Monday, March 27, 2006

ஒருநாள் அத்தனையும் மீறப்படும்
வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக...
மனித இரத்தங்கள்!

கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!

வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்...
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!

நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!


வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!

உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!

சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?

நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..

நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!

புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்

காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்- ரசிகவ் ஞானியார்

Sunday, March 26, 2006

கவிதை

- கவிதை
என்
பாதிப்புகளின் ..
பாஞ்சாலிசபதம்!
கோபத்தின் ..
குண்டலகேசி !

என் அழுகையின்
வார்த்தை வடிவ ..
அர்த்தங்கள்

அதிகார மீறல்...
உரிமை இழப்பு...
இதயம் தகர்ப்பு...
வன்முறை...
வர்த்தக மையம் தாக்குதல்...
மசூதி இடிப்பு...
கும்பகோண தீ விபத்து...
குஜராத் கலவரம்...
சுனாமி...

- இப்படி
சமுதாயம் பாதிக்கப்படும்பொழுது மட்டும்தான்
எனக்கு
கவிதை வருகிறது!

அப்படியானால் நான்
கவிதை எழுதாமலிருப்பது
சமூகத்துக்கு நல்லதா...?

இல்லை இல்லை
சமூகம் நன்றாக இருந்தால்
எனக்கு கவிதை வராது!


உலகத்திலேயே
மிகப் பெரிய கவிஞன் நான் ,
என்ற ஆணவம்
எல்லா கவிஞனைப்போலவே..
எனக்கும் உண்டு !

சில நேரம்
காதல் கவிதைகளை
கடன் வாங்குபவர்களை நினைத்து
பரிதாபப்படுவேன்...
அவர்கள்
காதல் தோற்கப்போவதை நினைத்து!


காதல் கவிதை
கடன்வாங்கியவர்களின்
காதல் வெற்றிதான் - எனது
கவிதை வெற்றியும்!

ஆனால் இதுவரை
என்
கவிதைகளை கொடுத்த
யாருடைய
காதலுமே ஜெயித்ததில்லை

அப்படியென்றால்
தோற்றது எது?
கவிதையா...
காதலா....


சில கவிதைகள்
கருத்து எண்ண வைக்கும்!
சில கவிதைகள்
கம்பி எண்ணவும் வைக்கும் !

கவலை இருக்கும்பொழுதும் ...
கவிதை வருகிறது !
சிலநேரம்
கவிதை எழுதியபிறகும் ...
கவலை வருகிறது !

கவிதையை ...
காதலியுங்கள் !
தயவுசெய்து
கவிஞனை ...
விட்டுவிடுங்களேன் ( ? )


சொந்தமாய்
கவிதை எழுதத்தெரியாதவன்
காதலிக்க லாயக்கில்லை!
உண்மையாய்
காதல் கொண்டவனுக்கு
கவிதை ஒரு கைப்பிள்ளை !தலைப்பு கொடுத்து
கவிதை எழுதச்சொன்னால்
எழுத மறுப்பேன் !

சிலநேரம் அவள்
தலை பூ கிடைத்தால் கூட
கவிதை வடிப்பேன்

சொல்லுங்கள்...நான்
கவிஞனா...?
காதலனா...?


காதல்தோல்வி கவிதை
அதிகம் எழுத காரணம் யாது
காதல்தோல்வியா...?

பால்வினை நோய்க்கு
வைத்தியம் பார்க்க
மருத்துவனுக்கும்
பால்வினை நோய் இருக்கவேண்டிய
அவசியமா என்ன?


கவிதையின்
அர்த்தம் புரிந்தவர்கள்
மௌனமாய் இருக்கிறார்கள்!

கவிதையின்
அரைகுறையாய் புரிந்தவர்கள்
கைதட்டுகிறார்கள்!

நீங்கள் எப்படி..

மௌனமாய் இருப்பீர்களா ..?
கைதட்டுவீர்களா...?

- ரசிகவ் ஞானியார்

Tuesday, March 21, 2006

ஒரு பேச்சுலரின் சமையல் கலாட்டா

"நம்ம சேக்பாய் அபுதாபிக்கு போய்ட்டாருடா அதனால முடிஞ்சா நீ இன்னிக்கு கறி வைக்கிறியாடா" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டபொழுதே இணையத்தில் சமையல் குறிப்பை தேட ஆரம்பித்தேன்.

இறுதியில் வெப்உலகம் என்ற வெப்சைட்டில் சமையல்குறிப்புகளை தேடிப்பிடித்து எனக்குப் பிடித்த மட்டன் குருமா செய்முறைகள் கண்ணில் படவே உடனே செய்முறைகளை பிரிண்ட் அவுட் எடுத்தேன்.


இரவு அறைக்குத் திரும்பியவுடன் கலீலிடம் சொன்னேன்.

"டேய் இன்னிக்கு மட்டன் குருமாவை செய்யாம விடக்கூடாதுடா..நெட்டுல இருந்து பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திருக்கேன். "

"அப்படியா..எங்க நம்ம பாளையங்கோட்டையில ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோமே அது மாதிரிதானே.. "

"ம் அதுமாதிரி இருக்கணும்னு முயற்சி பண்ணுவோம்..நம்ம வைக்கறதுதான்டா குருமா..சும்மா வைப்போம் என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே.. "

"சரிடா.. ரெடி ஆரம்பிப்போம்.. "

அந்தச் சமையல் குறிப்பில் 100 கிராம் மட்டனை வைத்து மட்டன் குருமா செய்முறைகளை விளக்கியிருந்தார்கள். நாங்கள் 1 கிலோ மட்டன் வாங்கி வைத்திருக்கிறோம்.

"டேய் என்னடா 100 கிராமுக்கு 5 மிளகாய் போட்டிருக்கானுங்க..அப்படின்னா 1 கிலோவுக்கு 50 மிளகாய்தானேடா போடணும்.. "- நான் புத்திசாலித்தனமாய் கேட்க

"50 மிளகாயா..? என்னடா நாளைக்கு எல்லாரும் வேலைக்கு போக வேண்டாமா.. "
- கலீல் பதறிப்போய் சொன்னான்

"பின்ன என்னடா என்னோட கணக்குச் சரிதானே..100க்கு 5 மிளகாய்னா..1 கிலோவுக்கு 50 தானடா வரும்..டேய் நான் மேத்ஸ் குருப்புடா.. சரி சரி ஒரு 6 மிளகாய் போடுவோம்டா.. "- இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து 6 மிளகாய் என்னு தீர்மானித்தேன்

"சரி சரி போடுவோம்..அந்த சமையல் குறிப்பை ஏண்டா கையிலயே வச்சிருக்க..ஓரத்துல வையுடா..மறந்து போனா பார்க்கலாம்.. "- கலீல் திட்டினான்

"இல்லைடா..கவனமா இருக்கணும்ல..எதையுமே மறக்க கூடாது.. "என்று சொல்லிவிட்டு அந்த சமையல் குறிப்பை அடுப்புக்கு மேலேயே வைத்தேன்..அட மடையா நெருப்பை கொஞ்சம் கூட்டும்போது எரிஞ்சிறக்கூடாதுல்ல என்று மனசாட்சி வந்து மண்டையில் தட்ட உடனே அதனை எடுத்து பக்கத்தில் உள்ள ஒரு பாத்திரத்தின் மீது வைத்தேன்.

வேலையை ஆரம்பித்தோம். தில்சத்தும் கலீலும் வெங்காயத்தை வெட்டினார்கள். நானும் மட்டனை எடுத்து கழுவிக்கொண்டே

"முதல்ல என்னடா போட்டிருக்கு பாருடா..? "- கலீலிடம் கேட்டேன்

"மட்டனை நன்கு சுத்தம் செய்யவும் ன்னு போட்டிருக்குடா
முதல்ல மட்டனை கழுவுடா.. "
- கலீல்

"அதெல்லாம் கழுவி வச்சாச்சுடா.. அடுத்து என்ன ?"

சுத்தம் செய்த மட்டனுடன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்

"டேய்! என்னடா உப்பும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் போட்டு ப்ரஷர் குக்ரல் வைக்கச் சொல்லியிருக்குடா.." - கலீல் படித்துச் சொன்னான்

"சிட்டிகைனா என்ன ஒரு ஸ்பூன்தானே..?" - திடீரென்று தில்சாத் குழப்பி விட்டான்

"நானும் ஆமா சிட்டிகைனா ஒரு ஸ்பூன்தான் நானும் எவ்வளவு சமையல்குறிப்பு டிவியில பார்த்திருக்கேன் "என்று வீரமாய் சொல்லிவிட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து மட்டனோடு கலப்பதற்கு முயல

கலீல் உடனே தடுத்துவிட்டான். "டேய் டேய் நில்லுடா..சிட்டிகைன்னா ஸ்பூன் இல்லைடா ஸ்பூன்ல ஒரு சிறிய அளவு.. நான் சில நாட்டுமருந்து கடைகளிலே பார்த்திருக்கேன்.. "

"கொஞ்சம் இரு தமிழ் - தமிழ் டிஷ்னரில சிட்டிகைன்னா என்ன போட்டிருக்குன்னு பாரு.. "

"டேய் அந்த டிஷ்னரி இல்லைடா... "- கலீல் தேடிப்பார்த்துவிட்டு சொன்னான்

"சரி ஆக்ஸ்போர்டை எடுத்துப்பாரு ஸ்பூனுக்கு என்ன எழுதியிருக்குன்னு பாரு"
- நான் கிண்டலடிக்க

"டேய் எனக்குத் தெரியுண்டா சிட்டிகைன்னா ஒரு சின்ன அளவுதாண்டா.. "
- கலீல் உறுதியாய் சொல்ல

ஒரு ஸ்பூனில் சிறிதளவு மஞ்சள் தூள் எடுத்து மட்டனோடு கலந்தேன். பின்னர் கொஞ்சம் உப்பும் கலந்து நன்றாக கையால் கலந்து வைத்தேன்.

பின் அவற்றை குக்கரில் வைத்து அடுப்பில் ஏற்றினேன்.

"டேய் எத்தனை விசில்டா.. "

அவனும் யோசித்து "ஒரு 6 விசில் வைப்போம்டா.. "

"ம்..சரி எனக்கு மறந்திடும்டா..நீதான் கணக்கு வச்சிக்கணும்" என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை ஆரம்பித்தோம்

"டேய் கலீல் எப்படி அரைக்கணும்னு பாருடா... "

பாதி வெங்காயத்தை இஞ்சி பூண்டு புதினா முதலியவைகளை நன்கு மையாக அரைக்கவும்

அதிலுள்ளதை அப்படியே வாசித்துக் காட்டினான்.

"டேய் கொஞ்சம் வெங்காயத்தை எடு..மிக்ஸியில் போடுடா.. வெங்காயம் முடிஞ்சுது "

"அடுத்து இஞ்சி - பூண்டைப் போடுடா.. "

பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்க ஆரம்பித்தோம். அரைபட மறுத்து அடம்பிடித்தது மிக்ஸி. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைக்க ஆரம்பித்தோம்.

"டேய் மையாக அரைக்கணும்னுனா..என்னடா.. கொஞ்சம் மையை ஊத்தணுமா?"
- நான் கிண்டலடிக்க

"4 வது பாய்ணட்ல வச்சி வேகமா அரைக்கணும்னு அர்த்தம்.. – "
- கலீல் புத்திசாலித்தனமாய் கூறினான்

நான் வேகத்தை அதிகரிக்க இஞ்சி பூண்டின் சில துளிகள் கண்ணில் தெறிக்க ஆரம்பித்தது. பின் வேகத்தைக் குறைத்தேன்


"டேய் டேய் பாருடா இதுபோதுமா..மையாக அரைச்சாச்சு.. "

"ம் போதும்டா..அடுத்து அடுப்புல பாத்திரத்தை வைடா..தாளிக்கணும் "

எண்ணெயில் மீதி பாதி நறுக்கிய வெங்காயம் தக்காளியை பொன்னிறமாக வதக்கவும்


"ஆமாடா அப்படித்தான் எழுதியிருக்கு.. "

பாத்திரத்தை அடுப்பில் வைத்த உடனையே எண்ணையை ஊற்றினேன்.

"டேய் டேய் கொஞ்சம் வெயிட் பண்ணுடா..பாத்திரம் காயந்தவுடன்தான் எண்ணையை ஊத்தனும்.. "- பதறிப்போய் கூற

"சரிடா என்ன செய்ய ஊத்தியாச்சுல்ல..விடுடா.. "என்று சொல்லி விட்டு எண்ணையில் கடுகைப் போட்டேன்

கரண்டியால் கிண்டிக்கொண்டிருக்க கடுகு கரிந்து போன வாசம் வர ஆரம்பித்தது.

"டேய் என்னடா கடுகு கரியுற மாதிரி தெரியுது.."நான் சந்தேகமாய் கேட்க

"தீயை குறைடா..தீயை குறைடா..வெங்காயத்தை போடுடா.. "என்று அவன் அவசர அவசரமாய் தீயை குறைத்தான்

வெங்காயம் மற்றும் தக்காளியைப்போட்டு வதக்க ஆரம்பித்தேன்.
"டேய் பொன்னிறமா வதங்குற வர விடக்கூடாது.. "

"பொன்னிறம் சொல்லிட்ட கரி நிறம் ஆக்கிறாதடா.. "கலீல் கிண்டலடித்தான்

ஷ்ஷ்ஷ்ஷ்...

மட்டன் வேக வைத்த குக்கரில் இருந்து முதல் விசில் வர ஆரம்பித்தது.

"டேய் கணக்கு வச்சிக்கோடா.. "- கலீலிடம் சொன்னேன்

கரண்டியால் பாத்திரத்தை கிளறிக்கொண்டிருக்க.."பொன்னிறம் வரவே மாட்டேங்குதுங்க..என்ன செய்ய..? "கிளறிக் கொண்டேயிருந்தேன்..

இப்பொழுது மறுபடியும் குக்கரில் இருந்து அந்த சப்தம் ஷ்ஷ்ஷ்ஷ்... திடீரென்று குக்கரில் இருந்து அதிகமான தண்ணீர் பொங்கி வெளியே வர..சத்தம் பலமாய் கேட்டது

குக்கரிலிருந்து தண்ணீர் வெளியே வந்த வண்ணமும் சத்தம் அதிகரித்த வண்ணமும் இருக்க எனக்கு பயம் வந்து விட்டது. ஒருமுறை குக்கர் வெடித்ததை நேரில் கண்டிருக்கின்றேன்..ஆகவே பயத்தில் கலீலையும் தில்சாத்தையும் பார்த்து

"டேய் ஓடுங்க..ஓடுங்கடா.குக்கர் வெடிக்கப்போகுது.. "- என்று பதறியபடி கூறிவிட்டு நானும் கதவை நோக்கி ஓட

"டேய் பயப்படாதே டா..தண்ணீர் அதிகமாகிடுச்சு..அவ்வளவுதான் "என்று சொல்லியபடி குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தான்.

பதறியபடி சென்ற நான் மறுபடியும் திரும்பிவர தில்சத்தும் கலீலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். "டேய் ஏண்டா இப்படி பயப்படுற.. "

"இல்லைடா ஒரு தடவை சென்னையில வச்சு குக்கர் வெடிச்சிருக்கு எனக்கு..அதான் பயம்.. "என்று சொல்லியபடி குக்கரின் விசிலை எடுக்க முயன்றேன்.

டேய் அவசரப்படாதே முதல்ல ஆவி வெளியில போகட்டும் ..இல்லைனா கை வெந்துடும்டா.. - கலீல் அறிவுறுத்தினாhன்

உடனே ஒரு கத்தியை எடுத்து பயந்த படியே அதன் முனையால் விசிலை மெதுவாக தூக்கி ஆவியை வெளியே போக வைத்தேன்.

"ஹாஹாஹா..ஹா..ஹா "

அதனைப்பார்த்து தில்சத் சிரித்துக்கொண்டே சொன்னான்..

"வெடியை தரையில வச்சிட்டு பத்தவைக்கவா வேண்டாமான்னு பதறுவாங்களே அத மாதிரி இருக்கு நீங்க பண்றது..என்ன வெடியா போடுறீங்க.."என்று கிண்டலடித்தான்


நாங்களும் சிரித்துக்கொண்டே விசிலை மெதுவாய் வெளியே எடுத்து மட்டனை சுவைபார்க்க மெதுவாய் மிக மெதுவாய் வெந்திருந்தது மட்டனும் கைகளும் .

இதற்கிடையில் கிளறிக்கொண்டிருந்த வெங்காயம் பொன்னிறத்தையும் தாண்டி ஏதோ ஒரு நிறத்திற்கு மாறிக்கொண்டிருக்க

உடனே கலீலிடம்
"டேய் வெங்காயத்தை கிண்டுடா! அடியில் பிடிச்சிற போகுது" என்று சொல்லிவிட்டு மட்டனை எடுத்து அப்படியே அந்த கிளறிக்கொண்டிருந்த வெங்காயத்தோடு கலந்து அந்த குக்கர் தண்ணீரை ஊற்றினேன்.

பின்னர் கிளறிக்கொண்டிருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது.

"டேய் மிளகாய் போடாம எப்படிடா காரம் வரும்.?" என்று புத்திசாலித்தனமாய் கேட்க ,

இப்பொழுது என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கலீல் சொன்னான்.

"டேய் மிளகாய் ஏலக்காய் பட்டை எல்லாம் போட்டு தனியாக தாளித்து ஊற்றுவோம் "என்று முடிவெடுத்து அவ்வாறு செய்தோம்.

"டேய் எப்படி வரப்போகுதோ தெரியல?" சந்தேகமாய் கேட்டபடி கேசரி பவுடரை ஒரு நீர்க்கரைசலில் கரைத்து ஊற்றினேன்

"டேய் கலர் அதிகமாக போடாதடா..அப்புறம் கேசரி மாதிரி ஆகிவிடும் "என்று சொல்லியபடி அடுத்த குறிப்பை படிக்க ஆரம்பித்தான்


வதக்கிய தக்காளி வெங்காயத்துடன் மையாக அரைத்த மசாலாவுடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு வெந்த மட்டனையும் சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்


"டேய் என்னடா அரைத்த மசாலாவுடன் அப்படின்னு எழுதியிருக்கு. நம்மகிடை மசாலா இருக்கு..நாம எங்கேடா மசாலா அரைச்சோம்.?".என்று சொல்லியபடி பாட்டிலை எடுத்து மசாலாவை மட்டனோடு கலக்க முயல


"டேய் டேய் குருமாவுக்கு மசாலா போட மாட்டாங்கடா.. "

"அப்படின்னா இதுல மசாலான்னு எழுதியிருக்கேடா.... "

"அது மசாலா இல்லைடா..நாம மிக்ஸியில் இஞ்சி பூண்டு அரைச்சி வச்சிருக்கோம்ல அந்த கலவையைத்தான் மசாலான்னு போட்டிருக்கான்டா.."என்று விளக்கினாhன்

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. உடனே அரைத்த வைத்த இஞ்சி பூண்டை மட்டனோடு கலந்து மூடி வைத்தேன்.

"டேய் 15 நிமிசம் அப்படியே இருக்கட்டும்டா" என்று சொல்லிவிட்டு அந்த சமையல் குறிப்பை கையில் எடுத்துக்கொண்டு பெட்டில் வந்து அமர்ந்தேன்

டேய் இண்டர்நெட்டுல வந்த இந்த சமையல் குறிப்புல ஒரு தப்பு பண்ணிட்டான்டா..
- என்று கலீலிடம் சொல்ல

"என்னடா.." - அவன் சீரியஸாய் கேட்க

"குக்கர்ல இருந்து சவுண்ட் கொஞ்சம் வித்தியாசமாவந்தா கதவைத்திற்ந்திட்டு ஓடிடுங்கன்னு இதுல சொல்லலையேடா "
- என்று கிண்டலடிக்க

தில்சத்தும் கலீலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பின்னர் 10 நிமிடம் கழித்து கொதித்துக் கொண்டிருக்கும் மட்டனை கரண்டியால் ஒரு கிளறு கிளறிவிட்டு அந்த சமையல் குறிப்பிலிருந்த

தேங்காயை நன்றாக அரைத்துக் கொள்ளவும் என்ற அடுத்த செய்முறையை வாசித்தேன்.

"டேய் தேங்காய் பொடி போடவா..இல்லை..அரைத்த பவுடரை போடவா ?" என்று கேட்டுவிட்டு தேங்காய்ப்பொடியை மிக்ஸியில் போட்டு அரைக்க ஆரம்பித்தேன்.

பின்னர் மட்டனில் கொதி வந்துகொண்டிருக்க

"டேய் இப்பவே ஊற்றவா.. "

"ஆமாடா..இப்பவே ஊற்றி இன்னும் 10 நிமிசம் கொதிக்க வையுடா..அப்படித்தான் எழுதியிருக்கு பாரு "- கலீல் அந்த செய்முறையை நீட்ட


மட்டன் நன்கு வெந்து கொதித்தவுடன் அரைத்த தேங்காயை சோர்த்து இன்னும் 10 நிமிடம் கொதிக்க விடவும்


உடனே தேங்காயை ஊற்றி பாத்திரத்தை மூடிவைத்தோம். கலீலிடமிருந்த சமையல் குறிப்புகளை பிடுங்கி கசக்கி குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு சொன்னேன்

"இப்ப இது அவசியமில்லை.. இதயத்தில பதிஞ்சிருச்சுடா.. "

என்று கிண்டலடித்தேன்.

பின்னர் 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து லேசாக சுவைபார்க்க

"டேய் டேஸ்ட் சூப்பரா இருக்குடா..இங்க பாரு" - அவனுடைய கைகளிலும் லேசாக ஊற்றினேன்.

"அட..பரவாயில்லைடா..சக்ஸஸ்..நல்லா வந்திருக்கு "- என்று மகிழ்ச்சியில் கூறினாhன்

பின்னர் அவற்றை எடுத்து இறக்கி வைத்து நண்பர்களுடன் சாப்பிட்டேன். சிராஜ் மட்டும் நம்பிக்கையில்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தான்

"டேய் சூப்பரா இருக்குடா..யார்டா சமைச்சது..? "

"நாங்கதாண்டா சமைச்சோம்..இன்னிக்கு நெட்டுல இருந்து பிரிண்ட் எடுத்து வந்தேண்டா.." என்று பெருமையாய் கூறினேன்.

நண்பர்கள் ரசித்து ரசித்து சாப்பிடுவதை கண்டும் அவங்க டேய் சூப்பரா இருக்கடா என்று பாராட்டுவதைக் கண்டும் மனதுக்குள் ஓர் இனம்புரியாத ஆத்ம திருப்தி..மனம் ரொம்ப குஷியாக இருந்தது..

உண்மையில் நாம சமைச்சதை சாப்பிடுபவர்கள் பாராட்டும்போது மனம் குளிரத்தான் செய்கின்றது

நினைத்துப்பார்த்தேன்..வீட்டுல அம்மா சமைத்ததற்கு நான் என்னிக்காவது பாராட்டியிருக்கேனா..

"என்னம்மா ரசம் வச்சிருக்கே.."

"ச்சே...கறி ரொம்ப காரமா இருக்கு "

"போம்மா..பருப்பு கசக்குதும்மா.. "

என்று குறைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்..


உன் சமையலை
குறை கூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டும்தானம்மா சாப்பிடுகின்றேன்.


என்று கூட அம்மாவுக்கு ஒரு கடிதம் என்ற கவிதையில் எழுதியிருக்கின்றேன்.


என் விழிகளுக்குள் லேசாக கண்ணீர் திரள ஆரம்பித்து விட்டது. நண்பர்களின் இந்த பாராட்டைப்போல நானும் எனது அம்மா சமையலை பாராட்டியிருந்தால் எந்த அளவுக்கு மனம் குளிர்ந்து போயிருப்பார்கள்.

இப்பொழுது மனம் வருந்துகின்றேன். ஒரு பொருளின் மதிப்பு அது இல்லாமல் இருக்கும்பொதுதான் தெரியவருகிறது. அம்மாவின் சமையல் மதிப்பு அது கிடைக்காமல் இருக்கின்ற இந்த பாலை வாழ்க்கையில்தான் தெரிகின்றது


அம்மாவின் சமையலை குறை சொல்லியே சாப்பிட்டு பழகிய நான் தற்பொழுது விடுமுறைக்கு சென்றபொழுது கூட எனது அம்மாவின் சமையலை ஒரு குறை கூட சாப்பிடாமல் சாப்பிட்டதைக் கண்டு

"என்னடா இவன் எப்போதும் ஏதாவது குறை சொல்லுவான் இப்ப ஒண்ணுமே சொல்லமாட்டேன்கிறான் "என்று என் அம்மா ஆச்சர்யப்பட்டு

"என்னடா உடம்பு சரியில்லையா..சாப்பாடு நல்லாயில்லையா "என்று பரிவோடு கேட்டார்கள்

"அதெல்லாம் ஒண்ணுமில்லையா..சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கு.. அதனாலதான் ரசிச்சி சாப்பிடுகிறேன்" என்று கூறியபொழுதுதான் நிம்மதி அடைந்தார்கள்.

நண்பர்களே! நீங்கள் அம்மாவின் சமையலோ அல்லது மனைவியின் சமையலோ நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை . ஒப்புக்காகவாவது பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தைச் சொல்லுங்கள். நமக்காக கஷ்டப்பட்டு சமைத்த அவர்களின் மனது குளிர்ந்து போகட்டுமே..

இல்லையென்றால் வீட்டுக்குள்ளையே அடைந்து கிடந்து சமையலையே பொழுதுபோக்காக்கி கஷ்டப்பட்டு சமைத்து தந்தது வீணாகிப்போய்விட்டதோ என்று அவர்கள் மனம் வருந்தி விடுவார்கள். ஆகவே சாப்பிடும்பொழுது மைக்ரோ அளவு முகசுளிப்புக்கு கூட இடம் கொடுத்துவிடாதீர்கள்.

பாராட்ட முடியாவிட்டாலும் குறைசொல்லிப் பழகாதீர்கள்.அர்த்தம்

"சாப்பிடுடா சாப்பிடமாட்டேன்''
ஒரே ஒரு வாய் சாப்பிடுடா
தொந்தரவு பண்ணாத போம்மா'

- உதறிவிட்டு ஓடினேன்

சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்

அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது

http://nilavunanban.blogspot.com/2005/04/blog-post_111487369917103329.html
- ரசிகவ் ஞானியார்

Monday, March 20, 2006

22 சி - காதல்கண்டக்டர் டிக்கெட்
கிழித்தார் - உன்
கண்களோ
என் இதயம் கிழித்தது

---
"படியில் பயணம்
நொடியில் மரணம் "
இரும்புப்படி யிலா..? - உன்
இதயப் படியிலா..?


-ரசிகவ் ஞானியார்

Sunday, March 19, 2006

எனக்கு நடந்த விபத்துக்கள்திடீரென்று ஒரு சிந்தனை. எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோமே..நமக்கு நடந்த விபத்துக்களைப் பற்றியும் ஒரு அலசு அலசினால்தான் என்ன? என்று தோன்றியது.

மரணம் என்பது யாருக்கும் விதிவிலக்கல்ல. எப்படியோ ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் நாம் விரும்பியோ விரும்பாவிட்டாலோ அது நம்மை வந்து சேர்ந்து விடும் என்பது உறுதி.

ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மரணத்தைக் கண்டால் ரொம்பவும் பயம். பயமாகயிருந்தாலும் யாருடைய மரணத்திற்காகவாவது சென்றுவிட்டால் மரணித்தவரின் முகத்தை மறைக்கின்ற அந்த கடைசி நொடிகள் வரை கவனித்துக்கொண்டே இருப்பேன். கண்டிப்பாக அனைவருக்கும் மரண பயம் இருப்பது அவசியமே. அது தனிமனித ஒழுக்கத்தைக் கொடுக்கின்றது.

எத்தனையோ பேருக்கு மரணம் தொட்டு பிடித்துவிட்டு ஓடியிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையிலும் விபத்துகளின் மூலமாக என்னை தொட நினைத்தது மரணம். பின்னர் "பாவம் இவன் கொஞ்ச நாள் வாழட்டுமே" என்று விட்டு விட்டுச் சென்றிருக்கலாம். எப்படியோ தப்பிச்சிட்டேன்பா..

நினைத்தவுடன் ஞாபகத்தில் வருகின்ற விபத்துக்கள் இதுதான். நான் கண்ட விபத்துக்கள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். இது நானே அனுபவதித்த விபத்துக்கள்.

டார்ட்டாய்ஸ் கொளுத்துங்க கொசுவ விரட்டுங்க சந்தோசமாய் இருங்க..

அப்பொழுது என்னோட வயசு சுமார் 16 இருக்கும். ஒருநாள் அறையில் ஒரு சின்ன டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள் கொளுத்தி வைத்து தூங்கினேன்.

என்ன ஆயிற்று என்னவென்றால் இரவில் அந்த கொசுச்சுருளில் உள்ள சிறு தீப்பொறி ஒன்று என்னுடைய போர்வையில் பட்டுவிட ஒரு நுனியில் பட்ட நெருப்பு மள மளவென்று போர்வைச் சுற்றிலும் தொடர்ச்சியாக பரவியது. நான் நல்ல நித்திரையில் இருந்ததால் பக்கத்தில் நெருப்பு எரிகிற உணர்வே இல்லைங்க..

நெருப்பு போர்வையில் பட்டு பின்னர் எனது வேஷ்டியில் பட்ட பிறகுதான் எனக்கு நெருப்பின் சூடு தெரிய ஆரம்பித்தது.

திடீரென்று கண்விழித்த நான் பயந்து போனேன். என்னடா இவ்வளவு நெருப்பு என்று. உடனே அவசர அவசரமாக ஓடிச்சென்று பக்கெட்டில் இருந்து தண்ணீர் எடுத்து என் மீது ஊற்றினேன்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தால் நான் படுத்திருந்த இடத்தில் தலையணை - போர்வை என்று எதுவுமே இல்லை. சாம்பல் மட்டும்தான் கிடந்தது. நான் பதறிப் போய்விட்டேன்.
அப்படியே கதவைத்திறந்து வெளியே வந்தால் அங்கே ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த எனது தந்தை என் அறையிலிருந்து புகையாக வருவதைக் கண்டு பயந்து போய் வீட்டில் உள்ள எல்லோரையும் எழுப்பி விட எல்லோரும் நான் படுத்த இடத்தில் சாம்பலைக் கண்டு பயந்து விட்டனர்.

பின் என்னைச்சுற்றி அழாத குறையாக நின்று கொண்டு ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். எனது தாயார் நான் அறையில் தனியாக படுக்க வேண்டாம் என்றும் ஹாலில் வந்து படுக்க வேண்டும் என்று சொன்னாhர்கள்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வந்ததோ இல்லையோ..எனது தாயார் அடிக்கடி வந்து என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தததை நானும் கவனித்தேன்.

பின்னே இவ்வளவு அறிவான பையனை [ :) ] இளவயசுல இழந்து விட நினைத்தோமேங்கிற கவலைதான் அவங்களை அன்னிக்கு இரவு முழுவதும் தூங்க விடவில்லை.

முதல் பைக் அனுபவம்

அடுத்த விபத்து பாளையங்கோட்டை போகும் சாலையில் முதன் முதலில் பைக் ஓட்டப் பழகுகிறேன் என்று அண்ணனின் பைக்கை தெரியாமல் எடுத்து நண்பன் செய்யதுவுடன்
சந்தையை நோக்கி வண்டியை விரட்டியபொழுது எதிரே வந்த லாரியைக் கண்டு தடுமாறத் தொடங்கிவிட்டேன்.

உடனே ப்ரேக்கை பிடிப்பதற்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை கூட்ட வண்டி தாறுமாறாய் தடுமாறி ஒரு அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கோழிக் கூடைகளையெல்லாம் ( சினிமால காட்டுற மாதிரி ) தட்டிவிட்டுவிட்டு ஒரு சிறிய கூட்டத்திற்குள் நுழைந்து, ஒரு மரத்தில் சென்று மோத, நானும் எனது நண்பனும் தூக்கி எறியப்பட்டு சாலையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை உருண்டு சென்றோம்.

நல்லவேளை அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வரவில்லை. வந்திருந்தால் ரசிகவ் என்பவன் யாருக்கும் அறிமுகமில்லாமலையே இறந்து போயிருப்பான்.


பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த அனுபவம்

1996 ம் ஆண்டு ஒரு காலை நேரத்தில் கல்லூரிக்குச் செல்வதற்காக எனது ஊரிலிருந்து திருநெல்வேலி ஜங்ஷனுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபொழுது வழக்கமான கல்லூரி மாணவர்களின் சூத்திரமான ஓடுகின்ற பேருந்தில் இருந்து இறங்கும் விதியை செயல் படுத்தலாமென்று நினைத்த பொழுது கால் தவறி டயருக்கு அடியில் விழுந்து விட , விழுந்து விட்ட அதிர்ச்சியில் "ஆ" என்று உயிர் பயத்தில் கத்தினேன். பஸ்ஸ்டாண்டே திரும்பி பார்த்தது.

டிரைவர் சட்டென்று ஒரு பிரேக் பிடிக்கவும் நான் உடனே கால்களை வெளியே எடுக்கவும் சரியாக இருக்க மயிரிழையில் உயிர் தப்பினேன்.

கீழே விழுந்த சிராய்ப்பில் பேண்டெல்லாம் கிழிந்து கால்கள் கைகள் என்று காயம் ஏற்பட்டு இரத்தக் கறையாக இருக்க எந்த வண்டியில் இருந்து கீழே விழுந்தேனோ அதே வண்டியில் மறுபடியும் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்.

நல்லவேளை டிரைவர் மட்டும் சரியான நேரத்தில் ப்ரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் என்னால் "தூக்கம் விற்ற காசுகள்" கவிதை எழுத முடியாமல் போயிருக்குமேவண்ணாரப்பேட்டை வளைவுஇது கல்லூரிக் காலத்தில் நடந்த விபத்து. ஒருநாள் கல்லூரி முடிந்து திருநெல்வேலி சந்திப்பு வரை நண்பனை டிராப் செய்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது வண்ணாரப்பேட்டை அருகே என்னை முந்திக்கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பேருந்தும் வந்து கொண்டிருந்தது.

நான் எனது இளமையின் உசுப்பலில் எப்படியாவது அந்தப் பேருந்தை முந்திச் சென்று ஹீரோத்தனத்தைக் காட்டலாமென்று பைக்கை விரட்டினேன்.

முந்திச் செல்வதற்காக பக்கத்தில் நெருங்கி விட்டேன் திடீரென்று சாலையின் நடுவிலுள்ள சிறு குழியில் பைக்கின் டயர் பட்டு லேசாக தடுமாறி குடிகாரன் போல தள்ளாடிச் சென்றது.

நான் எதிரே வருகிற பேருந்தை நோக்கி மோதுவது போல போக அந்த டிரைவரோ என்னைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை எதிரே வருகின்ற பேருந்தை நோக்கி திருப்பிவிட்டார்.

இரண்டு பேருந்துக்கும் நடுவில் உள்ள சிறு இடைவெளி வழியாக நுழைந்து நான் வெளியே வர இந்த இரண்டு பேருந்துகளும் இடித்துக்கொண்டு நின்றுவிட்டது.

எனக்கோ வியர்த்துவிட்டது. பின்னால் "ஏய்..ஏய்..." என்று சத்தம் கேட்பதை கவனிக்காமல் பறந்து விட்டேன்.

அந்த இரண்டு பேருந்துகளும் என் மீது முத்தமிட்டிருந்தால் அவ்வளவுதான் நான் யாருக்குமே முத்தமிட முடியாமல் போயிருக்கும். [யாருக்குமே என்றால் எனது அண்ணன் மற்றும் தங்கையின் ஒன்றரை வயது குழந்தைகளைத்தானுங்க சொன்னேன். ]


வேனில் வந்த எமன்


நான் - ராம்ஜி மற்றும் கடலை வியாபாரம் அதிகமாக செய்யும் சுடலை மற்றும் சில தோழர்கள் மற்றும் தோழிகளுடன் திருநெல்வேலி ராணி அண்ணா பெண்கள் கல்லூரிக்கு கலை நிகழ்ச்சிகளுக்காக எங்கள் கல்லூரியிலிருந்து சென்றிருந்தோம்.

கலை நிகழ்ச்சிகளின் இடைவேளை ஒன்றில் கல்லூரியை விட்டு வெளியே வந்து கடலை வியாபாரத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தபொழுது சுடலை என்னைப் பார்த்து கிண்டலடிக்க பதிலுக்கு நானும் கிண்டலடித்து விளையாடிக் கொண்டே நான் சாலையின் நடுவே வந்து விட அப்போது பின்னால் பாய்ந்து வந்துகொண்டிருந்த வேனை கவனிக்கவில்லை.

திடீரென்று ராம்ஜி என்னை சாலையிலிருந்து ஓரத்திற்கு தள்ளிவிட்டுவிட கண்மூடித்திறப்பதற்குள் அந்த வேன் பயங்கரமாக ஹாரன் எழுப்பிக்கொண்டே வேகமாக எங்களை கடந்து சென்று விட்டது.

நான் அதிர்ச்சியில் அப்படியே கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து விட பின்னர் நண்பர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள்.

நல்லவேளை அந்த வேன் மட்டும் மோதியிருந்தால் நான் இப்பொழுது இந்த பதிவினை இப்பொழுது எழுதியிருக்க முடியாது


கடைசி விபத்துஎனக்கு ஞாபகம் தெரிந்த வரையிலும் கடைசி மற்றும் பயங்கரமான விபத்து இதுவாகத்தான் இருக்கக் கூடும்

என்ன நடந்ததென்று எனக்கே தெரியவில்லை. அது 1996 ம் ஆண்டு என் கல்லூரி நேரத்தில்தான் நடைபெற்றது.

அந்த வாகனம் வந்து மோதிய வேகத்தில் தாறுமாறாய் சிதைந்து போனேன். என்னால் எப்பொழுதும் செய்ய முடிகின்ற வழக்கமான செயல்கள் எல்லாம் ரொம்பவும் மாறிப்போய்விட்டது.

அந்த விபத்துக்குப் பிறகு என்னுடைய நடவடிக்கைகளின் மாற்றங்களை கண்டு நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த விபத்தின் பாதிப்புகள் எனக்குள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விபத்தில் எல்லோருக்கும் கைகள் பறிபோகும் - கால்கள் பறிபோகும். ஆனால் எனக்கு இதயமல்லவா பறிபோய்விட்டது.

நல்லவேளை அந்த விபத்து மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் இப்பொழுது கவிதைகள் எல்லாம் எழுதியிருக்க மாட்டேன்.


ம்..மோதிய அந்த பயங்கர வாகனத்தின் பெயர் : காதல்

- ரசிகவ் ஞானியார்

Thursday, March 16, 2006

தோழியே உன்னைத் தேடுகின்றேன்.
நான் எழுதிய புத்தகத்தில் எனக்கு உள்ள ஆர்வத்தை விடவும் விழியன் என்ற உமாநாத் எழுதிய "தோழியே உன்னைத் தேடுகிறேன்" என்ற இந்தப் புத்தகதை படிப்பதற்கு எனக்கு மிகுந்த ஆர்வமாய் இருக்கின்றது.

இவரோடு தொட்டுப் பழக்கமில்லை என்றாலும் இது நெட்டுப் பழக்கம் இது. இப்பொழுதெல்லாம் தொட்டுப் பழகிய நண்பர்களைவிடவும் நெட்டில் பழகிய நண்பர்கள் தான் மிகவும் பாசத்தோடு இருக்கிறார்கள். இவரும் அந்த வகையைச் சார்ந்தவரே..

இந்த நடை கொஞ்சம் வித்தியாசமானது. நடை என்றால் நடந்து போகும் நடையைச் சொல்லவில்லை. இப்படித்தான் ஒருமுறை என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தில் ஒரு கல்லூரித் தோழி எழுதியிருந்தாள்

"உங்கள் நடையைக் கண்டு ரசித்திருக்கின்றோம். பலமுறை கிண்டலடித்திருக்கின்றோம்."

நானோ கவிதை நடையைத்தான் கூறியிருக்கின்றாள் என நினைத்தேன். ஆனால் பின்னர் ஒருநாள் சந்திக்கும்போதுதான் விளக்கியிருந்தாள். அது கவிதை நடை அல்ல..நான் நடக்கின்ற நடையை கிண்டலடித்திருக்கிறார்கள் என்று..

ஆகவேதான் நடையைப் பற்றி இவ்வளவு விளக்க வேண்டிதாகப் போய்விட்டது.

தபுசங்கர்தான் கவிதைகளை உரைநடை வடிவில் எழுத ஆரம்பித்தார். ஆனால் இந்த உமாநாத் உரைநடைகளையும் கவிதைகளையும் கலந்து எழுதியிருப்பது ஒரு புதிய முயற்சி.

இது சுயசரிதையா?அல்லது ஒரு தனி மனிதனின் தேடலா அல்லது வாழ்க்கையின் அனுபவங்களா? அல்லது சமுதாயத்திற்கு தருகின்ற சின்ன சின்ன ஆலோசனைகளா?

அவரே தனது முன்னுரையில் தெளிவு படுத்தியிருக்கிறார் இது ஒரு வரம்பு மீறிய இளைஞனின் எண்ணமிது

மொத்தமாக ஒரு நாலு வரிகளில் விமர்சனம் கொடுத்து விட்டு போவதற்கு மனம் வரவில்லை. ஆகவே அவர் எழுதிய ஒவ்வொரு தலைப்புகளிலும் கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.


தோழியே என்னைத் தேடுகிறேன்


தோழியைத் தேடுவதாய் சொல்லிவிட்டு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

நமக்கு வருகின்ற வாழ்க்கைத்துணை நமக்கு சிறந்த தோழியாக இருப்பாளா என்று திட்டவட்டமாக கூற முடியாது. ஆனால் நம் தோழி, வாழ்க்கைத்துணையாக வந்தால் வாழ்க்கை முழுவதும் நல்ல தோழியாக இருப்பாள் என்ற எனது எண்ணத்துடன் அவர் ஒத்துப் போயிருப்பதால் தோழியைத் தேடும் சாக்கில் வாழ்க்கைத்துணையை தேடுகின்றார்

"இதுதான் என் மனைவி என்று அறிமுகப்படுத்து! இதுதான் எனது மகன் என்று அறிமுகப்படுத்தாதே" என்று தனது தாயார் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இடத்தில் இவரைப் பாராட்டுவதை விடவும் இவரின் தாயாரைப் பாராட்டுவதுதான் சாலச் சிறந்தது.

எந்த அளவிற்கு தன் மகனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்?. தான் பார்க்கும் பெண்ணைத்தான் மகன் திருமணம் முடிக்க வேண்டும் என்று பழைமையை விட்டெறிந்து மகனுக்குரிய சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

அதெப்படி அரைமணிநேரத்தில் ஒரு பெண்ணை பார்த்து எனக்கு ஏற்றவள்தானா என்று முடிவு செய்வது என்று ஆதங்கத்தில் கேட்டிருக்கிறார். ஆகவே அவர் புரிந்துகொண்டு பழகி அவரது விருப்பத்தோடு ஒத்து வருகின்ற தோழியைத் தேடுகின்றார்.

அந்த கிடைக்காத தோழியிடம் ( யாருக்குத் தெரியும்..) சம்மதம் கேட்கிறார். தனக்கு குழந்தையைத் தத்தெடுக்கும் ஆசைகள் இருப்பதாகவும் அந்தக் குழந்தைகளுடன் நிறைய உறவாடி அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆசையை சமூகம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ நீ ஏற்றுக்கொள்வாயா என்று கேட்கிறார்

இதனைப் படித்தவுடன் அவரைப் பற்றி மரியாதைகள் கூடிவிட்டது எனக்கு. ஒரு இளைஞனுக்கு குழந்தையை தத்தெடுக்கும் ஆசையா..? அட என்ன இளைஞனய்யா இவர்.. ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறார்.

இவ்வாறு தனக்கு வரப்போகிற தோழியிடம் தனது ஆசைகளையெல்லாம் கூறி இதற்கு ஒத்து வருகின்ற அவளைத் தேடிக்கொண்டே இருக்கின்றார்.


நம் திருமணம்

நான் சொன்ன மாதிரியே தோழியைத் தேடிவிட்டு அடுத்த தலைப்பை "நம் திருமணம்" என்று வைத்திருக்கிறார்.

ஆகவே அவருடைய தோழிக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் மனைவி ஆகப் போகிற தோழிக்கு வாழ்த்துக்கள்.

எல்லோரும் திருமணத்தை எப்படி கற்பனை செய்து வைத்திருப்போம்..? எல்லா உறவினர்கள் மற்றும் நண்பர்களும் வரவேண்டும். திருமணத்தில் கலந்து கொண்டு திருமண விருந்தை சுவைத்து வாழ்த்திவிட்டு செல்ல வேண்டும் என்று நமது எண்ணங்களை ஒரு சாதாரண வட்டத்திற்குள் முடித்து விடுவோம்.

ஆனால் விழியனைப் பாருங்களேன்..? ஒரு மலைக்கிராமத்தில் முகாமடித்து நண்பர்கள் உறவினர்கள் சூழ பாட்டு - சொற்பொழிவு - கச்சேரி என்று 2 - 3 நாட்கள் தங்கி கொண்டாடி விட்டு வருவோம். நேரம் கிடைக்கும் போது தாலியோ அல்லது மோதிரமோ அல்லது எதுவும் இல்லாமலையோ திருமணம் முடித்துக் கொள்வோம்.

திருமணத்தின் இந்த செலவுகளை சரவணா - ரமேஷ் - நேத்தாஜி - ரமேஷ் ( கேபி) என்ற நண்பர்கள்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். பாவம் அவர்கள் மனதுக்குள் இவரைத் திட்டிக்கொண்டிருப்பார்கள்.

சரி அத்தோடு விட்டிருந்தாலாவது இந்தத் திருமணத்தையும் சாதாரண திருமணம் என்று சொல்லி விடலாம். அதற்கும் ஒரு படி மேலே போய் இரத்ததானம் செய்வதையும் வலியுறுத்திருக்கிறார். "அட கல்யாண நேரத்துல இரத்ததான சிந்தனை இவருக்கு எப்படித்தான் வந்ததோ தெரியலைங்க.."

அவருடைய கற்பனைகளை படிக்க படிக்க எங்கே அவருடைய திருமணத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்லமாட்டாரா? அந்த அனுபவங்களை நாமும் பகிர்ந்து கொள்ள மாட்டோமா என மனம் ஏங்குகிறது


காதல் என்னும் ஆயுதம்


திருமணத்தின் கற்பனைக்குப் பிறகு காதல் என்னும் ஆயுதம் என்ற தலைப்பில் விளையாடியிருக்கிறார். ஒருவேளை திருமணத்திற்கு வருகின்ற காதல்தான் உண்மையானது என்று சொல்ல வருகிறாரோ..?


இடைவெளிகள் என்ற எனது கவிதையில் வரிகள்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.


ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!


ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்


காதல் தோல்வியில் தற்கொலை செய்பவர்களை மறுபடியும் தூக்கிலிட வேண்டும் என்று கோபத்தில் கூறுகிறார்.

மொழி - சமூகம் - இனம் - தேசம் தாண்டி காதலிப்போம். ஒரு குறிப்பிட்ட உறவுகளுக்குள்ளையே திருமணத்தை முடித்துக் கொண்டால் உடற் ரீதியான குறைபாடுகள் வரக்கூடும் ஆகவே சிந்தனைகள் பெருக வேண்டுமானால் காதலிப்போம் என்று அறிவியல் ரீதியாகவும்,

காதலில் வரதட்சணை கொடுமை ஒழிக்கப் படுகிறது என்று சமூக ரீதியாகவும் காதலுக்கு விளக்கும் கொடுத்திருக்கிறார்.

உலகமே ஒரு சின்ன கிராமம் போலத்தான் என்று காதலில் உலகளாவிய சிந்தனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வெறுக்கத்தக்க மனிதன் ஒளிந்திருக்கின்றான்.
ஆனால் யாருமே அதனை வெளிக்காட்டமாட்டார்கள்.

காதலில் பாஸிடிவ் குணங்களை மட்டுமே காதலர்கள் காட்டுவார்கள். ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன் எனது நெகடிவ் குணங்களையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும். பிடிக்கவில்லை என்றால் திருத்திக் கொள்கின்றேன் என்று நிதர்சனமான உண்மையை வெளிப்படையாக சொல்லியிருக்கின்றார்.

இந்த உண்மையை நடுநிலைவாதிகள் கூட சொல்லுவதற்கு தயங்குவார்கள். ஆனால் இந்த இளைஞர் தைரியமாகச் சொல்லியிருக்கின்றார். நிஜமாகவே பாராட்டப்படவேண்டியவர்தான்.


நம் இருவரும் இணைந்து பிடித்த பிடிக்காத குணங்களை அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழுவோம் என்று காதலியிடம் சொல்லுகிறார்.

இதனை வாசிக்கின்ற கல்யாணமாகாத பெண்கள் இதுபோன்ற கணவன் தனக்கு கிடைக்க வேண்டும் என கண்டிப்பாக ஏங்குவார்கள். ஆண்களோ தானும் இதுபோன்ற நடக்க வேண்டும் என ஏங்குவார்கள். எனக்கும் இப்பொழுது அந்த ஏக்கம்தான்.

பெண்களை தேவதை என்று வர்ணிப்பது தனக்கு பிடிக்காது . தேவதையை வைத்துக்கொண்டு மரத்தையா மட்டும்தான் சுற்றி வரமுடியும். என் மனதை சுற்றும் மனைவியாக மட்டும் வா என்று கூறுகிறார்.

கடைசியாக இவர் முடித்திருக்கின்றார். பெண்களில் அழகில்லாதவர்கள் என்று எவருமில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அழகான பெண்கள் அல்லது மிக அழகான பெண்கள் என்ற இரண்டு வகைகள்தான் உண்டு. (இவர் தேர்தலில் நின்றால் பெண்களின் ஓட்டு இவருக்குத்தான் )

சிலிக்கான் அடிமைகள்

இளைஞர்கள் கணிப்பொறிகளில் மூழ்கிப்போய் வாழ்க்கையின் யதார்த்தங்களை இழந்து போகின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட செயல்கள் கூட சமுதாயத்தைப் பாதிக்கும் என்று அனுபவப் பூர்வமாக கூறுகிறார்.

அதாவது இன்றைய கணிப்பொறி உலகில் அதிகமாக பொருள் ஈட்டும் இளைஞர்கள் அதனை தாறுமாறாக செலவழிக்கின்றனர் . விலையை அதற்குரிய சரியான மதிப்புக்கு எடைபோடாமல் கேட்பதை கொடுத்து விட்டு வாங்குவதால் சமுதாயத்தின் மற்ற பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையோடு சொல்லியிருக்கின்றார்.

தான் மட்டும் பயன்பெற்றால் போதாது தான் பெற்றதை வைத்து சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று மதிப்பிடுகின்றார்.

எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இதனை இவர் எழுதினாரா இல்லை எல்லா இளைஞர்களின் நடைமுறைப்படுத்த முடியாத கனவுகளெல்லாம் மொத்தமாக வந்து இவர் எழுதுவதற்கு ஒத்தாசையாக இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.

விழ வைத்து உயர்த்திய மேடைகள்


தனக்கு பல அனுபவங்கள் கற்றுக் கொடுத்த மேடையினைப் பற்றி விவரித்திருக்கின்றார். முதல் மேடையில் பயந்து போய் ஒண்ணுக்கு அடித்ததைக் கூட வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பது இவரின் குழந்தை மனசுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

மேடைகள் ஆரம்பத்தில் தோல்வியைக் கொடுத்தாலும் அதனைக்கண்டு மனம் தளரவில்லை இவர்

தோல்வி வந்தால்
மூலையில் முடங்காதே
ஊர் நடுவே சென்று
தம்பட்டம் அடி
நீ தோற்றுவிட்டாயென!
காரணங்கள் அறி -அறிவி
அடுத்தவனாவது செய்யாமலிருப்பான்


நாம் தோற்றுப் போனால் ஒன்று முடங்கி கிடப்போம். இல்லையென்றால் மீண்டும் சாதிக்கத் துடிப்போம். ஆனால் இவரோ தோற்றதை ஊருக்கு தம்பட்டம் அடிக்கச் சொல்லுகிறார்.

இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் தன்னுடைய தோல்விகள் கூட இன்னொருத்தருக்கு பாடமாக அமைய வேண்டுமென்பதே இவரின் நல்ல எண்ணம்.

பேச்சுகளால் சமூகத்தை மாற்ற முடியுமா என்று ஐயப்படுகிறார். எனக்கு இந்த இடத்தில் வைரமுத்து சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது

கேள்வி : கவிதைகளால் தேசத்தைக் காப்பாற்ற மடியுமா?

வைரமுத்து : மருந்துச் சீட்டுகளால் நோயை குணப்படுத்த முடியாது. அவற்றில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் . அப்பொழுதுதான் நோய்கள் குணமாகும்


உடல் கொஞ்சம் ஆழமாய்


ஆண்களின் உடலமைப்பைப் பற்றியும் அதனின் செயல்பாடுகள் பற்றியும் அதுபோல பெண்களின் உடலமைப்புகள் பற்றியும் அதனின் செயல்பாடுகள் பற்றியும் ஒருவொருக்கொருவர் கண்டிப்பாக புரிந்து கொள்ள வெண்டும் என்று தோழிக்கு தூது விடுகின்றார்.

பாலியல் கல்வி கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.

அது மட்டுமல்ல பெண்கள் பூப்பெய்து விட்டால் உடனே விழா எடுத்துக் கொண்டாடுகிறவர்கள் மீது கோவப்படுகின்றார். இது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனக்கும் இந்த ஐயம் நீண்ட நாளாகவே இருந்தது. பெண்கள் பூப்பெய்வது என்ன உலகுக்கு அறிவிக்கப்படவேண்டிய செயலா..? இந்த நாகரீக உலகில் இதுவெல்லாம் அவசியம்தானா..? இது ஆணாதிக்கத்தின் அசிங்கமல்லவா..?

தன் சுற்றுப்புற பெண்கள் பூப்பெய்தல் விழாவினைப் பார்க்கின்ற மற்ற சம வயது இளைஞர்கள் அப்படியென்றால் நாம் எப்போது பெரிய மனுஷனாகப் போகிறேன் என்ற தவறான கண்ணோட்டமும் அவர்களுக்கு தோன்றக்கூடும்.

பூப்பெய்திய பெண்ணைக் கிண்டலடித்த சம்பவங்களை நானே கண்டிருக்கின்றேன். விளையாட்டுத்தனமாக அவர்களின் கிண்டல்கள் அந்தப்பெண்ணின் மனதிலும் அந்த இளைஞர்களின் மனதிலும் வேண்டாத சிந்தனைகளையல்லவா தூண்டிவிடக்கூடும்.

திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இப்படித்தான் பூப்பெய்திய சம்பவத்தை
ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து நடிகர்களின் புகைப்படத்தோடு பிரசுரித்திருப்பார்கள்.
அட உங்க வீட்டு திருமணத்திற்கு எதுக்குப்பா நடிகனோட புகைப்படம்..? அந்த நடிகனையா உங்க மகளுக்கு கல்யாணம் செய்த கொடுக்கப் போகிறீர்கள்..?


அது கிடக்கட்டும். மறுநாள் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லும் அந்தப்பெண் தன் சக வயது மாணவர்களோடு அந்தப் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தால் எந்த அளவிற்கு அவமானத்தில் துடித்துப் போவாள்..?

எனக்குண்டான இந்த ஆதங்கத்தை அப்படியே விழியன் தன்னுடைய பார்வையில் தெளிவாக விளக்கியிருக்கின்றார்

சக வயது பெண்களை கிண்டலடித்துக் கொண்டும் கடலை வறுத்துக் கொண்டும் காலம் போக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் விழியன் ரொம்பவே வித்தியாசப்படுகின்றார்.


நான் இறந்து போனால்


தலைப்பைப் பார்க்கும் போதே எனக்கே பகீர் என்கிறது..? இதனை எப்படி இவரால் எழுத முடிந்தது..? இதுவரை அவரை நேரில் சந்திக்காத இணையத்தில் மட்டுமே பழக்கம் வைத்திருக்கும் என்னால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு சோகம் வந்து அப்பிக் கொள்கிறது.இதனை எப்படி இவரது அம்மா - அப்பா - தங்கை - நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது?


மரணத்தை இவர் மிக அலட்சியமாக கொசு கடித்தது போல சொல்லியிருக்கின்றார். ம் அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். மரணத்தைக் கண்டு பயந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் மரணம் வந்துவிடும் என்று தெரிந்து அதனை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் பக்குவப்பட்டு விடும்.

சமீபத்தில் வலைப்பதிவர்களில் ஒருவர் இறந்து போன போது கூட நான் என்னுடைய மரணத்தைப் பற்றி சிந்தித்தேன். நான் இறந்து போனால் என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு சிறு கட்டுரைபோல எழுதலாமா என்று. ஆனால் என்னை நேசிப்பவர்கள் மனம் புண்பட்டுப் போகும் என்பதால் அதனை எழுத முடியவில்லை.

ஆனால் விழியன் அவர் இறந்து போனால் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்பதை
மிக தைரியமாக தனது வாழ்க்கைத்துணையிடம் சொல்லியிருக்கின்றார்.

இறந்துவுடன் பக்கத்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும. அவர்களிடம் தனது கண்களை தானமாக கொடுத்து விடவேண்டும். தேவைப்பட்டால் உடலையே கொடுத்து விடலாம்

சதா அழுது புலம்பிக் கொண்டிருக்க கூடாது. ஒருநாள் மட்டும் முழுவதும் அழுது தீர்த்து விடு.

சடங்கு - பூஜைகள் என்று பழமைகளுக்கு துணைபோக வேண்டாம். நான் பேயாக வந்தெல்லாம் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்.

நான் இறந்தவுடன் நீ இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்.

என் கல்லறையைக் கடந்து செல்பவர்கள் எனக் கல்லறை வாசகங்கள கண்டு என்னைப் பற்றி இப்பெடி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

என்று புரட்சிகரமாக சொல்லி நம்மை மிரட்டியிருக்கின்றார்.

கட்டிய மனைவியை தினமும் கண்ணீர் வடிக்க வைக்கும் கணவன்களுக்கு மத்தியில் தான் இறந்த போதும் கூட தன்னுடைய மனைவியின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது என்று விருப்பப்படும் இந்த இளைஞனை பார்க்கும் ஆர்வம் மேன்மேலும் அதிகரிக்கின்றது.

சினிமா புதுப்பார்வை


காதல் ரசம் கொட்ட வரிகளை காதலியிடம் எடுத்து விடுபவர்களுக்கு மத்தியில் இதைப்பற்றி எல்லாம் கூட விவாதிக்க வேண்டுமா என்ற அளவிற்கு சினிமாவைப் பற்றிய தனது வாழ்க்கைதுணையின் கருத்துக்களையும் பகிர்ந்திருக்கின்றார்


சினிமாவை நேரப்போக்கு மட்டும்தான் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வசதா காலமும் மூழ்கிக் கிடக்க கூடாது.

நடிகனின் மீதுள்ள வெறியில் ரசிகர் மன்றம் வைத்து திரியும் இளைஞர் கூட்டங்களுக்கு மத்தியில் 3 மணி நேரம் ஒரு அறைக்குள் அடைப்பட்டு கிடக்க விருப்பமில்லை என்று சொல்லியிருப்பது இந்த காலத்து ஆளா..? ஆச்சர்யமாக இருக்கிறது

அதிலும் பகல் நேரத்தில் சினிமா பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுவோம் நாம் இருவரும் இணைந்து இரவில் பார்த்துவிட்ட சினிமா- அதனைப் பற்றி கொஞ்சம் அலசி விட்டு தூங்கி விடுவோம். ஏனென்றால் பகலில் பார்த்து அந்த சினிமாவில் ஏற்பட்ட தாக்கத்தில் மனம் சஞ்சலமடைந்து கொண்டிருக்கும் ஆகவே ஒரு நாள் முழுவதும் வீணாகி விடும் என்று காலத்தின் மதிப்பை உணர்ந்து எழுதியிருக்கின்றார்

ரசிக்கும் பயணங்கள்

தன்னுடைய வாழ்வில் நடந்த பயணங்களைப் பற்றி சுவையாக எடுத்துரைத்துள்ளார்.


சின்ன சின்னப் பயணங்களில் கூட இரயில் கதவருகே நின்று கொண்டு மரங்கள் ஓடுவதை ரசிப்பது - சின்ன சின்ன வேடிக்கைப் பேச்சுக்கள் - அரட்டைகள் - கிண்டல்கள் என எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார்.

நண்பர்களோடு சுற்றுலா செல்லும்போதுதான் தான் செய்த சின்ன சின்ன தவறுகள் - குறும்புத்தனங்கள் எல்லாவற்றையும் சில நண்பர்களிடம் தனக்கே தெரியாமல் அந்த குஷியில் சொல்லிவிடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்

இது எந்த அளவிற்கு உண்மை என்று நான் மிகவும் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்துள்ளேன். சில நேரம் நண்பர்களோடு தனிமை கிடைக்கும் போது சில உண்மைகளை உளறிவிடுவேன்.

பின்னர்தான் உணர்வேன் அடடா அவனிடம் உண்மையைக் கூறிவிட்டோமே என்று. அதுபோன்ற அமைதியான மகிழ்ச்சியான சூழ்நிலைகள் சுற்றுலாவின் போதுதான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

சின்ன சின்ன பயணங்களில் கிடைக்கின்ற அனுபவங்கள் - அமைதிகள் - புதிய புதிய மனிதர்கள் எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும் . இந்த ஊரில் உனக்கு கிடைக்காத அமைதி பக்கத்து ஊரில் கிடைக்கலாம் ஆகவே நீயும் என்னைப் போல பயணத்திற்கு தயார்படுத்திக் கொள் என்று தோழியிடம் கூறுகிறார்

கை கொடுத்த ஓவியம்


எதில்தான் இரசனைகள் இல்லாமல் இருந்திருக்கிறது இவருக்கு. ஓவியத்தையும் ரசிக்க ஆரம்பித்திருக்கின்றார்

சின்ன வயதில் ஓவியங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்தது பின் ஆர்வம் கொண்டு முயற்சி எடுத்து கிறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக வரைய ஆரம்பித்ததை சொல்லியிருக்கின்றார்

முதல் கோடே சென்றது கோணலாய். தளர்ந்துவிடவில்லை. அழிப்பானின் உதவியால் வரைந்தேன். வரைந்து கொண்டே இருந்தேன் கிழிந்தது தாள். உடைந்தது மனது.

என்று தன்னுடைய முதல் முயற்சியை கவித்துவமாக சொல்லியிருக்கின்றார்.

ஆகவே தனக்கு பிடித்த ஓவியத்தை நீயும் பழகிக்கொள். உனக்கு பல அனுபவங்கள் கற்றுத் தரும் என்று தன்கு பிடித்த எல்லா விசயங்களையும் தோழிக்குத் தெரியப்படுத்துகின்றார்.

புத்தகம் சொன்னது


ஒரு புத்தகம் எழுதும் ஆசியரின் பார்வையில் அவன் அனுபவத்தில் கிடைத்த அறிவினை அந்தப் புத்தகத்தில் பதிக்க முடியும். நான் அந்தப் புத்தகத்தை மட்டுமன்றி அது சம்பந்தமாக எல்லா புத்தகங்களையும் ஆராயும் பழக்கம் இருந்தது.


இப்படி இவர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மையே. ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் கருத்துக்களை வைத்து ஒரு சம்பவத்தை அல்லது குறிப்பிட்ட விசயங்களில் உள்ள அறிவை பெருக்கி கொள்ள கூடாது. எல்லாருடைய பார்வைகளையும் ஆராய வேண்டும்

புத்தகத்தின் மீதுள்ள அவரது தேடல்களின் ஆர்வத்தை படிப்படியாக விளக்கியுள்ளார்.

நாராயணனின் புத்தகங்கள் மூலம் கிடைத்த உற்சாகம்

ஷிவ் கேராவின் புத்தகங்களால் வளர்த்த ஆளமைத்திறமை

எம் எஸ் உதயமூர்த்தியின் எழுத்துக்களால் கிடைத்த எழுச்சி

பிடல் கேஸ்ட்ரோசிவன் வாழ்க்கை வரலாறால் கிடைத்த நம்பிக்கை. இந்தப்புத்தகத்தில் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவம் என்னையும் மிகவும் பாதித்தது


"ஒருமுறை பிடல் கேஸ்ட் தன்னுடைய படைவீரர்கள் அனைவரையும் இழந்து 2 அல்லது 3 பேர் மட்டும் மிஞ்சியுள்ள நிலையிலும் கூட கரும்புக் காட்டு நடுவிலே உட்கார்ந்து கொண்டு அடுத்த தாக்குதலுக்கா தயாராகும் அவரின் மனவலிமை கண்டிப்பாக நமக்குள் ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றது. "

கடைசியாக அவர் காதலியின் மடியில் படுத்துக்கொண்டு தமிழ்க் கவிதைகளை வாசிக்க வேண்டும் . என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா என்று சம்மதம் கேட்டிருக்கின்றார்.

அட இதுக்கெல்லாம் சம்மதம் கொடுக்காம இருப்பாங்களா என்ன..?


என்னைச் செதுக்கிய இயக்கம்


இதயத்தை செதுக்கியது போதாது என்று ஒரு இயக்கத்தை செதுக்கியதைப் பற்றி சொல்லியிருக்கின்றார்.

என்னடா இப்படி வித்தியாசமாக சிந்தனை கொண்ட இந்த இளைஞர் கடைசியில் ஏதோ ஒரு கட்சி இயக்கத்தில் சென்று சரணடைந்து விட்டாரே என்று தலைப்பை பார்த்தவுடன் உங்களைப்போலத்தான் நானும் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அது கட்சி இயக்கம் அல்ல தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்று.

வேலூரையும் அதனைச் சுற்றியும் உள்ள பள்ளியிலிருந்து வரும் மாணவர்கள் தங்களுக்குண்டான அறிவுத்திறனை வெளிப்படுத்தி தங்களுக்குள் தங்களுக்கு தெரிந்த அறிவினைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.

இந்த அறிவியல் விழாக்களின் போது மற்ற பகுதி மாணவர்களை அவரவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று உணவு பரிமாறுவது - இரவுகளில் அவர்களது வீட்டில் தங்க வைப்பது பின் அதிகாலையில் சிறிய சுற்றுலா போல அமைத்து அறிவியல் பூர்வமாக ஒவ்வொன்றைப் பற்றியும் விவாதிப்பது என்று 2 நாட்கள் வித்தியாசமாக உணர்வுகள் பரிமாறப்படும்.

பின்னர் பிரியப் போகும் கடைசிநாளில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவிக்கொண்டு விடைபெறுவதை விழியன் விவரிக்கும்போது கட்டித்தழுவுகின்ற மாணவர்களின் சட்டைப்பைக்குள் நம் இதயம் கிடந்து நசுங்குவதைப் போன்ற ஒரு இனம் புரியாத உணர்வு.அமெரிக்கா போகணுமா..?


தனது தோழியிடம் அமெரிக்கா போகணுமா என்று கேட்டு தான் மற்ற இளைஞர்களைப் போல அமெரிக்கா போக விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கின்றார்.

நிறையப் பணம் சொகுசான் வாழ்க்கை வாழும் அமெரிக்கா மாணவர்கள் பலர் அங்கே பெட்ரொல் பாங்கில் - ஹோட்டல் ரெஸ்டாரெண்ட் என்றுதான் வேலைப் பார்க்கிறார்கள்.
இப்படி கஷ்டப்பட்டு உழைப்பதைப்பற்றி எடுத்துரைக்காமல் என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று பெருமையடிப்பதில் பணனில்லை என்று கூறியிருக்கின்றார்.

நமது நாட்டிலையே திறமையான பல்கலைக்கழகங்கள் எவ்வளவோ இருக்கின்றது. வெளிநாட்டினர் கூட நமது நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றி பெருமையாக சொல்லும்போது நாம் அங்கு போய் படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன என்று கோவப்படுகின்றார்.

அவர் கூறியதைப் போல அமெரிக்கா மோகம் இன்றைய இளைஞர்களின் மத்தியில் வெகுவாக ஆட்கொண்டுள்ளது. "மேட் இன் அமெரிக்கா" என்று எழுதப்பட்டிருந்தால் போதும் விஷத்தைக் கூட வாங்கி சாப்பிட்டு விடுவார்கள் போல அந்த அளவிற்கு அமெரிக்கா வெறி.

இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாட்டில் மூளையை அடகுவைக்க தனக்கு விருப்பமில்லை ஆகவே என்னை அமெரிக்கா போவதற்கு கட்டாயப்படுத்தவேண்டாம் என்று தோழியிடம் வற்புறுத்தியிருக்கிறார்


வார இறுதி இறுக்கம்


ஒர வார இடைவெளிக்கு பிறகு தனது தோழியிடம் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்

ஒரு கிராமத்தின் எல்லையில் காதலர்தின கொண்டாட்ட போர்டு ஒன்றைக் கண்டு மாறுபட்டக் கோணத்தில் எழுதியிருக்கின்றார். நாமெல்லாம் காதலர் தின கொண்டாட்டம் நடைபெறுவதாக உள்ள போர்டைப் பார்த்தால் நிகழ்ச்சி எங்கே நடைபெறுகின்றது - என்ன என்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது என்பதைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டுவோம்.

ஆனால் இவரோ அந்தக் காதலர் தின போர்டு அருகேதான், அந்தக் கிராமத்தின் சாக்கடைகள் ஓடுகிறது. காதலர்கள் மொத்தமாக சென்று அந்த சாக்கடையை சுத்தம் செய்வதுதான் உண்மையான காதலர்தினம் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சிந்தனை இவருக்கு தோன்றியிருக்கின்றது

எங்கோ ஒரு வாலண்டைன் காதலர்களைச் சேர்த்து வைத்ததற்காக நாம் ஏன் காதலர்தினம் கொண்டாடவேண்டும் என்று பொங்கி எழுந்திருக்கின்றார். இவையெல்லாம் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வியாபாரிகளின் வியாபார நுணுக்கங்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் மோகத்திற்கு தள்ளப்பட்டு நாமும் காதலர் தினம் கொண்டாடுவதில் அர்த்தமில்லை . சுதந்திர தினம் - பெண்கள் தினம் - அறிவியல் தினம் இவற்றிற்கெல்லாம் கொடுக்காத முக்கியத்துவத்தை காதலர்தினத்திற்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும் என்று மனதின் அடி ஆழத்திலிருந்து கேள்விகள் எழுப்பியுள்ளார்

பின்னர் ஒரு கோயிலில் தான் கண்ட காட்சியினைப் பற்றி விவரிக்கின்றார் 6 மாத கர்ப்பிணிப்பெண் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்வதைக் கண்டு திகைத்துப்போய் அவளிடம் புத்திமதி கூற முற்பட்டிருக்கின்றார். கடவுளின் பெயரால் கடவுள் எதிர்பார்க்காததை எல்லாம் அவனுக்கு பிடிக்க வேண்டும் என்று செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பின்னர் தான் பார்த்த தென்றல் படத்தின் கதையால் ஈர்க்கபட்டதை எழுதி அதனைப்பற்றி வருந்தி எழுதி அதன் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் கூறிவிட்டு இந்த அனுபவங்களையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே தோழியே.. நீயும் யோசி..அதன் பிறகு சரியாக இருந்தால் ஏற்றுக்கொள் என்று சம உரிமை கொடுத்திருக்கின்றார்.எல்லா நதியிலும் நம் ஓடம்


வைரமுத்துவின் எல்லா நதியிலும் என் ஓடம் என்ற புத்தகத்தை படித்து விட்டு அதன் தாக்கத்தில் தன்னைக் கவர்ந்த பிற கவிதைகளையும் நயமாக எடுத்துக் கூறியுள்ளாhர்

வைரமுத்துவின் தாக்கம் ஏற்படாதவர் எவரும் உண்டோ..? இந்த நூற்றாண்டில் பல இளைஞர்களை கவிதை எழுத தூண்டி பெரும்பாலான கவிஞர்களை உருவாக்கியப் பெருமை வைரமுத்துவைச் சாரும்.

முன்பெல்லாம் கவிஞர்கள் என்றால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல கல்லூரியில் படிக்கின்ற எல்லா மாணவர்களுமே கிட்டத்தட்ட கவிஞர்களாகி விடுகிறார்கள். தான் காதலில் விழுந்து அல்லது தன்னுடைய நண்பர்கள் காதலில் விழுந்ததைக் கண்டு கவிதை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.

பெரும்பாலான இளைஞர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு போகும் போது நோட்டுப்புத்தகங்களை ஜன்னல் ஓரத்தில் இருப்பவளிடம் கொடுத்து அவளை கவருவதற்காக நோட்டுப்புத்தகங்களின் பின்பக்கம் எழுத ஆரம்பித்து கவிஞர்களாகி விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட இளைஞர்களுக்கெல்லாம் வைரமுத்துவின் எளிய நடைக்கவிதைகள் ஒரு பெரும் ஊக்கமாக இருந்திருக்கின்றது. அட இப்படி கூட கவிதைகள் எழுதலாமே என்று கவிதையை எளிமைப்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

கவிதையைப் பற்றிய தனது கருத்துகளாக விழியன் கூறும்பொழுது

கவிதையில் அலங்காரங்கள் அர்த்தங்களை கொன்று விடக்கூடாது. மல்லிகைப் பூவிற்கு தங்கச் சங்கிலி அணிவிப்பது தேசியக் குற்றமாகும் என்று வைமுத்துவின் நடையிலேயே அழகாய் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.


சீப்பு
உன் கூந்தலை வாருகிறது
என் மனதை
ஏனடி கலைக்கிறது?


என்று காதல் ரசம் மேலோங்கி நிற்கும் சில கஸல் கவிதைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

சிராஜ் என்னும் கவிஞன் தன் காதலியைப் பிரிந்து சோகத்தில் கூறியுள்ளதாக ஒரு கவிதை :

நீ
பிரிந்துவிட்டாய் என் அன்பே
காதலெனும் வாணலியில்
வறுபடுகிறது
என்
இதயமென்னும் இறைச்சித்துண்டு


இப்படி காதல் கவிதைகளை உதாரணம் காட்டியிருப்பதால் ஒருவேளை விழியன் தேடுகின்ற தோழி அவர் விழியில் விழுந்து விட்டாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அப்பாவுடன் சந்திப்பு


அப்பாவை சந்தித்த அந்த சிறிய அனுபவத்திற்கு கூட மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து தோழியிடம் விவரிக்கிறார்

அப்பாவை சந்தித்து அவரிடம் அரசியல் - சமூகப்பணிகள் - புத்தகங்கள் - பாலிசி மாற்றங்கள் என்று சராமாரியாக எல்லாவற்றையும் விவாதித்து விட்டு திரும்பி வருகின்ற வழியில் தான் சாப்பிட மறந்த உணவுப் பொட்டலத்தை சாலையோரம் கையேந்தி நிற்கின்ற சிறுவனுக்கு கொடுத்த மகிழ்ச்சியில் இரங்கிப் போய் ஒரு கவிதை சொல்லுகிறார்

கட்டுக்கடங்காத
குளிர்
பனிக்காற்று வந்தது
பவனி

ஊரே அடங்கியும்
அடங்கவில்லை
அந்தக் கால்வயிற்றின் பசி

கதகதக்க ஒரே இடம்
அம்மாவின் மடி

வானமே இவன்
வீட்டுக் கூரை
பிளாட்பாரம் மட்டும் இவன்

படுக்கையறை

அவன் உடம்பில்
கந்தலாய் இருந்தது சட்டை
இங்கே கந்தலானது என் மனசு


என்று அந்தச் சாலையோர சிறுவனுக்காக இரக்கப்பட்டிருக்கின்றார்.

நாம் பெற்ற அறிவும் ஆற்றலும் நமக்காகவே வாழ்ந்து மடிந்து விடுமோ என்று அச்சப்பட்டு என் சக வயது மக்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்று சமூக அக்கறையில் புலம்புகிறார்.

கனவு இல்லம்வசந்த மாளிகை படத்தில் சிவாஜி காதலிக்காக ஒரு மாளிகை கட்டிய மாதிரி இவரும் தனது வாழ்க்கைத்துணையோடு வாழப்போகும் அந்த கனவு இல்லத்தை தயார்படுத்தியிருக்கின்றார்

எல்லா நண்பர்களும் ஒரே ப்ளாட்டில் கூடி இருந்து பிறந்த நாள் - மணநாள் - விழாக்கள் - பண்டிகை என்று மொத்தமாக கொண்டாடுவோம். சோகம் - துக்கம் சமமாக பகிர்ந்து கொள்வோம் என்று தனது கனவு இல்லத்தை அவர் விவரிக்கும்போதே நாமும் அதில் குடிபோக மாட்டோமா என்று ஏங்குகிறது.

இதில் மெல்லியதாக இன்னொரு விசயத்தையும் வருடிச் சென்றிருக்கின்றார் அதாவது ஆண் - பெண் நட்பு. திருமணத்திற்குப் பிறகும் ஆண்களின் கல்லூரிக்கால நட்புகள் தொடர்கின்றது. ஆனால் பெண்களின் நட்பு அவளது திருமணத்திலையே முடிந்து போகின்றது.

நான் கூட இதுபற்றியான ஒரு பதிவை எனது வலைப்பூவில் இட்டுள்ளேன்.

http://nilavunanban.blogspot.com/2005/07/blog-post_21.html


திருமணம் முடிந்த பிறகு எப்படி என் உறவுகள் நம் உறவினர்கள் ஆகின்றனரோ அதே போல உன் நண்பர்களும் என் நண்பர்களும்; நம் நண்பர்கள் ஆக வேண்டும்.

என்று அவர் கூறியிருக்கின்றார். இப்போதுள்ள எத்தனையோ படித்த இளைஞர்கள் கூட மனைவியின் நண்பர்களை ஏற்றுக்கொள்ள முன்வராத சமூகச் சூழ்நிலையில்தான் இருக்கின்றார்கள். அந்த விசயத்தில் விழியன் தெளிவான சிந்தனையில் உள்ளார்.

தனது கனவு இல்லத்தில் வீட்டைச்சுற்றி பூக்கள் மரங்கள் மெல்லிய காற்று சுத்தமான சுற்றுப்புறத்தோடு இருக்கவேண்டும் என்று இயற்கை நேயனாக கூறியிருக்கின்றார்.

வீட்டைச்சுற்றி பூக்கள் என்று சொல்லிவிட்டு அடைப்புக்குறிக்குள் உன்னையும் சேர்த்துதான் என்று சொல்லியிருப்பது மெல்லிய கவிதைத்துவம்

பூக்கள் விரியும்போது 40 பீரங்கிகள் ஒன்றாய் வெடிக்கும் அளவிற்கு சத்தம் கிளம்பும்
மனிதனின் காதுகள் 20 டெசிபல் சத்தம் மட்டுமே கேட்கும் திறன் உடையது என்று
சின்னச்சின்ன அறிவியல் சிந்தனைகளையும் தூவியுள்ளார்.------------
எந்த புத்தகத்திற்கும் நான் இப்படி மெனக்கெட்டு இருந்து விமர்சனம் எழுதியதில்லை. ஆனால் இந்த தோழியே உன்னைத் தேடுகின்றேன் என்ற புத்தகம் என்னை அந்த அளவிற்கு எழுதுவதற்கு தூண்டிவிட்டது.

தலைப்பை எனக்குள் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது. இவர் ஏன் தோழியைத் தேடவேண்டும்.?.காதலிக்க வா.?.இல்லை தனது பழைய நட்பினை புதுப்பித்துக் கொள்ளவா ?என்ற ஆர்வத்தில்தான் இந்தப் புத்தகத்தை துபாய்க்கு வரும் இவரது நண்பரிடம் கொடுத்துவிடச் சொன்னேன்.


இந்தப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் எனது எண்ணங்களோடு ஒத்துப்போயிருப்பதாலும் இதனைப்பற்றிய ஆர்வம் மேலும் கூடியது.

கணிப்பொறியில் ஹார்ட்டிஸ்க்கை மாற்றிப் போடுவது போல நான் சிந்தித்து பாதுகாத்து மூளையில் சேமித்து வைத்திருந்த கருத்துக்களை அவர் கழற்றி எடுத்துக்கொண்டு போய் அவரிடம் வைத்துக்கொண்டு எழுதிவிட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது.

இவரின் வித்தியாசமான சிந்தனைகளை எத்தனைபேர் நடைமுறைப்படுத்த முடியுமோ என்றுத் தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக இதன் தாக்கத்தினால் நீங்களும் கொஞ்சமாவது உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.நான் இப்படி கூறுவதனால் இவருடைய புத்தகத்திற்கு நான்தான் மார்க்கெட்டிங் மேனேஜர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இதுவரை நான் விழியனை நேரில் சந்தித்ததே கிடையாது. ஆனால் சந்திக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுகின்றேன்.

இந்த வரம்பு மீறிய இளைஞனின் எண்ணங்களை சீக்கிரமாய் அறிந்து கொள்ளுங்கள்.

புத்தகம் வெளியீடு :

கேள்விழி பதிப்பகம்
6 / 75 B Sector , VG ராவ் நகர்
வேலூர் - 632 007
அலைபேசி : 09886217301
மின்னஞ்சல் : vizhiyan@gmail.com- ரசிகவ் ஞானியார்

க.மு - க.பி


கல்யாணத்திற்கு முன் ( க.மு )

இந்தப்புகைப்படத்தை நல்லா பார்த்திட்டீங்களா மக்கா..? என்ன அழகா தேவதை மாதிரி நடந்து போய்கிட்டு இருக்கா..?

கல்யாண முடியாதவங்க இது மாதிரி மனைவி வரணும் ஆசைப்படுவாங்க..

கல்யாணத்திற்கு பின் ( க.பி )

அதே பொண்ணை கல்யாணம் முடிச்சாச்சு. இப்போ அதே தேவதையை

Ctrl + A பொத்தானை அழுத்தி பாருங்க..

இது எப்படி இருக்கு..?

( புகைப்பட உதவி : விழியன் )

- ரசிகவ் ஞானியார்

நெல்லைக் குசும்புங்கோ
வைகோவின் தாயார் :
"டேய்! மகனே தாய் சொல்லை தட்டி விட்டியேப்பா நீ! "

வைகோ :
"அட போம்மா! நீயாவது 10 மாசம்தான் உள்ள வச்சி இருந்தாய் ஆனா அந்த அம்மா என்ன 19 மாசம்ல உள்ள வச்சி இருந்தாங்க..அவங்க சொல்ல தட்ட முடியுமா..? "

வைகோவின் தாயார் :
"டேய்! டேய்! சொல்ல வெட்கமா இல்லை உனக்கு ?"

- ரசிகவ் ஞானியார்

Wednesday, March 15, 2006

மொபைலில் அழிந்த மொட்டு
அன்பு நண்பர்களுக்கு,

இந்தச் சம்பவம் பெங்களுரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது.

4 வயது பெண் குழந்தை ஒன்று கால் முறிவுக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவளுடைய முறிந்த எலும்புகளை இணைத்து வைக்கும் பொருட்டு ஆபரேஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

Lift Supporting System த்தில் வைத்து ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த System தனது சமிக்ஞைகளை இழந்து அணைந்து போனது.

காரணம் என்னவென்றால் அந்த ஆபரேஷன் தியேட்டர் வெளியே யாரோ மொபைல் போனை உபயோகித்து இருக்கிறார்கள். அந்த மொபைல் போனின் அலைவரிசைக் கதிர்களால் தாக்கப்பட்டு அந்த Life Supporting System அணைந்து போனது.

மொபைல் போன் உபயோகித்தவர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் எந்த வித பயனும் இல்லை..அந்தப் பிஞ்சுக் குழந்தை இறந்து விட்டது.


என்ன சோகமென்றால் பெற்றோர்களுக்கு அது ஒரே குழந்தை. எந்த அளவிற்கு துடித்துப் போயிருப்பார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள்.

செல்லமாய் வளர்த்த குழந்தை
செல்போனில் ..
செத்துவிட்டது!


ஆகவே நண்பர்களே தயவுசெய்து மருத்துவமனை - விமான நிலையம் - மற்றும் எங்கெல்லாம் செல் போன் உபயோகிக்க கூடாது என்று எச்சரிக்கைச் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் தயவுசெய்து உபயோகிக்க வேண்டாம்.

எச்சரிக்கைகளை மிதித்து விட்டு எத்தனையோ பேர் இப்படி உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்களே அதனால் யாருக்கும் எந்த வித பாதிப்புகளும் இல்லையே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் பாதிப்புகளின் தாக்கம் நீங்கள் உணராமலையே இருக்கக் கூடும். ஆம் உங்களுக்குத் தெரியாமலையே ஒரு உயிரை நீங்கள் கொல்லக்கூடும்.

தயவுசெய்து இந்தத் தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாமல் அலட்சியமாக இருக்கலாம்.


நீ கொடுக்கின்ற
மிஸ்காலில் கூட
சில உயிர்கள்
மிஸ் ஆகக் கூடும்நம்மால் படைக்க முடியாது. ஆனால் பாதுகாக்கலாம் .


வேண்டுதலுடன்

ரசிகவ் ஞானியார்

Tuesday, March 14, 2006

காதல் - விரிவாக விடையளி!

( மின்னஞ்சலில் வந்தது )

ஒரு வித்தியாசமான காதல் கடிதமும் அழகான பதிலையும் பாருங்களேன்.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தனது வகுப்புத் தோழிக்கு கேள்வி பதில் வடிவத்தில் காதல் கடிதம் எழுதுகின்றான்.

என்னுடைய அன்பான காதலிக்கு,

இந்த கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்தால்

பிரிவு அ க்கு பத்து மார்க்கும்
பிரிவு ஆ க்கு 5 மதிப்பெண்களும்
பிரிவு இ க்கு 3 மதிப்பெண்களும் கிடைக்கும்.


1) நீ வகுப்பறையில் நுழையும்பொழுது உன் பார்வைகள் என்னில் வந்து விழுகின்றது ஏனென்றால் ,

அ ) நீ என்னைக் காதலிக்கின்றாய்
ஆ) என்னைப் பார்க்காமல் உன்னால் இருக்க முடியவில்லை
இ) உண்மையில்...நான் உன்னை பார்க்க வைக்கிறேனா..?

2) ஆசிரியர் ஜோக் சொல்லும் பொழுது நீ சிரித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்க்கிறாய் ஏனென்றால் ,

அ) நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க நீ விரும்புகிறாய்
ஆ) எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்று நீ சோதனையிடுகிறாய்
இ) என்னுடைய சிரிப்பு உனக்கு கவர்ந்திருக்கிறது

3) நீ வகுப்பறையில் பாடிக்கொண்டிருக்கும் சமயம் நான் உள்ளே நுழைந்தால் நீ பாடுவதை நிறுத்திவிடுவாய் ஏனென்றால் ,

அ) எனக்கு முன்னால் பாட நீ வெட்கப்படுகிறாய்.
ஆ) என்னுடைய வருகை நீ பாடுவதை தடுக்கின்றது
இ) நீ பாடுவது எனக்கு பிடிக்கவில்லையோ எனப் பயப்படுகிறாய்

4) உன்னுடைய சின்ன வயசுப் புகைப்படத்தை என்னிடமிருந்து நீ மறைக்கிறாய் ஏனென்றால்,

அ) நீ வெட்கப்ப்படுகிறாய்
ஆ) நான் ரசிக்கமாட்டேனோ என்று நினைக்கிறாய்
இ) எதற்கென்றே தெரியவில்லை5. வருகின்ற பேருந்தையெல்லாம் விட்டுவிட்டு நீ நேற்று பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தாய் ஏனென்றால் ,

அ) நீ எனக்காக காத்திருந்தாய்
ஆ) என்னைப் பற்றிய கனவில் இருந்ததால் நீ என்னைக் கவனிக்கவில்லை
இ) எல்லாப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது

6. ஒரு மேடான பகுதியில் நீ ஏற முற்பட்டபொழுது நானும் அதே நேரத்தில் எனது நண்பனும் கைகளை நீட்டுகிறோம். நீ எனது நண்பனின் கைகளை பிடிக்கின்றாய் ஏனென்றால்,

அ) நான் ஏமாறுவதைக் கண்டு ரசிக்கின்றாய்
ஆ) வெட்கத்தில் நீ என் கையைப் பிடிக்கவில்லை
இ) பதில் சொல்லத் தெரியவில்லை..

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிகக்கு வந்தபோது நீ என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினாய் ஏனென்றால் ,

அ) நான் உன்னுடைய கணவனாகப் போவதால்
ஆ) உன்னுடைய பெற்றோர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக
இ) சாதாரண அறிமுகம்தான் எந்த வித காரணமுமில்லை

8. ரோஜாப்பூக்கள் தலையில் சூடி வரும் பெண்களை எனக்குப் பிடிக்கும் என்றேன். மறுநாள் நீ தலையில் ரோஜாப்பூக்களோடு வருகிறாய். ஏனென்றால் ,

அ) என்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக
ஆ) உனக்கு ரோஜாப்பூக்கள் பிடிக்கும்
இ) தற்செயலாக உனக்கு ரோஜாப்பூக்கள் கிடைத்தது.

9. என்னுடைய பிறந்த நாளில் நான் செல்லுகின்ற ஆலயத்திற்கு நீயும் வருகிறாய்..ஏனென்றால் ,

அ) எப்பொழுதும் போல தற்செயலாக நீ அந்த ஆலயம் வருகிறாய்..
ஆ) யாரும் வாழ்த்துவதற்கு முன் நீ என்னை வாழ்த்தவேண்டும் என்பதற்காக
இ) உனக்கு இறைபக்தி அதிகம் இருப்பதால் தினமும் ஆலயம் வருகிறாய்.

நீ நாற்பது மதிப்பெண்களுக்கும் மேலாக மதிப்பெண் பெற்றிருந்தால் நீ என்னை விரும்புகிறாய். தயங்காமல் உன் காதலைச் சொல்லிவிடு

நீ முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உன் மனதில் காதல் மொட்டு விடத் தொடங்கியிருக்கியது. அது எந்த நேரமும் வெடிக்கக் கூடும்.

நீ முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால். என்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்று நீ உனக்குள்ளேயே குழப்பத்தில் இருக்கின்றாய்
உன்னுடைய பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.

________________________________

அதற்கு காதலியானவள் அதே கேள்வி பதில் வடிவத்தில் பதில் அளிக்கின்றாள்..

நண்பனே,

கீழ்கண்ட ஆம் அல்லது இல்லை என்ற எனது கேள்விகளுக்கு விடையளி..

1. முதல் பெஞ்சில் யாராவது இருக்கிறார்கள் என்றால் வகுப்பில் நுழையும் மாணவர்களை கவனிப்பது தற்செயலானதுதான்.

ஆம்
இல்லை

2. ஒரு பெண் யாருடைய நகைச்சுவைக்கோ சிரித்து - ரையாவது திரும்பி பார்த்தால் அதற்குப் பெயர் காதலா..?

ஆம்
இல்லை

3. பாடிக்கொண்டிருக்கும் போது பாடல் வரிகள் மறந்து விட்டால் அப்படியே நிறுத்தில விடுவது இயல்புதானே?

ஆம்
இல்லை

4. என்னுடை குழந்தை வயசு புகைப்படத்தை என் பெண் தோழிகளிடம் காட்டும்போது ஆண்மகனான நீ நாகரீகம் கருதி ஒதுங்கிச் செல்ல வேண்டும்..

ஆம்
இல்லை

5. பேருந்து நிலையத்தில் நான் எனது உயிரத் தோழிக்காக காத்திருக்க கூடாதா என்ன..

ஆம்
இல்லை

6. உனது கைகளை பிடிக்காமல் உனது நண்பனின் கையைப் பிடிக்கும்பொழுதே உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையாடா..?

ஆம்
இல்லை


7. நீ என்னுடைய நண்பன் என்று எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தக் கூடாதா..?

ஆம்
இல்லை

8. நான் லோட்டஸ் - காலிப்ளவர் - பனானா போல இருப்பதாக கூட நீ கூறியிருக்கின்றாய்தானே?

ஆம்
இல்லை

9. ஓ உனக்கு அன்றுதான் பிறந்த நாளா..? அது எனக்குத் தெரியாது. நான் தினமும் அந்த ஆலயத்திற்கு வருவேன் தெரியுமா..?

ஆம்
இல்லை

இந்த கேள்விகளுக்கெல்லாம் நீ ஆம் என்று பதிலளித்தால் நான் உன்னை காதலிக்கவில்லை என்று அர்த்தம்

நீ இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதலைப் பற்றியான உண்மையான அர்த்தம் தெரியவில்லை என்று அர்த்தம்.

---------------------------அன்புடன்

ரசிகவ் ஞானியார்


.

Monday, March 06, 2006

நாலு- சங்கிலி பதிவு

அது என்ன சங்கிலிப் பதிவுன்னு தெரியலைங்க..நாலு நாலா எழுதச் சொன்னாங்க.. கொஞ்சம் குறைச்சி இரண்டு இரண்டா ஆக்கியிருக்க கூடாதா..? தங்களுக்குப் பிடிச்ச பதிவுகளில் என்னுடைய வலைப்பூவையும் இணைத்த கைப்புள்ளைக்கும் நித்தியாவுக்கும் நன்றிங்கோ..

எப்படியோ வேலைப்பளுவில் இருந்தவனை கைப்பிடிச்சி தரதரன்னு இழுத்து வந்தப் பெருமை நம்ம கைப்புள்ளையைச் சாரும்.
நான் இருந்த நாலு இடம்

1. மேலப்பாளையம் - திருநெல்வேலி
2. சேத்துப்பட்டு - சென்னை
3. டெய்ரா - துபாய்
4. அவள் இதயம்


விடுமுறைக்குப் போன நாலு ஊர்

1. ஊட்டி
2. கொடைக்கானல்
3. மைசூர்
4. ஒகேனக்கல்

சென்னையில் புடிச்ச நாலு எடம்

1. மெரீனா கடற்கரை
2. கோடம்பாக்கம்
3. திநகர் - ரங்கநாதன் தெரு
4. அயனாவரம்


திருநெல்வேலியில் புடிச்ச நாலு இடம்

1. மேலப்பாளையம்
2. பாளையங்கோட்டை
3. திருநெல்வேலி சந்திப்பு
4. சேவியர் கல்லூரி நூலகம்

ரசிச்சு பாக்குற நாலு டிவி நிகழ்ச்சி

1. அரட்டை அரங்கம்
2. சூப்பர் டென்
3. சன் செய்திகளின் வானிலை அறிக்கை (?)
4. ஜீ மியுசிக்

எப்ப வேணா பாக்க விரும்பும் நாலு படம்

1. தளபதி
2. நாயகன்
3. பன்னீர் புஷ்பங்கள்
4. காதல்

விரும்பி செய்யும் நாலு செயல்கள்

1. எதையாவது எழுதிக்கொண்டேயிருப்பது
2. மிஸ்கால் கொடுப்பது
3. புதுசு புதுசாய் சமைத்து நண்பர்களுக்கு தருவது ( அவனுங்க தலைவிதி )
4. கனவு காண்பது ( அப்துல்கலாம்தானே சொன்னாரு..)

தமிழ் சினிமாவுல புடிச்ச நாலு நடிகர்கள்

1. ரஜினி ( ஸ்டைல்தான்)
2. கமல் ( பேட்டிகளில் கருத்துக்களை தரமாக எடுத்து வைப்பது)
3. பிரசன்னா ( யதார்த்தமான நடிப்பு )
4. பிரகாஷ்ராஜ் ( எப்போதும் ரசிக்க வைக்கும் நடிப்பு)

சினிமாவுல புடிச்ச நாலு அம்மணிங்க

1. மீரா ஜாஸ்மின்
2. மீரா ஜாஸ்மின்
3. மீரா ஜாஸ்மின்
4. மீரா ஜாஸ்மின்

புடிச்ச நாலு சாப்பிடற ஐட்டம்

1. பூரி
2. மிளகு கறி
3. மோர்க்குழம்பு
4. சேமியா பிரியாணி

படிச்ச நாலு இடம்

1. ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி - மேலப்பாளையம்
2. சதக் கல்லூரி - பாளையங்கோட்டை
3. ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி - ஹைகிரவுண்ட்
4. ளுளுஐ - கம்ப்யூட்டர் சென்டர்


மறக்க முடியாத நாலு நிகழ்வுகள்

1. எனது கவிதையை வைரமுத்து பாராட்டி பல்கலைக்கழக இதழில்
பிரசுரித்தது
2. எஸ்.பி பாலசுப்பிரமணியன் கையால் கவிதைக்கு முதற்பரிசு பெற்றது
3. பானிபட் இதயங்கள் கவிதை வெளியிட்டு விழாவில் எனது தந்தையின்
பெயரைக் கூறியவுடன் கலெக்டர் உட்பட எழுந்து நின்றது.
4. கல்லூரி மேடையில் நான் பேசுவதைக் கேட்டு கண்ணீர் மல்ல எனது
அம்மா பார்த்துக்கொண்டிருந்தது

நெஞ்சம் வெடிக்க வைக்கும் நாலு சோகங்கள்

1. குஜராத் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து
சிசுவை எடுத்தது
2. அரசியல் லாபத்திற்காக கல்லூரி பேருந்தை கொளுத்தி 3 மாணவிகளை
உயிரோடு எரித்தது
3. மக்களை மரணத்திற்கு பினாமி ஆக்கிய சுனாமியின் அட்டூழியங்கள்
4. கண்ணுக்கு முன்னால் உயிரோடு எரிந்து போன அந்தப் பெண்

மறக்கமுடியாத நாலு காதல் நிகழ்வுகள்

1. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்ட பக்கத்து தெரு
நண்பனின் காதல்
2. உயிருக்குயிராய் என் நண்பனை காதலித்து கடைசியில் கைவிட்டுப்போன
கல்லூரிநேரக் காதல்
3. அவள் காதல்
4. என் காதல்

நிராசைகளாகிப் போன நாலு ஆசைகள்

1. ஜர்னலிசம் படிப்பது
2. ஜர்னலிசம் படிப்பது
3. ஜர்னலிசம் படிப்பது
4. ஜர்னலிசம் படிப்பது


தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஞாபகம் வரக்கூடிய நாலு பெண்கள்

1. அம்மா
2. தங்கை
3. மனைவியாகப் போகிறவள்
4. காதலிப்பதாக சொன்னவள்

எனக்கு பிடிக்காத நாலு உணவு வகைகள்

1. மீன் வகைகள்
2. பாகற்காய்
3. குடல்
4. கத்தரிக்காய்


நான் ரசித்து சிரிக்கும் நாலு சேட்டைகள்

1. தமிழ் வகுப்பில் தமிழ் வாத்தியாரிடம் அதிகமாக கிண்டலடித்து
விளையாடியது
2. கல்லூரி ஸ்ட்ரைக்கில் பிரின்ஸ்பால் அறையில் 5 பைசாவாக
விட்டெறிந்தது
3. கல்லூரித் தோழிகளின் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு சாரி என்று
எழுதி வைத்தது.
4. பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட ஒரு பெரியவரின் இலையில் இருந்து
அப்பளம் எடுத்து சாப்பிட்டது

நான்கு திகில் அனுபவங்கள்

1. களக்காடு காட்டில் யானைகள் வருகின்ற ஒத்தையடிப்பாதையில்
பயத்துடன் நின்றது

2. நாகர்கோவில் காளிகேசம் என்னும் காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட
ஒரு இரவு

3. சென்னையில் இரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது
போலிஸாரிடம் மாட்டிக்கொண்டு பைன் கட்டியது

4. எங்கள் ஊரில் நடந்த இந்து - முஸ்லிம் கலவர நேரம்.


நான் செல்ல விரும்பும் நாலு இடம்

1. ஆக்ரா
2. சிம்லா
3. கேரள படகு சவாரி
4. ஹஜ்


நான் படிக்கும் நாலு தமிழ்ப் பதிவுகள்(நாலே நாலு அல்ல)

1. ராமசந்திரன் உஷா - பதிவுகளில் நல்ல பக்குவம்
2. மனுஷ்ய புத்திரன் - கவிதைகளில் நல்ல பக்குவம்
3. நிலா - ஒரு தூரத்து நடுநிலைமைப் பார்வை
4. சுவாரசியமான தலைப்புகளில் வருகின்ற மற்ற அனைத்து பதிவுகளும்

சங்கிலி பதிவைத் தொடர நான் அழைக்கும் நாலு பேர்

1. ஜி. ராகவன்
2. சிங்.ஜெயக்குமார்
3. ஆசிப் மீரான்
4. இந்தப் பதிவை பார்க்கும் ஏனையோர்கள்
-ரசிகவ் ஞானியார்

Sunday, March 05, 2006

இன்றைய தத்துவங்கள்

( மின்னஞ்சலில் வந்தது)லவ்வர்ஸ் டே அன்னைக்கு லவ்வருக்கு முத்தம் கொடுக்கலாம். ஆனால் டீச்சர்ஸ் டே அன்னைக்கு டீச்சரை முத்தமிட முடியுமா..?
---
என்னதான் ஜாவால Thread இருந்தாலும் அத வச்சு லுங்கி கூட நெய்ய முடியாது.
---
மின்னலைப் பார்த்தா கண்ணு போயிடும்..பார்க்கலைன்னா மின்னல் போயிடும்
---
நாம அடிச்சா அது மொட்டை.. தானா விழுந்தா அது சொட்டை
---
மேல இருந்து கீழே விழுந்தா அருவி.. கீழே இருந்து மேலே பறந்தா குருவி
---
பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டர்ல ரீலீஸ் பண்ண முடியாது
---
என்னதான் கருணாநிதி திமுக வானாலும் அவர் வீட்டு மாடு அம்மான்னு தான் கத்தும்

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு