Saturday, June 13, 2009

மருதநாயகம்

ஏனோ இவரது வரலாற்றை வெளி உலகிற்குத் தெரியாமல் அழிக்க முற்பட்டிருக்கின்றனர். அவற்றை திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சார்ந்த *வரலாற்று எழுத்தாளரான செ.திவான்* அவர்கள் எழுதிய *நிகரற்ற பெருவீரன் கான்சாஹிப் மருதநாயகம் *என்ற நூல் கான்சாகிப்பின் வாழ்க்கையை போராட்டத்தை எடுத்துரைத்தது.

நான் குளித்து கரையேறிய அந்த தாமிரபரணி ஆற்றுப்பக்கம் ஒரு காலத்தில் இரத்த்க குளியல் நடந்திருக்கின்றதாம்?

நான் கிண்டலடித்தபடி சென்ற அந்த கல்லூரி சாலைகளில் பிரெஞ்சுப்படைகள் இளைப்பாறிச் சென்றிருக்கின்றார்களா?

கார்களில் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த திருநெல்வேலிச்சாலைகளில் ஒருநாள் குதிரைகளின் ஊர்வலம் நடந்ததாமே?

இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்ட வீரன் இதோ நான் விளையாடித்திரிந்த எனது பகுதிகளிலிருந்துதான் தோன்றியிருக்கின்றானாமே?

கமலின் சரித்திர வீரன் மருதநாயகம்பிள்ளை நான் உலவிய இந்த திருநெல்வேலி - பாளையங்கோட்டைப் பகுதிகளில்தான் தனது படைகளோடு போராட்டம் நடத்தியிருக்கின்றார்.

அவரைப்பற்றிய தகவல்களை இங்கே கொஞ்சம் அலசி ஆராய்வோமா..?


Photobucket - Video and Image Hosting
மருதநாயகம் பிள்ளை என்ற பெயரைக் கேள்விப்பட்டவுடன் கமல் தன் வரலாற்றுப் படமாக எடுக்க நினைத்து இங்கிலாந்து ராணியின் முன்னிலையில் எடுத்த விழா ஒன்று ஞாபகத்திற்கு வரும். நடிகர் கமல்ஹாசனால் வரலாற்று நாயகனாக போற்றப்பட்ட அந்த மருதநாயகம் பிள்ளை யார்..?

திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் உள்ளது கான்சாகிப்புரம் - விருதுநகரிலும் ஒரு கான்சாகிப்புரம் இருக்கின்றது. மதுரை திருமங்கலத்திலும் ஒரு கான்சாபுரம் இருக்கின்றது.

மதுரை தெற்குமாசி வீதி - தெற்கு வெளி வீதி இடையே கான்சா மேட்டுத் தெரு - மதுரை கிழக்கு வெளி வீதிக்கும் இராமநாதபுர சாலைக்கும் இடையே கான்பாளையம்

என்று எல்லாப்பக்கமும் ஒத்த பெயருடைய வீதிகள் மற்றும் பகுதிகள் இருக்கும் அளவிற்கு புகழ்பெற்ற அந்த கான்சாகிப் என்பவர் யார்?


மதுரை - திருநெல்வேலி - இராமநாதபுரம் பகுதிகளில் இந்தப்பெயர் பிரபலமாக இருப்பதனால் இந்தப்பெயருடைய ஒருவர் புகழ்பெற்று அந்தப்பகுதியில் இருந்திருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்களால் ஆராய்ந்த பொழுதுதான் மறைக்கப்பட்ட இந்த வீரனின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.ஆங்கிலக் கம்பெனிகளையும் ஆற்காடு நவாப்பின் படைகளையும் கதிகலங்க வைத்த சுதேசிப்படையின் கருப்பு வீரன்தான் கான்சாகிப் என்ற அழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை.

ஏனோ இவரது வரலாற்றை வெளி உலகிற்குத் தெரியாமல் அழிக்க முற்பட்டிருக்கின்றனர். அவற்றை திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சார்ந்த வரலாற்று எழுத்தாளரான செ.திவான் அவர்கள் எழுதிய நிகரற்ற பெருவீரன் கான்சாஹிப் மருதநாயகம் என்ற நூல் கான்சாகிப்பின் வாழ்க்கையை போராட்டத்தை எடுத்துரைத்தது.

1725ம் ஆண்டு இவர் வேளாளர் குலத்தில் பிறந்து பின்பு இஸ்லாமியராக மாறியிருக்கலாம் என்று தேசியக்கவி சுப்பிரமணி பாரதியை கவிதைப்போட்டியில் வென்ற பெருங்குளம் மாதவையர் என்பவர் குறிப்பிடுகின்றார்.

மதுரையை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் ஒரு மார்க்க அறிவு பெற்ற ஏழை இஸ்லாமியரின் மகனாகப் பிறந்தார் . இவருடைய தந்தை தையற்தொழில் செய்து வந்தார். இவருக்கு யூசுப்கான் என்று பெயரிட்டார்கள் என்று மஹதி என்பவர் குறிப்பிடுகின்றார். இதற்கு உதாரணமாக இவரைப்பற்றி வெளிவந்த நூல்கள்

சமகாலத்தில் எழுதப்பட்ட நூல்கள் - 1885 ம் ஆண்டு வெளிவந்த கான் சாகிப் சண்டை - எம். எஸ் ஹில் லால் எழுதப்பட்ட 1960 ல் வெளிவந்த கான் சாகிப் சண்டை நூல்களில் எல்லாம்

மகுட முடியால் விருதிலங்க
மதயானை வளர்த்தெடுத்த வரிவேங்கைக்குட்டி
விகடமிகு வேர்கள் குல காலன்
விசை யாலீம் குலம் விளங்க வரு தீரன்.

என்ற பாடல் கான்சாகிப்பின் வீரத்தையும் - ஆலிம் குலம் விளங்க வந்த வீரன் என்று சொல்லப்படுவதால் அவர் இஸ்லாமிராகப் பிறந்தார் என்வும் சொல்லுகின்றது

அது மட்டுமல்ல அவர் இறந்த போன ஆண்டுக்கு அடுத்தவருடம் கி.பி 1765 ல் பாளையங்கேட்டையில் கம்பெனியில் மதிக்கத்தக்க ஒருவர் ஸ்காட்லிருக்கும் நண்பருக்கு எழுதுகின்ற கடிதத்தில்

I at the same time made you acquired with our army's having taken the field under the command of colonel monsoon, in order to reduce the Rebel, commonly known as khan sahib. Khan Sahib is by birth a Moor and is descended from the ancient seed of that nation.


இங்கே மூர் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு One of the Mohammeden people என்று விளக்கப்பட்டுள்ளது.


மருதநாயகம் பிள்ளை

மதுரை மக்களால் போற்றப்படக்கூடிய - மதுரை ஆளுனராக - தலைவனாக விளங்கியதால் மதுரை நாயகம் என்று அழைக்கப்பட்டார். பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவியதால் மருதநாயகம் என்று அழைக்கப்பட்டர்.

தன்னுடைய இளைமை பருவத்தில் பெற்றோருக்கு அடங்காப்பிள்ளையாக முரட்டுத்தனமாக வளர்ந்ததால் கிராமத்து மக்களால் வெறுப்புணர்வு சம்பாதித்து மதுரையிலிருந்து புதுச்சேரிக்கு ( பாண்டிச்சேரி ) புகலிடம் புகுந்ததார். அங்கு தையற்தொழில் - படகோட்டி என்று பல தொழில்கள் புரிந்தார்.

இளமைப்பருவத்தில் தன் சகாக்களிடையே தோளில் தடி ஒன்றைச் சாத்திக்கொண்டு "டேய் நான் சிப்பாயி " என்று வீர நடை போட்டு வந்த வீரன்.

பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைநகரமாக விளங்கியது. பிரெஞ்சு இராணுவத்தளபதிகளும் - ராணுவ வீரர்களும் ஓய்வெடுப்பதற்கும் பொழுதுகளை மகிச்சியாய் போக்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம்தான் பாண்டிச்சேரி.

அவர்கள் உலா வருகின்ற வீதியிலே நமது கான்சாகிப் யாருக்கும் அடங்காமல் தனது கட்டமைந்த உடலும் கவர்ச்சிக்கரமான வனப்பும் ஜொலிக்க சுதந்திரமாக உலா வந்தார்

தனது தலையில் கைக்குட்டையை புதிய முறையில் கட்டிக்கொண்டு அடங்காமல் திமிர்த்தனமாக பாண்டிச்சேரி வீதியில் இவர் வருவதை பிரெஞ்சு அதிகாரிகள் கவனித்தனர்.

கி.பி. 1744 ல் ஜாக்விஸ்லா ( Jacques Law ) என்ற பிரெஞ்சு இராணுவத்தை சார்ந்தவரிடம் கான்சாகிப் போர்பயிற்சி - வாள் வீச்சு - துப்பாக்கி - பீரங்கி சுடுதல் -அடங்காத குதிரையில் லாவகமாக ஏறி காற்றாக பறப்பது என்று மற்றவர்கள் செய்யமுடியாத வியப்பில் ஆழ்த்துகின்ற வீர செயல்களை செய்து வந்தார்.

அவருடைய வீர சாகசங்கள் மற்றும் வீதிகளில் தைரிய உலா இவற்றை பொறுக்க முடியாமல் பிரெஞ்சு அதிகாரிகள் இவருக்கு திருட்டுப் பட்டம் சூட்டினர்.

சுதந்திரமாக திரிவது திருடனின் செயல் என்றும் வியாபாரப் பொருட்கள் இருந்த இடத்தில் யாருக்கும் அடங்காமல் பிரெஞ்சுக் கண்களுக்கு கொஞ்சமும் தன் வணக்கத்தைச் செலுத்தாமல் யூசுப்கான் திரிவது திருடர்களைக் கூட்டுச் சேர்க்கத்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு மான்ஷி டீலா என்பவரால் தண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

இவர் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு காது அறுக்கப்பட்டது என்று இவர் மீது களங்கம் விளைவிப்பதற்காக அவரது எதிரிகளால் பரப்பப்படுகின்றது. ஆனால் இவரைப்பற்றி வீர குறிப்புகள் எங்கும் இவர் காது அறுபட்டதாக சொல்லப்படவில்லை. ஒரு மாபெரும் வீரர் காதுகள் அறுப்பட்ட நிலையில் சண்டையிடுவது - ஆளுனராக இருப்பது என்பது சலசலப்புக்கு உடைய தகவல்கள். ஆனால் வரலாற்றுப் புத்தகங்கள் எங்கும் இவருக்கு காது அறுபட்டதான குறிப்பிடப்படவில்லை. ஆகவே அது பொய்யான தகவலாக கருதப்படுகின்றது.

பின் ஜாக்கிஸ் லாவின் பணியிலிருந்து விலக்கப்பட்ட யூசுப்கான் மற்றொரு ஐரோப்பியரான பிரான்டன் என்பவரிடம் பணியாளாக சேர்;நததர். ஆங்கிலம் - பிரெஞ்சு மற்றும் போச்சுக்கீசிய மொழிகளில் தேர்ச்சிப் பெற்ற பிராண்டன் யூசுப்கானுக்கும் அவற்றைக் கற்றுக்கொடுத்தார்.


பின்னர் மராட்டிய வம்ச அரசர்களுள் மிகவம் செல்வச்செழிப்பாக ஆட்சி புரிந்த கடைசி மன்னன் தஞ்சாவூரை ஆண்டு வந்த பிரதாப சிம்ஹனின் படையில் யூசுப்கான் சேர்ந்தார்

பின்னர் திருப்பதி நெல்லூர் பிரதேசங்களை ஆண்டு வந்த முகமது கமால் என்பவரிடம் யூசுப்கான் பணியாற்றியதாகவும் அங்கு காயம்பட்டவர்களுக்கு அவர் மருத்துவம் பார்த்ததாகவும் ஆற்காடு நவாப் தனது குறிப்பில் தெரிவித்திருக்கின்றார்.

சுதேசிப் படையில் பணியாற்றி முறையே தண்டல்காரர் - வரி வசூலிப்பவர் - சிப்பாய் - சுபேதார் என்று படிப்படியாக முன்னேறி சிப்பாய்களின் கேப்டனாக மாறினார்.

இராபர்ட்க்ளைவின் படைகளை எதிர்த்து போரிட்டு சந்தாசாகிப்பிற்கு ஆதரவாக போரிட்ட யூசுப்கான் இறுதியில் ராபர்ட் க்ளைவ்வுடன் சேர்ந்தார்.


கி.பி. 1751 நவம்பரில் முகமதலிக்கு எதிராக சந்தாசாகிப்புக்கு ஆதரவாக போரிட்ட சுதேசிப்படைப் பிரிவினர் ராபர்ட்க்ளைவின் ஆங்கிலேச் சுதேசிப்படைகளோடு தங்களை இணைத்துக்கொண்டனர். அந்தப் படையில் ஒருவர்தான் யூசுப்கான்.

திருச்சியில் ஆங்கிலேயப்படைகள் பலவீனமானதை உணர்ந்து திருச்சிக்கு கவர்னர் சாண்டர்ஸ் அவர்கள் ராபர்ட்க்ளைவ்வை அனுப்ப - ராபர்ட் க்ளைவ் தன்னுடன் கான்சாகிப்பையும் அழைத்துச் சென்றார்.

கான்சாகிப்பின் திறமையைக் கண்டு காப்டன் டால்டன் க்ளைவுக்கு எழுதிய கடிதத்தில் ,

உங்களுடைய நெல்லூர் சிப்பாய்களில் சுபேதாhர் ( கான்சாகிப்பின் இன்னொரு பெயர்) சிறந்த வீரர். பாதுகாப்பாக இருந்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆங்கிலேயர்களால் "Heaven born General" and "Hero of Arcot" என்று அழைக்கப்பட்டார்.


ஆங்கிலேயப்படைகளின் நம்பிக்கையாக கான்காசிப் இருந்தாலும் இறுதியில் வெள்ளையர்களை எதிர்த்து களம் இறங்கிய முதல் வீரன் கான்சாகிப்தான்

ராபர்ட் க்ளைவுடன் இணைந்து பிரெஞ்சுப்படைகளை தாக்கியதில் யூசுப்கான் வீரமாக சண்டையிட்டார்; என்று ஆங்கிலேயக் காப்டன் டால்டன் கூறுகையில்

பிரெஞ்சுக்காரர்கள் தங்களது முகாமின் முன்னால் இருந்து சுட்டுக் கொண்டிருந்த பொழுதிலும் அதனைப்பொருட்படுத்தாது கிளைவ்வோடு புதிதாக இணைந்த இந்த வீரர்கள் சப்தமிட்டுக்கொண்டே துணிச்சலாக பிரெஞ்சுக்காரர்களை தாக்கிட ஓடினார்கள்


திருச்சியில் இருந்த மேஜர் லாரன்ஸின் படைகள் பஞ்சத்தினால் படைகலன்கள் பற்றாக்குறையினாலும் - உணவுத் தட்டுப்பாட்டிலும் தவித்துக்கொண்டிருந்ததது .

பிரெஞ்சுக்காரர்களின் படைகள் வேறு திருச்சியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தது.. ஆங்கிலேயப்படைகளுக்கு வருகின்ற உணவுப்பொருட்கள் மற்றும் படைகலன்கள் அடங்கிய வாகனங்களை தடுத்துவிட்டால் அவர்கள் சரண் அடைந்து விடுவார்கள் என்று பிரெஞ்சுக் கவர்னர் டியுப்லிக்ஸ் நம்பினார்.

இந்த நிலையில்தான் திருச்சியில் இருக்கின்ற ஆங்கிலேயப் படைகளுக்கு உணவு மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லுகின்ற பொறுப்பு யூசுப்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் ஒரு வாகனத்திற்கு கூட சேதம் விளைவிக்காமல் பத்திரமாய் கொண்டு சேர்த்தார்.

மேஜர் லாரன்ஸ் கூறும்பொழுது "தலைசிறந்த சுதேசிப்படை வீரன் யூசுப்கான். திறமையும் பதட்டப்படாமலும் அறிவாற்றலோடும் திகழ்ந்தார் என்றும் இவரைப்போன்று பிறவிலேயே வீரனாக உள்ள ஒருவரை நான் கண்டதில்லை" என்றும் கூறினார்.

கி. பி.1754ம் ஆண்டு மே 12 ல் ஆங்கிலேயப்படைகளுக்கு தேவையான சரக்குகளை கொண்டு செல்லும்வழியில் வழக்கமான மேஜர் காலியாட்டைச் சந்திக்கின்ற இடத்தில் சந்திப்பதற்காக நெருங்கும்பொழுது தனது குதிரை கனைப்பதைக் கண்டார்.


Photobucket - Video and Image Hosting

அந்த கனைப்புச் சப்தங்களுக்குப்பிறகு பல குதிரைகளின் கனைப்புச்சப்தம் கேட்கவே பக்கத்தில் பிரெஞ்சுப்படைகள் இருப்பதை உணர்ந்து கான்சாகிப் உஷராரானார். சிறிது நேரத்திலையே பிரெஞ்சுப்படைகள் கான்சாகிப்பை நோக்கி சுட ஆரம்பித்தனர். துப்பாக்கிச் சப்தத்தை கேட்ட காலியாட்டும் விநை;து வந்து யூசுப்கானுடன் இணைந்து கொண்டார்.

அங்கே ஒரு சிறிய போருக்கு தயாராகினர். பிரெஞ்சுப்படைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். கான்சாகிப்போ ஒரு பிரிவினை பிரெஞ்சுப்படைகளுக்கு வலப்பக்கமும் மற்றொரு பிரிவினை இடப்பக்கமும் அனுப்பி இருமுனைத்தாக்குதலில் ஈடுபடத்தொடங்க - ரோடு வெறுமனே ஆள் அரவமே இல்லாமல் இருந்ததால் ஒரே ஒரு தனிப்பட்ட வீரர் மட்டுமே வந்ததாக பிரெஞ்சுப்படைகள் நினைத்துக்கொண்டனர் ஆனால் இந்த இருமுனைத்தாக்குதலில் அவர்கள் நிலைகுலைந்து போயினர். பிரெஞ்சுப்படைகள் சமாளிக்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோமென ஓடிச்சென்றனர்.

பின் 1754 ல் யூசுப்கானுக்கு கம்பெனிகள் சிப்பாய்கள் அனைவருக்கும் கமாண்டர் என்ற பட்டமும் - இரண்டரை பென்னி எடையுள்ள தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

அதன்பிறகு கான் சாகிப் அனைவராலும் கமாண்டர் என்றே அழைக்கப்பட்டார்.

ஆங்கிலேயக் கர்னல் ஹீரான் மற்றும் நவாப்பின் குடும்பத்தில் பிறந்து மாபூஸ்கான் இருவரையும் மதுரையில் சீர்குலைந்த ஆங்கிலேயப்படைகளின் நிலைமையைச் சமாளிப்பதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்படனர். அவர்களுடன் கமாண்டர் யூசுப்கானும் அனுப்பப்பட்டார்.

மாபூஸ்கான் இராணுவத்தை திறமையாக வழிநடத்திச் செல்லும் அளவிற்கு திறமையானவர் அல்ல.
கர்னல் ஹீரானோ கேளிக்கை - களியாட்டம் என்று சுற்றிக்கொண்டும் பண ஆசை பிடித்த வெறியனாகவும் இருந்தான்.


யூசுப்கானோ நியாயம் - சத்தியம் வீரம் - கபடமின்னை உடையவராக இருந்தார். ஆகவே இவர்களுக்குள் ஒரு ஒவ்வாத் தன்மையே இருந்தது.

இதில் யூசுப்கான் மற்றும் ஹிரானுக்கிடையே வழிநடத்துதல் - ஆணைகள் இவற்றில் கருத்து வேற்றுமை ஆரம்பத்தில் இருந்தே நிலவியது.


இவர்கள் தெற்கு நோக்கி படைகளோடு விரைந்து சென்றனர். திருச்சிக்கு அருகேயுள்ள மணப்பாறையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த லட்சுமி நாயக் என்ற பாளையக்காரருடன் சண்டையிட்டு அவரை வெற்றிக்கொண்டு அவரைக் கிஸ்தி செலுத்த ஒப்புக் கொள்ள வைத்தனர்

Photobucket - Video and Image Hosting

பின் மதுரையை நோக்கி அவர்கள் முன்னேறினர். இவர்கள் வருவதைக் கண்ட மியானா மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள திரும்பூர் கிராமத்தின் கோவில்குடி என்னும் ஊர்க்கோயிலில் ஒளிந்து கொண்டார்.

கர்னல் ஹீரான் கோவில்குடியைத்தகர்க்க முடிவெடுத்து யூசுப்கானை அனுப்பிவைத்ததார். ஆனால் யூசுப்கானுக்கு கோவிலைத்தகர்த்து உள்ளே செல்ல விருப்பமில்லை. ஆகவே அவர் அதனை தட்டிக் கழிக்க நினைத்தார். பீரங்கிகள் சேதமடைந்து விட்டது கோயிலில் ஏறிச்செல்வதற்குண்டான ஏணிகள் கொண்டு வரவில்லை.

அது மட்டுமல்ல மியானா வேறு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டான் என்று ஹிரானிடம் கூற யூசுப்கானின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி கர்னல் ஹீரான் தனியாக தீப்பந்தம் எடுத்து கோயில் வாசலைத்தகர்த்துச் சென்றார்

இராபர்ட் ஓம் இதனைப்பற்றி குறிப்பிடும்பொழுது ,

இவையெல்லாம் அடங்காத காரியங்கள் . ஆண்டவனுக்கும் சம்மதம் ஆகா என்று கான்சாகிப் ஆட்சேபித்தான் என்றார்.

