Tuesday, May 31, 2005

மாதா பிதா குரு பிகரு

2001 ம் ஆண்டு ஜான்ஸ் கல்லூரி சாலையில் இருக்கும் ரிதம் கேண்டீன் அருகே
அந்த வெட்டி காம்ப்ளக்ஸில் இருந்துகொண்டு உடன் இருக்கும் ஜான்ஸ் கல்லூரி
மாணவர்களை குஷிபடுத்துவதற்காக வருகின்ற போகின்ற பிகர்களைப் பார்த்து
எழுதிய கவிதை இது.

நான் எழுதிய பிறகு அதனை ஏதாவது பிகர் வரும்பொழுது அந்த வரிகளை சத்தம்
போட்டுப் படிக்கும் சாக்கில் நண்பர்கள் உற்சாகமாக கத்துவார்கள். மிகவும்
ஜாலியாக இருக்கும்.

இதோ இன்று அந்த காம்ப்ளக்ஸைக் கடந்து செல்லும்போது அந்த ஞாபகம் வந்ததால்
உடனே வீட்டிற்கு வந்து பழைய டைரியைப் புரட்டி எடுத்து புதுப்பிக்கிறேன்.

*
என் இனிய கல்லூரி பிகர்களே
நீங்கள்
பிரம்மாவால் படைக்கப்பட்டீர்களா?
இல்லை
பிரம்மாவையே படைத்தீர்களா?

எங்கிருந்ததடி வந்தது உங்களுக்கு? - இந்த
ஏகாதிபத்திய அழகு

பிகர்களே! உங்களையெல்லாம்
பிரம்மா எங்கேயோ
அடைத்து வைத்திருக்கிறான் போல!

ஆம்
குற்றால சீசனுக்குக் கொஞ்சம்
பொருட்காட்சிக்குக் கொஞ்சம்
பஸ்ஸ்டாண்டுக்குக் கொஞ்சம்
கல்லூரி விழாவிற்கு கொஞ்சம்
ஊட்டிக்குக் கொஞ்சம்
இப்படிக்
கொஞ்சம் கொஞ்சமாய்
அனுப்புகிறான் போல!

- பிகர்
வேலைதேடி
வெயிலில் சுற்றும்
இளைஞர்களுக்கெல்லாம் இந்த
ஒற்றை வார்த்தைதான்
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

- பிகர்
ரிதம் கேண்டீனில்
டீ குடிக்காமலேயே
இதம் கொடுக்கின்ற
இன்பமான வார்த்தை!

- பிகர்
சுவாசிப்பது போல
இமைப்பது போல
கடலை போடுவது போல
ஜான்ஸ் கல்லூரி ஸ்டிரைக் போல
இந்த வார்த்தை
அடிப்படை தேவைகளுக்கு
அடுத்தபடியாகிவிட்டது!

- பிகர்
ஒற்றை வார்த்தையில்
ஒரு ஹைக்கூ

பிகர்களே
தயவுசெய்து ஒப்படைத்து விடுங்கள் - எங்கள்
இதயப் பின்லேடனை!
ஆம்
பார்வைக் குண்டுகளை
எப்பொழுது வீசப்போகிறீர்களோ? என்று
பயந்து கொண்டே இருக்கிறோமடி!

ஏனோ தெரியவில்லை?
எந்தப் பஸ்ஸில் ஏறினாலும்
விழிகள்
முன்பக்கத்தையே பார்க்கிறது!
ட்ரைவரைப் பார்க்கவா?
இல்லை
இதயத்தை
ட்ரைவ் செய்துகொண்டிருக்கும்
பிகரைப்பார்க்கவா?

8 மணிக்கு ஸ்கூல் பிகர்
9 மணிக்கு காலேஜ் பிகர்
9.30 மணிக்கு வொர்க்கிங் பிகர்
9.45 மணிக்கு போலிஸ் பிகர்
ஏனோ தெரியவில்லை இதில்
கடைசிவகை
பிகர் வந்தால் மட்டும்
எமது இளைஞர்கள்
வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்கள்!

ஹாய் பிகர்களே
உங்கள்
கண்கள் என்ன
கம்னியூஸ்ட்டா ?
இப்படியா போராட வைப்பது
இதயத்தை?

போங்கடி
உங்களைப்
பார்க்காமலிருக்கவும் முடியவில்லை
பார்த்துவிட்டும் செல்லமுடியவில்லை

ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?

நாங்கள் என்னடி
பாவம் செய்தோம்?
கல்லூரிக்கு அப்பாவியாய்
கிளம்புகின்ற அந்த நேரத்தில்தான்
நீங்கள்
மொட்டைமாடியில் துணியுலர்த்தி எங்களை
மொட்டையடிக்க வேண்டுமா?

நீங்கள்
கம்ப்யூட்டர் படித்திருக்கலாம்.
அதற்காக நாங்கள்
வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில்தான் உங்கள்
ஜன்னல்கள் திறந்துவிடட்டுமென்று
ஜாவா புரோகிராம் எழுதியிருக்கிறீர்களோ?

எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!

ஜன்னலுக்கு பின்னால்
ஜெயில்கைதிகளைப்போலவே
பயந்து கொண்டிருக்கும்
அந்த
இரட்டைவிழிகள்..
யப்பப்பபா

பாரதியின்
கவிதையை விடவம்
பயங்கரமாயிருக்கிறது!

இந்த டீக்கடையின்
டீயை விடவும்
கொடுமையாயிருக்கிறது!

பஸ்ஸடாண்டில் நிற்கும்போது
தோழிகளோடு
அப்படி என்னதான் பேசுவீர்களோ?
ராஜாவையா...
ஞானியாரையா...
ரூபனையா...
எவனை இன்று
வழுக்கி விடலாமென்று தோள்களைக்
குலுக்கிக் குலுக்கி பேசுகிறீர்கள்?

எங்கள்
எதிரில் வரும் பொழுதுதான்
தோழிகளோடு
சிரித்துச் சிரித்துப் பேச வேண்டுமா?

நாங்கள்
பார்க்கவேண்டுமென்றே யாரும்
ஜோக்கே சொல்லாமல்
சம்பந்தமே இல்லாமல்
சிரிக்கிறீர்கள் என்ற சேதி
சேரியில் இருப்பவனுக்கு கூட தெரியும்!
தயவுசெய்து
சிரிப்பதை நிறுத்துங்கள்
அன்று இரவு
நாங்கள் தூங்க வேண்டும்!

இளைஞர்கள்
நாங்களும் ஒரு
பி.சி. சர்க்கார்தான்!
ஒரு
மாபெரும் மைதானத்தில்
ஒரே ஒரு பிகரை மட்டும்
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுவோம்!
ஆனால்
அவளுக்கு பின்னால்
அண்ணன்கள் இருப்பது
அடிவாங்கிய பிறகுதான் தெரிகிறது!

இன்றைய
இந்திய இளைஞர்களெல்லாம்
நாளொன்றிற்கு ஒரு பிகரைப்
பார்க்காவிட்டால் கூடப்
பைத்தியம் பிடித்துவிடுவார்கள்!

அது ஏன்டி?
ஒரு
வெளுத்துப்போன கைக்குட்டையால்
அடிக்கடி
இதழை சுத்தமாக்குகிறீர்கள் - எங்கள்
இதயத்தை அசுத்தமாக்குகிறீர்கள்!

எந்தட் டெய்லரிடம்
உங்கள்
சுடிதாரைத் தைக்கிறீர்களோ?
ஒருவேளை
எலிசபெத் டெய்லராக இருக்குமோ?

அது எப்படியடி?
அழுக்கு சுடிதார் அணிந்தாலும்
அழகாகவே இருக்கிறீர்கள்!

குளிக்காமல் வந்தாலும் எங்களைக்
குப்புறவிழச் செய்கிறீர்கள்!

குற்றாலத்திற்கு வருகிறீர்களே
குளித்துவிட்டுப் போகவேண்டியதுதானே ஏன்டி
இடித்துவிட்டு போகிறீர்கள்?

பொருட்காட்சிக்கு வந்திருக்கும்
அனைத்து இளைஞர்களையும்
அழைத்து வாருங்கள்!
பிகர்காட்சிதானே நடக்கிறது என
பிதற்றிக்கொண்டிருப்பார்கள்

- பிகர்
விடுதியில் இருக்கும்
ரூபனின் வாழ்வை
ரூட் மாறச்செய்கிறது!

- பிகர்
மூர்த்தியோடு தங்கியிருக்கும்
ராஜாவை
ராட்சஷனாக்குகிறது!

-பிகர்
பைக்கில் சுற்றும்
ஞானியின் வாழ்வை
நாசமாக்கிச் செல்கிறது!

-பிகர்
கேண்டீனில் இருக்கும்
ஜோதியின் மனசை
வீதியிலே எறிகிறது

-பிகர்
கடலையோடு திரியும்
சுடலையின் வாழ்வை
சுட்டுவிட்டுப் போகிறது!

இறைவா
சுகர் தவிர்த்து வாழக்
கற்றுக்கொடுத்தாய்!
அதுபோல
பிகர் தவிர்த்தும் வாழக்
கற்றுக்கொடுப்பா!
எங்களால்
ஏமாந்து கொண்டிருக்கமுடியவில்லை

எந்த பஸ்ஸும் வரவில்லை
பஸ் வந்தால் பிகரில்லை
பிகரிருந்தால் அழகில்லை
எந்த பஸ்ஸடாண்டில் இந்த
மூன்றும் இருக்கிறது?

பாளை பஸ்ஸ்டாண்ட்

இப்படிப்
புரு விளம்பரத்ததையெல்லாம்
காப்பியடித்துக்கொண்டிருக்க முடியாது!

தினம் ஒரு
ஜீன்ஸ் பேண்ட்
அணிந்து வர முடியவில்லை

சேமித்த பணத்தையெல்லாம்
ஷேவிங் கிரீமுக்கே
செலவிட முடியவில்லை

பட்டதரிகள் எல்லாம்
பவுடர்தாரிகளாக முடியவில்லை

பிச்சையெடுத்துப்
போன் செய்ய முடியவில்லை

அடிக்கடி
பேண்ட் ஜிப்பை
சரிசெய்துகொண்டிருக்க முடியாது

ஒருநாளைக்கு
32453 முறை
தலையை சீவிக்கொண்டிருக்க முடியாது

ஆகவே பிரம்மா
பிகர்களைப் படைப்பதை
நிறுத்திவிடு!
உலக மக்கள் தொகை
உலக பைத்தியத் தொகையாக மாறிவிடக்கூடாது

இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கும் நேரம்கூட
எதிர்வீட்டு பிகர் ஒன்று
மொட்டைமாடியில் டீ குடிப்பது போல
என்னை
பார்த்துக்கொண்டிருக்கிறது
போங்கடி நீங்களும்
உங்க லுக்கும்!...

பிகரைப் பார்த்துக்கொண்டே

இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்

Friday, May 27, 2005

கடலை செய்யும் நேரம் இது

2001 ம் ஆண்டு எம்.சி. ஏ இண்டாம் ஆண்டில் நான் கடைசி பெஞ்சில் இருந்து ஒரு கவிதை எழுதி அனுப்ப அதனை எல்லோரும் படித்துவிட்டு சிரிப்புகளுடனும் விமர்சனங்களுடனும் கவிதையை திருப்பி அனுப்பிவிடுவார்கள்;. இதோ ஒரு கவிதை

-------------------------
-------------------------
-------------------------
-------------------------
நீண்ட மௌனங்களின்...
எதிரி!


காற்றே புகாத இடத்தில்...
நீரே இல்லாத நாட்டில்...
கடலைக்கு மட்டும்...
அனுமதி கொடுங்கள்!
காற்றும் நீரும்
முக்கியமாய் படாது!


-கடலை
மூன்றே எழுத்துகளில்
முப்பதாயிரம் அர்த்தங்கள்!

-கடலை
கல்லூரி மாணவர்களின்
தேசியகீதம்!

இதயத்தின்
அடிப்பாகத்தினிலே
அமிழ்ந்து கிடக்கின்ற
தூங்கிக் கொண்டிருக்கிற...
சந்தோஷத்தை
தண்ணீர் தெளித்து எழுப்புகிறது!


கல்லூரியின்
செலபஸ்ஸை விடவும்
சிறப்பு வாய்ந்த பாடம்
இந்த
வார்த்தைக்குள்ளே
வழிந்துகொண்டிருக்கிறது!

கழுத்துப்பக்கம்
கடப்பாறையை நீட்டினாலும்...
கடலையை நிறுத்தமுடியாது!

Kadalai is
injurious to health

பாம் வைத்து...
பிரிக்க நினைத்தாலும்
வெடித்த பிறகும்
வறுக்கப்படும்!

கல்லூரி காலத்தை
நினைத்துப்பார்க்கின்ற
எல்லா மாணவர்களின்
மனசுக்குள்ளும் வந்துபோகின்ற...
முதல்வார்த்தை!

கடலை ஒரு
வித்தியாசமான அணு!

ஆக்கலாம்
அழிக்கலாம்
ஒருவகை கடலையை
இன்னொருவகை கடலையாக
மாற்றலாம்!

மாணவர்களின்
ஓய்வு நேரத்தைப் பார்த்து
ஓடிவரும்!

என்டரன்ஸ் எழுதாமலேயே...
கோட்டா கொடுக்காமலேயே...
ஆர்ட்ஸ்-என்சினியரிங்
மெடிக்கல் கல்லூரியில் வந்து...
மெதுவாய் இடம் பிடித்துக்கொள்ளும்!

உணவு
உடை
இருப்பிடம்
கடலை!

-கடலை-
மேகமூட்டம்(புகை) இருந்தாலும்
மழைவராத
வித்தியாசமான
இயற்கை சூழ்நிலை!


கடலை பற்றி எழுதினால் - இந்த
காகிதம் பத்தாது!
மன்னித்துக்கொள்ளுங்கள்
முடித்துக்கொள்கிறேன்!


இந்த நேரத்தில் கூட
வறுபட்டுக்கொண்டிருக்கும் கடலைக்கு
இந்த
கவிதையை சமர்ப்பித்துவிட்டு
கிளம்பிவிட்டேன்
"கடலை செய்யும் நேரம் இது!"

____________________________முன்பெஞ்சு - பக்கத்து பெஞ்சு கமெண்ட்ஸ்கடலலை வந்தாலும் ஓயாது இந்தக் கடலை
(ஷ்யாம் - எம்.சி.ஏ ஏ குரூப்)


ஆதலால் கடலை சாகுபடி செய்வீர்
பயன் பெறுவீர்
(எவனோ)


கடலை போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் புகைந்து சாவார்
(எவளோ)


அறிவிப்பு - மன்றக்கூட்டம்

கடலை சாகுபடி பற்றிய ஒரு சிறு விளக்க உரையை அளிக்க வருகிறார்கள் நமது கல்லூரியின் கடலை மன்னர்கள்.

நேரம் : காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும்

- மணி
எம்.சி.ஏ ஏ குரூப்

கடலை போடாதீர்கள் காளையர்களே
கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்
இல்லையேல் கடத்தப்படுவீர்கள்

இப்படிக்கு

நீ கடலை போடும் பெண்ணின் அண்ணன்
(பொன் சுப்பிரமணி
எம்.சி.ஏ பி குரூப்)


அலை அலையென வரும் கடலையை
அடக்காதே
அது உன்னை
அடக்கி விடும்
அவர்களின் மத்தியில்
(கண்ணா -எம்.சி.ஏ ஏ குரூப்)

கடலை
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்து விட்டாலும் என் பேச்சிருக்கும்
(ரபீக் -எம்.சி.ஏ பி குரூப்)

கடலைக்குண்டோ அடைக்குந்தாழ் அடைத்துவிட்டால்
கேட்டில் ஏறி வறுப்பர்
(ஞானி (நான்தானுங்கோ))


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Tuesday, May 17, 2005

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

சவுதி – அல்கோபரிலிருந்து நண்பர் முஜிபுதீன் அனுப்பிய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Monday, May 16, 2005

பெண் பார்க்கும் படலம்

2001 ம் ஆண்டு எம்.சி.ஏ மூன்றாம் ஆண்டு கல்லூரியின் ஒரு மதிய இடைவேளை.
"டேய் ரொம்ப போரடிக்குதுடா " - நான்

"என்ன பண்ணலாம் ..பாம்பே தியேட்டர்ல படத்துக்கு போலாமாடா "- ரபீக்
"ச்சே மூணுமணி நேரம் வேஷ்டா போயிருண்டா..இங்க இருந்தா யாரையாவது கிண்டலடிச்சுட்டு இருக்கலாம்" - நான்

அந்தநேரம் ஜோசப் உள்ளே வந்தான்.

"டேய் உன் ஆளு எப்படிடா இருக்கா" - நான்

"ஞானியார்! இது சரியில்லைடா ..அவ என்னைய க்ராஸ் பண்ணும்போதெல்லாம் நீ என் பேரை சொல்லி கத்துற.. அவ க்ளாஸ் பொண்ணுங்கலாம் ஒரு மாதிரியா பார்க்குறாங்கடாஎனக்கு வெட்கமா இருக்கு" - ஜோசப்

"நீ ஏண்டா வெட்கப்படுற அவதாண்டா வெட்கப்படணும் "- நான்
உடனே ஒரு ஐடியா.. ? ரபீக்கின் காதில் கிசுகிசுத்தேன்.
இருவரும் பைக்கை எடுத்து கிளம்பினோம் பக்கத்தில் உள்ள பெட்டிகடைக்கு.

வெத்தலை - பாக்கு - தேங்காய் - வாழைப்பழம் என வாங்கிக்கொண்டு பக்கத்து டீ கடையில் தாம்பூலத்தட்டு போல ஒரு தட்டு ஒன்று கடன் வாங்கி அந்த தட்டில் எல்லா பொருட்களையும் வைத்து..ஜோசப்புக்கு பெண்பார்க்க செல்லலாம் என ஏற்பாடு!

எல்லாம் தயார் செய்து கொண்டு வகுப்பறையில் நுழைந்தோம். எல்லோரும் கேட்டார்கள் "எதுக்குடா இது"

"டேய் எல்லோரும் வாங்கடா நாம் இப்ப எம்.சி.ஏ எ குரூப்புக்கு போய் ஜோசப்புக்கு பெண் பார்க்க போவோண்டா" - எல்லோரும் குஷியாகிவிட
"டேய் டேய் வேண்டான்டா ப்ளீஸ்! மானத்தை வாங்கிறாதடா"
- ஜோசப் மட்டும் காலில் விழாத குறையாக கெஞ்சினான்

"நீ வரவேண்டாண்டா நாங்க போறோம் "

மாணவர்களையெல்லாம் திரட்டி ஒரு படையாக கிளம்பினோம். சீனியர் ஜுனியர் என எல்லோரும் பார்த்தார்கள்.எல்லோருடைய கவனமும் எங்கள் பக்கம் திரும்பிற்று.
"என்னடா தட்டோடு இந்த கிறுக்கனுங்க எங்கடா போறாங்க!" - சீனியர் மாணவர்கள்
அந்தப்பெண்ணின் வகுப்பறைக்குள் நுழைந்தோம் . அந்தப்பெண்ணை தேடினோம்.
அதோ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்.
"எங்க க்ளர்ஸ் ஜோசப்புக்கு உங்க க்ளாஸ்ல இருந்து பொண்ணு பார்க்க வந்திருக்கிறோம் வரவேற்க மாட்டீங்களா? " - நான்

அந்தப் பெண்ணுக்கு புரிந்துவிட்டது. ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு அப்படியே வெட்கத்தில் பெஞ்சுக்கு அடியில் தலையை குனிந்து கொண்டாள்.

அவங்க க்ளாஸ் லீடர் லட்சுமணன் வந்து,

"சரிடா என்கிட்ட கொடுடா!" என் கேட்க,

'ஓஓஓஓஓஓஓஓ..." என்ற சுற்றியுள்ள நண்பர்களின் கத்தலுக்கிடையே தட்டு கைமாற்றப்பட்டது.

விசில் - கைதட்டல் சப்தம் பலமாய் கேட்டது. அந்தப்பெண்ணும் கொஞ்சம் ஜாலிடைப் என்பதால் கண்டுகொள்ளவில்லை.மிகவும் ஜாலியாய் இருந்தது அந்த நாட்கள்.

அதன்பிறகு அந்தபெண்ணும் - ஜோசப்பும் ,

கடந்து செல்லும்போது...............
எதிரெதிரே வரும்போது.............
சந்திக்கும்போதெல்லாம்......
அந்தப்பெண்பார்க்க - அவன் நோக்க ஒரே ஜாலிதான் போங்க! ஆனா உண்மையிலேயே அவங்களுக்குள்ள காதல் வந்துச்சா..போச்சா..இல்லை வந்திட்டு போச்சா...ன்னு தெரியாதுங்க.

இப்ப ஜோசப் சென்னையில் புரோகிராமரா இருக்கிறான். யாராவது பார்த்தீங்கனா அவன்கிட்ட சொல்லுங்க..அவன் சைட் பற்றி வெப்சைட்ல போட்டிருக்குன்னு..

- ரசிகவ் ஞானியார்

Sunday, May 15, 2005

பானிபட் இதயங்கள்

[நானும் எனது நண்பன் ராஜாவும் வெளியிட்ட பானிபட் இதயங்கள் புத்தகங்களிலிருந்து இந்தக் கவிதை.
புத்தகத்தின் தலைப்பாகிப்போன இந்தக்கவிதையை மட்டும் இருவரும் இணைந்தே எழுதுவது என முடிவெடுத்து எழுதப்பட்டது ]


பெண்ணே!

நேற்று நடந்த பட்டமளிப்புவிழா - என்
நினைவினை விட்டகலவில்லை

இருவரும் சந்திப்போம்
என்று தெரிந்தே
இனம்புரியாத வேகத்தோடு வந்துவிட்டு
எங்கோ ஒரு மூலையில்
என்றோ ஒருநாள்
பழகியவர்கள் போல
போலியாய் நடிக்கிறோமே?

எத்தனை யுகங்கள் கடந்தாலும்
உன்
மௌனப்படலத்திற்கு
மரணமொன்று கிடையாதா?

இரண்டாண்டுகள் ஆகியும் - உன்னுள்
இம்மியளவும் மாற்றமில்லையேஎ

என்னைப்பார் எத்தனை மாற்றங்கள்?

அன்று
உல்லாச பட்சியாய் திரிந்தவன்
இன்று
உதிரிப்பூவாய் உதிர்கிறேன்

அன்று
இமயம் போல்இருந்தவன்
இன்று
ஈசல்போல் மடிகிறேன்

என் எண்ணக்குதிரையின்
கடிவாளத்தை நின்
காந்தக்கண்களால் அவிழ்த்துவிட்டவளே

எத்தனை எதிர்பார்ப்புகளோடு
உன்னை எதிர்கொண்டேன்?
எல்லோரிடமும்
ஏதேதோ விசாரித்தவளே!
எனக்கு மட்டும்
ஏனடி விழிகளால் புதிர்போடுகிறாய்?

"இன்னும் உயிருடன்தான்
இருக்கிறாயா ?"
என்று
என்னிடம் ஒருநிமிடம்
விசாரித்திருக்கலாமே?

நாம் நண்பர்களோடு
சிரித்து மகிழ்ந்த
அந்த ஆலமரத்தடி...

நம் நண்பர்களின்
நாலுவரி கவிதைகளான
கேண்டீன் கிறுக்கல்கள்...

சீனப்பெருஞ்சுவரை விட
சிறப்பு வாய்ந்த
கல்லூரி வராண்டா சுவரில் - உன்னை
சிம்ரன் என் அழைத்து
சிலிர்த்து கொண்ட நாட்கள்...

பேசாத...பழகாத...
நம் காதலுக்கு
பரிணாம வளர்ச்சி கொடுத்த
அந்த கல்லூரி நூலகம்...

நம் காதலை கலந்து
எதை உருவாக்குவது
என்று ஆராய்ந்த
அந்த கெமிஸ்ட்டிரி லேப்...

ஜாவை புரோகிராமை விட
சக்திவாய்ந்த உன்விழிகளின்
புரோகிராமால் வினா தொடுத்த
அந்தகம்ப்யூட்டர் லேப்...

பிரிவு உபச்சார நாளில்
உன்
தோழியின் தோளில் சாய்ந்தபடி
தேம்பி தேம்பி அழுதாயடி!

அன்று
எத்தனை முறை
என்

பூ இதயம்
பூகம்பத்தை சந்தித்திருக்கும்?

நாம்
சீண்டிப்பார்த்து
சிரித்துக்கொள்ளும் அந்த
சிடுமூஞ்சி க்ளார்க்கின்
கடைசிக் கவுண்டர்!

உன்னுடைய பிறந்தநாளுக்கு
உனக்கே நான்
சாக்லெட் கொடுத்த
அந்த சைக்கிள் ஸ்டாண்ட்...

நான் கஷ்டப்பட்டு
கடலை வறுத்துக்கொண்டிருந்த
நாளொன்றில்
உரிமை கலந்தவளாய் நீ
முறைத்து சென்ற
மூன்றாவது வராண்டா!

நாங்கள் தொங்கிக்கொண்டே வரும்
கல்லூரிப் பேருந்தின்
பின்படிக்கட்டு!

அறுபது பேருக்கு
இருபது டிக்கெட் போட்டுவிட்டு
விழிக்கும்
அந்த அப்பாவி கண்டக்டர்!

இப்படி
ஒவ்வொன்றாய்
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு
எதிர்பாராமல் விழுந்த
கண்ணீர்த் துளியைத்
துடைத்துவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என திருப்திப்பட்டவளே!

நான் பார்த்ததை மட்டும்
நீஅறிந்திருக்க முடியாதே?

தூரத்துச் சிறுவர்களுக்கு
கைகாட்டும்
இரயில் பயணிகளின் சிநேகத்தைப்போல...

நம் உறவும்
அர்த்தமில்லாத
அனர்த்தமாகிப்போனதடி!

உள்ளங்களில் நயாகரா வீழ்ந்தாலும்...
உதடுகள் சகாராவாகிப்போனதில்...
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இப்படி சின்ன சின்ன ஞாபகங்களில்
ஒரு
பானிபட் யுத்தம்
நடந்து கொண்டுதானிருக்கிறதடி!

- ரசிகவ் ஞானியார்


மின் விளக்குமின் விளக்கில்லா

சாலைகளில் கூட
உன் ஞாபகம்தான்
என்னை
வழி நடத்தி செல்கிறது!
----------

உன் தெருவில்
மின்விளக்கு அணைந்தாலும்
புகார் வருவதில்லையாமே?
----------
உங்கப்பா என்னலூசா ?

உன் வீட்டிற்கு போய்
மின்விளக்கு வாங்க வந்திருக்கிறார்!

நிலவுக்கு எதற்கடி சிமினி ?
----------
ஒரு கண்டுபிடிப்பு
கிடைக்காமல் போயிருக்கும்.

நல்லவேளை
என்னவள் நீ

எடிசன் காலத்தில்
பிறக்கவில்லை!

- ரசிகவ் ஞானியார்

Saturday, May 14, 2005

பூரி

மனக்கேமிரா மேல்நோக்கி நகன்று கல்லூரியில் வந்து நிற்கிறது.

கல்லூரியில் இரண்டாவது பீரியடின் வேளை காலை பதினொரு மணி...

யாரோ இரண்டு பேர் வராண்டாவில் நடந்து போய்கொண்டிருக்கின்றனர்..யார் அது? உற்று நோக்கினேன்.
அட நான்தான் ..பக்கத்தில் யார்?
ம்ம்ம்ம்...நம்ம மஸ்தான் என் நண்பன்.
பீரியடை கட் அடித்துக்கொண்டு எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்.?
கடைசியில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறையை நோக்கி... ஏதோ நடக்கப் போகிறது?
computer class உள்ளே நானும் மஸ்தானும் நுழைகின்றோம்.
"டேய் வேண்டாண்டா! யாராவது பார்த்துட்டாங்கன்னா வம்பு "- நான்
"பயப்படாம வாடா!"
"அவங்களுக்கு இது practical டைம்டா! யாரும் வரமாட்டாங்க!"
உள்ளே நுழைந்து வலது பக்க முதல்பெஞ்சில் உள்ள அந்த பெண்ணின் டிபன் பாக்ஸை திறக்க முயல்கிறோம்.
"ம்ம்ம்ம்ம்ம " திறக்க முயற்சிக்கிறான்
குரங்குகள் நடமாடும் இடம் என்றுதான் அந்தப்பெண் இருக்கமாக மூடியிருக்கிறாள் என நினைக்கிறேன்

"டேய் சீக்கிரம்டா அவங்க க்ளாஸ் பையன்க யாரும் வயித்து வலிக்குதுன்னு பராக்டிகல் கிளாஸ்லயிருந்து வந்துட்டாங்கன்னா..தொலைஞ்சம்டா"
- பயத்தில் ஏதோதோ உளறினேன்.

