Thursday, May 05, 2005

மரண இடைவேளை

மதிய இடைவேளை - மரண இடைவேளை

எனது அலுவலகம் ஒரு மருத்துவமனையின் பின்புறம் அமைந்திருக்கிறது. அலுவலக ஜன்னல் வழியாக பார்க்கும் போது மருத்துவமனையின் பின்புறத்தில் விபத்து பகுதியில் உள்ள மார்ச்சுவரி அறைப்பகுதி தெரியும்.

இன்று மதிய உணவிற்குப்பிறகு ஜன்னல் வழியாக நோட்டம் விட்டபோது ஒரு இளவயது அரபி அழுதுகொண்டிருக்கிறான். அவனை கட்டிபிடித்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஒரு பெரியவர். அது அவனது தாத்தாவாக இருக்கக்கூடும்.
திடகாத்திரமாக தெரிந்த அந்த இளைஞனின் அழுகை என்னை மிகவும் பாதித்தது.

அவனது நண்பனோ அல்லது நெருங்கிய உறவினனோ சாலைவிபத்தில் மரணமடைந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்?

நேற்றுவரை அவனோடு இவன் சண்டையிட்டிருக்கக்கூடும்
அவனுடைய செயல்கள் இவனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்
அவன் திட்டியிருக்கக்கூடும் .....இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம்

இருந்தாலும் மரணம் என்று வரும்போதுதான் இன்னொருவரின் மீது வைத்த பாசம் உண்மையாக வெளிப்படும் அழுகையின் மூலமாக.
அதற்காக அழாதவர்கள் அந்த மரணத்தின் மீது மகிழ்ச்சியடைகிறார்கள் என அர்த்தமல்ல.
சிலர் மற்றவர்களின் முன்னிலையில் அழ கூச்சப்பட்டு இறந்தவரின் ஞாபகங்களை நினைத்துக்கொண்டு தனிமையில் அழக்கூடும்.

இருந்தாலும் அத்தனை மனிதர்களுக்கு மத்தியில் கூச்சத்தை உடைத்துக்கொண்டு வருகிறதே அந்த அழுகை, அந்த நபரின் இறந்து போனவரின் மீது அவர் வைத்துள்ள அபரிமிதமான பாசத்தை காட்டுகிறது

ஒரு
மனிதனின் மதிப்பு அவனின்
மரணத்திற்கு வருகின்ற
மனிதர்களின் எண்ணிக்கையை பொறுத்தது.

மீண்டும் நோட்டம் விடத்தொடங்கினேன்.
ஒரு கட்டத்தில் அந்த அழுதுகொண்டிருந்த இளைஞன் தரையில் உட்காருகிறான்..
வெறித்துப்பார்க்கிறான்..
கூட்டத்திலிருந்து விலகிச்சென்று தனியாக உள்ள ஒரு ஒற்றை சுவற்றில் கைவைத்து அழுகின்றான்தன் நிலை மறந்து திரிகின்றான்..
ஆம் நெருங்கியவரின் மரணம் தன்னிலையை மறக்கச்செய்கிறது

எல்லோரும் மரணப்படத்தான் போகிறோம்...இருந்தாலும் இன்னொருவரின் மரணம் அதுவும் மிகவும் நெருங்கியவரென்றால் ஏதோ மரணம் நம்மை மிகவும் நெருங்கிவிட்ட உணர்வே ஏற்படுகிறது..நமக்கும் ஒருநாள் மரணம் வரும் என நினைத்துப்பார்க்க தோன்றுகிறது.

நாம் எவ்வளவுதான் வசதியாக ,பணமிகுதியோடு, உலகமே சுற்றி பயணப்பட்டு வாழ்ந்தாலும்,
செத்துப்போன பிறகு ...
நமது சொந்த வீதியில் உள்ள
ஒரு
மயான கிடங்கில்தானே
நிரந்தரமாய் தூங்கப்போகிறோம்?
மீண்டும் நோக்குகிறேன். கூட்டம் கூடுகிறது.
உயர்ரக வாகனங்களில் இருந்து வருகின்ற எல்லோருமே தானும்
உயிர்விடும் நாளை எண்ணிப்பார்த்தது போன்ற
ஒரு வெளிறி போன முகத்தோடு மன கலக்கத்தோடு வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவராய் அவனை தன் தோள்மீது சாய்த்து முதுகு தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லுகிறார்கள்

எல்லோருடைய தோளிலும் அவனது
கண்ணீர் துளிகள் விழுகிறது.
அது கண்ணீர் துளிகளா இல்லை
இதய பாரத்தின் நீர்திட்டுகளா...?

இந்த நேரத்தில் யாருடைய கவிதையோ ஞாபகம் வருகிறது

செத்தபிணத்தை கண்டு
சாகப்போகிற பிணங்கள்
அழுதுகொண்டிருக்கின்றன.
- யாரோ
மனதில் ஏதேதோ நினைவுகள் உறவினர்கள் - கல்லூரி நண்பர்கள் - வீதியில் விளையாடியவர்கள் என்று யார் யாரோ வந்து போகிறார்கள்
மீண்டும் பார்ப்பதற்கு தைரியம் வரவில்லை?
இல்லை இல்லை பயம் வந்துவிட்டது
ஜன்னலை மூடிவிட்டேன் ..ஆனால்
இதயத்தை திறந்திருக்கிறேன்
என்ணிப்பார்க்கிறேன் ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும் போதும்
"தான் வாழப்போகும் கடைசி நாள் இதுதான் " என

நினைத்துக்கொண்டு எழுந்திருத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தனிமனித வாழ்க்கை.
யாரும் திருட மாட்டார்கள் - பொய் சொல்ல மாட்டார்கள் - கொலை கொள்ளை கற்பழிப்பு குறைந்துவிடும் - கெட்ட செய்கைகள் இருக்காது - காணுகின்ற மனிதர்கள் மீதெல்லாம் அன்பை பொழிவார்கள்... எப்படியிருக்கும் வாழ்க்கை..?
எனக்கு அழுகை அழுகை யாக வருகிறது. எதுவெல்லாமோ ஞாபகம் வருகிறது.
என் 14 வது வயதில் நான் டவுசர் போட்டு திரிந்த காலங்களில் என் மாமாவைப்பற்றி நினைத்துப்பார்த்தேன்... சிறுவயதில் அந்த மரணத்திற்கு நான் மதிப்பு கொடுக்க தவறிவிட்டேன்

மீரான் மாமா

ஒரு மாலைநேரம்
பள்ளிமுடித்து வருகையில் நீ
கண்மூடிக்கிடந்தாய்
மீரான் மாமா!

கண்ணீர் வரவில்லையென்றால்
தவறாக நினைப்பார்களோ என்று
கண்ணீர் வடித்தேன்
இல்லை நடித்தேன்
சொந்தங்கள்...
கண்ணீர் மட்டும்தான் பார்க்கும்!
ஆனால்
விவரம் தெரிகிறது இப்பொழுது
நிஜமாகவே கண்ணீர் வருகிறது

தந்தை கொடுப்பார்
என்ற திமிரில்
ஒரு வாடிக்கை உணவகத்தில் - நான்
வயிற்றையும் மீறி
சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
நீயோ எதிர்மேசையில்
காசை மீறி உண்ணமுடியாமல்
ஒரு அப்பம் ...
ஒரு தேநீரோடு முடித்துக்கொள்கையில்,
அப்பொழுது
எனக்கு தோணவில்லையே?
உனக்கும் ஒரு அப்பம்
பரிந்துரை செய்யவேண்டுமென்று!
அப்பொழுது
காசு இருந்தது
மனசு இல்லை
இப்பொழுது
காசும் இருக்கிறது
மனசும் இருக்கிறது
யாருக்கு கொடுப்பது அப்பத்தை?
உன் மரணத்திற்கு
நான்
மதிப்பு கொடுக்கவில்லை
மீரான் மாமா!
ஆம்
நான்மரணத்தை மதிக்கத் தவறியன்!
வீட்டுக்குள்ளே நீ
விழிமூடி கிடக்க
சின்னப்பையன் நான்
சீட்டு விளையாடி கொண்டிருந்தேன்!
பக்கத்து வீட்டு
பெரிசு ஒன்று
ஆதங்கத்தில் திட்டியது!
" டேய் உங்களுக்கும் ஒரு நேரம் வரும்டா "
இதோ!
அந்த நேரம்உணர்கிறேன்!
ஆம்!
நான்மரணத்தை மதிக்கத் தவறியன்!
ஆகவே
எல்லா மரணத்தொழுகையிலும்...
கலந்து கொள்கிறேன்!
என்மரணத்திற்கு...
ஆள் சேர்ப்பதற்காக!

இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார்

இன்றைய மதிய இடைவேளை எனக்கு மரண இடைவேளையாகப் போய்விட்டது. கனத்த இதயத்தோடு மீண்டும் அலுவலக கோப்புகளுக்குள் நுழைகின்றேன்.

2 comments:

பத்ம ப்ரியா said...

Hi
Your poem about death.. is realy touching.. the frankness makes that poem meaning full.

Nijamave antha poem padikkumpodhu konjam azhugai vanthathu.. that is the success of your writtings.
Good keep it up.

Abu Umar said...

superb

தேன் கூடு