கோயில் வாயிலைத் தகர்த்து ஹீரான் சென்றது கான்சாகிப்பிற்கு உடன்பாடில்லை என்றாலும் வேறு வழியின்றி ஹீரானை பின்தொடர்ந்தார். பின் கோவில் குடியைத்தொடர்ந்து மதுரைக்கு வந்து அங்கு சில படைகளை நிறுத்தி வைத்துவிட்டு கி.பி. 1755 ம் ஆண்டு மார்ச் 25 ல் திருநெல்வேலி வந்தடைந்தார்கள்.

திருநெல்வேலியில் தனது பதவிவெறியை காட்ட ஆரம்பித்தார் ஹீரான். சென்னைக்கவுன்சிலிடமோ நவாப் முகமதலியிடமோ ஆலோசிக்காமல் திருநெல்வேலியை வருடத்திற்கு 15 லட்சம் ரூபாய் என்று குத்தகைக்கு விட்டார். மாபுல்கானையும் திருநெல்வேலியின் சிவில் கவர்னராக நியமித்தார்.

மாபுல்கானோ திருநெல்வேலியை பல பகுதிகளாக பிரித்து 24 லட்சம் ரூபாய் வருமானம் வரும் வகையில் வழிசெய்து 15 லட்சம் குத்தகைத் தொகை போக மீதி 9 லட்சத்தை தானே அடைந்து கொண்டார்.

குத்தகைத் தொகைகள் எதுவுமே கிடைக்காத நிலையில் நவாப்பும் கவுன்சிலும் அதிருப்தி அடைந்து ஹீரானை திரும்ப சென்னைக்கு விசாரணைக்கு வரவழைத்து விசாரித்து அவருக்கு சிறை தண்டனை கொடுத்தது. பின் சிறையில் தள்ளப்பட்டு தப்பியோடி ஐரோப்பியாவிற்கு ஓடிப்போனார் ஹீரான்.

பின் 1756 ல் திருநெல்வேலியானது முதல் வருடம் 11 லட்சம் - இரண்டாவத வருடம் 12 லட்சம் - 3 வது வருடம் 13 லட்சம் என்ற குத்தகையில் அழகப்ப முதலியாருக்கு ஆங்கிலேயர்கள் வழங்கினார்கள். முதலியாரும் அவருக்கு பொறுப்பான உள்ள குத்தகைப்பகுதிகளிலிருந்து பணம் வசூலித்து சீராக பணம் அனுப்பினார். அந்த சமயத்தில் அவரது குத்தகைப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் எல்லாம் ஆங்கிலேயக் கொடி பறக்க விடப்பட்டது.

இந்நிலையில் மாபூஸ்கான் தனது பிரதிநிதியாக மீர்ஜாபரை நியமித்து தானே குத்தகைக்கு சொந்தக்காரர் என்று குழப்பம் விளைவித்தார்.

இதனை எதிர்த்து கி.பி. 1756 ல் செப்டம்பர் 27ம் நாள் முதலியார் நெற்கட்டான் செவல் பாளையம் பூலித்தேவன் மற்றும் ஜெகவீர கட்டபொம்முவின் ஏஜென்டுகள் அடங்கிய படைகளுடன் நெல்லைக்குள் நுழைந்தார்.

Photobucket - Video and Image Hosting

நெல்லைக்குள் நுழைந்த பாளையக்காரர்கள் பொருட்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ஆங்கிலேயச் சிப்பாய்களின் படைகளையும் சேதப்படுத்த தொடங்கினர்.

குத்தகைக்கு ஒத்தக்கொண்ட சீராக குத்தகை தந்த வந்த முதலியார் தமக்கு எமக்கு எதிராக திரும்புகின்றாரோ என்று ஆங்கிலேயர்களுக்கு முதலியார் மீது கோபம் வர ஆரம்பித்தது.

இந்நிலையில் மாபூஸ்கான் சில பாளையக்காரர்களின் உதவியோடு முதலியார் படைகளை விரட்டியடித்து திருநெல்வேலியை தம் கைவசமாக்கினார். ஆனால் வரிவசூல் நிலைமைகளை அவரால் சரிசெய்ய முடியவில்லை. ஆகவே திருநெல்வேலிக்கு கமாண்டர் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டார்.

புதிய ஆட்சி மாறியவுடன் அதிகாரிகள் இடமாற்றப்படுவதை இப்பொழுதுள்ள அரசியலில் கண்டிருப்போம். அப்பொழுதும் அப்படித்தான் இருந்தது. திருநெல்வேலிக்குள் நுழைந்தவுடனையே யூசுப்கான் மாபூஸ்கானை அழைத்து நவாப் முகமதலியோடு அவரைச் சமாதானம் செய்து கொள்ளுமாறு கூறி தமது சில படைகளொடு அவரை அனுப்பி விட மதுரைக்கு செல்லுகின்ற வழியில் மாபூஸ்கான் சில படைகளால் சிறைபிடிக்கப்பட்டார்.
யூசுப்கானின் படைகளும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.


உடனே யூசுப்கான் திருநெல்வேலியில் ஜமால் முகமது தலைமையில் 1000 சிப்பாய்களை நிறுத்தி வைத்து விட்டு மதுரைக்கு புறப்பட்டார். செல்லுகின்ற வழியில் விரட்டியடிக்கப்பட்ட தமது படைகளோடு இணைந்து மதுரையை நோக்கி முன்னேறினார்.

மதுரைக்கு செல்லும் வழியில் தெற்கேயுள்ள சிக்கந்தர் மலையில் ( திருப்பரங்குன்றம் ) இளைப்பாறி மதுரையின் நிலைமைகளை பற்றி தெரிந்து கொண்டார். சாலையில் அவ்வப்போது வந்து தாக்கிய சிறு சிறு குதிரைப்படைகளை வென்று மதுரையை நோக்கி முன்னேறினார். பின் சிறு சிறு போர்களுக்கிடையே மதுரையைக் கைப்பற்றினார்.

இந்தப் போர்க்குழப்பங்கள் - வரிவசூலின் தடுமாற்றம் - நிர்வாகச் சீர்குலைவு - கலகம் - பற்றாக்குறை ஆகியவற்றாலும் மைசூர் அரசுப்படை மற்றும் பிரெஞ்சுப்படைகளுடன் ஏனைய பாளையக்காரர்களும் சேர்ந்து விட்டால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்று கருதிய ஆங்கிலேயர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலியை ஆளுவதற்று திறமையானவர் கான்சாகிப்தான் என தீர்மானித்து கவுன்சிலிடமிருந்து அனுமதியும் பெறப்பட்டது.

இந்நிலையில் லாலி என்ற பிரெஞ்சுத்தளபதி 1759 ல் தனது படை வீரர்களோடு தனித்தனியாக பிரிந்து சென்று நாலாப்பக்கமும் சூழந்து சென்னைக் கோட்டையை கைப்பற்றுவதற்காக காத்திருக்க யூசுப்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டு யுத்தத்திற்கு தயாரானார்.

ஆங்கிலேயக் காப்டன் பிரஸ்டன் ஒரு படையுடன் முகாம் அமைத்திருக்க யூசுப்கானும் இன்னொரு படைகளுடன் முகாம் அமைத்து தனித்தனியே லாலியின் தலைமையிலான பிரெஞ்சுப்படைகளுக்காக காத்திருக்கலாலியோ பொழுது புலர்வதற்கு முன்னரே எச்சரிக்கை கிடைக்காத நேரத்தில் யூசுப்பின் முகாமிற்குள் நுழைந்து சுமார் 15 நிமிடங்கள் அவரது படைகளை தமது 6000 குதிரைப்படை வீரர்களுடன் தாக்கினார்.

யூசுப்கானின் படைகள் தாக்கப்படுவதை அறிந்து பிராஸ்டன் தமது படைகளோடு முன்னேறி வர பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து தப்பித்த யூசுப்கான் பிராஸ்டனுடன் இணைந்து சுமார் 700 வீரர்களுடன் பிரெஞ்சுப்படையை எதிர்த்து அவர்களை விரட்டியடித்தார். இது அவரது வீரத்தைப் பறைசாற்கும் போராக அமைந்தது.

6000 வீரர்களிடமிருந்து லாவகமாக தப்பித்ததோடு மட்டுமல்லாமல் 700 வீரர்களைக் கொண்டு அவர்களை விரட்டியடித்த யூசுப்கானின் பணி விலை மதிக்க முடியாததாக இருந்தது.

பின்னர் தமக்கு விதிக்கப்பட்ட பொறுப்பான நெல்லை மற்றும் மதுரையின் ஆளுனராகவும் பணியேற்று சிவில் மற்றும் இராணுவத்தின் தலைமைபொறுப்பை ஏற்றார்.

அந்தப்பொறுப்பில் இருந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

1. பிரெஞ்சு வீரர்கள் காவிரி அணையை தகர்த்து தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்தபொழுத அதனை முறியடித்து கல்லணையை காப்பாற்றினார்.

2. தஞ்சைப்பகுதியில் மக்களுக்கு விவசாயம் மட்டுமே அவர்களை உயிர் வாழ வைத்தது. முத்தரசநல்லூர் என்ற பகுதியில் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து விவசாயப்பகுதியை காப்பாற்றியது தஞ்சை மராட்டியருக்கும் ஆங்கிலேயரக்கும் இடையே உள்ள பகைமையை நீக்கினார்.

இதனை 1755 ல் ஜனவரி 11 ல் துர்க்காதாஸ் எஸ்கே சுவாமி என்பவர் தனது நூலில் குறிப்பிடும்பொழுது காவிரியைக் காத்த கான்சாகிபு என்று குறிப்பிடுகின்றார்.

3. மதுரைச் சீமையானது பரக்கத்துல்லா என்பவரின் நிர்வாகத்தில் இருந்தபொழுது அவர் அதிகாரத்துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். மதுரை கோயில்களின் முன் ஒரு முஸ்லிம் துறவிக்கு பள்ளிவாசல் கட்ட அனுமதியளித்தார். இதனையறிந்த யூசுப்கான் பரக்கத்துல்லாவை விரட்டியடித்து அவர் முஸ்லிம் துறவிக்கு அனுமதியளித்த இடத்தை கைப்பற்றி அந்த முஸ்லிம் துறவியை விரட்டியடித்தார்.

4. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துக்களை எல்லாம் சொந்தச் செலவுகளுக்காக பயன்படுத்திய பரக்கத்துல்லாவை விரட்டியடித்து விட்டு சிதறிக்கிடந்த கோயில் சொத்துக்கள் - நிலங்கள் - வருமானங்கள் ஆகியவற்றை கோயிலின் பராமரிப்புச் செலவுக்காக பயன்படுத்தினார்.

5. முந்தைய ஆட்சியாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட மதுரை அழகர் கோயிலை கைப்பற்றி திரும்பவும் நிர்வாகத்திடமே ஒப்படைத்தார் என்று கே. என். ராதா கிருஷ்ணன் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

6. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்

7. நாட்டின் அமைதியை ஏற்படுத்துதல்.

8. குழப்ப நேரங்களில் சூறையாடப்பட்ட பொருட்களை மற்றும் இடங்களை உரியவருக்கே தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தொழிலுக்கு வழிவகுத்தார்.

9. விவசாயிகள் மற்றும் நெசவுத்தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து தொழிலில் ஈடுபடச்செய்து நெசவுத்துணிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அவர்கள் வாழ்வை வளமாக்கினார்.

10. மதுரைக் குருக்களுக்கு உரிய ஊதியம் கொடுத்து அவர்களின் உரிமையையும் நிலைநாட்டினார்மக்கள் அவரது ஆட்சியை மறுபடியும் விரும்படியாக நீதி - நேர்மை - உதவும் தன்மை - பொருளாதார வளரச்சி என்று சிறந்த கண்ணோட்டத்தில் ஆட்சி புரிந்து வந்தார் கான் சாகிப்.

மன்னனைத் தேடிச்சென்ற மக்களுக்கு மத்தியில் மக்களைத்தேடி தேடிச் சென்று அவர்களது குறைகளை கேட்டு தீர்க்க ஆரம்பித்தார்.

ஆங்கிலேயர்களின் விதிகளுக்கு உட்பட்டு கமாண்டராக இருந்தபொழுதிலும் காவிரி நிலத்தை மீட்டது - கோயில்களின் சொத்துக்களை பாதுகாப்பது போன்ற காரியங்கள் செய்து வந்தார்.

இவைகள் எல்லாம் ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்திக்கொண்டு வந்தாலும் குத்தகைத்தொகையிலும் நிர்வாகத்திலும் அவர் நியாயமாக இருப்பதனால் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள நதியுண்ணி என்ற அணை பழுதாகிக் கிடந்ததைக் கண்டு கி.பி 1759 ல் அதனைக் புதுப்பித்துக் கொடுத்து தாமிரபரணிகரையோர விவசாயத்தை வளம் பெறச் செய்தார்.

ஆட்சி சிறப்பு

கான்சாகிபின் ஆட்சி சிறப்பை விளக்கும் கதைப்பாடல் ஒன்றில்

கருங்குருவி காடு மேய்ச்சு வரலாச்சு

கறந்த பால் வெளி வைத்தால் காகம் அணுகாது

வழிமீதில் பதின்மூன்று வராகனை யெறிந்தான்
எட்டியதைப் பார்க்க முடியாது அதிலே
ஈயெறும்பு மொய்க்கலாகாது

என்ற வரிகள் மாடு மேய்க்க கருங்குருவி செல்லும் என்றும் - கறந்த பாலை வீட்டிற்கு வெளியில் வைத்தால் காகம் கூட அணுகாது என்றும் - வீசியெறிந்த பணத்தை எறும்புகள் கூட தீண்டாது என்றும் அவரின் ஆட்சியின் நீதி நேர்மைகளை பறைசாற்றியது.

அரசாங்கம்தான் குடிமக்களின் தந்தை. அரசாங்கத்திற்கு நன்மைகள் விளைவிக்கும் உழவர்களும் தொழிலாளர்களும்தான் அந்த தந்தையின் அருமையான பிள்ளைகள் என்பதுதான் கான்சாகிபின் கருத்து

பாளையக்காரர்கள் அதிகாரிகள் என்று அனைவருமே அரசாங்கத்தின் பிள்ளைகள் - பாரபட்சம் ஏற்றத்தாழ்வு இன்றிஅவர்களை காக்க வேண்டியதுதான் அரசாங்கத்தின் கடமை. தனது சொத்துக்களையும் பிறரது சொத்துக்களையும் பாழாக்கி நாட்டை சூறையாடும் ஊதாரிகள் வாழ்வை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரகடனப்படுத்துகின்றார்.

ஆட்சியாளர்கள் மாறும்பொழுது எதிர்கட்சியாளர்கள் பாரபட்சமாய் நடத்தப்படுகின்ற இன்றைய அரசியலுக்கு மத்தியில் சார்ந்து இருப்பவர்கள் மட்டுமல்ல எதிர்ப்பவர்களும் மக்களே அவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று சொன்ன ஒரே ஆட்சியாளர் இவராகத்தான் இருக்கும்.

சென்னை ரெவின்ஸ்போர்டுக்கு திருநெல்வேலி கலெக்டர் ஸ்டீபன் ரம்பால்டு கி.பி. 1801 ல் எழுதிய கடிதமொன்றில் கான்சாகிப்பின் ஆட்சி நேரத்தில்தான் தொழில்வளங்கள் பெருக்கப்பட்டு அதிகமான லாபம் அரசுக்கு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார் அதன்படி

கி.பி 1770 ல் ஜமாபந்தின் போது 739035 சக்கரம் (ஒரு சக்கரம் என்பது 2.50 காசு )
கி.பி 1756 ல் அழகப்ப முதலியார் கட்டுப்பாட்டின் போது 635000 சக்கரம்
கி.பி. 1757 ல் 583000 சக்கரம்
கி.பி. 1758 ல் 663000 சக்கரம்
கி.பி. 1759 ல் கான்சாகிப் ஆட்சியின் போது 774000 சக்கரம்
கி.பி. 1760 ல் கான்சாகிப் ஆட்சியின் போது 1030000 சக்கரம்
கி.பி. 1761 ல் கான்சாகிப் ஆட்சியின் போது 1244000 சக்கரம்
கி.பி. 1762 ல் கான்சாகிப் ஆட்சியின் போது 1141000 சக்கரம்
கி.பி. 1763 ல் கான்சாகிப் ஆட்சியின் போது 1053000 சக்கரம்


எம்.எஸ் ஹில் குறிப்பிடும்பொழுது, "நாட்டின் நிலை - நடத்தை - நவின்ற நன்மொழிகள் இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் விவேகமும் ஆண்மையும் நேர்மையும் நிறைந்த காணக்கிடைக்காத நல் ஆட்சியாளராக கான்சாகிப்கை கருதமுடிகின்றது "திருநெல்வேலிச் சீமைக்குட்பட்ட ஆழ்வார்க்குறிச்சியை பாளையக்காரர்கள் ஆக்ரமித்ததாய் கேள்விப்பட்டு கி.பி. 1757 ல் மார்ச் 4ல் இரவோடு இரவாக கான்சாகிப் பெரும்படையுடன் அங்கு சென்று அதிகாலை 5 மணிக்கு அங்கு சென்று எதிர்ப்பு பாளையக்காரர்களிடமிருந்து ஆழ்வார்க்குறிச்சியை மீட்டார். பகல் முழுவதும் போரிட்டார்.
மாலையில் எதிர்ப்பு பாளையக்காரர்கள் கோட்டையை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்தப்போரில் கான்சாகிப்பின் படைகளில் 6 பேர் மட்டும் கொல்லப்பட்னர். எதிர்த்து நின்ற பூலித்தேவர் படைகளிலோ ஒரு தளபதியும் 300 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு சிங்கம்பட்டியை நோக்கிச் சென்றார் அவர் வருவதை அறிந்ததுமே அங்குள்ள படைகள் எல்லாம் ஓடிவிட உடனே அதனைக் கைப்பற்றி அங்கும் தமது படை வீரர்கள் 1000 பேரை நிறுத்திவிட்டு விரைந்தார்

பின் அங்கிருந்து சோழவந்தான் கோட்டைக்கு சென்ற பொழுது கோட்டைக்குள் இருந்தவர்கள் போரிட தைரியமின்றி ஓடிப்போயினர். அதனையும் போர் இல்லாமலையே எளிதாக மீட்டார்.

மதுரை


1757 ல் ஜுன் மாதத்தில் 3000 படைவீரர்களால் நிரப்பப்பட்ட மதுரைக் கோட்டையை மீட்பதற்காக சென்றபொழுது தங்களுக்கு போதிய பீரங்கி வசதிகள் இல்லாத நிலையிலும் தந்திரமாக கைப்பற்றி விடலாம் என்று இரவோடு இரவாக முயன்றபொழுது நாய் குரைத்ததால் அந்த திட்டம் பாழாயிற்று. பின் கான் சாகிப்பையும் - ரம்பால்டையும் அங்கு நிறுத்திவிட்டு திருச்சிக்கு பிரெஞ்சுக்காhர்களை எதிர்க்க ஆங்கிலேயர்கள் சென்றுவிட்டனர். இந்த அளவிற்கு கான்சாகிப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.

கான்சாகிப்பும் ரம்பால்டும் மதுரைக் கோட்டையை கைப்பற்றுவதற்காக தமது படைகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். எதிரிப்படைகளும் இவர்களைத் தாக்குவதற்காக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் ரம்பால்டின் படைகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனையறிந்த எதிரிப்படைகள் கான் சாகிப் படைகள் மட்டும்தான் தனியாக இருப்பதை அறிந்து அவர்களை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் குண்டு வீசிக்கொண்டே படையெடுத்து வேகமாய் வருவதை உணர்ந்த கான்சாகிப்பின் படைகளில் சிலர் ஓடிப்போயினர். சதுரவடிவமான அந்த முகாமில் ஒரே ஒரு வாசல் மட்டும்தான் இருப்பதால் எதிரிகள் எளிதாக நுழைந்து தாக்கும்படி இருக்கின்றது.

இந்நிலையிலும் மனம் தளராமல் ஓடிப்போன வீரர்களைப் பொருட்படுத்தாமல் தம்மிடம் இருந்த 10 பேரை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்த்து வந்த 400 வீரர்களுடன் போரிட்டார். 10 பேரை மட்டும் வைத்திருந்தாலும் யாரும் சிறைபிடிக்கப்படவோ - கொல்லப்படவோ - பின்வாங்கிவிடவோ முடியாத அளவிற்கு கான்சாகிப் அவர்களுக்கு நம்பிக்கையும் வீரத்தையும் கொடுத்து போரிட்டுக் கொண்டிருந்தார்


அப்பொழுது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ரம்பால்டு படைகளும் மீண்டு வந்து கான்சாகிப்போடு இணைந்து விட எதிரிகள் விரட்டப்பட்டனர்.


1757 நவம்பரில் மாபூஸ்கான் நெல்லைச் சீமையில் தன்னிச்சையாக இயங்கினார். பாளையக்காரர்கள் உதவியோடு பாப்பாக்குளம் - ஆழ்வார்க்குறிச்சி - பிரமதேசம் -
முதலிய பகுதியில் படைகளை நிறுத்தியும் களக்காட்டை பிடித்து திருவிதாங்கூர்காரர்களிடமும் கொடுத்தார். அந்த நேரத்தில் கான்சாகிப் நெல்லைக்கு விரைந்து மாபூஸ்கான் படைகளை விரட்டி விட திருவிதாங்கூர் படைகளை தாக்கி களக்காட்டை கைப்பற்றினார். திருவிதாங்கூர் படைகள் அலறியடித்துக்கொண்டு மலைகளில் சென்று ஒதுங்கிக் கொண்டார்கள்

போர்க்காயம்


1758 ல் துறையுர் ரெட்டி என்பவர் பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயக் கம்பெனியை எதிர்த்து வந்தார்.கேப்டன் ஸ்மித்தும் கான்சாகிப்பும் விரைந்து சென்று அவர்களோடு போரிட்டனர்.
தங்களிடமிருந்த வெடி மருந்துகள் தீர்ந்துவிட்ட போதிலும் நம்பிக்கையை மட்டும் வெடி மருந்தாக்கி அவர்களோடு எதிர்த்து போரிட்டு அவர்களை விரட்டியடித்தார்.

போரில் கான்சாகிப் கையில் எதிரியின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. குண்டுப்பட்ட இடத்தை துணியை வைத்து மறைத்துக்கொண்டு களத்தில் நின்று தைரிமாக போராடி வெற்றி பெற்றார்.

வாழ்நாள் முழுவதையும் போரிலையே கழித்த கான்சாகிப் இந்தப் போரில் மட்டும்தான் குண்டடிபட்டிருக்கின்றார்.

வடகரப்பாளையம்


வடகரப்பாளையக்காரர்கள் தொடர்ந்து தாக்குதல் கொடுத்து கொண்டு வருவதால் விவசாய மக்களுக்கும் மக்களின் தொழில்களம் பாதிக்கபட்டு வருவதை உணர்ந்த கான்சாகிப் அவர்களை அடக்கிட திட்டம் தீட்டினார்.

வடகரப்பாளையப் பகுதி தமக்கும் எதிரி திருவிதாங்கூர் மன்னனுக்கும் எதிரி என்பதை உணர்ந்த கான்சாகிப் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அவருடன் கூட்டுச்சேர்ந்தார்

1000 சிப்பாய்கள் - கனரக துப்பாக்கி - வெடி மருந்து - உணவுப் பொருட்கள் மற்றும் நெல்லையில் உள்ள தமது படைகளையும் திரட்டிக்கொண்டு வடகரப்பாளையத்தை தாக்குவதற்கு தயாராகினர். செல்லுகின்ற வழியில் செங்கோட்டை அருகே நின்ற திருவிதாங்கூர் படைகளையும் இணைத்துக்கொண்டு அவர்களைத்தாக்கி கைப்பற்றினார்
இரவோடு இரவாக அவர்கள நெற்கட்டான் செவலுக்கு தப்பி ஓடினர்.

பின்னர் திருவிதாங்கூர் மன்னன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தமக்குசு செய்த உதவிக்கு நன்றிக்கடனாகவும் களக்காட்டுப்பகுதியினை அவர்களிடம் ஒப்படைத்தார்.

வாசுதேவநல்லூர் கோட்டை

தெற்குச்சீமையின் மிக அழகிய பரந்து விரிந்த கோட்டை இது. 1300 கெஜம் வரை பரந்து விரிந்துள்ள 2 மைல் தூரமுள்ள காடுகள் நிறைந்தது.


இந்தக் கோட்டையை கைப்பற்ற கான்சாகிப் ஆசைப்பட்டு திருவிதாங்கூர் படைகளோடு இணைந்து சென்றபொழுது எதிரிகள் கோட்டைக்குள் இருந்து மட்டுமின்றி காட்டுக்குள் இருந்தும் திடீர் திடீரென்று தாக்க ஆரம்பித்தனர்.

அது மட்டுமல்ல நெற்கட்டான் சேவல் பூலித்தேவரும் விரைந்து வந்து கான்சாகிப்பி-ன் படைகள் தாக்கப்படுவதை அறிந்து மகிச்சியுற்று சுமார் 3000 படை வீரர்களோடு அவரைத்தாக்க ஆரம்பித்தார்

கோட்டைக்குள் இருந்து வேறு தாக்குதல்கள் - இரவுகளில் திடீர் திடீரென்று குதிரைவீரர்கள் காடுகளில் இருந்து தாக்க ஆரம்பிக்க - பூலித்தேவர் படைகளும் தாக்க ஆரம்பிக்க சுமார் 20 நாட்கள் இந்தப்போர் இரவு பகல் பாராமல் நீடித்தது.

இந்தச் சூழ்நிலையில் கான்சாகிப்பிற்கு வெடிமருந்துகள் - குண்டுகள் - பீரங்கிகள் குறைந்து கொண்டு வருவதை உணர்ந்த கான்சாகிப் இந்நிலையிலும் போரை நீட்டித்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று தமது படைகளோடு பின்வாங்கினார்ஆயிரக்கணக்காக போர்களை சந்தித்த கான்சாகிப்பிற்கு இதுதான் முதல் தோல்வி.
கான்சாகிப்பை வெற்றிபெற்று விட்டோம் என்ற மகிழ்ச்சியில் அந்த வெற்றியை பூலித்தேவர் தமது பகுதியில் கான்சாகிப் படைவீரர்களின் தலைகளை களைந்து தொங்க விட்டு அந்த வெற்றியைக் கொண்டாடினார்.

பின்னர் 1760 ல் ஏப்ரல் இறுதியில் பூலித்தேவனின் செய்கைகளில் திருப்தியடையாத சில சிறிய தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் சுமார் 2000 பேர் கான்சாகிப்போடு இணைந்தனர். 2000 த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மிகுந்த விசுவாசத்துடன் கான்சாகிப் படைகளில் தங்களது பணிகளைச் செய்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மறவர் பாளையங்களில் ஒன்றான நடுவக்குறிச்சி பாளையக்கார்களும் கான்சாகிப்போடு இணைந்து கொண்டனர்.

இந்த நிலையில் படோவியாவிலிருந்து 200 ஐரோப்பிய படைவீரர்கள் டச்சுப்படைகளோடு இணைந்து தூத்துக்குடிக்கு வந்த சேர்ந்தனர். இந்நிலையில் இலங்கைளில் இருந்தும் படைகள் வருகின்ற என்று அவர்கள் கூறியதால் போர்வரக்கூடும் எனப்பயந்து தூத்துக்குடி மக்கள் கான்சாகிப்பிடம் முறையிட்டனர்

திருநெல்வேலி - தூத்துக்குடி க்கு இடையில் உள்ள ஆழ்வார்த்திருநகரில் டச்சுப்படைவீரர்கள் வந்திறங்கினர். அதே நேரத்தில் இலங்கையிலிருந்தும் 200 ஐரொப்பிய வீரர்கள் அவர்களோடு இணைந்தனர்.

உடனே கான்சாகிப் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து 1760 ஜுன் 18 ல் தனது படைவீரர்களோடு ஆழ்வார் திருநகரில் வந்திறங்கினார். இவரது படைகள் வருவதை உணர்ந்த டச்சுப்படை வீரர்கள் இரவாடு இரவாக பின்வாங்கி தூத்துக்குடிக்குச் சென்றனர். அதன்பின் டச்சுக்காhர்களுக்கும் கான்சாகிப்பிற்கும் எந்தப்போரும் கடைசிவரை நடைபெறவே இல்லை.

1760 டிசம்பரில் கான்சாகிப்பின் படைகள் நெற்கட்டான் செவல் மலையடிவாரத்தில் பதுங்கி யிருந்தனர். கான்சாகிப்பும் டிசம்பர் 12ம் நாள் அங்கு தனது படைகளுடன் இணைந்து கொண்டு தாக்க ஆரம்பித்தார். கான்சாகிப் படைகளில் 10 பேரும் பூலித்தேவரின் படைகளில் 100 பேரும் கொல்லப்பட்டு பெரும் வீர சாகசத்தோடு இருபக்கமும் சமமான வலிமைகளோடு நடைபெற்ற அந்தப்போரில் கான்சாகிப் வெற்றிப் பெற்று நெற்கட்டான் செவலை கைப்பற்றினார்.

1761 ல் தெற்குச் சீமையில் எல்லாப் பாளையக்காரர்களையும் வெற்றிக்கொண்டு கான்சாகிப் தெற்குச்சீமை அனைத்திற்கும் ஆளனராகவும் கமாண்டராகவும் சிறப்பான ஆட்சி புரிந்தார்.

திருமணம்

கான்சாகிப்பின் திருமணம் ஆற்காட்டில் நடைபெற்றது என்றும் சென்னை முற்றுகையின் போது நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கான்சாகிப்பின் துணைவியார் பெயர் மாசா. இவர் போர்ச்சுக்கீசியப் கிறித்தவப்பெண்ணை காதலித்து மணமுடித்துக்கொண்டார். சிலர் அந்தப்பெண் தலித் பெண் என்றும் திருவிதாங்கூர் பகுதியைச் சார்ந்தவள் என்றும் சொல்லப்படுகின்றது.

1762 - 63 க்கு இடையில் கான்சாகிப்பிற்கு பிறந்த ஆண்குழந்தைக்கு சுல்தான் என்று பெயர் சூட்டப்பட்டது.


ஆங்கிலேயர்களுடன் எதிர்ப்பு
கி.பி 1754 ல் கான்சாகிப் சென்னையை முற்றுமையிட்ட பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்து போரிட்டு விட்டு தமது படைகளுடன் தெற்குச்சீமையை நோக்கி திரும்பியபொழுது கேப்டன் பிரஸ்டன் செல்லுகின்ற வழியில் படைகள் விக்கிரவாண்டி - திருச்சி வழியாக செல்லவேண்டும் எனவும் செல்லுகின்ற வழியில் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கள் இருந்த பகுதிகளில் இருந்து பொருட்களை சூறையாடி பொருட்களை கைப்பற்றிச் செல்லமாறு கட்டளையிட்டது.

ஆனால் கான்சாகிப்போ அவ்வாறு செல்லுவதை விரும்பாமல் அதனைச்சமாளிக்க பிரஸ்டனிடம் பிரெஞ்சுக்காரர்களை சென்னையில் வெற்றிபெற்றதால் நமது படைகளுக்கு தேவையான ஆயுதங்களும் பொருட்களும் இருக்கின்றது. ஆகவே அவ்வாறு கொள்ளையடித்துச்செல்வது சரியல்ல எனவும் எடுத்துரைக்க ,

பிரஸ்டனோ கம்பெனியின் கட்டளைக்கு கட்டுப்படுமாறு ஆணையிட கான்சாகிப்போ அதனையும் மீறி தான் விரும்பிய பகுதிவழியாகச் சென்றார்

இதனால் பிரஸ்டன் கோபமுற்று கவுன்சிலுக்கு - யூசுப்கானை இப்படியே விட்டால் ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுவான் என்றும் அவனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் கடிதம் எழுதுகின்றார்.

கவுன்சில் கான்சாகிப்பை விசாரிக்க அவர் அதனை சமாளித்து பதில் கூறினாலும் அவர் மனதில் விடுதலை வேட்கை கிளர ஆரம்பித்தது ஆங்கிலேயர்கள் என்றாவது நம்மையும் தாக்கக் கூடும் என்ற சந்தேகமும் தோன்றியது.

கி.பி. 1760 ல் ஜுனில் ஹைதர் அலி பிரெஞ்சுக்காரர்களிடம் இணைந்து மதுரை - நெல்லைச்சீமையை கைப்பற்ற வந்தபொழுது ஆங்கிலேயர்கள் யூசுப்கானை அழைக்க அவரோ தான் செல்ல விரும்பாமல் தமது படைகளை மட்டும் அனுப்பினார். காரணம் கேட்டதற்கு டச்சக்காhர்கள் ஆழ்வார்த்திருநகரியில் இருப்பதால் எந்நேரமும் தாக்கக் கூடும் என்று தான் வராத காரணத்தைக் கூறினார். ஆங்கிலேயர்களுக்கு கான்சாகிப் தமிழக விடுதலைக்காக போராட முனைகின்றானோ என்ற சந்தேகம் ஆரம்பித்தது

இந்நிலையில் நவாப் முகமதலிக்கு கான்சாகிப் தனித்துவமாக சிறப்புற்று வருவதையும் தெற்குச்சீமையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இராணுவப்பலத்தை அதிகரித்து வருவதையும் பொறுக்கமுடியாமல் பொறமை கொண்டார்.

அதுமட்டுமல்ல திருவாதாங்கூர் அரசருக்கு அவர் களக்காட்டை கொடுத்ததிலும் விருப்பமில்லை. அகவே கான்சாகிப் மீது வெறுப்புணர்வோடு இருந்தார்.

கான்சாகிப் குத்தகைப்பணத்தையும் நவாப்பிடம் கொடுக்காமல் கவுன்சிலுக்கு 2 லட்சம் பாக்கி இருக்கிறது என்றும் போர்ச்செலவுகளுக்கு பணம் தேவை என்றும் அவரிடம் குத்தகைப்பணத்தை கொடுக்காமல் மறுத்தார்.

நவாப் இது சம்பந்தமாக கவுன்சிலிடம் புகார் செய்ய கவுன்சில் கான்சாகிப்பிற்கு 12-2-1762 அன்று கட்டளையிட்டது. குத்தகைப்பணத்தை கான்சாகிப்பிடம்தான் ஒப்படைக்கவேண்டும் என்றும் மீறினால் சீமைகளை கான்சாகிப்பிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டு சென்னைக்கு அழைத்தனர்.

தன்னை வெறுக்கின்ற தன்னை நம்பாத நவாப்பிடம் பணியாள் போல வேலை செய்ய விரும்பாத கான்சாகிப் கொதித்துப்போனார்.

பல வருடங்களாக அவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் தம்மை நம்பாத ஆங்கிலேயர்கள் நவாப்பின் கீழ் தம்மை பணிய வைப்பதை கண்டு தன் சுயமரியாதை இழக்கத்தயாராக இல்லை என்று வீறு கொண்டு எழுந்த கான்சாகிப் ஒரு சல்லிக்காசு கூட நவாப்பிற்கு தரமுடியாது என்றும் தன்னால் சென்னைக்கு வரமுடியாது என்றும் அறிவித்தாhர்

இந்நிலையில் கான்சாகிப்பின் ஆட்சித்திறன் அனைவரையுமே கவர்ந்து விட மக்களின் ஆதரவும் பாளையக்காரர்களின் உதவிகளும் கான்சாகிப் பக்கம் இருந்தது. அது மட்டுமல்ல கான்சாகிப் இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதால் மக்களுக்கு அவர் மண்ணின் மைந்தர் என்ற பாசமும் இருந்தது.

ஆங்கிலேய மட்டும் நவாப்பின் படைகளை எதிர்ப்பதற்காக தமது படைவீரர்களுக்கு
சிப்பாய் ரூ 9
குதிரைவீரர் ரூ 33
எறிகுண்டு வீசுபவர் ரூ 24
துப்பாக்கி வீரர் ரூ 22 மற்றும் 20 என்று அதிகமான மாதச்சம்பளம் கொடுத்து ஊக்கம் கொடுத்து வந்ததார்

திருச்சி - மதுரை சாலையில் வலச்சிநத்தம் கோட்டை - திண்டுக்கல் சோழவந்தான் கோட்டை - சிரிவில்லிபுத்தூர் வடகரை கோட்டை என பல கோட்டைகளையும் மதுரை பாளையங்கோட்டையில் பலமான இராணுவத்தையும் வைத்திருந்தார்.

Photobucket - Video and Image Hosting
1762 அக்டோபர் 22 ல் கான்சாகிப்பிற்று வந்துகொண்டிருந்த ஆயதங்கள் - வெடிமருந்துகளை நிறுத்துமாறு திருவிதாங்கூர் மன்னருக்கு கட்டளையிட
அட ஆங்கிலேயர்களின் உதவி யூசுப்கானுக்கு இல்லையோ நாம் போரிட்டு மதுரை நெல்லையை கைப்பற்றிவிடலாம் என்ற ஆசையோடு திருவிதாங்கூர் மன்னர் போரிட்டு வர கான்சாகிப்போ அவரைத் தோற்கடித்து அவர் படைளை சேதப்படுத்த இறுதியில் அவர் சமாதானத்திற்கு வந்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

21-2-1763 ல் அந்த ஒப்பந்தமானது உனக்கு எதிரி எனக்கும் எதிரி எனக்கு நண்பன் எனக்கும் நண்பன் உனக்கு ஆபத்து என்றால் நான் உதவுவேன். ஏனக்கு ஆபத்து என்றால் நீ உதவவேண்டும் என்று கையெழுத்திடப்பட்டது. ஆகவே திருவிதாங்கூர் ஆதரவும் பெற்று பலத்தை விரிவுபடுத்தினார்.

துர்க்காதாஸ் எஸ்.கே சுவாமிகள் குறிப்பிடும்பொழுது ,

வாசுதேவநல்லூர் போருக்குப்பிறகு வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்த நாட்டை காக்கத் தனது சக்தி முழவதையும் செலவிட திட்டமிட்டார் கான். ஆள திறமையற்ற நவாப்பிடமோ அல்லது அன்னியரிடமோ ஆட்சிகள் சென்றுவிடுவதை விரும்பவில்லை கான்.

குத்தகைப்பணத்தை பயன்படுத்தி நாட்டை சீரமைத்து நவாப்பிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் பிளவு ஏற்படுத்த விரும்பி நவாப்பிடம் குத்தகை வியாபாரியாகவும் ஆங்கிலேயர்களிடம் நல்ல பிள்ளையாகவும் நடந்து கொண்டார்


கானின் மீது நவாப் குற்றச்சாட்டுக்களை சொல்லிக்கொண்டிருக்க குத்தகைத்தொகையின் விவகாரத்தில் வேறு கான்சாகிப் கம்பெனியாரின் பேச்சை மதிக்காமல் இருக்கின்ற சூழ்நிலையில் ஆங்கிலேயர்கள் கானை உடனடியாக சென்னை வரச்சொல்லியும் - ஆயதங்கள் - வெடி மருந்துகள் தடைசெய்தல் அவருக்கு சிறு சிறு தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டும் இருக்க பொறுக்க முடியாமல் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க

கோட்டையின் வாசலில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கி பீரங்கியின் வாயில் வைத்து திணித்து சுட்டுப் பொசுக்கினார்.
13.10.1770 ல் சர் ஜான் லிண்ட்சே என்பவரால் எழுதப்பட்டது

He then joined the French & carried them into madura fort. And to show that he was perfectly estranged from the English he fixed their colors to the mounth of a canoin & fired it off

இந்த நிகழ்ச்சி ஆங்கிலேயர்களுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. நவாப்கானின் கொடியை கோட்டைக்குள் ஏற்றுமாறு பலமுறை கூறியும் ஏற்றாமல் தமது கொடிகளை சுட்டுப்பொசுக்கியும் நடனமாடும் குதிரையும் முரசும் பொறித்த தனது கொடியையும் பிரெஞ்சுக் கொடியையும் கோட்டையில் ஏற்றிய கான்சாகிப்பை வெள்ளையனின் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

08.07.1763 ல் திருச்சி கோட்டையின் முன்பு அறிவிக்கப்பட்டது. கான்சாகிப்போடு சேருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் கலகக்காரர்கள் என்று கருதப்படும். முன்னதாகவே அவரை விட்டு விலகி வந்தால் பரிசும் பதவியும் கொடுக்கப்படும். மீறினால் கடுமையான தண்டனை என்று பிரகடனம் செய்யப்பட்டது.

அவர் மீது உள்ள கடுமையான கோபத்தில் அவர் உயிரோடு பிடிபட்டால் தென்படுகின்ற முதல் மரத்தில் அவரைத் தூக்கிலிடுமாறு ஆணையிட்டது.

கான்சாகிப்பிற்கு கமாண்டர் பட்டத்தை வழங்கி கையெழுத்திட்ட அதே கைகள்தான் அவருக்கு மரணதண்டனை கொடுப்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டது.

ஆங்கிலேயரையும் ஆற்காடு நவாப்பையும் ஆதரிப்பவர்கள் தங்களது வீழ்ச்சிக்குப் பின்னர் தங்களின் அழிவை தாங்களே தயார் செய்து கொள்வதாக அமையும் என்று வீரமாக அவர்களுக்கு பதிலடியாக அறிவித்தார்.


ஆங்கிலேயருக்கும் கான்சாகிப்பிற்கும் போர் ஆரம்பமாகியது .

வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருப்பதனால் தனது குடும்பத்தை வெளியே அனுப்ப முடிவெடுத்தார். பின்னர் தனது குடும்பம் போலத்தானே அனைவரின் குடும்பமும் அனைவரையும் அனுப்ப வேண்டுமென்றால் எங்கே அனுப்புவது என்று நினைத்து அந்த முடிவைக் கைவிட்டார்.

1763 ஆகஸ்ட் 11 ல் எதிர்த்து வந்த ஆங்கிலேயப்படைகளை கடுமையாக தாக்கி 150 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் 200 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை சேதப்படுத்தினார்.

1763 ஆகஸ்ட் 18 ல் கேப்டன் பிரஸ்டன் மதுரைக் கோட்டையில் நடனமாடும் குதிரையுடன் முரசும் பொறிக்கப்பட்ட கொடியும் பிரெஞ்சுக் கொடியும் பறப்பதைக்கண்டு ஆத்திரமுற்று

1600 ஐரோப்பியர்கள் 4000 சிப்பாய்கள் 2000 கறுப்புக் குதிரைகள் பல்லாயிரக்கணக்கான வீரர்களுடன் கான்சாகிப்பை தாக்குவதற்கு நெருங்கிய பொழுது கான்சாகிப்பின் படைகள் சராமரியாக குண்டுமழைகளை வீசத்தொடங்க பின்வாங்கி மதுரை தெப்பக்குளம் அருகே வந்து முகாமிட்டனர்.ஆங்கிலேயப்படைகளில் உள்ள சுதேசிப் படைகள் முன்னேறி செல்லும்பொழுது விழுகின்ற குண்டுகளால் அந்த குதிரைப்படைகளுக்கு சேதம் விளையும் ஆகவே ஆங்கிலேயப்படைகளுக்கு பின்னாலையே சுதேசிப்படைகள் செல்ல இதனைஅறிந்த கான்சாகிப் தமது குதிரைப்படை வீரர்களுடன் முன்னேறிச் சென்று அவர்களை பலமாகத் தாக்கினார்.

இதில் கேப்டன் டொனால்டு கேம்பல் காயம்பட்டு கீழே விழ - அவர் போர்க்களத்தில் ஆடைகள் களைந்த நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்ட கான்சாகிப் கண்கலங்கினார். அவரைப் போர்க்கைதியாக கைது செய்து மனித நேயம் கொண்டு சிகிச்சை செய்து அவரை பத்திரமாக ஆங்கிலேய முகாமிற்கே அனுப்பி வைத்தார்

1763 ல் செப்டம்பரில் மீண்டும் மீண்டும் கான்சாகிப் படைகள் மீது குதிரைப்படை பீரங்கி கொண்டு போரிட்டுக்கொண்டே இருந்தனர் ஆங்கிலேயர்கள். போரில் தோற்றுக்கொண்டே இருந்தாலும் திரும்பிச் சென்றால் அவமானம் என்று வீம்புக்கு போரைத் தொடர்ந்தனர்.

1763 ல் அக்டோபரில் 4 ல் மான்சான் ஆங்கிலேயப்படைகளுக்கு தலைமைதாங்கி போரிட்டு தோல்விகண்டு கவுன்சிலுக்கு கடிதம் எழுதுகின்றார்

தனக்கு உடல் நலம் சரியில்லை. கான்சாகிப்பை லெவல்ல முடியாது என்றும் வேறு தளபதியை நியமித்துக் கொள்ளுங்கள்

பின்னர் வேறு தளபதிகள் நியமிக்கப்பட்டும் அனைவரும் தோல்வியுற்றே திரும்பினர்.

முதல் முற்றுகையில் ஆங்கிலேயர்கள் தோல்வியுற்றுப்போனாலும் அவர்கள் திரும்பிவருவார்கள் என்று தன்னுடைய படைகளை மேலும் பலப்படுத்தினார். கோட்டையில் விழுந்த ஓட்டைகளை சீரமைத்தார்.


A wise man in peace time prepares war a war .. என்பதற்கேற்ப அமைதியான சூழ்நிலையிலும் போர் வருவதை எதிர்பார்த்து தயாராகிக்கொண்டிருந்தார்.


முதல் முற்றுகையின் போது ஆங்கிலேயர்கள் நீரோரைடகள் வழியாக வந்ததால் அந்த நீரோடையை முழுவதுமாய் நிரப்ப ஆணையிட்டார் . கோட்டையில் இருந்து சில தூரங்களில் மணல் திட்டுகளை உருவாக்கினார்.

25.01.1764 ல் ஆங்கிலேயர்கள் பவுண்டு பவுண்டாக பீரங்கிகள் - வெடிகுண்டுகள் மற்றும் கோட்டையை இடிக்கும் ராட்சசக் கருவிகளோடு மதுரைக் கோட்டையை முற்றுகையிட்டு அதன் சுற்றுப்புர கோட்டையை கைப்பற்றிக்கொண்டிருந்தனர்.

நான் உன்னை என்னைப் போன்றுதான் கருதுகின்றேன். அதே போல் உனத நாட்டையும் உனது ராணுவத்தையும் என்னுடையது போலலே கருதுகின்றேன். நீ வேறு நான் வெறு அல்ல என்று ஹைதர் அலியும் கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதி நட்பு பாராட்டி அவருக்கு உதவியாக படைகள் அனுப்பினார்.

இதற்கிடையில் ஆங்கிலேயர்கள் மதுரைக்கு மற்ற பகுதிகளோடு இருக்கும் இணைப்பை துண்டிக்க முடிவு செய்து 1764 ல் பிப்ரவரி 14ல் மதுரை தமுக்கம் என்ற பகுதியில் முகாமிட்டனர்.

1764ல் ஏப்பிரல் 14 ல் தாமிரபரணி நதிக்கரையில் போரிட்டு திருநெல்வேலியைக் கைப்பற்றினர். மதுரை டு திண்டுக்கல் மற்றும் மதுரை டு திருநெல்வேலிக்கான தொடர்பைத் துண்டித்தனர்.

இதனால் கான்சாகிப்பிற்கு உதவிகள் வருவது நிறுத்தப்பட்டது. ஹைதர் அலியும் தமது பகுதியின் பாதுகாப்பிற்காக படைகள் தேவைப்படுகிறது என்று படைகள் அனுப்புவதை நிறுத்தினார்.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வந்தததால் வெகுண்டு எழுந்து 1764 ஜீன் 14 ல் ஆக்ரோஷமாக போரிட்டு ஒரே நாளில் 50 ஆங்கிலயர்களைக் கொன்றார்.

தொடர்புகளைத் துண்டித்த பொழுதும் இவ்வளவு ஆக்ரோஷமாக போரிடும் கான்சாகிப்பைக் கண்டு ஆங்கிலேயர்கள் கதிகலங்கினர்.

1764 ஜுன் மாத இரவினிலே கோட்டைக்குள் நுழைந்திட திட்டமிட்டபொழுது பெரு மழை வந்ததால் அவர்களின் திட்டம் பாழாய்ப்போக பின்வாங்கினர். ஜுலை மாதம் பிரஸ்டன் கோட்டையின் மீதேறி அவரது கொடியை பிடுங்க நினைத்தபொழுது இடுப்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார். அவரை வீரர்கள் தூக்கிச் செல்லும்போது நான் செய்த பாவத்திற்குத்தான் இந்த தண்டனை என்று புலம்பிபடி உயிர் துறந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் பின்வாங்கத் தொடங்கினர். நவாப்பும் ஆங்கிலயர்கள் தோற்பதை அறிந்து புலம்ப ஆரம்பித்தார். பின்னர் அவரை வெற்றி பெற ஒரே வழி துரோகம் தான் என முடிவு செய்து திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தனர்.

அவர்களின் சதியில் சிக்கியது ஒரு சுபெதாரும் 46 வீரர்களும். மதுரக் கோட்டையில் இருந்து அவர்கள் வெளியேறி ஆங்கிலேயர்களிடம் தஞ்சமடைந்தனர்.

கான்சாகிப்பின் நம்பிக்கைகுரிய பிரெஞ்சுத் தளபதி ரிக்கட் ஆங்கிலேயர்களிடம் நானாக சரணடைய மாட்டேன். நீங்களாக போர்க்கைதிகளைப்போல பிடித்துச்செல்லுங்கள் என்று கூறி வலியச் சென்று மாட்டிக்கொண்டார். இதனை அறிந்த கான்சாகிப் சொல்லுகின்றார்

ரிக்கட் சென்றதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் வாங்கி வைத்திருந்த 4000 ரூ மதிப்புள்ள குதிரையையுமல்லவா அழைத்துச் சென்றுவிட்டார் என்று மாத்திரம் கூறினார்.

இந்நிலையில் கோட்டைக்குள் இருந்து பெண்கள் - குழந்தைகள் - முதியவர்கள் - ஏழைகள் என்று 400 பேரை வெளியே அனுப்பினார்.
கோட்டைக்கு இருந்த வெளி உலகத் தொடர்புகள் மற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

கோட்டைக்குள் உணவுப்பற்றாக்குறை - தண்ணீர்ப் பற்றாக்குறை - தொடர்பு துண்டிக்கப்படுதல் - நீர்நிலைகள் நாற்றமடித்தல் என்று என்று மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

பசியின் கொடுமையில் குதிரைகள் - குரங்குகள் - கழுதை - பூனைகள் உணவாக மாறிக்கொண்டிருந்தது. இந்நிலையில் போரிட முடியாமல் தற்பாதுகாப்புகளை மட்டுமே செய்து கொண்டிருந்தனர்.

இப்பொழுதான் துரோகம் என்ற பலமான ஆயுதம் ஒன்று கான்சாகிப்பை தாக்குவதற்கு தயாராகியது.
இவரோடு இருந்தால் இறந்து விடக்கூடும் என்று சில நம்பிக்கைத்துரோகிகள் அவரைக் காட்டிக்கொடுத்து விட்டு தாங்கள் மட்டும் பதவி பணச்சுகத்திற்கு ஆசைப்பட்டனர்.

1764 அக்டோபர் மாதம் அதிகாலையில் எல்லா நாட்களைப்போலவே விடிந்தது. கான்சாகிப் கோட்டையை விட்டு தப்பித்துச் செல்ல முயல்கின்றார் என்று
ஒரு பொய்யான செய்தியைப் பரப்பினர் துரோகிகள். இதனால் வீரர்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பு வந்தது.

சீனிவாசராவ் மற்றும் வைத்தியர் பாபா சாகிப் என்ற இரு நம்பிக்கைக்குரியவர்கள் அவரது அறைக்குள் நுழைந்தனர் . கான்சாகிப் தொழுது கொண்டிருந்த நேரம் அவரைப்பின்பக்கமாக இருந்து கட்டிப்பிடித்து அவரது தலைப்பாகையை வைத்தே அவரைக் கைது செய்தனர். ஒரு மாபெரும் துரோகத்தை சத்தமின்றி அரங்கேற்றி விட்டனர்.

கான்சாகிப்போ இதனைச் சற்றும் எதிர்பார்க்காமல் நிலைகுலைந்து போனார். பின் அவர்களிடம்

பணம் பதவி சுகவாழ்விற்கு ஆசைப்படுபவர்களே என்னை இங்கேயே கண்டதுண்டமாக வெட்டிவிடுங்கள். ஆனால் ஆங்கிலேயர்களிடமோ அல்லது நவாப்பிடமோ ஒப்படைத்துவிடாதீர்கள் என்று கர்ஜித்தார்

ஆனால் அந்தத் துரொகிகளோ ஆங்கிலேயர்களின் பணம் மற்றும் பதவிக்கு ஆசைப்பட்டு 164 அக்டோபர் 14ல் ஒப்படைத்தார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் போராட்ட வீரன் கான்சாகிப் மதுரைக்கு அருகே சம்மட்டிபுரம் என்ற இடத்திற்கு அருகே அழைத்துவரப்பட்டாhர் அவருடைய முகத்தில் பயமோ சோகத்தின் அறிகுறிகளோ இல்லாமல் புன்னகையோடும் அவர்களை அலட்சியமாய் பார்த்தக்கொண்டும் வந்தார்.

அங்குள்ள மாமரத்தில் கான்சாகிப் தொங்கவிடப்பட்டு பின் அவரது சடலம் இறக்கி வைக்கப்பட்டது. சடலத்தை தூக்கச் சென்ற வீரர்கள் அலறியடித்துக் கொண்டு மயங்கி வீழ்ந்தனர். என்ன வென்று பார்த்தபொழுது அவரது நெஞ்சுக்கூடு சுருங்கி விரிந்தது. பலமாய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார். அவரது உடலை நோக்கி துப்பாக்கியை நீட்டினர்.

மறுபடியும் அவரைத்தூக்கிலிட ஆணைகள் வரவில்லையே என்று ஆங்கியேர்கள் திகைக்க நவாப்போ தூக்கிலிடுங்கள் அல்லது என்னைத் தூக்கிலிடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப மறுபடியும் கான்சாகிப் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மறுபடியும் கயிறு கட்டப்படுகிறது. சிரித்த முகத்துடன் அவர் கூறுகின்றார். நான் ஆஸனம் பயின்றவன். ஆகவே மூச்சை இறுக்கி பிடிக்க கற்றுக்கொண்டவன். கழுத்தை உப்பவைத்து மூச்சை அடக்கினேன். நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் தூக்கிலிட முடியாது . நான் இதற்குமேலும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்காக வீர மரணமடைந்த நண்பர்களைக் காணப் போகிறேன் என்று அந்த இரண்டாவது தூக்குத்தண்டனையை பெருமையாய் வாங்கிக்கொண்டார்.

ஒரு வீரன் அமைதியாக கண் உறங்கினான்.

இராபர்ட் ஓம் கூறும்பொழது ஆங்கிலேய வீரரான இராபர்ட் க்ளைவ்வுடன் இந்தியாவின் வீரரான் கான்சாப்பை ஒப்பிட்டு கூறினார்.

அவர் மீதுள்ள வெறியால் அவரது உடலை சிதைத்தனர் ஆங்கிலேயர்கள். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தலையை திருச்சிக்கும் -கைகளை தஞ்சாவூருக்கும் பெரியகுளத்திற்கும் கால்களை திருவிதாங்கூர் மற்றும் பாளையங்கோட்டைக்கும் அனுப்பி விட்டு உடலை மதுரை - திண்டுக்கல் சாலையில் உள்ள சம்மட்டிபரத்தில் புதைத்தனர்.

அந்தச் சாலையில் தற்பொழுது கான்சாகிப் பள்ளிவாசல் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.we have the agreeable satisfaction of advising your honor that the rebel yousufkhan is at last reduced என்று லண்டனுக்கு கவுன்சில் கடிதம் அனுப்பியதற்கு லண்டனிலிரந்து வந்த பதிலைப்பாருங்களேன்.


At length we are happy in being informed of the surrender of madurai & death of yousufkhan என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள். அப்படியென்றால் எந்த அளவிற்கு கான்சாகிபின் மரணத்தில் அவர்கள் மகிழ்ந்திருக்க கூடும். கான்சாகிப்பின் மரணத்தில் அவர்கள் கண்ட மகிழ்ச்சி அவர்களுடைய பயத்தின் முழு வெளிப்பாடே ஆகும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியையோ அதிகாரத்துஷ்பிரயோகம் கொண்ட அல்லது சூறையாடும் நோக்கத்தோடு நாட்டை ஆளுகின்ற நவாப்பின் தலைமையிலோ ஆட்சி செல்லக்கூடாது என்று மதுரை திண்டுக்கல் திருச்சி புதுக்கோட்டை தங்சை திருவிதாங்கூர் திருநெல்வேலி சிவகங்கை இராமநாதபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளை தனியாட்சியாக நடத்த திட்டமிட்ட விடுதலை வீரர் கான்சாகிப் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்ட வீரன் மறைந்து போனார்.


உயிர் வாழ்வதற்காக ஓடும் கோழைகள் மாண்டு போகின்றார்கள். இறப்பதற்காக போராடும் வீரர்கள் என்றென்றும் உயிர் வாழ்கிறார்கள்.
என்பதற்கேற்ப நெஞ்சம் நிமிர்த்தி போராடிய வீரன்தான் இந்த மருதநாயகம் பிள்ளை என்ற கான்சாகிப்.

அவரை அரசாங்கமும் நினைவு கூர்ந்து அவரது ஆவணங்களை சேகரித்து நினைவு மண்டபங்கள் எழுப்பி வரலாறு மறைத்து விட்டாலும் வருகின்ற தலைமுறைகளுக்கு இப்படியொரு வீரன் வாழ்ந்தான் - இப்படியெல்லாம் போராடினான் என்று புரியவைப்பது அவசியம்.

இதனை எழுதிமுடித்தப்பிறகும் எனக்கு குதிரை மீதேறி பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வு வருவது அந்த வீரனின் வீரத்திற்கு கிடைத்த மரியாதை.

மதுரை - திண்டுக்கல் சாலையில் என்றாவது பயணம் செய்ய நேர்ந்தால்
அந்த மாவீரன் மறைந்த இடத்தை பார்த்து விட்டுச் செல்லவேண்டும்.


தகவல் உபயம் - செ.திவானின் குறிப்புகள் மற்றும் சில பெயர் மறந்துபோன பழைய புத்தகங்கள்....

- ரசிகவ் ஞானியார்

Sunday, June 07, 2009

அன்று மேலாளர் இப்பொழுது ஆபிஸ் பாய்இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க...

நீங்களும்தான் இன்னொரு கப் எடுத்துக்கோங்க
என்று அவர் அனைவருக்கும் டீ கொடுத்துக் கொண்டிருக்க என் முறையும் வந்தது.

இரண்டு தேநீர் கொடுக்கப்படுகின்ற முறையே அலுவலகத்தில் என்னிலிருந்துதான் ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இரண்டு கோப்பை தேநீர் கேட்கின்ற முறையை ஆரம்பித்ததே நான்தான். சில நேரங்களில் அவர் கொண்டு வரும்பொழுதே இரண்டு கோப்பை எடுத்து வைத்துக்கொள்வேன்.. அந்த அளவுக்கு தேநீர பைத்தியம்..

சென்ற மாதம்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார் . அவரை ஆபிஸ் பாய் என்று அழைப்பதை விடவும் ஆபிஸ் மேன் என்று சொல்லலாம். வயது சுமார் 40 இருக்கும். . எப்பொழுதும் முகத்தில் ஒருவிதமான கவலை தோய்ந்த முகத்துடனையே உலா வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சனிக்கிழமை அலுவலகத்தில் அவரை பக்கத்தில் அமர வைத்து விசாரித்தேன். அவர் கதையை கேட்க கேட்க எனக்குள்ளே ஒரு விதமான சோகம். அவர் எடுத்து காட்டிய விசிட்டிங் கார்டை பார்த்தும் அதிர்ந்தே போய்விட்டேன்.

xxxxxxxxxx
General Manager
Group of Companies


கிரானைட் மற்றும் லெதர் மற்றும் கார்மெண்ட் சம்பந்தமான துறைகளில் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனத்தின் சொந்தக்காரராக இருந்திருக்கின்றார் சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்.

இப்பொழுது எனது அலுவலகத்தில் ஆபிஸ் பாய். ஏன் இப்படி?

"நீங்க எல்லாம் என்ன சம்பாதிக்கிறீங்க தம்பி...நான் வாரத்தில் 20000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவன். நல்ல வசதியாய் வாழ்ந்திருக்கின்றேன்..

திடீரென்று
தொழிலில் நஷ்டம் ஏற்பட சுற்றியுள்ளவர்கள் எல்லாம்விலகிவிட்டார்கள்.

அப்பொழுதுதான்
விளங்க ஆரம்பித்தது என்னை சுற்றியிருந்திருப்பது பணம் மட்டுமே .. வேற எதுவுமில்லை என்று.


அண்ணனும்
தம்பியும் மிகப்பெரிய சாபட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கின்றார்கள். தந்தையும் நல்லா வசதியாகஇருக்கின்றார். ஆனால் எனக்கு உதவி செய்ய அவர்களுக்கு தயக்கம்.

நல்லா
வாழ்ந்திட்டு இப்போ இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமாகயிருக்குதுப்பா.. .. இன்னமும் நான் இறைவனிடம்வேண்டிக்கொண்டுதானிருக்கின்றேன்.. ஓரளவுக்கு கேவலப்படுத்து இறைவா என்னை ரொம்பவும் அவமானப்படுத்திவிடாதே என்று


நான்
நல்லா வாழும்பொழுது பார்த்தவர்கள் என்னை இந்த நிலையில் இருப்பதை பார்த்துவிடக்கூடாது என்றுதான் இப்போ இந்த ஆர் டி நகரில் வீடு மாறி வந்திருக்கேன். அவுங்க கண்களில் இருந்து மறைஞ்சு மறைஞ்சு வரேன்"

சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவர் கண்களில் முழுவதுமாக நீர் திரள அதனை அடக்க முயற்சித்து முடியாமல் அழுதேவிட்டார்;

"
நான் கம்பெனியின் நிறுவனராக இருந்தபொழுது என்னுடையகம்பெனியில் டீ போடும் பெண்ணிற்கு இப்பொழுது நான் வாங்குகின்றசம்பளத்தை விடவும் அதிகமாக கொடுத்தேன். இப்போ நானே அந்தவேலை செய்கின்றேன் என்று நினைக்கும்பொழுது ரொம்பவேதனையாயிருக்கு."


அவரை ஆறுதல் படுத்த முடியாமல் அவரின் அந்த நிலைமையின் சோகத்தை ஜீரணிக்க முடியாமல் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

இந்த வாழ்க்கைதான் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகின்றது பாருங்களேன் எப்பொழுதும் ஏழையாகவே இருந்துவிடலாம் இல்லை எப்பொழுதும் பணக்காரனாகவே இருந்துவிடலாம்.

ஆனால் நன்றாக வசதியாக வாழ்ந்துவிட்டு பின்னர் கஷ்டப்படுகிற வாழ்க்கை யாருக்குமே வரக்கூடாது. அது மிகவும் கொடுமையானது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.

சுகர் கம்மியா இருக்கு... என்று எனக்கு பின்னால் உள்ள கேபினில் உள்ளவன் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க , சரி அடுத்த தடைவ நல்லா போடுறேன் என்று அமைதியாக அவனிடம் தலையாட்டிவிட்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றார்.


"டீ ஆறிப்போயிடுச்சி
கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வாங்க"
அதோ புகார் செய்துகொண்டிருக்கும்
அவனுக்கு தெரியுமா?
ஆறிப்போனது
அவரது வாழ்க்கையும்தான் என்று?


இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க... என்னை கடந்து சென்று கொண்டேயிருக்கின்றது அந்தக் குரல்

நான் இப்பொழுதெல்லாம் இன்னொரு தேநீர் கேட்பதேயில்லை...

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு