Sunday, March 19, 2006

எனக்கு நடந்த விபத்துக்கள்திடீரென்று ஒரு சிந்தனை. எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோமே..நமக்கு நடந்த விபத்துக்களைப் பற்றியும் ஒரு அலசு அலசினால்தான் என்ன? என்று தோன்றியது.

மரணம் என்பது யாருக்கும் விதிவிலக்கல்ல. எப்படியோ ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் நாம் விரும்பியோ விரும்பாவிட்டாலோ அது நம்மை வந்து சேர்ந்து விடும் என்பது உறுதி.

ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மரணத்தைக் கண்டால் ரொம்பவும் பயம். பயமாகயிருந்தாலும் யாருடைய மரணத்திற்காகவாவது சென்றுவிட்டால் மரணித்தவரின் முகத்தை மறைக்கின்ற அந்த கடைசி நொடிகள் வரை கவனித்துக்கொண்டே இருப்பேன். கண்டிப்பாக அனைவருக்கும் மரண பயம் இருப்பது அவசியமே. அது தனிமனித ஒழுக்கத்தைக் கொடுக்கின்றது.

எத்தனையோ பேருக்கு மரணம் தொட்டு பிடித்துவிட்டு ஓடியிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையிலும் விபத்துகளின் மூலமாக என்னை தொட நினைத்தது மரணம். பின்னர் "பாவம் இவன் கொஞ்ச நாள் வாழட்டுமே" என்று விட்டு விட்டுச் சென்றிருக்கலாம். எப்படியோ தப்பிச்சிட்டேன்பா..

நினைத்தவுடன் ஞாபகத்தில் வருகின்ற விபத்துக்கள் இதுதான். நான் கண்ட விபத்துக்கள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். இது நானே அனுபவதித்த விபத்துக்கள்.

டார்ட்டாய்ஸ் கொளுத்துங்க கொசுவ விரட்டுங்க சந்தோசமாய் இருங்க..

அப்பொழுது என்னோட வயசு சுமார் 16 இருக்கும். ஒருநாள் அறையில் ஒரு சின்ன டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள் கொளுத்தி வைத்து தூங்கினேன்.

என்ன ஆயிற்று என்னவென்றால் இரவில் அந்த கொசுச்சுருளில் உள்ள சிறு தீப்பொறி ஒன்று என்னுடைய போர்வையில் பட்டுவிட ஒரு நுனியில் பட்ட நெருப்பு மள மளவென்று போர்வைச் சுற்றிலும் தொடர்ச்சியாக பரவியது. நான் நல்ல நித்திரையில் இருந்ததால் பக்கத்தில் நெருப்பு எரிகிற உணர்வே இல்லைங்க..

நெருப்பு போர்வையில் பட்டு பின்னர் எனது வேஷ்டியில் பட்ட பிறகுதான் எனக்கு நெருப்பின் சூடு தெரிய ஆரம்பித்தது.

திடீரென்று கண்விழித்த நான் பயந்து போனேன். என்னடா இவ்வளவு நெருப்பு என்று. உடனே அவசர அவசரமாக ஓடிச்சென்று பக்கெட்டில் இருந்து தண்ணீர் எடுத்து என் மீது ஊற்றினேன்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தால் நான் படுத்திருந்த இடத்தில் தலையணை - போர்வை என்று எதுவுமே இல்லை. சாம்பல் மட்டும்தான் கிடந்தது. நான் பதறிப் போய்விட்டேன்.
அப்படியே கதவைத்திறந்து வெளியே வந்தால் அங்கே ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த எனது தந்தை என் அறையிலிருந்து புகையாக வருவதைக் கண்டு பயந்து போய் வீட்டில் உள்ள எல்லோரையும் எழுப்பி விட எல்லோரும் நான் படுத்த இடத்தில் சாம்பலைக் கண்டு பயந்து விட்டனர்.

பின் என்னைச்சுற்றி அழாத குறையாக நின்று கொண்டு ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். எனது தாயார் நான் அறையில் தனியாக படுக்க வேண்டாம் என்றும் ஹாலில் வந்து படுக்க வேண்டும் என்று சொன்னாhர்கள்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வந்ததோ இல்லையோ..எனது தாயார் அடிக்கடி வந்து என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தததை நானும் கவனித்தேன்.

பின்னே இவ்வளவு அறிவான பையனை [ :) ] இளவயசுல இழந்து விட நினைத்தோமேங்கிற கவலைதான் அவங்களை அன்னிக்கு இரவு முழுவதும் தூங்க விடவில்லை.

முதல் பைக் அனுபவம்

அடுத்த விபத்து பாளையங்கோட்டை போகும் சாலையில் முதன் முதலில் பைக் ஓட்டப் பழகுகிறேன் என்று அண்ணனின் பைக்கை தெரியாமல் எடுத்து நண்பன் செய்யதுவுடன்
சந்தையை நோக்கி வண்டியை விரட்டியபொழுது எதிரே வந்த லாரியைக் கண்டு தடுமாறத் தொடங்கிவிட்டேன்.

உடனே ப்ரேக்கை பிடிப்பதற்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை கூட்ட வண்டி தாறுமாறாய் தடுமாறி ஒரு அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கோழிக் கூடைகளையெல்லாம் ( சினிமால காட்டுற மாதிரி ) தட்டிவிட்டுவிட்டு ஒரு சிறிய கூட்டத்திற்குள் நுழைந்து, ஒரு மரத்தில் சென்று மோத, நானும் எனது நண்பனும் தூக்கி எறியப்பட்டு சாலையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை உருண்டு சென்றோம்.

நல்லவேளை அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வரவில்லை. வந்திருந்தால் ரசிகவ் என்பவன் யாருக்கும் அறிமுகமில்லாமலையே இறந்து போயிருப்பான்.


பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த அனுபவம்

1996 ம் ஆண்டு ஒரு காலை நேரத்தில் கல்லூரிக்குச் செல்வதற்காக எனது ஊரிலிருந்து திருநெல்வேலி ஜங்ஷனுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபொழுது வழக்கமான கல்லூரி மாணவர்களின் சூத்திரமான ஓடுகின்ற பேருந்தில் இருந்து இறங்கும் விதியை செயல் படுத்தலாமென்று நினைத்த பொழுது கால் தவறி டயருக்கு அடியில் விழுந்து விட , விழுந்து விட்ட அதிர்ச்சியில் "ஆ" என்று உயிர் பயத்தில் கத்தினேன். பஸ்ஸ்டாண்டே திரும்பி பார்த்தது.

டிரைவர் சட்டென்று ஒரு பிரேக் பிடிக்கவும் நான் உடனே கால்களை வெளியே எடுக்கவும் சரியாக இருக்க மயிரிழையில் உயிர் தப்பினேன்.

கீழே விழுந்த சிராய்ப்பில் பேண்டெல்லாம் கிழிந்து கால்கள் கைகள் என்று காயம் ஏற்பட்டு இரத்தக் கறையாக இருக்க எந்த வண்டியில் இருந்து கீழே விழுந்தேனோ அதே வண்டியில் மறுபடியும் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்.

நல்லவேளை டிரைவர் மட்டும் சரியான நேரத்தில் ப்ரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் என்னால் "தூக்கம் விற்ற காசுகள்" கவிதை எழுத முடியாமல் போயிருக்குமேவண்ணாரப்பேட்டை வளைவுஇது கல்லூரிக் காலத்தில் நடந்த விபத்து. ஒருநாள் கல்லூரி முடிந்து திருநெல்வேலி சந்திப்பு வரை நண்பனை டிராப் செய்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது வண்ணாரப்பேட்டை அருகே என்னை முந்திக்கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பேருந்தும் வந்து கொண்டிருந்தது.

நான் எனது இளமையின் உசுப்பலில் எப்படியாவது அந்தப் பேருந்தை முந்திச் சென்று ஹீரோத்தனத்தைக் காட்டலாமென்று பைக்கை விரட்டினேன்.

முந்திச் செல்வதற்காக பக்கத்தில் நெருங்கி விட்டேன் திடீரென்று சாலையின் நடுவிலுள்ள சிறு குழியில் பைக்கின் டயர் பட்டு லேசாக தடுமாறி குடிகாரன் போல தள்ளாடிச் சென்றது.

நான் எதிரே வருகிற பேருந்தை நோக்கி மோதுவது போல போக அந்த டிரைவரோ என்னைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை எதிரே வருகின்ற பேருந்தை நோக்கி திருப்பிவிட்டார்.

இரண்டு பேருந்துக்கும் நடுவில் உள்ள சிறு இடைவெளி வழியாக நுழைந்து நான் வெளியே வர இந்த இரண்டு பேருந்துகளும் இடித்துக்கொண்டு நின்றுவிட்டது.

எனக்கோ வியர்த்துவிட்டது. பின்னால் "ஏய்..ஏய்..." என்று சத்தம் கேட்பதை கவனிக்காமல் பறந்து விட்டேன்.

அந்த இரண்டு பேருந்துகளும் என் மீது முத்தமிட்டிருந்தால் அவ்வளவுதான் நான் யாருக்குமே முத்தமிட முடியாமல் போயிருக்கும். [யாருக்குமே என்றால் எனது அண்ணன் மற்றும் தங்கையின் ஒன்றரை வயது குழந்தைகளைத்தானுங்க சொன்னேன். ]


வேனில் வந்த எமன்


நான் - ராம்ஜி மற்றும் கடலை வியாபாரம் அதிகமாக செய்யும் சுடலை மற்றும் சில தோழர்கள் மற்றும் தோழிகளுடன் திருநெல்வேலி ராணி அண்ணா பெண்கள் கல்லூரிக்கு கலை நிகழ்ச்சிகளுக்காக எங்கள் கல்லூரியிலிருந்து சென்றிருந்தோம்.

கலை நிகழ்ச்சிகளின் இடைவேளை ஒன்றில் கல்லூரியை விட்டு வெளியே வந்து கடலை வியாபாரத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தபொழுது சுடலை என்னைப் பார்த்து கிண்டலடிக்க பதிலுக்கு நானும் கிண்டலடித்து விளையாடிக் கொண்டே நான் சாலையின் நடுவே வந்து விட அப்போது பின்னால் பாய்ந்து வந்துகொண்டிருந்த வேனை கவனிக்கவில்லை.

திடீரென்று ராம்ஜி என்னை சாலையிலிருந்து ஓரத்திற்கு தள்ளிவிட்டுவிட கண்மூடித்திறப்பதற்குள் அந்த வேன் பயங்கரமாக ஹாரன் எழுப்பிக்கொண்டே வேகமாக எங்களை கடந்து சென்று விட்டது.

நான் அதிர்ச்சியில் அப்படியே கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து விட பின்னர் நண்பர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள்.

நல்லவேளை அந்த வேன் மட்டும் மோதியிருந்தால் நான் இப்பொழுது இந்த பதிவினை இப்பொழுது எழுதியிருக்க முடியாது


கடைசி விபத்துஎனக்கு ஞாபகம் தெரிந்த வரையிலும் கடைசி மற்றும் பயங்கரமான விபத்து இதுவாகத்தான் இருக்கக் கூடும்

என்ன நடந்ததென்று எனக்கே தெரியவில்லை. அது 1996 ம் ஆண்டு என் கல்லூரி நேரத்தில்தான் நடைபெற்றது.

அந்த வாகனம் வந்து மோதிய வேகத்தில் தாறுமாறாய் சிதைந்து போனேன். என்னால் எப்பொழுதும் செய்ய முடிகின்ற வழக்கமான செயல்கள் எல்லாம் ரொம்பவும் மாறிப்போய்விட்டது.

அந்த விபத்துக்குப் பிறகு என்னுடைய நடவடிக்கைகளின் மாற்றங்களை கண்டு நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த விபத்தின் பாதிப்புகள் எனக்குள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விபத்தில் எல்லோருக்கும் கைகள் பறிபோகும் - கால்கள் பறிபோகும். ஆனால் எனக்கு இதயமல்லவா பறிபோய்விட்டது.

நல்லவேளை அந்த விபத்து மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் இப்பொழுது கவிதைகள் எல்லாம் எழுதியிருக்க மாட்டேன்.


ம்..மோதிய அந்த பயங்கர வாகனத்தின் பெயர் : காதல்

- ரசிகவ் ஞானியார்

16 comments:

Chandravathanaa said...

ஒவ்வொரு விபத்தையும் தனித்தனியாகப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அருட்பெருங்கோ said...

நல்ல வேளை அந்தக் கடைசி விபத்து மட்டும் எனக்கு இன்னும் நடக்க வில்லை.. :-)

ஆனால் அந்த விபத்தில் சிக்கியவர்களுக்குதான் "கவிதை எழுதும்" நோய்ப் பிடிக்கிறதாமே.. உண்மையா நண்பா?

நிலவு நண்பன் said...

// Chandravathanaa said...
ஒவ்வொரு விபத்தையும் தனித்தனியாகப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். //ம் தனித்தனியா போட்டிருந்தா நல்லாதானிருக்கும்..ஆனா மற்றவங்களுக்கு பொறுமை வேணுமே படிக்கிறதுக்கு...

தங்களின் அக்கறைக்கு நன்றி

U.P.Tharsan said...

நிலவு நன்பன் தங்களைப்போல் நானும் பல விபத்திற்குள் மாட்டியிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உதைபந்தாட்டம் விளையாடி கைகளை உடைத்து கொண்டது.[அது எப்படி கால் பந்து விளையாடினால் கை உடையும் என்று யோசித்தால்.. நான் அதற்கு பொறுப்பல்ல. :-))]

எனக்கு நடந்த பழைய விபத்துக்களை மீண்டும் நினைத்துபார்த்து பயப்பிட வைத்த இந்த பதிவுக்கு ஒரு குட்டி நன்றி மட்டுமே சொல்லலாம். :-))

நிலவு நண்பன் said...

//அருட்பெருங்கோ said...
நல்ல வேளை அந்தக் கடைசி விபத்து மட்டும் எனக்கு இன்னும் நடக்க வில்லை.. :-)

ஆனால் அந்த விபத்தில் சிக்கியவர்களுக்குதான் "கவிதை எழுதும்" நோய்ப் பிடிக்கிறதாமே.. உண்மையா நண்பா? //அந்த விபத்து சீக்கிமே நடக்க வாழ்த்துக்கள்

ஆமா சாதாரண நோய் இல்லை..பயங்கரமான நோய்..

எய்ட்சும் என்னவளும்
ஒன்றுதான்
-எய்ட்ஸ்
கொஞ்சம்
கொஞ்சமாய் கொல்லும்
-என்னவள்
கொஞ்சி கொஞ்சியே கொல்லுவாள்

நிலவு நண்பன் said...

// U.P.Tharsan said...
நிலவு நன்பன் தங்களைப்போல் நானும் பல விபத்திற்குள் மாட்டியிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உதைபந்தாட்டம் விளையாடி கைகளை உடைத்து கொண்டது.[அது எப்படி கால் பந்து விளையாடினால் கை உடையும் என்று யோசித்தால்.. நான் அதற்கு பொறுப்பல்ல. :-))] /
நன்றி நண்பரே

ஒருவேளை கையை காலா நினைச்சிருப்பீங்களோ..?

Sam said...

"கொஞ்சி கொஞ்சியே கொல்லுவாள்"

இப்படி நடந்தால் மரண பயம் எதற்கு?
கவிதை அருமை.

அன்புடன்
சாம்

நிலவு நண்பன் said...

//Sam said...
"கொஞ்சி கொஞ்சியே கொல்லுவாள்"

இப்படி நடந்தால் மரண பயம் எதற்கு?
கவிதை அருமை.

அன்புடன்
சாம் //


ம் நன்றி சாம்..

ரொம்ப அனுபவமா சொல்றீங்க..? நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா..?

abiramam said...

Hello Nanba, At the outset, it was my pleasure to meet you in DXB last week. Due to some mess in my return flight, I couldn't able to call you.

This is really good and i am going back now to my college days in Madras. While I was doing my second year UG, one of my friend and myself borrowed one of my friend's Yamaha and I was driving. It happened just opposite to Royapettah hospital while I was trying to apply brakes to avoid a collision with another bike, the bike which I was riding skidded and myself and my friend both skidded all the way left and when I lift my head I could see only legs, legs and legs of ANNA ADARSH GIRLS. You could imagine that two guys waere lying in the road under beaneath the legs of 50 girls. Its one of my most unforgettable situations which I faced during my sweet college days.

மணியன் said...

சிலபேர் accidentprone என்று சொல்வார்கள், நீங்கள் அந்த வகையோ ? இனி சற்றே கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
கடைசி விபத்தின் பாதிப்பு கவிதை மட்டும்தானா?

துபாய்வாசி said...

யாருமே தனக்கு நடந்த மிகப்பெரிய விபத்தைத் தான் முதன் முதலாக சொல்லி பகிர்ந்து கொள்வார்கள். நீங்கள் 'கடைசியாக' சொல்லியிருப்பதைப்பார்த்தால், அது அவ்வளவு பெரிய விபத்தாக தெரியவில்லையே? ;)

ஒரே ஆளுக்கு இத்தனை மயிரிழையில் தப்பிய விபத்துக்களா? ஆச்சரியம் தான்! இனிமேலாவது கவனமாக இருங்கள்!

நிலவு நண்பன் said...

//abiramam said...


Hello Nanba, At the outset, it was my pleasure to meet you in DXB last week. Due to some mess in my return flight, I couldn't able to call you.

You could imagine that two guys waere lying in the road under beaneath the legs of 50 girls. Its one of my most unforgettable situations which I faced during my sweet college days. //

அட அப்படின்னா இது மறக்கமுடியாத அனுபவம்தாங்க..

இனிமே துபாய் வருவதற்கு முன் என்னை தனிமடல்ல தொடர்பு கொள்ளுங்க சந்திக்கலாம் நண்பரே..

நிலவு நண்பன் said...

// மணியன் said...
சிலபேர் accidentprone என்று சொல்வார்கள், நீங்கள் அந்த வகையோ ? இனி சற்றே கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
கடைசி விபத்தின் பாதிப்பு கவிதை மட்டும்தானா? //

தங்களின் அக்கறைக்கு நன்றி மணியன்..

இனிமேல் கவனமாக இருந்து கொள்கிறேன் .. ( விபத்திலும், காதலிலும்.. )

கடைசி விபத்தின் பாதிப்பு கவிதை மட்டுமல்ல நடக்கவிருக்கிற திருமணமும்தாங்க..:)

நிலவு நண்பன் said...

// துபாய்வாசி said...
யாருமே தனக்கு நடந்த மிகப்பெரிய விபத்தைத் தான் முதன் முதலாக சொல்லி பகிர்ந்து கொள்வார்கள். நீங்கள் 'கடைசியாக' சொல்லியிருப்பதைப்பார்த்தால், அது அவ்வளவு பெரிய விபத்தாக தெரியவில்லையே? ;)

ஒரே ஆளுக்கு இத்தனை மயிரிழையில் தப்பிய விபத்துக்களா? ஆச்சரியம் தான்! இனிமேலாவது கவனமாக இருங்கள்! //
எல்லா விபத்தில் இருந்தமு; நான் மீண்டது இந்த ஒரு விபத்தில்க்காகத்தான் என்று சிம்பாலிக்கா சொல்றதுக்கத்தான் கடைசியா எழுதினேன் அந்த காதல் விபத்தை

( யப்பா தப்பிச்சாச்சு)

நன்றி துபாய் வாசி தங்களின் அக்கறைக்கு..

Anonymous said...

அடடா.. இதைத்தான் அடிபட்ட
அனுபவம் என்பார்களா?
:-p

//-என்னவள்
கொஞ்சி கொஞ்சியே
கொல்லுவாள் //
சந்தோஷமாய்த்தான்
அடிபட்டிருக்கீங்க

//கடைசி விபத்தின்
பாதிப்பு கவிதை
மட்டுமல்ல
நடக்கவிருக்கிற
திருமணமும்தாங்க..//

வாழ்த்துக்கள் ஞானி!
:-)

நேசமுடன்..
-நித்தியா

நிலவு நண்பன் said...

நித்தியா said...
அடடா.. இதைத்தான் அடிபட்ட
அனுபவம் என்பார்களா?
:-p

அடிபட்டுப்பாருங்க தெரியும்..

// //-என்னவள்
கொஞ்சி கொஞ்சியே
கொல்லுவாள் //
சந்தோஷமாய்த்தான்
அடிபட்டிருக்கீங்க

வாழ்த்துக்கள் ஞானி!
:-) //

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் என்னைப் போல் எல்லோரும் அடிபட

நேசமுடன்..
-நித்தியா //

தேன் கூடு