"ரொம்ப பயப்படாதடா வாடா"
டிபன்பாக்ஸ் திறந்துவிட்டது..உள்ளே இரண்டே இரண்டு பூரி
( இதுதான் ஸ்லிமா இருக்க காரணமோ? )
"டேய் இரண்டுதான்டா இருக்கு"
"சரி ஆளுக்கு ஒண்ணு"
"பாவண்டா ஒண்ணு எடுத்து பாதி பாதி சாப்பிடுவோம்"
( அந்த பெண்ணிற்காய் இரக்கப்பட்டேன் )
ஆளுக்கு பாதி சாப்பிட்டுவிட்டு தண்ணீர் பாட்டில் எடுத்து குடித்தோம்
கையில் உள்ள எச்சிலைத் துடைப்பதற்காக ஒரு நோட்டினை எடுத்து ஒரு தாளை கிழித்து துடைத்தோம். அட! நோட்டின் பின்புறம் ஒரு கவிதை!
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்
மண்கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
அவையாகும் நீயாகுமோ
நீ என்னை அழைக்கின்ற நட்பாகுமோ?
என கிறுக்கிறியருந்தது.
"டேய் அவ கவிதை கூட எழுதுவா போலிருக்குடா.
நம்ம நட்பத்தான் சொல்லியிருக்கிறாளோ?"
"ஆமா படிச்சுட்டு அவ வந்தவுன்ன விமர்சனம் செய்துட்டு வா நான் போறேன்"
காலடிச்சப்தம் கேட்க அவசரஅவசரமாய் கிளம்பினோம்.
எதிரில் பி.காம் நண்பன் பிரபாகரன் வந்துகொண்டிருக்க
"டேய் என்னடா இந்த க்ளாஸ்ல யிருந்து வர்றீங்க"
"அந்த பொண்ணோட டிபனிலிருந்து பூரி எடுத்து தின்னோன்டா.."
அவனோ அன்று மாலை கல்லூரி முடியும் சமயம் அவள் தோழிகளோடு வந்துகொண்டிருக்க

"பூரிரிரிரி... "என கத்தினான்
அந்தப்பெண் திரும்பிபார்த்து முறைத்துகொண்டே சென்றாள். கல்லூரி முடியும்வரை அவள் அந்த பி.காம் மாணவன்தான் பூரி எடுத்து தின்றது என நினைத்துக் கொண்டிருந்தாள்
எட்டு வருடம் முன்பு திருடி தின்ற பூரிக்கு இரண்டு வருடம் முன்புதான் நான் அந்தப்பெண்ணிற்கு மெயில் அனுப்பி உண்மையை கூறி மன்னிப்பு கேட்டேன்.

- ரசிகவ் ஞானியார்

சரியான அவமானம்பா


1998 ம் ஆண்டு ரம்சான் நெருங்கி கொண்டிருக்கும் சமயம் ..நான் கல்லூரியின் வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருக்கிறேன். எதிரில் அந்த இயற்பியல் மாணவி வசந்தி...

" ஹேப்பி ரம்சான்! ஞானியார்"

"தேங்க்யு! தேங்க்யு!"
( வழிந்துகொண்டே கூறினேன்)

கொஞ்சம் நாள் கழிந்தது; பொங்கல் நெருங்கும் சமயம். அவள் மட்டும் நம் பண்டிகைக்கு வாழ்த்தினாள் ..நாமும் வாழ்த்தவில்லையென்றால் நல்லாயிருக்காது
அவள் வகுப்பறை நோக்கி நடந்தேன்.அவள் தன் தோழிகளோடு வந்து கொண்டிருக்கிறாள்.
அட அவளுக்கு சொல்லும் சாக்கில் எல்லோரிடமும் கடலை போடலாம்
நடையின் வேகத்தை அதிகரித்து சென்றேன்.
"ஹாய் வசந்தி ஹேப்பி பொங்கல்"
உடனே எல்லோரும் மொத்தமாக சிரித்துவிட்டார்கள் அவள் உட்பட.
எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது . என்னடா ஏதாவது தப்பா சொல்லிட்டோமா?
இல்லைனா பேண்ட் கிழிந்திருக்கிறதா... ஏதேதோ நினைத்தேன்
அவளே கூறினாள் "அய்யோ சாரி ஞானி! நான் கிறிஸ்டியன்"
எனக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டுமே
"அதனாலென்ன ... பொங்கல் தமிழர் திருநாள் தானே!
யாருக்கு வேணுமினாலும் சொல்லலாம்"

என்று கூறிவிட்டு அசடு வழிந்துகொண்டே வந்துவிட்டேன். சரியான அவமானம்பா..

- ரசிகவ் ஞானியார்

Thursday, May 12, 2005

கல்லூரி பஸ் தின விழா1999 ம் வருடம் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பஸ் தின விழா.


நாங்கள் செல்கின்ற அந்த பேருந்து கல்லூரி பேருந்து அல்ல..கவர்மெண்ட் பேருந்து..ஆகவே கல்லூரி நிர்வாகத்திம் அனுமதி வாங்கத் தேவையில்லை..நாங்களே விழாவுக்குண்டான நாட்களை குறித்துக்கொண்டோம்.

நான் மாணவர்களின் செயலராக இருந்ததனால் நண்பன் பிரபாகரனை அழைத்துக்கொண்டு பிணத்திற்கு கொட்டு அடிக்கும் ஒரு பெரியவரை பார்த்து பேசி மறுநாள் அவர் நாங்கள் விரும்புகிற இடத்திலெல்லாம் ( பிகர்கள் அதிகமாய் இருக்குமிடம் ) பேருந்துக்கு முன்னால் கொட்டு அடித்துக்கொண்டே வரவேண்டும் நாங்கள் அவர் பின்னால் ஆடிக்கொண்டே வரவேண்டும் என்பதே எங்களின் இருநாட்டு ஒப்பந்தம்.

ஒப்பந்தம் பேசி கையெழுத்திட்டு பணமும் கொடுத்துவிட்டு வந்தோம்.
(ஆமா வல்லரசு ஒப்ப்ந்தம்)

அந்தப்பெரியவர் மிகவும் வயதானவர் கண் பார்வை கூட அந்த அளவிற்கு புலப்படாது. அவரிடம் அவரை நாங்களே அழைத்துசென்று மீண்டும் அவரை அழைத்துவந்து விடுகிறோமென வாக்குறுதி அளித்தோம்.

இன்று பிரச்சனையை சந்திக்ப்போகிறோம் என தெரியாமலேயே பதட்டம் இல்லாமல் விடிந்தது திருநெல்வேலி பேருந்து நிலையம்.

சாரதா கல்லூரி பெண்கள் பச்சை நிற சேலையில் (யுனிபார்ம்) கூட்டமாய் வழக்கமாய் நிற்கும் அந்த கரும்புச்சாறு கடைக்கு அருகே காத்திருந்தார்கள்.
( மாணவர்கள் இதயத்தை சக்கையாய் பிழிவதால்தான் அந்த கடை அருகே நிற்கிறார்களோ என தோன்றிது )

பூங்காவில் கர்த்திருக்கலாம் ஆனால்
ஒரு
பூங்காவே இங்கு காத்திருக்கிறதோ

என எண்ண வைத்தது அவர்களின் பச்சை நிற கூட்டம். அவர்கள் அருகே STC கல்லூரி கூட்டம். அவர்களுக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சதக் + மதிதா + ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் ,அரணாகவும் அவரவர்களுடைய பிகர்களை யாரும் நோட்டமோ இல்லை கடலையோ போட்டுவிடக்கூடாது என்ற கவனத்தில் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அங்கே கரும்பு சாறு கடைக்கு பக்கத்தில் அந்த மிட்டாய் கடைக்காரன் வேறு

இவர்களை பார்த்து வயிற்றெரிச்சலில் முறைத்துக்கொண்டே,

' வேர்க்கடலை... வேர்க்கடலை ... கடலை " என கத்திக்கொண்டிருந்தான்

"கடலை...." என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் அழுத்தி வரும்.

சில மாணவர்கள் கடலை போடவா என தவித்துக்கொண்டும் ...

அங்கே பாருங்கள் யாரோ ஒரு பையன் அந்த சாரதா கல்லூரி பொண்ணுக்கு கடிதம் கொடுப்பதற்காய் தயங்கி தயங்கி நிற்கின்றான்...

சிலர் சீப்பை எடுத்து தலைவாரிக்கொண்டும்...

சம்பந்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு...

இப்படி பல ..பல.. சூழ்நிலைகளில் தான் நாங்கள் அந்த கொட்டு அடிக்கும் பெரியவரை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினோம்.

அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து ,

"பெரியவரே! இங்கயே உட்காருங்க ..பஸ் வந்ததும் நாங்க கூப்பிடுகிறோம்... "

பின் பேருந்தை அலங்கரிப்பதற்காக அலங்கார பொருட்கள் - ஜரிகைகள் - மிட்டாய்கள் - ரோஜாக்கள் ( வழியில் நிற்கின்ற பிகர் கூட்டங்கள் மீது விட்டெறிவதற்காக ) என உற்சாகமாய் தயாராகிவிட்டோம்.

எதிர்பார்த்துக்கொண்டே நிற்கின்றது வானரக் கூட்டங்கள் பேருந்துக்காக..

எங்களின் இந்த ஏற்பாட்டை தெரிந்து கொண்ட டிரைவர் அந்த நேரத்திற்குண்டான் டிரிப்பை கேன்சல் செய்து விட்டாரா? இல்லை ஏதாவது பழுது பிரச்சனையால் வராமல் போய்விட்டதா ?என தெரியவில்லை..

பேருந்து வரவேயில்லை

மணி வேறு 9.00 ஜ தாண்டிக்கொண்டிருக்கிறது..ஒவ்வொ­ரு கல்லூரி பிகர்களாக அவரவர் பேருந்தில் ஏற முற்பட்டுக்கொண்டிருந்த சமயம்....

"என்னடா வண்டியை காணோம் எஸ்கேப் ஆயிட்டான்னு நினைக்கிறேன் "- நான்

"இப்ப என்னடா பண்ண " - ராஜா

"டேய்! ஏதாவது வேன் பிடித்து வேன் விழாவாக மாற்றலாமே ?"- நான்

'அறிவு இருக்காடா நாயே! எல்லாரும் கேலி பண்ணுவாங்கடா "- அவன்

குரங்குகளுக்கெல்லாம் கோபம் உண்டாகியது ( அட எங்களத்தான் சொன்னேன்) .

எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட பிறகு பஸ் வரவில்லை என்றால்
எங்கள் கல்லூரிக்கு மிகுந்த அவமானமாகி விடும் ..

அங்கு நிற்கின்ற மற்ற கல்லூரி மாணவ- மாணவிகளின் கேலித்தனத்திற்கு ஆளாக நேரிடும் நாளை முதல் இந்த பஸ்ஸ்டாண்டில் ஹீரோத்தனம் செய்யமுடியாது..என்ற ஆத்திரத்தில்

அங்கு ஆட்களே இல்லாமல் புறப்பட்ட தூத்துக்குடி பேருந்தை நிறுத்தினோம் ( தூத்துக்குடிக்கு எங்கள் கல்லூரியை கடந்துதான் செல்லவேண்டும் ) சுற்றி வளைத்தோம்

ஆரம்பமாகிவிட்டது பிரச்சனை..

டிரைவரிடம் கேட்காமலையே அந்த பேருந்தை அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். அவரும் சரி ஏதோ ஒரு குஷியில பசங்க அலங்காரம் பண்ணுறாங்கன்னு நினைத்து ஒன்றும் கேட்கவில்லை.

பின் ஒரு மாணவன்

"ஹலோ வண்டியை எடுங்க எங்கள காலேஜ் ல விட்டுட்டு நீங்க அப்படியே தூத்துக்குடி போங்க"

"இதென்ன உங்க அப்பன் வீட்டு வண்டியாடா போங்கடா"

சூடேறிவிட்டார்கள் மாணவர்கள்

"டேய் என்னடா மரியாதை இல்லாம பேசுற "- ராஜா டா போட்டு பேச

"போங்கடா போய் படிக்கிற வேலைய பாருங்கடா..ரவுடித்தனம் பண்ணாதீங்க"

"யாரைப்பார்த்து ரவுடின்னு சொன்னே நீ - " ராஜா அவரை அடித்துவிட அவ்வளவுதான் ...
டிரைவர் உடனே பஸ்ஸை விட்டு இறங்கி ..புறப்பட்டுக்கொண்டிருந்த..வழி­யில் வந்து கொண்டிருந்த ..எல்லா பஸ்ஸையும் நிறுத்தி ஒரு படையை திரட்டினான்

ஒரு கண்டக்டர் ஸ்பானரோடு வந்து

"எவண்டா எங்க நாராணன் மேல கை வச்சது" என்று வேகமாய்வந்து

ராஜாவின் மீது அடித்துவிட ராஜாவும் ஆத்திரத்தில் செருப்பை கழட்டி அடித்துவிட..

அந்த கண்டக்டர் மிகுந்த ஆத்திரத்தோடு ராஜாவை விரட்ட அடிதடி யாகி விட்டது.. அந்த கண்டக்டர் யாரையோ அழைத்து வருகிறேன் என கோபத்தில் கிளம்பிவிட..

நான் ராஜாவை அழைத்து சென்று பேருந்து நிலையத்தின் டாய்லெட்டில் அமர வைத்துவிட்டு மதிதா கல்லூரி மாணவன் ஒருவனின் சட்டையை மாற்றச்சொல்லி ராஜாவை ஆட்டோபிடித்து காலேஜ் சென்று மற்ற மாணவர்களிடம் விசயத்தை கூறி ஸ்டிரைக்கிக்கு ஏற்பாடு செய்யச்சொன்னேன்.

இங்கே கைகலப்பு - பேச்சுவார்த்தை - திமிரி அடித்தல்...

அந்த பி.காம் மாணவன் பேருந்தை சுற்றி சுற்றி ஓடினான். அவனை கையில் ஒரு கயிற்றோடு அடிக்க முயற்சித்து முயற்சித்து தோல்வியுறற கோபத்தில் ஒரு டிரைவர் விரட்டிக்கொண்டிருக்க...

பக்கத்தில் ஒரு துணி கடையில் ஒளிந்து பார்த்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை கல்லூரியில் ஒரு வீரனைப்போல பேசுபவன்..இங்கே முகத்தில் உயிர் பயத்தோடு ஓடுவதைக்கண்டு பரிதாபம் வரவில்லை சிரிப்புதான் வந்தது..

அந்த ஓட்டத்திலும் அவன் என்னை கவனித்துவிட்டான்.. பின் லேசான சிராய்ப்புகளோடு தப்பிவிட்டான்

( பின் கல்லூரி வந்து என்னிடம் கேட்டான் "டேய் நாயே அவன் என்னைய துரத்துறான் நீ என்னடான்னா வேடிக்கை பார்க்குற .. " " பின்ன என்னடா தப்பு நம்ம மேல நாமதான் முதலில் கைய வச்சோம்.. அதுமட்டுமில்ல அப்ப அவங்ககிட்ட போய் நான்தான் மாணவரணி செயலாளருன்னு அறிமுகபடுத்தவா சொல்ற " "பிச்சுறுவாங்கடா! ")

காவல்துறை வருகின்ற சூழ்நிலையில் மாணவர்கள் எல்லோரும் தப்பித்து ஓட ஆரம்பித்துவிட்டர்கள்.

வேதியியல் புத்தகமெல்லாம் வீதியில் கிடக்கிறது

சீப்பு - பேனா - புத்தகம் - ( டிபன் பாக்ஸை மட்டும் மறக்காம எடுத்துக்கிட்டாங்கப்பா)

எல்லாம் அப்படியே கிடக்க கவனித்தபடியே சில நண்பர்களோடு ஆட்டோ பிடித்து கல்லூரி வந்து சேர்ந்தேன்.

இப்பொழுது கல்லூரியில் பிரச்சனை.. ஆமா அம்மாகிட்டதான் அடம் பிடிக்கமுடியும்

ரோட்டுலனா போலிஸ் பயம் இங்க அப்படியில்ல
நிறைய மாணவர்கள் அல்லவா போலிஸ்க்கு பயம்

"டேய் கல்லூரி மாணவர் செயலாளரை அடிச்சுட்டாங்கன்னு புரளியை கிளப்புங்கடா அப்பத்தான் எல்லா மாணவர்களும் வருவாங்க - " என்க ,

ராஜா ஏற்கனவே மாணவர்களை திரட்டி வைத்திருந்தான் என்னை அடித்துவிட்டதாக புரளியை கிளப்பி,

உடனே நானும் காயம் ஏற்படுத்த ஒரு பிளேடால் கையை காயப்படுத்த முயல ( நடிப்புதாங்கோ)

"டேய் சும்மா இருடா முட்டாள் "- உயிர் நண்பர்கள்

"நாம போய் எல்லோரையும் திரட்டுவோம் வாங்கடா" திரண்டது கல்லூரி..

சாலையில் அமர்ந்து.. விளக்கை உடைத்து பஸ்ஸை வழிமறித்து ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்க

சன் தொலைக்காட்சியில் இருந்து செய்திகளுக்காக படம் வேறு பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்

டிவியில் வரப்போகிறோம் என்ற குஷியில் மாணவர்கள் உற்சாகம் மேலும் வலுத்தது

ஒருவன் கல்லூரி பலகையை எடுத்து டயர் போல சாலையில் உருட்ட

மற்றொருவன் கல்லூரி பஸ்ஸ்டாண்ட் கூரையை பிய்த்தெடுக்க முயல

ஒருவன் தரையில் அமர்ந்து போராட்ட வீரனை போல
"அராஜகம் ஒழிக " என முழக்கமிட
( அதான்ங்க பஸ்ஸை சுத்தி சுத்தி ஓடினானே அந்த வீரன்தான்)

பின்னர்தான் தெரிந்தது அது சன் தொலைக்காட்சியில் இருந்து வரவில்லை கல்லூரி பிரின்ஸ்பாலின் ஏற்பாடு என்று கேள்விபட்டதும் மாணவர்கள் கல்லெறிந்து காக்கை பறப்பதை போல சிதறி ஓடிவிட்டார்கள்.

பின் சமாதானம்- பேச்சுவார்த்தை -மன்னிப்பு -அபராதம் என எப்படியோ முடிந்து விட்டது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நாங்கள் கொட்டு அடிப்பதற்காக அழைத்து வந்தோமே
அந்த பெரியவர் அவர் என்ன ஆனார்? அவரின் கதி என்ன? எவ்வளவு நேரம் அங்கே காத்திருந்தார்?
யார் அவரை திருப்பி அழைத்து சென்றார்கள் என இதுவரை தகவல் இல்லை

லகலகலகப்பாயிருக்கிறது

சாரி சாரி

கலகலப்பாக இருக்கிறது..

அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப்பார்க்க

- ரசிகவ் ஞானியார்

பூனையோடு ஒரு போட்டி

தினமும் நான் மதிய உணவை என் அலுவலகத்தின் அருகேயுள்ள ஒரு பூங்காவில் சென்று கழிப்பேன். அன்றும் (12.05.05) சுமார் 12.15 மணி அளவில் நான் அங்கு சென்று சாப்பிடுவதற்காக வைத்திருந்த 2 சிக்கன் சாண்ட்விச் எடுத்து சாப்பிட முற்பட்டேன்.

"மியாவ் " - பின்னாலிருந்து ஒரு பூனை பசியில் கத்தியது

"எனக்கும் கொஞ்சம் கொடேன் ப்ளீஸ் " - என்பது போல அதன் பார்வை

எனக்கோ சரியான பசி மறுபடியும் உணவகம் சென்று ஒரு சாண்ட்விச் வாங்கலாமென நினைத்தாலோ நேரம் இல்லை..
சரி கொஞ்சம் கொடுப்போம். கொஞ்சம் பிய்த்து எறிந்தேன்
பாய்ந்து சென்று சாப்பிட்டுவிட்டு மறுபடியும் என்னை இரக்கத்தோடு பார்த்தது. அந்தப்பார்வை.....
பசியில் குழந்தை தாயை ஏறிட்டு பார்க்குமே அந்த பார்வை....
வாசலில் நிற்கின்ற பிச்சைக்காரனின் கண்களில் தெரிகின்ற வலி...
கல்யாண வீட்டு வாசலில் ஒதுங்கி
எச்சில் இலைக்காய் காத்திருக்கும் ஏழைகளின் ஏக்கம்.....
என்று எனக்கு ஏதேதோ ஞாபகம் வந்தது
"மியாவ் " - மறுபடியும்
"உன்னை இறைவன் சம்பாதித்து சாப்பிட வைக்கிறான்
எங்களால் சம்பாதிக்க முடியுமா....?

அதனால் தான் உங்களை போன்றவர்களை அனுப்பி உதவுகிறான்..
சார்ந்து இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லைப்பா "

- பூனை கெஞ்சுவது போல உணர்வு
மறுபடியும் கொஞ்சம் அதிகமாகவே பிய்த்துப்போட்டேன்.
அது சாப்பிடுவதற்குள் சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையென்றால் மறுபடியும் இரக்கத்தோடு பார்த்துவிடும்.. பின்னர் கொடுக்காமல் இருக்கமுடியாது.. என நினைத்து
அவசர அவசரமாய் விழுங்கினேன். நான் முழுவதையும் சாப்பிட்டு தீர்ப்பதற்குள் மறுபடியும் கேட்டுவிடுவது என்ற தீர்மானத்தில் பூனையும் அவசரமாய் விழுங்கியது.
பூனைக்கும் எனக்கும் போட்டி..
ஜெயித்தது பூனை. மீண்டும் பார்த்தது

" மியாயாயாயாவ் " - கொஞ்சம் நீண்டு வந்தது சத்தம்
கையில் ஒரே ஒரு துண்டுதான்! என்ன செய்ய ? எனக்கு வேறு சரியான பசி!
மறுபடியும் - " மியாவ்"

" நீ இதை சாப்பிடாவிட்டால் கூட போகும் வழியில் எங்கேனும் சாப்பிடலாம்
ஆனால் என் பசிக்கு இதுதான் ப்ளீஸ்! "

பின் அந்த கடைசி சிறிய துண்டையும் பிய்த்து
"இந்தா பிடி நீ பாதி நான் பாதி"
கொடுத்துவிட்டு மீண்டும் ஆபிஸ் திரும்பினேன் வயிறு நிரம்பாவிட்டாலும் இதயம் நிரம்பிய சந்தோஷத்தில்.

- ரசிகவ் ஞானியார்

Wednesday, May 11, 2005

பெற்றவளுக்கும் பிணம் நாறும்


பணம் பிதுங்கி வெளியே வருகிறது
சேமிக்க பீரோக்கள் இல்லை !
செலவழிக்க இதயமும் இல்லை !

பணத்தின் குவியலில் புரளுகிறேன்!

"ஏழைகள் எவனும்
எட்டிப்பார்க்காதீர்கள் "

-----------

ஞாயிற்றுக்கிழமை நடனம் !
கண்ட பெண்களுடன் உறவு !

மூத்திரம் சரியாய்ப் போனால்கூட
முந்நூறு பேருக்கு விருந்து !

"ஆத்திரம் கொண்டு பார்க்காதீர்கள் - நான்
ஆடம்பரத்தில் அலைகிறேன் போங்கடா "

-----------
பிச்சைக்காரன் சத்தம் கேட்டு ...
காதைப் பொத்துவேன் !
எச்சில் தின்னும் கூட்டம் கண்டால் ...
எக்காளமிடுவேன் !
"அட இவர்களும் மனிதர்களா"
-----------
நான்
வளர்ந்த விதம் தேவையில்லை...
வந்தபாதை மறந்துவிட்டேன்!
உதவியவனை உதறித்தள்ளு ...
நன்றியா? அதை நாயுடன் கட்டு!
-----------

"தலைக்கணம் - ஆணவம் - ஆடம்பரம் "

என்ன சொன்னால் எனக்கென்ன?

திருப்பி துப்ப நேரமில்லை ...
உலகம் எல்லாம் எனக்குடா?
-----------
இப்படி
தலைக்கணத்தோடு ...
திமிராய் பேச வெட்கமாயிருக்கிறது !

நான்
இறந்தபிறகு
புதைக்காமல் வைத்தால்
பெற்றவள் கூட
மூக்கைப் பொத்துவாள்

பெற்றவளுக்கும் பிணம் நாறும் !

-----------
ஆம்
ஓருநாள் நானும்
செத்துப்போவேனே..?

ஆகவே
இப்படி
தலைக்கணத்தோடு ...
திமிராய் பேச வெட்கமாயிருக்கிறது !

-----------

- ரசிகவ் ஞானியார்

Tuesday, May 10, 2005

தமிழ் வாத்தியாருக்கு ஒரு மன்னிப்பு கடிதம்

அன்புள்ள தமிழ் அய்யாவுக்கு,

ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு என்னை? கொஞ்சம் பின்னோக்கி ஓட்டுங்கள் உங்கள் ஓட்டை ராஜ்தூத் பைக்கை.
1998 ம் வருடம் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாங்கள் வகுப்பில் தமிழ் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் கடைசி பெஞ்சில் இடதுபக்கத்திலிருந்து மூன்றாவதாக இருப்பேனே?

மேடையில் கூட சிலசமயம் கவிதை கூட வாசிப்பேனே..
ஞானியார் அய்யா ஞாபகமிருக்கிறதா?
உங்களிடம் முதலில் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொண்டு நான் மன்னிப்பு கேட்டதன் காரணத்தை சொல்கிறேன்.

சரியாக 11 மணி - நீங்கள் தமிழ் வகுப்பை ஆரம்பித்து விட்டிர்கள். தமிழ் வகுப்புக்கு மட்டும் கணிதம், விலங்கியல் மற்றும் ஆங்கில இலக்கியம் வகுப்பு மாணவர்கள் ஒன்றாக கூடுவார்கள்.
நீங்கள்
"தேமா , புளிமா " என நடத்திக்கொண்டிருக்க
பின்னாலிருந்து ஒரு குரல்
"மாமா , உப்புமா " என எதிரொலித்ததே ஞாபகமிருக்கிறதா? அது நான்தான் அய்யா
பின் ஓர்நாள்
"யானைப்படை, குதிரைப்படை , காலாட்படை...." - என்க

நானோ "பூனைப்படை - எலிப்படை " என எடுத்துவிட நீங்கள் திரும்பி பார்க்கையில் அமைதியாயிருக்க , நீங்களோ கோபப்பட்டு
"எவன்டா அது பண்பற்ற குடும்பத்தில் பிறந்தவன்" என பண்பில்லாமல் பேசினீர்களே ஞாபகமிருக்கிறதா?

என்னதான் இருந்தாலும் நீங்கள் ஒரு ஆசிரியர் அப்படியெல்லாம் பேசியியிருக்கக்கூடாது.
அதனால்தான் மேலும் மேலும் சேட்டை செய்யவேண்டும் போல தோன்றியது.
ஆகவே பல குழுக்களாக பிரிந்து கொண்டு என்ன என்ன வம்புகள் செய்யலாம் என அலிபாபாவும் 40 திருடர்களும் மாதிரி திட்டம் போட ஆரம்பித்தோம்.
முடிவில் வகுப்புபோடு இணைந்துள்ள ஒரு டாய்லெட்டில் வெடி ஒன்றை வைத்துவிட்டு நீங்கள் வருகின்ற சமயம் வெடிக்கவைக்கலாமென திட்டமபோட்டிருந்தோம். ஆனால் அதை தெரிந்து கொண்டா இல்லை எதேச்சயாகவா என தெரியவில்லை , நீங்கள் வகுப்பறைக்கு வரவில்லை. தப்பித்தீர்கள்!

பின்னர் நான் , மஸ்தான் மற்றும் அசன் ஒரு புறமாகவும்

ரமேஷ்-ராஜா-தாஸ் ஒரு புறமாகவும் பிரந்து இருந்து நீங்கள் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் என் தலைமையிலான அணி கால்களை வேகமாக தரையில் தட்ட நீங்கள் சத்தம் வரும் திசையான எங்கள் பக்கம் திரும்பி

"கண்டுபிடிச்சுட்டேன்டா அந்த அயோக்கியப்பயல..சத்தம் இங்கிருந்துதாண்டா வருது"

என கூறிக்கொண்டே எங்கள் பக்கம் நெருங்க, அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு இன்னொரு திசையிலிருந்து ராஜா தலைமையிலான அணி கால்களை தரையில் தட்ட ஆரம்பிக்க நீங்கள் கடும்கோபத்தோடு அந்த டயலாக்கை அந்தப்பக்கம் விடுவீர்கள் ஞாபகமிருக்கிறதா?

மூன்று வகுப்பு சேர்ந்து ( கணிதம் - ஆங்கில இலக்கியம் -விலங்கியல் ) இருப்பதால் உங்களால் சத்தம் திசை தெரியுமே தவிர யாரிடமிருந்து வருகிறது என தெரியாது..

பின் ஓர்நாள் எனககு தெரிந்த ஒரு மாணவி அந்த பீரியடு வராமல் போக அட்டன்டன்ஸ் எடுக்கும் சமயம் அவள் பெயரின் நம்பர் கூறி நீங்கள் அழைக்க நான் குனிந்துகொண்டு

"எஸ் சார் " என பெண் குரலில் அழைத்தேன் .

நீங்கள் தலைகுனிந்து கொண்டு அட்டன்டன்ஸ் எடுப்பதால் கண்டுபிடிக்கமாட்டீர்கள் என நினைத்தேன்.

ஆனால் குரல் வித்தியாசப்படுவதை உணர்ந்து நீங்கள் தலைநிமர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி வந்து , எனக்கு முன்னால் பெஞ்சிலிருந்து என் செய்கையை கண்டும், உங்கள் கோபத்தை கண்டும், அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்த அந்த அப்பாவி மாணவன் முரளியை எல்லோர் முன்னிலையிலும் எழுப்பிவிட்டு திட்டினீர்களே அய்யா.

அப்போது திட்டு வாங்கியும் என்னை காட்டிக்கொடுக்காத அந்த நண்பனை நினைத்து பெருமைப்படுவதா இல்லை
என்னை விட்டு விட்டு யார் யாரையோ பிடித்துக்கொண்டிருக்கும் தங்களை நினைத்து பரிதாப்படுவதா என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன் அய்யா

சேர்ந்து இருந்தால்தானே பிரச்சனை என ஆங்கில இலக்கியம் வகுப்பை மட்டும் மற்ற வகுப்போடு சேர்த்து வைத்தீர்கள் அய்யா..ஞாபகமிருக்கிறதா அய்யா?
நீங்கள் பிரித்து வைத்ததன் பலனை முதல் நாளே உண்ந்து கொண்டீர்கள் . ஆம் பிரித்து வைத்தால் மாணவர்கள் அமைதியாகிவிடுவார்கள் என்ற சந்தோஷத்தில் என்றைக்குமில்லாத உற்சாகத்தோடு அன்று வகுப்பறை வந்துகொண்டிருக்கிறீர்கள்
நீங்கள் எங்கள் வகுப்பறை ஜன்னலை கடந்து எங்கள் வகுப்புக்குள் நுழையுமுன் நாங்கள் ஏற்கனNவு பேசிக்கொண்டது போல மொத்தமா கைதட்டிவிட்டு அமைதியாக இருக்க..
கடுங்கோபம் உங்களுக்கு...ஆதங்கத்தில் சொல்கிறீர்கள்

"நன்றி! நன்றி! வரவவேற்புக்கு நன்றி.. எனக்கு இவ்வளவு மரியாதையா...?"

என கூறிவிட்டு மிகவும் சோகமான நிலைக்கு வந்துவிட்டீர்கள் . பின்னர்தான் தெரிந்தது கைதட்டுகின்ற சலசலப்பில் அத்தனை மாணவ - மாணவிகளுக்கு முன்னால் எவனோ ஒருவன் தங்கள் பெயரை கூறி மரியாதை இல்லாமல் அழைத்திருக்கிறான் என்று
"என் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என் வயசுக்காவது மரியாதை கொடுங்களேன் "
நீங்கள் பரிதாபமாய் சொல்வதை கேட்டு நான் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன். அய்யா கண்டிப்பாய் அது நான் இல்லை.

நான் தங்களின் பீரியடில் கிண்டல் செய்து பெண்களுக்கு மத்தியில் எழும்புகின்ற சிரிப்பலைக்காகவும் மற்றும் அந்த நேரத்து ஒரு ஹீரோதனத்திற்குத்தானே தவிர,
உண்மையில் தங்களின் மீது அபரிதமான மதிப்பு இருக்கிறது அய்யா !
பெயர் சொல்லியெல்லாம் நான் அழைக்கமாட்டேன்
பின்னர் வருத்தப்பட்டு கொண்டு வகுப்பறையை விட்டு வேகமாக வெளியேசென்று கல்லூரி முதல்வரை அழைத்து வந்து விட்டீர்கள்

அவரும் வந்து,
" யாருப்பா அது மரியாதை இல்லாமல் அவரை அழைத்தது"
என்று கேட்டுவிட்டு ஒவ்வொருவரையாய் நோட்டம்விட முதல் பெஞ்சிலிருந்த ( கடைசி பெஞ்சிலிருந்து மாறி விட்டேன் ) என் மீதும் தங்கள் பார்வை வர
"அட! நீ ஞானியர் தானப்பா!" ( அப்பல்லாம் ரசிகவ் இல்லை )
"மேடையில் கவிதை - வாழ்த்துரை எல்லாம் பண்ணுவாயே நீதானப்பா" என்க
நானும் எதுவுமே நடவாத மாதிரி
"ஆமா சார்" என்க
"நீ இருக்கிற க்ளாஸ்லயாப்பா இப்படி நடக்குது.." என்று கேட்க

எல்லா மாணவர்களின் ஒட்டு மொத்த வயிற்றெரிச்சல் புகை ஜன்னல் வழியாக ஒரு மேகம் கூட்டம் போல செல்வதை நான் மட்டும்தான் கவனித்தேன்

"நீ சொல்லுப்பா யாருப்பா சத்தம் போட்டது"
"எனக்கு தெரியாது சார் "
உடனே அவர் ஒட்டு மொத்த வகுப்பறையையும் வெளியேற்றிவிட்ட பின்னரே தங்களுக்கு ஒரு நிம்மதி எங்களை பழிவாங்கிவிட்டதாக.

அது ப்ராக்டிகல் நேரம் என்பதால் நாங்களும் கெஞ்சி கூத்தாடி அபராதம் கட்டி மன்னிப்பு கடிதம் எழுதி இப்படி ஏதேதோ நிகழ்வுகள் அந்த நேரத்தில்.

இப்படி பல பல நிகழ்வுகள் எனக்கு அந்த நேரத்தில் ஜாலியாக தெரிந்தாலும் தங்களுக்கு எப்படி மனவருத்தத்தை உண்டாக்கியிருக்கும்.

அதனை நான் எம்.சி.ஏ படிக்கும் போது என்னுடைய டியுசன் சென்டரில்கல்லூரி மாணவர்களுக்கு டியுசன் எடுத்தேனே அப்போது உயர்ந்து கொண்டேன் அய்யா ..
பின்னால் இருந்து வரும் கமெண்ட்ஸ்களுக்கு ஆசிரியர்களின் வலி எப்படியிருக்கும் என்று...
தங்களின் இடத்தில் வகுப்பறையின் முன்னால் நின்று பார்த்தால்தான் தெரியும் அதன் உண்மையான வலி.
அதனை நான் இப்போது அறிந்து கொண்டதால்தான் அய்யா !
தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
என்னுடைய செய்கைகளுக்கும் - என்னை தூண்டிய - தூண்டப்பட்ட மாணவர்களின் சார்பில்
எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு மன்னிப்பு கடிதம்

மனிதர்கள்கள் மன்னிக்காதவரை
இறைவனும் மன்னிக்க மாட்டான்
ஆகவே மன்னித்துகொள்ளுங்கள் அய்யா
என்னை மட்டுமல்ல
மஸ்தான் - சராசரியை விட குறைவான உயரத்தில் முடியை எண்ணெய் வழிய
இருபக்கமாய் சீவி என்னுடன் கடைசி பெஞ்சில் அமரிந்திருப்பான் -
கணிதப் பிரிவு
அசன் - கொஞ்சம் குள்ளமாக இரண்டாவது பெஞ்சில் அமரிந்திருப்பான் - கணிதப் பிரிவு
ராஜா - எதிரி வானரப்படை தலைவன்..
கொஞ்சம் உயரமாக எப்போதும் பான்பராக் சாப்பிட்டுக்கொண்டு
இருப்பானே.. 1999 ல் நமது கல்லூரியில் என்னுடன் சேரந்து கவிதைப்புத்தகம்
வெளியிட்டானே - ஆங்கில இலக்கியம்
ரமேஷ் - அவனும் ராஜாவின் உயரத்தில் தங்களை அடிக்கடி எதிர்த்து எதிர்த்து பேசுவானே -
விலங்கில் பிரிவு

தாஸ் - கொஞ்சம் சிகப்பாக சராசரி உயரத்தில் எப்பொழுது அயர்ன் செய்த
சட்டை அணிந்து வருவானே - விலங்கியல்
எல்லோரும் சார்பில் மன்னித்துக்கொள்ளுங்கள் அய்யா!
எட்டு வருடம் கழித்து கேட்கின்ற இந்த மன்னிப்பு
தங்கள் காதில் மட்டுமல்ல
இதயம் வரை எட்டும் என நம்புகிறேன்.

மன்னிச்சுக்கோங்கய்யாயாயாயா......
இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார்

Monday, May 09, 2005

வலி

சமுதாயத்தின்
சம்மட்டி வார்த்தைகளில் ...
இதயம்
கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கும்பொழுது...

அந்த வார்த்தைதான்
ஆன்மாவிற்குள் ...
அமிர்தாஞ்சன் தடவுகிறது !
-----------------
''அவசரப்படாதீங்க சார்
என்ன கலெக்டர்
வேலைக்கா போறீங்க''
துணி தேய்ப்பவன் ...
மனசையும்
தேய்த்து விடுகிறான் !
சட்டை கசங்காமல் ...
இதயம் கசங்கியபடி ...

-----------------
'"சீக்கிரம்
ஷேவ் பண்ணுப்பா''

''ஆபிஸுþக்கு நேரமாச்சோ ''

கிண்டலடித்தபடியே ...
இதயத்தையும் வெட்டினான்
சலூன் கடைக்காரன்!
விழுந்துவிட்டது
மயிரும் ...மனசும் ...

-----------------

''தண்டச்சோறு ''
அப்பாவின்
தாரகமந்திரம் வேறு...
தர்மசங்கடமாக்குகிறது!
-----------------
இப்படி
சமுதாயத்தின்
சம்மட்டி வார்த்தைகளில் ...
இதயம்
கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கும்பொழுது...

அந்த வார்த்தைதான்
ஆன்மாவிற்குள்.........
அமிர்தாஞ்சன் தடவுகிறது !

-----------------
டிவியின் ரிமோட்டில் .....
விரல்கள்
விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது,
''ஒரு சானல்ல
வையேண்டா
சும்மா இருந்தாலே இப்படித்தான் ''
தங்கையும் விளையாட்டாய்.....
தாக்குகிறாள்!
-----------------

''உன் மகன் கவர்மெண்ட்லயா
வேலை பார்க்குறான்''
தன்மகனின்
சுயசரிசை பாடுவதுபோல் - என்னைச்
சுடுகிறது சொந்தங்கள் !
-----------------
''நான்மட்டும்
உழைக்கிறேனடா '
'குத்திக்காட்டுகிறான்......
கூடப்பிறந்தவன்!
-----------------
நேர்முகத்தேர்வு ஆலோசனை
நண்பர்களிடம் கேட்டால் ,
''வெள்ளிவிழா எப்போதுடா ?''
வெட்கப்பட வைக்கிறார்கள்!
-----------------
இப்படி
சமுதாயத்தின்
சம்மட்டி வார்த்தைகளில் ...
இதயம்
கொஞ்சம்கொஞ்சமாய் நொறுங்கும்பொழுது...

நான் சம்பாதிக்காவிட்டாலும் -
வெயிலில் வேலை தேடி
சலித்து வருகின்ற என்னிடம்
நீ கேட்கும் ...
''சாப்பிட்டியாடா'' என்ற
வார்த்தையில்தானம்மா நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !
-----------------
ஆம்
இந்தியப் பட்டதாரிகளுக்கு
வேலையை விடவும் ...
அறுதல் அவசியம்!
-----------------
அகவே
அப்ளிகேஷனுக்காக ....
அப்பாவின் பாக்கெட்டைத்
திருடும் அம்மா!
-----------------
நீ
அடிக்கடி
கேட்டுக்கொண்டேயிருப்பாயா
''சாப்பிட்டியாடா'' என்று?
நான் அழாமல் இருப்பேன்

- ரசிகவ் ஞானியார்

Sunday, May 08, 2005

ஏதோ ஒரு ஞாபகம்

1995 ம் வருடம் என நினைக்கிறேன். நண்பர்களோடு திருநெல்வேலி டவுணில் படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
குசும்புகளும் குறும்புகளுமாய் திரிந்து கொண்டிருந்த பருவம் அது. எதிர் இருக்கையில் ஒரு வழுக்கை தலை பெரியவர் அமர்ந்திருக்கிறார் நாங்கள் சுமார் 6 அல்லது 7 பேர். சும்மாயிருக்குமா குசும்பு மனசு

"டேய் என்னடா கண் ரொம்ப கூசுது "- நான்

"இல்லடா எவனோ கண்ணாடியை கொண்டு வர்றான்னு நினைக்கிறேன் "- மற்றொருவன்

பின் லேசாக அவர் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்து கொண்டிருந்தோம்.

அவர் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு திரும்பிவிட்டார்
"என்னடா சொட்டைக்கு சொரணையே இல்ல"
"ஹா ஹா ஹா" - இளமை திமிரில் சிரிக்கிறோம்
அவர் இறங்குவதற்குண்டான நிறுத்தம் வந்துவிட அவர் இறங்கும் சமயத்தில்
"தம்பி நானும் உங்கள மாதிரிதான் முடியெல்லாம் அதிகமா எப்போதும் சீப்பும் கையுமா அலைவேன்...
ம் ... ம் .... இன்னிக்கு நான்.... நாளைக்கு நீங்க ...."

என முணுமுணுத்துக்கொண்டே இறங்கிவிட எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது
இந்த தருணத்தில் என்னுடைய கல்லூரி ஆசிரியர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல
- ஆசிரியர் ரபீக்
இயற்பியல் துறை - சதக்கத்துல்லா அப்பா கல்லூரி

நானோ அல்லது நீங்களோ தனியாக சென்றுபாருங்கள் மிகவும் அமைதியாய் சென்று வருவோம்..அந்த நேரத்தில் கிண்டல் கேலி எதுவுமே இருக்காது
அதுவே
கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் இரத்தம் முறுக்கேறி நண்பர்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோயிசத்தை காட்டுவதற்காக குசும்பு - கிண்டல்கள் செய்ய ஆரம்பிப்போம்.
ஆம் உண்மைதான்

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல

ஒரு
"கள்" சேரந்தவுடன்
போதை வந்துவிடுகிறதோ?
இப்பொழுது குளித்துவிட்டு தலைதுவட்டுகின்ற ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கையில்
உதிர்ந்து வருகின்ற முடிகளை பார்க்கும்பொழுதெல்லாம் அந்தப் பெரியவரின் குரல் வந்து ஒலிக்கிறது.
"ம் .. ம் .. இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க"

"இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க"
இதயம் நெகிழ்வுடன்

- ரசிகவ் ஞானியார்

Saturday, May 07, 2005

காலம் கடந்த வலி
நான்
தவழ்ந்து எழுந்து
நடக்க முயற்சித்து
தோல்வியுறும்பொழுதெல்லாம்..
நீயும்நடக்க முயன்று
தடுமாறி விழுந்து
பாசாங்கு செய்தாயம்மா?

அந்த பாசாங்குக்காகவாவது...
----------------------
அடுத்த வீட்டு பையனை
அடித்துவிட்டேனென்று
புகார் கேட்டு வந்த
பூலான்தேவிகளிடமெல்லாம்
வக்கீலாய் மாறி
வக்காலத்து வாங்குவாயம்மா..?

அந்த வக்காலத்துக்காகவாவது...
----------------------
திருமணக்கூட்டம் ஒன்றில் - நீ
சபையில் அமர்ந்திருந்த சமயத்தில்...
உன் முகத்தில்
மூத்திரம் கழித்தபோது
முகம் சுழிக்காமல்
மழைபெய்தது போல ரசித்தாயம்மா?

அந்த ரசிப்புக்காகவாவது...
----------------------
நான்
அடுப்பங்கரையில் ஒருநாள்
ஆய் கழித்ததற்காய்..
அடித்த அப்பாவிடம்
இரண்டு நாள்
பேசாமல் இருந்தாயம்மா?

அந்த மௌனத்திற்காகவாவது...
----------------------
சின்ன சின்ன சிறுபிள்ளை
தவறுக்கெல்லாம்
அடித்துவிட்டுஅரவணைப்பாய!;

சிலசமயம் செல்லமாய்
அரவணைத்துக்கொண்டே
அடிப்பாய்!
அந்த அரவணைப்புக்காகவாவது...
----------------------

ஓர் வெயில் நேர
ரேஷன்கடை வரிசையில்,

உன் பாதம்
எனக்கு செருப்பாகவும்...

உனக்கு செருப்பாய்
பூமியையும் அணிந்துகொண்டு...

சர்க்கரை வாங்குவதற்காய்
காத்திருந்தாயே ஞாபகமிருக்கிறதா?

அப்பொழுது
சர்க்கரையை விடவும்
எனக்கு இனித்தது
உன்நெற்றி வியர்வைதான் தெரியுமா?

அந்த வியர்வைக்காகவாவது...
----------------------
குடம் ஒரு கையும்
குழந்தை ஒரு கையுமாய்
சுமந்துகொண்டு
தெருகுழாயுக்கும் - வீட்டிற்கும்
தெண்டுல்கரைவிடவும் அதிகமாய்
தெருவில் நீ எடுத்த
ரன்களின் வலியை..

அந்த இரவில் - உன்
விரல்களுக்கு கூட தெரியாமல்
கால்வலியில் துடித்தாயே
அந்த துடிப்பில்
அறிந்து கொண்டேன்.

அந்த துடிப்பு
இருபத்தாறு வருடம் கழித்து
இபபொழுது வலிக்கிறதம்மா..?

அந்த துடிப்புக்காகவாவது...
----------------------
உன்
பிரசவ கதறலை
பக்கத்து வீட்டு அம்மா
கதையாய் சொன்னபோது..

குடும்பக்கட்டுபாடு செய்தவனின்
தலைப்பிள்ளை...
தற்கொலை செய்ததைபோல,

எத்துணை வருத்தப்பட்டேன் தெரியுமா?

உனக்கு
வலிக்குமென தெரிந்திருந்தால்
நான்
விழித்திருக்கவேமாட்டேனேம்மா...?

அந்தவலிக்காகவாவது...

----------------------
இத்தனை "காகவாவது"
உன்னை
கடைசிவரை காப்பாற்றுவேன் அம்மா!
----------------------
நான்
தாய் - தந்தையரை மதியேன்
என கூறிய
ஜோதிடன் வாக்கை நம்பாதே!

தாயின் பிடியிலிருக்கும் குழந்தை
தான் நழுவிவிடமாட்டோம் என
எத்துணை நம்பிக்கையாயிருக்கிதோ?

அந்த நம்பிக்கை
என் மீது வை அம்மா!
----------------------
என்சுவாசத்திற்கு
வாயுமண்டலத்திலிருந்து
காற்று கிடைக்கும் வரையிலும்
கண்கலங்காமல்
உன்னைகாப்பாற்றுவேன் அம்மா!
----------------------
ரசிகவ் ஞானியார்

என்ன சின்னப்புள்ளதானமால்ல இருக்கு

(இதுவும் என்னோட நண்பன் அனுப்புன அந்த மடல்ல கொஞ்சம் நம்ம கைவண்ணத்தக் கலந்து எழுதுன மேட்டர் இது..ரசிச்சுக்கோங்க

கேப்டன் விஜயகாந்த் ப்ராஜக்ட் மேனேஜரானால் எப்படியிருக்கும்

புரோஜக்ட் மீட்டிங் ஆரம்பிக்கிறது

இந்த புராஜக்ட் - ல மொத்தம் 1,19,738 லைன் கோடு இருக்கு
அதுல நாம எழுதுனது 45,434 லைன்
அதுல 30,114 லைன் கமண்ட்ஸ் மட்டும்
அவுட்சோர்ஸ் பண்ணாதது 74,304 லைன்
அதுல 52,314 லைன் கமண்ட்ஸ்
இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சப்போ இருந்த டீம் சைஸ் 54 பேர்
நடுவுல வேலைய விட்டு போனவங்க 13 பேர்
இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சப்போ அதோட மதிப்பு ரூ 53,45,645.36
முடிக்கிறப்போ அதோட மதிப்பு ரூ 53,23,617.28
ஆன இந்த ப்ராஜக்ட்ல வைரஸ் பரப்ப திட்டம் போடுற பாகிஸ்தானோட தீவிரவாதத்தை நான் அடக்கபோறேன்.

எடுடா துப்பாக்கிய!
நம்ம நாட்டு ரகசியத்தை பாதுகாக்கிற அவங்க நாட்டு கம்யுட்டரிலிருந்து மௌஸை திருடிட்டு வர்றேன்.

( கோபத்தோட வெளியே போகிறார். மீட்டிங் வந்த எல்லோரும் அதிர்ச்சியோடு பாரத்துக்கொணடிருக்கிறார்கள் )

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகிறார்

கண்ணா நீ ஜாவால புரோகிராம் பண்ணுனா நான்
அதே புரோகிராமை டாஸ்ல பண்ணுவேன்டா
ஆமா என் கோடு தனி கோடு

கண்ணா இந்த வைரஸ் ங்கிறது சாப்ட்வேர்ல இருக்க கூடாது.
அது இருந்தா இந்த பாட்சாவுக்கு புடிக்காது.
ஒரு வைரஸ் இருந்தா அதுல நூறு வைரஸ் இருக்குன்னு அர்த்தம்

கஸ்டமர் சொல்றான் இந்த அருணாச்சலம் கேட்கிறான்

வைரஸ் இருந்தா என்ன கூப்பிடு கண்ணா - சும்மா பறந்து பறந்து கிளீன் பண்றேன்
( இப்போ சூப்பர் ஸ்டார் ப்ராஜக்ட் லைப் சைக்கிள் பற்றி விவரிக்கிறார் )

கண்ணா ப்ராஜக்ட் லைப் சைக்கிள்ன்னா அண்ணாமலை சைக்கிள் இல்ல
அது வேற இது வேற இப்படு சூடு

(பாடுகிறார்)
ரா ரா ரா ராமய்யா
எட்டுக்குள்ள ப்ராஜக்ட் இருக்கு ராமய்யா
8 8 ஆ ப்ராஜக்டை பிரிச்சுக்கோ
இப்ப எந்த எட்டில் நீ இருக்க தெரிஞ்சுக்க
முதல் எட்டில் செய்யாதது டிஸ்கஷனும் அல்ல
இரண்டம் எட்டில் செய்யாதது ப்ளான்னிங்கும் அல்ல
( ரா ரா ரா ராமய்யா - கோரஸ்)

மூன்றாம் எட்டில் செய்யாதது கோடிங்கும் அல்ல நீ
நான்காம் எட்டில் செய்யாதது இம்ப்ளிமெண்டேஷன் அல்ல
( ரா ரா ரா ராமய்யா – கோரஸ் )

ஐஞ்சாம் எட்டில் செய்யாதது டிசைனிங்கும் அல்ல
ஆறாம் எட்டில் செய்யாதது டெஸ்டிங்கும் அல்ல

ஏழாம் எட்டிலும் முடிக்கலன்னா உனக்கு வேலை இல்ல நீ
எட்டாம் எட்டிலும் முடிக்கலன்னா நிம்மதி இல்ல
( ரா ரா ரா ராமய்யா – கோரஸ் )

8 8 ஆ ப்ராஜக்டை பிரிச்சுக்கோ இப்ப
எந்த எட்டில் நீ இருக்க தெரிஞ்சுக்கரா
ரா ரா ராமய்யா
எட்டுக்குள்ள ப்ராஜக்ட் இருக்கு ராமய்யா
( ரா ரா ரா ராமய்யா – கோரஸ் )

கமல் வருகிறார்

என்ன கஸ்டமர்கிட்ட இருந்து கம்ப்ளெண்ட்டா? என்ன ப்ராஜக்ட்ல தவறு இருக்கா?
கோபத்தில் கத்துகிறார்

மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித ப்ராஜக்ட் அல்ல
அதையும் தாண்டி மோசமானது.. ( மீட்டிங் ரூமில் எதிரொலிக்கிஙது)
சமானது..மானது..னது..து

( மீட்டிங் ரூமை சுற்றி சுற்றி வருகிறார்)

அசிங்கம் அசிங்கம் இந்த ப்ராஜக்ட் அசிங்கம்
டிசைன் அசிங்கம் இம்பிளிமெண்டேஷன் அசிங்கம்
கோடிங் அசிங்கம் புரோகிராமர் எல்லாரும் அசிங்கம்
அபிராமிய பாக்கணும் ( மற்றொரு கம்பெனி ப்ராஜக்ட் மேனேஜர்)

அங்க பிகரெல்லாம் நல்லா இருக்கும்
அப்பதான் இந்த ப்ராஜக்ட் நல்லா வரும்
அபிராமி அபிராமி(மயங்கி விழுகிறார் )

ப்ராஜக்ட் டீம் மெம்பர் அஜீத் வருகிறார்

அவமானப்படுத்திய கஸ்டமர் வேண்டாம்
வருமானம் வருகின்ற ப்ராஜக்ட் வேண்டும்
கோடிங் எழுத வரங்கள் வேண்டும்
டேட்டா என்ரிக்கு பிகர்கள் வேண்டும்

டிசைனிங் நானும் திருட வேண்டும்
எவன் பராஜக்டாவது எனக்கு வேண்டும்
பி.எம் ( ப்ராஜக்ட் மேனேஜர்) மகளின் சிநேகம் வேண்டும்
அமெரிக்காவிலிருந்து ஆர்டர் வேண்டும்

இத்துணை கேட்டும் இல்லையென்றால் - நல்ல கம்பெனியில் வேலை வேலை வேண்டும்( இவரும் மயங்கி விழுகிறார் )

வடிவேலு வருகிறார்

ச்சே ச்சே ச்சே ச்சே என்ன சின்னப்புள்ளதானமால்ல இருக்கு

ப்ராஜக்ட்ல பக் பிக்ஸ் பண்ண என்ன ஏண்டா கூப்பிடுறீங்க
நல்ல புரோகிராமரா கூப்பிடுங்கடா
வேணாம் ரொம்ப கம்பல் பண்ணுணீங்கன்னா அழுதிடுவேன்
சரிடா பண்றேண்டா( அவருக்கு கீழே உதவியாக சூர்யா – விஜய் - ரமேஷ் கண்ணா – சார்லி வருகின்றனர்)

வடி : டேய் இங்க வாங்கடா..நீ போய் எல்லா பக்கும் பிக்ஸ் பண்ணு
( ரமேஷ்கண்ணா போக இவருடன் சூர்யாவும் விஜய்யும் போக)
வடி : டேய் டேய் நீங்க எங்கடா போறீங்க
சூர்யா – விஜய் : பக் பிக்ஸ் பண்ண
வடி : இதுவரைக்கும் பண்ணினது போதும் ..ஒரு மண்ணும் பிக்ஸ் பண்ண வேணாம்
( சூர்யா – விஜயுடன் ரமேஷ்கண்ணாவும் திரும்ப)
வடி : (ரமேஷ்கண்ணாவிடம்) நீ ஏண்டா வந்த
ரமேஷ்கண்ணா : நீங்கதானே ஒரு மண்ணும் பிக்ஸ் பண்ண வேணாம்ணு சொன்னீங்க
வடி : பிக்ஸ் பண்ண வேணாம்னு சொன்னது அவங்கள உன்னய இல்ல
ரமேஷ்கண்ணா : ஹை பீரியாரிட்டி பக் - லோ பீரியாரிட்டி பக் எதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது
வடி : நீ பிக்ஸ் பண்ற எல்லாமே லோ பீரியாரிட்டி பக் தான்
(ரமேஷ்கண்ணா சென்று விடுகிறார் )

வடி : நீங்க இங்க வாங்கடா ( சூர்யாவும் விஜய்யும் பின்தொடர்கிறார்கள்)
வடி : டேய் நீ போய் டிபக்கிங் பண்ணுடா ( விஜய் போகிறார்)
வடி : நீ என்கூட வா ( சூர்யா பின்தொடர்கிறார்)
வடி : அந்த பக்கை ஓபன் பண்ணுடா
சூர்யா : ( பக்கை திறந்து கோடிங்கை மெதுவாக டைப் செய்கிறார்)
வடி : பாத்து கீபோர்டுக்கு வலிக்கும்ல – மெதுவா பாத்து வேகமா டைப் பண்ணி தொலைடா – ஏண்டா உயிர வாங்குற

- ரசிகவ் ஞானியார்

ஆ ஆ ஆ பா..ம்..பு

1998 ம் வருடம் நான் படித்த சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆலமர நிழலில் ( போதிமரம் ) ஒரு மதிய இடைவேளைக்கு முன் பீரியடை கட் அடித்துவிட்டு நான், பசுலுத்தீன் என்ற எனது நண்பன் மற்றும் நண்பர்களுடனும் உலக பொருளாதாரத்தைப்பற்றி ( வெட்டிப்பேச்சு ) பேசிக்கொண்டிருந்தபொழுது ,

ஒரு பாம்பு ஒன்று புதரிலிருந்து வெளியேவர எல்லோரும் பதறி எழுந்து பின் சுதாரித்து கீழே கிடந்த கல்லெடுத்து அடித்தே கொன்றுவிட்டோம்.

"டேய் இந்த பாம்பை எடுடா " இது பசுலுத்தீன்

'எதுக்குடா " நான்

"டேய் அவ வண்டி கேரியரில வைப்போண்டா.. இப்ப அந்த பொண்ணு சாப்பாடு டிபனை எடுக்க வர்ற நேரம் ..சீக்கிரண்டா!"

உடனே அந்த செத்துபோன பாம்பை எடுத்து அந்த பெண்ணின் வாகனத்தின் கேரியரில் வைத்துவிட்டோம்.
" டிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் "

இதோ மதிய இடைவேளை மணி அடித்துவிட்டது. ஒவ்வொருவராய் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். அந்தப்பெண்ணும் வருகின்றாள் கூடவே தோழிகளும்.
நாங்கள் கவனிப்பதை கண்டவுடன் அந்தப்பெண் மேலும் பேச்சின் சுவாரஸ்யத்தையும் சிரிப்பையும் அதிகப்படுத்திக்கொண்டே கொஞ்சம் சிரித்து விழிகளை உருட்டி
( அட வழக்கமான பந்தாதாங்க )தனது வாகனத்தின் அருகே வந்துவிட ..
நாங்கள் க்ளைமாக்ஸை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தோம்..
கையிலிருந்த சாவியை கேரியரின் பக்கம் கொண்டுசெல்கின்ற சமயம் கவனித்துவிட்டாள் அவளது தோழி ...

"ஏய் பாம்புடி" அலறினாள்

"ஆ ஆ ஆ பா..ம்..பு"

உடனே இவள் பதறிபோய் பயத்தில் கத்திவிட்டாள்.
அவளது விழியெல்லாம் வெளிறிப்போய்விட்டது
மதிய இடைவேளையில் வெளியேறிக்கொண்டிருந்த ஆசிரியர்கள் - மாணவர்கள் எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்க,

உடனே நாங்களும் இதுதான் சமயம் என்று ஓடிப்போய் யாரும் அது செத்தபாம்பு என கவனிக்கும் முன் பசுலுத்தீன் அதனை எடுத்து ஒரு சுழற்று சுழற்றி ( ஹீரோதனத்தை காட்றானுங்கோ) பக்கத்தில் உள்ள முட்புதருக்குள் வீச பின் எல்லோரும் சேர்ந்து கல் வீசத்தொடங்கினோம்.

பாம்பு செத்துவிட்டது ( ஹி ஹி ஹி இரண்டாம் முறையாக )
உடனே அந்தப்பெண் பயத்தில் நெருங்கி வந்து "தேங்க்யு" சொல்ல

"ஜெயிச்சுட்டோமுங்கோ " ( கத்த வேண்டும் போல இருந்தது )
" யாரும் சிரிச்சி தொலைச்சிறாதீங்கடா ...மானம் போயிரும்டா"
எங்களுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. அவ்வளவு பந்தாக பேசிக்கொண்டு வந்த அந்த பிகர் பயந்து போய் அலறியது ரொம்ப சிரிப்பாக இருந்தது( இதுவரைக்கும் அந்த பெண்ணுக்கு உண்மை தெரியாதுங்கோ இந்த பகுதியை அவளோ இல்லை அவளது தோழிகளோ பார்த்தால் தொலைந்தோம் நாங்கள்
- அட யாரும் போட்டு கொடுத்திறாதீங்கப்பா )
- ரசிகவ் ஞானியார்

மனசுக்குள்ளே காதல் வந்துச்சா

(என்னோட நண்பன் அனுப்புன அந்த மடல்ல கொஞ்சம் நம்ம கைவண்ணத்தக் கலந்துஎழுதுன பாடல் இது..ரசிச்சுக்கோங்க
இந்தப் பாடலை ஆட்டோகிராப் படத்தில் வரும் மனசுக்குள்ளே காதல் வந்துச்சா என்ற மெட்டில் பாடவும்)

-பல்லவி

கஸ்டமர் கால் வந்துச்சா... வந்தல்லோ... வந்தல்லோ
செல்போனில் இண்டர்வியு வந்துச்சா... வந்தல்லோ வந்தல்லோ
இமெயிலில் ஆஃபர் வந்திடுச்சா... வந்தல்லோ வந்தல்லோ
கொரியரில் லட்டரும் வந்திச்சா... வந்தல்லோ வந்தல்லோ
அட இந்த ஆஃபர் போதாதென்று இன்னும் கொஞ்சம் வேணும் என்று
ஆஃபர் ஆஃபர் என்று தோணிச்சா

-சரணம் - 1

மட்டமான கோர்ஸ் எல்லாம் படிச்சிருப்ப... அதே அதே
மட்டம் போட்டு சினிமாவுக்கு போயிருப்ப... அதெல்லோ
டேட்டா என்ரி வேலை எல்லாம் செஞ்சிருப்ப ஆனா புரோகிராமருன்னு சொல்லி பீத்தியிருப்ப அது தப்பு இல்ல பயப்பட தேவையில்லை
இந்த இன்டஸ்டிரியில் அதெல்லாம் சகஜம் புள்ள
இங்க புரோகிராமிங் தெரிஞ்சவன் எவனுமில்ல
அட இன்டர்வியுவில் வாய்பேச்சு ஜெயிக்கும் புள்ளஅட காப்பி அன்டு பேஸ்ட் பண்ணுனவனெல்லாம் புரபஸல்ன்னுசொல்லியிருக்கான்... நீயும் அடிச்சு விடும்மா

-சரணம் - 2

கேண்டீனில் அதிகமா இருந்திருப்ப... அதே அதே
கம்ப்யுட்டரில் கேம்ஸ் எல்லாம் விளையாடுவ... அதெல்லோ
பி எம் -க்கு சொம்பு நல்லா அடிச்சிருப்ப..
அவன் நாய்குட்டிக்குபிஸ்கட் எல்லாம் போட்டிருப்ப
அது தப்பு இல்ல பயப்பட தேவையில்லை
உன் பி எம் கூட இப்படித்தான் வந்தான் மேல
அட கஷ்டப்பட்டு உழைச்சவன் எவனுமில்ல இந்த அசிங்கத்தை வேலையில சொன்னா தொல்லஅட நாயி வேஷம் போட்டுவிட்டா கொலச்சுதான் ஆகணுமே நல்லா வாலை ஆட்டு
- ரசிகவ் ஞானியார்

Thursday, May 05, 2005

மரண இடைவேளை

மதிய இடைவேளை - மரண இடைவேளை

எனது அலுவலகம் ஒரு மருத்துவமனையின் பின்புறம் அமைந்திருக்கிறது. அலுவலக ஜன்னல் வழியாக பார்க்கும் போது மருத்துவமனையின் பின்புறத்தில் விபத்து பகுதியில் உள்ள மார்ச்சுவரி அறைப்பகுதி தெரியும்.

இன்று மதிய உணவிற்குப்பிறகு ஜன்னல் வழியாக நோட்டம் விட்டபோது ஒரு இளவயது அரபி அழுதுகொண்டிருக்கிறான். அவனை கட்டிபிடித்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஒரு பெரியவர். அது அவனது தாத்தாவாக இருக்கக்கூடும்.
திடகாத்திரமாக தெரிந்த அந்த இளைஞனின் அழுகை என்னை மிகவும் பாதித்தது.

அவனது நண்பனோ அல்லது நெருங்கிய உறவினனோ சாலைவிபத்தில் மரணமடைந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்?

நேற்றுவரை அவனோடு இவன் சண்டையிட்டிருக்கக்கூடும்
அவனுடைய செயல்கள் இவனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்
அவன் திட்டியிருக்கக்கூடும் .....இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம்

இருந்தாலும் மரணம் என்று வரும்போதுதான் இன்னொருவரின் மீது வைத்த பாசம் உண்மையாக வெளிப்படும் அழுகையின் மூலமாக.
அதற்காக அழாதவர்கள் அந்த மரணத்தின் மீது மகிழ்ச்சியடைகிறார்கள் என அர்த்தமல்ல.
சிலர் மற்றவர்களின் முன்னிலையில் அழ கூச்சப்பட்டு இறந்தவரின் ஞாபகங்களை நினைத்துக்கொண்டு தனிமையில் அழக்கூடும்.

இருந்தாலும் அத்தனை மனிதர்களுக்கு மத்தியில் கூச்சத்தை உடைத்துக்கொண்டு வருகிறதே அந்த அழுகை, அந்த நபரின் இறந்து போனவரின் மீது அவர் வைத்துள்ள அபரிமிதமான பாசத்தை காட்டுகிறது

ஒரு
மனிதனின் மதிப்பு அவனின்
மரணத்திற்கு வருகின்ற
மனிதர்களின் எண்ணிக்கையை பொறுத்தது.

மீண்டும் நோட்டம் விடத்தொடங்கினேன்.
ஒரு கட்டத்தில் அந்த அழுதுகொண்டிருந்த இளைஞன் தரையில் உட்காருகிறான்..
வெறித்துப்பார்க்கிறான்..
கூட்டத்திலிருந்து விலகிச்சென்று தனியாக உள்ள ஒரு ஒற்றை சுவற்றில் கைவைத்து அழுகின்றான்தன் நிலை மறந்து திரிகின்றான்..
ஆம் நெருங்கியவரின் மரணம் தன்னிலையை மறக்கச்செய்கிறது

எல்லோரும் மரணப்படத்தான் போகிறோம்...இருந்தாலும் இன்னொருவரின் மரணம் அதுவும் மிகவும் நெருங்கியவரென்றால் ஏதோ மரணம் நம்மை மிகவும் நெருங்கிவிட்ட உணர்வே ஏற்படுகிறது..நமக்கும் ஒருநாள் மரணம் வரும் என நினைத்துப்பார்க்க தோன்றுகிறது.

நாம் எவ்வளவுதான் வசதியாக ,பணமிகுதியோடு, உலகமே சுற்றி பயணப்பட்டு வாழ்ந்தாலும்,
செத்துப்போன பிறகு ...
நமது சொந்த வீதியில் உள்ள
ஒரு
மயான கிடங்கில்தானே
நிரந்தரமாய் தூங்கப்போகிறோம்?
மீண்டும் நோக்குகிறேன். கூட்டம் கூடுகிறது.
உயர்ரக வாகனங்களில் இருந்து வருகின்ற எல்லோருமே தானும்
உயிர்விடும் நாளை எண்ணிப்பார்த்தது போன்ற
ஒரு வெளிறி போன முகத்தோடு மன கலக்கத்தோடு வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவராய் அவனை தன் தோள்மீது சாய்த்து முதுகு தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லுகிறார்கள்

எல்லோருடைய தோளிலும் அவனது
கண்ணீர் துளிகள் விழுகிறது.
அது கண்ணீர் துளிகளா இல்லை
இதய பாரத்தின் நீர்திட்டுகளா...?

இந்த நேரத்தில் யாருடைய கவிதையோ ஞாபகம் வருகிறது

செத்தபிணத்தை கண்டு
சாகப்போகிற பிணங்கள்
அழுதுகொண்டிருக்கின்றன.
- யாரோ
மனதில் ஏதேதோ நினைவுகள் உறவினர்கள் - கல்லூரி நண்பர்கள் - வீதியில் விளையாடியவர்கள் என்று யார் யாரோ வந்து போகிறார்கள்
மீண்டும் பார்ப்பதற்கு தைரியம் வரவில்லை?
இல்லை இல்லை பயம் வந்துவிட்டது
ஜன்னலை மூடிவிட்டேன் ..ஆனால்
இதயத்தை திறந்திருக்கிறேன்
என்ணிப்பார்க்கிறேன் ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும் போதும்
"தான் வாழப்போகும் கடைசி நாள் இதுதான் " என

நினைத்துக்கொண்டு எழுந்திருத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தனிமனித வாழ்க்கை.
யாரும் திருட மாட்டார்கள் - பொய் சொல்ல மாட்டார்கள் - கொலை கொள்ளை கற்பழிப்பு குறைந்துவிடும் - கெட்ட செய்கைகள் இருக்காது - காணுகின்ற மனிதர்கள் மீதெல்லாம் அன்பை பொழிவார்கள்... எப்படியிருக்கும் வாழ்க்கை..?
எனக்கு அழுகை அழுகை யாக வருகிறது. எதுவெல்லாமோ ஞாபகம் வருகிறது.
என் 14 வது வயதில் நான் டவுசர் போட்டு திரிந்த காலங்களில் என் மாமாவைப்பற்றி நினைத்துப்பார்த்தேன்... சிறுவயதில் அந்த மரணத்திற்கு நான் மதிப்பு கொடுக்க தவறிவிட்டேன்

மீரான் மாமா

ஒரு மாலைநேரம்
பள்ளிமுடித்து வருகையில் நீ
கண்மூடிக்கிடந்தாய்
மீரான் மாமா!

கண்ணீர் வரவில்லையென்றால்
தவறாக நினைப்பார்களோ என்று
கண்ணீர் வடித்தேன்
இல்லை நடித்தேன்
சொந்தங்கள்...
கண்ணீர் மட்டும்தான் பார்க்கும்!
ஆனால்
விவரம் தெரிகிறது இப்பொழுது
நிஜமாகவே கண்ணீர் வருகிறது

தந்தை கொடுப்பார்
என்ற திமிரில்
ஒரு வாடிக்கை உணவகத்தில் - நான்
வயிற்றையும் மீறி
சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
நீயோ எதிர்மேசையில்
காசை மீறி உண்ணமுடியாமல்
ஒரு அப்பம் ...
ஒரு தேநீரோடு முடித்துக்கொள்கையில்,
அப்பொழுது
எனக்கு தோணவில்லையே?
உனக்கும் ஒரு அப்பம்
பரிந்துரை செய்யவேண்டுமென்று!
அப்பொழுது
காசு இருந்தது
மனசு இல்லை
இப்பொழுது
காசும் இருக்கிறது
மனசும் இருக்கிறது
யாருக்கு கொடுப்பது அப்பத்தை?
உன் மரணத்திற்கு
நான்
மதிப்பு கொடுக்கவில்லை
மீரான் மாமா!
ஆம்
நான்மரணத்தை மதிக்கத் தவறியன்!
வீட்டுக்குள்ளே நீ
விழிமூடி கிடக்க
சின்னப்பையன் நான்
சீட்டு விளையாடி கொண்டிருந்தேன்!
பக்கத்து வீட்டு
பெரிசு ஒன்று
ஆதங்கத்தில் திட்டியது!
" டேய் உங்களுக்கும் ஒரு நேரம் வரும்டா "
இதோ!
அந்த நேரம்உணர்கிறேன்!
ஆம்!
நான்மரணத்தை மதிக்கத் தவறியன்!
ஆகவே
எல்லா மரணத்தொழுகையிலும்...
கலந்து கொள்கிறேன்!
என்மரணத்திற்கு...
ஆள் சேர்ப்பதற்காக!

இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார்

இன்றைய மதிய இடைவேளை எனக்கு மரண இடைவேளையாகப் போய்விட்டது. கனத்த இதயத்தோடு மீண்டும் அலுவலக கோப்புகளுக்குள் நுழைகின்றேன்.

Wednesday, May 04, 2005

இதய உதிர் காலம்

இது
கனவா நிஜமா
அட அவளேதான்

நீ
அடுத்தவன் மனைவியாகிவிட்டபோதிலும்
உன்னை
ஒரேஒரு முறை
என்னவளே என
அழைத்துக்கொள்கிறேன்
"என்னவளே"
என்னவளாக இருந்தவளே

உன்
பழைய சான்றிதழ் வாங்க
கல்லூரிக்கு வந்திருந்தாய்
உன் கணவனுடன்

தயவுசெய்து உன் கணவனை
அந்த
ஆலமரம் பக்கம்
அலையவிட்டுவிடாதே
நம் பெயர்கள்
பொறிக்கப்பட்டிருக்கலாம்

அதோ அதோ
தூரத்தில் ஓர் காகிதம்
என்
கனவுகளைப்போலவே
காற்றில் படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வேளை
நான் எழுதி
நீ கிழித்துப்போட்ட
காகிதத்துண்டுகளாய் இருக்குமோ?
"திருமணத்திற்குப் பிறகு
மீண்டும் இதே கல்லூரிக்கு
வருவோமா"
மூன்றாவது மாடியிலிருந்து
கோபத்தில் நீ வீசியெறிந்த
என்னுடைய பேனாவைப் போலவே
மண்ணுக்குள் புதைந்து விட்டது
நீ கூறிய அந்த வார்த்தைகள்...

ஞாபகமிருக்கிறதாடி அந்த
குப்பைத்தொட்டி ?
நீ
அசைத்து அசைத்து
என் கவனம் திருப்புவாயே
அந்த குப்பைத்தொட்டி
ஞாபகமிருக்கிறதா?

அதனருகே இதோ
உன் கணவன் செல்கிறான்
அட
உன்னைப் போல்தான் அவனும்

நீ
அதில் என் இதயம் எரித்துப்போட்டாய்
அவனோ
சிகரெட் சாம்பலைப் போடுகிறான்

குப்பைத்தொட்டியை அசைத்து என்
மனதில் விழுந்தாய்
அது ஏனடி
என் மனதைப் பிடுங்கி
குப்பையில் எறிந்தாய்?

உன் வாகனம்
நின்ற இடத்தையெல்லாம்
உன் கணவனுக்குக் காட்டுகிறாய்

உன் இதயம் சென்ற இடத்தை
காட்டமறுத்துவிட்டாயோ?
நம் இருவருக்கும்
காதல் என்று
பறைசாற்றிய அந்த
கேன்டீன் கிறுக்கல் கவிதைகளை
உன் கணவன்
உற்றுநோக்குகிறான்
அந்த
தமிழ் வாத்தியாரைப்போலவே

அய்யோ
கீழே எழுதப்பட்டுள்ள
நம் பெயரைப் பார்த்துவிடுவானோ?.

பார்த்தேவிட்டான்...
நல்லவேளை
என் பெயர் மட்டும்தான்..
உன் பெயர் இல்லை

அவனுக்கெப்படி தெரியும்
உன் கல்யாண பத்திரிக்கை
கண்ட அன்றே
ஓடி வந்து
கண்ணீராலும் தண்ணீராலும்
உன்பெயர் நான் அழித்த கதை

பெயரை அழித்ததால் நீ
பிழைத்துக்கொண்டாய்

உன் பெயர் மட்டும்தானடி
இப்பொழுது என்னை
பிழைக்கவைத்துக்கொண்டிருக்கிறது

நீண்டநேரத்திற்குபிறகு
நீ என்னை
உற்றுநோக்குகிறாய்

நானும் நோக்குகிறேன்

நாம் இருவரும் திரும்பி
அதோ
நாம் ஒன்றாய் சென்ற
கல்லூரி வராண்டாவை
நோக்குகிறோம்

அங்கே
யாரோ உன்னைப்போல
யாரோ என்னைப்போல

யார்வருவாரோ
உன் கணவன்போல..?

வெயிலில் நின்று
நெடுநேரமாய்ப் பிச்சையெடுத்த
காசுகள் எல்லாம்
செல்லாதவை என அறிந்து
கதறும் பிச்சைக்காரனைப்போல்தான்
உன்னை இழந்து
நான்படும் அவதிகளும்

மறுபடியும்
நினைப்பதில் நியாயமில்லை
மறப்பதற்கும் மனசுமில்லை

ஆகவே
ஒரு
ஆறுதலுக்காக
அடிக்கடி வந்துகொண்டேயிருப்பேன்
இந்த கல்லூரிக்கு

நாம் பேசிச் சிரித்த
அந்த
ஆலமரத்தின்
அத்தனை இலைகளும்-கூடவே
என் இதயமும்
உதிர்ந்து போகும்வரை...

- ரசிகவ் ஞானியார்

Project பராசக்தி

( பராசக்தி வசனத்தை இப்பொழுதுள்ள கம்ப்யூட்டர் மாணவர்கள் பேசினால் எப்படியிருக்கும். ஒரு வித்தியாசமான கற்பனை )

நான்
ஏசி அறையில் கம்ப்யூட்டர் படித்தாலும்,
ஓசிக்கு சாப்ட்வேர் வாங்கியிருக்கிறேன்.
விண்டோஸ் படிப்பதற்காக
வீட்டை விற்றிருக்கிறேன்.

எனக்கு
Linked list புரியவில்லை,
ஆனால்
என் பணத்தோடு மட்டும்
Link செய்த List ஐச் சொல்கிறேன்.

இரவெல்லாம் படித்தாலும்
யுனிக்ஸ் புரியவில்லை,
ஆனால்
டக்கென்று புரிந்து கொண்டேன்
டாஸை (DOS)
ம்
கம்ப்யூட்டர் Field டும்
இப்பொழுது
டக் (duck) எனப் புரிந்து கொண்டேன்.

கேளுங்கள் என் ஸ்டோரியை!
MS-Word டில் Type செய்வதற்கு முன் ...
தயவு செய்து கேளுங்கள்!

தமிழ் நாட்டில் இந்தத்
திருநெல்வேலியில் படித்தவன் நான்.
படிக்க ஒரு ஊர்...........
Project செய்ய ஒரு ஊர்.........
கம்ப்யூட்டர் Student ன் தலையெழுத்துக்கு ...
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆம்,
நெல்லையில் படித்த நான் ...
IT Field அமுங்கிப் போயிருக்கும்
சென்னைக்கு Project செய்யப் போனேன்.

சென்னை என்னை
Recycle Bin போல ஆக்கியது.

டாஸ் படிக்கக் கூட வழியில்லாத எனக்கு
ASP யில் Project செய்யச் சொன்னான் ஒருவன்!

இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை,
இந்த லட்சணத்தில் Website Project டாம்!

என் பெயரோ ராம் (RAM).
ஆம்,
GB அதிகம் உள்ள பெயர்,
ஆனால்
VB Project செய்யப் போய்ச்
சென்னையில் OB அடித்துத் திரிந்தேன்.

நான் நினைத்திருந்தால் .......
என்
பாவாவிடம் சொல்லி
Java Project வாங்கியிருக்கலாம்.

டம்மி Project டைக் கூட
Real time project என்று
ரீல் விட்டிருக்க முடியும்.
ஆனால்
அதைத் தான் விரும்புகிறதா
இந்த IT field!

Linux என்று சொல்லி
DOS சைக் கற்றுத் தந்தான்
ஒரு
கம்ப்யூட்டர் கடைக் காரன்,
ஓடினேன்........

விபி
பழைய version னைப்
பக்குவமாய்க் கற்றுத் தந்தான்
ஒரு faculty,
ஓடினேன்......

டம்மி ப்ராஜக்ட் தருவதற்காக
சாப்ட்வேர் கம்பெனிக் காரன்விரட்டினான்,
ஓடினேன்......

ஆடித் தள்ளுபடியில்
சி.டி. வாங்கித் தந்தான் ஒருவன்
ஓடினேன்.....

"ப்ராஜக்ட் வாங்கலையோ பராஜக்ட்"
கூவிக் கொண்டிருக்கும்
கூட்டம் தாண்டி
ஓடினேன்.....

வெப்சைட்டில் விரித்து வைத்திருக்கும்
வலையைத் தாண்டி
ஓடினேன்......, ஓடினேன் ...... , ஓடினேன் .....

மதர் போர்டைத் தாண்டி
மணிக் கணக்காய் ஓடினேன் ......

Java, VB, Oracle என்று
ஏலம் விடுகின்ற
கம்ப்யூட்டர் சென்டர்களைக்
கடந்து ஓடினேன்...

எத்தனை சென்டரடா - அதில் தான்
எவ்வளவு தெண்டமடா!
ஓடினேன் ......, ஓடினேன் ......

இப்பொழுதுள்ள IT filed ஐப் போலவே
தடுமாறித் தடுமாறி ஓடினேன் ......

அங்கே,
வைரஸ் இருந்ததால்
திரும்பி விட்டேன்,

பாவம்,
என் வாழ்க்கை ஆனது
ஒரு கூவம்!

எனக்கு ஐடியா கொடுத்திருக்க வேண்டும்!
Real project தந்திருக்க வேண்டும்
இன்று சட்டத்தை நீட்டுவோர், இன்று IT filed ல் இருப்போர்.
செய்தார்களா...?

Project செய்ய விட்டார்களா இந்த ராமை (RAM)?
எனக்கு டம்மி Project கொடுத்தது யார் குற்றம்?
செலவு செய்து
சென்னை சென்ற
என் குற்றமா? இல்லை

டம்மிக்கும் ரியலுக்கும்
வித்தியாசம் தெரியாத
சாப்ட்வேர் கொள்ளையர்களின் குற்றமா?

வளர வேண்டிய
வெப்சைட்டில்
ஆபாசங்கள் காட்டுவது
யார் குற்றம்?

பில் கேட்ஸின் குற்றமா..? இல்லை
பில் போடத் தெரியாதவர்கள் எல்லாம்
Project செய்கிறார்களே?
அவர்களின் குற்றமா?

ஒரு language கூட
ஒழுங்காய்ப் படிக்காமல்
பயோடேட்டாவில் நிரப்புவதற்காக
C, C++, Java, Vb, Oracle, ASP என்று
அடுக்கிக் கொண்டே செல்லுவது
யார் குற்றம்?
அப்பாவி மாணவர்களின் குற்றமா? இல்லை - எங்கள்
அப்பாவின் பணத்தை
அநியாயமாய்ப் பிடுங்கிக் கொண்டு
"Factorial, Fibonacci, Quadratic equation, Prime No, Palindrome"
இது தான் புரோகிராம் என்று சொன்ன
கம்ப்யூட்டர் சென்டர்களின் குற்றமா?

இந்தக்
குற்றங்கள் களையப்படும் வரை
என்னைப் போன்ற ராம்கள் (RAM)
டம்மி ப்ராஜக்டைத் தான்
ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விடுவார்கள்.

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு