Monday, February 25, 2008

கைதட்டுங்கள்! காதல் தோற்றுவிட்டது
அன்று பார்த்தது போலவே..
இன்றும் இருப்பாயோ?

பரிட்சை தோல்விக்கே
பயந்தாயே..?
இப்பொழுது
சின்ன சின்ன தோல்விகளை ...
எப்படித் தாங்கிக்கொள்கிறாய்?

யதேச்சையாய்
கடைவீதியில்….
காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?

கல்லூரி இருக்கை மீது
தாளம் போடும் பழக்கத்தை...
விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?

அன்றுபோலவே இன்றும்
மழைத்துளிக்குள் ...
முகம்புதைத்து விளையாடுகிறாயா?

ஒரு இலையுதிர் காலத்தில்
சருகு மிதித்து ...
சந்தோஷப்பட்ட அந்த
குழந்தைதனம் இன்னமும் இருக்குமா?

இப்படி
எங்கு இருந்தேனும்
எல்லா சந்தர்ப்பங்களிலும்..
சின்ன சின்ன நிகழ்வுகளிலிருந்து கூட
காதலைப் பிரித்தெடுக்கத் தவறுவதில்லை...
பிரிந்து போன காதலர்கள்!

ஆயுள் முழுவதும்...
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை...
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?


- ரசிகவ் ஞானியார்

Sunday, February 17, 2008

பிரிவுபிரிவுகளின் காயங்களில்...
பக்குவப்பட்டு,
பிரிவோம் எனத்தெரிந்தே
பழகுவதால்...
வலிப்பதில்லை எந்தப் பிரிவும்!
காதல் பிரிவைத் தவிர...

- ரசிகவ் ஞானியார்

Friday, February 15, 2008

உதிக்காமல் மறையும் சூரியன்


இதோ இவரைப் பார்த்தால் இந்தியன் கமல் ஞாபகம் வருகின்றதா..? பெங்களுர் சாலைகளில் இந்த மனிதரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சைக்கிளின் முன்னாலும் பின்னாலும் பத்திரிக்கைகளை நிரப்பிக்கொண்டு செய்திகளைச் சுடச்சுடத் தந்தவரே இப்பொழுது செய்தியாகியிருக்கின்றார்.

1950 ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு இவர் வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கின்றார் என்றால் பாருங்களேன்.

அட அப்படிப்பட்ட மனிதருக்கு இன்று என்ன நேர்ந்தது? ஏன் சாலைகளில் பத்திரிக்கை விற்றுக் கொண்டிருக்கின்றார் என்று உங்கள் மனதிற்குள் எழும் ஆச்சர்யங்கள் எனக்குள்ளும் எழுந்தது, இதோ அவரைப் பற்றிய சுவாரசியங்கள்

இவருடைய பெயர் உதய் பிரகாஷ் குப்தா. வயது 50 ஐ தாண்டியிருக்கும். தினமும் அதிகாலையில் பனிபொழியும் பெங்களுர் வீதியினில் 4.30 மணிக்கு விடிந்தும் விடியாத அரையிருட்டில் பத்திரிக்கை விற்பவர்.

பத்திரிக்கைகளை
இருட்டில் விற்றவர்…
பத்திரிக்கை மூலம்
வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றார்!
ஆனால் அவர் வாழ்க்கை
இன்னமும் இருட்டுக்குள்தான்!வீடு வீடாக விற்று போக மீதமுள்ள பத்திரிக்கைகளை மார்க்கெட் பகுதிகளுக்குச் சென்றும் சாலையினில் சென்றும் அன்றைய முக்கியமான செய்தியை உரக்க சப்தமிட்டு விற்கத் தொடங்கிடுவார். இந்த வேலையில் தனக்கு முழு திருப்தியிருப்பதாக கூறுகின்றார்.

தன்னுடைய தந்தை நேர்மை நாணயம் தவறாமல் வாழ்ந்து வந்ததால் தனக்காக எங்கேயும் சிபாரிசு செய்த அவர் விரும்பவில்லை. தன்னுடைய மகன் யாருடைய சிபாரிசுமின்றி சொந்த திறமையில் வேலை தேடிக்கொள்ளவேண்டும் என நினைத்ததால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று புலம்புகின்றார்.

அப்படி சிபாரிசு செய்கின்ற அளவுக்கு அவர் தந்தை பெரிய பதவி வகித்தவரா..?

ம.;… அவர் தந்தை மோகன்லால் குப்தா …1960 ம் ஆண்டு பீகாரில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் …

"அந்த நேரத்தில் மோட்டார் மெக்கானிக் வேலைக்காக டீளுசுவுஊ பீகார் டிரான்ஸ்போர்ட்டில் சிபாரிசு செய்யுமாறு என்னுடைய தந்தையை கேட்டேன்.

எனக்கு அதற்கு உண்டான தகுதி இருந்தது. ஆனால் அதிகாரிகள் 20000 ரூ லஞ்சமாக கேட்டதால் என்னுடைய தந்தை மறுத்துவிட்டார். திறமைக்கு கிடைக்காத வேலை லஞ்சத்திற்கு கிடைக்கவேண்டுமா என்று பிடிவாதமாய் இருந்துவிட்டார். பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைத்தது."
என்று சிரித்துக்கொண்டே சொல்கின்றார் உதய்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்து சென்றதாக நினைவு கூறுகின்றார்.

மகனுக்கு சிபாரிசு செய்ய முடியாத தந்தையின் பிடிவாதத்தை குறை சொல்வதா? இல்லை அவருடைய நேர்மையை பாராட்டுவதா?

திறமையை நம்பாமல் சிபாரிசை நம்பிய உதய்யைக் குறை சொல்வதா? லஞ்சம் கொடுத்து சேரும் வேலை வேண்டாமென உதறிவிட்டு பத்திரிக்கை விற்று பிழைக்கும் உதய்யை பாராட்டுவதா?

ஒரு தலைமுறையின் வளர்ச்சினையே லஞ்சம் அழித்துவிட்டதே? தாத்தாக்கள் வேண்டாம் வருங்கால இளைஞர்கள் மூலமாகவாவது அவைகள் ஒழிக்கப்பட்டுவிடுமா?

உதய்யின் வீட்டிற்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் எல்லாம் வந்து சென்று என்ன புண்ணியம்? இன்னமும் விடுதலை வந்து சேரவில்லையே அவருக்கும் இந்தியாவிற்கும்.!

பஞ்சத்தின் பிடியில் பாரதமே கிடக்கும் ஆனால்
லஞ்ச ஊழல் மட்டும் லாவகமாய் நடக்கும்
மனிதனை மதிக்கின்ற தேசம் வேண்டும் - இனி
தேசத்தை மதிக்காத மனிதன் வேண்டாம்- ரசிகவ் ஞானியார்

Thursday, February 14, 2008

காதலர் தின வாழ்த்துக்கள்
பூங்காக்களின் செடி மறைவில்
கற்புகளை கடைவிரிக்கும்
காதலர்களுக்கும்

கடற்கரைப் பரப்புகளில்
மணலுக்குள் மானத்தைப் புதைத்த
காதலர்களுக்கும்

அவரவர்களின்
வருங்கால கணவன் /மனைவிக்குத் தெரியாமல்
வாழ்த்துகிறேன்
காதலர் தின வாழ்த்துக்கள்


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு