்

அல்அய்ன் துபாயிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. துபாயில் உயரமான கட்டிடங்களைத்தான் பார்க்க முடியும். ஆனால் அல் அய்ன் பகுதியில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்ற மரங்களும் மலைபபபுகதிகளும் இருக்குமிடம். பாலைவனப் பகுதி மாதிரியே தெரியாது.

துபாயிலிருந்து கிஸஸ் என்னுமிடம் வழியாக எமிரேட்ஸ் சாலை போகும் வழியில லுலு வில்லேஜ் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கு சென்று கொறிப்பதற்காக சில கடலை (இங்கேயும் கடலையா..? ) வகைகள் வாங்குவதற்காக நான் உள்ளே செல்ல அதற்குள் போன் வருகிறது காரில் இருக்கும் நண்பர்களிடமிருந்துடேய் ஞானி ஒண்ணும் வேண்டாம் திரும்பி வா..இங்க கார் கிளம்ப போகுது


ஒன்றும் வாங்காமல் பரிசு கிடைக்காமல் ஏமாந்த தருமியைப்போல திரும்ப வந்தேன்.


காரில் அமர்ந்தேன். டேய் டேப்பை ஆன் பண்ணுடா..

ஒரு பக்கம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபக்கம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரலி
அவள் ஒரு பைரவி

அவள் ஒரு பைரவி


பாடல் ஒலித்துக்கொண்டிருக்க கார் பாலைவனப்பகுதியை கடந்தபடி சென்று கொண்டு இருக்கிறது.

நண்பர் ரசூல் கேட்டார்

அது என்ன மிதிலையின் மைதிலி..?

அதான்பா சீதையை சொல்றாங்க

சரி காவிரி மாதவி..?

நம்ம சிலப்பதிகார மாதவி

பார்த்தியா ஞானி சீதைக்குப்பிறகு கற்புக்கரசியா ஒருத்தனை மட்டும் நினைச்சிகிட்டு இருந்த மாதவியைத்தான் சொல்றாங்க

சரி சரி தண்ணிய குடி தண்ணிய குடி

கிண்டலடிக்கும்போது இப்படித்தான் கூறுவோம். எனக்கு விவாதிக்க மனம் வரவில்லை..பாடல்களில் லயித்துப்போனேன். அனேக பேரைப்போலவே எனக்கும் பயணத்தில் பாடல் கேட்டுக்கொண்டே செல்வது பிடிக்கும்.

இப்படித்தான் சின்ன வயதில் சென்னைக்கு அம்மாவுடன் சென்றிருந்த பொழுது உப்பளப்பகுதியை தாண்டி வண்டி சென்று கொண்டிருக்கும்போது ஒரு பாடல் ஒலிபரப்பட்டுக்கொண்டிருந்தது

நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தான் என் செல்லக் கண்மணி என்ற பாடல் மாவீரன் படத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது

பின்னர் அந்தப்பாடலை எங்கு எந்த சூழ்நிலையில் கேட்டாலும் எனக்கு சின்ன வயதில் அம்மாவுடனான அந்தச் சென்னைப்பயணமும் அந்த உப்பளமும்தான் ஞாபகத்தில் வரும்.

பாடல் பாலைவனப்பகுதியில் ஊர் ஞாபகங்களை கொண்டு வருகிறது. கார் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
மின்னல் விழுந்ததுபோல் எதையோ
பேசவும் தோணுதடி

மோகனப்புன்னகையில் ஒருநாள்
3 தமிழ் பார்த்தேன்
காதல் தவிப்பினிலே என்
கண்களை விற்றுவிட்டேன்


பாடல் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது. எனக்கு கல்லூரி காலம் காதல் காலம் கனாக்காலம் என்று மனம் சுற்றி வந்தது.

பாலைவனப்பகுதியின் இருபக்கமும் கம்பிவலைகளால் அடைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒட்டகம் பாய்ந்துவிட்டால் விபத்து நேரிடக்கூடும் என்பதால் அந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்


நாய் பூனை போன்ற மற்ற மிருகங்கள் சாலையில் செல்லும்போது அய்யோ இவன் கார்ல வேகமா வர்றான் மோதினா நம்ம செத்தோம் என்று நிலை உணர்ந்து சாலையின் குறுக்கே வேகமாய் பதறி கடந்து செல்லும்.

ஆனால் ஒட்டகம் மட்டும் அப்படியல்ல இந்த கார் வேகமாய் வருகிறது நாம் இப்படி மெதுவாய் கடந்து சென்றால் இந்த கார் வந்து நம்மை மோதிவிடும் என்ற உணர்வேயில்லாமல் அலட்சியமாக சாலையைக் கடந்து செல்லும்.

ஆகவேதான் சாலையின் இருபக்கமும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டள்ளது . ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு அல்ல கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக.

நண்பர் நகைச்சுவையாக கூறினார்

இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த மக்களின் அறிவை விடவும் குறைவான அறிவுடனையே அந்த மிருகங்களை படைத்துள்ளானோ என்று..?

கார் காற்றை கிழித்துச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வெயிலில் தூரத்தின் செல்கின்ற வாகனங்கள் எல்லாம் ஒரு சிறிய இரும்புத்துண்டுகளாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

பாலைவனத்தில் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதைக்காணும்போது எனக்கு ஏமாற்றப்பட்ட சில இந்தியர்கள்தான் ஞாபகத்தினுள் வருகிறார்கள்
நல்ல வேலை என்று ஏமாற்றப்பட்டு இந்த ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகின்ற சில இந்தியர்களை நினைத்து பரிதாப்படத்தான் முடிகிறது.

மணலாய் நிரம்பிக்கிடக்கும் அந்த பாலைவனப்பகுதியை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் என்று நண்பனிடம் அனுமதி வாங்கி காரின் கதவை திறக்க முயற்கிக்க நண்பன் கத்துகிறான்

ஞானி திறக்காதே அங்க பாரு கார் வருது.. - கத்துகிறான் ராஜா

எனக்குத் தெரியும் நான் பார்த்துகிட்டதானே இருக்கேன்.ஏம்பா கத்துற - நான் கொஞ்சம் கோபப்பட

உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..சரி போ - கொஞ்சம் அவனும் கோவப்பட்டான்

சரி நான் போட்டோவே எடுக்கலப்பா - செல்லக்கோவம்

இதுபோன்ற சின்ன சின்ன சண்டைகள் இன்னும் ஆழமான நட்புக்கு வழிவகுக்கும்.

பின் பயணம் தொடர்கிறது. மௌனமாகவே நொடிகள் நகர்கின்றது. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன்.

வயிறு பசிக்குதுப்பா..ஏதாவது சாப்பிட இருக்குதா..?

ம் பின்னால இருக்குது ஒரு பிஸ்கெட் பாக்ஸ் ரசூல் எடுத்துக்கொடுங்க - ராஜா

பிஸ்கெட்டை நான் மென்று சாப்பிடமாட்டேன். அப்படியே வாயினில் வைத்து அந்த பிஸ்கெட்டை கரைத்து கரைத்து முழுங்குவேன் ரொம்ப சுவையாக இருக்கும்.

வாராயோ தோழி வாராயோ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க ரசூல் லயித்துப்போய் ரசித்துக்கொண்டிருந்தார். அவர் எப்போதுமே பழைய பாடல்களின் விரும்பி.

எனக்கு நினைவு தெரிந்த அந்த சின்ன வயதில் இந்தப்பாடல் எல்லா கல்யாண வீட்டிலும் ஆரம்ப பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கும். இந்தப்பாடலில் ஆரம்பிப்பதும் ஒரு திருமணச்சடங்கோ என்று முன்பு நினைத்ததுண்டு.

இப்பொழுதெல்லாம் காலப்போக்கில்; அந்தந்த சூழ்நிலைகளில் பிரபலமான பாடல்கள் ஒலிபரப்பாகிறது. இடையில் பம்பாய் படத்தில் கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பின்னர் காதலர்தினத்தில் வரும் நினைச்சபடி நினைச்சபடி என்ற பாடல் ஒலிக்கும். எனது தங்கையின் திருமண கேசட்டில் கூட இந்தப் பாடல் பிண்ணனியில் ஒலித்ததால் எனக்கு இந்தப்பாடல் கேட்கும்பொழுதெல்லாம் எனது தங்கையின் திருமணம்தான் ஞாபகம் வரும்

முன்னேறிக்கொண்டிருக்கிறோம். தண்ணீர் தாகம் எடுக்கிறது.

டேய் தண்ணி இருக்குதா? ( குடி தண்ணீர்தாம்பா )

இல்லடா காலியாயிடுச்சு..சரி எங்கேயாவது நிற்கும்போது முன்னால போற கார்ல இருந்து எடுத்துக்கலாம் அதுல நிறை பாட்டில் இருக்கு - சமாதானப்படுத்தினான்

தாகத்தில் அந்த பாலைவனப்பகுதியை ரசிக்க முடியவில்லை. கிளம்பும்பொழுது குடிதண்ணீரை அதிகமாய் விரயம் செய்து முகம் கழுவியது ஞாபகம் வருகிறது. ஒரு பொருள் இல்லாமல் இருக்கும்பொழுதுதான் அதன் அருமை தெரிகிறது.

எனக்கு என் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது

காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்துவரைஅதுபோல எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை யாருக்கும். கிடைத்தால் கடவுளையே மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு இடத்தில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி இறங்கினோம் பின்னர் அந்த ஹோட்டல் சரியில்லை இன்னொரு ஹோட்டல் செல்லலாமென்று நினைத்து காரை எடுக்கும்போது
நான் இறங்கி காரை எடுப்பதற்காக நண்பனுக்கு உதவி செய்தேன்

பின்னால் காரில் வந்த வந்த ஒரு அரபி ஹேய் ஹேய் சூ ஹாதா என்று எனது பேண்டை பார்த்து கத்தினான். அவனுடன் இருந்த அவனது துணைவி மற்றும் குழந்தைகள் எல்லாம் சிரித்தனர்

என்னடா பேண்ட் பின்னால கிழிஞ்சிருக்கா என்று பின்னால் நான் பதறிப்போய் பார்க்க
அப்புறம் அந்த அரபி மறுபடியும் என்னைப்பார்த்து கண்ணை சிமிட்டி நக்கலாக சிரித்தான் புரிந்து போனது எனக்கு அவன் நக்கலடிக்கிறான் என்று

மவனே நீ மட்டும் எங்க ஊர்ல இந்த மாதிரி பண்ணியிருந்த வச்சுக்க உன்னய மேய்ஞ்சிருப்போம்டா..உன் ஊருன்னு நீ துள்ளுரியோ.. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்

இங்கோ காரில் பாடல் ஓடிக்கொண்டு இருக்கிறது ஒரு பழைய பாடல்

ஆம்பிளைக்கு பொம்பள
பொம்பளைக்கு ஆம்பிள அவசியம்தான்
அதுக்குள்ள
அடங்கி இருக்குது இரகசியம்தான்


நல்ல கருத்துள்ள பாட்டு. டேய் பாட்ட மாத்துங்கடா ஏதாவது புதுசா இருந்தா போடுங்க

இது கூட புதுப்பாட்டுதாம்பா - ரசூல் ரசித்தபடி கூறுகிறார்

ஆமா நீங்க சின்ன வயசில இருக்கும்போதுன்னு நினைக்கிறேன்..?

காருக்குள் சிரிப்பலை. காதலர்தினம் கேசட் மாற்றப்படுகிறது.

இந்த கவனத்தில் நாங்கள் தொடர்ந்து சென்ற காரை மிஸ் செய்து விட்டோம்.

வரும்வழியில் வீடியோ கேமிராவில் ஒரு பெரிய கடிகாரத்தை பதிவு செய்தோம். வண்டி தடம்மாறி மீண்டும் அதே கடிகாரத்தை சுற்றி வந்தோம். அந்த முறையும் வீடியோவில் பதிவு செய்துகொண்டேன்.பின்னர் தொலைபேசி செய்து விசாரித்ததில் அவர்கள் அந்த கடிகாரம் இருக்குமிடத்திற்கு அருகே வரச்சொன்னார்கள்.

மறுபடியும் அந்த கடிகாரத்தை படம் பிடித்தோம்.

டேய் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் என்ன நினைப்பாங்கன்னு தெரியுமா..?

என்ன

அல்அய்ன்ல என்னடா ஒரே கடிகாரமா இருக்குதுன்னு நினைச்சு ஏமாந்து போவாங்க..?

காருக்குள் மெல்லியதாய் சிரிப்பலை

அதுக்குத்தான் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்னு சொல்வாங்களே சரிதான் அது

ஒரு வழியாக அவர்கள் காரை கண்டுபிடித்து அவர்கள் பக்கத்தில் காரை பார்க் செய்தோம்.

அந்த செந்தியன் உணவகத்திற்குள் நுழைந்தோம்

பெயரே வித்தியாசமாக இருக்கிறது செந்தியன்.

என்னடா இது செந்தியன்னு போட்டிருக்கு?

செந்தமிழன் என்பதன் சுருக்கமோ..?

என்னவோ இருக்கட்டும்; முதல்ல போய் சாப்பிடுவோம்..சாப்பிட்டு முடித்துவிட்டு அருகே உள்ள மியுசியத்திற்கு சென்றோம் அங்கே பழங்காலத்து அரபிகளின் கலாச்சாரப் பொருட்கள் பழக்க வழக்கங்கள் அவர்களின் பெட்டகங்கள் படுக்கை அறைகள் சமையலறைகள் என்று பார்த்துக்கொண்டே வந்தோம்.

விடைபெற்று வரும்பொழுது அந்த கால ஷேக் செய்யது (முன்னால் அமீரக அதிபர்) வின் பழைய புகைப்படம் ஒன்றினை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.ஷேக் செய்யதுவின் மீது அரபு மக்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்தான் தனித்தனியே பிரிந்து கிடந்த குட்டி குட்டி நாடுகளை
அபுதாபி
அல்அய்ன்
சார்ஜா
துபாய்
உம் - அல்-கொய்ன்
ராஸல் கைமா
அஜ்மான்


என்ற ஏழு குட்டி குட்டி நாடுகளை ஒன்றிணைத்து அமீரகமாக மாற்றி பெருமை அவருக்குச் சாரும்.

அவரைப்பற்றி ஏதேதோ வதந்திகள். அவர் ஈரான் நாட்டைச் சார்ந்தவர் அங்கிருந்து இங்கு கள்ளத் தோணியில்தான் வந்தார் பின்னர் இங்குள்ள ஆட்சியைப் பிடித்துக்கொண்டார் என்று ஏதேதோ சொல்லப்படுகிறது.
எப்படியோ அவர் இல்லையென்றால் அமீரகம் இல்லை. யாரும் இங்கு பிழைக்க முடியாது. ஆகவே கம்பீரமாக நிற்கும் அவரை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

அங்கிருந்து நேராக மலைப்பகுதிக்கு சென்றோம். மலைப்பகுதிக்கு போகும் வழியில் கடுமையான டிராபிக். இப்பொழுதே மணி 7 ஐ நெருங்கிற்று. எப்பொழுது போய் சேருவோமோ என்ற பயம் எழும்பியது. ஏனென்றால் நினைத்தால் திரும்பி வரவும் முடியாது. அந்த அளவிற்கு முன்னாலும் பின்னாலும் கார்கள்.


மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறது கார்கள். இரண்டு மலைகளுக்கு இடையே நிலவு அழகாய் தெரிந்தது. கார் சுற்றி சுற்றி செல்ல செல்ல நிலவு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆக மாறிக்கொண்டே வந்தது. அழகாய் இருந்தது அந்த அழகிய மாறுதல்.

கடவுள் நிலைவை கையில் எடுத்து வைத்துக்கொண்டு எங்களை களிப்பூட்டுவதற்காக நிலவை இங்கேயும் அங்கேயும் வீசி விளையாடுகிறாரோ என்று தோன்றியது.

செல்கின்ற வழியில் ஒரு ஓரத்தில் மலைமீதிருந்த கீழே பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இறங்கி பார்த்தோம். ய்ப்பா..கீழிருக்கும் கார்கள் மனிதர்கள் எல்லாம் போன்சாய் மனிதர்களாக போன்சாய் கார்களாக தெரிந்தது. இவ்வளவு சிறிய உணரத்தில் இருக்கும் நம்மாலேயே இவ்வளவு ரசிக்க முடிகிறதே..அப்படியென்றால் மிக மிக உயரத்தில் இருக்கும் இறைவன் நம்மையும் இயற்கையையும் எந்த அளவிற்கு ரசித்துக் கொண்டிருப்பான்

ஒரு வழியாக மலையின் உச்சிக்கு சென்றடைந்தோம். அங்கே ஒரு இடத்தில் பாகிஸ்தானியர்கள் எல்லாம் ஒன்று கூடி பாடல் பாடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்டேய் என்னடா பச்சைகள் எல்லாம் கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்

( பச்சைகள் - பாகிஸ்தானியர்கள்)

எதுக்கடா ஆடுறானுங்க

ஒருவேளை இன்னிக்குத்தான் எல்லோரும் குளிச்சிருப்பானுங்க அந்த சந்தோசத்தை கொண்டாடி மகிழ்றானுங்கன்னு நினைக்கிறேன்

கிண்டலடித்தாலும் அவர்களைப் போல கடுமையாக உழைக்க முடியாது அந்த அளவிற்கு கடுமையான உழைப்பாளிகள்.

ஒரு ஏசியை தனி ஆளாக நான்காவது மாடி வரையிலும் தூக்கி வருவார்கள்.
அந்த அளவிற்கு வலிமையுடையவர்கள். இதுபோன்ற ஏதாவத ஒரு பண்டிகை நாட்கள்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்

அதனை கவனித்துக்கொண்டே வந்தபோது ரா ரா என்று சந்திரமுகி படப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
எங்கிருந்து வருகிறது என்று திரும்பி திரும்பி பார்த்தால் அதோ ஒரு திறந்து வைத்த சிகப்பு நிற காரிலிருந்து வந்து கொண்டிருந்தது.

அந்த மலையுச்சியில் தமிழ்ப்பட பாடல் ஒலித்துக்கொண்டிருப்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

மலையுச்சியில் நின்றுகொண்டு வானில் உள்ள நிலவையும் மண்ணில் வந்து பெண்ணாய் இறங்கி சில நிலவுகளையும் ரசித்துவிட்டு கொறிக்க வேண்டியவற்றை கொறித்துவிட்டு கிளம்பினோம்


மலையுச்சியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று காரில் இருந்து ஒருவித வாசைனை வந்தது. வண்டியை நிறுத்தவும் முடியாது.பின்னால் வேறு வண்டிகள் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருக்கும் உறவினரின் வண்டிக்கு தொலைபேசி செய்து எங்கள் வண்டியில் ஏதோ நாற்றம் வருவதாக கூற அவர்களும் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்த நாங்களும் நிறுத்தி இறங்கி வண்டியை சோதனையிட்டோம்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வண்டி சரியாகி விட மீண்டும் பயணம் தொடர்கிறது பிண்ணணியில்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த
நாடே இருக்குது தம்பி

அன்னையிடம் நீ அன்பை வாங்கு
தந்தையிடம் நீ அறிவை வாங்கு


என்று ஒலித்துக்கொண்டிருக்க அப்படியென்றால் தந்தை அன்பில்லாதவரா? இல்லை தாய்தான் அறிவில்லாதவளா..? என்று நான் கேட்க

குழந்தைகளை
கான்வென்டில் சேர்ப்பதைப்பற்றி
கவலையில்லை
ஆனால்
கற்றபிறகு
நடுத்தெருவுக்குத்தானே
வரவேண்டும்


என்ற வைரமுத்து கவிதை ஒன்றை நண்பர் ரசூல் எடுத்து விட்டார். வெளியுலகத்திற்கு அழைத்துச் சென்று அறிவு புகட்டுவது தந்தைதானே என்று விளகம் கூறினார்.

ஒருவழியாக அப்படியே கொஞ்ச நேரம் தூக்கத்தை ரசித்தும் கொஞ்ச நேரம் பாடலை ரசித்தும் துபாய் வந்து சேர்ந்தோம் மீண்டும் அடுத்த பண்டிகைக்கு எங்கே போகலாம் எனற கனவுகளோடு.

-ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

ஒரு மலைப்பயணம்.....

தேன் கூடு