Thursday, May 12, 2005

கல்லூரி பஸ் தின விழா



1999 ம் வருடம் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பஸ் தின விழா.


நாங்கள் செல்கின்ற அந்த பேருந்து கல்லூரி பேருந்து அல்ல..கவர்மெண்ட் பேருந்து..ஆகவே கல்லூரி நிர்வாகத்திம் அனுமதி வாங்கத் தேவையில்லை..நாங்களே விழாவுக்குண்டான நாட்களை குறித்துக்கொண்டோம்.

நான் மாணவர்களின் செயலராக இருந்ததனால் நண்பன் பிரபாகரனை அழைத்துக்கொண்டு பிணத்திற்கு கொட்டு அடிக்கும் ஒரு பெரியவரை பார்த்து பேசி மறுநாள் அவர் நாங்கள் விரும்புகிற இடத்திலெல்லாம் ( பிகர்கள் அதிகமாய் இருக்குமிடம் ) பேருந்துக்கு முன்னால் கொட்டு அடித்துக்கொண்டே வரவேண்டும் நாங்கள் அவர் பின்னால் ஆடிக்கொண்டே வரவேண்டும் என்பதே எங்களின் இருநாட்டு ஒப்பந்தம்.

ஒப்பந்தம் பேசி கையெழுத்திட்டு பணமும் கொடுத்துவிட்டு வந்தோம்.
(ஆமா வல்லரசு ஒப்ப்ந்தம்)

அந்தப்பெரியவர் மிகவும் வயதானவர் கண் பார்வை கூட அந்த அளவிற்கு புலப்படாது. அவரிடம் அவரை நாங்களே அழைத்துசென்று மீண்டும் அவரை அழைத்துவந்து விடுகிறோமென வாக்குறுதி அளித்தோம்.

இன்று பிரச்சனையை சந்திக்ப்போகிறோம் என தெரியாமலேயே பதட்டம் இல்லாமல் விடிந்தது திருநெல்வேலி பேருந்து நிலையம்.

சாரதா கல்லூரி பெண்கள் பச்சை நிற சேலையில் (யுனிபார்ம்) கூட்டமாய் வழக்கமாய் நிற்கும் அந்த கரும்புச்சாறு கடைக்கு அருகே காத்திருந்தார்கள்.
( மாணவர்கள் இதயத்தை சக்கையாய் பிழிவதால்தான் அந்த கடை அருகே நிற்கிறார்களோ என தோன்றிது )

பூங்காவில் கர்த்திருக்கலாம் ஆனால்
ஒரு
பூங்காவே இங்கு காத்திருக்கிறதோ

என எண்ண வைத்தது அவர்களின் பச்சை நிற கூட்டம். அவர்கள் அருகே STC கல்லூரி கூட்டம். அவர்களுக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சதக் + மதிதா + ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் ,அரணாகவும் அவரவர்களுடைய பிகர்களை யாரும் நோட்டமோ இல்லை கடலையோ போட்டுவிடக்கூடாது என்ற கவனத்தில் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அங்கே கரும்பு சாறு கடைக்கு பக்கத்தில் அந்த மிட்டாய் கடைக்காரன் வேறு

இவர்களை பார்த்து வயிற்றெரிச்சலில் முறைத்துக்கொண்டே,

' வேர்க்கடலை... வேர்க்கடலை ... கடலை " என கத்திக்கொண்டிருந்தான்

"கடலை...." என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் அழுத்தி வரும்.

சில மாணவர்கள் கடலை போடவா என தவித்துக்கொண்டும் ...

அங்கே பாருங்கள் யாரோ ஒரு பையன் அந்த சாரதா கல்லூரி பொண்ணுக்கு கடிதம் கொடுப்பதற்காய் தயங்கி தயங்கி நிற்கின்றான்...

சிலர் சீப்பை எடுத்து தலைவாரிக்கொண்டும்...

சம்பந்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு...

இப்படி பல ..பல.. சூழ்நிலைகளில் தான் நாங்கள் அந்த கொட்டு அடிக்கும் பெரியவரை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினோம்.

அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து ,

"பெரியவரே! இங்கயே உட்காருங்க ..பஸ் வந்ததும் நாங்க கூப்பிடுகிறோம்... "

பின் பேருந்தை அலங்கரிப்பதற்காக அலங்கார பொருட்கள் - ஜரிகைகள் - மிட்டாய்கள் - ரோஜாக்கள் ( வழியில் நிற்கின்ற பிகர் கூட்டங்கள் மீது விட்டெறிவதற்காக ) என உற்சாகமாய் தயாராகிவிட்டோம்.

எதிர்பார்த்துக்கொண்டே நிற்கின்றது வானரக் கூட்டங்கள் பேருந்துக்காக..

எங்களின் இந்த ஏற்பாட்டை தெரிந்து கொண்ட டிரைவர் அந்த நேரத்திற்குண்டான் டிரிப்பை கேன்சல் செய்து விட்டாரா? இல்லை ஏதாவது பழுது பிரச்சனையால் வராமல் போய்விட்டதா ?என தெரியவில்லை..

பேருந்து வரவேயில்லை

மணி வேறு 9.00 ஜ தாண்டிக்கொண்டிருக்கிறது..ஒவ்வொ­ரு கல்லூரி பிகர்களாக அவரவர் பேருந்தில் ஏற முற்பட்டுக்கொண்டிருந்த சமயம்....

"என்னடா வண்டியை காணோம் எஸ்கேப் ஆயிட்டான்னு நினைக்கிறேன் "- நான்

"இப்ப என்னடா பண்ண " - ராஜா

"டேய்! ஏதாவது வேன் பிடித்து வேன் விழாவாக மாற்றலாமே ?"- நான்

'அறிவு இருக்காடா நாயே! எல்லாரும் கேலி பண்ணுவாங்கடா "- அவன்

குரங்குகளுக்கெல்லாம் கோபம் உண்டாகியது ( அட எங்களத்தான் சொன்னேன்) .

எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட பிறகு பஸ் வரவில்லை என்றால்
எங்கள் கல்லூரிக்கு மிகுந்த அவமானமாகி விடும் ..

அங்கு நிற்கின்ற மற்ற கல்லூரி மாணவ- மாணவிகளின் கேலித்தனத்திற்கு ஆளாக நேரிடும் நாளை முதல் இந்த பஸ்ஸ்டாண்டில் ஹீரோத்தனம் செய்யமுடியாது..என்ற ஆத்திரத்தில்

அங்கு ஆட்களே இல்லாமல் புறப்பட்ட தூத்துக்குடி பேருந்தை நிறுத்தினோம் ( தூத்துக்குடிக்கு எங்கள் கல்லூரியை கடந்துதான் செல்லவேண்டும் ) சுற்றி வளைத்தோம்

ஆரம்பமாகிவிட்டது பிரச்சனை..

டிரைவரிடம் கேட்காமலையே அந்த பேருந்தை அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். அவரும் சரி ஏதோ ஒரு குஷியில பசங்க அலங்காரம் பண்ணுறாங்கன்னு நினைத்து ஒன்றும் கேட்கவில்லை.

பின் ஒரு மாணவன்

"ஹலோ வண்டியை எடுங்க எங்கள காலேஜ் ல விட்டுட்டு நீங்க அப்படியே தூத்துக்குடி போங்க"

"இதென்ன உங்க அப்பன் வீட்டு வண்டியாடா போங்கடா"

சூடேறிவிட்டார்கள் மாணவர்கள்

"டேய் என்னடா மரியாதை இல்லாம பேசுற "- ராஜா டா போட்டு பேச

"போங்கடா போய் படிக்கிற வேலைய பாருங்கடா..ரவுடித்தனம் பண்ணாதீங்க"

"யாரைப்பார்த்து ரவுடின்னு சொன்னே நீ - " ராஜா அவரை அடித்துவிட அவ்வளவுதான் ...
டிரைவர் உடனே பஸ்ஸை விட்டு இறங்கி ..புறப்பட்டுக்கொண்டிருந்த..வழி­யில் வந்து கொண்டிருந்த ..எல்லா பஸ்ஸையும் நிறுத்தி ஒரு படையை திரட்டினான்

ஒரு கண்டக்டர் ஸ்பானரோடு வந்து

"எவண்டா எங்க நாராணன் மேல கை வச்சது" என்று வேகமாய்வந்து

ராஜாவின் மீது அடித்துவிட ராஜாவும் ஆத்திரத்தில் செருப்பை கழட்டி அடித்துவிட..

அந்த கண்டக்டர் மிகுந்த ஆத்திரத்தோடு ராஜாவை விரட்ட அடிதடி யாகி விட்டது.. அந்த கண்டக்டர் யாரையோ அழைத்து வருகிறேன் என கோபத்தில் கிளம்பிவிட..

நான் ராஜாவை அழைத்து சென்று பேருந்து நிலையத்தின் டாய்லெட்டில் அமர வைத்துவிட்டு மதிதா கல்லூரி மாணவன் ஒருவனின் சட்டையை மாற்றச்சொல்லி ராஜாவை ஆட்டோபிடித்து காலேஜ் சென்று மற்ற மாணவர்களிடம் விசயத்தை கூறி ஸ்டிரைக்கிக்கு ஏற்பாடு செய்யச்சொன்னேன்.

இங்கே கைகலப்பு - பேச்சுவார்த்தை - திமிரி அடித்தல்...

அந்த பி.காம் மாணவன் பேருந்தை சுற்றி சுற்றி ஓடினான். அவனை கையில் ஒரு கயிற்றோடு அடிக்க முயற்சித்து முயற்சித்து தோல்வியுறற கோபத்தில் ஒரு டிரைவர் விரட்டிக்கொண்டிருக்க...

பக்கத்தில் ஒரு துணி கடையில் ஒளிந்து பார்த்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை கல்லூரியில் ஒரு வீரனைப்போல பேசுபவன்..இங்கே முகத்தில் உயிர் பயத்தோடு ஓடுவதைக்கண்டு பரிதாபம் வரவில்லை சிரிப்புதான் வந்தது..

அந்த ஓட்டத்திலும் அவன் என்னை கவனித்துவிட்டான்.. பின் லேசான சிராய்ப்புகளோடு தப்பிவிட்டான்

( பின் கல்லூரி வந்து என்னிடம் கேட்டான் "டேய் நாயே அவன் என்னைய துரத்துறான் நீ என்னடான்னா வேடிக்கை பார்க்குற .. " " பின்ன என்னடா தப்பு நம்ம மேல நாமதான் முதலில் கைய வச்சோம்.. அதுமட்டுமில்ல அப்ப அவங்ககிட்ட போய் நான்தான் மாணவரணி செயலாளருன்னு அறிமுகபடுத்தவா சொல்ற " "பிச்சுறுவாங்கடா! ")

காவல்துறை வருகின்ற சூழ்நிலையில் மாணவர்கள் எல்லோரும் தப்பித்து ஓட ஆரம்பித்துவிட்டர்கள்.

வேதியியல் புத்தகமெல்லாம் வீதியில் கிடக்கிறது

சீப்பு - பேனா - புத்தகம் - ( டிபன் பாக்ஸை மட்டும் மறக்காம எடுத்துக்கிட்டாங்கப்பா)

எல்லாம் அப்படியே கிடக்க கவனித்தபடியே சில நண்பர்களோடு ஆட்டோ பிடித்து கல்லூரி வந்து சேர்ந்தேன்.

இப்பொழுது கல்லூரியில் பிரச்சனை.. ஆமா அம்மாகிட்டதான் அடம் பிடிக்கமுடியும்

ரோட்டுலனா போலிஸ் பயம் இங்க அப்படியில்ல
நிறைய மாணவர்கள் அல்லவா போலிஸ்க்கு பயம்

"டேய் கல்லூரி மாணவர் செயலாளரை அடிச்சுட்டாங்கன்னு புரளியை கிளப்புங்கடா அப்பத்தான் எல்லா மாணவர்களும் வருவாங்க - " என்க ,

ராஜா ஏற்கனவே மாணவர்களை திரட்டி வைத்திருந்தான் என்னை அடித்துவிட்டதாக புரளியை கிளப்பி,

உடனே நானும் காயம் ஏற்படுத்த ஒரு பிளேடால் கையை காயப்படுத்த முயல ( நடிப்புதாங்கோ)

"டேய் சும்மா இருடா முட்டாள் "- உயிர் நண்பர்கள்

"நாம போய் எல்லோரையும் திரட்டுவோம் வாங்கடா" திரண்டது கல்லூரி..

சாலையில் அமர்ந்து.. விளக்கை உடைத்து பஸ்ஸை வழிமறித்து ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்க

சன் தொலைக்காட்சியில் இருந்து செய்திகளுக்காக படம் வேறு பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்

டிவியில் வரப்போகிறோம் என்ற குஷியில் மாணவர்கள் உற்சாகம் மேலும் வலுத்தது

ஒருவன் கல்லூரி பலகையை எடுத்து டயர் போல சாலையில் உருட்ட

மற்றொருவன் கல்லூரி பஸ்ஸ்டாண்ட் கூரையை பிய்த்தெடுக்க முயல

ஒருவன் தரையில் அமர்ந்து போராட்ட வீரனை போல
"அராஜகம் ஒழிக " என முழக்கமிட
( அதான்ங்க பஸ்ஸை சுத்தி சுத்தி ஓடினானே அந்த வீரன்தான்)

பின்னர்தான் தெரிந்தது அது சன் தொலைக்காட்சியில் இருந்து வரவில்லை கல்லூரி பிரின்ஸ்பாலின் ஏற்பாடு என்று கேள்விபட்டதும் மாணவர்கள் கல்லெறிந்து காக்கை பறப்பதை போல சிதறி ஓடிவிட்டார்கள்.

பின் சமாதானம்- பேச்சுவார்த்தை -மன்னிப்பு -அபராதம் என எப்படியோ முடிந்து விட்டது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நாங்கள் கொட்டு அடிப்பதற்காக அழைத்து வந்தோமே
அந்த பெரியவர் அவர் என்ன ஆனார்? அவரின் கதி என்ன? எவ்வளவு நேரம் அங்கே காத்திருந்தார்?
யார் அவரை திருப்பி அழைத்து சென்றார்கள் என இதுவரை தகவல் இல்லை

லகலகலகப்பாயிருக்கிறது

சாரி சாரி

கலகலப்பாக இருக்கிறது..

அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப்பார்க்க

- ரசிகவ் ஞானியார்

3 comments:

சங்கரய்யா said...

இந்த சம்பவத்தை வைத்து விறுவிறுப்பான ஒரு குறும்படம் எடுக்கலாம் போலிருக்கு, நெறியாளுகை நீங்கதான் செய்யனும்

Anonymous said...

ஏ...அவர் சந்தடி சாக்கில அந்த தூத்துக்குடி பஸ்ல ஏறி, டிக்கெட் எடுக்காம அவங்க மக வீட்டுக்கு போய்ச் சேந்தத, நீங்க பாக்கலை போலுக்கு!

Muthu said...

////( மாணவர்கள் இதயத்தை சக்கையாய் பிழிவதால்தான் அந்த கடை அருகே நிற்கிறார்களோ என தோன்றிது )

பூங்காவில் கர்த்திருக்கலாம் ஆனால்
ஒரு
பூங்காவே இங்கு காத்திருக்கிறதோ ///

:-) :-) :-)

தேன் கூடு