Monday, November 28, 2005

என்ன..? துபாயில பூகம்பமா?







நேற்று மதியம் மூன்று மணி அளவில் நண்பனிடமிருந்து தொலைபேசி ஒலிக்கிறது.


டேய் ஞானி பூகம்பம் வந்துச்சான்டா..உன் பகுதியில் வந்துச்சா...

- பதறியபடி கேட்கிறான்

துபாயில பூகம்பமா..யாருடா சொன்னது..போடா எவனோ கிண்டல் பண்ணியிருக்கிறான்டா. - நான் அலட்சியமாய் கூறினேன்

இல்லைடா நம்ம ரசூல் 2 தடவை தொலைபேசி செய்திருந்தார். துபாயில் ஷேக் செய்யது சாலை கொஞ்சம் ஆடியதாக சொன்னார்டா..அப்படி ஏதும் தகவல் கிடைச்சா எனக்கு சொல்லுடா..நான் ரூம்லதான் இருக்கேன்..மறந்திறாதடா..உன் சான்றிதழ் எல்லாம் இங்கதான் இருக்கு..-
பதட்டத்தோடும் கிண்டலோடும் பேசிவிட்டு வைத்தான்

எனக்கு குழப்பமாகவே இருந்தது. அவன் சொல்றது உண்மையாக இருக்குமோ..?

உடனே இணையத்தில் கல்ஃப் நியுஸ் பத்திரிக்கையை படித்தேன். ஈரானில் பூகம்பம் என்றும் துபாயில் சில பகுதிகளும் ஆட்டம் கண்டது என்றும் கடைசிச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள். பின் தினமலர் நாளிதழில் பார்த்தால் ஈரானில் பூகம்பம் மூன்று பேர் பலி என்று கடைசி செய்தி வெளியிட்டு இருந்ததார்கள்.

பின்னர்தான் மனதில் ஓர் நிம்மதி..சரி அந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளான பூகம்பம் இல்லை..ஈரானில் லேசான ஆட்டம்தான்.. ஆகவே துபாயும் லேசாக ஆடியிருக்கிறது.
என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் வதந்தி வேகமாய்ப் பரவியது. துபாயில் கட்டிடம் இடிந்து விழுந்தது. பயங்கர பூகம்பம் என்று.

துபாயில் ஆட்டம் கண்டதாக கூறப்படுகின்ற பகுதியில் வசிக்கும் நபரிடம் இருந்து என்னுடன் வேலைபார்க்கும் நண்பருக்கு தொலைபேசி வருகிறது. ஷேக் செய்யது சாலையில் மக்கள் எல்லாம் பீதியடைந்து பதறிப்போய் சாலையில் வந்து நிற்கிறார்கள் என்று.


துபாயில் ஷேக் செய்யது சாலைப்பகுதி துபாய் விமான நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருப்பதால் அங்கு உயரமான கட்டிடங்களாக இருக்கும். உலகத்தின் மிகப்பெரிய கட்டிடம் கட்டும் பணி கூட தற்பொழுது அந்தப்பகுதியில் நடந்துகொண்டிருக்கிறது.


பூகம்பம் எல்லாம் அந்தப்பகுதியில் வந்தால் உண்மையில்
22 வது மாடி
35 வது மாடி என்று அவ்வளவு உயரத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு பயம் வராமல் இருக்குமா..?

துபாயின் சில பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அதில் உயரமான் கட்டிடம் இருக்கும் இந்த ஷேக் செய்யது சாலையும் ஒன்று.

ஆகவே அந்தப்பகுதி மக்கள் பதறிப்போய் வெளியே வந்து நின்றிருக்கிறார்கள்.

துபாய் மட்டுமல்ல அமீரகத்தின் மற்ற உறுப்பு நாடுகளான சார்ஜா - ராசல்கைமா - அல்அய்ன் போன்ற பகுதிகளில் நிலநடுக்கத்தை மக்கள் அதிகமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

ராஸல்கைமாவிலிருந்து சுமார்
120 கிலோமீட்டர் வடக்கே ஈரானில் கிஸ்யும் என்ற தீவு உள்ளது. அந்தப்பகுதிக்கு அடிக்கடி விசா மாற்றும் விசயமாக இந்தியர்கள் பெரும்பாலும் போவதுண்டு. ( நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் ). அந்தத் தீவினில் பதிவாகியுள்ள பூகம்ப அளவுகோல் சுமார்
5.9 ரிக்டர் முதல்
6.9 ரிக்டர் வரை
இருக்கலாம் என்று தகவல்கள் கூறப்படுகின்றது.

அந்தப்பாதிப்பின் வேகம்தான் இங்கு கட்டிடங்களுக்கு மதியம்
2.15 மணிக்கு ஆட்டம் கொடுத்திருக்கிறது. துபாய் ,சார்ஜா மற்றும் ராசல்கைமா பகுதியில் உள்ள கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் நீடித்திருக்கிறது. பெரும்பாலும் உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள் தங்களது அறையை காலி செய்துவிட்டு மற்ற பகுதிக்கு சென்று விட்டார்கள்.

அமெரிக்க பல்கலைகழகத்தில் பணிபுரியும் டாக்டர் அஸ்ம் அல் ஹமூதி ( பேராசிரியர்) கூறியிருப்பதாவது :

அரேபிய மற்றும் ஈரானிய பூமித்தகடுகளில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் மிகவும் பயமுறுத்துகின்றது. அமீரகப்பகுதிகள் பெரும் நிலநடுக்கத்தை சந்திக்க நேரிடலாம்.
விஞ்ஞானிகள் அதனை உணர முடியாமல் கூட போகலாம் ஆனால் அடுத்த நிலநடுக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடும். அது இன்னும் 100 வருடம் கழித்து கூட நேரிடலாம் ஆனால் நேரிட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.


இந்த தகவல்கள் ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதுவரை நான் கேள்விப்படவில்லை.

எனது அலுவலகத்திற்கு வந்த ஒரு பாகிஸ்தானி ஓட்டுனர் பதறியபடி வந்து..
நான் சார்ஜாவில் இருந்து வருகிறேன். அங்கே நான் அறையில் இருக்கும்போது யாரோ அறைக்கதவை பலமாய் தட்டுவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்று கூறிவிட்டு அந்த அனுபவத்தை யாருடனோ தொலைபேசியில் அழைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எதிர்தரப்பில் பேசுபவர் பதட்டப்படவேண்டும் என்றே நடந்த விசயத்தை கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். பின்னர்தான் உணர்ந்தேன் அவர் பாகிஸ்தானி என்பதால் சமீபத்தில் அங்கு நடைபெற்ற நிலநடுக்கம் அவரை பாதித்திருக்க கூடுமோ?
அப்பொழுது இந்தியாவில் இருந்து எனது அலுவலகத்தின் இன்னொரு நண்பருக்கும் தொலைபேசி வருகிறது.

இதர் ப்ராப்ளம் நகியே..அபி டிகே..டிகே என்று அக்கறையோடு நலம் விசாரித்த தனது குடும்பத்தினருக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். துபாயில் பயங்கர நிலநடுக்கம் என்று யாரோ அங்கே வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

மாலையில் அலுவலகம் முடிந்து அறைக்குத் திரும்புகிறேன். ஆங்காங்கே வதந்திகள் இங்கே நில நடுக்கம்-அங்கே நில நடுக்கம் என்று.

எனக்கு அப்பொழுது சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் நாடுதான் ஞாபகத்தினில் வந்தது. நில நடுக்க வதந்திக்கே நாம் இப்படி பீதியடைகிறோமே ஆனால் உண்மையிலேயே தாக்குதலுக்குட்பட்ட அவர்கள் எப்படி பீதியடைந்திருப்பார்கள்.?

நிலநடுக்கம் வந்ததை விடவும், வரப்போகிறதோ என்ற பீதிதான் மிகவும் கொடுமையானது என்று முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.

இரவு அறையில் நண்பன் சிராஜ் பதட்டத்தோடு கூறிக்கொண்டிருந்தான்.

டேய் இப்ப ராஸல்கைமாவிலிருந்து தொலைபேசி வந்தது.. ஒரு அரைமணிநேரத்திற்கு முந்தி கூட அங்கே நடுக்;கம் ஏற்பட்டிருக்காம்.. எங்க மாமா மாமி குழந்தைகள் எல்லோரும் வீட்டுல இருந்திருக்காங்கடா..

அவங்க வீடு ஒரு வில்லா மாதிரிதான்டா..பெரிய கட்டிடம் இல்லையே..அதனால பாதிப்பு இருக்காது என்று சமாதானப்படுத்தினேன்.

இல்லைடா..பக்கத்துல பெரிய பெரிய மரம் இருக்குது.. - கவலை தோய்ந்து கூறினான்.

அவன் ஏன் அவ்வாறு பயப்படுகிறான் என்றால் அவனுக்கு அவனுடைய மாமாவின் மகளைத்தான் நிச்சயம் செய்திருக்கிறார்கள். அந்தப்பெண்ணும் அவர்கள் மாமா வீட்டில் இருப்பதால் ரொம்ப பதட்டப்படுகின்றானோ எனத் தோன்றியது.

டேய் தெரியுன்டா நீ ஏன் இப்படி பயப்படுறேன்னு - என்று கிண்டலடிக்க

போடா அதெல்லாம் ஒண்ணுமில்ல..என்று வெட்கத்தோடு படுக்கையில் சாய்ந்தான்

ஆனால்
டேய் இரவுல தொலைபேசி வந்தா எழுப்பி விடுங்கடா,

நாம முதல் மாடியில் இருப்பதால் கட்டிடம் விழுந்தா அவ்வளவுதான் மேலுள்ள மூன்று மாடியும் நம்ம மேலதான்..
என்று புலம்பிக்கொண்டே இருந்தான்

அறையில் உள்ள நண்பன் நிஜாம் வேறு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்
ஞானி..லேசான நடுக்கம் வந்தால் அதனைத் தொடர்ந்து பெரிய நடுக்கம் வரும்னு சொல்றாங்களே உண்மையா

எதுவுமே நிச்சயமா சொல்ல முடியாது..போய்ச்சேரணும்னு விதி இருந்தா போகத்தான் வேணும்..ஏன் இப்படி பயப்படற.. என்று வழக்கமான தத்துவம் விட்டேன்.

இல்லை ஒரு தகவலுக்குக்காத்தான் கேட்டேன் என்று மழுப்பினான் கண்களில் தெரிந்த பயத்தை மறைத்துக்கொண்டு.

அவன் கேட்டது வேறு சிராஜை மேலும் பயமுறுத்தியது. சிராஜ் துபாயில் உள்ள கோல்ட் சூக் ( தங்க மார்க்கெட் ) என்னும் இடத்தில் பணிபுரிந்து வருகிறான்.

சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றுவதற்காக நான் அவனிடம்,

டேய்! சிராஜ் நாளைக்கு நிலநடுக்கம் வர்ற மாதிரி இருந்துச்சுன்னு வச்சுக்கோ..உடனே எனக்கு தொலைபேசி செய்..நான் உடனே ஒரு சாக்கு மூட்டையோட கோல்ட் சூக் வருகிறேன். நாம அங்குள்ள தங்கத்தையெல்லாம் அள்ளிக் கொண்டு வந்துவிடலாம் என்று கிண்டலடிக்க,

சிரிக்க ஆரம்பித்து விட்டான்

ஆமா செத்தபிறகு எதுக்குடா தங்கம் என்று சொல்லிக்கொண்டே புலம்பல்களுடனே தூங்கிப்போனான்.

இந்தியாவில் இருந்து நண்பர்களுக்கும் எனக்கும் நலம் விசாரித்த வண்ணம் தொலைபேசி வந்து கொண்டே இருந்தது.

டேய் உனக்கு தொலைபேசி வந்துச்சா

இல்லைடா

அப்படின்னா நாளைக்கே பேங்க்ல டிடி எடுத்து அனுப்பு ... என்ற நகைச்சுவை சம்பாஷணைகள் தொடர்ந்தது.

ஆனாலும் பயத்தில் அடிக்கடி ஜன்னலை திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தான் நண்பன் சிராஜ்.

[நன்றி :கல்ஃப் நியுஸ் மற்றும் கலீஜ் டைம்]
சீமா சித்திக் : ( டிப்பா பகுதி )

நாங்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது திடீரென்று அறை நடுங்க ஆரம்பித்தது. அது சுமார் ஒரு நிமிட நேரமாவது நீடித்திருக்கவேண்டும்.ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

அன்வர் சதாத் ( துபாய் நாஸர் ஸ்கொயர் )

நேற்று மதியம்
2.15 மணி அளவில் தொலைக்காட்சி பாரத்துக்கொண்டிருந்தபொழது தலை மாதிரியாக சுற்ற ஆரம்பித்தது அதனை தொடர்ந்து அறையில் லேசான நடுக்கம். தொலைக்காட்சி பெட்டி கீழே விழுந்து உடைந்து விட்டது. என்ன நடந்தது என்றே என்னால் உணர முடியவில்லை நான் மிகவும் பீதியடைந்துப் போனேன்.


பின்னர்தான் எனது ஃப்ளாட்டில் இருக்கும் அனைவரும் வேகமாக கீழே இறங்கி சென்றதை கண்டவுடன்தான் உணர்ந்தேன் இது நிலநடுக்கம் என்று

ஷெரிஃப் ( துபாய் மீடியா சிட்டி )

நான் துபாய் மீடியா சிட்டி அலுவலகத்தில் இருந்தபோது எனது அலுவலக கட்டிடம் லேசாக ஆடியதை உணர்ந்தேன். ஆனால் அது நிலநடுக்கமாய் இருக்கும் என்று உணரவில்லை. பிறகு பக்கத்து கட்டிடம் ஒன்றில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் எனது நண்பனிடமிருந்து தொலைபேசி வந்தவுடன்தான் உணர்ந்தேன் மக்கள் எல்லாம் பயத்தோடு வெளியேறிக்கொண்டிருப்பதை. பின்னர் நானும் பதட்டத்தோடு வெளியேறினேன்

ஷமீம் கரீம் ( சார்ஜா )

எங்களுடைய கட்டிடம் நிலநடுக்கத்தால் ஆட ஆரம்பித்தபொழுது நாங்கள் உடனே உயிர்தப்பிக்க வெளியே ஓடினோம். நாங்கள் மிகவும் பயந்து போனோம். எங்களால் இன்னமும் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தையே மறக்க முடியவில்லை. எங்களுக்கு பயமாக இருக்கிறது. இங்கு மட்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்

டாக்டர் அப்துல்லா ( சார்ஜா - அல் வஹ்தா வீதி )

நாங்கள் எல்லோரும் அறையை விட்டு கிழே இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
முதன் முதலாக இதனை உணர்வதால் எல்லோருடைய முகத்திலும் உயிர்ப்பயம் இருந்தது


மற்றொரு அமீரக உறுப்பு நாடான உம்- அல்- கொய்னில் மதியம்
2.30 மணி அளவில் அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் பதட்டத்தோடு வெளியே சாலையில் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்.

மக்கள் கூட்டம் சாலைக்கு வருவதை உணர்ந்து பாதுகாப்பு கருதியும் அவர்கள் பதட்டமடைந்து விடக்கூடாது என்றும் போலிஸார்கள் வரத்தொடங்கிவிட்டார்கள்.
அவர்கள் மக்களிடம் பதட்டமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நிலைமை பதினைந்து நிமிடத்தில் சரிசெய்யப்பட்டுவிட்டது

டிப்பா என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பக்கத்து மலைகளில்தான் குண்டு வைத்து பெயர்க்கிறார்கள் என்று நினைத்தார்களாம்.

ஆயிசா ஹஸன் : ( டிப்பா பகுதி )

நான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டிருந்தபொழுது முதலில் தொலைக்காட்சிப் பெட்டி லேசாக ஆடியது. நான் வெளியில் ஒரு பெரிய டிரக் ஒன்று கடந்து செல்கிறது போல என்று நினைத்தேன். னோல் வெளியில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபொழுதுதான் உணர்ந்தேன் அது நிலநடுக்கம் என்று

கமல் ( பர்துபாய் )

நான் ஒரு ஆப்டிகல் கடையில் பணிபுரிந்து வருகின்றேன். நிலநடுக்கம் வந்தபொழுது லேசாக என் தலை சுற்றியது. பின்னர் கடையில் உள்ள டேபிள் சேர் எல்லாம் நகர ஆரம்பித்ததைக் கண்டேன்

ஜெஸிலா ( துபாய் )

ஆளாளுக்கு திடீரென்று ஓடினார்கள் என்னவென்றுக்கூட சொல்லாமல். என்னப்பா என்ன ஆச்சு சொல்லிவிட்டு ஓடுங்கள். பாம்போ பல்லியோ என்றுதான் முதலில் நினைத்தேன், பின்புதான் ஒருவர் நின்று சொன்னார் பூகம்பம் நான் உணர்ந்தேன் என்றார். என்ன, சே! இல்லப்பா பக்கத்து கட்டிடத்தில் பைலிங் அல்லது டிரிலிங் போடுகிறார்களாக இருக்கும் என்று சொல்லி நகைத்தேன் வழக்கமான குறும்புடன். என் கணவருக்கு அழைத்து கேட்டேன் அப்படியா தெரியாதே என்றார்கள்.

நண்பர் ஆசிப்புக்கு அழைத்துக் கேட்டேன், சிரித்தார் உனக்கு வேலையே
இல்ல உங்க கட்டிடம் ஆடினால் ஊரே ஆடுதுனு சொல்லுவியே என்றார். என் அக்காவை அழைத்தேன் 'என்ன பூகம்பமா?' என்றாள் நக்கலாக.. எல்லாரும்
கிண்டலடித்தார்களே தவிர உணர்ந்ததாக தெரியவில்லை. அலுவலகத்தில்தான் நிறைய பேர் உணர்ந்தனர். என் நண்பர் ஒருவர் ஷார்ஜாவில் இருக்கிறார் அவர்களை
10.30 இரவில் வீட்டிலிருந்து வெளியேற கேட்டிருக்கிறார்கள். இரவு 12 வரை
பச்சக்குழந்தையுடன் முழித்திருந்துவிட்டு பின்பு வீட்டிற்குள்
போயிருக்கிறார்கள்.


மொத்தத்தில் பூகம்பம் ஒரு கலக்கல்.


சுசில் ( துபாய் )

இது மிகவும் எனக்கு புதிய அனுபவம். நான் என்னுடைய நண்பரோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென்று நான் அமர்ந்திருந்த நாற்காலி லேசாக நடுங்க ஆரம்பித்தது. எனது அலுவலகத்தின் பக்கத்தில் கட்டிட வேலைப்பாடுகள் நடப்பதால் அவற்றின் பாதிப்பு இது என நினைத்தேன்.

ஆனால் எனது அலுவலக கட்டிடமே இட வலமாய் நகர ஆரம்பித்ததும்தான் உணர்ந்து கொண்டேன் இது நில நடுக்கம் என்று. நான் தொலைபேசி செய்து கொண்டிருந்த எனது நண்பனிடம் கூறினேன். அவன் சிரிக்க ஆரம்பித்தான். பின்னர்தான் ஆங்காங்கே இருந்து வந்த செய்திகள் மூலமாய் தெரிந்து கொண்டேன் அமீரகம் நிலநடுக்கத்தில் ஆடியிருக்கிறது என்று.


ஆசிப் மீரான் (சார்ஜா )

நான் எதையும் உண்ரவில்லை
ஆனால் வீட்டில் உணர்ந்ததாக என் மனைவி சொன்னாள்
எந்தப் பகுதியிலும் பிரச்னை இல்லை


குணால் ( துபாய் )

நான் மதிய உணவு நேரத்தில்தான் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன். என்னுடயை மேலாளர் அவசரமாய் வந்து கூறினார் இது லேசான நிலநடுக்கம் என்று. நாங்கள் சரிக்க ஆரம்பித்தோம் அவர் கிண்டலடிக்கிறார் என்று நினைத்தோம்.
பின்னர் ஷேக் செய்யது சாலையில் வர்த்தக மையத்தில் பணிபுரியும் எனது சகோதரனுக்கு தொலைபேசி செய்தபோதுதான் புரிந்தது. அவனுடைய கட்டிடத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்டாஃப் ரூமில் உள்ள ஆண்கள் மட்டும்தான் இதனை உணர்ந்தோம் பெண்கள் உணரவில்லையாம்..

( பூக்கள் உணருமா பூகம்பம்)

சுனித் ( துபாய் )

நான் கட்டிலில் படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபொழுது என்னுடைய கட்டில் ஆட்டம் கண்டது. அது யாருடா ஆட்டுறது என்று கட்டிலில் கீழே குனிந்து பார்த்தேன். யாருமில்லை.பின்தான் உணர்ந்தேன் அது நில நடுக்கம் என்று.

சுல்தான் (துபாய் )

நான் டிராவல் அலுவலகத்தில் பணி புரிகின்றேன். ஒரு பயணியிடம் டிக்கெட் கொடுத்து விட்டு அவரின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துவதற்காக கைளை நீட்டி குலக்கினேன். திடீரென்று நானே குலங்குவதாக உணர அவரிடம் ஏன் என்னை தள்ளுகிறீர்கள் என்று கேட்க அவரும் அதே கேள்வியை என்னிடம் கேட்க பின்தான் புரிந்தது குலங்கியது பூமி என்று.

பலர் இன்னமும் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படியா..பூகம்பமா..துபாயிலா..நான் உணரவில்லையே என்று.

சிலர் லேசாக உணர்ந்ததை பெரிதுபடுத்தி காட்டவேண்டும் என்பதற்காக வதந்திகளையும் பரப்பிகொண்டிருக்கிறார்கள்..

சிலர் நடுக்கம் தந்த அதிர்ச்சியில் வாந்தி வருகின்ற மாதிரியம் உணர்ந்திருக்கிறார்கள்.

அடுக்கு மாடியில் தங்கியிருப்பவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பூகம்ப பாதிப்புகளிலிருந்து மீளாமல் இருப்பதால் மிகுந்த பதட்டத்துடனே இருக்கிறார்கள்.

ஆனால் அடுக்கு மாடிகளாய் கட்டிக்கொண்டிருக்கும் பலருக்கு இந்த பூகம்பம் அவர்கள் உடல் ரீதியான நடுக்கத்தை விடவும் மனதில் பெரும் நடுக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

பூகம்பம் வருவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் வருவதை உணர்ந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு என்ன பிரச்சனையென்றால் கட்டிடங்களிலிருந்து தப்பிப்பதற்காக வெளியே வந்து நின்றாலும் இன்னொரு கட்டிடத்தின் கீழ்தான் நிற்க வேண்டியது வரும் அந்த அளவிற்கு நெருக்கமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இங்கு வந்தால் அதன் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும். இறைவனிடம் பிராத்திர்ப்பதை தவிர வேறு வழியில்லை.

குஜராத் பூகம்பத்திற்காக நான் எழுதிய கவிதை வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது.

ஏய் பூகம்பமே
இனிமேல் நீ
பூ கம்பத்தைக் கூட
அசைக்கக்கூடாது.


இதயம் பிரார்த்தனையுடன்,

- ரசிகவ் ஞானியார்

Sunday, November 27, 2005

2. என்னைக் கவர்ந்தவர்கள்




மரக்கடை மாரி

அந்த மரக்கடை மாரி. எனக்கு விவரம் தெரியாத வயசில் அவன்தான் என்னுடைய உயிர் சிநேகிதன்.

எங்கள் தெருவிற்கு பக்கத்தில் அவன் ஒரு சிறிய விறகுக்கடை வைத்து பிழைத்து வந்தான்;. நான் பள்ளி போகும் போதும் சரி பள்ளி விட்டு வரும்போதும் சரி எப்போதும் அவன் கடையில்தான் விளையாடுவேன்.

வெளியில் எங்கேயாவது செல்ல விரும்பினால் அவன் என்னை கடையில் வைத்து விட்டுத்தான் செல்லுவான். ஆனால் நேரத்திற்கு வடை, பஜ்ஜி, தேநீர் என்று பக்கத்து உணவகத்திலிருந்து எனக்கு வரச்செய்துவிடுவான்.

நான் வாடிக்கையாளர்கள் வந்தால் அவன் வெளியே போயிருக்கிறான் என்று சொல்லுவதுதான் என் வேலை அப்போது. மிகவும் தெரிந்தவர் வந்தால் மட்டும் அவர்கள் கேட்கும் விறகை ஒவ்வொரு கட்டையாக தராசு தட்டில் வைத்து எடை போட்டு கொடுத்து

நீங்க எவவ்வளவு கொடுப்பீங்க என்று அவர்களிடமே கேட்டு காசு வாங்கி கல்லாவில் போட்டுக் கொள்வேன்.

அவனுக்கு தெரிந்து சிலமுறை...
தெரியாமல் பல முறை ...
அவன்
கல்லாபெட்டிக் காசுகள்
என் உணவுக்குழாயுக்குள்
தஞ்சம் புகுந்திருக்கிறது

நான் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு அவன் கடைக்குத்தான் செல்வேன் பத்து காசு இல்லையென்றால் நாலணா எனக்காக கடையினுள் உள்ள ஒரு சுவற்றின் பக்கவாட்டில் வைத்திருப்பான்.

நான் அதனை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வேன் சிலநேரம் நான் போகும்போது அவன் இல்லாவிட்டால் கூட நான் ஏமாந்து திரும்பிச் சென்று விடுவேனோ என்று எனக்காக மறக்காமல் காசு வைத்துச் செல்வான் .

பக்கத்து வீட்டு குழந்தைகள் எல்லாம் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவதைக் கண்டு எனக்கும் வேண்டும் என்று வீட்டில் கேட்பேன் வீட்டில் தரவில்லையென்றால் நேராக அவன் கடைக்குத்தான் ஓடுவேன். அவன் எனக்கு வாங்கித்தருவான்.

அவனுடைய வருமானத்திற்கு அதுவெல்லாம் மிகப்பெரிய விசயம் என்று எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

ஒருநாள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு வழக்கமாக அவன் கடைக்குச் செல்ல அவன் எனக்கு ஐம்பது பைசாவோ அல்லது அதற்கு அதிகமாகவோ கொடுத்துவிட்டு எப்போதும் இல்லாமல் கண்ணீரோடு முத்தம் கொடுத்தான்.

அந்த வயதில் எங்கே அந்த செண்டிமென்டெல்லாம் புரியப்போகிறது. நானும் அதிகமாய் காசு கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோசத்தில் செல்ல கடைக்கு வெளியே வரை வந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தான நான் புள்ளியாய் மறையும் வரை. நான் திரும்பி டாட்டா காட்டிக்கொண்டே சென்றேன்.

மாலை பள்ளி விட்டு வந்து கொண்டிருக்கிறேன். அந்த மாரியின் கடைக்கு முன்னால் கூட்டமாக நிற்கிறது. என்னால் அந்த கூட்டத்தில் வேடிக்கை கூட பார்க்க முடியவில்லை. சின்னப்பையன் என்னை யாருமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஒரு பெரிசு வேறு கத்தியது..

ஏல அங்கிட்டு போல..நீ வேற தொணதொணன்னு வந்துகிட்டு..சின்னப்பையன் எல்லாம் இங்க வரக்கூடாது..போ..போ என்று

எட்டி எட்டி பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து அவன் கடைக்கு வந்தால் அவன் கடை பூட்டியிருக்கிறது. கூட்டம் கலைக்கப்பட்டு விட்டது. ஆங்காங்கே மனிதர்கள் இரண்டு பேர், மூன்று பேராய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னர்தான் விசயம் தெரிந்தது. அந்த மாரி கடன் தொல்லையால் கடைக்குள்ளேயே தீக்குளித்து கொண்ட செய்தி. நான் திகைத்துப் போய்விட்டேன். எனக்கு கண்ணீர் வருகிறது.

மாரி இறந்து போன பாதிப்பில் கண்ணீர் வந்ததா? இல்லை இனிமேல் காசு கொடுப்பதற்கு யாரும் இல்லையே ? என்ற வருத்தத்தில் கண்ணீர் வந்ததா தெரியவில்லை. ஆனால் அழுதேன் அந்தக் கடையைப் பார்த்துக்கொண்டே..

பின் பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் அந்த மரக்கதவுகளுக்கு இடையே கன்னம் வைத்து எனக்குண்டான காசு இருக்கிறதா என்று எப்போதும் பார்த்துக்கொண்டே செல்வேன்.

இந்த விசயம் என் வீட்டிற்கு தெரிந்தது. யாரோ சமூக சேவகர் ஒருவர் எனது வீட்டில் கோள் மூட்டியிருக்கின்றார்.

உங்க பையன் அந்த மாரியோட கடையையே பார்த்துட்டு நிற்கிறான் என்று

எனது வீட்டில் அந்தக் கடைப்பக்கம் போகக்கூடாது பேய் இருக்கிறது என்று பயமுறுத்தினார்கள். கொஞ்ச நாள் கழித்து அந்த கடை இருந்த இடத்தை அழித்து ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டிவிட்டார்கள்.

ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தொண்டையில் சிக்குண்ட முள்ளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது இதுவரை..

தினமும் காசு கேட்டு விதவிதமான திண்பண்டங்கள் வாங்கி கேட்டு அவனை தொந்தரவு படுத்தியிருக்கிறேன். அவன் கடன் தொந்தரவால் மாட்டியதுக்கு கூட நானும் ஒருவகையில் காரணமோ என்று..?

இதயம் சோகமுடன்

- ரசிகவ் ஞானியார்

Saturday, November 26, 2005

நிஜங்கள் சுடும்

( மெயிலில் வந்தது )


பணம் மட்டுமே வாழ்க்கையில்லை

மாஸ்டர் கார்டும் விசா கார்டும் இருக்கிறதே


விலங்குகள் மீது அதிகமாக அன்பு செலுத்த வேண்டும்

ம் ரொம்ப டேஸ்டா இருக்கும்பா

ஒவ்வொரு வெற்றிபெற்ற ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு

ஒவ்வொரு தோல்வியுற்ற ஆணுக்குப் பின்னாலும் இரண்டு பெண்களா?

ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக திருமணம் செய்யவேண்டும்

ஏனென்றால் சந்தோசம் மட்டுமே வாழ்க்கையில்லையே..



புத்திசாலிகள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்


திருமணம் செய்துகொண்டால் அவர்கள் புத்திசாலிக்கு எதிர்ப்பதம் ஆகிவிடுவார்களோ?


ஒவ்வொருவரின் கனவில்தான் அவர்கள் எதிர்காலமே இருக்கிறது

ம் தூங்கப்போங்க தூங்கப்போங்க

- ரசிகவ் ஞானியார்

எங்கே எனது அரிசி?




இறைவன்
ஒவ்வொரு அரிசியிலும்
ஒவ்வொருவரின்
பெயர் செதுக்கி
வைத்திருக்கிறானாமே..?

யாரிடமிருக்கிறது...
எனது அரிசி ?

- ரசிகவ் ஞானியார்

என்னைக்கவர்ந்தவர்கள்



1. பேராசிரியர் ராமய்யா



என்னை கவிதை உலகத்திற்குள் கைபிடித்து அழைத்து வந்தவர் இவர்தான்.
ரசிக்க முடியாமல் போயிருக்க வேண்டியவனை ரசிகவ் ஆக்கிய பெருமை இவருக்குச் சாரும்.

கல்லூரியில் முதல் ஆறு மாதங்கள் எனக்கு கவிதை எழுதத்தெரியும் என்று யாருக்குமே தெரியாது. விளையாட்டுத்தனமாக நோட்டுப்புத்தகத்தின் கடைசி பக்கத்தில் கவிதை எழுதி வைத்திருப்பேன்.

இரட்டிப்பாய் கிடைக்குமென்ற
நம்பிக்கையில்தான்
என்
இதயப்பணத்தை
உன்னிடம் ஒப்படைத்தேன்
இறுதியில் ஓடிவிட்டாயடி
எங்களுர் பைனான்ஸ்காரனைப்போல



காத்திருக்கச் சொன்னால் போதும்
மண்ணில் மட்டுமல்ல
மக்கிப்போனாலும்..
மண்ணிற்குள்ளேயும் காத்திருப்பேன்!
ஆனால்
காத்திருக்கவே சொல்லாமல்
கண்ணசைவினிலே
காவியம் நடத்துகிறாயடி



என்று சில உளறல்களை கவிதை என்ற பெயரில் எழுதிவைத்திருப்பேன். ஒருநாள் மதார் என்ற என்னுடைய சீனியர் மாணவர் ஒருவர் நான் வருகின்ற பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அவர்தான் கல்லூரியின் பிரபலமான கவிஞர் அப்பொழுது.

நான் முதலாண்டு என்பதால் அப்பாவியாக கடைசியில் அமர்ந்திருப்பேன். பேருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்குள் வரும்போது லேசாக மழை தூறல் விட்டது. அந்த உற்சாகத்தில் மாணவர்கள் எல்லோரும் ஓ என்று கத்த ஆரம்பிக்க
எனக்குள்ளும் குஷி கிளம்பி பேருந்தின் கண்ணாடி ஒன்றினை ஓங்கி ஒரு குத்து விட அது உடைந்து விட்டது.

மறுநாள் பேருந்தில் அவர் பக்கத்தில் அமர்ந்தபொழுது என்னைப்பார்த்து பன்னகைத்து விட்டு என்னுடைய நோட்டை வாங்கி கடைசி பக்கத்தை பார்த்துவிட்டு

நீ கவிதையெல்லாம் எழுதுவியா .. கவிதை சூப்பரா இருக்குப்பா..ஆமா நேத்து ஏன் அந்த கண்ணாடிய உடைச்சே..நான் நம்பவேயில்லை ..

கவிதையெல்லாம் எழுதுற நீ ..இந்த திறமையை வளர்த்துக்கப்பா.. என்று சொல்லிவிட்டு

லஞ்ச் டைம்ல என் க்ளாஸ் ரூமில் வந்து என்னை பாரு என்று சொன்னார்.

மதியம் அந்த சீனியர் மாணவர் என்னை தமிழ் ஆசிரியர் இராமய்யாவிடம் அழைத்துச்சென்றார்.

இராமய்யா சாரும் அந்த உப்பு சப்பில்லாத கவிதைக்கு என்னை அதிகமாய் பாராட்டினார். எனக்கு தெரிந்தது என்னை கவிதை எழுத உற்சாகப்படுத்தவேண்டும் என்றுதான் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று.

சரிப்பா அடுத்த வாரம் கவிதைப்போட்டி நீயும் எழுதணும் என்று சொன்னார்

கவிதைத்தலைப்பு ஞாபகத்தில் இல்லை. ஏழ்மையை மையமாக வைத்த கவிதை. சேவியர் கல்லூரியில் வைத்து போட்டி நடைபெறுகிறது.
முதன் முறையாய் மேடை ஏறுகின்றேன்

ஆள் பாதி
ஆடை பாதி
இது பழமொழி

நாய் பாதி
நாங்கள் மீதி
இது ஏழை விதி


என்றெல்லாம் வரிகள் வரும் ஆனால் கவிதை ஞாபகத்திலில்லை. ஆனால் ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. நொந்து போனேன்.

அவர்தான் அழைத்து அந்தக் கவிதையைப் பாராட்டிப் பேசினார். ஏதோதோ கூறினார் பாரதியார் கவிதை கூட ஒரு போட்டியில் தோற்றுப் போயிருக்கிறது என்று எங்கிருந்தோ உதாரணம் எடுத்துக் கொடுத்தார். (உண்மையா ? பொய்யா ? எனத் தெரியவில்லை)

கல்லூரியின் ஆண்டுவிழாமலருக்கான போட்டி கவிதை ஒன்று நடைபெற்றது. நானும் எழுதினேன். என்ன ஆச்சர்யம் ..? என் கவிதை முதற்பரிசு பெற்றது.

அந்த சீனியர் மாணவரின் கவிதை கூட இரண்டாம் பரிசுதான் . ஆனால் எனக்குத் தெரியும் என் கவிதையை முதற்பரிசுக்கு தகுதி பெறச் செய்தது இராமய்யா சார்தான் என்று

பார்த்தியா நீதான் முதற் பரிசு என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். இப்படியாக என்னுடைய கவிதைத் திறமையை வளர்த்தார்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இதழில் என்னை கவிதை எழுதத் தூண்டினார். எதிர்பாராத விதமாக வைரமுத்துவிடம் இருந்து பாராட்டுக் கிடைத்தது அந்தக் கவிதைக்கு. இதுதான் அந்தக் கவிதை


நெருங்கிப் பழகிய நண்பர்களெல்லாம்..
நேற்றைய கலவரத்தில்
பொட்டு வைத்ததால்
வெட்டப்பட்டும்...
குல்லா அணிந்ததால்
கொல்லப்பட்டும்...
சிலுவை அணிந்ததால்
கொளுத்தப்பட்டும்...
மதப்பேய்களால்
மரித்துப்போனார்கள்!


பொட்டிலும்...
குல்லாவிலும்...
சிலுவையிலும்தான்
மனிதஉள்ளம் ஊமையாகி...
மனிதநேயம் ஊனமாகி...


வைரமுத்து பாராட்டி எழுதிய அந்தகவிதை பிரசுரமாகியுள்ள இதழை எடுத்துக்கொண்ட அவரிடம்தான் காண்பித்தேன். அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் எனக்கு முன்னால் அவர் உற்சாகப்பட்டதாக காட்டிக்கொள்ளவேண்டும் என்று மிகுந்த சந்தோசத்தில் என்னை பாராட்டி பின்னர் என்னை ஊக்கப்படுத்த வேண்டும் என்று என்னை எல்லா வகுப்புகளுக்கும் அழைத்துச்சென்று ஞானியாரின் கவிதையை வைரமுத்து பராட்டியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.

நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். இன்னொருத்தரின் திறமையை பாராட்டுவதே பெரிய விசயம் அதிலும் மிகுந்த அக்கறை எடுத்து என்னை எல்லா வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்திய அவரின் சுயநலமற்ற தன்மையையின் மீது மிகுந்த மதிப்பு வந்தது.

இப்படியாக கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் மற்ற கல்லூரிக்களுக்கிடையே நடந்த போட்டிகளிலும் என்னை கவிதை எழுதத்தூண்டி என் கவித்திறமையை வளர்த்தார்

நன் எனது நண்பருடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிடுவதற்கு கூட அவர்தான் முழுமுயற்சி எடுத்தார் கவிதைப்புத்தகம் வெளியிடுவதற்காக எனது வீட்டிலிருந்து முழுமையான பணம் பெற முடியவில்லை.

25 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பணத்தை புரட்டுவது என்பது எங்களால் முடியாத விசயம். வீட்டிலிருந்தும் உதவிக்கரம் நீளவில்லை

அவர்தான் அவரிடம் படித்த நல்ல பொருளாதார வசதியுள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் என்று எல்லோரிடமும் நிதியுதவி பெற்று எங்களுக்கு புத்தகம் வெளியிட உதவி புரிந்தார்.

புத்தகம் வெளியிடு விழாவிற்கு பார்க்க வேண்டுமே அவரை..ஏதோ அவரே புத்தகம் வெளியிடுவது போன்ற உற்சாகத்தில் மிதந்தார். அவரை என்னால் மறக்கவே முடியாது. நான் துபாய் வரும்வரையிலும் நான் எங்கிருந்தாலும் சரி ஒவ்வொரு வருடம் ரம்ஜான் பண்டிகை நாளிலும் அவர் வீட்டுக்கு பிரியாணி எடுத்துச் செல்வேன்.

மீண்டும் சொல்கிறேன் ரசிக்க முடியாமல் போயிருக்க வேண்டியவனை ரசிகவ் ஆக்கிய பெருமை இவருக்குச் சாரும்.




-ரசிகவ் ஞானியார்

Thursday, November 24, 2005

கார்கிலா? காதலா?




அவள்
இதய எல்லையை தாண்டி
செல்ல முயன்றபொழுது...
கண்களால் விரட்டியடித்தாள்!
பெண்ணே! நான்
பாகிஸ்தானியனும் அல்ல
உன் இதயம் கார்கிலும் அல்ல
இது காதலடி..!



-ரசிகவ் ஞானியார்

Wednesday, November 23, 2005

நான் எப்படியடி மறப்பேன்?





எதிர்வரும் பெண்களில்
எவளாவது
உன்னை ஞாபகப்படுத்தினால்
மறந்திட முயற்சிக்கலாம்!
ஆனால்
எதிர்வரும்
பெண்கள் எல்லாருமே...
உன்னையே ஞாபகப்படுத்தினால்
நான் எப்படியடி மறப்பேன்?




சரி வீட்டிலாவது
அடைந்து கிடக்கலாம்
என நினைத்தால்...
எதிர்வீட்டு ஜன்னல் வேறு
எப்பொழுதாவது
திறந்து திறந்து மூடுகிறது!
நான் எப்படியடி மறப்பேன்?



உன்
வெற்று நேசத்தை மறந்து
வேறு தேசத்திற்குப் போக நினைத்தால் ...
அங்கும் உன்னைப்போல ஒருத்தி
ஏமாற்றி விட்டால் ...
தற்கொலை செய்துகொள்வேனோ? என்று
தன்மானம் தடுக்கிறது!


உன்னை விட்டுவிட்டு
எந்த ஊருக்காவது
பணயப்பட நினைத்தால்...
எல்லா ஊருக்கும்
நிலவு வருகிறதாமே.?
நான் எப்படியடி மறப்பேன்?

மறந்து விட நினைத்த
மறுகணமே
உடலில் உள்ள
ஒவ்வொரு உறுப்பும்..
ஒத்துழையாமை இயக்கம் செய்கிறதே?
நான் எப்படியடி மறப்பேன்?


சரி!
படிப்பிலாவது கவனம் செலுத்தலாம்
என நினைத்தால்...
தமிழ் பாடத்தில் வேறு
"தலைவன் தலைவியோடு ஓடிப்போனான்"
என்று
வயிற்றெரிச்சல் கிளப்புகிறார்கள்
நான் எப்படியடி மறப்பேன்?

ஆகவே உன்னை
மறக்க முடியவில்லையடி
நினைத்துக்கொண்டே இருக்கப்போகிறேன்


அவள் ஞாபகத்தோடு ,

ரசிகவ் ஞானியார்

Tuesday, November 22, 2005

காதல் மரிக்குமோ?



கடந்து செல்லும் குமரியின் நடையில்
கவிதைகள் வந்து வெடிக்குமடி! - கொடியாய்
படர்ந்து சுற்றும் பார்வை என்தன்
பருவத்தில் வந்து கடிக்குமடி! - உன்னைத்
தொடர்ந்து பின்னால் வருகின்ற என்னை
தொடரும் நிழலும் இடிக்குமடி! - பெரும்
இடர் வந்தாலும் நின்று காப்பேன்
இதயம் வீரத்தில் துடிக்குமடி!

முறைத்துச் சென்றால் பெண்ணே நான்
முட்டாள் ஆகிப் போனேனடி! - மண்ணில்
இரைத்து வீணாய் சிந்திய தண்ணீர்
இலைக்கோ கிளைக்கோ லாபமோடி? - அன்பை
கரைத்து செய்த காதல் இருக்கு
கண்கள் கண்டால் ஏங்குமடி!- தினமும்
சிரைத்து மகிழ்ந்த தாடி உன்தன்
சிந்தனை கொண்டே தேங்குதடி!


வெட்கம் கண்டு வெறுந்தரை படுத்து
விட்டம் பார்த்து உளருகிறேன்! - தீ
பக்கம் வந்து குசலம் கேட்கும்
பிரிந்து சென்றால் பதறுகிறேன் - என்
தூக்கம் எல்லாம் துரத்தி சென்றாய்!
திசுக்கள் ஒன்றாய் மோதுதடி! - உனக்கு
துக்கம் வந்தால் எனக்குள் ஏந்தி
துயரை துடைக்குமென் காதலடி!


சிரித்து மகிழும் அழகு சிரிப்பில்
சிறைபட்டது என் இதயம்! - கண்கள்
எரித்து வீசும் அவளின் பார்வை
எனக்குள் விடிந்தது உதயம்! - மணல்
அரித்து செல்லும் வெள்ளம் போல
அவளின் ஞாபகம் பதியும்! - காதல்
மரித்து போனால் என் செய்வேனோ?
மானிட வாழ்வே புதையும்!


-ரசிகவ் ஞானியார்

ஒரு நண்பனின் திருமணம்





இன்று என்னோடு வீதியில் விளையாடிய பால்ய சிநேகிதன் ஒருவனுக்கு திருமண நாள். நேற்று தொலைபேசி செய்திருந்தான்.

தொலைபேசியில் பேசும் போதே தெரிந்தது அவனுடைய வருத்தம். அவன் என்மீது மிகவும் பிரியமாக இருப்பான் நான் எப்போதும் கிண்டலடித்துக்கொண்டே இருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும்

டேய் ஞானி நாளைக்கு எனக்கு கல்யாணம்டா..நீ இல்லாதது எல்லாம் ஒரு பெரிய குறைடா..

அதான் நம் குலாம் இருக்கான்ல..அவன் பார்த்துக்குவான்டா..என்று இன்னொரு நண்பனை சொல்லி சமாதானப்படுத்தினேன்

நல்லபடியா நடக்கனும்னு துவா செய்யுடா..நம்ம இப்ப என் கல்யாணத்துல நம்ம ஃபிரண்ட்ஸ் யாருமே இல்லடா..ஆளாளுக்கு பறந்து போயிட்டாங்க

என்னடா செய்ய? கண்டிப்பா நான் துவா செய்யுறேன்.சரியா..


தொலைபேசியில் அவனோடு பேசிவிட்டு காலத்தில் நினைவுகளோடு தொலைந்து போனேன்.


அந்த நண்பன் பெயர் அலி உசேன். நாங்கள் எல்லாம் டவுசர் போட்ட காலத்திலிருந்து பழகிக்கொண்டிருக்கும் வீதி நண்பர்கள்


நோன்பு சமயத்து மாலை நேரத்தில் அலி உசேனின் பண்ணை வீட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றை நோக்கி ஒரு மாட்டு வண்டி சென்று கொhண்டிருக்கிறது வீதிச் சிறுவர்களை ரொப்பிக்கொண்டு.

தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை என்ற ஒரு இடத்தில் மிகவும் ஆழமான நீரோட்டம் உள்ள பகுதியை யானைககிடங்கு என்று நாங்கள் செல்லமாக அழைப்போம்

எப்படி அந்தப் பெயர் வந்தது என்றால் அந்த ஆழமான பகுதியில் இரண்டு யானைகள் சிறிதான இடைவெளியில் அருகருகே நிற்க வைத்து அவற்றிற்கிடையே நீரோட்டத்தை பாய்ச்சினால் எப்படியிருக்கும் அதுபோல இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையே நீர் ஓடிப்கொண்டிருக்கும். மிகவும் ஆழமான நீர் சுழலும் பகுதி அது.

அதில் இந்தக்கரையிலிருந்து அந்தக்கரைக்கு பாய்ந்து சென்று மீண்டும் மூச்சிறைக்காமல் திரும்பிவருபவன்தான் வீரன். எனக்கு ஞாபகம் இருந்தவரையிலும் அலி உசேன்தான் முதன் முதலில் அந்த இடங்களுக்குள் நீச்சல் பழகி காண்பித்தவன்

பின் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பி வரும்வழியில் கோழி நாய் என்று விரட்டி விரட்டி அடித்துக்கொண்டே வருவோம் எப்போதும் அவன் குறி தப்பவே செய்யாது.

எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அவன் திறமையாக விளையாடுவான்.

எங்களின் பதின்ம வயதில் அவன் வீட்டு மொட்டை மாடியில் வைத்து உலகத்தையே விவாதிப்போம். ஏதோ காங்கிரஸ் மாநாடு நடப்பது போன்று சுற்றி அமரந்துகொண்டு எங்களை விட வயது குறைந்த சிறுவர்களிடம் காசு கொடுத்து முறுக்கு, அப்பளம், சுண்டல் , சீடை என்று நொறுக்குத்தீனிகளை வாங்கி வரச்சொல்லுவோம். பண்டிகை சமயங்களில் அவ்வாறு விவாதிக்கும்போது காசு கையில் அதிகமாக புரளுவதால் ரொட்டி சிக்கன் என்று களைகட்டும்.

ஓர்நாள் ராணி பத்திரிக்கையில் ரஸகுல்லா போன்று ஒரு இனிப்பு வகை செய்வது எப்படி என்று சமையல் குறிப்பு கொடுத்திருந்தார்கள். நாங்களும் ஆசைப்பட்டு

டேய் ஞானி நீ போய் உங்க வீட்டுல ஒரு பாத்திரம் கொண்டு வா - நானும் செய்யதுவும் ரவை வாங்கிட்டு வர்றோம்..பாலுக்கு பிரச்சனையில்லை எங்க பண்ணையிலிருந்து எங்க வீட்டுக்கு வர்ற ஒரு சொம்பு பாலை நான் எடுத்துட்டு வர்றேன்

சமையல் பக்கத்தில் உள்ள ஒரு முட்புதருக்குள் ஆரம்பித்தது. அங்குள்ள சுள்ளிகளை பொறுக்கி அடுப்பு மாதிரியான ஒரு அமைப்பினுள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு மூட்டினோம்.

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கைiயை போட்டு பின் கொதி வரும்;போது ரவையை கொஞ்சம் கொஞ்சமாக தட்டி கிளறிக்கொண்டிருந்தோம்

அரைமணி நேரமாவது கிண்டியிருப்போம் . நெருப்பு அணைந்துவிட்டது. சரி இதற்கு மேலும் கிண்ட முடியாது தாமதமாகிவிடும் என்று நினைத்து அதனை உடனே சாப்பிடும் ஆவலில் பாத்திரத்தில் இருந்து அந்த திடப்பொருளை எடுக்க முற்பட்டால் அந்தோ பரிதாபம்..பாத்திரத்தின் அந்த திடப்பொருளுக்குள் கரண்டி மாட்டிக்கொண்டது.

கரண்டியை ஒருவழியாக எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

டேய் கரண்டி வளைஞ்சிருச்சிடா..எப்படியாடா வீட்டுக்கு கொண்டு போக..?

தெரியாமத்தானே எடுத்திட்ட வந்த விடுடா..தூரப்போட்டிறலாம்

கடைசியில் அதனை செய்துவிட்டோம் என்பதற்காக அந்த திடப்பொருளை உண்டு எல்லோருக்கும் வயிற்றுவலி வந்து கஷ்டப்பட்டோம்.

ஒருநாள் வாய்காலுக்கு குளிக்கச்செல்லும்போது தன்னுடைய சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு ஒரு வரப்பில் தலையை மட்டும் நீட்டி சைக்கிளை கவனித்துக்கொண்டே இயற்கை கடனை கழித்துக்கொண்டிருந்தார் ஒருவர்

நாங்கள் அவரின் சைக்கிளை தள்ளிவிட அவரால் அந்த சூழ்நிலையில் எழுந்தும் வரமுடியாது. அங்கிருந்தபடியே கத்திக்கொண்டிருப்பார். நாங்கள் ரசித்துக்கொண்டே சிரித்துக்கொண்டே சென்று கொண்டிருப்போம்

பெருநாளுக்கு முந்தைய நாளில் இரவு ஒரு மணிக்கு திடீரென்று ரோந்து செல்கின்ற போலிஸ் வாகனத்தை நிறுத்தி பெருநாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு கொடுத்து திகைப்பூட்டுவோம்

இப்படி அவனோடு என் ஞாபகங்களை எல்லாம் அசை போட்டுப் பார்க்கின்றேன்.

மொட்டைமாடிகளில் காற்று வாங்கிக்கொண்டும்
வாய்க்காலில் தண்ணீரில் கால் நனைத்துக்கொண்டும்
வீடு கட்டுவதற்காக பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலில் உட்கார்ந்து மணிக்கணக்காய் பேசிக்கொண்டும் இருப்போம். அப்படியான சூழ்நிலைகளில் பலமுறை எங்களுக்குள் இந்த பேச்சு வந்ததுண்டு


டேய் நம்ம எல்லோருடைய கல்யாணத்திற்கும் எல்லோரும் கண்டிப்பா இருக்கணும்டா

கண்டிப்பாடா..வாழ்க்கையில் ஒரே ஒருநாள் வரப்போற அந்த திருமண நாள்ல நாம எல்லோரும் எந்த ஊர்ல இருந்தாலும் வந்திறனும் என்ன

சரிடா கண்டிப்பாடா..ஆளாளுக்கு வாக்கு கொடுத்தார்கள்


காலத்தின் சுழற்சி எங்களை எப்படியெல்லாம் மாற்றப்போகிறது என்று தெரியாமல் விளையாட்டுத்தனமாய் விவாதித்துக்கொண்டிருப்போம்

இப்பொழுது பாருங்கள் நான் துபாயில் இப்பொழுதான் விடுமுறை முடிந்து வந்திருக்கிறேன்.
மற்றும் சில நண்பர்கள் பணிநிமித்தமாக ஆளாளுக்கு ஒவ்வொரு ஊர்களில் இருக்கிறார்கள்.

எனக்கு என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் கவிதைதான் ஞாபகம் வருகிறது. இந்த வரிகள் நான் அனுபவித்து எழுதியது.

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !


சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!


இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு இ
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!


எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!


புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இதுவெல்லாம் ஒரு மிகப்பெரிய இழப்பு. வாழக்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு முறை மட்டும் வருகின்ற திருமணம் - மரணம் போன்ற நல்லது கெட்டதுக்கு கூட கலந்து கொள்ள முடியவில்லை யென்றால் என்ன வாழ்க்கையடா இது. ?


சராசரி இந்திய வாழ்க்கை அறுபது ஆண்டுகள்தான். இந்த குறுகிய நாட்களுக்குள்ளாகவாவது இந்த உலகத்தில் நமக்குப் பரிச்சயப்பட்ட உறவுகளோடு கூட நம் ஆயுளைக் கடத்த முடியவில்லையே.

காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம் ,
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!


எனக்கு உலகெல்லாம் சுற்றி விதவிதமான மனிதர்களை விதவிதமான இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை. இருக்கின்ற நாட்களுக்குள்ளாகவாவது
நம்மை சுற்றியுள்ள உறவுகளின் நண்பரகளின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்றுதான்.

எவ்வளவுதான் வீரமாய்ப் பேசினாலும் சவால் விட்டாலும் முதன்முதலாய் திருமண வாழ்க்கைக்குள் நுழையப்போகும் அந்த நண்பர்களின் முதல் பயம் கண்டு ரசிப்பது
அவனைக் கிண்டலடிப்பது என்று மாப்பிள்ளை அலங்காரம் படு ஜோராக இருக்கும்

மாப்பிள்ளையை அலங்காரம் செய்யும் பொழுது கிண்டல் கேலிகள் எல்லாம் ரசிப்புத்தன்மையுடதையதாக இருக்கும். சிலவற்றை சொல்ல முடியும் சில சென்சாரில் மாட்டிக் கொண்டது

டேய் யாருடா மாப்பிள்ளை தோழன்..

தெரியலைடா ஒருவேளை குலாம் வருவான்னு நினைக்கிறேன் அவனுக்குத்தான் நம்ப செட்டுல முதல்ல கல்யாணம் ஆச்சுது

( இந்த மாப்பிள்ளைத் தோழனுக்கு மாப்பிள்ளை வீட்டில் மிகுந்த மிதிப்பு இருக்கும். அவன் கேட்கின்ற பணத்தை மாப்பிளை வீட்டில் கொடுப்பார்கள். அவன்தான் ஏழுநாட்கள் மாப்பிள்ளைக்கு தேவையான சத்து மிகுந்த இரவு உணவுகளை தேர்ந்தெடுத்து வாங்கி வருபவன். )

நான் மாப்பிள்ளை தோழனாகவாடா.. - நான்

உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல..நீ மாப்பிள்ளை தோழனா..மவனே உன் கல்யாணத்துக்கு நான்தான்டா மாப்பிளை தோழன் நீ செத்தே - குலாம்

போடா என் கல்யாத்துக்கு மாப்பிள்ளை தோழனே தேவையில்லை..எல்லாம் எனக்குத் தெரியும் போடா..

அதையும் பார்க்கத்தானே போறோம்

இப்படி ஜாலியான சம்பாஷைணைகள் தொடரும். அதையெல்லாம் அனுபவிப்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும்பா.

பரிச்சயமற்ற மனிதர்களோடு, பரிச்சயமற்ற பாஷைகளோடு, பரிச்சயமற்ற இடங்களில் வாழ்கின்ற இந்த போராட்டமான வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது.


மனதின் ஓரத்தில் இருந்து என்னுடைய வேலையை சிதைத்து ஒரு பட்சி சொல்லிக்கொண்டேயிருக்கிறது

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நீ
அயல்தேசத்து ஏழைதான்டா!



ம்ம் நண்பர்களே..கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் உங்களின் அறுபதாம் திருமணத்திலாவது..

இதயம் ஏக்கத்தோடு

- ரசிகவ் ஞானியார்

Monday, November 21, 2005

காலக் களவாடி




குதூகலத்தோடு
வழியனுப்பியவர்கள்
இப்பொழுது
குழந்தைகளோடு
எதிர்கொள்கிறார்கள்


" வாப்பா வாப்பா "
கூப்பிட்டவர்கள்...
கூப்பிடப்படுகிறார்கள்...!


"டேய் வாடா
பேசிக்கொண்டிருப்போம்"

என்றால்
குடும்பம், குழந்தை என
ஒதுங்க ஆரம்பிக்கிறார்கள்


வீட்டிற்கு சாப்பிட அழைத்தால்
பெரிய மனிதர்களாம்.. ..
முறையாக அழைக்க கூறி
முறையிடுகிறார்கள்!

என்னவாயிற்று நண்பர்களே?
நம் நட்பின் கற்பை
காலம் கிழித்துவிட்டதா?


கட்டை வண்டி
பயணத்தை மறந்துவிட்டு...
காலத்தில் பயணிக்கிறோமோ?

நிச்சயமாக
அயல்தேச வாழ்க்கை...
ஒரு
காலக்களவாடிதான்!

- ரசிகவ் ஞானியார் -

Sunday, November 20, 2005

ஒரு கண்ணிய சோதனை




இன்று காலை சுமார் 8 மணி அளவில் துபாய் டெய்ரா பேருந்து நிலையம் அருகே பேருந்தில் வந்துகொண்டிருந்தபொழுது திடீரென்று ஒரு சவுதி அரபி ஒருவன் டிரைவரிடம் ஏதோ கத்துகிறான்.

என்னவென்று விசாரித்தால் அவன் தன்னுடைய பர்ஸை தவறவிட்டுவிட்டானாம் . பேருந்தில் தவறவிட்டானா இல்லை பேருந்து நிலைய கூட்டத்தில் தவற விட்டானா என்று தெரியவில்லை. ஒவ்வொரு இருக்கையாக வந்து சோதனையிடுகின்றான். அவனுக்கு கிடைக்கவில்லை.

பின்னர் மறுபடியும் டிரைவரிடம் சென்று சொல்லிவிட்டு போலிஸ்க்கு தொலைபேசி செய்கிறான். 5 நிமிடத்தில் போலிஸ் வருகிறது. இங்கே அப்படித்தான் தொலைபேசி செய்தவுடன் போதும் ஹாரன் சத்தம் காதை கிழிக்க பறந்து வருவார்கள்.


போலிஸ் வந்தவுடன் அந்த அரபி அவனிடம் ஓடிச்சென்று தன்னுடைய பர்ஸை அங்கு யாரோ எடுத்து விட்டதாகவும் ஆகவே கண்டுபிடித்து தருமாறும் முறையிட உடனே போலிஸ் வந்தது.

அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே வந்து அங்கே அமர்ந்திருந்த நபரிடம் கேட்டது. பின் அதன் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த என்னை நோக்கி திரும்பி யாருக்காவது தெரியுமா ..யார் எடுத்தது என்பதை

"இந்தா சூஃப்..மீன் மீன் " என்று அரபியில் வினவ

நான் "மாஃபி மாலும்" (தெரியாது) என்க

அரபி மற்றவர்களுக்கு தெரியுமா தெரியாதா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அரபியில் பேசிவிடுவார்கள் சூழ்நிலையை உணர்ந்து நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் . பின் check கரேகா ( கரேகா என்றால் பண்ணவா )

உடனே எல்லோரும் சரி என்று தலையாட்ட

எனது எதிர் சீட்டில் இருப்பவரின் முகம் லேசாக மாறியது. நான் சந்தேகமாய் பார்த்தேன் ஒருவேளை அவர் எடுத்திருப்பாரோ என்று?

இரண்டு போலிஸ்காரர்கள் பேருந்தின் முன்பகுதியில் இருந்து ஆரம்பித்தார்கள். பெண்களிடம் அவர்கள் கையிலுள்ள பேக்கை வாங்கி சோதனையிட்டார்கள். அதில் ஒரு பெண் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதாக போலிஸாரிடம் முறையிட அவர்களின் கைப்பையை சோதனையிட்டுவிட்டு உடனே அவர்களை விட்டுவிட்டார்கள்.

பின் ஆண்களின் பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சோதனையிட்டு கொண்டே வந்தார்கள். ஒவ்வொருவரிடமும் சோதனை இடுவதற்கு முன்பு

"சாரி..

சாரி ...

சாரி..."


என்று சொல்லிக்கொண்டேயிருந்தது அவர்களின் மீது எனக்கு மிகுந்த மதிப்பை உண்டு பண்ணியது. இதே சம்பவம் நமது ஊரில் நடைபெற்றால் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள்..

"என்னடா முறைக்கிற இறங்குடா முதல்ல..நீ எடுத்தியா பர்ஸை..உள்ள வச்சு பேத்துறுவேன் பார்த்துக்கோ..உண்மையை சொல்லுங்க இல்லைனா எவனையும் விடமாட்டேன்.."

என்று யாராவது ஒரு காவலர் கையில் லத்தியோடு மரியாதையில்லாமல் கத்திக்கொண்டிருப்பார். அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதற்காக நாகரீகம் தவறிய வார்த்தைகளை அதிகமாய் பிரயோகிப்பார்கள்.

ஆனால் இவர்களைப் பாருங்களேன் எங்களை இவர்கள் திட்டினாலும் நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை இருந்தும் மெதுவாக சாரி சொல்லிக் கொண்டே எங்களை சோதனையிடுகின்ற கண்ணியம் என்னை மிகவும் கவர்ந்தது.

என் இருக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனது எதிர் இருக்கையில் இருப்பவரின் முகம் வெளிறிக்கொண்டிருந்தது.

நான் கேட்டேன் அவரிடம்

ஆப் மலபாரியே ( நீங்க கேரளாவா..)

இல்லை ( அட தமிழ்தான் )

உடனே மொழிப்பற்றில் அவரிடம் கேட்டேன் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க

இல்லை தம்பி என்கிட்ட பதக்கா இல்ல நான் கல்லிவல்லி விசா

பதக்கா என்றால் இங்கே வேலைபார்ப்பதற்கான அடையாள அட்டை.
கல்லிவல்லி விசா - எந்த கம்பெனியிலாவது வேலை பார்த்து பின் அவ்வேலை பிடிக்காமல் அந்த கம்பெனியிலிருந்து அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து வந்து வேறு இடங்களில் சட்டத்தை மீறி வேலைபார்ப்பவர்களோ இல்லை.

அரபியின் வீட்டு வேலைக்கு என்று விசா எடுத்து பின் வேறொரு இடங்களில் வேலைபார்ப்பவர்களையோ கல்லிவல்லி விசாவில் இருப்பவர்கள் என்று அழைப்பார்கள்

நான் அவரிடம் கூறினேன் "இப்ப போலிஸ் பர்ஸ் எடுத்தது யாருன்னுதான் சோதனையிடுறாங்க அதனால் பதக்காவெல்லாம் இப்ப சோதனை பண்ண மாட்டாங்க..அதனால் முகத்தை பயந்த மாதிரி காட்டாதீங்க..அவங்க வந்தாங்கன்னா உங்க பர்ஸை எடுத்து காட்டுங்க..அவ்வளவுதான்"

என் பக்கத்தில் சோதனை செய்ய வந்தார்கள். நான் என்னுடைய பேண்டில் வைத்திருந்த பர்ஸ் மற்றும் அவ்வப்போது கவிதை எழுவதற்கு வைத்திருக்கும் காகிதங்கள் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்துவிட்டு

ஹாண்ட்ஸ் அப் என்று போலிஸ் சொல்லும்போது கைகள் இரண்டையும் மேல் நோக்கி உயர்த்துவார்களே ( எல்லாம் சினிமாவில் பார்த்தது) அதுபோல கைகளை உயர்த்தினேன்.

அவர்கள்; என்னுடைய பர்ஸை சோதனையிட்டு பார்த்துவிட்டு திருப்பி தந்துவிட்டு பின் என்னுடைய சட்டை பேண்ட்டை சோதனை இட்டார் .

கிச்சு கிச்சு மூட்டுவதுபோல இருந்தது எனக்கு. நான் நெளிந்தேன். அவர் லேசாக புன்னகைத்து சாரி ..என்று சொல்லிவிட்டு குனிந்து கால்களை தடவிப்பார்த்தார் ஒருவேளை கால்பகுதியில் ஒளித்து வைத்திருக்கலாமோ என்று ?

சோதனையிட்ட பிறகு சாரி என்று கூறிவிட்டு அந்த எதிர் சீட்டில் உள்ளவரையும் சோதனையிட்டார்கள். நல்லவேளை பதக்கா பற்றி கேட்கவில்லை பின் கடைசிவரை சோதனையிட்டப் பிறகு பேருந்தின் கம்பிகளின் இடைவெளிகள் மற்றும் இருக்கையின் கீழ்ப்பகுதி என்று எல்லாம் சோதனையிட்டபிறகு ஒட்டு மொத்தமாக எங்களிடம் ஒரு சாரி கேட்டுவிட்டு அந்த டிரைவரிடம் பேருந்தை கிளப்ப சொல்லிவிட்டார்

சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகியது. அதற்குள் ஆங்காங்கே ஒவ்வொருவரிடமிருந்தும் செல்பேசி ஒலிக்கிறது

ஆபி ஆயகா சார் அபி ஆயகா..இதர் தோடா ப்ராபளம்
[(இப்ப வர்றேன் இப்ப வர்றேன் சார் இங்க கொஞ்சம் பிரச்சனை)]

இவிட பிரச்சனை சாரே..இப்ப எத்தும்..


டிராபிக்ல மாட்டிகிட்டேன்


ஐ வில் கம் - ஐ வில் கம் சார்

என்று மொழிகளின் கலப்பினத்தில் பேருந்து மீண்டும் கிளம்பிற்று.


ரசிகவ் ஞானியார்

Saturday, November 19, 2005

அன்புள்ள பில் கேட்சுக்கு

( மெயிலில் வந்தது )

அன்புள்ள பில் கேட்சுக்கு,

நான் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள சிறு குக்கிராமத்தில் இருந்து எழுதுகிறேன். நான் நேற்று ஒரு கணிப்பொறி வாங்கினேன். அந்த கணிப்பொறியை உபயோகிக்கும் போது நான் கண்டறிந்த சில குறைபாபடகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். இதுவரை யாருக்கும் தங்களை எதிர்த்து எழுத தைரியமில்லாததால் நான் எழுதுகிறேன்.

1. இணைத்தில் இணைப்பு கொடுத்த பிறகு நான் என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்டை திறக்க முயற்சிக்கும் பொழது பாஸ்வோர்ட் என்ற பகுதியில் மட்டும் என்ன தட்டச்சு செய்தாலும் ****** என்றே வருகிறது. ஆனால் மற்ற இடங்களில் ஒழுங்காக தட்டச்சு ஆகிறது. நான் ஹார்டடுவேர் பொறியாளரை அழைத்து சோதனையிட்பொழுது அவர் தட்டச்சுப் பலகையில் எந்த பிரச்சனையுமில்லை என்று கூறினார்.

ஆகவே எப்போதும் என்னுடைய அக்கவுண்டை திறப்பதற்காக ****** என்ற பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. என்னால் கூட என்னுடைய ஹாட்மெயில் பாஸ்வேர்ட் என்னவென்று தெரியாததால் தயவுசெய்து என்னுடைய அக்கவுண்டை சோதனையிட்டு என்னை இந்தத் தீராத பிரச்சனையிலிருந்து என்னை மீட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2. என்னால் Shut_Down பொத்தானை அழுத்தியபிறகு எதுவுமே தட்டச்சு செய்ய முடியவில்லையே ஏன்?

3. டெஸ்க்டாப்பில் Start என்ற பொத்தான் இருக்கிறது. ஆனால் Stop என்ற பொத்தான் இல்லையே ஏன்? வைக்க மறந்து விட்டீர்களா?

4. மெனுவில் Run என்ற பொத்தான் இருக்கிறது. எனக்கு மூட்டு வலியாக இருப்பதால் என்னால் ஓட முடியாது. ஆகவே அந்த பொத்தானை Sit என்று மாற்ற முடியுமானால் எனக்கு உட்கார்ந்து கொண்டே இயக்குவதற்கு வசதியாக இருக்கும்.

4. கணிப்பொறி திரையில் Re-Cycle Bin என்று ஒன்று இருக்கிறதே. அப்படியானால் Re-Scooter என்று ஒன்று எங்கேனும் இருக்கிறதா? ஆனால் நான் ஏற்கனவே ஸ்கூட்டர் வாங்கிவிட்டேனே?

5. Find என்ற ஒரு பொத்தான் இருக்கிறதே. அது சரியாக இயங்கவில்லை எனது மனைவி நேற்று வீட்டு சாவியை தெலைத்து விட்டு அதில் தேடியிருக்கிறாள் ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லையே. விளக்கம் கூறவும். ஏதேனும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்குமோ?

6. ஒவ்வொரு நாள் இரவிலும் எனது Mouseசை பூனையிடமிருந்து காப்பாற்ற நான் படும் பாடு படவேண்டியதாக இருக்கிறது.ஆகவே மவுஸோடு தாங்கள் நாயும் வழங்கினால் மவுஸை பாதுகாக்க வேண்டிய கவலை இருக்காது அல்லவா.? எப்படி யோசனை?

7. என்னுடை மகன் Microsoft Word கற்று விட்டான் இப்போது அவன் Microsoft Sentence படிக்க ஆசைப்படுகிறான்.எப்பொழுது அதனை வழங்குவீர்கள். ஆகவே இதுபோன்ற குறைகளை எல்லாம் களைந்துவிட்டால் உங்களுக்கு இந்தநாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள்தான்

நிம்மதி





"காதல்
வேலையில்லாத் திண்டாட்டம்
பணம்
மதவெறி"

தொந்தரவின்றி நீ
தூங்குகின்ற
முதல் தூக்கமும்
முடிவு தூக்கமும் இதுதான்!
ஆகவே
விழித்துவிடாதே...
அப்படியே தூங்கிக்கொண்டிரு!

***
இறைவா என்னை
வளர்ச்சியடையச் செய்துவிடாதே!
ஒரே வகுப்பில்...
ஒரே வீதியில்...
ஒரே இனமாய்...
வாழ்ந்தவர்கள் எல்லாம்
சாதி-மதம் கண்டு பிரிகின்ற
சாதாரண மனிதனாய்...
வாழ விரும்பவில்லை!
ஆகவே என்னை
குழந்தையாய் இருக்கவைத்து
குழந்தையாகவே இறக்க வை!

-ரசிகவ் ஞானியார்

Thursday, November 17, 2005

ஒரு மலைப்பயணம்

காலை 10 மணிக்கு நண்பர்கள் நாங்கள் 5 பேர் சேரந்து ஒரு காரிலும் உறவினர்கள் இரண்டு காரிலும் ஏற வண்டி கிளம்பிற்று. துபாயிலிருந்து மலைப்பகுதிகள் நிறைந்த அல்அய்ன் என்ற பகுதிக்கு செல்வதாக ஏற்பாடு.



எங்களுக்கோ பாதை அவ்வளவாய் புலப்படாது. ஆகவே முன்னால் சென்ற உறவினர்களின் வண்டியை பின்தொடர்ந்துதான் செல்ல வேண்டும்

அல்அய்ன் துபாயிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. துபாயில் உயரமான கட்டிடங்களைத்தான் பார்க்க முடியும். ஆனால் அல் அய்ன் பகுதியில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்ற மரங்களும் மலைபபபுகதிகளும் இருக்குமிடம். பாலைவனப் பகுதி மாதிரியே தெரியாது.

துபாயிலிருந்து கிஸஸ் என்னுமிடம் வழியாக எமிரேட்ஸ் சாலை போகும் வழியில லுலு வில்லேஜ் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கு சென்று கொறிப்பதற்காக சில கடலை (இங்கேயும் கடலையா..? ) வகைகள் வாங்குவதற்காக நான் உள்ளே செல்ல அதற்குள் போன் வருகிறது காரில் இருக்கும் நண்பர்களிடமிருந்து



டேய் ஞானி ஒண்ணும் வேண்டாம் திரும்பி வா..இங்க கார் கிளம்ப போகுது


ஒன்றும் வாங்காமல் பரிசு கிடைக்காமல் ஏமாந்த தருமியைப்போல திரும்ப வந்தேன்.


காரில் அமர்ந்தேன். டேய் டேப்பை ஆன் பண்ணுடா..

ஒரு பக்கம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபக்கம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரலி
அவள் ஒரு பைரவி

அவள் ஒரு பைரவி


பாடல் ஒலித்துக்கொண்டிருக்க கார் பாலைவனப்பகுதியை கடந்தபடி சென்று கொண்டு இருக்கிறது.

நண்பர் ரசூல் கேட்டார்

அது என்ன மிதிலையின் மைதிலி..?

அதான்பா சீதையை சொல்றாங்க

சரி காவிரி மாதவி..?

நம்ம சிலப்பதிகார மாதவி

பார்த்தியா ஞானி சீதைக்குப்பிறகு கற்புக்கரசியா ஒருத்தனை மட்டும் நினைச்சிகிட்டு இருந்த மாதவியைத்தான் சொல்றாங்க

சரி சரி தண்ணிய குடி தண்ணிய குடி

கிண்டலடிக்கும்போது இப்படித்தான் கூறுவோம். எனக்கு விவாதிக்க மனம் வரவில்லை..பாடல்களில் லயித்துப்போனேன். அனேக பேரைப்போலவே எனக்கும் பயணத்தில் பாடல் கேட்டுக்கொண்டே செல்வது பிடிக்கும்.

இப்படித்தான் சின்ன வயதில் சென்னைக்கு அம்மாவுடன் சென்றிருந்த பொழுது உப்பளப்பகுதியை தாண்டி வண்டி சென்று கொண்டிருக்கும்போது ஒரு பாடல் ஒலிபரப்பட்டுக்கொண்டிருந்தது

நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தான் என் செல்லக் கண்மணி என்ற பாடல் மாவீரன் படத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது

பின்னர் அந்தப்பாடலை எங்கு எந்த சூழ்நிலையில் கேட்டாலும் எனக்கு சின்ன வயதில் அம்மாவுடனான அந்தச் சென்னைப்பயணமும் அந்த உப்பளமும்தான் ஞாபகத்தில் வரும்.

பாடல் பாலைவனப்பகுதியில் ஊர் ஞாபகங்களை கொண்டு வருகிறது. கார் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
மின்னல் விழுந்ததுபோல் எதையோ
பேசவும் தோணுதடி

மோகனப்புன்னகையில் ஒருநாள்
3 தமிழ் பார்த்தேன்
காதல் தவிப்பினிலே என்
கண்களை விற்றுவிட்டேன்


பாடல் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது. எனக்கு கல்லூரி காலம் காதல் காலம் கனாக்காலம் என்று மனம் சுற்றி வந்தது.

பாலைவனப்பகுதியின் இருபக்கமும் கம்பிவலைகளால் அடைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒட்டகம் பாய்ந்துவிட்டால் விபத்து நேரிடக்கூடும் என்பதால் அந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்


நாய் பூனை போன்ற மற்ற மிருகங்கள் சாலையில் செல்லும்போது அய்யோ இவன் கார்ல வேகமா வர்றான் மோதினா நம்ம செத்தோம் என்று நிலை உணர்ந்து சாலையின் குறுக்கே வேகமாய் பதறி கடந்து செல்லும்.

ஆனால் ஒட்டகம் மட்டும் அப்படியல்ல இந்த கார் வேகமாய் வருகிறது நாம் இப்படி மெதுவாய் கடந்து சென்றால் இந்த கார் வந்து நம்மை மோதிவிடும் என்ற உணர்வேயில்லாமல் அலட்சியமாக சாலையைக் கடந்து செல்லும்.

ஆகவேதான் சாலையின் இருபக்கமும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டள்ளது . ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு அல்ல கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக.

நண்பர் நகைச்சுவையாக கூறினார்

இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த மக்களின் அறிவை விடவும் குறைவான அறிவுடனையே அந்த மிருகங்களை படைத்துள்ளானோ என்று..?

கார் காற்றை கிழித்துச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வெயிலில் தூரத்தின் செல்கின்ற வாகனங்கள் எல்லாம் ஒரு சிறிய இரும்புத்துண்டுகளாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

பாலைவனத்தில் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதைக்காணும்போது எனக்கு ஏமாற்றப்பட்ட சில இந்தியர்கள்தான் ஞாபகத்தினுள் வருகிறார்கள்
நல்ல வேலை என்று ஏமாற்றப்பட்டு இந்த ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகின்ற சில இந்தியர்களை நினைத்து பரிதாப்படத்தான் முடிகிறது.

மணலாய் நிரம்பிக்கிடக்கும் அந்த பாலைவனப்பகுதியை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் என்று நண்பனிடம் அனுமதி வாங்கி காரின் கதவை திறக்க முயற்கிக்க நண்பன் கத்துகிறான்

ஞானி திறக்காதே அங்க பாரு கார் வருது.. - கத்துகிறான் ராஜா

எனக்குத் தெரியும் நான் பார்த்துகிட்டதானே இருக்கேன்.ஏம்பா கத்துற - நான் கொஞ்சம் கோபப்பட

உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..சரி போ - கொஞ்சம் அவனும் கோவப்பட்டான்

சரி நான் போட்டோவே எடுக்கலப்பா - செல்லக்கோவம்

இதுபோன்ற சின்ன சின்ன சண்டைகள் இன்னும் ஆழமான நட்புக்கு வழிவகுக்கும்.

பின் பயணம் தொடர்கிறது. மௌனமாகவே நொடிகள் நகர்கின்றது. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன்.

வயிறு பசிக்குதுப்பா..ஏதாவது சாப்பிட இருக்குதா..?

ம் பின்னால இருக்குது ஒரு பிஸ்கெட் பாக்ஸ் ரசூல் எடுத்துக்கொடுங்க - ராஜா

பிஸ்கெட்டை நான் மென்று சாப்பிடமாட்டேன். அப்படியே வாயினில் வைத்து அந்த பிஸ்கெட்டை கரைத்து கரைத்து முழுங்குவேன் ரொம்ப சுவையாக இருக்கும்.

வாராயோ தோழி வாராயோ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க ரசூல் லயித்துப்போய் ரசித்துக்கொண்டிருந்தார். அவர் எப்போதுமே பழைய பாடல்களின் விரும்பி.

எனக்கு நினைவு தெரிந்த அந்த சின்ன வயதில் இந்தப்பாடல் எல்லா கல்யாண வீட்டிலும் ஆரம்ப பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கும். இந்தப்பாடலில் ஆரம்பிப்பதும் ஒரு திருமணச்சடங்கோ என்று முன்பு நினைத்ததுண்டு.

இப்பொழுதெல்லாம் காலப்போக்கில்; அந்தந்த சூழ்நிலைகளில் பிரபலமான பாடல்கள் ஒலிபரப்பாகிறது. இடையில் பம்பாய் படத்தில் கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பின்னர் காதலர்தினத்தில் வரும் நினைச்சபடி நினைச்சபடி என்ற பாடல் ஒலிக்கும். எனது தங்கையின் திருமண கேசட்டில் கூட இந்தப் பாடல் பிண்ணனியில் ஒலித்ததால் எனக்கு இந்தப்பாடல் கேட்கும்பொழுதெல்லாம் எனது தங்கையின் திருமணம்தான் ஞாபகம் வரும்

முன்னேறிக்கொண்டிருக்கிறோம். தண்ணீர் தாகம் எடுக்கிறது.

டேய் தண்ணி இருக்குதா? ( குடி தண்ணீர்தாம்பா )

இல்லடா காலியாயிடுச்சு..சரி எங்கேயாவது நிற்கும்போது முன்னால போற கார்ல இருந்து எடுத்துக்கலாம் அதுல நிறை பாட்டில் இருக்கு - சமாதானப்படுத்தினான்

தாகத்தில் அந்த பாலைவனப்பகுதியை ரசிக்க முடியவில்லை. கிளம்பும்பொழுது குடிதண்ணீரை அதிகமாய் விரயம் செய்து முகம் கழுவியது ஞாபகம் வருகிறது. ஒரு பொருள் இல்லாமல் இருக்கும்பொழுதுதான் அதன் அருமை தெரிகிறது.

எனக்கு என் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது

காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்துவரை



அதுபோல எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை யாருக்கும். கிடைத்தால் கடவுளையே மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு இடத்தில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி இறங்கினோம் பின்னர் அந்த ஹோட்டல் சரியில்லை இன்னொரு ஹோட்டல் செல்லலாமென்று நினைத்து காரை எடுக்கும்போது
நான் இறங்கி காரை எடுப்பதற்காக நண்பனுக்கு உதவி செய்தேன்

பின்னால் காரில் வந்த வந்த ஒரு அரபி ஹேய் ஹேய் சூ ஹாதா என்று எனது பேண்டை பார்த்து கத்தினான். அவனுடன் இருந்த அவனது துணைவி மற்றும் குழந்தைகள் எல்லாம் சிரித்தனர்

என்னடா பேண்ட் பின்னால கிழிஞ்சிருக்கா என்று பின்னால் நான் பதறிப்போய் பார்க்க
அப்புறம் அந்த அரபி மறுபடியும் என்னைப்பார்த்து கண்ணை சிமிட்டி நக்கலாக சிரித்தான் புரிந்து போனது எனக்கு அவன் நக்கலடிக்கிறான் என்று

மவனே நீ மட்டும் எங்க ஊர்ல இந்த மாதிரி பண்ணியிருந்த வச்சுக்க உன்னய மேய்ஞ்சிருப்போம்டா..உன் ஊருன்னு நீ துள்ளுரியோ.. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்

இங்கோ காரில் பாடல் ஓடிக்கொண்டு இருக்கிறது ஒரு பழைய பாடல்

ஆம்பிளைக்கு பொம்பள
பொம்பளைக்கு ஆம்பிள அவசியம்தான்
அதுக்குள்ள
அடங்கி இருக்குது இரகசியம்தான்


நல்ல கருத்துள்ள பாட்டு. டேய் பாட்ட மாத்துங்கடா ஏதாவது புதுசா இருந்தா போடுங்க

இது கூட புதுப்பாட்டுதாம்பா - ரசூல் ரசித்தபடி கூறுகிறார்

ஆமா நீங்க சின்ன வயசில இருக்கும்போதுன்னு நினைக்கிறேன்..?

காருக்குள் சிரிப்பலை. காதலர்தினம் கேசட் மாற்றப்படுகிறது.

இந்த கவனத்தில் நாங்கள் தொடர்ந்து சென்ற காரை மிஸ் செய்து விட்டோம்.

வரும்வழியில் வீடியோ கேமிராவில் ஒரு பெரிய கடிகாரத்தை பதிவு செய்தோம். வண்டி தடம்மாறி மீண்டும் அதே கடிகாரத்தை சுற்றி வந்தோம். அந்த முறையும் வீடியோவில் பதிவு செய்துகொண்டேன்.



பின்னர் தொலைபேசி செய்து விசாரித்ததில் அவர்கள் அந்த கடிகாரம் இருக்குமிடத்திற்கு அருகே வரச்சொன்னார்கள்.

மறுபடியும் அந்த கடிகாரத்தை படம் பிடித்தோம்.

டேய் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் என்ன நினைப்பாங்கன்னு தெரியுமா..?

என்ன

அல்அய்ன்ல என்னடா ஒரே கடிகாரமா இருக்குதுன்னு நினைச்சு ஏமாந்து போவாங்க..?

காருக்குள் மெல்லியதாய் சிரிப்பலை

அதுக்குத்தான் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்னு சொல்வாங்களே சரிதான் அது

ஒரு வழியாக அவர்கள் காரை கண்டுபிடித்து அவர்கள் பக்கத்தில் காரை பார்க் செய்தோம்.

அந்த செந்தியன் உணவகத்திற்குள் நுழைந்தோம்

பெயரே வித்தியாசமாக இருக்கிறது செந்தியன்.

என்னடா இது செந்தியன்னு போட்டிருக்கு?

செந்தமிழன் என்பதன் சுருக்கமோ..?

என்னவோ இருக்கட்டும்; முதல்ல போய் சாப்பிடுவோம்..



சாப்பிட்டு முடித்துவிட்டு அருகே உள்ள மியுசியத்திற்கு சென்றோம் அங்கே பழங்காலத்து அரபிகளின் கலாச்சாரப் பொருட்கள் பழக்க வழக்கங்கள் அவர்களின் பெட்டகங்கள் படுக்கை அறைகள் சமையலறைகள் என்று பார்த்துக்கொண்டே வந்தோம்.

விடைபெற்று வரும்பொழுது அந்த கால ஷேக் செய்யது (முன்னால் அமீரக அதிபர்) வின் பழைய புகைப்படம் ஒன்றினை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.



ஷேக் செய்யதுவின் மீது அரபு மக்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்தான் தனித்தனியே பிரிந்து கிடந்த குட்டி குட்டி நாடுகளை
அபுதாபி
அல்அய்ன்
சார்ஜா
துபாய்
உம் - அல்-கொய்ன்
ராஸல் கைமா
அஜ்மான்


என்ற ஏழு குட்டி குட்டி நாடுகளை ஒன்றிணைத்து அமீரகமாக மாற்றி பெருமை அவருக்குச் சாரும்.

அவரைப்பற்றி ஏதேதோ வதந்திகள். அவர் ஈரான் நாட்டைச் சார்ந்தவர் அங்கிருந்து இங்கு கள்ளத் தோணியில்தான் வந்தார் பின்னர் இங்குள்ள ஆட்சியைப் பிடித்துக்கொண்டார் என்று ஏதேதோ சொல்லப்படுகிறது.
எப்படியோ அவர் இல்லையென்றால் அமீரகம் இல்லை. யாரும் இங்கு பிழைக்க முடியாது. ஆகவே கம்பீரமாக நிற்கும் அவரை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

அங்கிருந்து நேராக மலைப்பகுதிக்கு சென்றோம். மலைப்பகுதிக்கு போகும் வழியில் கடுமையான டிராபிக். இப்பொழுதே மணி 7 ஐ நெருங்கிற்று. எப்பொழுது போய் சேருவோமோ என்ற பயம் எழும்பியது. ஏனென்றால் நினைத்தால் திரும்பி வரவும் முடியாது. அந்த அளவிற்கு முன்னாலும் பின்னாலும் கார்கள்.


மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறது கார்கள். இரண்டு மலைகளுக்கு இடையே நிலவு அழகாய் தெரிந்தது. கார் சுற்றி சுற்றி செல்ல செல்ல நிலவு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆக மாறிக்கொண்டே வந்தது. அழகாய் இருந்தது அந்த அழகிய மாறுதல்.

கடவுள் நிலைவை கையில் எடுத்து வைத்துக்கொண்டு எங்களை களிப்பூட்டுவதற்காக நிலவை இங்கேயும் அங்கேயும் வீசி விளையாடுகிறாரோ என்று தோன்றியது.

செல்கின்ற வழியில் ஒரு ஓரத்தில் மலைமீதிருந்த கீழே பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இறங்கி பார்த்தோம். ய்ப்பா..கீழிருக்கும் கார்கள் மனிதர்கள் எல்லாம் போன்சாய் மனிதர்களாக போன்சாய் கார்களாக தெரிந்தது. இவ்வளவு சிறிய உணரத்தில் இருக்கும் நம்மாலேயே இவ்வளவு ரசிக்க முடிகிறதே..அப்படியென்றால் மிக மிக உயரத்தில் இருக்கும் இறைவன் நம்மையும் இயற்கையையும் எந்த அளவிற்கு ரசித்துக் கொண்டிருப்பான்

ஒரு வழியாக மலையின் உச்சிக்கு சென்றடைந்தோம். அங்கே ஒரு இடத்தில் பாகிஸ்தானியர்கள் எல்லாம் ஒன்று கூடி பாடல் பாடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்



டேய் என்னடா பச்சைகள் எல்லாம் கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்

( பச்சைகள் - பாகிஸ்தானியர்கள்)

எதுக்கடா ஆடுறானுங்க

ஒருவேளை இன்னிக்குத்தான் எல்லோரும் குளிச்சிருப்பானுங்க அந்த சந்தோசத்தை கொண்டாடி மகிழ்றானுங்கன்னு நினைக்கிறேன்

கிண்டலடித்தாலும் அவர்களைப் போல கடுமையாக உழைக்க முடியாது அந்த அளவிற்கு கடுமையான உழைப்பாளிகள்.

ஒரு ஏசியை தனி ஆளாக நான்காவது மாடி வரையிலும் தூக்கி வருவார்கள்.
அந்த அளவிற்கு வலிமையுடையவர்கள். இதுபோன்ற ஏதாவத ஒரு பண்டிகை நாட்கள்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்

அதனை கவனித்துக்கொண்டே வந்தபோது ரா ரா என்று சந்திரமுகி படப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
எங்கிருந்து வருகிறது என்று திரும்பி திரும்பி பார்த்தால் அதோ ஒரு திறந்து வைத்த சிகப்பு நிற காரிலிருந்து வந்து கொண்டிருந்தது.

அந்த மலையுச்சியில் தமிழ்ப்பட பாடல் ஒலித்துக்கொண்டிருப்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

மலையுச்சியில் நின்றுகொண்டு வானில் உள்ள நிலவையும் மண்ணில் வந்து பெண்ணாய் இறங்கி சில நிலவுகளையும் ரசித்துவிட்டு கொறிக்க வேண்டியவற்றை கொறித்துவிட்டு கிளம்பினோம்


மலையுச்சியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று காரில் இருந்து ஒருவித வாசைனை வந்தது. வண்டியை நிறுத்தவும் முடியாது.



பின்னால் வேறு வண்டிகள் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருக்கும் உறவினரின் வண்டிக்கு தொலைபேசி செய்து எங்கள் வண்டியில் ஏதோ நாற்றம் வருவதாக கூற அவர்களும் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்த நாங்களும் நிறுத்தி இறங்கி வண்டியை சோதனையிட்டோம்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வண்டி சரியாகி விட மீண்டும் பயணம் தொடர்கிறது பிண்ணணியில்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த
நாடே இருக்குது தம்பி

அன்னையிடம் நீ அன்பை வாங்கு
தந்தையிடம் நீ அறிவை வாங்கு


என்று ஒலித்துக்கொண்டிருக்க அப்படியென்றால் தந்தை அன்பில்லாதவரா? இல்லை தாய்தான் அறிவில்லாதவளா..? என்று நான் கேட்க

குழந்தைகளை
கான்வென்டில் சேர்ப்பதைப்பற்றி
கவலையில்லை
ஆனால்
கற்றபிறகு
நடுத்தெருவுக்குத்தானே
வரவேண்டும்


என்ற வைரமுத்து கவிதை ஒன்றை நண்பர் ரசூல் எடுத்து விட்டார். வெளியுலகத்திற்கு அழைத்துச் சென்று அறிவு புகட்டுவது தந்தைதானே என்று விளகம் கூறினார்.

ஒருவழியாக அப்படியே கொஞ்ச நேரம் தூக்கத்தை ரசித்தும் கொஞ்ச நேரம் பாடலை ரசித்தும் துபாய் வந்து சேர்ந்தோம் மீண்டும் அடுத்த பண்டிகைக்கு எங்கே போகலாம் எனற கனவுகளோடு.

-ரசிகவ் ஞானியார்

தற்கொலை




தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை!
ஆகவே
தயவுசெய்து யாரும்...
காதலிக்காதீர்கள்!

- ரசிகவ் ஞானியார்

பசிக்கொடுமை




மனிதனுக்கு
உணவில்லாதபோது..
கொஞ்சம்
கழுகுகளுக்கும் ஈயப்படும்!


- ரசிகவ் ஞானியார்

இந்தியர்களின் சார்பில் ஒரு மன்னிப்பு



கருத்துக்குப்பிறகு மன்னிப்பு கேட்டு தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்வது இப்பொழுது பிரபல்யமாகி வருகின்றது.

என்னடா குஷ்புவை பற்றியே எல்லோரும் பேசுகிறார்களே நம்மை மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுகாசினியும் தன்னைப்பற்றி பேசியிருக்கிறார்கள். இது ஒரு தற்புகழ்ச்சிக்கான வழியாகவே எனக்குத் தோன்றுகிறது.

குஷ்பு பேசியது- எதிர்ப்பு வந்தது - மன்னிப்பு கேட்டது - தற்பொழுது நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பது - எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து குஷ்புவின் மன்னிப்பால் அவற்றை மறந்து வருகின்ற சூழ்நிலையில் மறுபடியும் சுகாசினி பேசியது எரிகிற தீயில் மூலிகை பெட்ரோலை ஊற்றியது போல இருக்கிறது.


எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை ஆனால் அவ்வாறு ஒவ்வாத கருத்துக்களை பேசினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரமும் இருக்கிறதல்லவா..?

ஆமாம் நான் கேட்கிறேன்.. தமிழ்ர்கள் ரசிக்கிறார்கள் என்றவுடன் தன்னை தாங்களே தலைக்கு மேலே வைத்துக்கொள்வதா..? தமிழர்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டார்களா..?

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..? அந்த உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது?


அப்படியென்றால் நானும் சொல்லட்டுமா..?

எவ்வளவோ அவர்கள் மறுத்தும் அணு ஆயுதம் இருப்பதாக ஈராக் மீது வலுக்கட்டாயமாக போர்தொடுத்து அவர்களின் பெட்ரோல் வளத்தை திருடி ஈராக்கை சுடுகாடாக்கிய அமெரிக்காவின் செயல்களுக்காக ஒட்டு மொத்த இந்தியர்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்கட்டுமா..?

காசு வாங்கி நடிக்கும் அவர்களுக்கே அந்த உரிமை இருக்கும்போது காசு கொடுத்துப் பார்க்கும் நமக்கு அந்த உரிமை இல்லையா என்ன..?




-ரசிகவ் ஞானியார்

Wednesday, November 16, 2005

தினமலருக்கு நன்றி



என்னுடைய வலைப்பதிவினில் வெளியாகியுள்ள மாப்பிள்ளைப்பெஞ்சைப்பற்றி இன்று 16.11.05 அறிவியல் ஆயிரம் பகுதியில் ( டாட்காம் பகுதி ) குறிப்பிட்டு எழுதிய தினமலர் நாளிதழுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாப்பிள்ளைப்பெஞ்சு பகுதிக்கான சுட்டி :

http://nilavunanban.blogspot.com/2005/10/blog-post_27.html


-ரசிகவ் ஞானியார்



Monday, November 14, 2005

இடம் கிடைத்துவிட்டது





நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எனது கவிதை ஒன்று நிலாச்சாரல் இணையதளத்தில்:


http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_234b.asp


- ரசிகவ் ஞானியார்

Sunday, November 13, 2005

அனுபவத்தில் கிடைத்த அறிவு



ரிங்ங்ங்ங்ங்... ரிங்ங்ங்ங்ங்...

அடுத்த பீரியடு ஆரம்பிப்பதற்காக மணி அடிக்கிறது. நானும் காஜாவும் வெளியே செல்கிறோம்.

(பெல் அடித்தவுடன் உள்ளே செல்வது
பள்ளி மாணவர்கள்

பெல் அடிக்கும் வரை க்ளாஸில் இருந்து கடலை வறுத்துவிட்டு பெல் அடித்தவுடன்
வெளியே வருவது கல்லூரி மாணவர்கள்

மழை பொழியும்போது நோட்டை சட்டையில் மறைத்துக்கொண்டு
தன்னை நனைப்பது பள்ளி மாணவர்கள்

நோட்டு நனைந்தாலும் பரவாயில்லை தான் நனையக்கூடாது என்று அந்த நோட்டினை
தலையில் வைத்து மழைத்துளியினை மறைப்பது கல்லூரி மாணவர்கள்

விட்டா சொல்லிக்கிட்டேப் போகலாம் )

டேய் இது யாரு பீரியடுடா..- காஜா

நம்ம பிஸிக்ஸ் ரபீக் சார் பீரியடுதான்டா சும்மா வா..சொல்லிக்கலாம் டா - நான்

டீ குடிப்பதற்காக கிளம்பிவிட்டோம்

அதோ வராண்டாவில் எதிரே வந்துகொண்டிருக்கிறார் பிஸிக்ஸ் புரபஸர் ரபீக்

டேய் வர்றாருடா நீ கேளு - காஜா

எங்களை நெருங்கும்போது நான் அவரிடம்

கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்குது கேண்டீனுக்கு போய் ஒரு டீ அடிச்சிட்டு வரேன் சார் - நான்

என்ன சொன்னே..? - ரபீக் சார்

கேண்டீனுக்கு போய் ஒரு டீ அடிச்சிட்டு வரேன் சார் - நான்

இல்ல ஒழுங்கா சொல்லு - ரபீக் சார்

தேநீர் அடிச்சிட்டு வரலாமா..? - நக்கலாய் சொல்ல

இல்ல ஒழுங்கா சொல்லு - ரபீக் சார்

கேண்டீனுக்கு போய் ஒரு டீ அடிச்சிட்டு வரேன் சார் - நான் மறுபடியும் சொல்ல அவர் திருப்பி திருப்பி கேட்கிறார். என்ன ஒழுங்கா சொல்ல சொல்கிறார் எனப் புரியவில்லை..

பின் அவரே சொல்கிறார்..

என்ன அது டீ அடிச்சிட்டு வர்றேன்..டீ குடிச்சிட்டு வர்றேன்னு சொல்லுப்பா - ரபீக் சார்

சாரி சார் டீ குடிச்சிட்டு வர்றேன் - நான்

ஆமா காஜா நீ எங்க போற ரெண்டு பேருக்கு ஒரே நேரத்துல தலைவலியா - ரபீக் சார்

இல்ல சார் ..இவன்தான் - காஜா தயங்குகிறான்

இல்லசார் தலை வலிக்குது வழியில மயங்கி விழுந்துட்டேனா வந்து தகவல் கொடுக்க வேண்டாமா அதுக்குத்தான் சார் - நான் கிண்டலடிக்க

அவர் மெலிதாய் புன்னகைத்தபடியே

சரி போங்க போய்ட்டு சீக்கிரம் வாங்க..இன்னிக்கு ப்ராக்டிகல் பத்தி சொல்லப்போறேன்.

கேண்டீன் வெற்றுச்சுவற்றில் ஆங்காங்கே பெயர்கள் - கவிதைகள் - காதலிக்கும் பெண்ணின் பெயரை இணைத்து என்று ஏதேதோ எழுதப்பட்டிருந்தது

கேண்டீன் மற்றும் டாய்லெட் சுவர்கள் எல்லாம் சுவர்களாகத்தான் மற்றவர்களுக்குத் தெரியும்

அது வெற்றுச்சுவரல்ல
கல்லூரி மாணவர்களின்
இன்னொரு இதயம்

காதலைச் சொல்ல முடியாத
வடிகால்


எல்லா கல்லூரி கேண்டீனும் அந்தந்த கால கட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும். அது பீரியடைக் கட் அடித்த மாணவர்கள் சங்கமிக்கும் இடம்

மற்ற மாணவிகள் முன்பு பாக்கியை கேட்ட கேண்டீன் ஊழியரோடு சண்டை - பின்னர் தவறு உணர்ந்து வந்த கல்லூரி முடிந்த மாலை வேளையில் , அவரிடம் வந்து மன்னிப்பு .. , காதல் வெற்றி பெற்ற மாணவர்களின் பார்ட்டி , பிறந்தநாள் பார்ட்டி , எந்த மாணவர்களை இல்லை மாணவிகளை பற்றியாவதுபுறம் பேசுதல் என்று களைகட்டும்.

(எங்கே நீங்கள் கொஞ்சம் உங்கள் கல்லூரிக் கேண்டீனை நினைத்துப்பாருங்கள். ஏதாவது சுவாரசியமாக தட்டுப்படுகிறதா? )

எங்கள் கேண்டீன் ஊழியரை நாங்கள் செல்லமாக வாப்பா வாப்பா என்தான் அழைப்போம். அவர் வித்தியாசமானவர் ஒரு பஜ்ஜி என்று சொன்னால் 4 பஜ்ஜி கொண்டு வருவார்.
நாங்கள் அதற்காகவே 4 பஜ்ஜி தேவைப்பட்டால் கூட

வாப்பா 1 பஜ்ஜி கொடுங்க என்றுதான் கேட்போம்.

அவர் 4 பஜ்ஜி கொண்டுவருவார்.

வாப்பா என்ன இது நாங்க என்ன கடையா வைக்கப்போறோம் இத்தனை பஜ்ஜி எதுக்கு - நான்

சாப்பிடுங்கப்பா வளர்ற பசங்க..வரும்போது என்ன கொண்டு வரப்போறீங்க போகும்போது என்ன கொண்டுப்போகப்போறீங்க? - வாப்பா

வரும்போது காசு கொண்டுவருவோம் போகும்போது வயிற்றெரிச்சல் கொண்டுபோவோம்

- காஜா கிண்டலடித்தான்

டேய் டீ சொல்லுடா
- காஜா

டீ - என்று சும்மா வாயால் சொன்னேன்

டேய் டீ ஆர்டர் பண்ணுடான்னு சொன்னா முனகுற - காஜா

வாப்பா க்ளாஸை கழுவி 2 டீ தாங்க - நான்

எப்போதுமே இப்படித்தான் ஆர்டர் செய்வோம். வாப்பா கோவப்படவே மாட்டார். சிரித்துக்கொண்டே கொடுப்பார்

ஏய் யாருப்பா அது ..அப்படின்னா எங்களுக்கெல்லாம் க்ளாஸை கழுவாமயா கொடுக்கிறார்.. - கேண்டீனில் உள்ள ஸ்டாஃப் ரூமிலிருந்து ஆசிரியர் ராமய்யா கிண்டலடிக்கிறார்


வாப்பா சீக்கிரம் கொடுங்கப்பா - நான் அவசரப்படுத்தினேன்

ஏண்டா மெதுவா வரட்டுமே பர்மிசன்தான் வாங்கியாச்சுல்ல - காஜா

இல்லைடா அங்க பாரு பிகாம் பிரபாகர் வர்றான்..வந்தான்னு வச்சுக்க அப்படியே மேய்ந்திடுவான் - நான்

வாப்பா டீ கொண்டு வர்றதுக்கும் அவன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கிறது

வாடா பிரபாகர் டீ சாப்பிடுறியா..? - ஒப்புக்கு கேட்டேன்

நீ வாங்கி கொடுத்தா வேண்டாம்னா சொல்லப்போறேன் - சொல்லுடா - பிரபாகர்

அடப்பாவி சும்மா ஒப்புக்கு கேட்டா உடனே ஒத்துக்கிட்டானே..இதற்குத்தான் கல்லூரி மாணவர்களிடம் ஒப்புக்கு கேட்கவே கூடாது.

வாப்பா பஜ்ஜி போடுறீங்களா - பிரபாகர்

அவர் இதுதான் சமயம் என்று 2 பஜ்ஜி கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்தார். அவன் எங்களை கேட்கிறான்

நீங்க பஜ்ஜி சாப்பிடுறீங்களாடா - பிரபாகர்

இல்லைடா இப்பத்தான் சாப்பிட்டோம்.. - தீ வயிற்றின் அடிப்பாகத்திலிருந்து எழுந்து தொண்டை வரை வந்துவிட்டுச் சென்றது.

டேய் அங்க பாரேன் மைக்ரோபயாலஜி பொண்ணுங்கலாம் வர்றாங்க பாரு..அந்த இங்கிலிஸ் தேவதையைப்பாரேன் சும்மா உல்ட்டாப்பா பேசிகிட்டு வர்றா - காஜா

கொஞ்சம் வெய்ட் பண்ணுவோமாடா..கடலை போட்டுட்டு போலாம் - நான்

இல்லடா இப்பவே லேட்டாயிடுச்சுடா அப்புறம் கத்தப்போறார் - காஜா

வகுப்பறைக்கு மீண்டும் சென்று அமருகிறோம்.

ஆசிரியர் ரபீக் பியுரெட் - பிப்பெட் என்று ப்ராக்டிகல் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்
அருக்கு ஒரு பழக்கம் உண்டு பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போது தனது பேண்டை கொஞ்சம் இழுத்துவிட்டு அட்ஜஸ்ட் செய்வார்.

நான் மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து திடீரென்று எழுந்து நிற்க, அவர் என்னடா இவன் திடீரென்று எழுந்து நிற்கிறான் என்று என்னை பார்க்க சுற்றியுள்ள மாணவ மாணவிகளின்
கவனமும் என் பக்கம் திரும்ப ( அதுக்குத்தானே எழுந்து நிற்கிறது )

என்ன டவுட்டா? - ரபீக் சார்


இல்ல ஒண்ணுமில்ல சார்
என்று கூறிவிட்டு அவரைமாதிரியே பேண்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.

மாணவ மாணவிகளுக்கு எல்லாம் விசயம் புரிந்து சிரிக்க ஆரம்பிக்க, அவருக்கு புரிந்து விட்டது. ஆனால் அத்தனை பேருக்கு முன்னால் சமாளித்துவிடவேண்டும் என்று என்னிடம் சரி ஏதாவது திருக்குறள் சொல்லிட்டு உட்காரு என்றார்.


புறத்தினை காட்டும் கண்ணாடி போல் -
அகத்தினை காட்டிடும் உள்ளம்


என்று ஒரு திருக்குறள் உண்டு சரியான வடிவம் தெரியவில்லை. அதைச்சொல்லிவிட்டு விளக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

பீரியடு முடிந்துவிட்டது அவர் புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்கு முன் ஞானியார் நீ என்ன டிபார்ட்மெண்டல வந்து பாரு என்று சொல்லிவிட்டு கிளம்பினார்

எனக்கு புரிந்துவிட்டது அவர் நான் கிண்டல் செய்ததற்காக என்னை கண்டிப்பதற்காக கூப்பிடுகிறார். தனியாக திட்டினால் கூட பரவாயில்லை. ஆனால் டிபார்ட்மெண்டில்
அழைத்து பிஸிக்ஸ் டிபார்ட்மெண்டில் உள்ள எல்லா ஆசிரியர்களின் திட்டையும் வாங்கவேண்டுமே என நினைத்துக்கொண்டே சென்றேன்

டேய் நீயும் கூட வாயேன்

ச்சே நான் வரலப்பா நீ போ

தனியாக சென்றேன் . மற்ற நேரங்களில் சொர்க்கமாக தெரியும் அந்த வராண்டா அப்பொழுது மட்டும் நரகமாக மாறியது.

எக்ஸ்கியுஸ் மி சார்

ம் ம் உள்ளே வா..- ரபீக் சாரேதான் மற்ற ஆசிரியர்களிடம் க்ளாஸில் நடந்ததைப்பற்றி கோபத்தோடு விவரித்துக்கொண்டிருந்தவர் நான் வருவதைக் கண்டவுடன் நிறுத்திக் கொண்டார்

தன்னுடைய பேச்சிற்காக காத்திருக்கும் ஒரு பெரிய கூட்டங்களுக்கு முன்னால் முதன் முதலாய் பேசுவதற்காக மேடை ஏறுபவனின் தயக்கமான பார்வைபோல

மாணவர்கள் கூட்டங்களே இல்லாத மதிய நேரத்தில் - வருபவர்களை எல்லாம் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் குறும்புப் பெண்கள் குழுமியிருக்கும் கூட்டத்திற்குள் தன்னந்தனியே செல்லும் ஒரு அப்பாவி மாணவனின் பயத்தைப்போல


மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தேன்.

சாரி சார் என்று உள்ளே நுழையும்போதே கூறினேன்.

அவர் உடனே என்னை மடக்கி விட்டதாக நினைத்து ஏன் நீ சாரி கூறுகிறாய்..அப்படியானால் நீ ஏதோ தவறு செய்திருக்கிறாய். இல்லையா..? சொல்லு ஏன் சாரி சொன்னாய்?

இல்ல சார் நேத்து ஸ்டிரைக் பண்ணினேன் நேத்து உங்க ப்ராக்டிகல் க்ளாஸ் பாதிச்சிருச்சு அதனாலதான் சாரி சொன்னேன் - நானும் விட்டுக்கொடுக்காமல் சமாளித்துவிட்டேன்

அப்படியென்றால் உன்மீது தவறு இல்லைனா சொல்ற..? அவர் வகுப்பில் நடந்த சம்பவத்தை மனதில் வைத்து கேட்கிறார்

சாரிசார் மாணவர்கள் தூண்டுதல்தான் காரணம் என் மீது குற்றமல்ல..என்று நான் நேற்று நடந்த ஸ்ட்ரைக்கை மனதில் வைத்து கூறினேன்.

வேற எந்த தப்பும் பண்ணல நீ....? - பிஸிக்ஸ் ஜலாலும் கேட்கிறார்

என்ன தப்பு பண்ணினேன் நான்...? என்பது போல விழியை அப்பாவி போல மாற்றி யோசிப்பது போல நடித்தேன்.

திடீரென்று நாகூர் மீரான் சார் குறுக்கே புகுந்து சார் அவனுக்கு எல்லாம் தெரியும் சார் அவன் நடிக்கிறான் நீங்க டைரக்டா கேளுங்க அவன்கிட்ட

நீ க்ளாஸ்ல என்ன பண்ணின..? - நேரடியாக கேட்டார் ரபீக்

நான் உடனே தவறை உணர்ந்து சாரி சார் என்று கூற அங்கே கனத்த மௌனம். தலைமுடி விழுந்தால் கூட காதில் கேட்கும் அந்த அளவிற்கு நிசப்தம்

ரபீக் சார் என்னை கிண்டலாக பார்க்க எனக்கு உதட்டில் லேசாக புன்னகை சிந்தியது

இதைக்கவனித்த ஜலால் சார் இங்க பாருங்க சார் செய்றதையும் செஞ்சிட்டு சிரிக்கிறான்..இத்தனை வருசமா சைன்ஸ் ஸ்டூடண்ட் யாருமே இப்படி பண்ணினது கிடையாது..

ப்ராக்டிகல் இருக்குங்கிற பயமே இல்லாம கிண்டல் பண்ணியிருக்கிறான் பாருங்களேன்

நீ காலேஜ்க்கு செகரெட்டரியா இருக்கறதால திமிரா நடக்கிறியோ..எப்படியும் ப்ராக்கடிகல்லுக்கு இங்கதான் வந்தாகணும்- சீறுகிறார் அமீன் சார்

சரி சார் அவன்தான் சாரி கேட்டுட்டான்ல விட்டுறுங்க சார் - நாகூர்மீரான் சார் எனக்கு வக்காலத்து வாங்குகிறார் ( அவர் எனது ஊர்க்காரர் )

சரி போ - ரபீக் சார்

சாரி சார் மறுபடியும் வழிந்து விட்டு கிளம்பினேன்.

ச்சே சுத்தி இருந்து குதறிப்புட்டாங்களே..நல்லவேளை எந்த பிகராவது அந்த நேரம் பார்த்து பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட் வந்தாங்கன்னா மானம் போயிருக்கும்

வராண்டாவில் உள்ள வாட்டர் குழாயில் அசடு வழிந்து போன முகத்தை கழுவிவிட்டு நண்பர்களுக்கு முன்னால் சிரித்துக்கொண்டே சென்றேன்

அங்கே பாருங்களேன் எனக்காகவே காத்திருந்த மாதிரி காத்திருக்கிறார்கள்.

என்னடா எதுக்குடா கூப்பிட்டாரு? - காஜா

இல்லைடா அடுத்தவாரம் மாடல் ப்ராக்டிகல் இருக்கு ஸ்டிரைக் ஏதும் அடிச்சிறாத அப்புறம் உனக்கும் மெயின் எக்ஸாம் வரும்போது பிரச்சனையாயிடும் என்று ரபீக் சார் சொன்னதாக கூறினேன்

அதுக்கு ஏண்டா கை நீட்டி நீட்டி அமீன் சாரும் ஜலீல் சாரும் பேசினாங்க - ராஜ்குமார் கேட்கிறான்

அடப்பாவிகளா ஜன்னல் வழியா பார்த்திருக்கானுங்க போல..

சரிடா அதுக்கு என்ன இப்ப ? நான் எரிச்சலோடு சொல்ல

உண்மையை சொல்ல வேண்டியதுதானே..ஸ்டிரைக் ப்ராக்டிகல்லுன்னு கதை விடுற..தாளம் தட்டி நான் அவமானப்பட்டதை கொண்டாடுகிறார்கள்


மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடனையே ரபீக்சார் கரும்பலகையின் உச்சத்தில் எழுதினார்

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல


காட்டிக்கொடுக்கிறதுக்கே இருக்கானுங்களே உயிர்நண்பர்கள், அவர்கள் எல்லோரும் அந்த கரும்பலகையின் எழுத்தையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்கள்.

ஒரு மாணவன் தனியாக செல்கிறான் என்று வைத்துக்கொள்ணுங்கள் அமைதியாக செல்லுவான். அதே நேரம் அவன் ஒரு கூட்டத்தோடு செல்லுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள் கிண்டல் கேலி என்று ஆரம்பித்துவிடுவான். அது அவன் மீது தவறில்லை அவன் வயது அவனைச்சுற்றி உள்ள கூட்டங்களின் ஹீரோத்தனமான கைதட்டல்கள் , உற்சாகங்கள் அவனை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது

இது எனக்கு அனுபவத்தில் கிடைத்த அறிவு.



-ரசிகவ் ஞானியார்

விதிவிலக்கு




குழந்தை தொழிலாளர்களை
ஒழிப்போமென்றுரைத்த..
அரசாங்கமே!
என்
விதவைத்தாய் உயிரோடு வாழ்வதில்
உனக்கு விருப்பமில்லையா..?



-ரசிகவ் ஞானியார்

Saturday, November 12, 2005

இதுதான் கல்ஃப்




(இதுதான் கல்ஃப் என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் வந்த மெயிலில் நம்ம கைவண்ணத்தை கலந்து தந்திருக்கிறேன் வலைப்பூ நண்பர்களுக்காக )


* பெட்ரோலின் விலை குடிதண்ணீரின் விலை மற்றும் கழிவு தண்ணீரை
வெளியேற்றும் செலவை விடவும் குறைவாக இருக்கும்.

* தகுதியில்லாதவர்கள் தகுதியுடயவர்களை விடவும் அதிகமான வருமானம்
ஈட்டுவார்கள்

* இங்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு மனபலம் பணபலம் ஆள்பலம்
இம்மூன்றும் அவர்களுக்கு எளிதில் வேலை கிடைப்பதற்கான காரணிகள்.

* கூலித்தொழிலாளர்கள் தன்னுடைய சொந்தநாட்டில் வாங்கும்
வருமானத்தைவிடவும் குறைவான வருமானமே பெறுவார்கள்

* எந்தவொரு காரணமுமில்லாமல் கம்பெனியிலிருந்து தொழிலாளர்கள்
வெளியே தள்ளப்படுவார்கள்

* பணத்தை விடவும் அதிக மதிப்பு வாய்ந்தது வாஸ்தா ( சிபாரிசு).

* அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களை விடவும் க்ளீனர்கள் அதிகமான
வாஸ்தா உடையவர்களாக இருப்பர்கள்

* பில்டிங் உரிமையாளரைவிடவும் வாடச்மேன்களுக்கு அதிக உரிமை உண்டு

* மேலாளர்களைவிடவும் ஆபிஸ்பாய் மற்றும் டிரைவர்களுக்கு கம்பெனி
முதலாளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கும்

* வானிலை மாற்றங்கள் ஒரு மணிநேரத்தில் மழைப்பொழிவு - தூசிப்புயல் -
வெப்பம் - கடுமையான புழுக்கம் - என்று மிக வேகமாய் மாறும்

* ஒருவர் இங்கு வருமானம் ஈட்ட முடியவில்லையென்றால் அவரால்
உலகத்தில் வேறு எங்கும் வருமானம் ஈட்ட முடியாது

* ஒவ்வொரு வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து எதிர்பார்த்து இரண்டு
நாட்களுக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை வருகிறதோ என்று உணரும்
அளவிற்கு மிக வேகமாய் காலங்கள் கடந்து போகும்.

* ஒவ்வொரு திருமணமாகாத இளைஞர்களும் கல்யாணக் கனவுகளுடனையே
இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த ஊரில் ஒரு வீடு
வாங்குவதுதான் ஒரு பெரும் லட்சியமாக இருக்கும்

* பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது ஊரில் அவர்கள் மீது
காட்டிய அன்பை விடவும் 100 மடங்கு அதிக பிரியம் உடையவர்களாக
இருப்பார்கள் .

* வேலைபார்க்கும் இடங்களில் இருப்பதை விடவும்; வீட்டில் இருப்பது
மிகவும் கஷ்டமாக இருக்கும்.

* இந்தியர்கள் அவர்களின் உண்மையான நிலையை விடவும் அல்லது
இந்தியாவில் இருந்ததை விடவும் கடவுள் பயம் - அதிகமான மதப்பற்று
உடையவர்கள்போல காட்டிக்கொள்வார்கள்.

* சாருக்கான் சல்மான்கான் திரைப்படம் வெளியிடப்படும்பொழுதெல்லாம்
இங்குள்ள சினிமா தியேட்டர்களில் இந்தியர்களை விடவும் அரபு நாட்டைச்
சார்ந்தவர்களின் கூட்டம்தான் அதிகமாக இருக்கும்

* இங்குள்ள பெண்கள் இந்தி திரைப்படப்பாடைலை முணுமுணுப்பார்கள்
ஆனால் இந்தியை புரிந்துகொள்ள தெரியாது

* பிச்சைக்காரர்களைவிடவும் அதிகமாக விபச்சாரிகளைக் காணலாம்.

* பெங்களுரை விடவும் அதிகமான டான்ஸ் கிளப்புகள் காணலாம்.

* ஒவ்வொரு 5 மீட்டர் கண்டிப்பாக இடைவெளிக்குள்ளும் பெண்கள் அழகு
நிலையம் இருக்கும்

* உணவுகள் மற்றும் வீட்டுப்பொருட்கள் காரில் அமர்ந்திருக்கும்
நிலையிலையே பெற்றுக்கொள்ளலாம்.

* ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளிக்குள்ளும் ஒரு ஷாப்பிங் சென்டர்
இருக்கும்

* நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக மற்றும் மெதுவாக கார்
ஓட்டுபவர்களுக்கென்று தனித்தனிப்பாதைகள் இருக்கும்

* கார் வாங்குவதை விடவும் லைசன்ஸ் வாங்குவது மிக கடினம்.

* மூட்டைப்பூச்சிகளை விடவும் சேதமடைந்த கார்கள் அதிகமாக காணப்படும்.

* பார்க்கிங் சார்ஜ் : ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்
இரண்டு மணி நேரத்திற்கு 5 திர்ஹம்

* லோக்கலில் எங்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ள இலவச தொலைபேசி
வசதி.

* டிராபிக் சிக்னல் :

பச்சை : அமெரிக்கர்கள் ஐரொப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் போகலாம்
மஞ்சள் : எகிப்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் மட்டும் போகலாம்
சிகப்பு : குவைத் மற்றும் சவுதி மற்றும் பாலஸ்தீனியர்கள் மட்டும்
போகலாம்

வளைந்து வளைந்து (Zig Zag) செல்லும் வசதி லோக்கல் அரபிகளுக்கு மட்டும் உண்டு




-ரசிகவ் ஞானியார் -

Tuesday, November 08, 2005

தயவுசெய்து பேனா கேட்காதீர்கள்





நான்

தொலைத்தப் பேனாக்கள் பற்றி

தொலையாத பேனாவால் எழுதுகிறேன்!

இதயத்தை...

தொலையுங்கள்!



இதுவரை எந்தப்பேனாவும் - தான்

சாகும்வரை என்

சட்டைப்பையில் இருக்க...

சம்மதித்ததேயில்லை !



சில பேனாக்கள்

அனுமதியோடு எடுக்கப்பட்டு...

அனுமதியில்லாமல் போகிறது!



சில பேனாக்கள்

பைக்கில்

தாறுமாறாய் செல்லும்போது...

தற்கொலை செய்து கொள்கிறது!



சில பேனாக்கள்

கவிதை எழுதிய களைப்பில்...

காணாமல்போகிறது!



இந்தக்கவிதையைக்கூட...

இரண்டு பேனாவால்தான்

எழுதியிருக்கிறேன்!



சிலபேனாக்கள்

காதலன் ஏமாற்றியதால்...

கண்ணீர்தெரியாமல் அழுகின்ற

பெண்கள்போல...

கசிந்து கசிந்தே

கை நழுவிப்போகிறது!



சிலபேனாக்கள்

சிரித்தப்பெண்கள்

யாரேனும் கேட்டால்...

திரும்பிவர மறுக்கிறது!



சிலபேனாக்கள்

இரயில் நிலையத்தில்

பயணம் செல்பவர்களின்..

விண்ணப்பம் நிரப்ப வாங்கப்பட்டு

கடைசியில்.......

சென்றுவிடுகிறது..

அவர்கள்

பயணம் செய்த ஊருக்கே!



சிலபேனாக்கள்

நான்

பிட் எழுதிய

அவமானம் தாஙகாமல்...

அழிந்துபோகிறது!



சிலபேனாக்கள்

கல்லூரி மாணவனைப்போல..

பேருந்தின் படிக்கட்டில்

தொங்கியபடியே...

தொலைந்துவிடுகிறது





நான்

சுட்டபேனாக்கள்

மீண்டும் என்னிடமிருந்தே...

சுடப்படுகிறது !



இப்படி

எந்தப்பேனாவும் -தான்

சாகும்வரை என்...

சட்டைப்பையில் இருக்க

சம்மதித்ததேயில்லை!



இந்தக்கவிதையை எழுதிய

பேனாகூட...

எங்குதொலைந்ததோ

தெரியவில்லை?



கவிதை வாசிப்பவர்களின்

கண்ணில்பட்டால்...

கண்டுபிடித்துக் கொடுங்கள் !

இன்னொரு கவிதை...

எழுதமாட்டேன் !



"எக்ஸ்கியுஸ்மி

கொஞ்சம் பேனா தரமுடியுமா?"


எங்கிருந்தோ ஒரு குரல்

இதோ

அடுத்த கவிதையின் கரு ...







-ரசிகவ் ஞானியார்

Sunday, November 06, 2005

ஒரு நிலாக்கால கல்லூரி பேருந்துப் பயணம்



1998 ம் வருடம் காலையில் அந்த திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் காலை 8.30 மணி அளவில் வண்ண வண்ண உடைகளில் எல்லா கல்லூரி தேவதைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வானத்திலிருந்து இறங்கிவரத்தொடங்குகிறார்கள்..அவர்களுக்குப் பாதுகாப்பாய் கறுப்பு பூனைப்படைகளாட்டம் மாணவர்கள்.


படிந்த தலையோடும்..

பரட்டை தலையோடும்..

சீவி சிங்காரித்தும்..



விதவிதமான கறுப்புப் பூனைப்படைகள் வரத்தொடங்குகிறார்கள்.


இன்னொரு கல்லூரி மாணவர்கள் அவர்களுக்குண்டான பேருந்து வரும் இடத்தை அனிச்சை செயலாய் மறந்து எங்கள் கல்லூரி பேருந்து வருகின்ற இடத்திற்கு வருகிறார்கள்.


சிலநேரம் எங்கள் இருகல்லூரிகளுக்குள்ளும் சின்ன சின்ன மோதல்கள் வருவதுண்டு.



"எல இங்க பாரேன் தங்கபாண்டிய..நம்ம காலேஜ் பொண்ணுங்கள நோட்டம் விடுறான் பாரேன்..இந்தப்பக்கமே சுத்திக்கிட்டு இருக்கான்டா..ஒரு நாளைக்கு ஆப்பு வைக்கணும்"


- அகில திருநெல்வேலி பெண்கள் பாதுகாப்பு தலைவர் சீறுகிறார்



"விடுல..சும்மாதான வந்துட்டுப்போறான்..அவன் என்ன கிண்டலா பண்றான்..கிண்டல் பண்ணினானா பார்த்துக்கலாம்"

- திருநெல்வேலி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பொருளாளர்



"எல இவனுங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்டா..அவனுங்க கோஷ்டியே அங்க நிற்குது..கூட்டிட்டு வந்தாங்கன்னா சங்குதான் நமக்கு..நம்ம பசங்கள நம்ப முடியாது.."


இப்படியான சம்பாஷணைகள் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.


அதோ வருகிறான் பாருங்களேன் நவீன். இவன் ரொம்ப வித்தியாசமானவன்..கையில் ஒரு நோட்டுப்புத்தகம் , அரைகால் டவுசர் என்று படு வித்தியாசமாய் வருபவன். எப்போதும் எங்கள் கல்லூரிப்பேருந்தில் தொங்கிக்கொண்டுதான் வருவான்.

எங்கள் கல்லூரிப்பேருந்தில் ஏறி மூன்றாவது நிறுத்தத்தில் இறங்குவான். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் . பின்னர்தான் தெரிந்தது அவன் ஒரு மெக்கானிக்ஷாப்பில் வேலைபார்க்கிறான் என்று.

சும்மா பிகர்களை நோட்டம் விடுவதற்காக நோட்டோடு திரிந்திரிக்கிறான். பின்னர் எங்களோடு நன்றாக பழகி விட்டான். இவன் இப்போது உயிரோடு இல்லை..ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டான்..


நேரம் ஆக ஆக சூரியன் ஒளி பட்டால் தப்பித்து ஓடும் இரத்தக் காட்டேறிகளைப்போல ஒவ்வொரு பேருந்தைக் கண்டவுடனும் கொத்து கொத்தாக தேவதைகள் மறைந்து போகிறார்கள்.


இதோ வருகிறது எங்கள் கல்லூரி பேருந்து.



அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் முதலாண்டு மாணவர்கள்

எல்லோரையும் ஏறவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இரண்டாமாண்டு மாணவர்கள்

பேருந்தை வந்ததையே கவனிக்காதது மாதிரி அலட்சியமாக நிற்கிறர்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.


இவர்கள் தொங்கு வாதிகள்..பேருந்தில் கூட்டமே இல்லாவிட்டாலும் தொங்கிக்கொண்டு வருவார்கள். அந்த தொங்குவாதிகளின் கூட்டத்தில் நானும் உண்டு.


சிலர் நோட்டுபுத்தகத்தை கைளில் பொத்திவைத்துக்கொள்வார்கள்


சிலர் முதுகில் பேண்டில் சொருகி வைத்திருப்பார்கள் ( முதுகுல் வச்சா படிப்பு எப்படி நெஞ்சுல ஏறும்? அட தத்துவம் போல இருக்கு )


பலர் தனக்கு தெரிந்த ஜன்னலோர தேவதைகளிடம் கொடுப்பார்கள். ( நோட்டை கொடுத்து இதயம் பெற்றவர்கள் எத்தனையோ பேர்)


நான் நண்பர்களுடன் பேருந்தில் ஏறுவதற்காக விறுவிறுவென்று செல்கின்றோம்.


ஆ... ஆ சத்தம் கடந்து சென்ற பயணியிடமிருந்து வருகிறது. அவசரத்தில் அவன் காலை மிதித்து விட்டேன்.


"சாரி சார் "என்று நான் கூற


"என்னடா சாரி..மயிரு மாதிரி மிதிச்சிட்டு போற.. - " நாகரீகம் தவறிப்பேசினான் அந்த தடியன்


அவன் தலை முடி லேசாக சுருண்டு ஒரு கட்டம் போட்ட கைலியை உடுத்தியிருந்தான். அவனைப்பார்க்கவே ரவுடி மாதிரிதான் இருந்தது.

"ஹலோ..மரியாதையா பேசுங்க..தெரியாமத்தான மிதிச்சேன்:"


"எல என்னல எதிர்த்துப் பேசற..நான் யாரு தெரியுமால..-------------------னோட ஆளுடா.."என்று

-திருநெல்வேலியைச் சார்ந்த ஒரு ரவுடியின் பெயரைக் கூறினான்.


அவன் சொன்ன ஆள் அரசியல் வட்டாரங்களிலும் சரி..ரவுடிகள் வட்டாரத்திலும் சரி சரியான பிரபலம்..


எனக்கோ பயம் பிடித்துவிட்டது ஒருவேளை உண்மையாய் இருக்குமோ..? இருந்தாலும் ஹீரோத்தனத்திலிருந்து கொஞ்சமும் இறங்கி வர முடியாத மாணவப்பருவத்தில் இருந்தததால்..பதில் கூறினேன்


"சரி அதுக்கு இப்ப என்ன பண்ணணும்னுங்கிறீங்க.. "
பயத்தில் மரியாதையாக கூறிக்கொண்டே மெல்ல மெல்ல கல்லூரிப் பேருந்தை நோக்கி நகர்ந்தேன்..


"எல என்னல திமிரால உனக்கு..நில்லுல எங்கல போற"


"மரியாதையா பேசுங்க..எங்க காலேஜ் பசங்கல்லாம் இருக்காங்க..சொல்லிக்கொடுத்துறுவேன்..- "
- சும்மா காலேஜ் மாணவர்களின் பலத்தைக் காட்டினேன்.


அவனோ சிறிதும் பயப்படாமல்..
"வால வந்து சொல்லிக்கொடுல..அவனுங்க என்ன செய்வாங்கன்னு பாக்குறேன்.."

அவன் என் கையை பிடித்துக்கொண்டு பேருந்தை நோக்கி முன்னேறுகிறான்..

அப்பொழுது வாசற்படியில் இருந்து கவனித்த திருநெல்வேலி பேட்டையில் இருந்து வருகின்ற தக்கரை பீர்முகம்மது என்னை கவனித்து விடுகிறான்..



"டேய் என்னடா மாப்பிள வால வந்து ஏறுல.." என்று வழக்கமாய் அழைத்துவிட்டு என் பக்கத்தில் வருபவரை கண்டவுடன் பேச்சை நிறுத்தினாhன்


"யாருல இது.. "அவர் என் கையை பிடித்திருந்த தொனியில் சந்தேகப்பட்டு கேட்டான்


"டேய்! தக்கரை இவன பாருல ..வம்புக்கு வராம்ல..தெரியாம கால மிதிச்சதுக்கு திட்டுறான்.."

"அவன தெரியும் இவன தெரியும்னு மிரட்டுறான்"


பேருந்து வேறு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது..


உடனே தக்கரை அவனைப்பார்த்து


"எல! விடுல கைய "

என்று சொல்லிவிட்டு உடனே என் கையை அவன் பிடியிலிருந்து விடுவித்துவிட்டு அவன் முகத்தில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ளுகிறான்..அவனோ தடுமாறி கோபத்தில் கத்துகிறான்..


"எல இருல இந்த பஸ்ஸ{ எப்படி போகுதுன்னு பாக்குறேன்..எப்படியும் எங்க இடத்தை தாண்டித்தான போகணும் இருங்கல " என்று உறுமினாhன்.

எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது..ஒருவேளை அவன் சொன்னது உண்மையாகிவிடுமோ..? பின்னர் புரிந்து கொண்டேன் குரைக்கிற நாய் கடிக்காது என்று.


காதல் கடிதம் எழுதிவிட்டு அதனை கொடுக்கவா வேண்டாமா என்று தயங்கி தயங்கி நிற்கும் மாணவனைப்போல பேருந்து கிளம்பிக் கொண்டிருந்தது.


எங்கள் பேருந்து கிளம்பும் அதே சமயம்தான் பேட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி பேருந்தும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி பேருந்தும் கிளம்பும்.


நாங்கள் அந்தக் கல்லூரியின் தேவதைகளை பார்த்துக்கொண்டே படிக்கட்டிலும் அவர்கள் இதயத்தின் ஓரத்திலும் தொங்கியபடி கிண்டலடித்துக்கொண்டும் கடைக்கண்களால் காவியம் நடத்திக்கொண்டும் செல்லுவோம்.


ஆகவே அந்த மகளிர் கல்லூரி பேருந்துகளை பின்தொடர்ந்துதான் செல்லவேண்டும் என்று டிரைவரிடம் அன்பாக மிரட்டியிருந்தோம்.


அதோ அந்த பாளயங்கோட்டை மகளிர் கல்லூரி பேருந்து கிளம்ப
அதற்கு பின்னால் எங்கள் கல்லூரி கிளம்ப..
எங்கள் பேருந்துக்குப்பின்னால் பேட்டை மகளிர் கல்லூரிப்பேருந்து அதற்குப்பின்னால் பேட்டையைச் சார்ந்த ஒரு ஆண்கள் கல்லூரிப் பேருந்து
என்று அந்தப் பேருந்து நிலையமே பிகர்களின் திருவிழாக்கூட்டம் போல களைகட்டியது


அந்த பாளைங்கோட்டை மகளிர் கல்லூரிப்பேருந்து நகர்கிறது..


எந்த பிகரைப் பார்ப்பது.. ...? இந்தப்பிகர்...... அந்தப்பிகர்;...........


"டேய் இங்க பாரு அந்த கறுப்பு சுடிதாரை...."

"இங்க பாருடா உன் ஆளு இன்னிக்கு ஹீல்ஸ் போட்டிருக்காடா.."


கமெண்டஸ்கள் ஆங்காங்கே



வருடாவருடம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் தேர் இழுப்பது வழக்கம். பொதுமக்களுக்கு அந்த தேரிழுப்பு மட்டும்தான் தெரியும்.

ஆனால் இப்படி தினமும் தேவதைகளின் விழிகளினால் மாணவர்களின் இதயத்தேர்கள் இழுக்கப்படுகிற்து என்ற செய்தி பிகர் முன்னேற்ற வாலிபர் சங்கங்களுக்கு மட்டும்தான் தெரியும்.



அந்த தேவதைகளையெல்லாம் ஒரு பாழாய்போன திருப்புமுனையில் டாட்டா காட்டியபடி பாசத்தோடு வழியனுப்பிவிட்டு எங்கள் பேருந்து முருகன் குறிச்சியைத் தாண்டி , மார்க்கட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


அதோ எல்லா மாணவர்களின் எதிரி கண்டக்டர் வந்துவிட்டார். அவரோடு சரியான ஜாலியாக இருக்கும். எங்களிடம் டிக்கெட் திணிப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

முதலாண்டு மாணவர்கள் கண்டிப்பாய் டிக்கெட் எடுத்தாக வேண்டும்

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எடுப்பது அவரவர் விருப்பம்

மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எடுக்கவே கூடாது


( சிலர் பயந்து போய் எடுத்துவிடுவார்கள் )



அவர் ஒவ்வொருவரிடமாய் டிக்கெட் கேட்க கேட்க வித்தியாசமான கமெண்ட்ஸ்கள் எழுந்து கொண்டேயிருக்கும்.


"டேய் ஞானி! மாப்ள! டேய்.. இங்க பாருடா கிண்டல! இவர் யாருன்னே எனக்குத் தெரியாது..டிக்கெட் கேட்கிறாருடா"


பேருந்து முழுவதும் சிரிப்பொலி

"டேய் பாதிக்கு பாதியாவது டிக்கெட் எடுங்கடா.. - "கண்டக்டர் கெஞ்சுகிறார்


"இல்ல சார் எங்க அம்மா வெளியில எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க- "
-இன்னொரு பக்கமிருந்து கமெண்டஸ்

"டிக்கெட் வாங்கலைன்னா வண்டிய நிறுத்திறுவேன் பார்த்துக்கோங்க.."

- கத்துகிறார்


"கண்டக்டர் அங்கிளுக்கு ஒரு ஓ போடுங்கப்பா...ஓ..ஓ..ஓ..ஓ"

அவ்வளவுதான் புன்னைகைக்க ஆரம்பித்து விட்டார்..
"அட ஒங்களோட ரோதனையா போச்சுப்பா.."


"நீ டிக்கெட் எடுப்பா.." - கண்டக்டர்


"எடுக்க முடியாது -" ஏதோ அவர் கடன் கேட்பதை போல மறுக்கிறான் அந்த மாணவன்

திடீரென்று ஒரு விசிலடித்து பேருந்தை நிறுத்துகிறார் பின் கட்டாயமாக சிலரிடம் டிக்கெட்டை திணித்து காசு வாங்கிவிட்டு மீண்டும் விசிலடிக்கிறார்.


சொத்தையெல்லாம் எழுதிவைக்கின்ற அழகில்...

கத்தையாக பிகர்களெல்லாம் சாலையில்!




வித்தைகள் செய்கின்ற மாணவர்களைச் சுமந்தபடி...

நத்தையைப்போல நகர்ந்துகொண்டேயிருக்கும் பேருந்து!




பித்தனாக பிதற்றிக்கொண்டிருக்கும் மாணவர்களை...

அத்தையைப்போல திட்டிக்கொண்டேயிருக்கும் கண்டக்டர்!




பஸ்ஸின் ஜன்னலோரத்தில் இருக்கும் மாணவர்கள் கைகளாலும் சிலர் குச்சிகளாலும் சிலர் நோட்டுப்புத்தகத்தினாலும் பேருந்தின் தகரத்தை தட்டிக்கொண்டே இருக்க கடைசி சீட்டில் கோழி காதர் பாட்டுப்பாடுகிறான்..


எங்களுக்கு குஷியாக இருந்தாலும் எல்லா தேவதைகளின் கவனமும் கடந்து செல்லும் பேருந்துகளில் உள்ள தேவதைகளின் கவனமும் அவன் மீது விழ ஆரம்பிக்கிறதே, என்ற பொறாமை தீ வேறு தகதகவென எரிந்தது எங்கள் வயிற்றுக்குள் அனுமன் இலங்கையில் வைத்த தீயைப்போல....

எல்லாரும் அவனை ரசித்துக்கொண்டே அந்தப்பாட்டுக்கு ஏற்றவாறு இசையமைத்துக்கொண்டே பேருந்தின் இருபறமும் உள்ள தகரப்பபகுதியை தட்டிக்கொண்டே வர, நாங்களும் ஒரு கைகாளால் படிக்கட்டின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு மறுகைகளால் தட்டிக்கொண்டே வருகிறோம்.

திடீரென்று ஒரு குசும்பு பிடித்த மாணவன் வாயினால் விசிலடித்து விட டிரைவரோ கண்டக்டர்தான் அடிக்கிறார் என நினைத்து பேருந்தை நிறுத்தி

"டேய் எவண்டா அது விசில் அடிச்சது "என்று கண்டக்டர் கத்தி மறுபடியும் அவர் விசிலடித்து பேருந்தை கிளப்புகிறார்


மு.னி.ய.ம்.மா... ஓ ஓ..ஓ..ஓ

மூ.க்.க.ம்.மா... ஓ ஓ..ஓ..ஓ


சிலர் அவர்களுக்கு தெரிந்த பிகர்களின் பெயர்களை கூறி ஒரு ஓ போடுகிறார்கள்.


ஒரு கைகளால் பேருந்தின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு பின் கைவலித்தால் கையைமாற்றி தொங்கிக்கொண்டே வருவது கல்லூரி மாணவர்களுக்கு கைவந்த கலை..

யார் சொல்லிக்கொடுத்தார்களோ தெரியாது..? ( ஒருவேளை குற்றாலத்தில் எடுத்த பயிற்சி யாக இருக்குமோ ..? )


பேருந்து மார்கட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது வால்களின் தலைவன் பசுலுத்தீன் திடீரென்று பேருந்தின் கூரைப்பகுதிக்கு ஏற ஆரம்பித்துவிட்டான். ஏனென்றால்

அடுத்த பேருந்து நிலையம் தேவதைகளின் தேவாலயம். ஆம் அந்த மார்க்கட் பேருந்து நிலையம் அழகு தேவதைகளின் சங்கமிப்பாகவே விளங்கியது.


"டேய் டேய் என்னடா பண்ற..இறங்குடா"


"நான் டாப்புக்கு போகப்போறேன்..வர்றியா"


"டேய் மாப்ள வேண்டாண்டா பந்தா காட்டாதே கீழே விழுந்தா சங்குதான் அப்புறம் பிகருங்க முன்னாடி பந்தா காட்டமுடியாது"


சொல்பேச்சு கேட்காமல் தாவிகுதித்து மனிதன் இதிலிருந்து பிறந்திருப்பானோ என்ற சந்தேககத்தை முழுமையாக தீர்த்து வைத்தான்.


அவனோடு சில நண்பர்களும் ஏறினார்கள்..முதலாண்டு மாணவர்கள் டாப்பில் ஏறிய மாணவர்களை ஹீரோவாகப்பார்த்தார்கள்

அதோ வந்து கொண்டே யிருக்கிறது மார்க்கெட்.. ஆம் தேவதைகளின் மார்க்கெட்

மார்க்கட்டை பேருந்து அடைந்தது. யாருடைய கவனமும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த எங்கள் மீது விழவில்லை..பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்டுக்கொண்எருந்த அவர்களை ஒரு ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்..


அங்கே பாருங்களேன் வழக்கமாய் லுக் விட்டுக்கொண்டிருக்கும் அந்த தயிர்சாதம் கூட மேற்கூரையை பார்க்கிறாள்.


அந்த பேருந்து அந்த மார்க்கட் பேருந்து நிலையத்தில் இரண்டே நிமிடங்கள் தான் நிற்கும் . ஆனால் அந்த கால இடைவெளிக்குள் பரிமாறப்படும் விழிப்பார்வைகளினிடையே இரும்பை வைத்தால் கூட வெட்டுபட்டுவிடும்


இரண்டு நிமிட நிறுத்தலில் - எத்தனை

இதயங்களோ ஓட ஆரம்பிக்கும்



பேருந்து ஓட ஆரம்பிக்கும்போதோ

அத்தனை இதயங்களும் நின்றுவிடும்


பேருந்து மார்க்கெட்டை கடந்து சென்று கொண்டிருக்கிறது.


"டேய் டேய்..எலக்டிரிக் வொயர்டா..தலையை குனிங்கடா.." திடீரென்று ராஜா கத்தினான் மேலிருந்தவர்களை பார்த்து


ஆம் மேலிருந்து ஆடுபவர்கள் அந்த எலக்டிரிக் வொயரை கவனிக்காமல் ஆட, மாணவர்கள் பதறிப்போய் கத்துகிறார்கள்.


உடனே பசூலும் நண்பர்களும் தலையை குனிந்து கொண்டு பதறிப்போய் இறங்குகிறார்கள்..



பேருந்து கல்லுரியை நோக்கி மேள தாளங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிறது..வழியில் மாணவிகளின் கூட்டங்களை கண்டால் போதும்


"டேய் அந்த இரட்டை ஜடைக்கு ஒரு ஓ போடுங்க..."



"டேய் அந்த மிஸ் காலேஜுக்கு ஒரு ஓ போடுங்க.."


என்று களைகட்டிக்கொண்டு கல்லூரியை நெருங்கிற்று. எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு முன்னர் சாமிகடை என்று ஒரு கடை இருக்கிறது.

அந்தக்கடையினில் பேருந்தை நிறுத்தச்சொல்வார்கள். அங்கே ஸ்டாப்பிங்கே கிடையாது..ஆனால் அந்தக் கடைதான் களைத்துப்போய் வந்த மாணவர்களுக்கு நிழல் தருகின்ற போதிமரம்

ஆம் பஸ்ஸில் வந்த மாணவர்கள் இரயில் விடுகின்ற கடை அது.


எல்லா ஆட்டங்களும் முடிந்து பேருந்து கல்லூரிக்கு சரியாக 10.00 மணிக்கு சிலசமயம் 10.30 - 10.40 என்று தாமதமாகப் போய்ச்சேரும்..


தாமதமாகிவிட்டாலே போதும் பிரின்ஸ்பால் உட்பட சில துணை ஆசிரியர்கள் வாசலுக்கு வந்து கவலை தொனித்த முகத்தோடு காத்துநிற்பார்கள்..இவனுங்க இன்னிக்கு ஏதாவது பிரச்சனையில்லாமல் வந்து சேரவேண்டுமே என்று.


பேருந்தில் வரும் மாணவர்கள் வாசற்படியில் முதல்வர் நிற்கிறார் என்று தெரிந்ததுமே போதும்..அப்படியே ஓடுகின்ற பேருந்தில் இருந்து குதித்து
சிலர் கேண்டீன் வழியாக..
சிலர் டாய்லெட் வழியாக..
சிதறிப்போய் பின்னர் அவரவர்கள் வகுப்பறைக்குப் போய் சேருவார்கள்..


வாசல் வழியாக நேர்மையாக வரும் மாணவர்களை பிரின்ஸ்பால் பிடித்து வைத்துக்கொண்டு "எந்த க்ளாஸ்..? என்ன பெயர்;.? என்ன நம்பர்? "என்று கேட்டு துளைத்து எடுத்துவிடுவார்

அவரவர் வகுப்பறைக்கு பக்கம் செல்லும் வரையிலும் அந்த வராண்டாவில் மெதுவாக நடந்து சென்று வகுப்பறை பக்கத்தில் சென்றதும் டப் டப் டப் என்று கால்களை வேகமாய் அடித்துக்கொண்டு மூச்சிறைப்பதாய் நடிப்பது போல க்ளாஸீக்கு ஆர்வத்தோடு ஓடி வருவதாய் காட்டிக்கொள்வோம்..


"தெரியுண்டா தெரியும்..நடிக்காதீங்கடா..வாங்க வாங்க உள்ள போங்க " என்ற ஆசியரியரின் அன்பான உபசரிப்போடு உள்ளே நுழைவோம்...


----------------------------------- ************** __________________-


இப்பொழுது அந்த பேருந்தின் கூரை மீது நடனமாடிய பசூல் டவுணில் இரும்புக்கடை வைத்திருக்கிறான்


என் கையை பிடித்தவனை தள்ளி விட்டானே அந்த தக்கரை பீர்முகம்மது அவன் எண்டர்பிரைஸஸ் கடை வைத்திருக்கிறான்


ராஜா - சினிமாவில் உதவி இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறான்


கோழி காதர் சென்னையில் ஜவுளிக்கடையில் இருக்கின்றான்

சிலர் வெளிநாட்டுப்பயணம் - சிலர் கணிப்பொறி புரொகிராமராக சென்னை - பெங்களுரில்


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் இருக்கிறாhர்கள். இப்பொழுது மீண்டும் அவர்களை காண நேர்ந்தால் கூட அந்த பழைய சந்தோஷங்கள் - பேச்சுக்கள் - கிண்டல்கள் - இருக்காது


"டேய் என்னடா நல்லாயிருக்கியா.."

"நல்லாயிருக்கேன்"

"இப்ப எங்கடா இருக்கே "

"துபாயில இருக்கேன்டா"


"கல்யாணமாயிருச்சாடா"

"இல்லைடா"


"சரிடா பார்ப்போம்டா கடையில ஆள் இல்லை சீக்கரம் போகணும்"


அவ்வளவுதான் முடிந்துவிடுகிறது உரையாடல்கள். மேலும் பேசுவதற்கு எதுவுமே கிடைப்பதில்லை..கல்லூரி நேரத்தில் மணிக்கணக்காய் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டேயிருப்போம்..

இப்பொழுது 5 நிமிடங்களுக்கு மேல் மௌனமாகிவிடுகிற பேச்சுக்களில்தான் நட்பு இருக்கிறது. கவலைகள், குடுப்ப பிரச்சனைகள் ஆகியவற்றில் சிக்கி தவிக்கும் சில நேரங்களில் மனம் நினைத்துப்பார்ப்பதுண்டு


ச்சே கடைசி வரை கல்லூரி மாணவர்களாகவே கிண்டல்கள் கேலிகளோடு இருந்திருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்..?

-ரசிகவ் ஞானியார்

தேன் கூடு